வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 9

1

தி. இரா. மீனா        

அப்பி தேவய்யா

“ஈஸ்வரிய வரத மகாலிங்கா“ என்பது இவரது முத்திரையாகும். ”நான்” என்பது அழியவேண்டும். அது அழியாத வரைகுரு- இலிங்கம், ஜங்கமம், பாதோதகம், பிரசாதம் ஆகியவற்றை என்னால் விரும்ப முடியாது என உறுதியாகப் பேசிய தன்மை இவருடையது.

“பொன்பெண் மண்ணை விடுவிக்காத குருவின் நல்லுரை
தேவையற்றது.
கோபம், இன்பத்தை அகற்றாத இலிங்கத்தை வழிபட இயலாது
மாயை என்பதன் இருட்டை அழிக்காத ஜங்கமனுக்கு என்னால்
தாஸோகம்  செய்ய இயலாது.
பேரின்பம் தராத புனித நீரை அருந்த மாட்டேன்.
பலன் தராத பிரசாதம் வேண்டாம்
எனது “நான் “என்ற உணர்வை  அகற்றாத ஈஸ்வரிய வரத
மகாலிங்கத்தை  என்னவென்பேன்?” என்று உறுதியாகப் பேசும் வசனம் இது.

அவசரத ரேக்கண்ணா

“சத்தியோஜாத லிங்கா ”இவரது முத்திரையாகும். தத்துவம், அனுபவம், மறைபொருள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்த இவரது வசனங்களில் பெரும்பாலானவை விடுகதை போலான சிறப்பம்சம் கொண்டவை.

1. “உலகெங்கும் பொன் நிறைந்திருந்தால்
அரசர்களுக்குள் போரெதற்கு?
நடைபெறுபவை அனைத்தும் உண்மையென்றால்
நல்லவர் கெட்டவர் என்ற பேச்செதற்கு?
பொன், வெள்ளி, முத்து, மரம், செடி, கொடி ஆகியவை
ஏற்ற இடங்களில்  மட்டுமே உருவாகும், தழைக்கும்
குலமிருக்குமிடத்தில் ஒழுக்கம் இருக்கும்.
ஒழுக்கமிருக்குமிடத்தில்   உறுதியிருக்கும்.
உறுதியான இடத்தில் உண்மை இலிங்கமுண்டு.
பக்தியை வளர்த்து அறுத்து,அளந்து வாழ்வது
சத்யோஜாதலிங்கம் என்னும் நெல் குதிருக்குள்ளாம்”

2. “வேம்பு மரத்தில் அமர்ந்து
வெல்லம் தின்றால் கசக்குமா?
அங்ககன் அமுதைச் சுவைத்தால் புளிக்குமா?
பயணத்திற்கான பாதையில்லை என் முடவன் சொன்னால்
அவனைக் கொல்பவர்களுண்டோ?
இந்த உணர்வின் வெளிப்பாடும், ஊக்கமும்
சத்யோஜாத லிங்கத்திற்கே”

3. “கனி கொய்ய முடியுமோ மரமேறாமல்?
மணத்தைச் சூட இயலுமோ மலர்களின்றி?
உண்மையை மெய்ப்பிக்க முடியுமோ சாட்சியின்றி?
ஊக்கமின்றி குரு,இலிங்கம்,ஜங்கமம் அடைய இயலுமா?
குருவிடம் நல்லுறவு,இலிங்கதி யானம்,மூவகை மலவிலக்கு
ஆகியன சத்யோஜாத இலிங்கத்துக்கு நட்பாம்.”

ஆய்தக்கி லக்கம்மா

ஆய்தக்கி மாரய்யனின் மனைவி லக்கம்மா அமரேஸ்வரம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர். வீரசைவத்தில் போற்றுதலுக்குரியவரான பசவேசரின் புகழைக் கேட்டு ஆய்தக்கி மாரையாவும் லக்கமாவும்கல்யாண் நகருக்கு வருகின்றனர் கல்யாண் நகர வீதிகளில்அரிசியைச் சேகரிக்கும் தொழில் இவர்களுடையதாகும். “மாரய்யாபிரிய அமரேஸ்வர லிங்கா “இவரது முத்திரையாகும் காயகம், தாசோகம் ஆகியவற்றின் பெருமைகளை விளக்குவதாக இவர் வசனங்கள் அமைகின்றன.” சூன்ய சம்பாதனையில்” இத்தம்பதியரின் காயக மற்றும் தாசோக மேன்மை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

    1.“உடல் குறையேயன்றி உள்ளக் குறையுண்டோ?
மலை உறுதியாயிருந்தாலும்
உளியின் முனை உடைவது இயல்புதானே?
சரணருக்கு வறுமையில்லை;
உண்மை உடையவருக்குத் தீவினையில்லை.
மாரய்யப்பிரிய அமுகேஸ்வரலிங்கம்
என்னிடமுள்ள வரையில் எவர் தயவும் தேவையில்லை”

2. “ஆசை அரசனுக்கன்றி சரணருக்குண்டோ ஐயனே?
கோபமென்பது காலனின் தூதருக்கன்றி
பிறவியறுத்தவருக்குண்டோ ஐயனே?
இத்துணை அரிசி நமக்கெதற்கு?சிவன் இதை ஒப்பான்
மாரய்யா, இது
மாரய்யப்பிரிய அமுகேஸ்வரலிங்கத்திற்குத் தொலைவாம்.”

3. “காயகம் போற்றும் சரணர் தானம் வாங்கி
தாசோகம் செய்யலாமா?
ஒரு மனதுடன் உழைக்க வேண்டும்
ஒரு மனம் இரண்டாவதற்கு
முன்பே ஒரு மனதுடன் தந்து விடவேண்டும்
மாரய்யா, மாரய்யப்பிரிய அமுகேஸ்வரலிங்கத்திற்கு
உன்னையே அர்ப்பணித்து விடுவாய்”

பாச்சிகாயத பசவண்ணா

இவர் மரத்தச்சன் பணி செய்தவர். காயகம் குறித்த கருத்துகளை அதிகம் வெளிப்படுத்தியவர். ”பசவண்ணப் பிரிய காளிகாவிமல ராஜேஸ்வரலிங்கா ”இவரது முத்திரையாகும்.

1. “குலம் கோத்திரம் சாதி பேசி அழிந்தவர் கோடி
பிறப்பு தீண்டாமையால் கெட்டவர் கோடி
வார்த்தைத் தீட்டால் அழிந்தவர் கோடி முனிவர்கள்
சிவன், திருமால், பிரம்மன் “யத்ருஷ்டம், தன்னஷ்டம்
என்றறியாமல் பதினான்கு உலகங்களும்
மீண்டும் மீண்டும் பிறந்தன.
அழுக்குகளை நீக்காத அறிவற்ற மனிதர்கள்
பரப்பிரம்மத்தை அடைய இயலுமோ?
உணர முடியாத, தொட முடியாத,காண முடியாதவன்
பெயர், வடிவ , உருவங்களில் அகப்படுவதில்லை.
பசவண்ணப்பிரிய விஸ்வகர்மட்ட காளிகாவிமல
ராஜேஸ்வரலிங்கம் அறியாதவரிடத்தில்லை”

2. “பூமிக்குள் மறைந்திருக்கும் புதையல் போல
சிப்பியில் மறைந்திருக்கும் முத்துப் போல
நீரில் மறைந்திருக்கும் நெருப்புப் போல
ஒளியில் மறைந்திருக்கும் சுடர் போல
ஆத்மஞானமெனும் உண்மையறியாமல்
இட்டலிங்கம் ,பிராணலிங்கமெனப் பிரித்தனர்
பசவண்ணப்பிரிய விஸ்வகர்மட்ட காளிகாவிமல
ராஜேஸ்வரலிங்கம் உணர்ந்தவர் அறிவர்”

3. “வைரவுடல் தன்னை ஊசியால் குத்த அனுமதிக்குமா?
ஆடு தன்னைப் பார்த்துப் பிளிற யானை அனுமதிக்குமா?
கோழை தன்னை அச்சுறுத்துவதை வீரன் அனுமதிப்பானா?
புலன்களும் உறுப்புகளும் தனக்கின்னல் தருவதை
உண்மையறிந்த இலிங்கமணிந்தவன் அனுமதிப்பானா?
கையிலிருக்கும் அணிகலனைக் காண கண்ணாடியெதற்கு?
வேண்டியதைக் கண்டபின் பிறரிடம் கேள்வியெதற்கு?
இதனை அறிந்ததால் பசவண்ணப்பிரிய விஸ்வகர்மட்ட
காளிகாவிமல  ராஜேஸ்வரலிங்கம் பிறவியழித்தது.”

பால பொம்மண்ணா

“வீரசூர ராமேஸ்வரா” இவரது முத்திரையாகும். சோலாப்பூரில் வசனக்கார்களில் முக்கியமானவரான சித்தராமய்யா சிவாலயம் கட்டி இலிங்க வழிபாட்டிற்கான செயல்களைச் செய்து கொண்டிருந்தார். அப்போது தன்னிடம் அவ்வழிபாடு செய்வதற்கான பொருள் இல்லையே என்று பொம்மண்ணா  வருந்தினார். சித்தராமய்யன் கடப்பாரையை அவரிடம் கொடுத்து ஆலய வாசலைத் தோண்டும்படி வற்புறுத்தினார். அவர் கட்டளையையேற்றுத் தோண்ட தங்கப் புதையல் கிடைத்தது என்றும் அதைக் கொண்டு பால பொம்மண்ணா ஆலயம் கட்டி வழிபாடு செய்தார் என்றொரு கதையுண்டு. சரணரைப் போற்றுதல், தத்துவ போதனை ஆகியவை வசனங்களில் வெளிப்படுகின்றன.

 “பாம்பு புற்றில் கம்பொன்றை நட்டால்
கம்பின் துணையோடு மேலேறும் தன்மை கொண்டது
பாம்பு, இது நன்கறிந்த உண்மை
மெய்ப்பொருளில் அன்பு காட்டுவது மனதில் வேண்டும்,
இருமை நிலை நீக்கவேண்டும்
வீரசூர ராமேஸ்வரலிங்கத்திடம்”

பாதோதகம் : அடியார்கள்,ஜங்கமர்கள் ஆகியோரின் பாதங்களைக்  கழுவும் நீர்.

தாஸோகம்   : “ நான் “ உழைப்பது; “நாம்” உண்பது என்னும்  தத்துவம்.

                                                                                 [தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள் – 9

  1. சிவனோடு பேசியவர்களை
    அறிமுகம் செய்து வைத்த ஆசிரியருக்கு பாராட்டுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.