வாழ்க்கையை அதன் போக்கில் விடு

பாஸ்கர் சேஷாத்ரி

முப்பது வருஷங்களுக்கு முன் புது வருட வேலைக்கு செல்லும் நாள் வந்தால் ஒரு வருத்தம் கவ்வும். சின்ன வயது. எல்லோருக்கும் விடுமுறை எனும்போது நமக்கு மட்டும் அலுவலகம் என்ற சிந்திப்பு தான் காரணம்.

அப்போது விற்பனை பிரதிநிதி வேலை. நாள் கிழமை நேரம் காலம் எல்லாம் இல்லை. எப்போதும் பிழைப்பு என்ற புத்தி உள்ளே ஊறிய நேரம். வழக்கமான கைப்பெட்டி ஒரு ஷூ என எல்லாத் தகுதிகளும் கொண்ட ஒரு சேல்ஸ்மேன். 

அது ஒரு மிக்சி கம்பெனி. பெரிய கடை வாசலில் மாலை நேரங்களில் ஒரு டெமோ நடக்கும். பகல் நேரங்களில் மீட்டிங் என பரபரப்பான நேரங்கள் அவை. டெமோ நடக்கும் போது ஒரு மேஜையில் மிக்சி வைத்து அரைத்துக் காட்ட வேண்டும். சட்னி முதல் மஞ்சள் வரை அதனைச் சடுதியில் அரைத்து, வருபவர்களுக்குக் காட்டும் போது, கிட்டத்தட்ட ஒரு மேஜிக் ஷோ போல இருக்கும். பெண்கள் அங்கேயே உடனே வாங்குவார்கள். சிலர் பதிவு செய்து செல்வார்கள். வசீகரமான மாலைகள் அவை. இதில் சலிப்பு போகும்.

விற்பனைப் பிரதிநிதிகள் தன்னம்பிக்கை உடையவர்கள். இல்லாமல் இருந்தாலும் தொழில் அதனைக் கற்றுக் கொடுத்துவிடும். இதனை எந்தப் படிப்பும் சொல்லிக் கொடுக்க முடியாது.

அனுபவம் பெரிய பாடம். அதுவும் பெரிய கடை வாசலில் எல்லோரும் குழுமி இருக்க, ஒருவர் திறம்பட வேலை செய்து பாராட்டுப் பெறும்போது ஏற்படும் நெகிழ்வும் சந்தோஷமும் எந்தப் பணமும் கொடுக்காது. கைத்தட்டல் தான் இல்லை. மண்டையில் இந்த நேரங்களில் தான் கனம் ஏறும். ஒரு கர்வம் தலை தூக்கும். திமிர் பெருகும். இது கிட்டத்தட்ட வித்யா கர்வம்.

அதே துறையில் கிடைக்கும் தோல்வி அதனைச் சமன்படுத்தும். கிட்டத்தட்ட நான் எந்தக் கடைக்கு சென்றாலும் ஒரு ஹீரோ போலக் கருதப்படுவேன். ஓரளவுக்கு நல்ல உடை, நுனி நாக்கு ஆங்கிலம், கொஞ்சம் தொழில் திறன் என்று கொஞ்சம் இருக்கவே இவ்வளவு மரியாதையா என யோசிப்பேன்.

பிரபலத்திற்கு ங்காத மனசு உண்டா? இவை எல்லாமே ஒரு எண்ணூறு ரூபாய் சம்பளத்திற்கு. இன்று பிளம்பரின் ஒரு நாள் கூலி இது. எங்குச் சென்றாலும் பஸ் தான். கையில் சூட்கேஸ் சுமையை வைத்துக் கொண்டு ஒவ்வோர் இடமாகச் சென்று பேசிய காலம் அது. அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்தவுடன் எப்போது புத்தாண்டு பிறக்கும் என்ற ஆசை துளிர் விட ஆரம்பித்தது.

துக்கம் போய் இப்போது எதிர்நோக்கும் ஏக்கம். இதன் அடிப்படை தொழில் நேசிப்பு, அங்கீகாரம், உழைப்பு, பேருக்கு அலையும் புத்தி, முன்னுக்கு வர வேண்டும் என்ற சிந்தனை.

அடிநாதத்தில் ஒரு வாழ்க்கை பயம். இங்கு எல்லாமே வழக்கொழிந்து போகவே பிறக்கிறது. இது வாழ்க்கைச் சுழற்சியின் இயல்பு. பிரயாணத்தில் நிற்றல் இல்லை. கற்றல் மூச்சு. அது தானியங்கி. வாழ்க்கையை அதன் போக்கில்தான் விட வேண்டும் போல இருக்கிறது. நாம் அதனைப் பயிற்சி நாய் போல மாற்றிக்கொண்டு இருக்கிறோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.