நாங்குநேரி வாசஸ்ரீ

108. கயமை

குறள் 1071

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்

கொணத்துல மோசமானவரா (கயவரா) இருக்கவுக பாக்கதுக்கு நல்ல மனுசன்கணக்காத்தான் தெரியுவாக. மனுசங்களத் தவித்து வேற எந்த இனத்திலயும் இப்டி ஒப்பும கண்டதில்ல.

குறள் 1072

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர்

எப்பமும் நல்லதையே நெனைச்சி ரோசன பண்ணுதவங்களவிட எதையும் மனசுல போட்டுக்கிடாம அலையுத மோசக்காரங்க ஒருவகையில குடுத்துவச்சவகதான்.

குறள் 1073

தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்

பொறத்தியார் கட்டுப்பாடு இல்லாம தம் மனசுக்குத்தக்கன ஆட்டம்போட்டு வாழுத மோசக்காரங்களும் தேவர்கள் கணக்காதான்.

குறள் 1074

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்

கொணங்கெட்ட மோசக்காரங்க தன்னையக்காட்டிலும் கேடுகெட்டவனப் பாத்தா, தாங்க ஒசந்தவுகனு நெனச்சி மண்டக்கனம் புடிச்சி அலையுவாங்க.

குறள் 1075

அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது

மோசக்காரங்க ஒழுக்கசீலனா காணிச்சிக்கிடுதது பயத்தால மட்டுந்தான். அதையும்மீறி தான்  ஆசப்படுதது கெடைக்கும்னு தெரிஞ்சுக்கிட்டாலும் கொஞ்சம் ஒழுக்கமா இருக்காமாரி நடிப்பாங்க.

குறள் 1076

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான்

மோசக்காரங்க தான் தெரிஞ்சிக்கிட்ட ரகசியத்த வலியபோய் ஊர் முழுக்க பறை அடிக்கதால அவுங்க அடிக்கப்படுத பறைக்கு சமானம் தான்.

குறள் 1077

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கையர் அல்லா தவர்க்கு

கைய மடக்கி கன்னத்துல ஓங்கிகுத்தி மூஞ்சியப் பேத்துஎடுக்கவனத் தவித்து மத்தவங்களுக்கு எச்சிக்கையக்கூட ஒதற மாட்டாங்க மோசக்காரங்க.

குறள் 1078

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல
கொல்லப் பயன்படும் கீழ்

கிட்ட அண்டி சங்கடத்த சொல்லுத நேரமே இரக்கப்பட்டு ஒதவுவாக பெருமக்க. மோசக்காரனுவள கரும்பு கணக்கா சக்கயா பிழிஞ்சா தான் நாம கேட்ட ஒதவி கெடைக்கும்.

குறள் 1079

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்

மோசக்காரனுவ மத்தவங்க திங்கதையும் உடுக்கதையும் பாத்து வயித்தெரிச்சப்பட்டு வேணும்னே குறை சொல்லிக்கிட்டே இருக்குத தெறம உள்ளவனுவ..

குறள் 1080

எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து

சங்கடம் வருத நேரம் அதிலேந்து தப்பிச்சிகிட தன்னையே பொறத்தியார்கிட்ட விலைக்கு வித்துப்போடுத தகுதிதான் மோசக்காரங்களோட தகுதியாவும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *