குறளின் கதிர்களாய்…(286)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(286)
உள்ள முடைமை யுடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
-திருக்குறள் -592(ஊக்கமுடைமை)
புதுக் கவிதையில்…
உள்ளத்தில்
ஊக்கமுடைமையே ஒருவனுக்கு
உண்மையான நிலையான
உடமையாகும்,
செல்வம் உடைமை என்பது
சென்றுவிடும்
நிலைக்காமல் நீங்கி…!
குறும்பாவில்…
ஊக்கமுடைமையே உண்மையில் உடைமை,
ஒருவன் சேர்த்த செல்வ உடைமையெல்லாமவனிடம்
நிலைக்காமல் நீங்கிச் சென்றுவிடும்…!
மரபுக் கவிதையில்…
உலக வாழ்வில் உடைமைகளில்
உண்மை உடைமையாய் நிலைப்பதுதான்
நலமுடை நெஞ்சின் ஊக்கமதே
நடைமுறை உண்மை இதுதானே,
பலவகைப் பொருட்கள் உடைமையாகப்
பாடு பட்டுச் சேர்ப்பதெல்லாம்
நிலைத்தே நம்மிட மிருப்பதில்லை
நீங்கிச் சென்றிடும் நமைவிட்டே…!
லிமரைக்கூ..
உண்மை உடைமைமன ஊக்கம்,
சேர்க்கும் செல்வவுடைமை நிலைக்காது நீங்கி
அதனால் இலையே ஆக்கம்…!
கிராமிய பாணியில்…
வேணும் வேணும்
ஊக்கம் வேணும்,
ஓலக வாழ்க்கயில
மனுசனுக்கு
மன ஊக்கம் வேணும்..
ஒலகத்துல உண்மயா
நெலச்சி நிக்கிற ஒடம
நம்ம மன ஊக்கம்தான்..
அதுயில்லாம நாம சேக்கிற
சொத்துசொகம் செல்வமெல்லாம்
உண்மயான ஒடமயில்ல,
அதெல்லாம் நெலைக்காம
நம்மவிட்டு நீங்கிப்போயிடுமே..
அதால
வேணும் வேணும்
ஊக்கம் வேணும்,
ஓலக வாழ்க்கயில
மனுசனுக்கு
மன ஊக்கம் வேணும்…!