பல்கலைப் புலவர் – கா. சுப்பிரமணியப் பிள்ளை
-மேகலா இராமமூர்த்தி
1888ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் நாள் திருநெல்வேலியைச் சார்ந்த காந்திமதிநாதப் பிள்ளை, மீனாட்சியம்மை இணையருக்கு மகனாய்ப் பிறந்தார் கா. சுப்பிரமணியப் பிள்ளை.
திருநெல்வேலியில் இருந்த திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றில் தமது கல்வியைத் தொடங்கிய அவர், பின்னர் அருகிலிருந்த தொடக்கப் பள்ளியில் தம் படிப்பைத் தொடர்ந்தார். 1906ஆம் ஆண்டில் மெட்ரிக்குலேசன் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே முதல் மாணாக்கராய்த் தேறினார்.
1908ஆம் ஆண்டில் சென்னை மாகாணக் கல்லூரியில் பயின்று கலை உறுப்பினர் (Fellow of Arts) தேர்வில் வெற்றிபெற்றார். அதேவேளையில் மதுரைத் தமிழ்ச்சங்கம் நடாத்திய புலவர் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சியுற்றார். 1910ஆம் ஆண்டில் வரலாற்றைச் சிறப்புப் பாடமாய்ப் படித்து இளங்கலைப் பட்டம் பெற்றார். 1913ஆம் ஆண்டு ஆங்கில இலக்கியத்திலும், 1914ஆம் ஆண்டு தமிழ் இலக்கியத்திலும் தேறி முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.
பின்னர், சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று சட்டத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களையும் பெற்றார். இவருடைய உறவினர்களில் முதன்முறையாக எம். எல். பட்டம் பெற்றவர் இவரே என்பதால், உறவினர்கள் இவரை எம். எல். பிள்ளை என்றே அடையிட்டு அழைத்தனர்.
அக்காலத்தில், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ’தாகூர் சட்ட விரிவுரையாளர்’ பரிசு அமைத்திருந்தார்கள். சட்டக்கலை குறித்துச் சிறப்பான சொற்பொழிவுகள் 12 நிகழ்த்துவோருக்கு அப்பரிசு வழங்கப்பட்டு வந்தது. 1925இல் கல்கத்தா பல்கலைக்கழகம் சென்று ’குற்றங்களின் நெறிமுறைகள்’ (Principles of Criminology) என்ற தலைப்பில் பன்னிரு உரைகள் நிகழ்த்தி அப் பரிசினை வென்ற ஒரே தமிழர் கா.சு. பிள்ளையவர்களே என்பது குறிக்கத்தக்கது.
சென்னை சட்டக்கல்லூரியில் ஒன்பது ஆண்டுக் காலம் பேராசிரியராய்ப் பணியாற்றினார் பிள்ளை. சென்னையில் இருந்த காலத்தில், மயிலாப்பூரில் திருவள்ளுவர் கழகத்தை ஏற்படுத்தினார். சில காலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராய்ப் பணியாற்றினார். நாவலர் இரா. நெடுஞ்செழியன், பேராசிரியர் க. அன்பழகன் இருவரும் பிள்ளையிடம் மாணாக்கர்களாய்ப் பயின்றவர் ஆவர்.
நெல்லை திரும்பியவர், ’தமிழ் இலக்கிய வரலாறு’ எனும் நூலை எழுதினார். இன்றளவும் அது குறிப்பிடத்தக்கதொரு நூலாய்த் திகழ்ந்துவருகின்றது. இரண்டு பகுதிகளாக வெளிவந்த அந்நூலில் இடம்பெற்ற சில அரிய செய்திகளாவன:
1. தூணில் கடவுள் வழிபாடு செய்யும் மரபு தமிழரிடம் இருந்தது. (மணிமேகலையில் வருகின்ற கந்திற்பாவையை ஈண்டு நாம் நினைவுகூரலாம்.)
2. தமிழக நெய்தல் நில மக்கள் ஆரிய வருண வழிபாட்டைக் கைக்கொண்டிருந்தனர் எனல் பொருந்தாது.
3. தொல்காப்பியப் பாயிரம் கூறும் நான்மறை என்பது ரிக், யசுர், சாம அதர்வண வேதங்கள் அல்ல. தமிழிலேயே நான்கு மறைகள் தோன்றின. அகத்தியம், பன்னிரு படலம் போலப் பண்டைக் காலத்திலேயே அவை அழிந்தன.
4. திருக்குறளின் காலம் கிமு 5-ஆம் நூற்றாண்டாகலாம். அதற்குப் பிறகே கலித்தொகை, சிலப்பதிகாரம் போன்றவை தோன்றியிருக்கவேண்டும்.
சங்கப் பாக்களுக்கு நயம் சொல்லிக்கொண்டிராமல், பெயரமைவுகள், ஊர்ப்பெயர்கள், காலம், அரசர்க்கும் புலவர்க்குமான உறவு போன்ற பற்பல செய்திகளைத் தம் தமிழிலக்கிய வரலாற்றில் கா. சு. பிள்ளை ஆய்வு நோக்கில் எடுத்தியம்பியுள்ளமை போற்றத்தக்கது.
‘செந்தமிழ்ச் செல்வி’ இதழில் தொடர்ந்து எழுதிவந்த பெருமைக்குரியவரான பிள்ளையவர்கள், திருநெல்வேலியிலிருந்து வெளிவந்த ’மணிமாலை’ என்ற இதழிலும் இலக்கியச் செய்திகளைப் பதிவு செய்துள்ளார்.
மறைமலையடிகள் மீதும் அவரின் கொள்கைகள் மீதும் மாறாக் காதல் கொண்டவர் கா.சு. பிள்ளை. அடிகளைப் போலவே மணிவாசகர் தேவார முதலிகளுக்கு முற்பட்டவரென்றும் கி.பி. 3-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்றும் கருத்துக்கொண்டவராகத் திகழ்ந்த பிள்ளை, அதனைத் தமிழிலக்கிய வரலாற்றின் இரண்டாம் பகுதியிலும் அதன்பின் வந்த நூல்களிலும் குறிப்பிட்டிருக்கக் காண்கின்றோம்.
அதற்கு அவர் முன்வைக்கும் சான்றுகளாவன:
வரகுணனும் அவனுக்குப் பின் மணிவாசக அடிகள் காலத்தில் அரிமர்த்தனனும் பாண்டிய நாட்டை அரசாண்டரெனத் தெரிகின்றது. போர் புரிவதில் வல்லவனாய் எட்டாம் நூற்றாண்டுக் கல்லெழுத்துக்களில் பேசப்பட்ட வரகுணன் வேறொருவன்.
வரகுணன் என்பது வடமொழிப் பெயராதலின், அப்பெயருடைய மன்னன் 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்றுரைத்தல் தவறு. கடைச்சங்க மன்னனாகக் குறிக்கப்பெறும் உக்கிரப் பெருவழுதி என்ற சொற்றொடரில் ’உக்கிர’ என்பது வடமொழியாதல் காண்க. வரகுணன் என்ற பெயரைத் தமிழ் எனக்கொள்வாரும் உளர். கி.பி. 3ஆம் நூற்றாண்டில் மலையாளக் கரைக்கு வந்த கிறித்தவப் பாதிரிமார்கள் மாணிக்க வாசக அடிகளைக் குறித்துத் தம் நாட்டினருக்கு எழுதியுள்ள கடிதங்கள் அடிகளின் காலம் மூன்றாம் நூற்றாண்டே என்பதைப் பறைசாற்றுகின்றன.
பிள்ளையவர்கள் தாம் எழுதிய ’தமிழர் சமயம்’ எனும் நூலில் தந்திருக்கும் பல செய்திகள் தமிழ்கூறு நல்லுலகம் அறிந்து பயன்கொள்ளத்தக்கவை. அவற்றில் சில:
1. ஒரு காலத்தில் தமிழர்க்குள் சடங்கில்லாமல் மணவாழ்க்கை தொடங்கி நடத்தப்பெற்றது. மணமக்களின் ஒத்த உளக்காதலே இல்லறத்துக்கு அடிப்படையாய் அமைந்திருந்தது. பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் மணச்சடங்கு முறைகள் சமுதாயத் தலைவர்களால் ஏற்படுத்தப்பட்டன.
2. பருத்தியுடை இந்திய நாட்டில்தான் முதன்முதலில் வழக்கத்தில் வந்தது. சிந்தம் (சிந்து என்பதன் திரிபு) என்ற பெயரால் அது மேலை ஆசிய நாடுகளுக்குச் சென்றது. மூங்கில்தாள் போன்ற மெல்லிய உடைகள் பண்டைக் காலத்தில் ஐரோப்பாவுக்கு மிகுதியாக ஏற்றுமதி செய்யப்பட்டன.
3. மெல்லிய பஞ்சினால் படுக்கைகள், தலையணைகள் தயார் செய்வதும், புல்லினால் மிக மெல்லிய பாய்கள் நெய்வதும் பண்டைத் தமிழர் தொழிலே. கச்சணிதல் பண்டைத் தமிழ் நூல்களிலெல்லாம் பேசப்படுவதால் தமிழ்ப்பெண்டிர் மேலாடை இன்றியிருந்தனர் என்பது தவறான செய்தி.
4. தமிழர்கள் கோட்டைகளும் கொத்தளங்களும் கட்டிப் பெரிய வீடுகளில் வாழ்ந்தனர். ரிக் வேதத்தில் தசியூக்கள் பெரிய அரண்மனைகளில் வசித்தனரெனவும் அவர்களுடைய அரண்மனைகளுக்கு நூறு வாசல்கள் இருந்தனவென்றும் பேசப்படுகின்றது.
5. எழுநிலை மாடங்கள் என்பனவே பிற்காலத்துக் கோபுரங்களாயின. (இடஞ்சிறந்து உயரிய எழுநிலை மாடத்து – அடி: 86 என முல்லைப்பாட்டில் வருதல் காண்க.) ஆயிரங்கால் மண்டபங்கள் அக்காலத்தில் இருந்தபடியே இக்காலத்திலும் காணப்படுகின்றன. தென்னாட்டிலுள்ள பெரிய கோயில்கள்போலப் பெருங் கட்டடங்களை வடநாட்டிற் காண்டல் அரிது. சிந்து நாகரிகக் காலத்திலேயே கோயில்கள் இருந்தமையால் புத்தர் காலத்திற்குப் பின்தான் கோயில்கள் ஏற்பட்டனவென்பது பிழை.
6. பல்லாயிர ஆண்டுகளாகக் கட்டட அமைப்பிலும் வடிவங்கள் செதுக்குஞ் சிற்பவேலையிலும் தலைசிறந்து விளங்கிய தமிழர் உயர்ந்த தத்துவக் கருத்துக்களைப் பொதுமக்களுக்கு விளக்கிக் காட்டுவதற்காகப் பல்வகைத் தெய்வ வடிவங்களையும் அவற்றிற் சேர்க்கப்படும் படைக்கலங்களையும் வகுத்தமைத்தனர். தென்னாட்டுக் கற்சிற்பங்களில் காணப்படும் பதுமைகள் மத்திய அமெரிக்காவிலுள்ள மெக்சிகோவில் தோண்டியெடுக்கப்பட்ட பிம்பங்களை ஒத்திருக்கின்றன என்கிறார் எச்.ஜி. வெல்ஸ் (Herbert George Wells) எனும் ஆங்கில எழுத்தாளர் தம்முடைய ’உலக வரலாற்றின் சுருக்கம்’ (A Short History of the World) எனும் நூலில்.
பிறப்பைப் பற்றிய உயர்வு தாழ்வு தமிழர் வழிபாட்டில் இல்லை என்பதைக் காசியில் யாவரும் வருண வேறுபாடின்றிச் சிவபெருமானைப் பூசிக்கும் வழக்கத்தினின்று நாம் அறிந்துகொள்ளலாம். காசியின் நடைமுறை வழிபாட்டினர்க்கு வசதி தாராதாகலின், நல்லொழுக்கமும் கள், ஊன் விலக்குமுடைய அறிஞர் எக்குலத்தவராயினும் பூசனை முறையறிந்து அன்பாய்ப் பூசிக்கக் கூடுமாயின் அவரை ஆலயத்தில் அர்ச்சகராய் நியமித்துக் கொள்ளுதல் நலம். இப்போது ஆலயங்களின் குருக்களாய் உள்ள ஆதிசைவ மரபினர் தமிழப் பார்ப்பனரே ஆவர். அவர்கள் சிவன்முகத்து அருள்பெற்ற அந்தணரெனவும், சுமார்த்த பிராமணர் அயன் முகத்துதித்த பிராமணர் எனவும் கருதப்படுவதுடன் பின்னையோர் கோயில் பூசனைக்கு உரியரல்லர் என்றும் ஆகமம் விதிக்கின்றது.
ஆதிசைவர் தமிழ்நாட்டிலே தோன்றிப் பொதியின் மலைக்குத் தெற்கிலுள்ள பெருஞ்செல்வமென்னும் மகேந்திர மலையில் தவமியற்றித் திருவருள் பெற்ற ஐந்து தமிழ் முனிவர்களின் வழித்தோன்றல்களாவர். அவர்கள் இக்காலத்தில் தம்மை இன்னார் என்றறியாது சுமார்த்த மதநெறியைத் தழுவி நடக்க முயலுகின்றனர் என்று ஆதிசைவருக்கும் சுமார்த்த பிராமணருக்கும் உள்ள வேறுபாட்டைத் தெளிவுபடுத்தும் கா.சு. பிள்ளை, தமிழர் கோயில்களில் தமிழ்ப் பாடல்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்; பிறமொழிப் பாடல்களுக்கு அத்துணை அவசியமில்லை. தேவாரம், திருவாசகம், திருவாய்மொழிப் பாடுவோர் தக்க இயல் இசைப் பயிற்சி உடையோராய் இருத்தல் வேண்டும். உள்ளம் உருகும்படிப் பாடும் திறனுடையோர்க்குப் பரிசளித்தல் வேண்டும் என்று தம் சிந்தனைகளை முன்வைக்கின்றார்.
”தமிழர் என்பவர் யார்?” என இன்றுவரை சர்ச்சைக்குரியதாய் விவாதிக்கப்படும் வினாவிற்கு, “தமிழைத் தாய்மொழியாக உடையவர் தமிழர். தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழைத் தாய்மொழி எனக் கருதாதவர் தமிழர் ஆகார். தமிழ்நாட்டில் பிறவாதிருந்தும் தமிழைத் தாய்மொழிபோல் போற்றுபவரைத் தமிழர் எனல் இழுக்காகாது. தமிழ் நாகரிகத்தை உயர்ந்தது எனக் கருதுபவரும் தமிழரே!” என அன்றே வரையறுத்து விடையிறுத்துள்ளார் கா. சுப்பிரமணியப் பிள்ளை.
’பல வித்வான்கள் பாடிய தனிப்பாடல் திரட்டு’ என்ற தலைப்பில் இரு பகுதிகளாக வந்துள்ள கா.சு. பிள்ளையின் நூல், சிறந்த உரையாசிரியராகவும் திகழ்ந்தவர் அவர் என்பதற்குச் சான்று பகர்கின்றது.
Principles of criminology, Lectures on the Indian Penal Code முதலிய சட்டநூல்கள், மாந்த வரலாறு, இலக்கிய வரலாறு, சைவ சமயக் குரவர்கள் வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள் குறித்த விளக்கம் எனப் பல்துறைசார்ந்த அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களைக் கா.சு. பிள்ளை எழுதியுள்ளார். இவை வெறும் தகவல்தரும் நூல்களாக இல்லாமல், கற்பாரின் சிந்தனைக்கு விருந்து படைப்பனவாகவும், சீர்திருத்தக் கருத்துக்கள் நிறைந்தனவாகவும் மிளிர்வது இவற்றின் தனிச்சிறப்பாகும்.
பல்கலைப் புலவராகவும், நுண்மாண் நுழைபுலம் மிக்க சான்றோராகவும் விளங்கிய கா.சு. பிள்ளையவர்கள், தம் இறுதிக்காலத்தில் வாத நோயினால் பாதிக்கப்பட்டு 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் தம்முடைய 56ஆம் அகவையிலேயே இயற்கை எய்தியமை வருந்தத்தக்கது.
எனினும், தமிழின் கருவூலமாகவும் சைவத்தின் திருவுருவாகவும் விளங்கிய நற்றமிழர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, நெல்லை மண்ணுக்குப் பெருமை சேர்த்த நல்லறிஞர் வரிசையில் என்றும் நிலைத்திருப்பார் என்பதில் ஐயமில்லை.
கட்டுரைக்குத் துணைநின்றவை:
1. செந்தமிழ்ச் செம்மல்கள் – முனைவர் அ. அறிவுநம்பி, சித்திரம் வெளியீடு, 15, கலைவாணி நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி – 8.
2. தமிழர் சமயம் – கா. சுப்பிரமணியப் பிள்ளை, எம்.ஏ., எம்.எல்., தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
3.https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/center-page-articles/2016/nov/05/தமிழுக்குத்-தொண்டுசெய்த-பிள்ளை-2592655.html