பண்டைக் கால குற்ற தண்டனை
-சேஷாத்ரி ஸ்ரீதரன்
Codified law என்பதற்கு குடிமை ஒழுங்கை சமூகத்தில் நிறுவ தொகுத்து பதிவுபடுத்திய சட்டம் என்று பொருள். இப்படி நெறிமுறைப்பட்ட சட்டம் என்பது பண்டைய தமிழகத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. அரையர்கள் எனும் அரசர்கள் அந்தந்த நேரத்திற்கு சினந்து வெகுண்டு இட்ட ஆணைகளே சட்டங்களாகி நடைமுறைப் படுத்தப் பட்டன என்று தெரிகின்றது. இத்தகு தான்தோன்றிச் சட்டங்கள் நியாயமானதாக இருக்கவில்லை. பொதுவானதாக இருக்க வில்லை. ஏனென்றால் செல்வமுடையவர் தம்மிடம் இருந்த செல்வத்தால் கோவிலில் விளக்கேற்றி விட்டு தப்பிவிட்டனர். குற்றங்களை மெய்ப்பித்து தண்டனை பெற்றுத் தரும் காவல்துறை போன்ற அமைப்பு இல்லாமையால் ஊர் மக்கள் தாமாகவே முன் வந்து குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும் அவலநிலையே இருந்துள்ளது. மனுதருமச் சட்டம் என்பதெல்லாம் இருந்ததில்லை என்றே தெரிகின்றது. இவற்றை எல்லாம் கீழ்க் காணும் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.
தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், ஜம்பை ஜம்புநாதர் கோவில் கருவறை வடக்கு சுவர் 18 வரிக் கல்வெட்டு.
- ஸ்வஸ்தி ஸ்ரீ கோ இராஜகேசரி பந்மராந த்ரிபுவநச் சக்கரவ
- த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 3 ஆவது
- வாணகோப்பாடி ராஜராஜவள நாட்டுப் பெண்ணைத் தெந்கரை
- க்கீழ் கொன்றைநாட்டு முடியனூரிருக்கும் பள்ளிசேரி அடியநம்
- பியான கோவலராயப் பெரையன் மேற்படி நாட்டுப் பெண்ணை வட
- கரைச் செங்குன்ற நாட்டு வாளைவெட்டியில் இருக்கும் வெள்ளாளன் பொ
- ன் பற்றியுடையான் குன்றன் சீருடையானைக் கோவலராயர்(யர்) வை
- [வ]டையிலே இவன் சேரி அடியநம்பி விருகத்தை எய்ய பிழை
- ச்சு இச்சீருடையான் மேலே அம்புபடப் பட்டமையில் எழு
- பத்தொன்பது நாட்டுச் சித்திரமேழிப் பெரிநாடுங் கூடி
- இருந்து இக்கோவலராயப் பெரையன் மேலே பழியாக்கி இவந்
- ரேலிந்தப் பழிதீரக் கொண்ட நடையாவது இன்நாட்டுச் ச
- ண்பையாந வீர்ராஜேந்த்ரபுரத்து உடையார் திருத்தாந் தோன்
- றி ஆள்ளுடையார் ஸ்ரீ கோயிலிலே இரண்டு திருநுந்தாவி
- ளக்கு வைக்கக் கடவநாக்கி இவந் விட்ட சாவாமூவாப் பசு
- அறுபத்து நாலு. இப்பசு அறுபத்து நாலுங் கைக்கொ
- ண்டோம் இக்கோயிலில் திருவுண்ணாழிகை ஸபையோம்.
- சந்த்ராதித்தவல். இது பந்மாயிஸ்வர ரக்ஷை.
பள்ளி சேரி – பள்ளி மக்கள் வாழும் சேரி, பெரையன் – பறையன், விருகத்தை – செந்நாய் வகை; எய்ய – ஏவ; பிழைச்சு – பிழையாக, தவறாக; பட்டமை – செத்ததனால்; பழியாக்கி – குற்றஞ் சுமத்தி; நடையாவது – நடவடிக்கையாவது; திருவுண்ணாழிகைச் சபையோர் – கருவறைப் புகும் பிராமணர்; பன்மாகேசுவரர் ரக்ஷை – சிவனடியார் காப்பு.
விளக்கம்: இரண்டாம் குலோத்துங்கனது மூன்றாம் ஆட்சி ஆண்டில் (பொ.ஊ. 1135-1136) வாணகோப்பாடி இராசராச வளநாட்டின் கண் அமைந்த தென் பெண்ணையின் தென்கரை ஊரான கீழ்க் கொன்றை நாட்டு முடியனூரில் உள்ள பள்ளிச்சேரியில் வாழுகின்ற அடியநம்பி கோவலராயன் எனும் பறையன் வாணகோப்பாடி இராசராச வளநாட்டின் வடகரைச் செங்குன்ற நாட்டில் வாளைவெட்டி ஊரில் இருக்கும் வெள்ளாளன் பொன்பற்றியுடையான் குன்றன் சீருடையான் என்பானைக் வேட்டையின் போது இவனுடைய சேரியைச் சேர்ந்த அடியநம்பி இவனுடன் சென்று வேட்டை நாயை ஏவ அதே நேரம் கோவலராயன் தொடுத்த அம்பு குறி தவறி சீருடையான் மேல் பட்டு தைத்து அவன் இறந்து போகின்றான். எழுபத் தொன்பது நாட்டின் சித்திரமேழிப் பெரியநாட்டு மக்கள் கூடி வந்து இருந்து இக் கோவலராயப் பறையன் மீது கொலைப் பழி சுமத்துகின்றனர். கோவலராய பறையன் ஒரு அரசன் நிலையில் இருந்ததால் அவனை தப்பவிடாமல் செய்யவே இவ்வாறு ஊரே திரண்டு அவனது குற்றத்திற்கு நடவடிக்கையாக சண்பை (ஜம்பை) திருத்தான் தோன்றி இறைவர் திருக்கோவிலில் இரண்டு திருநொந்தா விளக்கு ஏற்ற வேண்டும் என்று தண்டனையாக இடுகின்றனர். அதன்படி கோவலராயன் அறுபத்து நான்கு சாவோ மூப்போ எய்தாத இளம் பசுக்களை தருகின்றான். அவற்றை கருவறை பிராமணர்கள் ஏற்றுக் கொண்டு நிலவும் ஞாயிறும் நிலைக்கும் நாள் வரை நந்தாவிளக்கு ஏற்றுவதாக உறுதி கூறினர். இந்த நடைமுறையை சிவனடியார் காக்க வேண்டும் என்ற குறிப்போடு முடிகின்றது.
கோவலராயன் செல்வ வளமுடையவன் என்பதால் 64 பசுக்களை அவனால் கொடுக்க முடிந்தது. இங்கே எழும் கேள்வி கோவிலில் விளக்கேற்றுவது எப்படி குற்றத்திற்கான தக்க தண்டனையாக இருக்க முடியும் என்பது தான்? தண்டத் தொகை, சிறைத் தண்டனை என்றால் அவற்றை தண்டனை என்று கருதலாம். இது அப்படி அல்ல. பழமையில் சிறைத் தண்டனை என்பதே இருந்ததில்லை போலும் என்று எண்ணத் தோன்றுகின்றது.
இக்காலத்தே காடுகள் ஒதுக்குபுறமான மலைப் பகுதியில் இருப்பது போல் அல்லாமல் அக்காலத்தே காடுகள் நடுவே தான் ஊர்களே அமைந்திருந்தன என்பது கோவலராயன் வேட்டையில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. அக்கால் ஊர்கள் தொடர்ச்சியாக அல்லாமல் விட்டுவிட்டு இப்படித் தான் காட்டின் நடுவே இருந்தன போலும்.
பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 22 பகுதி I, பக். 65-66.
தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், ஜம்பை ஜம்புநாதர் கோவில் கருவறை சுவரில் பொறிந்துள்ள 11 வரிக் கல்வெட்டு
- ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியு ந்தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்
- ச்சாலை கல மறுத்தருளி வேங்கை நாடுங் கங்கபாடியு ந்தடிகை பாடியு நுளம்ப பாடியும் குடமலை நாடும் கொல்ல
- முங் கலி[ங்]கமு மெண்டிசை புகழ்தர வீழ மண்டலமு மிரட்டபாடி யேழரை யிலக்கமு ந்திண்டிறல் வென்றி தண்டாற் கொண்
- ட தன்னெழில் வளரூழி யெல்லாவியாண்டு ந்தொழுதக விளங்கு மியாண்டே செழியரைத் தேசுகொள் ஸ்ரீ கோவிராச ராச ராசகேசரி ப
- ந்மரான ஸ்ரீ ராசராச தேவற் கியாண்டு 28 ஆவது. இவ்வூர் வியாபாரி அங்காடி பொற்றாமன் வைச்சுக் கொ[ண்]டிருந்த பெண்டாட்டி
- [சீமா]தேவி பெற்றியை முனைப்பாடி நாவலூரிலிருக்கும் பிராட்டி சீ[ரா]ளன் இராத்திரி [சீ]மாதேவிபெற்றியை வலியப்புக்கு பிடி
- _ _ _ _ அங்காடி பொற்றாமன் என் மணவாட்டியை நானிருக்கவே வலிய பிச்சானென்று புக்கு படக் குத்தினமையில் அங்காடி
- [பொ]ற்றாமன் மேல் வழக்கழிவு இலாமையில் பிராட்டி சீராள மாடைத் தோடொருங்கி பிராட்டி சீராளனுக்காக ஒரு நொந்தா விளக்கு
- _ _ _ _ த்தான் தோன்றியாள்வார்க்கு சந்த்ராதித்தவற் நிசத முழக்கு எண்ணை யட்டி விளக்கெரிக்க அங்காடி பொற்றாமன் குடுத்த பொ
- [ன் ப]தின் கழஞ்சும் கொண்டு நிசத முழக்கெண்ணை யச்சுவோமானோ யிந்நாட்டு பெண்ணைத் தெந்கரை பாலைப்பந்தலூ
- [ரோம்] சந்த்ராதித்தவற். பந்மாஹேஸ்வர ரக்ஷை.
புக்கு – புகுந்து; பிடிச்சான் – கட்டிப் பிடித்தான்; படக் குத்தி – செத்து விழும்படிக் குத்தி; வழக்கழிவு – குற்றம் இல்லாமல் ஒழிய, மாடைத்தோடொருங்கி – ; நிசதம் – ஏற்பாடு, அட்டி – ஊற்றி
விளக்கம்: இராசராசனின் மெய்க்கீர்த்தியோடு இக் கல்வெட்டு தொடங்குகின்றது. அவனது 28 ஆவது ஆட்சி ஆண்டில் (பொ.ஊ. 1012) பொறிக்கப்பட்டுள்ளது. சண்பையில் வாழும் வணிகன் அங்காடி பொற்றாமன் வைத்துக் கொண்டிருந்த சீமாதேவி பெற்றியை முனைப்பாடி நாவலூரில் வாழும் பிராட்டி சீராளன் என்பான் இரவில் வீடு புகுந்து சீமாதேவியைக் கட்டிப் பிடித்தான். எதிர்பாரத வகையில் அங்கு வந்திருந்த அங்காடி பொற்றாமன் “நானிருக்கும் போதே என் மணவாட்டியை வலியப் வந்து புகுந்து கட்டிப் பிடித்தாயா”? என்று உள்ளே புகுந்து சீராளன் செத்து விழுமாறு குத்தினான். மாடைத் தோடொருங்கி என்ற சொல்லுக்கு பொருள் விளங்க முடியவில்லை என்பதால் தெளிவான விளக்கம் அறிய முடியவில்லை. இதனால் அங்காடி பொற்றாமன் மேல் குற்ற வழக்கு போகாததால் பிராட்டி சீராளனுக்காக ஒரு நுந்தா விளக்கு எரிக்க தான்தோன்றி இறைவர்க்கு நிலவும் ஞாயிறும் நிலைக்கும் காலம் வரை உழக்கு எண்ணெய் ஊற்றி விளக்கு எரிக்க ஏற்பாடாகி அதற்கு பொற்றாமன் 15 கழஞ்சு பொன் கொடுத்தான். அதைப் பெற்றுக் கொண்டு பெண்ணைத் தென்கரையில் பாலைப்பந்தலூர் வாழும் பிராமணர் உழக்கு எண்ணை ஊற்றி நந்தா விளக்கு எரிப்பதாக உறுதி கூறினர்.
‘’யாரோ ஒருவன் வைப்பாட்டி தானே’’ என்று சீராளன் தகாத செயலில் ஈடுபட்டு அதன் எதிர்வினையால் மாண்டான். இது அந்நாளில் பண்பற்றோர் சமூகத்தில் வாழ்ந்ததற்கு எடுத்துக்காட்டு. அதே நேரம் செல்வம் உள்ளவன் தண்டனை பெறாமல் தப்புவான் என்பது அங்காடி பொற்றாமனால் இக்கல்வெட்டில் மெய்ப்படுகின்றது. ஒரு கட்டமைந்த பேரரசுக் காலத்திலேயே இப்படி என்றால் சங்க காலத்திலே மட்டும் எப்படி இருந்திருக்கும் நீதியும் நியாயமும்?
பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 22 பகுதி I, பக். 72-73.
தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், ஜம்பை ஜம்புநாதர் கோவில் கருவறை தெற்கு சுவரில் பொறிந்துள்ள 12 வரிக் கல்வெட்டு
- ஸ்வஸ்தி ஸ்ரீ திருமருவி[ய] செங்கோல் வேந்தன் முன்னோன் சேனை பின்னதுவாக இரட்டபாடி ஏழரை இலக்கமும் கொண்டு கொல்
- லாபுரத்து சயத்தம்பம் நாட்டி முன்னாணை தவிர்த்து த[ன்]னாணை செலுத்தி எதிரமர் பெறாது எண்டிசை திகழ பறைய
- து கறங்க ஆங்கது கேட்டு பேராற்றங்கரை கொப்ப[த்து] வந்தெதிர் பொருந ஆஹ[வ]மல்லன் அஞ்சி புறங்கிட்டோட ஆ
- னையுங் குதிரையும் பெண்டிர் பண்டாரமும் ஆங்கவன் விபவம் அ_ங்கலுங் கொண்டு விஜை[ய] அபிஷேகம் செய்
- து வீரசிங்காசனத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பந்மரான உடையார் ஸ்ரீ ராஜேந்த்ர தேவற்[கு] யாண்[டு] 3 வது. வாணகோப்பாடியான ரா
- ஜேந்த்ர வளநாட்டு பெண்ணைத் தென்கரை நரிப்பள்ளி நாட்டு கூகூர்ப்பாடி யிருக்கு[ம்] மலையமான் காட்டிமேலூருடையான் பழங்கூரன் கு
- ன்றன் மேற்படியூரிருக்கும் வீரர்பு[த்]திரன் தாய் சே[ந்]தன் உமையாளை இறைகாட்ட அவள் இறை கடவேனல்லேனென்று சொல்ல அவளை
- கொச்செய்விக்க. அவள் நஞ்சு குடித்து சாவ. நான்கு திசை பதினெண் பூமி நாநாதேசியும் கூட நிரைந்து. இந்த பழங்கூரன் குன்றன் மேல் ப
- ழியாக்கி [இ]வன் மேலிந்த பழிதீர கொண்ட நடையாவது வாளையூராகிய ராஜேந்த்ரபுரத்து திருத்தான் தோன்றி மாதேவர்க்கு திருநுந்தா விளக்
- கொன்று வை[க்க]க் கடவனாக்கி. இவன் வைத்த காசு முப்பத்திரண்டு. இக்காசு முப்பத்திரண்டு வாளையூரா[கிய] ராஜேந்த்ரபுரத்து நகரத்தோம் கொண்டோ
- ம் கொண்டு அருமொழிதேவ[ன்] மரக்காலோடு ஒக்கும் உழக்கால் நிசதம் உழக்கெண்ணை அட்டகடவோம் இவ்வெண்ணை வணிக்கிராமத்தோம்
- இருகூறும், சங்கரப்பாடியோம் ஒருகூறும். சந்திராதித்தவல். இது பன்மாஹேஸ்வரர் ரக்ஷை.
இறை – வரி அல்லது கடன்; இறைகாட்ட – கட்ட வேண்டிய பணம் இவ்வளவு என்று சொல்ல; கொச்செய்விக்க – இழிமை செய்ய, சிறுமைபடுத்த, மானபங்கம் செய்; பழியாக்கி – குற்றம் சுமத்தி; பழிதீர – குற்றதண்டனையாக; நடை – நடவடிக்கை; ஒக்கும் – ஈடான, பொருத்தமான; இருகூறு – 2/3; ஒருகூறு- 1/3
விளக்கம்: இராண்டாம் இராசேந்திரனின் மெய்கீர்த்தியோடு தொடங்கும் கல்வெட்டு அவனது 3 ஆம் ஆட்சிஆண்டில் (பொ.ஊ. 1056-1057) வாணகோப்பாடியான ராசேந்திர வளநாட்டு பெண்ணைத் தென்கரையில் நரிப்பள்ளி நாட்டு கூகூர்ப்பாடியில் இருக்கும் மலையமான் காட்டி மேலூருடையான் பழங்கூரன் குன்றன் அதே ஊரைச் சேர்ந்த வீரபுத்திரன் என்பான் தாய் சேந்தன் உமையாளை இறை (வரி/கடன்) கட்ட சொல்கிறான். அவள் இறை கட்ட முடியாது என்று மறுக்கிறாள். அப்போது பழங்கூரன் குன்றன் அவளை சிறுமைப்படுத்தி அல்லது மானபங்கப்படுத்தி விடுகின்றான். இது அன்னாளிலே பெண் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமை ஆகும். இதனால் மனமுடைந்த அவள் நஞ்சு அருந்தி மாண்டு போகின்றாள். இதனால் வெகுண்டு திரண்ட நாற்றிசை பதினெண்பூமி நாநாதேசி வணிகர் கூடி நிரைந்து இந்த பழங்கூரன் குன்றனை குற்றவாளி ஆக்கி இதற்கு தண்டனை நடவடிக்கையாக திருத்தான்தோன்றி இறைவர்க்கு திருநுந்த விளக்கு ஒன்று வைக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். அதற்கென்று இவன் கொடுத்த காசு 32 ஆகும். இந்த 32 காசை வாளையூர் ராசேந்திரபுரத்து நகர்த்தவர் பெற்றுக்கொண்டனர். இதை வைத்து அருமொழித் தேவன் மரக்காலுக்கு ஈடும் இணையுமான உழக்கினால் நிலவும் ஞாயிறும் நிலைக்கும் வரை நுந்தா விளக்கிற்கு உழக்கெண்ணை ஊற்றுவதாக உறுதி கூறுகின்றனர். இந்த வெண்ணையை வணிகக் கிராமத்தார் இரண்டு கூறும் (2/3,) சங்கரபாடி வணிகர்ஒரு கூறும் (1/3) தர ஏற்பாடு செய்தனர்.
ஒரு சாதியார் அல்லது ஒரு தொழில் செய்வோர் கூட்டமாக அழுத்தம் கொடுத்தால் தான் அநியாயத்திற்கு நீதியும் நியாயமும் அந்நாளில் கிடைத்தது போலும் என்பதை மேற்கண்ட இக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.
பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 22 பகுதி I, பக். 75-76.
வட ஆர்க்காடு மாவட்டம், வந்தவாசி வட்டம், வழுவூர் பிரம்மபூரீசுவரர் கோவில் திருச்சுற்றில் தென் சுவரில் வெட்டப்பட்ட 5 வரிக் கல்வெட்டு,
- சறுவாதிகாரி வருஷம் மாசிமாதம் 30 நாள் வழுகூர் ஊரவ[ர்] எம்மில் பொரிந்தியிசை ஓலை[யிட்]டு[க்] கொண்டபடி . மீநவராயர் அவப்படாக்காரி கடைப்பற்ற பொருமாள் கோயிலிலே பூந்து அடைத்துக் கொள்ளுகையில்.
- நாளது சாக கடைவனாகவும் நாளது சாகையில் ஊரிலே இருபது பணம் குடுக்க கடவோம் ஆகவும் மேலைக்கும் யாதொருவர் பறை எடுத்ததுண்டாநால் [இரு]பது பணம் குடுக்க கடைவோம் ஆகவும்
- பறை எடுத்த அன்று சாகக் கடைவனாகவும் யாதொருத்தர் ஒருநாள் யிரண்டு நாள் தாமதம் சொன்னதுன்டானா[ல்] அவன் சாதிக்கும் பிறம்பாய் நங்கை நாசிவனும் விலக்கி நன்மை தின்மை துறந்து சாதிக்குப் பி
- றம்பாகக் கடைவனாகவும் யிடங்குடுத்தவனே இந்தச் சேதம் உள்ளது குடுத்து யிராசகரத்துக்கும் அபராதமும் குடுத்து ஆவிக்க[ட]னையும் படக்கடைவனாகவும். இப்படி சம்மதித்து யிசை ஓலையிட்டுக் கொண்டோம் இவ்
- வனைவரோ(ம்). மிப்படிக்கு இவை ஊற்கு சமைந்த அபிமான பூஷண வேளார் எழுத்து. இப்படிக்கு இவர்கள் சொல்ல எழுதினமைக்கு ஊற்க்கு தண்டகநாட்டு ப்ரமராயர் திருமலையார் மகன் அழகிய வரதன் எழுத்து.
இசை ஓலை – உடன்பாட்டு ஒப்பந்தம், consent agreement; கடைப்பற்ற – பின்தொடர, துரத்த, follow; நாளது –இற்றை நாள்; மேலைக்கும் – இதற்கு மேலும், furthermore; பறை – அறிவிப்பு, சேதி, information; பிறம்பாய் – புறம்பாக, எதிராக, against; சேதம் – சீர்கேடு; இராசகரம் – அரசாங்க வரி; ஆவிக் கடன்- பிறவிக்கடன்; சமைந்த – உடன்பட்ட.
விளக்கம்: தமிழ் அறுபது ஆண்டு குறிப்பு கல்வெட்டில் இடம்பெறுவது கம்பண்ணர் படையெடுப்பிற்கு பிறகு வழக்கில் வந்தது. அதற்கு முன் இது அருகிய வழக்காகவே இருந்துள்ளது. இக்கல்வெட்டில் வேந்தன் பற்றிய குறிப்பு இல்லாகினும் சோழர் கால பிரம்மராயர் பதவி இதில் இடம்பெறுகின்றது. இந்தப் பதவி நாயக்கர் ஆட்சியில் இல்லை என்றாலும் விசயநகர ஆட்சியின் முற்பகுதி வரை அருகிய பதவியாக இருந்துள்ளது என்பதால் 15 – 16 ஆம் நூற்றாண்டில் இந்த சர்வாதிகாரி ஆண்டை வைக்க வேண்டி உள்ளது. சர்வாதிகாரி ஆண்டு 1408, 1468, 1528 ஆகிய ஆண்டுகளில் நிகழ்கின்றது. இவற்றில் ஏதோ ஒரு ஆண்டில் இக் கல்வெட்டை சுட்டலாம்.
மீனவராயர்க்கு அவபடக்காரியை துரத்திப் பின்தொடர அவன் பெருமாள் கோயிலிலே புகுந்து கதவை உட்புறமாக அடைத்துத் தப்பி மறைந்துவிடுகிறான். அவன் இன்றே சாகவேண்டும், அப்படி செத்தால் ஊரிலே 20 பணம் கொடுப்போம் என்று ஊரார் முடிவெடுக்கின்றனர். மேலும் யாராவது அவன் இருப்பிடத்தை அறிவிப்பார்களானால் அவருக்கு 20 பணம் கொடுப்போம். இருப்பிடத்தை அறிவித்த அன்றே அவபடக்காரி சாகவேண்டும். அவன் இருப்பிடம் அறிந்த எவரொருவரும் அதைக் கூற ஓரிரு நாள் காலந்தாழ்தினாலும் அவன் தன் சாதிக்கு புறம்பானவன் ஆகிடுவான். அவனை நங்கையும் நாசிவனும் விலக்கிட வேண்டும் என்றும் அவன் நன்மை தீமைகளுக்கு கலந்துகொள்ளாமல் அவன் சாதிக்கு புறம்பானவன் ஆகிட வேண்டும் என்றும் அவன் இருப்பிடத்தை அறிவிக்காமல் தப்பவிட்டவன் இந்த சீர்கேட்டிற்கான இழப்பீட்டை ஏற்று அரசவரி செலுத்த வேண்டும் அதற்கான தண்டத் தொகையையும் கட்ட வேண்டும். அவன் ஆவிக்கடனையும் அடைக்க வேண்டும் என்று உத்தாரவாளனுக்கு இதாவது, ஆதரவாளனுக்கு எச்சரிக்கை விடுத்தனர் ஊரவர். இந்த தண்டனைக்கு ஒப்புக் கொண்டு ஊரவர் அனைவரும் உடன்பாட்டு ஒப்பந்தம் செய்துகொண்டனர். இதற்கு ஊரின் கருத்துப்படி உடன்பட்டு அபிமாண பூசண வேளான் கையெழுத்திட்டான். இப்படி ஊரார் சொல்ல தண்டக நாட்டு பிரமராயன் மகன் அழகிய வரதன் எழுதி கையொப்பமிட்டான்.
அவபடக்காரி மக்கள் செலுத்திய வரிப் பணத்தை தன்னகப்படுத்தியதாலோ அல்லது பெண்களிடம் கொச்சையாக நடந்த்தாலோ என்னவோ? இப்படி காரணம் குறிக்காத குற்றத்திற்காக மக்கள் வெகுண்டெழுந்து அவனுக்கு சாவுத் தண்டனை வழங்குகின்றனர். ஆம் சட்டத்தை தாமே கையில் எடுத்துக் கொண்டனர். மீனவராயர் உயர்அதிகாரம் உள்ள அரசர் அவருக்கு இவ்வாறு ஊரவர் தண்டனை கொடுத்ததாக தென்னிந்தியக் கல்வெட்டு 25 இல் விளக்கம் தந்திருப்பது ஏற்புடையதல்ல.
பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 25, பக். 82-83.
https://tamilnadu-favtourism.blogspot.com/2016/01/jambunatheshwarar-temple-jambai.html
மேலும் அறிய https://groups.google.com/d/msg/vallamai/85WHww2Yqww/LT57iXF5BwAJ