Featuredஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்கட்டுரைகள்

அகநானூற்றில் ஐந்திணை நீர் மேலாண்மை

-பீ.பெரியசாமி

முன்னுரை

அகநானூற்றில் ஐந்திணை மக்கள் வாழ்வியல் குறித்த செய்திகள் பல இடம்பெற்றுள்ளன. அவற்றுள் இன்றைய தேவையான நீர்மேலாண்மை குறித்த செய்திகள் என்னென்னவெல்லாம் இடம்பெற்றுள்ளன என்பதனை இக்கட்டுரையில் காண்போம்.

குறிஞ்சி நிலப் பாடல்களில் நீர் மேலாண்மை

கடல்நீரை முகந்து மேகங்கள் நெய்தல் நிலத்தில் அழகுடன் காணப்பட்டாலும் முதலில் மழைப்பொழிவைத் தொடங்குவது குறிஞ்சி நிலத்திலேதான். இதனை,

கார்கதம்பட்ட கண்அகன் விசும்பின்
விடுபொறி ஞெகிழியின் கொடிபட மின்னி
படுமழை பொழிந்த பானாட் கங்குல்(அகம்.108)

எனும் அகப்பாடல், அகன்ற ஆகாயத்தில் சினந்து எழும் மேகங்கள் பொறிவிடுகின்ற கொள்ளிக்கட்டை போல வரிசையாக மின்னி நள்ளிரவில் மிக்க மழையைப் பொழிந்தது என்று குறிப்பிடுகின்றது.மலைகளின் மீது இயற்கையாக அமைந்திருக்கும் நீர்நிலை சுனையாகும். இது வளமையான பாறைகளின்மேல் அமைந்திருந்ததாக,

மல்லல் அறைய மலிர்சுனை……”(அகம்.308)

எனும் அகப்பாடல் குறிப்பிடுகிறது. மேலும், வளமையான பாறையில் அமைந்துள்ள தெளிந்த பெருகிய நீரினை உடைய சுனை என்பதனால் சுனை பாறையின் மீதமைந்துள்ளது புலப்படுகின்றது.  சுனைகள் பறையின் கண் போன்று இருந்ததாக அகநானூற்றுப் புலவர்கள் கூறியுள்ளனர்.

“பாறைக் கண் அன்ன நிறைச்சுனை பருகி”(அகம்.178)

என்ற அகப்பாடல்கள் சுனையின் வடிவு பாறையின் கண்ணையொத்ததாக இருந்ததைக் குறிப்பிடுகின்றன.

பாறை நெடுஞ்சுனை” (அகம்.2)

என்ற அகப்பாடலடிகள் நீர் நிரம்பிய நீண்ட சுனைகள் இருந்ததாகவும், அவை பாறைகளின் இடையே இருந்ததாகவும் குறிப்பிடுகின்றது. அதேபோல் குறுகிய சுனைகள் இருந்ததாகவும் பாடல்களில் காண முடிகின்றது.

பாடுஇன் அருவிப் பனி நீர்இன் இசை(அகம்.82)

அருவிகள் விழும் ஓசை இனிய இசையினைப் போன்றுள்ளதென புலவர் கூறியுள்ளார்.

சிறுகோட்டுப் பெருங்குளம் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயில்மறந் தனளே”(அகம்.252)

என்ற நக்கண்ணையார்  பாடல் தலைவியின் காதலை அறிந்த தாய்  சிறிய கரையினையுடைய பெரிய குளத்தைக் காவல் செய்பவன் அதன் கரை உடைந்து போகாதபடி இரவெல்லாம் துயிலாது அதனைக் காப்பான் அதுபோல தன்னைக் காத்து நிற்பதாகத் தலைவி கூறும் உவமை வழி குளத்தைப் பாதுகாக்க பாதுகாவலர்கள் இருந்தது தெரியவருகின்றது. குளக்கரைகளைக் கட்டுமானங்களையே கவனத்தோடு கட்டிய மக்கள் அதையும் மீறி அணைகளில் உடைப்பு ஏற்பட்டு விடாமல் இருக்க பாதுகாவலர்களை நியமித்தது அவர்களின் நீர்ப்பராமரிப்புத் திறத்தைப் புலப்படுத்துவதாக உள்ளது. 

முல்லை நிலப் பாடல்களில் நீர் மேலாண்மை

முல்லை நில பாறைகளின் நடுவே சுனைகள் இருந்ததனை,

பாறைக் கண் அன்ன நிறைச்சுனை தோறும்”(அகம்.324)

எனும் அகப்பாடல் கூறியுள்ளது. மேலும்,

பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி
தாழ் பெயற் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ” (அகம்.84)

எனும் அகப்பாடல் மேகங்கள் வலமாகச் சுழன்று எழுந்தால் மழைப்பொழிவு நிகழுமெனக் குறிப்பிடுகின்றது. மேலும், மேகங்கள் எந்ததிசையில் தோன்றினாலும் கிழக்கு நோக்கி நகர்ந்தால் மழை தவறாது பொழியும் என்று கூறியுள்ளனர். 

புன் காழ் நெல்லிப் பைங் காய் தின்றவர்
நீர்குடி சுவையின் தீவிய மிழற்றி
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுன்நுரை”(அகம்.54) சிறிய இலைகளையும், புல்லிய விதைகளையுமுடைய நெல்லிக்காயினை உண்டுவிட்டு நீர் குடித்தால் சுவையாயிருக்கும் என்பதை அக்கால மக்கள் அறிந்துள்ளனர். பாலை வழிச் செல்லும் வழிப்போக்கரின் உயிரைப் போகடிக்காது தடுத்து நிறுத்தும் சுவைமிக்க காய்களைக் கொண்டது நெல்லி மரம் என்று மேற்கண்ட அகப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன. உணவு உண்டவுடன் தோன்றும் நீர் தாகத்தைத் தணிக்க கள் உண்டுள்ளனர். 

மருத நில பாடல்களில் நீர் மேலாண்மை

மருதநிலத்தில் மீன்களும், மலர்களும் நிறைந்த நீர்நிலையினை,

துணிநீர் இலஞ்சி கொண்ட பெரு மீன்(அகம்.236)

எனும் அகப்பாடலில் முதுநீர் இலஞ்சி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 

நெடுநீர்ப்பொய்கை ……. ……….”(அகம்.246)

நீள்இரும் பொய்கை ……. …… .”(அகம்.276)

எனப் பொய்கை ஆழமானதாகவும், நீண்ட பெரிய நீர்நிலையாக இருந்ததையும் மேற்கண்ட அகப்பாடல்கள் சுட்டுகின்றன.

மருதநிலப் பெண்கள் நீர்நிலைகளிலிருந்து நீர்  எடுத்துவர அழகிய வேலைப்பாடமைந்த குடங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

தெண்கட் தேறல் மாந்தி மகளிர்
நுண்செயல் அம்குடம் இரிஇ”(அகம்.336)

பாவைக் கொட்டிலார் என்ற அகநானூற்றுப் புலவர் நுண்ணிய வேலைப்பாடமைந்த குடங்களில் நீர் எடுக்க மருத நிலப் பெண்கள் நீர்த்துறைக்கு வந்ததாகக் குறிப்பிடுகின்றார். எனவே தண்ணீர் எடுத்து வரத் தாழி, குடம் போன்ற பொருள்களைப் பயன்படுத்தியிருப்பதையறிய முடிகின்றது. 

நெய்தல் நிலப் பாடல்களில் நீர் மேலாண்மை

நெய்தல் நிலக் குளிர்ச்சியுடைய குளத்தில் குவளை மலர்கள் பூத்து நிறைந்து காணப்பட்டதை,

தண் கயத்து அமன்ற ஒண்பூங் குவளை”(அகம்.180) எனும் அகப்பாடலில் காணலாம்.

பாலை நிலப் பாடல்களில் நீர் மேலாண்மை

பாலை நிலத்தில் கோடை காலத்தில் சுனை நீர் வற்றி இருந்தது  ‘வறுஞ்சுனை’ என்றழைக்கப்பட்டுள்ளது. இதனை,

நிலம் நீர் அற்று நீள்சுனை வறப்ப
குன்று கோடு அகைய கடுங்கதிர் தெறுதலின்(அகம்.295) 

”……………………….. வறுஞ் சுனை
மை தோய் சிமைய மலைமுதல் ஆறே(அகம்.119)

வறட்சி காலங்களில் நீரின்றி உட்பகுதி வற்ண்டு காணப்பட்டுள்ளது. இதனை மேற்கண்ட அகப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

மலையின் மீதிருந்து கொட்டும் நீர்வீழ்ச்சியே அருவியாகும். மழை பெய்தால்தான் அருவிகள் விழும். மழைக்காலங்களில் மட்டுமே காணவியலும் அழகிய இயற்கை காட்சியது இதனை, 

கழைநரல் வியல்அகம் வெம்ப மழைமறந்து
அருவி ஆன்ற வெருவரு நனந்தலை(அகம்.241) என்ற அகநானூற்றுப் பாடல் விளக்குகிறது. மழை பொழியாததால் அருவிகள் இல்லாமல் போயின என்று குறிப்பிடுகின்றது. எனவே அருவி தோன்றுவதற்கு முக்கிய ஆதாரம் மழையே ஆகும்.

ஆயர்கள் கூவல் தோண்டும் முறைமையினை அறிந்ததோடு அதிலிருந்து நீர் எடுக்கும் தொழில்நுட்ப முறையினையும் நன்கறிந்தவர்களாக இருந்துள்ளனர். கூவலிலுள்ள நீர் உவர்ப்புத்தன்மை உடையதாக இருந்துள்ளது. இதனை, 

பிணர்அழி பெருங்கை புரண்ட கூவல்
தெண்கன் உவர் குறைகுட முகவை
அறனிலாளன் தோண்ட வெய்து உயிர்த்து
பிறைநுதல் வியர்ப்ப உண்டனள் கொல்லோ ?”(அகம்.207)

பாலை நிலத்தின்வழி உடன்போக்குச் சென்ற தலைவன் தாகத்தால் வருந்திய தலைவியின் தாகத்தைத் தணிக்கக் கூவலை மேலும் சிறிது தோண்டுகிறான். அப்போது உவர்நீர்  ஊறுகிறது. தலைவி அந்நீரை குடிக்கிறாள். எனவே பாலையில் உவர் நிலத்தில் அமைக்கப்படுவது ‘கூவல்’ என்பது புலனாகிறது. அவ் உவர் நிலத்திலுள்ள நீரும் உவர்ப்புத் தன்மையுடையதாதலால் கூவல் “உவர் நீரையுடைய நீர்நிலை” என்பது புலனாகிறது. வன்புல நிலத்தைத் தோண்டி செய்யப்பட்ட கூவலில் ஆநிரைகள் நீர் அருந்தச் செல்லும் . இதனை, 

வன்புலம் துமியப் போகி கொங்கர்
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்(அகம்.295) என அகநானூற்றுப் பாடல் கூறியுள்ளது. இதன்வழிப் பாறை நிலத்தையுடைத்துச் செய்யப்பட்டதே கூவல் என்பது புலனாகிறது.

கோவலர்கள் தான் கூவலை முதன்முதலில் தோண்டியிருக்க வேண்டும். ஏனெனில் கோவலர்கள் ஆடுமாடுகளை மேய்ச்சலுக்காக நெடுந்தூரத்திற்கு ஓட்டிச் செல்லும் போது அவைகள் தாகத்தால் வருந்தமுறும். அதனால் அவைகளின் தாகத்தைத் தணிக்க அவர்களால் அமைக்கப்பட்டதே இந்தக் கூவலாக இருக்கும். கோவலர்கள் ‘கூவல்’ தோண்டுவதற்கு முதன் முதலில் பயன்படுத்தியது அவர்கள் கையிலிருந்த கோலையே ஆகும். இதனை,

“…………. ………….. …………. கோடை முகத்தலின்
நீர்க்குஇயங்கு இனநிரைப் பின்றை வார்கோல்(அகம்.225) 

நீர் பருகுவதற்குச் செல்லும் பசுக் கூட்டத்திற்குப் பின்னே நீண்ட கோலுடைய ஆயர்கள் வந்தனர் என்று இப்பாடல் கூறுகின்றது. 

கடற்றுஅடை மருங்கின் கணிச்சியின் குழித்த
உடைக்கண் நீடுஅமை ஊறல் உண்ட
பாடுஇன் தென்மணி பயம்கெழு பெருநிரை(அகம்.399)

நிறையப் பசுக்கூட்டங்களையுடைய கோவலர்கள் அவற்றின் தாகங்களைப் போக்குவதற்காக மலங்காட்டினைச் சார்ந்த பகுதியில் குந்தாலி என்ற கருவியால் குழி தோண்டினர். அதில் ஊறிய நீரைப்பருகிய இனிய ஓசையை உடைய மணிகளைக் கொண்ட பால் கொடுக்கும் பசுக்கள் என்பதன் வழி ஆநிரைகளுக்காக கோவலர்கள் நீர்க்குழிகள் அமைத்தனர் என்பதை அறியலாம். 

பயநிரை சேர்ந்த பாழ்நாட்டு ஆங்கண்
நெடுவிளிக் கோவலர் கூவல் தோண்டிய
கொடுவாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறுகுழி
நீர்காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது(அகம்.155)

ஆநிரைகள் நிறைந்த பாழ்பட்ட நாட்டின் பல இடங்களிலும் கோவலர்கள் தாம் தோண்டிய கூவலிலிருந்து வளைந்த வாயினை உடைய பத்தலால் நீர்  இறைத்துச் சிறுகுழியில் ஊற்றினர். பாலை நிலத்தின் வெப்பத்தினால் சிறுகுழியில் ஊற்றிய நீரானது காய்ந்து போனதாகக் கூறப்படுகின்றது. இதிலிருந்து கூவலிலிருந்து நீரை எடுத்துச் சிறுகுழியில் ஊற்றப் ‘பத்தல்’ என்ற கலனைப் பயன்படுத்தியதாக அறியமுடிகின்றது. மேலும், பத்தல் என்பது மரத்தாலான நீர் இறைக்கும் கருவி ஆகும்.

பாலை நிலத்தில் அழுகல்நீர்தான் இருக்கும். அந்நீர் இனிய தன்மையையும், மனநிறைவையும் தராது. அவ்வாரிருக்கும் நீரின் அழுகியவாடையும், உவர்ப்பும் தெரியாமலிருக்க பாலை வழியாகச் செல்வோர் நெல்லிக்காய் உண்டபின் அந்நீரை அருந்தியுள்ளனர்.

நெடுஞ்சேண் வந்த நீர்நசை வம்பலர்
செல்உயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லிப்
பல்காய் அம்சினை அகவும் அத்தம்(அகம்.271) 

விளர்ஊன் தின்ற வேட்கை நீங்க
துகள்அற விளைந்த தோப்பி பருகி(அகம்.265)

எருதின் ஊனை உண்ட ஆறலை கள்வர்கள் ஆதனால் எழும் மிகுந்த நீர் தாகத்தைப் போக்கும் பொருட்டுத் தூயமுதிர்ந்த நெல்லினால் சமைத்த தோப்பிக் கள்ளினைக் குடித்தனர் என்ற அகநானூற்றுப் பாடல் வழி உணவு உண்டபின் நீர்  தாகத்தைப் போக்க ஆறலை கள்வர்கள் கள் குடித்தது புலனாகிறது. மேலும், பாலை நிலத்தில் வாழும் ஆறலைக் கள்வர்கள் தாகத்தால் வருந்தி மரப்பட்டையை உறிஞ்சித் தாகம் தணித்தனர். ஆயர்கள் தோண்டிய கூவல் வழிச் செல்வாரின் தாகத்தை  தணிக்கவும் பயன்பட்டது.

கல்லுடை அதர கனம் நீந்தி
கடல்நீர் உப்பின் கணம்சால் உமணர்
உயங்குபகடு உயிர்ப்ப அசைஇ முரம்பு இழத்து
அகல்இடம் குழித்த அகல்வாய்க் கூவல்
ஆறுசெல் வம்பலர் அசைவிட ஊறும் .(அகம்.295)

நெய்தல் நிலத்தைச் சார்ந்த உப்பு விற்கும் உமணர்  கூட்டம் பாலை நிலத்தைக் கடந்து சென்றது. உப்புச் சுமையினை இழுத்து வந்த எருதுகள் இளைப்பாறும் பொருட்டு ஓரிடத்தில் தங்குகின்றனர். அவ்விடத்தில் வலிய நிலத்தை இடித்துத் தோண்டின அகன்ற வாயினையுடைய கூவல் நன்கு நீர் ஊறி உமணர்கள் மற்றும் எருதுகளின் தாகத்தைத் தணிக்கக் கூடியதாக அமைந்தது. 

கயம்துகள் ஆகிய பயம்தபு கானம்”(அகம்.11)

என்று குளம் வறண்டு குளத்தின் அடிப்பகுதி துகள்களாகக் காணப்பட்டதை மேற்கண்ட பாடல் எடுத்துரைக்கிறது.

வேனில் நீடிய வான் உயர் வழிநாள்
வறுமை கூரிய மண்நீர்ச் சிறு குளத்
தொடு குழி மருங்கில் துவ்வாக் கலங்கல்(அகம்.121)

வெம்மையுடைய கோடை நிலைபெற்ற காரணத்தால் குளத்திலுள்ள நீர் வறண்டது. அதனால் குளிக்கும் சிறு குளத்தில் தோண்டப்பட்ட சிறுகுழியில் குடிப்பதற்குப் பயன்படாத கலங்கல் நீர் காணப்பட்டது. மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுக்கும் போது அந்நீரை குளங்களில் தேக்குகின்றனர். குளங்களில் தேக்கும் நீர் இதர பிற தேவைகளுக்கு பயன்பட்டாலும் கூட அடிப்பகுதியின் வழியாக நீர் கசிந்து தேக்கங்களிலுள்ள நீரின் ஒரு பகுதி நிலத்தடி நீராகிறது நீரற்று வறண்ட கோடைக்காலங்களில் அக்குளங்களில் சிறுகுழியமைத்து அதை மேலும் மேலும் தோண்டும் போது நிலத்தின் அடுத்தடுத்த அடுக்குகளில் தேங்கியிருக்கும் நிலத்தடி நீர் வெளிப்படுகின்றது. இம்முறை சங்ககாலம் தொட்டு இன்றளவும் நடைமுறையிலுள்ளது. 

கல்லறுத்து இயற்றிய வல்உவர்ப் படுவில்” (அகம்.79) என்ற அகநானூற்றுப்பாடல் கருங்கல்லைச் சமமான வடிவத்தில் அறுத்தெடுத்து குழியமைத்ததாகக் குறிப்பிடுகின்றது. இதன்வழி அருவி நீரினைத் தேக்கி வைக்கப் பாறையினை அறுத்தெடுத்து குழியாக்கி நீரினைக் குறிஞ்சி நில மக்களின் சேகரித்து வைத்துள்ளனர் என்பதனை அறிய இயலுகின்றது.

தாகத்தால் வருந்திய யானை யாமரப்பட்டைகளை உரித்துத் தாகம் தீர்த்துக் கொண்டதாக, 

மிசைமரம் சேர்த்திய கவைமுறி யாஅத்து
நூர் அரை மருங்கின் நீர்வரப் பொளித்து(அகம்.257) எனும் அகப்பாடல் கூறியுள்ளது. அதாவது, தாகத்தால் வருந்திய யானைகள் நீருக்காக அலைந்து திரிந்து நீரற்ற நிலையில் யாமரத்தின் பட்டைகளைச் சுவைத்து அதிலுள்ள நீரினை உண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

நீரற்று தாகத்தால் வருந்திய மான் கூட்டங்கள் சிறிய இலையினையும், பெருத்த அடியினையும் உடைய நெல்லிக்கனியினைத் தின்று தாகம் தணித்ததாக,

“………………………………. புல் இலைப்
பராரை நெல்லி அம் புளித் திரள் காய்
கான மட மரை கண நிரை கவரும்(அகம்.69) என்ற அகநானூற்றுப்பாடல் குறிப்பிடுகின்றது.

கேணிகள் மருதநிலத்தில் இருந்ததனை,

ஆறு செல் வம்பலர் சேறுகிளைத்து உண்ட
சிறுபல் கேணி ……………..” (அகம்.137)

எனும் அகப்பாடல் சிறிய பலவேறு வகையான கேணிகள் இருந்ததாகக் குறிப்பிடுகின்றது. மேலும் மக்கள் குடிநீர் எடுக்கின்ற உண்ணுநீர்த் துறையாகவும் ‘கேணி’ விளங்கியுள்ளது.

புனல்பொரு புதவின் உறந்தை எய்தினும்” (அகம்.237)

என்று ‘புதவு’ பற்றிய குறிப்புக்கள் சங்க அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது. புதவு என்பது “தண்ணீர் வெளியேறும் சிறியவழி” (தமிழகப் பாசன வரலாறு, ப.29) என்று தமிழகப்பாசன வரலாறு குறிப்பிடுகின்றது.

ஓங்குநிலைத் தாழி மல்கச் சார்த்தி
குடைஅடை நீரின் மடையினள் எடுத்த(அகம்.275)

வயலைச் செடிக்கு நீர் ஊற்றுவதற்கு நீர் நிலையிலிருந்து நீர் எடுத்துவர தாழியைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகின்றது. தாழி என்பது மண்ணாலாகி கலமாக இருக்கலாம். பனங்குடைகளில் தண்ணீர் எடுத்துக் கலத்தை நிரப்பி, பின்பு வீட்டிற்கு நீர் எடுத்து வந்துள்ளதை மேற்கண்ட அகநானூற்றுப்பாடல் சுட்டுகின்றது. குடிநீர் எடுத்து வரவும் மேலே கண்ட முறையினையே அவர்கள் பயன்படுத்தியிருக்கக் கூடும்.

நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி
குறுநீர்க் கன்னல் எண்ணுநர்(அகம்.43)

எனும் அகநானூற்றுப்பாடலில் ‘நீர்க்கன்னல்’ என்பது நீர்க்கடிகாரத்தைக் குறிக்கிறது. எண்ணுநர் என்பது நாழிகைகளைக் கணக்கிட இருந்த நாழிகைக் கணக்கர்களைக் குறிக்கிறது. எனவே நீர்க்கடிகாரம் ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக பொழுதுகளைக் கண்டறிய நாழிகைக் கணக்கர்களை அமைத்திருந்தும் புலனாகிறது. 

முடிவுரை

முதலில் குறிஞ்சி நிலத்தில் மழைப்பொழிவு தொடங்கும்.மலைகளின்மீது சுனைகள் மழைநீரைச் சேகரித்தது. சுனைகள் பார்ப்பதற்குப் பாறைகளின் கண்களைப்போல காட்சியளித்த்து. அருவிகளின் வீழ்ச்சி இனிய ஓசையாய் அமைந்திருந்த்து. பெரிய குளங்களைக் காவலர்கள் காவற்காத்தனர். மேகங்கள் வலமாகச் சுழன்று எழுந்தால் மழைப்பொழிவு நிச்சயம். மேகங்கள் எந்தத் திசையில் தோன்றினாலும் கிழக்கு நோக்கி நகர்ந்தால் மழை தவறாது பொழியும். நெல்லிக்காயினை உண்டுவிட்டு நீர் குடித்தால் சுவையாயிருக்கும். உணவு உண்டவுடன் தோன்றும் நீர் தாகத்தைத் தணிக்கக் கள் உண்டனர்.

மருதநிலத்தில் மீன்களும், மலர்களும் நிறைந்த நீர்நிலை முதுநீர் இலஞ்சி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மருதநிலப் பெண்கள் நீர்நிலைகளிலிருந்து நீர்  எடுத்துவர அழகிய வேலைப்பாடமைந்த குடங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

நெய்தல் நிலக் குளிர்ச்சியுடைய குளத்தில் குவளை மலர்கள் பூத்து நிறைந்து காணப்பட்டன.

பாலை நிலத்தில் கோடைக் காலத்தில் சுனை நீர் வற்றி இருந்தது  ‘வறுஞ்சுனை’ என்றழைக்கப்பட்டுள்ளது. ஆயர்கள் கூவல் தோண்டும் முறைமையினை அறிந்ததோடு அதிலிருந்து நீர் எடுக்கும் தொழில்நுட்ப முறையினையும் நன்கறிந்தவர்களாக இருந்துள்ளனர். கோவலர்கள் ‘கூவல்’ தோண்டுவதற்கு முதன் முதலில் பயன்படுத்தியது அவர்கள் கையிலிருந்த கோலையே ஆகும். ஆநிரைகளுக்காகக் கோவலர்கள் நீர்க்குழிகள் அமைத்தனர். கூவலிலிருந்து நீரை எடுத்துச் சிறுகுழியில் ஊற்றப் ‘பத்தல்’ என்ற கலனைப் பயன்படுத்தினர். பத்தல் என்பது மரத்தாலான நீர் இறைக்கும் கருவி ஆகும். பாலை நிலத்தில் வாழும் ஆறலைக் கள்வர்கள் தாகத்தால் வருந்தி மரப்பட்டையை உறிஞ்சித் தாகம் தணித்தனர். வலிய நிலத்தை இடித்துத் தோண்டின அகன்ற வாயினையுடைய கூவல் நன்கு நீர் ஊறி உமணர்கள் மற்றும் எருதுகளின் தாகத்தைத் தணிக்கக் கூடியதாக அமைந்தது.

வெம்மையுடைய கோடை நிலைபெற்ற காரணத்தால் குளத்திலுள்ள நீர் வறண்டது. அதனால் குளிக்கும் சிறு குளத்தில் தோண்டப்பட்ட சிறுகுழியில் குடிப்பதற்குப் பயன்படாத கலங்கல் நீர் காணப்பட்டது. அருவி நீரினைத் தேக்கி வைக்கப் பாறையினை அறுத்தெடுத்து குழியாக்கி நீரினைக் குறிஞ்சி நில மக்கள் சேகரித்து வைத்துள்ளனர். மக்கள் குடிநீர் எடுக்கின்ற உண்ணுநீர்த் துறையாகவும் ‘கேணி’ விளங்கியுள்ளது. ‘புதவு’ பற்றியக் குறிப்புக்கள் சங்க அகநானூற்றில் இடம்பெற்றுள்ளது. புதவு என்பது “தண்ணீர் வெளியேறும் சிறியவழி”. வயலைச் செடிக்கு நீர்  ஊற்றுவதற்கு நீர் நிலையிலிருந்து நீர் எடுத்துவரத் தாழியைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகின்றது. தாழி என்பது மண்ணாலாகிய கலமாக இருக்கலாம். பனங்குடைகளில் தண்ணீர் எடுத்துக் கலத்தை நிரப்பி, பின்பு வீட்டிற்கு நீர் எடுத்து வந்துள்ளனர். நீர்க்கன்னல்’ என்பது நீர்க்கடிகாரத்தைக் குறிக்கிறது. எண்ணுநர் என்பது நாழிகைகளைக் கணக்கிட இருந்த நாழிகைக் கணக்கர்களைக் குறிக்கிறது. எனவே நீர்க்கடிகாரம் ஒன்றை உருவாக்கி அதன் மூலமாகப் பொழுதுகளைக் கண்டறிய நாழிகைக் கணக்கர்களை அமர்த்தியுள்ளனர். இவ்வாறாக அகநானூற்றில் நீர்மேலாண்மை குறித்து ஐந்திணைப் பாடல்களில் பேசப்பட்டுள்ளது.

*****

கட்டுரையாளர் – தமிழ்த்துறைத்தலைவர்
D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
விளாப்பாக்கம்   – 632 521.

 

 

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க