-திருச்சி  புலவர் இராமமூர்த்தி 

இளம் பருவத்திலேயே  முதிர்ந்த அறிவின் அடையாளங்கள் வெளிப்பட, சுந்தரர்

கண்முன் தோன்றிய  பரவை நாச்சியாரின் பேரழகு  பற்றியது இப்பாடல். அம்மங்கை நல்லாளைக் கண்டவுடன் இறையருளால் சுந்தரருக்குக் காதலுணர்வு உண்டாயிற்று.

இந்த உணர்வைக் களவியல் உணர்வு என்று  தொல்காப்பியம் கூறும். இளம்பருவத்தினர் இணைவிழைச்சுக் கொள்வது இயல்பு. பாவேந்தர் பாரதி தாசனர், ‘’காதல் அடைதல் உலகியற்கை!’’  என்றுபாடுவார். இக்காதல் உணர்வு, பிறர் அறிந்துகொள்ள இயலாத நிலையில், இருவருக்கும் இடையே ஏற்படும். இதனைக் ‘களவு’ என்ற இயலாக  இலக்கணம்கூறும். இக்களவியலின் தொடக்க நிகழ்ச்சிகளாகக் காட்சி, ஐயம், தெளிவு, குறிப்பறிதல் ஆகிய நான்கும் நிகழும் ! இதனைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும். இதனைத் திருக்குறள் காமத்துப் பாலின்  முதற்குறள் விளக்குகிறது. 

தலைவன் தலைவியை நெடுந்தொலைவில்  வரும்போதே கண்டுவிடுகிறான். அவன் தான்காண்பது ஓரு தெய்வத்திருவுருவோ? என்றுஎண்ணுகிறான், இதனை ‘அணங்கு கொல்!’  என்றெண்ணி ஐயுறுகின்றான்! பின்னர் தலைவி மேலும் நெருங்கி வரும்போது , சிறந்த உருவுடைதாய்த் தோன்றும் தேர்ந்தெடுத்த மயிலோ? என்பதை, ‘ஆய்மயில் கொல்லோ?’  என்று கருதுகிறான். அதன்பின் மேலும் நெருங்கி வரும்போது, அவள்காதில் அணிந்த குழையாகிய அணிகலனைக் காண்கிறான். அப்படியானால் காதில் நகையை அணிந்து கொண்டு நெருங்கி வருபவள் ‘பெண் தானோ?‘ என்ற  தெளிவற்ற மனநிலை கொள்கிறான்! இதனை, 

‘’அணங்குகொல் ,  ஆய்மயில் கொல்லோ  கனங்குழை
மாதர்கொல்  மாலும்என் நெஞ்சு!’’

என்ற  திருக்குறள்  படம் பிடித்துக்  காட்டுகிறது! காட்சி, ஐயம்,  தெளிவு ஆகிய மூன்று நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இத்திருக்குறள்  அமைந்து நம்மை வியப்படைய வைக்கிறது!  

இதனைப் பரிமேலழகர், ‘.எழுதலாகா உருவும், தன் வருத்தமும் பற்றி ‘அணங்குகொல்’ என்றும், சாயலும் பொழில்வயின் நிற்றலும் பற்றி, ‘ஆய்மயில்கொல்’ என்றும், தன் நெஞ்சம் சென்றமையும் அவள் எதிர்நோக்கியவாறும் பற்றி ‘மாதர்கொல்’ என்றும் கூறினார்.  என்று மேலும்விளக்குவார்! இத்தகைய  காதல் நிகழ்வு சேக்கிழார் சுவாமிகளின்  பாடலில் விளங்குகிறது. 

இதற்கு முதற்பாடலில் ‘’விற்புரை நுதலின் வேற்கண் விளங்கிழை யவரைக் கண்டார்!’’ என்றபகுதி இருவர்தம்  கண்ணும் ‘’ கண்ணொடு கண்ணிணை நோக்கு’’ ஒத்ததை நினைவூட்டுகிறது. அப்பாடலில் ‘’நகைபொதிந்து இலங்கு செவ்வாய் விற்புரை நுதலின் வேற்கண் விளங்கிழையவர்’’ என்றபகுதி,  பரவையாரது இயற்கை செயற்கை என்ற இருவகைத் தெய்வீக அழகுகளையும் காட்சிபெற வைத்தவாறு. நம்பிகள் காட்சிக்குக் கவர்ச்சியுற முதலிற் புலப்பட்டது நகை. அதன் பின்னரே அதற்கிடமாகிய செவ்வாய் தோன்றிற்று. இவை யிரண்டினால் அக்காட்சியை அவர் உள்ளத்தே ஊன்ற வைத்தன மேலே கண்ட வில்லும் வேலும் ஆம். -ஆதலின் இம்முறை வைத்தார். ஊறுசெய்து உறுத்தியன ஆதலின் படையாகக் கூறியவாறு. வில் கைவிட்டகலாது தொழில் செய்வதுபோல் நுதலும் தானிருந்தபடியே செயல் விளைத்தது ஆதலின் வில் என்றார். வேல் உடையாரால் எறியப்பட்டு ஏவப்பட்டாரிடம் போய்ச் செயல் விளைக்கும்; ஆதலின் கண்ணை வேல் என்றார். இங்குக் கண் என்றது கண்ணின் தொழிலாகிய பார்வையை. அந்தக் கண்ணால் பரவையாருங் கண்டாராதலின் (288) “கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள், என்ன பயனு மில“ என்ற திருக்குறளிற் கண்டவாறு நிகழ்ச்சி உண்டாயிற்று என்க. இக்காரணம் பற்றியே வரும்பாட்டில் விற்குவளை என ஒரு சேர வைத்து எண்ணியபடியாம்’’ என்ற   சிவக்கவிமணியார் உரையின் ஆழமும் அகலமும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. இது காட்சி !

அடுத்து  ஐயம் என்ற  தொடர் நிகழ்ச்சி. பரவையாரின்  அழகிய தோற்றம் சுந்தரர் உள்ளத்தில்  பல்வேறு ஐயங்களை உண்டாக்குகின்றன! முதலில் அவர் தோற்றம்  தேவருலகக் கற்பக மரத்தின் பூங்கிளை போன்று காட்சி தந்தது.அதனைக்  ‘’கற்பகத்தின் பூங்கொம்போ?’’ என்று கருதுகிறார்!  

கற்பக மரம்  வானுலகைச் சார்ந்தது. மண்ணுலகில் அதன் கிளைமட்டும் வந்ததோ? பரவையார்  வரும்போதே எங்கும் பரவிய நறுமணம் கற்பகப்பூவின் நறுமணமோ? மரக்கிளை என்ற  கருத்து முற்றப் பொருந்தவில்லை எனக்கருத்தினால், அத்தொடரை கற்பு+அகத்து+ இன்+ பூ+கொம்பு என்று பிரிக்கப்பெற்று, கற்பினை  அகத்தே கொண்ட இனிய மலர்க்கொத்து போன்ற மங்கை என்ற தொனிப் பொருள் தோன்றுகிறது ஆகவே இது கொம்போ? பெண்ணோ? என்றஐயம்தோன்றியது!

அடுத்து பரவையாரை மன்மதன்,  தான் காதல் மலரம்புகளை எய்து சுந்தரரை வசப்படுத்தி   உயர்வாழ்வு அடைதற்கு உரிய வாழ்விடமாகக் கருதி வந்தானோ? 

என்றகருத்தில் ‘’காமன் தன் பெருவாழ்வோ’’  என்று கருதினார்! மணிவாசகரின் திருக்கோவையாரின், 

 திருவளர் தாமரை, சீர்வளர் காவிகள், ஈசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ், கோங்கு, பைங்காந்தள் கொண்டு ஓங்குதெய்வ
மருவளர் மாலை, ஓர் வல்லியின் ஒல்கி, அனநடை வாய்ந்து
உருவளர் காமன்தன் வென்றிக்கொடி  போன்று? ஒளிர்கின்றதே!

என்ற பாடலில்  உருவளர் காமனின்  வெற்றிக்கொடி போன்று  என்ற உவமை பரவை நாச்சியாருக்கும்  பொருந்துகிறது.இதில் பூங்கொம்பு என்ற தொடரின் பொருளும் இணைகிறது!

அடுத்து அழகிய புண்ணியங்கள் செய்த புண்ணியத்தின் பயனாக விளைந்த பெரும்புண்ணியமோ? என்று பரவையாரின் தோற்றம் சுந்தரரைக் கருதவைக்கிறது !  அல்லது அழகு என்றபொருளின் பயன்கள் பலவற்றுள் சிறந்த புண்ணியப்பயனோ? என்றுசுந்தரர்கருதுகிறார். புண்ணியம் காட்சிப் பொருள் அல்லவே! அதுவோ,  பெண்வடிவமோ? என்ற ஐயம்தோன்றும் காட்சி இது! இதனை,’’ பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ?’’ என்ற பாடல்வரி புலப்படுத்துகிறது. 

இது நிலத்தில் கால்பதித்து  முளைத்த கொடியோ? இக்கொடியில் வில், குவளை, பவளம், மலர், மதி ஆகியவை பூத்துக் காணப்  படுகின்றனவே? ஒரு கொடி மேகத்தைத் தலையில் சுமந்துகொண்டு வில் , பவளம், மதி ஆகிய வேறுபட்ட பொருள்களுடன், குவளை மலர்களையும்   ஏந்திக்கொண்டு மிகுந்த வாசனை வீசித் தோன்றுவது போல் இருக்கின்றதே! உலகில் இல்லாத கொடியோ? உள்ள பெண்ணோ? என்பது ஐயப் பொருள் தருகிறது! இதனை,

‘’புயல் சுமந்து  வில் குவளை பவள மலர் மதி பூத்த  விரைக்கொடியோ?’’  

என்று   சேக்கிழார்  பாடுகிறார்! ஒருபெண்ணின் மேகம்போன்ற கூந்தல், வில் போன்ற புருவம், குவளை  போன்ற விழிகள், பவளம் போன்ற இதழ்கள், கோங்க மலர் போன்ற கொங்கை, மதி போன்ற நுதல் ஆகியவற்றை உருவகம்  செய்யும் சொல்லாட்சித் திறம் பெற்றது இப்பகுதி! பெண்ணின் அங்கங்கள் இன்று படிப்போருக்கும் காட்சிப்பொருளாக அமைந்தது. அன்று  நேரில் கண்ட போது, சுந்தரர் மட்டுமே உணர்ந்த மலரின் நறுமணம் ‘’ விரைக்கொடி’’ என்ற தொடரில் அமைந்தமை இன்புறத் தக்கது.  

அடுத்து சுந்தரருக்குப் பெருமிதமும் தரும்ஓர்உள்ள நிகழ்ச்சி கூறப்பெறுகிறது. இதுவரை கண்டறியாத புதுமையை  பரவையார் தோற்றத்தில், சுந்தரர் உணர்ந்தார் . ஆதலால், ‘’அற்புதமோ?’’ என்று கருதினார். அவர் மட்டுமே உணர்ந்த அனுபவம், அது!  இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பெற்று இறைவன் திருவுள்ளப் பாங்கின் வண்ணமே வாழும் சுந்தரருக்கு இக்காட்சியும் இறைவன் திருவருளாகவே  தோன்றியது. ஆதலால் இதனை ‘’ சிவனருளோ?’’ என்றார்.

இந்நிகழ்ச்சி, ஐயம் என்ற துறையாதலின் ஐயத்தின் இலக்கணமாகிய அறிவும் அறியாமையும் கலந்த உள்ள நிகழ்ச்சியைக் குறிக்கின்றமை உணர்க.   கொம்போ – வாழ்வோ – புண்ணியமோ – 

கொடியோ – அற்புதமோ – இவற்றில் ஒன்றோ, அன்றி முற்றும் கலந்ததோ, பிறிதோ என்று அறிவும், துணிவுபடாமையின் அறியாமையும், கூடி அறியேன் எனப் பெற்றது. 

அதிசயித்தார் – இதுவும் அற்புதம் போலவே பெருமிதமும் இன்பமும் கலந்த தொரு உள்ள நிகழ்ச்சியேயாயினும் இன்னதென்று அறிந்து அனுபவிக்கப் பெறும். “அதிசயம் கண்டாமே“ என்ற (திருவாசம்) அதிசயப்பத்து முடிபுகளைக் காண்க. 

மேலே சொல்லிய கருத்துக்கள் நம்பிகளது உள்ள நிகழ்ச்சிகளாம். மனதுக்குப் புலனாய் அறிந்து உரைக்கப்படுதலின் அதிசயித்தார் என்பதாம்.

முதலில் தெய்வ மணமும், தெய்வ வொளியும், தெய்வ அழகும் கொண்ட ஒரு பொருள் நம்பிகளது காட்சிக்குட்பட்டது. அதனைக் கொம்போ என்றார். பின்னர் அதன் அழகு மிகுதி நோக்கிக் காமன் வாழ்வோ என்றார். அந்த அழகு வெறுங் கீழ் நிலைப்பட்டதாய்த் தோன்றாமல் புண்ணிய விளைவாய்ப் புலனானமையின். “புண்ணியமோ“ என்றார். இவ்வளவும் நிருவிகற்பமாகிய பொதுக் காட்சியாம். 

இனி அவ்வாறு மணமும் அழகும் ஒளியும் பிரித்துணர்ந்து இன்னின்னவற்றால் விளைந்தன வென்று கூறுபடுத்தி அறியும் உள்ளநிலை உண்டானபடியால் ‘வில் குவளை பவள மலர் மதிபூத்த விரைக் கொடியோ’ என்ற சவிகற்பமாகிய சிறப்புக் காட்சியாயிற்று. இவ்விரண்டினோடு அமையாமையின் அற்புதமாயிற்று. அதன் பின்னர் அவனருளே யன்றி வேறு பற்றுக்கோடு தமக்கின்மையின் முன்னினைவின் குறிப்புத் தோன்றவே சிவனருளோ? என்ற மன நிகழ்ச்சியாயிற்று.

இவையனைத்தும்  சிவக்கவிமணியாரின் விளக்கம்! இனி முழுப்பாடலையும்  பயின்று பயன் பெறுவோம்!

கற்பகத்தின் பூங் கொம்போ? காமன் தன் பெரு வாழ்வோ? 

பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து 

விற் குவளை பவள மலர் மதிபூத்த விரைக் கொடியோ? 

அற்புதமோ? சிவனருளோ? அறியேன் என்று அதிசயித்தார்

இப்பாடலின்  நயங்கள் அனைத்தும்  எண்ணியெண்ணி மகிழ்தற்கு  உரியன. 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *