இயற்கையில் எழுந்த இசை – பகுதி 4
நிர்மலா ராகவன்
குமரேசா
ஒவ்வொரு பாட்டை எழுதி முடித்தபின்னரும், கோலாலம்பூர் பத்துமலை முருகன் கோயிலுக்குச் சென்று `அரங்கேற்றம்’ செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.
ஒரு முறை, `எல்லார்மேலேயும் எழுதறியே! என்மேலே ஒரு பாட்டு எழுதக்கூடாதா?’ என்று முருகன் கேட்பதுபோல் இருந்தது. பயந்துவிட்டேன். பாட்டு தானாகவேதான் எழவேண்டும். இல்லாவிட்டால் நன்றாக இருப்பதில்லை.
அதற்கடுத்த வாரம் பினாங்கு தண்ணீர்மலையிலுள்ள முருகன் கோயிலுக்குப் போனபோது, `ஒனக்குப் பாட்டு வேணும்னா, நீயே சொல்லிக்கொடு!’ என்று பாரத்தை அவன் தலையிலேயே போட்டேன்.
சரியாக ஒரு வாரம் கழித்து, `குமரேசா’ என்ற பாடலின் முதல் பாகம் (பல்லவி) நள்ளிரவு தூக்கத்தில் என் காதில் ஒலித்தது, கோலாலம்பூரில். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன். இரண்டு மூன்று முறைகளுக்குப்பின் விழிப்பு கொடுத்தது. தயாராக வைத்திருந்த நோட்டில் ஸ்வரப்படுத்தி எழுதிவிட்டு உறங்கிவிட்டேன். காலையில்தான் ஆபோகி ராகம் என்றே புரிந்தது!
பத்துமலை உச்சியில் பலமுறை இப்பாடலைப் பாடியிருக்கிறேன்.
அகன்ற குகை. அங்கு பாடுகையில், கூடவே வீணையோ, புல்லாங்குழலோ ஒலிப்பது கேட்கும். ஒரு வெள்ளைக்காரர் என் வாய்க்குள் புகாதகுறையாகத் தலையை நீட்டி எட்டிப்பார்த்தது வேடிக்கையான அனுபவம்.
பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுமிகள் இப்பாட்டிற்கு அபிநயம் பிடிக்கையில் சகோதரனுடன் சண்டைபிடித்தல், முகத்தைத் தூக்கிவைத்துக்கொள்வது எல்லாம் அவர்கள் வாழ்வில் நடந்ததாகவே இருக்க. பார்ப்பவர்கள், `ஆகா! என்ன பாவம்!’ என்று பாராட்டுவார்கள்!
பி.கு: `கு’ என்றால் அறியாமை. நம் அறியாமையை மாற்றுபவன் குமாறன். அது மருவி, குமாரன் ஆகிவிட்டதாம்.
இப்பாடலைக் கேட்க: