தமிழ்காக்க உழைத்த தன்மானத் தமிழர் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்

0

மேகலா இராமமூர்த்தி

ஆரிய வல்லாண்மைத் திறத்தைத் தம் கூரிய தமிழ்ச் சொற்களால் அம்பலப்படுத்தியவரும், தமிழ்த் தேசியத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவரும், பாவலரேறு என்று மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரால் நேயத்தோடு அழைக்கப்பட்டவருமான பெருஞ்சித்திரனார் சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம் என்னும் சிற்றூரில் துரைசாமி, குஞ்சம்மாள் இணையருக்கு 10.03.1933-ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் இராச மாணிக்கம’ என்பதாகும். பின்னர், இராச என்பதைத் துறந்து, தம் தந்தையின் பெயரினை இணைத்துத் ‘துரைமாணிக்கம்’ என்றானார்.

மெய்ம்மைப்பித்தன், தாளாளன், அருணமணி, பாஉண் தும்பி, பெருஞ்சித்திரன் எனும் பல்வேறு புனைபெயர்களில் இவர் பின்னாளில் எழுதிவந்தார். இவற்றில், செம்மாந்த சங்கத் தமிழ்ப் புலவனின் பெயரான பெருஞ்சித்திரன் என்பதே இவருக்கு நிலையான வழங்குபெயராகிவிட்டது.

தனித்தமிழ் இயக்கம், தமிழ் இதழியல், தமிழ்க் கவிதை எனப் பல்வேறு தளங்களில் குறிப்பிடத்தக்கவராக இயங்கியவர் பெருஞ்சித்திரனார். தமிழினம், தமிழ்மொழி, தமிழ்நாடு என மூன்றினையும் தம் உயிர்மூச்சாகக் கொண்டு செயற்பட்டுள்ளார். இந்திஎதிர்ப்பு, ஈழம் சார்ந்த கருத்தாக்கம், சாதி, மத எதிர்ப்பு, தமிழக அரசியல் செயற்பாடுகள் எனப் பல பணிகளிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டுள்ளார். எந்த நிலையிலும் யாருக்காகவும் எதற்காகவும் உடன்பாடு செய்து கொள்ளாதவராக, இருபதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றில் தடம் பதித்தவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

எழுத்துச் சீர்த்திருத்தம் மும்முரமாக நடைபெற்ற காலக்கட்டத்தில் வாழ்ந்த பெருஞ்சித்திரனார் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு அவர் முன்வைத்துள்ள காரணங்களாவன:

“புதிய எழுத்துருக்கள் தோன்றி வருவதால் முன்னைய தொன்மையான இலக்கண, இலக்கியங்கள் படிக்க முடியாமற் போகும். சில இலக்கண விதிகள் பயனற்றுப் போகும். தமிழின் தொன்மையை, அதன் காலத்தை நிலைநாட்டிடச் சான்றுகள் ஏதுமின்றிப் போகும்” என்பவையே அவை.

தமிழின் பெருமைகளையும் சிறப்புகளையும் பல்வேறு தலைப்புக்களின்கீழ் அற்புதக் கவிதைகளாய்ப் புனைந்துள்ளார் பாவலர் ஏறு.  “தமிழ்த்தாய் அறுபது, முத்தமிழ் முப்பது, தமிழில் கற்க முன்வருக, தமிழ் உழவு செய்க, தமிழ் படித்தால் அறம் பெருகும், தூயதமிழ் எழுதாத இதழ்களைப் பொசுக்குங்கள், பைந்தமிழில் படிப்பதுதானே முறை என்பன அவற்றில் சிலவாகும்.

”தமிழ் உழவு செய்க!” என்ற தம் கவிதையில்,

எழுகதமிழ் மங்கையரே! நல்லிளைஞீர் உங்கள்
இளமைதரும் கனவொருபால் இருக்கட்டும்; முன்னே
தொழுகதமிழ் அன்னையினை; துலங்குகநும் ஆற்றல்!
துணிவுறவே ஊரூராய்த் தெருத் தெருவாய்ச் சென்றே
உழுகநறுஞ் சொல்லாலே! ஊன்றுகசெந் தமிழை;
உணர்வுமழை பொழிவிக்க; எண்ணஎரு ஊழ்க்க!
செழுமையுறுந் தமிழ்க்குலத்தை விளைவிக்க! பின்னர்
செந்தமிழ்த்தாய் அரசிருக்க ஏற்றவழி செய்மே!
என்று தமிழ் இளைஞர்களிடம் அறைகூவல் விடுக்கின்றார்.

மரபுக்கவிதை, புதுக்கவிதை என்ற கவிதையின் இருவேறு வடிவங்களையும் ஒப்பிடும் பெருஞ்சித்திரனார்,

“மரபு தழுவிய அன்றைய பாடல்கள், தாய்மையுணர்வு நிரம்பிய ஓரிளம் பெண் பெற்றெடுக்கும், நல்ல அழகிய அறிவறிந்த நிறைமாதக் குழந்தைகள் போன்றவை. சோம்பலாலும் அறிவுக் குறுக்கத்தாலும், மன இழிவாலும் பிதுக்கப்பெறும் இக்காலத்து மரபு நழுவிய பாடல்கள், தாய்மையுணர்வு நிரம்பாத பெண்ணுரு சான்ற ஒருத்தி, அரைகுறை முதிர்ச்சியோடு பெற்றெடுக்கும், உறுப்புகள் குறைவுற்று, அழகும் அறிவும் குறைந்த, குறைமாதக் குழந்தைகள் போன்றவை” என்றுரைப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

உயர்ந்த உண்மைப் பாவலனுக்கு இருக்கவேண்டிய தகுதிகள் பத்து என்று செப்பிடும் பாவலரேறு, அவை நுண்ணோக்கு, இயற்கை ஈடுபாடு, சொல்வன்மை, பாத்திறன், யாப்பறிவு, மொழியறிவு, கற்பனையாற்றல், மனவியல், நடுநிலைமை, துணிவு என்பவனவாகும். இவை ஒன்றின் ஒன்று சிறந்துவிளங்கிப் பாவலன் ஆற்றலைப் படிப்படியாக மிகுவிக்கின்றன. இத்தகுதிகளின் பொருத்தத்திற்கேற்பவே ஒவ்வொருவனின் பாடலும் ஒளிர்ந்து சுடரும்; காலத்தை வெல்லும்; மக்கள் கருத்தினை ஆட்கொள்ளும்; அறிஞர் மதிப்பினைப் பெறும் என்கிறார்.

தனித்தமிழ் இயக்க அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், சமூகப் போராளிகள் எனப் பலரைக் குறித்தும் தம் பாக்களில் பதிவுசெய்திருக்கும் பாவலரேறு அவற்றுள், தனித்தமிழ் இயக்க முன்னோடியான மறைமலையடிகள், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் போன்றோரைப் பற்றி எழுதியவையே மிகுதி. இவ்விரு அறிஞர்களின் கொள்கைகளும் கற்றோரிடமும், மற்றோரிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர் பெருஞ்சித்திரனார் எனில் மிகையில்லை.

உலகம் போற்றும் உத்தமத் தலைவர்களையும் களப்போராளிகளையும் தம் கவிதைகளின் வழியாய்ப் போற்றியுள்ள பாவலரேறு, காரல் மார்க்சு, நெல்சன் மண்டேலா போன்றோருக்கு இரங்கற்பாக்கள் பாடியுள்ளார். அண்ணல் அம்பேத்கர், காந்தியடிகள், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போன்றோரின் சமூகப் பணிகளையும், பொதுவாழ்வில் அவர்களின் செயற்பாடுகளையும் எடுத்துரைக்கும் வகையில் கவிதைகள் இயற்றியுள்ளார்.

குழந்தைக் கவிஞராகவும் முத்திரை பதித்திருக்கும் பெருஞ்சித்திரனார், ”பள்ளிக்குப் போ” என்ற தலைப்பிலான குழந்தைப் பாடலில்,

ஒழுக்கம் அன்பு கற்று வா!
 உடற் பயிற்சி பெற்று வா
அழுக்கு நெஞ்சைத் தூய்மை செய்!
 அடக்கம் அமைதி வாய்மை வை!

பாட்டும் கதையும் படித்து வா
 பண்பைக் கடைப் பிடித்து வா
நாட்டுப் பற்றை வளர்த்து வா
 நமது மொழியைக் கற்று வா!

என்று இனிய நல்லுரைகளை மழலையர்க்கு எளிய தமிழில் நவிலுகின்றார்.

மொழி என்பது மனித இனத்தின் விழி; அதுவே நம் அடையாளம். ஒரு மொழி அழிகிறது என்றால் அம்மொழி பேசும் மக்களும் அவர்களின் பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கங்களும் அழிகின்றன என்றே பொருளாகும் என்கிறார் பெருஞ்சித்திரனார்.

மொழிக்கலப்பு பற்றித் தெரிவிக்கும் அவர்,

”ஆங்கிலம் என்ற மொழி இன்று உயிர்வாழ்ந்துகொண்டிருப்பதே பிறமொழிக் கலப்பினால்தான். காரணம், தன் பெயரைக் காக்கின்ற அளவில்கூட அதனிடம் மொழிவளம் இல்லை. ஆனால் இது தமிழுக்குப் பொருந்தாது. தமிழில் நேர்ந்த மொழிக்கலப்பு அதன் தூய்மையைக் கெடுத்ததோடல்லாமல் அதனை இழிவடையவும் வைத்துவிட்டது. இன்னும் சொன்னால், அதன் மொழிவளர்ச்சியைத் தடுத்து, அதன் இனத்தையும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளுவம் முதலிய மொழியினங்களாகப் பிரிவுறச் செய்துவிட்டது. மொழிக்கலப்புமட்டும் தமிழில் நேர்ந்திருக்கவில்லையானால் இந்தியாவின் பேரினமாகத் தமிழினமே இன்றுவரை இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை என்கிறார்.

தமிழ்மொழியில் கழகக்கால(சங்க) இலக்கியங்களைப்போல் மிகவும் சிறந்தனவும், கட்டுக்கோப்பு உடையனவுமான இலக்கியங்கள் இடைக்காலத்திலும் பிற்காலத்திலும் தோன்றாமைக்குக் காரணமும் படிப்படியாகத் தமிழில் ஏற்பட்ட மொழிக்குலைவே என்பது பெருஞ்சித்திரனாரின் எண்ணம்.

”மண்ணினால் கட்டப்பெறும் வீடுகள் கட்டுவதற்கு எளியவைதாம்; முயற்சியும் குறைவுதான்; பரவலாகவும் கட்ட இயலுகின்றவை, அவை. ஆனால் அவற்றை நம்மில் எவரும் விரும்பாதது ஏன்? அவற்றின் முயற்சி எளிமையையும், செய்பொருள் எளிமையையும் போலவே அவற்றின் நிலைப்பும் எளியதாகிவிடுவதே! வெயிலுக்கும் மழைக்கும் ஈடுகொடுக்க முடியாமல் அம் மண்வீடுகள் விரைவில் சிதைந்துபோவதில்லையா? அப்படிப்பட்டவைதாம் ’எளிய’ சொற்களால் கட்டமைக்கப்பெற்ற ’எளிய’ இலக்கியங்களும்!

மொழிபற்றிக் கவலைப்படாமல், சொல்லோட்டங்களைத் தம் கருத்தோட்டங்களுக்கு ஏற்றவாறு பஞ்சுபோலப் பறக்கவிடுகின்ற இன்றைய எழுத்தாளர்களின் கோபுர இலக்கியங்கள், அடுத்துவரும் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளில் குப்பைமேடுகளுக்குப் போகாமல் தம்மைக் காத்துக்கொள்ளும் ஆற்றலுடையவை என்பதைக் காலந்தான் தீர்மானிக்கமுடியும்” என்கிறார் தீர்க்கமாக.

தமிழினத்தின் முன்னேற்றத்திற்கு பெருந்தடைக்கல்லாக இருப்பது நம்மிடம் இருக்கும் சாதிப்பாகுபாடே என உரத்துச் சொல்லும் பாவலரேறு,

“சாதிநிலை நம்மை ஒருவர்க்கொருவர் முன்னேறவிடாமல் செய்யும் அடிப்படையான தாழ்வுணர்வாக – வீழ்வுணர்வாக இருக்கின்றது. இந்த இழிநிலையினின்று  – நம்மை மீண்டும் மீண்டும் குழிக்குள்ளேயே, சேற்றுக்குள்ளேயே புதைத்துக் கொள்ளுகின்ற மனநிலையினின்று – நாம் எவ்வாறு விடுபடுவது? நம்மையே நாம் உணர்ந்துகொண்டாலன்றோ, விடுவித்துக்கொண்டாலன்றோ, சாதியுணர்வும் நம்மிடமிருந்து கழலும்?! சாதியிலிருந்து நாமே விலகாத வரையில் சாதி நம்மைவிட்டு விலகாது. சாதி வேறெங்கும் வெளியில் இல்லை; அது நம் உள்ளத்துக்குள்ளேதான், அறிவுக்குள்ளேதான், உணர்ச்சிக்குள்ளேதான் இருக்கின்றது. அங்குதான் அஃது உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றது. எனவே, நாமே அதை வெளியேற்றாத வரையில், அதுவாகவே நம்மைவிட்டுப் போய்விடாது. உண்மையாகச் சொல்வதானால், நாம்தாம் அதை உயிர்வாழ வைத்துக்கொண்டிருக்கின்றோம்; நாம்தாம் அதற்கு நீரூற்றுகிறோம்; எருப்போடுகிறோம்; காவல் செய்கிறோம்; அது மடிந்துபோவதில் நமக்கு விருப்பமில்லை. அஃது இல்லாமற்போனால் நமக்குப் பெருமையில்லை; வாழ்வில்லை என்று கருதிக்கொண்டு, அதை நாம் காப்பாற்றி, மாய்ந்துவிடாமல் வாழ்வித்துக்கொண்டு வருகின்றோம். இந்நிலையில் அது எப்படி இல்லாமற் போய்விடும்?

உண்மையிலேயே சாதி நம்மைப் பிடித்துக்கொண்டிருக்கவில்லை; நாம்தான் அதைப் பிடித்துக்கொண்டிருக்கிறோம்.” என்று கூறியிருப்பது தமிழர்கள் ஆழமாய்ச் சிந்திக்கவேண்டிய கருத்தாகும்.

தமிழின் வளர்ச்சிகுறித்தே அதிகம் அக்கறைகொண்டிருந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார், ”தமிழ் வாழ வேண்டுமா” எனும் தலைப்பில் எழுதியிருக்கும் பாடல் இன்றைய தமிழகச் சூழலுக்கும் பெரிதும் பொருந்துவதாக இருக்கின்றது.

தமழ் வாழ வேண்டுமா?

தமிழ் வாழ்க வென்பதிலும் தமிழ்வா ழாது!
தமிழ்ப்பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது!
குமிழ்சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்டும்
கொக்கரிப்புப் பேச்சாலும் தமிழ்வா ழாதே!
அமிழ்கின்ற நெஞ்செல்லாம் குருதி யெல்லாம்
ஆர்த்தெழும்உள் உணர்வெல்லாம் குளிரு மாறே
இமிழ்கடல்சூழ் உலகமெலாம் விழாக்கொண் டாடி
ஏற்றமிகச் செய்வதிலும் தமிழ்வா ழாதே!

பட்டிமன்றம் வைப்பதிலும் தமிழ்வா ழாது!
பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது!
எட்டிநின்றே இலக்கியத்தில் இரண்டோர் பாட்டை
எடுத்துரைத்துச் சுவைபடவே முழக்கினாலும்
தட்டி, சுவர், தொடர்வண்டி, உந்துவண்டி
தம்மிலெல்லாம் தமிழ்தமிழென் றெழுதி வைத்தே
முட்டிநின்று தலையுடைத்து முழங்கினாலும்
மூடர்களே தமிழ்வாழப் போவ தில்லை!

செந்தமிழ்செய் அறிஞர்களைப் புரத்தல் வேண்டும்!
செப்பமொடு தூயதமிழ் வழங்கல் வேண்டும்!
முந்தைவர லாறறிந்து தெளிதல் வேண்டும்!
முக்கழக உண்மையினைத் தேர்தல் வேண்டும்!
வந்தவர்செய் தீங்குகளால் தமிழர்க் குற்ற
வரலாற்று வீழ்ச்சிகளை எடுத்துக் கூறி
நொந்தவுளஞ் செழித்ததுபோல் புதிய வையம்
நோக்கிநடை யிடல்வேண்டும்! தமிழ்தான் வாழும்!

எனத் தமிழ்காக்க, அதற்குற்ற இன்னல்போக்கப் பாவலரேறு புகலும் இவ் அருங்கருத்துக்களை நெஞ்சில் நிறுத்துவோம்! நந்தமிழாம் செந்தமிழை அழியாது காப்போம்!

*****

கட்டுரைக்கு உசாத்துணை:

  1. https://ta.wikipedia.org/wiki/ பாவலரேறு_பெருஞ்சித்திரனார்
  2. பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் – தென்மொழி அச்சக வெளியீடு, சென்னை – 5.
  3. இலக்கியத்துறையில் தமிழ்வளர்ச்சிக்குரிய பணிகள் – பாவலரேறு பெருஞ்சித்திரனார், தென்மொழி அச்சக வெளியீடு, சென்னை -5.
  4. சாதி ஒழிப்பு – பாவலரேறு பெருஞ்சித்திரனார், தென்மொழி அச்சக வெளியீடு, சென்னை – 5.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *