(Peer Reviewed) காப்பியமாந்தர் படைப்புகளும் கருத்துருவாக்கங்களும்

0

முனைவர் மு.சுதா
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி


தமிழின் பெருமையை உலகிற்குப் பறை சாற்றியவை தமிழ் இலக்கியங்கள். சங்க இலக்கியங்கள், அற இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் எனத் தொடர்ந்து இன்றைய நவீன இலக்கியங்கள் வரை ஒவ்வொரு படைப்புகளும் தன்னளவில் தனித்துவம் பெற்றனவாக விளங்கி வருகின்றன. குறிப்பாக ஆய்வுக்குரிய காப்பிய இலக்கியங்கள்.

அகத்தையும் புறத்தையும் பாடுபொருளாகக் கொண்ட சங்க இலக்கியங்கள் குறுகிய அடிகளில் மக்களின் உள்ளத்து உணர்வுகளின் வெளிப்பாடாய் வாழ்வியல் பதிவுகளாய் அமைந்தன. அற இலக்கியங்கள் அம்மக்களுக்கு நல்வழியை எடுத்தோதின. பின்வந்த காப்பிய இலக்கியங்கள் அகம், புறம், அறம், பக்தி என்ற பல நிலைப்பாடுகளையும் ஒருங்கே தன்னகத்துக் கொண்டு தோன்றியதுடன் அவை தோன்றிய சமூகப் பதிவாய் அமைந்ததும் தனிச் சிறப்பாகும். தாம் தோன்றிய சமூகக் கட்டமைப்புக்குக் உட்பட்டு அதே நேரத்தில் சமூக மேன்மைக்குக் காரணமான தங்களது உள்ளக்கிடக்கைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ தங்கள் படைப்புகளின் வழி பதிவு செய்து வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் காப்பியப் பெருமக்கள். இது இவர்களுடைய ஆளுமைத்திறனாகும். இவ்வாளுமைப்பண்பை உணர இவர்கள் தம் படைப்புகளை ஆழ்ந்து நோக்கவேண்டும்.

படைப்புகளை ஆழ்ந்து நோக்கினால் மட்டுமே படைப்பின் நோக்கம் பற்றியும் அறிய இயலும். அவற்றின்வழி அப்படைப்பு தோன்றிய சமூகம் பற்றியும் உணரவியலும். சமுதாயத்திற்குத் தன் உருவாக்கத்தின் வழி ஏதோ ஒன்றைக் கூறவியலும் ஆசிரியனின் உள்ளக்கிடக்கையை உணர முடியும். அவ்வாறில்லாமல் ஓர்காப்பியத்தைச் சுவைக்காகப் பொழுதுபோக்கிற்காகப் புத்திலக்கியம் என்ற நிலையில் மட்டும் காண்பது சரியானதல்ல. காப்பிய ஆசிரியனின் ஒவ்வொரு படைப்பும் நல்லகருத்து உருவாக்கத்திற்கே. அந்த சமூகநோக்குச் சிந்தனையைக் கருத்தினைத் தான் உருவாக்கிய மாந்தர் படைப்புளின் வழி அவ்வாசிரியன் வெளிக்கொணருகின்றான்.

மாந்தர்படைப்பு என்பது காப்பியத்தின் உயிர்நாடியைப்போன்றது என்பர். இத்தகைய மாந்தர்களை எடுத்தாளும் காப்பியன் தான் ஒரு நோக்கத்தில் அம்மாந்தர் படைப்புகளுக்கு உயிர் கொடுக்க அதனைத் தவறாக உணர்வதுடன் காலப்போக்கில் அப்படைப்பு பற்றிய தவறான கருத்துருவாக்கங்களையும் பதியவைத்துப் படைப்பாசிரியரின் நோக்கத்தையே சிதைத்து விடுகின்றனர். இத்தகைய போக்கு மாறவேண்டும் என்ற அடிப்படையிலேயே காப்பியமாந்தர் படைப்பும் கருத்துருவாக்கங்களும் என்ற தலைப்பில் இவ்வாய்வுக்கட்டுரை அமைகின்றது.

கோவலன் மாந்தர் படைப்பும் கருத்துருவாக்கங்களும்

சிலம்பின் முதன்மை மாந்தர் கோவலன். கற்பில் சிறந்தவளாம் பொற்புடைத் தெய்வமாம் புகழப்படும் கண்ணகியையும், கணிகையர் குலத்துப்பிறந்த கற்பில் சிறந்தவளாகிய மாதவியையும் தன் உறவாக்கிக் கொண்டவன். சூழலால் செல்வம் இழந்து, பிறந்தகத்தைத் தொலைத்து, அன்புக்குரியோளைப் பிரிந்து அகம்காத்தோளை அழைத்துக்கொண்டு தொலைத்த செல்வத்தை மீட்டுப் பெறச் சென்றவன் பிறந்த மண்தொடாதே மரணத்தைத் தொடுகின்றான். அய்யோ பாவம்! என அவலமடையச்செய்யும் மாந்தர்படைப்பாகக் கோவலன் அனைவரின் மனத்திலும் பதிகின்றான். கணவனுக்காக நீதிகேட்கும் கண்ணகியின் போர்ச்செயலில் கோவலன் உயர்வடைகின்றான். ஆனால் கோவலனின் மாந்தர் படைப்பை உற்று நோக்குகையில் இளங்கோவடிகள் ஏதோ ஒன்றை உணர்த்த விரும்புவதை உணரவேண்டும். செல்வத்தில் பிறந்து வாழ்க்கையை வாழத்தெரியாத ஒருவன் தான் அழிந்து போவது மட்டுமல்லாமல் தன்னைச் சார்ந்தோரையும் அழித்துவிடுவான் என்ற சமூகநோக்குச் சிந்தனை விதைக்கு உதாரணமாக கோவலன் விளங்குவதை தனது காப்பியஅடிகளில் இளங்கோவடிகள் சுட்டிச் செல்வதை நோக்கவேண்டும்.

சிலப்பதிகாரக் காப்பியத்தலைவன் கோவலன் கண்ணகியை மணம் புரிந்து வாழ்வினைத் துவங்குவது முதல் மாதவியுடன் வாழ்வு, மீண்டும் கண்ணகியை வந்தடைந்து மதுரைக்குச் செல்லுதல், ஊழ்வினை காரணமாகக் கொலைப்படுதல் என்று இம்மாந்தர் படைப்பு அமைகின்றது.

இம்மாந்தர்படைப்பினைக் காப்பியக் கதைப்போக்கில் காணுவது ஒருநிலை என்றால் அம்மாந்தரின் வழிச் சமூகத்திற்குப் படைப்பாளன் கூறவிழைவதென்ன? என்பதனை ஆய்வின் வழி எடுத்துரைப்பதும் கடமையாகும். ஏனென்றால் ஒவ்வொரு படைப்பாளனுக்கும் அவனது படைப்பிற்கும் எனக் கொள்கைகள் உண்டு. சமூகத்திற்கு அவன் கூற விழையும் கருத்துண்டு. அவற்றை ஆய்வின் வழி கூறல் என்பது இன்றியமையாதது.

கோவலன் என்ற படைப்பின் வழி இளங்கோவடிகள் பல கருத்துகளை உலகிற்குச் சுட்டிச்செல்கிறார். அவற்றில் ஒன்று எல்லா காலத்திற்கும் உரியவாகும் ‘நிதிமேலாண்மை’ எனும் வாழ்வில் பின்பற்ற வேண்டிய இன்றியமையா சிந்தனையாகும்.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு (குறள்: 247)

பொருளின் முக்கியத்துவம் இங்கு உணர்தத்ப்படுகின்றது. வாழ்க்கைக்குரிய ஆதாரமான இப்பொருளாதாரம் அன்று மட்டுமல்ல இன்றும் மிகத்தேவையான ஒன்றாகும். இத்தகையப் பொருளைப் போற்றிக்காவாதுவிட்டால் அது பொருளுக்குரியவரை மட்டுமல்லாது அவரைச் சார்ந்து வாழும் அனைவரையும் அல்லல்படுத்தும். தனிமனிதன் மட்டுமல்லாது அவனால் உருவாகும் இச்சமுதாயம் மேம்பட ஒவ்வொருவருக்கும் பொருளாதாரம் பற்றிய சிந்தனை இருக்கவேண்டும்.

இக்கருத்தை காலம்தோறும் இலக்கியங்கள் பதிவுசெய்துகொண்டு வருகின்றன. பொருளின் தேவையை மட்டும் பதிவுசெய்யாது அப்பொருளை எவ்வாறு பாதுகாக்கவேண்டும் என்பதனையும் வலியுறுத்துவது இவ்விலக்கியங்களின் குறிப்பிடத்தக்கச் சிறப்பாகும்.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு (குறள்: 385)

என்பது வள்ளுவரின் வாக்கு. எத்தகையோன் அரசன்? எது சிறந்த ஆட்சி? என்று எடுத்துரைக்கையில் பொருளைச்சேர்தலும் அப்பொருள் வரும் வழிகளை மேன்மேல் உளவாக்கலும் அங்ஙனம் வந்தவற்றை  ஒருவழித் தொகுத்தலும் தொகுத்தவற்றைப் பிறர் கொள்ளாமல் காத்தலும் காத்தவற்றை அறம் பொருள் இன்பங்களின் பொருட்டு விடுத்தலும் செய்தல்வேண்டும். தேடும் பொருளை இவ்வாறு பாதுகாப்பதே நல்ல அரசு என்று வள்ளுவர் கூறும் கருத்து ஓர் அரசனுக்கு மட்டும் உரிய மேலாண்மைப்பண்பு மட்டுமல்ல. பொறுப்புடைய ஒவ்வொருவருக்கும் வேண்டிய பண்பாகும்.

நிதிமேலாண்மை இல்லாத ஒருவனிடத்து அப்பொருள் தங்குவதில்லை. அவ்வாறு தங்காதப்பொருளினால் அப்பொருளுக்குரியவன் மட்டுமல்லாது அவனைச் சார்ந்தோரும் துன்புறுவர் என்பதையே நம் இலக்கியங்கள் காலந்தோறும் சுட்டிக்காட்டி வந்துள்ளன. நாட்டிற்குத் தலைவனானாலும் வீட்டிற்குத் தலைவனானாலும் அங்கு அவனுக்கு பொருளின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகின்றது. பொருளைச் சேர்ப்பது மட்டுமல்லாமல் அதனைப் பாதுகாத்துச் சுற்றம் காப்பவனே சிறந்த மேலாண்மைப்பண்புடையவன் என்று இலக்கியங்கள் அறிவுறுத்தத் தவறவில்லை.

குறிப்பாக நிதிமேலாண்மை  பற்றிக்குறிப்பிடுகையில்

ஒரு நிறுவனம் வரவும் வரவிற்குள் செலவும் செய்யத் திட்டமிடல் வேண்டும். வருங்காலத்தில் எதிர்பாராத் தேவைகள் ஏற்படக் கூடுமாதலால் தனியே ஒரு ஒதுக்கீட்டு நிதி ஏற்படுத்தவேண்டும் என்கிறது. மேலும் இவ்வாறு திட்டமிடாத நிறுவனம் அழிந்து விடுவதுடன் நிதி ஆதாரமின்றி செலவழிக்கும் அந்நிறுவனத்தார் நிதிமேலாண்மைப் பண்பற்றவர்கள் (பேரா.சி.நாகராசன், பேரா.சா.நடராசன், பேரா.சி.ரா.மணிவாசகம், மேலாண்மை பொருளும் கோட்பாடுகளும், : 245) என்றும் திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சிலப்பதிகாரம் இந்நிதிமேலாண்மைச் சிந்தனையை அழகாகப் பதிவு செய்துள்ளது. இளங்கோவடிகள்  மேலாண்மைப்பண்பு குறித்தத் தன் கருத்துகளை மக்களுக்கு எடுத்துரைக்க கோவலன் மாந்தர்படைப்பைப் பயன்படுத்திக்கொள்கிறார். காப்பியத் தலைவனாகக் கோவலன் சுட்டப்பட்டாலும் அவன் போற்றுதலுக்கு உரியன் அல்லன் என்பதற்கான ஒருகாரணம் அவனிடத்து நிதிமேலாண்மைப்பண்பு இல்லாததேயாகும்.

இப்பண்பில்லாத கோவலன் மட்டுமன்றி அவனைச் சார்ந்த மனைவியர், குடும்பம், சுற்றம், நட்பு ஆகியோரும் எவ்வித தொடர்பில்லாத மதுரையைச் சார்ந்த மன்னவன் மக்கள் வரை அனைவரும் அல்லலுறுகின்றனர். வள்ளுவர் அரசுக்குக் கூறிய நிதிமேலாண்மைப்பண்பு அரசனுக்கு நிகராகச் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த உயர் குடியினராகப் போற்றப்பட்ட வணிகக்குடியில் வந்த கோவலனுக்கு இல்லாது போனதால் ஏற்பட்ட இழிநிலையாகும். செல்வச் செழிப்பானக் கோமானாய்ப் பிறந்தவன். அச்செல்வத்தைப் பேணிப் பாதுகாக்காததால் அடையும் நிலையினை, நிதிமேலாண்மைப் பண்பு என்றால் என்ன என்பதனை, அத்திறன் இல்லாதவர் எந்நிலை அடைவர் என்பதனைக் கோவலன் எனும் மாந்தர் படைப்பின் வழி மக்களுக்கு உணர்த்திச் செல்கிறார்.

பெருநில முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒரு தனிக் குடிகளோடு  உயர்ந்தோங்கு செல்வத்தான்
வருநிதிபிறர்க் கார்த்து மாசாத்து வானென்பான் ( சிலம்பு: மங்கலவாழ்த்துக்காதை: 30-33)

என்று கோவலனின் தந்தை மாசாத்துவானை அறிமுகப்படுத்துகிறார். இங்கு கோவலனின் செல்வவளம் சுட்டப்படுகிறது. இவன் திருமணம் செய்ததும் ‘வான்மழை போன்ற கொடைத்தன்மை’ பொருந்திய கையை உடைய செல்வச் செழிப்பைக் கொண்ட மாநாய்கனின் மகளான கண்ணகியையாம். இவர்கள் பிறந்த புகாரும் வந்தாரை வாழவைக்கும் செழிப்புடையது.

உரைசால் சிறப்பின் அரை கவிழை திருவின்
பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்
முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும்
வழங்கத் தவாஅ வளர்த தாகி
அரும்பொருள் தரூஉம் விருந்தின் தேஎம்
ஒருங்கு தொக்கு அன்ன உடைப்பெரும பண்டம்
கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக்
குலத்தில் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்(சிலம்பு: மனையறம்படுத்தக்காதை: 1-8)

என்று புகழ்கின்றார். கோவலனையும் கண்ணகியையும் அவர்களுடன் பணிபுரியத்தக்க ஏவலாளிகளுடன் தனிக்குடித்தனம் வைத்து மகிழ்ந்ததை ‘உரிமைச்சுற்றமொடு ஒருதனிப் புணர்க்க’ என்று குறிப்பிடுகிறார். இளங்கோவடிகள் கோவலனின் பொருள்சிறப்பை இவ்வாறு விளக்கியுரைக்கக் காரணம் இப்பொருளைப் பாதுகாக்கும் தன்மையில்லாததைச் சுட்டவே எனக்கொள்ளலாம்.

மாதவியைக் கண்டு மயங்கி உள்ளத்தைப் பறி கொடுத்த கோவலன் ஆயிரத்தெட்டு கழஞ்சுபொன்கொடுத்து மாதவியை விலைக்கு வாங்கும் அளவிற்கு சிறந்த செல்வந்தன். செல்வச்செழிப்பில் தன் மனதிற்கினிய வாழ்க்கையைப் பெற்ற கோவலன் அச்செல்வம் முழுவதையும் அவளுக்கு அர்ப்பணிக்கின்றான். வீடுமறந்து செய்தொழில் மறந்து சுற்றம் மறந்து காதலும் காமமும் நிறைய மகிழ்வான வாழ்வை மேற்கொள்ளுகின்றான்.

ஆகாறு அளவிட்டதாயினும் கேடு இல்லை
போகாது அகலாக் கடை (குறள்: 478)

என்று வள்ளுவர் வரவும் செலவும் குறித்து உரைப்பது ஈண்டு குறிக்கத்தக்கது. இங்கு வரவின்றிச் செலவு மட்டும் செய்து தன்நிலை தாழ்ந்து செல்கின்றான் கோவலன். ஒரு நிலையில் தான் காதல் கொண்ட அத்தூயவளின் உள்ளமும் அறியாமல் உலவுற்றத் திங்கள் முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்கின்றான். நல்ல செயலையும் மேற்கொள்ளாமல் செய்த செயலிலும் தடுமாறாமல் வாழுவதை அறியாத கோவலன் கண்ணகி, மாதவி என்ற இருநற் துணையின் உள்ளமறிந்து கொள்ளாத தலைமைக்குரிய பண்பில்லாதவனாகவே காணமுடிகின்றது.

செல்வம் அனைத்தையும் உயர் குடிப்; பிறப்பிற்கு இழிவு நேரும் வகையில் இழந்து மீண்டு வந்த கோவலன் கண்ணகியின் வாடிய மேனியைக் கண்டு வருத்தம் கொண்டு

சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக்
குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைத்த
இலம்பாடு நாணுத் தருமெனக் கென்ன(சிலம்பு: கனாத்திறம் உரைத்தக் காதை: 69-71)

என்பதாக இளங்கோவடிகள் சுட்டுகிறார். செல்வச் செழிப்புள்ள குடியில் பிறந்து மன்னனுக்கு நிகராக வாழ்ந்தவன் அச்செல்வத்தைப் பாதுகாக்காத மேலாண்மைத் திறனில்லாதவனாக இருந்தால் இறுதியில் நாணுற்றுத் தலைகுனியத்தான் வேண்டும் என்பதற்கு இந்நிகழ்வுகள் சான்று பகரும். இதுபோன்று கோவலன் நிதிமேலாண்மைத் திறனில்லாதவன் என்பதற்கு இக்காப்பியம் முழுவதும் சான்று காட்டிச்செல்லலாம்.

தன்னிடத்து வெட்கி நிற்கும் தன் தலைவனிடம் ‘சிலம்புள கொண்மென’ உரைக்கின்றாள் கண்ணகி. செல்வம் அனைத்தையும் இழந்தாலும் அவன் குடிக்கேயுரிய பண்பு அவனை மீண்டும் விடியலைத் தேட ஆயத்தப்படுத்துகிறது. ஆனாலும் அப்பொழுதும் தவறான முடிவால், எண்ணித் துணியாத கருமத்தினால்  அவன் அழிவை நோக்கியே செல்வதைக் காணமுடிகிறது. சிலம்பினைக் கொண்டு ‘சென்ற கலனோடு உலந்தபொருள் ஈட்டுதல் உற்றேன்’ என்று மதுரைக்குப் புறப்படுகிறான்.

இங்குதான் இளங்கோவடிகள் சுட்டிய புகார் நகரப் பெருமையை நோக்க வேண்டும் வந்தாரை வாழ வைக்கும் செல்வச்செழிப்புடைய ஊர் கோவலனது குடிப்பிறப்பு அறிந்த ஊர் அவன் வாணிகம் செய்த ஊர்  இங்கு அவன் குடி வணிக நேர்த்திக்கு அறிமுகமே தேவையில்லை. இத்தகைய நகரைவிட்டு முன்பின் அறியா மக்களை நம்பி மதுரை மாநகருக்கு பயணிக்கிறான். ஒரு நல்ல வணிகன் செய்யும் செயலல்ல இது. நாணத்தின் காரணமாக ஊரைவிட்டுச் செல்கின்றான் என்றாலும் விடியலைத்தேடுபவன் முன்பின் அறியா இடத்திற்கு இரவில் புறப்படுகின்றான். அதுவும் வண்ணச்சீறடி மண்மகள் அறிந்திலாதவளிடத்துப் பொருள் சேர்த்து வருகிறேன் என்று வீறுகொண்டு கூறிச்செல்லாமல் பழகியறியாத பகுதிக்கு ‘ஏடு அலர் கோதாய் எழுக’ என்று கூறி அழைத்துச்செல்கின்றான். ‘இவளை உடன்கொண்டு போதல் ஏற்புடைய செயல்; அன்று என்று எவ்வளவு கூறினும் செல்லாது இருக்க மாட்டீர் போலும்’ என்று கவுந்தியடிகள் கோவலனின் செயலைத் தவறென்று உரைப்பது குறிக்கத்தக்கது.

கோவலன் திட்டமிட்டு வணிகம் செய்யத் தெரியாதவன் என்பதற்கு இன்னும் வலுவான சான்றுகளைக் காட்டிச் செல்லலாம். காடுகாண்காதையில் மாங்காட்டு மறையோனிடம் ‘மாமறை  முதல்வ மதுரைச் செந்நெறி கூறு நீயென’ என்று வேண்டுகிறான். முன்பின் அறியா மதுரை மாநகருக்கு வணிகம் செய்யச் செல்லுதல் அவனுடைய தவறென்றால் மறையோன் குறிப்பிடும் மற்றொரு செய்தி கோவலனின் தவறானத் திட்டமிடாத செயல்படுத்துதலை உணர்த்தும். ‘முல்லையும்  குறிஞ்சியும் நல்லியல்பு கெட்டுத் தன்னைச் சார்ந்தாரை நடுங்கச்செய்யும் பாலை எனப்படும் வேனிற்காலத்தே காரிகையுடன் பயணம் மேற்கொண்டீரே’ என்று வருந்தியுரைக்கிறார் மாங்காட்டு மறையோன். இதனைப் பின்னர் கோவலன்

நெறியின் நீங்கியோர் நீர்மையே னாகி
நறுமலர் மேனி நடுங்குதுயர் எய்த
அறியாத தேயத்து ஆரிடை உழந்து
சிறுமை உற்றேன் செய்தவத் தீர்யார்(சிலம்பு:ஊர்காண்காதை: 17-20)

தானே செய்தவறுக்கான ஒப்புதல் வாக்குமூலம் தருகின்றான். ஆராயாமல் முடிவெடுத்து பின் துன்புறும் இவனது பண்பு இங்கு வெளிப்படுகிறது.

ஒப்பற்றச் செல்வத்தைப் பெற்றவன் அதனைப் பேணாது விட்டுவிட்டாலும் மீண்டும் அதைப்பெற முயலவேண்டும். அதுவும் வணிகமே தொழிலாகக் கொண்டவன் மீண்டும் முயலும் போது முன்பைவிட நுட்பமாக ஆய்ந்து வணிகம் செய்தால் மட்டுமே அச்செல்வத்தைப் பெறமுடியும். ஆனால் திட்டமிடுதல் செயல்படுத்துதல் வெற்றியடைதல் என்ற வணிக மேலாண்மையே அறியாதவனாக அவனது அடுத்தடுத்தச்; செயல்கள் அமைகிறது.

வணிகநோக்கில் செல்லும் கோவலன் மதுரையின் அரசரும் விரும்பும் அங்காடிவீதி, நவரத்தினக்கடைவீதி, பொன்மிகுகடைவீதி, கூலம் குவித்த கூலவீதி என அனைத்தையும் கண்டு தெளிந்து மீண்டும் கவுந்தியடிகளும் அடைக்கலமிருந்த கண்ணகியிருக்குமிடம் வருகின்றான்.

மீண்டும் மாதரி ஐயையுடன் கண்ணகியை விட்டுச்செல்லும்போது ‘சிலம்புள கொண்மின்’  என்ற கண்ணகியின் முன் கூற்றின்படி இரண்டு சிலம்புகளைப் பெறாமல் ‘சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் மாறிவருவன்’ என்கிறான். சிலம்பு ஒன்றைத் தா விற்றுவருகிறேன் என்பது நல்ல வணிக மகன் செய்யும் செயலல்லவே. இரு பொருளாகப் பயன்படும் ஓர் அணிகலனை ஒற்றையாய் விற்பது சரியோ! அதனை வாங்குவோர் தான் உண்டோ! இதைக் கோவலன் உணராது செய்கின்றான். இங்கும் இவனது வணிகத்திற்கு ஒவ்வாத செயல்தான் வெளிப்படுகிறது.

அது மட்டுமன்றி அச்சிலம்பைக் கடைத்தெருவின் விற்கச் சென்றவன்

சாதரூபம் கிளிச்சிறை ஆடகம்
சாம்ப10 நதம்என ஓங்கிய கொள்கையில்
பொலம்தெரி மாக்கள் கலங்கஓர் ஒழித்தாங்கு
இலங்குகொடி யெடுக்கும் நலம்கிளிர் வீதியாகிய(சிலம்பு:ஊர்காண்காதை: 201-204)

பொன்னின் வேற்றுமையைப் பகுத்தறியும் பொன்வாணிகர் காணப்படும் பொன்மிகு கடைவீதியை முன்னரே கண்டவனன்றோ! அங்கல்லவா செல்லவேண்டும். ஆனால் கடைத்தெருவில்  செல்லும் வழியில் தான்கண்ட பொற்கொல்லனை அணுகி சிலம்பினை மதிப்பிடச் செய்கின்றான்.

காவலன் தேவிக்கு ஆவதோர் காற்கணி
நீவிலை யிடுதற்காதி யோவெனகோவலன் கேட்க, அதற்கு அவன்

அடியேன் அறியே னாயினும் வேந்தர்
முடிமுதல் கலன்கள் சமைப்பேன் யான்(சிலம்பு:கொலைக்களக்காதை: 111-114)

எனப் பதிலுரைக்கின்றான். பெண்களின் காற்சிலம்பினை மதிப்பிட அறியாதவன் ஆயினும் மன்னர்க்கு முடிமுதலிய அணிகளைச் செய்வதில் வல்லவன் நான் என்கிறான். கேட்கும் கேள்விக்கு தான் அறிந்தது என்ன என்று தெளிவாகப் பதிலிறுக்கிறான். ஒரு பொருளின் மதிப்பறியா ஒருவனிடத்து அப்பொருளைக் கொடுப்பது சரியானதோ! தன்தொழில் திறனைத் தானே அறிவிக்கும் அப்பொற்கொல்லனிடத்து ஒரு நல்ல வணிகநேர்த்தியறிந்தவன் பொருளைக் கொடுப்பனோ! ஆனால் கோவலன் போற்றருஞ் சிலம்பின் பொதிவாய் அவிழ்த்து அளிக்கின்றான். இதைவிட கோவலனின் மேலாண்மைக்குத் திறனுக்குச் சான்று காட்டத்தேவையில்லை.

முறையற்ற இச்செயலால் கொலைக்களப்படுகின்றான் கோவலன். பிறந்தது முதல் பெற்ற செல்வத்தைப் போற்றிப் பாதுகாவாது கண்ணகி கூறியது போல் ‘போற்றா ஓழுக்கம்’ புரிந்தகோவலன் தான் பெற்றப் பொருளை போற்றாது, காவாது, வரவிற்கான முயற்சி செய்யாது அச்செல்வத்தை அழித்தலை மட்டும் செய்து அடுத்தடுத்து பொருளாதார மேன்மையடைதல் என்ற மேலாண்மைப் பண்பேயற்று உயர்வணிகக்குடியில் பிறந்தும் அக்குலத்திற்கேயுரிய வணிகத்திறமையும் இன்றி தவறுகள் இழைக்கின்றான். தானும் முயற்சிக்காது தன்முன்னோர்கள் ஈட்டிய பொருளையும் பாதுகாக்காது நல்ல தலைமைக்குரிய செயல்பாடுகள் இல்லாது அடுத்தடுத்தத் தவறான முடிவுகளால் உயிரையே இழக்கின்றான்.

இளங்கோவடிகள் கோவலனின் முன்ஊழ் அவன் இறப்பிற்குக் காரணம் என்று வெளிப்படையாகச் சுட்டியிருந்தாலும் இம்மாந்தர்படைப்பின் வழியாக நிதிமேலாண்மைச் சிந்தனையையே முன்வைப்பதை உணரவேண்டும். தான் படைத்தக் காப்பியத்தில் உலாவரும் மாந்தர்களின் வழி நற்கருத்துகளைப் பதிவு செய்யும் அடிகள்  நிதிமேலாண்மைச் சிந்தனையை கோவலன் வழி எடுத்துரைக்கின்றார்.

காப்பியங்கள் என்பது வெறும் கதையல்ல. நல்ல கருத்துகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் இணைப்புப்பாலம். உண்மையோ கற்பனையோ இக்காப்பியங்களின் தனிச்சிறப்பே தான்தோன்றியகாலத்து வாழ்ந்த மக்களுக்கு அவர்களால் ஏற்கப்பெறும் கதைப்போக்கில் அம்மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நல்ல அறிவுறுத்தல்களை கதைப்போக்கில் மாந்தர் படைப்புகளின் வழி எடுத்துரைப்பது ஆகும். இங்கு சமூகமேம்பாட்டை நோக்கிய படைப்பாளனின் கருத்து பதிவு செய்யப்படுவதோடு அப்படைப்பும் வெற்றிபெறுகிறது. காப்பியங்களைப் பொறுத்தவரையில் படைப்பாளனையும் படைப்பினையும் நோக்குதல் அவசியமானது. காப்பியத்தின் வழி எத்துணையோ நற்சிந்தனைகளை பதிவு செய்ய விழையும் இளங்கோவடிகள் கோவலன் எனும் மாந்தர் படைப்பின் வழி நிதிமேலாண்மை எனும் பொருளாதாரத்தத்துவத்தை கருத்துருவாக்கம் செய்கின்றார். இதுபோன்ற உண்மைகளை வெளிக்கொணராது ஏதேனும் ஓர் நோக்கிலேயே காணும் பார்வை மாறவேண்டும்.

துணை நின்றன


1. அழகு கிருஷ்ணன். பொ (1988) ,சிலப்பதிகாரம் காட்டும் பண்பாடும், சமுதாய வரலாறும், ஐந்திணைப்பதிப்பகம்.

2. துரைசாமிப்பிள்ளை. சு. ஔவை (1957) சிலப்பதிகார ஆராய்ச்சி, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்.

3. பஞ்சாங்கம்.க, (2002), சிலப்பதிகாரத்திறனாய்வுகள், மெய்யப்பன் தமிழாய்வகம்.

4. பரிமேலழகர் (உ.ஆ), (1991) திருக்குறள், கங்கை புத்தக நிலையம்.

5. பெருமாள்சாமி.வெ, சிலப்பதிகாரம் (மறுக்கப்பட்ட நீதியும் மறைக்கப்பட்ட உண்மையும்), பாரதி புத்தகாலயம்.

6. பேரா.சி.நாகராசன், பேரா.சா.நடராசன், பேரா.சி.ரா.மணிவாசகம், மேலாண்மை பொருளும் கோட்பாடுகளும், ஆசிரியப்பயி்ற்சி பாடநூல்.

7. வேங்கடசாமி நாட்டார்.ந.மு, (2014) சிலப்பதிகாரம் (மூலமும் உரையும்), ராமையா பதிப்பகம்


ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

செவ்விலக்கியப் படைப்புகளுக்கு அடுத்த நிலையில் சிறப்பினைப் பெற்று விளங்குவன காப்பியங்கள். இக்காப்பியங்களில் இடம்பெறும் மாந்தர்களின் படைப்பு என்பது காப்பியத்திற்கு உயிர்நாடியாக அமைகின்றது. சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தில் இளங்கோவடிகளால் படைக்கப்பட்ட தலைமாந்தர் கோவலன். இம்மாந்தர் படைப்பு, சிலப்பதிகாரக் காப்பியத்திற்கு எத்தகைய சிறப்புநிலை நோக்கிப் படைக்கப்பட்டது என்பதைக் கட்டுரையாளர் திறம்பட விளக்கியிருக்கின்றார்.


பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.