-இலந்தை சு. இராமசாமி 

நாட்டுப் படலம்

மா மா காய் – அறுசீர் விருத்தம்

பசுமை சூழ்ந்த எழுநாடு
பாண்டி யர்தம் வளநாடு
ஒசிந்து செல்லும் பஃறுளியின்
ஊட்டம் பெற்ற திருநாடு
திசைகள் எட்டும் புகழ்பரப்பித்
திகழ்ந்த நாடு, பொழில்நாடு
இசைகள் பாடும் பாவாணர்
ஏற்றம் பெற்ற எழில்நாடு (43)

பொருநை வையை, பஃறுளியும்
புகழ்சேர் குமரி பம்பைநதி
பெருகிப் பொங்கும் காவிரியும்
பெருமை சேர்த்த நதிநாடு
திரும்பு கின்ற திசையெல்லாம்
திகழும் மலைகள் நிறைநாடு
கரும்பு போலத் திதிக்கின்ற
கன்னல் தமிழின் மொழிநாடு (44)

குமரிக் கோடும் அதைத்தாண்டிக்
கூடும் பெரிய நிலப்பரப்பும்
அமைந்திருந்த பெருநாட்டில்
அம்மை மீனாள் முன்னாளில்
அமர்ந்தே ஆட்சி புரிந்தாளாம்
அந்தக் காலப் பாண்டியர்க்குத்
தமரே அன்றி எதிரியெனச்
சாற்ற எவரும் அங்கில்லை (45)

காய் காய் காய் மா – எண்சீர் விருத்தம்

அம்மையருள் மீனாட்சி பரம்பரையில் வந்தோர்
ஆண்டுவந்த தென்மதுரைத் திருநாட்டில் அந்நாள்
செம்மைபெறும் உக்கிரபாண் டியனென்னும் மன்னன்
சிறப்பாக ஆண்டுவந்தான், தேசத்தில் முன்னர்
வம்புசெய்த கடற்கொள்ளைக் குறும்பர்களை மன்னர்
வளைத்தொடுக்கி விட்டதனால், அந்நாட்டில் மக்கள்
இம்மியள வும்பகைமை இல்லாமல் தம்முள்
ஏதுமொரு பேதமின்றி இயல்பாக வாழ்ந்தார். (46)

சுதைகொண்டு மனைகட்டி, வாய்க்கால்கள் வெட்டி
சோவென்று பெய்மழைநீர், அவற்றுள் திருப்பி
அதைச்சேர்க்கக் குளம்வெட்டி, நீர்த்தட்டுப் பாடே
அங்கில்லை எனும்வண்ணம் சேமங்கள் செய்தார்
விதியாக முப்போகம் விளைகின்ற நஞ்சை
வெவ்வேறு தானியங்கள் விளைகின்ற புஞ்சை
இதுபோல புவியெங்கும் இல்லையெனும் வண்ணம்
எழில்கொஞ்சும் தென்மதுரை புகழ்பெற்ற தன்றே! (47)

நாநயமே உண்டுமிக, இந்நாளைப் போல
நாணயங்கள் ஏதுமில்லை, பொருள் மாற்றம் கொண்டார்
பாநயமே மிகுந்திருக்கும் பாடல்களை நெய்த
பாவாணர் நிறைந்திருந்தார், பைந்தமிழில் வல்லார்.
பூநயமே நுகர்ந்திருக்கும் வண்டுகளைப் போலே
புதுநயமாய்க் கலைபயிலும் நாட்டங்கள் கொண்டார்.
ஓ,நியமம் மிகக்கொண்டார், உடல் வலிமை கருதி
உடற்பயிற்சிக் கூடங்கள் பலப்பலவும் கண்டார் (48)

காய் காய் மா தேமா – எண்சீர் விருத்தம்

கனிவகைகள் விளைவனவோ கொஞ்ச மில்லை
காய்கறிகள் மிகப்பொலிவாய் அவற்றை விஞ்சும்
புனிதமுள பூசைக்குத் தேவை யான
பூக்களுக்கும் பஞ்சமில்லை, அந்த நாட்டில்
மனைகளிலே வெளித்திண்ணை கட்டி வைத்தே
வருகின்ற வெளியார்க்கு வசதி செய்தார்
தனிமையிலே உண்ணாமல் விருந்தை ஓம்பும்
தகைமையிலே சிறந்திருந்தார், தகுதி மிக்கார் (49)

போராடும் வாய்ப்பில்லை என்ற போதும்
பொருதுகிற மல்லர்களோ நிறைய உண்டு.
தேரோடும் வீதியுண்டு, சொக்க நாதர்
தெருவேறி வீதியுலா வருவதுண்டு
நீராடக் கடற்கரையில் வசதி யுண்டு
நெஞ்சோடு கலப்பதற்குக் காதல் உண்டு
தாராடும் வாழைமரத் தோப்பும் உண்டு
சந்தனத்துக் காடுண்டு, வாசம் உண்டு (50)

கடற்கரையின் வாயிலிலே சுங்கம் வாங்கும்
கணக்காயர் அலுவலகம் உண்டு, நீல
இடப்பரப்பில் பொருளேற்றி வந்திருக்கும்
எண்ணற்ற நாவாய்கள் நிற்ப துண்டு
புடைப்புடைய மீன்வகைகள் நித்த நித்தம்
புதுபுதிதாய் ஏற்றிவந்து விற்பதுண்டு
கடற்பறவைக் கூட்டங்கள் மேற்ப றந்து
கச்சிதமாய் வட்டமிடும் காட்சி உண்டு? (51)

அரணாக நெடுஞ்சுவர்கள் மன்னன் வாழும்
அரண்மனையைச் சூழ்ந்திருக்க, அதனை ஒட்டி
உருவாக்கி வைத்துள்ள அகழி ஒட்டி
உயர்ந்திருக்கும் காவல்மரக் காடும் உண்டு
வருவோர்க்கும் போவோர்க்கும் தடையே இன்றி
வாசலென்றும் அடைக்காமல் திறந்திருக்கும்
குருவாக அகத்தியரைக் கொண்டி ருந்த
கோமகனும் சிறப்பாக ஆண்டு வந்தான். (52)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *