Category: கட்டுரைகள்

கட்டுரைகள்

  • தமிழ்காக்க உழைத்த தன்மானத் தமிழர் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்

    தமிழ்காக்க உழைத்த தன்மானத் தமிழர் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்

    மேகலா இராமமூர்த்தி

    ஆரிய வல்லாண்மைத் திறத்தைத் தம் கூரிய தமிழ்ச் சொற்களால் அம்பலப்படுத்தியவரும், தமிழ்த் தேசியத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவரும், பாவலரேறு என்று மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரால் நேயத்தோடு அழைக்கப்பட்டவருமான பெருஞ்சித்திரனார் சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம் என்னும் சிற்றூரில் துரைசாமி, குஞ்சம்மாள் இணையருக்கு 10.03.1933-ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் இராச மாணிக்கம’ என்பதாகும். பின்னர், இராச என்பதைத் துறந்து, தம் தந்தையின் பெயரினை இணைத்துத் ‘துரைமாணிக்கம்’ என்றானார்.

    மெய்ம்மைப்பித்தன், தாளாளன், அருணமணி, பாஉண் தும்பி, பெருஞ்சித்திரன் எனும் பல்வேறு புனைபெயர்களில் இவர் பின்னாளில் எழுதிவந்தார். இவற்றில், செம்மாந்த சங்கத் தமிழ்ப் புலவனின் பெயரான பெருஞ்சித்திரன் என்பதே இவருக்கு நிலையான வழங்குபெயராகிவிட்டது.

    தனித்தமிழ் இயக்கம், தமிழ் இதழியல், தமிழ்க் கவிதை எனப் பல்வேறு தளங்களில் குறிப்பிடத்தக்கவராக இயங்கியவர் பெருஞ்சித்திரனார். தமிழினம், தமிழ்மொழி, தமிழ்நாடு என மூன்றினையும் தம் உயிர்மூச்சாகக் கொண்டு செயற்பட்டுள்ளார். இந்திஎதிர்ப்பு, ஈழம் சார்ந்த கருத்தாக்கம், சாதி, மத எதிர்ப்பு, தமிழக அரசியல் செயற்பாடுகள் எனப் பல பணிகளிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டுள்ளார். எந்த நிலையிலும் யாருக்காகவும் எதற்காகவும் உடன்பாடு செய்து கொள்ளாதவராக, இருபதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றில் தடம் பதித்தவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

    எழுத்துச் சீர்த்திருத்தம் மும்முரமாக நடைபெற்ற காலக்கட்டத்தில் வாழ்ந்த பெருஞ்சித்திரனார் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு அவர் முன்வைத்துள்ள காரணங்களாவன:

    “புதிய எழுத்துருக்கள் தோன்றி வருவதால் முன்னைய தொன்மையான இலக்கண, இலக்கியங்கள் படிக்க முடியாமற் போகும். சில இலக்கண விதிகள் பயனற்றுப் போகும். தமிழின் தொன்மையை, அதன் காலத்தை நிலைநாட்டிடச் சான்றுகள் ஏதுமின்றிப் போகும்” என்பவையே அவை.

    தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் பல்வேறு தலைப்புக்களின்கீழ் அற்புதக் கவிதைகளாய்ப் புனைந்துள்ளார் பாவலர் ஏறு.  “தமிழ்த்தாய் அறுபது, முத்தமிழ் முப்பது, தமிழில் கற்க முன்வருக, தமிழ் உழவு செய்க, தமிழ் படித்தால் அறம் பெருகும், தூயதமிழ் எழுதாத இதழ்களைப் பொசுக்குங்கள், பைந்தமிழில் படிப்பதுதானே முறை என்பன அவற்றில் சிலவாகும்.

    ”தமிழ் உழவு செய்க!” என்ற தம் கவிதையில்,

    எழுகதமிழ் மங்கையரே! நல்லிளைஞீர் உங்கள்
    இளமைதரும் கனவொருபால் இருக்கட்டும்; முன்னே
    தொழுகதமிழ் அன்னையினை; துலங்குகநும் ஆற்றல்!
    துணிவுறவே ஊரூராய்த் தெருத் தெருவாய்ச் சென்றே
    உழுகநறுஞ் சொல்லாலே! ஊன்றுகசெந் தமிழை;
    உணர்வுமழை பொழிவிக்க; எண்ணஎரு ஊழ்க்க!
    செழுமையுறுந் தமிழ்க்குலத்தை விளைவிக்க! பின்னர்
    செந்தமிழ்த்தாய் அரசிருக்க ஏற்றவழி செய்மே!
    என்று தமிழ் இளைஞர்களிடம் அறைகூவல் விடுக்கின்றார்.

    மரபுக்கவிதை, புதுக்கவிதை என்ற கவிதையின் இருவேறு வடிவங்களையும் ஒப்பிடும் பெருஞ்சித்திரனார்,

    “மரபு தழுவிய அன்றைய பாடல்கள், தாய்மையுணர்வு நிரம்பிய ஓரிளம் பெண் பெற்றெடுக்கும், நல்ல அழகிய அறிவறிந்த நிறைமாதக் குழந்தைகள் போன்றவை. சோம்பலாலும் அறிவுக் குறுக்கத்தாலும், மன இழிவாலும் பிதுக்கப்பெறும் இக்காலத்து மரபு நழுவிய பாடல்கள், தாய்மையுணர்வு நிரம்பாத பெண்ணுரு சான்ற ஒருத்தி, அரைகுறை முதிர்ச்சியோடு பெற்றெடுக்கும், உறுப்புகள் குறைவுற்று, அழகும் அறிவும் குறைந்த, குறைமாதக் குழந்தைகள் போன்றவை” என்றுரைப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

    உயர்ந்த உண்மைப் பாவலனுக்கு இருக்கவேண்டிய தகுதிகள் பத்து என்று செப்பிடும் பாவலரேறு, அவை நுண்ணோக்கு, இயற்கை ஈடுபாடு, சொல்வன்மை, பாத்திறன், யாப்பறிவு, மொழியறிவு, கற்பனையாற்றல், மனவியல், நடுநிலைமை, துணிவு என்பவனவாகும். இவை ஒன்றின் ஒன்று சிறந்துவிளங்கிப் பாவலன் ஆற்றலைப் படிப்படியாக மிகுவிக்கின்றன. இத்தகுதிகளின் பொருத்தத்திற்கேற்பவே ஒவ்வொருவனின் பாடலும் ஒளிர்ந்து சுடரும்; காலத்தை வெல்லும்; மக்கள் கருத்தினை ஆட்கொள்ளும்; அறிஞர் மதிப்பினைப் பெறும் என்கிறார்.

    தனித்தமிழ் இயக்க அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், சமூகப் போராளிகள் எனப் பலரைக் குறித்தும் தம் பாக்களில் பதிவுசெய்திருக்கும் பாவலரேறு அவற்றுள், தனித்தமிழ் இயக்க முன்னோடியான மறைமலையடிகள், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் போன்றோரைப் பற்றி எழுதியவையே மிகுதி. இவ்விரு அறிஞர்களின் கொள்கைகளும் கற்றோரிடமும், மற்றோரிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர் பெருஞ்சித்திரனார் எனில் மிகையில்லை.

    உலகம் போற்றும் உத்தமத் தலைவர்களையும் களப்போராளிகளையும் தம் கவிதைகளின் வழியாய்ப் போற்றியுள்ள பாவலரேறு, காரல் மார்க்சு, நெல்சன் மண்டேலா போன்றோருக்கு இரங்கற்பாக்கள் பாடியுள்ளார். அண்ணல் அம்பேத்கர், காந்தியடிகள், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போன்றோரின் சமூகப் பணிகளையும், பொதுவாழ்வில் அவர்களின் செயற்பாடுகளையும் எடுத்துரைக்கும் வகையில் கவிதைகள் இயற்றியுள்ளார்.

    குழந்தைக் கவிஞராகவும் முத்திரை பதித்திருக்கும் பெருஞ்சித்திரனார், ”பள்ளிக்குப் போ” என்ற தலைப்பிலான குழந்தைப் பாடலில்,

    ஒழுக்கம் அன்பு கற்று வா!
     உடற் பயிற்சி பெற்று வா
    அழுக்கு நெஞ்சைத் தூய்மை செய்!
     அடக்கம் அமைதி வாய்மை வை!

    பாட்டும் கதையும் படித்து வா
     பண்பைக் கடைப் பிடித்து வா
    நாட்டுப் பற்றை வளர்த்து வா
     நமது மொழியைக் கற்று வா!

    என்று இனிய நல்லுரைகளை மழலையர்க்கு எளிய தமிழில் நவிலுகின்றார்.

    மொழி என்பது மனித இனத்தின் விழி; அதுவே நம் அடையாளம். ஒரு மொழி அழிகிறது என்றால் அம்மொழி பேசும் மக்களும் அவர்களின் பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கங்களும் அழிகின்றன என்றே பொருளாகும் என்கிறார் பெருஞ்சித்திரனார்.

    மொழிக்கலப்பு பற்றித் தெரிவிக்கும் அவர்,

    ”ஆங்கிலம் என்ற மொழி இன்று உயிர்வாழ்ந்துகொண்டிருப்பதே பிறமொழிக் கலப்பினால்தான். காரணம், தன் பெயரைக் காக்கின்ற அளவில்கூட அதனிடம் மொழிவளம் இல்லை. ஆனால் இது தமிழுக்குப் பொருந்தாது. தமிழில் நேர்ந்த மொழிக்கலப்பு அதன் தூய்மையைக் கெடுத்ததோடல்லாமல் அதனை இழிவடையவும் வைத்துவிட்டது. இன்னும் சொன்னால், அதன் மொழிவளர்ச்சியைத் தடுத்து, அதன் இனத்தையும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளுவம் முதலிய மொழியினங்களாகப் பிரிவுறச் செய்துவிட்டது. மொழிக்கலப்புமட்டும் தமிழில் நேர்ந்திருக்கவில்லையானால் இந்தியாவின் பேரினமாகத் தமிழினமே இன்றுவரை இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை என்கிறார்.

    தமிழ்மொழியில் கழகக்கால(சங்க) இலக்கியங்களைப்போல் மிகவும் சிறந்தனவும், கட்டுக்கோப்பு உடையனவுமான இலக்கியங்கள் இடைக்காலத்திலும் பிற்காலத்திலும் தோன்றாமைக்குக் காரணமும் படிப்படியாகத் தமிழில் ஏற்பட்ட மொழிக்குலைவே என்பது பெருஞ்சித்திரனாரின் எண்ணம்.

    ”மண்ணினால் கட்டப்பெறும் வீடுகள் கட்டுவதற்கு எளியவைதாம்; முயற்சியும் குறைவுதான்; பரவலாகவும் கட்ட இயலுகின்றவை, அவை. ஆனால் அவற்றை நம்மில் எவரும் விரும்பாதது ஏன்? அவற்றின் முயற்சி எளிமையையும், செய்பொருள் எளிமையையும் போலவே அவற்றின் நிலைப்பும் எளியதாகிவிடுவதே! வெயிலுக்கும் மழைக்கும் ஈடுகொடுக்க முடியாமல் அம் மண்வீடுகள் விரைவில் சிதைந்துபோவதில்லையா? அப்படிப்பட்டவைதாம் ’எளிய’ சொற்களால் கட்டமைக்கப்பெற்ற ’எளிய’ இலக்கியங்களும்!

    மொழிபற்றிக் கவலைப்படாமல், சொல்லோட்டங்களைத் தம் கருத்தோட்டங்களுக்கு ஏற்றவாறு பஞ்சுபோலப் பறக்கவிடுகின்ற இன்றைய எழுத்தாளர்களின் கோபுர இலக்கியங்கள், அடுத்துவரும் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளில் குப்பைமேடுகளுக்குப் போகாமல் தம்மைக் காத்துக்கொள்ளும் ஆற்றலுடையவை என்பதைக் காலந்தான் தீர்மானிக்கமுடியும்” என்கிறார் தீர்க்கமாக.

    தமிழினத்தின் முன்னேற்றத்திற்கு பெருந்தடைக்கல்லாக இருப்பது நம்மிடம் இருக்கும் சாதிப்பாகுபாடே என உரத்துச் சொல்லும் பாவலரேறு,

    “சாதிநிலை நம்மை ஒருவர்க்கொருவர் முன்னேறவிடாமல் செய்யும் அடிப்படையான தாழ்வுணர்வாக – வீழ்வுணர்வாக இருக்கின்றது. இந்த இழிநிலையினின்று  – நம்மை மீண்டும் மீண்டும் குழிக்குள்ளேயே, சேற்றுக்குள்ளேயே புதைத்துக் கொள்ளுகின்ற மனநிலையினின்று – நாம் எவ்வாறு விடுபடுவது? நம்மையே நாம் உணர்ந்துகொண்டாலன்றோ, விடுவித்துக்கொண்டாலன்றோ, சாதியுணர்வும் நம்மிடமிருந்து கழலும்?! சாதியிலிருந்து நாமே விலகாத வரையில் சாதி நம்மைவிட்டு விலகாது. சாதி வேறெங்கும் வெளியில் இல்லை; அது நம் உள்ளத்துக்குள்ளேதான், அறிவுக்குள்ளேதான், உணர்ச்சிக்குள்ளேதான் இருக்கின்றது. அங்குதான் அஃது உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றது. எனவே, நாமே அதை வெளியேற்றாத வரையில், அதுவாகவே நம்மைவிட்டுப் போய்விடாது. உண்மையாகச் சொல்வதானால், நாம்தாம் அதை உயிர்வாழ வைத்துக்கொண்டிருக்கின்றோம்; நாம்தாம் அதற்கு நீரூற்றுகிறோம்; எருப்போடுகிறோம்; காவல் செய்கிறோம்; அது மடிந்துபோவதில் நமக்கு விருப்பமில்லை. அஃது இல்லாமற்போனால் நமக்குப் பெருமையில்லை; வாழ்வில்லை என்று கருதிக்கொண்டு, அதை நாம் காப்பாற்றி, மாய்ந்துவிடாமல் வாழ்வித்துக்கொண்டு வருகின்றோம். இந்நிலையில் அது எப்படி இல்லாமற் போய்விடும்?

    உண்மையிலேயே சாதி நம்மைப் பிடித்துக்கொண்டிருக்கவில்லை; நாம்தான் அதைப் பிடித்துக்கொண்டிருக்கிறோம்.” என்று கூறியிருப்பது தமிழர்கள் ஆழமாய்ச் சிந்திக்கவேண்டிய கருத்தாகும்.

    தமிழின் வளர்ச்சிகுறித்தே அதிகம் அக்கறைகொண்டிருந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார், ”தமிழ் வாழ வேண்டுமா” எனும் தலைப்பில் எழுதியிருக்கும் பாடல் இன்றைய தமிழகச் சூழலுக்கும் பெரிதும் பொருந்துவதாக இருக்கின்றது.

    தமழ் வாழ வேண்டுமா?

    தமிழ் வாழ்க வென்பதிலும் தமிழ்வா ழாது!
    தமிழ்ப்பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது!
    குமிழ்சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்டும்
    கொக்கரிப்புப் பேச்சாலும் தமிழ்வா ழாதே!
    அமிழ்கின்ற நெஞ்செல்லாம் குருதி யெல்லாம்
    ஆர்த்தெழும்உள் உணர்வெல்லாம் குளிரு மாறே
    இமிழ்கடல்சூழ் உலகமெலாம் விழாக்கொண் டாடி
    ஏற்றமிகச் செய்வதிலும் தமிழ்வா ழாதே!

    பட்டிமன்றம் வைப்பதிலும் தமிழ்வா ழாது!
    பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது!
    எட்டிநின்றே இலக்கியத்தில் இரண்டோர் பாட்டை
    எடுத்துரைத்துச் சுவைபடவே முழக்கினாலும்
    தட்டி, சுவர், தொடர்வண்டி, உந்துவண்டி
    தம்மிலெல்லாம் தமிழ்தமிழென் றெழுதி வைத்தே
    முட்டிநின்று தலையுடைத்து முழங்கினாலும்
    மூடர்களே தமிழ்வாழப் போவ தில்லை!

    செந்தமிழ்செய் அறிஞர்களைப் புரத்தல் வேண்டும்!
    செப்பமொடு தூயதமிழ் வழங்கல் வேண்டும்!
    முந்தைவர லாறறிந்து தெளிதல் வேண்டும்!
    முக்கழக உண்மையினைத் தேர்தல் வேண்டும்!
    வந்தவர்செய் தீங்குகளால் தமிழர்க் குற்ற
    வரலாற்று வீழ்ச்சிகளை எடுத்துக் கூறி
    நொந்தவுளஞ் செழித்ததுபோல் புதிய வையம்
    நோக்கிநடை யிடல்வேண்டும்! தமிழ்தான் வாழும்!

    எனத் தமிழ்காக்க, அதற்குற்ற இன்னல்போக்கப் பாவலரேறு புகலும் இவ் அருங்கருத்துக்களை நெஞ்சில் நிறுத்துவோம்! நந்தமிழாம் செந்தமிழை அழியாது காப்போம்!

    *****

    கட்டுரைக்கு உசாத்துணை:

    1. https://ta.wikipedia.org/wiki/ பாவலரேறு_பெருஞ்சித்திரனார்
    2. பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் – தென்மொழி அச்சக வெளியீடு, சென்னை – 5.
    3. இலக்கியத்துறையில் தமிழ்வளர்ச்சிக்குரிய பணிகள் – பாவலரேறு பெருஞ்சித்திரனார், தென்மொழி அச்சக வெளியீடு, சென்னை -5.
    4. சாதி ஒழிப்பு – பாவலரேறு பெருஞ்சித்திரனார், தென்மொழி அச்சக வெளியீடு, சென்னை – 5.

     

    Share
  • சேக்கிழார்  பா நயம் – 48

    சேக்கிழார்  பா நயம் – 48

    -திருச்சி  புலவர் இராமமூர்த்தி 

    இளம் பருவத்திலேயே  முதிர்ந்த அறிவின் அடையாளங்கள் வெளிப்பட, சுந்தரர்

    கண்முன் தோன்றிய  பரவை நாச்சியாரின் பேரழகு  பற்றியது இப்பாடல். அம்மங்கை நல்லாளைக் கண்டவுடன் இறையருளால் சுந்தரருக்குக் காதலுணர்வு உண்டாயிற்று.

    இந்த உணர்வைக் களவியல் உணர்வு என்று  தொல்காப்பியம் கூறும். இளம்பருவத்தினர் இணைவிழைச்சுக் கொள்வது இயல்பு. பாவேந்தர் பாரதி தாசனர், ‘’காதல் அடைதல் உலகியற்கை!’’  என்றுபாடுவார். இக்காதல் உணர்வு, பிறர் அறிந்துகொள்ள இயலாத நிலையில், இருவருக்கும் இடையே ஏற்படும். இதனைக் ‘களவு’ என்ற இயலாக  இலக்கணம்கூறும். இக்களவியலின் தொடக்க நிகழ்ச்சிகளாகக் காட்சி, ஐயம், தெளிவு, குறிப்பறிதல் ஆகிய நான்கும் நிகழும் ! இதனைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும். இதனைத் திருக்குறள் காமத்துப் பாலின்  முதற்குறள் விளக்குகிறது. 

    தலைவன் தலைவியை நெடுந்தொலைவில்  வரும்போதே கண்டுவிடுகிறான். அவன் தான்காண்பது ஓரு தெய்வத்திருவுருவோ? என்றுஎண்ணுகிறான், இதனை ‘அணங்கு கொல்!’  என்றெண்ணி ஐயுறுகின்றான்! பின்னர் தலைவி மேலும் நெருங்கி வரும்போது , சிறந்த உருவுடைதாய்த் தோன்றும் தேர்ந்தெடுத்த மயிலோ? என்பதை, ‘ஆய்மயில் கொல்லோ?’  என்று கருதுகிறான். அதன்பின் மேலும் நெருங்கி வரும்போது, அவள்காதில் அணிந்த குழையாகிய அணிகலனைக் காண்கிறான். அப்படியானால் காதில் நகையை அணிந்து கொண்டு நெருங்கி வருபவள் ‘பெண் தானோ?‘ என்ற  தெளிவற்ற மனநிலை கொள்கிறான்! இதனை, 

    ‘’அணங்குகொல் ,  ஆய்மயில் கொல்லோ  கனங்குழை
    மாதர்கொல்  மாலும்என் நெஞ்சு!’’

    என்ற  திருக்குறள்  படம் பிடித்துக்  காட்டுகிறது! காட்சி, ஐயம்,  தெளிவு ஆகிய மூன்று நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இத்திருக்குறள்  அமைந்து நம்மை வியப்படைய வைக்கிறது!  

    இதனைப் பரிமேலழகர், ‘.எழுதலாகா உருவும், தன் வருத்தமும் பற்றி ‘அணங்குகொல்’ என்றும், சாயலும் பொழில்வயின் நிற்றலும் பற்றி, ‘ஆய்மயில்கொல்’ என்றும், தன் நெஞ்சம் சென்றமையும் அவள் எதிர்நோக்கியவாறும் பற்றி ‘மாதர்கொல்’ என்றும் கூறினார்.  என்று மேலும்விளக்குவார்! இத்தகைய  காதல் நிகழ்வு சேக்கிழார் சுவாமிகளின்  பாடலில் விளங்குகிறது. 

    இதற்கு முதற்பாடலில் ‘’விற்புரை நுதலின் வேற்கண் விளங்கிழை யவரைக் கண்டார்!’’ என்றபகுதி இருவர்தம்  கண்ணும் ‘’ கண்ணொடு கண்ணிணை நோக்கு’’ ஒத்ததை நினைவூட்டுகிறது. அப்பாடலில் ‘’நகைபொதிந்து இலங்கு செவ்வாய் விற்புரை நுதலின் வேற்கண் விளங்கிழையவர்’’ என்றபகுதி,  பரவையாரது இயற்கை செயற்கை என்ற இருவகைத் தெய்வீக அழகுகளையும் காட்சிபெற வைத்தவாறு. நம்பிகள் காட்சிக்குக் கவர்ச்சியுற முதலிற் புலப்பட்டது நகை. அதன் பின்னரே அதற்கிடமாகிய செவ்வாய் தோன்றிற்று. இவை யிரண்டினால் அக்காட்சியை அவர் உள்ளத்தே ஊன்ற வைத்தன மேலே கண்ட வில்லும் வேலும் ஆம். -ஆதலின் இம்முறை வைத்தார். ஊறுசெய்து உறுத்தியன ஆதலின் படையாகக் கூறியவாறு. வில் கைவிட்டகலாது தொழில் செய்வதுபோல் நுதலும் தானிருந்தபடியே செயல் விளைத்தது ஆதலின் வில் என்றார். வேல் உடையாரால் எறியப்பட்டு ஏவப்பட்டாரிடம் போய்ச் செயல் விளைக்கும்; ஆதலின் கண்ணை வேல் என்றார். இங்குக் கண் என்றது கண்ணின் தொழிலாகிய பார்வையை. அந்தக் கண்ணால் பரவையாருங் கண்டாராதலின் (288) “கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள், என்ன பயனு மில“ என்ற திருக்குறளிற் கண்டவாறு நிகழ்ச்சி உண்டாயிற்று என்க. இக்காரணம் பற்றியே வரும்பாட்டில் விற்குவளை என ஒரு சேர வைத்து எண்ணியபடியாம்’’ என்ற   சிவக்கவிமணியார் உரையின் ஆழமும் அகலமும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. இது காட்சி !

    அடுத்து  ஐயம் என்ற  தொடர் நிகழ்ச்சி. பரவையாரின்  அழகிய தோற்றம் சுந்தரர் உள்ளத்தில்  பல்வேறு ஐயங்களை உண்டாக்குகின்றன! முதலில் அவர் தோற்றம்  தேவருலகக் கற்பக மரத்தின் பூங்கிளை போன்று காட்சி தந்தது.அதனைக்  ‘’கற்பகத்தின் பூங்கொம்போ?’’ என்று கருதுகிறார்!  

    கற்பக மரம்  வானுலகைச் சார்ந்தது. மண்ணுலகில் அதன் கிளைமட்டும் வந்ததோ? பரவையார்  வரும்போதே எங்கும் பரவிய நறுமணம் கற்பகப்பூவின் நறுமணமோ? மரக்கிளை என்ற  கருத்து முற்றப் பொருந்தவில்லை எனக்கருத்தினால், அத்தொடரை கற்பு+அகத்து+ இன்+ பூ+கொம்பு என்று பிரிக்கப்பெற்று, கற்பினை  அகத்தே கொண்ட இனிய மலர்க்கொத்து போன்ற மங்கை என்ற தொனிப் பொருள் தோன்றுகிறது ஆகவே இது கொம்போ? பெண்ணோ? என்றஐயம்தோன்றியது!

    அடுத்து பரவையாரை மன்மதன்,  தான் காதல் மலரம்புகளை எய்து சுந்தரரை வசப்படுத்தி   உயர்வாழ்வு அடைதற்கு உரிய வாழ்விடமாகக் கருதி வந்தானோ? 

    என்றகருத்தில் ‘’காமன் தன் பெருவாழ்வோ’’  என்று கருதினார்! மணிவாசகரின் திருக்கோவையாரின், 

     திருவளர் தாமரை, சீர்வளர் காவிகள், ஈசர்தில்லைக்
    குருவளர் பூங்குமிழ், கோங்கு, பைங்காந்தள் கொண்டு ஓங்குதெய்வ
    மருவளர் மாலை, ஓர் வல்லியின் ஒல்கி, அனநடை வாய்ந்து
    உருவளர் காமன்தன் வென்றிக்கொடி  போன்று? ஒளிர்கின்றதே!

    என்ற பாடலில்  உருவளர் காமனின்  வெற்றிக்கொடி போன்று  என்ற உவமை பரவை நாச்சியாருக்கும்  பொருந்துகிறது.இதில் பூங்கொம்பு என்ற தொடரின் பொருளும் இணைகிறது!

    அடுத்து அழகிய புண்ணியங்கள் செய்த புண்ணியத்தின் பயனாக விளைந்த பெரும்புண்ணியமோ? என்று பரவையாரின் தோற்றம் சுந்தரரைக் கருதவைக்கிறது !  அல்லது அழகு என்றபொருளின் பயன்கள் பலவற்றுள் சிறந்த புண்ணியப்பயனோ? என்றுசுந்தரர்கருதுகிறார். புண்ணியம் காட்சிப் பொருள் அல்லவே! அதுவோ,  பெண்வடிவமோ? என்ற ஐயம்தோன்றும் காட்சி இது! இதனை,’’ பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ?’’ என்ற பாடல்வரி புலப்படுத்துகிறது. 

    இது நிலத்தில் கால்பதித்து  முளைத்த கொடியோ? இக்கொடியில் வில், குவளை, பவளம், மலர், மதி ஆகியவை பூத்துக் காணப்  படுகின்றனவே? ஒரு கொடி மேகத்தைத் தலையில் சுமந்துகொண்டு வில் , பவளம், மதி ஆகிய வேறுபட்ட பொருள்களுடன், குவளை மலர்களையும்   ஏந்திக்கொண்டு மிகுந்த வாசனை வீசித் தோன்றுவது போல் இருக்கின்றதே! உலகில் இல்லாத கொடியோ? உள்ள பெண்ணோ? என்பது ஐயப் பொருள் தருகிறது! இதனை,

    ‘’புயல் சுமந்து  வில் குவளை பவள மலர் மதி பூத்த  விரைக்கொடியோ?’’  

    என்று   சேக்கிழார்  பாடுகிறார்! ஒருபெண்ணின் மேகம்போன்ற கூந்தல், வில் போன்ற புருவம், குவளை  போன்ற விழிகள், பவளம் போன்ற இதழ்கள், கோங்க மலர் போன்ற கொங்கை, மதி போன்ற நுதல் ஆகியவற்றை உருவகம்  செய்யும் சொல்லாட்சித் திறம் பெற்றது இப்பகுதி! பெண்ணின் அங்கங்கள் இன்று படிப்போருக்கும் காட்சிப்பொருளாக அமைந்தது. அன்று  நேரில் கண்ட போது, சுந்தரர் மட்டுமே உணர்ந்த மலரின் நறுமணம் ‘’ விரைக்கொடி’’ என்ற தொடரில் அமைந்தமை இன்புறத் தக்கது.  

    அடுத்து சுந்தரருக்குப் பெருமிதமும் தரும்ஓர்உள்ள நிகழ்ச்சி கூறப்பெறுகிறது. இதுவரை கண்டறியாத புதுமையை  பரவையார் தோற்றத்தில், சுந்தரர் உணர்ந்தார் . ஆதலால், ‘’அற்புதமோ?’’ என்று கருதினார். அவர் மட்டுமே உணர்ந்த அனுபவம், அது!  இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பெற்று இறைவன் திருவுள்ளப் பாங்கின் வண்ணமே வாழும் சுந்தரருக்கு இக்காட்சியும் இறைவன் திருவருளாகவே  தோன்றியது. ஆதலால் இதனை ‘’ சிவனருளோ?’’ என்றார்.

    இந்நிகழ்ச்சி, ஐயம் என்ற துறையாதலின் ஐயத்தின் இலக்கணமாகிய அறிவும் அறியாமையும் கலந்த உள்ள நிகழ்ச்சியைக் குறிக்கின்றமை உணர்க.   கொம்போ – வாழ்வோ – புண்ணியமோ – 

    கொடியோ – அற்புதமோ – இவற்றில் ஒன்றோ, அன்றி முற்றும் கலந்ததோ, பிறிதோ என்று அறிவும், துணிவுபடாமையின் அறியாமையும், கூடி அறியேன் எனப் பெற்றது. 

    அதிசயித்தார் – இதுவும் அற்புதம் போலவே பெருமிதமும் இன்பமும் கலந்த தொரு உள்ள நிகழ்ச்சியேயாயினும் இன்னதென்று அறிந்து அனுபவிக்கப் பெறும். “அதிசயம் கண்டாமே“ என்ற (திருவாசம்) அதிசயப்பத்து முடிபுகளைக் காண்க. 

    மேலே சொல்லிய கருத்துக்கள் நம்பிகளது உள்ள நிகழ்ச்சிகளாம். மனதுக்குப் புலனாய் அறிந்து உரைக்கப்படுதலின் அதிசயித்தார் என்பதாம்.

    முதலில் தெய்வ மணமும், தெய்வ வொளியும், தெய்வ அழகும் கொண்ட ஒரு பொருள் நம்பிகளது காட்சிக்குட்பட்டது. அதனைக் கொம்போ என்றார். பின்னர் அதன் அழகு மிகுதி நோக்கிக் காமன் வாழ்வோ என்றார். அந்த அழகு வெறுங் கீழ் நிலைப்பட்டதாய்த் தோன்றாமல் புண்ணிய விளைவாய்ப் புலனானமையின். “புண்ணியமோ“ என்றார். இவ்வளவும் நிருவிகற்பமாகிய பொதுக் காட்சியாம். 

    இனி அவ்வாறு மணமும் அழகும் ஒளியும் பிரித்துணர்ந்து இன்னின்னவற்றால் விளைந்தன வென்று கூறுபடுத்தி அறியும் உள்ளநிலை உண்டானபடியால் ‘வில் குவளை பவள மலர் மதிபூத்த விரைக் கொடியோ’ என்ற சவிகற்பமாகிய சிறப்புக் காட்சியாயிற்று. இவ்விரண்டினோடு அமையாமையின் அற்புதமாயிற்று. அதன் பின்னர் அவனருளே யன்றி வேறு பற்றுக்கோடு தமக்கின்மையின் முன்னினைவின் குறிப்புத் தோன்றவே சிவனருளோ? என்ற மன நிகழ்ச்சியாயிற்று.

    இவையனைத்தும்  சிவக்கவிமணியாரின் விளக்கம்! இனி முழுப்பாடலையும்  பயின்று பயன் பெறுவோம்!

    கற்பகத்தின் பூங் கொம்போ? காமன் தன் பெரு வாழ்வோ? 

    பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து 

    விற் குவளை பவள மலர் மதிபூத்த விரைக் கொடியோ? 

    அற்புதமோ? சிவனருளோ? அறியேன் என்று அதிசயித்தார்

    இப்பாடலின்  நயங்கள் அனைத்தும்  எண்ணியெண்ணி மகிழ்தற்கு  உரியன. 

    Share
  • குரு அரவிந்தனின் ‘சொல்லடி உன் மனம் கல்லோடி?’ நாவல் – ஒரு பார்வை

    குரு அரவிந்தனின் ‘சொல்லடி உன் மனம் கல்லோடி?’ நாவல் – ஒரு பார்வை

    கே.எஸ்.சுதாகர்

    (ஆனந்த விகடனில் பல சிறுகதைகளை எழுதியவரும், ஆனந்த விகடன் பவள விழாச் சிறப்பிதழில் பரிசுபெற்ற ‘நீர்மூழ்கி நீரில் மூழ்கி’ என்ற குறுநாவலைத் தந்தவருமான குரு அரவிந்தனின் சமீபத்திய நாவல் ‘சொல்லடி உன் மனம் கல்லோடி’. இவரின் ‘நீர்மூழ்கி நீரில் மூழ்கி’ நாவலுக்குத் தமிழகத்தின் முன்னணி ஓவியர்கள் ஐவர், ஓவியங்கள் வரைந்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.)

    குரு அரவிந்தனின் ‘சொல்லடி உன் மனம் கல்லோடி’ நாவல் வாசித்தேன். மணிமேகலைப் பிரசுரமாக இந்த ஆண்டு (2019) வெளிவந்த இந்த நாவலை வாசிக்கும்தோறும் பாரதியின்

    `நல்லதோர் வீணை செய்தே – அதை
    நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’

    என்ற கவிதை வரிகள் தான் நினைவிற்கு வந்து போயின.

    மெல்ல மெல்ல வாசகரை உள் இழுக்கும் உத்தி, ஆரம்ப அத்தியாயங்களிலேயே தெரிகின்றது.

    தேவகி ஒரு நடன ஆசிரியர். அவரிடம் நடனம் பயிலும் மகள் கமலினியும், மாலதியும் இனிய தோழிகள். இனிய தோழிகள் என்றாலும் இருவேறு துருவங்கள். அவர்கள் இருவரினது  கொள்கைகள் வேறு வேறானவை. கமலினி ஆங்கில மோகமும் அமெரிக்கா ஆசையும் கொண்டவள். ஆனால் மாலதி
    அப்படியல்ல. தமிழும் பரத நாட்டியமும் மூச்சாக வாழ்பவள். கமலினியின் குறும்புக்காரத் தம்பி கண்ணன். அவனது பார்வை சற்றே மாலதியின் மேல் விழுகின்றது. எங்கே மாலதிக்கும் கண்ணனுக்கும் இடையே காதல் உருவாகிவிடுமோ என மனம் பதைபதைக்கும் வண்ணம் நாவல் நகர்கின்றது.

    மாலதிக்கு அம்மா இல்லை. அப்பா சுந்தரம் மாஸ்டர். மச்சான் ராஜன். இவர்களுடன் விறுவிறுப்பாகச் செல்லும் நாவல் சொல்லும் செய்தி என்ன? ஒரு ஆண்மகன் தன்னிலும் வயது கூடிய ஒரு பெண்ணைத் திருமணம் புரிதல், ஆங்கில வெளிநாட்டு மோகம், ஒருவர் தான் பயின்ற கலைகளை அழியாது காத்தல், விதவைத் திருமணம். நடன இசைப்பிரியர்களுக்கு இந்த நாவல் ஒரு வரப்பிரசாதம்.

    இசையால் வசமாகும் இதயங்களுக்கு, இந்த நாவலில் கொட்டிக் கிடக்கும் பரத நாட்டியம், இசை பற்றிய குறிப்புகள் `போனஸ்’ தகவல்கள். கமலினி மணம் முடித்து அமெரிக்கா போய்விடுகின்றாள்.
    அதன் பின்னர் மாலதி தன் அத்தை பையன் ராஜனை வேண்டா வெறுப்புடன் மணம் செய்து கொள்கின்றாள். ராஜன் குடிகாரன், கேடு கெட்டவன். இவர்களிடையேயான உணர்ச்சிகளின் கொந்தளிப்பில், கண்ணன் மாலதியைத் திருமணம் செய்து கொள்கின்றானா என்பதே நாவல்.

    கமலினி அமெரிக்கா சென்ற பின்னர், அமெரிக்கா பற்றிச் சொல்லிச் செல்லும் ஆசிரியர், கதையின் ஆரம்பத்தில் கதை நடைபெறும் களம் பற்றி விபரிக்கவில்லை. கதை எங்கு நடைபெறுகின்றது என்பது ஆரம்பத்தில் தெளிவில்லாமல் இருந்தது. இசை நடனம் ஆடல் பாடல் என ஆரம்பித்த
    நாவல், திசை மாறி பயணம் சென்று, மீண்டும் தொடக்க நிலைக்கு வருகின்றது. மற்றும் தேவகியின் கணவர் கனகேஸ்வரன் என்ற பாத்திரமும் நாவலுக்குக் கனதியில்லாமல் சும்மா வந்து போகின்றது.

    நாவலின் அட்டைப் படம் பற்றிய ஒரு சுவையான தகவல். கனடாவில் பிறந்து வளர்ந்த, புதிய தலைமுறையைச் சேர்ந் ஐஸ்வர்யா சந்துரு நாவலின் அட்டைப் படமாக உயிர்பெறுகின்றார். இவர் நாட்டியத்திலும் பாடல்கள் பாடுவதிலும் வல்லவர் என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.

    எமது நாட்டில் எத்தனையோ மாணவர்கள் பரதம், சங்கீதம், வீணை, மிருதங்கம் போன்றவற்றைக் கற்று வருகின்றார்கள். இவர்களில் எத்தனை வீதமானவர்கள் தொடர்ந்தும் அந்தக் கலைகளைத் தக்கவைத்துக் கொண்டு, அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்? வெறுமனே இவற்றைத் தெரிந்து வைத்திருந்தால் போதுமானதா? புலம்பெயர்ந்த நாட்டில் பெற்றோர்கள் அப்படித்தான் நினைக்கின்றார்கள் போலும். இருபது வருடங்களுக்கு முன்னர் கனடா உதயன் பத்திரிகையில் தொடராக வெளிவந்த இந்த நாவல், காலத்தின் தேவையறிந்து நூல் உருவாக வருவது வரவேற்கத்தக்கது.

    எளிமையான நடை. மனத்தில் வந்துபோகும் பாத்திரங்கள். நீண்ட நாட்களின் பின்னர் நல்லதொரு குடும்பப் படம் பார்த்தது போன்ற மன நிறைவு நாவலைப் படித்தபோது ஏற்பட்டது.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 63

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 63

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள்

    இடுக்கண் அழியாமை

    குறள் 621:

    இடுக்கண் வருங்கால் நகுக அதனை 
    அடுத்தூர்வ தஃதொப்ப தில்

    சங்கடம் வரும்போது கலங்காம சிரிக்கணும். சங்கடத்த எதித்து செயிக்கதுக்கு அதப்போல வேற இல்ல. 

    குறள் 622:

    வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
    உள்ளத்தின் உள்ளக் கெடும்

    வெள்ளம் வருதது கணக்கா சங்கடம் கரபுரண்டு வந்துச்சின்னாகூட அறிவாளிங்க அதப்பத்தி மனசுக்குள்ளார நெனச்ச நேரத்துலயே அது விலகி ஓடிப்போவும். 

    குறள் 623:

    இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
    கிடும்பை படாஅ தவர்

    சங்கடம் வருதப்போ வருத்தப்படாம இருக்கவங்க சங்கடத்துக்கே சங்கடத்த உண்டாக்கி அதத் தோக்கடிப்பாங்க.

    குறள் 624:

    மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
    இடுக்கண் இடர்ப்பா டுடைத்து

    கரடுமுரடான பாதையில கூட வண்டிய இழுத்துக்கிட்டு போகுத காள மாடு கணக்கா அசராம முனையுதவனுக்கு வந்த சங்கடம் சங்கடப்பட்டு போவும். 

    குறள் 625:

    அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
    இடுக்கண் இடுக்கட் படும்

    தொடர்ச்சியா ஒண்ணுக்குப் பின்னால ஒண்ணா சங்கடம் வந்தாலும் மனசு தளராதவனுக்கு அந்தச் சங்கடமே சங்கடப்பட்டுக்கிட்டு போயிடும். 

    குறள் 626:

    அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
    றோம்புதல் தேற்றா தவர்

    சொத்துசொகம் சேரும்போது அதுக்காக சந்தோசப்பட்டு காப்பாத்திவச்சிக்கிடாதவங்க அது கைவிட்டுப்போவும் போது வெசனப்படுவாங்களோ?

    குறள் 627:

    இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
    கையாறாக் கொள்ளாதா மேல்

    ஒடம்பு துன்பத்துக்கு இடமானது னு அறிஞ்சுக்கிட்ட பெரியவங்க துன்பம் வருதப்போ அத துன்பமாவே நெனைச்சுக்கிட மாட்டாங்க.  

    குறள் 628:

    இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
    துன்ப முறுதல் இலன்

    சந்தோசத்த தேடி அலையாம துன்பத்தையும் சாதாரணமா எடுத்துக்கிடுதவன் மனசு தளர்ந்து சங்கடப்பட மாட்டான்.

    குறள் 629:

    இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
    துன்ப முறுதல் இலன்

    சந்தோசம் வார நேரம் ஆட்டம் போடாதவன் சங்கடம் வரும்போது துக்கப்படமாட்டான். 

    குறள் 630:

    இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
    ஒன்னார் விழையுஞ் சிறப்பு

    சங்கடத்த சந்தோசம் னு நெனைக்குத நெஞ்சுரம் உள்ளவங்களுக்கு பகையாளியும் பாராட்டுத பெரும வந்து சேரும். 

    (அடுத்தாப்லையும் வரும்)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 62

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 62

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 62

    62. ஆள்வினை உடைமை

    குறள் 611:

    அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும்

    நம்மால முடியுமா னு மன உளச்சல் படுதது கூடாது. மனசு வச்சி முனஞ்சோம்னா அதுக்கு உண்டான தெம்பு தானா வந்துக்கிடும். 

    குறள் 612:

    வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
    தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு

    எதச் செஞ்சாலும் முழுக்க செஞ்சு முடிக்கணும். முடிக்கது செரமம் னு பாதில உட்டவங்கள ஒலகமும் விட்டுப்போடும். 

    குறள் 613:

    தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே
    வேளாண்மை என்னுஞ் செருக்கு

    விடாம முனஞ்சி செய்யுத ஒசந்த கொணத்துல தான் மத்தவங்களுக்கு ஒதவுத பெருமயான செயல் அடங்கியிருக்கு. 

    குறள் 614:

    தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
    வாளாண்மை போலக் கெடும்

    முயற்சி இல்லாதவன் மத்தவங்களுக்கு ஒதவுதேன்னு சொல்லுதது பேடி தன் கையில வாளத் தூக்கி வீசுததுக்குச் சமானம். 

    குறள் 615:

    இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
    துன்பம் துடைத்தூன்றும் தூண்

    சுயநலமா இல்லாம தான் ஏத்துக்கிட்ட செயல முடிக்க; விரும்புதவன் தன்னையச் சுத்தி இருக்க எல்லாரோட தொயரத்தையும் போக்கித் தாங்குத தூண் ஆவான்.

    குறள் 616:

    முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
    இன்மை புகுத்தி விடும்

    காரியத்த முனஞ்சி செய்யுதது செல்வத்தக் கொடுக்கும் அப்டி செய்யாதது வறுமையக் கொடுத்துப் போடும்

    குறள் 617:

    மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
    தாளுளாள் தாமரையி னாள்

    ஒருத்தன் மாச்சப்பட்டாம்னா அதுல மூதேவி வந்து வாழுவா.  காரியத்த முனைஞ்சி செய்யுதப்போ மகாலச்சுமி வந்து தங்கிக்கிடுவா.

    குறள் 618:

    பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
    தாள்வினை இன்மை பழி

    நன்மைய விளைவிக்குத விதி இல்லாம இருக்கது யாருக்கும் குறையா ஆவாது. தெறிஞ்சுக்கிட வேண்டியத தெரிஞ்சுக்கிட்டு முனஞ்சி செய்யாம இருக்கது தான் குறை. .

    குறள் 619:

    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும்

    விதி நமக்கு ஒதவ முடியாமப் போனாலும் ஒடம்ப வருத்திக்கிட்டு உழச்சோம்னா அதுக்கேத்த கூலி கெடைக்கும்.

    குறள் 620:

    ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
    தாழா துஞற்று பவர்

    மனசு தளராம தொடர்ச்சியா முனையுதவங்க விதியையும் தோக்கடிச்சிடுவாங்க. 

    -அடுத்தாப்லையும் வரும்-

    Share
  • சேக்கிழார்   பா நயம் – 47

    சேக்கிழார்   பா நயம் – 47

    -திருச்சி  புலவர் இராமமூர்த்தி 

    ஒருநாள்  திருவாரூர்  வீதி வழியே தம் சேடியர்களோடு திருக்கோயில் நோக்கிப் பரவையார்  சென்றார். அவர் முன்பு கைலாயத்தில் மலர்களைக்  கொய்து தம் நாயகியாகிய உமையம்மை பூசைக்கு உதவியவர். அதன் தொடர்ச்சியாகத் திருவாரூரிலும் புற்றிடங் கொண்டாருக்கும், அன்னை கமலாம்பிகைக்கும் வழிபாடு செய்யப் பூக்களைப் பறித்து அளித்தார். அவற்றை இறைவியின் நிர்மாலியமாய்த் தலையில் சூடிக்கொண்டார். அதனால் அப்பூக்களின்  தெய்வமணம் ஊரெங்கும் கமழ்ந்தது! 

    இறைவழிபாட்டை  மட்டுமே அவர் தம் அன்றாடக்  கடமையாகக் கொண்டிருந்தார். திருவாரூர்த் தியாகராசப் பெருமானின் திருவுருவைக் கண்ணாரக் கண்டு மகிழ்வதற்காகத் தம் சேடியருடன் மெல்ல நடந்து சென்றபோது சுந்தரர்,  இறைவன் திருவருளினால் பரவை நாச்சியாரைக் காண நேர்ந்தது. அப்போது அவர் திருவடிகளில் சிலம்பும், இடையில் மேகலையும், கூந்தலில் சூடிய மலர்களைச் சூழ்ந்த வண்டுகளும் ஆரவாரம் செய்தன!   

    அவருடைய  பேரழகு மிகப்பேரழகியான கமலாம்பிகைக்குத் திருப்பணி செய்தமையால் தமிழகமே போற்றிப் புகழும் அளவுக்கு ஒளிவீசி விளங்கியது!

    அதனால்  அவள் அழகிய பாதங்களில் அணிந்திருந்த சிலம்புகள், ’’ இவள் பாதங்கள் இந்தப் பாருலகினையே வென்று தம் அடிமைப்  படுத்தி விட்டமையால். இந்த நிலமே இவற்றைப் பணிந்து தாங்குகின்றன!’’ என்று ஆரவாரம்  செய்கின்றன! ஆகவே அவள் பாதங்கள் நிலவுலகையே அடிமைப்படுத்தின! அடுத்து அவளுடய இடை, அழகிய நாகம்போன்ற அல்குலின் மேலே   மணிகள் கட்டிய மேகலைகளை அணிந்து விளங்குகின்றது. ஆகவே அவர் இடையில் அணிந்த மணிமேகலை, ‘’இவள்அழகு கீழே அரவம் திகழும் நாகலோகத்தினை அடிமைப்படுத்தி விட்டது,! என்பதைப் புலப்படுத்தி ஆரவாரிக்கின்றன!  அடுத்து பரவையாரின் கரிய மேகத்தை வென்ற கூந்தலில் சூட்டிக்கொண்ட பூக்களின் மணத்தையும் தேனையும் நுகரும் ஆவலில் வண்டுகள் சூழ்ந்து பறந்து, ரீங்காரிக்கின்றன! வண்டுகள், ‘’ எம் தலைவியின்  கூந்தலின் கருமைக்கு வானத்தின் மேகங்கள் தோற்றுவிட்டன, அதாவது வானுலகே தோற்றுவிட்டது!’’ என்று அறிவிக்கின்றன! 

    மூன்று அங்கங்கள் முறையே மூன்று உலகங்களை வென்றதற்கு அடையாளமாக, மூன்றுபொருள்கள் ஆர்த்தன. மேலும் – நடுவும் – கீழும் உள்ளன மூவுலகங்கள் என்பர். இவையேசுவர்க்க மத்திய பாதலமாம். 

    மூவுலகையும் வெல்லுதலாவது இம்மூன்று உலகத்திலும் இவருக்கு ஒப்பாரும் மிக்காரு மில்லையாதல். தமிழ் நூற்களின்படி இதுவே தலைவியினது இலக்கணமாதலின் இவ்வாறு கூறினார். ஒவ்வோர் உலகை வென்றதற்கு ஒவ்வோர் பகுதி காரணமும் உதாரணமு மாயிற்று!.

    இனிப்பாடலை   முழுவதும் படித்துப் பயில்வோம்.

    “அணி சிலம்பு அடிகள் பார் வென்றடிப் படுத்தனம் என்று ஆர்ப்ப  
    மணி கிளர் காஞ்சி அல்குல் வரி அர உலகை வென்ற
    துணிவு கொண்டு ஆர்ப்ப மஞ்சு சுரி குழற் கழிய விண்ணும்
    பணியும் என்றின வண்டு ஆர்ப்ப பரவையார் போதும் போதில்.”

    இதனை   உரையாசிரியர்  மேலும் விளக்குகிறார். பரவையாரது அடிகள் மண்ணை அடிப்படுத்தி மிதித்தற் றொழிலாலும், அல்குல் அரவுலகை அரவரசாகிய நாகத்தினும் மிக்க வடிவினாலும், காஞ்சியில் உள்ளனபோன்ற மணிகள் அரவுகளில் இல்லாமையினாலும், குழல் மேகத்தின் மிக்க நிறத்தாலும் வென்றதை, முறையே, அங்கங்குள்ள சிலம்பும் – காஞ்சியும் – வண்டுகளும் தெரிவித்து ஆர்த்தன என்க. மண் அடிப்பட்டது; விண்பணிந்தது; ஆனால் அரவுலகு உறுதியாய் வெல்லப்பட்டது; ஆதலின் இதைத் தெரிவிக்குமாறு ‘துணிவு கொண்டு காஞ்சி ஆர்க்க’ என்றமை  காண்க.      

    விண் – புண்ணியத்தால் வரும் இன்பானுபவமும், மண் – புண்ணிய பாவங்களால் வரும் மிச்சிரமாகிய கலப்பு அனுபவமும் பெறும் இடங்கள் ஆதலின் இவற்றைக் கீழ்ப்படுத்தலே அமையும். ஆனால் அரவுலகு என்ற கீழுலகம் பாவத்தால் விளையும் துன்பானுபவத்திற்கே உரியதாதலின் அது முற்றும் வெல்லப்பட்டொழிதல் வேண்டும் என்பதுபற்றி “வென்ற துணிவுகொண்டு“ என்றதாம். துணிவுகொண்டு – அடியும் குழலும்போல வெளித் தோற்றாது, அல்குலினது செயல் காஞ்சி யணியின் தன்மையால் அனுமானித்துத் துணியப்படு பொருளாதலும் குறிப்பாம். 

    அடி – அல்குல் – குழல் – பாதாதிகேச வருணனை. மண்ணும் அரவுலகும் அன்றி விண்ணும் என்ற பொருளில்வந்த இறந்தது தழுவிய எச்சவும்மை. சிறப்பும்மையுமாம். பரவையார் என்ற பெண்மணியின் அவதாரத்தால் சிவத்துவம் விளங்க நாகலோகம் தூர்ந்து ஒழியக் காரணமாயிற்று என்ற குறிப்பும் காண்க. இதனால் பரவையார் மறுகுசூழ ஒப்பற்ற இறைவனை  வணங்கப்போந்த நடைச் சிறப்பும், பயனும் கூறியபடி.’’ என்று உரையாசிரியர் விளக்குகிறார்!

    பரவை நாச்சியார்  இறைவனது கருணையால்  நிலவுலகிற்கு அனுப்பப் பெற்றமையால்,  அவருடைய தனிச் சிறப்பு வாய்ந்த தகுதி  இப்பெரிய புராணத்தில் விளங்கும். அதனாலேயே  இறைவன் தம் திருப்பாதங்கள் ஆரூர் வீதியில் படிய, இருமுறை தூது நடந்தார். இப்பாடல்  பரவை நாச்சியார் மற்றைய பெண்களிலும் மேம்பட்டவர் என்பதை சேக்கிழார் பாநயம் புலப்பட

    விளக்குகிறார். பெண்ணின்  பெருமையைப் போற்றும் பகுதி இது.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 61

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 61

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் 

    61)  மடி இன்மை

    குறள் 601:

    குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
    மாசூர மாய்ந்து கெடும்

    ஒருத்தன் பொறந்த குடி ங்குத மங்காத விளக்கு அவனோட மாச்சலால(சோம்பல்) ஒளி மங்கி கெட்டுப் போவும். 

    குறள் 602:

    மடியை மடியா ஒழுகல் குடியைக்
    குடியாக வேண்டு பவர்

    குடும்பத்த ஒசத்த விரும்புதவங்க மாச்சப்பட்டு இருக்காம உற்சாகமா முனஞ்சு செயல்படணும். 

    குறள் 603:

    மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
    குடிமடியுந் தன்னினு முந்து

    ஒழிச்சுக்கட்டவேண்டிய மாச்சல தங்கிட்ட வச்சிருக்கவனோட குடும்பம் அவனுக்கு முன்ன அழிஞ்சு போவும். 

    குறள் 604:

    குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
    மாண்ட உஞற்றி லவர்க்கு

    மாச்சப்பட்டு பாடுபாக்காம இருக்கவன் வாழ்க்கையில தப்புதண்டா செய்யுதது அதிகமாயி அவன் குடும்பப் பெரும அழிஞ்சு போவும். 

    குறள் 605:

    நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
    கெடுநீரார் காமக் கலன்

    கெடப்புல போட்டு காரியத்த செய்யுதது, அயத்துப் போகுத கொணம், மாச்சல், அளவுக்கு மீறி ஒறங்குதது இந்த நாலு கொணமும் கெட்டுப்போவணும் னு நெனைக்கவன் ஆசப்பட்டு ஏறுத தோணி ஆவும்.

    குறள் 606:

    படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
    மாண்பயன் எய்தல் அரிது

    நாட்ட ஆளுத தலைவனோட ஒறவு தானே வந்து சேந்துக்கிட்டாலும் மாச்சப்பட்டு சும்மா இருக்கவனுக்கு அதனால ஒரு உபயோகமில்ல. 

    குறள் 607:

    இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
    மாண்ட உஞற்றி லவர்

    முனஞ்சி பாடுபாக்காம மாச்சப்பட்டு சும்மா இருக்கவன் வாழ்க்கைல மத்தவங்க இடிச்சுப்பேசி எளக்காரம் செய்யுத நெலமைக்கு வந்துருவான். 

    குறள் 608:

    மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்
    கடிமை புகுத்தி விடும்

    மாச்சப்படுதவன் நல்ல குடில பொறந்திருந்தாலும் அந்த கொணம் அவன பகையாளிக்கு அடிம போல ஆக்கி உட்ரும். 

    குறள் 609:

    குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
    மடியாண்மை மாற்றக் கெடும்

    ஒருத்தன் மாச்சல விட்டுப்போட்டாம்னா அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் வந்த குத்தங்கொற வெலகிப் போயிடும்.

    குறள் 610:

    மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தாஅய தெல்லாம் ஒருங்கு

    கடவுள் அடியால அளந்த ஒலகத்தையெல்லாம் மாச்சப்படாம இருக்க ராசா சேந்தாப்ல அடைஞ்சுக்கிடுவான். 

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • கைக்கோளர் படை

    கைக்கோளர் படை

    சேஷாத்ரி ஸ்ரீதரன்

    கைக்கோளர் என்போர் இந்நாளில் செங்குந்த முதலியார் என அறியப்படுகின்றனர். அண்மைக் காலம்வரை தறி நெசவு இவர்க்குத் தொழிலாய் இருந்துள்ளது. ஆனால், பல்லவர் ஏற்படுத்திய  இந்த சாதிமார் ஒரு படைக்குடி ஆவர். கல்வெட்டில் இவர்கள் பட்டடைக்குடி எனத் தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது.  ‘குந்தம்’ என்பதற்கு வேல் என்ற பொருளே இதற்கு சான்று. கள்ளர் படை, மறவர் படை என்பது போல 12 ஆம் நூற்றாண்டு வரை கைக்கோளப் படை என்று தனியாகவே இருந்துள்ளது. இப்படி போர்க்குடிகளாக இருந்த இவர்கள் சைவ சமய எழுச்சியின் காரணமாக அதன்பால் மிக்க ஈடுபாடு கொண்டதனாலும், இவர்கள் நம்பி இருந்த பல்லவர்கள் வேந்தர் என்ற நிலையும் மன்னவர் என்ற நிலையும் இழந்து அரையர்களாக, கிழார்களாக சிதறுண்டு போனதன் காரணமாகவும் போர்த் தொழிலை விட்டு வணிகத்தைப் பிழைப்பாக மேற்கொண்டனர்.  இதாவது, நெய்த ஆடைகளை விற்பதைத் தொழிலாக மேற்கொண்டனர். ஆனாலும் கைக்கோளர் சிலர் மட்டும் பல்வேறு ஆட்சியாளரிடம் படைத்தலைவர்களாகவும் படைஆள்களாகவும் தொடர்ந்து வேலை செய்தனர். இப்படி தொழில் மாறி பிழைப்பு மேற்கொண்டாலும் அதிக வரி, பிற மொழித் துணி வணிகரின், சிறப்பாக சௌராட்டிரர், பத்மசாலி ஆகியோரின் தொழிற் போட்டி ஆகியன இவர்களை வறுமையின் பிடிக்குத் தள்ளியது.  இவற்றுக்கும் சான்று கல்வெட்டுகளில் உண்டு.

    கைக்கோளரைப் போலவே சேனைக்கடையார், செட்டியார், வாணியர் போன்ற போர்க்குடிகளும் போர்த் தொழிலை விட்டுவிட்டு வணிகத்தை மேற்கொண்டனர். கைக்கோளர் படைத்தொழிலை விட்டதுமுதல் பல்லவர் ஆட்சி போலவே சோழர் ஆட்சியும் விரைந்து சரிந்தது. அதன்பின் வடக்கே இருந்து இசுலாமியப் படையெடுப்பு, விசயநகர படையெடுப்பு ஆகியவற்றால் தமிழராட்சி அறவே தொலைந்து போனது.  அரையர்கள் பலரும் பல்லவர் வழிவந்தவர் என்ற வகையில் கூட்டரசை (confederacy) அமைத்திருக்க முடியும். ஆனால் படை ஆளுக்கு எங்கே போவது? பட்டடைக்குடி சாதிகள் படைத்தொழிலை விட்டதனால் அதற்கும் வழி இல்லாமல் போனது. உண்மையில், வட தமிழ்நாட்டில் தமிழர் படை சுருங்கிப் போயிருந்தது. சம்புவராயர் ஆட்சியும் குறுகிய காலத்தில் வீழ்ந்ததற்குத் தம் படையை மேலும் பெருக்க முடியாமல் போனதே முதற் காரணம் ஆகும்.

    ஒரு தொழிலைச் செய்யும் ஒரு கூட்டத்து மக்கள் அத்தொழிலை விடுத்தால் மாற்று ஏற்பாடாக வேறு ஒரு கூட்டத்தாரை அத்தொழிலில் ஈடுபடுத்திச் சமூகத்தில் தொழில் சம நிலையைப் பேண வேண்டும். ஒரே தொழிலில் அதிகம் பேர் ஈடுபட்டாலோ அல்லது ஒரு தொழிலில் தேவைப்படும் பணிஆள்களில் பற்றாக்குறை ஏற்பட்டாலோ தொழிற் சமநிலை இழப்பு ஏற்படும்.  அதனால் தான் பண்டு ஒரு தொழில் செய்தவர் மாற்று தொழில் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதில்லை. அதனால் தொழில் அடிப்படையில் சாதிகள்  உண்டாயின என்பது உண்மைதான். வேந்தர் அனுமதித்தால் சில தனிஆள்கள் மட்டும் தொழில் மாறலாம் மற்றபடி அது பொதுவான வழக்கம் அல்ல. கைக்கோளரைத் தொழில் மாறவிட்டதன் விளைவாக தமிழக வரலாற்றில் பிற மொழியாளருக்கு அடிமைப்படும் அளவிற்கு தன்னாட்சியை மாபெரும் விலையாகத் தமிழகம் கொடுத்தது ஒருவரலாற்றுப் பிழையே. அந்த மாபெரும் பிழையால் தமிழகம் வந்து புகுந்த அயலவர் பொன்னான வாழ்வு பெற்றுவிட்டார்கள்.  இந்த வரலாற்று உண்மைகளைத் தெளிவுபடுத்தவே கீழ்க்காணும் கல்வெட்டுகளின் விளக்கம்.

    தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் கருவறை தென் சுவரில் பொறித்த 7 வரிக் கல்வெட்டு.

    ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பர / கேசரி பந்மற்கு யா / ண்டு 2 ஆவது சிங்க / ளாந்தக தெரிந்த கைய் / கோளரிற் முத்தி திருநா / [ரணன்] குடு[த்]த வாள் ஸ்ரீ க / ண்டம் கோத்த செ[ம்]முனை வாள்  1.

    தெரிந்த கைக்கோளர் – திறவாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கைக்கோளர், chosen or selected as skillful; ஸ்ரீகந்தம் – சந்தனம்; கோத்த – பதித்த; செம்முனை –செங்குறுதி தோய்ந்த முனை.

    விளக்கம்: முதற் பராந்தகன் மகன் அரிஞ்சயனின் 2 ஆம் ஆட்சி ஆண்டினதாக கருதப்படும் இக்கல்வெட்டில் பராந்தகனின் பெயரான சிங்களாந்தகன் என்ற பெயரினைத் தாங்கிய தேர்ந்தெடுத்த கைக்கோளப்படையைச் சேர்ந்த முத்தி திருநாரணன் என்பவன் சந்தனக் கைப்பிடியில் பதித்த குறுதிக்கறை படிந்த முனை உள்ள வாள் ஒன்றினை இறைவனுக்கு கொடுத்தார்.

    சோழர்கள் முற்று முழுதாக கைக்கோளரை மட்டுமே கொண்ட திறவாளராக பார்த்துத் தேர்வு செய்யப்பட்ட கைக்கோளப் படை ஒன்றை பேணினர் என்று இதனால் தெரிகின்றது.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 19, பக். 3. A.R.No 244 of 1907.

    தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் கருவறை தென் சுவரில் பொறித்த 6 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பர கேசரி பந்மற்கு யாண்டு 2 ஆவது திருவிடை மருதில்
    2. ஸ்ரீமூலஸ்தாநத்தில் பெருமான்அடிகள் கோவிலில் பெரியமண்டபத்தில் முன்
    3. பில் திருப்பலகணியும் திருக்கதவும் நிலையும் படியும் கைக்கோளப் பெரும்படை
    4. யோமினால் சமைப்பித்து எங்கள் ஆச்சமார் திகைஆயிரத்தைஞ்ஞூற்றுவர் தம்
    5. பேர் சாத்தினமையில் இந்த தர்மம் திகைஆயிரத்துஅஞ்ஞூற்றுவர் ரக்ஷை.
    6. இந்த தர்மத்தினை ரக்ஷித்தார் ஸ்ரீ பாதம் எங்கள் ஸிரத்தின்.

    பெருமானடிகள் – வேந்தர், இறைவன்; பலகணி – சன்னல்; சமைப்பித்து – உருவாக்கி; ஆச்சமார் – ஆசான்கள், ஆசிரியர்கள்; சாத்தின – சூட்டிய

    விளக்கம்: முதலாம் இராசேந்திரச் சோழனின் 2 ஆம் ஆட்சி ஆண்டில் (பொ.ஊ. 1014) திருவிடைமருதூர் மூலவர் அமைந்த கருவறைப் பெரியமண்டபத்தின் முன்புறத்தில் சன்னலும், கதவும், வாயில் நிலையும், படியும் கைக்கோளப் படையினர் ஏற்படுத்தி அதற்கு தமது சண்டைப் பயிற்சி ஆசான்களான திசைஆயிரத்துஐநூற்றுவர் பெயரை வைத்து கொடுத்தனர். இதனால் இத்தருமத்தை திசை ஆயிரத்து ஐநூற்றுவர் தான் காத்திடவேண்டும். இத்தருமத்தை காத்தவர் பாதம் எங்கள் தலைமேல் படுவதாக என்று கல்வெட்டி உள்ளனர் கைக்கோளர்.

    திசைஆயிரத்து ஐநூற்றுவ வணிகர் தம் பாதுகாப்பிற்கென்று தனிப் படை வைத்திருந்தனர் போலும். அதில் இருந்த திறம்மிக்க பயிற்சியாளர்கள் இக் கைக்கோளப் படைக்கும் பயிற்சி தந்துள்ளனர் என்று தெரிகின்றது. ஆச்சமார் பன்மைச் சொல் என்பதை நோக்கி இப்படித் தான் பொருள் கொள்ள வேண்டும்.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 19, பக். 3. A.R.No 253 of 1907.

    வடஆர்க்காடு மாவட்டம், வேலூர் வட்டம், அகரம் கிராமம் பெருமாள் கோவில் 14 வரிக் கல்வெட்டு.

    1. சுபமஸ்த்து சுவஸ்த்தி ஸ்ரீ மனு மகாமண்டலேசுவரனு ஹரிராய விபாடன் பாசைக்குத் தப்புவராயர் கண்டன் மூவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு குடாதன் பூர்வ்வ தட்சிண பச்சிம உத்திர ஸமுத்திராபதி கஜவேட்டை கண்டருளிய மல்லிகார்சுன மஹாராயர் பிரித்திவிராச்சயம் பண்ணி அருளா நின்ற சகாப்தம் 1391 –ல் மேல் செல்லா நின்ற விரோதி வருஷம் மகரநாயற்று பூர்வ்வபச்சத்து பஞ்சமியும் சனிவாரமும் பெற்ற திருவோனத்து நாள்
    2. ஜெயங்கொண்ட சோழமண்டலத்து பளுவூர்கோட்டத்து கரைவழி ஐம்புழுநாட்டு ஆழ்மை ஊரிலும் வந்து பாலிநாட்டு அகரத்திலிருக்கும் கைக்கோளரில் சோழகோன் தீத்தமுடையான் மகன் பெரியராகுத்தனும் இவன் தம்பி சங்கேதி இராகுத்தனும் நல்லானும் நாங்கள் மூவரும் எங்கள் தங்கை கங்கையும் இவள் மகள் திருமலைச்சியும் வீரனும், திம்மனும் பெரிய இராகுத்தன் மகள் பெரிய வெங்காத்தாளையும் சிறிய வெங்காத்தாளையும் முதலியையும் இலக்குமனையும் சாந்தியும் பெண்கள் அஞ்சுபேரையும் இவன் மகன்
    3. கொழுந்தனையும் ஆக எங்கள் பதின்மூன்று பேரையும்  கொத்து அடிமை ஆக எம்பெருமான் திருக்கோயிலுக்குக் கொள்வாருளரோ என்று முற்கூறி. இம்மொழி கேட்டு எதிர்மொழி கொடுத்தான் அகரம் பெருமாள் ஆனைகாத்த அப்பன் சீகாரியம் பாற்கும் வன்னிய திம்மயநாயக்கர் நாயக்கன் முற்கூடியபடி உங்கள் மூவரையும் உங்கள் பெண்கள் ஏழுபேரையும் பிள்ளைகள் மூவரையும் ஆக பதின்மூன்று பேரையும் விலைக்குத்தரில் ஆனைக்காத்த அப்பன் அருளிச் செயல்படிக்கு விலைதந்து கொள்வான்
    4. என்று பிற்கூறி முற்கூறிய இராகுத்தன் உள்ளிட்டாரும் பிற்கூறிய சமைய குமாரர் வன்னிய திம்மய நாயக்கரும் இந்த பதின்மூன்று பேற்கும் எம்மில் இசைந்த விலைப் பொருள் வாசிப்படா நற்பணம் 2380. இப்பணம் இரண்டாயிரத்து முன்னூற்று எண்பதுமே எங்கள் பதின்மூன்று பேற்கும் விலை ஆவது ஆகவும் நாங்கள் மூவரும் எங்கள் பெண்கள் ஏழுபேரும் பிள்ளைகள் மூவரும் ஆக  பதின்மூன்று பேற்கும் விலைப்படி பணம் இரண்டாயிரத்து முன்னூற்று எண்பதும் சமயகுமாரர் வன்னியத் திம்முநாயக்கர் பண்டாரத்திலே பற்றிகொண்டு
    5. எங்களை நாங்களே ஆனைகாத்த அப்பன் திருக்கோயிலுக்கு கொத்து அடிமை ஆக விலைபிரமாணம் பண்ணிக்குடுத்தமைக்கு   
    6. நாங்கள் மூவரும் பிள்ளைகள் மூவரும் சிரிபாதம் தாங்கவும் திருமேனிக் காவலுக்கும் திருக்கைக்கோளருக்கும் உண்டான அடிமைத்
    7. தொழிலுக்கும் எங்கள் பெண்கள் ஏழுபேரும் ஆடிபாட எம்பெருமான் அடியாற்கு உண்டான அடிமைத் தொழில்களுக்கும்
    8. உரித்தாகக் கடவோம் ஆகவும் கொத்தடிமை ஆக ஆனைக்காத்த அப்பன் திருக்கோயிலுக்கு பிரமாணம் பண்ணிக்குடுத்தமைக்கு
    9. எங்கள் வழிவழி பரிபாலனம் உள்ளது. ஆண்பிள்ளை உள்ளது சிரிபாதம் தாங்கவும் திருமேனிகாவலுக்கு உரித்தாகவும். பெண் உள்ளது எம்பெருமான் அடிமைக்கும் உரித்தாகக் கடவராகவும்
    10. இப்படி சம்மதித்து பிரமாணம் பண்ணிக் குடுத்தோம் ஆனைகாத்த அப்பன் திருக்கோயில் சிரிகாரியம் பாற்கும் சமையகுமாரர் வன்னியத் திம்முநாயக்கற்கு சோழகோன் தீத்தமுடையார் மகன் ராகுத்தனும்
    11.  சிறு இராகுத்தனும் நல்லானும் கங்கையும் உள்ளிட்ட பதின்மூன்று பேரும் பெரிய இராகுத்தன் சிறு ராகுத்தன் கெங்கை உள்ளிட்டார் எழுத்து. இந்த சாதனமும் தொண்டைமண்டலம் பிரமராயர்
    12. ஆனைகாத்த பெருமாள் அருளியச் செயல்படிக்கு பட்டர் வாரியன் அப்பிளை. இந்த எழுத்து எல்லாம் எழுதினான் இந்தக் கல்வெட்டு விரற்கு மிண்ட ஆசாரி நம்பாண்டை வெட்டினான்
    13. இந்த சாதனங்களுக்கு அறிவுக்கு எழுத்திட்ட பேர் வன்னிய நாட்டுநாயகஞ் செய்வார் சந்திரநாயனார் மேற்படி மாரிக்கூத்தர் தொரபள்ளி கொண்ட பெருமாள் கோயில் தானத்தார். இப்படி அறிவேன் பட்டாசாரியர் ஆனைக்காத்த _ _ _ _. இப்படி அறிவேன் கேசவபட்டர். இப்படி அறிவேன் தேஸப்பட்டர். இப்படி அறிவேன் வாதுள பட்டர்
    14. கீழைவீதி தொண்டைமானார் சேதிராயர் காவனூர் தென்னவராயர் இரிஞ்சிபுரம் சமயமுதலியார் பெரியநாட்டு நம்பிமார் மாதவராமன்.

    இராகுத்தன் – குதிரை வீரன்; கொத்து அடிமை – வழிவழி பரம்பரை அடிமை; முற்கூறி – முன்னறிவிப்பு, முதலில் சொல்லிய, pre announcement, formerly quoted; எதிர்மொழி – மறுமொழி, reply, revert; ஸ்ரீ காரியம் பார்க்கும் – இறைப்பணி செய்யும்; பிற்கூறிய – பின்னர் சொல்லிய, later quoted; சாதனம் – சாஸனம், ஆவணம்; அறிவுக்கு – acknowledge

    விளக்கம்: விசயநகர வேந்தர் மல்லிகார்சுனர் ஆட்சியில் விரோதி ஆண்டு 1469-ல் மகர ராசி ஞாயிற்றுக் கிழமையும் வளர்பிறை ஐந்தில் சனிக் கிழமையில் நிகழும் திருவோன நட்சத்திரத்திரத்து நாளில் இக் கல்வெட்டு வெட்டப்ப்பட்டது.

    இக்கால வேலூரின் அக்கால பளுவூர் கோட்டத்தின் பாலிநாட்டு அகரத்தில் வாழும் கைக்கோளர்களில் சோழகோன் தீத்தமுடையான் மகன்கள் பெரியஇராகுத்தன், சங்கேதி இராகுத்தன், நல்லான் ஆகிய மூன்று உடன்பிறந்தார், தங்கை கங்கை இவள் மகள் திருமலைச்சி, மகன்கள் வீரன், திம்மன் இவர்களோடு பெரிய இராகுத்தன் மகள்கள் ஐவரான பெரியவெங்காத்தாள், சிறிய வெங்காத்தாள், முதலி, இலக்குமனை, சாந்தி ஆகியோரும் இவன் மகன் கொழுந்தன் என மூன்று பெரிய ஆடவர், 7 பெண்கள், மூன்று ஆண்பிள்ளைகள் என 13 பேரையும் விலைகொடுத்து கொத்தடிமையாக ஆனைக்காத்த (கஜேந்திர) பெருமாள் கோவிலுக்கு ஆக்கிட முன்னறிவிப்பு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பை கேட்டு அகரம் கிராமத்தின் ஆனைக்காத்த அப்பன் பெருமாள் கோவிலின் இறைப்பணியாளர் வன்னிய திம்மய்யநாயக்கர் முன்னே சொன்னபடி   13 பேரையும் விலைக்கு வாங்கினார். இதற்கு விலையாக 2380 பணம் திம்முநாயக்கர் கொடுத்தார். இதைப் பெற்றுக் கொண்ட ஆடவக் பெரியோர் மூவரும் பிள்ளைகள் மூவரும் இறைவனை எழுந்தருளச் செய்த வாகனங்களை தூக்கவும் திருமேனிகளுக்கு காவல் புரியவும் திருக்கைக்கோளருக்கு அடிமை செய்யவும் ஒப்புக்கொண்டனர். அதே நேரம் ஏழு பெண்களும் கோவிலில் பெருமாளுக்கு ஆடிப்பாடவும் பக்தர்களுக்கு அடிமைத் தொழில் செய்யவும் ஒப்புக் கொண்டு உறுதிமொழி ஆவணம் செய்துகொடுத்தனர் இந்த 13 பேர். இந்த ஆவணத்திற்கு  தொண்டை மண்டல பிரமராயர் சார்பில் கோவில் பட்டர்களின்  வாரியத்தை சேர்ந்த அப்பிள்ளை கையெழுத்திட்டான். அரையர்கள் சிலரும் கையெழுத்திட்டனர்.

    குதிரைவீரர்களான இராகுத்தர்கள் வேலை இழந்ததாலோ அல்லது கடன் தொல்லையாலோ தம்மை இப்படி கோவிலுக்கு கொத்தடிமையாக விற்க நேர்ந்துவிட்டது போலும். என்றாலும் கோவில் பணி என்பதால் இவர்களுக்கும் மற்றவரைப்போல வீடு, நிலம், சோறு கிட்டுவதால் அதை இவர்கள் விரும்பி தேர்ந்தெடுத்துள்ளது விளங்குகின்றது.

    பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகிற அரிய உண்மைகள், பக். 306 – 307, ஆசிரியர் முனைவர் வஞ்சியூர் க. பன்னீர்செல்வம்

    புதுச்சேரி மாநிலம், திருப்புவனை திருவாண்டார் கோவில் 3 வரிக் கல்வெட்டு.

    1. சுவஸ்தி ஸ்ரீ மன் மகாமண்டலேசுவரன் மேதினிமீஸ்வர கண்டகட்டாரி சாளுவ நரசிங்க தேவ மகாராயர் பிரிதிவிராச்சியம் பண்ணி அருளா நின்ற  சகாப்தம் 1425 – ல் மேல் செல்லா நின்ற உரோத்திரதாரி வருஷம் அற்பசி மாதம் 15-தேதி நரசநாயக்கர் காரியத்துக்குக் கடவ அம்பிகாமக் கிழவர்
    2. அறம்வளர்த்த நாயனார் திருபுவனை மாதேவிப்பற்று நடுவுக்கரைப்பற்று நென்மலியப்ப னாயக்கர் கைகோளற்கு பெண்ணைக்கரை யிராச்சியத்தில் உண்டான கைக்கோளர்க்கு நன்மைத் தீமைக்கு  தண்டு சங்குந் பந்தப்பட்ட ஆலே தங்களுக்கும் தண்டும் சங்கும் தந்தோம் கைக்கோளர்களுக்கு நன்மை தீமைக்கு சந்திராதித்தர்
    3. வரையும் தண்டும் சங்கும் நடத்த கடவதாகவும். இதுக்கு சபையாரும் மழவராயர் நீலகங்கரையரும் இருந்து பண்ணி நின்ரயந்து யாதொருத்தர் அயிதஞ் சொன்னால் செழியங்கநல்லூரில் கல்வெட்டியபடி ஆகக்கடவதாகவும். இவை அறம்வளர்த்த நயினார் எழுத்து. இவை திருபுவனை மாதேவி சபையார் சொற்படிக்கு சேரமாண்டார் எழுத்து.  மழவராயர் எழுத்து. நீலகங்கரையர் எழுத்து.

    காரியத்துக்கு கடவ- செயல் பொறுப்பாளர்; தண்டு – ; சபையார் – கருவறை பிராமணர்.

    விளக்கம்: விசயநகர வேந்தர் சாளுவ நரசிங்கர் ஆட்சியில் உரோத்திரதாரி ஆண்டு (பொ.ஊ.1503) ல் ஐப்பசி மாதம் 15-ம்தேதி நரசநாயக்கருக்கு செயல் பொறுப்பாளரான அம்பிகாமக் கிழவர் அறம்வளர்ந்த நாயனார் திருப்புவனை மாதேவிப்பற்று, நடுவுக்கரைப்பற்று ஆகிய இடங்களில் வாழும் நென்மலியப்ப நாயக்கரின் கைக்கோளற்கும், பெண்ணைக்கரை இராச்சியத்தில் வாழும் கைக்கோளர்க்கும் வீட்டின் நன்மை, தீமை நிகழ்வுகளுக்கு தண்டும் சங்கும் முழங்க உரிமை தந்தார்.  இந்த உரிமை நிலவும் ஞாயிறும் நிலைக்கும் காலம் வரை செல்லவதற்கு கோவில் கருவறை பிராமணரும், மழவராயர் நீலகங்கரையர் ஆகிய அரயரும் இதற்கு துணையாக இருந்து யாரொருவரும் தடங்கல் செய்யாமல் செழியங்கநல்லூர் கல்வெட்டில் உள்ளபடி நடந்தேற வேண்டும் என்று ஆணை இடப்பட்டுள்ளது.

    மிச்சம் மீதி இருக்கின்ற கைக்கோளர் படைத்தொழிலை விட்டு அகலாமல் இருக்கவே இந்த மரியாதை மதிப்புகள் கைக்கோளருக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளன.  விசயநகர ஆட்சி வரையில் மழவராயர், நீலகங்கரையர் ஆகிய அரையர்கள் ஆட்சியில் அரையர்களாக தொடர்ந்தனர் என்பது இக்கல்வெட்டால் தெரிகின்றது.

    பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகிற அரிய உண்மைகள், பக். 307, ஆசிரியர் முனைவர் வஞ்சியூர் க. பன்னீர்செல்வம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 59

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 59

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 59

    ஒற்றாடல்

    குறள் 581:

    ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
    தெற்றென்க மன்னவன் கண்

    நேர்மையான தெறமையான உளவாளியும் (ஒற்றரும்) நீதியச் சொல்லுத அற நூல்களும் ராசாவுக்கு ரெண்டு கண்ணு கணக்கா.

    குறள் 582:

    எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
    வல்லறிதல் வேந்தன் தொழில்

    எல்லா இடத்திலயும், நடக்குதத எல்லாத்தையும் எப்பமும் உளவு பாக்க உளவாளி வச்சி வெரசலா தெரிஞ்சிக்கிடவேண்டியது ராசாவோட வேலை.

    குறள் 583:

    ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
    கொற்றங் கொளக்கிடந்த தில்

    நாட்டு நடப்ப உளவாளிய வச்சி தெரிஞ்சுக்கிட்டு நடத்தாத ஆட்சி நெலச்சி நிக்குததுக்கு வேற வழியே இல்ல.

    குறள் 584:

    வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்
    கனைவரையும் ஆராய்வ தொற்று

    உளவு பாக்குத உளவாளி தனக்கு வேண்டப்பட்டவங்க, வேண்டாதவங்க, சொந்தக்காரங்க னு பாக்காம வேலை செஞ்சாத்தான் அவங்கள நேர்மையான உளவாளிகள் னு சொல்ல முடியும்.

    குறள் 585:

    கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்
    உகாஅமை வல்லதே ஒற்று

    மத்தவங்களுக்கு சந்தேகம் வராத வேசத்தோட போயி, ஒருக்க சந்தேகப் பட்டு பாத்தாலும் பயப்படாம இருந்து, எந்த நேரத்திலயும் மனசுல இருக்கத வெளிய சொல்லாம இருக்க நெஞ்சுறுதி உள்ளவந்தான் உளவாளியா இருக்கதுக்கு லாயக்கு..

    குறள் 586:

    துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்
    தென்செயினுஞ் சோர்வில தொற்று

    துறவி வேசத்துல போக முடியாத இடத்துக்கெல்லாம் போயி வேண்டியத தெரிஞ்சிக்கிட்ட பொறவு பிடிபட்டா என்ன சங்கடம் வந்தாலும் ரகசியத்த சொல்லாம மறைக்கவன் தான் உளவாளி..

    குறள் 587:

    மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
    ஐயப்பா டில்லதே ஒற்று

    ரகசியமா செய்யுத செயல்களையும் போட்டுவாங்கி தெறிஞ்சுக்கிடுத தெறம உள்ளவனாவும் கேட்ட பொறவு அது எம்புட்டு உண்ம னு தெளிவா புரிஞ்சுக்கிடுதவனும் தான் உண்மையான உளவாளி.

    குறள் 588:

    ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
    ஒற்றினால் ஒற்றிக் கொளல்

    ஒரு உளவாளி தன் தெறமையால தெரிஞ்சுக்கிட்டு வந்த விசயத்தப் பத்தி , இன்னொரு உளவாளியையும் தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்லி சரி பாத்துக்கிடணும்.

    குறள் 589:

    ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர்
    சொற்றொக்க தேறப் படும்

    ஒருத்தருகொருத்தர் அறிஞ்சுக்கிடாம மூணு உளவாளிங்கள அனுப்பி உளவு பாத்து மூணுபேரு சொல்லும் ஒண்ணுபோல இருந்தா அத உண்மனு ஒத்துக்கிடலாம்.

    குறள் 590:

    சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற்
    புறப்படுத்தான் ஆகும் மறை

    ஒரு உளவாளிக்கு திறமசாலினு பரிசு கொடுக்க நெனச்சா ஊரறிய குடுக்கக்கூடாது அப்டி செஞ்சா ஒளிவுமறைவா இருக்க வேண்டியத தானே வெளியவிடுதது போல ஆவும்.

    (அடுத்தாப்லையும் வரும்)

    Share
  • வரி என்னும் கொள்ளைக்கு எதிர்ப்பு

    வரி என்னும் கொள்ளைக்கு எதிர்ப்பு

    -சேஷாத்ரி ஸ்ரீதரன் 

    வரி என்பது பெரிய அரச படையைப் பேணி மக்கள் உயிர்க்கும் உடைமைக்கும் பாதுகாப்பு நல்கவும், அரச நிருவாகம் நடத்தவும் வேந்தர், மன்னர் என்ற முதலாம், இரண்டாம் அதிகார அடுக்கு ஆட்சியாளர்களால் வரி என்ற மக்களின் பங்களிப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த வரியை மக்களிடம் சமமாகத் தண்டவும் எவரும் வரி கட்டுதலில் இருந்து விட்டுப்போகாமல் இருக்கும்படியும் ஆட்சிப் பரப்பின் எல்லா பகுதியிலும் வரியை நடைமுறைப்படுத்தவும் துணைப் படைகளை திரட்டி போருக்கு அனுப்பவும் மூன்றாம், நாலாம் அதிகார அடுக்குகளான அரையர் என்னும் அரசர், கிழார்கோன் ஆகிய கீழ்நிலை அதிகார அடுக்குகள் வேந்தர், மன்னவரால் உண்டாக்கப்பட்டன.

    பழங் காலத்தில் வரிகள் மிகப் பலவாகும். இந்த வரித் தண்டல் பண்டமாற்று நிலவிய காலத்தில் பெரும்பாலும் மக்கள் உருவாக்கிய பொருளாகவே பெறப்பட்டன. ஏனென்றால் மக்களிடம் காசு புழக்கம் அரிதாகவே இருந்தது. வணிகரிடம் காசாக வரி பெறப்பட்டது. எப்படியானாலும் பண்டு வரி அதிகமாகவே இருந்தது. மக்கள் வரிச் சுமை தாங்காமல் திக்குமுக்காடிப் போயினர். சில வேளைகளில் ஊரை விட்டே அகலும் அளவிற்கு வரிக் கொடுமை தாங்கமுடியாததாக இருந்தது. மக்கள் சிலபோது ஆட்சியாளரிடம் முறையிட்டு வரிக் குறைப்பு பெற்றனர். இந்த வரிச்சுமை சோழர் ஆட்சியில் இருந்ததை விட விசய நகர ஆட்சியில் இன்னும் கூடுதலாக இருந்தது. கையும் காலுமே உடைய உழைப்பை நம்பி  கூலிக்கு செல்வோர் கூட வரி கட்டவேண்டி இருந்தது. இடங்கை, வலங்கைப் பிரிவு என்று குறிப்பிட்டு சில வரித் தொடர்பான கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன.

    மக்கள் தாமே சட்டத்தை கையில் எடுத்து வரித் தண்டுவோரை கொல்லும் அளவிற்கு உடன்பாடு காணும்படியாக ஊராக ஒன்றுகூடி அதிக வரிக்கு எதிராக ஆவண ஒப்பந்தம் செய்த கல்வெட்டுகள் சில உள. இது போன்ற நிகழ்வுகள் குறிப்பாக தேவதான ஊர்களில் இதாவது, இறையிலியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் அரங்கேறி உள்ளன. ஏனென்றால் இவ்வூர்களில் ஆட்சியாளர் என்று இல்லாமல் கோவில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தமையால் மக்களால் அதற்கு எதிராக எளிதில் ஒன்று திரள முடிந்தது. அரையர்களைப் போல கோவிலார் ஆயுதம் ஏந்தி மக்களை அடக்கப் போவதில்லை என்பதே இதற்கு காரணம்.

    ஏதோ ஒருகாலத்தில் வேந்தர், மன்னர், அரையர் ஆகியோரால் கோவிலின் வளர்ச்சி, கோவிலைச் சூழ்ந்த ஊரின் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவ்வூர்களில் தண்டப்படும் வரிகளை அரசருக்கு (இறை) செலுத்த வேண்டாம் (இலி) என்று ஆட்சியாளரால் ஓலையில் உரிமை எழுதிக் கொடுக்கப்பட்டவையே இந்த இறையிலி ஊர்கள். இது ஆட்சியாளருக்கும் கோவிலாருக்கும் இடையேயான உடன்பாடு தானே தவிர இதில் பொது மக்கள் குறுக்கிட ஒன்றும் இல்லை. இறையிலி ஆனாலும் மக்களைப் பொறுத்தமட்டில் வரி கட்டித்தான் ஆக வேண்டும். இந்நாளில் பலரும் இறையிலி என்றால் வரியே இல்லை என்று தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். வரியே இல்லாமையை சர்வ மானியம் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. வரியே இல்லாவிட்டால் பின் எப்படி கோவில் வளர்ச்சியும் கோவிலூரின் வளர்ச்சியும் நடைமுறைப்படுத்த முடியும்.  வரியே இல்லை என்ற விளக்கத்தால் இறையிலியின் நோக்கமே அடிபட்டு போகும் போது அதை ஏன் ஆட்சியாளர் இறையிலி என்று அறிவிக்க வேண்டும்? என்று சிந்திக்க வேண்டும்.  இந்த இறையிலி ஊர்களில் கோவில் பொறுப்பாளர்களே தமக்கு இசைந்தவாறு வரியிட்டு தண்டிவந்தனர்.  அதை எதிர்த்து மக்கள் எதிர்வினையாற்றிய செய்திகளை கீழ் உள்ள கல்வெட்டுகள் விளக்குகின்றன.

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், திருவரங்குளம் ஊர், ஹரதீர்தீசுவரர் கோவில் கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தின் கிழக்கு சுவரில் உள்ள 15 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் மதுரையு மீழமுங் கருவூரு பாண்டியன் முடித்தலை[யு]
    2. ங் கொண்டு மதுரையில் வீரர் அவிஜேகம் விசையர் அவிஷேகமும் பண்ணியரு[ளிய_ _]
    3. புவன வீரதேவற்கு யாண்டு 40 நாற்பதாவது இராஜராஜ வளநாட்டு வல்ல நாட்டு [வ _ _ _
    4.  கூரப்பாத்தாழ்வு ] தேவி மங்கலத்து நாடா இசைந்த நாட்டோமெங்களி லிசைந்து உடையார் தி
    5. ருவரன்குளமுடைய நாயனார் திருப்பதி தேவுந் திருமுடையான் திருமண்டபத்து நாடாய்
    6. குறைவறக்கூடி இருந்து கற்கடக நாயற்று மூன்றாந் தியதி நாள் இசைவு தீட்டுமிட்டு கல்வெட்டி
    7. குடுத்த பரிசாவது இந்நாயனார் திருப்பதியில் நாலுவரத்துக் குள்ளு இருந்த குடிமக்களை நோ
    8. க்குவோமாகவு புறத்தேவதானங்களையுங் குடிமக்களையு நோக்குவோமாகவும் நோக்குமிடத்து பறித்தல் கன்று
    9. காலி பிடித்தல் மற்றுஞ் சில சிதம்புகள் செய்தாருண்டாகில் நீர் நிலத்திலே இரண்டு இரண்டு மாச்செய்யுந் திருசூலக்கல் நா
    10. ட்டி குடுத்து பறிச்சின பிடிசின விடுவோமாகவும் இத்திருப்பதியில் சிவபிராமணர், செட்டிகள், வெள்
    11. ளார், கைக்கோளர், தேவரடியார், கண்மாளர், இடையர் மற்றுந் இத்திருப்பதியி இருந்து_ _ _
    12. வர் சிலர் எங்கள் பக்கல் விலை கொண்டுடைய நீர்நிலங்களும் புன்சைகளு குடி நீங்கா தேவ
    13. தானமாக எங்கள் நாயனாற்கு இறை இறுப்பராகவும் இ[று]க்குமிடத்து நீர் நில[த்]துக்கு மாத்தால் ப
    14. தில் கலநே தூணிப்பதக்காக வந்த நெல்லும் புன்சைக்கு மாத்தால் பதினைஞ்சே_ _ _
    15.  திகாசும் கொள்ளக்கடவதாகவு இப்படியால் வந்த நெல்லுங் காசும் சந்திராத்தயவல்_ _ _

    இசைந்த – இணங்கிய; இசைவுத் தீட்டு – ஒப்பந்த ஆவணம்; திருப்பதி – கோவில் திருத்தலம்; நாலுவரத்து- நாற்புறத்தில் இருந்து உள்ளே வருகை; பறித்தல் – பறிமுதல்; கன்றுகாலி – கால்நடை; சிதம்பு – தன்மை அழிப்பு, debasement in quality; பக்கல் – எங்கள் இடம் இருந்து, from us; மாத்தால் – ஒரு மா நிலம்.

    விளக்கம்: திரிபுவனவீரதேவர் என்று மூன்றாம் குலோத்துங்கனை குறிப்பிட்டு, அவனது 40 ஆம் ஆட்சிஆண்டில் (பொ.ஊ. 1218) கற்கடக ஞாயிற்று 3 ம் நாளில் இராசராச வளநாட்டு தேவி மங்கலத்து நாட்டார் இணங்கி நாங்கள் எங்களுகுள்ளே ஒன்றுபட்டு திருவரங்குளமுடைய ஈசன் திருக்கோவில் தலத்தில் ஒப்பந்த ஆவணம்  எழுதிக் கொடுத்த ஏற்பாடு என்னவென்றால் நாற் திசையில் இருந்து உள்ளே வரும் குடிமக்களையும் கருத்தில் கொள்வோம் அதே நேரம் பிற தேவதானங்களையும் அவற்றின் குடிமக்களையும் கருத்தில் கொள்வோம் என்றும், அப்படி கருத்தில் கொள்ளுமிடத்தில் பொருள் பறிமுதல், கால்நடைகளை பிடித்து கொள்ளுதல், தரம் அழித்தல் போன்றவற்றை செய்பவர்  இருப்பாரானால்அதற்கு இழப்பீடாக இரு மா அளவு வயலை திரிசூலக்கல் நாட்டி கொடுப்பதோடு பறிமுதல் செய்த பொருளையும் பிடித்து வைத்த கால்நடையையும் விடுவிப்போம். இத்திருத்தலத்தை சேர்ந்த சிவபிராமணர், செட்டியார், வெள்ளாளர், செங்குந்தர், தேவரடியார், கம்மாளர், இடையர் மற்றும் இத்தலத்தவர் சிலர் எங்களிடம் இருந்து விலைக்கு வாங்கிய நீர்நிலங்கள், புன்செய் நிலங்களுக்கு இடம்பெயரா குடிகளாக வரி இறுக்கலாம். அவ்வாறு இறுக்கும் போது நீர்நிலத்திற்கு ஒரு மாவிற்கு பத்து கலன் தூணிப்பதக்காக நெல்லும், புஞ்செய் நிலத்திற்கு ஒரு மாவிற்கு பதினைந்து _ _ _ காசும் வரியாகக் பெறுவோம். இப்படி வந்த நெல்லும் காசும் ஞாயிறும் நிலவும் நிலைக்கும் பொழுது வரை (கோவிலுக்கு பயன்படுத்தப்படும்) என்று கோவில் பொறுப்பாளர்கள் உடன்பட்டனர்.

    அளவிற்கு விஞ்சி வரித் தண்டியதால் மக்கள் வெகுண்டெழுந்து முறைப்பாடு செய்ததாலோ என்னவோ ஊரார் ஒன்றுகூடி வரன்முறை வகுத்து வரி தண்டுவது குறித்து வரையறை செய்து இவ்வூரில் வாழும் குடிகளிடம் மட்டும் வரியும் காசும் குறிப்பிட்டபடி தண்டுவது என்று ஒப்பந்த ஆவணம் எழுதிக் கொடுத்தனர். இதற்கு கோவில் பொறுப்பாளர்கள் ஒப்புக் கொண்டதாகத் தெரிகின்றது. பண்டைக் காலத்தே எளிய மக்களிடம் காசு புழக்கம் குறைவு என்பதால் நெல்லாகவே வரியைக் கட்டினர் என்று தெரிகின்றது.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 34, பக். 263.

    திருச்சிராப்பள்ளி மாவட்டம், குளித்தலை வட்டம். இரத்தினகிரி ஊர், இரத்தினாசலேசுவரர் கோவில் கருவறை வடக்கு சுவரில் பொறிக்கப்பட்ட 25 வரிக் கல்வெட்டு.

    1. _ _ _ _ மக் கொருவர்க்கு உடற்பட்டு எய்முகங் குடுத்து கோட் குறளை கே _ _ _
    2. குடிகேடு கெடுத்தாருண்டாகிலும் அன்னியாயங்களுக்கு உடற் பட்டாருண்_ _ _
    3. பிராமணராகில் கண்ணும் பறித்து மூக்கும் அறுக்க கடவதாகவும் இ _ _ _ _
    4. _ க்[கூ]னி பட்டாநாகில் செய்தவனுக்கு தோஷ மின்றிக்கேயிருக்க [எ]_ _ _
    5. ம் யே _ _ _ மாரியாகில் பன்றியிலொன்றாக குத்துண்ணக் கடவனாகவும் _ _ _
    6. ராமங்கள் நகரங்களில் கடமை குடிமைக்கன்றியிலே அன்னியாயக் கடமை _ _ _
    7. ளிருவரைப் பிணைத்தும் குற்றம் குற்றமன்றியிலே தெற்ற குற்றத்துக்கு தண்டமி _ _
    8. ல்லாதாகவும் நாடுபெற்று வந்த முதல் கவளமுதல் காணும்மிடத்து கிராமமும் நாடும் நகர _ _ _ _
    9. ணக்கடவோமாகவும் உற்கணக்கர் அன்னியாயக் கடமைக்கு தரவெழுதக் கடவதல்லவாகவும்
    10. வீரக்கொடியார் கைய்யாலே குலை உண்ணக்கடவகளாகவும். இப்படி தவிர  ஒருவரிருவர் _ _ _
    11. கில் நாடாக குடிவாங்கி போகக் கடவோமாகவும் குடிவாங்க இருக்கச் செய்தே நம் _ _ _ _
    12. [ழுதிக் குழமு]ட்டாகல் மேழிபட்டத்தாரெல்லாரையும் பன்றியிலொன்றாக வீரக்கொடியாரே _ _ _
    13. இவகள் செத்தால் இவகள் பிணமும் பன்றியிலொன்றும் நாய்ப்பிணமுமாக _ _ _     
    14. மாளர், கொல்லர், தச்சர் உள்ளிட்ட பணிசமக்கள் நாடு குடிவாங்கி இருக்கச் செய் _ _ _
    15. டாகில் வீரகொடியார் பணியேசாதனமாக கொல்லக் கடவகளாகவும் உடையார் _ _ _
    16. டய நாயநார்க்கு ஏழாவது கார் முதல் பெரிய நாட்டான் திருமாளிகைக்கு ப்ரஹ்ம _ _ – [தலையாக] _ _ _ _
    17. ன் கடையாக [கு]டிமை குறுணிக்கு அரைநாள் கட்ட[த்தும்] த _ _ _ _  
    18. னம் குறுணி நெல்லும் குடக்க கடவோமாகவும் இப்படி சம்மதித்து அமைவுக்க _ _ _ _ _ _
    19. டோமும் கிராமங்களோமும் நகரங்களோமும் இவ்வனைவோம் நாடுகளும் நகர _ _ _
    20. பணியால் அமைவு கச்சமெழுதினேன் ப்ரமத்சங் குழித் தண்டலை மத்தியதன் கு _ _ _ _ _
    21. டையான் திருவரங்க நாராயணன் திருத்தாந் தோன்றியான எழுநூற்றுவ _ _ _ _
    22. டு பணியால் மருதூர் உடையான் பெரிய நாட்டு வேளான் எழுத்து. ஆதனூர் நாடும் கிராம _ _ _ _ _
    23. கரங்களும் பணியால் சோழகுல மாணிக்கச் சருப்பேதி மங்கலத்து பிரம பிரியன்  எழுத்து குறுநன் _ _ _ _
    24. கரம் பணியாலும் ஐஞ்ஞூற்றுவ வேளான் எழுத்து. இப்படிக்கு இவை திருவி _ _ _ _ _
    25. வீரமாகாளம் ஜெயம் குழித்தெண்டலை மத்தயத்தன் நாராயணன் ஆதி _ _ _ _

    உடற்பட்டு – உடன்பட்டு; எய்முகம் கொடுத்து –  பணிந்து போய்; கோட் குறள் – புறங்கூறல்,  back biting; குத்துண்ண – குத்துபட்டு; தரவெழுது – கூலிக்கு ஆவணம் எழுது; வீரக்கொடியார் – போர்க்குடியுள் ஒரு முதலியார் பிரிவினர்; மேழிபட்டத்தார் – வெள்ளாளர்; அமைவுக் கச்சம் – முடிவான தீர்மானம்;

    விளக்கம்: மேலுள்ள வரிகள் சிதைந்துள்ளதால் அவற்றின் பொருளை அடுத்து வரும் வரிகளோடு பொருத்தி பொருள் கொள்ள முடியவில்லை. முதல் சில வரிகள் சிதைந்துள்ளன. ஒருவருக்கு உடன்பட்டு பணிந்து அவரது கோள்சொல்லைக் கேட்டு ஒரு குடியைக் கெடுத்தார் இருப்பாரானால், அநியாயங்களுக்கு உடன்பட்டவர் இருப்பாரானால், அவர் பிராமணர் என்றால் கண்ணைப் பிடுங்கியும் மூக்கை அறுத்தும் போடுவோம்.

    கிராமங்கள் நகரங்களில் நியாயமான கடமை வரி, குடிமை வரி அன்றி அநியாயக் கடமை வரி திரட்டினவரை பிணைத்து குற்றம் உசாவும் குற்றமன்றத்தில் தெளிவாக மெய்ப்பிக்கப்பட்ட அக்குற்றத்துக்கு தண்டமிடுவோம் (fine). ஊர் கணக்கர் அநியாயமாக வரித் தண்டினால் இனிமேல் அவர் ஆவணம் எழுத அனுமதி கிடையாது. மேலும் அவர்கள் வீரக்கொடி என்ற போர்குடியாரால் கொலை யுண்டாவர். மேழிபிடிக்கும் வெள்ளாளராகின் பன்றிக் கூட்டத்தில் ஒன்றாகக் கருதி வீரக்கொடியாரே அவரைக் கொல்வார். அப்படி செத்த போது இவர்கள் பிணங்களை பன்றிப் பிணத்தில் ஒன்றாக நாயின் பிணத்தில் ஒன்றாகக் கருதி எறிவோம். கம்மாளர், கொல்லர், தச்சர் உள்ளிட்ட பணிசெய் மக்களை ஊரை விட்டு போகச் செய்தார் இருப்பாரானால் அவர்களை வீரக் கொடியார் தம் பணியாக கொன்று போடுவார்களாக என்று ஒப்புக் கொண்டு முடிவான தீர்மானத்தை கிராமத்தாரும் நகரத்தாரும் எழுதினோம் என்று பிராமணரும் வேளாளரும் கையெழுத்திட்டுள்ளனர். இறைவர்க்கு கல்வெட்டின ஆண்டில் இருந்து ஏழாவது ஆண்டு கார் காலம் முதல் பெரியநாட்டான் திருமாளிகை என்னும் கோவில் சுவரைப் பேண குடிமைக்குறுணியும் குடிமை நெல்லும் தர கிராமத்தார் ஒப்புக் கொண்டனர். கல்வெட்டு அதிகம் சிதைந்துள்ளதால் இந்த அளவே பொருள் கொள்ள முடிந்தது.

    பல கல்வெட்டுகளில் பிராமணனை கொன்ற பாவத்தை அடைவான் என்ற கருத்தை கூறுவதால் அதை மனதில் ஏந்தி பிராமணக் கொலை கூடாது என்று பிராமணருக்கு மட்டும் கொலை மிரட்டல் விடக்காமல் கண்ணைப்பிடுங்கி முக்கை அறுத்துப் போடுவோம் என்று மிரட்டி உள்ளனர். மற்ற சாதியாரை பன்றியும் நாயுமாக கருதி கொல்லுவோம் என்கின்றனர்.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 34, பக். 155-156.

    செங்கற்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், பூலிப்பரக்கோவில் எனும் ஊரில் வியாக்ரபுரீஸ்வரர் கருவறை வடபுற ஜகதியில் பொற்க்கப்பட்ட 8 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ மந் மஹாமண்டலீசரன் வீரவிஜயபூபதிராய உடையா[ர்]ற்க்குச் செல்லா நின்ற ஏவிளம்பி வுருஷம் தை மாஸம் 5 ந்தியதி உடையார் திருப்புலி[ப]
    2. கவ நாயினார் திருமடை விளாகம். புலிப்ப[க]வர் கோயில் தானத்தார் இவ்வூர் கைக்கோளர்க்குக் கல்வெட்டிக் குடுத்தபடி.  நாட்டில் கோயில் பற்ற அற்ற மரி
    3. ஆதி வாசல்ப்பணம் கழிக்கவேணும் என்று புறநாட்டிலே  சந்திரகிரிச் சாவடிஇலே போயிருக்கைஇல் பூர்வத்தில் கடமை பணம் 9-1/2 க்கு தறி கண்டவாசலுக்
    4. கு வாசல்பணம் மூன்றும் கழித்து [கொண்ட]தறிக்கு தறி ஒன்றுக்குக் கொள்ளூம் பணம் 6-  சேனைக் கடைக்கும் வாசல் பணம் 3 ம் கழித்துக் கொள்ளும்
    5. பணம் 6-1/2  கச்சவடவாணியர் பேர் ஒன்[று]க்குக் கொள்ளும் பணம் 3 சிவன்படவர் பேர் ஒன்றுக்கு கொள்ளும் பணம் 2-1/2 முன்னாள் தானத்தார்க்கு நடந்து
    6. வரும் புடவை முதலு பணம் 4 ம் கார்த்திகை காணிக்கைக்கு பணம் 4 ம் இறுக்க கடவார்கள் ஆகவும் உபாதி விநியோகம் நாட்டில் கோயில்ப்பற்று
    7. அற்ற மரிஆதி இறுக்கக் கடவர்கள் ஆகவும் இம்மரிஆதி சந்த்ராதித்யவரையும் நடக்கும் படிக்குக் கல்வெட்டிக் குடுத்தோம். இவ்வூர் ஊரவற்கு
    8. உடையா[ர்]த் திருப்புலிபகவ நாயினார்கோயில் தானத்தாரோம் ஸ்ரீ மாஹேஸ்வரரோ ரக்ஷை. ஆலாலசுந்தரன்.

    திருமடைவிளாகம் – கோவிலைச் சூழ்ந்த பகுதி; நாட்டில் – ஊரில்; கோயில்பற்று – கோயிலுக்கு என்று ஒதுக்கிய; மரியாதி – வழக்கம், மரபு; வாசல்பணம் – வீட்டை கணக்கிட்டு பெறும் வரி; கழிக்க – குறைக்க, reduce; புறநாட்டிலே – outpost; தறிகண்ட வாசல் – தறி உள்ள வீட்டிற்கு; நடந்து வரும் – நடப்பில் உள்ள, current practice; உபாதி – வரிவகை; விநியோகம் – பொதுச் செலவை ஈட்டுகட்ட வாங்கும் வரி;

    விளக்கம்: வீர விஜ பூபதி என்பது வீர விஜபுக்க ராயரை (1422-1424) குறிக்குமானால் ஏவிளம்பி 1417-1418 இல் நிகழ்கின்றது. இந்த இரண்டில் ஏதோ ஒன்று தவறாக குறிக்கப்பட்டு உள்ளது. தை மாதம் 5 ம் நாள் திருப்புலிப்பகவ இறைவர் கோவிலைச் சூழ்ந்த திருமடை விளாகத்தில் வாழும் கோவில் பொறுப்பாளர்கள் இவ்வூர் செங்குந்தருக்கு வரிக் குறைப்பு குறித்த கல்வெட்டு ஒன்றைத் தந்தனர். அக் கல்வெட்டு ஊரில் கோயிலுக்கு ஒதுக்கப்படாத மரபாக வாசல்பணம் என்னும் வரியை குறைக்க வேண்டும் என்று சந்திரகிரிக்கு ஊர்ப்புறத்தே உள்ள சாவடிக்கு போய் இருந்தபோது அங்கே மன்னரை சந்தித்து வரிக்கழிவு பெற்று வந்ததற்கு இணங்க முன்பு கடமை வரிக்கு பெற்ற பணம் 9-1/2 க்கு தறி உள்ள வீட்டிற்கு வாசல் பணம் 3 கழித்து கண்டதறி ஒன்றுக்கு இனி வாங்கும் வரிப் பணம் 6-1/2, வெற்றிலை விற்கும் சேனைக்கடையார்க்கு வாசல் பணம் 3 கழித்து இனி வாங்கும் பணம் 6-1/2. கயிறு விற்கும் கச்சவடவாணியர் ஆள் ஒருவருக்கு இனி கொள்ளும் பணம் 3, மீனவரான சிவன்படவர் ஆள் ஒருவருக்கு இனி கொள்ளும் பணம் 2-1/2 ஆகும். முன்னாளிலே கோவில் பொறுப்பாளருக்கு புடவை முதலாக கட்டிய பணம் 40 -ம், கார்த்திகை காணிக்கைக்கு கட்டிய பணம் 4 –ம் அப்படியே தொடரும் அதை அப்படியே கட்ட வேண்டும். பிற வரி வகைகள், பொதுச் செலவு வரி, ஊரில் கோவிலுக்கு ஒதுக்கப்படாத மரபு வரிகளையும் அப்படியே கட்ட வேண்டும். இந்த மரபு ஞாயிறும் நிலவும் நின்று நிலைக்கும் காலம் வரை தொடரட்டும் என்று இவ்வூரார்க்கு திருப்புலிப்பகவ இறைவர் கோவில் பொறுப்பாளர்கள் கல்வெட்டி உறுதிமொழி கொடுத்தோம். இந்த வரி வரையறையை சிவனடியார் காத்து நிற்க வேண்டும். ஆலால சுந்தரன் இதை எழுதிக் கையெழுத்திட்டான்.

     இதில் இடம்பெறும் கைக்கோளர், சேனைக் கடையார், வாணியர் என்போர் முன்பு போர் தொழில் செய்யும் பட்டடைக் குடிகள் ஆவர். இராசராசன் ஆட்சியின் போது தேவார மீட்சி, குலோத்துங்கன் ஆட்சியில் பெரிய புராண தொகுப்பு ஆகியவற்றால் நிகழ்ந்த சைவ சமய எழுச்சியால் இந்தப் போர்க்குடிகள் கொலைத் தொழிலென்று போர்த்தொழிலை நீங்கி வணிகத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவு போர்ப்புரியும் குடிகள் குறைந்ததால் எதிர்த்து போரிட்டு துரத்த முடியாதபடி தமிழகம் வலுவிழந்ததால் கடந்த 600 ஆண்டுகளாக அயல் மொழியார் ஆட்சிப் பிடியுள் கட்டுண்டு கிடக்கின்றது. ஆயுதங்கள் மட்டுமே ஏந்தி வந்தவரிடம் இதாவது, இன்று மக்கள் தொகையில் 1% மட்டுமே உள்ள அயல் மொழியாரிடம் தமிழகத்தின் 50% மேலான விளைநிலங்கள் உரிமையாகி உள்ளன.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 36, பக். 260.

    Share
  • பண்டைக் கால குற்ற தண்டனை

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    Codified law என்பதற்கு குடிமை ஒழுங்கை சமூகத்தில் நிறுவ தொகுத்து பதிவுபடுத்திய  சட்டம் என்று பொருள். இப்படி நெறிமுறைப்பட்ட சட்டம் என்பது பண்டைய தமிழகத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. அரையர்கள் எனும் அரசர்கள் அந்தந்த நேரத்திற்கு சினந்து வெகுண்டு இட்ட ஆணைகளே சட்டங்களாகி நடைமுறைப் படுத்தப் பட்டன என்று தெரிகின்றது. இத்தகு தான்தோன்றிச் சட்டங்கள் நியாயமானதாக இருக்கவில்லை. பொதுவானதாக இருக்க வில்லை. ஏனென்றால் செல்வமுடையவர் தம்மிடம் இருந்த செல்வத்தால் கோவிலில் விளக்கேற்றி விட்டு தப்பிவிட்டனர். குற்றங்களை மெய்ப்பித்து தண்டனை பெற்றுத் தரும் காவல்துறை போன்ற அமைப்பு இல்லாமையால் ஊர் மக்கள் தாமாகவே முன் வந்து குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும் அவலநிலையே இருந்துள்ளது. மனுதருமச் சட்டம் என்பதெல்லாம் இருந்ததில்லை என்றே தெரிகின்றது. இவற்றை எல்லாம் கீழ்க் காணும் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.

    தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், ஜம்பை ஜம்புநாதர் கோவில் கருவறை வடக்கு சுவர் 18 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோ இராஜகேசரி பந்மராந த்ரிபுவநச் சக்கரவ
    2. த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 3 ஆவது
    3. வாணகோப்பாடி ராஜராஜவள நாட்டுப் பெண்ணைத் தெந்கரை
    4. க்கீழ் கொன்றைநாட்டு முடியனூரிருக்கும்  பள்ளிசேரி அடியநம்
    5. பியான கோவலராயப் பெரையன் மேற்படி நாட்டுப் பெண்ணை வட
    6. கரைச் செங்குன்ற நாட்டு வாளைவெட்டியில் இருக்கும் வெள்ளாளன் பொ
    7. ன் பற்றியுடையான் குன்றன் சீருடையானைக் கோவலராயர்(யர்) வை
    8. [வ]டையிலே இவன் சேரி அடியநம்பி விருகத்தை எய்ய பிழை
    9. ச்சு இச்சீருடையான் மேலே அம்புபடப் பட்டமையில் எழு
    10. பத்தொன்பது நாட்டுச் சித்திரமேழிப் பெரிநாடுங் கூடி
    11. இருந்து இக்கோவலராயப் பெரையன் மேலே பழியாக்கி இவந்
    12. ரேலிந்தப் பழிதீரக் கொண்ட நடையாவது இன்நாட்டுச் ச
    13. ண்பையாந வீர்ராஜேந்த்ரபுரத்து உடையார் திருத்தாந் தோன்
    14. றி ஆள்ளுடையார் ஸ்ரீ கோயிலிலே இரண்டு திருநுந்தாவி
    15. ளக்கு வைக்கக் கடவநாக்கி இவந் விட்ட சாவாமூவாப் பசு
    16. அறுபத்து நாலு. இப்பசு அறுபத்து நாலுங் கைக்கொ
    17. ண்டோம் இக்கோயிலில் திருவுண்ணாழிகை ஸபையோம்.
    18. சந்த்ராதித்தவல். இது பந்மாயிஸ்வர ரக்ஷை.

    பள்ளி சேரி – பள்ளி மக்கள் வாழும் சேரி, பெரையன் – பறையன், விருகத்தை – செந்நாய் வகை; எய்ய – ஏவ; பிழைச்சு – பிழையாக, தவறாக; பட்டமை – செத்ததனால்; பழியாக்கி – குற்றஞ் சுமத்தி; நடையாவது – நடவடிக்கையாவது; திருவுண்ணாழிகைச் சபையோர் – கருவறைப் புகும் பிராமணர்; பன்மாகேசுவரர் ரக்ஷை – சிவனடியார் காப்பு.

    விளக்கம்: இரண்டாம் குலோத்துங்கனது மூன்றாம் ஆட்சி ஆண்டில் (பொ.ஊ. 1135-1136) வாணகோப்பாடி இராசராச வளநாட்டின் கண் அமைந்த தென் பெண்ணையின் தென்கரை ஊரான கீழ்க் கொன்றை நாட்டு முடியனூரில் உள்ள பள்ளிச்சேரியில் வாழுகின்ற அடியநம்பி கோவலராயன் எனும் பறையன் வாணகோப்பாடி இராசராச வளநாட்டின் வடகரைச் செங்குன்ற நாட்டில் வாளைவெட்டி ஊரில் இருக்கும் வெள்ளாளன் பொன்பற்றியுடையான் குன்றன் சீருடையான் என்பானைக் வேட்டையின் போது இவனுடைய சேரியைச் சேர்ந்த அடியநம்பி இவனுடன் சென்று வேட்டை நாயை ஏவ அதே நேரம் கோவலராயன் தொடுத்த அம்பு குறி தவறி சீருடையான் மேல் பட்டு தைத்து அவன் இறந்து போகின்றான். எழுபத் தொன்பது நாட்டின் சித்திரமேழிப் பெரியநாட்டு மக்கள் கூடி வந்து இருந்து இக் கோவலராயப் பறையன் மீது கொலைப் பழி சுமத்துகின்றனர். கோவலராய பறையன் ஒரு அரசன் நிலையில் இருந்ததால் அவனை தப்பவிடாமல் செய்யவே இவ்வாறு ஊரே திரண்டு அவனது குற்றத்திற்கு நடவடிக்கையாக சண்பை (ஜம்பை) திருத்தான் தோன்றி இறைவர் திருக்கோவிலில் இரண்டு திருநொந்தா விளக்கு ஏற்ற வேண்டும் என்று தண்டனையாக இடுகின்றனர். அதன்படி கோவலராயன் அறுபத்து நான்கு சாவோ மூப்போ எய்தாத இளம் பசுக்களை தருகின்றான். அவற்றை கருவறை பிராமணர்கள் ஏற்றுக் கொண்டு நிலவும் ஞாயிறும் நிலைக்கும் நாள் வரை நந்தாவிளக்கு ஏற்றுவதாக உறுதி கூறினர். இந்த நடைமுறையை சிவனடியார் காக்க வேண்டும் என்ற குறிப்போடு முடிகின்றது.

    கோவலராயன் செல்வ வளமுடையவன் என்பதால் 64 பசுக்களை அவனால் கொடுக்க முடிந்தது. இங்கே எழும் கேள்வி கோவிலில் விளக்கேற்றுவது எப்படி குற்றத்திற்கான தக்க தண்டனையாக இருக்க முடியும் என்பது தான்? தண்டத் தொகை, சிறைத் தண்டனை என்றால் அவற்றை தண்டனை என்று கருதலாம். இது அப்படி அல்ல. பழமையில் சிறைத் தண்டனை என்பதே இருந்ததில்லை போலும் என்று எண்ணத் தோன்றுகின்றது.

    இக்காலத்தே காடுகள் ஒதுக்குபுறமான மலைப் பகுதியில் இருப்பது போல் அல்லாமல் அக்காலத்தே காடுகள் நடுவே தான் ஊர்களே அமைந்திருந்தன என்பது கோவலராயன் வேட்டையில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. அக்கால் ஊர்கள் தொடர்ச்சியாக அல்லாமல் விட்டுவிட்டு இப்படித் தான் காட்டின் நடுவே இருந்தன போலும்.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 22 பகுதி I, பக். 65-66.

    தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், ஜம்பை ஜம்புநாதர் கோவில் கருவறை சுவரில் பொறிந்துள்ள 11 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியு ந்தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்
    2. ச்சாலை கல மறுத்தருளி வேங்கை நாடுங் கங்கபாடியு ந்தடிகை பாடியு நுளம்ப பாடியும் குடமலை நாடும் கொல்ல
    3. முங் கலி[ங்]கமு மெண்டிசை புகழ்தர வீழ மண்டலமு மிரட்டபாடி யேழரை யிலக்கமு ந்திண்டிறல் வென்றி தண்டாற் கொண்
    4. ட தன்னெழில் வளரூழி யெல்லாவியாண்டு ந்தொழுதக விளங்கு மியாண்டே செழியரைத் தேசுகொள் ஸ்ரீ கோவிராச ராச ராசகேசரி ப
    5. ந்மரான  ஸ்ரீ ராசராச தேவற் கியாண்டு 28 ஆவது. இவ்வூர் வியாபாரி அங்காடி பொற்றாமன் வைச்சுக் கொ[ண்]டிருந்த பெண்டாட்டி
    6. [சீமா]தேவி பெற்றியை முனைப்பாடி நாவலூரிலிருக்கும் பிராட்டி சீ[ரா]ளன் இராத்திரி [சீ]மாதேவிபெற்றியை வலியப்புக்கு பிடி
    7. _ _ _ _ அங்காடி பொற்றாமன் என் மணவாட்டியை நானிருக்கவே வலிய பிச்சானென்று புக்கு படக் குத்தினமையில் அங்காடி
    8. [பொ]ற்றாமன் மேல் வழக்கழிவு இலாமையில் பிராட்டி சீராள மாடைத் தோடொருங்கி பிராட்டி சீராளனுக்காக ஒரு நொந்தா விளக்கு
    9. _ _ _ _ த்தான் தோன்றியாள்வார்க்கு சந்த்ராதித்தவற் நிசத முழக்கு எண்ணை யட்டி விளக்கெரிக்க அங்காடி பொற்றாமன் குடுத்த பொ
    10. [ன் ப]தின் கழஞ்சும் கொண்டு நிசத முழக்கெண்ணை யச்சுவோமானோ யிந்நாட்டு பெண்ணைத் தெந்கரை பாலைப்பந்தலூ
    11. [ரோம்] சந்த்ராதித்தவற். பந்மாஹேஸ்வர ரக்ஷை.

    புக்கு – புகுந்து; பிடிச்சான் – கட்டிப் பிடித்தான்; படக் குத்தி – செத்து விழும்படிக் குத்தி; வழக்கழிவு – குற்றம் இல்லாமல் ஒழிய, மாடைத்தோடொருங்கி – ; நிசதம் – ஏற்பாடு, அட்டி – ஊற்றி

    விளக்கம்: இராசராசனின் மெய்க்கீர்த்தியோடு இக் கல்வெட்டு தொடங்குகின்றது. அவனது 28 ஆவது ஆட்சி ஆண்டில் (பொ.ஊ. 1012) பொறிக்கப்பட்டுள்ளது. சண்பையில் வாழும் வணிகன் அங்காடி பொற்றாமன் வைத்துக் கொண்டிருந்த சீமாதேவி பெற்றியை முனைப்பாடி நாவலூரில் வாழும் பிராட்டி சீராளன் என்பான் இரவில் வீடு புகுந்து சீமாதேவியைக் கட்டிப் பிடித்தான். எதிர்பாரத வகையில் அங்கு வந்திருந்த அங்காடி பொற்றாமன் “நானிருக்கும் போதே என் மணவாட்டியை வலியப் வந்து புகுந்து கட்டிப் பிடித்தாயா”? என்று உள்ளே புகுந்து சீராளன் செத்து விழுமாறு குத்தினான். மாடைத் தோடொருங்கி என்ற சொல்லுக்கு பொருள் விளங்க முடியவில்லை என்பதால் தெளிவான விளக்கம் அறிய முடியவில்லை. இதனால் அங்காடி பொற்றாமன் மேல் குற்ற வழக்கு போகாததால் பிராட்டி சீராளனுக்காக ஒரு நுந்தா விளக்கு எரிக்க தான்தோன்றி இறைவர்க்கு நிலவும் ஞாயிறும் நிலைக்கும் காலம் வரை உழக்கு எண்ணெய் ஊற்றி விளக்கு எரிக்க ஏற்பாடாகி அதற்கு பொற்றாமன் 15 கழஞ்சு பொன் கொடுத்தான். அதைப் பெற்றுக் கொண்டு பெண்ணைத் தென்கரையில் பாலைப்பந்தலூர் வாழும் பிராமணர் உழக்கு எண்ணை ஊற்றி நந்தா விளக்கு எரிப்பதாக உறுதி கூறினர்.

    ‘’யாரோ ஒருவன் வைப்பாட்டி தானே’’ என்று சீராளன் தகாத செயலில் ஈடுபட்டு அதன் எதிர்வினையால் மாண்டான். இது அந்நாளில் பண்பற்றோர் சமூகத்தில் வாழ்ந்ததற்கு எடுத்துக்காட்டு. அதே நேரம் செல்வம் உள்ளவன் தண்டனை பெறாமல் தப்புவான் என்பது அங்காடி பொற்றாமனால் இக்கல்வெட்டில் மெய்ப்படுகின்றது. ஒரு கட்டமைந்த பேரரசுக் காலத்திலேயே இப்படி என்றால் சங்க காலத்திலே மட்டும் எப்படி இருந்திருக்கும் நீதியும் நியாயமும்?

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 22 பகுதி I, பக். 72-73.

    ?????????????
    ?????????????

    தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், ஜம்பை ஜம்புநாதர் கோவில் கருவறை தெற்கு சுவரில் பொறிந்துள்ள 12 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திருமருவி[ய] செங்கோல் வேந்தன் முன்னோன் சேனை பின்னதுவாக இரட்டபாடி ஏழரை இலக்கமும் கொண்டு கொல்
    2. லாபுரத்து சயத்தம்பம் நாட்டி முன்னாணை தவிர்த்து த[ன்]னாணை செலுத்தி எதிரமர் பெறாது எண்டிசை திகழ பறைய
    3. து கறங்க ஆங்கது கேட்டு பேராற்றங்கரை கொப்ப[த்து] வந்தெதிர் பொருந ஆஹ[வ]மல்லன் அஞ்சி புறங்கிட்டோட ஆ
    4. னையுங் குதிரையும் பெண்டிர் பண்டாரமும் ஆங்கவன் விபவம் அ_ங்கலுங் கொண்டு விஜை[ய] அபிஷேகம் செய்
    5. து வீரசிங்காசனத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பந்மரான உடையார் ஸ்ரீ ராஜேந்த்ர தேவற்[கு] யாண்[டு] 3 வது. வாணகோப்பாடியான ரா
    6. ஜேந்த்ர வளநாட்டு பெண்ணைத் தென்கரை நரிப்பள்ளி நாட்டு கூகூர்ப்பாடி யிருக்கு[ம்] மலையமான் காட்டிமேலூருடையான் பழங்கூரன் கு
    7. ன்றன் மேற்படியூரிருக்கும் வீரர்பு[த்]திரன் தாய் சே[ந்]தன் உமையாளை இறைகாட்ட அவள் இறை கடவேனல்லேனென்று சொல்ல அவளை
    8. கொச்செய்விக்க. அவள் நஞ்சு குடித்து சாவ. நான்கு திசை பதினெண் பூமி நாநாதேசியும் கூட நிரைந்து. இந்த பழங்கூரன் குன்றன் மேல் ப
    9. ழியாக்கி [இ]வன் மேலிந்த பழிதீர கொண்ட நடையாவது வாளையூராகிய ராஜேந்த்ரபுரத்து திருத்தான் தோன்றி மாதேவர்க்கு திருநுந்தா விளக்
    10. கொன்று வை[க்க]க் கடவனாக்கி. இவன் வைத்த காசு முப்பத்திரண்டு. இக்காசு முப்பத்திரண்டு வாளையூரா[கிய] ராஜேந்த்ரபுரத்து நகரத்தோம் கொண்டோ
    11. ம் கொண்டு அருமொழிதேவ[ன்] மரக்காலோடு ஒக்கும் உழக்கால் நிசதம் உழக்கெண்ணை அட்டகடவோம் இவ்வெண்ணை வணிக்கிராமத்தோம்
    12. இருகூறும், சங்கரப்பாடியோம் ஒருகூறும். சந்திராதித்தவல். இது பன்மாஹேஸ்வரர் ரக்ஷை.

    இறை – வரி அல்லது கடன்; இறைகாட்ட – கட்ட வேண்டிய பணம் இவ்வளவு என்று சொல்ல; கொச்செய்விக்க – இழிமை செய்ய, சிறுமைபடுத்த, மானபங்கம் செய்; பழியாக்கி – குற்றம் சுமத்தி; பழிதீர – குற்றதண்டனையாக; நடை – நடவடிக்கை; ஒக்கும் – ஈடான, பொருத்தமான; இருகூறு – 2/3; ஒருகூறு- 1/3

    விளக்கம்: இராண்டாம் இராசேந்திரனின் மெய்கீர்த்தியோடு தொடங்கும் கல்வெட்டு அவனது 3 ஆம் ஆட்சிஆண்டில் (பொ.ஊ. 1056-1057) வாணகோப்பாடியான ராசேந்திர வளநாட்டு பெண்ணைத் தென்கரையில் நரிப்பள்ளி நாட்டு கூகூர்ப்பாடியில் இருக்கும் மலையமான் காட்டி மேலூருடையான் பழங்கூரன் குன்றன் அதே ஊரைச் சேர்ந்த வீரபுத்திரன் என்பான் தாய் சேந்தன் உமையாளை இறை (வரி/கடன்) கட்ட சொல்கிறான். அவள் இறை கட்ட முடியாது என்று மறுக்கிறாள். அப்போது பழங்கூரன் குன்றன் அவளை சிறுமைப்படுத்தி அல்லது மானபங்கப்படுத்தி விடுகின்றான். இது அன்னாளிலே பெண் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமை ஆகும். இதனால் மனமுடைந்த அவள் நஞ்சு அருந்தி மாண்டு போகின்றாள்.  இதனால் வெகுண்டு திரண்ட நாற்றிசை பதினெண்பூமி நாநாதேசி வணிகர் கூடி நிரைந்து இந்த பழங்கூரன் குன்றனை குற்றவாளி ஆக்கி இதற்கு தண்டனை நடவடிக்கையாக திருத்தான்தோன்றி இறைவர்க்கு திருநுந்த விளக்கு ஒன்று வைக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். அதற்கென்று இவன் கொடுத்த காசு 32 ஆகும். இந்த 32 காசை வாளையூர் ராசேந்திரபுரத்து நகர்த்தவர் பெற்றுக்கொண்டனர். இதை வைத்து அருமொழித் தேவன் மரக்காலுக்கு ஈடும் இணையுமான உழக்கினால் நிலவும் ஞாயிறும் நிலைக்கும் வரை நுந்தா விளக்கிற்கு உழக்கெண்ணை ஊற்றுவதாக உறுதி கூறுகின்றனர். இந்த வெண்ணையை வணிகக் கிராமத்தார் இரண்டு கூறும் (2/3,) சங்கரபாடி வணிகர்ஒரு கூறும் (1/3) தர ஏற்பாடு செய்தனர்.

    ஒரு சாதியார் அல்லது ஒரு தொழில் செய்வோர் கூட்டமாக அழுத்தம் கொடுத்தால் தான் அநியாயத்திற்கு நீதியும் நியாயமும் அந்நாளில் கிடைத்தது போலும் என்பதை மேற்கண்ட இக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 22 பகுதி I, பக். 75-76.

    ?????????????

    வட ஆர்க்காடு மாவட்டம், வந்தவாசி வட்டம், வழுவூர் பிரம்மபூரீசுவரர் கோவில் திருச்சுற்றில் தென் சுவரில் வெட்டப்பட்ட 5 வரிக் கல்வெட்டு,

    1. சறுவாதிகாரி வருஷம் மாசிமாதம் 30 நாள் வழுகூர் ஊரவ[ர்] எம்மில் பொரிந்தியிசை ஓலை[யிட்]டு[க்] கொண்டபடி . மீநவராயர் அவப்படாக்காரி கடைப்பற்ற பொருமாள் கோயிலிலே பூந்து அடைத்துக் கொள்ளுகையில்.
    2. நாளது சாக கடைவனாகவும் நாளது சாகையில் ஊரிலே இருபது பணம் குடுக்க கடவோம் ஆகவும் மேலைக்கும் யாதொருவர் பறை எடுத்ததுண்டாநால் [இரு]பது பணம் குடுக்க கடைவோம் ஆகவும்
    3. பறை எடுத்த அன்று சாகக் கடைவனாகவும் யாதொருத்தர் ஒருநாள் யிரண்டு நாள் தாமதம் சொன்னதுன்டானா[ல்] அவன் சாதிக்கும் பிறம்பாய் நங்கை நாசிவனும் விலக்கி நன்மை தின்மை துறந்து சாதிக்குப் பி
    4. றம்பாகக் கடைவனாகவும் யிடங்குடுத்தவனே இந்தச் சேதம் உள்ளது குடுத்து யிராசகரத்துக்கும் அபராதமும் குடுத்து ஆவிக்க[ட]னையும் படக்கடைவனாகவும். இப்படி சம்மதித்து யிசை ஓலையிட்டுக் கொண்டோம் இவ்
    5. வனைவரோ(ம்). மிப்படிக்கு இவை ஊற்கு சமைந்த அபிமான பூஷண வேளார் எழுத்து. இப்படிக்கு இவர்கள் சொல்ல எழுதினமைக்கு  ஊற்க்கு தண்டகநாட்டு ப்ரமராயர் திருமலையார் மகன் அழகிய வரதன் எழுத்து.

    இசை ஓலை – உடன்பாட்டு ஒப்பந்தம், consent agreement; கடைப்பற்ற – பின்தொடர, துரத்த, follow; நாளது –இற்றை நாள்; மேலைக்கும் – இதற்கு மேலும், furthermore; பறை – அறிவிப்பு, சேதி, information; பிறம்பாய் – புறம்பாக, எதிராக, against; சேதம் – சீர்கேடு; இராசகரம் – அரசாங்க வரி; ஆவிக் கடன்- பிறவிக்கடன்; சமைந்த – உடன்பட்ட.

    விளக்கம்: தமிழ் அறுபது ஆண்டு குறிப்பு கல்வெட்டில் இடம்பெறுவது கம்பண்ணர் படையெடுப்பிற்கு பிறகு வழக்கில் வந்தது. அதற்கு முன் இது அருகிய வழக்காகவே இருந்துள்ளது. இக்கல்வெட்டில் வேந்தன் பற்றிய குறிப்பு இல்லாகினும் சோழர் கால பிரம்மராயர் பதவி இதில் இடம்பெறுகின்றது. இந்தப் பதவி நாயக்கர் ஆட்சியில் இல்லை என்றாலும் விசயநகர ஆட்சியின் முற்பகுதி வரை அருகிய பதவியாக இருந்துள்ளது என்பதால் 15 – 16 ஆம் நூற்றாண்டில் இந்த சர்வாதிகாரி ஆண்டை வைக்க வேண்டி உள்ளது. சர்வாதிகாரி ஆண்டு 1408, 1468, 1528 ஆகிய ஆண்டுகளில் நிகழ்கின்றது. இவற்றில் ஏதோ ஒரு ஆண்டில் இக் கல்வெட்டை சுட்டலாம்.

    மீனவராயர்க்கு அவபடக்காரியை துரத்திப் பின்தொடர அவன் பெருமாள் கோயிலிலே புகுந்து கதவை உட்புறமாக அடைத்துத் தப்பி மறைந்துவிடுகிறான். அவன் இன்றே சாகவேண்டும், அப்படி செத்தால் ஊரிலே 20 பணம் கொடுப்போம் என்று ஊரார் முடிவெடுக்கின்றனர். மேலும் யாராவது அவன் இருப்பிடத்தை அறிவிப்பார்களானால் அவருக்கு 20 பணம் கொடுப்போம். இருப்பிடத்தை அறிவித்த அன்றே அவபடக்காரி சாகவேண்டும். அவன் இருப்பிடம் அறிந்த எவரொருவரும் அதைக் கூற ஓரிரு நாள் காலந்தாழ்தினாலும் அவன் தன்  சாதிக்கு புறம்பானவன் ஆகிடுவான். அவனை நங்கையும் நாசிவனும் விலக்கிட வேண்டும் என்றும் அவன் நன்மை தீமைகளுக்கு கலந்துகொள்ளாமல் அவன் சாதிக்கு புறம்பானவன் ஆகிட வேண்டும் என்றும் அவன் இருப்பிடத்தை அறிவிக்காமல் தப்பவிட்டவன் இந்த சீர்கேட்டிற்கான இழப்பீட்டை ஏற்று அரசவரி செலுத்த வேண்டும் அதற்கான தண்டத் தொகையையும் கட்ட வேண்டும். அவன் ஆவிக்கடனையும் அடைக்க வேண்டும் என்று உத்தாரவாளனுக்கு இதாவது, ஆதரவாளனுக்கு எச்சரிக்கை விடுத்தனர் ஊரவர். இந்த தண்டனைக்கு ஒப்புக் கொண்டு ஊரவர் அனைவரும் உடன்பாட்டு ஒப்பந்தம் செய்துகொண்டனர். இதற்கு ஊரின் கருத்துப்படி உடன்பட்டு அபிமாண பூசண வேளான் கையெழுத்திட்டான். இப்படி ஊரார் சொல்ல தண்டக நாட்டு பிரமராயன் மகன் அழகிய வரதன் எழுதி கையொப்பமிட்டான்.

    அவபடக்காரி மக்கள் செலுத்திய வரிப் பணத்தை தன்னகப்படுத்தியதாலோ அல்லது பெண்களிடம் கொச்சையாக நடந்த்தாலோ என்னவோ? இப்படி காரணம் குறிக்காத குற்றத்திற்காக மக்கள் வெகுண்டெழுந்து அவனுக்கு சாவுத் தண்டனை வழங்குகின்றனர். ஆம் சட்டத்தை தாமே கையில் எடுத்துக் கொண்டனர். மீனவராயர் உயர்அதிகாரம் உள்ள அரசர் அவருக்கு இவ்வாறு ஊரவர் தண்டனை கொடுத்ததாக தென்னிந்தியக் கல்வெட்டு 25 இல் விளக்கம் தந்திருப்பது ஏற்புடையதல்ல.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 25, பக். 82-83.

     https://tamilnadu-favtourism.blogspot.com/2016/01/jambunatheshwarar-temple-jambai.html

    Share
  • சேக்கிழார் பா நயம் – 46

    சேக்கிழார் பா நயம் – 46

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி
    ————————————————–

    திருக்கயிலையில் இறைவன் காட்டிய அருட்கருணையால் கமலினிக்குத் திருவாரூரில் பதியிலார் குலத்தில் தோன்றி வளரும் நல்வாய்ப்புக் கிட்டியது. திருக்கயிலையில் தவறான நோக்கமின்றிச் செய்த ‘சிறுகுறையும் நல்லதையே செய்யும்’ என்பதைக் கமலினியார், நாடே போற்றி மதிக்கும் பரவையாராக வளர்ந்த பாங்கு புலப்படுத்தும்.

    சுந்தரரின் மனங்கவர்ந்த மங்கையாக, இறைவனையே தூதராகக் காணும் பேறு பெற்றவராக, திருவாரூரினுள் யாவரும் மதிக்கத்தக்க பெண்ணடியாராக விளங்கும் வாய்ப்பைப் பெற்ற அவர் வணங்கத் தக்கவரே யாவார். இனி அடுத்த பாடலில் பரவையார் பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து இறைவன் சேவடியையே கருதி வளர்ந்த சிறப்பைக் கூறுகிறது.

    தளர் நடைப் பருவம் கடந்து பரவையார் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பெற்று வளர்கிறார். அவருடைய அகன்ற சிறு கண்கள் இளம் பெண்மான் குட்டியின் விழிகளைப் போல ஒளிவீசி விளங்குகின்றன. அவருடைய மார்பு சற்றே வளர்ந்து தாமரை மொட்டுப்போலத் திகழ்கின்றன. அவருடைய மொழி தேனுண்ணும் வண்டுகளைப் போல் ஒலிக்கிறது. அவருடைய மெல்லிய இடை , பவளக் கொடிபோல் விளங்குகிறது. அவரது நெற்றி இளம்பிறையின் கொழுந்து போல ஒளி வீசுகிறது. அவருடைய வளைந்த புருவங்கள் காமவேள், மலரம்புகளைஎய்து, மக்களைக் காமத்தில் வீழ்த்துவதற்கான பயிற்சியைக் கற்றுக்கொள்ளும் சிறிய வில்லோ? என்றெல்லாம் பறவையாரைக் காணும் சுற்றத்தாரும், பெரியோரும் போற்றுகின்றனர்.

    இந்தப் பாடலில் மானிளம் பிணை, இளமுகை, இளந்தேன்பதம், இளம் பவளக்கொடி, நிலவின் இளங்கொழுந்து, காமனின் இளையவில் என்ற உவமைகள்,அவரது இளமையையும் , கண், மார்பு,மொழி, இடை,நெற்றி, புருவம் ஆகியவற்றையும் உருவகித்துக் காட்டுகின்றன. அவருடைய அங்கங்களைக் குறிப்பிடாமல் , உவமைகளின் மூலம் அவற்றின் அழகையும் இளமையையும் குறிப்பிடுவது பாடலின் நயத்தைப் புலப் படுத்துகிறது. இனிப் பாடலைப் படித்தறிவோம்.

    “மானிளம் பிணையோ? தெய்வ வளரிள முகையோ? வாசத்
    தேனிளம் பதமோ? வேலைத் திரை இளம் பவள வல்லிக்
    கானிளம் கொடியோ? திங்கள் கதிரிளங் கொழுந்தோ? காமன்
    தானிளம் பருவம் கற்கும் தனி இளந் தனுவோ என்ன.”

    இப்பாடலில் இளம் என்ற சொல், இளமையான என்ற பொருளுடன் எட்டுமுறை அமைந்திருக்கும் அழகினைச் சொற்பொருட் பின்வரு நிலை அணி என்று கூறுவர்! ஆறு அங்கங்களின் இளமையை , இளம் என்ற சொல்லை எட்டுமுறை அமைத்து வருணிப்பது நுட்பமாக உணரத் தக்கது. இந்த ஆறு உறுப்புக்களும் மக்கள் எண்ணுவதை விட மிகவும் இளமையுடன் காட்சியளித்தன, என்று சேக்கிழார் பெருந்தகை நயம்படக் கூறுகிறார்.

    இளம்பெண்ணான பரவை நாச்சியாரின் வளர்ச்சியை அவர்தம் பண்பு நலன்கள் இனிப் புலப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை இப்பாடல் உருவாக்குகின்றது.

    “முதுக்குறைந் தனளே , முதுக்குறைந்தனளே ,
    மலையன் ஓள்வேற் கண்ணி
    முலையும் வாரா முதுக்குறைந்தனளே! ‘’

    என்ற பழம்பாடலை இது நினைவூட்டுகின்றது.

    .

    Share
  • தமிழ்க்காதல் கொண்ட மூதறிஞர்!

    தமிழ்க்காதல் கொண்ட மூதறிஞர்!

    -மேகலா இராமமூர்த்தி

    புதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரியில்,  சுப்பிரமணியன் செட்டியாருக்கும் தெய்வானை ஆச்சிக்கும் மகனாக 1917ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் நாளன்று பிறந்தவர் தமிழ் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார். அவருடைய பிள்ளைத் திருநாமம் அண்ணாமலை என்பதாகும். மாணிக்கம் என்றும் அவர் அழைக்கப்பட்டதால் அந்தப் பெயரே பிற்காலத்தில் அவருக்கு நிலைத்துவிட்டது.

    குழந்தைப் பருவத்திலேயே தாயையும் தந்தையையும் அடுத்தடுத்து இழந்த மாணிக்கத்தை அவருடைய தாய்வழிப் பாட்டனாரும் பாட்டியாரும் வளர்த்தனர். தொடக்கக் கல்வியைப் புதுக்கோட்டையில் உள்ள பள்ளியொன்றில் பயின்ற அவர் தம் பதினோராம் வயதில் வட்டித் தொழில் பழகுவதற்காகப் பர்மாவுக்குச் சென்றார்.

    அங்கே இரங்கூன் நகரத்திலுள்ள கடையொன்றில் உதவிசெய்யும் சிறுவனாக வேலைக்குச் சேர்ந்தார். அவர் வேலைசெய்த வட்டிக்கடை முதலாளி ஒரு சமயம் அவரிடம் ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு அந்த நபர் கடைக்கு வந்து தன்னை எங்கே என்று கேட்டால், ”முதலாளி இல்லை” என்று சொல்லிவிடுமாறு வற்புறுத்தினார். ஆனால் பொய்சொல்வதை அவ் இளம் வயதிலேயே பெருங்குற்றமாகக் கருதிய சிறுவன் மாணிக்கம், ”முதலாளி நீங்கள் வெளியில் சென்றிருந்தால் இல்லை என்று கூறலாம்; ஆனால் நீங்கள் இங்கேயே இருக்கும்போது எவ்வாறு இல்லை என்று கூறுவது? அப்படியெல்லாம் நான் பொய்சொல்ல மாட்டேன்!” என்று பிடிவாதமாக மறுத்துக் கூறியதால் அந்த நாளிலேயே வட்டிக்கடை வேலையிலிருந்து நீக்கப்பட்டார். இதனாலேயே அவருக்குப் பொய்சொல்லா மாணிக்கம் என்று பெயர் வழங்கியதாகத் தெரியவருகின்றது.

    வட்டிக்கடையில் வேலை செய்ய முடியாத சூழலில் பர்மாவிலிருந்து நாடு திரும்பிய வ.சுப. மாணிக்கனாருக்குத் தமிழ் நூல்களை ஊன்றிக் கற்ற
    பண்டிதமணி கதிரேசஞ் செட்டியாருடன் தொடர்பு ஏற்பட்டது. அவருடைய உதவியால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் வகுப்பில் பயின்று, முதன்மையாகத் தேர்ச்சியுற்றார்.

    சில திங்கள் அப்பல்கலைக்கழகத்திலேயே ஆய்வு மாணாக்கராய் இருந்து பின் ஏழாண்டுகள் அங்கேயே விரிவுரையாளராகப் பணியாற்றினார். அப்போதே தனியாகப் படித்து பி.ஓ.எல், எம். ஏ பட்டமும், ’தமிழில் அகத்திணைக் கொள்கைகள்’ பற்றி ஆய்ந்து முனைவர்ப் பட்டமும் பெற்றார். பின்னர் 1948 தொடங்கி இருபது ஆண்டுகள் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும் முதல்வராகவும் பணிபுரிந்தார். மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்று தமிழ்த்துறைத் தலைவராகவும் இந்திய மொழிப்புல முதன்மையராகவும் தொண்டாற்றினார். பின் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியேற்று தமிழியல் வளர்ச்சிக்கும் பிற அறிவியல் துறைகளின் வளர்ச்சிக்கும் வழிவகுத்துத் துணைநின்றார். திருவனந்தபுரத்தின் மொழியியற்கழக ஆய்வு முதியராக வேலைபார்த்தபோது தமிழ் யாப்பு வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதினார். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியத் தகைஞராகப் பணிசெய்ததன் பயனாகத் தொல்காப்பியத்துக்கு இவர்தம் புத்துரை விளக்கம் கிடைத்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பொன்விழாவில் இவருக்கு டி.லிட். பட்டம் நல்கிச் சிறப்புச் செய்தது.

    குன்றக்குடி ஆதீனம் ’முதுபெரும் புலவர்’ எனும் சிறப்புப் பட்டத்தையும், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை ‘செம்மல்’ எனும் சிறப்புப் பட்டத்தையும் நல்கின. அரசு இவர் மறைவுக்குப்பின் ’திருவள்ளுவர்’ விருது வழங்கிச் சிறப்பித்தது.

    தமிழ்ப்பல்கலைக்கழகத் தொடக்க நிலையில் செயன்முறைகளை வகுக்க அமைக்கப்பெற்ற வல்லுநர்குழுவின் தலைவராக இருந்து அதன் வளர்ச்சிக்கு வழிவகுத்தார் மாணிக்கனார். தமிழகப் புலவர் குழுவிற்கும், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்திற்கும், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை கணேசர் செந்தமிழ்க் கல்லூரிக் குழுவுக்கும் தலைவராகத் திகழ்ந்து இவர் ஆற்றிய பணிகள் மிகப்பல. ’காரைக்குடி தமிழ்ச்சங்கம்’ நிறுவிச் சங்க இலக்கிய வகுப்பு நடத்தியும் இளஞ்சிறார்க்கு ‘அறநூல்கள் ஒப்புவித்தல் போட்டி’ வைத்துப் பரிசுகள் வழங்கியும் ஒல்லும் வாயெல்லாம் தமிழ்த்தொண்டு செய்தார். தில்லையில் அம்பலத்தின்கண் நின்று திருமுறைகள் ஓதி வழிபடப் பேராசிரியர் வெள்ளைவாரணனார் போன்றோரின் துணையோடு போராடி வாகை சூடினார்.

    வள்ளல் அழகப்பரின் கொடைவளம் ஏத்திக் ‘கொடை விளக்கு’ எனும் கவிதைநூல் படைத்தார். இவர்தம் தனிப்பாடல்களின் தொகுப்பு ‘மாமலர்கள்’ எனும் பெயரின் வெளிவந்துள்ளது. இவர்தம் படைப்புக்களுள் வள்ளுவமும், தமிழ்க்காதலும் இருகண்களெனப் போற்றத்தக்கவை. இவ்விரு நூல்களும் தமிழர் அனைவரும் படித்துப் பயன்கொள்ளவேண்டிய அற்புதமான ஆராய்ச்சி நூல்களாகும்.

    காதலரின் பாலுணர்ச்சிகளை, அவர்தம் உளவியலைக் காட்சிப்படுத்துவதில் புலவர்களின் மாட்சி எத்தகையது என்பதை நுட்பமாய் ஆராய்ந்திருக்கும் நூல் தமிழ்க்காதல்.

    அகப்பொருள் பேசும் எழுதிணைகளின் இயல்பைச் சுருங்கச்சொல்லி விளங்கவைக்க விரும்பிய மாணிக்கனார், கைக்கிளையை ’முதிராக் குறுங்கரு’ என்றும், பெருந்திணையை ’முற்றிவீழ் கரு’ என்றும் நடுவணதாய் அமைந்திருக்கும் அன்பின் ஐந்திணையே ’இயல்பான வளர்கரு’ என்றும் விளம்பியிருப்பது அவரின் நுண்மாண்நுழைபுலத்துக்குத் தக்க சான்றாகும்.

    அன்றைய பாடல்கள் குறித்து இன்றைய இளையோர் எழுப்பும் வினாக்கள் சிலவுண்டு. சங்கப்பாடல்கள் அடியெல்லை, கடுமையான இலக்கண வரம்புகள் முதலியவற்றை உள்ளடக்கியிருப்பது புலவரின் கற்பனைச் சிறகை ஒடிக்காதா? கவிதை ஆர்வத்தைச் சிதைக்காதா? என்பவை அவை.

    புலவர்கள் இந்த இலக்கண விதிகளையே பாடல் மரபெனக் கொண்டு அறிவறிந்து அடங்கிப் பாடல்படைத்த காரணத்தால்தான் ஞாலமதிப்பைப் பெற்று, அன்றைய புலவர்கள், இன்றளவும் புகழொளி வீசுகிறார்கள் என்று விடைபகரும் மாணிக்கனார்,

    புகழ்பெற்ற மேனாட்டுச் சிந்தனையாளரான Bertrand Russell தம்முடைய ’Marriage and morals’ எனும் நூலில் குறிப்பிட்டிருக்கும்,” Love poetry depends upon a certain delicate balance between convention and freedom, and is not likely to exist in its best form where this balance is upset in either direction.”

    ”காதற்பாட்டு, மரபுக்கும் உரிமைக்கும் இடையே மெல்லியதொரு சமநிலையை வேண்டிநிற்கும். அது சற்றே கோடினாலும் பாட்டு அதன் அழகுருவை இழந்துவிடும்” எனும் கருத்தைப் பொருத்தமாய் மேற்கோள் காட்டுவது அவரின் பரந்துபட்ட வாசிப்பையும் நமக்கு அறியத்தருகின்றது.

    திருக்குறளில் தோய்ந்து, வள்ளுவர் நெஞ்சை ஆய்ந்து, வள்ளுவம் எனும் ஆராய்ச்சி நூலை படைத்திருக்கும் மாணிக்கனார், அதில் தம் உளக் கருத்துக்களைப் பன்னிரண்டு கற்பனைச் சொற்பொழிவுகளாக வெளிப்படுத்தியிருக்கின்றார்.

    ”தமிழர்களே! நாம் புகழ்சான்ற திருக்குறளைப் போற்றுகிறோம். பன்மாணும் பறைசாற்றுகிறோம். அவ்வளவோடு அமைதல் ஆகாது; ‘புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும்’ (538) என்பது ஒரு தனி வள்ளுவம். ‘செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்’ என்பது குறள்காட்டும் அச்சமுடிபு. ஆதலின் யார்க்கும் செயல் வேண்டும் என்பதுதான் வள்ளுவர் நெஞ்சம். இச்செயல் நெஞ்சமே என் திருக்குறட் பொழிவுகளின் உயிர்நிலை. விளக்கமெல்லாம் இதன் சூழ்நிலை. ‘குறள் கற்பேன்; நிற்பேன்; நிற்கக் கற்பேன்; குறள்வாழ்வு வாழ்வேன்; வள்ளுவர் ஆணை’ என்று எண்ணுமின்!” என அந்நூலில் வள்ளுவர் நெஞ்சத்தை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டிக் குறள் கற்கவும் அதன்வழி நிற்கவும் நம்மை வலியுறுத்துகின்றார்.

    இந்நூல்களேயன்றித் தொல்காப்பியக் கடல், திருக்குறட்சுடர், சங்கநெறி, காப்பியப் பார்வை, இலக்கியச் சாறு, தமிழ்க்கதிர், தலைவர்களுக்கு முதலியவை இவர்தம் பிற படைப்புக்கள். திருக்குறளை யாவரும் எளிதில் புரிந்துகொள்ள ’உரைநடையில் திருக்குறள்’ எனும் நூலை இயற்றியுள்ளார்.

    மணிவாசகர் நூலக வெளியீடான ‘கம்பர்’ என்னும் இவரது நூல் தமிழக அரசின் பரிசுபெற்றது. தமிழ் யாப்பு வரலாறு, தமிழில் வினைச்சொற்கள், தமிழில் அகத்திணைக் கொள்கைகள் என்னும் நூல்கள் இவரால் ஆங்கிலத்தில் எழுதப்பெற்றவையாகும். மன்பதையின் முன்னேற்றங்கருதி இவர் படைத்த நாடகங்கள் மனைவின் உரிமை, உப்பங்கழி, ஒருநொடியில் என்பனவாகும்.

    இவற்றில் ’தலைவர்களுக்கு’ என்ற நூலை நாம் அரசியல் சார்ந்த நூலாகக் கருதலாம். 1965ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் இந்நூல் வெளிவந்ததாகத் தெரிகிறது. 1965, தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆண்டாகும். காரணம் அரசாங்கத்தின் இந்தித் திணிப்பை எதிர்த்துத் தமிழகமே போர்க்கோலம் பூண்டிருந்த ஆண்டு அது. ஆதலால் அச்சமயத்தில் தாம் எழுதி வெளியிட்ட அந்நூலில் மொழிச்சிக்கல் குறித்தும் அதற்கு ஏழு விதமான தீர்வுகள் குறித்தும் தம் கோணத்தில் மாணிக்கனார் விரிவாகப் பேசியிருக்கின்றார்.

    இவ்வாறு தமிழிலும் ஆங்கிலத்திலும் பனுவல் பல படைத்த அம் மூதறிஞர், தமிழ்ச் சொல்லாக்கத்துறைக்கும் குறிப்பிடத்தக்க  பங்களிப்புச் செய்திருக்கின்றார்.

    “சொற்பொழிந்தேன், வானொலிக்கின்றேன், பழமொழிகின்றோம், அட்டவணைப்பர், நன்றியன், விருப்பன், ஈடுபாடன், இலக்கியர், இலக்கணர், தமிழ்வளர்ப்பிகள், இலக்கியப் படிப்பிகள், மாறுவேடி, நம்பிக்கைக் கேடி, தமிழ்மை, தமிழ் மன்னாயம், மக்கட் குழுவாயம், அணிய நாடுகள், சால்பியம், புரட்சியம், மக்களியம், ஒப்பியம், படைப்பியம்” என்பன அவற்றுள் சில.

    சிலப்பதிகாரம் எனும் காப்பியத்துக்கு அப்பெயர் சிலம்பு காரணமாக வந்தது என்பதை நாமறிவோம். எனினும் அச்சிலம்பு எது? யாருடையது? என்று கேட்டால் நம்மில் பெரும்பாலோர் கண்ணகியின் காற்சிலம்பே காப்பியத்தின் பெயருக்குக் காரணம் என்று கூறுவோம். ஆனால் வ.சுப. மாணிக்கனாரோ தம்முடைய ’காப்பியப் பார்வை’ எனும் நூலில் இடம்பெற்றுள்ள ‘எந்தச் சிலம்பு?’ எனும் ஆராய்ச்சிக்கட்டுரையில் கோப்பெருந்தேவியின் தொலைந்துபோன சிலம்பே சிலப்பதிகாரப் பெயருக்குக் காரணம் என்பதைத் தக்க சான்றுகளோடு நிறுவியுள்ளார். சிலப்பதிகாரப் பெயர் பற்றிய என் ஆராய்ச்சி, முன்னையோர் ஒருமுகமாகக் கூறிவரும் கருத்துக்கு முற்றுமுரணாக இருந்தாலும், உண்மை காண முயலுதலும், கண்ட உண்மையை வலியுறுத்துதலும் தமிழ் மாணவரின் கடன் எனும் உணர்ச்சியின் அடிப்படையிலேயே இக்கருத்தை வெளியிடுகின்றேன் எனக் கட்டுரையின் முடிவில் அவர் முத்தாய்ப்பாய்க் கூறியுள்ள கருத்து ஆய்வாளர் அனைவரும் மனங்கொளவேண்டிய ஒன்றாகும்.

    தமிழ்மொழிபால் தணியாக் காதல்கொண்ட அப்பெருமகனார், மழலையர் ஆங்கிலப்பள்ளிகளைத் தமிழ்ப்பள்ளிகளாக மாற்றவேண்டும்; தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பயிற்றுமொழி தமிழாதல் வேண்டும் எனும் கொள்கையினைப் பரப்பத் தமிழ்வழிக் கல்வி இயக்கங்கண்டு அதனைத் தமிழகம் எங்கணும் நடாத்திவந்தார். எழுத்துச் சீர்திருத்தம் எனும் பெயரில் எழுத்துமாற்றம் செய்து தமிழுக்கு ஊறுசெய்தலாகாது என்பதனைத் தம் கட்டுரைவழி அறிஞருலகுக்கு அறிவுறுத்தினார்.

    வ.சுப. மாணிக்கனாரின் குணநலன்களைச் சுருங்க உரைப்பதென்றால்…

    எளிய தோற்றமும், உயரிய நோக்கமுங்கொண்ட பழுத்த தமிழறிஞர் அவர்! சிறந்த சிந்தனையாளர்; தனித்தமிழ் இயக்கத்திற்குத் தாமே புதிய சொற்களைப் படைத்து எல்லாநிலைகளிலும் எங்கும் தமிழ்வளர ஓய்வென்பதறியாது உழைத்த உரஞ்சான்ற வித்தகர். அனைத்துக்கும் மேலாய்ப் பண்புவழி உலகினை நடத்தத் தம் மதிநுட்பத்தையும் நூற்புலமையையும் அசைவிலா ஊக்கத்தோடு பயன்படுத்திவந்த சான்றோர். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், பல நிலையினும் சிறந்தோங்கித் தமிழ்ப்பணிக்காகவே வாழ்ந்து பண்பின் திருவுருவாகத் திகழ்ந்த மூதறிஞர்.

    தமிழ்ப்புலமையும், சான்றாண்மையும், சிறந்த பண்புநலன்களும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற அருந்தமிழறிஞரான வ.சுப.மாணிக்கனார், 1989ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் நாள் இரவு மாரடைப்பால் புதுச்சேரியில் காலமானார்.

    அப் பேரறிஞரின் பொன்னுடல் இப்புவியைவிட்டு மறைந்தாலும், தன்னேரிலாத தமிழுக்கு அவராற்றியிருக்கின்ற அளப்பரிய பணிகளால் தமிழ்ச் சான்றோர் நெஞ்சில் என்றும் மாணிக்கமாய்ச் சுடர்விட்டு ஒளிர்வார்.

    கட்டுரைக்கு உதவியவை:

    1. https://ta.wikipedia.org/wiki /வ._சுப._மாணிக்கம்
    2. வள்ளுவம் – வ.சுப. மாணிக்கனார் – மணிவாசகர் பதிப்பகம்
    3. தமிழ்க்காதல் – வ.சுப. மாணிக்கனார் – மெய்யப்பன் பதிப்பகம்

    Share
  • அடித்தட்டு மக்களுக்கு முடியாட்சியில் நில மானியம்

    அடித்தட்டு மக்களுக்கு முடியாட்சியில் நில மானியம்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    ஆறகளூர் திருக்காமீசுவரர் கோவில்

    சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், ஆறகளூர் திருக்காமீசுவரர் கோவில் கருவறை வடக்கு சுவர் கொண்ட 11 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ சகாத்தம் 1430 இதந் மேல் செல்லா நிந்ற விபவ சங்வற்சரத்து கும்ப நாயற்று பூர்வ்வபக்ஷத்து தெசமியும்
    2. ஆதித்தவாரமும் ஆயிலியத்து நாள் மகதைம[ண்ட]லம் ஆறகழ்ஊர் நாயினா[ர் திருக்காமீ]சுரமுடைய னாயனார் பாண்டியர் னாள் முதல் இந்தாள் வரைக்கும்
    3. திருநாளும் நடவாதிருக்கையில் சுவாமி நளோகண்டந்  வங்கி நாராயணந் மறைபுக்கார் காவலந் வல்லாள இராய பயங்கரந் சாடிக்காறர் கண்ட
    4. ந் ஸ்ரீமது எறமாஞ்சி துலுக்கண நாயக்கர் நாயனார் திருக்காமீசுரமுடைய நாயனாற்க்கு தேரும் சமைத்து திருநாளும் மாசித் திருநாளாக ஆயிலியத்திலே தேரும்
    5. மகத்திலே திருமசஞ்சநமும் ஆக கட்டளை பண்ணி திருநாள் நடக்கயில் தாமக _ _ _ நல்லூரில் கைக்கோளந் பெருமாள் மகன் பறையந் பறை எடுத்து, முதலியார் சன்னகமல
    6. னாயனார் ஆதிசண்டேசுர நாயநாரும் தாருமும் மாகேசுரரும் ஆக ஆறை னாயக மண்டபத்தில் நிறைவற நிறைந்து குறைவற கூடி இருந்து ஆதிசண்டேசுர னாயனார்
    7. திருவாய் மலர்ந்தருளிநபடி இந்த பறையனுக்கு உதித்_ _ _ டி ஆக ஆறகழ்ஊர் நன்செய் நிலத்தில் காளி அம்மை உடைப்புக்கு மேற்கு தியாகண நல்லூர் வய
    8. லுக்கு கிழக்கு நன்செய் உரூபாய் 250 ஓரணை ஏர் நடத்த பட்டு புன்செய் மாநிபமும் ஒருமனையும் ஒரு_ _ _ _ _க்கும் மானியமும் திருமஞ்சன வழிக்குதெற்கு இரண்_ _
    9. _ _ _ _ டு ஒரு தோட்டமும் கோயிலிலே நிற்றம் இருநாழி அருசியில் சோறும். மனையாவது சந்நதி தெருவில் வடசிறகில் ஒரு மனையும் குடுத்தருளி
    10.  _ _ _ _  ஆதிசண்டேசுரனாயனார் திருவாய் மலர்ந்தருளிநபடியாலே இந்த சுவந்திரம் உண்டாநது. இவன் தகப்பன் பெருமாளும் இவந் வற்கத்தாரும்  சந்திறாதித் _ _
    11. _ _ _ _ _ அனுபவித்து கொள்ளகடவர்களாகவும்இவை திருஞாந சம்பந்த பண்டிதர் எழுத்து. இவை பலமுதல் கங்காணி நயினார் எழுத்து.

    கட்டளை – அளவுகோள்; கைக்கோளன் – போர்வீரன்; முதலியார் –  தலைவர்;  உதிரப்பட்டி – இறந்தோர் நினைவாக தரப்படும் நிலதானம்; உடைப்பு – கரைஉடைந்தோடும் கால்வாய்; ஓரணை – ஓரேர் மாட்டிணை; வடசிறகு – வடக்கு பக்கம்; சுதந்திரம் – உரிமை

    விளக்கம்: சக ஆண்டு 1430 (பொ.ஊ.1508) விபவ ஆண்டு கும்ப ராசி ஞாயிறு, வளர்பிறை பத்தாம் நாள் ஞாயிற்றுக் கிழமை ஆயில்ய நட்சத்திரம் கூடிய நாளில் மகதைமண்டத்தில் அமைந்த ஆறகளூரில் வீற்றிருக்கும் திருக்காமீசுவரர் கோவிலில் பாண்டியர் ஆட்சிக் காலம் தொட்டே இக்கல்வெட்டு பொளிந்த நாள்வரையில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக  எந்த திருவிழாவும் நடக்காதிருந்தது. தலைவர் நாளோகண்டன் வங்கி நாராயணன் மறைபுக்கார் காவலன் வல்லாள இராய பயங்கரன் சாடிக்காரர் கண்டன் ஸ்ரீமத் எறமாஞ்சி துலுக்கண நாயக்கர் திருக்காமீசுரருக்கு தேர் ஒன்று செய்வித்துக் கொடுத்ததோடு மாசியிலே திருவிழாவும் மாசி ஆயில்ய நட்சத்திரத்தில் தேர் ஓடவும் மக நட்சத்திரத்தில் திருமஞ்சனம் நடக்குவும் காலஅளவாக வைத்தார். (சக ஆண்டும் விபவ ஆண்டும் ஒத்துப் போகவில்லை பிழையாக உள்ளது. விபவ ஆண்டு 1498 & 1558 இல் ஏற்படுகின்றது.) இப்படியாக திருவிழா நடக்கையில் போர்வீரனாக கைக்கோளன் பெருமாள் என்பான் மகன் பறையன் ஒருவன் இருந்தான். இப்பறையன் ஏதோ காரணத்தினால் இறந்து விடுகின்றான். பறை எடுத்து என்ற சொற்றொடர் இவன் இக்கோவிலில் பறை அடித்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது. அதனாலேயே இவன் குடும்பத்தாருக்கு இம்மானியம் கிட்டுகின்றது.

    இத்திருவிழாவின் போது தலைவர் சன்னகமல நாயனார், ஆதிசண்டேசுவர நாயனார், மாகேசுவரர் ஆகியோர் ஆறைநாயக மண்டபத்தில் கூடி இருக்கின்ற போது ஆதிசண்டேச்சுவரர் தம்வாயால் சொன்னபடியே இறந்த இப்பறையனுக்கு உதிரப்பட்டியாக இதாவது, இறந்தோர் நினைவாக அவன் குடும்பத்தாருக்கு தரப்படும் நிலதானமாக ஆறகளூர் நன்செய் நிலங்களில் உடைந்தோடும் காளி அம்மை கால்வாய்க்கு மேற்கில் தியாகணநல்லூர் வயலுக்கு கிழக்கே நன்செய் நிலமும், உரூபாய் 250க்கு காளைகள் பூட்டிய ஓர் ஏர் நடத்தப்பட்டு புன்செய் மானியமும் ஒரு வீடும் தரப்படுகின்றது. (இரு இடங்களில் கல்வெட்டு சிதைந்துள்ளதால் அங்கு என்ன கூறப்படுகின்றது என்று அறியமுடிவில்லை.) திருமஞ்சன வழிக்கு தெற்கே ஒரு தோட்டமும் கோயிலிலே நித்தம் இரு பொழுதிற்கு அரிசி சோறும் வழங்க ஏற்பாடானது. இந்த வீடானது சைவ உணவு உண்ணும் பிராமணர், வெள்ளாளர் வாழுகின்ற கோவில் முன்னிலையான சன்னதி தெருவிற்கு வட பக்கத்தில் அமைந்திருந்தது. இந்த உரிமை யாவும் ஆதிசண்டேசுவரர் தம்வாயால் சொன்னதினாலே உண்டானது. இதை இவன் தந்தையும் இவன் வழிவந்தாரும் நிலவும் ஞாயிறும் நிலைக்கும் வரை அனுபவிக்கக் கடவார்களாக என திருஞான சம்பந்த பண்டிதன் எழுதி ஒப்பமிட்டான். கங்காணி பெரியநயினார் ஒப்பமிட்டுள்ளார். பொதுவாக கோவிலில் பணிசெய்யும் பிராமணர், பணிப் பெண்டுகள் உள்ளிட்ட கோவில் பணியாளர் வாழ ஒரு வீடும், நிலமும், கோவிலில் இருந்து சோறும் பெற்றனர். இந்த பறையனுக்கும் அவ்வாறு தந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை, வழக்கமானது தான்.

    பறையன் இறந்ததால் அவரது உற்றார் உறவுகள் வாழ்வதற்கு பிராமணர் வாழும் தெருவை அண்டிய வட பகுதியில், இதாவது ஊரிலேயே வீடும் தரப்படுகின்றது. அதோடு ஒவ்வொரு நாளும் இரு பொழுதிற்கு அரிசிச் சோறும் கோவிலில் இருந்து வழங்கப்படுகின்றது. இவை அல்லாமல் நன்செய், புன்செய் நிலங்கள், தோட்டம் உள்ளிட்டனவும் மானியமாக வாழ்வாதாரத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன. சிறப்பு யாதெனில் இந்த பறையர் கோவிலினுள் சென்று பறை அடித்தார் என்பது தமிழக கோவில்களில் தீண்டாமை 16 ஆம் நூற்றாண்டு வரை இருந்ததில்லை என்றும் அது 17-18  ஆம் நூற்றாண்டில் தெலுங்கு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தான் வழக்கில் வந்திருப்பதாகத் தெரிகின்றது.

    சனாதன தர்மம், அதன் நால்வருணக் கோட்பாடு ஆகியவற்றைக் கொண்டு பிராமணர் தலித்துகளை அழுத்தி விட்டதாக கடந்த 130 ஆண்டுகளாக தலித்திய முன்னோடிகளும், 100 ஆண்டுகளாக திராவிடமும் சொல்லி வந்த செய்தி இக்கல்வெட்டு மூலம் பொய் என்றாகிவிட்டது.

    பி.கு: ஒரு செங்குந்தருக்கு பறையன் மகனாக இருக்க முடியாது, மகனும் செங்குந்தராகத் தான் இருக்க வேண்டும். அதே போல் ஒரு பறையனுக்கு ஒரு செங்குந்தன் தந்தையாக இருக்க முடியாது அவனும் ஒரு பறையனாகத் தான் இருக்க முடியும் . இதுவேசமூக நியாயம், முறை. ஆதலால் கல்வெட்டில் இடம் பெறும் கைக்கோளன் என்பது இங்கு செங்குந்தரை குறிப்பதல்ல மாறாக போர் வீரனையே குறிக்கின்றது.

    சிலர் தீண்டாமையை நிறுவ புலவர்களின் கற்பனைப் பாடலை, இதாவது இடைச் செருகல், அடித்தல் திருத்தல் நிரம்பிய பாடலை நாடி ஓடி அதில் சில வரிகளைச் சுட்டுகிறார்கள். ஆனால் அடித்தட்டு மக்கள் நேரடியாக அனுபவப்பட்ட செய்திகளை ஏந்தும் கல்வெட்டுச் செய்திகளை புறந்தள்ளுகிறார்கள். இது அவர்தம் பொய்மைச் சார்பை காட்டுகின்றது.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 28, பக். 421- 422.

    செங்கல்பட்டு மாவட்டம் திருவாடாணை திருவல்லீசுவரர் கோவில் கருவறை தென்சுவரில் பொறிக்கப்பட்டுள்ள 4 வரி கல்வெட்டு.

    1. வெகுதானிய வருஷம் சித்திரை மாதம் 10 நாள் ஸ்ரீ மத் கேதாயுதானர் காரியத்துக்கு கடவர் தாசரும் தானத்தாரும் வித்தூர் உடையார்க்  கோயில் சேவிக்கும் பெண்களுக்கு கல்வெட்டு பூறுவம். சேவிக்கு பெண்களில்லாத படியா
    2. லே வரதராசர் புதுசாக விடுவித்த  அக்கநாயன் மகள் அப்பநாச்சிகு சன்னதி தெருவில் தென்சிறகில் கீழை  இரண்டுமனை விட்டு மூன்[றாம்] மனையும், இவள் தங்கை அறமளத்த நாச்சிக்கு மேலை மனையும் அழகியர் மகள் [எ]றமநாச்சிக்கு
    3. இதில் மேலை மனையும், கம்பர் மகள் அழகிய நாச்சிக்கு வடசிறகில் மூன்றாமனையும், வெள்ளந்தாங்கினா மகள் பொன்னாகு கீழை மனையும் கி_ _ _ கீழ்பாதிரி [பு] நூற்[று] இருபது குழியும் நின்றப் பெற் பேரிலே நூறு குழியும் கோயிலே நாழி சோறும் சந்திராதி
    4. த்தவரையும் இம்மதிகா பெற்று கோயில் சேவுகும் கா_ _ _ சேவித்து [நடத்தக்] கடவார்களாகவும் [இத]ன் சுகத்திலே இருக் _ _ _ _ _

    தானத்தார் – கோவில்பொறுப்பாளர்; பூறுவம் – முன் வைத்து; சேவிக்கும்- தொண்டு (அ) ஊழியம் செய்யும்; விடுவித்த – வேலைக்கு கொண்டுவந்து விட்ட; சன்னதிதெரு – கிழக்கும் மேற்குமாக கோவிலின் கிழக்கு வாயிலில் அமைந்த தெரு; சிறகு – தெருப் பக்கம்

    விளக்கம்: கல்வெட்டில் சக ஆண்டு குறிப்போ அரசர் ஆட்சிஆண்டுக் குறிப்போ இல்லை. வெகுதானிய ஆண்டு 1518 அல்லது 1578 இல் நிகழ்கின்றது. சித்திரை மாதம் 10 ஆம் நாள் கேதாயுதானர் செயல்களுக்கு அமைந்த துறவியும் கோவில் பொறுப்பாளரும் வித்தூர் இறைவர் கோவிலில் தொண்டுசெய்யும் பணிப்பெண்களுக்கு இக் கல்வெட்டை முன் சான்றாக வைத்தனர்.

    இக்கோவிலில் தொண்டாற்றும் பணிப்பெண் இல்லாமையால் வரதராசர் என்பவர் புதிதாக 5 பணிப் பெண்களை வேலைக்கு கொண்டு வந்து விட்டார். அவருள் அக்கநாயன் மகள் அப்பநாச்சிக்கு சன்னதி தெருவிற்கு தென் பக்கத்தில் கிழக்குமுகத்தில் அமைந்த இரண்டு வீட்டை அடுத்து மூன்றாவது வீடும், இவள் தங்கை அறமளத்த நாச்சிக்கு அங்கேயே மேற்கு முகத்தில் வீடும், அழகியருடைய மகள் எறமநாச்சிக்கு இதே மேற்கு முகத்தில் ஒரு வீடும், கம்பர் மகள் அழகியநாச்சிக்கு சன்னதி தெருவிற்கு வட பக்கத்தில் மூன்றாவது வீடும், வெள்ளம்தாங்கினான் மகள் பொன்னாளுக்கு கிழக்கு முகத்தில் அமைந்த வீடும் தரப்பட்டன. இவர்களுக்கு கீழ்பாதிரியில் புன்செய் 120 குழியும், நிலையாக வேலையில் நின்றவர் பெயருக்கு 100 குழியும் ஆக 220 குழி நிலமும் அதோடு இவர்களுக்கு கோவில் பணியாளருக்கு சோறு வழங்கும் வேளையில் ஒவ்வொருவருக்கும் நாழி அளவு சோறும் தரப்படுகின்றது. இந்த மதிப்பை நிலவும் ஞாயிறும் நிலைக்கும் காலம் வரை பெற்று அனுபவிப்பார்களாக.

    முதல் கல்வெட்டிற்கு துணைச்சான்றாக இக்கல்வெட்டு வைக்கப்பட்டது. முதல் கல்வெட்டில் பயன்படுத்தும் சொற்களும் அதன் கருத்தடைவும் இதிலும் உணரப்படுகின்றது.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 36, பக். 256 – 257.

    திருநெல்வேலி மாவட்டம், மானூர் அம்பலவாணசுவாமி கோவில் உள்ளே அமைந்த இரண்டாம் தூணில் பொறிக்கப்பட்ட 127 வரிக் கல்வெட்டு. இடத் தேவை கருதி சாய்வுக் கோடாக வரிகள் குறிக்கப்பட்டுள்ளன.

    ஸ்வஸ்திஸ்ரீ ப்ரஸாத / ஞ் செ[ய்]தருளிய திருமு / வப்படி த்ரிபுவனச் / சக்ரவத்தி_  _ _ கோனே / ரின்மைய் கொண் / டான் களக்குடி நாட் / டுக் கருவாநல்லூரா / ன விக்கிரம பாண்டி / ய நல்லூர் ஸ்ரீ குலசே / கர விண்ணகர் ஆழ் / வார் கோயில் நம்புசெ / [ய்] வானுக்கும் இவ்வாழ் / வாற்கு மிழலைக் கூற் / றத்து நடுவிற்கூறு பு / ல்லூற்குடி பொன்பற் / றி உடையான் பொ _ _  / பெருமாளான ஐய்ய / ன் காலிங்கராயர் த / ம் பேரால் கண்ட மனம்பெரியான் ஸந்தி / க்கு திருப்படிமாற்றுள் / ளிட்டு வேண்டும் நிப / ந்தங்களுக்கு இந்நாட்டு / மானநிலை நல்லூரில் / வெட்டியாற்கு ஜீவி / தமாய் போந்தப் பா / டகப்படி  நிலம் ஒன் / றே முக்காலே ஒருமா / வும் இவர்களைத் தவி / ர்[ந்]து இரண்டாவதி /  னெதிராமாண்டு முத / ல் இம்மானநிலைந / ல்லூர் ஸபையார் /  க்கு காராண்மையும் _ _ _  / [வினி]யோகமும் தருவதா / ன அச்சும் காரியவா / ராட்சிச்சியும் வெட்டி / பாட்டமும் பஞ்சுபீலி /  சந்துவிக்கிரகப் பேறு / ம் வாசல்பேறும் இலா / ஞ்சினைப் பேறும் / பொன் வரியும் மற்றும் / எப்பேர்ப்பட்டினவும் / உட்பட தேவதான இ / றையிலியாய் இறு /  ப்பதாக இடப்பெற / வேணுமென்று ஐய்ய / ன் காலிங்கராயர் நம / க்குச்  சொன்னமையி / ல்  இவ்வாழ்வார்[க்கு] ஐ / யன் காலிங்கராயர் த_ _ / திருப்படி மாற்றுள்ளி / ட்டு வேண்டும் நிவந் / தங்களும் இன்னாட் / டு மானநிலை ந[ல்]லூரி / ல் வெட்டியாற்கு ஜீ / விதமாய்ப் போ(ர்)ந்த /  பாடகப்படி நிலம் ஒ / ன்றே முக்காலே ஒரு மா /  வும் இவர்களை தவிர் /  ந்து இம்மானநிலை[ந] / ல்லூர் ஸபையாற்கு /  காராண்மையும் இவ் / வாழ்வாற்கு கடமையு / ம் அந்தராயமும் வினி / யோகமும் தருவதான /  அச்சும் காரியவாரா / ட்சியும் வெட்டிப்பாட் / டமும் பஞ்சுபீலி சந் / து விக்கிரகப் பேறும் / வாசல்பேறும் இலா / ஞ்சினைப் பேறும் /  பொன் வரியு மற்றும் / எப்பேற்பட்டனவும் / உட்பட தேவதான இ / றையிலியாய் இறு / ப்பதாக இட்டு வரியி / லார் எழுந்திட்ட உள் / வரியும் நங்கேழ்வியு / ம் தரச் சொன்னோம் _ _ / கைக்கொண்டு திரு / ப்படி மாற்றுள்ளிட் / டு வேண்டும் நிவந்த / ங்கள் செல்லப்பண் / ணி இப்படி சந்த்ராதித்ய / வற் செல்வதாக கல்லி / லும் செம்பிலும் வெ  /  ட்டிவித்து கொள்க. / இவை செவ்விருக்கை / நாட்டு அச்சுதவயல் / அரையன் வண்டுவ / வரையப் பெருமானான கு / லசேகர விழுப்பரை / யன் எழுத்து உ யாண் / டு 3 நாள் 910 இவை  / மிழலைக்கூற்றத்து / வடபாம்பாற்று தண் / ணிரண்டக்குடியான /  தரணிவிச்சாதிர நல் / லூர் அடைக்குடை / யான் தேவபிரான் / தேசுடைய தேவனான /  காடுவெட்டி எழுத் / து உ இவை மதுரோ / தய வளநாட்டு கரஞை /  இருக்கை உழக்குடி மூ / த்தன் ஆள்கொண்டவி / ல்லியான பல்லவரா / [ய]ன் எழுத் / தினாலும் / ப்ரஸாதஞ் / செய்தரு /  ளிவித்து / இவை ப்ரஸாதஞ் செ / ய்தருளின திருமுகப்படி / கல்லில் வெட்டினேன் / இவூற்(த்) தச்சாரியன் / உடையானழகனான / பாண்டிய சிவாமணி யா /  சாரியன் எழுத்து உ / இவை ப்ரஸாதஞ் செயிதரு / ளின திருமுகப்படி கல்லில் / வெட்டினேன் இவ்வூ[ர்] தச்சாசா / ரியன் காகுந்தன் பரமனான /  ஆயிரத்தெண்வ ஆசாரியன் /  எழுத்து.

    நம்புசெய்வான் – பூசனை செய்பவன்; திருப்படி – கோயில் வாயிற்படி; நிவந்தம் – பூசை செலவு திட்டம்; வெட்டியார் – கிராம பணியாளர் அல்லது பிணஞ்சுடுபவர்; போந்த – முடிவான, finalized; பாடகப்படி – நில அளவு; காராண்மை  – ஒரு வரி; அச்சும் – பணமாக இறுக்கும் வரி; காரியவாராட்சி –அரசு அலுவலர்காக செலுத்தும் வரி, வெட்டிப்பாட்டம் –   ஒரு வரி; பஞ்சுபீலி – பஞ்சின் மீதான வரி, கேழ்வி – அரசன் வாய்மொழி உத்தரவு; இறையிலி – ஆளும் அரசர்களுக்கு தான் வரி சென்றுசேராது ஆனால் இனி ஊர் அல்லது கோவில் மேம்பாட்டிற்கு அது பயன்படுத்தப்படும் என்ற வகையில் எப்போதும் போல் மக்களுக்கு வரி உண்டு.

    விளக்கம்: இரண்டாவதின் எதிராமாண்டு என்பது 3-ம் ஆட்சி ஆண்டைக் குறிக்கின்றது. ஆனால் வேந்தர் பெயர் கல்வெட்டில் குறிக்கப்படவில்லை. கோனேரின்மை கொண்டான் என்று சிறப்பு அடைச்சொல் குறித்துள்ளதால் இது முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தது என்று குறித்துள்ளனர். இதுபொ.ஊ. 1271 ஆகும்.

    களக்குடி நாட் டுக் கருவாநல்லூரான விக்கிரம பாண்டிய நல்லூர் ஸ்ரீ குலசேகர பெருமாள் கோயில் பூசனை செய்பவனுக்கும் இப்பெருமாளுக்கும் மிழலைக் கூற்றத்து நடுவிற்கூறு புல்லூர்குடி பொன்பற் றி உடையான் பெருமாளான ஐயன் காலிங்கராயன் தனது பேரால் கண்ட மனம்பெரியான் கோயில் திருப்படியை மாற்றுதல் உள்ளிட்ட வேண்டும் பூசை செலவிற்கு இந்நாட்டு மானநிலை நல்லூரில் வெட்டியாற்கு பிழைப்பாய் இருக்கவேண்டி முடிவு செய்து தரப்பட்ட பாடகப்படி நிலம் ஒன்றே முக்காலே ஒருமா ஆகும்.  இந்த வெட்டியார்களைத் தவிர்ந்து மூன்றாம் ஆட்சி ஆண்டு முதல் இம்மானநிலைநல்லூர் கோவில் சபையார்க்கு காராண்மை எனும் வரியும், பெருமாளுக்கு கடமை எனும் வரியும் அந்தராயமும், வினியோகமும், பணவரியும், காரியவாராட்சியான அரசு அலுவலர் வரியும்,  வெட்டிபாட்ட வரியும், பஞ்சு வரியும், சந்துவிக்கிரகப் பேறும், வாசல்பேறும், இலாஞ்சினைப் பேறும், பொன் வரியும் மற்றும் எப்பேர்ப் பட்டனவும் உட்பட எல்லாம் தேவதானமாகப் போய்விடும், அரசற்கு இனி போகாத இறையிலியாய் எப்போதும் போல் மக்களால் வரி கட்டப்படவேண்டும் என்று ஐயன் காலிங்கராயன எனக்குச்  சொன்னதால்  இப்பெருமளுக்கு உள்வரியும் தர உத்தரவிட்டு இவற்றைக் கைக்கொண்டு கோயில் திருப்படி மாற்றம் உள்ளிட்ட தேவையான செலவுகளை எதிர்கொள்ள வழி செய்தான் செவ்விருக்கை நாட்டு அச்சுதவயல் அரையன் வண்டுவ  வரையப் பெருமானான குலசேகர விழுப்பரையன், மதுரோதய வளநாட்டு கரஞை இருக்கை உழக்குடி மூத்தன் ஆள்கொண்டவில்லியான பல்லவராயன் என சில அரசர்கள் இப்படி கையெழுத்திட்டு நிலவும் ஞாயிறும் நிலைக்கும் வரையில் இந்த ஏற்பாடு செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிவித்து கொள்ளச் சொல்கின்றனர்.

    இக் கல்வெட்டில் இவர்கள் தவிர்ந்து என்று தெள்ளத்தெளிவாக வெட்டியார் அனுபவிக்கும் நிலத்தை தவிர்த்து பிறவற்றில் வரும் காராண்மை வரி வருவாய் இனி கோவில் சபையார்க்கு செல்வதாக என எழுதிக் கொடுத்த போதும் காராண்மை என்பதற்கு உழும் உரிமை என்ற பொருளைக் கொண்டதால் வெட்டியார் நிலம் இறையிலி ஆக்கப்பட்டு கோவிலுக்கு தேவதானமாக ஆக்கப்பட்டு விட்டதாக தென்னிந்தியக் கல்வெட்டு தொகுதி 22 பகுதி 2 நூலில் பிழைபட பொருள் கூறி உள்ளனர்.  இதே போல் தப்பும் தவறுமாய் பொருள் தந்ததால் தானோ என்னவோ இராசராசன் பறையரிடம் இருந்து நிலம் பறித்துக் கொண்டான் என்பதும்? அக்கல்வெட்டின் மூல பாடம் தந்தால் தக்க பொருளை அறிந்து கொள்ள முடியும்.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 22 பகுதி 2, பக். 350 – 351.

    https://www.youtube.com/watch?v=wk_0FI5lg14

    Share
  • நூலறி புலவ!  ஆசிரியர் பெரும!

    நூலறி புலவ! ஆசிரியர் பெரும!

    ஔவை நடராசன்

    ஆசிரியர் தினமாகிய இன்று என் தந்தையைப் பற்றிய நினைவு பற்றிப் படருகிறது. 117 ஆண்டுகளுக்கு முன்னர், ஔவையார் குப்பம் என்ற சிற்றூரில் பிறந்த திரு.துரைசாமி, திரு.மயிலாசனம், திரு.முத்துக்குமாரசாமி, திரு.சுப்பிரமணியன் ஆகிய மூவருக்குப் பின் பிறந்த இரட்டைப் பிள்ளைகளில் ஒருவராவார்.

    என் தந்தையார் பிறந்த ஓர் ஆண்டுக்குள் இரட்டைப் பிறப்பில் ஒரு பிறப்பு மறைந்தார். என்னுடைய பாட்டனார் பெயர் திரு.சுந்தரம், என் பாட்டியார் பெயர் திருமதி சந்திரவதி அம்மையார். என் பாட்டியார் 6 அடி உயரத்திற்கு மேல் இருப்பார். சிவந்த தோற்றத்துடன் திகழ்ந்தவர்.

    என் தந்தையார், திண்டிவனம் உயர்நிலைப்பள்ளியில் படிப்பதற்காக மயிலம் வழியாக அன்றாடம் சென்று வந்ததாகக் கூறியது என் நினைவில் உள்ளது. “எஎஎம்” என்று அழைக்கப்பெறும் அந்தப் பள்ளிக்கூடம், டானிசு பணி மன்ற அறத்தினால் நடைபெற்றதாக நினைவு.

    என் தந்தையாரோடு காஞ்சி மாமுனிவரும் உடன் பயின்றதாக ஒரு முறை கூறினார். அந்தப் பள்ளியில் பயிலும்போதுதான் பள்ளிக்கு வந்த இரண்டு துரைசாமிகளுள் என் தந்தையார், ஔவை துரைசாமி என்று அழைக்கப்பெற்றார்.

    பத்தாம் வகுப்புப் பயின்ற அவர், வேலூர் சென்று ஊரிசு கல்லூரியில் எப்.ஏ. என்னும் வகுப்பில் சேர முயன்று, வறுமைச் சூழலால் கல்வியை நிறுத்திக்கொண்டார். பின்னர், துப்புரவுக் கண்காணிப்பாளராகப் பணியாற்றியதாகவும் ஓராண்டுக்குள் கரந்தை சென்று, தமிழ்க் கல்வி தொடர்ந்ததாகவும் கூறினார்.

    வாழ்நாள் முழுவதும் இறுதி மூச்சுவரை அவர் மேடைப் பேச்சு நின்றதுண்டே தவிர, அவர் எழுதிய உரை முத்துகள் ஒருகணமும் நின்றதில்லை.

    உரைவேந்தரின் உயர்ந்த புகழுக்குச் சிறந்த துணையாகத் தம் நலிந்த உடலோடு வாழ்ந்தவர் என் அன்னையார் திருமதி லோகாம்பாள்.

    உரைவேந்தரின் பிள்ளைகள் என்று இன்று நாங்கள் பிறருக்குச் சொல்லும்போது எங்கள் உடலில் சில அணுத்துகளேனும் அறிவுத்திறம் அமைந்திருக்குமோ என்று எண்ணுகிறேன்.

    117 ஆண்டுகள் முன்னர் இருந்த தமிழகம், இந்நாள் மிளிரும் தமிழகம் என எவ்வளவு மாற்றங்கள் பெற்றுள்ளன.

    என் தந்தையார், பகலில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி, அந்தி வந்தால் தன் வீட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்குப் பழந்தமிழ் இலக்கியங்களை இரவு 08.00 மணிவரை நடத்துவார்.

    ஆசிரியர் என்ற பெயரைத் தாம் வழிபட்ட முருகனுக்கு இட்ட பெயர் என்று சொல்லி, தான் கையொப்பம் இடும்போது தமிழ் ஆசிரியன் என்றே ஒப்பம் இடுவார். தந்தையாரின் புகழை நிறுவிய பெருந்தகைதான் புலவர் கா.கோவிந்தன் அவர்களாவார். ஆசிரியரை எண்ணும்போது, தம் 90ஆம் அகவையிலும் கண்களில் நீர் துளித்தபடி நிற்பார். ஆசிரியர் நாளன்று இப்படி ஆசிரியர் உரைவேந்தர் ஔவையை நினைக்கும்போது நெகிழ்கிறோம்.

    சேயாறு உயர்நிலைப்பள்ளியில் என் தந்தையார் தமிழாசிரியராக வாழ்வு தொடங்கிய நாளில்,

    “இன்று ஆசிரியர் ஓங்கினால்
    நாளை நாடு ஓங்கும்”

    “இன்று ஆசிரியர் தேங்கினால்
    நாளை நாடு தேங்கும்”

    “இன்று ஆசிரியர் தூங்கினால்
    நாளை நாடு தூங்கும்”

    என்று பேரறிஞர் அண்ணா, ஆசிரியர்களைப் பாராட்டிப் பேசிய பொன் வரிகளை நினைவுகூர்வது இன்றும் பொருத்தமானதே.

    —–

    Share