நெல்லைத் தமிழில் திருக்குறள்-109

நாங்குநேரி வாசஸ்ரீ
109. தகை அணங்குறுதல்
குறள் 1081
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு
நிக்குதது மோகினியா? மயிலா? காதுல பெரிசா தோடு போட்டு நிக்குத அழகான பொம்பளப் பிள்ளையா? எம் மனசு கெடந்து தெவங்குதே.
குறள் 1082
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து
எம் பார்வைக்கு அவ நேர் பார்வை பாக்குதது தனியாளா எதித்தாப்ல நின்னு அழிச்சிப்போடுத சக்தி இருக்க மோகினி கூட ஒரு படையையும் சேத்துக்கிட்டு வந்து நின்னா எப்டி இருக்குமோ அப்டி இருந்திச்சு.
குறள் 1083
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு
எமன் யாருன்னு முன்ன நான் அறிஞ்சிக்கிடல. இப்பம் புரிஞ்சிக்கிட்டேன். அவன் பொம்பள உருவத்துல இருக்க பெரிய கண்ணுமுழிங்குத அம்பால சண்ட இழுக்கவன் அப்டிங்குத உண்மைய.
குறள் 1084
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்
நல்லதன்மையா இருக்க இந்த பொம்பளப் பிள்ளையோட கண்ணு மட்டும் உசிர எடுக்குதது கணக்கா இருக்கே? ஏன் இந்த மாறுபாடு?
குறள் 1085
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து
உசிர எடுக்க வந்த எமனா? ஒறவு கொண்டாடுத கண்ணா? மிரண்டுபோய் நிக்க பெண்மானா? இந்த பெண்பிள்ளையோட பார்வையில மூணு தினுசும் சேந்தாப்போல இருக்கே.
குறள் 1086
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்
புருவம் வளைஞ்சி கோணி நிக்காம நேரா நின்னு மறைச்சிக்கிடுச்சின்னா இவ கண்ணு நான் நடுங்குதது கணக்கா சங்கடத்த தாராது.
குறள் 1087
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்
மதம் பிடிச்ச யானை மேல இடுத முகபடாம் கணக்கா இருக்கு பொம்பளைங்க சாயாத கொங்கை மேல உடுத்துத சீலை.
குறள் 1088
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு
போர்க்களத்துல பகையாளிக்கு பீதியக் கெளப்புத எம் பலம் இப்பம் இவ ஒளி வீசுத நெத்தியக் கண்ட பொறவு தோத்து நிக்குதே.
குறள் 1089
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்
கணியெவனோ ஏதில தந்து
பெண்மான் கணக்கா துள்ளுத பார்வையும், வெக்கப்படுத கொணமும் அசப்புல நக நட்டுகணக்கா இருக்கையில பொறவு என்னத்துக்கு செஞ்சுவச்சிருக்க மத்த நகநட்ட பூட்டி உட்டிருக்காக.
குறள் 1090
உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று
கள்ளு குடிச்சவனுக்கு மட்டுந்தான் மயக்கத்தக் கொடுக்கும் பாத்தாலே மயக்கத்தக் கொடுக்குதது காதல்தான்.