நெல்லைத் தமிழில் திருக்குறள்- 95

நாங்குநேரி வாசஸ்ரீ
95. மருந்து
குறள் 941
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
மருத்துவம் படிச்சுவுக சொல்லுத வாதம், பித்தம், கபம் இந்த மூணுல ஏதும் ஒண்ணு அதிமானாலோ கொறஞ்சாலோ நோய் உண்டாவும்.
குறள் 942
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்
ஒருத்தன் மொத சாப்பிட்டது செரிச்சுட்டுதான்னு தெரிஞ்ச பொறவு அடுத்தாப்ல சாப்பிட்டாம்னா அவனுக்கு மருந்துனு ஒண்ணு தேவ கெடையாது.
குறள் 943
அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு
பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு
தின்னது செரிச்சிடுச்சுனு தெரிஞ்சுக்கிட்டு அடுத்தாப்ல அளவா சாப்பிட்டு இருக்கதுதான் நெறைய ஆயுசோட இருக்கதுக்குண்டான வழி.
குறள் 944
அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து
மொத தின்னது செரிச்சத உணந்துக்கிட்டு ஒடம்பு ஒத்துக்கிடுத சாப்பாட்ட வயிறு பசிஎடுத்த பொறவு திங்கணும்.
குறள் 945
மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு
ஒடம்புக்கு ஏத்த சாப்பாட்டக் கூட மூக்குப்பிடிக்க திங்காம அளவா தின்னாம்னா அவன் வாழ்க்கையில நோவுநொடியால சங்கடப்படமாட்டான்.
குறள் 946
இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்
அளவா சாப்பிடுதவன விட்டு சொகம் வெலகாம இருக்கது கணக்கா மூக்குபிடிக்க திங்கவனவிட்டு நோய் வெலகாம நிக்கும்.
குறள் 947
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்
வயித்துப்பசியோட அளவு தெரியாம அதிகமா திங்கவன் ஒடம்புல நோவுநொடி அளவில்லாம வளந்துபோடும்.
குறள் 948
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
நோய் இன்னதுனு தெரிஞ்சிக்கிட்டு அது வந்த காரணத்த அறிஞ்சு அதப் போக்குத வழிமொறையத் தெரிஞ்சு தக்கமாரி தப்பில்லாம வைத்தியம் பாக்கணும்.
குறள் 949
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்
சீக்காளியோட வயசு, சீக்கோட தன்ம, வைத்தியம் பாக்க ஆவுத நேரம் எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்ட பொறவு தான் வைத்தியர் வைத்தியம் செய்யணும்.
குறள் 950
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்
றப்பானாற் கூற்றே மருந்து
சீக்காளி, மருந்து, மருந்து கொடுக்கவர்,வைத்தியர் னு வைத்திய மொற நாலு வகையா அமைஞ்சிருக்கு.