2019 நவராத்திரி 1

மரபின் மைந்தன் முத்தையா
கரும்பட்டு வானில் போர்த்து
கண்தூங்கச் சொன்னாள் தேவி
வரும் ஒற்றைக் கதிருக்குள்ளே
விதையாக நிற்கும் நீலி
ஒரு வார்த்தை சொல்வாள் என்றே
உலகமே ஏங்கும் நேரம்
கருவாகும் வேதத்துள்ளே
கலையாகி நின்ற காளி!
ஆற்றோர நாணல் தூங்க
ஆராரோ பாடும் அன்னை
நேற்றோடு நாளை இன்றி
நிகழ்கணம் சமைத்தாள் முன்னை
காற்றாகிப் புயலாய் மாறி
கடுங்கோபம் தீர்ந்த பின்னை
ஊற்றாகி ஒளியும் ஆவாள்
உயிர்ப்பித்துத் தந்தாள் என்னை!
எழுதுகோல் முனையில் நிற்பாள்
எழுத்தையும் அவளே கற்பாள்
பழுதுகள் அகற்றி வைப்பாள்
பவவினை சுமைகள் தீர்ப்பாள்
விழுதிலே வருபவள்தான்
வேரெனப் படர்ந்திருப்பாள்
அழுதவன் கண்ணீருக்குள்
அனுபவ உப்ப ளிப்பாள்!
கன்னியே என்றழைத்தால்
கிழவியாய் முன்னே நிற்பாள்
அன்னையே என்றால் ஐயோ
அழகிய குழந்தை ஆவாள்
மின்னலாய்த் தெரிவாள் விண்ணில்
மேகமாய்த் திரிவாள் கையில்
கன்னலை ஏந்தி நிற்கும்
கனலையே சக்தி என்போம்!
சிலையெனக் கடக்க வேண்டாம்
சிரிப்பொலி காதில் கேட்கும்
மலையென மலைக்க வேண்டாம்
மழலையாய் மார்பில் மேவும்
கலையினில் அளக்க வேண்டாம்
காணவே முடியா வானம்
நிலையென நிற்கும் தேவி
நீள்விரல் நிழலே போதும்!