Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (283)

சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்கள். சில வார இடைவெளியின் பின்னால் மீண்டும் உங்களுடன் மடல் மூலம் உறவாட விழைகின்றேன். சிறிய விதையாக மண்ணில் விழும் விதை சீறிய செடியாக, பெரும் செடியாக , மரமாக பல கிளைகளுடன் வளர்ந்து விடுகிறது. அம்மரக்கிளைகளில் இருக்கும் இலையொன்று தான் உருவாகக் காரணமாக இருந்த வேர்களைத் தேடி ஒரு பயணம் மேற்கொண்டால் எப்படி இருக்கும்? அது போன்றதொரு அனுபவத்துடன் கூடிய ஒரு பயணத்தை நான் மேற்கொண்டதே எமது சில வார இடைவெளிக்குக் காரணம்.

ஆமாம் நான் பிறந்து தவழ்ந்து தமிழ் கற்ற என் தாய்மண்ணின் மீது கால் பதித்த ஒரு பயணம். 1975ம் ஆண்டு ஜனவரி மாதம் என் தாய்மண்ணை விட்டுப் புலம் பெயர்ந்தேன். அதன் பின்னால் 1978ம் ஆண்டு எனது மூத்த சகோதரனின் திருமணத்திற்காக யாழ் மண்ணை மிதித்தேன். அதன் பின்னால் சுமார் 35 வருடங்களின் பின்னால் 2013ம் ஆண்டு யாழ் மண்ணை மீண்டும் மிதித்தேன். அந்த இடைப்பட்ட காலத்தில் இலண்டனில் மாணவனாக இருந்த நான் கணவனாகித் தந்தையாகி வாழ்வின் பல பருவங்களைக் கடந்திருந்தேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த என் மனைவிக்கு அதுவே முதன் முதலாக “யாழ்ப்பாணம்” எனும் என் தாய்மண்ணின் அறிமுகம் கிட்டியது.

அதன் பின்னால் ஜந்து வருடங்கள் கழித்து மீண்டும் கடந்த 5ம் திகதி ஈழத்தை நோக்கிப் பயணமானேன். உள்ளத்தில் உரசிய உணர்வுகள் ஆயிரம். ஜந்து வருடங்களுக்கு முன்னால் தொட்டுத் தொட்டுப் பார்த்து வந்த தாய்மண்ணை மீண்டும் கொஞ்சம் உற்றுப்பார்க்க ஒரு சந்தர்ப்பம். சரியாக நாற்பது வருடங்கள் கழித்து யாழ் நல்லூர்க் கந்தனின் சப்பரம், தேர், தீர்த்தம், பூங்காவனம் எனும் நிகழ்வுகளைப் பார்க்கப் போகிறோம் எனும் ஆவல் முந்திக் கொண்டது. 1978ம் ஆண்டின் பின்னால் என் பிறந்த நாளை என் தாய்மண்ணில் கழிக்கப் போகிறோம் எனும் எண்ணமும் தலை தூக்கியது. அது மட்டுமல்ல வாழ்வில் முதல் முறையாக எமது திருமணநாளை அதாவது எமது முப்பத்தி ஏழாவது மணநாளை எனது தாய்மண்ணில் கழிக்கக் கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பம். உள்ளம் குறுகுறுப்பால் துள்ளியது.

6ம் திகதி அதிகாலை கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தை அதிகாலை 4.30 மணியளவில் வந்தடைந்தோம். விமானநிலையத்திலிருந்து நேராகவே யாழ்நகருக்குச் செல்வதற்காக அதற்குரிய பேருந்தில் இருக்கையை ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். சுமார் காலை ஆறு மணியிலிருந்து முன்பகல் 9.30 வரை விமானநிலையத்திலேயே நேரத்தைக் கழிக்க வேண்டியிருந்தது. காலைச் சிற்றுண்டியை விமான நிலையத்திலேயே முடித்துக் கொண்டோம். 9.30 மணியளவில் விமான நிலையத்துக்குள் வந்த யாழ்நகருக்கான பேருந்து எம்மையும், மற்றும் சில பயணிகளையும் ஏற்றிக் கொண்டு சென்றது. அந்தப் பேருந்தின் பயண இருக்கைகள் வசதியானவையாகவே இருந்தன. சுமார் 8 மணி நேரப் பேருந்துப் பிரயாணம். உடம்பு ஓய்வுக்காகக் கெஞ்சியது. பத்து மணிக்கு மேலான விமானப் பிரயாணம் அதைத் தொடர்ந்து 8 மணிநேரம் பேருந்தில்,  அப்போதுதான் வயது 60க்கு மேல் ஆகிவிட்டது என்பதை உடம்பு எடுத்துச் சொல்லியது.

யாழ்நகரில் இறங்கி நாம் ஏற்கனவே பதிவு செய்திருந்த விடுதிக்குச் சென்று ஓய்வெடுத்தோம். அடுத்தநாள் 7 திகதி நல்லூர்ச் சப்பரத் திருவிழா. சுமார் ஜந்து மணியளவில் கிளம்பி கந்தனின் ஆலயத்தை நோக்கி நடந்தோம். அப்போது நான் எனது பதின்ம வயதுகளில் சைக்கிளில் பவனி வந்த பழைய ஞாபகங்கள் என் நெஞ்சை நெருடிச் சென்றன. அழகாக முருகன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்திலே பவனி வரும் காட்சியைக் காண அலைபோல திரண்டு வந்த மக்கள் கூட்டம். இங்கிலாந்திலிருந்து எமக்கு அறிமுகமான பலரையும் சந்தித்தோம். அடுத்தநாள் காலை தேர்த்திருவிழா மக்களலை எம்மை அமிழ்த்தித் திக்குமுக்காட வைத்தது. பின்பு தீர்த்தத் திருவிழா அதைத்தொடர்ந்து பூங்காவனம் என அனைத்தையும் அடுத்து வந்த நாட்களில் ரசித்தோம்.

எனது அம்மாவின் பக்க உறவினர்கள் பலரையும் நான் நன்கறிவேன் ஆனால் தந்தையின் பக்கத்தைத்தான் அதிகமாக அறிந்திருக்கவில்லை. தெரிந்த சிலரின் உதவியோடு வட்டுக்கோட்டை (தந்தையின் தந்தையின் பூர்வீக இடம்), சுதுமலை (தந்தையின் தாயரின் பூர்வீக இடம்) எனும் இடங்களை நோக்கி எனது வேர்களைத் தேடிய பயணத்தில் பலரைச் சந்திக்க முடிந்தது எனது பாக்கியம் என்றே கொள்ள வேண்டும். நான் சந்தித்த பலரும் நான் அவர்களைத் தேடி வந்து சந்தித்ததை ஓர் பெரிய விடயமாக ஆனந்தப்பட்டார்கள்.

அதைத்தொடர்ந்து நான் படித்த ஆரம்பப் பாடசாலை “மங்கையர்க்கரசி மகாவித்தியாலயம்” மற்றைய கல்லூரிகளான “சென் ஜோன்ஸ்” , “ யாழ் மத்திய கல்லூரி” என அனைத்தையும் சென்று பார்த்து அதிபர்களுடன் கலந்துரையாடியது நெஞ்சை நிறைத்தது. நான் வாழ்ந்த சுற்றுப்புறம், எனது அயல் என பலவற்றையும் பார்த்து மகிழ்ந்தது ஒருபுறம் அவை நான் விட்டுச் சென்ற நிலையிலிருந்து முற்றும் மாறுதலடைந்து இருப்பதைக் கண்டு ஏக்கம் கொண்டது மறுபுறம் என இதயம் கலவையான உணர்வுகளோடு உரசியது.

சுமார் ஒன்பது நாட்கள் யாழ்நகரில் தங்கியிருந்து விட்டு ஒரு தனியார் வாகனத்தை அமர்த்திக் கொழும்பு வந்து சேர்ந்தோம். கொழும்பிலே இருந்த சில உறவுகளையும், நட்புகளையும் சந்தித்து விட்டு இரண்டு நாட்கள் கொழும்பில் தங்கி விட்டு திரும்ப லண்டன் வந்து சேர்ந்து அன்றாட அலுவல்களில் மீண்டும் எம்மைப் புகுத்திக் கொண்டோம்.

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க