-திருச்சி புலவர் இராமமூர்த்தி
————————————————–

திருக்கயிலையில் இறைவன் காட்டிய அருட்கருணையால் கமலினிக்குத் திருவாரூரில் பதியிலார் குலத்தில் தோன்றி வளரும் நல்வாய்ப்புக் கிட்டியது. திருக்கயிலையில் தவறான நோக்கமின்றிச் செய்த ‘சிறுகுறையும் நல்லதையே செய்யும்’ என்பதைக் கமலினியார், நாடே போற்றி மதிக்கும் பரவையாராக வளர்ந்த பாங்கு புலப்படுத்தும்.

சுந்தரரின் மனங்கவர்ந்த மங்கையாக, இறைவனையே தூதராகக் காணும் பேறு பெற்றவராக, திருவாரூரினுள் யாவரும் மதிக்கத்தக்க பெண்ணடியாராக விளங்கும் வாய்ப்பைப் பெற்ற அவர் வணங்கத் தக்கவரே யாவார். இனி அடுத்த பாடலில் பரவையார் பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து இறைவன் சேவடியையே கருதி வளர்ந்த சிறப்பைக் கூறுகிறது.

தளர் நடைப் பருவம் கடந்து பரவையார் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பெற்று வளர்கிறார். அவருடைய அகன்ற சிறு கண்கள் இளம் பெண்மான் குட்டியின் விழிகளைப் போல ஒளிவீசி விளங்குகின்றன. அவருடைய மார்பு சற்றே வளர்ந்து தாமரை மொட்டுப்போலத் திகழ்கின்றன. அவருடைய மொழி தேனுண்ணும் வண்டுகளைப் போல் ஒலிக்கிறது. அவருடைய மெல்லிய இடை , பவளக் கொடிபோல் விளங்குகிறது. அவரது நெற்றி இளம்பிறையின் கொழுந்து போல ஒளி வீசுகிறது. அவருடைய வளைந்த புருவங்கள் காமவேள், மலரம்புகளைஎய்து, மக்களைக் காமத்தில் வீழ்த்துவதற்கான பயிற்சியைக் கற்றுக்கொள்ளும் சிறிய வில்லோ? என்றெல்லாம் பறவையாரைக் காணும் சுற்றத்தாரும், பெரியோரும் போற்றுகின்றனர்.

இந்தப் பாடலில் மானிளம் பிணை, இளமுகை, இளந்தேன்பதம், இளம் பவளக்கொடி, நிலவின் இளங்கொழுந்து, காமனின் இளையவில் என்ற உவமைகள்,அவரது இளமையையும் , கண், மார்பு,மொழி, இடை,நெற்றி, புருவம் ஆகியவற்றையும் உருவகித்துக் காட்டுகின்றன. அவருடைய அங்கங்களைக் குறிப்பிடாமல் , உவமைகளின் மூலம் அவற்றின் அழகையும் இளமையையும் குறிப்பிடுவது பாடலின் நயத்தைப் புலப் படுத்துகிறது. இனிப் பாடலைப் படித்தறிவோம்.

“மானிளம் பிணையோ? தெய்வ வளரிள முகையோ? வாசத்
தேனிளம் பதமோ? வேலைத் திரை இளம் பவள வல்லிக்
கானிளம் கொடியோ? திங்கள் கதிரிளங் கொழுந்தோ? காமன்
தானிளம் பருவம் கற்கும் தனி இளந் தனுவோ என்ன.”

இப்பாடலில் இளம் என்ற சொல், இளமையான என்ற பொருளுடன் எட்டுமுறை அமைந்திருக்கும் அழகினைச் சொற்பொருட் பின்வரு நிலை அணி என்று கூறுவர்! ஆறு அங்கங்களின் இளமையை , இளம் என்ற சொல்லை எட்டுமுறை அமைத்து வருணிப்பது நுட்பமாக உணரத் தக்கது. இந்த ஆறு உறுப்புக்களும் மக்கள் எண்ணுவதை விட மிகவும் இளமையுடன் காட்சியளித்தன, என்று சேக்கிழார் பெருந்தகை நயம்படக் கூறுகிறார்.

இளம்பெண்ணான பரவை நாச்சியாரின் வளர்ச்சியை அவர்தம் பண்பு நலன்கள் இனிப் புலப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை இப்பாடல் உருவாக்குகின்றது.

“முதுக்குறைந் தனளே , முதுக்குறைந்தனளே ,
மலையன் ஓள்வேற் கண்ணி
முலையும் வாரா முதுக்குறைந்தனளே! ‘’

என்ற பழம்பாடலை இது நினைவூட்டுகின்றது.

.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *