-சேஷாத்ரி ஸ்ரீதரன் 

வரி என்பது பெரிய அரச படையைப் பேணி மக்கள் உயிர்க்கும் உடைமைக்கும் பாதுகாப்பு நல்கவும், அரச நிருவாகம் நடத்தவும் வேந்தர், மன்னர் என்ற முதலாம், இரண்டாம் அதிகார அடுக்கு ஆட்சியாளர்களால் வரி என்ற மக்களின் பங்களிப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த வரியை மக்களிடம் சமமாகத் தண்டவும் எவரும் வரி கட்டுதலில் இருந்து விட்டுப்போகாமல் இருக்கும்படியும் ஆட்சிப் பரப்பின் எல்லா பகுதியிலும் வரியை நடைமுறைப்படுத்தவும் துணைப் படைகளை திரட்டி போருக்கு அனுப்பவும் மூன்றாம், நாலாம் அதிகார அடுக்குகளான அரையர் என்னும் அரசர், கிழார்கோன் ஆகிய கீழ்நிலை அதிகார அடுக்குகள் வேந்தர், மன்னவரால் உண்டாக்கப்பட்டன.

பழங் காலத்தில் வரிகள் மிகப் பலவாகும். இந்த வரித் தண்டல் பண்டமாற்று நிலவிய காலத்தில் பெரும்பாலும் மக்கள் உருவாக்கிய பொருளாகவே பெறப்பட்டன. ஏனென்றால் மக்களிடம் காசு புழக்கம் அரிதாகவே இருந்தது. வணிகரிடம் காசாக வரி பெறப்பட்டது. எப்படியானாலும் பண்டு வரி அதிகமாகவே இருந்தது. மக்கள் வரிச் சுமை தாங்காமல் திக்குமுக்காடிப் போயினர். சில வேளைகளில் ஊரை விட்டே அகலும் அளவிற்கு வரிக் கொடுமை தாங்கமுடியாததாக இருந்தது. மக்கள் சிலபோது ஆட்சியாளரிடம் முறையிட்டு வரிக் குறைப்பு பெற்றனர். இந்த வரிச்சுமை சோழர் ஆட்சியில் இருந்ததை விட விசய நகர ஆட்சியில் இன்னும் கூடுதலாக இருந்தது. கையும் காலுமே உடைய உழைப்பை நம்பி  கூலிக்கு செல்வோர் கூட வரி கட்டவேண்டி இருந்தது. இடங்கை, வலங்கைப் பிரிவு என்று குறிப்பிட்டு சில வரித் தொடர்பான கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன.

மக்கள் தாமே சட்டத்தை கையில் எடுத்து வரித் தண்டுவோரை கொல்லும் அளவிற்கு உடன்பாடு காணும்படியாக ஊராக ஒன்றுகூடி அதிக வரிக்கு எதிராக ஆவண ஒப்பந்தம் செய்த கல்வெட்டுகள் சில உள. இது போன்ற நிகழ்வுகள் குறிப்பாக தேவதான ஊர்களில் இதாவது, இறையிலியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் அரங்கேறி உள்ளன. ஏனென்றால் இவ்வூர்களில் ஆட்சியாளர் என்று இல்லாமல் கோவில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தமையால் மக்களால் அதற்கு எதிராக எளிதில் ஒன்று திரள முடிந்தது. அரையர்களைப் போல கோவிலார் ஆயுதம் ஏந்தி மக்களை அடக்கப் போவதில்லை என்பதே இதற்கு காரணம்.

ஏதோ ஒருகாலத்தில் வேந்தர், மன்னர், அரையர் ஆகியோரால் கோவிலின் வளர்ச்சி, கோவிலைச் சூழ்ந்த ஊரின் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவ்வூர்களில் தண்டப்படும் வரிகளை அரசருக்கு (இறை) செலுத்த வேண்டாம் (இலி) என்று ஆட்சியாளரால் ஓலையில் உரிமை எழுதிக் கொடுக்கப்பட்டவையே இந்த இறையிலி ஊர்கள். இது ஆட்சியாளருக்கும் கோவிலாருக்கும் இடையேயான உடன்பாடு தானே தவிர இதில் பொது மக்கள் குறுக்கிட ஒன்றும் இல்லை. இறையிலி ஆனாலும் மக்களைப் பொறுத்தமட்டில் வரி கட்டித்தான் ஆக வேண்டும். இந்நாளில் பலரும் இறையிலி என்றால் வரியே இல்லை என்று தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். வரியே இல்லாமையை சர்வ மானியம் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன. வரியே இல்லாவிட்டால் பின் எப்படி கோவில் வளர்ச்சியும் கோவிலூரின் வளர்ச்சியும் நடைமுறைப்படுத்த முடியும்.  வரியே இல்லை என்ற விளக்கத்தால் இறையிலியின் நோக்கமே அடிபட்டு போகும் போது அதை ஏன் ஆட்சியாளர் இறையிலி என்று அறிவிக்க வேண்டும்? என்று சிந்திக்க வேண்டும்.  இந்த இறையிலி ஊர்களில் கோவில் பொறுப்பாளர்களே தமக்கு இசைந்தவாறு வரியிட்டு தண்டிவந்தனர்.  அதை எதிர்த்து மக்கள் எதிர்வினையாற்றிய செய்திகளை கீழ் உள்ள கல்வெட்டுகள் விளக்குகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், திருவரங்குளம் ஊர், ஹரதீர்தீசுவரர் கோவில் கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தின் கிழக்கு சுவரில் உள்ள 15 வரிக் கல்வெட்டு.

  1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் மதுரையு மீழமுங் கருவூரு பாண்டியன் முடித்தலை[யு]
  2. ங் கொண்டு மதுரையில் வீரர் அவிஜேகம் விசையர் அவிஷேகமும் பண்ணியரு[ளிய_ _]
  3. புவன வீரதேவற்கு யாண்டு 40 நாற்பதாவது இராஜராஜ வளநாட்டு வல்ல நாட்டு [வ _ _ _
  4.  கூரப்பாத்தாழ்வு ] தேவி மங்கலத்து நாடா இசைந்த நாட்டோமெங்களி லிசைந்து உடையார் தி
  5. ருவரன்குளமுடைய நாயனார் திருப்பதி தேவுந் திருமுடையான் திருமண்டபத்து நாடாய்
  6. குறைவறக்கூடி இருந்து கற்கடக நாயற்று மூன்றாந் தியதி நாள் இசைவு தீட்டுமிட்டு கல்வெட்டி
  7. குடுத்த பரிசாவது இந்நாயனார் திருப்பதியில் நாலுவரத்துக் குள்ளு இருந்த குடிமக்களை நோ
  8. க்குவோமாகவு புறத்தேவதானங்களையுங் குடிமக்களையு நோக்குவோமாகவும் நோக்குமிடத்து பறித்தல் கன்று
  9. காலி பிடித்தல் மற்றுஞ் சில சிதம்புகள் செய்தாருண்டாகில் நீர் நிலத்திலே இரண்டு இரண்டு மாச்செய்யுந் திருசூலக்கல் நா
  10. ட்டி குடுத்து பறிச்சின பிடிசின விடுவோமாகவும் இத்திருப்பதியில் சிவபிராமணர், செட்டிகள், வெள்
  11. ளார், கைக்கோளர், தேவரடியார், கண்மாளர், இடையர் மற்றுந் இத்திருப்பதியி இருந்து_ _ _
  12. வர் சிலர் எங்கள் பக்கல் விலை கொண்டுடைய நீர்நிலங்களும் புன்சைகளு குடி நீங்கா தேவ
  13. தானமாக எங்கள் நாயனாற்கு இறை இறுப்பராகவும் இ[று]க்குமிடத்து நீர் நில[த்]துக்கு மாத்தால் ப
  14. தில் கலநே தூணிப்பதக்காக வந்த நெல்லும் புன்சைக்கு மாத்தால் பதினைஞ்சே_ _ _
  15.  திகாசும் கொள்ளக்கடவதாகவு இப்படியால் வந்த நெல்லுங் காசும் சந்திராத்தயவல்_ _ _

இசைந்த – இணங்கிய; இசைவுத் தீட்டு – ஒப்பந்த ஆவணம்; திருப்பதி – கோவில் திருத்தலம்; நாலுவரத்து- நாற்புறத்தில் இருந்து உள்ளே வருகை; பறித்தல் – பறிமுதல்; கன்றுகாலி – கால்நடை; சிதம்பு – தன்மை அழிப்பு, debasement in quality; பக்கல் – எங்கள் இடம் இருந்து, from us; மாத்தால் – ஒரு மா நிலம்.

விளக்கம்: திரிபுவனவீரதேவர் என்று மூன்றாம் குலோத்துங்கனை குறிப்பிட்டு, அவனது 40 ஆம் ஆட்சிஆண்டில் (பொ.ஊ. 1218) கற்கடக ஞாயிற்று 3 ம் நாளில் இராசராச வளநாட்டு தேவி மங்கலத்து நாட்டார் இணங்கி நாங்கள் எங்களுகுள்ளே ஒன்றுபட்டு திருவரங்குளமுடைய ஈசன் திருக்கோவில் தலத்தில் ஒப்பந்த ஆவணம்  எழுதிக் கொடுத்த ஏற்பாடு என்னவென்றால் நாற் திசையில் இருந்து உள்ளே வரும் குடிமக்களையும் கருத்தில் கொள்வோம் அதே நேரம் பிற தேவதானங்களையும் அவற்றின் குடிமக்களையும் கருத்தில் கொள்வோம் என்றும், அப்படி கருத்தில் கொள்ளுமிடத்தில் பொருள் பறிமுதல், கால்நடைகளை பிடித்து கொள்ளுதல், தரம் அழித்தல் போன்றவற்றை செய்பவர்  இருப்பாரானால்அதற்கு இழப்பீடாக இரு மா அளவு வயலை திரிசூலக்கல் நாட்டி கொடுப்பதோடு பறிமுதல் செய்த பொருளையும் பிடித்து வைத்த கால்நடையையும் விடுவிப்போம். இத்திருத்தலத்தை சேர்ந்த சிவபிராமணர், செட்டியார், வெள்ளாளர், செங்குந்தர், தேவரடியார், கம்மாளர், இடையர் மற்றும் இத்தலத்தவர் சிலர் எங்களிடம் இருந்து விலைக்கு வாங்கிய நீர்நிலங்கள், புன்செய் நிலங்களுக்கு இடம்பெயரா குடிகளாக வரி இறுக்கலாம். அவ்வாறு இறுக்கும் போது நீர்நிலத்திற்கு ஒரு மாவிற்கு பத்து கலன் தூணிப்பதக்காக நெல்லும், புஞ்செய் நிலத்திற்கு ஒரு மாவிற்கு பதினைந்து _ _ _ காசும் வரியாகக் பெறுவோம். இப்படி வந்த நெல்லும் காசும் ஞாயிறும் நிலவும் நிலைக்கும் பொழுது வரை (கோவிலுக்கு பயன்படுத்தப்படும்) என்று கோவில் பொறுப்பாளர்கள் உடன்பட்டனர்.

அளவிற்கு விஞ்சி வரித் தண்டியதால் மக்கள் வெகுண்டெழுந்து முறைப்பாடு செய்ததாலோ என்னவோ ஊரார் ஒன்றுகூடி வரன்முறை வகுத்து வரி தண்டுவது குறித்து வரையறை செய்து இவ்வூரில் வாழும் குடிகளிடம் மட்டும் வரியும் காசும் குறிப்பிட்டபடி தண்டுவது என்று ஒப்பந்த ஆவணம் எழுதிக் கொடுத்தனர். இதற்கு கோவில் பொறுப்பாளர்கள் ஒப்புக் கொண்டதாகத் தெரிகின்றது. பண்டைக் காலத்தே எளிய மக்களிடம் காசு புழக்கம் குறைவு என்பதால் நெல்லாகவே வரியைக் கட்டினர் என்று தெரிகின்றது.

பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 34, பக். 263.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், குளித்தலை வட்டம். இரத்தினகிரி ஊர், இரத்தினாசலேசுவரர் கோவில் கருவறை வடக்கு சுவரில் பொறிக்கப்பட்ட 25 வரிக் கல்வெட்டு.

  1. _ _ _ _ மக் கொருவர்க்கு உடற்பட்டு எய்முகங் குடுத்து கோட் குறளை கே _ _ _
  2. குடிகேடு கெடுத்தாருண்டாகிலும் அன்னியாயங்களுக்கு உடற் பட்டாருண்_ _ _
  3. பிராமணராகில் கண்ணும் பறித்து மூக்கும் அறுக்க கடவதாகவும் இ _ _ _ _
  4. _ க்[கூ]னி பட்டாநாகில் செய்தவனுக்கு தோஷ மின்றிக்கேயிருக்க [எ]_ _ _
  5. ம் யே _ _ _ மாரியாகில் பன்றியிலொன்றாக குத்துண்ணக் கடவனாகவும் _ _ _
  6. ராமங்கள் நகரங்களில் கடமை குடிமைக்கன்றியிலே அன்னியாயக் கடமை _ _ _
  7. ளிருவரைப் பிணைத்தும் குற்றம் குற்றமன்றியிலே தெற்ற குற்றத்துக்கு தண்டமி _ _
  8. ல்லாதாகவும் நாடுபெற்று வந்த முதல் கவளமுதல் காணும்மிடத்து கிராமமும் நாடும் நகர _ _ _ _
  9. ணக்கடவோமாகவும் உற்கணக்கர் அன்னியாயக் கடமைக்கு தரவெழுதக் கடவதல்லவாகவும்
  10. வீரக்கொடியார் கைய்யாலே குலை உண்ணக்கடவகளாகவும். இப்படி தவிர  ஒருவரிருவர் _ _ _
  11. கில் நாடாக குடிவாங்கி போகக் கடவோமாகவும் குடிவாங்க இருக்கச் செய்தே நம் _ _ _ _
  12. [ழுதிக் குழமு]ட்டாகல் மேழிபட்டத்தாரெல்லாரையும் பன்றியிலொன்றாக வீரக்கொடியாரே _ _ _
  13. இவகள் செத்தால் இவகள் பிணமும் பன்றியிலொன்றும் நாய்ப்பிணமுமாக _ _ _     
  14. மாளர், கொல்லர், தச்சர் உள்ளிட்ட பணிசமக்கள் நாடு குடிவாங்கி இருக்கச் செய் _ _ _
  15. டாகில் வீரகொடியார் பணியேசாதனமாக கொல்லக் கடவகளாகவும் உடையார் _ _ _
  16. டய நாயநார்க்கு ஏழாவது கார் முதல் பெரிய நாட்டான் திருமாளிகைக்கு ப்ரஹ்ம _ _ – [தலையாக] _ _ _ _
  17. ன் கடையாக [கு]டிமை குறுணிக்கு அரைநாள் கட்ட[த்தும்] த _ _ _ _  
  18. னம் குறுணி நெல்லும் குடக்க கடவோமாகவும் இப்படி சம்மதித்து அமைவுக்க _ _ _ _ _ _
  19. டோமும் கிராமங்களோமும் நகரங்களோமும் இவ்வனைவோம் நாடுகளும் நகர _ _ _
  20. பணியால் அமைவு கச்சமெழுதினேன் ப்ரமத்சங் குழித் தண்டலை மத்தியதன் கு _ _ _ _ _
  21. டையான் திருவரங்க நாராயணன் திருத்தாந் தோன்றியான எழுநூற்றுவ _ _ _ _
  22. டு பணியால் மருதூர் உடையான் பெரிய நாட்டு வேளான் எழுத்து. ஆதனூர் நாடும் கிராம _ _ _ _ _
  23. கரங்களும் பணியால் சோழகுல மாணிக்கச் சருப்பேதி மங்கலத்து பிரம பிரியன்  எழுத்து குறுநன் _ _ _ _
  24. கரம் பணியாலும் ஐஞ்ஞூற்றுவ வேளான் எழுத்து. இப்படிக்கு இவை திருவி _ _ _ _ _
  25. வீரமாகாளம் ஜெயம் குழித்தெண்டலை மத்தயத்தன் நாராயணன் ஆதி _ _ _ _

உடற்பட்டு – உடன்பட்டு; எய்முகம் கொடுத்து –  பணிந்து போய்; கோட் குறள் – புறங்கூறல்,  back biting; குத்துண்ண – குத்துபட்டு; தரவெழுது – கூலிக்கு ஆவணம் எழுது; வீரக்கொடியார் – போர்க்குடியுள் ஒரு முதலியார் பிரிவினர்; மேழிபட்டத்தார் – வெள்ளாளர்; அமைவுக் கச்சம் – முடிவான தீர்மானம்;

விளக்கம்: மேலுள்ள வரிகள் சிதைந்துள்ளதால் அவற்றின் பொருளை அடுத்து வரும் வரிகளோடு பொருத்தி பொருள் கொள்ள முடியவில்லை. முதல் சில வரிகள் சிதைந்துள்ளன. ஒருவருக்கு உடன்பட்டு பணிந்து அவரது கோள்சொல்லைக் கேட்டு ஒரு குடியைக் கெடுத்தார் இருப்பாரானால், அநியாயங்களுக்கு உடன்பட்டவர் இருப்பாரானால், அவர் பிராமணர் என்றால் கண்ணைப் பிடுங்கியும் மூக்கை அறுத்தும் போடுவோம்.

கிராமங்கள் நகரங்களில் நியாயமான கடமை வரி, குடிமை வரி அன்றி அநியாயக் கடமை வரி திரட்டினவரை பிணைத்து குற்றம் உசாவும் குற்றமன்றத்தில் தெளிவாக மெய்ப்பிக்கப்பட்ட அக்குற்றத்துக்கு தண்டமிடுவோம் (fine). ஊர் கணக்கர் அநியாயமாக வரித் தண்டினால் இனிமேல் அவர் ஆவணம் எழுத அனுமதி கிடையாது. மேலும் அவர்கள் வீரக்கொடி என்ற போர்குடியாரால் கொலை யுண்டாவர். மேழிபிடிக்கும் வெள்ளாளராகின் பன்றிக் கூட்டத்தில் ஒன்றாகக் கருதி வீரக்கொடியாரே அவரைக் கொல்வார். அப்படி செத்த போது இவர்கள் பிணங்களை பன்றிப் பிணத்தில் ஒன்றாக நாயின் பிணத்தில் ஒன்றாகக் கருதி எறிவோம். கம்மாளர், கொல்லர், தச்சர் உள்ளிட்ட பணிசெய் மக்களை ஊரை விட்டு போகச் செய்தார் இருப்பாரானால் அவர்களை வீரக் கொடியார் தம் பணியாக கொன்று போடுவார்களாக என்று ஒப்புக் கொண்டு முடிவான தீர்மானத்தை கிராமத்தாரும் நகரத்தாரும் எழுதினோம் என்று பிராமணரும் வேளாளரும் கையெழுத்திட்டுள்ளனர். இறைவர்க்கு கல்வெட்டின ஆண்டில் இருந்து ஏழாவது ஆண்டு கார் காலம் முதல் பெரியநாட்டான் திருமாளிகை என்னும் கோவில் சுவரைப் பேண குடிமைக்குறுணியும் குடிமை நெல்லும் தர கிராமத்தார் ஒப்புக் கொண்டனர். கல்வெட்டு அதிகம் சிதைந்துள்ளதால் இந்த அளவே பொருள் கொள்ள முடிந்தது.

பல கல்வெட்டுகளில் பிராமணனை கொன்ற பாவத்தை அடைவான் என்ற கருத்தை கூறுவதால் அதை மனதில் ஏந்தி பிராமணக் கொலை கூடாது என்று பிராமணருக்கு மட்டும் கொலை மிரட்டல் விடக்காமல் கண்ணைப்பிடுங்கி முக்கை அறுத்துப் போடுவோம் என்று மிரட்டி உள்ளனர். மற்ற சாதியாரை பன்றியும் நாயுமாக கருதி கொல்லுவோம் என்கின்றனர்.

பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 34, பக். 155-156.

செங்கற்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், பூலிப்பரக்கோவில் எனும் ஊரில் வியாக்ரபுரீஸ்வரர் கருவறை வடபுற ஜகதியில் பொற்க்கப்பட்ட 8 வரிக் கல்வெட்டு.

  1. ஸ்வஸ்தி ஸ்ரீ மந் மஹாமண்டலீசரன் வீரவிஜயபூபதிராய உடையா[ர்]ற்க்குச் செல்லா நின்ற ஏவிளம்பி வுருஷம் தை மாஸம் 5 ந்தியதி உடையார் திருப்புலி[ப]
  2. கவ நாயினார் திருமடை விளாகம். புலிப்ப[க]வர் கோயில் தானத்தார் இவ்வூர் கைக்கோளர்க்குக் கல்வெட்டிக் குடுத்தபடி.  நாட்டில் கோயில் பற்ற அற்ற மரி
  3. ஆதி வாசல்ப்பணம் கழிக்கவேணும் என்று புறநாட்டிலே  சந்திரகிரிச் சாவடிஇலே போயிருக்கைஇல் பூர்வத்தில் கடமை பணம் 9-1/2 க்கு தறி கண்டவாசலுக்
  4. கு வாசல்பணம் மூன்றும் கழித்து [கொண்ட]தறிக்கு தறி ஒன்றுக்குக் கொள்ளூம் பணம் 6-  சேனைக் கடைக்கும் வாசல் பணம் 3 ம் கழித்துக் கொள்ளும்
  5. பணம் 6-1/2  கச்சவடவாணியர் பேர் ஒன்[று]க்குக் கொள்ளும் பணம் 3 சிவன்படவர் பேர் ஒன்றுக்கு கொள்ளும் பணம் 2-1/2 முன்னாள் தானத்தார்க்கு நடந்து
  6. வரும் புடவை முதலு பணம் 4 ம் கார்த்திகை காணிக்கைக்கு பணம் 4 ம் இறுக்க கடவார்கள் ஆகவும் உபாதி விநியோகம் நாட்டில் கோயில்ப்பற்று
  7. அற்ற மரிஆதி இறுக்கக் கடவர்கள் ஆகவும் இம்மரிஆதி சந்த்ராதித்யவரையும் நடக்கும் படிக்குக் கல்வெட்டிக் குடுத்தோம். இவ்வூர் ஊரவற்கு
  8. உடையா[ர்]த் திருப்புலிபகவ நாயினார்கோயில் தானத்தாரோம் ஸ்ரீ மாஹேஸ்வரரோ ரக்ஷை. ஆலாலசுந்தரன்.

திருமடைவிளாகம் – கோவிலைச் சூழ்ந்த பகுதி; நாட்டில் – ஊரில்; கோயில்பற்று – கோயிலுக்கு என்று ஒதுக்கிய; மரியாதி – வழக்கம், மரபு; வாசல்பணம் – வீட்டை கணக்கிட்டு பெறும் வரி; கழிக்க – குறைக்க, reduce; புறநாட்டிலே – outpost; தறிகண்ட வாசல் – தறி உள்ள வீட்டிற்கு; நடந்து வரும் – நடப்பில் உள்ள, current practice; உபாதி – வரிவகை; விநியோகம் – பொதுச் செலவை ஈட்டுகட்ட வாங்கும் வரி;

விளக்கம்: வீர விஜ பூபதி என்பது வீர விஜபுக்க ராயரை (1422-1424) குறிக்குமானால் ஏவிளம்பி 1417-1418 இல் நிகழ்கின்றது. இந்த இரண்டில் ஏதோ ஒன்று தவறாக குறிக்கப்பட்டு உள்ளது. தை மாதம் 5 ம் நாள் திருப்புலிப்பகவ இறைவர் கோவிலைச் சூழ்ந்த திருமடை விளாகத்தில் வாழும் கோவில் பொறுப்பாளர்கள் இவ்வூர் செங்குந்தருக்கு வரிக் குறைப்பு குறித்த கல்வெட்டு ஒன்றைத் தந்தனர். அக் கல்வெட்டு ஊரில் கோயிலுக்கு ஒதுக்கப்படாத மரபாக வாசல்பணம் என்னும் வரியை குறைக்க வேண்டும் என்று சந்திரகிரிக்கு ஊர்ப்புறத்தே உள்ள சாவடிக்கு போய் இருந்தபோது அங்கே மன்னரை சந்தித்து வரிக்கழிவு பெற்று வந்ததற்கு இணங்க முன்பு கடமை வரிக்கு பெற்ற பணம் 9-1/2 க்கு தறி உள்ள வீட்டிற்கு வாசல் பணம் 3 கழித்து கண்டதறி ஒன்றுக்கு இனி வாங்கும் வரிப் பணம் 6-1/2, வெற்றிலை விற்கும் சேனைக்கடையார்க்கு வாசல் பணம் 3 கழித்து இனி வாங்கும் பணம் 6-1/2. கயிறு விற்கும் கச்சவடவாணியர் ஆள் ஒருவருக்கு இனி கொள்ளும் பணம் 3, மீனவரான சிவன்படவர் ஆள் ஒருவருக்கு இனி கொள்ளும் பணம் 2-1/2 ஆகும். முன்னாளிலே கோவில் பொறுப்பாளருக்கு புடவை முதலாக கட்டிய பணம் 40 -ம், கார்த்திகை காணிக்கைக்கு கட்டிய பணம் 4 –ம் அப்படியே தொடரும் அதை அப்படியே கட்ட வேண்டும். பிற வரி வகைகள், பொதுச் செலவு வரி, ஊரில் கோவிலுக்கு ஒதுக்கப்படாத மரபு வரிகளையும் அப்படியே கட்ட வேண்டும். இந்த மரபு ஞாயிறும் நிலவும் நின்று நிலைக்கும் காலம் வரை தொடரட்டும் என்று இவ்வூரார்க்கு திருப்புலிப்பகவ இறைவர் கோவில் பொறுப்பாளர்கள் கல்வெட்டி உறுதிமொழி கொடுத்தோம். இந்த வரி வரையறையை சிவனடியார் காத்து நிற்க வேண்டும். ஆலால சுந்தரன் இதை எழுதிக் கையெழுத்திட்டான்.

 இதில் இடம்பெறும் கைக்கோளர், சேனைக் கடையார், வாணியர் என்போர் முன்பு போர் தொழில் செய்யும் பட்டடைக் குடிகள் ஆவர். இராசராசன் ஆட்சியின் போது தேவார மீட்சி, குலோத்துங்கன் ஆட்சியில் பெரிய புராண தொகுப்பு ஆகியவற்றால் நிகழ்ந்த சைவ சமய எழுச்சியால் இந்தப் போர்க்குடிகள் கொலைத் தொழிலென்று போர்த்தொழிலை நீங்கி வணிகத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவு போர்ப்புரியும் குடிகள் குறைந்ததால் எதிர்த்து போரிட்டு துரத்த முடியாதபடி தமிழகம் வலுவிழந்ததால் கடந்த 600 ஆண்டுகளாக அயல் மொழியார் ஆட்சிப் பிடியுள் கட்டுண்டு கிடக்கின்றது. ஆயுதங்கள் மட்டுமே ஏந்தி வந்தவரிடம் இதாவது, இன்று மக்கள் தொகையில் 1% மட்டுமே உள்ள அயல் மொழியாரிடம் தமிழகத்தின் 50% மேலான விளைநிலங்கள் உரிமையாகி உள்ளன.

பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 36, பக். 260.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.