Category: கட்டுரைகள்

கட்டுரைகள்

  • வருக வருகவென வாழ்த்தி வரவேற்கிறோம்!

    கவிஞர் அறிவுமதி, புகழ் பெற்ற தமிழ்க் கவிஞர். தமது இன்னிசைப் பாடல்களால் தமிழ்த் திரைப்பட இரசிகர்களைக் கவர்ந்தவர். கவிஞர் அறிவுமதியின் இயற்பெயர் ‘மதியழகன்’. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவரின் தமிழ் இலக்கியத்தின் மீது இருந்த விருப்பத்தைக் கண்டு கவிஞர் மீரா கவிஞர் அப்துல் ரகுமானிடம் அறிமுகப்படுத்தினார். மறைந்த திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திராவின் ஏழு படங்களுக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
    2016 ஆம் ஆண்டில், தமிழ் பிறந்தநாள் பாடல் எழுதி, அரோள் கரோலி இசையமைத்து, உத்ரா உன்னிகிருஷ்ணன் இனிமையாகப் பாடி, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 2016 மாநாட்டில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது . சிறுவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பரவலாகப் பாடப்படும், ‘Happy birth day to you’ என்ற ஆங்கிலப் பாடலுக்கு இணையாக எழுதி பரவலாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிறந்த நாள் பாடல்

    லாலா லாலா லாலா
    லா லா லாலா லாலா லாலா

    லாலா லாலா லாலா
    லா லா லாலா லாலா லாலா

    நீண்ட நீண்ட காலம்
    நீ நீடு வாழ வேண்டும்

    வானம் தீண்டும் தூரம்
    நீ வளர்ந்து வாழ வேண்டும்

    நீண்ட நீண்ட காலம்
    நீ நீடு வாழ வேண்டும்

    வானம் தீண்டும் தூரம்
    நீ வளர்ந்து வாழ வேண்டும்

    அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
    பண்பு வேண்டும் பரிவு வேண்டும்

    அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
    பண்பு வேண்டும் பரிவு வேண்டும்

    எட்டு திக்கும் புகழ வேண்டும்
    எடுத்துக்காட்டு ஆக வேண்டும்

    எட்டு திக்கும் புகழ வேண்டும்
    எடுத்துக்காட்டு ஆக வேண்டும்

    உலகம் பார்க்க உனது பெயரை
    நிலவுத் தாளில் எழுத வேண்டும்

    உலகம் பார்க்க உனது பெயரை
    நிலவுத் தாளில் எழுத வேண்டும்

    சர்க்கரைத் தமிழள்ளி,
    தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம்

    பிறந்த நாள் வாழ்த்துகள்
    பிறந்த நாள் வாழ்த்துகள்

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

     

    கவிஞர் அறிவுமதி அவர்கள் நம் வல்லமை இணையத் தளத்தில் மனமுவந்து தமது படைப்புகளை அளிக்க முன்வந்திருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.  உளமார்ந்த வாழ்த்துகள் கவிஞர் அவர்களே!

    பாலைவனத்திற்குக் கவிஞர் அறிவுமதியின் புதிய விளக்கம் இங்கே:

    இது.. புதுக்கோட்டை..அறந்தாங்கிச் சாலையில் இன்று பார்த்த ஓர் ஊரின் பெயர்.


    பாலைவனம்..என்பதற்கு DESERT என்றே ஆங்கிலத்தில் பெயர்க்கும் பொதுப் பழக்கம் நம்மிடையே உள்ளது. அது தவறு.

    ‘பாலை’..என்ற வெப்பாலை என்றும் சொல்லப்படுகிற ஆங்கிலத்தில் WRIGHTIA TINCTORIA… என்கிற மரங்கள் மிகுதியாய் வளர்கிற நிலப்பகுதி… என்பதே இந்தப் ‘பாலைவனம்’..என்பதற்கான சரியான பொருளாகும்.

    தமிழ்நாட்டில் பாலைவனம்… என்பது கேரளாவில்.. பாலக்காடு.. பாலைக்காடு என்று தூய தமிழில் இன்றும்!

    தமிழ்நாட்டில் சூர சம்ஹாரம்..என்பது கேரளாவில் சூரன் போர்.. என்று இன்றும்
    புழங்குதல் போல்தான் இதுவும்!

    பாலைவனம் பெயர்ப் பலகையின் கீழ், பூக்களோடு உள்ளதுதான் பாலை மரம்.

    அறிவுமதி
    ஆவுடையார்கோவில்
    29.9.18

    Share
  • மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் – கவிதைநூல் விமர்சனம்

    -முனைவர் ஜே. ஜெகத் ரட்சகன்

    கவிதைகள் எழுதுவோரின் எண்ணிக்கை பெருகிவிட்டதால் அதனை மலிவாக எண்ணுகின்ற மனப்போக்கும் உருவாகியுள்ளது. உண்மையில் அதுபோன்ற மனப்போக்கு சரியானதுதானா? என்ற வினாவுக்கு, ஆம். சரிதான் என்று உடனடி பதிலை எவராலும் கூறமுடியாது. ஏனெனில் கவிதைகள் தம்முடைய பயணத்தின் உள்ளும் புறமும் அதன் வீரியத்தை இன்னமும் இழந்துவிடாமல் புதுப்பித்துக்கொண்டே வருகின்றன. புதுக்கவிதைகள் எதனைக் குறித்தும் பாடுபொருளாகக் கொள்ளலாம் என்கிற அதற்குரிய சுதந்திரம் அதன் பயணத்தில் தொய்வு ஏற்படாமல் தக்கவைத்துள்ளது. அந்தச் சுதந்திரத்தின் பயனாக இடுக்குகளில் மனிதப் பார்வைக்கு எட்டாமல் போயிருந்த மெல்லிய உணர்வுகளையும், சொல்லொணாத வலிகளையும், அழகியலையும் எதிர்ப்புகளையும் மிகச் சரியாக உள்வாங்கி வெளிப்படுத்தும் ஆற்றலைக் கூடுதலாக தாமாகவே தன் தலைமேல் ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருகிறது. எனவே, புதுக்கவிதைகள் முற்றாக வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவையல்ல என்கிற புரிதல்கள் அவ்வப்போது உரிய சான்றுகளுடன் நிரூபிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பா. ஜெய்கணேஷ் அவர்கள் எழுதிய மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் என்ற கவிதைத் தொகுப்பைக் கூறலாம். 73 கவிதைகள் அடங்கிய சிறிய தொகுப்பு. 73 கவிதைகளின் தலைப்புகளும் கவித்துவம் நிரம்பியவை. ஈர்ப்புக்குக் குறைவில்லாதவை. நூலமைப்பும் ஓவியங்களும் அழகிய கவிதைகளாகவே தென்படுகின்றன.

    ‘இல்லாதவைகளின் உலகம்’ என்னும் கவிதையில் வளர்ச்சி என்ற போலியான போர்வையில் போர்த்தப்பட்டு, வாழ்வின் அற்புத கணங்களையும் கவித்துவம் நிரம்பிய அழகிய வாழ்வையும் இழந்துவிட்டதைக் குத்தலோடு பதிவு செய்துள்ளார். ‘இருளின் கண்கள்’ என்னும் கவிதையில் இழந்துபோன இளம்பருவ கிராமத்து வாழ்வின் பதிவு அப்பட்டமாகக் காணப்படுகிறது.  சிறுகதையானாலும் கவிதையானாலும் காட்சிப்படுத்துதல் மிக முக்கியம். அந்த வகையில், சில சிறு சொற்களைக் கொண்டே கூறவந்ததைக் காட்சிகளாக நிலைநிறுத்துவதில் வெற்றி பெறுகிறார் கவிஞர். கவிதைக்கான சொற்களை வலிந்து தேடாமல் எளிதான சொற்களாலேயே மிக அழகான கவிப்பின்னலை உருவாக்கியுள்ளார். ‘வன்பூனைகளும் மென்பூனைகளும்’, ‘பலி ஆடு’ இத்தொகுப்பினுள் மிகவும் குறிக்கத்தக்கக் கவிதைகள். இக் கவிதைகளில் கவிஞர் துள்ளிக் குதித்தோடுமாறு படைத்துள்ள ஆட்டையும் பூனையையும் படிப்போர் எதனோடும் ஒட்ட வைத்து, அக்கவிதையைத் தனக்கேற்றவாறு வளைத்துக்கொள்ள இடமளிப்பவை. யானையும் எறும்பும் எனும் கவிதையும் அத்தகையதே.

    இறந்தவற்றை உண்டு புசிக்கும்/ இறக்கை விரித்த கழுகுகள்/ இருப்பவற்றையும் உயிர்க்குருதி குடித்து/ வாசம்தேடி வானின்/அகண்ட வெளியெங்கும்/ எக்காளமிட்டுத் திரிகின்றன/ இது பிணம் தின்னிக் /  கழுகுகளின் உலகம்   (43) என்ற கவிதையில் மனிதர்களுக்கெதிரான தம் போரைத் தொடுக்கிறார்.

    எல்லாம் அதனளவில் / இருப்பதில் எனக்கென்ன பிரச்சனை / யாவும் கலைத்து / பிரபஞ்சம் அழித்து / நான் மட்டும் வாழவா என்ற எளிய வரிகள் மனிதச் சமுதாயத்தை எதிர்நிலையில் வைத்து இயற்கையின் சார்பில் வாதிடுகிறார். ஆடு, யானை, எறும்பு, மான், சிட்டுக்குருவி, நரி, ஓநாய், விட்டில் பூச்சி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட உயிரினங்கள் இவருடைய கவிதைகளில் தென்படுகின்றன. மனிதர்களின் மீதான கோபங்களை நேரடியாகக் கூறாமல் விலங்குகளுக்குத் தம்முடைய எதிர்ப்பு மொழியைக் கற்பித்து மனிதர்களின் மீதான தாக்குதலைத் தொடுக்கிறார். மேலே சொல்லப்பட்ட விலங்குகள் ஓரிடத்தும் அந்த விலங்குகளாக இத்தொகுப்பினுள் பயன்படுத்தப்படவில்லை.

    பல கவிதைகள் குறுங்கதைகள் கூறுவதைப் போன்று அமைந்துள்ளன. சில கவிதைகள் எளிதாகப் பேச வேண்டியதைச் சுற்றி வளைத்துப் பேசுவதையும் காணமுடிகிறது. பல கவிதைகளில் ஒன்றின் சாயல் ஒன்றின்மீது பட்டுத்தெறிப்பதை எளிதில் உணர முடிகிறது. ஒன்றாக எழுதப்பட்டு வெட்டப்பட்டிருக்குமோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. கவிதைக்கான களங்களையும் ஒரு கை விரல்களுக்குள் அடக்கிவிடலாம் எனத் தோன்றுகிறது.  எனினும் சில கவிதைகளின் வழியாகவும் கவித்துவ நடையாலும் கவிஞரின் முதல் தொகுப்பு இது என்று கூறுவதை ஏற்க மனம் தயங்குகிறது. மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் இயல்புகளின் எல்லை யாவும் உடைத்து மெதுமெதுவாய் எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது.

    *****

    விமர்சகர் – உதவிப் பேராசிரியர், தமிழ்ப் பேராயம்,
    எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்

     

    Share
  • சேக்கிழார்  பா நயம் – 5

    ======================

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    ————————————————-

     

    தென்னாட்டின்  தனிச் சிறப்பு இங்கே காவிரி பாய்ந்து வளந்தருவதே! இக்காவிரி பாயும் நாட்டில் தான் சுந்தரரின் அவதாரமும், சைவப் பணிகளும்  வளர்ந்தன! கங்கைக்கு நிகரான காவிரி பாயும் சோழநாடே  சுந்தரரின் வாழ்விடமாகும். ‘’சோழநாடு சோறுடைத்து‘’ என்ற அனுபவ மொழி, சித்தாந்த நெறியில்  ஆன்மலாபத்தையும்  குறிக்கும். குடகு நாட்டில் தோன்றி தமிழ்நாட்டில் பாய்ந்து சோழநாட்டை வளங்கொ ழிக்கும்  பூமியாய் மாற்றும் காவிரி,  பெரியபுராணத்தில் திருநாட்டுச்  சிறப்பில்  பாடப் பெறுகிறது.

    இந்நதி தான் பாய்ந்துவரும் சோழத்  திருநாட்டில் இருகரைகளிலும் உள்ள திருக்கோயில் களில்  எழுந்தருளும் இறைவனை வழிபட்டுக்  கொண்டே செல்கிறதாம். இறைவழிபாட்டுக்கு மிக்க கரைந்த தேவை, நீரும்,பூவும்  ஆகும்! வடமொழி வேதம் ‘’பத்ரம், புஷ்பம், பலம், தோயம் எனப்படும் இலை , பூ, கனி, நீர் ஆகியவை  இறை வழிபாட்டுக்கு உகந்தன என்று கூறுகிறது. அவ்வாறு வழிபாடு செய்வோரை  அடியார்கள் என்று தமிழ்த் திருமுறை பாடுகிறது. காவிரியாறு  இருமருங்கிலும் உள்ள திருக்கோ யில்களை வலம் வந்து வழிபாடு செய்கிறதாம்

    புத்தம் புதிதாய்ப் பூக்கும் மலர்களே இறைவழிபாட்டுக்குரியன! காவிரியின் இருமருங்கிலும் உள்ள சோலைகளில் அன்றாடம் புதுப்புது  மலர்கள் அரும்பி மலர்கின்றன. அவை காற்றில் உதிர்ந்து காவிரியில் விழுந்து மிதக்கின்றன. ‘’புனலாறன்று இது பூம்புனலாறு ‘’ என்று இலக்கியம் கூறுகிறது.

    ‘’மருங்குவண்டு  சிறந்தார்ப்ப  மணிப்பூவாடை அதுபோர்த்திக் 

     கருங்கயல்கண்  விழித்தொல்கி  நடந்தாய் வாழி காவேரி!’’

    என்று காவிரி பாயும் அழகைச்  சிலப்பதிகாரம்  பாடுகிறது. இவ்வாறு பூக்களையும் கனிகளையும் சுமந்து வந்த காவிரி,  கரையில் உள்ள திருக்கோயில்களில் எழுந்தருளும் இறைவன் மேல் புனிதப் புது நீரால்  அபிடேகம் செய்கின்றதாம். அப்போதே அது வாரிக்கொண்டு வந்த மலர்களையும்  தூவி அருச்சிக்கின்றதாம். மலர்களில் மொய்க்கும் வண்டின் ரீங்காரம் இறைவனைத் துதித்துப் பாடுவது போல் ஒலிக்கின்றதாம்!இதனைத் திருஞானசம்பந்தர்,

    ‘’நுகர் ஆரமொடு  ஏலம் மணி  செம்பொன்  நுரை உந்தி

      பகராவரு  புனல்காவிரி  பரவி பணிஒந்து ஏத்தும் ‘’

    என்றும், சுந்தரர் ,

    ‘’கிளர்புனற்  காவிரி ,

     வட்ட  வாசிகை  கொண்ட  டிதொழு தேத்து பாண்டிக் கொடுமுடி’’

    என்றும்  பாடுகின்றனர். இவற்றைக்  கருத்தில் கொண்டு, இறை வழிபாட்டுக்கு  உரிய நீரையும் இலை களையும்  பூவையும் கனிகளையும் சிதறிக் காவிரியாறு வழிபடுவது , காவிரிக் கரை நெடுகிலும் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்யும் சிவனடியார்களின் வழிபாடு போல் உள்ளதாம். இதனைச்  சேக்கிழார் ,

    ‘’வம்பு     லாமலர்      நீரால்        வழிபட்டுச்

     செம்பொன்   வார்கரை  யெண்ணில்   சிவாலயத்

     தெம்பி     ரானை     யிறைஞ்சலி    னீர்ம்பொன்னி

     உம்பர்   நாயகற்   கன்பரு   மொக்குமால்.’’

    என்று பாடுகிறார்!  திருஞானசம்பந்தர் தம் முதற்பாடலில்,

    ’’ஏடுடைய மலரால்  முனை நாள் பணிந்து ஏத்த அருள்செய்த ‘’

    என்று பாடுகிறார்.  அப்பரடிகளோ,

    ‘’சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்! 

      தமிழோடிசை பாடல் மறந்தறியேன்!’’

     என்கிறார். சுந்தரர்,

    ‘’முட்டாமே  நாள்தோறும்   நீர்மூழ்கிப்  பூப்பறித்து  

                     மூன்று போதும்

    கட்டார்ந்த  இண்டை கொண்டு அடிசேர்த்தும் ‘’

    என்று பாடுகிறார். இவற்றால் சிவனடியார்கள் நீர், மலர் கொண்டு இறைவனை வழிபட்டார்கள் என்பது புலனாகிறது. அவர்கள் காவிரியாற்றின் இரு கரைகளிலும்  உள்ள எண்ணற்ற சிவாலயங்களுக்குச் சென்று வழிபட்டார்கள். இவ்வாறே காவிரியும் பூ, நீர் கனி கொண்டு , இருகரைகளிலும் உள்ள எண்ணற்ற சிவாலயங்களில் வழிபாடு செய்தது என்பதைச் சேக்கிழார்,

    ‘’வம்பு     லாமலர்      நீரால்        வழிபட்டுச்

     செம்பொன்   வார்கரை  யெண்ணில்   சிவாலயத்

     தெம்பி     ரானை     யிறைஞ்சலி    னீர்ம்பொன்னி ‘’

    என்று பாடுகிறார். அச்செயல் சிவனடியார்களின் செயலுக்கு இணையாக விளங்குகிறது. இதனைச்  சேக்கிழார்,

     

     ‘’உம்பர்   நாயகற்   கன்பரு   மொக்குமால்.’’

     

    எனப்பாடுகிறார். ‘’உம்பர் நாயகற்கு  அன்பர்’’ என்ற தொடர் பொதுவாகச்  சிவனடியார்களைக்  குறித்தாலும் , சிறப்பாகக்  கயிலைமலையில்  சிவ பெருமானுக்கு அன்பராய் விளங்கிய  சுந்தரமூர்த்தி நாயனாரையே குறிக்கிறது!  இப்புராணத்தின் கதைத்தலைவராகிய சுந்தரர்கைலை கைலை மலையில் சிவபெருமான் வழிபாட்டுக்கு உரிய மலர்களை பறித்து நல்கும் தொண்டினைச் செய்தவர். மேலும் அவர்  முப்போதும் திருமேனி தீண்டிப்  பூசிக்கும்  சிவவேதியர் மரபில் தோன்றியவர் என்பதையும் சேக்கிழார் இங்கே  நினைவுகூர்ந்து  குறிப்பிடுவது நினைந்து மகிழ்தற்குரியது.

    ========================================================================

    Share
  • ஈ.வே.ரா. “வெங்காயம்” கருத்தாக்கப் பார்வையில் ’பிக்பாஸ்’

    -கே. சுரேஷ் குருபாய்

    தமிழகத்தின் ஈரோடு வேங்கட ராமசாமி என்ற பகுத்தறிவாதியை, பிரெஞ்ச் தத்துவ அறிஞர் லக்காகானுடன் இணைத்து ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளேன்.  இதற்கான, சின்னத்திரையில் ஒளிபரப்பாகும்  “பிக்பாஸ்” நிகழ்ச்சியை  ஓர் தளமாகக் கொண்டுள்ளேன்.

    *ஆய்வுக் கட்டுரையை படிப்பதற்கு முன் கீழே கொடுக்கப்பட்ட கேள்வி பதில்களை படிக்கவும். இதன் மூலம், ஆய்வுக்கான ஆதாரக் கூறுகளை புரிந்துகொள்ள முடியும்.

    1)ஈ.வே.ரா. அவர்களின் “வெங்காயம்” கருத்தாக்கம் இந்த ஆய்வில் ஏன், எதற்காக முக்கியம்?

    ஈ.வே.ரா. அவர்களின் “வெங்காயம்” கருத்தாக்கம் இந்த ஆய்வில் முக்கியமானது என கருதுகிறேன். ஏனெனில், பேச்சு வழக்கில் இருக்கும் தமிழ்ச் சமூகம் எதனைப் பேச வேண்டும் என்பதை விட, எதையாவது பேச வேண்டும்  என்பதே பிரதானமாக உள்ளது. பேச்சு இல்லை என்றால், தனது சுயத்தை இழந்ததாக கருதும் நிலைக்கு ஆளாகும். இதற்கு தமிழக பழமொழிகள், சொல்லாடல்கள் முன்னுதாரணமாக உள்ளது. அதனால், தமிழ்ச் சமூகத்தில் பேச்சு பிரதானமாக உள்ளது.

    இதனை அடிப்படையாகக் கொண்டு, தொலைக்காட்சிகளில் வரும் நெடுந்தொடர்கள் சம  காலத்தில் பேசுகின்றதே தவிர, எதனை முன்னிறுத்த அனைத்து தொலைக்காட்சிகளும் பேசுகின்றது என்பது புதிராகவே உள்ளது. இந்த நிலையில், வெங்காயம் கருத்தாக்கம் இங்கு பயன்படும். அதாவது, வெங்காயம் உரிக்க,  உரிக்க ஒன்றும் இருக்காது என்ற தனித்துவத்தை அடிப்படையாக கொண்டு ஈ.வே.ரா பேசினார். அதன் அடிப்படையில், நெடுந்தொடர்கள் எதனைப் பேசுகின்றது என ஆராய்ந்தால், நெடுந்தொடர்கள் பேசியவற்றையே,  பேசுகின்றன, தொடர்ந்து பேசுகின்றன. மக்கள் இதனையே தொடர்ந்து பார்க்கின்றனர். ஆனால், பார்த்தவற்றையே பார்க்கின்றனர் என்பது புலப்படும். இதன் மூலம், நெடுந்தொடரில் தேடி, தேடி பார்த்தாலும் பேச்சைத் தவிர  தனித்துவம் ஒன்றும் இருக்காது என்பது வெங்காயம் உரிக்க, உரிக்க வெங்காயத்தை தவிர ஒன்றும் இருக்காது என அறியலாம். இதற்காகவே, இந்த கருத்தாக்கம் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

     2) ஈ.வே.ரா. “வெங்காயம்” கருத்தாக்கம் அவரது பேச்சில் / எழுத்தில் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட சொல். அப்படி இருக்க, கருத்தாக்க/கோட்பாடு அளவில் எவ்வாறு அணுக முடியும் ?

    பிரெஞ்ச் தத்துவ அறிஞர் துளுஸ் உருளைகிழங்கு (Rhizome) கோட்பாட்டை ஆரம்பம், முடிவு இல்லாத, ஒரு குறிப்பிட்ட வடிவம் இல்லாத நிலையை வரையறுத்து கூறியுள்ளார். அதுபோல, தமிழகப் பகுத்தறிவாளர் ஈரோடு ராமசாமி வெங்காயம் (Onion) என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில், உரிக்க, உரிக்க ஒன்றும் இல்லை, தேடி, தேடி பார்த்தாலும் ஒன்றும் இல்லை என்ற வரையறையைப் பல மேடைப் பேச்சுக்களில், அன்றாட பேச்சு வழிகளில் பெரும்பாலும் முன்னிறுத்தியவர். இதன் காரணமாக, ஈரோடு,  ராமசாமியின் சொல், எழுத்து வடிவிலான கருத்தாக்கத்தையும் ஆய்வு கருத்தாக்கமாக அணுக முடியும். உதாரணமாக, சங்ககால புலவர் கணியன்  பூங்குன்றன், புறநானூறு  192வது பாடலில் “தீதும் நன்றும் பிறர்தர வாரா ” என்றார். அதாவது, “நமக்குக் கிட்டும் நன்மையும், தீமையும் நம்மில் இருந்தே தொடங்குகிறது” என்பது. இதேபோல், பிரெஞ்ச் உளவியல் பகுப்பாய்வாளர் லக்கான் “மற்றமையே நம்மை கட்டமைக்கிறது ” என்கிறார். அதாவது, நமது  பேச்சைக் கேட்கும் இடம் எதுவோ, அதுதான் நம்மை அங்கீகரிக்கும் இடம். எனவே, மற்றமையானது பேசுபவனுக்கு வெளியே மொழியின் இடமாக இருக்கிறது, அதேசமயம் பேசுபவனுக்கு அகத்திலும் இயங்கிக் கொண்டிருக்கிறது  என்கிறார். இதன் மூலம், இருவரும் ஒரே விசயத்திற்கு வேறு, வேறு சிந்தாந்தங்களை கொண்டிருந்தாலும், இரண்டும் ஒரு தனி கருத்தாக்கத்தை உண்டு செய்கிறது. சங்ககாலத்தில் புலவர் என்ற பெயரும், சமகாலத்தில் ஆய்வாளர் என்ற பெயரும் குறிக்கிறதே  தவிர இருவரும் கருத்தாக்கத்தையே முன்னிறுத்துகின்றனர். அதனால், பகுத்தறிவாளர் ஈரோடு, ராமசாமியின் பேச்சில், எழுத்தில் பயன்படுத்தும் சொல்லும், அவரது மனதில் வெங்காயம் என்பதற்கான  பெயரும் அதன்  கருத்துருவில் ஓர் கருதாக்கத்தையே கொண்டுள்ளது. அதன் அடிப்படையிலே, வெங்காயம் என்பதை கருத்தாக்கமாகவே இங்கு அணுகியுள்ளேன்.

    3) “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் வணிகத் தன்மையில், யதார்த்த உலகின் எச்சங்களை, அந்த மாந்தர்களின் வார்த்தைகளிலும், செயல்களிலும் பார்ப்பது எந்த அளவில் சரியாக இருக்கும்?

    பிக்பாஸ் நிகழ்ச்சி வணிகத் தன்மை அடிப்படையில் உண்டாக்கப்படுகிறது என்பது உண்மை. அதே அளவில், ரியாலிட்டி நிகழ்ச்சியாக அந்த நிகழ்ச்சி நடைபெறுவதால், யதார்த்த உலகில் மக்கள் பேசும் பேச்சுகளே அங்கேயும் பேசுகின்றனர். யதார்த்த உலகில் இருவேறு சமூக மக்கள் ஒருவர் பேசுவதை, அவர்கள் வாழ்வியல் சார்ந்து, எவ்வாறு புரிந்துகொள்ளப்படவில்லையோ, ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் புரிந்து கொள்ளப்படுகிறதோ, அதனைப் போன்றே, இந்நிகழ்ச்சியிலும் இருவேறு சமூக மக்கள் மற்றவர்களுடனான பேச்சுகளை அவர்களின் வாழ்வியல் சார்ந்து புரிந்து கொள்ளவில்லை. ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்களைக் கொள்கின்றனர். இதன் அடிப்படையிலேயே, விஜய் தொலைக்காட்சியின் “பிக் பாஸ்” ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருப்பதாலே, அதனை ஆய்வுத் தளமாக கொண்டேன். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில போட்டிகள் வைக்கப்படும், அதில் அவர்கள் அவர்களாகவே அதனை அணுக வேண்டும். அதன் அடிப்படையிலேயே இவர்களை யதார்த்த உலகின் மனிதர்களாகக் கொண்டேன்.

    குறிச்சொல் : ஈ.வே.ரா, லக்கான், வெங்காயம், பிக்பாஸ், சொல்

    *இப்போது ஆய்வுக் கட்டுரையை படிக்கலாம்…

    ஈ.வே.ரா.  “வெங்காயம்” கருத்தாக்கப் பார்வையில் பிக்பாஸ்

    தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுவரும் உண்மை ஒத்த நிகழ்ச்சிகளில் (ரியாலிட்டி ஷோ) தற்போது பிரபலமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், பன்வகைப்பட்ட மக்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக, நடிகர்கள் பொன்னம்பலம், சென்ராயன், பாலாஜி, டேனியல் ஆகியோரும், நடிகைகள் ஜனனி, மும்தாஜ், ஐஸ்வர்யா, யாசிகா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். பல்வகைபட்ட பண்பாட்டு வாழ்வியல் சூழல் சார் மக்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளதால், ஒருவரின் அன்றாட செயல்பாடுகள் மற்றவருக்கு புதுமாதிரியாகவும், ஒப்புக்கொள்ள ஏற்றதாக அமையாமலும் இருக்கும் சூழல் இருந்து வருகிறது. ( முதல் இரண்டு மாதம் உரையாடல்கள் இக்கட்டுரையின் மாதிரிகளாகக் கொள்ளப்பட்டுள்ளது). இதனை அடிப்படையாக கொண்டே, பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளையும் நகர்த்திக் கொண்டது.

    மனிதன் பிறந்தது முதல் தனது தேவையை நிறைவேற்ற அழத்தொடங்கினான், அதனைத் தொடர்ந்து, கோரிக்கையை நிறைவேற்ற பேசத் தொடங்கினான்,  கோரிக்கை நிறைவேறாமல் மங்கிய நிலையில் ஆசை உருவாகும் (உளவியல் பகுப்பாய்வாளர், லக்கான்). அதனால், மனிதன் தேவையை, கோரிக்கையை, ஆசையை நிறைவேற்ற பேச்சுடன், செயல்படத் தொடங்கினான். அதன் வரையறைபடி, ஒருவர் மற்றொருவருடன் தங்களின் எண்ண ஓட்டங்களை, உணர்ச்சிகளை, உணர்வுகளை வெளிப்படுத்தப் பேசியே ஆக வேண்டும் என்ற கட்டத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஓர் இடத்தில் ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் உள்ளனர் எனில், அவர்கள் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம், ஒரே மாதிரியான பேச்சின், ஒரே மாதிரியான ஒலி எழுப்பும் விதம் கொண்டு, அனைவரது வாழ்வியல் ஒரே மாதிரியாக இருந்தால், அவர்கள் பேசும் பேச்சின் ஒலியும், அதன் அர்த்தமும் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், ஒரே இடத்தில், பன்வகைப்பட்ட மக்கள் இருக்கும் இடத்தில், ஒருவர் மற்றவர்களிடம் தங்களின் தேவை, கோரிக்கை, ஆசை நிறைவேற்றப் பேச்சு வழக்காற்றில் சிக்கல்கள் எழும்.

    “குறிப்பானுக்கும், குறியீடுக்கும் இடையே பிரிக்க முடியாத பந்தம் உண்டு. ஆனால், குறிப்பானின் மொழிக்கும் (ஒலிக்கும்), அதற்கான பொருளுக்கும் (அர்த்தத்திற்கும்) சம்பந்தம் இல்லை” என்ற ஆய்வாளர் சசூர் (தொடர்பியல் அறிஞர்) கருத்தாக்கத்தின்படி, ஒருவர் பேசும் பேச்சு அவர் நினைக்கும் அர்த்தத்தையே, அந்தப் பேச்சை கேட்கும் நபரும் புரிந்து கொள்வார் எனச் சொல்ல முடியாது. பேச்சைக் கேட்பவர் வேறு அர்த்தத்தைக் கூடப் புரிந்துகொள்ளலாம் என்கிறார். ஒரு சொல்லுக்குப் பல அர்த்தங்கள் கற்பிக்கப்படலாம் என்கிறார். இதன் மூலம், பிக்பாஸ் நிகழ்ச்சியில், சென்ராயன், டேனியல் பேசும் பேச்சு மும்தாஜ், ஐஸ்வர்யா போன்றவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதனுடன், சென்ராயன் பேசும்போது, உரத்த குரலில் பேசுவதை மும்தாஜ், ஐஸ்வர்யா குற்றமாக கருதி, இதனை சென்ராயன் மாற்றிக் கொள்ள வேண்டும், இது, சரியான பழக்கம் இல்லை என்கிறார்கள். ஆனால், நான் இயல்பாகத்தான் பேசுகிறேன். எனது பேச்சே அப்படித்தான் என சென்ராயன் பதில் அளிக்கிறார். இதன் மூலம், ஒருவர் பேசும் பேச்சின் அர்த்தம், அதன் ஒலியின் மாறுபாடு போன்றவை வித்தியாசப்பட்டு இருந்தாலும், அவர்கள், தமது மனதில் ஒன்று நினைத்து, அதனையே சொல்லி இருக்கலாம், ஆனால், அதனைக் கேட்பவர்கள் புரிந்து கொண்டது வேறு விதமாக இருக்கும். இதற்குக் காரணம், குறிப்பான் கொண்டிருக்கும் பேச்சின் மொழிக்கும் (ஒலி),  குறியீடு கொண்டிருக்கும் பொருளுக்கும் (அர்த்தத்திற்கும்) பல்வேறு அர்த்தம் கற்பிக்கப்படுகிறது என்பதை சரூரின் கருத்தாக்கம் உணர்த்துகிறது.

    இதில், சென்ராயன் தனது பேச்சை மாற்ற வேண்டும் என மும்தாஜ், ஐஸ்வர்யா சொல்வது ஆய்வாளர் லக்கான் பார்வையின்படி ஏற்கத்தக்கது அல்ல. ஏனெனில், “ஒருவரின் மொழியும் (ஒலி, பேச்சு), அவர்களின் வார்த்தையில் இருக்கும் பொருளின் அர்த்தமும் அவர்களின் வரலாறு, வாழ்க்கை முறை, சமூகம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் ஏற்க வேண்டும் (லக்கான்)” என்கிறார். அதனால், தமது வரலாறு, வாழ்க்கை முறை, சமூகம் ஆகியவற்றை கொண்டு மற்றவர்களது இயல்புகளை அளவீடு செய்ய முடியாது என்கிறார். இதன் அடிப்படையில், இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவரும், தாய்மொழி தமிழ் அற்றவருமான மும்தாஜ், பெங்காலி மொழியை அடிப்படையாகவும், வடநாட்டை வாழ்விடமாக கொண்ட  ஐஸ்வர்யா ஆகியோர்,  சென்ராயன் போன்ற பிற மொழி (தமிழ்) பேசுபவர்களின் இயல்புகளை அளவீடு செய்வதே முடியாது என்பதுடன், அதனை மாற்ற வேண்டும் என்று கூறியதும் தவறு என்பது லக்கான் கருத்தாக்கத்தின்படி அறியப்படுகிறது.

    மனிதனில், தேவை, கோரிக்கை, ஆசை ஆகியவற்றைக் கொண்டே பேச்சு இருக்கிறது என்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அதன் போட்டியாளர்களின் பேச்சு தேவை, கோரிக்கை, ஆசை ஆகியவற்றை சுற்றி, சுற்றி வருகிறதே தவிர, இதில் புதியதாக கண்டறிவதற்கு ஏதும் இருக்காது என்பது அறிய முடிகிறது. இது, ஈ.வே.ரா என்ற பகுத்தறிவாதி அடிக்கடி சொல்லும் “வெங்காயம்” என்ற வார்த்தைக் கோட்பாடு இதற்கு ஒத்துப்போகிறது. அதாவது, “வெங்காயம் உரிக்க, உரிக்க ஒன்றும் இருக்காது” அதுபோலவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் உணவுக்கான தேவைக்குப் பிரச்சனை நிகழும்போது, தனது தேவை நிறைவேறாத நிலையில் கோரிக்கையாக மாறும். அப்போது கோரிக்கை நிறைவேறாத நிலையில் பிரச்சனையாக மாறும். பின்னர், கோரிக்கை நிறைவேறாமல் மங்கிப் போன நிலையில் ஆசையாக மாறும். ஆசை தனது நோக்கத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் பிரச்சனை எழும். இதற்கான உந்துதலுக்கு ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளப் பேச்சு ஊடகமாக மொழி இருக்கும். அதில், ஒரு வார்த்தை மற்றவருக்கு ஒரே அர்த்தத்தை கொடுக்க இயலாத காரணத்தால், சசூரின் கருத்தாக்கம்படி, பிரச்சனை நிகழும். இவர்களின் உரையாடல் இதனையே சுற்றி, சுற்றி வரும். வேறு புதிய பரிணாமம் உருவாகாத நிலையில் தொடர்பு முறைகள் வெங்காயம் போன்று இருக்கும்.

    ஓர் இடத்தில் பன்வகைப்பட்ட மக்கள் இருக்கும் நிலையில், அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்வதே இயல்பாக இருக்க முடியும். ஒருவர் தங்களது வாழ்வியலை படிமமாக கொண்டு, அதனை வெளிப்படுத்தும் குறிப்பானாக இருந்து குறியீடு மூலம் உணர்த்தப்படும் அர்த்தம், வேறு வாழ்வியலின் படிமம் அடங்கிய குறிப்பானுக்கு அர்த்தம் புரியாது. அதேபோல், வேறு ஓர் இயல்பான வாழ்வியலுடன் கொண்ட படிமம் கொண்டு, அதனை வெளிப்படுத்தும் குறிப்பானாக இருந்து, குறியீடு மூலம் உணர்த்தப்படுவது ஒரே மாதிரியான அர்த்தம் என்றும் உருவாகாது. ஒரு குறியீட்டுக்குப் பல அர்த்தம் உண்டு (குறியீட்டியல் அறிஞர், தெரிதா) என்ற கருத்தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டு, மற்றவர்களை பார்க்க வேண்டும்.

    இந்தியா பல்வேறு பண்பாடு கொண்ட ஒரு நாடு இதனை ஒரே நாடு என்ற வார்த்தையில் எப்போதும் அடக்க இயலாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மொழி, ஓர் உணவு, ஒரு பண்பாடு, ஒரு வாழ்வியல் உள்ளது. இதனை ஒரு மாநிலத்துடன், மற்ற மாநிலத்தை எந்த வகையிலும் ஒப்பீடு செய்ய இயலாது. அந்தந்த மாநிலத்தின் பழக்க வழக்கத்தை அந்த, அந்த மாநிலத்தின் கண்ணோட்டத்தில் மட்டுமே காண வேண்டும். நமது படிமத்துடன் மற்ற மாநிலத்தை படிமத்துடன் ஒப்பிட்டு பார்த்தால், ஈ.வே.ராமசாமியின் வெங்காயம் கோட்பாடுபடி, பார்வையின் முடிவில் ஒரு சரியான நிலைக்கு வர முடியாமல் போகலாம். அதனால் தொடர்ந்து பிரச்சனை எழுந்தே தீரும். இதனை வேறு வழியில் ஆராய்ந்தால், தொடர்ந்து ஆராய்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதன், நிறைவாக “வெங்காயம்” என்ற கோட்பாட்டின் காலம், நேரம் கடந்த ஒரு செயலாக மட்டும் இருக்குமே தவிர, ஒரு விசயமும் புலப்படாமல் இருக்கும்.

    அதுபோல, தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இருக்கும் தமிழ் மொழி வழக்கு வித்தியாசப்பட்டு இருக்கும். இதனை அந்தந்த வட்டாரத்திற்கு ஏற்ப, அந்த வார்த்தையை உச்சரிக்கும் மனிதர்களின் வாழ்வியல் சார்ந்து அதனைப் பொருள்கொள்ள வேண்டும். மாறாக, தமது படிமத்தின் அடிப்படையில் குறியீடாகக் கொண்டு, அர்த்தம் கொள்வதாயின் பிரச்சனைகள் உருவாகும். அதாவது சரியான புரிதல் உண்டாகாது. உதாரணத்திற்கு, (எதுக்கு, ஏனுங், ஏன்லே, ஏய்ன், என்னயா, ஏன்பா). இதில், ஒரு சில வார்த்தைகள் ஒருவருக்கு இயல்பாகவும், மற்றவருக்கு இயல்பு மாறியும் இருக்கலாம். இதனை அவ்வாறே ஏற்றுக்கொள்ளாமல், தொடர்ந்து உரித்து பார்த்தால் ஒன்றும் இருக்காது என்பது, ஈவேராவின் வெங்காயத்தை மீண்டும் ஞாபகப்படுத்தும்.

    சென்னையைப் பொறுத்தவரையில், வட சென்னை வட்டாரச் சொல் பழக்கம் அப்பகுதி மக்களுக்கு இயல்பாக இருக்கும். ஆனால், தென் சென்னை வட்டாரச் சொல் பழக்கம் வேறுமாதிரியாக இருக்கும். இதனால், ஒருவரின் சொல்லிற்கான அர்த்தம் வேறாக புரிந்துகொள்ளப்படும். இது, சசூரின் கருத்தாக்கத்தை வெளிப்படுத்தும், ஆனால், லக்கானின் கருத்தாக்கத்தை புரிந்துக் கொண்டால், ஒருவரை ஒருவர் பழிப்பது வெகுவாகக் குறையும் எனலாம். நிறைவாக, படிமத்தால் ஆன, குறிப்பான்கள் நாம். வாழ்வியல் சார் குறியீடு மாறி இருப்பதற்கு ஒருவரை ஒருவர் மாற்ற நினைப்பதே தவறு என்பதை உணர்ந்து, அவர்களது வாழ்வியலை அடிப்படையாக கொண்டு, பேச்சின், அர்த்தங்களை உணர முயன்று அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொள்ள வாய்ப்பு உண்டு.

    இதன்படியே, விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்களின் படிமத்தால் ஏற்பட்ட மாறுபாடுகளால், ஒருவரது பேச்சை மற்றவர் புரிந்துக் கொள்ள இயலாமல், ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். தேவை, கோரிக்கை, ஆசை ஆகியவற்றை வெளிப்படுத்தும் தொடர்பியல் குறியீடுகள், வாழ்வியல் படிமக் குறியீடுகளின் வேறுபாடுகளால், ஒரே மாதிரியான அர்த்தத்தை அறிய முடியாமல் போவதே, மனங்களின் ஒருமித்த அர்த்தங்கள் உருவாகாமல் இருப்பதற்கு அடிப்படையாக உள்ளது. ஆகவே, பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும், ஒரு பிரச்சனையுடன் நகர்ந்து வருவதற்கான காரணத்தின் அடிப்படையாக உள்ளது.  இது, 100 வாரங்கள் அல்ல, 1000 வாரங்கள் கடந்தாலும் ஒருமித்த புரிதல் எட்டப்படாமலே இருக்கும். இறுதியில், ஈ.வே.ராவின் வெங்காயம் கோட்பாட்டின், சாரம்சம் மட்டுமே தெரியவரும். இதற்கு, சசூர், லக்கான், தெரிதா போன்ற ஆய்வாளர்களின் கருத்தாக்கங்கள் உறுதுணையாக இருக்கும்.

    *****

    ஆய்வு நூல்:

    சுரேஷ் எம்.ஜி. பின் நவீன சிந்தனையாளர் வரிசை 3 : லக்கான், 2007.

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வு மாணவர்
    இதழியல் மற்றும் தொடர்பியல் துறை
    சென்னைப் பல்கலைக்கழகம்
    எண் : 9003091162
    மின் அஞ்சல் : sureshguruboy@gmail.com

     

    Share
  • முருகன் ஆலயங்களும் முருகன் அடியார்களும்

    -மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா- மெல்பேண், அவுஸ்திரேலியா

    ” கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேனே” ,” கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்” என்று முருகன் அடியார்கள் தினமும் எண்ணி எண்ணியே முருகனை மனதார வழிபட்டு வருகிறார்கள். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமென்று அடியார்கள் கொண்டாடிப்போற்றுகின்றார்கள்.” வேலை வணங்குவதே வேலை என்பதுதான் முருகன் அடியார்களின்மனக்கிடக்கையாக இருக்கிறது எனலாம். கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக முருகனே விளங்குகிறார் என்று முருகன் அடியார்கள் பலரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ” வைதாரையும் வாழவைப்பான் முருகன் ” என்பது அவர்களது உறுதியான எண்ணமாகவும் இருக்கிறது.

    இந்தியாவில் பல இடங்களிலும் முருகனுக்கு அடியார்கள் ஆலயங்களை அமைத்திருக்கிறார்கள். வடக்கிலும் தெற்கிலும் பல ஆலயங்கள் முருகனுக்கு என்றே இருக்கின்றன. அறுபடைவீடு என்னும் வகையில் – திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை, மிகவும் சிறப்பான ஆலயங்களாக யாவராலும் போற்றப்பட்டு வருகின்றன. இவற்றைவிடச் சென்னையில் பல இடங்களில் முருகன் கோவில்கள்அடியார்களினால் அமைக்கப்பட்டும் இருக்கிறது. சென்னையிலும் அறுபடை வீடும், வடபழனி முருகன் கோவிலும் பிரசித்தமாக இருக்கின்றன.

    வேலூர்பகுதியில் இரத்தினகிரியில் தனிப்பட்ட ஒரு அடியவரின்
    தளராத முயற்சியினால் குன்றினிலே இரத்தினகிரி முருகன் ஆலயம் கம்பீரமாக அருளாட்சியினை வழங்கிக் கொண்டிருக்கிறது. முருகனது அடியார்கள் மொழியினைக் கடந்து நாடுகளைக் கடந்து உலகெங்கும் பரந்து காணப்படுகிறார்கள். சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், தென்னாபிரிக்கா, அமெரிக்கா, கனடா,பிரான்ஸ், ஜேர்மனி, சுவிச்சர்லாந்து, லண்டன், அவுஸ்திரேலியா, ஆகிய நாடுகளிலும், ஈழத்திருநாட்டினிலும், காணப்படுகிறார்கள். மொழி வேறுபட்டாலும் கலாசாரம் வேறுபட்டாலும், கொள்கைகள் வேறுபட்டாலும், அரசியலால் வேறுபட்டாலும்,அவர்கள் யாவரும் முருகனது அடியார்கள் என்ற வகையில் ஒத்த மனத்தினராய் முருகன்மீது அபார பக்தி உடையவர்களாகவே காணப்படுகிறார்கள் என்பதுதான் முக்கியமாகும்.

    முருக ஆலயங்கள் முருக அடியார்கள் பற்றிச் சிந்திக்கும்பொழுது முருகனைப் பற்றியும் முருகனது சமயவரலாறு பற்றியும் அறிவதும் அவசியமாகும். முருகனது நிலைபற்றி உரைப்பது கெளமாரமாகும். இந்துசமயத்துள் இது அடங்கினாலும் இது முருகன் பற்றியே சொல்லுகிறது என்பதே முக்கியமாகும். கெளமாரம் என்பது ஒரு சமயமாகும். இச்சமயத்துக்கு உரிய தெய்வமாக முருகனே விளங்குகின்றார். முருகனைக் குமாரன் என்றும் அழைப்பர். குமாரன் என்றால் அஞ்ஞானத்தை ஒழிப்பவர் என்பது கருத்தாகும். குமாரன் அறுவகைச் சமயங்களையும் இணைத்தே நிற்கிறார். அவரின் திருமுகங்கள் ஆறாகும். அவரே முழுமுதற் பொருள் என்கிறது கெளமாரம்.

    ” அறுசமய சாத்திரப்பொருளே” என்று அருணகிரிசுவாமிகள் திருப்புகழில் காட்டுவது நோக்கத்தக்கது.

    ” அருவமும் உருவுமாகி அநாதியாய் பலவா யொன்றாய்
    பிரமமாய் நின்ற சோதிப் பிளம்பதோர் மேனியாகிக்
    கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலகமுய்ய “ என்று முருகனது தோற்றம் காட்டப்படுகிறது கந்தபுராணத்தில். உலகைப் படைக்கும் பிரமாவாய், உலகைக் காக்கும் விஷ்ணுவாய், உலகினை அழிக்கும் உருத்திரனாய், கோலமாய், காலமாய், குணமாய், ஞாலமாய்,அனாதியாய் அமைந்த சோதிப்பிழம்புதான் முருகன் என்பது அவரது அடியார்களின் அசையாத நம்பிக்கை எனலாம்.

    முருகனைப் பற்றி வடமொழிநூல்களும் சொல்லுகின்றன. தமிழ் மொழி நூல்களும் சொல்லுகின்றன. வேதங்களிலுல் சுப்ரமண்யோம் என்று வருகிறது.வேதகாலத்தில் முனிவர்கள் தங்களின் யாகங்களை நிறைவு செய்யும்வேளை சுப்ரமண்யோம், சுப்ரமண்யோம், சுப்ரமண்யோம்என்று மூன்றுமுறை கூறியதாக ‘தைத்திரீயாரண்யகம்’ சுட்டுகிறது.

    காளிதாசரின் குமாரசம்பவம் முருகனைப் பற்றிக் கூறும் காவியமாகும். இது வடமொழியிலே அமைந்திருக்கிறது. பாணினியும் முருகனைக் காங்கேயன், குகன், சண்முகன், விசாகன், கார்த்திகேயன் என்றெல்லாம் குறிப்பிடுகிறார்.

    சிவ ஆகமங்களான காமிகம், காரணம், சுப்பிரபேதம் யாவும் முருகனது வரலாறு பற்றிக் குறிப்புகளைக் கூறி நிற்கின்றன.

    குமாரதந்திரம் என்பது முருகப்பெருமானது வரலாற்றையும் முருகனது விழாக்கள், பூஜைகள், விரதம், பிரதிஷ்டை செய்யும் விதம் இவற்றையெல்லாம் விரிவாய் எடுத்து விளக்கி நிற்கிறது எனலாம்.

    இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் இவையும் முருகனைப் பற்றிச் சொல்லிநிற்கின்றன. தமிழ் இலக்கியக்கியங்களும் முருகனைப் பற்றி சொல்லுகின்றன என்பதும் முக்கியமாகும். தொல்காப்பியத்தில் சொல்லப்படுவது மிகவும் முக்கியம் எனக் கருதலாம்,”சேயோன் மேய மைவரை உலகம்” இவ்வாறு தொல்காப்பியம் செப்புகிறது.

    புறநானூறு, அகநானூறு, நற்றிணை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை மூலமாகவும் முருகனைப் பற்றிய செய்திகளை அறிய முடிவதனால் முருக வணக்கமும் முருகனது அடியார்களும் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறார்கள் என்பதை அறிகிறோம் அல்லவா!

    திருமுருகாற்றுப்படை என்பது முருகன் அடியார்களை முருகன் அருள்பெற ஆற்றுப்படுத்தும் நூலாகவே அமைகிறது. முருகனது அறுபடை வீடுகள் அதாவது முருகன் அருளாட்சி புரிய எழுந்தருளியிருக்கும் இடங்களின் பெருமைகளைப் விவரிப்பதாகவும் இருக்கிறது. அப்படிஎன்றால் இதனைப் பாடிய நக்கீரர் என்னும் அடியார்  அப்பொழுதே முருகன் ஆலயங்கள் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டாரோ என்றேதான் எண்ணத் தோன்றுகிறதல்லவா?

    ஆதிக்க நல்லூர் என்னும் இடத்தில் நடந்த தொல்பொருள் ஆய்வின்படி கி.மு ஆயிரத்து இருநூறு ஆண்டளவில் முருகவழிபாடு முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதை அறியக்கூடியதாக இருக்கிறது. பல்லவ மன்னர் காலமும், சோழப்பெருமன்னர் காலமும் முருக வழிபாட்டைப் பொறுத்தவரைத் தமிழ்நட்டிலே  இருண்டகாலமாய்த்தான் கொள்ளமுடிகிறது. பக்திப்பாடல்கள் பல பெருக்கெடுத்த பல்லவர்காலத்திலே முருகனுக்குச் சிவன் தந்தை என்னும் குறிப்பு மிகச் சில தேவாரங்களில்மட்டுமே காணப்படுகிறது.

    திருச்செந்தூர் கல்வெட்டு மூலமாகவேதான் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இரண்டாம் வரகுணபாண்டியன் திருச்செந்தூர் முருகன் பூஜைக்குப் பெருந்தொகை பணம் உதவினான் என அறியமுடிகிறது. முருகவழிபாட்டில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டதென்றால் அதனை கி. பி. பதினைந்தாம் நூற்றாண்டென்றே எடுத்துக் கொள்ளலாம்.

    பதினான்காம் நூற்றாண்டின் இறுதி அல்லது பதினைந்தாம் நூற்றாண்டின்தொடக்கமே அருணகிரிநாதர் காலமாகும். மூவேந்தர்களும் தமிழ்நாட்டைஆண்டவேளை முருகவழிபாடு ஓங்கவில்லை. அவர்களின் பின்னர்தான் ஓங்கியது ஏன் என்பதை வரலாற்று சமய ஆய்வாளர்கள்தான் ஆராய்தல் வேண்டும்!

    அருணகிரியாரால் முருகவழிபாடு செழித்தோங்கியது என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. ஏனைய கடவுளர்களையும் அவர் போற்றிப் பாடிய பொழுதும் – முருகன்மீது அவரது தனிவிருப்பம் பல்லாயிரம் திருப்புகழாக எமக்குக் கிடைத்திருக்கிறது. முருகன்மீது பல பிரபந்தங்களையும் பாடி அளித்துள்ளார். கந்தரலங்காராம், கந்தரனுபூதி அருணகிரியாரின் தத்துவமுத்துக்களாய் திகழ்கின்றன. ஈழத்து முருகன் தலங்களையும் அருணகிரியார் பாடியுள்ளார். முருகனது அடியவராயிருந்து முருகவழிபாடி சிறக்கபெருந்தொண்டாற்றினார் அருணகிரியார் என்பது முருகனது அடியவர்க்கெல்லாம் சிறந்ததொரு முன்மாதிரி எனலாம்.

    முருகனது மிகச்சிறந்த அடியார் அகத்தியராவார். தமிழ் மூதாட்டி ஒளவை முருகனால் ஆட்கொள்ளப்பட்ட அடியவராகிறார். ஆதிசங்கரர் தனக்கேற்பட்ட காசநோய் தீர முருகனைத் துதித்து சுப்ரமண்யப் புஜங்கம் பாடினார். வள்ளலாருக்கு அவரின் வீட்டுக் கண்ணாடியில் தோன்றி முருகன் ஆட்கொண்டார். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துச்சுவாமி தீட்சிதரின் வாயில் கற்கண்டைப் போட்டு ” ஸ்ரீநாதாதி குருகுஹே ” என்னும் கீர்த்தனையைப் பாடவைத்தார். ஊமையாய் பிறந்த குமரகுருபரருக்கு திருச்செந்தூர் முருகன் உலகமே புகழும்வண்ணம் கவிபாடவைத்தார்.

    சிதம்பர சுவாமிகள் பனைமரத்தில் முருகனை சுயம்புவாகப் பிரதிஷ்டைசெய்து அருள் பெற்றார். வள்ளிமலைச் சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பாம்பன் சுவாமிகள், பன்றிமலைச் சுவாமிகள், இவர்களெல்லாம் முருகனது காதலால் கட்டுண்ட அடியவர்களாவர். முருகன் பற்றிய சகலவற்றையும் உணர்த்திடும் கந்தபுராணம் தந்தவர் கச்சியப்பர். அவருக்கு அடியெடுத்துக் கொடுத்து அருள் புரிந்தார் முருகன். அதனால் அற்புதமாய் தெய்வீகமாய் ஒளிர்ந்தது கந்தபுராணம்.

    வீடுதோறும் முருகன் அடியவர்களால் ஓதிநிற்கும் பேறுபெற்ற கந்த சஷ்டி கவசத்தை முருகன் அடியவர் பாலதேவராயன் எமக்களித்துச் சென்றுள்ளார். எமக்கு முன்னால் இருந்து தனது பாட்டாலும் பேச்சாலும் எழுத்தாலும் முருகன் பெருமையினை உலகம் முழுவது கொண்டுசேர்த்த முருகன் அடியவர்தான் திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள். ஊர்கள்தோறும் ,நாடுகள் தோறும் சென்று முருகன்புகழைக் கதாப் பிரசங்கம் மூலம் எடுத்துச் சொல்லி அதில் கிடைத்த பொருளையெல்லாம் வயலூரில் முருகனுக்காகப் பேராலயம் அமைத்து பெரும்பேறு பெற்றார்.

    இந்தியாவில் முருகன் அடியார்கள் ஆலயங்களுடன் எப்படித் தம்மை பிணைத்துக் கொண்டார்களோ அதேபோல் ஈழத்திலும் அடியார்கள் முருகனுடனும் அவரது ஆலயத்துடனும் தங்களை இணைத்துக் கொண்டனர். ஈழத்திலே பல பிரசித்தியும் அருளும் கொண்ட முருகன் ஆலயங்கள் இருக்கின்றன. பாடல்பெற்ற முருகனது ஆலயமாக கதிர்காமம் திருகோணமலை ஆகியன விளங்குகின்றன.

    ஈழத்தில் தமிழ் அடியார்களும் சிங்களபெளத்த அடியார்களும் முருகனின்பக்தர்களாக விளங்குகிறார்கள். அவர்கள் முருகனை ” கதரகம தெய்யோ “என்று அழைக்கின்றனர். அவர்களது. கதிர்காமம் ஈழத்தில் முருகனின்பொக்கிஷமாய் இருக்கிறது என்பது முருகன் அடியார்களுக்கே பெருமைஎனலாம். தமிழர்கள் செறிந்துவாழும் வட மாகாணம், கிழக்கு மாகாணம் பகுதிகளில் நிறைந்த முருகன் அடியார்கள் இருக்கிறார்கள். இவர்களின் ஆதரவினால் பல முருகன் ஆலயங்கள் அங்கு எழுந்துநின்று அருளாட்சியினை வழங்கி நிற்கின்றன எனலாம். யாழ்ப்பாணத்தில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் மாருதப்புரவீகவல்லி என்னும் சோழ இளவரசியின் வரலாற்றுடன் தொடர்புபட்ட மிகவும் புராதன ஆலயமாக விளங்குகிறது. யாழ்நகர் மத்தியிலே விளங்கும் நல்லூர் கந்தசுவாமிகோவில் உலகம் அறிந்த முருகனது கோவிலாக இருக்கிறது. அருள் உள்ளம் கொண்ட மாப்பாண முதலியார் என்னும் முருகன் அடியவரால் அமைக்கப்பட்ட இந்த ஆலயம் பலரது வாழ்வுக்கும் வெளிச்சமாய் இர்க்கிறது என்பதை யாவரும் ஏற்றுக் கோள்ளுவார்கள்.

    கதிகாமம் போன்று பூஜைகள் நடைபெறும் ஆலயமாக இருப்பது செல்வச்சன்னதி முருகன் ஆலயமாகும். கிழக்கு மாகாணத்தில் வெருகலில் முருகன் ஆலயம் தொடங்கி திருக்கோவில் முருகனது ஆலயம்வரை அடியவர்களின் உந்தலினால் உருவாக்கப்பட்டனவே என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.

    ஈழத்தின் ஏனைய பகுதிகளிலும் முருகன் அடியார்களின் சிந்தனையினால் முருகனது ஆலயங்கள் அருளாட்சி புரிந்து வருகின்றன. மலேசிய மண் என்றதும் யாவருக்கும் முன்னே வந்து நிற்பது பத்துமலை முருகன் ஆலயமே ஆகும். மலேசியாவையே அடையாளப்படுத்தும் வகையில் இம்முருகன் ஆலயம் விளங்குகிறது என்பது உலகில்இருக்கும் முருகன் அடியவர்களுக்கெல்லாம் பெருமை என்றே சொல்லலாம். இம்முருகன் ஆலயம் இங்குள்ள அடியவரின் இருதயமாகவேதான் இருக்கிறது என்பது வெள்ளிடைமலையாகும். இங்குள்ள முருகன்அடியார்கள் தங்களின் ஒவ்வொரு நடவடிக்கையினையும் பத்துமலை முருகன் பார்த்துக்கொள்ளுவான் என்றே எண்ணி வாழ்கிறார்கள் எனலாம். சிங்கபூரிலும் முருகன் அடியார்கள் முருகன் ஆலயத்துடன் தம்மை இணைத்து பக்திசிரத்தையுடன் தமது நடவிடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் எனலாம்.

    நான் தற்பொழுது வாழுகின்ற அவுஸ்திரேலியாவிலே முருகன் வணக்கமும் முருகன் ஆலயங்களும் செறிந்து காணப்படுகின்றன. விக்டோரியா மாநிலத்தில் சண்சைன் என்னுமிடத்திலும்,றொக்பேங் என்னும் இடத்திலும் முருகனுக்கு ஆலயம் அமைந்திருக்கிறது. சிட்னியில் மிகவும் பெரிய முருகன் ஆலயம் இருக்கிறது. பேர்த்தில் ஒரு முருகன் ஆலயம் இருக்கிறது..அவுஸ்திரேலிய தலைநகரான கன்பராவில் அறுபடைகுருகன் ஆல்யம் அமைந்திருக்கிறது. இங்கு அமைக்கப்பட்ட முருகன் ஆலயங்கள் யாவும் புலம்பெயர்ந்து வந்த அடியவர்களின் ஆதரவினால் அமைக்கப்பட்டன.

    முருகன் என்றாலே கலியுகத் தெய்வம் என்னும் எண்ணமே அனைத்து அடியவர்கள் மனத்திலும் ஊன்றியிருக்கிறது எனலாம். கூப்பிட்ட குரலுக்குஓடிவரும் தெய்வமாகவே முருகனை அடியவர்கள் கருதுகிறார்கள். ஆலயம் அமைக்கவேண்டும் என்னும் எண்ணம் வந்தவுடன் முருகனுக்கே ஆலயம் அமைப்போம் என்பதே அனைத்து அடியார்களின் மனக்கருத்தாய் வெளிவருகிறது. பொதுவாக நோக்கும்பொழுது உலகெங்கணும் முருகன் ஆலயங்கள் இன்று ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் வகையிலேதான் அமையப்பெற்றிருக்கின்றன. யாவருடைய மனத்திலும் ” முருகா ” என்னும் நாமம் வல்லமைபொருந்திய மந்திரமாக உறைந்துவிட்டது என்றே சொல்லலாம்.

    முருகன் ஆலயங்களை அடியார்கள் அமைக்குப்பொழுது முருகனது கையிலுள்ள வேலினையும் வழிபடுமுகமாகவும் ஆலயங்களை அமைத்திருக்கிறார்கள். அஞ்ஞான இருளைப் போக்கி மெய்ஞ்ஞான ஒளியை முருகனது வேல் நல்குவதாக அடியார் நம்புவதால் வேலினுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற முருகன் ஆலயங்களில் வேல் வழிபாடும் முக்கியமாகிறது. ஈழத்தில் கதிர்காமம் செல்வச்சன்னிதி ஆலயங்களில் வேல்தான் அடியவர்களால் வணங்கிப்போற்றப்படுகிறது. கணனி யுகத்தில் கந்தப்பெருமான் துணையே எமக்குப் பெருந்துணையாகும். முருகனை அல்லும் பகலும் அனைவரதமும் துதிக்கும் அடியவர்களும் அவர்களின் அன்பினால் விளைந்த ஆலயங்களும் அகிலத்துக்கும் ஆன்மீக நெறியினை உணர்த்துவதற்கு உறுதுணையாகவே இருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

    ” விழிக்குத்துணை நின்திரு மென்மலர்ப்பாதங்கள் மெய்மை குன்றாமொழிக்குத்துணை முருகாவெனும் நாமங்கள் முன்பு செய்த பழிக்குத்துணை அவன் பன்னிருதோளும் பயந்ததனி
    வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே “

    ”  மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் “

     

     

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 36

    க. பாலசுப்பிரமணியன்

    தோல்வி என்பது என்ன ?

    வெற்றிகளை மட்டும் சுவைத்து வாழ்ந்தவர்கள் வாழ்க்கையில் பல நேரங்களில் தோல்விகளைச் சந்திக்க முடியாமல் திணறுகிறார்கள். சிறிய தோல்விகளைக் கூட அவர்களால் சந்திக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடிவதில்லை. அவர்கள் தோல்விகளைத் தங்கள் சுயமரியாதைக்கும் தன்மானத்திற்கும் பங்கமாகக் கருதுகின்றனர். ஆகவே, தோல்விகள் வரும்பொழுது வாழ்க்கையிலிருந்து விலகி, ஒதுங்கி, மறைந்து தங்களைத் தாங்களே சின்னாபின்னமாக்கிக் கொள்கின்றனர். இதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை அவர்களை மேலும் மேலும் பின்னடையச் செய்து உண்மையான  வாழ்க்கையிலிருந்து விரட்டுகின்றது. மன உளைச்சல், மன அமைதியின்மை மற்றும் இருளடைந்த பின்னோக்கான எண்ணங்களுக்கு ஆளாகி ஒரு நோயாளியாக உருவெடுக்கின்றனர். இன்றைய உலகில் இந்தப்போக்கு அதிக அளவில் வளர்ந்து கொண்டிருக்கின்றது.

    இதற்கு ஒரு முக்கிய காரணம் இன்றைய வாழ்க்கை முறைகள்தான். கூட்டுக்குடும்பமாக இருந்து பகிர்ந்து வாழ்ந்த வாழ்க்கையை விரட்டிவிட்டு இப்பொழுது நாம் தனியாக சிறிய குடும்பங்களாக வாழத் தொடங்கிவிட்டோம். இருப்பதை பகிர்தல், விட்டுக்கொடுத்தல், தியாகம், உணர்வுகளைப் போற்றுதல் மற்றும் மதித்தல் போன்ற பல பரந்த பாங்குகள் கூட்டுவாழ்க்கையில் கிடைத்தன, ஆனால், தற்காலத்தில் போட்டி மனப்பான்மைகள் வளர்ந்து, நீயா நானா என்ற வன்மம் வளர்ந்து, தனக்குக் கிடைக்காவிட்டாலும் மற்றவர்களுக்குக் கிடைக்கக்கூடாது என்ற காழ்ப்புணர்ச்சிகள் தலைதூக்கி நம்முடைய சமுதாயத்தை வதைத்துக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலைகளில் எதிலும் எங்கும் எப்படியாவது வென்று விடவேண்டும் என்ற மனைப்பான்மை வளர்ந்து உண்மை நிலைகளை அறிந்தாலும் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்குத் தவறான ஈனமான முறைகளில் ஈடுபட்டாவது நம்மை வெற்றிபெற்றவர்களாக உலகுக்கு காட்ட வேண்டும் என்ற மனப்பான்மை வளர்ந்துள்ளது.

    வயது வந்தவர்களிடம்  இருக்கின்ற இந்த உணர்ச்சிகள் கூட்டாகச் சமுதாயத்தை ஆள்வதால் அதுவே ஒரு இலக்கணமாக மாறி வளரும் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாகக் காட்டப்படுகின்றது. ஆகவே சிறு குழந்தைகளும் இளைஞர்களும் கூட தோல்விகளைச் சாதாரணமாக ஏற்றுக்கொள்வதில்லை. இதன் தாக்கம் அவர்களுடைய மனநிலைகளையும் வளர்ச்சிப்போக்கையும் பாதிப்பதால் சமுதாயத்தில் ஒட்டுமொத்தமாக இந்த பிற்போக்கான எண்ணங்களின் ஆதிக்கம் நிலவி வருகின்றது. பல நேரங்களில் இவற்றைச் சரியான முறையில் அணுக முடியாதவர்கள் இதையே தங்கள் வாழ்வின் முற்றுப்புள்ளியாகக் கருதி தங்கள் இனிய வாழ்வை முடித்துக்கொள்ளத் துணிகின்றார்கள்.

    சற்றே உன்னிப்பாக அலசிப்பார்த்தால் ஒரு உண்மை வெளிப்படும். இவர்கள் தோல்விகளாகக் கருதுவது உண்மையில் தோல்விகளே அல்ல. இவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தங்களுக்குத் தாங்களே கொடுத்துக்கொள்ளும் ஒரு மதிப்பீடுதான் இது. சில நேரங்களில் இந்த மதிப்பீடுகள் பெற்றோர்களாலும் உறவினர்களாலும் கொடுக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட ஒப்பீடுகள் உண்மைக்குப் புறம்பானவை. அறிவியல் நோக்கோடு பார்க்கும்பொழுது ஒவ்வொரு மனிதனின் மூளையும் ஒவ்விதச் சிறப்போடு ஆர்வங்கள், ஈடுபாடுகள், சூழ்நிலைகள் ஆகியவற்றின் உள்ளீடுகளால் தாக்கப்பட்டு வளர்கின்றன. எனவே இரண்டு மனிதர்களை ஒரே நிலையில் வைத்து ஒப்பிடுவது இயற்கைக்குப் புறம்பானது. இதை உணர்ந்து கொண்டால் தோல்வி என்ற வார்தைக்குப் பொருளே இருக்காது. நிலைப்பாடுகள் மாறும் பொழுது அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதே வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

    “Every Child is born as a genius” என்று சொல்லுவார்கள். கல்வித் தகுதிகள் மாறுபடலாம், திறன்கள் மாறுபடலாம், பார்வைகள் மாறுபடலாம், ஆர்வங்கள் மாறுபடலாம், முயற்சி செய்யும் வழிகளும் இலக்குகளும் மாறுபடலாம். அவைகள் ஒருவரின் தோல்விக்கு அறிகுறி அல்ல. “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்பது வள்ளுவம். வாழ்க்கையை நாம் எவ்வாறு மகிழ்வோடும் நிறைவோடும் சிறப்போடும் அறத்தோடும் வாழ்கிறோம் என்பதே வாழ்க்கையின் வெற்றிக்கான குறியீடு.

    சற்றே அறத்தோடு வாழ்ந்து பார்க்கலாமே !

    தொடரும்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 127

    நிர்மலா ராகவன் 

    உள்ளுணர்வைக் கேளுங்கள்!

    மிக மலிவானது எது தெரியுமா? அறிவுரை வழங்குவதுதான்.

    சிலர் யாரும் கேளாமலேயே அறிவுரைகளை வாரி வழங்குவர். பிறருக்கு நன்மை செய்வதாகத்தான் எண்ணிக்கொண்டிருப்பார்கள். உண்மையில், தம் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கென வழிகாட்டுகிறோம் என்று அவர்களுக்கே புரிவதில்லை.

    `நான் செய்த தவற்றை நீயும் செய்யக்கூடாது!’ என்று ஓயாது வழிகாட்டும் பெற்றோர் தம் குழந்தைகளின் சுதந்திர உணர்வைப் பறிக்கிறார்கள்.

    ஒருவருக்குச் சரியெனப்படுவது எல்லாருக்கும் அப்படித்தான் இருக்குமா?

    பிறரது விருப்பத்துக்கு எதிராக வழிகாட்டுவது எந்தப் பலனையும் தராது.

    பிறர் சொற்படி நடப்பதைவிட, அவர்கள் புரியும் பிழைகளிலிருந்து கற்பதே மேல்.

    அவசரப்படும் அம்மா

    தம் குழந்தைகளுக்குச் சிறந்த வாழ்க்கை அமையவேண்டும் என்ற பதைப்பில் பல தாய்மார்கள் சிலவற்றை மறந்துவிடுகிறார்கள்.

    ஒருவருக்கு எதையாவது கற்றுக்கொடுக்க நினைப்பவர்கள் முதலாவதாக, அவர்களுடைய திறமையையும், புரிந்துகொள்ளும் ஆற்றலையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

    “அந்த நாட்டிய வகுப்பில் மிகவும் கண்டிப்பாக இருக்கிறார்கள். என் நான்கு வயதுக் குழந்தையை சேர்த்துக்கொள்ள மாட்டார்களாம்!” என்று ஓர் இளம் தாய் என்னிடம் புகார் செய்தாள்.

    நம் கை, கால், உடல் எல்லாம் நாம் சொன்னபடி கேட்க ஆறு வயதாவது ஆகவேண்டும். கையை நீட்டவும் முடியாது, கால்களால் தரையை ஓங்கித் தட்டவும் முடியாது, வலம், இடம் என்ற வித்தியாசமும் புரியாது என்ற நிலையில் பரதநாட்டியம் ஆடுவதாவது!

    பிழை புரியுங்கள். அதுவே பாடமாகும்!

    தவறிழைத்துவிடுவோமோ என்று பயந்து, புதிய அனுபவங்களை நாடத் தயங்குபவர்கள் அனேகர்.

    வாழ்வில் எத்தனையோ இடர்கள். அவைகளை எப்படித் தவிர்ப்பது?

    புதிய முயற்சிகளில் இறங்கும்போது, பிழைகளும் ஏற்படத்தான் செய்யும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். துணிந்து ஒரு காரியத்தில் இறங்கிவிட்டு, அப்போது எழும் பிழைகளைப் பாடமாக எடுத்துக்கொண்டால், அடுத்த முறையும் அதேபோன்று நடக்காதிருக்க கவனமாகச் செயல்படலாம்.

    அப்படி நாம் இழைக்கக்கூடிய பிழைகளிலிருந்து கற்க ஒரு வாழ்நாள் போதுமா? பிறரது அனுபவங்களையும் நமக்குப் பாடமாக ஆக்கிக்கொள்ளலாமே!

    மாறாக, செய்த பிழைகளையே ஓயாது எண்ணிக் கலங்கி, `அக்காரியமே தவறு!’ என்பதுபோல் நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் அவை அச்சுறுத்த விடுவானேன்!

    சிறந்த வழிகாட்டி

    ஒருவருக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுப்பது என்பது சாத்தியமில்லை. உள்மனம்தான் சிறந்த வழிகாட்டி. அது நம்முடன் பேசும்.

    எப்போது தெரியுமா?

    இரவில் கண்ணயரும் முன்னர், அதிகாலையில் அரைத்தூக்கத்தில் இருக்கும்போது. உள்மனம் கூறுவதை ஏற்றால், பிறகு எந்த நேரமும் அதை நாடலாம்.

    கதை

    சில ஆண்டுகளுக்கு முன்னர், நான் ஒரு புடவை வாங்க கடைத்தெருவிற்குப் போயிருந்தேன். பல கடைகள் ஏறி இறங்கியும், எதுவுமே எனக்குத் திருப்திகரமாக அமையவில்லை. `இது ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் இருந்த டிசைன்!’ என்று ஏதேதோ சொல்லித் தட்டிக்கழித்தேன்.

    நிறைய புடவைகளை எடுத்துக் காட்டிய ஒரு கடைச் சிப்பந்திக்குப் பொறுமை மீறியது. “உங்களுக்கு என்னதான் வேணும்?” என்றார், எரிச்சலை மறைக்காது.

    நானும் அலுப்பின் எல்லையில் இருந்தேன். மூச்சை நிதானமாக இழுத்து விட்டபடி, `என்னுடன் வரப்போகும் புடவையே, நீ எங்கே இருக்கிறாய்?’ என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டேன். அடுத்த ஓரிரு நிமிடங்களிலேயே அது என் கண்ணில் பட்டது!

    இப்போது அதே கேள்வியை வெவ்வேறு விதமாகக் கேட்டு, உடனடியாக முடிவு எடுக்க முடிகிறது. வாங்கப்போகும் புடவையின் வண்ணத்திலிருந்து, அடுத்த பரீட்சையில் என்ன வரப்போகிறது என்பதுவரை சரியாக ஊகிக்க முடிகிறது. (நான் ஆசிரியையாக இருந்தபோது, ஆறு ஆண்டு காலம் பள்ளி இறுதியாண்டுப் பரீட்சைக்குமுன் வரப்போகும் கேள்விகளை உத்தேசமாகக் கணித்தேன். எல்லாமே சரியாக இருந்தன. பின்னென்ன! நான்தான் அக்கேள்விகளைத் தயாரித்திருக்க வேண்டும் என்று வதந்தி பரவ, அவைகளைப் பெற பிற பள்ளிமாணவர்கள் போட்டியிட்டார்களாம்!)

    உள்ளுணர்வின் உந்துதலில் கிடைக்கும் விடை நாம் எண்ணியதற்கு மாறாக இருக்கலாம். ஆனால், சரியாக இருக்கும். ஏன், எப்படி என்ற கேள்விகள் உதவாது. நம்பிக்கையுடன் துணிந்து ஏற்கவேண்டும்.

    இளைஞர்களே, வாழ்க்கைத்துணையைத் தேட ஒரு வழி இதோ!

    `என் வாழ்நாளை எல்லாம் என்னுடன் மகிழ்ச்சியாகக் கழிக்கப்போகிறவர் எப்படி இருப்பார்?’

    இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள். முகம், கண், மூக்கு எதுவுமே நினைவில் எழாது. அவரது குணங்கள் ஒவ்வொன்றாக, பல நாட்களில் பிடிபடும். அப்படி ஒருவரைப் பார்க்கும்போது, `இவர்தான் நாம் தேடியவர்!’ என்று மனம் ஆர்ப்பரிக்கும்.

    விஞ்ஞானமும் உள்ளுணர்வும்

    எல்லாவற்றிலும் அவநம்பிக்கை கொள்வதுதான் அறிவாற்றலுக்கு அடையாளம் என்று ஒரு சாரார் நினைக்கிறார்கள். `இதை விஞ்ஞான ரீதியில் பரிசோதிக்க முடியுமா?’ என்று கேட்பார்கள், அலட்சியமாக. ஆனால், விஞ்ஞானிகள்கூட, எண்ணற்ற பரிசோதனைகளால் குழம்பி இருக்கும் ஒரு தருணத்தில் எதிர்பாராத விதமாக விடை கிடைக்க, `நமக்குமேல் ஒரு சக்தி இருக்கிறது!’ என்று ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.

    கடவுள், உள்மனம் – பெயர் எதுவாக இருந்தால் என்ன! பலன் கிடைக்கிறதே! ஏதாவது துன்பம் நேரும்போதுதான் ஒருவரை நமக்கு வழிகாட்ட நாட வேண்டும் என்பதுமில்லை.

    “வழிகாட்டல் என்பது இருண்ட கானகத்தில் ஒரு சிறிய விளக்கிற்கு ஒப்பானது. எதிரிலிருப்பவை யாவும் புலப்படாது. ஆனாலும், அடுத்த அடியை எடுத்துவைக்க அதுவே போதும்”. (ஸ்வாமி விவேகானந்தர்)

    தொடருவோம்

    Share
  • அகநானூற்றில் ஐந்திணை நீர் மேலாண்மை

    -பீ.பெரியசாமி

    முன்னுரை

    அகநானூற்றில் ஐந்திணை மக்கள் வாழ்வியல் குறித்த செய்திகள் பல இடம்பெற்றுள்ளன. அவற்றுள் இன்றைய தேவையான நீர்மேலாண்மை குறித்த செய்திகள் என்னென்னவெல்லாம் இடம்பெற்றுள்ளன என்பதனை இக்கட்டுரையில் காண்போம்.

    குறிஞ்சி நிலப் பாடல்களில் நீர் மேலாண்மை

    கடல்நீரை முகந்து மேகங்கள் நெய்தல் நிலத்தில் அழகுடன் காணப்பட்டாலும் முதலில் மழைப்பொழிவைத் தொடங்குவது குறிஞ்சி நிலத்திலேதான். இதனை,

    “கார்கதம்பட்ட கண்அகன் விசும்பின்
    விடுபொறி ஞெகிழியின் கொடிபட மின்னி
    படுமழை பொழிந்த பானாட் கங்குல்” (அகம்.108)

    எனும் அகப்பாடல், அகன்ற ஆகாயத்தில் சினந்து எழும் மேகங்கள் பொறிவிடுகின்ற கொள்ளிக்கட்டை போல வரிசையாக மின்னி நள்ளிரவில் மிக்க மழையைப் பொழிந்தது என்று குறிப்பிடுகின்றது.மலைகளின் மீது இயற்கையாக அமைந்திருக்கும் நீர்நிலை சுனையாகும். இது வளமையான பாறைகளின்மேல் அமைந்திருந்ததாக,

    “மல்லல் அறைய மலிர்சுனை……”(அகம்.308)

    எனும் அகப்பாடல் குறிப்பிடுகிறது. மேலும், வளமையான பாறையில் அமைந்துள்ள தெளிந்த பெருகிய நீரினை உடைய சுனை என்பதனால் சுனை பாறையின் மீதமைந்துள்ளது புலப்படுகின்றது.  சுனைகள் பறையின் கண் போன்று இருந்ததாக அகநானூற்றுப் புலவர்கள் கூறியுள்ளனர்.

    “பாறைக் கண் அன்ன நிறைச்சுனை பருகி”(அகம்.178)

    என்ற அகப்பாடல்கள் சுனையின் வடிவு பாறையின் கண்ணையொத்ததாக இருந்ததைக் குறிப்பிடுகின்றன.

    “பாறை நெடுஞ்சுனை” (அகம்.2)

    என்ற அகப்பாடலடிகள் நீர் நிரம்பிய நீண்ட சுனைகள் இருந்ததாகவும், அவை பாறைகளின் இடையே இருந்ததாகவும் குறிப்பிடுகின்றது. அதேபோல் குறுகிய சுனைகள் இருந்ததாகவும் பாடல்களில் காண முடிகின்றது.

    “பாடுஇன் அருவிப் பனி நீர்இன் இசை” (அகம்.82)

    அருவிகள் விழும் ஓசை இனிய இசையினைப் போன்றுள்ளதென புலவர் கூறியுள்ளார்.

    “சிறுகோட்டுப் பெருங்குளம் காவலன் போல
    அருங்கடி அன்னையும் துயில்மறந் தனளே”(அகம்.252)

    என்ற நக்கண்ணையார்  பாடல் தலைவியின் காதலை அறிந்த தாய்  சிறிய கரையினையுடைய பெரிய குளத்தைக் காவல் செய்பவன் அதன் கரை உடைந்து போகாதபடி இரவெல்லாம் துயிலாது அதனைக் காப்பான் அதுபோல தன்னைக் காத்து நிற்பதாகத் தலைவி கூறும் உவமை வழி குளத்தைப் பாதுகாக்க பாதுகாவலர்கள் இருந்தது தெரியவருகின்றது. குளக்கரைகளைக் கட்டுமானங்களையே கவனத்தோடு கட்டிய மக்கள் அதையும் மீறி அணைகளில் உடைப்பு ஏற்பட்டு விடாமல் இருக்க பாதுகாவலர்களை நியமித்தது அவர்களின் நீர்ப்பராமரிப்புத் திறத்தைப் புலப்படுத்துவதாக உள்ளது. 

    முல்லை நிலப் பாடல்களில் நீர் மேலாண்மை

    முல்லை நில பாறைகளின் நடுவே சுனைகள் இருந்ததனை,

    ”பாறைக் கண் அன்ன நிறைச்சுனை தோறும்”(அகம்.324)

    எனும் அகப்பாடல் கூறியுள்ளது. மேலும்,

    “பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி
    தாழ் பெயற் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ” (அகம்.84)

    எனும் அகப்பாடல் மேகங்கள் வலமாகச் சுழன்று எழுந்தால் மழைப்பொழிவு நிகழுமெனக் குறிப்பிடுகின்றது. மேலும், மேகங்கள் எந்ததிசையில் தோன்றினாலும் கிழக்கு நோக்கி நகர்ந்தால் மழை தவறாது பொழியும் என்று கூறியுள்ளனர். 

    “புன் காழ் நெல்லிப் பைங் காய் தின்றவர்
    நீர்குடி சுவையின் தீவிய மிழற்றி
    பண்ணன் சிறுகுடிப் படப்பை நுன்நுரை”(அகம்.54) சிறிய இலைகளையும், புல்லிய விதைகளையுமுடைய நெல்லிக்காயினை உண்டுவிட்டு நீர் குடித்தால் சுவையாயிருக்கும் என்பதை அக்கால மக்கள் அறிந்துள்ளனர். பாலை வழிச் செல்லும் வழிப்போக்கரின் உயிரைப் போகடிக்காது தடுத்து நிறுத்தும் சுவைமிக்க காய்களைக் கொண்டது நெல்லி மரம் என்று மேற்கண்ட அகப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன. உணவு உண்டவுடன் தோன்றும் நீர் தாகத்தைத் தணிக்க கள் உண்டுள்ளனர். 

    மருத நில பாடல்களில் நீர் மேலாண்மை

    மருதநிலத்தில் மீன்களும், மலர்களும் நிறைந்த நீர்நிலையினை,

    “துணிநீர் இலஞ்சி கொண்ட பெரு மீன்” (அகம்.236)

    எனும் அகப்பாடலில் முதுநீர் இலஞ்சி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 

    “நெடுநீர்ப்பொய்கை ……. ……….”(அகம்.246)

    “நீள்இரும் பொய்கை ……. …… .”(அகம்.276)

    எனப் பொய்கை ஆழமானதாகவும், நீண்ட பெரிய நீர்நிலையாக இருந்ததையும் மேற்கண்ட அகப்பாடல்கள் சுட்டுகின்றன.

    மருதநிலப் பெண்கள் நீர்நிலைகளிலிருந்து நீர்  எடுத்துவர அழகிய வேலைப்பாடமைந்த குடங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

    “தெண்கட் தேறல் மாந்தி மகளிர்
    நுண்செயல் அம்குடம் இரிஇ”(அகம்.336)

    பாவைக் கொட்டிலார் என்ற அகநானூற்றுப் புலவர் நுண்ணிய வேலைப்பாடமைந்த குடங்களில் நீர் எடுக்க மருத நிலப் பெண்கள் நீர்த்துறைக்கு வந்ததாகக் குறிப்பிடுகின்றார். எனவே தண்ணீர் எடுத்து வரத் தாழி, குடம் போன்ற பொருள்களைப் பயன்படுத்தியிருப்பதையறிய முடிகின்றது. 

    நெய்தல் நிலப் பாடல்களில் நீர் மேலாண்மை

    நெய்தல் நிலக் குளிர்ச்சியுடைய குளத்தில் குவளை மலர்கள் பூத்து நிறைந்து காணப்பட்டதை,

    “தண் கயத்து அமன்ற ஒண்பூங் குவளை”(அகம்.180) எனும் அகப்பாடலில் காணலாம்.

    பாலை நிலப் பாடல்களில் நீர் மேலாண்மை

    பாலை நிலத்தில் கோடை காலத்தில் சுனை நீர் வற்றி இருந்தது  ‘வறுஞ்சுனை’ என்றழைக்கப்பட்டுள்ளது. இதனை,

    “நிலம் நீர் அற்று நீள்சுனை வறப்ப
    குன்று கோடு அகைய கடுங்கதிர் தெறுதலின்”(அகம்.295) 

    ”……………………….. வறுஞ் சுனை
    மை தோய் சிமைய மலைமுதல் ஆறே”(அகம்.119)

    வறட்சி காலங்களில் நீரின்றி உட்பகுதி வற்ண்டு காணப்பட்டுள்ளது. இதனை மேற்கண்ட அகப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

    மலையின் மீதிருந்து கொட்டும் நீர்வீழ்ச்சியே அருவியாகும். மழை பெய்தால்தான் அருவிகள் விழும். மழைக்காலங்களில் மட்டுமே காணவியலும் அழகிய இயற்கை காட்சியது இதனை, 

    “கழைநரல் வியல்அகம் வெம்ப மழைமறந்து
    அருவி ஆன்ற வெருவரு நனந்தலை”(அகம்.241) என்ற அகநானூற்றுப் பாடல் விளக்குகிறது. மழை பொழியாததால் அருவிகள் இல்லாமல் போயின என்று குறிப்பிடுகின்றது. எனவே அருவி தோன்றுவதற்கு முக்கிய ஆதாரம் மழையே ஆகும்.

    ஆயர்கள் கூவல் தோண்டும் முறைமையினை அறிந்ததோடு அதிலிருந்து நீர் எடுக்கும் தொழில்நுட்ப முறையினையும் நன்கறிந்தவர்களாக இருந்துள்ளனர். கூவலிலுள்ள நீர் உவர்ப்புத்தன்மை உடையதாக இருந்துள்ளது. இதனை, 

    “பிணர்அழி பெருங்கை புரண்ட கூவல்
    தெண்கன் உவர் குறைகுட முகவை
    அறனிலாளன் தோண்ட வெய்து உயிர்த்து
    பிறைநுதல் வியர்ப்ப உண்டனள் கொல்லோ ?”(அகம்.207)

    பாலை நிலத்தின்வழி உடன்போக்குச் சென்ற தலைவன் தாகத்தால் வருந்திய தலைவியின் தாகத்தைத் தணிக்கக் கூவலை மேலும் சிறிது தோண்டுகிறான். அப்போது உவர்நீர்  ஊறுகிறது. தலைவி அந்நீரை குடிக்கிறாள். எனவே பாலையில் உவர் நிலத்தில் அமைக்கப்படுவது ‘கூவல்’ என்பது புலனாகிறது. அவ் உவர் நிலத்திலுள்ள நீரும் உவர்ப்புத் தன்மையுடையதாதலால் கூவல் “உவர் நீரையுடைய நீர்நிலை” என்பது புலனாகிறது. வன்புல நிலத்தைத் தோண்டி செய்யப்பட்ட கூவலில் ஆநிரைகள் நீர் அருந்தச் செல்லும் . இதனை, 

    “வன்புலம் துமியப் போகி கொங்கர்
    படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்”(அகம்.295) என அகநானூற்றுப் பாடல் கூறியுள்ளது. இதன்வழிப் பாறை நிலத்தையுடைத்துச் செய்யப்பட்டதே கூவல் என்பது புலனாகிறது.

    கோவலர்கள் தான் கூவலை முதன்முதலில் தோண்டியிருக்க வேண்டும். ஏனெனில் கோவலர்கள் ஆடுமாடுகளை மேய்ச்சலுக்காக நெடுந்தூரத்திற்கு ஓட்டிச் செல்லும் போது அவைகள் தாகத்தால் வருந்தமுறும். அதனால் அவைகளின் தாகத்தைத் தணிக்க அவர்களால் அமைக்கப்பட்டதே இந்தக் கூவலாக இருக்கும். கோவலர்கள் ‘கூவல்’ தோண்டுவதற்கு முதன் முதலில் பயன்படுத்தியது அவர்கள் கையிலிருந்த கோலையே ஆகும். இதனை,

    “…………. ………….. …………. கோடை முகத்தலின்
    நீர்க்குஇயங்கு இனநிரைப் பின்றை வார்கோல்”(அகம்.225) 

    நீர் பருகுவதற்குச் செல்லும் பசுக் கூட்டத்திற்குப் பின்னே நீண்ட கோலுடைய ஆயர்கள் வந்தனர் என்று இப்பாடல் கூறுகின்றது. 

    “கடற்றுஅடை மருங்கின் கணிச்சியின் குழித்த
    உடைக்கண் நீடுஅமை ஊறல் உண்ட
    பாடுஇன் தென்மணி பயம்கெழு பெருநிரை”(அகம்.399)

    நிறையப் பசுக்கூட்டங்களையுடைய கோவலர்கள் அவற்றின் தாகங்களைப் போக்குவதற்காக மலங்காட்டினைச் சார்ந்த பகுதியில் குந்தாலி என்ற கருவியால் குழி தோண்டினர். அதில் ஊறிய நீரைப்பருகிய இனிய ஓசையை உடைய மணிகளைக் கொண்ட பால் கொடுக்கும் பசுக்கள் என்பதன் வழி ஆநிரைகளுக்காக கோவலர்கள் நீர்க்குழிகள் அமைத்தனர் என்பதை அறியலாம். 

    “பயநிரை சேர்ந்த பாழ்நாட்டு ஆங்கண்
    நெடுவிளிக் கோவலர் கூவல் தோண்டிய
    கொடுவாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறுகுழி
    நீர்காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது”(அகம்.155)

    ஆநிரைகள் நிறைந்த பாழ்பட்ட நாட்டின் பல இடங்களிலும் கோவலர்கள் தாம் தோண்டிய கூவலிலிருந்து வளைந்த வாயினை உடைய பத்தலால் நீர்  இறைத்துச் சிறுகுழியில் ஊற்றினர். பாலை நிலத்தின் வெப்பத்தினால் சிறுகுழியில் ஊற்றிய நீரானது காய்ந்து போனதாகக் கூறப்படுகின்றது. இதிலிருந்து கூவலிலிருந்து நீரை எடுத்துச் சிறுகுழியில் ஊற்றப் ‘பத்தல்’ என்ற கலனைப் பயன்படுத்தியதாக அறியமுடிகின்றது. மேலும், பத்தல் என்பது மரத்தாலான நீர் இறைக்கும் கருவி ஆகும்.

    பாலை நிலத்தில் அழுகல்நீர்தான் இருக்கும். அந்நீர் இனிய தன்மையையும், மனநிறைவையும் தராது. அவ்வாரிருக்கும் நீரின் அழுகியவாடையும், உவர்ப்பும் தெரியாமலிருக்க பாலை வழியாகச் செல்வோர் நெல்லிக்காய் உண்டபின் அந்நீரை அருந்தியுள்ளனர்.

    “நெடுஞ்சேண் வந்த நீர்நசை வம்பலர்
    செல்உயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லிப்
    பல்காய் அம்சினை அகவும் அத்தம்”(அகம்.271) 

    “விளர்ஊன் தின்ற வேட்கை நீங்க
    துகள்அற விளைந்த தோப்பி பருகி” (அகம்.265)

    எருதின் ஊனை உண்ட ஆறலை கள்வர்கள் ஆதனால் எழும் மிகுந்த நீர் தாகத்தைப் போக்கும் பொருட்டுத் தூயமுதிர்ந்த நெல்லினால் சமைத்த தோப்பிக் கள்ளினைக் குடித்தனர் என்ற அகநானூற்றுப் பாடல் வழி உணவு உண்டபின் நீர்  தாகத்தைப் போக்க ஆறலை கள்வர்கள் கள் குடித்தது புலனாகிறது. மேலும், பாலை நிலத்தில் வாழும் ஆறலைக் கள்வர்கள் தாகத்தால் வருந்தி மரப்பட்டையை உறிஞ்சித் தாகம் தணித்தனர். ஆயர்கள் தோண்டிய கூவல் வழிச் செல்வாரின் தாகத்தை  தணிக்கவும் பயன்பட்டது.

    “கல்லுடை அதர கனம் நீந்தி
    கடல்நீர் உப்பின் கணம்சால் உமணர்
    உயங்குபகடு உயிர்ப்ப அசைஇ முரம்பு இழத்து
    அகல்இடம் குழித்த அகல்வாய்க் கூவல்
    ஆறுசெல் வம்பலர் அசைவிட ஊறும் .”(அகம்.295)

    நெய்தல் நிலத்தைச் சார்ந்த உப்பு விற்கும் உமணர்  கூட்டம் பாலை நிலத்தைக் கடந்து சென்றது. உப்புச் சுமையினை இழுத்து வந்த எருதுகள் இளைப்பாறும் பொருட்டு ஓரிடத்தில் தங்குகின்றனர். அவ்விடத்தில் வலிய நிலத்தை இடித்துத் தோண்டின அகன்ற வாயினையுடைய கூவல் நன்கு நீர் ஊறி உமணர்கள் மற்றும் எருதுகளின் தாகத்தைத் தணிக்கக் கூடியதாக அமைந்தது. 

    “கயம்துகள் ஆகிய பயம்தபு கானம்”(அகம்.11)

    என்று குளம் வறண்டு குளத்தின் அடிப்பகுதி துகள்களாகக் காணப்பட்டதை மேற்கண்ட பாடல் எடுத்துரைக்கிறது.

    “வேனில் நீடிய வான் உயர் வழிநாள்
    வறுமை கூரிய மண்நீர்ச் சிறு குளத்
    தொடு குழி மருங்கில் துவ்வாக் கலங்கல்”(அகம்.121)

    வெம்மையுடைய கோடை நிலைபெற்ற காரணத்தால் குளத்திலுள்ள நீர் வறண்டது. அதனால் குளிக்கும் சிறு குளத்தில் தோண்டப்பட்ட சிறுகுழியில் குடிப்பதற்குப் பயன்படாத கலங்கல் நீர் காணப்பட்டது. மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுக்கும் போது அந்நீரை குளங்களில் தேக்குகின்றனர். குளங்களில் தேக்கும் நீர் இதர பிற தேவைகளுக்கு பயன்பட்டாலும் கூட அடிப்பகுதியின் வழியாக நீர் கசிந்து தேக்கங்களிலுள்ள நீரின் ஒரு பகுதி நிலத்தடி நீராகிறது நீரற்று வறண்ட கோடைக்காலங்களில் அக்குளங்களில் சிறுகுழியமைத்து அதை மேலும் மேலும் தோண்டும் போது நிலத்தின் அடுத்தடுத்த அடுக்குகளில் தேங்கியிருக்கும் நிலத்தடி நீர் வெளிப்படுகின்றது. இம்முறை சங்ககாலம் தொட்டு இன்றளவும் நடைமுறையிலுள்ளது. 

    “கல்லறுத்து இயற்றிய வல்உவர்ப் படுவில்” (அகம்.79) என்ற அகநானூற்றுப்பாடல் கருங்கல்லைச் சமமான வடிவத்தில் அறுத்தெடுத்து குழியமைத்ததாகக் குறிப்பிடுகின்றது. இதன்வழி அருவி நீரினைத் தேக்கி வைக்கப் பாறையினை அறுத்தெடுத்து குழியாக்கி நீரினைக் குறிஞ்சி நில மக்களின் சேகரித்து வைத்துள்ளனர் என்பதனை அறிய இயலுகின்றது.

    தாகத்தால் வருந்திய யானை யாமரப்பட்டைகளை உரித்துத் தாகம் தீர்த்துக் கொண்டதாக, 

    “மிசைமரம் சேர்த்திய கவைமுறி யாஅத்து
    நூர் அரை மருங்கின் நீர்வரப் பொளித்து”(அகம்.257) எனும் அகப்பாடல் கூறியுள்ளது. அதாவது, தாகத்தால் வருந்திய யானைகள் நீருக்காக அலைந்து திரிந்து நீரற்ற நிலையில் யாமரத்தின் பட்டைகளைச் சுவைத்து அதிலுள்ள நீரினை உண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

    நீரற்று தாகத்தால் வருந்திய மான் கூட்டங்கள் சிறிய இலையினையும், பெருத்த அடியினையும் உடைய நெல்லிக்கனியினைத் தின்று தாகம் தணித்ததாக,

    “………………………………. புல் இலைப்
    பராரை நெல்லி அம் புளித் திரள் காய்
    கான மட மரை கண நிரை கவரும்”(அகம்.69) என்ற அகநானூற்றுப்பாடல் குறிப்பிடுகின்றது.

    கேணிகள் மருதநிலத்தில் இருந்ததனை,

    “ஆறு செல் வம்பலர் சேறுகிளைத்து உண்ட
    சிறுபல் கேணி ……………..” (அகம்.137)

    எனும் அகப்பாடல் சிறிய பலவேறு வகையான கேணிகள் இருந்ததாகக் குறிப்பிடுகின்றது. மேலும் மக்கள் குடிநீர் எடுக்கின்ற உண்ணுநீர்த் துறையாகவும் ‘கேணி’ விளங்கியுள்ளது.

    “புனல்பொரு புதவின் உறந்தை எய்தினும்” (அகம்.237)

    என்று ‘புதவு’ பற்றிய குறிப்புக்கள் சங்க அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது. புதவு என்பது “தண்ணீர் வெளியேறும் சிறியவழி” (தமிழகப் பாசன வரலாறு, ப.29) என்று தமிழகப்பாசன வரலாறு குறிப்பிடுகின்றது.

    “ஓங்குநிலைத் தாழி மல்கச் சார்த்தி
    குடைஅடை நீரின் மடையினள் எடுத்த”(அகம்.275)

    வயலைச் செடிக்கு நீர் ஊற்றுவதற்கு நீர் நிலையிலிருந்து நீர் எடுத்துவர தாழியைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகின்றது. தாழி என்பது மண்ணாலாகி கலமாக இருக்கலாம். பனங்குடைகளில் தண்ணீர் எடுத்துக் கலத்தை நிரப்பி, பின்பு வீட்டிற்கு நீர் எடுத்து வந்துள்ளதை மேற்கண்ட அகநானூற்றுப்பாடல் சுட்டுகின்றது. குடிநீர் எடுத்து வரவும் மேலே கண்ட முறையினையே அவர்கள் பயன்படுத்தியிருக்கக் கூடும்.

    “நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி
    குறுநீர்க் கன்னல் எண்ணுநர்” (அகம்.43)

    எனும் அகநானூற்றுப்பாடலில் ‘நீர்க்கன்னல்’ என்பது நீர்க்கடிகாரத்தைக் குறிக்கிறது. எண்ணுநர் என்பது நாழிகைகளைக் கணக்கிட இருந்த நாழிகைக் கணக்கர்களைக் குறிக்கிறது. எனவே நீர்க்கடிகாரம் ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக பொழுதுகளைக் கண்டறிய நாழிகைக் கணக்கர்களை அமைத்திருந்தும் புலனாகிறது. 

    முடிவுரை

    முதலில் குறிஞ்சி நிலத்தில் மழைப்பொழிவு தொடங்கும்.மலைகளின்மீது சுனைகள் மழைநீரைச் சேகரித்தது. சுனைகள் பார்ப்பதற்குப் பாறைகளின் கண்களைப்போல காட்சியளித்த்து. அருவிகளின் வீழ்ச்சி இனிய ஓசையாய் அமைந்திருந்த்து. பெரிய குளங்களைக் காவலர்கள் காவற்காத்தனர். மேகங்கள் வலமாகச் சுழன்று எழுந்தால் மழைப்பொழிவு நிச்சயம். மேகங்கள் எந்தத் திசையில் தோன்றினாலும் கிழக்கு நோக்கி நகர்ந்தால் மழை தவறாது பொழியும். நெல்லிக்காயினை உண்டுவிட்டு நீர் குடித்தால் சுவையாயிருக்கும். உணவு உண்டவுடன் தோன்றும் நீர் தாகத்தைத் தணிக்கக் கள் உண்டனர்.

    மருதநிலத்தில் மீன்களும், மலர்களும் நிறைந்த நீர்நிலை முதுநீர் இலஞ்சி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மருதநிலப் பெண்கள் நீர்நிலைகளிலிருந்து நீர்  எடுத்துவர அழகிய வேலைப்பாடமைந்த குடங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

    நெய்தல் நிலக் குளிர்ச்சியுடைய குளத்தில் குவளை மலர்கள் பூத்து நிறைந்து காணப்பட்டன.

    பாலை நிலத்தில் கோடைக் காலத்தில் சுனை நீர் வற்றி இருந்தது  ‘வறுஞ்சுனை’ என்றழைக்கப்பட்டுள்ளது. ஆயர்கள் கூவல் தோண்டும் முறைமையினை அறிந்ததோடு அதிலிருந்து நீர் எடுக்கும் தொழில்நுட்ப முறையினையும் நன்கறிந்தவர்களாக இருந்துள்ளனர். கோவலர்கள் ‘கூவல்’ தோண்டுவதற்கு முதன் முதலில் பயன்படுத்தியது அவர்கள் கையிலிருந்த கோலையே ஆகும். ஆநிரைகளுக்காகக் கோவலர்கள் நீர்க்குழிகள் அமைத்தனர். கூவலிலிருந்து நீரை எடுத்துச் சிறுகுழியில் ஊற்றப் ‘பத்தல்’ என்ற கலனைப் பயன்படுத்தினர். பத்தல் என்பது மரத்தாலான நீர் இறைக்கும் கருவி ஆகும். பாலை நிலத்தில் வாழும் ஆறலைக் கள்வர்கள் தாகத்தால் வருந்தி மரப்பட்டையை உறிஞ்சித் தாகம் தணித்தனர். வலிய நிலத்தை இடித்துத் தோண்டின அகன்ற வாயினையுடைய கூவல் நன்கு நீர் ஊறி உமணர்கள் மற்றும் எருதுகளின் தாகத்தைத் தணிக்கக் கூடியதாக அமைந்தது.

    வெம்மையுடைய கோடை நிலைபெற்ற காரணத்தால் குளத்திலுள்ள நீர் வறண்டது. அதனால் குளிக்கும் சிறு குளத்தில் தோண்டப்பட்ட சிறுகுழியில் குடிப்பதற்குப் பயன்படாத கலங்கல் நீர் காணப்பட்டது. அருவி நீரினைத் தேக்கி வைக்கப் பாறையினை அறுத்தெடுத்து குழியாக்கி நீரினைக் குறிஞ்சி நில மக்கள் சேகரித்து வைத்துள்ளனர். மக்கள் குடிநீர் எடுக்கின்ற உண்ணுநீர்த் துறையாகவும் ‘கேணி’ விளங்கியுள்ளது. ‘புதவு’ பற்றியக் குறிப்புக்கள் சங்க அகநானூற்றில் இடம்பெற்றுள்ளது. புதவு என்பது “தண்ணீர் வெளியேறும் சிறியவழி”. வயலைச் செடிக்கு நீர்  ஊற்றுவதற்கு நீர் நிலையிலிருந்து நீர் எடுத்துவரத் தாழியைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகின்றது. தாழி என்பது மண்ணாலாகிய கலமாக இருக்கலாம். பனங்குடைகளில் தண்ணீர் எடுத்துக் கலத்தை நிரப்பி, பின்பு வீட்டிற்கு நீர் எடுத்து வந்துள்ளனர். நீர்க்கன்னல்’ என்பது நீர்க்கடிகாரத்தைக் குறிக்கிறது. எண்ணுநர் என்பது நாழிகைகளைக் கணக்கிட இருந்த நாழிகைக் கணக்கர்களைக் குறிக்கிறது. எனவே நீர்க்கடிகாரம் ஒன்றை உருவாக்கி அதன் மூலமாகப் பொழுதுகளைக் கண்டறிய நாழிகைக் கணக்கர்களை அமர்த்தியுள்ளனர். இவ்வாறாக அகநானூற்றில் நீர்மேலாண்மை குறித்து ஐந்திணைப் பாடல்களில் பேசப்பட்டுள்ளது.

    *****

    கட்டுரையாளர் – தமிழ்த்துறைத்தலைவர்
    D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    விளாப்பாக்கம்   – 632 521.

     

     

     

    Share
  • வாழ்த்தி வரவேற்கிறோம்!

    பவள சங்கரி

     

    நம் வல்லமை ஆசிரியர் குழுவில் இணைந்திருக்கும் முனைவர் பா. ஜெய்கணேஷ் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.

    முனைவர் பா. ஜெய்கணேஷ் (பா.இளமாறன்) தற்போது காட்டங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்த்துறையில் துறைத்தலைவராகப் பணியாற்றி வருகின்றார். தமிழ் இலக்கணம், இலக்கியம், பதிப்பு தொடர்பான ஆய்வுகள் பல நிகழ்த்தி நூல்கள் பல வெளியிட்டுள்ளார்.

    தமிழ் இலக்கண உரை வரலாறு : யாப்பியல் உரைகள் என்னும் தலைப்பில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு, இரு நூற்றாண்டுப் பதிப்பு வரலாற்றில் தொல்காப்பியம், பதிப்பும் வாசிப்பும், தொல்காப்பியம்: அடைவு – ஆவணம் – வரலாறு , தொல்காப்பியம் – பன்முக வாசிப்பு , ஏழாம் இலக்கணம், அறியப்படாத தமிழ் உலகம், தமிழ் நூல் தொகுப்பு வரலாறு முதலான நூல்களை எழுதியும், தொகுத்தும், பதிப்பித்தும் வெளியிட்டுள்ளார். மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் என்னும் கவிதை நூலையும், கலியுகக்கிழவியும் ஓநாய்க்குட்டிகளும் என்னும் மொழிபெயர்ப்பு நாவலையும் 2018 இல் வெளியிட்டுள்ளார்.

    மொழி நிறுவனத்தின் வழியாக வெளியிடப்பெற்ற தற்காலத் தமிழ்ச் சொற்சேர்க்கை அகராதி வெளியீட்டுப் பணியிலும் ஆய்வாளராகச் செயல்பட்டுள்ளார். மாற்றுவெளி, புதிய புத்தகம் பேசுது முதலான இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை இதழ்களிலும் கருத்தரங்கங்களிலும் வெளியிட்டுள்ளார். எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் வழி சுவிட்சர்லாந்து சென்று அங்கு மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்துள்ளார்.

    பொதிகைத் தொலைக்காட்சியில் ஓராண்டு கடந்து போய்க்கொண்டிருக்கும் தமிழின் பெருமையையும் சிறப்பையும் பறைசாற்றி வரும் “ழகரம்” என்னும் நேரலை நிகழ்வின் வல்லுநராகவும், நெறியாளராகவும் செயல்பட்டு வருகின்றார்.

    இவர் பெற்ற விருதுகள்:

    செம்மொழி நிறுவனம் வழியாக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் கையால் இளம் ஆய்வறிஞர் விருது (1, 00,000 பரிசுத்தொகையுடன் பட்டயம் – 2015)

    எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் – வளர்தமிழ் விருது (1,50,000 பரிசுத்தொகையுடன் பட்டயம் – 2014)

    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் – சிறந்த ஆய்வாளர்க்கான விருது ( 2013)

    Share
  • வாழ்த்தி வரவேற்கிறோம்!

    பவள சங்கரி

     

    ஆசிரியர் குழுவில் இணைகிறார் – முனைவர் கல்பனா சேக்கிழார்

    கடந்த 12 ஆண்டுகளாக அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழ், கணினி, மொழியியல் ஆகியவற்றில் முதுகலை பட்டமும்  தமிழில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

    இதுவரை ஆறு நூல்களும், 100 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 52 தொகுப்பு நூல்களைப் பதிப்பித்துள்ளார்.  பல்வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதியும் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். பல்கலைக்கழக மானியக் குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (PDF)  மேற்கொண்டு வருகிறார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

     

    Share
  • கலித்தொகையில் தொன்மங்கள்

    -முனைவர் தீ. சண்முகப்பிரியா

    முன்னுரை

    ‘கற்றறிந்தோர் ஏத்தும் கலி’ என சிறப்பிக்கப்பெறும் செவ்வியல் இலக்கியம் கலித்தொகையாகும்.

    ‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
    பாடல் சான்ற புலனெறி வழக்கம்
    கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும் உரியதாகும்’
    (தொல்.அகத்.56)

    என்ற தொல்காப்பியர் நெறிக்கேற்ப அமைந்த அக இலக்கியம் கலித்தொகையாகும். பாலைத்திணைப் பாடல்களைப் பெருங்கடுங்கோனும், குறிஞ்சித்திணையைக் கபிலனும், மருதத்திணையை மருதன் இளநாகனாரும், முல்லைத்திணையைச் சோழன் நல்லுருத்திரனும், நெய்தலை நல்லந்துவனாரும் பாடியுள்ளனர்.

    ‘ஏறு தழுவுதல்’ போட்டியில் வென்றவனுக்கே மகளைக் கொடுப்பது;  மகளிர் காளைதனை வென்றவனையே தனக்கேற்ற காளையாக ‘ஏறு தழுவுதல்’ போட்டியின் மூலம் தெரிவு செய்வது – எனும் நிலை தமிழரின் அன்பின் ஐந்திணை நெறிக்கு மாறுபட்டதாக உள்ளது. எனவே, இக்கலித்தொகையிலுள்ள முல்லைக்கலி பாடல்களைக் கொண்டு இத்தொகைநூலைக் காலத்தால் பின்னுக்குத் தள்ளுவோருமுளர்.

    சங்கச் சான்றோர்கள் இயற்கைக் காட்சிகளை – நிகழ்ச்சிகளை உற்றுநோக்கி, அவற்றையே தாம் கூறவந்த கருத்துகளை விளக்குவதற்கு உவமையாகப் பெரிதும் பயன்படுத்தி இருக்கின்றனர். ஆனால், கலித்தொகைப் பாடல்களில் புராண, இதிகாசக் கதைநிகழ்ச்சிக் குறிப்புகளும், சிவன், திருமால், முருகன் முதலிய கடவுளர் பற்றிய கதைக்குறிப்புகளும் காட்சிகளை – நிகழ்ச்சிகளை விளக்குவதற்கு உவமைகளாகப் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    கலித்தொகைப் பாடல்களில் காட்சிகளை – நிகழ்ச்சிகளை – கருத்துகளை விளக்குவதற்குப் புராண – இதிகாசக் கதைக்குறிப்புகளும், கடவுளர் பற்றிய கதைக்குறிப்புகளும் பயன்படுத்தப்பட்டுள்ளமையை ஆய்ந்து வெளிக்கொணரும் நோக்கில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

    மகாபாரதக் கதைக்குறிப்புகள்

    வீமன் துச்சாதனனின் நெஞ்சைப் பிளந்தமை

    முல்லைக்கலியில் ஓர் ஆயன் ஏறு தழுவின காட்சியை விளக்கும்போது, சோழன் நல்லுருத்திரன், மகாபாரதக் கதை நிகழ்ச்சி ஒன்றை உவமையாக எடுத்துக்காட்டி விளக்குகின்றார்.

    ஓர் ஆயன் ஏறு தழுவும்போது, எருதின் நோக்கிற்கு அஞ்சாமல், அதனை அடக்க அதன்மேல் பாய்கிறான். அவ்வெருது, அவனைத் தன்னுடைய கொம்புகளுக்கிடையே கொண்டு, அவனுடலைக் குத்திக் குலைத்து, கம்பீரமாக நிற்கின்றது. இந்த நிகழ்ச்சிக்கு உவமையாக,  வீமன் திரௌபதியின் கூந்தலைப் பற்றி இழுத்த துச்சாதனனின் நெஞ்சைப் பிளந்து, பகைவரின் நடுவில் தன்னுடைய வஞ்சினத்தை நிறைவேற்றிய மகாபாரதக் கதை நிகழ்ச்சியை,

    ‘அம்சீர் அசைஇயல் கூந்தற் கை நீட்டியான்
    நெஞ்சம் பிளந்து இட்டு நேரார் நடுவண் தன்
    வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்’ (101:18-20)
    எனும் அடிகளில் குறிப்பிடுகின்றார்.

    அசுவத்தாமன் பகைவரின் தலையைத் திருகியமை

    பொதுவன் ஏறு தழுவும்போது, எருதின் சினத்தைப் பொருட்படுத்தாது அதன்மீது பாய்கிறான். அவ்வெருது அவனைச்சாடி, கொம்பின் நுனியினால் அவனைக் குத்திக் குலைக்கின்றது. இக்காட்சியானது, கரிய இருள் என்றும் கருதானாய், நள்ளிரவில் வந்து, தன் தந்தையைக் கொன்றவனைத் தன் ஆற்றலின் வலிமையினால் தலையைத் திருகிய அசுவத்தாமனைப் போன்றிருந்தது என்பதனை,

    ‘ஆர்இருள் என்னான் அருங் கங்குல் வந்து தன்
    தாளின் கடந்து அட்டு தந்தையைக் கொன்றானைத்
    தோளின் திருகுவான் போன்ம்’ (101:30-32)
    எனும் அடிகளில் காட்சிப்படுத்துகின்றார்.

    வீமன் துரியோதனனை வீழ்த்தியமை

    பாரதப்போரில் வீமனுக்கும் துரியோதனனுக்கும் கதாயுதப்போர் நிகழ்ந்தது.  ஒவ்வொருவரும் தன்னுடைய உயிர்நிலை இது என்று கூறிக்கொண்டு போர் புரிந்தனர். துரியோதனன் தன்னுடைய உண்மையாக உயிர்நிலையை மறைத்துக் கூறினான். வீமன் பலமுறைத் தாக்கியும் துரியனை வீழ்த்த முடியவில்லை. இறுதியில் கண்ணன் தன் துடையைக் குறிப்பாகத் தட்டிக் காட்டினான். அதனைப் புரிந்து கொண்ட வீமன்,  துரியோதனனைத் துடையிலே அடித்து வீழ்த்தினான். இப்பாரதக் கதை நிகழ்ச்சியைப் போன்று,  யானையினது முறம் போன்ற செவியை மறைப்பாகக் கொண்டு பாய்ந்து,  மாறுபாடு செய்த புலியைச் சினந்து தாக்கிய யானை, தன்னுடைய கூரிய கோட்டினது நுனியால் அப்புலியைக் குத்தி, புலியினது மருமத்தைத் திறந்து மாறுபாடு தீர்த்தது என்பதனை,

    ‘முறம்செவி மறைப் பாய்பு முரண் செய்த புலிசெற்று,
    மறம்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக்
    குறக்கு அறுத்திடுவான் போல் கூர்நுதி மடுத்து அதன்
    நிறம் சாடி முரண் தீர்ந்த நீள்மருப்பு எழில் யானை’ (52:1-4)
    எனும் அடிகளில் குறிப்பிடுகின்றார்.

    பாரதப் போர்க்களத் தோற்றம்

    ஏறு தழுவிய பின்னர்த் தொழுவின் தோற்றம், எலும்புகள் முறிந்து முறிந்து,  தசைகள் சிதறிப் பரவிக் கிடந்தன. இடிபோன்ற முழக்குடன் பல்வேறு இசைக்கருவிகள் முழங்கி ஆரவாரத்துடன் காணப்பட்டன. தொழுவின் இத்தோற்றமானது, பாண்டவரும் நூற்றுவரும் போரிட்ட போர்க்களத் தோற்றத்தை ஒத்திருந்தது என்பதனை,

    ‘கோடுஇடை நுழைபவர் கோள் சாற்றுபவரொடு –
    புரிபுமேல் சென்ற நூற்றுவர் மடங்க,
    வரிபுனை வல்வில் ஐவர் அட்ட
    பொருகளம் போலும்,  தொழுஉ’(104:56-59)
    என்று குறிப்பிடுகின்றார்.

    சிவபெருமான் பற்றிய புராணக்கதைக் குறிப்புகள்

    சிவன் கூற்றுவனின் நெஞ்சைப் பிளந்து, குடலைக் கூளிக்கு இட்டமை

    பொதுவன் ஏறு தழுவும்போது, எருதானது பொதுவனைச் சாடி, அவன் குடல் சரியக் குத்திக் குலைத்ததாம். இக்காட்சியானது, சிவபெருமான், ஊழி முடிவிலே, எல்லா உயிரினங்களையும் அழிக்கும் எருமைக்கடாவின்மேல் ஏறிவரும் கூற்றுவனின் நெஞ்சைப் பிளந்து, அவன் குடலைக் கூளிக்கு இட்டு, அதன் வயிற்றை நிரப்புவானாம் – இப்புராணக்கதை நிகழ்ச்சியை ஒத்திருந்தது என்பதனை,

    ‘படர் அணி அந்தி பசுங்கட் கடவுள்
    இடரிய ஏற்று  எருமை நெஞ்சு இடந்து இட்டு
    குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம்’(101:24-26)
          எனும் அடிகளிற் குறிப்பிடுகின்றார்.

    சிவன் கூற்றுவனைக் காலால் உதைத்து நெஞ்சைப் பிளந்தமை

    பொதுவன், காற்றைப்போல் விரைந்து வருகின்ற சினமுடைய ஏற்றைக் களத்தகத்தே, அதன் வலிமை அடங்கத் தழுவி, அதனை வருத்தி அதன்மேல் ஏறி நிற்கின்றான். பொதுவனின் இச்செயலானது, சிவபெருமான், எருமைக்கடாவின்மீது இவர்ந்து செல்லுகின்ற கூற்றுவனுடைய நெஞ்சத்தைக் காலால் உதைத்துப் பிளந்திட்டுச் சீற்றத்துடன் அவனுடைய அரிய உயிரைக் கொன்ற செயலோடு ஒத்திருந்தது என்பதனை,

    ‘ஏற்றெருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு,
    சீற்றமோடு ஆர்உயிர் கொண்ட ஞான்று,  இன்னன்கொல்
    கூற்று என உட்கிற்று என் நெஞ்சு’(103:43-45)
    எனும் அடிகளில் குறிப்பிடுகின்றார்.

    சிவன் மூவெயில்களை அழித்தமை

    ஞாயிறு தன் செறிந்த கதிர்களை எவ்விடத்தும் பரப்பி, சுடுகின்றமையின், அத்தீயானது, காட்டுத்தீப்போல எழுந்து மலையிடத்து எங்கும் பரந்து, விசும்புர ஓங்கி வெம்மையைச் செய்தது. ஞாயிற்றின் இச்செயலானது, கொன்றை மாலையை அணிந்த, இறைவன் அசைகின்ற எயில்களை அழித்தமையினால் தோன்றிய வெம்மை உடைய நெருப்பினைப் போன்றிருந்தது – என்பதனை,

    ‘அயம்திகழ் நறுங் கொன்றை அலங்கல் அம் தெரியலான்
    இயங்கு எயில் எயப் பிறந்த எரிபோல எவ்வாயும்’(150:1-2)
         எனும் அடிகளில் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

    சிவன் கங்கையைச் சடையில் சூடியமை

    தலைவன் பொருள் ஈட்டுதற்காகத் தலைவியைப் பிரிந்துள்ளான். தலைவனைப் பிரிந்து ஆற்ற இயலாதவளாய் உள்ள தலைவியைத் தோழி ஆற்றுவிக்கின்றாள். அவ்வாறு ஆற்றுப்படுத்தும்போது, தலைவியின் உடல் பசலை பாய்ந்து நிறம்மாறிக் காணப்படுகின்றது. தலைவியின் நிறம், கங்கையைச் சடையிலே மறைத்துள்ள சிவனது அணி போன்று உள்ளதென்றும், இத்தன்மையளாய தலைவியைத் தலைவன் கைவிடமாட்டான் என்றும் கூறி ஆற்றுவித்ததனை,

    ‘அறம் துறந்து ஆயிழாய்! ஆக்கத்தில் பிரிந்தவர்
    பிறங்கு நீர் சடைக்கரந்தான் அணி அன்ன நின் நிறம்
    பசந்து  நீ இனையையாய்  நீத்தலும் நீப்பவோ?(150:8-10)
                 எனும் அடிகளில் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். மேலும், அவளின் நிறமானது, அழகிய வடிவுடைய ஏற்றினை ஊர்தியாக உடையவனின் ஒளிபொருந்திய அணி நகைத்தலைப் போன்றுள்ளது என்பதனை,
    ‘உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்ன  நின்
    உரு இழந்து இனையையாய் உள்ளலும் உள்ளுபவோ? (150:13-14)
    எனும் அடிகளில் குறிப்பிடுகின்றார்.

    சிவன் சண்பகப்பூ அணிந்துள்ளமை

    ஆதிரை நாளினையுடைய சிவபெருமானது திருமார்பு அழகுபெறுமாறு, குளிர்ந்த பெரிய சண்பகப்பூ பருவம் பொய்யாது மலர்வதைப்போல, நம் தலைவரும் சொல்லிச் சென்ற பருவம் வந்தமை கண்டு, தவறாது நம்மை வந்தடைவார் என்று கூறி, தோழி ஆற்றுப்படுத்துகிறாள்.  இதனை,

    அரும்பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த
    பெருந்தண் சண்பகம் போல ஒருங்கு அவர்
    பொய்யார் ஆகுதல் தெளிந்தனம் (150:19-21)
    எனும் அடிகள் குறிப்பிடுகின்றன.

    சிவன் தலைக்கோலங்களின் தோற்றம்

    தலைவனைப் பிரிந்த தலைவியின் கூந்தல் காய்ந்து காணப்படுதலைக் கண்ட தோழி, அவளின் கூந்தலானது, பிறைத்திங்களைக் கண்ணியிலே சூடியவனின் பொன்னாற் செய்த தலைக்கோலங்கள் தாழ்ந்து தொங்கினாற்போன்று காணப்படுவதாகக் கூறியதனை,

    புதுத்திங்கட் கண்ணியான் பொன்பூண் ஞான்று அன்ன நின்
    கதுப்பு உலறும் கவினையாய் காண்டலும் காண்பவோ?(150:17-18)
    எனும் அடிகள் கூறுகின்றன.

    சிவன் கல்லால மரநிழலில் சனகாதி முனிவர்கட்கு வேதம் உபதேசித்தமை

    சிவன் தான் கல்லால மரத்தின் நிழலில் சனகாதி முனிவர்களுக்கு வேதம் உபதேசித்தபோது, தன்முன் நீர் நிறைந்த குண்டிகை எடுத்து வைத்திருந்தனன். இந்நிகழ்ச்சி நெய்தல்நிலத் துறைவனைக் குறிப்பிடும்போது, மலர்கள் மலர்ந்த வளைந்த தாழையில் பழங்கள் தொங்குகிற காட்சியைப் போன்று இருந்தது என்பதனை,

    சீர் மிகு சிறப்பினோன் மரமுதல் கைசேர்த்த
    நீர் மலி கரகம்போலப் பழம்தூங்கு முடத்தாழை (133:3-4)
                                        எனும் அடிகளின்மூலம் சிவன் கல்லால மரநிழலில் வீற்றிருந்து, சனகாதி முனிவர்களுக்கு வேதம் உபதேசித்த புராணச் செய்தியை  நல்லந்துவனார் குறிப்பிடுகின்றார்.

    திருமால் பற்றிய புராணக் குறிப்புகள்

    திருமால் குதிரையினுடைய வாயைப் பிளந்தமை

    பொதுவன் ஏறு தழுவும்போது, மிகுந்த வேகத்துடன் தன்னை எதிர்த்துவந்த ஏற்றைச் செவியடியிற் பற்றிக் கொண்டு, அதன் வலிமையை அடக்கித் தழுவுகிறான். இக்காட்சிக்கு, பகைவர் விடுத்த பிடரிமயிர் கொண்ட குதிரையினுடைய வாயைப் பிளந்து கொன்ற திருமாலின் செயலினை,

    ‘மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை
    வாய்பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன் கொல்
    மாயோன் என்று உட்கிற்று என் நெஞ்சு’(103:53-55)
    எனும் அடிகளில் உவமையாகக் குறிப்பிடுகின்றார்.

    திருமால் பாடலோடு யாழிசையும் கேட்டுப் பள்ளி கொண்டிருந்தமை

    தலைவி தலைவனைச் சந்திக்க இயலாத வண்ணம் காவல் மிகுந்தமையால் ஆற்றாத தலைவி, தலைவனிடத்துச் சென்ற நெஞ்சினை நோக்கி, மனம் அழிந்து கூறுகின்றாள். கரிய கொம்புகளையுடைய புன்னை மரத்தின் கிளைகள்தோறும் மலர்கள் மலரும் காலத்தை எதிர்பார்த்து, அதன் தேனை உண்ண சுரும்புகள் ஆரவாரிக்கின்றன. அதனோடு இயைந்து தும்பிகளும் ஊதுகின்றன. இவையிரண்டும் இயைந்து இம்மென்று ஒலிக்கும். இக்காட்சியானது, பாடலோடு யாழிசையும் கேட்டுப் பள்ளி கொண்டிருக்கும் திருமாலைப் போன்றுள்ளதென்றும், எப்பொழுதும் ஒலித்துக்கொண்டிருக்கும் பெரிய கடலும் ஒலியடங்கி, உறக்கம் மேற்கொள்வதைப் போன்றிருந்ததென்றும் கூறுவதனை,

    அரும் பொருள் மரபின் மால்யாழ் கேளாக் கிடந்தான் போல்
    பெருங்கடல் துயில் கொள்ளும் வண்டு இமிர் நறுங்கானல்(123:4-5)
      எனும் அடிகளில் ஆசிரியர் கூறுகின்றார்.

    மாயோன் மல்லர்களை அழித்தமை

    மாயோன், பகையாய மல்லர்களின் வலிமையை அழித்தனன். பகைவர் ஒருசேர வந்து சினந்து போரிட்ட காலத்தே அவர் ஓடும்படியாக அவர்தம் கொல்யானையின் அழகிய மத்தகத்திலே சக்கரப்படையை ஆழ்த்தியதைப்போல, கதிரவன் தான் பரப்பிய ஒளிக்கற்றைகளைத் தன்னிடத்தே வாங்கிக்கொண்டு மேற்றிசையில் மறைந்தான் என்பதை,

    ‘மல்லரை மறம் காய்த்த மலர்த்தண்கார் அகலத்தோன்
    ஒல்லாதார் உடன்று ஓட உருத்து உடன் எறிதலின்
    கொல் யானை அணிநுதல் அழுத்திய ஆழிபோல (134:1-3)
             எனும் அடிகளில் கூறுகின்றார்.

    திருமாலின் மார்பிடத்தே திருமகள் உறைந்துள்ளமை

    தலைவன் வரைவிடை வைத்துப் பிரிவு நீட்டித்த இடத்து, தலைவி பிரிவை  ஆற்றாதாளாகி, நாணம் கடந்து,  உள்ளம் கலங்கி, கூறத்தகாதன கூறி, அறிவு அழிந்து மொழிந்தனள். தலைவன் வந்து சேர்ந்த அளவில் கலக்கம் ஒழியத் தெளிந்து, அவன் மார்பிடத்தே சேர, ஞாயிற்றின் முன் இருள் கெடுமாறுபோல, அவள் வருத்தம் கெட்டது. இக்காட்சி, திருமாலின் மார்பிடத்தே திருமகள் சேர்ந்ததைப் போன்றிருந்தது. இதனை,
    ‘பாயல் கொண்டு உள்ளாதவரை வரக் கண்டு
    மாயவன் மார்பில் திருப்போல் அவள் சேர
    ஞாயிற்று முன்னர் இருள்போல மாய்ந்தது – என்
    ஆயிழை உற்ற துயர்’ (145:63-66)
    எனும் அடிகளில் கூறுகின்றார்.

    திருமாலின் திரிவிக்கிரம அவதாரம்

    நெய்தல் நிலத்தலைவனாகிய சேர்ப்பனைக் கூறும்போது, திருமாலுக்கு மூத்தவனான பால்நிற மேனியையுடைய பலராமன் அழகுபெற அணிந்துள்ள நீலநிற ஆடையைப்போல, வெண்திரையை உடைய கடல்நீரை உடைய சேர்ப்பன் என வருணிக்கிறார். பலராமனுடைய தம்பியாகிய திருமாலைக் குறிப்பிடும்போது, திருமால் தன் மூன்றடியால் உலகளந்த திரிவிக்கிரம அவதாரச் செய்தியை,

    ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முதுமுறைப்
    பால் அன்ன மேனியான் அணி பெயத் தைஇய (124:1-2)
                   எனும் அடிகளில் குறிப்பிடுகிறார்.

    தொகுப்புரை

    கலித்தொகைப் பாடல்களைப் பாடிய சங்கப்புலவர்கள், நிகழ்ச்சிகளை – கருத்துகளை விளக்குவதற்கு, தாங்கள் சார்ந்திருந்த சமயக்கடவுளர்கள் பற்றிய தொன்மங்களை உவமைகளாகப் பெரிதும் பயன்படுத்தியுள்ளனர். ‘முல்லைக்கலிப் பாடல்களில் திருமால் பற்றிய தொன்மக்கதைகளும், மகாபாரதக் கதைக்குறிப்புகளும் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளன. இத்தொன்மக் கதைகளின்வழி, புலவர்கள் காட்சிகளைச் சித்திரிப்பதால் அவை, கற்போர் மனதில் சித்திரங்களாகப் பதிந்து அக்கருத்துகள் – நிகழ்ச்சிகள் நன்கு விளங்குகின்றன.

    பயன்பட்ட நூல்கள்:

    1. தொல்காப்பியம், NCBH, Chennai.
    2. கலித்தொகை, NCBH, Chennai.

    *****

    கட்டுரையாளர் – முதுகலைத் தமிழாசிரியர்,
    அரசு மேனிலைப்பள்ளி,  மேல்கொட்டாய்,
    கிருஷ்ணகிரி மாவட்டம்.
    மின்னஞ்சல் : tspriya.3@gmail.com
    கைப்பேசி எண் : 9488345391

     

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 19

    -மேகலா இராமமூர்த்தி 

    வேறுபட்ட சிந்தனைகளும் மாறுபட்ட கொள்கைகளும் கொண்ட மனிதர்களைக் கொண்டிலங்குவதே இப்புவி. அவர்களின் எண்ணங்களும் செயல்களும் மற்றவர்க்கும் அவர்க்கும் நன்மை பயப்பதாய் இருந்தால் அவை கொண்டாடத்தக்கவையே; அன்றேல் அனைவர்க்கும் துன்பமே.

    கெட்டாலும் பிறருக்குப் பயன்படுவர் மேலோர்; வாழ்ந்தாலும் பிறருக்குப் பயனிலார் கீழோர். அத்தகு கீழ்மைக் குணங்கொண்ட கயவரின் இயல்புகளை அறிந்துகொள்ள நாலடியார்ப் பாடல்கள் நமக்கு நற்றுணைசெய்கின்றன. 

    நீர் நிறைந்த பெரிய பொய்கையில் வாழ்ந்தாலும் தவளை தன்மேல் உள்ள வழுவழுப்பான அழுக்கை நீக்கிக்கொள்ளும் ஆற்றலில்லாததாகும்; அது போல், பிழையற்ற சிறப்புடைய மெய்ந்நூல்களைப் பயின்றாலும் அவற்றை உய்த்துணரும் நுட்பஞ் சிறிதுமில்லாதவர் தம்மை அதனால் மேம்படுத்திக்கொள்ளும் மாட்சி பெற்றிலர்.

    செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
    வழும்பறுக்க கில்லாவாந் தேரை – வழும்பில்சீர்
    நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன் றில்லாதார்
    தேர்கிற்கும் பெற்றி அரிது.
    (நாலடி – 352)

    அறிவெனும் உரமில்லாதவர்கள் கற்றாலும் எத்துணைதான் அறிவைப் பெற்றாலும் தம்மை மேம்படுத்திக்கொள்ளவதை அறியார் என்பதையே இப்பாடல் விளக்குகின்றது.

    நுண்ணறிவு வாய்ப்பதற்கும் நல்லூழின் துணை வேண்டும்; போகூழின் வயப்பட்டோர்க்கு அதற்கேற்ற அறிவுதான் தோன்றும் என்பார் வள்ளுவர். 

    நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
    உண்மை அறிவே மிகும்.
    (373)

    பிறர்க்கு இரங்கும் நல்லியல்புடைய சான்றோர்க்குச் சிறிதும் பயன்படாமல், தமக்குக்கொடுமை செய்யும் இரக்கமற்றோரைப் பெற்றால் மட்டுமே அவர்க்குப் பயன்பட்டு வேலை செய்வர் கயவர். இளந்தளிரின்மேல் நின்றாலும் பிறர் தம் கையால் தட்டினாலன்றி அதனுள் இறங்காத உளியின் இயல்பினைப் போன்றது கயவரின் இக்குணம் என்கிறது நாலடியார்ப் பாடல் ஒன்று.

    தளிர்மேலே நிற்பினுந் தட்டாமற் செல்லா
    உளிநீரார் மாதோ கயவர் – அளிநீராக்
    கென்னானுஞ் செய்யார் எனைத்தானுஞ் செய்பவே
    இன்னாங்கு செய்வார்ப் பெறின். 
    (நாலடி –  355)

    கயவரை வேலைவாங்கும் வழிமுறையை,

    ”சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
    கொல்லப் பயன்படும் கீழ்”
    (1078) என்பார் வள்ளுவர் சினந்து.

    இன்னொரு பாடலிலும் கயவரின் குணத்தைக் கவினுறக் காட்சிப்படுத்துகின்றது நாலடி.

    ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
    மோட்டிடத்துஞ் செய்யார் முழுமக்கள் – கோட்டை
    வயிரஞ் செறிப்பினும் வாட்கண்ணாய் பன்றி
    செயிர்வேழ மாகுத லின்று.  
    (நாலடி – 358)

    பொருளின்மை முதலிய காரணங்களால் தளர்வுற்ற காலத்திலும் உயர்குடியிற் பிறந்த சான்றோர் செய்யும் நற்செயல்களைச் செல்வமுள்ள காலத்திலும் கயவர்கள் செய்யமாட்டார்கள். ஒளிமிகு கண்களையுடைய பெண்ணே! பன்றியின் கொம்பை வயிரம் பொருத்திப் பூண்கட்டினாலும் அது போர்ச்சினமுடைய வேழமாய் மாறுவதில்லை.

    கீழ்மக்களுக்கு எத்துணைதான் நன்னிலைமை வந்தாலும், நன்மொழிகளால் பிறர் அவர்தமைப் புகழ்ந்தாலும் அவர்தம் குணத்தில் மாறுபாடு வருவதில்லை என்பதையே மேற்கண்ட பாடல் தெளிவுறுத்துகின்றது.

    பன்னெறி என்ற தலைப்பில் பயன்மிகு நன்னெறிக் கருத்துக்கள் பலவற்றைப் பாங்குறப் பேசுகின்றது நாலடி. அவற்றிலிருந்து சிலவற்றை அறிந்துவருவோம்! 

    குடும்ப விளக்காய் அகத்துக்கு ஒளியூட்டும் இல்லாள் இல்லாத இல்லம் சிறக்காது என்று மனையாளின் மாண்பைப் பேசுகின்றது நாலடியார். 

    மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
    இழைவிளக்கு நின்றமைப்பின் என்னாம் – விழைதக்க
    மாண்ட மனையாளை யில்லாதான் இல்லகம்
    காண்டற் கரியதோர் காடு
    .  (நாலடி – 361)
     

    மேகங்கள் தவழும் உயர்ந்த மாளிகையாய், சிறப்பமைந்த பாதுகாப்புடையதாய், மணிகளால் இழைக்கப்பட்ட விளக்குகள் அங்கங்கு இருந்து ஒளிவிடினும் என்ன பயன்? மாட்சிமை வாய்ந்த விரும்பத்தக்க இல்லக் கிழத்தி இல்லாதவனது வீடு கண்கொண்டு பார்த்தற்கியலாததொரு கொடிய காடே ஆகும்.

    எவை எவை இல்லையானால் மானுடம் பாழாகும் என்று பட்டியலிட வந்த ஔவை,

    ”….பாழே
    மடக்கொடி யில்லா மனை”
    என்றுரைத்து இல்வாழ்க்கைக்கு ’நல்வழி’ காட்டுவார்.
     

    வான்புகழ் வள்ளுவரும், ’வாழ்க்கைத் துணைநலம்’ அதிகாரத்தில், ’இல்லதென் இல்லவள் மாண்பானால்’ என்று வினவி, ’மங்கலம் என்ப மனைமாட்சி’ என்று நன்மொழி நவின்றிருப்பது நாமறிந்ததே.

    மனித இரசனை ஆளுக்கு ஆள் மாறுபடக்கூடியது. அந்த இரசனையின் அடிப்படையில் மனிதர்களைத் தரம் பிரிக்கின்றது நாலடியார். 

    நல்ல நூல்களைக் கற்று வாழ்நாளைப் பயனுடைத்தாய்க் கழிப்பர் தலையாய அறிவினர்; நல்ல பொருள்களைத் துய்த்துக் காலங்கழிப்பர் இடைத்தரத்தினர்; இனிய உணவு கிடைக்கவில்லையே, செல்வத்தை மிகுதியாகப் பெறமுடியவில்லையே என்னும் வெறுப்பினால் இரவிலும் துயில்கொள்ளாது வருந்துவர் கடைத்தரத்தினராகிய கீழ்மக்கள்.

    கல்லாக் கழிப்பர் தலையாயார் நல்லவை
    துவ்வாக் கழிப்பர் இடைகள் கடைகள்
    இனிதுண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும்
    முனிவினாற் கண்பா டிலர்.  
    (நாலடி – 366)

    கம்பராமாயணத்தில்கூட மனிதர்களின் இரசனையின் அடிப்படையில் அவர்களைக் கடைத்தரத்தினர் முதலாய் முதல்தரத்தினர் ஈறாய்க் கம்பர் வரிசைப்படுத்தியிருப்பதை நாம் இங்கே இணைத்துப் பார்க்கலாம்.

    பொருந்திய மகளிரோடு வதுவையில்
       பொருந்து வாரும்,
    பருந்தொடு நிழல் சென்றன்ன
       இயல் இசைப் பயன் துய்ப்பாரும்,
    மருந்தினும் இனிய கேள்வி
       செவி உற மாந்துவாரும்,
    விருந்தினர் முகம் கண்டு, அன்ன
       விழா அணி விரும்புவாரும்… (நாட்டுப்படலம் -16)

    ’தாயைப் போலப் பிள்ளை’ என்று நம்மிடம் ஒரு பழமொழி உண்டு.   அதுபோலவே, தந்தையரோடு பிள்ளைகளை ஒப்பிட்டுப் பேசும் வழக்கமும் நமதே!

    நல்ல செந்நெற்கதிர்களால் தோன்றிய செழித்த விதைகள் மீண்டும் அச்செந்நெல்லாகவே விளைவதால், அந்தச் செந்நெல் வயல்கள் நிறைய விளைந்திருக்கும் வளமான வயல்கள் சூழ்ந்துள்ள நாட்டுக்கு வேந்தனே!, தந்தையின் அறிவு போலவே மகனுடைய அறிவும் இருக்கும் என்று கிளக்கின்றது கீழ்வரும் பாடல். 

    செந்நெல்லா லாய செழுமுளை மற்றுமச்
    செந்நெல்லே யாகி விளைதலால் – அந்நெல்
    வயனிறையக் காய்க்கும் வளவய லூர!
    மகனறிவு தந்தை யறிவு.
    (நாலடி – 367)

    நல்ல நெல் விதையினால் நல்ல நெல் (மீண்டும்) விளைவது போல, தந்தையினுடைய நல்லறிவினால் மகனுக்கும் நல்லறிவு உண்டாகும்.

    ”தந்தையர் ஒப்பர் மக்கள்” என்று தொல்காப்பியமும் இதே கருத்தைச் சொல்லியிருக்கக் காண்கிறோம்.  பிள்ளைகள் நல்லொழுக்கமும் நற்பண்பும் மிக்கோராய்த் திகழ, அத்தகு நற்குணங்கள் தாய் தந்தையரிடம் இருக்கவேண்டியதன் அவசியத்தை இந்தப் பாடல்களும் பழமொழிகளும் நுட்பமாய் உணர்த்துவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

     [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்  பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

     

    Share
  • வ.சுப. மாணிக்கனாரின் கல்விச் சிந்தனைகள்

    -முனைவர். இரா. மூர்த்தி

    தொல்காப்பியர் காலம் முதல் இக்காலம் வரை காலந்தோறும் கல்வியில் பல்வேறு மாறுதல்கள்  நடந்து கொண்டிருக்கிறது. தனியொரு மனிதன் தனது சிந்தனைகள் அனைத்தும் ஒரு பொருளின் மீதும், ஒரு செயல்பாட்டின் மீதும் செலுத்தும்போது அவனுக்குள் பல புரிதல்கள் எழத்தொடங்குகிறது. அப்புரிதல்கள் அதே நிலையிலிருக்காமல் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நகரச் செய்கிறது. இச்செயல்பாடுகளுக்குத் தேவையாக இருப்பது அறிவு. அவ்வறிவே பின்னாளில் கல்வியாக வளர்கிறது. அக்கல்வியே பின்னாளில் தனித்து இயங்குவதோடு தன்னைத் தனிநிலையில் அடையாளப்படுத்தவும் செய்கிறது. தனியொரு மனிதனின் அறிவுப்போக்கு எவ்வாறு அடுத்தடுத்து மாற்றம் கொள்கிறதோ அதைப்போன்றுதான், கல்வியின் தரமும் அடுத்தடுத்து உயர்ந்து கொண்டே செல்லும். இக்கல்வி மூதறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் சிந்தனையில் எவ்வகை மாற்றங்களை ஏற்படுத்தின.

    ஏனென்றால் தொடக்ககாலத் தமிழர்கள் மத்தியில் அகத்திணைக் கல்வி, பாலியற்கல்வி, பின்னைய காலகட்டத்தில் தடைப்பட்டு வெறும் அறிவுக்கல்வியாக தமிழ்ச்சூழலில் உலாவியது; உலவுகிறது. இதனால் மொழியின், பண்பாட்டின் மரபுகள் தொடர்ந்து நசுக்கப்பட்டு வந்தன. இதற்கிடையில் செம்மொழிச் சிறப்பு பெற்ற தமிழ்மொழிக்குள் மதம் சார்ந்த மொழிகளும் உட்புகுத்தப்பட்டன. அதுகுறித்து மூதறிஞர் கூறும் கல்விச் சிந்தனைகளை தொகுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    கல்வி – விளக்கம்

    கல்வி என்பது ஒருவரின் வாழ்க்கை முழுவதும் தொடரும் ஒரு நடைமுறையாகும். இக்கல்வி இறந்த காலத்தைப் புதுமைப்படுத்துகிறது. நிகழ்காலத்தைப் பாதுகாக்கிறது. எதிர்காலத்தில் மனிதனின் முன்னேற்றத்திற்கு வழிகோலுகிறது. அக்கல்வி வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டுவது. இதனை வள்ளுவர்,

    “யாதானும் நாடாமல் ஊராமல் என் ஒருவன்
    சாந்துணையும் கல்லாத வாறு”
    (குறள்:397)

    என்று கூறுகிறார். அத்தகைய சிந்தனைப்போக்கு இன்றைய சூழலில் தளர்ந்து வெறும் போதனைக் கல்வியாகவும், சான்றிதழ் பெறும் பட்டமாகவும், மதிப்பெண் கல்வியாகவும், உயிர்களைக் காவு வாங்கும் உயிர்கல்வியாகவும் மாறிவந்துள்ளது. இதனால் மக்களிடத்தில் சமூகத்தின் மீதான ஈர்ப்புப் போக்கு மாறத்தொடங்கியுள்ளது. இக்கல்வி குறித்து ஹெர்பார்ட் அவர்கள் கூறும்போது, கல்வி என்பது கடைநிலை உட்கிடைக்கைகளை உயரிய நுண்ணறிவால் வெற்றிக் கொள்வதே என்றும், “பிரவுன் என்பவர் கல்வி என்பது நாம் அறிந்து வேண்டுமென்றே கட்டுப்பாட்டுடன் செயல்படுத்தும் ஒரு நடவடிக்கை. அதன் மூலம் தனி மனித நடத்தையிலே மாற்றங்களும் தனித்தவர் வாயிலாகச் சமூகத்தில் மாற்றங்களும் தோற்றுவிக்கப்படுகின்றன என்றும், கல்வி என்பது பிறர் அறிவுத் தொகுதி, இறந்தகால நிகழ் காலத்துக் கருத்துத் தொகுதி, எள்ளும் பஞ்சும் போல்வது” என்று வ.சுப.மாணிக்கனாரும் கல்விக்கு விளக்கங்கள் கூறுகின்றனர். 

    அகத்திணைக் கல்வி

    தமிழ்ச் சமூகத்தின் தொடக்ககால வாழ்க்கை ஆண் பெண் இணைந்த காதல் வாழ்க்கையாகவே தொடங்கியது. அகத்தை உள்ளம், காதல், மனம், ஞானம், பாவம், உடல், வீடு, நிலம், உயிர், ஆன்மா என்று உடலோடும் உயிரோடும் உள்ளத்தோடும் தொடர்பு படுத்தி, நிலத்துக்கான (நிலம் – பெண்), உயிர் உருவாக்குதல் – பெண் என்ற உருவாக்கச் சூழலில் காதலாக வெளிக்காட்டுகிறது.

    அக்காதல் உடலுக்கு நல்லது. உள்ளத்துக்கு நல்லது. ஊருக்கு உலகத்துக்கே நல்லது. அந்நல்ல காதல் எது? காதல் என்பது உடற்பசி, உள்ளப்பசி, உயிர்ப்பசி, பிறவிப்பசி, அப்பசி தீர்க்கும் உணவு நெறி எது? அஃறிணையுயிர்களின் காதலாவது கல்லாக் காமம், இயற்கை வீறு. மொழி பேசும் மக்களினத்தின் காதல் நினைவில் இனித்து, அறிவில் விளங்கிக் கல்வியில் வளர்வது அவ்வளர்ச்சிக் கல்வியே அகத்திணைக் கல்வியாகும் என்கிறார் மூதறிஞர்.

    அகத்தை ‘அகம்’ என்று கூறும் முன்னர் அதன் உட்பிரிமாணங்களை விளக்கும்போது உள்ளம் என்றும் குடும்பத்தோடு இணையும்போது வீடு, இல், மனை என்று பொருளிடுகிறது என்கிறார். மேற்சுட்டல்களைத் தெளிவுறுத்தும்போது களவு கற்பு வாழ்வாகக் காதல் இலக்கியமாக அகத்திணை வெளிப்படுகிறது. இக்காதல் இன்பத்துப் பேரின்பம், உணர்ச்சியுள் பேருணர்ச்சி, ஆற்றலுள் பேராற்றல் அடிப்படையுட் பேரடிப்படை, உரிமையுள் எல்லார்க்கும் உரியது, நட்பினுள் இருபாலரையும் இணைப்பது, கல்வியுள் கசடறக் கற்க வேண்டுவது, நாணினுள் நனி நாணுடையது. ஒழுக்கத்துள் விழுமியது. இத்தகைய காதலை ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ளவேண்டும். அதன் வீறுகளையும் மாறுகளையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அகத்திணை மாந்தர்கள் உய்ப்பித்த அகத்திணை (காதல்) கல்வியை முழுவதும் உய்த்துணர்வது இன்பம் பயக்கும் என்றக் கருத்தினையும் வெளிக்காட்டுகிறார்.

    அகத்திணையறிவு பெண்ணுக்கும் ஆணுக்கும் இன்றியமையாத கல்வியாகும். நம் தமிழ் முன்னோர் அகக்கல்வியைச் செம்மையாகப் பெற்றிருந்தனர். அதனால் அன்னவர் இல்லற வாழ்வு பூசலின்றி இயங்கியது. அகக் கல்வியும் தமிழ்ச் சமுதாயத்தில் நல்லுரம் பெற்றிருந்தது. நல்வளம் தந்தது. இத்தகு கல்வி சங்கப் பிற்காலத்து குறைந்தமையால் தமிழ் நாட்டில் பல்லூறுகள் ஏற்பட்டன. இதனால் அகக்கல்விப் பரவலால் படிப்படியாக குறையத் தொடங்கின. அகத்திணையின் தோற்றமும் நோக்கமும் அமைப்பும் எல்லாம் விளங்காது, விளக்குவாரின்றி மறைக்கப்பட்டன. விளக்க முற்படுவாரும் சமயக் கல்வியாகவும், வீடுபேற்றிற்கு உரிய இலக்கியமாகவும் திரித்து எழுதினர். கற்பித்தனர். அதனால் அகத்திணை தன் உண்மையை இழந்து, மாறான பொய்யேற்றம் கொண்டது. தமிழினமும் உலகினமும் காதற் துறையில் ஆண் பெண் இருவருக்குமிடையில் தாழ்வு மனப்பாண்மை இன்றிப் புத்துயிரும் புது வாழ்வும் பெறவேண்டுமேல் தமிழகச் சூழலில் அகத்திணைக் கல்வியைப் பரப்ப வேண்டும். பொய்களைந்து மெய்ம்மைகளைப் பரப்ப வேண்டும். இந்நோக்கத்தால் ஆண் பெண் இருவரிடையே கொலை, உயிரிழப்பு குறைந்து சாதி, வேத, பாகுபாடின்றி தமிழ்ச் சமூகத்தை வெளிக்கொணர முடியும் என்ற ஆழ்ந்துரைப்பதை இவரது படைப்புகள் வாயிலாகக் காணமுடிகிறது.

    அகத்திணை கற்ற கணவனும் மனைவியும் பிறந்த உலகை மதிப்பர். எடுத்த உடம்பை மதிப்பர். கொண்ட மணத்தை மதிப்பர். ஒருவருக்கொருவர் தம் காம நாடிகளைப் புரிவர். காமக்குறைவு கடமைக் குறைவாம் என்று உணர்வர். வித்தில்லாக் காமப் பழத்தை உண்பர். மெய்யின்பத்தை உயிரின்பமாகப் போற்றி ஒழுகுவர். அகவாழ்க்கை அன்பு வாழ்க்கையாக எண்ணி இல்வாழ்க்கை சிறக்க செய்திடுவர். இத்தகு அகக்கல்வியினால் ஒரு குடும்பானது, ஆண்பாலின் பெருமிதத்தையும், உரனையும் மனைவி மதிப்பதும், பெண்பாலின் அருமையையும் நிறைவையும் நாணத்தையும் கணவன் மதிப்பதும் ஆகிய கல்வியை அகத்தாற் பெறலாம் என்ற கொள்கையைக் கொண்டுள்ளார். வாழ்க்கைக்கு அகக் கல்வியின் தேவை பயன்படுவதுபோல் குமரப்பருவத்தினரிடையே பாலியற்கல்வி குறித்த சிந்தனைகள் எழவேண்டும் என்கிறார்.

    பாலியற் கல்வி

    அகத்திணை முழுக்க முழுக்க பெண்ணியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அதனை பெண்ணிலக்கியம் என்று கூறலாம். ஏனென்றால் சங்க காலத்தில் பெண் மாந்தர்களே தொல்காப்பியர் கூறும் வாயில் காப்பாளர்களாக இனங்காணப்பட்டு முதன்மைப் படுத்தப்பட்டுள்ளனர். அதனால் பாலியல் கல்வியே முதன்மையாகக் கொள்ளப்பட்டது என்கிறார் மூதறிஞர். இக்காமம் குறித்துக் கூறும்போது, காமம் என்பது பருவவுணர்ச்சி, மெல்லிய உடலுணர்ச்சி, இவ்வுணர்ச்சி பெருகி ஊறுங்காலம் இளமை எனவும், குறைந்து சிறுகுங்கால் முதுமை எனவும் படும். ஆதலின் குறைவு தொடங்குவதற்கு முன்னுள்ள இளமையில் பாலின்பம் தூய்ப்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும் என்கிறார்.

    அகத்திணைக் கல்வி குடும்பமென்ற கருத்தில் இட்டுச்செல்லும் தன்மையில், பாலியற் கல்வி குறித்துக் கூறும்போது பாலியற் கல்வி வாழ்வைத் தொடாது, அறிவைத் தொடாது, இன்றியமையாத உணர்ச்சி நிலையைப் பெறார்.  சமுதாயத்தோடு இசைந்த புணர்ச்சி நிலையை எண்ணார். ஆகவே, அகக்கல்வியும் பாலியற் கல்வியும் கற்கும் இளைஞர், இளைஞியர் இன்றியமையாத உள்ளப் பண்புகளை கற்பாகவும், இன்றியமையாத உடல் வினையைக் காமம் என்றும் தெளிவாக விளங்கிக் கொள்வர். இதனால் ஒருவர் காமத்தை ஏனையவர் மதித்து ஒழுகுவர். காமநிறைவு மனநிறைவாம் என்று இன்பச்செய்கையில் மீக்கொள்வர், ஞாலத்தைக் காதலுக்குப் பயன்கொண்டு தம் காதலால் ஞாலத்தை வாழ்விக்கச் செய்வர் என்று பாலியல் கல்வியின் உளப்பாங்கை உடல் ரீதியாக வெளிக்காட்டி வாழ்க்கைக் கல்வியிலிருந்து பிரித்தாளுவதைக் உணரமுடிகிறது.

    அறிவுக் கல்வி

    அறிவுக் கல்வி என்பது கற்கக் கற்க பெருகக் கூடியது. வருங்காலத்திற்கான முன்னுணர்வு. தொடர் வளர்ச்சியை ஈட்டக் கூடியது. இது குறித்து வள்ளுவர் கூறும் கருத்தானது,

    “தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத் தூறும் அறிவு” (
    குறள்:396)

    என்கிறார். இதற்கு உரைகண்ட மூதறிஞர் மணற்கேணியகத்து நீர் என்ற ஒரு பொருள் உண்டு. முன்னரே அமைந்து கிடக்கும் அந்நீர் தோண்டுதோறும் புறப்படுகின்றது. அவ்வளவிற்கேயொழியத் தோண்டுகை தண்ணீரைப் படைப்பதின்று. இவ்வுண்மை கல்வியறிவுகளுக்கும் பொருந்தும் என்கிறார். புதிதென ஓரியற்கையைப் படைக்கும் ஆற்றல் மக்கட்கு இல்லை. படைப்புற்றுக் கிடக்கும் ஞாலப் பல்லியற்கைகைக் கண்டு தமதாக்கிக் கொள்ளும் செய்வினையே அன்னோர்க்கு உரித்ததாக அமைகிறது. இக்கல்வி ஒரு தோண்டு வினை. அச்சொல்லே தன் செயலைக் காட்டி நிற்பது. அவ்வினை முன் இல்லாத அறிவை ஒருவர்க்கு உண்டு செய்யும் தன்மையுடையது என உரைகாணுகிறார். இத்தகைய அறிவை,

    “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு”
    (குறள்:423)

    என்று அறிவின் செயல்பாட்டைச் சூழ்நிலைக் கல்வியோடு மனிதனை ஒப்பிட்டு மொழிகிறார். கற்ற அறிவை, கல்வியை ஒருவரின் மீது எதிர்நோக்குப் பாய்ச்ச வேண்டும் என்றும் கூறுகிறார். கற்க கல்வியை ஒருவருக்கு பாய்ச்சும்போது அவர் எய்திய இறைத் தன்மையைக் கணித்தற்கு வேறு அளவுகோல் வேண்டாம். அவர்தம் அறிவே அமையும் என்று அறிவின் மையத்தை வள்ளுவர் கூறும் கருத்துகள் வாயிலாக வெளிக்கொணர்கிறார். கல்வியில் அகத்திணைக் கல்வி, பாலியற் கல்வி, அறிவுக் கல்வியின் வினைப்பாடுகள் ஒரு புறம் இருப்பினும், இன்றைய சூழலில் தமிழகத்தில் தமிழ்க் கல்வி, மொழிக்கல்வியின் பின்னிலைப்போக்கு எத்தகைய மாற்றத்தை சந்தித்து வந்துள்ளது என்பதையும் வெளிக்காட்டியுள்ளார்.

    தமிழகத்தில் தாய்மொழிக்கல்வியின் பின்னிலைப் போக்கு

    மொழி ஒரு மனிதனின் அடையாளத்தை, பண்பாட்டைத் தனித்து வெளிக்காட்டக் கூடியது. அவ்வகையில் வ.சுப. மாணிக்கனார் தமிழ் மொழியின்மீது கொண்ட பற்றினால் தமிழகத்தில் மழலையர் ஆங்கிலப் பள்ளிகளைத் தமிழ்ப்பள்ளிகளாக மாற்றவேண்டும். தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பயிற்று மொழி தமிழாதல் வேண்டும். தமிழகத்தில் மக்கள் மத்தியில் எழுத்துச் சீர்திருத்தம் என்னும் பெயரில் தமிழுக்கு ஊறு விளைவிக்காமல் தடுக்க வேண்டுவதுடன், தமிழைப் பயிற்று மொழியாகத் தமிழகம் முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்ற கொள்கையைத் தமது கட்டுரைகள், நூல்கள் வாயிலாக வெளிப்படுத்தி வந்தவர். தனித்தமிழ் இயக்கத்திற்குத் தாமே புதிய சொற்களைப் படைத்து எல்லா நிலைகளிலும் எங்குந் தமிழ் வளர ஓய்வென்பதறியாது உழைத்த உரஞ்சான்ற வித்தகர்.

    அத்தகையோர் எண்ணத்தில் இந்திய நாட்டின் மீதும் அதிக ஈடுபாடு எழுந்தது. நம் இந்தியப் பெருநாடு ஆயிரம் ஆண்டு அடிமைத் தளையறுத்து உரிமைப் பணிபூண்டு நிறைவடைந்த நிலையில், ‘ஆங்கிலேயர் இந்நாட்டு இயல்பு அறிகிலர், மக்கள் உள்ளம் தெரிந்திலர் – தெரியும் நோக்கம் இலர்-  கால்கொள்ளா வேற்றாட்சியால் நம் பண்டைப் பண்பும் மொழிகளும் கலைகளும் மக்கள்போல் நலிவுற்றன. தன்னாட்சி பெறின் எல்லா வளமும் பெருக்குவோம் என்றெல்லாம் நெஞ்சறியப் பறைசாற்றி உரிமைப்போர் தொடுத்தோம். வெற்றி கண்டோம். வெற்றி கண்டபின்பு அதன் நிலை என்னவாயிற்று என்று மக்கள் வெளிக்காட்டினர். மக்களாய்ப் பிறந்தாரெல்லாம் ‘கற்க’ வேண்டும் என்று வள்ளுவப் பெருந்தகையார் கூறுகிறார். ஆனால் இன்னார் கற்றற்கு உரியர், இன்னார் உரியல்லர் என்று அறவே ஒதுக்கியது சில குடிகள், சில மக்கள், ‘எல்லோரும் கற்க, பெண்டிரும் கற்க என்று கூறிய வள்ளுவரின் வாக்கு விதந்து காணப்பட்டது. பெண்கள் கல்வி கற்பதற்குத் தடைவிதிக்கப்பட்ட இவரது காலத்தில் அடிமைகளுக்கும் கல்வி மறுக்கப்பட்டிருந்தது என்று தனது நூல் வாயிலாக எடுத்துரைக்கிறார்.

    பள்ளி கல்லூரிகளில் மாணக்கர்களுக்குப் பொதுஅறிவுக் கல்வியே அதிகம் கற்பிக்கப்பட்டது; குறியொன்றும் இல்லாமல், எல்லார்க்கும் எல்லா நிலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இறுதிவரை காட்டும் கல்விதான் கற்பிக்கப்பட்டது. ஒரு துறைக் கல்வியைக் கற்கும் மாணாக்கர்கள் வளரவில்லை. இருப்பினும், மக்கள் அனைவரும் பொதுஅறிவினைப் பெற்றுப் பெற்று ஒழிவதால், நாடு வினைச் சிறப்பும் விளைவுப் பெருக்கும் உறாது. இந்தியப் நாட்டின் கீழ்மைக்கும் இதுவே காரணமாக அமைந்துள்ளது. சில ஆண்டுகள் பொதுஅறிவு பெற்றாலும் பல ஆண்டுகள் துறையறிவு வழங்க வேண்டும். வழங்கும் தொழில் கூடங்களும் பெருக வேண்டும் என்று எடுத்துரைக்கிறார்.

    மொழிக்கல்வி ஒரு காலத்தில் முறையாக கற்பிக்கப்பட்டதா என்றால் இல்லை. ஆசிரியர் மாணவரிடையே தொடர் ஒப்புவித்தலாகவே இருந்து வந்துள்ளது. குறள் ஒப்புவித்தல் மற்றும் உரைகள் எழுதும்போதும், குறள் குறளாக ஒப்பித்துச் சேறல் வள்ளுவக் கொலையாகும் என்று பிறிதொருவன் அஞ்சி நடுங்குவதும், யாரொருவர் மனத்தையும் புண்ணாக்காமல் அனைத்தும் என்நோக்கம் என்ற குறள் ஆணைப்படி பிறர்க்கு உரைக்கின்றனரோ அவரே உரை செய்ய வேண்டும். அவனே மொழியின் மீது நோக்கம் உடையவன் என்கிறார்.

    அதே நேரத்தில் மாணாக்கர்களின் நிலையும் ஆசிரியர் வாயிலாக தினமும் பாடம் கேட்கும் முறையே உருவாகியுள்ளது. அதற்குத் தகுந்தாற் போன்றே கல்வித் திட்டமும் நீளமாக அமைக்கப்பட்டுள்ளது அதன் தன்மை மாறவேண்டும். மாணாக்கர்கள் தேர்வு பித்தினால் ஆளுவதால் அறிவுத் தெய்வம் பெருகுகிறது. தேர்வுப் பூதம் காணீர்! நடைமுறை நோக்குழி, மாணக்கரைத் தேர்வுக்குரியோர் என்றும், ஆசிரியரைத் தேர்வு செய்வோர் என்றும் கல்வி வகுப்பாரை தேர்வு வகுப்பார் என்றும், கல்விக் களங்களைத் தேர்வுக் களங்கள் என்றும், கலைமகளைத் தேர்வு மகள் என்றும் அழைக்கும் மரபு இன்றைக்கு மக்களிடத்தில் பெருக்கெடுத்து வந்துள்ளது. மாணாக்கர்கள் மனத்தில் தேர்வு மூச்சுதான் கல்வி மூச்சாக ஓடுகிறது. இதனால் மாணாக்கர்களின் சிந்தனைகள் மழுங்கடிக்கப்படுகின்றன. மாணாக்கர்களும் மணனம் என்னும் தன்முனைப்பில் தனது இன்ப துன்பங்கள் அனைத்தையும் தேர்வின் மீதே செலுத்துகின்றனர். அந்நிலைக்கு அரசும் ஆட்சியாளர்களும் கல்வித் திட்டத்தை தொழில் நோக்கில் செயல்படுத்தி வந்துள்ளனர்.

    முடிவுகள்

    தமிழகச் சூழலில் கல்வியானது அகத்திணைக் கல்வியாக தொடக்கம் கொண்ட தமிழ்க்கல்வி, தமிழ்நாடு, பின்னைய காலத்தில் அதுவே பாலியற்கல்வியாகவும் வளரவில்லை, அகக்கல்வியாகவும் தமிழகச் சூழலில் வளரவில்லை. அதன் மூலம் மறைக்கப்பட்டு மாணாக்கர்கள் மத்தியில் வெறும் அறிவுக் கல்வியாகவும், தேர்வுக்கல்வியாகவும் வளர்ந்து நிற்கிறது. இதில் மொழிக்கல்விக்கான தரமும் வெறும் தொடக்க கல்வி நிலையிலே செயல்படுத்தப்படுகிறது. அதுவும் முதல் நிலையில் இல்லாமல் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலையாக உள்ளது. மாணாக்கர்களும் ஆய்வாளர்களும் ஆங்கிலக் கல்வியின் மீது வேலை வாய்ப்புப்பெற வேண்டும் என்ற நோக்கில் அடுத்த கட்ட நிலைக்கு மாறத் தொடங்கியுள்ளனர். இதனால் மொழிக்கல்வியின் மோகம் மக்கள் மத்தியில் குறையத் தொடங்கியுள்ளது. தமிழகச் சூழலில் மூதறிஞர் கூறியதுபோன்று அகக்கல்விக்கும், மொழிக்கல்விக்கும் ஒருதுறை சார்ந்த கல்விக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். இதனால் மொழியில் மூலம் தொடர்ந்து நிலைநாட்டப்படும்.

    பார்வை நூல்கள்

    1. வ.சுப.மாணிக்கம் – தமிழ்க்காதல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு – டிசம்பர்-2012
    2. வ.சுப.மாணிக்கம் – கம்பர், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு – 1990.
    3. வ.சுப.மாணிக்கம் – மாணிக்கக் குறள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு – 1991.
    4. இ.பா.வேணுகோபால் – கல்வியியல் புதுமைகள். சாரதா பதிப்பகம், 2013, ஜீவா 4 -வது தளம், ஸ்ரீனிவாச காம்ப்ளெக்ஸ், மோகனூர் ரோடு, நாமக்கல் – 637001.

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
    ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
    கோயம்புத்தூர் – 641020.
    E-Mail: ramvini2009@gmail.com
    செல் , 9751104241

    Share
  • சேட்படுத்துதல் – துறைக்குறிப்புவழிப் பாடற்பொருண்மை

    -சா. மங்களேஸ்வரி

    தலைமக்களின் காதல் ஒழுக்கம் புறத்தார்க்குப் புலப்பட்டு அலராகுமென அஞ்சிய தோழி, தலைமகனைத் தலைவியிடமிருந்து சேய்மைப்படுத்துவாள். இந்நிகழ்வைச் சேட்படுத்துதல் என இலக்கண நூலார் குறிப்பிடுவர். இச்சேட்படுத்துதல் தலைவிமீது தலைவன் கொண்டுள்ள காதற்பிணைப்பையும், தலைவியின் காதல் ஆழத்தையும், தோழி அறிந்துகொள்ளும் வாய்ப்பாக அமையும். அந்நிலையில் தோழி தலைவனுக்குத் தன் தோழியின் அருமையை எடுத்துரைத்தும், பெருமையைச் சுட்டியும், பேதைமையுடையாள் என விளம்பியும் தலைவியின் இன்றியமையாமையைத் தலைவனுக்குப் புலப்படுத்துவாள். இந்நிகழ்வு, தலைவனின் காதலுறுதியை அறிந்து கொள்வதற்கும், தலைவியின்மேல் உள்ள காதலை அதிகப்படுத்தி, வரைவு முடுக்குவதற்காகவும் தோழி மேற்கொள்ளும் தந்திர உத்தி என்றே எண்ண இடமளிக்கிறது.

    இலக்கண – உரையாசிரியர்கள்வழி சேட்படுத்துதல்

    இச்சேட்படுத்துதலைத் தொல்காப்பியர்,

    “நீக்கலி னாகிய நிலைமையும் நோக்கி”1
    “இழந்து குறையுற்ற கிழவனைத் தோழி
    நிரம்ப நீக்கி நிறுத்தல் அன்றியும்”2 எனவும் கூறுவார் களவியல் நூற்பாவிற்கு(99) நச்சினார்க்கினியர் “தோழி இவ்விடத்துக் காவலார் கடியரெனக் கூறிச் சேட்பட நிறுத்தலிற் றனக்கு உண்டாகிய வருத்தத்தையும் பார்த்து”3 எனவுரை பகர்வார். பொருளியல் நூற்பாவிற்கு(233) இளம்பூரணர்; “இரந்து குறையுற்றி தலைமகனைத் தோழி நிரம்ப நீக்கி நிறுத்தலன்றி….”4 எனவுரை கூறுவர். தமிழ்நெறி விளக்க ஆசிரியர். பகற்குறியிலேயே. “சேட்ப நிறுத்தலுஞ்”5 நிகழும் என்கிறார்.

    துறைக்குறிப்பு வகைப்பாடு

    சேட்படுத்துதல் நிகழ்வில் ஏழு பாடல்கள் (நற் -45, 75, 80, 301, 377: ஐங்குறு -91: அகநா -58:) அமைந்துள்ளன. இப்பாடல்களின் துறைக்குறிப்புகளின் பொருண்மை கொண்டு ஆராயின், தொல்காப்பியர் குறிப்பிடும் பின்னிற்றலுக்கான எட்டுச் சூழல்களும், மற்ற இலக்கண நூல்கள் சேட்படுத்துதலின் சூழலுக்கான எட்டுச் சூழல்களுடன் பெரும்பான்மை ஒத்துக் காணப்படுகின்றன.  எனினும் நான்கு துறைகளிலே, சங்க இலக்கியப் பாடல்களின் பொருண்மைகள் அமைந்துள்ளன. அவ்வகையில் தோழி பெருமையிற் பெயர்த்தல் துறையில் “குறை வேண்டிய தலைமகனைச் சேட்படுத்தது”6 எனவும், தலைவி அருமை சாற்றல் துறையில் சேட்படுத்தப்பட்ட தலைவன் தன் ஆற்றாமையைத் தோழி கேட்குமாறு கூறும் துறைக்குறிப்பும்(நற்-75), தலைவன் அன்பு மிகுதியால் கொண்ட ஆற்றாமை கண்டு தோழி கூறும் நற் -301ஆம் பாடலின் துறைக்குறிப்பும் வகைப்படுத்தப்படுகிறது.

    பேதைமையூட்டல் துறைக்கு “…. தோழி இவள் இளையள், விளைவு இலள் எனச் சேட்படுத்தது”8 எனவும், தையல் மறுத்தல் துறையில் அகநா-58ஆம் பாடலின் துறைக்குறிப்பும், ஆற்றாமைப் பொருண்மை எல்லாப் பாடல்களிலும் புலப்படுகின்றன. எனினும் சேட்படுத்துதலுக்கான சூழலாக எங்கும் சுட்டப்படவில்லை. ஆயினும், ஆற்றாமைத் துறையில் தலைவனின் ஆற்றாமையைப் புலப்படுத்தும் நற்-80ஆம் பாடலின் துறைக்குறிப்பும், தலைவியின் ஆற்றாமையைத் தலைவன் புலப்படுத்தும் நற்-377ஆம் பாடலின் துறைக்குறிப்பும் அமைவதை வகைப்படுத்தமுடிகிறது.

    சேட்படுத்துதலில் தோழி

    சேட்படுத்தல் பொருண்மையில் சங்க இலக்கியத்தில் தோழி கூற்றில் மூன்று பாடல்கள் காணப்படுகின்றன. இப்பாடல்களில் நற்றிணை 301ஆம் பாடல் தோழி தன்னுள்ளே கூறிக் கொள்வதாக அமைந்துள்ளது. இப்பாடல்கள் துறைக்குறிப்புகளின் பொருண்மை கொண்டு ஆராயின்தலைமக்களிடையே குலவேறுபாடுகள் இருந்தாலும் அவர்கள் இணைய வேண்டுமென எண்ணுதல், தலைவியின் இளமைத் தன்மை மாறாதவள் ஆதலால், நின்னுணர்வை உணராள் என்றுரைத்தல், தலைவனின் காதலையும், தாயின் பேரன்பையும் ஒருங்கே பெற்ற தலைவியின் காதல் நிலையில் தோழி தடுமாறுதல், என்பன பின்னணிச் சூழல்களாக அமைகின்றன. இதனைக் கருத்தில் கொண்டே துறையாசிரியர்கள் துறைக்குறிப்பை வரைந்திருப்பர். இதனடிப்படையில் ‘பெருமையிற் பெயர்த்தல் (குலமுறைகூறி மறுத்தல்) (நற்-45), பேதைமையூட்டல் (ஐங்குறு -91), தலைவியின் அருமை உள்ளல் (நற் -301)’ போன்ற துறைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    பெருமையிற் பெயர்த்தல் (குலமுறை கூறி மறுத்தல்)

    தலைமக்களின் காதலை உணர்ந்த தோழி, அவர்களின் காதலின் புரிதல் தன்மையைப் புலப்படுத்துவதற்காகச் சிறிது காலம் சேய்மைப்படுத்துவாள். இச்சேய்மைப்படுத்துதலுக்கான காரணங்களில் ஒன்றாகப் ‘பெருமைதனை எடுத்து மொழிதலை’ மேற்கொள்வாள். இப்பெருமையிற் பெயர்த்தல் தலைவியின் பெருமைதனைத் தலைவனுக்கும், தலைவனின் பெருமைதனைத் தலைவனுக்கும் உணர்த்தி, அதனால் நினக்கு ஒப்பானவள் எம் தலைவி அல்லள் எனத் தோழி மொழிவது இத்துறையாகும். இத்துறையில், தலைவனின் பெருமையைப் புலப்படுத்துவதாக ஒரு பாடல்(நற் -45) அமைந்துள்ளது.

    மீனெற் பரதவர் மகள்

    இத்துறையிலமைந்த ‘குறை வேண்டிய தலைமகனைச் சேட்படுத்தியது’ என்னும் துறைக்குறிப்பிற்கு ‘இவளே கானல் கண்ணிய காமர் சிறுகுடி’  எனத் தொடங்கும் நற் -45ஆம் பாடல் அமைகிறது. இப்பாடல், ‘எம் தலைவி பரதவ மகள்; நீயோ மன்னனின் மகன். நும்மால் உண்டாகும் பெருமைக்கு யாங்கள் தகுதியுடையேம் அல்லேம். ஆதலின் நீவிர் செல்வீராக’ எனத் தோழி தலைமகனைச் சேட்படுத்தும் பொருண்மையில் அமைந்துள்ளது.

    ‘மீனெறி பரதவர் மகளே நீயே
    நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
    கடுந்தேர்ச் செல்வர் காதல் மகனே’ (நற் -45:3-5)

    ‘பெருநீர் விளையுள் எம்சிறுநல் வாழ்க்கை
    நும்மொடு புரைவதோ அன்றே
    எம்ம னோரின் செம்மலு முடைத்தே’  (நற் -45:9-11)

    என்ற செய்யுளடிகள், தலைவனின் பெருமையினைச் சுட்டுவதாக அமைந்திடினும், இகழ்ச்சிக்குறிப்பாக, தலைவன் சிறிது காலம் தலைவியை மறந்திருந்ததால் உண்டான தோழியின் சினமொழிகளாக அமைந்துள்ளதை அறியமுடிகிறது. இதனை “அவன் தன்னை அரியனாகச் செய்துகொண்டு இவர்களைச் சின்னாள் மறந்திருத்தலானே அவனை இகழ்ச்சிக் குறிப்பாற் தலைவனாகக் கூறினாளெனவுமாம்”9 என விளக்குவர் பொ.வே.சோமசுந்தரனார். இவர் இப்பாடலின் 3,4 அடிகளில்,

    “மீனெறி பரதவர் காதல் மகளே
    நீயே, நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்”10

    எனவும் துறைக்குறிப்பில் “குறைவேண்டி நின்ற தலைவனைத் தோழி சேட்பட உரைத்தது”11 எனவும் சிறு மாற்றங்கள் செய்திடினும், பாடலின் பொருண்மையும், துறைக்குறிப்பின் பொருண்மையும் சேட்படுத்துதல் துறைக்குள்ளே அமைந்துள்ளதை அறியமுடிகிறது.

    தலைவியின் அருமை உள்ளல்

    களவொழுக்கத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்ட தலைவனிடம் தோழி ‘தலைவி காண்பதற்கு அரியள். மிக்கோளினும் மிக்கோள். ஆதலின் காண்பதரிது’ எனக் கூறி அவனைச் சேட்படுத்துதல் ‘அருமை சாற்றல்’ துறையாகக் கொள்வர் இலக்கணிகள். மாறாக, சேட்படுத்தும் பொருண்மையிலமைந்த இப்பாடலில் (நற் -301) தலைமகனைச் சேட்படுத்தியப் பின் தோழி, ‘இளமைப் பருவத்தள், குறிஞ்சி மேனியள், குவளைக் கருங்கண்ணள், அழகுமயில் சாயலள், கிளி பேச்சினள்,……. எனப் பலவாறாகத் தம் மகளின் அழகினைப் பாராட்டி மகிழ்கிறாள் அவள் தாய். யான் அத்தலைவியின் மகிழ்விற்காகத் தலைவனுடன் கூட்டுவிப்பதை அறிந்தாள் அத்தாய் என்னாவாளோ?’ எனக் கவன்றுரைப்பதால் இத்துறைக்குத் ‘தலைவியின் அருமை உள்ளல்’ என்னும் துறையாக வருவிக்கப்பட்டுள்ளது.

    இத்துறையிலமைந்த ‘சேட்படுத்து, ‘பிரிவின்கண் அன்பின் இயற்கையில் தகுவகையதோர் ஆற்றாமையினான்’ என்று தோழி தன்னுள்ளே சொல்லியது.’ என்னும் துறைக்குறிப்பிற்கு ‘நீன்மலைக் கலித்த கருங்கோற் குறிஞ்சி நாண்மலர் புரையும் மேனி’   எனத் தொடங்கும் நற் -301ஆம் பாடல் அமைகிறது. இப்பாடல் ‘தலைவியின் இளமை, அழகு, சாயல், மொழியினைத் தலைவன் தன் காதற் பெருக்காற் பாராட்டினான். அதே காதலை யாயும், யானும் அவளிடம் கொண்டுள்ளோம். யான் தலைவனுடன் கூட்டுவிப்பது அறிந்தால் தாய் என்னாவாளோ?’ எனத் தோழி தன்னுள் கவன்றுரைப்பதாக, ஔவை.சு. துரைச்சாமிப்பிள்ளையின் பாடலடிக்கேற்ப பொருண்மை உரைத்திருப்பர். மாறாக, ஏனை உரையாசிரியர்கள் தலைவியைத் தாய் பாராட்டுவதாக உரைத்திருப்பர் உரையாசிரியர்கள், பதிப்புக்களின் பாடலடிகள், உரைகள் வேறுபடினும், தோழியின் கவன்றுரைத்தல் பொதுவாக அமைந்துள்ளன.

    இப்பாடலின் துறைக்குறிப்பிலும் ஔவை.சு.துரைச்சாமிப்பிள்ளை “இஃது, அன்பின் இயல்பினால் தகுவதோர் ஆற்றாமையினான் என்று தோழி தன்னுள்ளே யாய் மறப்பருமை சொல்லிச் சேட்படுத்தது” எனப் பாடலடிக்கேற்ப மாற்றியமைத்திருப்பர். எவ்வாறாயினும் இப்பாடல், துறைக்குறிப்புகளின் பொருண்மை ‘தலைவியின் அருமை உள்ளல்’ துறையில் அமைந்துள்ளது.

    தொகுப்புரை

    தலைவனின் காதலுறுதியை அறிவதற்காகவும், தலைவியை அலரிலிருந்து காப்பதற்காகவும் தோழி, தலைவனைச் சில காலம் சேய்மைப்படுத்தும் நிகழ்வு சேட்படுத்துதலாகும். இந்தத்துறையில் ஏழு பாடல்கள் அமைந்திடினும் தோழி கூற்றாக மூன்று பாடல்கள் அமைகின்றன. இச்சேட்படுத்துதல் குறித்து தொல்காப்பிய நூற்பாவழியும், நச்சினார்க்கினியர், இளம்பூரணர் ஆகியோரின் உரைவழியும், பின்னிற்றல், பகல் – இரவுக் குறிக் காலங்களிலும், அலர் தோன்றும் காலங்களிலும் நிகழும் என்பது எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

    பெருமையிற் பெயர்த்தல் (குலமுறை கூறி மறுத்தல்) துறையில் ‘எம் தலைவி பரதவ மகள். நீயோ மன்னனின் மகன். நும்மால் உண்டாகும் பெருமைக்கு யாங்கள் தகுதியுடையேம் அல்லேம். ஆதலின் நீவிர் செல்வீராக’ எனத் தோழி தலைமகனைச் சேட்படுத்தும் நற் -45ஆம் பாடலின் பொருண்மை துறைக்குறிப்பினொடும், துறையினுள்ளும் அமைந்துள்ளது நோக்கப்பட்டுள்ளது. நற் -301ஆம் பாடலில் தலைவனின் அன்பிற்கு நிகரான தாயின் அன்பு எண்ணித் தோழி மருளும் பொருண்மை கொண்ட பாடலுக்கு ஔவை.சு. துரைச்சாமிப்பிள்ளை குறிப்பிடும் துறைக்குறிப்பு பாடலின் பொருண்மைக்கேற்ப அமைந்துள்ளது என எடுத்தியம்பப்பட்டுள்ளது.

    சான்றெண் விளக்கம்

    1. தொல்காப்பியர், தொல்.பொருள்., 99:19
    2. தொல்காப்பியர், தொல்.பொருள்., 233:1-2
    3. நச்சினார்க்கினியர், தொல்.பொருள்., 403
    4. இளம்பூரணர், தொல்.பொருள்., 350
    5. உ.வே. சாமிநாதையர்(பதி.ஆசி), தமிழ்நெறி விளக்கம், 17:3
    6. அ. நாராயணசாமி, பொ.வே.சோமசுந்தரனார், நற்றிணை நானூறு பா.எ -45
    7. சேட்படுத்துதல்: மூன்று பாடல்கள் (நற் -45, 301: ஐங்குறு -91:)
    8. பொ.வே.சோமசுந்தரனார், ஐங்குறுநூறு பா.எ -91
    9. பொ.வே.சோமசுந்தரனார், நற்றிணை நானூறு, ப -81

    *****

    கட்டுரையாசிரியர் – முனைவர்பட்ட ஆய்வாளர்
    தமிழ்த்துறை
    அழகப்பா பல்கலைக்கழகம்
    காரைக்குடி.

    நெறிப்படுத்துநர் – முனைவர் சு. இராசாராம்
    பேராசிரியர், தமிழ்த்துறை
    அழகப்பா பல்கலைக்கழகம்
    காரைக்குடி.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (283)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள். சில வார இடைவெளியின் பின்னால் மீண்டும் உங்களுடன் மடல் மூலம் உறவாட விழைகின்றேன். சிறிய விதையாக மண்ணில் விழும் விதை சீறிய செடியாக, பெரும் செடியாக , மரமாக பல கிளைகளுடன் வளர்ந்து விடுகிறது. அம்மரக்கிளைகளில் இருக்கும் இலையொன்று தான் உருவாகக் காரணமாக இருந்த வேர்களைத் தேடி ஒரு பயணம் மேற்கொண்டால் எப்படி இருக்கும்? அது போன்றதொரு அனுபவத்துடன் கூடிய ஒரு பயணத்தை நான் மேற்கொண்டதே எமது சில வார இடைவெளிக்குக் காரணம்.

    ஆமாம் நான் பிறந்து தவழ்ந்து தமிழ் கற்ற என் தாய்மண்ணின் மீது கால் பதித்த ஒரு பயணம். 1975ம் ஆண்டு ஜனவரி மாதம் என் தாய்மண்ணை விட்டுப் புலம் பெயர்ந்தேன். அதன் பின்னால் 1978ம் ஆண்டு எனது மூத்த சகோதரனின் திருமணத்திற்காக யாழ் மண்ணை மிதித்தேன். அதன் பின்னால் சுமார் 35 வருடங்களின் பின்னால் 2013ம் ஆண்டு யாழ் மண்ணை மீண்டும் மிதித்தேன். அந்த இடைப்பட்ட காலத்தில் இலண்டனில் மாணவனாக இருந்த நான் கணவனாகித் தந்தையாகி வாழ்வின் பல பருவங்களைக் கடந்திருந்தேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த என் மனைவிக்கு அதுவே முதன் முதலாக “யாழ்ப்பாணம்” எனும் என் தாய்மண்ணின் அறிமுகம் கிட்டியது.

    அதன் பின்னால் ஜந்து வருடங்கள் கழித்து மீண்டும் கடந்த 5ம் திகதி ஈழத்தை நோக்கிப் பயணமானேன். உள்ளத்தில் உரசிய உணர்வுகள் ஆயிரம். ஜந்து வருடங்களுக்கு முன்னால் தொட்டுத் தொட்டுப் பார்த்து வந்த தாய்மண்ணை மீண்டும் கொஞ்சம் உற்றுப்பார்க்க ஒரு சந்தர்ப்பம். சரியாக நாற்பது வருடங்கள் கழித்து யாழ் நல்லூர்க் கந்தனின் சப்பரம், தேர், தீர்த்தம், பூங்காவனம் எனும் நிகழ்வுகளைப் பார்க்கப் போகிறோம் எனும் ஆவல் முந்திக் கொண்டது. 1978ம் ஆண்டின் பின்னால் என் பிறந்த நாளை என் தாய்மண்ணில் கழிக்கப் போகிறோம் எனும் எண்ணமும் தலை தூக்கியது. அது மட்டுமல்ல வாழ்வில் முதல் முறையாக எமது திருமணநாளை அதாவது எமது முப்பத்தி ஏழாவது மணநாளை எனது தாய்மண்ணில் கழிக்கக் கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பம். உள்ளம் குறுகுறுப்பால் துள்ளியது.

    6ம் திகதி அதிகாலை கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தை அதிகாலை 4.30 மணியளவில் வந்தடைந்தோம். விமானநிலையத்திலிருந்து நேராகவே யாழ்நகருக்குச் செல்வதற்காக அதற்குரிய பேருந்தில் இருக்கையை ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். சுமார் காலை ஆறு மணியிலிருந்து முன்பகல் 9.30 வரை விமானநிலையத்திலேயே நேரத்தைக் கழிக்க வேண்டியிருந்தது. காலைச் சிற்றுண்டியை விமான நிலையத்திலேயே முடித்துக் கொண்டோம். 9.30 மணியளவில் விமான நிலையத்துக்குள் வந்த யாழ்நகருக்கான பேருந்து எம்மையும், மற்றும் சில பயணிகளையும் ஏற்றிக் கொண்டு சென்றது. அந்தப் பேருந்தின் பயண இருக்கைகள் வசதியானவையாகவே இருந்தன. சுமார் 8 மணி நேரப் பேருந்துப் பிரயாணம். உடம்பு ஓய்வுக்காகக் கெஞ்சியது. பத்து மணிக்கு மேலான விமானப் பிரயாணம் அதைத் தொடர்ந்து 8 மணிநேரம் பேருந்தில்,  அப்போதுதான் வயது 60க்கு மேல் ஆகிவிட்டது என்பதை உடம்பு எடுத்துச் சொல்லியது.

    யாழ்நகரில் இறங்கி நாம் ஏற்கனவே பதிவு செய்திருந்த விடுதிக்குச் சென்று ஓய்வெடுத்தோம். அடுத்தநாள் 7 திகதி நல்லூர்ச் சப்பரத் திருவிழா. சுமார் ஜந்து மணியளவில் கிளம்பி கந்தனின் ஆலயத்தை நோக்கி நடந்தோம். அப்போது நான் எனது பதின்ம வயதுகளில் சைக்கிளில் பவனி வந்த பழைய ஞாபகங்கள் என் நெஞ்சை நெருடிச் சென்றன. அழகாக முருகன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்திலே பவனி வரும் காட்சியைக் காண அலைபோல திரண்டு வந்த மக்கள் கூட்டம். இங்கிலாந்திலிருந்து எமக்கு அறிமுகமான பலரையும் சந்தித்தோம். அடுத்தநாள் காலை தேர்த்திருவிழா மக்களலை எம்மை அமிழ்த்தித் திக்குமுக்காட வைத்தது. பின்பு தீர்த்தத் திருவிழா அதைத்தொடர்ந்து பூங்காவனம் என அனைத்தையும் அடுத்து வந்த நாட்களில் ரசித்தோம்.

    எனது அம்மாவின் பக்க உறவினர்கள் பலரையும் நான் நன்கறிவேன் ஆனால் தந்தையின் பக்கத்தைத்தான் அதிகமாக அறிந்திருக்கவில்லை. தெரிந்த சிலரின் உதவியோடு வட்டுக்கோட்டை (தந்தையின் தந்தையின் பூர்வீக இடம்), சுதுமலை (தந்தையின் தாயரின் பூர்வீக இடம்) எனும் இடங்களை நோக்கி எனது வேர்களைத் தேடிய பயணத்தில் பலரைச் சந்திக்க முடிந்தது எனது பாக்கியம் என்றே கொள்ள வேண்டும். நான் சந்தித்த பலரும் நான் அவர்களைத் தேடி வந்து சந்தித்ததை ஓர் பெரிய விடயமாக ஆனந்தப்பட்டார்கள்.

    அதைத்தொடர்ந்து நான் படித்த ஆரம்பப் பாடசாலை “மங்கையர்க்கரசி மகாவித்தியாலயம்” மற்றைய கல்லூரிகளான “சென் ஜோன்ஸ்” , “ யாழ் மத்திய கல்லூரி” என அனைத்தையும் சென்று பார்த்து அதிபர்களுடன் கலந்துரையாடியது நெஞ்சை நிறைத்தது. நான் வாழ்ந்த சுற்றுப்புறம், எனது அயல் என பலவற்றையும் பார்த்து மகிழ்ந்தது ஒருபுறம் அவை நான் விட்டுச் சென்ற நிலையிலிருந்து முற்றும் மாறுதலடைந்து இருப்பதைக் கண்டு ஏக்கம் கொண்டது மறுபுறம் என இதயம் கலவையான உணர்வுகளோடு உரசியது.

    சுமார் ஒன்பது நாட்கள் யாழ்நகரில் தங்கியிருந்து விட்டு ஒரு தனியார் வாகனத்தை அமர்த்திக் கொழும்பு வந்து சேர்ந்தோம். கொழும்பிலே இருந்த சில உறவுகளையும், நட்புகளையும் சந்தித்து விட்டு இரண்டு நாட்கள் கொழும்பில் தங்கி விட்டு திரும்ப லண்டன் வந்து சேர்ந்து அன்றாட அலுவல்களில் மீண்டும் எம்மைப் புகுத்திக் கொண்டோம்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share