-முனைவர். இரா. மூர்த்தி

தொல்காப்பியர் காலம் முதல் இக்காலம் வரை காலந்தோறும் கல்வியில் பல்வேறு மாறுதல்கள்  நடந்து கொண்டிருக்கிறது. தனியொரு மனிதன் தனது சிந்தனைகள் அனைத்தும் ஒரு பொருளின் மீதும், ஒரு செயல்பாட்டின் மீதும் செலுத்தும்போது அவனுக்குள் பல புரிதல்கள் எழத்தொடங்குகிறது. அப்புரிதல்கள் அதே நிலையிலிருக்காமல் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நகரச் செய்கிறது. இச்செயல்பாடுகளுக்குத் தேவையாக இருப்பது அறிவு. அவ்வறிவே பின்னாளில் கல்வியாக வளர்கிறது. அக்கல்வியே பின்னாளில் தனித்து இயங்குவதோடு தன்னைத் தனிநிலையில் அடையாளப்படுத்தவும் செய்கிறது. தனியொரு மனிதனின் அறிவுப்போக்கு எவ்வாறு அடுத்தடுத்து மாற்றம் கொள்கிறதோ அதைப்போன்றுதான், கல்வியின் தரமும் அடுத்தடுத்து உயர்ந்து கொண்டே செல்லும். இக்கல்வி மூதறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் சிந்தனையில் எவ்வகை மாற்றங்களை ஏற்படுத்தின.

ஏனென்றால் தொடக்ககாலத் தமிழர்கள் மத்தியில் அகத்திணைக் கல்வி, பாலியற்கல்வி, பின்னைய காலகட்டத்தில் தடைப்பட்டு வெறும் அறிவுக்கல்வியாக தமிழ்ச்சூழலில் உலாவியது; உலவுகிறது. இதனால் மொழியின், பண்பாட்டின் மரபுகள் தொடர்ந்து நசுக்கப்பட்டு வந்தன. இதற்கிடையில் செம்மொழிச் சிறப்பு பெற்ற தமிழ்மொழிக்குள் மதம் சார்ந்த மொழிகளும் உட்புகுத்தப்பட்டன. அதுகுறித்து மூதறிஞர் கூறும் கல்விச் சிந்தனைகளை தொகுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கல்வி – விளக்கம்

கல்வி என்பது ஒருவரின் வாழ்க்கை முழுவதும் தொடரும் ஒரு நடைமுறையாகும். இக்கல்வி இறந்த காலத்தைப் புதுமைப்படுத்துகிறது. நிகழ்காலத்தைப் பாதுகாக்கிறது. எதிர்காலத்தில் மனிதனின் முன்னேற்றத்திற்கு வழிகோலுகிறது. அக்கல்வி வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டுவது. இதனை வள்ளுவர்,

“யாதானும் நாடாமல் ஊராமல் என் ஒருவன்
சாந்துணையும் கல்லாத வாறு”
(குறள்:397)

என்று கூறுகிறார். அத்தகைய சிந்தனைப்போக்கு இன்றைய சூழலில் தளர்ந்து வெறும் போதனைக் கல்வியாகவும், சான்றிதழ் பெறும் பட்டமாகவும், மதிப்பெண் கல்வியாகவும், உயிர்களைக் காவு வாங்கும் உயிர்கல்வியாகவும் மாறிவந்துள்ளது. இதனால் மக்களிடத்தில் சமூகத்தின் மீதான ஈர்ப்புப் போக்கு மாறத்தொடங்கியுள்ளது. இக்கல்வி குறித்து ஹெர்பார்ட் அவர்கள் கூறும்போது, கல்வி என்பது கடைநிலை உட்கிடைக்கைகளை உயரிய நுண்ணறிவால் வெற்றிக் கொள்வதே என்றும், “பிரவுன் என்பவர் கல்வி என்பது நாம் அறிந்து வேண்டுமென்றே கட்டுப்பாட்டுடன் செயல்படுத்தும் ஒரு நடவடிக்கை. அதன் மூலம் தனி மனித நடத்தையிலே மாற்றங்களும் தனித்தவர் வாயிலாகச் சமூகத்தில் மாற்றங்களும் தோற்றுவிக்கப்படுகின்றன என்றும், கல்வி என்பது பிறர் அறிவுத் தொகுதி, இறந்தகால நிகழ் காலத்துக் கருத்துத் தொகுதி, எள்ளும் பஞ்சும் போல்வது” என்று வ.சுப.மாணிக்கனாரும் கல்விக்கு விளக்கங்கள் கூறுகின்றனர். 

அகத்திணைக் கல்வி

தமிழ்ச் சமூகத்தின் தொடக்ககால வாழ்க்கை ஆண் பெண் இணைந்த காதல் வாழ்க்கையாகவே தொடங்கியது. அகத்தை உள்ளம், காதல், மனம், ஞானம், பாவம், உடல், வீடு, நிலம், உயிர், ஆன்மா என்று உடலோடும் உயிரோடும் உள்ளத்தோடும் தொடர்பு படுத்தி, நிலத்துக்கான (நிலம் – பெண்), உயிர் உருவாக்குதல் – பெண் என்ற உருவாக்கச் சூழலில் காதலாக வெளிக்காட்டுகிறது.

அக்காதல் உடலுக்கு நல்லது. உள்ளத்துக்கு நல்லது. ஊருக்கு உலகத்துக்கே நல்லது. அந்நல்ல காதல் எது? காதல் என்பது உடற்பசி, உள்ளப்பசி, உயிர்ப்பசி, பிறவிப்பசி, அப்பசி தீர்க்கும் உணவு நெறி எது? அஃறிணையுயிர்களின் காதலாவது கல்லாக் காமம், இயற்கை வீறு. மொழி பேசும் மக்களினத்தின் காதல் நினைவில் இனித்து, அறிவில் விளங்கிக் கல்வியில் வளர்வது அவ்வளர்ச்சிக் கல்வியே அகத்திணைக் கல்வியாகும் என்கிறார் மூதறிஞர்.

அகத்தை ‘அகம்’ என்று கூறும் முன்னர் அதன் உட்பிரிமாணங்களை விளக்கும்போது உள்ளம் என்றும் குடும்பத்தோடு இணையும்போது வீடு, இல், மனை என்று பொருளிடுகிறது என்கிறார். மேற்சுட்டல்களைத் தெளிவுறுத்தும்போது களவு கற்பு வாழ்வாகக் காதல் இலக்கியமாக அகத்திணை வெளிப்படுகிறது. இக்காதல் இன்பத்துப் பேரின்பம், உணர்ச்சியுள் பேருணர்ச்சி, ஆற்றலுள் பேராற்றல் அடிப்படையுட் பேரடிப்படை, உரிமையுள் எல்லார்க்கும் உரியது, நட்பினுள் இருபாலரையும் இணைப்பது, கல்வியுள் கசடறக் கற்க வேண்டுவது, நாணினுள் நனி நாணுடையது. ஒழுக்கத்துள் விழுமியது. இத்தகைய காதலை ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ளவேண்டும். அதன் வீறுகளையும் மாறுகளையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அகத்திணை மாந்தர்கள் உய்ப்பித்த அகத்திணை (காதல்) கல்வியை முழுவதும் உய்த்துணர்வது இன்பம் பயக்கும் என்றக் கருத்தினையும் வெளிக்காட்டுகிறார்.

அகத்திணையறிவு பெண்ணுக்கும் ஆணுக்கும் இன்றியமையாத கல்வியாகும். நம் தமிழ் முன்னோர் அகக்கல்வியைச் செம்மையாகப் பெற்றிருந்தனர். அதனால் அன்னவர் இல்லற வாழ்வு பூசலின்றி இயங்கியது. அகக் கல்வியும் தமிழ்ச் சமுதாயத்தில் நல்லுரம் பெற்றிருந்தது. நல்வளம் தந்தது. இத்தகு கல்வி சங்கப் பிற்காலத்து குறைந்தமையால் தமிழ் நாட்டில் பல்லூறுகள் ஏற்பட்டன. இதனால் அகக்கல்விப் பரவலால் படிப்படியாக குறையத் தொடங்கின. அகத்திணையின் தோற்றமும் நோக்கமும் அமைப்பும் எல்லாம் விளங்காது, விளக்குவாரின்றி மறைக்கப்பட்டன. விளக்க முற்படுவாரும் சமயக் கல்வியாகவும், வீடுபேற்றிற்கு உரிய இலக்கியமாகவும் திரித்து எழுதினர். கற்பித்தனர். அதனால் அகத்திணை தன் உண்மையை இழந்து, மாறான பொய்யேற்றம் கொண்டது. தமிழினமும் உலகினமும் காதற் துறையில் ஆண் பெண் இருவருக்குமிடையில் தாழ்வு மனப்பாண்மை இன்றிப் புத்துயிரும் புது வாழ்வும் பெறவேண்டுமேல் தமிழகச் சூழலில் அகத்திணைக் கல்வியைப் பரப்ப வேண்டும். பொய்களைந்து மெய்ம்மைகளைப் பரப்ப வேண்டும். இந்நோக்கத்தால் ஆண் பெண் இருவரிடையே கொலை, உயிரிழப்பு குறைந்து சாதி, வேத, பாகுபாடின்றி தமிழ்ச் சமூகத்தை வெளிக்கொணர முடியும் என்ற ஆழ்ந்துரைப்பதை இவரது படைப்புகள் வாயிலாகக் காணமுடிகிறது.

அகத்திணை கற்ற கணவனும் மனைவியும் பிறந்த உலகை மதிப்பர். எடுத்த உடம்பை மதிப்பர். கொண்ட மணத்தை மதிப்பர். ஒருவருக்கொருவர் தம் காம நாடிகளைப் புரிவர். காமக்குறைவு கடமைக் குறைவாம் என்று உணர்வர். வித்தில்லாக் காமப் பழத்தை உண்பர். மெய்யின்பத்தை உயிரின்பமாகப் போற்றி ஒழுகுவர். அகவாழ்க்கை அன்பு வாழ்க்கையாக எண்ணி இல்வாழ்க்கை சிறக்க செய்திடுவர். இத்தகு அகக்கல்வியினால் ஒரு குடும்பானது, ஆண்பாலின் பெருமிதத்தையும், உரனையும் மனைவி மதிப்பதும், பெண்பாலின் அருமையையும் நிறைவையும் நாணத்தையும் கணவன் மதிப்பதும் ஆகிய கல்வியை அகத்தாற் பெறலாம் என்ற கொள்கையைக் கொண்டுள்ளார். வாழ்க்கைக்கு அகக் கல்வியின் தேவை பயன்படுவதுபோல் குமரப்பருவத்தினரிடையே பாலியற்கல்வி குறித்த சிந்தனைகள் எழவேண்டும் என்கிறார்.

பாலியற் கல்வி

அகத்திணை முழுக்க முழுக்க பெண்ணியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அதனை பெண்ணிலக்கியம் என்று கூறலாம். ஏனென்றால் சங்க காலத்தில் பெண் மாந்தர்களே தொல்காப்பியர் கூறும் வாயில் காப்பாளர்களாக இனங்காணப்பட்டு முதன்மைப் படுத்தப்பட்டுள்ளனர். அதனால் பாலியல் கல்வியே முதன்மையாகக் கொள்ளப்பட்டது என்கிறார் மூதறிஞர். இக்காமம் குறித்துக் கூறும்போது, காமம் என்பது பருவவுணர்ச்சி, மெல்லிய உடலுணர்ச்சி, இவ்வுணர்ச்சி பெருகி ஊறுங்காலம் இளமை எனவும், குறைந்து சிறுகுங்கால் முதுமை எனவும் படும். ஆதலின் குறைவு தொடங்குவதற்கு முன்னுள்ள இளமையில் பாலின்பம் தூய்ப்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும் என்கிறார்.

அகத்திணைக் கல்வி குடும்பமென்ற கருத்தில் இட்டுச்செல்லும் தன்மையில், பாலியற் கல்வி குறித்துக் கூறும்போது பாலியற் கல்வி வாழ்வைத் தொடாது, அறிவைத் தொடாது, இன்றியமையாத உணர்ச்சி நிலையைப் பெறார்.  சமுதாயத்தோடு இசைந்த புணர்ச்சி நிலையை எண்ணார். ஆகவே, அகக்கல்வியும் பாலியற் கல்வியும் கற்கும் இளைஞர், இளைஞியர் இன்றியமையாத உள்ளப் பண்புகளை கற்பாகவும், இன்றியமையாத உடல் வினையைக் காமம் என்றும் தெளிவாக விளங்கிக் கொள்வர். இதனால் ஒருவர் காமத்தை ஏனையவர் மதித்து ஒழுகுவர். காமநிறைவு மனநிறைவாம் என்று இன்பச்செய்கையில் மீக்கொள்வர், ஞாலத்தைக் காதலுக்குப் பயன்கொண்டு தம் காதலால் ஞாலத்தை வாழ்விக்கச் செய்வர் என்று பாலியல் கல்வியின் உளப்பாங்கை உடல் ரீதியாக வெளிக்காட்டி வாழ்க்கைக் கல்வியிலிருந்து பிரித்தாளுவதைக் உணரமுடிகிறது.

அறிவுக் கல்வி

அறிவுக் கல்வி என்பது கற்கக் கற்க பெருகக் கூடியது. வருங்காலத்திற்கான முன்னுணர்வு. தொடர் வளர்ச்சியை ஈட்டக் கூடியது. இது குறித்து வள்ளுவர் கூறும் கருத்தானது,

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு” (
குறள்:396)

என்கிறார். இதற்கு உரைகண்ட மூதறிஞர் மணற்கேணியகத்து நீர் என்ற ஒரு பொருள் உண்டு. முன்னரே அமைந்து கிடக்கும் அந்நீர் தோண்டுதோறும் புறப்படுகின்றது. அவ்வளவிற்கேயொழியத் தோண்டுகை தண்ணீரைப் படைப்பதின்று. இவ்வுண்மை கல்வியறிவுகளுக்கும் பொருந்தும் என்கிறார். புதிதென ஓரியற்கையைப் படைக்கும் ஆற்றல் மக்கட்கு இல்லை. படைப்புற்றுக் கிடக்கும் ஞாலப் பல்லியற்கைகைக் கண்டு தமதாக்கிக் கொள்ளும் செய்வினையே அன்னோர்க்கு உரித்ததாக அமைகிறது. இக்கல்வி ஒரு தோண்டு வினை. அச்சொல்லே தன் செயலைக் காட்டி நிற்பது. அவ்வினை முன் இல்லாத அறிவை ஒருவர்க்கு உண்டு செய்யும் தன்மையுடையது என உரைகாணுகிறார். இத்தகைய அறிவை,

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
(குறள்:423)

என்று அறிவின் செயல்பாட்டைச் சூழ்நிலைக் கல்வியோடு மனிதனை ஒப்பிட்டு மொழிகிறார். கற்ற அறிவை, கல்வியை ஒருவரின் மீது எதிர்நோக்குப் பாய்ச்ச வேண்டும் என்றும் கூறுகிறார். கற்க கல்வியை ஒருவருக்கு பாய்ச்சும்போது அவர் எய்திய இறைத் தன்மையைக் கணித்தற்கு வேறு அளவுகோல் வேண்டாம். அவர்தம் அறிவே அமையும் என்று அறிவின் மையத்தை வள்ளுவர் கூறும் கருத்துகள் வாயிலாக வெளிக்கொணர்கிறார். கல்வியில் அகத்திணைக் கல்வி, பாலியற் கல்வி, அறிவுக் கல்வியின் வினைப்பாடுகள் ஒரு புறம் இருப்பினும், இன்றைய சூழலில் தமிழகத்தில் தமிழ்க் கல்வி, மொழிக்கல்வியின் பின்னிலைப்போக்கு எத்தகைய மாற்றத்தை சந்தித்து வந்துள்ளது என்பதையும் வெளிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் தாய்மொழிக்கல்வியின் பின்னிலைப் போக்கு

மொழி ஒரு மனிதனின் அடையாளத்தை, பண்பாட்டைத் தனித்து வெளிக்காட்டக் கூடியது. அவ்வகையில் வ.சுப. மாணிக்கனார் தமிழ் மொழியின்மீது கொண்ட பற்றினால் தமிழகத்தில் மழலையர் ஆங்கிலப் பள்ளிகளைத் தமிழ்ப்பள்ளிகளாக மாற்றவேண்டும். தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பயிற்று மொழி தமிழாதல் வேண்டும். தமிழகத்தில் மக்கள் மத்தியில் எழுத்துச் சீர்திருத்தம் என்னும் பெயரில் தமிழுக்கு ஊறு விளைவிக்காமல் தடுக்க வேண்டுவதுடன், தமிழைப் பயிற்று மொழியாகத் தமிழகம் முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்ற கொள்கையைத் தமது கட்டுரைகள், நூல்கள் வாயிலாக வெளிப்படுத்தி வந்தவர். தனித்தமிழ் இயக்கத்திற்குத் தாமே புதிய சொற்களைப் படைத்து எல்லா நிலைகளிலும் எங்குந் தமிழ் வளர ஓய்வென்பதறியாது உழைத்த உரஞ்சான்ற வித்தகர்.

அத்தகையோர் எண்ணத்தில் இந்திய நாட்டின் மீதும் அதிக ஈடுபாடு எழுந்தது. நம் இந்தியப் பெருநாடு ஆயிரம் ஆண்டு அடிமைத் தளையறுத்து உரிமைப் பணிபூண்டு நிறைவடைந்த நிலையில், ‘ஆங்கிலேயர் இந்நாட்டு இயல்பு அறிகிலர், மக்கள் உள்ளம் தெரிந்திலர் – தெரியும் நோக்கம் இலர்-  கால்கொள்ளா வேற்றாட்சியால் நம் பண்டைப் பண்பும் மொழிகளும் கலைகளும் மக்கள்போல் நலிவுற்றன. தன்னாட்சி பெறின் எல்லா வளமும் பெருக்குவோம் என்றெல்லாம் நெஞ்சறியப் பறைசாற்றி உரிமைப்போர் தொடுத்தோம். வெற்றி கண்டோம். வெற்றி கண்டபின்பு அதன் நிலை என்னவாயிற்று என்று மக்கள் வெளிக்காட்டினர். மக்களாய்ப் பிறந்தாரெல்லாம் ‘கற்க’ வேண்டும் என்று வள்ளுவப் பெருந்தகையார் கூறுகிறார். ஆனால் இன்னார் கற்றற்கு உரியர், இன்னார் உரியல்லர் என்று அறவே ஒதுக்கியது சில குடிகள், சில மக்கள், ‘எல்லோரும் கற்க, பெண்டிரும் கற்க என்று கூறிய வள்ளுவரின் வாக்கு விதந்து காணப்பட்டது. பெண்கள் கல்வி கற்பதற்குத் தடைவிதிக்கப்பட்ட இவரது காலத்தில் அடிமைகளுக்கும் கல்வி மறுக்கப்பட்டிருந்தது என்று தனது நூல் வாயிலாக எடுத்துரைக்கிறார்.

பள்ளி கல்லூரிகளில் மாணக்கர்களுக்குப் பொதுஅறிவுக் கல்வியே அதிகம் கற்பிக்கப்பட்டது; குறியொன்றும் இல்லாமல், எல்லார்க்கும் எல்லா நிலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இறுதிவரை காட்டும் கல்விதான் கற்பிக்கப்பட்டது. ஒரு துறைக் கல்வியைக் கற்கும் மாணாக்கர்கள் வளரவில்லை. இருப்பினும், மக்கள் அனைவரும் பொதுஅறிவினைப் பெற்றுப் பெற்று ஒழிவதால், நாடு வினைச் சிறப்பும் விளைவுப் பெருக்கும் உறாது. இந்தியப் நாட்டின் கீழ்மைக்கும் இதுவே காரணமாக அமைந்துள்ளது. சில ஆண்டுகள் பொதுஅறிவு பெற்றாலும் பல ஆண்டுகள் துறையறிவு வழங்க வேண்டும். வழங்கும் தொழில் கூடங்களும் பெருக வேண்டும் என்று எடுத்துரைக்கிறார்.

மொழிக்கல்வி ஒரு காலத்தில் முறையாக கற்பிக்கப்பட்டதா என்றால் இல்லை. ஆசிரியர் மாணவரிடையே தொடர் ஒப்புவித்தலாகவே இருந்து வந்துள்ளது. குறள் ஒப்புவித்தல் மற்றும் உரைகள் எழுதும்போதும், குறள் குறளாக ஒப்பித்துச் சேறல் வள்ளுவக் கொலையாகும் என்று பிறிதொருவன் அஞ்சி நடுங்குவதும், யாரொருவர் மனத்தையும் புண்ணாக்காமல் அனைத்தும் என்நோக்கம் என்ற குறள் ஆணைப்படி பிறர்க்கு உரைக்கின்றனரோ அவரே உரை செய்ய வேண்டும். அவனே மொழியின் மீது நோக்கம் உடையவன் என்கிறார்.

அதே நேரத்தில் மாணாக்கர்களின் நிலையும் ஆசிரியர் வாயிலாக தினமும் பாடம் கேட்கும் முறையே உருவாகியுள்ளது. அதற்குத் தகுந்தாற் போன்றே கல்வித் திட்டமும் நீளமாக அமைக்கப்பட்டுள்ளது அதன் தன்மை மாறவேண்டும். மாணாக்கர்கள் தேர்வு பித்தினால் ஆளுவதால் அறிவுத் தெய்வம் பெருகுகிறது. தேர்வுப் பூதம் காணீர்! நடைமுறை நோக்குழி, மாணக்கரைத் தேர்வுக்குரியோர் என்றும், ஆசிரியரைத் தேர்வு செய்வோர் என்றும் கல்வி வகுப்பாரை தேர்வு வகுப்பார் என்றும், கல்விக் களங்களைத் தேர்வுக் களங்கள் என்றும், கலைமகளைத் தேர்வு மகள் என்றும் அழைக்கும் மரபு இன்றைக்கு மக்களிடத்தில் பெருக்கெடுத்து வந்துள்ளது. மாணாக்கர்கள் மனத்தில் தேர்வு மூச்சுதான் கல்வி மூச்சாக ஓடுகிறது. இதனால் மாணாக்கர்களின் சிந்தனைகள் மழுங்கடிக்கப்படுகின்றன. மாணாக்கர்களும் மணனம் என்னும் தன்முனைப்பில் தனது இன்ப துன்பங்கள் அனைத்தையும் தேர்வின் மீதே செலுத்துகின்றனர். அந்நிலைக்கு அரசும் ஆட்சியாளர்களும் கல்வித் திட்டத்தை தொழில் நோக்கில் செயல்படுத்தி வந்துள்ளனர்.

முடிவுகள்

தமிழகச் சூழலில் கல்வியானது அகத்திணைக் கல்வியாக தொடக்கம் கொண்ட தமிழ்க்கல்வி, தமிழ்நாடு, பின்னைய காலத்தில் அதுவே பாலியற்கல்வியாகவும் வளரவில்லை, அகக்கல்வியாகவும் தமிழகச் சூழலில் வளரவில்லை. அதன் மூலம் மறைக்கப்பட்டு மாணாக்கர்கள் மத்தியில் வெறும் அறிவுக் கல்வியாகவும், தேர்வுக்கல்வியாகவும் வளர்ந்து நிற்கிறது. இதில் மொழிக்கல்விக்கான தரமும் வெறும் தொடக்க கல்வி நிலையிலே செயல்படுத்தப்படுகிறது. அதுவும் முதல் நிலையில் இல்லாமல் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலையாக உள்ளது. மாணாக்கர்களும் ஆய்வாளர்களும் ஆங்கிலக் கல்வியின் மீது வேலை வாய்ப்புப்பெற வேண்டும் என்ற நோக்கில் அடுத்த கட்ட நிலைக்கு மாறத் தொடங்கியுள்ளனர். இதனால் மொழிக்கல்வியின் மோகம் மக்கள் மத்தியில் குறையத் தொடங்கியுள்ளது. தமிழகச் சூழலில் மூதறிஞர் கூறியதுபோன்று அகக்கல்விக்கும், மொழிக்கல்விக்கும் ஒருதுறை சார்ந்த கல்விக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். இதனால் மொழியில் மூலம் தொடர்ந்து நிலைநாட்டப்படும்.

பார்வை நூல்கள்

  1. வ.சுப.மாணிக்கம் – தமிழ்க்காதல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு – டிசம்பர்-2012
  2. வ.சுப.மாணிக்கம் – கம்பர், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு – 1990.
  3. வ.சுப.மாணிக்கம் – மாணிக்கக் குறள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு – 1991.
  4. இ.பா.வேணுகோபால் – கல்வியியல் புதுமைகள். சாரதா பதிப்பகம், 2013, ஜீவா 4 -வது தளம், ஸ்ரீனிவாச காம்ப்ளெக்ஸ், மோகனூர் ரோடு, நாமக்கல் – 637001.

*****

கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.
E-Mail: ramvini2009@gmail.com
செல் , 9751104241

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *