கண்கள் இரண்டும் இன்று உம்மைக் கண்டு பேசுமோ!

பாஸ்கர் சேஷாத்ரி
“எக்ஸ்கியூஸ் மீ மேடம் / சார்.” முன்னால் கருப்புக் கண்ணாடியுடன் கையில் குச்சி வைத்துக்கொண்டு ஒருவர் இருந்தார்.
“சார் என்ன வேணும் சொல்லுங்க” என்றேன்.
“சார் என்னை அந்த பஸ் ஸ்டாண்டுகிட்ட விட்டுட முடியுமா?”
“நிச்சயம்” எனச் சொல்லி அவர் கையைப் பிடித்துக்கொண்டேன்.
“நான் குச்சியை வச்சுக்கலாமா?”
“நோ பிராபளம், எனக்கு அதுதான் பலம்” என்றார்.
“நீங்க எங்க போகணும்?”
“பாண்டி பஜார்.”
“பக்கத்துல தான் ஸ்டாண்ட். நாம நெருங்கிட்டோம்ல?”
“ஆமா! எப்படிச் சரியா சொன்னீங்க?”
“இல்லை மல்லிப்பூ வாசனை வந்தது” என்றார்.
“உங்களைத் தொந்தரவு பண்ணிட்டேன்”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை”
“இல்லை உங்க வேலை கெட்டுப் போயிடும் இல்லையா?”
“இப்ப ஒன்னும் வேலை இல்லை”
“உங்களுக்கு சுமார் நாற்பது வயசு இருக்குமா?”
“அறுபது நெருங்கப் போகிறது” என்றேன். “எதுக்கு கேட்டீங்க?”
“இல்லை கை மிருதுவா இருக்கு. அதான் கேட்டேன்.”
“ஒங்களை ஒன்னு கேக்கலாமா?”
“ம்” என்றார்
“ஆர் யு பார்ன் விஷன்லஸ்?”
“இல்லை. நாற்பது வயசுல ஆச்சு. ஒரு நாள் சாயந்திரம் பளிச்செனு ஒரு வெளிச்சம். என் இடது கண்ணுல அன்னிலேந்து பார்வை இல்லை.”
“ஹௌ அபௌட் ரைட்?”
“அதுல ஒன்னும் அப்ப பிரச்சனை இல்லை.”
“பட் மூணு வருஷம் முன்னாடி ஒரு நாள் தூங்கி எழுந்த போது ஐ லாஸ்ட் தி ரைட் ஐ டூ .”
“எல் ஐ சி ல இருந்தேன். கருணை அடிப்படையில் கொஞ்ச நாள் பொறுத்துக் கொண்டார்கள். பிறக்கும்போதே கண் இல்லேன்னா விஷயமே வேற சார். எனக்கு மரம் செடி கொடி சினிமா வண்ணம் எல்லாம் தெரியும் . அதைத் தெரிஞ்சு அனுபவிச்சு, கண் போறது பெரிய வேதனை சார். பை தி வே . உங்க பேரு”
“பாஸ்கர்”
“நான் சந்துரு . எல் ஐ சி சந்துரு என்றால் இங்க கொஞ்சம் பேருக்குத் தெரியும்.
“உங்களைக் கஷ்டப்படுத்தறேனா கேள்வி கேட்டு?”
“இல்லை சார். எங்க உலகத்தை புரிஞ்சிக்க முயற்சி பண்ண வேண்டாம்.”
“ஏன் சார்? அது நரகம். எனக்கு நல்ல பார்வை உண்டு. நாற்பதைத் தாண்டியும் கண்ணாடி போடலை.
“கேரம் போர்ட் சாம்பியன். பாடவும் செய்வேன் குட் அட் டைப்பிங். பார்வை இல்லை என்றவுடன் இட் வாஸ் ஆல் லாஸ்ட். மெண்டலி ஐ வாஸ் டௌன்.”
“உங்களை ஒன்னு கேக்கலாமா?”
“ம்” என்றார்
“கண்கள் மூடி இருப்பது சுகம் எனும்போது அது பெரிய வலியில்லை எனக் கடந்து போக முடியாதா?”
“சார். சுகம் என்ற விஷயம் கண்கள் திறந்த பின் பார்வை உண்டு என்ற ரீதியில் சொல்லப்பட்ட விஷயம். கண்களே இல்லை எனும் போது அதில் சுகம் காண முடியுமா?”
“கண்கள் மனசோட வாயில். அதுதான் புத்தியைத் தீர்மானிக்கும். நல்லது கெட்டது என்கிற விஷயத்துக்கு அது காரணி.”
“சார் உங்க பஸ் வரது”
“என்னோட கொஞ்ச நேரம் இருக்க முடியுமா?” எனக் கேட்டுக் கைகளைத் தேடினார்.
“நிச்சயம். இதில் என்ன. – பிளெஷர் இஸ் மைன்.”
“உங்க ரொட்டீன் என்ன சார்?”
“தேடுவது தான்!” எனச் சொல்லிச் சிரித்தார்.
“எல்லா உருவத்தையும் நான் மனுசுல வாங்கிண்டாச்சு. நிஜம் கூட எனக்குக் கற்பனை உலகம். புரியறதா?”
“இல்லை!”
“எனக்கு எம் ஜி ஆர் என்றவுடன் ஒரு பிம்பம் தெரியும். ஆனால் பாஸ்கர் எப்படி என என்னால் கற்பனை பண்ண முடியாது. ஒரு உருவம் கொடுக்க முடியும் . ஆனால் அது ஒரிஜினல் இல்லை.”
இது ஒரு வலியா எனக் கேட்க முற்படுவதற்குள் அவரே சொன்னார் .
“இது கண்ணு உள்ளவங்களுக்கு ஒரு ரிலீப். எனக்கு இல்லை”
“ஈர மண் வாசம் வருது இல்லை. மேகம் மூடி இருக்கா?”
“கொஞ்சம் இருட்டா இருக்கு . அவ்வளவு தான்”
“இதுக்குத் தீர்வே இல்லையா?”
“எல்லாம் பார்த்தாச்சு. சாரி எல்லா டாக்டர்கிட்டயும் காட்டியாச்சு. நோ வே என்று சொல்லிவிட்டார்கள்.”
“என் உலகம் இருட்டு. அதுல நான் யாரைத் தேடுவேன்?”
கொஞ்சம் கழிவிரக்கம் தான். ஆனாலும் முடியல.
“எப்படி நீங்க உலகத்தைப் பாக்கறீங்க?”
“தெரிந்த பிம்பமோ இல்லையோ, எல்லோருக்கும் இதே சிரிப்பு தான்.”
“ஏன்?:
“என்னை சந்தோஷமா வச்சுக்க?”
இனி பார்வை இல்லை என்றவுடன் நான் தயாராக இல்லாமல் போனது என் தப்பு. இப்ப கொஞ்ச நாளா என் அகக் கண் தெளிந்து போனது. இறுதி வரை இது தான் உலகம் எனத் தெரிந்துகொண்டேன். பட் ஆல் லேட்.
ஏன் சார்? உண்மை ஒரு ப்ளாஷில் வரும் என்பதை நான் புறக்கணித்தது பெரிய தப்பு. புலன் போனா முதிர்ச்சியும் போகஸ் வரும்னு நினைக்கிறது தப்பு. எளிமையாக இதைப் பார்க்கத் தவறிவிட்டேன். இப்ப கஷ்டப்படறேன்.
“சாரி.”
“ஒன்னு தெரியுமா? என் பார்வை போன பின்பு என் கோபமும் அகந்தையும் அதிகமாகிப் போனது.”
“அப்படியா சொல்றீங்க?”
“உண்மை சுடும். உண்மையை நேசிக்கிறவங்க சூட்டைப் பொறுத்துக்க வேண்டும். நான் தப்பிக்கப் பார்த்தேன்- கைகளை விலக்கிக்கொண்டேன். ஐ ஆம் பேயிங் நவ்.”
“திரும்பவும் எனக்குப் பார்வை தெரியுறா மாதிரி கனவுகள் வருது. இப்ப கொஞ்ச நாளா எனக்குக் கண்ணு தெரியக் கூடாதுன்னு நினைக்கிறேன்.”
“ஐயோ?”
“இந்தக் கண்ணில்லாத உலகத்தோட நான் உண்மையில் ஐக்கியம் ஆகியிருந்தா நான் சந்தோஷமா இருந்து இருப்பேன். இப்ப எனக்கு முக்கியம் சந்தோஷம். கண்கள் இல்லை.”
“உங்க கிட்ட மொபைல் இருக்கா?”
“இருக்கு. ஆனா போட்டவுடன் உங்கள் பெயரைச் சொல்லிப் பேசுங்கள் பாஸ்கர்.”
“சரி சார். பஸ் வருது சார்.”
“சீ யு” எனச் சொல்லிச் சிரித்தார் .
என் பெயரை நினைவு வைத்துக்கொள்ளுங்கள் என அவரைப் பேருந்துக்குள் ஏற்றினேன்.
“பாஸ்கர். உங்களுக்கு நான் ஏதோ உருவம் கொடுத்து கை கால்களை அமைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றார். டூப்ளிகேட் தான். ஆனால் உங்கள் பொறுமை பெரிய அழகு .
“கிரேட் பெர்சன்” என நான் சொன்னது அவர் காதில் விழவில்லை.
அவர் காற்றுக்குக் கையாட்டிக்கொண்டிருந்தார்