தமிழ்க்காதல் கொண்ட மூதறிஞர்!

-மேகலா இராமமூர்த்தி

புதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரியில்,  சுப்பிரமணியன் செட்டியாருக்கும் தெய்வானை ஆச்சிக்கும் மகனாக 1917ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் நாளன்று பிறந்தவர் தமிழ் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார். அவருடைய பிள்ளைத் திருநாமம் அண்ணாமலை என்பதாகும். மாணிக்கம் என்றும் அவர் அழைக்கப்பட்டதால் அந்தப் பெயரே பிற்காலத்தில் அவருக்கு நிலைத்துவிட்டது.

குழந்தைப் பருவத்திலேயே தாயையும் தந்தையையும் அடுத்தடுத்து இழந்த மாணிக்கத்தை அவருடைய தாய்வழிப் பாட்டனாரும் பாட்டியாரும் வளர்த்தனர். தொடக்கக் கல்வியைப் புதுக்கோட்டையில் உள்ள பள்ளியொன்றில் பயின்ற அவர் தம் பதினோராம் வயதில் வட்டித் தொழில் பழகுவதற்காகப் பர்மாவுக்குச் சென்றார்.

அங்கே இரங்கூன் நகரத்திலுள்ள கடையொன்றில் உதவிசெய்யும் சிறுவனாக வேலைக்குச் சேர்ந்தார். அவர் வேலைசெய்த வட்டிக்கடை முதலாளி ஒரு சமயம் அவரிடம் ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு அந்த நபர் கடைக்கு வந்து தன்னை எங்கே என்று கேட்டால், ”முதலாளி இல்லை” என்று சொல்லிவிடுமாறு வற்புறுத்தினார். ஆனால் பொய்சொல்வதை அவ் இளம் வயதிலேயே பெருங்குற்றமாகக் கருதிய சிறுவன் மாணிக்கம், ”முதலாளி நீங்கள் வெளியில் சென்றிருந்தால் இல்லை என்று கூறலாம்; ஆனால் நீங்கள் இங்கேயே இருக்கும்போது எவ்வாறு இல்லை என்று கூறுவது? அப்படியெல்லாம் நான் பொய்சொல்ல மாட்டேன்!” என்று பிடிவாதமாக மறுத்துக் கூறியதால் அந்த நாளிலேயே வட்டிக்கடை வேலையிலிருந்து நீக்கப்பட்டார். இதனாலேயே அவருக்குப் பொய்சொல்லா மாணிக்கம் என்று பெயர் வழங்கியதாகத் தெரியவருகின்றது.

வட்டிக்கடையில் வேலை செய்ய முடியாத சூழலில் பர்மாவிலிருந்து நாடு திரும்பிய வ.சுப. மாணிக்கனாருக்குத் தமிழ் நூல்களை ஊன்றிக் கற்ற
பண்டிதமணி கதிரேசஞ் செட்டியாருடன் தொடர்பு ஏற்பட்டது. அவருடைய உதவியால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் வகுப்பில் பயின்று, முதன்மையாகத் தேர்ச்சியுற்றார்.

சில திங்கள் அப்பல்கலைக்கழகத்திலேயே ஆய்வு மாணாக்கராய் இருந்து பின் ஏழாண்டுகள் அங்கேயே விரிவுரையாளராகப் பணியாற்றினார். அப்போதே தனியாகப் படித்து பி.ஓ.எல், எம். ஏ பட்டமும், ’தமிழில் அகத்திணைக் கொள்கைகள்’ பற்றி ஆய்ந்து முனைவர்ப் பட்டமும் பெற்றார். பின்னர் 1948 தொடங்கி இருபது ஆண்டுகள் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும் முதல்வராகவும் பணிபுரிந்தார். மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்று தமிழ்த்துறைத் தலைவராகவும் இந்திய மொழிப்புல முதன்மையராகவும் தொண்டாற்றினார். பின் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியேற்று தமிழியல் வளர்ச்சிக்கும் பிற அறிவியல் துறைகளின் வளர்ச்சிக்கும் வழிவகுத்துத் துணைநின்றார். திருவனந்தபுரத்தின் மொழியியற்கழக ஆய்வு முதியராக வேலைபார்த்தபோது தமிழ் யாப்பு வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதினார். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியத் தகைஞராகப் பணிசெய்ததன் பயனாகத் தொல்காப்பியத்துக்கு இவர்தம் புத்துரை விளக்கம் கிடைத்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பொன்விழாவில் இவருக்கு டி.லிட். பட்டம் நல்கிச் சிறப்புச் செய்தது.

குன்றக்குடி ஆதீனம் ’முதுபெரும் புலவர்’ எனும் சிறப்புப் பட்டத்தையும், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை ‘செம்மல்’ எனும் சிறப்புப் பட்டத்தையும் நல்கின. அரசு இவர் மறைவுக்குப்பின் ’திருவள்ளுவர்’ விருது வழங்கிச் சிறப்பித்தது.

தமிழ்ப்பல்கலைக்கழகத் தொடக்க நிலையில் செயன்முறைகளை வகுக்க அமைக்கப்பெற்ற வல்லுநர்குழுவின் தலைவராக இருந்து அதன் வளர்ச்சிக்கு வழிவகுத்தார் மாணிக்கனார். தமிழகப் புலவர் குழுவிற்கும், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்திற்கும், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை கணேசர் செந்தமிழ்க் கல்லூரிக் குழுவுக்கும் தலைவராகத் திகழ்ந்து இவர் ஆற்றிய பணிகள் மிகப்பல. ’காரைக்குடி தமிழ்ச்சங்கம்’ நிறுவிச் சங்க இலக்கிய வகுப்பு நடத்தியும் இளஞ்சிறார்க்கு ‘அறநூல்கள் ஒப்புவித்தல் போட்டி’ வைத்துப் பரிசுகள் வழங்கியும் ஒல்லும் வாயெல்லாம் தமிழ்த்தொண்டு செய்தார். தில்லையில் அம்பலத்தின்கண் நின்று திருமுறைகள் ஓதி வழிபடப் பேராசிரியர் வெள்ளைவாரணனார் போன்றோரின் துணையோடு போராடி வாகை சூடினார்.

வள்ளல் அழகப்பரின் கொடைவளம் ஏத்திக் ‘கொடை விளக்கு’ எனும் கவிதைநூல் படைத்தார். இவர்தம் தனிப்பாடல்களின் தொகுப்பு ‘மாமலர்கள்’ எனும் பெயரின் வெளிவந்துள்ளது. இவர்தம் படைப்புக்களுள் வள்ளுவமும், தமிழ்க்காதலும் இருகண்களெனப் போற்றத்தக்கவை. இவ்விரு நூல்களும் தமிழர் அனைவரும் படித்துப் பயன்கொள்ளவேண்டிய அற்புதமான ஆராய்ச்சி நூல்களாகும்.

காதலரின் பாலுணர்ச்சிகளை, அவர்தம் உளவியலைக் காட்சிப்படுத்துவதில் புலவர்களின் மாட்சி எத்தகையது என்பதை நுட்பமாய் ஆராய்ந்திருக்கும் நூல் தமிழ்க்காதல்.

அகப்பொருள் பேசும் எழுதிணைகளின் இயல்பைச் சுருங்கச்சொல்லி விளங்கவைக்க விரும்பிய மாணிக்கனார், கைக்கிளையை ’முதிராக் குறுங்கரு’ என்றும், பெருந்திணையை ’முற்றிவீழ் கரு’ என்றும் நடுவணதாய் அமைந்திருக்கும் அன்பின் ஐந்திணையே ’இயல்பான வளர்கரு’ என்றும் விளம்பியிருப்பது அவரின் நுண்மாண்நுழைபுலத்துக்குத் தக்க சான்றாகும்.

அன்றைய பாடல்கள் குறித்து இன்றைய இளையோர் எழுப்பும் வினாக்கள் சிலவுண்டு. சங்கப்பாடல்கள் அடியெல்லை, கடுமையான இலக்கண வரம்புகள் முதலியவற்றை உள்ளடக்கியிருப்பது புலவரின் கற்பனைச் சிறகை ஒடிக்காதா? கவிதை ஆர்வத்தைச் சிதைக்காதா? என்பவை அவை.

புலவர்கள் இந்த இலக்கண விதிகளையே பாடல் மரபெனக் கொண்டு அறிவறிந்து அடங்கிப் பாடல்படைத்த காரணத்தால்தான் ஞாலமதிப்பைப் பெற்று, அன்றைய புலவர்கள், இன்றளவும் புகழொளி வீசுகிறார்கள் என்று விடைபகரும் மாணிக்கனார்,

புகழ்பெற்ற மேனாட்டுச் சிந்தனையாளரான Bertrand Russell தம்முடைய Marriage and morals’ எனும் நூலில் குறிப்பிட்டிருக்கும்,” Love poetry depends upon a certain delicate balance between convention and freedom, and is not likely to exist in its best form where this balance is upset in either direction.”

காதற்பாட்டு, மரபுக்கும் உரிமைக்கும் இடையே மெல்லியதொரு சமநிலையை வேண்டிநிற்கும். அது சற்றே கோடினாலும் பாட்டு அதன் அழகுருவை இழந்துவிடும்” எனும் கருத்தைப் பொருத்தமாய் மேற்கோள் காட்டுவது அவரின் பரந்துபட்ட வாசிப்பையும் நமக்கு அறியத்தருகின்றது.

திருக்குறளில் தோய்ந்து, வள்ளுவர் நெஞ்சை ஆய்ந்து, வள்ளுவம் எனும் ஆராய்ச்சி நூலை படைத்திருக்கும் மாணிக்கனார், அதில் தம் உளக் கருத்துக்களைப் பன்னிரண்டு கற்பனைச் சொற்பொழிவுகளாக வெளிப்படுத்தியிருக்கின்றார்.

”தமிழர்களே! நாம் புகழ்சான்ற திருக்குறளைப் போற்றுகிறோம். பன்மாணும் பறைசாற்றுகிறோம். அவ்வளவோடு அமைதல் ஆகாது; ‘புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும்’ (538) என்பது ஒரு தனி வள்ளுவம். ‘செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்’ என்பது குறள்காட்டும் அச்சமுடிபு. ஆதலின் யார்க்கும் செயல் வேண்டும் என்பதுதான் வள்ளுவர் நெஞ்சம். இச்செயல் நெஞ்சமே என் திருக்குறட் பொழிவுகளின் உயிர்நிலை. விளக்கமெல்லாம் இதன் சூழ்நிலை. ‘குறள் கற்பேன்; நிற்பேன்; நிற்கக் கற்பேன்; குறள்வாழ்வு வாழ்வேன்; வள்ளுவர் ஆணை’ என்று எண்ணுமின்!” என அந்நூலில் வள்ளுவர் நெஞ்சத்தை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டிக் குறள் கற்கவும் அதன்வழி நிற்கவும் நம்மை வலியுறுத்துகின்றார்.

இந்நூல்களேயன்றித் தொல்காப்பியக் கடல், திருக்குறட்சுடர், சங்கநெறி, காப்பியப் பார்வை, இலக்கியச் சாறு, தமிழ்க்கதிர், தலைவர்களுக்கு முதலியவை இவர்தம் பிற படைப்புக்கள். திருக்குறளை யாவரும் எளிதில் புரிந்துகொள்ள ’உரைநடையில் திருக்குறள்’ எனும் நூலை இயற்றியுள்ளார்.

மணிவாசகர் நூலக வெளியீடான ‘கம்பர்’ என்னும் இவரது நூல் தமிழக அரசின் பரிசுபெற்றது. தமிழ் யாப்பு வரலாறு, தமிழில் வினைச்சொற்கள், தமிழில் அகத்திணைக் கொள்கைகள் என்னும் நூல்கள் இவரால் ஆங்கிலத்தில் எழுதப்பெற்றவையாகும். மன்பதையின் முன்னேற்றங்கருதி இவர் படைத்த நாடகங்கள் மனைவின் உரிமை, உப்பங்கழி, ஒருநொடியில் என்பனவாகும்.

இவற்றில் ’தலைவர்களுக்கு’ என்ற நூலை நாம் அரசியல் சார்ந்த நூலாகக் கருதலாம். 1965ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் இந்நூல் வெளிவந்ததாகத் தெரிகிறது. 1965, தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆண்டாகும். காரணம் அரசாங்கத்தின் இந்தித் திணிப்பை எதிர்த்துத் தமிழகமே போர்க்கோலம் பூண்டிருந்த ஆண்டு அது. ஆதலால் அச்சமயத்தில் தாம் எழுதி வெளியிட்ட அந்நூலில் மொழிச்சிக்கல் குறித்தும் அதற்கு ஏழு விதமான தீர்வுகள் குறித்தும் தம் கோணத்தில் மாணிக்கனார் விரிவாகப் பேசியிருக்கின்றார்.

இவ்வாறு தமிழிலும் ஆங்கிலத்திலும் பனுவல் பல படைத்த அம் மூதறிஞர், தமிழ்ச் சொல்லாக்கத்துறைக்கும் குறிப்பிடத்தக்க  பங்களிப்புச் செய்திருக்கின்றார்.

“சொற்பொழிந்தேன், வானொலிக்கின்றேன், பழமொழிகின்றோம், அட்டவணைப்பர், நன்றியன், விருப்பன், ஈடுபாடன், இலக்கியர், இலக்கணர், தமிழ்வளர்ப்பிகள், இலக்கியப் படிப்பிகள், மாறுவேடி, நம்பிக்கைக் கேடி, தமிழ்மை, தமிழ் மன்னாயம், மக்கட் குழுவாயம், அணிய நாடுகள், சால்பியம், புரட்சியம், மக்களியம், ஒப்பியம், படைப்பியம்” என்பன அவற்றுள் சில.

சிலப்பதிகாரம் எனும் காப்பியத்துக்கு அப்பெயர் சிலம்பு காரணமாக வந்தது என்பதை நாமறிவோம். எனினும் அச்சிலம்பு எது? யாருடையது? என்று கேட்டால் நம்மில் பெரும்பாலோர் கண்ணகியின் காற்சிலம்பே காப்பியத்தின் பெயருக்குக் காரணம் என்று கூறுவோம். ஆனால் வ.சுப. மாணிக்கனாரோ தம்முடைய ’காப்பியப் பார்வை’ எனும் நூலில் இடம்பெற்றுள்ள ‘எந்தச் சிலம்பு?’ எனும் ஆராய்ச்சிக்கட்டுரையில் கோப்பெருந்தேவியின் தொலைந்துபோன சிலம்பே சிலப்பதிகாரப் பெயருக்குக் காரணம் என்பதைத் தக்க சான்றுகளோடு நிறுவியுள்ளார். சிலப்பதிகாரப் பெயர் பற்றிய என் ஆராய்ச்சி, முன்னையோர் ஒருமுகமாகக் கூறிவரும் கருத்துக்கு முற்றுமுரணாக இருந்தாலும், உண்மை காண முயலுதலும், கண்ட உண்மையை வலியுறுத்துதலும் தமிழ் மாணவரின் கடன் எனும் உணர்ச்சியின் அடிப்படையிலேயே இக்கருத்தை வெளியிடுகின்றேன் எனக் கட்டுரையின் முடிவில் அவர் முத்தாய்ப்பாய்க் கூறியுள்ள கருத்து ஆய்வாளர் அனைவரும் மனங்கொளவேண்டிய ஒன்றாகும்.

தமிழ்மொழிபால் தணியாக் காதல்கொண்ட அப்பெருமகனார், மழலையர் ஆங்கிலப்பள்ளிகளைத் தமிழ்ப்பள்ளிகளாக மாற்றவேண்டும்; தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பயிற்றுமொழி தமிழாதல் வேண்டும் எனும் கொள்கையினைப் பரப்பத் தமிழ்வழிக் கல்வி இயக்கங்கண்டு அதனைத் தமிழகம் எங்கணும் நடாத்திவந்தார். எழுத்துச் சீர்திருத்தம் எனும் பெயரில் எழுத்துமாற்றம் செய்து தமிழுக்கு ஊறுசெய்தலாகாது என்பதனைத் தம் கட்டுரைவழி அறிஞருலகுக்கு அறிவுறுத்தினார்.

வ.சுப. மாணிக்கனாரின் குணநலன்களைச் சுருங்க உரைப்பதென்றால்…

எளிய தோற்றமும், உயரிய நோக்கமுங்கொண்ட பழுத்த தமிழறிஞர் அவர்! சிறந்த சிந்தனையாளர்; தனித்தமிழ் இயக்கத்திற்குத் தாமே புதிய சொற்களைப் படைத்து எல்லாநிலைகளிலும் எங்கும் தமிழ்வளர ஓய்வென்பதறியாது உழைத்த உரஞ்சான்ற வித்தகர். அனைத்துக்கும் மேலாய்ப் பண்புவழி உலகினை நடத்தத் தம் மதிநுட்பத்தையும் நூற்புலமையையும் அசைவிலா ஊக்கத்தோடு பயன்படுத்திவந்த சான்றோர். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், பல நிலையினும் சிறந்தோங்கித் தமிழ்ப்பணிக்காகவே வாழ்ந்து பண்பின் திருவுருவாகத் திகழ்ந்த மூதறிஞர்.

தமிழ்ப்புலமையும், சான்றாண்மையும், சிறந்த பண்புநலன்களும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற அருந்தமிழறிஞரான வ.சுப.மாணிக்கனார், 1989ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் நாள் இரவு மாரடைப்பால் புதுச்சேரியில் காலமானார்.

அப் பேரறிஞரின் பொன்னுடல் இப்புவியைவிட்டு மறைந்தாலும், தன்னேரிலாத தமிழுக்கு அவராற்றியிருக்கின்ற அளப்பரிய பணிகளால் தமிழ்ச் சான்றோர் நெஞ்சில் என்றும் மாணிக்கமாய்ச் சுடர்விட்டு ஒளிர்வார்.

கட்டுரைக்கு உதவியவை:

  1. https://ta.wikipedia.org/wiki /வ._சுப._மாணிக்கம்
  2. வள்ளுவம் – வ.சுப. மாணிக்கனார் – மணிவாசகர் பதிப்பகம்
  3. தமிழ்க்காதல் – வ.சுப. மாணிக்கனார் – மெய்யப்பன் பதிப்பகம்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க