சொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 2

0

நிர்மலா ராகவன்

(முந்தைய பகுதியை இங்கே படிக்கலாம் – https://www.vallamai.com/?p=93221)

நாட்டியமும் தியானமும்

பாலியில் பிரசித்தமானது Barong நாட்டியம். நிகழ்ச்சிக்குமுன் பல மணி நேரம் தியானம் செய்து Trance என்னும் மோன நிலை அடைவதால், எந்தப் பாத்திரமானாலும் தத்ரூபமாக அமைந்துவிடுகிறது.

இருபது வருடங்களுக்குமுன், அனுமான் வேடம் தரித்த ஒருவர் குரங்காகவே மாறியதைக் கண்டு ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். போரில் `இறந்த’ பலர் இருபது நிமிடங்கள் அசையாது, மூச்சுகூட விடாது இருந்ததைப் பார்த்துப் பார்வையாளர்கள் பதறிப் போனோம். KECAK நடனத்தில், குதிரையாக ஆடியவர்கள் வெறுங்காலாலேயே கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தார்கள்!

இப்போதோ, வெளிநாட்டுப் பயணிகளுக்காக வியாபார நோக்குடன் தினந்தோறும் ஆட நேர்வதால், அவ்வாறு தம்மையே மறக்கும் நிலைக்குப் போவது கிடையாது. கோயில்களில் மட்டுமே பிரமிப்பு ஊட்டும் அவ்வகை நாட்டியத்தைக் காண முடியும்.

`புரா’ என்னும் கோயிலுக்குள் நுழையுமுன், ஆண், பெண் இருபாலரும் ஸாரோங் அணிந்து, இடுப்பை இறுக்கிச் சுற்றி மூன்று அங்குல அகலமுள்ள ஒரு பட்டியைக் கட்டிக்கொள்ள வேண்டும். பெண்களின் மேல்சட்டை `லேஸ்’ போன்ற மெல்லிய துணியால் ஆனது. மார்க்கச்சு போன்ற, தோள் தெரியும் உள்ளாடை. (முன்பொரு முறை, நான் புடவை அணிந்து கோயிலுக்குப் போனபோது, `ஸாரோங் இண்டியா!’ என்று ஒரு பெண் கூவ, பலர் ஓடி வந்து என்னை வேடிக்கை பார்த்தார்கள்!)

கோயிலில் விக்கிரகம் கிடையாது. கதவு போல் இருக்கும் இடத்தின்முன் தரையில் அமர்ந்து, ஊதுபத்தியை ஏற்றி, தொன்னையிலிருந்து ஒவ்வொரு மலராக எடுத்துத் தரையில் போட்டு, பிரார்த்தனை செய்கிறார்கள்.

பூஜை முடிந்ததும், ஈரமான அரிசியை நெற்றியில் பதித்துக்கொள்கிறார்கள். நாட்டியம் ஆடுபவர்களில் பெண்களுடன் ஆண்களும் நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டிருப்பது போன்று படங்களில் தோன்றுவது இதனால்தான்.

நாட்டிய நாடகத்தின்போது, பெண்கள் மட்டுமின்றி, ஆண்களின் காதிலும் frangipani என்ற பூ. வெள்ளை, மஞ்சள், சிவப்பு நிறங்களைக் கொண்ட மரங்களை எங்கும் காணலாம். இனிய சுகந்தத்தால், இந்த மலர் சோப்பு, முகத்திற்குப் பூசும் க்ரீம் என்று பல்வித வாசனைத் திரவியங்களுக்குப் பயன்படுகிறது.

இயற்கையே கடவுள்

மனிதன், தாவர வகைகள், விலங்குகள் ஆகிய எல்லா உயிர்களிலும் ஆத்மா இருக்கிறது; அதனால் நாம் அனைவரும் தொடர்பு உடையவர்கள் என்ற நம்பிக்கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் இத்தீவினர்.

கடவுள் இயற்கையைப் படைக்கவில்லை, ஏனெனில், இயற்கைதான் கடவுள் என்று நம்புகிறார்கள். அதனால், தாவரங்கள் செழித்து வளர்வதை எங்கும் காணலாம். அவற்றை அழித்தால், ஒரு விதத்தில் நம்மையே அழித்துக்கொள்வது போல்தானே!

குழந்தைகள் நம்மைப் பார்த்துத் தோழமையுடன் சிரிக்கிறார்கள். தெருவில் உலவும் நாய்கள் கொழுகொழுவென்று இருக்கின்றன. குரைக்காமல், நட்புடன் நம்மை நெருங்குகின்றன.

“உனக்கு என்னைத் தெரியுமா?” என்று நான் கொஞ்சலாகக் கேட்க, என் அருகில் வந்து படுத்துக்கொண்டது ஒரு குண்டு நாய்.

நெல் வயல்களில் வாத்துகளைக் காணலாம்.  அவை புழுக்களைக் கொத்தித் தின்கின்றன. அதற்காக வாத்துகளின் சொந்தக்காரர் காசு கொடுக்கிறார். மண்ணைப் புரட்டிப் போட்ட மாதிரியும் ஆயிற்று. வயல் சொந்தக்காரருக்கு இரட்டிப்பு லாபம்!

மொழிகள்

பள்ளிக்கூடங்களில், இந்தோனீசிய மொழியுடன், பாலியும் ஆங்கிலமும் போதிக்கப்படுகின்றன. சுற்றுலா சம்பந்தமான தொழில்களைத் தேர்ந்தெடுப்போர் மாண்டரின், ரஷ்ய மொழி, ஜெர்மன் என்று பலவற்றைக் கற்க வேண்டும்.

எல்லாரும் ஆங்கிலத்தில் உரையாடுகிறார்கள். மலாய் மொழி இன்னும் எளிதாகப் புரிகிறது. நாம் மலாயில் பேசினால் மகிழ்ந்துவிடுகிறார்கள். மரியாதையாக, “beesa” என்றுதான் ஒவ்வொரு கோரிக்கையையும் முன்வைக்க வேண்டும்.

அதாவது, வாடகைக்காரில் ஏறுமுன், `உங்களால் முடிந்தால்,’ என்ற பொருள்பட அந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும். சாப்பாட்டுக் கடைகளில் நமக்குத் தேவையானதைப் பட்டியல் போடுமுன், “beesa” என்றுதான் ஆரம்பிக்க வேண்டுமாம்.

நான் பேசியது கடுமையாக இருந்திருக்கும்.

“உங்களை டீச்சர் என்று அழைக்கலாமா? என்ன உத்தியோகம் பார்த்தீர்கள்?” என்று கேட்டுவிட்டு, “அதான் நீங்களே சொல்லிவிட்டீர்களே! டீச்சர்தான்!” என்றதும், “நினைத்தேன்!” என்றார்கள்!

எரிமலை

பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் பொங்கி எழுந்த எரிமலைக் குழம்பு, பாலி முழுவதும் இறுகிக் கிடக்கின்றது. (இப்போதும் ஆகோங் (Agung) என்னும் எரிமலை உண்டு).

எரிமலைக் குழம்பு, வழவழப்பான கற்களாக ஆகிவிட்டது – ஆறுகளின் உபயத்தால். தோட்டத்தில் மட்டுமின்றி, நடைபாதையில், கழிப்பறைக்குள் என்று எல்லா இடங்களிலும் குண்டு கத்தரிக்காய் அளவில் இந்தக் கற்களைக் காணலாம். (இவற்றின்மேல் நடந்தால், காலில் ரத்த ஒட்டம் அதிகரிக்கும்).

எரிமலைக் குழம்பே எல்லாத் தரையிலும் படிந்து இருப்பதால், கருப்பு அரிசி என்று ஒரு வகை இங்கே கிடைக்கிறது. நல்ல ருசி. ஆனால், பழங்களில் இனிப்பு கிடையாது.

கடல் நீலமல்ல

பாலியின் வடக்கே கடல் நீர், அதை ஒட்டிய மணல் எல்லாமே கருப்பு. அதிகாலையில் படகில் பாதிக் கடல் போனால், டால்ஃபின்கள் நீரிலிருந்து மேலே குதித்து, சுழன்று விளையாடுவதைக் கண்குளிரப் பார்க்கலாம்.

உணவு

இருபது ஆண்டுகளுக்குமுன், ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் சிறிய நிலப்பரப்பில் அரிசி பயிரிட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அது அவர்கள் சொந்த உபயோகத்திற்கு மட்டும். வீட்டிலேயே இருக்கும் பெண்களும் முதியவர்களும் அந்த நெல்வயலைப் பராமரிப்பார்கள். விளைச்சல் போதாது, ராத்திரி ஒரு வேளை மட்டும்தான் அரிசி உணவு என்ற நிலை. இவர்கள் மாட்டிறைச்சி உண்பதால், பால் குடிக்கும் வழக்கம் கிடையாது. காலையில், பாலோ, சர்க்கரையோ சேர்க்காத காப்பி.

பாலியில் இப்போது உணவுத் தட்டுப்பாடு இல்லை. பிறருடன் தம்மை ஒப்பிட்டுக்கொண்டு, மனம் புழுங்கும் குணமும் இவர்களுக்குக் கிடையாது. கடமைதான் இவர்களுக்கு முக்கியம். “குடும்பத்திற்கு, ஒரே தெருவில் குடியிருப்பவர்களுக்கு, சொந்த ஊருக்கு, நாட்டுக்கு,” என்று அடுக்கினார் ஒருவர். அவர்கள் வெறும் பேச்சுடன் நிறுத்திக்கொள்வதில்லை.

முட்டை, வெங்காயம், பூண்டு இவையெல்லாம் சேர்க்காத உணவு வகைகளை மட்டுமே விற்கும் vegan சாப்பாட்டுக் கடைகள் இருக்கின்றன.

பஞ்சாபி கடைகளில் சப்பாத்தி, `நான்’ போன்றவை கிடைக்கின்றன. ஒரு கடை வாசலில் அவற்றைத் தயாரிக்கும் இளைஞரின் புகைப்படத்தைப் பெருமையுடன் வெளியிட்டிருக்கிறார்கள்!

அழகுக்கு அழகு செய்ய

வலியே தெரியாது செய்யப்படும் பாலி மஸாஜ் பிரசித்தமானது. ஊர் சுற்றிய களைப்பு நீங்க, பார்க்கும் இடமெல்லாம் உடம்புப்பிடி நிலையங்கள். கை, கால், உடல், முகம் என்று விதவிதமான மஸாஜ். (விமான தளத்தில் எல்லாப் பெண்களின் நகங்களும், புருவங்களும் மிக அழகாக இருப்பதை ரசித்துப் பார்த்தேன்).

(தொடரும்…..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.