சிங்கப்பூரும் கியூபாவும்

0

-நாகேஸ்வரி அண்ணாமலை

சென்ற வாரம் நானும் கணவரும் சிங்கப்பூர் சென்றுவந்தோம். சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைகழகத்தைச் சேர்ந்த தேசிய கல்விக் கழகம் (NIE) சார்பில் நடந்த பேச்சுத் தமிழைத் தமிழ்க் கல்வியில் பயன்படுத்துவது பற்றிய ஆராய்ச்சித் திட்டத்தில் ஆலோசனை வழங்கக் கணவர் சென்றபோது நானும் உடன் சென்றேன்.  சிங்கப்பூருக்கு நான் போவது இது இரண்டாவது தடவை. போன தடவை 2011-இல் சிங்கப்பூருக்குப் போயிருந்தேன். அப்போதைவிட இப்போது சிங்கப்பூர் இன்னும் பொருளாதார முன்னேற்றம் கண்டிருக்கிறது என்று தெரிகிறது.

விமான நிலையத்தை விட்டு வெளிவந்ததும் கொஞ்ச தூரத்தில் பெரிய பெரிய பல மாடிக் கட்டடங்கள் இருக்கின்றன.  சாலைகள் எல்லாம் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தச் சாலைகளில் வழுக்கிக்கொண்டு ஓடும் அயல்நாட்டுக் கார்கள்.  இந்தியாவில் பெரு நகரங்களுக்கிடையே ஓடும் சொகுசு பஸ்களைவிட நகருக்குள்ளேயே ஓடும் நகர பேருந்துகள் பல மடங்கு சொகுசு தருபவையாக இருக்கின்றன.  ஒரு நகரம், ஒரு நாடு என்று அழைக்கப்படும் ஒரே நகரத்தைக் கொண்டுள்ள சிங்கப்பூரின் விஸ்தீரணம் சுமார் 300 சதுர மைல்கள். அந்தச் சிறிய இடத்திற்குள் எத்தனை கட்டடங்கள், எத்தனை பல்கலைக்கழகங்கள், எத்தனை ஆராய்ச்சி மையங்கள்.   நேர்த்தியான சாலைகள் எல்லாம் மிகச் சுத்தமாக இருக்கின்றன. அவற்றை யார் எப்போது சுத்தப்படுத்துகிறார்கள் என்பதற்கு ஒரு அடையாளமும் இல்லை. அவ்வப்போது ட்ரக்குகளில் இருக்கைகள் இல்லாமல் ட்ரக்கின் தரையில் அமர்ந்து பயணம் செய்யும் தொழிலாளர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அனுமானிக்க மட்டும்தான் முடியும்  (அமெரிக்காவில் தொழிலாளர்கள் கூட இப்படி ஸீட் பெல்ட் இல்லாமல் வாகனத்தின் தரையில் உட்கார்ந்து பயணம் செய்வதில்லை. அவர்களும் இருக்கைகளில் அமர்ந்து ஸீட் பெல்ட் போட்டுக்கொண்டுதான் பயணம் செய்ய வேண்டும்). எங்கே பார்த்தாலும் விதவிதமான பல டிசைன்களில் அமைக்கப்பட்டுள்ள அபார்ட்மென்ட் கட்டடங்கள். இவற்றில் பல, அந்நிய நாட்டுப் பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.  இப்படிப்பட்ட கட்டடங்களுக்கிடையே பசுமையாகக் காட்சி தரும் மரங்கள், செடிகொடிகள்.

நாங்கள் தங்கியிருந்த நான்யாங் பல்கலைக்கழகத்தின் விருந்தினர் விடுதி, அத்தனை நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது.  விருந்தினர் விடுதி அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் நுழைவாயிலை அடுத்து வரும் லவுஞ்ச் அத்தனை பெரியது. நுழைவாயிலின் கண்ணாடிக் கதவுகள், கண்ணாடிச் சுவர்கள் எல்லாம் எந்தவிதப் பிசிறும் இல்லாமல் அப்போதுதான் சுத்தப்படுத்தப்பட்டவை போல் காணப்படுகின்றன.  அந்த லவுஞ்சில் அதன் அளவுக்குத் தக்கவாறு பெரிய பூந்தொட்டி. வெளியே நீர் ஊற்றுகள், செடிகொடிகள் இத்யாதி. ஒவ்வொரு தளத்திலும் பிஸ்லேரி போன்ற பெரிய தண்ணீர் பாட்டில்கள். அவற்றிலிருந்து வேண்டியபோது வேண்டிய அளவு சுத்தத் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம்.

அந்தச் சிறிய நாட்டில் அத்தனை மியூசியங்கள்.  எல்லாம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில்போல் எங்கே பார்த்தாலும் வளத்தின் செழுமை.  எங்கு சென்றாலும் சுத்தமான கழிப்பறைக்குப் பஞ்சமில்லை. இந்த வசதியில் அமெரிக்காவைக்கூட சிங்கப்பூர் மிஞ்சிவிடும்போல் தெரிகிறது.  சிங்கப்பூரிலிருந்து பெங்களூர் வந்தடைந்ததும் மனத்தில் சங்கடத்தை ஏற்படுத்தியது பெங்களூரு விமான நிலையக் கழிவறைகள். அத்தனை வித்தியாசம் சிங்கப்பூர் விமான நிலையக் கழிப்பறைகளுக்கும் பெங்களூரு விமான நிலையக் கழிப்பறைகளுக்கும்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது சிங்கப்பூர் இன்னும் பிரிட்டனின் காலனியாகத்தான் இருந்தது.  1963-இல்தான் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இரண்டும் அடங்கிய பெடரேஷனாக சுதந்திரம் பெற்றது. 1965-இல் மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடானது. இந்தக் குறுகிய காலத்தில் இத்தனை வளர்ச்சி அடைந்திருக்கிறது.

மூன்று வருஷங்களுக்கு முன்னால் ஜனாதிபதி ஒபாமா அமெரிக்கர்கள் கியூபாவுக்குப் போக இருந்த சில தடைகளை நீக்கினார்.  இன்னும் சில தடைகள் நீக்கப்பட்டு, கியூபா அமெரிக்கக் கலாச்சரத்தின் தாக்கத்திற்கு உட்படுமுன் கியூபாவைப் போய்ப் பார்த்துவிட வேண்டும் என்று வேகவேகமாகப் பிரயாண ஏற்பாடுகளைச் செய்துகொண்டு கியூபாவுக்குப் போய்வந்தோம்.  (மேலும் சில தடைகள் நீக்கப்படாதது மட்டுமல்ல இருந்த தடைகளுக்கும் வலுவேற்றியிருக்கிறார் இப்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் என்பது வேறு விஷயம்.)

கியூபாவின் தலைநகரான ஹவானாவின் விமான நிலையமே மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுப்பதாக இருந்தது.  சுத்தமான கழிப்பறைகள் விமானக் கூடத்தில் கூட இல்லை. கியூபா கரன்சியை வாங்குவதற்கு அத்தனை நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று.  அதைப் பெறுவதற்கு வரிசையில் நின்ற ஒருவரைத் தவிர மற்றவர்கள் உட்காருவதற்குக்கூட சரியான வசதிகள் இல்லை. நெடுநேரம் காத்திருந்து மிகவும் களைத்துப் போய் தங்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.  தங்கியிருந்த வீடு வசதியாக இருந்தாலும் (பெரிய வீடுகள் வைத்திருப்போர் பயணிகள் தங்குவதற்குத் தங்கள் வீடுகளை வாடகைக்கு விடலாம் என்று கியூபா அரசு அனுமதி அளித்திருக்கிறது. அதிலும் சில நிபந்தனைகள் உண்டு) களைப்பைப் போக்கிக்கொள்ள பக்கத்தில் எந்த உணவக வசதியும் இல்லை.  இரவு உணவுக்கு வாடகையோடு இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்து வீட்டுச் சொந்தக்காரரிடம் ஏற்பாடு செய்துகொண்டோம். அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில சிறிய உணவகங்கள் இருந்தனவே தவிர பல இடங்களில் உணவக வசதி எதுவும் இல்லை. சாலைகள் சிங்கப்பூர் அளவுக்கு நேர்த்தியாக இல்லையென்றாலும் ஓரளவு நன்றாகவே இருந்தன.  ஆனால் ஷாப்பிங் மால்கள் எதுவும் கிடையாது. மியுசியங்கள் இருந்தாலும் பிரமாதமாக இல்லை. அமெரிக்கா கியூபாவில் கோலோச்சிய காலத்தில் அங்கிருந்து கொண்டுவரப்பட்ட பழங்காலக் கார்கள்தான் வீதிகளில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றை ஐம்பது வருஷங்களுக்கும் மேலாக எப்படிப் பழுதுபார்த்து ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.  வளத்தின் அறிகுறி எங்கேயும் இல்லை.

கியூபாவை விட்டுக் கிளம்பும்போது ஹவானா விமான நிலையத்தின் தன்மை, மனத்தில் ஒரு சோர்வை உண்டுபண்ணியிருந்தது.  விமானம் அமெரிக்காவின் மயாமிக்குள் நுழைந்தும் அங்கிருந்த கழிப்பறைகள், அமெரிக்காவின் வளத்தைப் பறைசாற்றிக்கொண்டிருந்தன.  மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை தனியாக ஒரு பெரிய அறையில் இருந்தது. அதற்குள்ளேயே கைகளைக் கழுவிக்கொள்ள சிங்க்கும் இருந்தது.  அந்த அளவு உள்ள வீடுகளில் நம் நாட்டில் நிறையப் பேர் வசிக்கிறார்கள்.

கியூபாவுக்கும் சிங்கப்பூருக்கும் வளத்தில் ஏன் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்?  முதலாளித்துவவாதிகள் சிங்கப்பூரில் இருக்கும் வளமை, முதலாளித்துவத்தின் மகிமை என்பார்கள். கியூபாவின் வளமின்மை, கியூபா அரசின் கம்யூனிசக் கொள்கையால் வந்தது என்பார்கள்.   அமெரிக்க ஆதிக்கத்தை விட்டு கியூபா விலகியவுடனேயே அமெரிக்கா, கியூபா மீது விதித்த வர்த்தகத் தடைகள், கியூபாவின் வளமின்மைக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.  சில தடைகளை நீக்குவதற்கு ஒபாமா முயன்றார். அந்தத் தடைகளையெல்லாம் மறுபடி கொண்டுவந்ததோடு புதிதாகச் சில தடைகளையும் கொண்டுவர முயல்கிறார் இப்போதைய இரக்கமற்ற ஜனாதிபதி ட்ரம்ப்.

சிங்கப்பூர் அத்தனை வளமான நாடாக இருந்தாலும் மனித உரிமைகள் சில அந்தக் குடிமக்களுக்கு மறுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.  இந்தியர்கள் சிலர், அதிலும் தமிழர்கள், தங்களுக்குச் சீனர்கள் அளவு சலுகைகள் வழங்கப்படுவதில்லை என்கிறார்கள். மேலும் எல்லா வளர்ந்த நாடுகளிலும் போல் சிங்கப்பூரிலும் தனக்கென்று வாழ்வதற்கான மேலை நாட்டு அடையாளங்களான திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது, குழந்தைகள் பெற்றுக்கொள்ளாமல் இருப்பது போன்ற வழக்கங்கள் தோன்றத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.  

கியூபாவிலும் சில மனித உரிமைகள் மறுக்கப்படுவதாக அமெரிக்கா அலறிக்கொண்டிருக்கிறது.  கியூபாவிலும் சரி, சிங்கப்பூரிலும் சரி அரசை எதிர்த்து எளிதாக எதுவும் சொல்லிவிட முடியாது.  அரசை எதிர்க்கும் உரிமை இரண்டு நாடுகளிலும் கிடையாது. (இந்தியாவிலும் அது மெதுவாகத் தலைதூக்கி வருகிறது என்பது வேதனைக்குரிய விஷயம்.)  கியூபா மக்கள் பலரோடு பேசும் வாய்ப்பு எங்களுக்கு அவ்வளவாகக் கிடைக்கவில்லை. அதனால் வாழ்க்கை வசதிகள் நிறைய இல்லையென்றாலும் அவர்கள் நிறைவான வாழ்க்கை வாழ்கிறார்களா என்று சொல்ல முடியவில்லை.  இருந்தாலும் இரண்டு நாடுகளுக்கிடையே ஏன் இத்தனை வித்தியாசங்கள் என்று எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம், பொருளாதார அமைப்பினால் மட்டுமல்ல என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *