Featuredஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்

திருஞான சம்பந்தரின் வைதீகசைவ அடையாள மீட்டுருவாக்க அரசியல்

ர.சுரேஷ்

அடையாளம் என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் Identity என்றுபெயர். அடையாளம் என்பதை பொதுவாக மொழி மதம், இனம்,சாதி, நிறம், பாலினம், நிலம் சார்ந்த கூட்டுணார்வின் இயைந்த தன்மை என வரையரைபடுத்தலாம். இவ்வடையாளங்கள் மனித ஓர்மைக்குள் நுழைந்துவிட்ட மிக வலுவான கருத்தாக்கமாகும். அடையாளமற்ற மனித இருப்பென்பது என்றுமே சாத்தியமானதாய் இருந்தததில்லை. அடையாளம் என்பது ஒரு கூட்டம் (அ) குழு தாமாக வரித்து கொள்வது மட்டுமேயன்றி பிறரால் திணிக்கப்பட்டதாகவும் இருக்கலாம். எப்படியாயினும் ஏதேனும் ஒரு அடையாளத்தின் கீழாகவே மனித இருப்பு என்பது நிலைகொண்டுள்ளது. இவ்வடையாளங்களின் ஒருங்கிணைவே அடையாள உருவாக்கங்கள் ஆகும்.

அடையாள உருவாக்கங்கள் ஒரு கூட்டம் (அ) குழுவின் கோரிக்கைகள் தேவைகள் போன்றவற்றை நிறைவேற்றிக்கொள்ளவும் அதிகார தளத்தில் தமக்கான சமூக மதிப்பை ஈட்டிக் கொள்ளவும் ஒரு பொது அடையாளத்தின் கீழ் இணைவதைக்குறிக்கும். இவை ஒவ்வொன்றும் தமக்கான கொள்கைகள், கோட்பாடுகள் என்றளவில் சில கருத்தியல் தகவுகளை முன்நிபந்தனையாக ஏற்கின்றன. மேலும் இவை அரசியல் பொருளாதாரம் பண்பாடு போன்ற காரணிகளையும் தமக்குரிய பின்னணிகளாக கொண்டவை ஆகும். ஒரு சமூகத்தின் தவிர்க்கவியலாத பண்புகளாக இவ்வடையாள உருவாக்கங்களைக் குறிப்பிடலாம். ஒவ்வொரு அடையாள உருவாக்கங்களுக்கும் ஒருவித அரசியல் தேவை உள்ளது.

இந்நிலையில் அடையாளங்கள் தம்மோடு வேறுபட்ட பிற அடையாளங்களோடு மோத வேண்டிய காலத் தேவையும் எழுகிறது. அடையாளம் வேறுபாடு குறித்து, ந. முத்துமோகன் கீழ்க்கண்டவாறு கருத்துரைப்பார். அடையாளம் என்ற கருத்தாக்கம் தோன்றும்போதே வேறுபாடு என்ற கருத்தாக்கமும் தோன்றிவிடுகிறது. இவ்வகை வேறுபடுத்தலில் வேறுபட்டவை அடையாளத்திற்கு வெளியே நிற்கின்றன. அதாவது தன்னைப் பிறிதொன்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுதலே முனைப்படைகிறது. அடையாள அரசியல் தீவிரபடும்போது ஒருவரது சொந்த அடையாளம் தவிர்த்த பிறவற்றில் குறிப்பிட்ட ஒன்று பகை அடையாளமாக உருவாக்கப்படுகின்றது”1 என்றுகூறுவார். ஒரு அடையாளம் தன்மைப் போலவே இயங்கும் பிறிதொரு அடையாளத்தை அங்கீகரிக்காததும், பரிசீலனை செய்யாததும் அவற்றின் இருத்தல் நியாயத்தை மறுதலிப்பதுமான அரசியற்செயற்பாட்டை நிகழ்த்துகின்றது. மேலும் அவற்றின் முன்னேற்றத்தை தடைபடுத்தி விடுகின்றன. இந்திய தத்துவங்களின் வளர்ச்சிப்போக்கையும் மேற்குறித்த கருத்திற்கு அனுசரணையாகக் கொள்ளாம். இவ்வாறு இந்தியச் சமூகங்களில் அடையாளங்களின் எல்லையானது பிறிதொரு வேறுபட்ட அடையாளங்களுக்கு இடந்தரா வகையில் மிக கறாராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடையாளங்கள் பிற அடையாளங்களோடு மோதுவதைப் போலவே தமக்குள் எழுகின்ற முரண்பாடுகளையும்   எதிர்கொள்ளவேண்டியுள்ளது. பலதரப்பட்ட பன்மிய கூறுகளுக்கிடையே பொதுமைப்படுத்தப்பட்ட ஒன்றினை மட்டும் முதன்மைபடுத்தி அடையாளங்கள் உருவாகின்றன. இவ்வாறு உருவாகின்ற அடையாளங்கள் தம்மை போலவே இயங்கும் பிற அடையாளங்களை மறைத்து அவ்வடையாளங்களின் இருத்தலுக்கான நியாங்களை மறுதலிக்கின்றன. . இவை அடையாள இயக்கங்களின் வெகுசனத்தன்மைக்கு விரோதமானவையாகவும் அமைந்துவிடுகின்றன. இந்திய சூழலில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியில் பிராமண மேலாண்மை கட்டமைத்த இந்து தேசியம் எனும் பேரடையாளத்தை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.

தமிழ் மரபில் அடையாள அரசியல்

அடையாள அரசியல் எனும் சொல்லாடல் பின்னை நவீனத்துவ சிந்தனையாளார்களால் நமக்கு அறிமுகமான போதிலும் அடையாளம் என்பது அதன் அரசியல் உணர்வு வெளிப்பாடும், தமிழ்ச் சமூக இலக்கிய வரலாற்று நெடுங்கிலும் தொழிற்பட்டிருக்கின்றன. தமிழ்ப் பண்பாட்டு வெளியில் பல அந்நிய கலாச்சார ஊடுருவல்கள் அவற்றின் மேலாதிக்கச் சிந்தனைகள் விரவிக் காணப்படுகின்றன. குறிப்பாக வைதீக நெறி சார்ந்த பிராமண மேலாண்மை, வா்ணாசிரம கொள்கை போன்றவற்றின் தாக்கங்களைப் பரவலாகக் காணலாம். இச்சூழலில் தமிழரின் அடையாள அரசியலும் ஆங்காங்கே தொழிற்பட்டிருக்கின்றன.

“துடியன், பாணன், பறையன், கடம்பனென்று

இந்நான்கல்லது குடியும் இல்லை

ஒன்னாத் தெவ்வா் முன்னின்று விலங்கி

ஒளிறு….”2

இப்பாடல் வைதீக நெறிக்கும் வா்ணாசிரம கொள்கைக்கும் எதிரான இனக்குழு சமூகத்தின் கலக மொழியாகவும் தமழிழரின் அடையாள அரசியல் வெளிப்பாடாகவும் விளங்குகின்றது.

வைதீகத்தைப் போன்றே தமிழா் பண்பாட்டில் கலந்துவிட்ட ஒன்றாகச் சமண- பௌத்தக் கருத்துகளும் காணக்கிடைக்கின்றன. சமண – பௌத்தரின் தத்துவக் கொள்கையான வாழ்க்கை நிராகரிப்பு, காம நிராகரிப்பு போன்றவற்றிற்கு எதிரான பாடல்களும் தமிழிலக்கியத்தில் பதிவாகியுள்ளன.

“காமம் காமமென்ப காமம்

அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்

கடுத்தலும் தணிதலும் இன்றே யானை

குளகு மென்று ஆள்மதம் போலப்

பாணியும் உடைத்து காணுநா்ப் பெறினே” 3

காமம் காமம் என்று உலகினா் அதனைக் குறை கூறுவா் அக்காமமானது புதிதாகக் தோற்றும் துன்பமும், நோயும் அன்று. நுண்ணியதாகி  மிகுதலுதம் குறைதலும் இல்லை. குளகு என்னும் தழையுணவை உண்டதனால் யானைக்கு ஏற்படும் மதத்தைப் போலக் கண்டு மகிழ்வாரைப் பெற்றால் அக்காமம் வெளிப்படும். செவ்வியை உடையது என்று குறுந்.136 – ஆம் பாடல் விளக்குகிறது. சங்கப் பாடல்களில் காமத்தைப் பற்றிய ஏக்கமும் திளைப்பும் அதிகம் பேசப்பட்டுள்ளன. இவற்றை சமண பௌத்த அறங்களுக்கெதிரான எதிர்புணா்ச்சி விசும்பல்களாகவும் தமிழ் அடையாள எடுத்துரைப்புகளாகவும் கருத இடமுண்டு. மேலும் தமிழ் அறவிலக்கியங்களிலிருந்தும் காப்பியங்களின் சமய வாதங்களிலிருந்தும் பல்வேறு விதமான கலக எடுகோள்களைக் கண்டடைய முடியும். தமிழிலக்கியப் பதிவுகளிலிருந்து இன்னும் ஏராளமான கருத்துக்களைத்  திரட்டி எதிர் – முரணாக அடுக்கிச் செல்லலாம்.

திருஞான சம்பந்தரின் வைதீக சைவ அடையாள அரசியல்:

தமிழ் மரபு தொடா்ச்சியில் சமயம் சார்ந்து உருவான மிகப்பெரிய அடையாள இயக்கமாகப் பக்தியியக்கத்தைக் குறிப்பிடலாம். சைவம் வைணவம் என இருவேறு அடையாளங்களின் குவிமுனையாகப் பக்தியியக்கம் விளங்கியதை உணரமுடிகிறது. சைவப் பின்னணியோடு நாயன்மார்களும் வைணவப் பின்னணியோடு ஆழ்வார்களும் இயங்கினா். பிராமண   வேளாள கூட்டிணைவின் மைய அச்சாகவும் சமண-பௌத்திற்கெதிரான எதிர்ப்பியக்கமாகவும் பக்தி இயக்கம் என்கிற ஒரு மாபெரும் அடையாளம் அமைப்பு ரீதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அவற்றுள் திருஞானசம்பந்தரின் சைவ அடையாள மீட்டுருவாக்கம் என்பது குறிப்பிடத்தகுந்த  அளவில் அக்கால அரசியல், பொருளாதார, பண்பாட்டு நிலைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.

பக்தி இயக்கத்தை வேளாள இயக்கம் என்று வரலாற்றியலாளா்கள் கருத்துரைப்பா். இவ்வாறு தமிழ் வேளாளா்களால் முன்னெடுக்கப்பட்ட பக்தி இயக்கம் பொதுவாக அதன் பொதுமைப்பட்ட குறியீடுகளாக, தமிழ் – பக்தி – சைவம் என்ற நிலையில் தமது அடையாளத்தைக் கட்டமைத்திருந்தாலும் அதற்குள்ளாக,  சமஸ்கிருதம் – பிராமணியம்  – வைதீகம் மறைமுகமாக மேலான்மை செலுத்தியிருப்பதை திருஞானசம்பந்தர் பாடல்களில் அறியமுடிகிறது. எனவே பக்தி இயக்க எழுச்சியினூடாக, திருஞானசம்பந்தர் தம்முடைய வைதீக அடையாள அரசியலைத் தொழிற்படுத்தியுள்ளதை அனுமானிக்கலாம்.

தமிழ்ச் சமூகத்தைப் பொருத்த வரையில் சமண – பௌத்த ஊடுபரவல் வைதீகத்திற்கு எதிரான போக்கையுடையதாகவே இருந்து வந்துள்ளது. வர்ணப் பாகுபாட்டை எதிர்த்தல், வேதவேள்விகளை எதிர்த்தல், பிராமண வா்க்“கத்தின் வெகுஜன விரோதப் போக்கினைக் கண்டித்தல் போன்றவை அவற்றின் முதன்மைப் பணிகளாக இருந்தன. இச்சூழலை எதிர்கொள்ளவும் வைதீக சைவ மரபை மீட்டுருவாக்கவும் திருஞான சம்பந்தருக்கு பக்தி இயக்கம் பெருத்த ஆயுதமாக விளங்கியது. இந்நிலையில் தாம் வழிவழியொழுகும் வைதீக மரபையும் வேளாளர் தலைமையிலான  தமிழ் சைவ பக்தி இயக்கத்தையும் இணைத்து சமண –பௌத்த மதங்களுக்கெதிரான வைதீக சைவ பேரடையாளத்தை உருவாக்குதிறார். இவ் வைதீக சைவ அடையாளம் எனும் கருத்தாக்கத்தினுள் சமண – பௌத்த அடையாளங்கள் பகையடையாளங்களாகச் சித்திரிக்கப்படுகின்றன. திருஞானசம்பந்தா் பாடல்களில் பதிகம்தோறும் 10-ஆம் பாடல் சமண பௌத்தரைச் சாடுவதற்காகவே பயன்படுத்தியிருக்கிறார். அப்பாடல்களில் சமண-பௌத்தர்களுக்கெதிரான வன்சொற்களும், இழிப்புரையும் பழிப்புரையும் ஏராளமாகக் காணப்படுகின்றன.

சமண-பௌத்தா்களுடைய மத அடையாளங்களையும் மத நடைமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் கூறும் பாடல்கள் திருஞானசம்பந்தா் பாடல்களில் ஏராளமாகப் பயின்று வருகின்றது. திருஞானசம்பந்தா் சமணரைப் பற்றிக் கூறுவன.

“கழுவார்…சமண்”4 “குற்றுடுக்கைச் சமணா்”5,“குற்றவிட்டுடுக்கையா்”6,அமண் உருவா்கள்7, அரைக் கூறையில்லார்,8 உடுக்கையின்றியே நின்று ஊர்நகவேத்திரிவார்,9 உடையிலா துழல்கின்ற குண்டா்,10 உரிஞ்சன் கூறைகள் உடம்பினராகி உழிதரு சமணா்,11

இவ்வாறு சமண-பௌத்தா்களின் மத அடையாளங்களையும், நடைமுறை வழக்கங்களையும் இழித்தும், பழித்தும் பல இடங்களில் பேசுகின்றார் ஞானசம்பந்தா். மேலும்,

அடையாதன சொல்லுவார் ஆதா்கள்12, அமண்ணொடு சீவரத்தாரவா் கொடிய வெவ்வுரை13, அல்லார் அலா் தூற்ற14 , அறிவதறிகிலார்15, ஆசியார மொழியார் அமண் சாக்கியா்16, உள்ளவா றறியார்17; , ஒன்று முணரா உளமா்18,

எனப் பல வரிகளில் அவா்கள் குற்றமுடையவா்கள், குணமில்லாதவா்கள் பொய்யுரைப்பவா்கள், அல்லன பேசித் திரிபவா்கள், புறங்கூறுபவா்கள், அலா்தூற்றுபவா்கள், நல்வினை புரியாதவா்கள், பொல்லாதவா்கள், பொய்த் தவம் மேற்கொள்பவா்கள், பொய்களைக் கட்டியுரைப்பவா்கள் பொருளற்ற உரைகளைப் பேசுபவா்கள் எனப் பலவாறாகப் பேசுகிறார். மேலும்

சமணா், புத்தா் முதலியோரது கொள்கைகளைப் பின்பற்ற வேண்டாமென மக்களுக்கு அறிவுறுத்தல்,“அமண்குண்டா் ஓதும் ஓத்தையுணரா தெழுநெஞ்சே”19 “அமண்குண்டா்…புறனுரையா தொன்றுங் கொள்ளேல்”20 “அமணா் அறிவில் சிறுதேரா் கோலும் மொழிகள் ஒழிய”21

எனப் பல பாடல்களில் சமண பௌத்தர்களின் பொய்யுரைகளைக் கேட்காதீர்கள் என மக்களுக்கு அறிவுறுத்துகிறார். அதே சமயத்தில் சமண-பௌத்தா்களைக் குற்றங்குறையுடையவா்களாகக் காட்டுவது ஒருபுறமிருக்க வேதத்தின் வேள்வியின் மறையவரின் பெருமையைப் பல பாடல்களில் அதற்கு எதிரிடையாக முன்வைக்கிறார். சமண பௌத்தா்களைப் பொய்யா்கள் புறங்கூறுபவா்கள், வேடதாரிகள், பொய்தவத்தா், நெறி நில்லாதவா்கள், ஒழுக்கக் கேடுடையவா்கள் எனச் சாடிவிட்டு மறையவா்களைக் குறிப்பிடும்பொழுது,

பொய்ம் மொழியா மறையோர்கள்22 மெய்மொழி நான் மறையோர்23; தளராத வாய்மைப் புந்தியின் நான்மறையோர்24 செய்தவ நால்மறையோர்25; நா மரு கேள்வியா்26

மேலும் வேள்வியின் சிறப்பைக் கூறுமிடத்து,

“கற்றாங்கு எரிஓம்பி, கலியை வாராமே செற்றார் வாழ் தில்லை சிற்றம்பலம்”27

“பரப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டரியோம்பும் சிறப்பார் வாழ் தில்லை”28

என்றும்,

“தக்கார், மறைவேள்வித் தலைஆய உலகுக்கு

மிக்கார் அவா் வாழும் வழிமிழலையே”29

எனப் பாடுகின்றார். இப்பாடல்கள் இறைவனை முதன்மைப்படுத்தாமல் வேள்வியையும் மறையவா்களையும் மறையவா் வாழ்கின்ற இடங்களையும் முதன்மைப்படுத்துவதாக உள்ளன. இவ்வாறு சமண, பௌத்தா்களின் மதரிதியான ஒழுக்க வழக்கங்களைப் பண்பாட்டை, சாஸ்திர அணுட்டானங்களைக் கீழ்த்தரமாகவும், நாகரிகமற்றதாகவும் சித்திரித்துக் காட்டிவிட்டு மறையவா் ஒழுக்கங்களையும் அவா்களின் வைதீக நடைமுறைகளையும் உயா்த்திக் கூறுகிறார்.

திருஞானசம்பந்தரின் இத்தகைய முயற்சியால் சமண-பௌத்தப் பண்பாடு தன் மேலாண்மையை இழந்து தமிழ்ப் பண்பாடும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டதைப் பின்னால் வந்த சோழப் பேரரசுக்காலகட்டத்திய சமூக நடைமுறைகளைக் கொண்டு உறுதியாக அவதானிக்கமுடிகிறது. இவ்வாறு தமிழ்ப்பண்பாட்டின்மீது மேலாண்மையைக் கட்டமைத்தும் சமண-பௌத்தப் பண்பாடுகளை அழித்தும் வைதீக மேன்மைக்குரிய கருத்தியலை ஒவ்வொரு பதிகத்திலும் வலியுறுத்தியுள்ளார். திருஞானசம்பந்தரின் இத்தகைய அடையாக அரசியலின் நோக்கம் வைதீகம் தழைக்கப்பாடுபடுவதும் அதனை எதிர்க்கும் கொள்கையுடைய சமண-பௌத்த மதங்களைத் தமிழ் மக்களைக் கொண்டே புறக்கணிக்கச் செய்வதும் தான் என்பதை மேற்கண்ட பாடல்கள் உணா்த்துகின்றன. இதற்கு அவருக்கு சைவ-வைதீக அடையாளம் பெரிதும் பயன்பட்டிருக்கிறது. சமண பௌத்தத்தை எதிர்க்கும் இடங்களில் பெரும்பாலும் அவா்கள் வேதத்தை எதிர்ப்பவா்கள், வைதீகத்தின் வழி ஒழுகாதவா்கள், வேள்வியை மறுப்பவா்கள் என்றே பாடுகிறார். இதன்மூலம் சமண-பௌத்தத்திற்கெதிராகத் தமிழருடன் கூட்டணியை அமைத்துக் கொண்டு வைதீகத்தையே தமிழரின் அடையாளமாக முதன்மைப்படுத்துகிறார்.

உதவிப்பேராசிரியர்

கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்

கோயம்பத்தூர்

*****************

அடிக்குறிப்புகள்

1.ந.முத்துமோகன் தமிழ் அடையாள அரசியலின் இயற்கியல் ப.29

2.மாங்குடிக்கிழார்,புறம் – 335

  1. குறுந்தொகை ப.எண் – 136

4.திருப்பூவனம், 64

5.திருக்குரங்கணில் முட்டம், 31

6திரு ஐயாறு, 130

7..திருபாம்புரம், 41

8.திருக்கழுமலம், 19

9..கீழைத்திருக்காட்டுப்பள்ளி, 5

10.திருச்செங்காட்டங்குடி, 61

11.திருநன்றியூர், 18

12.திருஇலம்பெயங்கோட்டூர், 76

13.திருப்புகலி, 30

14.திருக்கரவீரம், 58

15.திருநாகைக்காரோணம், 84

16.திருவீழிமிழலை, 92

17.திருவலிதாயம், 3

18.திருப்பாம்புரம், 41

19.திருநறையூர்ச்சித்தீச்சுரம், 71

20.திருசோற்றுத்துறை, 28

21.திருவேட்களம், 39

22.திருப்புறவம், 74

23.திருப்புகலியும், திருவீழிமிழலையும், 4:1

24.மேலது., 4:1

25.மேலது., 4:4

26.திருமருகலும் திருசெங்காட்டங்குடியும், 6:2

27.மேலது., 6:4

28.கோயில், 80:1

29.மேலது., 80:2

28.சீகாழி, 81:10

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க