நெல்லைத் தமிழில் திருக்குறள்- 96

நாங்குநேரி வாசஸ்ரீ
96. குடிமை
குறள் 951
இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு
பாரபட்சம் பாக்காத நடுவுநெலமையும், ஆர்ப்பாட்டமில்லாத அடக்க கொணமும் ஒசந்த குடியில பொறந்தவுகளத் தவித்து மத்தவுக கிட்ட இல்ல.
குறள் 952
ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்
ஒசந்த குடியில பொறந்தவுக ஒழுக்கம், நாணயம், மானம் இந்த மூணயும் விட்டுவெலகி நெலதடுமாறி நடக்க மாட்டாக.
குறள் 953
நகையீகை அன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு
ஒசந்த குடியில பொறந்தவுகளுக்கு சிரிச்ச மொகம், இனிக்கப் பேசுத கொணம், கொடுக்குத கொணம், கேலி பேசாம இருக்கது இந்த நாலு நல்ல கொணமும் இருக்கும்.
குறள் 954
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்
பலகோடி செல்வம் கெடைக்கதா இருந்தாலும் ஒசந்த குடியில பொறந்தவுக தங்குடிப் பெரும கெடுததுக்குத் தக்கன காரியத்த செய்ய மாட்டாக.
குறள் 955
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று
ஏழையாப் போயி மத்தவுகளுக்கு கொடுத்து ஒதவுதது கொறஞ்சு போனாலும் பழைய பெரும இருக்க குடியில பொறந்தவுக கொடுக்குத கொணத்த உடமாட்டாக.
குறள் 956
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார்
குத்தங்கொறையில்லாம வாழ நெனைக்கவுக வஞ்ச மனசோட தகாத காரியங்களச் செய்ய மாட்டாக.
குறள் 957
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து
ஒசந்த குடியில பொறந்தவுகளோடகுத்தங்கொற வானத்து நிலாவுல இருக்க களங்கம் கணக்கா பெரிசாத் தோணும்.
குறள் 958
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்
நல்லகொணத்தோட இருக்க ஒருத்தன் நேசமில்லாம இருந்தாம்னா அவன் பொறந்த குலத்தையே இந்த ஒலகம் சந்தேகப்படும்.
குறள் 959
நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்
வெளஞ்ச பயிரப்பாத்தே இது இன்ன நெலத்துல வெளஞ்சதுனு தெரிஞ்சிக்கிடலாம். அதுகணக்கா ஒருத்தங்க பேசுத பேச்ச வச்சி அவுக எந்தமாரி குடும்பத்துல பொறந்திருக்காகனு தெரிஞ்சிக்கிடலாம்.
குறள் 960
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு
ஒருத்தன் நன்ம வேணும்னு நெனச்சா வேண்டாத காரியம் செய்ய பயந்துக்கிடணும். நல்ல குடும்பத்துல பொறந்தவன்னு பேரு வேணும்னு நெனச்சா எல்லார்க்கும் பணிஞ்சு போவணும்.