-முனைவர் தீ. சண்முகப்பிரியா

முன்னுரை

‘கற்றறிந்தோர் ஏத்தும் கலி’ என சிறப்பிக்கப்பெறும் செவ்வியல் இலக்கியம் கலித்தொகையாகும்.

‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும் உரியதாகும்’
(தொல்.அகத்.56)

என்ற தொல்காப்பியர் நெறிக்கேற்ப அமைந்த அக இலக்கியம் கலித்தொகையாகும். பாலைத்திணைப் பாடல்களைப் பெருங்கடுங்கோனும், குறிஞ்சித்திணையைக் கபிலனும், மருதத்திணையை மருதன் இளநாகனாரும், முல்லைத்திணையைச் சோழன் நல்லுருத்திரனும், நெய்தலை நல்லந்துவனாரும் பாடியுள்ளனர்.

‘ஏறு தழுவுதல்’ போட்டியில் வென்றவனுக்கே மகளைக் கொடுப்பது;  மகளிர் காளைதனை வென்றவனையே தனக்கேற்ற காளையாக ‘ஏறு தழுவுதல்’ போட்டியின் மூலம் தெரிவு செய்வது – எனும் நிலை தமிழரின் அன்பின் ஐந்திணை நெறிக்கு மாறுபட்டதாக உள்ளது. எனவே, இக்கலித்தொகையிலுள்ள முல்லைக்கலி பாடல்களைக் கொண்டு இத்தொகைநூலைக் காலத்தால் பின்னுக்குத் தள்ளுவோருமுளர்.

சங்கச் சான்றோர்கள் இயற்கைக் காட்சிகளை – நிகழ்ச்சிகளை உற்றுநோக்கி, அவற்றையே தாம் கூறவந்த கருத்துகளை விளக்குவதற்கு உவமையாகப் பெரிதும் பயன்படுத்தி இருக்கின்றனர். ஆனால், கலித்தொகைப் பாடல்களில் புராண, இதிகாசக் கதைநிகழ்ச்சிக் குறிப்புகளும், சிவன், திருமால், முருகன் முதலிய கடவுளர் பற்றிய கதைக்குறிப்புகளும் காட்சிகளை – நிகழ்ச்சிகளை விளக்குவதற்கு உவமைகளாகப் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கலித்தொகைப் பாடல்களில் காட்சிகளை – நிகழ்ச்சிகளை – கருத்துகளை விளக்குவதற்குப் புராண – இதிகாசக் கதைக்குறிப்புகளும், கடவுளர் பற்றிய கதைக்குறிப்புகளும் பயன்படுத்தப்பட்டுள்ளமையை ஆய்ந்து வெளிக்கொணரும் நோக்கில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

மகாபாரதக் கதைக்குறிப்புகள்

வீமன் துச்சாதனனின் நெஞ்சைப் பிளந்தமை

முல்லைக்கலியில் ஓர் ஆயன் ஏறு தழுவின காட்சியை விளக்கும்போது, சோழன் நல்லுருத்திரன், மகாபாரதக் கதை நிகழ்ச்சி ஒன்றை உவமையாக எடுத்துக்காட்டி விளக்குகின்றார்.

ஓர் ஆயன் ஏறு தழுவும்போது, எருதின் நோக்கிற்கு அஞ்சாமல், அதனை அடக்க அதன்மேல் பாய்கிறான். அவ்வெருது, அவனைத் தன்னுடைய கொம்புகளுக்கிடையே கொண்டு, அவனுடலைக் குத்திக் குலைத்து, கம்பீரமாக நிற்கின்றது. இந்த நிகழ்ச்சிக்கு உவமையாக,  வீமன் திரௌபதியின் கூந்தலைப் பற்றி இழுத்த துச்சாதனனின் நெஞ்சைப் பிளந்து, பகைவரின் நடுவில் தன்னுடைய வஞ்சினத்தை நிறைவேற்றிய மகாபாரதக் கதை நிகழ்ச்சியை,

‘அம்சீர் அசைஇயல் கூந்தற் கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்து இட்டு நேரார் நடுவண் தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்’ (101:18-20)
எனும் அடிகளில் குறிப்பிடுகின்றார்.

அசுவத்தாமன் பகைவரின் தலையைத் திருகியமை

பொதுவன் ஏறு தழுவும்போது, எருதின் சினத்தைப் பொருட்படுத்தாது அதன்மீது பாய்கிறான். அவ்வெருது அவனைச்சாடி, கொம்பின் நுனியினால் அவனைக் குத்திக் குலைக்கின்றது. இக்காட்சியானது, கரிய இருள் என்றும் கருதானாய், நள்ளிரவில் வந்து, தன் தந்தையைக் கொன்றவனைத் தன் ஆற்றலின் வலிமையினால் தலையைத் திருகிய அசுவத்தாமனைப் போன்றிருந்தது என்பதனை,

‘ஆர்இருள் என்னான் அருங் கங்குல் வந்து தன்
தாளின் கடந்து அட்டு தந்தையைக் கொன்றானைத்
தோளின் திருகுவான் போன்ம்’ (101:30-32)
எனும் அடிகளில் காட்சிப்படுத்துகின்றார்.

வீமன் துரியோதனனை வீழ்த்தியமை

பாரதப்போரில் வீமனுக்கும் துரியோதனனுக்கும் கதாயுதப்போர் நிகழ்ந்தது.  ஒவ்வொருவரும் தன்னுடைய உயிர்நிலை இது என்று கூறிக்கொண்டு போர் புரிந்தனர். துரியோதனன் தன்னுடைய உண்மையாக உயிர்நிலையை மறைத்துக் கூறினான். வீமன் பலமுறைத் தாக்கியும் துரியனை வீழ்த்த முடியவில்லை. இறுதியில் கண்ணன் தன் துடையைக் குறிப்பாகத் தட்டிக் காட்டினான். அதனைப் புரிந்து கொண்ட வீமன்,  துரியோதனனைத் துடையிலே அடித்து வீழ்த்தினான். இப்பாரதக் கதை நிகழ்ச்சியைப் போன்று,  யானையினது முறம் போன்ற செவியை மறைப்பாகக் கொண்டு பாய்ந்து,  மாறுபாடு செய்த புலியைச் சினந்து தாக்கிய யானை, தன்னுடைய கூரிய கோட்டினது நுனியால் அப்புலியைக் குத்தி, புலியினது மருமத்தைத் திறந்து மாறுபாடு தீர்த்தது என்பதனை,

‘முறம்செவி மறைப் பாய்பு முரண் செய்த புலிசெற்று,
மறம்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறக்கு அறுத்திடுவான் போல் கூர்நுதி மடுத்து அதன்
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள்மருப்பு எழில் யானை’ (52:1-4)
எனும் அடிகளில் குறிப்பிடுகின்றார்.

பாரதப் போர்க்களத் தோற்றம்

ஏறு தழுவிய பின்னர்த் தொழுவின் தோற்றம், எலும்புகள் முறிந்து முறிந்து,  தசைகள் சிதறிப் பரவிக் கிடந்தன. இடிபோன்ற முழக்குடன் பல்வேறு இசைக்கருவிகள் முழங்கி ஆரவாரத்துடன் காணப்பட்டன. தொழுவின் இத்தோற்றமானது, பாண்டவரும் நூற்றுவரும் போரிட்ட போர்க்களத் தோற்றத்தை ஒத்திருந்தது என்பதனை,

‘கோடுஇடை நுழைபவர் கோள் சாற்றுபவரொடு –
புரிபுமேல் சென்ற நூற்றுவர் மடங்க,
வரிபுனை வல்வில் ஐவர் அட்ட
பொருகளம் போலும்,  தொழுஉ’(104:56-59)
என்று குறிப்பிடுகின்றார்.

சிவபெருமான் பற்றிய புராணக்கதைக் குறிப்புகள்

சிவன் கூற்றுவனின் நெஞ்சைப் பிளந்து, குடலைக் கூளிக்கு இட்டமை

பொதுவன் ஏறு தழுவும்போது, எருதானது பொதுவனைச் சாடி, அவன் குடல் சரியக் குத்திக் குலைத்ததாம். இக்காட்சியானது, சிவபெருமான், ஊழி முடிவிலே, எல்லா உயிரினங்களையும் அழிக்கும் எருமைக்கடாவின்மேல் ஏறிவரும் கூற்றுவனின் நெஞ்சைப் பிளந்து, அவன் குடலைக் கூளிக்கு இட்டு, அதன் வயிற்றை நிரப்புவானாம் – இப்புராணக்கதை நிகழ்ச்சியை ஒத்திருந்தது என்பதனை,

‘படர் அணி அந்தி பசுங்கட் கடவுள்
இடரிய ஏற்று  எருமை நெஞ்சு இடந்து இட்டு
குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம்’(101:24-26)
      எனும் அடிகளிற் குறிப்பிடுகின்றார்.

சிவன் கூற்றுவனைக் காலால் உதைத்து நெஞ்சைப் பிளந்தமை

பொதுவன், காற்றைப்போல் விரைந்து வருகின்ற சினமுடைய ஏற்றைக் களத்தகத்தே, அதன் வலிமை அடங்கத் தழுவி, அதனை வருத்தி அதன்மேல் ஏறி நிற்கின்றான். பொதுவனின் இச்செயலானது, சிவபெருமான், எருமைக்கடாவின்மீது இவர்ந்து செல்லுகின்ற கூற்றுவனுடைய நெஞ்சத்தைக் காலால் உதைத்துப் பிளந்திட்டுச் சீற்றத்துடன் அவனுடைய அரிய உயிரைக் கொன்ற செயலோடு ஒத்திருந்தது என்பதனை,

‘ஏற்றெருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு,
சீற்றமோடு ஆர்உயிர் கொண்ட ஞான்று,  இன்னன்கொல்
கூற்று என உட்கிற்று என் நெஞ்சு’(103:43-45)
எனும் அடிகளில் குறிப்பிடுகின்றார்.

சிவன் மூவெயில்களை அழித்தமை

ஞாயிறு தன் செறிந்த கதிர்களை எவ்விடத்தும் பரப்பி, சுடுகின்றமையின், அத்தீயானது, காட்டுத்தீப்போல எழுந்து மலையிடத்து எங்கும் பரந்து, விசும்புர ஓங்கி வெம்மையைச் செய்தது. ஞாயிற்றின் இச்செயலானது, கொன்றை மாலையை அணிந்த, இறைவன் அசைகின்ற எயில்களை அழித்தமையினால் தோன்றிய வெம்மை உடைய நெருப்பினைப் போன்றிருந்தது – என்பதனை,

‘அயம்திகழ் நறுங் கொன்றை அலங்கல் அம் தெரியலான்
இயங்கு எயில் எயப் பிறந்த எரிபோல எவ்வாயும்’(150:1-2)
     எனும் அடிகளில் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

சிவன் கங்கையைச் சடையில் சூடியமை

தலைவன் பொருள் ஈட்டுதற்காகத் தலைவியைப் பிரிந்துள்ளான். தலைவனைப் பிரிந்து ஆற்ற இயலாதவளாய் உள்ள தலைவியைத் தோழி ஆற்றுவிக்கின்றாள். அவ்வாறு ஆற்றுப்படுத்தும்போது, தலைவியின் உடல் பசலை பாய்ந்து நிறம்மாறிக் காணப்படுகின்றது. தலைவியின் நிறம், கங்கையைச் சடையிலே மறைத்துள்ள சிவனது அணி போன்று உள்ளதென்றும், இத்தன்மையளாய தலைவியைத் தலைவன் கைவிடமாட்டான் என்றும் கூறி ஆற்றுவித்ததனை,

‘அறம் துறந்து ஆயிழாய்! ஆக்கத்தில் பிரிந்தவர்
பிறங்கு நீர் சடைக்கரந்தான் அணி அன்ன நின் நிறம்
பசந்து  நீ இனையையாய்  நீத்தலும் நீப்பவோ?(150:8-10)
             எனும் அடிகளில் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். மேலும், அவளின் நிறமானது, அழகிய வடிவுடைய ஏற்றினை ஊர்தியாக உடையவனின் ஒளிபொருந்திய அணி நகைத்தலைப் போன்றுள்ளது என்பதனை,
‘உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்ன  நின்
உரு இழந்து இனையையாய் உள்ளலும் உள்ளுபவோ? (150:13-14)
எனும் அடிகளில் குறிப்பிடுகின்றார்.

சிவன் சண்பகப்பூ அணிந்துள்ளமை

ஆதிரை நாளினையுடைய சிவபெருமானது திருமார்பு அழகுபெறுமாறு, குளிர்ந்த பெரிய சண்பகப்பூ பருவம் பொய்யாது மலர்வதைப்போல, நம் தலைவரும் சொல்லிச் சென்ற பருவம் வந்தமை கண்டு, தவறாது நம்மை வந்தடைவார் என்று கூறி, தோழி ஆற்றுப்படுத்துகிறாள்.  இதனை,

அரும்பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த
பெருந்தண் சண்பகம் போல ஒருங்கு அவர்
பொய்யார் ஆகுதல் தெளிந்தனம் (150:19-21)
எனும் அடிகள் குறிப்பிடுகின்றன.

சிவன் தலைக்கோலங்களின் தோற்றம்

தலைவனைப் பிரிந்த தலைவியின் கூந்தல் காய்ந்து காணப்படுதலைக் கண்ட தோழி, அவளின் கூந்தலானது, பிறைத்திங்களைக் கண்ணியிலே சூடியவனின் பொன்னாற் செய்த தலைக்கோலங்கள் தாழ்ந்து தொங்கினாற்போன்று காணப்படுவதாகக் கூறியதனை,

புதுத்திங்கட் கண்ணியான் பொன்பூண் ஞான்று அன்ன நின்
கதுப்பு உலறும் கவினையாய் காண்டலும் காண்பவோ?(150:17-18)
எனும் அடிகள் கூறுகின்றன.

சிவன் கல்லால மரநிழலில் சனகாதி முனிவர்கட்கு வேதம் உபதேசித்தமை

சிவன் தான் கல்லால மரத்தின் நிழலில் சனகாதி முனிவர்களுக்கு வேதம் உபதேசித்தபோது, தன்முன் நீர் நிறைந்த குண்டிகை எடுத்து வைத்திருந்தனன். இந்நிகழ்ச்சி நெய்தல்நிலத் துறைவனைக் குறிப்பிடும்போது, மலர்கள் மலர்ந்த வளைந்த தாழையில் பழங்கள் தொங்குகிற காட்சியைப் போன்று இருந்தது என்பதனை,

சீர் மிகு சிறப்பினோன் மரமுதல் கைசேர்த்த
நீர் மலி கரகம்போலப் பழம்தூங்கு முடத்தாழை (133:3-4)
                                    எனும் அடிகளின்மூலம் சிவன் கல்லால மரநிழலில் வீற்றிருந்து, சனகாதி முனிவர்களுக்கு வேதம் உபதேசித்த புராணச் செய்தியை  நல்லந்துவனார் குறிப்பிடுகின்றார்.

திருமால் பற்றிய புராணக் குறிப்புகள்

திருமால் குதிரையினுடைய வாயைப் பிளந்தமை

பொதுவன் ஏறு தழுவும்போது, மிகுந்த வேகத்துடன் தன்னை எதிர்த்துவந்த ஏற்றைச் செவியடியிற் பற்றிக் கொண்டு, அதன் வலிமையை அடக்கித் தழுவுகிறான். இக்காட்சிக்கு, பகைவர் விடுத்த பிடரிமயிர் கொண்ட குதிரையினுடைய வாயைப் பிளந்து கொன்ற திருமாலின் செயலினை,

‘மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை
வாய்பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன் கொல்
மாயோன் என்று உட்கிற்று என் நெஞ்சு’(103:53-55)
எனும் அடிகளில் உவமையாகக் குறிப்பிடுகின்றார்.

திருமால் பாடலோடு யாழிசையும் கேட்டுப் பள்ளி கொண்டிருந்தமை

தலைவி தலைவனைச் சந்திக்க இயலாத வண்ணம் காவல் மிகுந்தமையால் ஆற்றாத தலைவி, தலைவனிடத்துச் சென்ற நெஞ்சினை நோக்கி, மனம் அழிந்து கூறுகின்றாள். கரிய கொம்புகளையுடைய புன்னை மரத்தின் கிளைகள்தோறும் மலர்கள் மலரும் காலத்தை எதிர்பார்த்து, அதன் தேனை உண்ண சுரும்புகள் ஆரவாரிக்கின்றன. அதனோடு இயைந்து தும்பிகளும் ஊதுகின்றன. இவையிரண்டும் இயைந்து இம்மென்று ஒலிக்கும். இக்காட்சியானது, பாடலோடு யாழிசையும் கேட்டுப் பள்ளி கொண்டிருக்கும் திருமாலைப் போன்றுள்ளதென்றும், எப்பொழுதும் ஒலித்துக்கொண்டிருக்கும் பெரிய கடலும் ஒலியடங்கி, உறக்கம் மேற்கொள்வதைப் போன்றிருந்ததென்றும் கூறுவதனை,

அரும் பொருள் மரபின் மால்யாழ் கேளாக் கிடந்தான் போல்
பெருங்கடல் துயில் கொள்ளும் வண்டு இமிர் நறுங்கானல்(123:4-5)
  எனும் அடிகளில் ஆசிரியர் கூறுகின்றார்.

மாயோன் மல்லர்களை அழித்தமை

மாயோன், பகையாய மல்லர்களின் வலிமையை அழித்தனன். பகைவர் ஒருசேர வந்து சினந்து போரிட்ட காலத்தே அவர் ஓடும்படியாக அவர்தம் கொல்யானையின் அழகிய மத்தகத்திலே சக்கரப்படையை ஆழ்த்தியதைப்போல, கதிரவன் தான் பரப்பிய ஒளிக்கற்றைகளைத் தன்னிடத்தே வாங்கிக்கொண்டு மேற்றிசையில் மறைந்தான் என்பதை,

‘மல்லரை மறம் காய்த்த மலர்த்தண்கார் அகலத்தோன்
ஒல்லாதார் உடன்று ஓட உருத்து உடன் எறிதலின்
கொல் யானை அணிநுதல் அழுத்திய ஆழிபோல (134:1-3)
         எனும் அடிகளில் கூறுகின்றார்.

திருமாலின் மார்பிடத்தே திருமகள் உறைந்துள்ளமை

தலைவன் வரைவிடை வைத்துப் பிரிவு நீட்டித்த இடத்து, தலைவி பிரிவை  ஆற்றாதாளாகி, நாணம் கடந்து,  உள்ளம் கலங்கி, கூறத்தகாதன கூறி, அறிவு அழிந்து மொழிந்தனள். தலைவன் வந்து சேர்ந்த அளவில் கலக்கம் ஒழியத் தெளிந்து, அவன் மார்பிடத்தே சேர, ஞாயிற்றின் முன் இருள் கெடுமாறுபோல, அவள் வருத்தம் கெட்டது. இக்காட்சி, திருமாலின் மார்பிடத்தே திருமகள் சேர்ந்ததைப் போன்றிருந்தது. இதனை,
‘பாயல் கொண்டு உள்ளாதவரை வரக் கண்டு
மாயவன் மார்பில் திருப்போல் அவள் சேர
ஞாயிற்று முன்னர் இருள்போல மாய்ந்தது – என்
ஆயிழை உற்ற துயர்’ (145:63-66)
எனும் அடிகளில் கூறுகின்றார்.

திருமாலின் திரிவிக்கிரம அவதாரம்

நெய்தல் நிலத்தலைவனாகிய சேர்ப்பனைக் கூறும்போது, திருமாலுக்கு மூத்தவனான பால்நிற மேனியையுடைய பலராமன் அழகுபெற அணிந்துள்ள நீலநிற ஆடையைப்போல, வெண்திரையை உடைய கடல்நீரை உடைய சேர்ப்பன் என வருணிக்கிறார். பலராமனுடைய தம்பியாகிய திருமாலைக் குறிப்பிடும்போது, திருமால் தன் மூன்றடியால் உலகளந்த திரிவிக்கிரம அவதாரச் செய்தியை,

ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முதுமுறைப்
பால் அன்ன மேனியான் அணி பெயத் தைஇய (124:1-2)
               எனும் அடிகளில் குறிப்பிடுகிறார்.

தொகுப்புரை

கலித்தொகைப் பாடல்களைப் பாடிய சங்கப்புலவர்கள், நிகழ்ச்சிகளை – கருத்துகளை விளக்குவதற்கு, தாங்கள் சார்ந்திருந்த சமயக்கடவுளர்கள் பற்றிய தொன்மங்களை உவமைகளாகப் பெரிதும் பயன்படுத்தியுள்ளனர். ‘முல்லைக்கலிப் பாடல்களில் திருமால் பற்றிய தொன்மக்கதைகளும், மகாபாரதக் கதைக்குறிப்புகளும் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளன. இத்தொன்மக் கதைகளின்வழி, புலவர்கள் காட்சிகளைச் சித்திரிப்பதால் அவை, கற்போர் மனதில் சித்திரங்களாகப் பதிந்து அக்கருத்துகள் – நிகழ்ச்சிகள் நன்கு விளங்குகின்றன.

பயன்பட்ட நூல்கள்:

  1. தொல்காப்பியம், NCBH, Chennai.
  2. கலித்தொகை, NCBH, Chennai.

*****

கட்டுரையாளர் – முதுகலைத் தமிழாசிரியர்,
அரசு மேனிலைப்பள்ளி,  மேல்கொட்டாய்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
மின்னஞ்சல் : tspriya.3@gmail.com
கைப்பேசி எண் : 9488345391

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கலித்தொகையில் தொன்மங்கள்

  1. மக்கள் நன்கறிந்த செய்திகளை நிகழ்ச்சிகளை உவமைகளை எடுத்துக்கூறி, சங்கச் சான்றோர் தமது பாடல்களில் தாம் கூறவந்த கருத்துக்களை விளக்கிக் கூறுவர். இவ்வடிப்படையில், கலித்தொகை பாடல்களைப் பாடிய புலவர்கள் கடவுளர் பற்றிய செய்திகளையும், இராமாயண-மஹாபாரதக் கதை நிகழ்ச்சிகளையும் தாம் கூற வந்த கருத்துகளை விளக்குவதற்கு உவமையாக பயன்படுத்தியுள்ள திறத்தை முனைவர் தீ சண்முகப்ரியா அவர்கள் இக்கட்டுரையில் தக்க சான்றுகளின் வழி எடுத்துரைத்திருக்கிறார். கட்டுரையாளருக்குப் பாராட்டுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *