செண்பக ஜெகதீசன்

 

இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய       

தாமே தமிய ருணல்.                                                

       -திருக்குறள் -229(ஈகை)

புதுக் கவிதையில்…

 

சேர்த்த பொருளைப்

பிறர்க்கு ஈந்திடாமல்

தானே தனியாய் உண்பது,

இரத்தலைக் காட்டிலும்

கொடிதான ஒன்றே…!

குறும்பாவில்…

 

சம்பாதித்த பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல்               

தான்மட்டும் உண்பது, 

பிச்சையெடுப்பதைவிடக் கொடியதே…!

மரபுக் கவிதையில்…

 

மண்ணில் மனித வாழ்வினிலே

     முயன்று சேர்த்த பொருளதனைக்

கண்ணிய மாகப் பிறருக்கும்

     கொடுத்தே யுதவி செய்யாமல்

உண்ணத் தனக்கே வைத்திருந்தே

     ஒளிந்து தானே உண்டிடுதல்,

திண்ண மாகத் தரந்தாழ்தே

     தெருவி லிரப்பினும் கேடாமே…!

லிமரைக்கூ..

 

சேர்த்ததில் செய்பிறருக் குதவி,     

பணமதில் தானே தனித்துண்டால் கிடைக்கும்                   

இரத்தலினும் கொடியதான பதவி…!

கிராமிய பாணியில்…

 

கொடுத்து ஒதவு கொடுத்து ஒதவு

அடுத்தவருக்குக் கொடுத்து ஒதவு..

ஒழச்சிச் சேத்த பணத்தயெல்லாம்

ஒருத்தருக்கும் கொடுகாம

ஒதவியேதும் செய்யாம,

ஒளிச்சிருந்து தனியாவே

தான்மட்டும் திங்கிறது,

தரங்கொறஞ்சி

தெருவுல பிச்சயெடுக்கிறதவிடக்

கொடுமதானே..

அதால

கொடுத்து ஒதவு கொடுத்து ஒதவு

அடுத்தவருக்குக் கொடுத்து ஒதவு…!

செண்பக ஜெகதீசன்…

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *