குறளின் கதிர்களாய்…(282)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(282)
நட்டார்போ னல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை யுணரப் படும்.
– திருக்குறள் -826 (கூடா நட்பு)
புதுக் கவிதையில்…
நட்பினர்போல் நடித்து
நமக்கு
நல்லவை சொன்னாராயினும்,
பகைவர்தம் சொல்
தீமைபயப்பதென அறிந்து
விரைவில் உணரப்படும்…!
குறும்பாவில்…
நண்பர்போல் நல்லவை சொன்னாலும்,
பகைவர்சொல் தீயதெனத் தெரிந்து
விரைவில் உண்மை உணரப்படும்…!
மரபுக் கவிதையில்…
நன்மை செய்திடும் நண்பர்போல்
நன்றாய் நடித்தே உடனிருந்தே
இன்சொலால் நல்லவை சொன்னாலும்
இன்னா செய்திடும் பகைவர்சொல்,
என்றும் நன்மை தாராதே
எல்லாத் தீமையும் தருவதென
நன்றாய் அறிந்தே உடனடியே
நலந்தரா உண்மை தெரிந்திடுமே…!
லிமரைக்கூ..
நண்பர்போல் சொன்னாலும் நல்லவை
பகைவர்சொல் நன்கறிந் துடனே உணரப்படும்,
அவையெலாம் நலந்தரா அல்லவை…!
கிராமிய பாணியில்…
நட்புவேண்டாம் நட்புவேண்டாம்
கெட்டவனோட நட்புவேண்டாம்,
நல்லவனப்போல நடிச்சிவந்தாலும்
கெட்டவனோட நட்புவேண்டாம்..
நண்பன்போல நடிச்சி
நமக்கு
நல்லதெல்லாம் சொன்னாலும்,
அந்தப்
பகயாளி வார்த்தயால
நன்ம எதுவுமே வராம
தீமதான் வருமுண்ண உண்ம
ஒடனே தெரிஞ்சிபோவுமே..
அதால
நட்புவேண்டாம் நட்புவேண்டாம்
கெட்டவனோட நட்புவேண்டாம்,
நல்லவனப்போல நடிச்சிவந்தாலும்
கெட்டவனோட நட்புவேண்டாம்…!