-மேகலா இராமமூர்த்தி 

வேறுபட்ட சிந்தனைகளும் மாறுபட்ட கொள்கைகளும் கொண்ட மனிதர்களைக் கொண்டிலங்குவதே இப்புவி. அவர்களின் எண்ணங்களும் செயல்களும் மற்றவர்க்கும் அவர்க்கும் நன்மை பயப்பதாய் இருந்தால் அவை கொண்டாடத்தக்கவையே; அன்றேல் அனைவர்க்கும் துன்பமே.

கெட்டாலும் பிறருக்குப் பயன்படுவர் மேலோர்; வாழ்ந்தாலும் பிறருக்குப் பயனிலார் கீழோர். அத்தகு கீழ்மைக் குணங்கொண்ட கயவரின் இயல்புகளை அறிந்துகொள்ள நாலடியார்ப் பாடல்கள் நமக்கு நற்றுணைசெய்கின்றன. 

நீர் நிறைந்த பெரிய பொய்கையில் வாழ்ந்தாலும் தவளை தன்மேல் உள்ள வழுவழுப்பான அழுக்கை நீக்கிக்கொள்ளும் ஆற்றலில்லாததாகும்; அது போல், பிழையற்ற சிறப்புடைய மெய்ந்நூல்களைப் பயின்றாலும் அவற்றை உய்த்துணரும் நுட்பஞ் சிறிதுமில்லாதவர் தம்மை அதனால் மேம்படுத்திக்கொள்ளும் மாட்சி பெற்றிலர்.

செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பறுக்க கில்லாவாந் தேரை – வழும்பில்சீர்
நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன் றில்லாதார்
தேர்கிற்கும் பெற்றி அரிது.
(நாலடி – 352)

அறிவெனும் உரமில்லாதவர்கள் கற்றாலும் எத்துணைதான் அறிவைப் பெற்றாலும் தம்மை மேம்படுத்திக்கொள்ளவதை அறியார் என்பதையே இப்பாடல் விளக்குகின்றது.

நுண்ணறிவு வாய்ப்பதற்கும் நல்லூழின் துணை வேண்டும்; போகூழின் வயப்பட்டோர்க்கு அதற்கேற்ற அறிவுதான் தோன்றும் என்பார் வள்ளுவர். 

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்.
(373)

பிறர்க்கு இரங்கும் நல்லியல்புடைய சான்றோர்க்குச் சிறிதும் பயன்படாமல், தமக்குக்கொடுமை செய்யும் இரக்கமற்றோரைப் பெற்றால் மட்டுமே அவர்க்குப் பயன்பட்டு வேலை செய்வர் கயவர். இளந்தளிரின்மேல் நின்றாலும் பிறர் தம் கையால் தட்டினாலன்றி அதனுள் இறங்காத உளியின் இயல்பினைப் போன்றது கயவரின் இக்குணம் என்கிறது நாலடியார்ப் பாடல் ஒன்று.

தளிர்மேலே நிற்பினுந் தட்டாமற் செல்லா
உளிநீரார் மாதோ கயவர் – அளிநீராக்
கென்னானுஞ் செய்யார் எனைத்தானுஞ் செய்பவே
இன்னாங்கு செய்வார்ப் பெறின். 
(நாலடி –  355)

கயவரை வேலைவாங்கும் வழிமுறையை,

”சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்”
(1078) என்பார் வள்ளுவர் சினந்து.

இன்னொரு பாடலிலும் கயவரின் குணத்தைக் கவினுறக் காட்சிப்படுத்துகின்றது நாலடி.

ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
மோட்டிடத்துஞ் செய்யார் முழுமக்கள் – கோட்டை
வயிரஞ் செறிப்பினும் வாட்கண்ணாய் பன்றி
செயிர்வேழ மாகுத லின்று.  
(நாலடி – 358)

பொருளின்மை முதலிய காரணங்களால் தளர்வுற்ற காலத்திலும் உயர்குடியிற் பிறந்த சான்றோர் செய்யும் நற்செயல்களைச் செல்வமுள்ள காலத்திலும் கயவர்கள் செய்யமாட்டார்கள். ஒளிமிகு கண்களையுடைய பெண்ணே! பன்றியின் கொம்பை வயிரம் பொருத்திப் பூண்கட்டினாலும் அது போர்ச்சினமுடைய வேழமாய் மாறுவதில்லை.

கீழ்மக்களுக்கு எத்துணைதான் நன்னிலைமை வந்தாலும், நன்மொழிகளால் பிறர் அவர்தமைப் புகழ்ந்தாலும் அவர்தம் குணத்தில் மாறுபாடு வருவதில்லை என்பதையே மேற்கண்ட பாடல் தெளிவுறுத்துகின்றது.

பன்னெறி என்ற தலைப்பில் பயன்மிகு நன்னெறிக் கருத்துக்கள் பலவற்றைப் பாங்குறப் பேசுகின்றது நாலடி. அவற்றிலிருந்து சிலவற்றை அறிந்துவருவோம்! 

குடும்ப விளக்காய் அகத்துக்கு ஒளியூட்டும் இல்லாள் இல்லாத இல்லம் சிறக்காது என்று மனையாளின் மாண்பைப் பேசுகின்றது நாலடியார். 

மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
இழைவிளக்கு நின்றமைப்பின் என்னாம் – விழைதக்க
மாண்ட மனையாளை யில்லாதான் இல்லகம்
காண்டற் கரியதோர் காடு
.  (நாலடி – 361)
 

மேகங்கள் தவழும் உயர்ந்த மாளிகையாய், சிறப்பமைந்த பாதுகாப்புடையதாய், மணிகளால் இழைக்கப்பட்ட விளக்குகள் அங்கங்கு இருந்து ஒளிவிடினும் என்ன பயன்? மாட்சிமை வாய்ந்த விரும்பத்தக்க இல்லக் கிழத்தி இல்லாதவனது வீடு கண்கொண்டு பார்த்தற்கியலாததொரு கொடிய காடே ஆகும்.

எவை எவை இல்லையானால் மானுடம் பாழாகும் என்று பட்டியலிட வந்த ஔவை,

”….பாழே
மடக்கொடி யில்லா மனை”
என்றுரைத்து இல்வாழ்க்கைக்கு ’நல்வழி’ காட்டுவார்.
 

வான்புகழ் வள்ளுவரும், ’வாழ்க்கைத் துணைநலம்’ அதிகாரத்தில், ’இல்லதென் இல்லவள் மாண்பானால்’ என்று வினவி, ’மங்கலம் என்ப மனைமாட்சி’ என்று நன்மொழி நவின்றிருப்பது நாமறிந்ததே.

மனித இரசனை ஆளுக்கு ஆள் மாறுபடக்கூடியது. அந்த இரசனையின் அடிப்படையில் மனிதர்களைத் தரம் பிரிக்கின்றது நாலடியார். 

நல்ல நூல்களைக் கற்று வாழ்நாளைப் பயனுடைத்தாய்க் கழிப்பர் தலையாய அறிவினர்; நல்ல பொருள்களைத் துய்த்துக் காலங்கழிப்பர் இடைத்தரத்தினர்; இனிய உணவு கிடைக்கவில்லையே, செல்வத்தை மிகுதியாகப் பெறமுடியவில்லையே என்னும் வெறுப்பினால் இரவிலும் துயில்கொள்ளாது வருந்துவர் கடைத்தரத்தினராகிய கீழ்மக்கள்.

கல்லாக் கழிப்பர் தலையாயார் நல்லவை
துவ்வாக் கழிப்பர் இடைகள் கடைகள்
இனிதுண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும்
முனிவினாற் கண்பா டிலர்.  
(நாலடி – 366)

கம்பராமாயணத்தில்கூட மனிதர்களின் இரசனையின் அடிப்படையில் அவர்களைக் கடைத்தரத்தினர் முதலாய் முதல்தரத்தினர் ஈறாய்க் கம்பர் வரிசைப்படுத்தியிருப்பதை நாம் இங்கே இணைத்துப் பார்க்கலாம்.

பொருந்திய மகளிரோடு வதுவையில்
   பொருந்து வாரும்,
பருந்தொடு நிழல் சென்றன்ன
   இயல் இசைப் பயன் துய்ப்பாரும்,
மருந்தினும் இனிய கேள்வி
   செவி உற மாந்துவாரும்,
விருந்தினர் முகம் கண்டு, அன்ன
   விழா அணி விரும்புவாரும்… (நாட்டுப்படலம் -16)

’தாயைப் போலப் பிள்ளை’ என்று நம்மிடம் ஒரு பழமொழி உண்டு.   அதுபோலவே, தந்தையரோடு பிள்ளைகளை ஒப்பிட்டுப் பேசும் வழக்கமும் நமதே!

நல்ல செந்நெற்கதிர்களால் தோன்றிய செழித்த விதைகள் மீண்டும் அச்செந்நெல்லாகவே விளைவதால், அந்தச் செந்நெல் வயல்கள் நிறைய விளைந்திருக்கும் வளமான வயல்கள் சூழ்ந்துள்ள நாட்டுக்கு வேந்தனே!, தந்தையின் அறிவு போலவே மகனுடைய அறிவும் இருக்கும் என்று கிளக்கின்றது கீழ்வரும் பாடல். 

செந்நெல்லா லாய செழுமுளை மற்றுமச்
செந்நெல்லே யாகி விளைதலால் – அந்நெல்
வயனிறையக் காய்க்கும் வளவய லூர!
மகனறிவு தந்தை யறிவு.
(நாலடி – 367)

நல்ல நெல் விதையினால் நல்ல நெல் (மீண்டும்) விளைவது போல, தந்தையினுடைய நல்லறிவினால் மகனுக்கும் நல்லறிவு உண்டாகும்.

”தந்தையர் ஒப்பர் மக்கள்” என்று தொல்காப்பியமும் இதே கருத்தைச் சொல்லியிருக்கக் காண்கிறோம்.  பிள்ளைகள் நல்லொழுக்கமும் நற்பண்பும் மிக்கோராய்த் திகழ, அத்தகு நற்குணங்கள் தாய் தந்தையரிடம் இருக்கவேண்டியதன் அவசியத்தை இந்தப் பாடல்களும் பழமொழிகளும் நுட்பமாய் உணர்த்துவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

 [தொடரும்]

*****

துணைநூல்கள்:

1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்  பிள்ளை
2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *