அடித்தட்டு மக்களுக்கு முடியாட்சியில் நில மானியம்

-சேஷாத்ரி ஸ்ரீதரன்

ஆறகளூர் திருக்காமீசுவரர் கோவில்

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், ஆறகளூர் திருக்காமீசுவரர் கோவில் கருவறை வடக்கு சுவர் கொண்ட 11 வரிக் கல்வெட்டு.

 1. ஸ்வஸ்தி ஸ்ரீ சகாத்தம் 1430 இதந் மேல் செல்லா நிந்ற விபவ சங்வற்சரத்து கும்ப நாயற்று பூர்வ்வபக்ஷத்து தெசமியும்
 2. ஆதித்தவாரமும் ஆயிலியத்து நாள் மகதைம[ண்ட]லம் ஆறகழ்ஊர் நாயினா[ர் திருக்காமீ]சுரமுடைய னாயனார் பாண்டியர் னாள் முதல் இந்தாள் வரைக்கும்
 3. திருநாளும் நடவாதிருக்கையில் சுவாமி நளோகண்டந்  வங்கி நாராயணந் மறைபுக்கார் காவலந் வல்லாள இராய பயங்கரந் சாடிக்காறர் கண்ட
 4. ந் ஸ்ரீமது எறமாஞ்சி துலுக்கண நாயக்கர் நாயனார் திருக்காமீசுரமுடைய நாயனாற்க்கு தேரும் சமைத்து திருநாளும் மாசித் திருநாளாக ஆயிலியத்திலே தேரும்
 5. மகத்திலே திருமசஞ்சநமும் ஆக கட்டளை பண்ணி திருநாள் நடக்கயில் தாமக _ _ _ நல்லூரில் கைக்கோளந் பெருமாள் மகன் பறையந் பறை எடுத்து, முதலியார் சன்னகமல
 6. னாயனார் ஆதிசண்டேசுர நாயநாரும் தாருமும் மாகேசுரரும் ஆக ஆறை னாயக மண்டபத்தில் நிறைவற நிறைந்து குறைவற கூடி இருந்து ஆதிசண்டேசுர னாயனார்
 7. திருவாய் மலர்ந்தருளிநபடி இந்த பறையனுக்கு உதித்_ _ _ டி ஆக ஆறகழ்ஊர் நன்செய் நிலத்தில் காளி அம்மை உடைப்புக்கு மேற்கு தியாகண நல்லூர் வய
 8. லுக்கு கிழக்கு நன்செய் உரூபாய் 250 ஓரணை ஏர் நடத்த பட்டு புன்செய் மாநிபமும் ஒருமனையும் ஒரு_ _ _ _ _க்கும் மானியமும் திருமஞ்சன வழிக்குதெற்கு இரண்_ _
 9. _ _ _ _ டு ஒரு தோட்டமும் கோயிலிலே நிற்றம் இருநாழி அருசியில் சோறும். மனையாவது சந்நதி தெருவில் வடசிறகில் ஒரு மனையும் குடுத்தருளி
 10.  _ _ _ _  ஆதிசண்டேசுரனாயனார் திருவாய் மலர்ந்தருளிநபடியாலே இந்த சுவந்திரம் உண்டாநது. இவன் தகப்பன் பெருமாளும் இவந் வற்கத்தாரும்  சந்திறாதித் _ _
 11. _ _ _ _ _ அனுபவித்து கொள்ளகடவர்களாகவும்இவை திருஞாந சம்பந்த பண்டிதர் எழுத்து. இவை பலமுதல் கங்காணி நயினார் எழுத்து.

கட்டளை – அளவுகோள்; கைக்கோளன் – போர்வீரன்; முதலியார் –  தலைவர்;  உதிரப்பட்டி – இறந்தோர் நினைவாக தரப்படும் நிலதானம்; உடைப்பு – கரைஉடைந்தோடும் கால்வாய்; ஓரணை – ஓரேர் மாட்டிணை; வடசிறகு – வடக்கு பக்கம்; சுதந்திரம் – உரிமை

விளக்கம்: சக ஆண்டு 1430 (பொ.ஊ.1508) விபவ ஆண்டு கும்ப ராசி ஞாயிறு, வளர்பிறை பத்தாம் நாள் ஞாயிற்றுக் கிழமை ஆயில்ய நட்சத்திரம் கூடிய நாளில் மகதைமண்டத்தில் அமைந்த ஆறகளூரில் வீற்றிருக்கும் திருக்காமீசுவரர் கோவிலில் பாண்டியர் ஆட்சிக் காலம் தொட்டே இக்கல்வெட்டு பொளிந்த நாள்வரையில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக  எந்த திருவிழாவும் நடக்காதிருந்தது. தலைவர் நாளோகண்டன் வங்கி நாராயணன் மறைபுக்கார் காவலன் வல்லாள இராய பயங்கரன் சாடிக்காரர் கண்டன் ஸ்ரீமத் எறமாஞ்சி துலுக்கண நாயக்கர் திருக்காமீசுரருக்கு தேர் ஒன்று செய்வித்துக் கொடுத்ததோடு மாசியிலே திருவிழாவும் மாசி ஆயில்ய நட்சத்திரத்தில் தேர் ஓடவும் மக நட்சத்திரத்தில் திருமஞ்சனம் நடக்குவும் காலஅளவாக வைத்தார். (சக ஆண்டும் விபவ ஆண்டும் ஒத்துப் போகவில்லை பிழையாக உள்ளது. விபவ ஆண்டு 1498 & 1558 இல் ஏற்படுகின்றது.) இப்படியாக திருவிழா நடக்கையில் போர்வீரனாக கைக்கோளன் பெருமாள் என்பான் மகன் பறையன் ஒருவன் இருந்தான். இப்பறையன் ஏதோ காரணத்தினால் இறந்து விடுகின்றான். பறை எடுத்து என்ற சொற்றொடர் இவன் இக்கோவிலில் பறை அடித்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது. அதனாலேயே இவன் குடும்பத்தாருக்கு இம்மானியம் கிட்டுகின்றது.

இத்திருவிழாவின் போது தலைவர் சன்னகமல நாயனார், ஆதிசண்டேசுவர நாயனார், மாகேசுவரர் ஆகியோர் ஆறைநாயக மண்டபத்தில் கூடி இருக்கின்ற போது ஆதிசண்டேச்சுவரர் தம்வாயால் சொன்னபடியே இறந்த இப்பறையனுக்கு உதிரப்பட்டியாக இதாவது, இறந்தோர் நினைவாக அவன் குடும்பத்தாருக்கு தரப்படும் நிலதானமாக ஆறகளூர் நன்செய் நிலங்களில் உடைந்தோடும் காளி அம்மை கால்வாய்க்கு மேற்கில் தியாகணநல்லூர் வயலுக்கு கிழக்கே நன்செய் நிலமும், உரூபாய் 250க்கு காளைகள் பூட்டிய ஓர் ஏர் நடத்தப்பட்டு புன்செய் மானியமும் ஒரு வீடும் தரப்படுகின்றது. (இரு இடங்களில் கல்வெட்டு சிதைந்துள்ளதால் அங்கு என்ன கூறப்படுகின்றது என்று அறியமுடிவில்லை.) திருமஞ்சன வழிக்கு தெற்கே ஒரு தோட்டமும் கோயிலிலே நித்தம் இரு பொழுதிற்கு அரிசி சோறும் வழங்க ஏற்பாடானது. இந்த வீடானது சைவ உணவு உண்ணும் பிராமணர், வெள்ளாளர் வாழுகின்ற கோவில் முன்னிலையான சன்னதி தெருவிற்கு வட பக்கத்தில் அமைந்திருந்தது. இந்த உரிமை யாவும் ஆதிசண்டேசுவரர் தம்வாயால் சொன்னதினாலே உண்டானது. இதை இவன் தந்தையும் இவன் வழிவந்தாரும் நிலவும் ஞாயிறும் நிலைக்கும் வரை அனுபவிக்கக் கடவார்களாக என திருஞான சம்பந்த பண்டிதன் எழுதி ஒப்பமிட்டான். கங்காணி பெரியநயினார் ஒப்பமிட்டுள்ளார். பொதுவாக கோவிலில் பணிசெய்யும் பிராமணர், பணிப் பெண்டுகள் உள்ளிட்ட கோவில் பணியாளர் வாழ ஒரு வீடும், நிலமும், கோவிலில் இருந்து சோறும் பெற்றனர். இந்த பறையனுக்கும் அவ்வாறு தந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை, வழக்கமானது தான்.

பறையன் இறந்ததால் அவரது உற்றார் உறவுகள் வாழ்வதற்கு பிராமணர் வாழும் தெருவை அண்டிய வட பகுதியில், இதாவது ஊரிலேயே வீடும் தரப்படுகின்றது. அதோடு ஒவ்வொரு நாளும் இரு பொழுதிற்கு அரிசிச் சோறும் கோவிலில் இருந்து வழங்கப்படுகின்றது. இவை அல்லாமல் நன்செய், புன்செய் நிலங்கள், தோட்டம் உள்ளிட்டனவும் மானியமாக வாழ்வாதாரத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன. சிறப்பு யாதெனில் இந்த பறையர் கோவிலினுள் சென்று பறை அடித்தார் என்பது தமிழக கோவில்களில் தீண்டாமை 16 ஆம் நூற்றாண்டு வரை இருந்ததில்லை என்றும் அது 17-18  ஆம் நூற்றாண்டில் தெலுங்கு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தான் வழக்கில் வந்திருப்பதாகத் தெரிகின்றது.

சனாதன தர்மம், அதன் நால்வருணக் கோட்பாடு ஆகியவற்றைக் கொண்டு பிராமணர் தலித்துகளை அழுத்தி விட்டதாக கடந்த 130 ஆண்டுகளாக தலித்திய முன்னோடிகளும், 100 ஆண்டுகளாக திராவிடமும் சொல்லி வந்த செய்தி இக்கல்வெட்டு மூலம் பொய் என்றாகிவிட்டது.

பி.கு: ஒரு செங்குந்தருக்கு பறையன் மகனாக இருக்க முடியாது, மகனும் செங்குந்தராகத் தான் இருக்க வேண்டும். அதே போல் ஒரு பறையனுக்கு ஒரு செங்குந்தன் தந்தையாக இருக்க முடியாது அவனும் ஒரு பறையனாகத் தான் இருக்க முடியும் . இதுவேசமூக நியாயம், முறை. ஆதலால் கல்வெட்டில் இடம் பெறும் கைக்கோளன் என்பது இங்கு செங்குந்தரை குறிப்பதல்ல மாறாக போர் வீரனையே குறிக்கின்றது.

சிலர் தீண்டாமையை நிறுவ புலவர்களின் கற்பனைப் பாடலை, இதாவது இடைச் செருகல், அடித்தல் திருத்தல் நிரம்பிய பாடலை நாடி ஓடி அதில் சில வரிகளைச் சுட்டுகிறார்கள். ஆனால் அடித்தட்டு மக்கள் நேரடியாக அனுபவப்பட்ட செய்திகளை ஏந்தும் கல்வெட்டுச் செய்திகளை புறந்தள்ளுகிறார்கள். இது அவர்தம் பொய்மைச் சார்பை காட்டுகின்றது.

பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 28, பக். 421- 422.

செங்கல்பட்டு மாவட்டம் திருவாடாணை திருவல்லீசுவரர் கோவில் கருவறை தென்சுவரில் பொறிக்கப்பட்டுள்ள 4 வரி கல்வெட்டு.

 1. வெகுதானிய வருஷம் சித்திரை மாதம் 10 நாள் ஸ்ரீ மத் கேதாயுதானர் காரியத்துக்கு கடவர் தாசரும் தானத்தாரும் வித்தூர் உடையார்க்  கோயில் சேவிக்கும் பெண்களுக்கு கல்வெட்டு பூறுவம். சேவிக்கு பெண்களில்லாத படியா
 2. லே வரதராசர் புதுசாக விடுவித்த  அக்கநாயன் மகள் அப்பநாச்சிகு சன்னதி தெருவில் தென்சிறகில் கீழை  இரண்டுமனை விட்டு மூன்[றாம்] மனையும், இவள் தங்கை அறமளத்த நாச்சிக்கு மேலை மனையும் அழகியர் மகள் [எ]றமநாச்சிக்கு
 3. இதில் மேலை மனையும், கம்பர் மகள் அழகிய நாச்சிக்கு வடசிறகில் மூன்றாமனையும், வெள்ளந்தாங்கினா மகள் பொன்னாகு கீழை மனையும் கி_ _ _ கீழ்பாதிரி [பு] நூற்[று] இருபது குழியும் நின்றப் பெற் பேரிலே நூறு குழியும் கோயிலே நாழி சோறும் சந்திராதி
 4. த்தவரையும் இம்மதிகா பெற்று கோயில் சேவுகும் கா_ _ _ சேவித்து [நடத்தக்] கடவார்களாகவும் [இத]ன் சுகத்திலே இருக் _ _ _ _ _

தானத்தார் – கோவில்பொறுப்பாளர்; பூறுவம் – முன் வைத்து; சேவிக்கும்- தொண்டு (அ) ஊழியம் செய்யும்; விடுவித்த – வேலைக்கு கொண்டுவந்து விட்ட; சன்னதிதெரு – கிழக்கும் மேற்குமாக கோவிலின் கிழக்கு வாயிலில் அமைந்த தெரு; சிறகு – தெருப் பக்கம்

விளக்கம்: கல்வெட்டில் சக ஆண்டு குறிப்போ அரசர் ஆட்சிஆண்டுக் குறிப்போ இல்லை. வெகுதானிய ஆண்டு 1518 அல்லது 1578 இல் நிகழ்கின்றது. சித்திரை மாதம் 10 ஆம் நாள் கேதாயுதானர் செயல்களுக்கு அமைந்த துறவியும் கோவில் பொறுப்பாளரும் வித்தூர் இறைவர் கோவிலில் தொண்டுசெய்யும் பணிப்பெண்களுக்கு இக் கல்வெட்டை முன் சான்றாக வைத்தனர்.

இக்கோவிலில் தொண்டாற்றும் பணிப்பெண் இல்லாமையால் வரதராசர் என்பவர் புதிதாக 5 பணிப் பெண்களை வேலைக்கு கொண்டு வந்து விட்டார். அவருள் அக்கநாயன் மகள் அப்பநாச்சிக்கு சன்னதி தெருவிற்கு தென் பக்கத்தில் கிழக்குமுகத்தில் அமைந்த இரண்டு வீட்டை அடுத்து மூன்றாவது வீடும், இவள் தங்கை அறமளத்த நாச்சிக்கு அங்கேயே மேற்கு முகத்தில் வீடும், அழகியருடைய மகள் எறமநாச்சிக்கு இதே மேற்கு முகத்தில் ஒரு வீடும், கம்பர் மகள் அழகியநாச்சிக்கு சன்னதி தெருவிற்கு வட பக்கத்தில் மூன்றாவது வீடும், வெள்ளம்தாங்கினான் மகள் பொன்னாளுக்கு கிழக்கு முகத்தில் அமைந்த வீடும் தரப்பட்டன. இவர்களுக்கு கீழ்பாதிரியில் புன்செய் 120 குழியும், நிலையாக வேலையில் நின்றவர் பெயருக்கு 100 குழியும் ஆக 220 குழி நிலமும் அதோடு இவர்களுக்கு கோவில் பணியாளருக்கு சோறு வழங்கும் வேளையில் ஒவ்வொருவருக்கும் நாழி அளவு சோறும் தரப்படுகின்றது. இந்த மதிப்பை நிலவும் ஞாயிறும் நிலைக்கும் காலம் வரை பெற்று அனுபவிப்பார்களாக.

முதல் கல்வெட்டிற்கு துணைச்சான்றாக இக்கல்வெட்டு வைக்கப்பட்டது. முதல் கல்வெட்டில் பயன்படுத்தும் சொற்களும் அதன் கருத்தடைவும் இதிலும் உணரப்படுகின்றது.

பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 36, பக். 256 – 257.

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அம்பலவாணசுவாமி கோவில் உள்ளே அமைந்த இரண்டாம் தூணில் பொறிக்கப்பட்ட 127 வரிக் கல்வெட்டு. இடத் தேவை கருதி சாய்வுக் கோடாக வரிகள் குறிக்கப்பட்டுள்ளன.

ஸ்வஸ்திஸ்ரீ ப்ரஸாத / ஞ் செ[ய்]தருளிய திருமு / வப்படி த்ரிபுவனச் / சக்ரவத்தி_  _ _ கோனே / ரின்மைய் கொண் / டான் களக்குடி நாட் / டுக் கருவாநல்லூரா / ன விக்கிரம பாண்டி / ய நல்லூர் ஸ்ரீ குலசே / கர விண்ணகர் ஆழ் / வார் கோயில் நம்புசெ / [ய்] வானுக்கும் இவ்வாழ் / வாற்கு மிழலைக் கூற் / றத்து நடுவிற்கூறு பு / ல்லூற்குடி பொன்பற் / றி உடையான் பொ _ _  / பெருமாளான ஐய்ய / ன் காலிங்கராயர் த / ம் பேரால் கண்ட மனம்பெரியான் ஸந்தி / க்கு திருப்படிமாற்றுள் / ளிட்டு வேண்டும் நிப / ந்தங்களுக்கு இந்நாட்டு / மானநிலை நல்லூரில் / வெட்டியாற்கு ஜீவி / தமாய் போந்தப் பா / டகப்படி  நிலம் ஒன் / றே முக்காலே ஒருமா / வும் இவர்களைத் தவி / ர்[ந்]து இரண்டாவதி /  னெதிராமாண்டு முத / ல் இம்மானநிலைந / ல்லூர் ஸபையார் /  க்கு காராண்மையும் _ _ _  / [வினி]யோகமும் தருவதா / ன அச்சும் காரியவா / ராட்சிச்சியும் வெட்டி / பாட்டமும் பஞ்சுபீலி /  சந்துவிக்கிரகப் பேறு / ம் வாசல்பேறும் இலா / ஞ்சினைப் பேறும் / பொன் வரியும் மற்றும் / எப்பேர்ப்பட்டினவும் / உட்பட தேவதான இ / றையிலியாய் இறு /  ப்பதாக இடப்பெற / வேணுமென்று ஐய்ய / ன் காலிங்கராயர் நம / க்குச்  சொன்னமையி / ல்  இவ்வாழ்வார்[க்கு] ஐ / யன் காலிங்கராயர் த_ _ / திருப்படி மாற்றுள்ளி / ட்டு வேண்டும் நிவந் / தங்களும் இன்னாட் / டு மானநிலை ந[ல்]லூரி / ல் வெட்டியாற்கு ஜீ / விதமாய்ப் போ(ர்)ந்த /  பாடகப்படி நிலம் ஒ / ன்றே முக்காலே ஒரு மா வும் இவர்களை தவிர் /  ந்து இம்மானநிலை[ந] / ல்லூர் ஸபையாற்கு /  காராண்மையும் இவ் / வாழ்வாற்கு கடமையு / ம் அந்தராயமும் வினி / யோகமும் தருவதான /  அச்சும் காரியவாரா / ட்சியும் வெட்டிப்பாட் / டமும் பஞ்சுபீலி சந் / து விக்கிரகப் பேறும் / வாசல்பேறும் இலா / ஞ்சினைப் பேறும் /  பொன் வரியு மற்றும் / எப்பேற்பட்டனவும் / உட்பட தேவதான இ / றையிலியாய் இறு / ப்பதாக இட்டு வரியி / லார் எழுந்திட்ட உள் / வரியும் நங்கேழ்வியு / ம் தரச் சொன்னோம் _ _ / கைக்கொண்டு திரு / ப்படி மாற்றுள்ளிட் / டு வேண்டும் நிவந்த / ங்கள் செல்லப்பண் / ணி இப்படி சந்த்ராதித்ய / வற் செல்வதாக கல்லி / லும் செம்பிலும் வெ  /  ட்டிவித்து கொள்க. / இவை செவ்விருக்கை / நாட்டு அச்சுதவயல் / அரையன் வண்டுவ / வரையப் பெருமானான கு / லசேகர விழுப்பரை / யன் எழுத்து உ யாண் / டு 3 நாள் 910 இவை  / மிழலைக்கூற்றத்து / வடபாம்பாற்று தண் / ணிரண்டக்குடியான /  தரணிவிச்சாதிர நல் / லூர் அடைக்குடை / யான் தேவபிரான் / தேசுடைய தேவனான /  காடுவெட்டி எழுத் / து உ இவை மதுரோ / தய வளநாட்டு கரஞை /  இருக்கை உழக்குடி மூ / த்தன் ஆள்கொண்டவி / ல்லியான பல்லவரா / [ய]ன் எழுத் / தினாலும் / ப்ரஸாதஞ் / செய்தரு /  ளிவித்து / இவை ப்ரஸாதஞ் செ / ய்தருளின திருமுகப்படி / கல்லில் வெட்டினேன் / இவூற்(த்) தச்சாரியன் / உடையானழகனான / பாண்டிய சிவாமணி யா /  சாரியன் எழுத்து உ / இவை ப்ரஸாதஞ் செயிதரு / ளின திருமுகப்படி கல்லில் / வெட்டினேன் இவ்வூ[ர்] தச்சாசா / ரியன் காகுந்தன் பரமனான /  ஆயிரத்தெண்வ ஆசாரியன் /  எழுத்து.

நம்புசெய்வான் – பூசனை செய்பவன்; திருப்படி – கோயில் வாயிற்படி; நிவந்தம் – பூசை செலவு திட்டம்; வெட்டியார் – கிராம பணியாளர் அல்லது பிணஞ்சுடுபவர்; போந்த – முடிவான, finalized; பாடகப்படி – நில அளவு; காராண்மை  – ஒரு வரி; அச்சும் – பணமாக இறுக்கும் வரி; காரியவாராட்சி –அரசு அலுவலர்காக செலுத்தும் வரி, வெட்டிப்பாட்டம் –   ஒரு வரி; பஞ்சுபீலி – பஞ்சின் மீதான வரி, கேழ்வி – அரசன் வாய்மொழி உத்தரவு; இறையிலி – ஆளும் அரசர்களுக்கு தான் வரி சென்றுசேராது ஆனால் இனி ஊர் அல்லது கோவில் மேம்பாட்டிற்கு அது பயன்படுத்தப்படும் என்ற வகையில் எப்போதும் போல் மக்களுக்கு வரி உண்டு.

விளக்கம்: இரண்டாவதின் எதிராமாண்டு என்பது 3-ம் ஆட்சி ஆண்டைக் குறிக்கின்றது. ஆனால் வேந்தர் பெயர் கல்வெட்டில் குறிக்கப்படவில்லை. கோனேரின்மை கொண்டான் என்று சிறப்பு அடைச்சொல் குறித்துள்ளதால் இது முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தது என்று குறித்துள்ளனர். இதுபொ.ஊ. 1271 ஆகும்.

களக்குடி நாட் டுக் கருவாநல்லூரான விக்கிரம பாண்டிய நல்லூர் ஸ்ரீ குலசேகர பெருமாள் கோயில் பூசனை செய்பவனுக்கும் இப்பெருமாளுக்கும் மிழலைக் கூற்றத்து நடுவிற்கூறு புல்லூர்குடி பொன்பற் றி உடையான் பெருமாளான ஐயன் காலிங்கராயன் தனது பேரால் கண்ட மனம்பெரியான் கோயில் திருப்படியை மாற்றுதல் உள்ளிட்ட வேண்டும் பூசை செலவிற்கு இந்நாட்டு மானநிலை நல்லூரில் வெட்டியாற்கு பிழைப்பாய் இருக்கவேண்டி முடிவு செய்து தரப்பட்ட பாடகப்படி நிலம் ஒன்றே முக்காலே ஒருமா ஆகும்.  இந்த வெட்டியார்களைத் தவிர்ந்து மூன்றாம் ஆட்சி ஆண்டு முதல் இம்மானநிலைநல்லூர் கோவில் சபையார்க்கு காராண்மை எனும் வரியும், பெருமாளுக்கு கடமை எனும் வரியும் அந்தராயமும், வினியோகமும், பணவரியும், காரியவாராட்சியான அரசு அலுவலர் வரியும்,  வெட்டிபாட்ட வரியும், பஞ்சு வரியும், சந்துவிக்கிரகப் பேறும், வாசல்பேறும், இலாஞ்சினைப் பேறும், பொன் வரியும் மற்றும் எப்பேர்ப் பட்டனவும் உட்பட எல்லாம் தேவதானமாகப் போய்விடும், அரசற்கு இனி போகாத இறையிலியாய் எப்போதும் போல் மக்களால் வரி கட்டப்படவேண்டும் என்று ஐயன் காலிங்கராயன எனக்குச்  சொன்னதால்  இப்பெருமளுக்கு உள்வரியும் தர உத்தரவிட்டு இவற்றைக் கைக்கொண்டு கோயில் திருப்படி மாற்றம் உள்ளிட்ட தேவையான செலவுகளை எதிர்கொள்ள வழி செய்தான் செவ்விருக்கை நாட்டு அச்சுதவயல் அரையன் வண்டுவ  வரையப் பெருமானான குலசேகர விழுப்பரையன், மதுரோதய வளநாட்டு கரஞை இருக்கை உழக்குடி மூத்தன் ஆள்கொண்டவில்லியான பல்லவராயன் என சில அரசர்கள் இப்படி கையெழுத்திட்டு நிலவும் ஞாயிறும் நிலைக்கும் வரையில் இந்த ஏற்பாடு செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிவித்து கொள்ளச் சொல்கின்றனர்.

இக் கல்வெட்டில் இவர்கள் தவிர்ந்து என்று தெள்ளத்தெளிவாக வெட்டியார் அனுபவிக்கும் நிலத்தை தவிர்த்து பிறவற்றில் வரும் காராண்மை வரி வருவாய் இனி கோவில் சபையார்க்கு செல்வதாக என எழுதிக் கொடுத்த போதும் காராண்மை என்பதற்கு உழும் உரிமை என்ற பொருளைக் கொண்டதால் வெட்டியார் நிலம் இறையிலி ஆக்கப்பட்டு கோவிலுக்கு தேவதானமாக ஆக்கப்பட்டு விட்டதாக தென்னிந்தியக் கல்வெட்டு தொகுதி 22 பகுதி 2 நூலில் பிழைபட பொருள் கூறி உள்ளனர்.  இதே போல் தப்பும் தவறுமாய் பொருள் தந்ததால் தானோ என்னவோ இராசராசன் பறையரிடம் இருந்து நிலம் பறித்துக் கொண்டான் என்பதும்? அக்கல்வெட்டின் மூல பாடம் தந்தால் தக்க பொருளை அறிந்து கொள்ள முடியும்.

பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 22 பகுதி 2, பக். 350 – 351.

https://www.youtube.com/watch?v=wk_0FI5lg14

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.