Category: Featured

Featured

  • பழநி முருகன் கோவில்

    திருமதி.ச.ஜெயந்திமாலா
    வரலாற்றுத்துறை,
    உதவிப்பேராசிரியர்,
    அருள்மிகு பழனியாண்டவர்
    மகளிர் கலைக்கல்லூரி,பழனி.

    ———————————–
    தமிழகத்தில் உள்ள மலைக்கோவில்களில் பழநி முருகன் கோவிலும் ஒன்று. பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடு களுள் மூன்றாவது திருத்தலம்- ‘ஆவினன் குடி’யாகிய பழநி. இந்தத் தலம், உடலின் உயிர்நாடியான மணிபூரகத்தை (இதயம்) குறிப்பது என்பர். குரா மரத்தடியில் முருகன், குரா வடிவேலனாக அகத்தியருக்கு தமிழை உபதேசித்த தலம் இது. வையாபுரி’ என்றும் பழநிக்கு ஒரு பெயர் உண்டு மலையடிவாரத்தில் மலையைச் சுற்றியுள்ள நகர்- ‘ஆவினன்குடி’ என்றும், மலை- பழநி மலை என்றும் அழைக்கப் பட்டன. தற்போது நகரம் மற்றும் மலையையும் சேர்த்தே ‘பழநி’ என்கின்றனர். ஒரு தலத்தில் இரு ஆலயங்கள் கொண்ட படை வீடு பழநி மட்டுமே. ‘பழனங்கள்’ (வயல்கள்) சூழ்ந்ததால், இந்தத் தலம் ‘பழநி’ எனப்பட்டது.

    பழநியில் மலைக்கோயில் தவிர ஆவினன்குடி கோயில், பெருவுடையார்- பெரியநாயகி கோயில், மாரியம்மன், அங்காளம்மன், படிப்பாறைக் காளியம்மன் ஆகிய அம்மன் கோயில்களுடன், விநாயகர் கோயில்கள் ஐந்து மற்றும் வேணுகோபாலர், லட்சுமி நாராயணர், சங்கிலி பரமேஸ்வரர், அகோபில வரத ராஜ பெருமாள் ஆகிய கோயில்களும் உள்ளன. கொடைக்கானல் மலைக்கும் மேற்கு மலைத் தொடர்ச்சியில் இடம்பெற்றுள்ள வராக மலைக்கும் நடுவே அமைந்துள்ளது பழநி மலை. இது கடல் மட் டத்தில் இருந்து சுமார் 1,500 அடி உயரம் கொண்டது. பூமி மட்டத்திலிருந்து உயரம் 450 அடி. கோவில் அமைந்திருக்கும் மலையின் உயரம் 150 மீ. மொத்தம் 693 படிக்கட்டுகள் ஏறினால். மலையைச் சுற்றி 2.4 கி.மீ கிரிவலப்.பாதை உள்ளது. கொடைக்கானல்- குறிஞ்சி ஆண்டவர் கோயி லும், பழநி கோயிலும் நேர்க் கோட்டில் அமைந்து உள்ளன. குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் இருந்து பழநி மலையைக் காண முடியும்!

    அருணகிரியார்

    அருணகிரியார் அதிசயம் அநேகமுற்ற பழநி மலை’ என்று சிறப்பிக்கிறார் . இவர், பழநித் திருத்தலம் பற்றித் திருப்புகழில் 90 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். அவற்றில் பழநியை ‘ஆவினன்குடி’ என்றே குறிப்பிடுகிறார். மேலும் அவர், பழநி முருகனை ஞானமூர்த்தி, ஞானநாதா, ஞானாசிரியன், ஞானசொரூபன் என்றெல்லாம் அழைத்து மகிழ்கிறார். அருணகிரிநாதர் பழநி தண்டாயுதபாணியிடமிருந்து ஜப மாலை பெற்றார். இதை, ‘ஜப மாலை தந்த சற்குருநாதா திரு ஆவினன்குடி பெருமாளே’ என்ற திருப்புகழ் சொற்றொடரில் இருந்து அறியலாம்.

    தல வரலாறு:

    இந்தக் கோவிலின் வரலாறு ஞானப்பழத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கலகம் பண்ணுவதற்கென்றே பிறந்தவர் நாரதர். ஞானப்பழத்தை எடுத்துக்கொண்டு கைலாச மலையில் இருக்கும் சிவபெருமானையும் பார்வதியையும் காண சென்றார். பழத்தைக் கொடுத்து இந்தப் பழத்தை உண்டால் அதிக ஞானம் பெறலாம் என்று கூறினார். மேலும் முழுப்பழத்தையும் ஒருவரே உண்ணவேண்டும் என்றும் விதி விதித்தார். சிவபெருமானோ தன் மகன்களான முருகனுக்கும், பிள்ளையாருக்கும் பகிர்ந்தளிக்க விரும்பினார். பின்னர்த் தன் மகன்கள் இருவரையும் அழைத்து உலகத்தை மூன்று முறை சுற்றி முதலில் வருபருக்கு ஞானப்பழம் பரிசு என்றார் சிவபெருமான். இதனைக் கேட்டு முருகன் தன் வாகனமான மயிலை எடுத்துக்கொண்டு உலகத்தைச் சுற்ற கிளம்ப, பிள்ளையாரோ தந்தையும் தாயுமே உலகம் என்று கூறி சிவபெருமானையும் பார்வதியையும் சுற்றி வந்து ஞானப்பழத்தை பெற்றுக்கொண்டார். உலகத்தை வலம் வந்து ஞானப்பழத்தை கேட்ட முருகன், நடந்தது அறிந்து, கோபமுற்று இந்த மலையில்வந்துதங்கிவிட்டார். சிவனும் பார்வதியும் இங்கு வந்து முருகனை சமாதானபடுத்தினர். ஞானப்பழமான உனக்கு எதற்கு இன்னொரு பழம் என்று கூறி சமாதானம் செய்தனர். முருகனை “பழம் நீ” என்றதால் இந்த இடம் பழநி எனப் பெயர் பெற்றது. மலை அடிவாரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாய்தசுவாமி கோவிலும் உள்ளது. இந்தக் கோவிலே அறுபடை வீடுகளில் மூன்றாவதாக் கருதப்படுவது.

    அமைவிடம்
    இதற்கும் ஒரு கதை உண்டு. அகஸ்திய மாமுனிவர் தன் இருப்பிடத்திற்குச் சிவகிரி, சக்திகிரி என்னும் இரண்டு மலைகளை எடுத்துச் செல்ல விரும்பினார். தன் சேவகனான இடும்பனிடம் இந்த மலைகளைத் தூக்கி வரச்சொன்னார். அவனும் காவடி போல் இரண்டு மலைகளையும் கம்பில் கட்டி தோளில் சுமந்து சென்றான். செல்லும் வழியில் தூக்கமுடியாமல் சோர்வுற்று மலையைக் கீழே வைத்தான். அச்சமயம் பார்த்து முருகன் ஞானப்பழம் கிடைக்காத கோபத்தில் சிவகிரி மலையின் மீது ஏற, இடும்பனால் மலையைத் தூக்க முடியவில்லை. கோபமுற்ற முருகன் இடும்பனை அழித்தார்.. பின்னர் இடும்பனை தன் பக்தனாக ஏற்றுக் கொண்டான் முருகன். இடும்பனைப் போல் காவடி சுமந்து தன்னை வழிபடுவருக்குச் சகல செளபாக்கியங்களும் உண்டாகும் என வரமளித்தான். இன்றும் மலை ஏறும் வழியில இடும்பனுக்குக் கோவில்உண்டு.

    ஆவினன்குடி

    ‘சித்தன் வாழ்வென்று சொல்கிற ஊர் முன் காலத்து ஆவினன்குடி என்று பெயர் பெற்றிருந்தது!’ சேரன் செங்குட்டுவனின் தாத்தா வேளாவிக்கோமான் ஆட்சி செய்த பகுதி பழநி. இவன் வழியில் வந்தவன் வையாவி கோப்பெரும் பேகன். இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். ஆவியர் குல தலைவனான இவனது தலைநகராகத் திகழ்ந்ததால், பழநிக்கு ‘ஆவினன்குடி’ என்ற பெயர் வந்ததாம். அடிவாரக் கோயிலில் உள்ள முருகப் பெருமானை நக்கீரர் பாடியுள்ளார். இங்கு மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார் முருகன். இதை ‘ஆதிகோயில்’ என்கிறார்கள்.

    ஒரு முறை கோபம் கொண்ட திருமால், திருமகளைப் புறக்கணித்தார். தனது பதியை அடைய திருமகள், இங்குத் தவம் இருந்து பலன் பெற்றாள். விஸ்வாமித்திரர்- வசிஷ்டர் ஆகியோருக்கு இடையே நடந்த போரில் விஸ்வாமித்திரரது ஆயுதத்தை வென்றதால் அகம்பாவம் கொண்டது காமதேனு. இதனால் ஏற்பட்ட பாவம் தீர காமதேனு வழிபட்ட தலம் இது. ‘உயிர்கள் வாழ்வது என்னால்தான்!’ என்று கர்வம் கொண்ட சூரிய பகவானைச் சபித்தார் சிவபெருமான். சாபம் தீர இங்கு வந்து பூஜித்தான் சூரியன்.

    சிவபெருமானுக்குத் தெரியாமல், தட்ச யாகத்தில் கலந்து கொண்டதால் ஈசனிடம் தண்டனை பெற்ற அக்னியும், வாயு பகவானும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். இப்படித் திரு= லட்சுமி, ஆ= காமதேனு, இனன்= சூரியன், கு= பூமி, டி= அக்கினி- வாயுபகவான் ஆகியோர் தவமிருந்து பலன் பெற்றதால் பழநி திருஆவினன்குடி என்று ஆனது.
    அகத்தியர், ஒளவையார், நக்கீரர், சிகண்டி முனிவர், அருணகிரிநாதர், கச்சியப்பர், பொய்யாமொழிப் புலவர், முருகம்மை, மாம்பழக் கவிச்சிங்க நாவலர், பகழிக் கூத்தர், சாது சாமிகள், பாம்பன் சாமிகள், வள்ளிமலை சுவாமிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் பாடிய திருத்தலம் இது.

    பழநி மலை
    ஒரு முறை நாரதரை வாழ்த்தி அபூர்வ மாங்கனி ஒன்றைக் கொடுத்தார் பிரம்மன். அந்த ஞானப் பழத்துடன் ஈசனை தரிசிக்கச் சென்றார் நாரதர். அதைத் தம் மைந்தர்களுக்குத் தர விரும்பினார் ஈசன். ஆனால், பழத்தை ஒருவருக்கே வழங்க முடியும். இதற்காகக் கணபதிக்கும் கந்தனுக்கும் போட்டி வைக்கப்பட்டது. ‘யார் முதலில் உலகை வலம் வருகிறார்களோ அவருக்கே கனி!’’ என்றார் சிவ பெருமான்.‘பெற்றோரே உலகம்’ என்று தாய்- தந்தையரை வலம் வந்து விநாயகர் பழத்தைப் பெற்றுக் கொண்டார். மயில் வாகனத்தில் பயணித்துத் தாமதமாக வந்து சேர்ந்த முருகன், பழம் கிடைக்காததால் கோபித்துக் கொண்டு, கோவணத்துடன் தண்டாயுதபாணியாக, தென்திசையில் வந்து சேர்ந்த இடம் சிவகிரி. சிவபெருமானும் உமையவளும் அங்கு வந்து, ‘அடியாருக்கு ஞானம் அருளும் ஞானப்பழம் நீ’ என்று முருகனை சமாதானப் படுத்தினர். அதனால் முருகன் வசிக்கும் மலை, ‘பழம் நீ’ என்று ஆகி, பிறகு ‘பழநி’ என்று மருவியது என்பர். கருவறையின் கிழக்குப் பகுதி மாடத்தில் ஊது வத்தி தூபம் காட்டி, இஸ்லாமியரும் ‘பழநி பாபா’ என ஓதி வழிபடுகின்றனர்.
    காலையில் முருகனை ஆண்டிக் கோலத்தில் தரிசிப்போர், மாலையில் ராஜ அலங்காரத்தையும் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். இதனால் குடும்பத்தில் சுப நிகழ்வு நடக்கும்.

    கிரிவலப்பாதை

    பழநியின் கிரிவலப் பாதை சுமார் இரண்டேகால் கி.மீ. தூரம் உள்ளது. கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மலையின் நான்கு திசைகளிலும் மயில் மண்டபமும், அவற்றில் கல்லால் ஆன பெரிய மயில் உருவங்களும் உள்ளன.
    கிரிவலப் பாதையில் மதுரைவீரன் சுவாமி, ஐம்முக விநாயகர் கோயில், சந்நியாசியப்பன் கோயில், அழகு நாச்சியப்பன் ஆலயம் ஆகியன உள்ளன. தவிர நந்தவனங்கள், திருக்கோயிலின் ஏழை மாணவர் இல்லம், நாகஸ்வர- தவில் இசைப்பள்ளி, சண்முக விலாசம் (அன்னதான சமாஜம்), நந்தனார் விடுதி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
    697 படிகள் கொண்டது பழநி மலை. மலைக்கோயிலை அடைய நான்கு தடங்கள் உண்டு. அவை: படிக்கட்டுப் பாதை, யானைப் பாதை, இழுவை ரயில் பாதை மற்றும் ரோப் கார் பாதை.
    யானைப் பாதையின் தொடக்கத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் உள்ளது. முருகனின் காவல் தெய்வமான இவரை வணங்கி விட்டே பக்தர்கள் மலையேறத் தொடங்குவர். வண்ண சரபம் தண்டபாணி சுவாமிகள் இவரை வணங்கிச் சிறப்பித்துள்ளார்.

    இழுவை ரயில்

    இந்தியாவிலேயே முதன் முதலாகப் பழநி ஆலயத்தில் இழுவை ரயில் அறிமுகமானது. ஆண்டு 1966. இதற்குக் காரணமானவர் காமராஜரது அமைச் சரவையில் அமைச்சராக இருந்த பக்தவச்சலம். இரண்டாம் வழித்தடம் 1981-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் இரு பெட்டிகளில் 32 பேர் பயணிக்கலாம். மலைக்குச் செல்ல சுமார் 8 நிமிடங்கள் ஆகின்றன. இந்த இழுவை ரயில்கள் காலை 5 முதல் இரவு 9 மணி வரை இயங்குகின்றன. விசேஷ காலங்களில் காலை 4 மணி முதல் இயங்கும்.

    திரு மஞ்சனப் பாதை’

    முருகனுக்கு அபிஷேகம் செய்ய நீர் மற்றும் பூஜைப் பொருட்கள் எடுத்து வருவதற்காக ‘திரு மஞ்சனப் பாதை’ என்பது மலையின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த வழியைப் பயன்படுத்துவதில்லை.

    தீர்த்தங்கள்

    பழநி அடிவாரத்தில் உள்ள தீர்த்தங்கள் மூன்று. அவை: வையாபுரிக் குளம், சண்முக நதி, சரவணப் பொய்கை. சரவணப் பொய்கை ஒரு காலத்தில் கல் கிணறாக இருந்ததாம். சட்டிசாமி எனும் துறவி பிச்சை எடுத்த பணத்தால் அதைப் புதுப்பித்தாராம். பழநி மலையில் ஆசிமுகத் தீர்த்தம், தேவ தீர்த்தம், அமுத தீர்த்தம், ஞானத் தீர்த்தம், பிரம்ம தீர்த் தம் ஆகிய புண்ணியத் தீர்த்தங்கள் உள்ளன.

    மரபு.

    புனித நீராடியபின் பாத விநாயகர், குழந்தை வேலாயுத சுவாமி, பெரிய நாயகி அம்மன்- பெரு வுடையார் கோயில்கள் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள கோயில்களை வழிபட்ட பின்னர் மலை ஏறி தண்டாயுதபாணி சுவாமியை வணங்க வேண்டும் என்பது மரபு.

    சிற்பங்கள்

    மலையடிவாரத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் மண்டபத்தில் சூரசம்ஹாரம், சுப்ரமண்யர்- தேவசேனை திருமணக் காட்சிகள், காளத்திநாதருக்குக் கண்களை அப்பும் கண்ணப்பன் மற்றும் வீரபாகு தேவர் ஆகியோரது சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

    மூலவர்சிற்பம்

    இங்கு இருக்கும் மூலவர் சிலை பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான போகர் என்பவரால் உருவாக்கப்பட்டது. 4448 அறிய மூலிகைகளைக் கொண்டு இவர் ஒன்பது விதமான நஞ்சு பொருட்களை உருவாக்கினார். பின்னர் இந்த ஒன்பது விதமான நஞ்சு பொருட்களைக் கலந்து நவபாஷானம் என்னும் மூலிகையை உருவாக்கினார். பல்வேறு நோய்களுக்கு இந்த மூலிகையைப் பயன்படுத்தலாம் என்றும் கண்டறிந்தார். அப்படிச் சிறப்பு வாய்ந்த நவபாஷாணத்தைக் கொண்டு முருகன் சிலையை அவர் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அந்தச் சிலையே தற்போது பழநி முருகனாக நமக்குக் காட்சியளிக்கிறது. பஞ்சாமிர்தத்தாலும், பாலாலும் அபிஷேகம் செய்தால் மருந்து வெளிவரும் என்பதை உணர்ந்து, தினமும் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார் போகர். தன்னுடைய சமாதியை பழநி கோவிலிலேயே அமைத்துக்கொண்டார்.

    சோழர்கள் காலத்தைச் சேர்ந்த சோமஸ்கந்தனின் வடிவ அமைப்புக்கள்

    சோழர்கள் காலத்தைச் சேர்ந்த பித்தளை உலோகங்களில் செதுக்கப்பட்டு உள்ள சோமஸ்கந்தனின் வடிவ அமைப்புக்கள் அவை எந்த அளவு கலை நுணுக்கமாகச் செய்யப்பட்டு உள்ளன என்பதற்கு எடுத்துக் காட்டாக உள்ளன. அவற்றில் உள்ள வடிவமைப்புக்கள் ஸ்கந்தனை நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும் மற்றும் நடனமாடும் நிலையிலும் காட்டுகின்றன. சோழர்கள் காலத்து ஆலயங்களில் மிகச் சிறப்பானது பல்லவநீஸ்வரத்தில் உள்ள பல்லவநீஸ்வர ஸ்வாமி ஆகும். அந்தப் பெயரே அது பல்லவ மன்னர்களின் காலத்து சிலை என்பதைக் காட்டுகின்றது.
    பல்லவன் காலம் முதல் சோழர்கள் காலம் வரை பித்தளை உலோகத்தினால் செய்யப்பட்டு உள்ள வடிவமைப்புக்கள் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்களின் கலை வண்ணத்தில் உள்ளது. அவைகளில் சிவன் மற்றும் பார்வதிக்கு இடையே அமர்ந்து உள்ள முருகன் ஏதோ யோசனையில் ஆழ்ந்தபடி தன்னை மறந்த நிலையில் காணப்படுகிறார். அது பல்லவ காலத்திய சிலை வடிவமைப்புடன் ஒத்து உள்ளது. (சிவராமமூர்த்தி 1963 -58). ஸ்கந்தனின் காதுகளைப் ‘பத்திரக் குண்டலங்கள்’ அலங்கரிக்கின்றன. நெற்றியில் உள்ள அணிகலன்கள் ஒவ்வொருவருடைய கவனத்தையும் இழுக்கும் வகையில் அமைந்து உள்ளன. வலது கையில் தாமரைப் பூவை வைத்து இருக்க இடது கை வரத முத்திரை தோற்றத்தை தந்தபடி உள்ளது.கழுத்தில் காணப்படும் அணிகலன்கள் அற்புதமான வடிவமைப்புடன் துல்லியமான கலை நுணுக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளன. கண்கள் மேல்நோக்கிப் பார்த்தவண்ணம் இருக்கக் கொயுரைகள், தண்டைகள் (கொலுசு), மற்றும் கணுக்காலில் உள்ள அணிகலன்களும் கலை நயம் மிகுந்து கம்பீரமாகக் காட்சி தரும் வகையில் வடிவமைகபட்டு உள்ளன

    950 ஆம் நூற்றாண்டை சார்ந்த திருத்துறைப் பூண்டியில் உள்ள வர்தமானஸ்வரர் ஆலயத்தில் உள்ள சோமாஸ்கந்த சிலையில் உள்ள ஸ்கந்தன் தனது வலது காலை மடக்கி வைத்துக் கொண்டபடி காட்சி தருகிறார். சன்னவீராவையும் (ஒருவித அணிகலன்), பூமாலையையும் கழுத்தில் அணிந்து கொண்டு ஒரு கையால் கடக முத்திரை சின்னத்தையும், மறு கையால் வரத முத்திரை சின்னத்தையும் காட்டியவாறு உள்ளார்

    சிவபுராணத்தில் காணப்படும் சோமாஸ்கந்தன் பத்தாம் நூற்றாண்டின் மத்திய பகுதியைச் சேர்ந்தவர். அதில் உள்ள ஸ்கந்தன் உண்மையிலேயேயே வைரம் போன்று ஜொலித்தவாறு அற்புதமாகக் காட்சி தருகிறார். அதில் உள்ள வடிவமைப்பு மிகவும் நுண்ணியமாகச் செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அங்கத்திலும் நேர்த்தியான கலை நயம் வெளிப்படுகின்றது. மொத்தத்தில் நடனமாடும் வடிவில் அமைந்து உள்ள மூர்த்தியின் வடிவம் சொல்ல முடியாத அளவு அழகு சொட்டும் அதி அற்புதமான வடிவமைப்பில் செய்யப்பட்டு உள்ளது. திருவேங்காட்டில் உள்ள ஸ்வேதனாரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சோமாஸ்கந்த சிலையில் உள்ள ஸ்கந்தனின் வடிவம் மிகவும் வசீகரமாக உள்ளது. நின்ற நிலையில் படைக்கப்பட்டுள்ள அதன் தலையில் காணப்ப்படும் கரண்ட மகுடமும், கிண்கிணிகள் அடங்கிய ஒட்டியாணமும் நவநாகரீகமான தோற்றத்தில் மனதை அல்லும் விதத்தில் செய்யப்பட்டு உள்ளன

    தஞ்சாவூர் நீடூரில் உள்ள சோமாஸ்கந்த சிலை 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. குழந்தை முருகனின் அழகு அதில் விவரிக்கவே முடியாத அளவு கலை நயத்துடனும் கம்பீரமான தோற்றத்துடனும் அமைக்கப்பட்டு இருக்கக் கரண்ட மகுடம், காதணிகள், நெக்லேஸ், சன்னவீரா, ஒட்டியாணத்தில் இருந்து இருபுறமும் தொங்கும்குஞ்சலங்கள், பாதசரச்ஸ் போன்ற அணிகலன்கள் அதன் அழகிற்கு இன்னும் அழகு சேர்க்கும் விதத்தில் அமைந்து உள்ளன

    12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வட்டிகுவாரன் கோவிலில் உள்ள சோமாஸ்கந்தன் தனது வலது காலை தூக்கி வைத்தபடியும், இடது கையை நீட்டி வைத்துக் கொண்டு நடனமாடும் நிலையில் காணப்படுகிறார். வலது கையில் மலர் இருக்கக் கேச மகுட அமைப்பில்தலை தலைமுடி காணப்படுகிறது

    12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தஞ்சாவூர் வெல்லூர் எய்ருவரை ஆலயத்தில் உள்ள சோமாஸ்கந்தன் சிலையில் ஸ்கந்தனின் வலது கை அபாய முத்திரை காட்டியவண்ணம் நீண்டு இருக்க இடது கை வரதக் கோலத்தைக் காட்டும் அமைப்பிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. விக்டோரியா அருங்காட்சியகத்தில் உள்ள 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோமஸ்கந்தனின் ஸ்கந்த வடிவம் சமபங்க கோலத்தில் கரங்களில் மலர்களை ஏந்தியவண்ணம் காட்சி தரும் அமைப்பில் உள்ளது. அந்தக் கலைவண்ணம் சிறந்து விளங்கும் வகையில் அமைந்து உள்ளது

    பங்கால் ஆலயத்தில் உள்ள சோமஸ்கந்தனின் சிலையில் ஸ்கந்தனின் இரண்டு கரங்களும் நீண்டு இருக்க இடது கால் நேராகவும், வலது கால் சற்றே முன் நோக்கி வளைந்து உள்ள நிலையிலும் காணப்படுகின்றது

    தில்லையாடி சோமஸ்கந்தனின் சிலையில் ஸ்கந்தனின் கைகளில் மலர்கள் அதே 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த குன்னான்டார் ஆலயத்தில் உள்ள சோமஸ்கந்தனின் சிலையில் அவருடைய கரங்களில் மலர்கள் காணப்படுகின்றன. தலையைச் சடைமுடி அலங்கரிக்கின்றது ராமனன்தீஸ்வரா ஆலயத்தில் உள்ள சோமஸ்கந்தனின் சிலையில் வலது கையில் மலர் இருக்க இடது கை கீழ் நோக்கி நீண்டு உள்ளது. திருப்பனையூர் சௌந்தரீஸ்வரர் ஆலயம் மற்றும் கொடவாசல் கோணீஸ்வாரர் ஆலயத்தில் உள்ள சோமஸ்கந்தனின் சிலையில் உள்ள ஸ்கந்தன் பத்மாசனக் காட்சியில் அமர்ந்து கொண்டு கைகளில் மலர்களை ஏந்தியபடி உள்ளார். திருவல்லிமலை ஆலயத்தில் காணப்படும் முருக வித்தியாசமான கோலத்தில் உள்ளார். வலது கை காடாக முத்திரையைக் காட்டியபடியும் இடது கை மேலே தூக்கியபடியும் உள்ளது. வலது கால் எதோ யுத்தத்திற்குக் கிளம்புவர் போல அமைந்து இருக்கக் காதுகளைப் பத்திர குண்டலங்கள் அலங்கரிக்கின்றன.

    பாண்டியர் காலத்துச் சிலைகளில் மிக அற்புதமானவை திருப்பரம்குன்றம் மற்றும் திருப்பாக்கலி ஆலயங்களில் உள்ளன (ஏகாம்பரநாதன் 1984 -78).

    விஜயநகரக் காலத்திலும் நிறையப் பித்தளை உலோகத்திலான சிலைகள் செய்யப்பட்டு உள்ளன. AD 1913 ஆம் ஆண்டு நெல்லூரில் கிடைத்த சிற்பத்தின் கலை நயம் அது விஜயநகரக் காலத்தை ஒட்டியது என்பதை நினைவுபடுத்தியது. (கங்கோலி 1915 – 125). அதில் ஸ்கந்தன் தன் கரங்களில் மலர்களை ஏந்தியவண்ணம் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார்

    ஹோசூரில் உள்ள சிற்பத்தில் ஸ்கந்தன் மாடு ஒன்றின் மீது சாய்ந்து நின்றபடி கடுரா தோற்றத்தை தந்தபடி இருக்கின்றார். விஜயநகரச் சிற்பங்களில் உள்ள கரண்ட மகுடம் அதிக நீளமாக உள்ளது. ஆபரணங்களும் அதிகமாகவே உள்ளது. உதயாபாளையம் கொலுமூர் ஆலயத்தில் உள்ள சோமாஸ்கந்தன் சிலையில் உள்ள ஸ்கந்தனின் தலை விரிந்த கோலத்தில் உள்ளது. ஆனால் மாலைகளும் காதணிகளும் அற்புதமான தோற்றம் தரும் வகையில் செதுக்கப்பட்டு உள்ளன

    கல்லிடைக் குறிச்சி சோமாந்தர் கோவிலில் உள்ள ஸ்கந்தன் சிலையில் அவர் முன்னால் தெரியும்படி இரண்டு கால்களையும் ஒரே மாதிரியாக வைத்துக் கொண்டு உள்ளார். திருக்குரலத்தில் உள்ள குரலனாதஸ்வாமின் ஆலயத்தில் உள்ள ஸ்கந்தன் இடது காலை மடித்து ஆசனம் போல வைத்து இருந்தும் வலது காலை குட்குடிகாசன கோலத்தில் வைத்தபடி இருக்கத் தலை அலங்காரம் குரிதமுகுடா தோற்றத்தில் செய்யப்பட்டு உள்ளது

    கல்வெட்டுக்களில் சோமாந்தர்

    சலுவான்குப்பத்தில் உள்ள அதிரானகண்டா ஆலயத்தில் உள்ள கல்வெட்டுக்களில் சிவனைப் பசுபதி என்றும் பார்வதியை மலைமகள் என்றும் ஸ்கந்தனை குஹா என்றும் கூறப்பட்டு உள்ளது. ராரராஜ சோழன் I னின் உமா ஸ்கந்த சாஹித்தியத்திலும் இவ்வாறே கூறப்பட்டு உள்ளது

    மயில் மண்டபம்

    மயில் மண்டபத்தில் கூத்தாடும் பிள்ளையாரை வணங்கி தொட்டியில் சிதறு தேங்காய் அடிக்கலாம். தீப ஸ்தம்பம் மற்றும் வேல் கொடியுடன் ராஜ கோபுரம் தொழுது, தல விநாயகரின் முன் தோப்புக்கரணமிட்டு விட்டுச் செல்ல வேண்டும்
    மயில் மண்ட பத்திலிருந்து படியேற வேண்டும். வழியில் களைப்பாற மண்டபங்களும், விநாயகர், வள்ளி, இடும்பன் ஆகியோரது சந்நிதிகளும் உள்ளன. யானைப் பாதையில் தல வரலாற்றுச் சிற்பங்களுடன் வள்ளியைச் சோதிக்க வேடனாக வந்த முருகனின் திருவுருவங்களும், வள்ளியம்மன் சுனையும் உள்ளன.

    பழநி மலைக் கோயில் அமைப்பு

    மலைக் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜ கோபுரமும், இரு புறமும் நாயக்கர் மண்டபங்களும், 42 கல் தூண்கள் கொண்ட பாரவேல் மண்டபமும் உள்ளன. கருவறை மீது தங்க விமானம் காட்சியளிக்கிறது.

    கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் பிரதான கோயிலை, சேர மன்னன் சேரமான் பெருமாள் கட்டியதுடன், தினசரி பூஜை மற்றும் விழாக்கள் கொண்டாட மானியங்களும் அளித்துள்ளான். முருகன் சந்நிதி தெற்குச் சுவரின் வெளிப் புறம் குதிரை மீது கம்பீரமாகக் காட்சியளிக்கும் சேரமானின் சிற்பம் இடம்பெற்றுள்ளது.

    பிராகாரங்கள்

    பழநி திருக்கோயிலில் இரண்டு பிராகாரங்கள் உள்ளன. மலைப் பாதை வழியாக வருவோர், 2- வது பிராகாரத்தை அடைவர். இங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் வழியில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மணிக்கட்டு மண்டபம் உள்ளது. இங்கு வல்லப விநாயகர் சந்நிதி, கொடிமரம், அக்னி குண்டம், தங்க ரத மண்டபம் ஆகியவை உள்ளன.

    முதல் பிராகாரம், பாரவேல் மண்டபத்திலிருந்து கோயிலைச் சுற்றிச் செல்கிறது. இதன் வட பாகத்தில் மலைக்கொழுந்தீஸ்வரர், நவவீரர் ஆகியோர் சந்நிதி. மலைக்கொழுந்தீஸ்வரர் சந்நிதியின் முன்புறத் தூண் இரண்டும் ரத வடிவில் அமைந்துள்ளன இதன் தென்கிழக்கில் போகர் சந்நிதி உள்ளது. இங்கு அவரால் பூஜிக்கப்பட்ட புவனேஸ்வரியம்மன் மற்றும் மரகத லிங்கம் ஆகியவை உள்ளன. இங்குள்ள சுரங்கப் பாதை, ஸ்ரீதண்டாயுதபாணியின் திருவடி வரை செல்கிறது என்றும், போகர் இறுதியாக இதில் நுழைந்து தண்டாயுதபாணியின் திருவடியில் ஐக்கியமானார் என்றும் கூறப்படுகிறது.

    நவரங்க மண்டபம்

    நவரங்க மண்டபம் அருகே உலோகத்தாலான சேவற்கொடி உள்ளது. இதன் மீது ஒரு சேவல் அடிக்கடி வந்து அமர்ந்து கூவுவது பழநியின் சிறப்புகளுள் ஒன்று. இதன் நிழலில் அமர்ந்து தியானிப்பது பக்தர்களது வழக்கம். இந்த மண்டபத்தில் சண்முகருக்கும், ஞானத் தண்டாயுதபாணியின் உற்சவ மூர்த்தியான சின்னக் குமாரருக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன. இதை அடுத்து அர்த்த மண்டபம்; கர்ப்பக்கிரகம். கர்ப்பக் கிரகச் சுவர்களில் கல்வெட்டுகள் உள்ளன.

    மாக்கல்

    பழநியாண்டவர் முன்பாக ‘மாக்கல்’ எனப்படும் பெரிய கல் ஒன்று உள்ளது. இது, பள்ளியறைக்கு எழுந்தருளும் முருகனின் திருவடியை (ஸ்ரீபாதம்) தாங்கும் மேடையாகக் கருதப்படுகிறது.

    பிரம்மன் விக்கிரகம்.

    இங்குள்ள மற்றொரு சிறப்புப் பிரம்மன் விக்கிரகம். இந்தப் பிரம்மன் அம்பு- வில்லோடு வேடுவ வடிவத்தில் காணப்படுகிறார். ஒரு முறை பிரம்மா, தானே முதன்மையானவர் என ஆணவம் கொண்டார். இதனால் சினம் கொண்ட ஸ்ரீருத்ரன், வேடுவனாக, பிறக்கும்படி பிரம்மனுக்குச் சாபமிட்டார். தன் தந்தை பிரம்மனுக்குச் சாப விமோசனம் தரும்படி முருகனைப் பிரார்த்தித்துக் கொண்டார் நாரதர். பிரம்மன் தவறை உணர்ந்து இங்கு வந்து முருகனை வழிபட்டு சாப நிவர்த்தி அடைந்தார்.

    சனீஸ்வர பகவான்

    திருநள்ளாறு சனி பகவானைப் போன்றே இங்குள்ள சனீஸ்வர பகவானும் சிறப்பானவர். திருவாவினன்குடி வந்து தன்னை வழிபட்டால், சனியால் ஏற்படும் தொல்லைகள் தீரும் என்று நிடத நாட்டு அரசன் நித்தியநாதனுக்கு வரம் தந்தார் முருகப் பெருமான். எனவே, சனி தோஷ பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது பழநி. அங்காரகனான செவ்வாயும், பழநி முருகனை வழிபட்டு நலம் பெற்றான் என்கிறது ஸ்தல புராணம் .

    ஸ்தல விருட்சங்கள்

    தண்டாயுதபாணிக்கு கடம்ப மரமும் திரு ஆவினன்குடி முருகனுக்கு நெல்லி மரமும் ஸ்தல விருட்சங்கள்.

    நவ பாஷாணங்கள்

    மலைக்கோயில் கருவறையில் வலக் கையில் தண்டாயுதம் ஏந்தி இடக் கையை இடையில் அமர்த்தி, ஞானத் தண்டாயுதபாணியாக மேற்கு நோக்கி கோவணக் கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்கந்த வடிவமான இது, போகர் எனும் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. பாதரசம், மதார்சிஸ், தானகம், லிங்கம், கந்தகம், வீரம், பூரம், வெள்ளை, மனோசிலை ஆகியவை நவ பாஷாணங்கள். திருமுருக பாஷாணம், கார்முகில் பாஷாணம், இந்திர கோப பாஷாணம், குங்கும பாஷாணம், இலவணப் பாஷாணம், பவளப் புற்றுப் பாஷாணம், கௌரி பாஷாணம், ரத்த பாஷாணம், அஞ்சன பாஷாணம் ஆகியவையே நவபாஷாணங்கள் என்றும் கூறுவதுண்டு. சாதி லிங்கம், மனோசிலை, காந்தம், தாரம், கெந்தி, ரச கற்பூரம், வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டி பாஷாணம் ஆகியவையும் நவபாஷாணங்கள் எனப்படுகின்றன. நவபாஷாணக் கலவையைக் கல்லாக்குவது, சித்து வேலை. இதை அறிந்தவர் அகத்தியர். அவரிடம் இருந்து கற்றவர் போகர் இந்த விக்கிரகம் காற்று, நீர், எண்ணெய், தேன், நெய் ஆகியவற்றால் கரையாது. நெருப்பால் பாதிப் படையாது. தீராத நோய்களையும் தீர்த்து ஆயுளை அதிகரிக்கச் செய்யும் வல்லமை நவபாஷாணத்துக்கு உண்டு. நவபாஷாணத்தினாலான மூலவர் விக்கிரகத்தை அபிஷேகிக்கும்போது மேலிருந்து கீழாகவே தேய்ப்பர். ஏனெனில், இந்த விக்கிரகத்தின் மேற்பரப்பு கீழ்நோக்கிய நிலையில் செதில் செதிலாக உள்ளதே காரணம். மேல் நோக்கித் தேய்த்தால் கைகள் ரணமாகும்.

    போகர்

    போகரின் சீடர் புலிப்பாணிச் சித்தரும், அவரது வழிவந்த பண்டாரப் பெருமக்களும் தண்டாயுத பாணியைப் பராமரித்து வந்தனர். போகரின் உபாசனா தெய்வமான புவனேஸ்வரியின் அறிவுரைப்படி போகர், பழநி மலையில் தவம் இருந்தார். அவரது தவத்துக்கு இரங்கிய பழநி ஆண்டவர், தன்னைப் பிரதிஷ்டை செய்யும் முறை மற்றும் வழிபாடுகள் குறித்துச் சொல்லி மறைந்தார். அதன்படி தண்டபாணி வடிவை உருவாக்கி ஆகம விதிப்படி கர்ப்பக்கிரகத்துக்குள் பிரதிஷ்டை செய்தார் போகர். போகருக்கு பழநி கோயிலில் தனிச் சந்நிதி உள்ளது. போகரின் சீடர் புலி பாணி முனிவருக்கு ஒரு மடம் உள்ளது. இவர் சந்ததியினருக்குக் கோயில் பூஜை செய்யும் உரிமையும், விஜய தசமி அன்று அம்பு போடும் உரிமையும் உள்ளது.ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் போகரது சமாதி உள்ளது. அதில் அவர் வழிபட்டதாகக் கருதப்படும் புவனேஸ்வரியின் திருவுருவமும், மந்திரச் சக்கரங்களும், மரகத லிங்கமும் உள்ளன. இவற்றுக்குத் தினசரி வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    பிணிகள் நீங்கும் பிரசாதமாகச் சந்தனம்

    தினமும் இரவில் முருகப்பெருமான் மேனி முழுவதும் சந்தனம் பூசுகின்றனர். மறுநாள் காலையில் இது பிரசாதமாகப் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தச் சந்தனத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வந்தால், பிணிகள் நீங்கும் என்பது ஐதீகம். இவ்வாறு இரவில் திருக்காப்பிட்ட பின், மறு நாள் காலையில் பார்க்கும்போது இறைவனின் மேனி வியர்த்திருக்கும். அதைத் துணியால் ஒற்றி எடுத்துத் தீர்த்தமாக வழங்குகின்றனர்.

    தண்டாயுதபாணி அலங்காரம்.

    தண்டாயுதபாணி, மொட்டை அடித்த ஆண்டி அல்ல. அபிஷேகத்தின்போது கவனித்தால், அவர் சடைமுடியுடன் காட்சி தருவதைக் காணலாம்.காலை பூஜையின்போது தண்டாயுதபாணி ஈஸ்வரனை வழிபடுவதாக ஐதீகம். அப்போது காவி உடையில் வைதீக கோலத்தில் தண்டாயுதபாணியை அலங்கரிப்பார்கள்.

    காலச் சந்தியில் குழந்தை வடிவ திருக்கோலம். உச்சி காலத்தில் கிரீடத்தோடு கூடிய வைதீக அலங்காரம். சாயரட்சையில் ராஜ அலங்காரம். ராக்காலத்தில் முதிய வடிவம்.

    மூல விக்கிரகத்துக்குச் செய்யப்படும் தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு அபிஷேகம் சிறப்பான ஒன்று. ஒவ்வொரு அபிஷேகத்துக்குப் பிறகும் தண்டாயுதபாணி வெவ்வேறு அலங்காரங்களில் காட்சி தருவார். அவை: ராஜ அலங்காரம், வேடன், சந்தனக் காப்பு, பாலசுப்பிரமணியர், விபூதி அதாவது ஆண்டிக் கோலம். ஒரு காலத்தில் செய்து வந்த பெண் அலங்காரம் தற்போது செய்யப்படுவது இல்லை.

    மூலவருக்கு அருகில் சிறிய பேழை ஒன்று உள்ளது. அதில் சாளக்கிராம ஸ்படிக லிங்க ரூபத்தில் சிவபெருமானும், உமாதேவியும் இருக்கின்றனர். இவர்களைத் தண்டாயுத பாணி பூஜிப்பதாக ஐதீகம்.

    பல்லக்கு

    இங்குப் பள்ளியறை உற்சவம் விசேஷம். அப்போது வெள்ளிப் பல்லக்கு ஒன்று சந்நிதிக்கு வருகிறது. ஓதுவார்களும், கட்டிய காரர்களும் இறைவனின் புகழ் பாட மூலஸ்தானத்திலிருந்து சுவாமி பாதுகைகள் பல்லக்கில் வைக்கப்பட்டு ஊர்வலமாக வருகிறது. (வெள்ளி, திங்கள் மற்றும் கிருத்திகை ஆகிய நாட்களில் தங்கப் பல்லக்கு வரும்) அப்போது, கொப்பரைத் தேங்காய்- ஏலக்காய்- சர்க்கரை கலந்த பிரசாதம் வழங்கப்படுகிறது. பிறகு பல்லக்கு பள்ளியறைக்கு வந்து சேரும். அங்குப் பாதுகைகள், பல்லக்கில் இருந்து தொட்டில் போன்ற மஞ்சத்துக்கு மாற்றப்படுகின்றன. கடைசியாக அன்றைய வரவு-செலவு கணக்குகளைப் படித்துக் காட்டுவர். இறுதியில் நடை சாத்தப்படுகிறது.

    காவடி பிரார்த்தனை

    பழநியில் பக்தர்களது காவடி பிரார்த்தனை பிரசித்,தம். கயிலாயத்தில் இருந்த சிவகிரி, சக்திகிரி ஆகிய மலைகளை அகத்தியருக்குத் தந்தருளினார் இறைவன். அகத்தியரின் கட்டளைப்படி இந்த மலைகளை இடும்பன் என்பவன் பொதிகைக்குத் தூக்கிச் சென்றான். ஓய்வுக்காக ஓரிடத்தில் அவற்றை இறக்கி வைத்து விட்டு மீண்டும் எடுக்க முற்பட்டபோது, முடியவில்லை. காரணம் சிவகிரி மீது ஏறி நின்ற ஒரு சிறுவன். அவனுடன் போரிட்டு மாண்டான் இடும்பன். சிறுவனே முருகப் பெருமான் என்று உணர்ந்த இடும்பனின் மனைவி தன் கணவனை உயிர்ப்பிக்குமாறு முருகனிடம் வேண்டினாள். முருகன் அவ்வாறே அருளியதுடன் இடும்பனை தன் காவல் தெய்வமாக்கினார். அவனது விருப்பத்தின் படி பழநிக்குக் காவடி தூக்கி வரும் பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதாக வரமும் தந்தார். திருவிழா காலங்களில் பக்தர்கள்- தங்கக் காவடி, வெள்ளிக் காவடி, பால் காவடி, சந்தனக் காவடி உட்படப் பல்வேறு வகையான காவடிகளை எடுத்து வந்து ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

    பஞ்சாமிர்தம்.

    பழநியின் தனிச்சிறப்புப் பஞ்சாமிர்தம். மலை வாழைப்பழம், நெய், தேன், நாட்டுச் சர்க்கரை, கற்கண்டு ஆகியவற்றின் கலவை இது. இதைத் தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யும்போது பாஷாண சக்தியால் மருத்துவக் குணம் பெறுகிறது.

    ராமப்ப ஐயர்

    15- ஆம் நூற்றாண்டில் மதுரையைத் திருமலை நாயக்கர் ஆட்சி செய்த காலம். அப்போது ராமப்ப ஐயர் என்பவர் தளவாயாக இருந்தார். இவர் பழநி கோயிலுக்கு வந்தபோது, புலிப்பாணியின் வழி வந்த பாத்திரசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். ஐயர் அல்லாத அவரிடம் இருந்து பிரசாதம் வாங்க வேண்டாம் எனக் கருதி, கொடுமுடியிலிருந்து சரசுவதி ஐயரை குருக்களாகவும், அவருக்குத் துணையாக மருதூர் தம்பா ஐயன், நாட்டார் அப்பன் கோயில் அகிலாண்ட ஐயன் ஆகியோரை பரிசாரகர் மற்றும் நம்பிமார்களாகவும் நியமித்தார் தளவாய் ராமப்ப ஐயர். இந்தத் தகவல்களைச் செப்பேட்டில் குறித்து, ராமப்ப ஐயர் செப்பேடு கொடுத்த காலம் கி.பி. 1477-ஆம் ஆண்டு
    தங்க ரதம்

    இங்கு வெள்ளி மற்றும் தங்க ரதங்கள் உலா வருவது தனிச் சிறப்பு. கார்த்திகை, விசாகம், சஷ்டி, மாத பிறப்பு, அமாவாசை ஆகிய நாட்களிலும், விசேஷ விழாக்களிலும் மலை மீது உற்சவர் சின்னக் குமாரர் பவனி வருகிறார். தமிழகத்தில் முதன் முதலாகப் பழநி தண்டாயுத பாணி திருக்கோயிலில்தான் முருகேச முதலியார் என்ற பக்தரின் முயற்சியால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் தங்க ரதம் ஓடத் துவங்கியது. G 1960- ஆம் ஆண்டுக் கருவறைக்குத் தங்க விமானம் அமைக்கப்பட்டது

    பூஜைகள் மற்றும் விழாக்கள்

    தினசரி இங்கு ஆறு காலப் பூஜைகள் நடைபெறுகிறது. விழாக்களைப் பொறுத்த வரையில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, கந்த சஷ்டி விழா ஆகிய விழாக்கள் இங்குச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
    மூலவர் சந்நிதி வழக்கமாகக் காலை 6 முதல் இரவு 8 மணி வரையிலும், கார்த்திகை மற்றும் திரு விழா நாட்களில் காலை 4 முதல் இரவு ராக்காலப் பூஜை முடியும் வரையில் திறந்திருக்கும்..

    பங்குனி உத்திர விழா

    பழநியின் பங்குனி உத்திர விழாவை ‘நாட்டுப் புறத் திருவிழா’ என்பர். வருடம்தோறும் சூலமங்கலம் சகோதரிகளது கச்சேரி அன்று நடை பெறும். ‘பழநி எனும் ஊரிலே, பவனி வந்தான் தேரிலே’ என்ற பாட்டை அவர்கள் பாடுவதற்கும் முருகனின் தங்கத் தேர் அங்கு வருவதற்கும் சரியாக இருக்குமாம். ! பங்குனி உத்திரத் திருவிழாவின்போது பத்து நாள் உற்சவத்தில் முருகப் பெருமான், வள்ளி- தெய்வானையுடன் பற்பல வாகனங்களில் கிரிவலம் வருவார்.

    கந்தசஷ்டி
    கந்தசஷ்டியின்போது சூரபத்மனை வதம் செய்வதற்காக மலையிலிருந்து கீழே இறங்கி வருவார் முருகப்பெருமான். அவர், மலையின் நான்கு புறங்களிலும் கஜமுகாசுரன், தாரகன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்து வெற்றி வீரராகக் கோயிலுக்குத் திரும்புவார்.

    விசாகப் பெருவிழா

    பத்து நாள் நடைபெறும் விசாகப் பெருவிழாவின் ஏழாம் நாளன்று திருத்தேர் வடம் பிடிப்பார்கள்.

    தைப்பூசத் திருவிழா

    தைப்பூசத் திருவிழாவின் 10-ஆம் நாள் மண்டகப் படியாகப் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள தெப்பக்குளத்தில் பழநி முருகன், வள்ளி- தெய்வானையுடன் தெப்பத்தேரில் மும்முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.தைப்பூச விழாவின்போது நடைபெறும், முருகனுக்கு அம்பாள் வெற்றி வேல் வழங்கும் காட்சி குறிப்பிடத் தக்கது. ஏழாம் நாள் பூச நட்சத்திரத்தன்று தேரோட்டம். அன்று இடும்பன் குளம், சண்முக நதி, பழநி அடிவாரம் ஆகிய இடங்களில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகிறார்கள்.
    ‘ போகர் வடித்த தெய்வச் சிலை முருகப் பெருமான் அல்ல; தண்டாயுத பாணிதான். தேவ ஸ்தானத்தின் பெயரும் ரசீதுகள், விடுதிகள் மற்றும் கோயில் சொத்துகள் எல்லாவற்றிலும் உள்ள பெயர் தண்டாயுதபாணியே என்றும் சொல்கிறார்கள்.
    போகரால் செய்யப்பட்ட சிலையில் வேல் இல்லை; தண்டமே உள்ளது. உற்சவர் கையில் வேலும் தண்டமும் மயிலும் இல்லை. அடிவாரத்தில் உள்ள குழந்தை வேலாயுதசாமியே மயில் வாகனத்தில் வேலுடன் காட்சி தருகிறார்.

    பழநி கோவில் கட்டுப்பாட்டில் இயங்கும் மற்ற கோவில்கள்

    • திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவில், பழநி அடிவாரம்.
    • பெரிய நாயகி அம்மன் கோவில், அடிவாரத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில்.
    • மாரியம்மன் கோவில்
    • பெரிய ஆவுடையார் கோவில், சண்முக நதி அருகில்.
    • குறிஞ்சி ஆண்டவர் கோவில், கொடைக்கானல்.
    • வேலப்பர் கோவில், கொடைக்கானல்

    கையில் கோலுடன் ஆண்டியை காட்சியளிக்கும் முருகன் சிலை நமக்கு உணர்த்துவது யாதென்றால் “அனைத்தையும் துறந்தால் கடவுளை அடையலாம்” என்பதாகும்.முன்னர் கோவில் மூலவர் சிலை காணமல் போயிற்று. அச்சமயம் முருகன் அவ்வழியே வந்த சேர மன்னன் சேரமான் பெருமாள் கனவில் தோன்றி, சிலையை மீட்டு மலை மீது கோவில் அமைக்குமாறு கட்டளையிட்டான். அதன் பின்னர்ச் சேர மன்னனே இந்தக் கோவிலை கட்டினான் என்ற வரலாறும் உண்டு.
    பெரும்பாலும் தமிழகக் கோவில்களில் மூலவர் சிலை கிழக்கு பார்த்தே அமைந்திருக்கும். ஆனால் இங்கு வடக்கு பார்த்து அமைந்துள்ளது. இதற்குக் காரணம் சேர மன்னர்கள் வடக்குத் திசையில் ஆதிக்கம் செலுத்தியதே!

    ——————————————

    துணைமேற்பட்டியல்:

    1. காந்திதாசன்.மா, தமிழகத்தில் முருகவழிபாடு என்னெஸ் பப்ளிஷேசன்,
    மதுரை முதல் பதிப்பு 1998.
    2. கிருஷ;ணமூர்த்தி , பழனி தலவரலாறு, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில்,பழனி.
    3. சுப்பிரமணியன் .பெ, பழனி முருகன் கோவிலும் தீர்த்தமும். ராம்குமார் பதிப்பகம்,1994.
    4. வைத்தியலிங்கம் செ., தமிழ் பண்பாட்டு வரலாறு, அண்ணாமலை பல்கலைக்கழக வெளியீடு. சிதம்பரம் 1991.
    5. மணிவண்ணன்,க. முற்காலச் சோழர்கள் கோவில் கலைகளும் அழகியல் கோட்பாடுகளும். தமிழ்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999. (ஆய்வேடு)
    6. கிருஷ;ணண் க., திருஆவினன்குடி கோவில் ஓர் ஆய்வு. அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி, 2005 (ஆய்வேடு)
    7. ஜகந்நாதன் கி.வா. பழனி திருநாமம் , அமுத நிலையம் லிமிடெட், இராயப்பேட்டை ஹரோடு,சென்னை .
    8. நாகசாமி, இரா.சுந்தர ராமசாமி, தமிழ கோவிற்கலைகள், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை.
    9. கும்பாபிஷேக மலர்கள் , பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா, சிறப்பு மலர் 1975.
    10. கும்பாபிஷேக மலர்கள், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா,சிறப்புமலர் , 05.07.2000.
    11. பால சுப்பிரமணிய கவிராயர், பழனி தலபுராணம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி
    சுவாமி திருக்கோவில் வெளியீடு, 1998.

    Share
  • எட்டுத்தொகை முன்னிறுத்தும் முருகன்

    -க. விஜய் ஆனந்த்

    முன்னுரை

    சங்கப் பாக்களைத் தொகுத்தார் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற பிரிப்பை அமைத்தனர். பத்துப்பாட்டில் இடம்பெறும் பாடல்கள் நூல்களில் தொகுப்பாக அமையும்.  எட்டுத்தொகைப் பாடல்கள் தனிநூலாக இல்லாது உதிரிப்பாடல்களின் தொகுப்பாக அமையும்.

    “நற்றிணை நல்லகுறுந்தொகை ஐங்குறுநூறு
    ஒத்த பதிற்றுப்பத்து ஓங்குபரிபாடல் – கற்றறிந்தார்
    ஏத்தும் கலியொடு அகம்புறம் என்ற
    இத்திறந்த எட்டுத்தொகை” என்பதோர் நூற்பா.

    அகமும், புறமுமாய் அமைகின்ற நூல்கள் இவை.  இந்த எட்டு நூல்களில் முருகனைப் பற்றிய செய்திகள் பலவகைகளில் இடம்பெற்றுள்ளன.  அவற்றை உட்தலைப்பிட்டுப் பகுத்துப் பார்த்தல் பயன்பலன்தரும்.  அதனையே இக்கட்டுரை  மேற்கொள்கிறது.

    சங்ககாலம் முதலே முருகன் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன.  தமிழில் கிடைத்த முதல் இலக்கண நூலாக விளங்கும் தொல்காப்பியம் முருகனைச் “சேயோன்” என்ற சொல்லால் குறிப்பிட்டுள்ளது. இதனை முருகனைப் பற்றிய முதற்பதிவாகக் கொள்ளலாம்.  சங்கப் பாக்களில் முருகப்பெருமானின் பிறப்புமுறை, தோற்றப்பொலிவு, பெயரீடுகள், ஊர்திகள், கொடிகள், ஆயுதங்கள் மற்றும் தொன்மச் செய்திகள் போன்றவை இலக்கியங்களில் எடுத்தாளப்பெற்றுள்ளமை குறித்தும், முருகனின் ஆறுபடை வீடுகளின் சிறப்புகள் பற்றியும் இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

    பெயரீடுகள்

    சங்க இலக்கியங்களில்  முருகனைக் குறித்து வழங்கும் பெயர்கள் மிகுதி.  இப்பெயர்கள் அனைத்தும் அவற்றின் சூழல்களின் அடிப்படையில் வெவ்வேறாக அமைந்துள்ளன.  முருகனைக் குறித்து (முருகனுக்குரிய) பெயர்களாகச் சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு, கடவுள், மலைவான், விறல்வேள், மலைஉறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் போன்றவை சுட்டப்படுகின்றன. பதிவுகள் சில வருமாறு:

    (1)   குறுந்தொகை

    சேவலங் கொடியோன் (கடவுள் வாழ்த்து), சேய் (பாடல் -1), முதிர்கடவுள்(87), நெடுவேள்(111), தெய்வம் (263), முருகு (362).

    (2)  நற்றிணை

    முருகு(47,82,225), நெடுவேள்(173), கடவுள்(251), தெய்வம்(351),   அணங்கு(376).

    (3)  ஐங்குறுநூறு

    அணங்கு (28), சேய் (242), கடவுள் (243, 257), முருகு (245,247,249,308), மலைவான் (248), மலைஉறை கடவுள் (259), விறல்வேள் (250).

    • அணங்கு – முருகவேள் என்று உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    (4)  அகநானூறு

    முருகன் (1,59,98), கடவுள்(13,156), நெடுவேள்(22,98,120,232,382), முருகு (11,28,118,158,181,232,288), நெடியோன்(149).

    (5) கலித்தொகை

    தெய்வம் (39), சேய் (39,104) கடவுள் (93).

    (6) பரிபாடல்

    சேய் (5, 21) , செவ்வேள் (5), முருகு (5,8), முருகன் (21), கடம்பமர் செல்வன் (8), குன்றமர்ந்தாண்டான் (17), செல்வன் (18, 21), மாஅல் மருகன் (19), நெடுவேள் (21).

    (7) பதிற்றுப்பத்து

    முருகு (26).

    (8) புறநானூறு 

    சேய் (14,120,125), முருகன் (16,23,299), நெடுவேள் (55), முருகு (56,259), கடவுள் (158).

    மேற்சுட்டப்பட்ட பெயர்களில் உரைகள் வாயிலாகத் தெய்வம், கடவுள், அணங்கு போன்றவை அனைத்தும் முருகனுக்குரிய பெயரீடுகளாக கொள்ளப்பெற்றிருப்பதனைக் காணவியலுகின்றது.

    தோற்றப்பொலிவு

    முருகப்பெருமான் ஒப்பற்ற ஆறு தலைகளையும், பன்னிரண்டு தோள்களையும் தன்னகத்தே ஒருங்கே பெற்றுள்ளதைப் பரிபாடல் 5ஆம் பாடலானது விளக்குகிறது.  மேலும் மறியும், மயிலும், சேவலும், வில்லும், மரனும், வாளும், ஈட்டியும், கோடரியும், மழுவும், கனலியும், மாலையும், மணியும் ஆகியவற்றைத் தன் பன்னிரண்டுத் திருக்கைகளிலும் கொண்டவன் என்பதை நூல்கள் பேசும். இனி இவனே நம் படைக்குத் தலைவன் என எண்ணி முருகனுக்குத் தீக்கடவுள் கோழியையும், இந்திரன் மயிலையும் தந்தனர். இயமன் வெள்ளாட்டு மறியை ஈந்தான். பிற தேவர்கள் தந்த மறியும், மயிலும், சேவலும், வில்லும், மரனும், வாளும், ஈட்டியும், கோடரியும், மழுவும், கனலியும், மாலையும், மணியும் ஆகிய இவற்றைப் பன்னிரண்டுத் திருக்கைகளிலும் கொண்டு அமரப்படைக்குச் செவ்வேள் தலைவனான செய்தியை எடுத்தியம்புகிறது சங்க இலக்கியம்.

    உவமை

    முருகனின் தோற்றப் பொலிவினைச் சங்கப் பாக்கள் முன்னிறுத்துகின்றன. குறுந்தொகையில் முருகனது திருவடியின் நிறத்திற்கும், அழகிற்கும் தாமரை மலர் உவமையாகச் சுட்டப்படுகிறது. முருகப்பெருமான் அணிந்துள்ள ஆடையானது சிவப்பு நிறம் பொருந்திய குன்றிமணியினை ஒத்ததாய் அமைந்துள்ளது. மேலும், அகம். 120ஆம் பாடலில் நெடுவேளின் செம்மேனிக்குச் செவ்வானமும், அவ்வானத்தையொட்டி வரிசையாகப் பறந்து செல்லும் கொக்கிற்கு முருகனது மார்பிலணிந்த முத்தாரமும் உவமையாகச் சொல்லப்பட்டுள்ளன. பரிபாடலில் “மூவிரு கயந்தலை முந்நான்கு முழவுத்தோள்” என்னும் வரியில் ‘சேய்’ மத்தளம் போன்ற பன்னிரண்டுத் தோள்களை உடையவன் (பரி.5) என்றும், “ஞாயிற்றேர் நிறத்தகை” (ஞாயிறு எழுச்சிக்கண் உண்டாகும் நிறத்தைப்) பெற்றவன் என்றும் பொருள்படும் சொற்கள் உள. முருகப்பெருமானின் உடையும், மாலையும் சிவந்த நிறமுடையன. வேற்படையும் பவழக்கொடியினது நிறத்தை ஒத்துள்ளதைப் பரிபாடலின் 18 ஆம் பாடல் “உடையும் ஒலியலுஞ் செய்யை மற்றாங்கே”,  “படையும் பவழக் கொடிநிறம் கொள்ளும்” என்ற பாடல் வரிகள்  தெளிவுபடுத்தும். செந்தீயைப் போன்றதொரு நிறத்தையும், ஞாயிற்றினது மண்டிலத்தையும் ஒத்த நிறமுடையவன் என்பதை “உருவும் உருவத்தீ ஒத்தி முகனும்”, “விரிகதிர் முற்றா விரிசுடர் ஏத்தி” என்ற பாடல் வரிகள் விளக்குகின்றன.

    கொடிகள்

    குறுந்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலில் முருகன் சேவலங் கொடியோன் என்று சிறப்பிக்கப்படும். சேவற் கொடியே மட்டுமன்றி மயிலையும் கொடியாக உடையவன் முருகன் பெருமான் என்பதை அகநானூறு (பாடல். 149) குறிப்பிடுகின்றது. “பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய” என்ற வரியில் இதனைக் காணலாம். 8ஆம் பரிபாடலில் முருகப்பெருமானின் கொடி சேவற்கொடி என்று விளக்கப்பெறுகிறது. மயிலையும், கோழியையும் செவ்வேள் ஒருசேரக் கொடியாகக் கொண்ட செய்தியை (பரி.17) அறியமுடிகிறது. பரிபாடல் 18, 21 ஆம் பாடல்களில் செவ்வேள் மயிற்கொடியினை உடையவன் என்று வரும் செய்தியும் தெளிவுதரும்.

    ஊர்திகள்

    உலகில்  உள்ள  ஒவ்வோர்  இறைவனும்  தமக்கென  ஓர்   ஊர்தியினைச்   சிறப்பாகக்  கொண்டு  தம்  தொழிலினைச்  செய்வர்.  அவ்வகையில்  முருகப்பெருமானின்  ஊர்திகளாகப்  ‘பிணிமுகம்’  என்னும்  யானையும்,  மயிலும்  அமைகின்றன.

    அகநானூற்றில்  முருகப்பெருமான்  களிற்றைத்  தன்  ஊர்தியாகக்  கொண்ட  செய்தியை,                                                                                                                                                                                                                                        “கடம்புங்  களிறும்  பாடித்  தொடங்குபு” (138)

    என்ற பாடல்  வரி  உணர்த்துகின்றது.  மேலும்  புறம்.  56ஆம் பாடலும் இவற்றையே சுட்டுகின்றது.   5ஆம்  பரிபாடலில் முருகக் கடவுளின் வாகனமாகப் பிணிமுகம்  என்னும் யானையும் மயிலும்  ஊர்திகளாக அமைந்துள்ளன. இவற்றையே அன்றி, (பரி. 8 )  ஊர்தி –  யானை, (பரி.17) ஊர்தி – யானை, (பரி.18) ஊர்தி – மயில்,  (பரி.19)  ஊர்தி-யானை   (பரி.21)  ஊர்தி-யானை என்றவாறு செய்திகளமையக் காணலாம்.

    மாலை

    முருகனுக்குரிய  மாலையாகக்  கடம்ப  மாலையானது  சிறப்பிடம்  பெறுகிறது.    முருகன்  கடம்ப  மாலையைச்  சூடியவன்  என்பதைக்  குறுந்தொகை 87ஆம் பாடலானது மொழியும்.  முருகப்பெருமான்   கடம்பின்கண்  உறைகின்ற  செய்தியை  மேற்சுட்டப்பட்ட  பாடலானது  எடுத்துரைக்கிறது.  மேலும்  அகநானூறு  (பாடல்.138)  வரியில்  கடம்ப  மாலை  பற்றிய  குறிப்புகள்  இடம்பெறுகின்றன.  புறம்.23 ஆம் பாடலில்  கடம்ப  மாலை  செவ்வேளுக்குரியது  என்ற  செய்தி உள்ளது.  18, 21 ஆகிய பரிபாடல்களும் கடம்பினது  சிறப்பினை  எடுத்துரைக்கின்றன.

    ஆயுதம்

    முருகனுக்குரிய  ஆயுதமாக  வேல்  விளங்கியதைப்  பரிபாடல்  5ஆம்  பாடலானது குறிப்பிடுகின்றது.  “விறல்வெய்யோனூர்  மயில்  வேனிழனோக்கி”  (பரிபாடல்  –  21) என்ற வரியில் செவ்வேள் பகைவரைக் கொன்ற வேலினை உடையவன் என்று சுட்டப்பெறுகிறது. வேல் பற்றிய செய்திகள் குறுந்தொகை (கடவுள் வாழ்த்து), அகம்.(10), கலி. (27, 93, 104),  பரி. (19, 26) போன்றவற்றில் இடம்பெற்றுள்ளன.

    தொன்மம்

    புராணம்  என்பது  பழையது, பழங்கதை  என்ற  பொருளுடையது. தொன்மம்  என்பதன்  பொருளாகத்  தொல்காப்பியர்,

               “தொன்மை  தானே உரையொடு   புணர்ந்த
             பழமை  மேற்றே” எனக் குறிப்பிட்டுள்ளார்.  தொன்மத்தினை  அவற்றின்  பாடுபொருளின்  அடிப்படையில்  சடங்கு  சார்ந்த   தொன்மம், சமயம், மெய்யியல், பழக்க வழக்கம் சார்ந்த தொன்மங்கள் என வகைப்படுத்துவதுண்டு.  அவ்வகையில் முருகப்பெருமானின்  பிறப்புமுறை,  உறவுமுறை மற்றும்  புராணச் செய்திகள்  அனைத்தும்   தொன்மத்தின்  பாற்படும்.

    பிறப்புமுறை

    செவ்வேள்  சரவணப்  பொய்கையில்  பிறந்து, அறுவகைக்   கார்த்திகை  மகளிர்பால்  வளர்க்கப்பெற்றவன்  என்பதையும், உலகத்தை  அழிக்கும்  தொழிலை உடைய  சிவபெருமானுடைய  திருமகன்  என்பதையும் 5ஆம்  பரிபாடலின் வழி  அறியமுடிகிறது.  பரிபாடலின் 8ஆம்  பாடலானது  முருகனது   பிறப்பினை  “மணமிடற்றண்ணற்கு மதியாரற்  பிறந்தோய்  நீ” என்னும்  அடியில்   விளக்கியமைகிறது. மேலும்  முருகப்பெருமான்  தோன்றிய  பொழுதே  இந்திரன்  முதலிய  தேவர்கள்  அப்பெருமானை  ஆற்றாது  அஞ்சிய  செய்தியினைப்   பரிபாடலின்  14ஆம்  பாடலானது  சுட்டுகிறது.  கலித்தொகையில்  (பாடல் 83) முருகன் “ஆல்அமர்  செல்வன்  அணிசால்  மகன்” என்ற  கருத்தும்  ஈங்குச்  சட்டப்படுகிறது.

    நம்பிக்கைத் தொன்மம்

    நம்பிக்கை  சார்ந்த  தொன்மங்களும்  பண்டைய இலக்கியங்களில்  இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது. அவ்வகையில் குறுந்தொகையில் முருகன் பற்றிய தொன்மக் குறிப்புகள் காணப்பெறுகின்றன.

    முருகப்பெருமான் இவ்வுலகைக் காத்தலானே இவ்வுலக உயிர்கள் நிலைபெற்றன என்னும் செய்தியைக் குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலில் காணமுடிகிறது.

    பண்டைத் தமிழர்கள் மரத்தின்கண் தெய்வம் உறைகின்றது என்ற நம்பிக்கை உடையோராய் விளங்கியதை இலக்கியங்கள் கூறும். அவ்வகையில் குறுந்தொகையின் 87ஆம் பாடலில் “மன்ற மராஅத்த பேஎமுதிர்க் கடவுள்” எனும் அடியில் முருகப் பெருமான் கடம்ப மரத்தின்கண் உறையும் செய்தியை அறிய இயலுகிறது.

    சடங்கு சார்ந்த தொன்மம்

    சங்க இலக்கியங்களில் சடங்கு சார்ந்த தொன்மங்களும் ஒருசேர இடம்பெற்றுள்ளன. வேலன் வெறியயர்தல் என்னும் பகுதியில் தலைமகள் உடல் மெலிவுற்றமை தெய்வத்தால் வந்தது என எண்ணி, உறவினர் முருகவேளுக்கு வெறியாட்டு நிகழ்த்திய செய்தி,

    “உண்துறை அணங்கு இவள் உறைநோய் ஆயின்” எனும் ஐங்குறுநூறு நூலில் (பாடல் – 28) இடம்பெற்றுள்ளதை அறியலாம். மேலும்,

          “சேய் மலைநாடன்’ செய்த நோயே”            (ஐங். 242)

    “கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி”       (ஐங். 243)

    “முருகு என மொழியும் ஆயின்”               (ஐங். 245)

    “அணங்கும் அணங்கும் போலும் அணங்கி ”      (நற். 376)

    “அன்னை அயரும் முருகுநின்”                 (நற். 376)

    “முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல”       (குறுந். 362)

    “நெடுவேள் பேணத் தணிகுவள் இவளென”      (அகம். 22)

    “முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்”        (அகம். 22)

    “செல்வன் பெரும் பெயர் ஏத்தி வேலன்”        (அகம். 98)

    போன்ற அடிகள் சடங்கு சார்ந்த தொன்மத்திற்குச் சான்றாகத் திகழ்கின்றன.

    புராணச் செய்தி

    புராணம் என்பதற்குப் பழங்கதை என்பது பொருளாகும். முருகனைக் குறித்த புராணச் செய்திகள் சங்க இலக்கியத்தில் மிகுதியாக இடம்பெற்றுள்ளன.

    முருகன் அவுணர்களுக்குத் தலைவனாக விளங்கப்பெற்ற சூரபதுமனையும், அவனது சுற்றத்தாரையும் அழித்த செய்தி இலக்கியங்களால் புனையப்பெறும். அவ்வகையில் குறுந்தொகை (பாடல். 1) “செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த” செய்தியும், கடலின்கண் நடுவே மாமர வடிவாய் நின்ற சூரபதுமனை முருகவேள் அழித்தச் செய்தியும் கருதத்தக்கன. 59ஆம் அகநானூற்றுப் பாடலில் “சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேல்” என்ற குறிப்பும் காணக்கிடக்கிறது.

          “ஒன்னாதார்க் கடந்து அடூஉம் – உரவுநீர் மாகொன்ற”   (கலி. 27)

    “மாகடல் கலக்குற மாகொன்ற மடங்காப்போர்”        (கலி. 104)

    “சூர்கொன்ற செவ்வேலாற்பாடி பலநாளும்”            (கலி. 93)

    “சுருடை முழுமுதல் தடிந்த பேர் இசை”             (பதிற். 11)

    “முருகு உடன்று கறுத்த கலி அழி மூதூர்”            (பதிற். 26)

    “சூர்நவை முருகன் சுற்றத்து அன்ன”                (புறம். 23)

    “நோயுடை நுடங்குசூர் மாமுதல் தடிந்து”             (பரி. 5)

    போன்றவரிகள் கவனத்துக்குரியவை.

    மேலும் (பரி. 18), (பரி. 21) போன்ற பாடல்களும் சூரபதுமனை முருகன் வெற்றி கொண்ட சிறப்பினை எடுத்துரைக்கின்றன.

    கிரௌஞ்ச மலையைப் பிளந்தமை

    முருகப்பெருமான் குருகுபெயர்க்குன்றம் என அழைக்கப்படும் ஒரு மலையைத் தன் வேல்கொண்டு அழித்ததை “நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்” (குறுந்.கட.வாழ்) பாடலால் அறியமுடிகிறது. (பரி. 5, 19) பாடல்களும்  மலையைப் பிளந்த செய்தியினைக் குறிப்பிடுகின்றன. (குருகுபெயர்க் குன்றம் என்பது கிரௌஞ்ச மலையென்பது உரைச்செய்தி).

    திருமண உறவு முறை

    முருகவேள் வள்ளியுடன் கூடிச் சென்றதைக் குறிப்பால் “முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல” எனும் நற்றிணை 82ஆம் பாடலானது சுட்டுகிறது. வள்ளியை முருகக் கடவுள் மணந்த செய்தியை 9ஆம் பரிபாடலானது எடுத்துரைக்கிறது.

    அதற்கான சான்று வருமாறு,

    “மையிரு நூற்றிமையுண் கண்மான்மறி தோண்மணந்த ஞான்று”

    முருகன் – வள்ளி ஆகிய இருவருக்கும் இடையே ஆன உறவு முறையானது இலக்கியங்களில் தெளிவுறச் சுட்டப்படும். ஆனால் முருகக் கடவுள் தேவசேனையை மணந்த செய்தியானது குறிப்பால் மட்டுமே (பரி. 9ஆம் பாடலில் காணப்படுகிறது. இவை தவிர வேறு எந்த எட்டுத்தொகை இலக்கியத்தின் கண்ணும் தெய்வானை பற்றிய குறிப்புகள் இல்லை. சங்க இலக்கியங்களில் தெய்வானை என்ற சொல் இடம்பெறவே இல்லை என்பதை அறியமுடிகிறது.

    படைவீடுகளின் சிறப்புகள்

    முருகனுக்குரிய படைவீடுகள் ஆறென்ப. சங்ககாலத்தில் ‘படைவீடு’ என்ற கருத்தாக்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பின்னர்வந்த படைவீடுகளின் செய்திகள் சங்க நூல்களில் பொருத்திப் பார்த்திருப்பதாகச் சிலர் கருதுவர். அவற்றை நிரல்படுத்துவது தேவை. முருகப்பெருமானின் படைவீடுகளாக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை போன்றவை திகழ்கின்றன. ஆறுபடை வீடுகளுள் முதலாவதாக அமையும் திருப்பரங்குன்றத்தின் சிறப்புகளே மிகுதியாக இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன.

    “ஒன்னாதார்க் கடந்து அடூஉம். உரவுநீர் மா கொன்ற” (கலி-27) ஆம் பாடலில் திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் சூரபதுமனை அழித்தச் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளதென்பர்.

    • திருமால், சிவன், பிரம்மன், பன்னிரு ஆதித்தர், அசுவனிமருத்துவர், வசுக்கள் எண்மரும், உருத்திரர், திக்குப் பாலகர், தேவர், அசுரர், முனிவர் ஆகிய அனைவரும் திருப்பரங்குன்றத்தின்கண் வந்து உறைவதால் குன்றம் இமய மலைக்கு நிகராகச் சுட்டப்பட்டுள்ளதைப் பரிபாடல் 8ஆம் பாடலானது விளக்குகிறது.
    • இமயக் குன்றினில் உள்ள ஏனைச் சுனைகளினும் சிறந்தது திருப்பரங்குன்றத்துச் சுனை என்பதும், அவை என்றும் வற்றாமல் ஒரே நிலையில் இருப்பது சிறப்பாகும் என்பதும் கூறப்பட்டுள்ளன.
    • குன்றின்கண் இசைக்கருவிகள், நறுமணப் புகைகள், வானளாவி நிற்பதைப் பரி. 17ஆம் பாடலானது விளக்குகிறது.
    • ஐந்து வகையான மலைப் பொருள்களைக் குன்று பெற்றுத் திகழ்வதைப் பரிபாடலின் 18ஆம் பாடலால் அறியமுடிகிறது.

    முருகப்பெருமானின் படை வீடுகளுள் திருப்பரங்குன்றச் சிறப்புகளே எட்டுத்தொகையில் மிகுதியாக இடம்பெறுகின்றன. ஏனைய படைவீடுகளாக விளங்கப்பெறும் பழனி மற்றும் திருச்செந்தூர் ஆகியவைக் குறிப்பால் மட்டுமே சுட்டப்பட்டுள்ளன.

    படைவீடு (திருச்செந்தூர்)

    முருகனது ஆறுபடை வீடுகளுள் இரண்டாம் படைவீடாக விளங்கும் திருச்சீரலைவாய் எனப் பெயர்பெறும் திருச்செந்தூரின் சிறப்பைப் புறநானூற்றுப் பாடலில் காணமுடிகிறது.

    “வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்”  (புறம். 55)

    வெண்மையான மேற்பரப்பினையுடைய அலைகள் திரியும் திருச்செந்தூர் எனச் சிறப்பிக்கப்படுகிறது. இப்பாடலில் இடம்பெறும் ‘செந்தில்’ என்ற பெயரானது முருகன் உறையும் திருச்செந்தூரையும், முருகனையும் குறித்த சொல்லாய் அமைந்துள்ளது.

    படைவீடு (பழனி)

    முருகக் கடவுளின் ஆறுபடை வீடுகளுள் ஒன்றாக அமையும் பழனி மலை பற்றிய குறிப்புகள் புறம். 158 ஆம் பாடலில் காணப்படுகின்றன. கடையெழு மலையில் முருகன் கோயில் கொண்டுள்ளதைக் குறிப்பால் உணர்த்துவதாகச் சில பகுதிகள் அமைகின்றன.

    நிறைவுரை

    தமிழரின் அக  வாழ்விலும், புற வாழ்விலும் முருகக் கடவுள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததை இலக்கியங்கள் நமக்குப் பகர்கின்றன. அவ்வகையில் முருக வழிபாடு தமிழ் மக்களின் சமய வாழ்க்கையில்  தனித்ததோர் இடத்தைப் பெற்றுள்ளதை அறியமுடிகின்றது.

    பயன் நல்கிய நூல்கள்

    1. அண்ணாமலை, வே. (2000), சங்க இலக்கியத்தில் தொன்மக்களஞ்சியம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம்.
    2. இராசமாணிக்கம், தி. (1984), தமிழர்தம் தனிப்பெருங்கடவுள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
    3. சாமி, பி.எல். (1990), சங்க நூல்களில் முருகன், சேகர் பதிப்பகம், சென்னை.
    4. ஞானம், ப. (2001), தமிழ் இலக்கியத்தில் முருகன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
    5. பாலசுப்பிரமணியன், சி. (1972), முருகன் காட்சி, பாரி நிலையம், சென்னை.

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்
    சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம்
    புதுவைப் பல்கலைக்கழகம்
    புதுச்சேரி – 149944316067

     

     

    Share
  • ஆய்வுகளும் – ஆய்வறிஞர்களும்! (12)

    எண்ணிம எழுத்தும் தரவும்

     

    மின்னியலில் எழுத்தும் தரவும் எண்ணிம வடிவில் ஒரு சீரான அடிப்படையில் அமைந்து விளங்கும்.

    எழுத்துக்கள் சேர்ந்து சொல்லாகவும் சொற்கள் சேர்ந்து வரிகளாகவும் வரிகள் சேர்ந்து பத்தியாகவும் பத்திகள் பக்கங்களாகவும் பக்கங்கள் சேர்ந்து நூலாகவும் உருவாகும்.

    எண்ணிம வடிவில் ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதும்போது சொல்லுக்கும் சொல்லுக்கும் இடையில் ஒரு எழுத்தளவு இடைவெளி இருக்க வேண்டும். வரிக்கும் வரிக்கும் இடையில் இரண்டு எழுத்தளவு இடைவெளி இருக்க வேண்டும். பத்திக்கும் பத்திக்கும் இடையில் மூன்றெழுத்து இடைவெளி இருத்தல் வேண்டும். ஒரு பக்கத்தின் மேலும் கீழும் பக்கவாட்டிலும் குறிப்பிட்ட காலி இடம் இருக்க வேண்டும். இது தொடர்பான தகவல் ஆய்வு இதழில் கொள்கையாகவும் வடிவ அமைப்பாகவும் குறிப்பிடப்பட்டிருக்கும் இதழுக்கு இதழ் மாற்றம் இருக்கும் என்பதால் ஆய்வுக் கட்டுரை எழுதும் முன் அந்த இதழைப் பார்க்க வேண்டும்.

    ஆய்வாளர் கட்டுரை எழுதும்போது காகிதத்தில் பேனாவில் எழுதி திருத்தங்கள் செய்து கணிணியில் எண்ணிம வடிவில் பதிவிடலாம் அல்லது நேரடியாகக் கணினியில் பதியலாம். கணினியில் பதிவிடும்போது முதலில் கட்டுரைக் குறிப்புகளை நோட் பேடில் வரியாகப் பதிவிடலாம். மைக்ரோசாஃப்ட் மென்பொருளில் எழுதுவதைவிட இதுவே சிறந்தது.

    கணினியில் மென்பொருள் மூலம் வடிவ மாற்றம் செய்ய இயலும். கணினியில் சொற்கள் மட்டும் உள்ள பதிவுகள் வரிவடிவில் இருக்கும். எழுத்தில்லாமல் உருவம் அமைந்தால் அது பட வடிவம். ஒலி வடிவிலும் உருவாக்கலாம். இவை எல்லாம் தனித்தனி ஊடக வடிவங்களாகும். ஒன்றோடொன்று இணைந்தால் அதுவே பல்லூடக வடிவத்தைப் பெறும்.

    இணையத்தில் வெளியாகும் ஆய்வுகள் வரி வடிவிலும் ஒலி வடிவிலும் ஒளிக்காட்சி வடிவிலும் அமையலாம். பல்லூடக வடிவில் அமைவது மேலும் சிறப்பானதாக அமையும். அச்சு ஊடகத்தில் இதுபோன்ற முயற்சி செயல்பட வாய்ப்புகள் குறைவு.

    நாகராசன்

    Share
  • சேக்கிழார் பா நயம் – 10

    =======================

    திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி

    ———————————————————-

     

    வேளாண்தொழிலில் நெற்பயிரோடு வாழை , கரும்பு ஆகியவை நன்செய் நிலப்பயிர்கள் ஆகும்.  விளைந்த கரும்புகள்  கமுக  மரங்களுக்கு  இணையாக விளங்கின என்று முன்னரே கண்டோம். அந்தக் கரும்புகளை வெட்டி, ஆலைகளில் இட்டுப் பிழிந்து, மிகப் பெரிய அண்டாக்களில் ஊற்றிக்  காய்ச்சுவார்கள். அவ்வாறு காய்ச்சும்போது எழும் கரும்புகை வானில் எங்கும் பரவும்.  அந்தப் புகையில் கரும்பின் இனிய மணம் கமழும்.

    அந்நாட்டில் பெண்கள் நன்றாகக்  குளித்து உடலையும் உள்ளத்தையும் தூய்மை செய்துகொண்டு, தம் இல்லத்தின் மேல்மாடங்களில் நிற்பர். அப்போது  மணம் மிக்க அகில், சாம்பிராணிப்  புகையை உருவாக்கித்  தம் கூந்தலில் அவற்றின் புகையை வாங்கி உலர்த்துவர். அப்புகையும் வானில் எழுந்து பரவும். அதிலும் அகிலின் நறுமணம் கமழும்.  அவர்தம் கூந்தலில் புதுமலர்ச் சரங்களைச்  சூடிக் கொள்வர்.   அப்பூக்களின் நறுமணமும் வானெங்கும் பரவும்.

    ஊரிலுள்ள அந்தணர்கள் தம் இல்லங்களில் சிறுசிறு வேள்விக் குண்டங்களை அமைத்து அன்றாடம் தீவேள்வி புரிவர். ஆனால் ஊரின் நன்மை கருதி, மிகப்பெரிய  யாகங்களையம் செய்வர். அவற்றுக்காக ஊரின் புறத்திலே வெட்ட வெளிக் களங்களில்  , பெரிய யாக குண்டங்களை அமைப்பர். அவற்றின் நடுவே யூபம் எனப்படும் பெரிய தூண்களை நடுவர். அவற்றை நம் பழந்தமிழ் இலக்கியமான புறநானூறு,

    ‘’நற் பனுவல் நால் வேதத்து

     அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை

     நெய்ம் மலி ஆவுதி பொங்கப், பன்மாண்

     வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,

     யூபம் நட்ட வியன்களம் பலகொல்?’’

    என்று பாடுகிறது. அந்த யூபத்தூண்களில் இடப்பெறும் தசைகளைத்  தின்பதற்காகப் பருந்துகள்  வானில் வட்டமிட்டுப் பறக்கும் . இதனைப் புறநானூறு,

    ‘’பருதி உருவின் பல்படைப் புரிசை

     எருவை  நுகர்ச்சி யூப நெடுந்தூண்

     வேத வேள்வித்  தொழில்முடித்  ததூஉம் ‘’  

    என்று பாடுகிறது. இவ்வாறு அமைக்கப்பெறும் வேள்விச்சாலைக் களங்கள்  பெரிய சுவர்களுடன் கட்டப்பெறும். அந்த வேல்விச் சாலைகளிலிருந்து மேலே கிளம்பும் பெரும் புகை வானில் பரவும். அந்தப் புகையிலும் ஆவுதி மணம் கமழும். இதனை வில்லிபாரதம்,

    ‘’அரசினை அவிய அரசினை அருளும் அரிபுருடோத்தமன் அமர்வு

      நிரைநிரையாக நெடியன யூபம்  நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு

      கரை புரை வேள்வி புகைகமழ் ‘’ 

    என்று பாடும். இந்த வேள்விச் சாலையை சேக்கிழார் ‘’ பெரும் பெயர்ச் சாலை ‘’ என்று பாடுவார்.

    ‘’பெரும் பெயர் – மகா வாக்கியம். ஆகு பெயராய் ஈசுவரனை யுணர்த்திற்று. “தத்துவமசி” முதலிய மகா வாக்கியங்களாலே பேசப் பெறுபவன். “பெரும் பெயர்க் கடவுளிற் கண்டு” என்ற சிவஞான போதச் சிறப்புப்பாயிரமும் “பெரும் பெயர் முருக” என்ற திருமுருகாற்றுப்படையும் முதலியனவும் காண்க. பெரும் பெயர்ச்சாலை – ஊருக்கு வெளியிலே யூபத்தம்பங்கள் நாட்டி இறைவனை முன்னிட்டுச் செய்யப்பெறும் பொது வேள்விச் சாலைகள்’’. என்பார் சம்பந்த சரணாலயர்.

     “மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும்,

      விண்ணிற் புயல் காட்டும் வீழிம் மிழலையே.”

    என்பது தேவாரம்.

    இவற்றைத் தவிர வானில்  இயல்பாகச் சூழும் கருமேகங்களும் விளங்கும். இவ்வகையில் திருவாரூர்  வானில் நால்வகைப்  புகைகளும், நால்வகை நறுமணங்களுடன் விளங்கும். இவை யனைத்தும் வானில் மருவிக் கலந்து எந்த நறுமணம் எங்கிருந்து வருவது? என்ற குழப்பத்தை விளைவிக்கும்.

    இதனைச் சாறு மணக்கும் குன்றத்தூர்த் தலைவராகிய சேக்கிழார் பாடுவதை இங்கே காண்போம்.

    ‘’கரும்படு   களமர் ஆலைக்  கமழ்நறும்  புகையோ, மாதர்

     சுரும்பெழ  அகிலால் இட்ட  தூபமோ,  யூப  வேள்விப்

     பெரும்பெயர்ச்   சாலை  தோறும் பிறங்கிய  புகையோ  வானின்

     வருங்கரு  முகிலோ  சூழ்வ  மாடமும் காவும் எங்கும் ‘’

    என்பது அவரருளிய  பாடல்!

    இப்பாடலில்  நால்வகைப்பட்ட புகைகள் நெடுநிலை மாடங்களையும், சோலைகளையும்  சூழ்கின்றனவாம். இவற்றுள் கரும்பைக் காய்ச்சும் ஆலைப்புகை நாட்டின் விளைச்சல் வளத்தையும், அதன் வழியே பொருளாதார மேம்பாட்டையும் காட்டுகிறது. அடுத்து பெண்கள் நெடுநிலை மாடத்தில் நின்று கூந்தலில் நறுமணப் புகை இடுவது, அந்நாட்டின் இல்லற இன்பநிலையைக் காட்டுகிறது.அடுத்து பொதுவேள்விச் சாலைகளில் அவி சொரிந்து நடத்தும் வேள்வி , வீடுபேற்றைக்  குறித்த  வழிபாட்டு  நெறியைக்   காட்டுகிறது. மேலும் வானில் சூழ்ந்து  நிற்கும் இயல்பான மேகங்கள், நாட்டு மக்களின் அறஞ்சார்ந்த வாழ்க்கையைக் காட்டுகின்றன. இதனைக் கம்பர் ,

    ‘’பொற்பின் நின்றன பொலிவு பொய் இலா
    நிற்பின் நின்றன நீதி மாதரார்
    அற்பின் நின்றன அறங்கள் அன்னவர்
    கற்பின் நின்றன கால மாரியே’’

     

    என்று  அறத்தின் சிறப்பைக் கருமேகத்தின் வழியே காட்டுகிறார்.

    ‘’சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

     வறக்குமேல்  வானோக்கும் ஈண்டு .’’

    என்றும்,

    ‘’தானம் தவமிரண்டும்  தங்கா  வியனுலகம்

    வானம் வழங்கா தெனின்’’

    .

    என்றும் ,

     

    நீரின்று  அமையாது உலகெனின்  யார்யார்க்கும்

    வானின்று  அமையாது  ஒழுக்கு.’’

    என்றும் திருக்குறள் பாடுகிறது.அறம்,பொருள் இன்பம், வீடு ஆகிய நால்வகைப் பால்களையும் காட்டும் பாடல் இது. இந்தச் சிந்தனைகள் அனைத்தையும் ஒருங்கே எண்ணிச்  சேக்கிழார்  பாடும்  பாடலின்  நுட்பம்  வியந்து  போற்றுதற்கு உரியது.

    =============================================

     

    Share
  • தீபாவளி – மலரும் நினைவுகள்

    க. பாலசுப்பிரமணியன்

    நினைவலைகளில் முழுகி எழுந்திருக்கும்பொழுது -1957 – மதுரையிலே எட்டாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்த நேரம்.. தீபாவளிக்கு சுமார் பதினைந்து நாட்களுக்கு முன்பே கொண்டாட்டங்களின் துவக்கம்.. வீடு தோறும் பாட்டாசுகள். ஒரு பத்து ரூபாய் பணம் எடுத்துக்கொண்டு சென்றால் ஒரு பெரிய சாக்குப் பை நிறைய பட்டாசுகள்… வகை வகையாய் … ஓலை வெடியை வைத்துக்கொண்டு நித்தம்… காலையும் மாலையும் – கைகளிலெல்லாம் வெள்ளை வெளேரென்று பட்டாசு மருந்துகள்…

    “போய் கையை நல்லா சோப்பு போட்டு அலம்பிக்கொண்டு அப்புறம் சாப்பிட வா…” அன்னையின் ஆணை.

    நான்கு நாள் முன்னதாகவே பட்சணங்கள் தயாரிக்கும் பெரியவர்கள்… கைமுறுக்கு சுற்ற நாலு பேர்…

    “அம்மா.. அம்மா.. நானும் சுத்திப் பார்க்கட்டுமா”

    “வேண்டாம்.. தள்ளிப்போடா .. எண்ணை கொதித்துக்கொண்டிருக்கின்றது.. தண்ணி பட்டு வெடித்து விடப்போகின்றது…”  அப்போதுதான் டபால் என்று ஒரு சத்தம்.. சில நீர்த் துளிகள் எண்ணையில் தெளித்து ..

    “அய்யயோ ,, கையில் கொதிக்கிற எண்ணை தெளித்து விட்டது….. போய் அந்த இட்லிமாவை எடுத்து அங்கே போடு.. “

    ‘டேய்.. இந்தாடா. ” ஒரு பாதி வெந்த கைமுறுக்கை கையில் கொடுத்த அத்தை ” இது நல்ல மெதுவாக இருக்கும்.. ” அந்தச் சுவை இன்னும் நாவினில்..

    காலங்கள் ஓடுகின்றன… சில ஆண்டுகள் நகர.. பத்தாவது வகுப்பு..

    “அம்மா.. காலையில் சீக்கிரம் எழுந்து நாலு மணிக்கே பட்டாசு விடணும்…”

    மூன்று மணிக்கே தூக்கம் களைந்து விட , குளிக்கும் அறையில் ஒரு பெரிய பித்தளைப் பானையில் வெந்நீர் கொதித்துக் கொண்டிருக்கின்றது..

    “கொஞ்சம் அந்த விறகடுப்பை ஊதிவிடேன்.. ” இது பாட்டி.  தன்னுடைய அரைகுரைப் பார்வையை வைத்துக்கொண்டு ..

    அந்தப் பித்தளை ஊதுகுழலை வைத்து ஈரமான விறகில் மெதுவாக எரிந்துகொண்டிருக்கும் அக்கினி பகவானோடு .  பேசிக்கொண்டு. சில நேரங்களில் கண்ணனைப் போல் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு…

    “வரிசையாய் உட்காருங்கோ எல்லாரும்..:” நான், என் தம்பி, அத்தை குழந்தைகள் இருவர்.. “எனக்கு முதலில்.. எனக்கு முதலில்”.  இன்றும் நினைவில் சண்டைகள்… அழுகை..  “டேய், தீபாவளியும் அதுவுமா காலையிலே அழாதீங்கடா…”

    உறவுகள் வலுவாக இருந்த காலம்.. தேவைகள் குறைவாக இருந்த காலம்.. மகிழ்ச்சி நிரம்பியிருந்த காலம்…

    ” என்னுடைய கம்பி மத்தாப்பு சரியா எரியலை.. உன்னோடுதைக் கொடேன் ” என்று ஒருவன் கெஞ்ச ” அதெல்லாம் தர முடியாது ” என்று சொன்னவன் எங்கேயோ பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது அவன் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த முறத்திலிருந்து ஒன்றைத் திருட…

    வாழ்க்கை இனித்தது .. இனிப்புக்களை விட அதிகமாய்..

    இன்னிக்கு என்ன படம் ரிலீஸ்?  முதல் நாள் முதல் காட்சி போவதற்கான முயற்சிகள்…

    சிவாஜியும் பண்டரிபாயும் சேர்ந்து நடித்த அவள் யார் என்ற படம். நண்பகல் காட்சிக்காக காலை எட்டு மணிக்கே வரிசையில் நின்று..

    “டேய்.. அங்கே பாருடா… ஏறிக்குதிக்கிறான்.. ” என்று வரிசைக்காகச் சண்டைபோட்டு, தீபாவளிக்கான புதிய சட்டையைக் கிழித்துக்கொண்டு…

    நினைத்துப்பார்த்தால் வாழ்க்கை முழுமையாய்.. எத்தனை பாடங்களைச் சொல்லிக் கொடுத்தது.!!

    அடுத்த வருடம்…

    ” பாட்டி என்ன களிமண்ணா அங்கே…”

    “வெந்நீர் போடற மண்ணடுப்பு உடைந்திருக்கு .. ஒரு புது அடுப்பு பண்ணலாமென்று”

    “நான் பண்ணட்டுமா…” அந்தக் களிமண்ணோடு போராடி ஒரு அடுப்பை வடிவமைத்து.. ஒரு தொழில்நுட்ப பொறியியல் பட்டமே பெற்றிருக்கலாம்.

    காலங்கள் ஓடின..

    கல்லூரிக் காலம்… பட்டாசு மோகம் குறைந்து.. என்ன டிரஸ்?.. பெல் பாட்டம் பாண்ட் .. முழுக்கைச் சட்டை…

    “டிரஸ் சூப்பராக இருக்கே…” இது ஒரு சொந்தக்காரரின் நக்கலான வார்த்தைகள்…

    ஒரு முறை திருவல்லிக்கேணியில் குடியிருப்பு. நான்கு குடித்தனங்கள்… “ஹலோ , நண்பரே .. இந்த வருஷம் உங்க வீட்டிலே என்ன ஸ்வீட்?”

    “எனக்குத் தெரியாது.”

    “ஒரு ஐடியா பண்ணினால்  என்ன… மொத்தமா நாலுபேர் வீட்டுக்கும் சேர்த்து கோதுமை அல்வா பண்ணினால் .. “

    யோசனை வலுத்தது.  நாலு ஆண்கள் சேர்ந்து… ஒருவர் கோதுமையை ஊற வைத்து  ஆட்டுக்கல்லில் அரைத்து பாலெடுக்க, இருவர் அடுப்படியில்,,,

    “ரொம்ப நன்றாக வந்திண்டிருக்கே  ..” பக்கத்துக்கு வீட்டு மாமியின் கண் பட…

    கடைசி நேரத்தில் அல்வா கொஞ்சம் இறுகி விட…. அது “சாக்லேட் அவதாரத்தில் வெளியே வர…

    தீபாவளி இனித்தது.. அந்த சாக்லேட்டைப் போல…

    இன்று…

    “என்னங்க…” இது என் மனைவி… ” நாளைக்கு தீபாவளி… சீக்கிரம் கடைக்குப்போய் ஏதாவது ஸ்வீட்டும் மிக்ச்சரும் வாங்கிண்டு வாருங்க..

    காலங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன.. பல நேரங்களில் மலரும் நினைவுகளில் நாம் மகிழ்வோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். !

    தீபாவளி வாழ்த்துக்கள் !

    Share
  • வல்லமையின் வாழ்த்துகள்!

    இருள் நீக்கி ஒளியூட்டி மருள் நீக்கி மங்கலம் நிறைக்கும்
    அருள் நிறை இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துகள்!

    Share
  • படக்கவிதைப் போட்டி – 186

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலஷ்மி எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (10.11.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்.

    Share
  • ஆய்வுகளும் – ஆய்வறிஞர்களும்! (11)

    பேரா. நாகராசன்

     

    படியெடுத்தலும் குறிப்பெடுத்தலும்

     

    ஒரு மூல ஆவணத்திலிருந்து படியெடுப்பது தவறான செயல் என்பது எழுதுவோர் மாணவப் பருவத்திலேயே அறிவர். படியெடுப்பதன் மூலம் எழுதுவோர் தங்களின் இயல்பான எழுத்து நடையில் எழுதுவதைத் தவிர்ப்பதால் அவர்கள் நகலெடுக்கும் கருவியாக மாறி தங்களின் தனித்தன்மையுள்ள எழுத்தாற்றலை இழந்துவிடுவர்.

    ஒரு கருத்துரு தொடர்பான தகவலைத் திரட்டும் நிலையில் மூல ஆவணங்களை நகலெடுக்கலாம். ஆனாலும் ஆய்வுக் கட்டுரைக்குப் பயன்படுத்தும்போது மேற்கோள் காட்டவேண்டியிருந்தால் படைப்பாளரின் வார்த்தைகளை பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தியவர்கள் எந்த ஆவணத்தில் இருந்து எடுக்கப்பட்டது, அதன் ஆசிரியர், ஆவணத்தின் தலைப்பு வெளியான ஆண்டு, இடம், நாடு போன்ற தகவல்களைக் கட்டுரையில் அடிக்குறிப்பு அல்லது கட்டுரையின் இறுதிப்பகுதியில் மேற்கோள் ஆவணத் தொகுப்பில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். மற்ற ஆவணங்களில் உள்ள ஆய்வுக் கட்டுரைக்குப் பொருத்தமான தகவல் ஆய்வாளரின் சொந்த நடையில் அமைய வேண்டும். அதற்கு ஆய்வாளரின் குறிப்பெடுக்கும் திறன் பேருதவியாக இருக்கும்.

    ஆய்வுக்கான ஆவணங்கள் மூன்று விதமாக அமையும். ஆய்வு முடிவுகள் முதலில் ஆய்விதழ்களில் வெளியாகும். சில நேரங்களில் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வை பன்னாட்டுக் கருத்தரங்கங்களிலும் தேசிய அளவிலான மாநாடுகளிலும் வெளியிடுவர். இந்த இரண்டுவகை ஆவணங்களும் முதல் நிலை ஆவணங்கள். ஆய்வாளர் இவ்வகை ஆவணங்களை அதிகம் குறிப்பெடுக்க வேண்டும்.

    இரண்டாம் நிலை ஆவணங்களாக நூலும், பதிப்பாசிரியரால் வெளியிடப்படும் கட்டுரைத் தொகுப்பும் அடங்கும். பொதுவாக நூல் ஆவணப்படுவதற்குச் சில ஆண்டுகள் காலம் தேவைப்படுவதால் அவற்றில் உள்ள தகவல் குறைந்தது பதிப்பிட்ட ஆண்டிலிருந்த ஐந்து ஆண்டுகள் பழையதாக இருக்கும். ஆயினும் நூல்களில் விமரிசகர்களும், ஆய்வாளர்களும் சிறந்தவை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றில் உள்ள முக்கியத் தகவல்களைக் குறிப்பெடுத்துப் பயன்படுத்த வேண்டும். அவ்வாறான தகலுக்கான ஆவணங்கள் தொடர்பான குறிப்புகள் ஆய்விதழ் போன்றே அடிக்குறிப்பில் அல்லது ஆவணத் தொகுப்பில் குறிப்பிட வேண்டும். இக்குறிப்புகள் ஒரு ஆய்வாளர் ஆய்வுக் கட்டுரைக்கு உழைத்த உழைப்பைப் படம் பிடித்துக் காட்டும்.

    சொற்களஞ்சியம், அகராதி, நிகண்டு, ஒரு தலைப்பின் தொகுப்பு ஆய்வு, அச்சு ஊடகத் திரட்டி போன்றவை மூன்றாவது வகையான ஆய்வு ஆவணங்களாகும்.

    ஆய்வாளர் அச்சு ஊடக ஆவணங்களை நகலெடுக்கலாம். எண்ணிம ஆவணங்களைப் படியடுக்கலாம். ஆனால் அசலை அப்படியே எழுதினால் அது குற்றமாகும். ஆய்விதழ் நடத்துபவர்கள் இந்தக் குற்றங்களைக் கண்டுபிடிக்க இப்போது மென்பொருளைப் பயன்படுத்துவதால் இவ்வகை அறிவுத் திருட்டை மேற்கொள்வது தீங்கையே விளைவிக்கும்.

    தொடருவோம்

    Share
  • நீங்கள் Mr. ஆ? Ms. ஆ?  அல்லது Mx. ஆ ? 

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்காவில் நடக்கும் பல வித்தியாசமான விஷயங்களில் இதுவும் ஒன்று.  ஆணிலும் சேராத, பெண்ணிலும் சேராத திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் (transgender) ஏன் தாங்கள் Mr. என்றோ அல்லது Mrs. என்றோ அல்லது Ms. என்றோ அழைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது.  அதனால் தங்களுடைய பிறப்புச் சான்றிதழ்களில் M என்றோ F என்றோ போட்டுக்கொள்ளாமல் இரண்டிலும் சேராமல் X என்று போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் வைக்கப் போகிறார்கள்.

    ஆரோவுட் என்னும் திருநம்பி (‘அவனுடைய’ என்றோ ‘அவளுடைய’ என்றோ தன்னை குறிப்பிடாமல் ‘அவர்களுடைய’  என்றே தங்களைக் குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்; தமிழில் என்றால் இருவருக்கும் பொதுவாக ‘அவருடைய’ என்று குறிப்பிடலாம்; இந்த வசதி ஆங்கிலத்தில் இல்லை.) அவர்களுடைய பாலை (sex) அவர்களுடைய பிறப்புச் சான்றிதழில் மாற்றிக்கொண்டுள்ளார்கள்.  Female என்பதற்குப் பதிலாக male என்று போட்டுக்கொள்வதும் சரியாகத் தோன்றவில்லையாம்.   அதனால்   F (female) என்றும் இல்லாமல் M (male) என்றும் இல்லாமல் நடுநிலையாக X என்று போட்டுக்கொள்ளப் போகிறார்களாம்.

    இப்படி ‘X’ என்று பிறப்புச் சான்றிதழில் போட்டுக்கொள்வதிலும் ஒரு கஷ்டம் இருக்கிறது.  நியூயார்க் மாநிலப் போக்குவரத்துத்துறை வழங்கும் வாகன ஒட்டுநர் உரிமத்திலும்  மத்திய அரசு வழங்கும் பாஸ்போர்ட்டிலும் சமூக பாதுகாப்பு அட்டையிலும் (social security card) நடுநிலையான X என்ற நடுநிலை விருப்பத் தேர்வு (option) இல்லை.  ஒரே நபரின் பல சான்றிதழ்களில் ஒன்றில்  M என்றும்  இன்னொன்றில்  X என்றும் குறிப்பிடப்பட்டிருந்தால் அது குழப்பத்தை விளைவிக்கும் என்கிறார் திருநங்கை, திருநம்பிகளுக்காக வாதாடும் லாப நோக்கில்லாத ட்ரான்ஸ்செண்ட் லீகல் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஆரோவுட்.  ஒருவரைக் குறிப்பிடுவதற்குச் சரியான அடையாளம் இல்லாவிட்டால் அவர்களைப் பற்றிய மற்ற விபரங்களும் தப்பாகிவிடலாம் என்கிறார் ஆரோவுட்.

    அமெரிக்காவில் பால் (sex) பற்றிய எண்ணங்கள் மாறிவருவதால், தங்களைப் பற்றிய அதிகாரபூர்வமான ஆவணங்களில் தங்கள் பாலை எப்படிக் குறிப்பிட வேண்டும்  என்று தாங்கள் விரும்பியபடி மாற்றிக்கொள்ளலாம் என்று சில மாநிலங்கள் மக்களுக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கின்றன; மாநிலத்தின் உரிய அலுவலங்களுக்கு அப்படி மாற்றிக்கொடுக்க அதிகாரம் கொடுத்திருக்கின்றன.  நியுயார்க் நகர கவுன்சில் சென்ற செப்டம்பர் மாதம் ஒருவருடைய பிறப்புச் சான்றிதழில் ஆணிலும் சேராத, பெண்ணிலும் சேராத பால் – அதாவது  X என்று குறிப்பிடலாம் என்ற சட்டத்தைக் கொண்டுவந்தது.  இதைப் பின்பற்றி கலிஃபோர்னியா, ஆரகன், வாஷிங்டன், (தலைநகர் வாஷிங்டன் அல்ல, வாஷிங்டன் மாநிலம்) நியு ஜெர்ஸி ஆகிய மாநிலங்களும் இந்தச் சட்டத்தைக் கொண்டுவரப் போகின்றன.  வாஷிங்டன் மாநிலத்தில் இருபத்தாறு பேரும் கலிஃபோர்னியாவில் பதினாறு பேரும் இம்மாதிரி மாற்றங்களுக்காக விண்ணப்பித்திருக்கிறார்களாம்.  தலைநகரான வாஷிங்டன்  டி.சி.யும் மெயின் மாநிலமும் வாகன ஓட்டுநர் உரிமங்களில்  X என்று போட்டுக்கொள்ள உரிமை வழங்கினாலும் பிறப்புச் சான்றிதழ்களில் அப்படிப் போட்டுக்கொள்ள அனுமதி கொடுக்கவில்லை.  இதனால் பல குழப்பங்கள் விளைகின்றன.

    கலிஃபோர்னியாவைச் சேர்ந்த Mx. ஃபுருயா என்பவர்கள்தான் நாட்டிலேயே முதல் முதலாக மூன்றாவது பாலைக் குறிக்கும் X என்பதைப் பெற்றவர்கள்.   இவர்கள் சில மாதங்கள் கழித்து அம்மாநிலத்தின் வாகனத்துறைக்கு தங்களுடைய கார் ஓட்டும் உரிமத்தைப் புதுப்பிக்கச் சென்றபோது M அல்லது F என்ற இரண்டு பிரிவுகள்தான் இருந்தனவாம்.  இதைப் பற்றித் தாங்கள் யோசிக்கவில்லை என்று கூறிய வாகனத்துறை அதிகாரிகள் இந்தக் குழப்பத்தைத் தீர்ப்பதற்கு அடுத்த ஆண்டிலிருந்து இரண்டிலும் சேராத மூன்றாவதான X-ஐயும் சேர்க்கப் போவதாகக் கூறினார்களாம்.

    இந்தியா உட்படப் பத்து நாடுகளில் – ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், கனடா, டென்மார்க், ஜெர்மனி, இந்தியா, மால்டா, நேபாளம், நியுஜிலாந்து மற்றும் பாகிஸ்தான் – பாஸ்போர்ட்டுகளிலோ அடையாள அட்டைகளிலோ மூன்றாம் பாலைச் சேர்க்க வசதி இருக்கிறதாம்.  இந்தியாவில் ஹிஜ்ரா சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் குறிக்க eunuch என்னும் ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்தான E-ஐ பாஸ்போர்ட்டில் போடும் வசதி 2005-லிருந்து இருக்கிறதாம்.   இத்தனை நாடுகள் திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் இந்த வசதியைச் செய்து கொடுத்திருக்கும்போது ஏன் அமெரிக்கா மட்டும் செய்யவில்லை என்கிறார் அவர்களுடைய உரிமைகளுக்காகப் போராடும் ஒரு வழக்கறிஞர்.  மாநில அரசு வாகனம் ஓட்டும் உரிமத்திலும் பிறப்புச் சான்றிதழிலும் X என்று ஒருவருடைய பாலைக் குறித்திருந்தால் (இவை இரண்டும் மாநில அரசால் வழங்கப்படுபவை),  வறுமைக் கோட்டுக்குக் கீழே வருபவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் மருத்துவ உதவி அட்டையில் ஒருவரின் பாலைக் குறிக்கும் இடத்தில் M அல்லது F என்று மட்டும் குறித்திருந்தால் அந்தக் கார்டு அந்த நபருக்குரியதல்ல என்று மறுக்கப்பட்டு அவருக்கு மத்திய அரசின் இலவச மருத்துவ உதவி கிடைக்காமலே போய்விடலாம்.  இம்மாதிரிக் குழப்பங்களைத் தவிர்ப்பதற்கு எல்லா அடையாள அட்டைகளிலும் M மற்றும் F என்பவையோடு X என்பதும் இருக்க வேண்டும் என்று வாதாடுகிறார்கள் திருநங்கைகளும் திருநம்பிகளும்.

    ஆண், பெண் என்ற பெரும் பிரிவுகளில் தங்களைச் சேர்க்காமல் தங்களுக்கென்று தனி அடையாளம் வேண்டும் என்கிறார்கள் இவர்கள்.  பிறந்தவுடன் அவர்களின் பிறப்புறுக்களைப் பார்த்து அவர்களை ஆண் என்றோ பெண் என்றோ பிறப்புச்சான்றிதழ்களில் குறிப்பிட்டாலும் பின்னால் அவர்கள் வளர்ந்துவரும்போது பல மாற்றத்துக்கு உள்ளாகிறார்களாம்.  அப்படி மாற்றங்கள் ஏற்பட்ட பிறகு அவர்கள் தங்களை திருநங்கைகள் என்றோ திருநம்பிகள் என்றோ அடையாளப்படுத்திக்கொண்டால் அதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.  ஆரோவுட் பிறப்பின்போது பெண் என்று குறிப்பிடப்பட்டு, பின் தங்கள் மனதிலும் உடலிலும் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்கள்: “நான் ஆணாக மாறிக்கொண்டிருந்தேன் என்பதைவிட பெண் என்பதிலிருந்து விலகிப் போய்க்கொண்டிருந்தேன்.  அதனால் பெண் என்பதற்குப் பதில் ஆண் என்று போட்டுக்கொள்வதும் சரியாகப்படவில்லை”.

    ஜனாதிபதி ஒபாமா (இப்போது நான் உட்படப் பலர் அவரை மிகவும் ‘மிஸ்’ பண்ணுகிறோம்.)  இவர்களுடைய உரிமைகளுக்காகப் பொதுக் கழிப்பறைகள், குளியலறைகள், பள்ளிகளில் உடைமாற்றும் வசதிகள் என்று இவர்களுடய அந்தரங்கத்தைக் காத்துக்கொள்ள நிறையச் செய்தார்.  எல்லோரின் நலன்களுக்காகவும் அரசாங்கத்தில் பல மாற்றங்கள் செய்ததுபோல் இவர்களின் உணர்ச்சிகளையும் உரிமைகளையும் அவர் நன்கு புரிந்துகொண்டார்.  ஆனால் ஒபாமா கொண்டுவந்த எல்லாச் சீர்திருத்தங்களையும்  மாற்றியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு காரியங்கள் செய்துவரும் இன்றைய ஜனாதிபதி ட்ரம்ப் இவர்கள் விஷயத்திலும் தன் கைவரிசையைக் காட்டப் போகிறார்.  அமெரிக்க மக்கள் ‘அமெரிக்கா’ என்ற பூமாலையை ட்ரம்ப் என்ற இந்தக் குரங்கு கையில் கொடுத்திருக்கிறார்களே.  இதை என்னவென்று சொல்வது!  தன்னைப் பொறுத்தவரை மூன்றாவது பால் என்பது இல்லையென்றும் பிறப்புச்சான்றிதழில் ஒருவருடைய பால் என்னவென்று குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அதுதான் அவர்கள் வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.  அதற்குரிய ஒரு அரசாணையையும் வெளியிடப் போகிறாராம்.  இதனால் தங்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டுத் தங்களுக்குரிய நன்மைகளை இழந்துவிடுவோமே என்று அமெரிக்காவில் இருக்கும் பதினாலு லட்சம் திருநங்கைகளும் திருநம்பிகளும் பயப்படுகிறார்கள்.

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே  41

    க. பாலசுப்பிரமணியன்

    மாற்றங்களைக் கண்டு ஏன் பின்வாங்குகின்றோம்?

    வாசுவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அவன் நன்கு படித்தவன். புத்திசாலி. ஆனால் அவனுக்கு தான் ஒரு புத்திசாலி என்ற எண்ணம் சற்றே தலைதூக்கி இருக்கும்.  எதற்கெடுத்தாலும் “எனக்குத் தெரியாததா என்ன?” “இதிலே என்ன புதுசா இருக்கு?”  என்று தேவையற்ற தர்க்கம் செய்து மற்றவர்களை நோகடிக்கும் மனப்பான்மை அவனுக்கு உண்டு. அதிலே அவனுக்கு ஒரு மகிழ்ச்சி.  சில நேரங்களில் அவன் தன்னுடைய தோழர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது “போனவாரம் நாம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபொழுது ..” என்று ஆரம்பித்தவுடன் அவனுடைய நண்பர்கள் தங்களுடைய சிரிப்பை உள்ளடக்கிக்கொண்டு  பரிதாபமாக அவனை ஒரு மனநோயாளியைப் போல் பார்ப்பார்கள். எவ்வளவு திறமை இருந்தாலும் தொழிலில் அவனால் முன்னேற முடியவில்லை. அவன் வேலைபார்க்கும் நிர்வாகிகள் இவனுடைய மனப்போக்கை ஏற்றுக்கொள்ளவில்லை. எத்தனை முறை எடுத்துக்காட்டியும் வாசு மாற மறுக்கிறான். அவனுடைய ‘தான்’ என்ற ஆணவப் போக்கு அவனுடைய வீழ்ச்சிக்கு காரணமாகவும் முன்னேற்றத்திற்குத் தடையாகவும் இருக்கிறது. மாற்றங்களைப் பற்றி அவனுடன் பேசினால் “மன்னிக்கவும். நான் இப்படித்தான். என்னால் மாற முடியாது.” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிடுவான்.

    செந்தில் இதற்கு முற்றிலும் மாறுபட்டவன். “அய்யா. ஒத்துக்கொள்ளுகின்றேன். மாற்றங்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு மாற்றத்திற்கும் நான் விலைபோக முடியுமா.” என்று மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றான். “இல்லை செந்தில், நீ மாறவில்லையென்றால் வாழ்க்கையில் பின் தங்கிவிடுவாய்’ என்று எடுத்துச் சொன்னால் “அதெல்லாம் எனக்கு கவலையில்லை. மாற்றத்தைக் கண்டு என்னால் ஆட்டத்தை மாற்ற முடியாது” என்று தர்க்கம் செய்பவன். இந்த ஒத்துழையாமைப் போக்கினால் பல சந்தர்ப்பங்களில் அவன் பின் தள்ளப்பட்டிருப்பது அவனுக்குத் தெரியும்.

    ஆனந்த் இன்னொரு வகையில் தோல்விகளை வரவேற்பவன். “நான் எதற்கு அய்யா மாறவேண்டும்? “என்னுடைய நிறுவனத்தில் என்னை வேலைக்குச் சேர்த்தபோது கொடுக்கப்பட்ட பத்திரத்தில் அதெல்லாம் எழுதப்படவில்லை. இவர்கள் நாளைக்கு ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவார்கள். இதைச் செய் அதைச் செய் என்று சொல்லுவார்கள். இதனால் எனக்கு என்ன கிடைக்கபோகின்றது?” என்று சட்டங்கள் பேசி தன்னுடைய ஆதிக்கப் போக்கை நிலைநிறுத்த முயலுபவன். பல ஆண்டுகளாக செய்ததையே திரும்பத் திரும்பச் செய்து புதியதைக் கற்றுக்கொள்ளவும் அதன் தாக்கங்களை ஏற்றுக்கொள்ளவும் தயங்குபவன். சற்றே இவன் ஒத்துழைப்புள்ளவனாக இருந்திருந்தால் முன்னேற்றப் பாதையில் வேகமாகச் சென்றிருக்க வாய்ப்புக்கள் நிச்சயம் இருந்தது.

    தேவகிக்கு அவளுடைய நிறுவனத்தில் நல்ல பெயர். அவள் ஒரு நல்ல உழைப்பாளி. ஆனால் சில குடும்பச் சூழ்நிலைகளால் தன்னுடைய தொழில் முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை. “அய்யா, நான் மாற்றங்களைப் பற்றி நன்கு அறிவேன். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். அது சரி. ஆனால் இந்த மாற்றங்களை நான் ஏற்றுக்கொண்டு நிகழ்வுபடுத்தினால் எனக்கு என்ன லாபம்? புதிய பதவி கொடுக்கப் போகின்றார்களா? அல்லது ஊதிய உயர்வு கொடுக்கப் போகின்றார்களா? அல்லது டாக்டர் பட்டம்தான் கிடைத்துவிடப்போகின்றதா?” என்று கேள்விக்கணைகளை சொருகி நம்மைத் திக்குமுக்காடச்  செய்திடுவாள். “பிரச்சனைகளை ஏற்படுத்தாதே. அந்த அம்மாவை விட்டுடுப்பா” என்று மேலதிகாரிகள் தங்களுடைய அடுத்த அடுக்கு அதிகாரிகளுக்கு அறிவுரை கூறுவர்.

    தேவகியின் முன்னேற்றம் அவளுடைய   சிந்தனைகளின் சில சறுக்கல்களால் தடைப்படுகிறது. மாற்றங்களுக்கும் கற்றல்களுக்கும் தங்களுடைய ஊதியத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை அவள் உணரவில்லை. எந்தப் பதவியில் இருந்தாலும் என்ன ஊதியம் பெற்றாலும் மாற்றங்களும் அவைகளைச் சார்ந்த கற்றல்களும் வளர்ச்சியின் சில நிர்பந்தங்கள் என்பதை அவள் புரிந்துகொள்ளவில்லை.

    சினேகாவுக்கு சற்றே பயந்த குணம். “நாம் புதிதாக ஏதாவது முயன்று அதில் தவறுகள் ஏற்பட்டால் அதன் விளைவுகளை யார் சந்திப்பது? தெரிந்ததைத் தெரிந்தபடி சிறப்பாகச் செய்துகொண்டிருந்தால் போதாதா? நமக்கு எதற்கு வம்பு, நாளைக்கு ஆயிரம் பதில் சொல்லவேண்டியிருக்கும்” என்று ஒதுங்கி நிற்பவள். திறமைகள் இருந்தும் அவள் பய உணர்வு அவளை முயற்சிக்கவே  விடாமல் தடுக்கின்றது.

    இனியன் -அவன் பெயருக்கு ஏற்றாற்போல் மற்றவர்களுடன் பழகுவதற்கு இனியன். நண்பர்கள் அதிகம். அவனைத் தேடியே நண்பர்கள் வருவார்கள். ஆனால் கொடுத்த வேலையைச் செய்யக்கூடியவன். தானாக முன்வந்து எதையும் செய்யமாட்டான்.” என்ன தம்பி, உங்க நிறுவனத்தில் புதிய பல முறைகளைக் கொண்டுவந்திருக்கின்றார்கள் போல் இருக்கிறதே” என்று ஒரு பெரியவர் அவனிடம் கேட்க ” ஆமாம் அய்யா, உண்மைதான். கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம். யாராவது முதல்ல செய்த பின்பு அதோட விளைவு என்ன என்று பார்த்த பின்பு அதற்குப் பின் நான் முயற்சி செய்யலாமென்று நினைக்கின்றேன்.”

    மாற்றங்களைத் தவிர்ப்பதற்கும் மாற்றங்களைவிட்டு ஒதுங்கி தனித்து நிற்பதற்கும் பல காரணங்கள் உண்டு.

    1. என்னால் முடியாது ( I can’t)
    2. எனக்கு அவசியமில்லை. (I won’t)
    3. இதனால் எனக்கென்ன லாபம்? ( (What do I get?)
    4. உள்ளதும் போய்விடுமோ? (What if I lose?)
    5. பொறுத்திருந்து பார்ப்போமே! ( I will wait and see)

    ஆனால் மாற்றங்கள் இவர்களுடைய ஒப்புதலுக்காகவோ நாளைய வெற்றிக்காகவோ காத்திருப்பதில்லை.

    இதை நாம் உணர்ந்துவிட்டால் மாற்றங்களின் வழியாக நம்முடைய முன்னேற்றத்திற்கான ஏணிப்படிகளில் நாம் எளிதாக ஏற முடியும்.

    முயன்று பார்ப்போமா?

    (தொடரும் )

    Share
  • சித்தாடல்

    -முனைவர்.த.பாலமுருகன்  

    முன்னுரை

    சித்தாடல் என்பது இயற்கை கடந்த அற்புதச் செயலாகக் கருதப்படுகிறது. இது சித்தர்களின் வாழ்வில் நிகழ்ந்ததாகவும் சித்தர்கள் நிகழ்த்தியதாகவும் அறியப்படுகிறது. அற்புத நிகழ்வுகள் யாவும் செய்திகளாகவும் அவற்றின் குறிப்புகளாகவும் கிடைக்கின்றன. இவ்வற்புதச் செயல்களைச் சித்தர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.

    ‘கட்டுக்கடங்காத பாம்பைக் கட்டுவோம், இந்திரனுலகை இங்கே காட்டுவோம், தூணைத் துரும்பாக்குவோம், துரும்பைத் தூணாக்குவோம், கடலைக் குடிப்போம், மண்டலங்களைக் கையால் மறைப்போம், வானத்தை வில்லாய் வளைப்போம், நெருப்புக்குள் மூழ்குவோம், நீரினுள் மூச்சை அடக்குவோம், வன்புலியைத் தாக்குவோம், இப்பெரும் உலகை இல்லாமல் செய்வோம், செங்கதிரைத் தண்கதிராய் மாற்றுவோம், தேவர்களை ஏவல் செய்வோம், படைக்கும் தொழில் செய்வோம், கலைகள் யாவும் அறிவோம், நாதனுடன் சமமாக வாழ்வோம்’1 எனச் சித்தர்களின் சித்தாடல் பற்றிய செயல்களைப் பாம்பாட்டிச் சித்தர் குறிப்பிடுகின்றார்.

    எண்வகைச் சித்திகள்

    சித்தி என்பதற்குச் சித்தியாதல் அல்லது நிறைவு பெறுதல் என்று பொருள். சித்தர்கள் பல்வேறு சித்திகளைப் பெற்றிருந்தனர். இச்சித்திகளைச் சித்தர் இலக்கியங்களும், யோக இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன. சித்திகள் எட்டு என்றும் அறுபத்து நான்கு என்றும் கோடி என்றும் கூறுவர். ஆனால் அவற்றுள் எட்டுச் சித்திகளை மட்டும் சிறப்பாகத் திருமூலர் குறிப்பிடுகின்றார். இராமலிங்க அடிகளார், சித்திகளைப் பற்றிக் குறிப்பிடும் போது, சித்திகள், கரும சித்தி, யோக சித்தி, ஞானச் சித்தி என மூவகைப்படும் எனக் கூறுகின்றார். இதனை,

    “மூவகை சித்தியின் முடிபுகள் முழுவதும்
    ஆவகை எனக்கருள் அருட்பெருஞ்சோதி”
    2 எனக் கூறுவதால் அறியலாம்.

    சித்திகள் அறுபத்து நான்கு என்ற நிலையில் அவற்றுள் எட்டினை மட்டும் சிறப்பானதாகக் கருதும் மரபு இருந்து வருவதை அறியலாம். அட்டமா சித்திகளின்  மரபு குறித்தப் பாடல்கள் பின்வருமாறு.

    “அணிமா மகிமா லகிமா அரிய கரிமா பிராத்தி மலப்
    பிணிமா கடையோர்க்கு அடைவரிய பிரகாமீய மீசத்துவ
    துணிமா யோகர்க்கு எளியவசித் துவமென்றெட்டாமிவை யுளக்கண்
    மணிமா சறுத்தோர் விளையாட்டின் வகையாம்”3

    எனப் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்திலும் அட்டமா சித்திகளைப் பற்றிக் குறிப்பிடும் செய்திகளைக் காணமுடிகிறது.

    சித்திகள் பொதுவாக எட்டு வகைப்படும். அவற்றை அணிமா (அணுவைப் போல் நுண்மையாதல்), மகிமா (மிகப்பெரியதாதல்), லகிமா (மிக நுண்மையாதல்), கரிமா (மிகு எடையாதல்), பிராத்தி (எங்கும் செல்லும் ஆற்றல்), பிரகாமியம் (எண்ணியது எய்தும் ஆற்றல்), ஈசத்துவம் (எதையும் ஆக்கும் ஆற்றல்), வசித்துவம் (எவரையும் தன்வயப்படுத்தும் ஆற்றல்) என்று வடமொழியில் கூறுவர். இவற்றினைத் திருமூலர் அணுசகம், சகத்தும், நோன்மை, ககனம், பரகாயத்தேகம், தானாவது, ஆனாத உண்மை, வியாப்பியம் என்னும் பெயர்களில் குறிப்பிடுகின்றார்.4

    அணிமா

    ‘அணிமா’ என்பது நுண்மை என்றும் அணு என்றும் பொருள்படும். அணுவைப் போல நுட்பமான ஆற்றலைப் பெற்றிருக்கும் தன்மைக்கு அணிமா என்று பெயர். பிருங்கி முனிவர் சிவனை மட்டும் சுற்றி வர வேண்டும் என்பதற்காகச் சிறு வண்டாக உருமாறினார் என்பதைப் புராணங்களின் மூலம் அறிய முடிகிறது. இவ்வாறு சிறு வண்டாக உருமாறிய தோற்றத்தை அணிமா என்று கூறலாம்.

    மகிமா

    தோற்றத்தில் மிகச் சிறிய பொருளை மிகப் பெரிய பொருளாக ஆக்குவது மகிமா. திருமால் மூன்று அடி மண் வேண்டி உலகை அளக்க எடுத்த உருவம் மகிமா ஆகும்.

    லகிமா

    கனம் இல்லாத ஆற்றலைப் பெற்றிருப்பது லகிமா என்னும் சித்தியாகும். மகேந்திர பல்லவன், சமயப்பகை காரணமாக திருநாவுக்கரசரைக் கல்லில் கட்டிக் கடலில் இட்டபோது தன் உடம்பை மிதவையாக்கி அதனால் கல்லை மேலே இழுத்து வந்தது லகிமா ஆகும்.

    கரிமா

    கனம் மிகும் ஆற்றலைப் பெற்றிருக்கும் தன்மைக்குக் கரிமா என்று பெயர். அனுமன் தன் வாலின் எடையை அதிகரிக்கச் செய்து பீமனின் வலிமையைச் சோதித்தது கரிமாவாகும்.

    பிராத்தி

    எண்ணியதனை அடையும் ஆற்றலைப் பெற்றிருக்கும் தன்மைக்குப் பிராத்தி என்று பெயர். சூரன், இராவணன் முதலியோர் நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடம் செல்லும் வல்லமை பெற்றிருந்தனர் என்பது பிராத்தியாகும்.

    பிரகாமியம்

    நினைத்த அக்கணமே பிறர் உடலில் நுழைந்து தோன்றுவது பிரகாமியம். மூலன் என்னும் இடையன் உடலில் சுந்தரன் புகுந்து திருமூலராய் எழுந்தது பிரகாமியம் ஆகும்.

    ஈசத்துவம்

    எதனையும் ஆக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஈசத்துவம் என்று பெயர். திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததும் சுந்தரர் முதலை உண்ட பாலகனை மீட்டதும் ஈசத்துவம் ஆகும்.

    வசித்துவம்

    உலகில் உள்ள அனைத்தையும் தன்வயப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கும் தன்மைக்கு வசித்துவம் என்று பெயர். அப்பர் தன்னைக் கொல்ல வந்த யானையை நிறுத்தினார் என்பது வசித்துவம் ஆகும்.

    இவ்வாறு சித்தர்களின் சித்தாடும் வல்லமை பற்றியும் அற்புதச் செயல்கள் பற்றியும் செவிவழிச் செய்திகளும் இலக்கியக் குறிப்புகளும் கிடைக்கின்றன. சித்தர்கள் அனைவரும் சித்தாடினர் என்று ஏற்றுக்கொள்ள வழியில்லை என்றும், சித்தர்களில் சிலர் சித்தாடாமல் இருப்பதனால் அவர்களைச் சித்தர்கள் பட்டியலிலிருந்து நீக்கி விடுவதும் பொருத்தமாகத் தோன்றவில்லை.5 என்றும் க. நாராயணன் குறிப்பிடுகின்றார். இடைவிடாத முறையான யோகப் பயிற்சியாலும் திறத்தாலும் சித்திகள் கைவரப் பெறலாம் என யோக இலக்கியங்கள் கூறுகின்றன. இவ்வகைச் சித்திகள் கைவரப் பெறுவதே சித்தர்களின் குறிக்கோள் என்றோ சித்தர் நிலை என்றோ கூறுவது பொருந்துமாறு இல்லை.

    “அட்டமாசித்தி எனப்படும் எண்வகைச் சித்திகளும் இலட்சியமாகவன்றித் துணைப்பேறாகவே கொள்ளப்பட்டன”6 என்று ப.அருணாசலம் அவர்கள்  குறிப்பிடுகின்றார். ‘‘சித்தர்கள் ஆயிரமாயிரம் சித்திகளை அறிந்திருந்தாலும், யோக நெறியெல்லாம் பயின்றிருந்தாலும் புருவ நடுவேயுள்ள சிற்றம்பலத்தில் கூடி மகிழும் பேறு பெற்றாலும் உலகில் சித்து விளையாடக் கூடாதென்றே கருதுவர்”7 என்று சுப்ரமணியர் ஞானம் என்னும் நூல் குறிப்பிடுகிறது.

    “நடுவாய் சரமாறி இருந்திட்டாலும்
    நயமான யோகமெலாம் அறிந்திட்டாலும்
    கூடுவாய் தில்லையிலே கூடினாலும்
    குவலயத்தில் சித்துவிளை யாடா தென்றே”8 எனப் பட்டினத்தாரும், சித்தர்கள் இந்திரச் செல்வம் எட்டெட்டுச் சித்தியும் கைவரப் பெறும் போதெல்லாம் அதனை மறுத்து ஒதுங்குவார்கள் என்று கூறுகின்றார்.

    நிறைவாக, சித்தர்களின் இத்தகைய இயற்கை மீறிய ஆற்றல்களால் இவ்வுலகையும், அதிலுள்ள பொருள்களையும் நடக்கும் நிகழ்ச்சிகளையும் அறிவதும் கட்டுப்படுத்துவதும் அதனால் மகிழ்வதும் சித்தர்களின் இறுதிக் குறிக்கோள் அல்ல. ஆனால் இவற்றையெல்லாம் கடந்து இறைவனின் இயல்போடு இரண்டறக் கலப்பதையே சித்தர்கள் விரும்பினர். அவ்வாறு கலப்பதற்கான படிகளாகவே இச்சித்திகளைப் பெற்று இருப்பர் எனக் கருதலாம்.

    திருவள்ளுவர் இறைவனை ‘எண் குணத்தான்’9 என்று கூறுகிறார். இதற்கு விளக்கவுரை எழுதும் பரிமேலழகர் “அணிமாவை முதலாகவுடையன எனவும், கடையிலா அறிவை முதலாகவுடையன எனவும் உரைப்பாரும் உளர்”10 என்று குறிப்பதன் மூலம் இறைவன் கூட, சித்துக்கள் செய்பவன் என்று கருதும் மனநிலை பரிமேலழகர் காலத்தில் இருந்தமையினை அறியமுடிகிறது.

    அடிக்குறிப்பு

    1. சித்தர் பாடல்கள், பாம்பாட்டி சித்தர், சித்தர் வல்லபம், பா. 25, 34
    2. திருவருட்பாத் திரட்டு, பா. 239, 240.
    3. திருவிளையாற் புராணம், அட்டமாசித்தி உபதேசித்தப் படலம், பா. 22.
    4. திருமந்திரம், பா. 642.
    5. க. நாராயணன், சித்தர் சிவவாக்கியர், ப. 21.
    6. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 14 ஆம் நூற்றாண்டு, ப. 339.
    7. சுப்ரமணியர் ஞானம் 500, பா. 427.
    8. சித்தர் ஞானக்கோவை, பட்டினத்தார் பாடல்கள், பொது, பா. 37.
    9. திருக்குறள், 9.
    10. மேலது. பரிமேலழகர் உரை ப. 5.

    *****

    கட்டுரையாளர் –  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலயக் கலை அறிவியல் கல்லூரி,கோயம்புத்தூர்- 20

     

     

    Share
  • தொண்டர்க்கும் தொண்டராகிய புண்ணியர்கள்

    –முனைவர் இரா. மதன் குமார்
    இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர் – 21.

    முன்னுரை

    சைவசமயத்தில், சரியை முதலான நால்வகைநெறிகளும் பெருமானைப் பெற்றுய்வதற்கான படிநிலைகளாகின்றன. அவ்வரிசையில், சமயக்குரவர் நால்வர்தம் அணுகுமுறைகளையும் முறையே மகன்மைநெறி, தொண்டுநெறி, தோழமைநெறி மற்றும் ஞானநெறி எனப் போற்றுதல் மரபு. நால்வகைநெறிகளுள், பூவுலகின்கண் ‘தொண்டுநெறியை நிலைநிறுத்தத் திருவவதாரம் செய்தருளியவர், ‘திருநாவுக்கரசு நாயனார்’. அவரை, ஞானகுருவாக்கி, ’தொண்டுநெறிக்கோர் தூமணி’ எனச் சிறப்புற்றவர், ‘அப்பூதியடிகள்’. திலகவதியாரை முதலாக உடைய இத் திருத்தொண்டர் மரபு, எளியராகிய அடியவர்கள், அரும்பொருளாகிய இறைவனை அடைவதற்குத் ‘தொண்டுநெறியே துணையாகும்’ என விளக்கிநிற்பது; ‘பொய்யன்பிலா தொண்டர்க்கும் தொண்டராம் புண்ணியமே’ என்ற திருமுறை வாழ்வியலை என்றென்றும் விளங்கச்செய்வது; ‘தொண்டின் திலகம்’ எனத் திலகவதியம்மையாரும், அவ்வருள்திலகத்தின் திருப்பொலிவாகத் திருநாவுக்கரசுப் பெருமானும், அதன் அருள்மணமாய் அப்பூதியாரும், அவர்தம் மனைவியாரும், அவர்களது திருமகனாகிய மூத்ததிருநாவுக்கரசும் விளங்குகின்ற மேன்மையுடையது. அவ்வகையில், தொண்டர்சீர் பரவுகின்ற திருத்தொண்டர்புராணத்தில், இப்பெருமக்களது பக்திநெறியானது, ‘தொண்டுநெறியே, சைவப்பெருநெறி’ என விளங்குகின்ற பாங்கினை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

    பெண்குலத்திலோர் பொன்மணி

    திருமுனைப்பாடி நாட்டின் திருவாமூரின் வேளாளர் குலத்தின், குறுக்கையர் குடியில் சிவம் பெருக்கும் இணையராக விளங்கியவர்கள், புகழனாரும், மாதினியாரும். அத்திருக்குடியில் மட்டுமல்லாது, உலகனைத்திலும் சைவநெறியைக் காக்கப் பிறந்தவர், ‘திலகவதியார்’. அவ்வருள்மேன்மை கருதியே அம்மையாரை, தெய்வச்சேக்கிழார் பெருமானும், ‘திருவனைய திலகவதி’ (திருநாவு.புரா.:17) என்று போற்றியுள்ளார். அவருக்குப்பின் பிறந்தவரே ‘மருள்நீக்கியார்’. பின்னாளில் தம் தம்பியாரின் வாயிலாகத் தொண்டுநெறியாகிய சைவப்பெருநெறியைத் தழைக்கச்செய்கின்ற பெருநோக்கில் அவர்தம் வாழ்க்கையும் விளங்கியது.

    திலகவதியாருக்கு, கலிப்பகையாருடனான திருமணவாழ்க்கைக் கூடாதநிலை நேர்ந்தது.  சில காலத்தில் பெற்றோரையும் இழக்க நேரிட்டநிலையில் அத்திருமகளார் தம் உயிர்த்துறக்க முற்பட்டார். ஆயினும், ‘யாதொரு ஆதரவுமற்ற தமது தம்பியார் உளராகவேண்டும்’ என இரங்கிய அன்பின் மேன்மையினால், அவர் உயிர் தாங்கியிருந்து, ஒப்பரிய சைவ அறங்களை மனையிலிருந்தே புரிந்துவந்தார்.

    “தம்பியா ருளராக வேண்டு” மென வைத்ததயா
      வும்பருல கணையவுறு நிலைவிக்க, உயிர்தாங்கி,
      யம்பொன்மணி நூறாங்கா, தனைத்துயிர்க்கு மருடாங்கி
      யிம்பர்மனைத் தவம்புரிந்து திலகவதி யாரிருந்தார்.  திருநாவு.புரா.: 34) என்பது தெய்வச்சேக்கிழார் பெருமானின் திருவாக்கு.

    திலகவதியாரின் திருநோக்கம்

    சைவ அறத்தில் தலைநின்றிருந்த அவர்தம் தம்பியார், மெய்ப்பொருள்தேடலின் பொருட்டு, சமண சமயம் சார நேரிட்டது. அந்நிலையிலும் அவருக்கெனவே வாழ்ந்து, தியாகச்செல்வியாகத் திகழ்ந்த திலகவதியார், திருவதிகைத் திருத்தலத்தில், ‘திருத்தொண்டர்’ என்னும் நிலைதாங்கி, கைத்தொண்டில் சிறந்தார். அத்துடன், ‘தமது தம்பியாரை மீண்டும் சைவசமயத்திற்கு ஆட்படுத்தத் திருவருள் வாய்க்கவேண்டும்’ எனப் பெருமானைப் பணிவதையே தமது பணியாகக் கொண்டிருந்தார். ஆண்டுகள் பல கழிந்தன; தம்பியாரும், ‘தருமசேனர்’ எனப் பெரும்பெயர் பெற்று, சமணசமயத்தில் மயங்கியிருந்தார். அவர்தம் மயக்கத்தை மட்டுமன்றி, ஆருயிர்கள் அனைத்தின் அறியாமை மயக்கையும் தொண்டுநெறி வழியே நீக்கியருளத் திருவருள் கனிந்தது.

    தம்பியாரை,  தீராத சூலை நோய்ப் பற்றி நலிவித்தது. உயிர்க் கவரும் கூற்றுவனை ஒத்த சூலையிலிருந்து பிழைத்தருள வேண்டி, தமது தமக்கையாரின் துணையினை நாடச்செய்தது. அதற்கென, தமது நோய்நிலையினை அறிவித்து, தமக்கையாரை உடன் அழைத்துவர ஏவலாளரை ஏகினார். ஆயினும்,‘சைவநெறி திறம்பாத வாய்மையின் நல்லாராகிய திலகவதியார், சமண்பள்ளிக்குத் தாம் ஏகுகின்ற எண்ணமில்லை’ என்பதனைத் தம் தம்பியாருக்கு உறுதிபட உரைத்தருளினார். அத்துடன், ‘உயிர்ப்பிணியையும் ஒருங்கே நீக்கவல்ல திருவதிகைப் பெருமானின் திருத்தலத்தை நாடி வரவுள்ள தமது தம்பியாரின் வருகையினை எதிர்நோக்கியிருந்தார்.

    அவரது சித்தத்தின் படியே, அங்குவந்த தம்பியாருக்குத் தாமே ஞானகுருவாகியிருந்து,  திருவாளன் திருநீறு தந்தருளித் தீக்கையும் செய்தருளினார். அத்துடன், தாம் முன்சென்று, தம்பியாரைத் திருக்கோயிலுக்குள் வழிநடத்தினார். அருள்மொழிகளுடன் கூடிய அவர்தம் ஆற்றுப்படுத்தலால், பெருமானின் திருமுன்பை அடைந்த நாயனாரிடத்தில், பெருமானைப் பாடிப் பணிகின்ற உள்ளுணர்வு மேலிட்டது.

    உலகுயிர்களின் பிறவித்துன்பத்தை நீக்கியருள்கின்ற திருப்பதிகச் சொல்மாலைகளின் தொடக்கமாக, ‘கூற்றாயினவாறு’ எனத் தொடங்கிப் பாடினார். அதுபொழுது முதலாக, ‘தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்’ எனச் செந்தமிழ்ப்பதிகம் பாடிப் பணிகின்ற பாங்கில், ‘நாவுக்கரசு’ என்னும் ஞானத்திருப்பெயரும் இறைவனால் சூட்டியருளப் பெற்றார். இவ்வாறு, திருநாவுக்கரசராகிய நாயனாரை சைவப்பேருலகத்துக்குத் தருகின்ற பெருநோக்கத்தில் திலகவதியாரின் திருவாழ்வு அமைந்திருந்தது. அப்பெருநோக்கத்தை நிறைவேற்ற வேண்டி, சூலைநோயினைத் தந்தருளிய பெருமான், அதைத் தீர்த்தருளத் திலகவதியாரின் மெய்ம்மைத் திருவாக்கும், திருநீறும் கருவியாகும்படி அருளினான். அத்துடன், அத்திருச்செல்வியே, நாயனாருக்கு ஞானகுருவாகவும் விளங்கத் திருவருள் செய்தருளினார். அவ்வருள் சிறப்பையே நாயனார், ’பெருமான், திலகவதியாரைத் தமக்குத் தாயாகவே தந்தருளினான்’ என்று அன்புருகப் போற்றியுள்ளார்.

                ‘அம்மை யார்? எனக்கு என்று அரற்றினேற்கு
                அம்மையாரைத் தந்தார்ஆரூர் ஐயரே’ (5:7:6) என்ற திருவாக்கின்படி, நாயனாருக்கே மட்டுமன்றி, அம்மையார்,  மன்னுயிர் அனைத்தையும் தொண்டுநெறியில் வளர்த்தெடுக்கவந்த திருத்தாயாகவும் விளங்கக் காண்கிறோம்.

     உழவாரப் படையாளியைத் தந்தார்
    தாயாகவும், ஞானகுருவாகவும் வாய்த்த தமக்கையாரின் அருளாணையின்வண்ணம் தம்பியாரும், சரியையாகிய கைத்தொண்டினையே தமக்குரிய ஞானநெறியாகக் கைக்கொண்டார். கைத்தொண்டில் திறம்பாதிருந்து, ‘உழவாரப் படையாளி’ என மிளிர்ந்தார். அப்பெருநெறியில், பதிகம் ஏழெழுநூறு பகர்கின்ற பரம கவியோகியாக அவரைச் சைவஉலகுக்குத் தந்தளித்த தனிப்பெருமை, திலகவதியாரின் தொண்டுநெறிக்குக் கிடைத்த வெற்றியாகும். சுருங்கக்கூறின், திலகவதியாரின் தியாக வாழ்க்கை, ‘ஆருயிர் அனைத்தின் மேலும் கொண்ட ஒப்பரிய அருள்வாழ்க்கை’  என்பது மிகையில்லை. அவ்வருள் பாங்கினைக் குறிக்கவே தெய்வச்சேக்கிழார் பெருமான், ‘தூண்டுதவ விளக்கனையார்’ எனப் பெருமாட்டியைப் போற்றிப் பணிந்துள்ளார். ‘தூண்டு தவம்’ – உலகச் சார்பினை விடுத்துச் சிவநல்வினையாகிய சிவச்சார்பினையே அடையும்படி தூண்டும் தவம்; இங்குத் தம்மையே தூண்டிக்கொண்டதன்றித் தம்பியாரையும் அவர்மூலம் உலகத்தாரையும் தூண்டும் தவம் (திருநாவு.புரா.:46, சிவக்கவிமணியார் உரை)’ எனத் திலகவதியாரின் திருத்தொண்டு, ‘தவம்’ என்று போற்றப்பெறுகிறது.

     ‘திருநாவுக்கரசு’ என்னும் திருநின்ற செம்மையர்

    உயிர்கள், தத்தம் வினைவழியே, எழுவகைப் பிறப்புகளிலும் மாறிமாறி பிறந்திளைக்கின்றன. அவ்வப் பிறப்புகளிலும் அவை புல், பூடு, புழு, மரம், பறவை, பாம்பு, மனிதர் என இனப்பெயர் பெறுகின்றன. அவற்றுள், மனிதப்பிறப்பினருக்குப் பெற்றோரால் இடப்பெறுகின்ற பெயர்கள் உண்டு. அவை, ‘ஊனப்பெயர்’ என்றே வழங்கப்பெறும். ‘மனிதர்கள், தாம் கொள்கின்ற, அழிகின்ற உடலுக்கே அத்தகைய பெயர்கள் சூட்டப்படுகின்றன’ என்பதனை உணர்வதில்லை; காலங்கள் பல கடந்தும் அவை நிலைப்பதில்லை.  அத்தகைய ஊனப்பெயர்களையும் கடந்து, ஞானகுருவால், ‘தீட்சைத்திருப்பெயரும்’, அனைத்து உயிர்களுக்கும் அம்மையப்பனாகிய பெருமான், சூட்டியருள்கின்ற ‘ஞானத்திருப்பெயரும்’ உள்ளன. அத்திருப்பெயரை உணர்வதும், பெருமானைப் பற்றி உய்வதும் பிறப்பின் பயன்களாகின்றன. அதற்கு, ‘ஞானகுருவின் திருப்பெயரை மந்திரமாக ஓதுதலே’ கருவியாகும்.

          ‘ஊனப்பே ரொழிய வைத்தார்
          ஓதியே யுணர வைத்தார்
          ஞானப்பேர் நவில வைத்தார்’ (4:30:7)

    நாயனார், ‘மருள்நீக்கி’ என்னும் இயற்பெயர்த் தாங்கி, மண்ணுலகில் மாந்தர்தம் அகவிருளையும், சமண் முதலான பொய்யிருளையும் போக்கவந்தவர். அவர், முந்தைய பிறப்பிலேயே ஞானம் முதிரப்பெற்றவராக, ‘வாகீசர்’ எனப் பெயர் தாங்கியிருந்தவர். ஆயினும், இராவணனின் அறியாமைச் செயலுக்கு அவர் துணைநின்றநிலை உண்டு. அக்காரணத்தால், நிகழ்பிறப்பில் தாம், மண்ணுலகில் வந்தவதரித்த அருள்நோக்கத்தைப் பலகாலம் மறந்திருந்தார். சமண் மயக்கில் ஆழ்ந்திருந்து, ‘தருமசேனர்’ என்னும் திருப்பெயர்த் தாங்கியிருந்தார்.  அவ்வறியாமை நிலை, ‘பொய்வாய்மை பெருக்கிய புன்சமயப் பொறை’ (திருநாவு.புரா.: 73) எனப் புராணத்துள் சுட்டப்பெற்றுள்ளது.

    நாயனார், புறச்சமயத்தில் ஒழுகியதால் பெற்ற, ‘தருமசேனர்’ என்னும் பொய்ப்பெயர் அவரிடமிருந்து அகன்றுபோகப் பெருமான் திருவுள்ளம் கொண்டான். திலகவதியாரின் திருவிண்ணப்பத்தின் படியே, தம்பியாரைச் சைவத்துக்கு மீளவும் ஆட்கொண்டருள வேண்டி, சூலைநோயினைத் தந்தருளினான். திருவதிகையில், சூலையும் நீங்கி, ‘திருநாவுக்கரசு’ என்னும் திருப்பெயரும் சூட்டியருளினான். அத்துடன், அத்திருப்பெயரின் வாயிலாக, ‘திருநின்ற செம்மையாகிய திருத்தொண்டின் வாய்மை ஏழுலகிலும் என்றென்றும் நின்று நிலைக்கட்டும்’ என வானோசையாகத் திருவருள் ஆணையும் தந்தருளினான். அவ்வருள் நிலையானது, இனிவரும் நாளிலும், ’திருநாவுக்கரசு’ என்னும் திருப்பெயரால், செய்வதற்கரிய சைவப் பெருநலங்கள் பல விளைய இருந்ததன் குறிப்பு மொழியாகும்.

          ‘மேவுற் றவிவ்வே லையினீ டியசீர்
          வீரட் டமமர்ந் தபிரா னருளாற்
        “பாவுற் றலர்செந் தமிழின் சொல்வளப்
          பதிகத் தொடைபா டியபான் மையினால்
          நாவுக் கரசென் றுலகே ழினுநின்
          னன்னா மநயப் புறநண் ணுக” வென்
         றியாவர்க் கும்வியப் புறமஞ் சுறைவா
         னிடையே யொருவாய் மையெழுந் ததுவே’. (திருநாவு.புரா.: 74)

    தொண்டுநெறியே குருநெறியான தகைமை
    ‘பாலூட்டி, குழந்தையைப் பேணுதல், தாயின் கடனாதல் போன்று, பெருமானும் அனைத்துயிருக்கும் கருணைசெய்தலைத் தன் கடமையாகக் கொள்கின்றான். மேலும், எவ்வுயிர்க்கும் கருணைசெய்தலாகிய தனது அருங்குணத்தைத் தன் காதல் அடியவர்க்கும் அளித்தருள்கின்றான்.

     ‘காதலாம் அடியவர்க்குக் குணங்களைக் கொடுப்பார்’ (4:49:9) அவ்வாறு, அன்புநெறிக்கு ஆட்பட்டு, அதற்குக் கருவியாகவல்ல தொண்டுநெறியில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியே திருநாவுக்கரசு நாயனாரும்,

                ‘தன் கடன் அடியேனையும் தாங்குதல்
                 என் கடன் பணி செய்து கிடப்பதே’           (5:19:9) என்று தொண்டுநெறிக்கு ஆட்பட்டார். அவ்வாறு, அவரைத் தொண்டுநெறியில் ஆட்படுத்தி, உலகுய்யச்செய்வதே பெருமானின் திருக்குறிப்பாகவும் அமைந்திருந்தது.  அதனாலேயே, அவரது ஞானகுருவாக வாய்த்த திலகவதியாரும், திருவதிகைத் திருத்தலத்திலிருந்து, சைவம் தழைக்கச் சரியைத் தொண்டு செய்பவராக விளங்கத் திருவருள் விளைந்திருந்தது; அதன்வழியாகவே,  திருநாவுக்கரசு நாயனாரும் தொண்டுநெறியையே தமக்குரிய குருநெறியாக ஏறிட்டுக் கொண்டார்.

    அளப்பரும் சீருடைய அடியார் திருநாமம்

    பெருமான், ‘வேதங்களும் அறிய இயலாத நுட்பமுடையவன்’. அரியவனான அவன், தனது அருங்குணங்களை அடியவர்கள் விளங்கி உய்யும் பொருட்டுப் பேராயிரமும் கொண்டருள்கின்றான்.

    ‘ஆயிரம் பேருகந் தானு மாரூ ரமர்ந்தவம் மானே’         (4:4:8)

    திருவைந்தெழுத்தும் அவனது திருப்பெயராகி, பிறவிக்கு வாயிலாகின்ற வினைகளைத் திண்ணமுறத் தீர்த்தருள வல்லது’ என்பதனைத் திருஞானசம்பந்தப்பெருமான்,

           ‘எல்லாத் தீங்கையு நீங்குவ ரென்பரால்
                 நல்லார் நாமம் நச்சி வாயவே’ (3:49;5) என்று போற்றியுரைத்தார். அவ்வருஞ் சிறப்புக்குச் சான்றாகவே, திருநாவுக்கரசுப் பெருமானும்,

                ‘கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
                 நற்றுணை யாவது நமச்சி வாயவே’ (4:11:1) எனப் பாடினார்.

    திருவைந்தெழுத்தையே தெப்பமாகப் பெற்று,  நீர்க்கடலோடு, பிறவிக்கடலிலிருந்தும் மீண்டருளினார். பேராயிரத்தையும், திருவைந்தெழுத்தையும், அடியவர்கள் உய்வதற்குத் தனது திருப்பெயர்களாகக் கொண்டருள்கின்ற பெருமான், தன்னடியவனாகிய மருள்நீக்கியாருக்குத் திருவதிகைத் திருத்தலத்தில், தானே உவந்து, ‘நாவுக்கரசு’ என்னும் திருப்பெயரைச் சூட்டியருளினான். (ஒற்றெழுத்தை நீக்கிக் கண்டால், ஐந்தெழுத்தாகும்) அத்திருப்பெயரையும், திருவைந்தெழுத்தாகவே விளங்கச்செய்தான்.

    ‘தனது அடியார்களுக்கும் தொண்டனென’ விளங்குகின்ற பெருமான், தனது திருப்பெயரின் சிறப்பினை அடியார்கள் ஓதி உய்வதைக் காட்டிலும், தனது அடியவரின் திருப்பெயர்களை அவர்கள் ஓதி உய்யவேண்டிப் பெருங்கருணை புரிகின்றான். அத்துடன், அத்திருப்பெயர், மந்திரமாக விளங்கி, உடற்பிணியையும், உயிர்ப்பிணியையும் ஒருங்கே நீக்கவல்ல சிறப்பில் பொலியச் செய்கின்றான். அவ்வாறு, அவன், ’நாவுக்கரசு’ என்னும் திருப்பெயருக்குத் தந்த அருள்வல்லமையை விளக்கியுரைக்கின்ற அரும்புகழ்ப் புராணமாக ‘அப்பூதியடிகளின் திருவரலாறு’ விளங்குகிறது.

    பெயர்நலம் விளக்க வந்தார்  

    பெருமான், நஞ்சுண்டருளிய திருவிளையாடல், அவனது பெருந்திறத்தைக் குறிப்பது. அதன்பொருட்டு அவனுக்கு, ‘திருநீலகண்டன்’ என்னும் திருப்பெயர் அமைகிறது. திருஞானசம்பந்தர், ‘அவ்வினைக்கு இவ்வினை’ என உயிர்களைத் தொடர்ந்துவருகின்ற வலிய வினைகளையும், ’திருநீலகண்டமாகிய’ பெருமானின் திருப்பெயர் நீக்கியருளும் என்பதனைத் திருக்கொடிமாடச் செங்குன்றூரில் மெய்ப்பித்துள்ளார். அங்கு, அடியாரின் குளிர்சுரத்தைப் போக்கக் கருவியான, ‘திருநீலகண்டத் திருநாமம்’, திருநீலகண்டக் குயவனாரின் பிறவிநோயையும் நீக்கியருளியது. அத்திருப்பெயரின் அரும்பெருமை, சைவப்பேருலகில் நின்றுநிலைப்பதற்கு, குயவனார் கருவியானார். அவ்வாறே, ‘திருநாவுக்கரசு’ என்னும் திருப்பெயரை உலகேழிலும் மந்திரமாக நிலைபெறச் செய்வதற்கு, அப்பூதியடிகள் கருவியானார்.  பெருமானுக்கு அமைந்த திருப்பெயர்களின் பொருளுணர்ந்து, அவற்றை இடையறாது பற்றுங்கால், அத்திருப்பெயர், சிவத்தையே பற்றுகின்ற பேரறிவை உயிருக்கு நல்குகிறது. அது ஒப்பரிய சிவஞானத்திற்குத் திறவுகோலாகிறது. அத்துடன் அரும்பேறாகிய திருவருளையும் குறைவின்றிச் சுரந்தருள்கிறது.

    அத்தகைய பேரறிவே, ‘பதிஞானம்’ என வழங்கப்பெறும். பக்குவமுடைய ஆன்மாக்கள், முற்பிறப்புகளின் தவப்பயனால் உயிரறிவு விளங்கப்பெற்று, திருமுறைநெறியில் ஞானப்பேற்றுக்குத் தலைப்படுகின்றன. அவ்வாறு, திருமுறைகளைக் கற்றும், கேட்டும்  பலபிறப்பின் துயர்நீங்குகின்ற நல்வினைப்பயன் அனைத்து உயிர்களுக்கும் வாய்ப்பதில்லை. அவ்வுயிர்கள், அறியாமையால் உலகியல் வலைப்பட்டு, தீவினையே பெருக்கி, துன்பப்பிறவிகளுக்குத் தலைப்படுகின்றன. சிற்றறிவுடைய அவ்வுயிர்களுக்கும், ‘எளிய உய்யும்நெறியை’ விளக்கியருள்கின்ற அருங்கருணையே அப்பூதியாரின் திருவவதார நோக்கமாகிறது. அவர், அந்தணராக, அனைத்துயிரின்பாலும், அந்தமிலா அருங்கருணை பூண்டிருந்தார். அதனால், அவர்தம் தீவேட்டலாகிய மறைத்தொழிலும், கலியுகத்தின் கொடுந்துன்பங்களிலிருந்து மன்னுயிர்களைக் காக்கின்ற அறச்செயலாக மிளிர்ந்தது.

                 ‘கலிமெலிய அழலோம்பும் அப்பூதி’    (4:12:10)

    என்பது நாவரசர் நான்காம் திருமுறையில், அப்பூதியடிகளைக் குறித்துப் பாடியுள்ள திருக்குறிப்பாகும்.

    மறைத்தொழிலுடன், கா வளர்த்தும், கனிதரு சோலைகள் பேணியும், குளங்கள் புதுக்கியும், தண்ணீர்ப் பந்தல்கள் நலம்பெற அமைத்தும், அறச்சாலைகள் பலவற்றை அன்புடன் சமைத்தும், தமது ஞானகுருவாகிய நாவுக்கரசரின் நற்தொண்டுநெறி சிறக்கின்ற உயர்த்தவத்தைப் பேணினார். இப்பெருஞ் சிறப்பினைச் சாற்றவே நம்பி ஆரூரர் பெருமான்,

          ‘ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்’ (திருத்தொண்டத்தொகை: 4) எனப் போற்றியுரைத்துள்ளார்.

    பதி புண்ணியச் செல்வர்
    தன்னலம் மறந்து செய்கின்ற நற்செயல்கள் புண்ணியங்களாகின்றன. ‘அவை நடந்தேறத் தாம் கருவியாக அமைந்துள்ளோம்’ என்கின்ற பக்குவநிலையால் நல்வினைத் தொடர்பாகிய புண்ணியப்பயன் உயிரைத் தொடர்ந்து, அதற்கேற்பப் பிறப்பில் படுதல் உயிர்களுக்கு நிகழ்வதில்லை. அவ்வாறன்றி, எந்த ஒரு செயலையும், ‘யான் செய்கின்றேன்’; ‘எனது அறிவாலும், வலிமையாலும் செய்கின்றேன்’ என்ற தன்முனைப்பு, செயலில் பற்றினையும், அதன்வழியான இன்ப துன்பங்களில் நாட்டத்தையும் தந்து பிறப்புகளுக்கு வாயிலமைக்கின்ற அவலம் நேர்கிறது. அத்தகைய நிலையினை, ‘பசு புண்ணியம்’ என்பர்.

    பதிபுண்ணியங்களாகிய நற்செயல்கள், சீவன்முத்தர்களால்,  பெருமானை முன்னிட்டுச் செய்யப்படுவன. அவற்றால் வினைப்பற்றும், இன்பதுன்ப நாட்டமும், அதற்கேற்ப பிறப்பின் தொடர்ச்சியும் அமைவதில்லை. அத்தகைய பக்குவநிலையே, ‘சீவன்முத்த நிலை’ எனப்படுகிறது. உலகியல் தொடர்போடு வாழ்கின்றபோதிலும், சீவன்முத்தர்கள் தாங்குகின்ற உடலானது உயிரைத் தாங்குகின்ற கருவியாக மட்டுமே அமையவல்லது. அவ்வுடலின் கருவி கரணங்கள் உலகியலின் இன்ப, துன்பநாட்டத்தைக் கடந்து, திருவருளாகிய பேரின்பதுக்கு நிலைக்களமாகின்றன. அவ்வுடலின் வழியான சிந்தையும், சொல்லும், செயலும் சிவசிந்தனைக்கு உரியவையாகப் பண்படுகின்றன. அம்மெய்யுணர்வின் வழியிலேயே, அப்பூதியடிகள் திருநாவுக்கரசரை ஞானகுருவாக ஏறிட்டுக் கொண்டார். ‘குருவே சிவம் எனக் கூறினன் நந்தி’ என்ற பெருநோக்கில், அவர்தம் திருப்பெயரால் அனைத்து அறங்களையும் செய்கின்ற பாங்கில் உயர்ந்தார். ‘அனைத்தையும் ஆக்குகின்ற அருமை முதல்வர் அவரே’ எனப் பணிந்து, அறப்பணிகளுக்கு, ‘திருநாவுக்கரசு’ என்னும் திருப்பெயரிட்டுச் சிறந்தார். அத்துடன், தம் மக்களுக்கும், மனையிடை நின்ற பொருள்களுக்கும், ‘திருநாவுக்கரசு’ என்றே திருப்பெயர் வழங்கி அறம்சிறக்கச் செய்தார்.

    அன்பில் சிறந்த அப்பூதியார்

    அப்பூதியார், சாதி, குலம் என்னும் தடுமாற்றம் நீங்கித் தெளிந்த சிந்தையராய், ஆளுடைய அரசுகளின்பால் நீங்காத அடிமைத்திறம் பூண்டவர். முக்கரணங்களாலும், ‘திருநாவுக்கரசரையே’ ஞானகுருவாக ஏறிட்டுக் கொண்டு தொண்டுநெறியில் நிலைநின்றவர். அவர்,  ‘கானிடைத் தவமும், கனலிடைப் புகுதலும், உடல்வாடி நோதலும் இன்றி, உள்ளத்து அன்பின் மொழியாக, ‘திருநாவுக்கரசு’ என்னும் திருப்பெயரினை, பேசியும், எழுதியும் சைவப்பெருஞ் சாதனைக்கு வித்திட்டார். ‘நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்’ என்னும் திருமொழியை, திருவருள் ஆணையாகப் பொலியச் செய்தவர். தாம், அறுவகைத் தொழிலையும் ஆற்றுவிக்கின்ற திருஞானச் செல்வராக விளங்கியபோதிலும், தன்னறிவை ஆற்றுவிக்கத் தனி குருவின் திருவருளை நாடியவர். அவ்வடிமைத்திறம், சைவசமயத்தின் அடிப்படையாகிய குருநெறியைத் திறம்பட வலியுறுத்துகிறது. அதிலும், நாயனாரைக் கண்ணால் காணாதபோதிலும்,  அவர்பால் அடிமைத்திறம் பூண்ட நிலை, அப்பூதியடிகளின் பெரும்பக்திக்குச் சான்று. அளப்பரும் இச்சாதனையால்,

                ‘உற்றானலன் தவம், தீயில் நின்றானலன் ஊண்புனலா
                அற்றானலன் நுகர்வும், திருநாவுக் கரசெனுமோர்
    சொற்றா னெழுதியுங் கூறியுமே யென்றுந் துன்பில்பதம்
                பெற்றான் ஒருநம்பி அப்பூதியென்னும் பெருந்தகையே’  என, நால்வர் நான்மணி மாலையின் (பாடல்: 38) திருப்பாடலால் போற்றப்பெற்றுள்ளார்.

    காணாதே பக்திகொண்ட பெரும்பக்தர்

    திருப்பழனம் முதலான திருப்பதிகளை வணங்கிப் பணிந்த நாயனார், திங்களூருக்கு வந்தார். அவ்விடத்தில், தமது திருப்பெயரால், அறங்கள் பல இயற்றப்படுவதைக் கண்டார். தாழ்வெனும் தகைமை மீதூர, அடியவராகிய தம்மையும் ஒரு பொருளாகக் கருதித், தம் பெயரால் அறங்களைப் புரிகின்ற திருவன்பரின் திருவடியினை வணங்கிப் பணிய ஆவல்கொண்டார். அங்கிருந்தாரிடத்தில் அவ்வன்பர்தம் ஊரும், பேரும், மனையும் முதலாயின குறித்து வினவி அறிந்தார். அவரைக் கண்ணாரக் கண்டு பணிகின்ற பெருவிருப்பில், அவர்தம் இருப்பிடம் சேர்ந்தார். வீட்டின் வாயிலில் இருந்து அழைக்க, அப்பூதியார் மனையின் உள்ளிருந்து வந்தார்.

    நடமாடும் கோயிலாகிய அரனடியாரின் வருகையினை எண்ணி மகிழ்வுற்ற அப்பூதியார்,   ‘அடியாருக்குத் தக்கவகையில் தொண்டாற்றவேண்டும்’ என விரைந்தார். மனத்தின் விரைவு, சொல்லில் வெளிப்பட்டது. ‘இறைவரீர்! அடியேனை நாடி வந்ததன் நோக்கம் யாது?’ எனக் கேட்டுப் பணிந்தார். இம்மொழி கேட்ட நாயனார், ‘தாங்கள் இயற்றுகின்ற அறங்கள் அனைத்துக்கும், ‘திருநாவுக்கரசு’ என்னும் பெயர் வழங்கிவருவதன் காரணம் யாது?; அதனினும் செம்மையுடைய திருப்பெயர்களும் உண்டே?’ என வினவினார். இதைக் கேட்ட அப்பூதியார் அளவிலாத துன்பமுற்றார். தம் முன்னால் எழுந்தருளியிருந்தவர், சிவவேடத்தால் சிறந்திருக்கின்ற நிலையிலும் அறியாமையுடன் அவ்வாறு வினவியதாகக் கொண்டார். ஆயினும், அத்திருப்பெயரின் அருஞ்சிறப்பையும் அறிந்திராத அடியாருக்கு அதனை அறிவுறுத்தியருள எண்ணினார்;  ‘அத்திருப்பெயரினும் சிறந்ததொரு திருப்பெயரும் உளதோ?’ என அவர்பால் வினவினார்.

    ’சிவனெனும் ஓசை அல்லது அறையோ உலகில் திருநின்ற செம்மை’ எனப் பாடிச் சிவனடிமை பூண்டவர், திருநாவுக்கரசு நாயனார். அவரையே சிவமாகக் கண்டு, குறையாத அடிமைத்திறம் பூண்ட அப்பூதியார், ‘திருநாவுக்கரசு’ என்னும் திருப்பெயரைக் காட்டிலும், திருவாகிய செம்மைநிறைந்த திருப்பெயர்களும் உளதோ?’ என்று அவரை நொந்துரைத்தார்.

                   “நம்மையுடை யவர்கழற்கீழ் நயந்ததிருத் தொண்டாலே
                   யிம்மையிலும் பிழைப்பதென வென்போல்வா ருந்தெளியச்
                   செம்மைபுரி திருநாவுக் கரசர்திருப் பெயரெழுத
                   வெம்மைமொழி யான்கேட்க விளம்பினீர்” (அப்பூதி. புரா.: 14)
    இத்திருப்பாடல், ‘தொண்டில் நிலைத்த அப்பூதியாரின் தூயதிருவுள்ளத்தை விளக்கிக்காட்டுகிறது.  ‘நம்மையுடைவர்’ என்பது, சிவனாரைக் குறிக்கிறது. ‘என் போல்வார்’ என்பது, சிற்றறிவுடைய தீவினை யுர்களை’.

    நமக்காக நாயனாரின் பெயரை நயந்தார்

    நம்மையுடையவராகிய, இறைவரைப் பணிந்தால், இப்பிறப்பினையே இறுதியாக்கி, இனிப் பிறவாமை பெறலாம்; அதற்குச் சிவனாரின் திருவடியைப் பற்றுகின்ற ஞானநெறிக்குத் தலைப்படுதல் வேண்டும். ஆயினும், எம்மைப்போன்று சிற்றறிவே உடையவருக்கு அப்பெருநெறியானது, பற்றுதற்கு அரியது; அதனால், எளியவாறு அப்பெருநெறியினை அணுகுகின்றவகையில், சிவனடியாரை  நயந்தேன்’; அவர்களுக்குரிய பல தொண்டினையும் செய்யத்தலைப்பட்டேன்; திருத்தொண்டுநெறியால் உலகுய்யச் சமணத்திலிருந்து, சைவத்துக்கு மீட்டருளப்பெற்று ‘வாக்குக்கோர் மன்னவர்’ என்று திருப்பெயர் பெற்றுச் சிறந்த நாயனாரே, ‘தொண்டுநெறிக்கோர் தூமணியாகத் திகழ்கின்றார்; அவர், ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் செம்மை மனத்தினர்; வீடும் வேண்டா விருப்புடன், அன்பர் பணியாகிய திருத்தொண்டில் நிலைநின்றவர்; யானும்,  அவ்வழியே நின்றுய்ய அவரையே ஞானகுருவாக்கிக் கொண்டேன். அன்றுமுதலாக, அவர்தம் திருப்பெயராலேயே அறங்கள் பலவும் பொலிவுற்றுச் சிறக்கின்றன’ என்று விடைகூறினார்.

    இத்திருப்பாட்டில், மன்னுயிர்களின்பால் அவர்கொண்ட கருணையால், அவற்றின் அறியாமையைத் தன்பால் ஏறிட்டுக்கொண்டும், தம்மை, அறியாமை மிக்கவராகவும் அப்பூதியார் குறித்தருளியுள்ளார். இம்மறுமொழிகளைத் தெய்வச்சேக்கிழார் பெருமான், இரண்டு திருப்பாடல்களில் குறித்தருளியுள்ளார். நாடகத்தால் அவனடியார்போல் நடித்து, தம்மை முன்னிருத்திச் சுயம் நிறுவுதலையே பக்திநெறியாகக் கொண்டுள்ள மூடர்களுக்கான வழிகாட்டுதலாக, அப்பூதியடிகளின் நிலை அமையக்காண்கிறோம்.

    அவர், அந்தணருக்கு உரியதாகிய ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல் மற்றும் ஏற்றல் என்னும் அறுவகத்தொழிலில் ஈதலையும் திறம்படச்செய்தார். திருவருளால்,  அறச்செயல்களுக்கான பொருள்செல்வம் அனைத்தையும் பெற்றுச் சிறந்தபோதிலும், அறமாற்றி அருள்செல்வத்தையும் சேர்க்க முனைந்தார். அந்நிலையில் தன்முனைப்பு அற்ற உயர்ஞானத்தைக் கடைப்பிடித்தார். நாயனாரைக் காணாதபோதிலும், அவரது திருப்பெயரால் அறங்கள் சிறக்க நல்லெண்ணம் கொண்டார். குருவையே சிவமாகக் கருதி, தம் மக்கள் முதலான சுற்றத்தாரையும் அந்நன்நெறியில் ஒழுகி உய்யச்செய்தார்.

    பணிவில் தலைநின்ற பெரியார்

    அப்பூதியடிகளார் தம்மிடத்தில் கூறிய மறுமொழிகளைக் கேட்ட அளவில், நாயனாருக்கு, அவர்மீதான  நன்மதிப்பு மேலும் பெருகியது. ’அடியவனே, சூலைதந்து பெருமானால் ஆட்கொள்ளப்பெற்ற சிறுமையேன்’ என்றுகூறி, அவரைப் பணிந்தார். அதுகாறும், தம் முன்னால் எழுந்தருளியிருந்த அடியார், தமது ஞானகுருவாகிய திருநாவுக்கரசு நாயனாரே’ என்பதை அறியாத அப்பூதியார், நாயனாரின் மொழி கேட்டு, சிரத்தின் மேற் கரம்குவித்து, கண்ணீர் அரும்ப, சொல் தடுமாறி, மயிர்ப்புளகம் எய்தி, தரையினில் வீழ்ந்து நாயனாரின் திருவடியினைப் பணிந்தார். அவ்வாறு தமது திருவடி பணிந்து எழுந்த அப்பூதியாரைத் தாமும் எதிர் வணங்கி, நாயனார் எடுத்தருளினார்.

                ‘மற்றவரை யெதிர்வணங்கி வாகீச ரெடுத்தருள
                 அற்றவர்க ளருநிதியம் பெற்றார்போ லருமறையோர்
                 முற்றவுளங் களிகூர முன்னின்று கூத்தாடி
                 உற்றவிருப் புடன்சூழ வோடினார் பாடினார்’   (அப்பூதி. புரா.: 18)

    மேற்கண்ட பாடலில், ‘தன்னடியவராகிய அப்பூதியாரைத் திருநாவுக்கரசுப் பெருமான், வணங்கினார்’ எனக் குறிக்கப்பட்டுள்ளமையும், அவரிடத்தில் தம்மை அறிமுகம் செய்துகொள்ளுங்கால், ‘சிறுமையேன்’ என்று கூறியே பணிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கவை.

    நாயனாரின் தொண்டுநெறிக்கு, ‘ஆருயிர்கள்பால் அவர்  அளவில்லாது பெருக்கிய கருணையும், அவ்வளப்பரும் கருணையின் வெளிப்பாடாகிய பணிவும்’ இருகண்கள் எனத் திகழ்ந்தன. அப்பெருநிலையால் உடலும் உள்ளமும் பொலிவுற்ற பாங்கினாலேயே நாயனார், திருஞானசம்பந்தப் பிள்ளையாரைச் சிவிகையில் தாங்கி, ‘அப்பர்’ எனத் திருப்பெயர் ஏற்றார். அப்பெரும்பண்பில் மேலும் பெருகிய பாங்கினாலேயே, அப்பூதியடிகளிடத்திலும் தம்மை, ‘சிறியேன்’ எனவும் பணிந்தும், அவரை வணங்கியும் அன்பில் பெருகினார்.

    பெறலரும் புதல்வனின் பெருஞ்சாதனை

    அப்பூதியாரின் திருமனைக்குள் எழுந்தருளிய நாயனாருக்கு விதிப்படி, ஆசனமும், அருச்சனையும் செய்வித்து திருவமுது படையலுக்கான ஏற்பாடுகளையும் அப்பூதியடிகளார் மேற்கொண்டார். நாயனார், திருவமுது செய்தருள வேண்டி, உண்கலம் அமைக்கத் தமது மூத்ததிருமகனாகிய, மூத்ததிருநாவுக்கரசை வாழைஇலை கொண்டுவரப் பணித்தார். அத்திருமகனும், அதற்காக மிகமகிழ்ந்து, இலையினை அரிய முற்பட்ட வேளையில், நச்சரவொன்று அவன் உடலில் பல்பதித்தது.

    ‘நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்’ எனப் பாடிச் சைவப்பெருநெறி வாழ உயிர்க் காத்து அருளப்பட்டவர், நாவரசர்.  அவரைப் பணிகின்ற அடியாரும் அவ்வாறு நமனை வென்று நல்வாழ்வு பெறவல்லவர்கள்’ என்பதனை உலகுக்கு உணர்த்துகின்ற பெருவாய்ப்பாக மேற்கண்ட செயல் நிகழ்ந்தேறியது. அத்துடன், உண்மையடியார்கள், தம் இன்னுயிரைத் தந்தும், தொண்டுநெறியை வாழச்செய்வர்’ என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. மூத்ததிருநாவுக்கரசின் உடலில் விடமேறிய நிலையினை, ‘ஏழாம்விட வேகம்’ எனப் புராணம் குறிக்கிறது.

      ‘எரிவிட முறையே யேறித் தலைக்கொண்ட வேழாம் வேகந்
    தெரிவுற வெயிறுங் கண்ணு மேனியுங் கருகித் தீந்து
    விரிவுரை குழறி யாவி விடக்கொண்டு மயங்கி வீழ்வான்
    பரிகலக் குருத்தைத் தாயார் பால்வைத்துப் படிமேல் வீழ்ந்தான்’  (அப்பூதி. புரா.: 27)

    ‘உடலின் செரிமான மண்டலம் முதலாக, தோல் மண்டலம் ஈறாக அமைந்த அனைத்து உறுப்பு மண்டலங்களையும் கொடியவிடம் தாக்கியதால், இனிப் பிழைத்தேற வாய்ப்பில்லை’ என்னும் வகையில், பெருந்துன்பத்தை அப்பிள்ளை அனுபவித்திருக்கக்கூடும். ஆயினும், தொண்டின் மணியாகத் திகழ்கின்ற பெற்றோரின் பெருந்தொண்டுக்கு இழுக்குநேராத வண்ணம், தான் அரிந்துவந்த வாழையிலையினைத் தாயிடத்தில் ஒப்படைத்த பிறகே அவனது ஆவி உடலிலிருந்து பிரிந்ததாகக் குறிப்புள்ளது. உயிர் பிரிகின்ற தருவாயிலும்,  பெற்றோரின் தொண்டில் துணைநின்ற, ‘மூத்ததிருநாவுக்கரசின்’ பெயரால் தொண்டுநெறி இன்றளவும் செழித்தோங்குகிறது.

    திருத்தொண்டில் துளங்காத இணையர்

    பக்திநெறியினை, உலகியல்  பயனுக்காகக் கடைப்பிடிப்போர், நன்மையால் இன்பமும், தீமையால் துன்பமும் அடைவர். நன்மைக்கும், அதன் இன்பத்துக்கும் தாமே பொறுப்பேற்பதும், தீமைக்குத் திருவருளைப் பழிப்பதும் அவர்கள் இயல்பாக அமையும். ஆனால், சீவன்முத்தர்களாகிய அப்பூதியாரும், அவர்தம் மனைவியாரும் ஆருயிர்களைக் காக்கின்ற அரனே, ‘திருநாவுக்கரசு’ எனத் திருப்பெயர்த் தாங்கித் தம்பால் எழுந்தருளி வந்ததாக எண்ணிப் பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தனர்.

                ‘நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
                         உன்நாமம் என்னாவில் மறந்தறியேன்’         (4:1:6)

    எனத் திருநாவுக்கரசரின் திருப்பெயரையும், அவர்த் திருப்பெயரிலான தொண்டிலும் திறம்பாது நின்றனர். அதிலும், ‘வாராது வந்த மாமணி’ எனத் தமது மனைக்கு நாயனாரே எழுந்தருளியநிலையில், பெருஞ்செல்வம் பெற்ற பெருமகிழ்வில் திளைத்திருந்தனர்; அவருக்குத் திருவமுது படைக்கத் திருவருள் கூட்டுவித்தநிலையில், அதற்கு இடையூறாக மகனுக்குத் தீராத துன்பம் நேர்ந்ததனைக் கண்டனர். பெறலரும் புதல்வனாகிய மூத்ததிருநாவுக்கரசின் திருமேனியில் விளங்கிய குறிகளைக் கண்டு, அவன் விடத்தினால் உயிரற்று வீழ்ந்ததனை உறுதிசெய்து கொண்டனர்; அவ்வாறு நிகழ்ந்ததும், திருவருளின் சித்தம் என்றே துணிந்தனர். அத்தெளிவுடன்,  மறுகணமே  அடியவராகிய நாயனாருக்கு அமுதுபடைக்கின்ற அரியவாய்ப்பு தவறாதவகையில்,  மகனது உடலைப் பாயினில் சுற்றி மறைத்துவைத்தனர்.

    திருத்தொண்டில் நிலைநின்ற அவ்விணையரின் ஒப்பரிய உளப்பாங்கினைத் தெய்வச் சேக்கிழார்பெருமான், ‘துளங்குதல் இன்றித் தொண்டர் அமுது செய்வதற்குச் சூழ்வார்’ எனக் குறித்தருளியுள்ளார். ‘துளங்காமை’, என்றது, ‘சிவனடிமைத்திறம் பற்றிய அன்பின் நிலையினின்று நிலைபெயராமை’ (அப்பூதி. புரா.: 28, சிவக்கவிமணியார் உரை:பக்.: 253).

      ‘தொடருந் தொண்டரைத் துக்கந் தொடர்ந்துவந்
         தடரும் போதர னாயருள் செய்பவர்’ (5:51:8) என்ற நிலையில், ‘திருவருளின் துணைநின்று தமது துன்பத்தை நீக்கியிருக்கவேண்டும்’; அதற்கு வாய்ப்பின்றி விளைந்த பெருந்துன்பத்தை நீக்கியருள, ‘நாயனாரைச் சரணடைவோம்’ என்றும் தன்னலத்துடன் அப்பூதிஇணையர் சிந்திக்கவில்லை. மாறாக, இருவரும், குருவிடம் கொண்ட அடிமைத்திறத்திலிருந்து பிறழாதவர்களாயினர்; உள்ளத்தால் தடுமாற்றம் ஒழித்தவர்களாயினர். உயர்த்தொண்டாக, நாயனாருக்கு அமுதுபடைக்க ஆயத்தமாயினர்.

    திருநீற்றுத் திருமரபால் அருஞ்சாதனை

    ‘விதியை மதியால் வெல்லுதல்’ என்பது, திருநாவுக்கரசு நாயனார் போன்ற அருளாளர்களால் மட்டுமே அமைவது. அவர்களது பதிஞானம், முற்றுணர்வாக விளங்கி அனைத்தையும் அறிகின்றவகையில் மேம்பட்டு நிற்பது. அவ்வாறே நாயனாரும், அம்மனையிடத்தே விரும்பத்தகாத ஒன்று, நிகழ்ந்ததனை உளக்குறிப்பாக அறிய நேர்ந்தது. இருப்பினும், அதனை வெளியிட விரும்பாத மனத்தினராய், அப்பூதி இணையரின் திருத்தொண்டினை ஏற்றருள மனம் கனிந்தார். அதற்கேற்ப, இணையர் இருவரும் உடனிருந்து, நாயனாருக்கு அனைத்துச் சிறப்புகளுடனும், திருவமுது படைக்க முனைந்தனர். அவ்வேளையில், ‘திருவாய் பொலியச் சிவாயநமவென்று திருநீறு’ அளித்தருள எண்ணி, மூத்ததிருநாவுக்கரசையும் அவ்விடத்திற்கு அழைத்துவரும்படி, நாயனார் கூறினார். அடியார்கள் திருவமுது செய்தருளுவதற்கு முன்னர், தம் உடனிருப்போர்களுக்குத் திருவருள் பொலிவாகத் திருநீற்றினை வழங்கிச் சிறப்பது மரபு. அத்திருமரபே, மூத்ததிருநாவுக்கரசை மீண்டும் உயிர்ப்பெறச் செய்கின்ற சைவ அருஞ்சாதனைக்குக் கருவியானது.

    அதுகேட்ட பெற்றோர், நாயனாரின் திருவருள் ஆணையினை நிறைவேற்றத் திருவருள் துணைபுரியாத தமது நிலையினை எண்ணிக் கலங்கினர். மகன், இறந்துபட்டதை அறிந்தபோதும்கூட பெற்றோர்கள் தடுமாற்றம் அடையவில்லை; ஆனால்,  நாயனாரிடத்தில், ‘நிகழ்ந்ததனை மறைத்துநிற்கின்றோம்’ என்ற குற்றவுணர்வால், அவர்களிடத்தில் தடுமாற்றம் நிகழ்ந்தது. மகன், விடத்தால் இறந்துபட்டதனை விளக்கிக் கூறாது, ’இப்போது இங்கு அவன் உதவான்’ (அப்பூதி. புரா.: 32) என்று தடுமாறி உரைத்தனர்.  அதனைக் குறிப்பினால் உணர்ந்த நாயனார், ‘அனைவரையும் உய்விக்கின்ற திருநீற்றினை அவன் பெறுவதற்கு இயலாதவண்ணம் நிகழ்ந்ததனை உள்ளவாறு கூறுக’ எனத் தாயன்பின் பரிதவிப்புடன் மொழிந்தார். பிள்ளைக்கு நேர்ந்ததனைக் கூறக் கேட்டு, ‘உம்மையும், உமது மக்களையும் போன்று தொண்டில் திறம்பாதவர் எவரும் இல்லை’ என்று நாயனார் வியந்து மொழிந்தார்.

    அரனருளால் உண்மைத்தொண்டர்கள், ‘விதியையும் மாற்றம் செய்வர்’ என்பதனை விளக்கிக்காட்ட, திங்களூர்த் திருத்தலத்தின் திருவாயிலின் திருமுன்பிலிருந்து, ‘ஒன்றுகொலாம்’ எனத் தொடங்கிப் பாடினார். அத்திருப்பதிகத்தின் பத்தாம் திருப்பாடலில், ‘பத்து கொலாம் அவர் பாம்பின்பல்’ (4:18:10) எனக் குறித்துப் பாடிய அளவில், மீண்டும் மகன் உயிர்ப்பெற்று எழுந்தான். ஆழ்ந்த உறக்கத்திலிருந்து மீண்டவனைப்போல, இயல்பாக எழுந்துவந்த பிள்ளைக்கு நாயனாரும் திருநீறளித்து மகிழ்ந்தார். ‘மாண்ட மகன் மீண்டருளிய நிலையானது, ‘அப்பூதியாரின் தொண்டின் உறுதியால் வாய்த்தது’ என்பதனைப் புராணம், ‘தொண்டின் நெறியினைப் போற்றி வாழ்ந்தார்’ எனக் குறிக்கிறது.

     ‘பிரிவுறு மாவி பெற்ற பிள்ளையைக் காண்பார் தொண்டின்
            நெறியினைப் போற்றி வாழ்ந்தார்; நின்றவப் பயந்தார் “தாங்கள்
            அறிவரும் பெருமை யன்ப ரமுதுசெய் தருளு தற்குச்
            சிறிதிடை யூறு செய்தா னிவ” னென்று சிந்தை நொந்தார்’ (அப்பூதி. புரா.: 37)

    தொண்டில் வலிமையும் எளிமையும்

    உயிர்ப்பெற்று எழுந்த மகனைக் கண்ட பெற்றோர், அவ்வேளையிலும், ‘பெறலரும் தம் மகனை மீளப்பெற்றோம்’ என மகிழ்வில்லையாம்; மாறாக, ‘நாயனார் திருவமுது செய்தருளக் காலம் தாழ்ந்ததற்கு, இம்மகனே காரணமாயினன்’ என்று உள்ளத்துள் வருந்தினராம்; அத்துடன், அனைத்தையும் அறியத்தக்கவராகிய நாயனாரிடத்தில் மகனுக்கு நிகழ்ந்ததனை மறைத்துநின்ற அவச்செயலுக்கான அச்சத்தையும் சுமந்து நின்றனராம்.  (மேலது பாடல்). இவ்வாறு, அப்பூதியார் மற்றும் அவர்தம் மனைவியாரின் மனநிலை தொண்டில் வலிமைபெற்றிருந்தது. அத்துடன், அங்கிருந்த நாயனாரிடத்திலும் செயற்கரும் சாதனையைச் செய்தளித்த பெருமிதம் மிளிரவில்லை; சிவனடியைப் பற்றுகின்ற பெருநிறைவாகிய பணிவே அவரிடத்தில் நிலைத்திருந்தது. அத்துடன், அப்பூதியார் மற்றும் அவர்தம் மனைவியாரின் வருத்தமும், அச்சமும் ஒருங்கே நீங்கும்படி, அப்பூதியாரையும், அவர்தம் மக்களையும் உடனிருத்தி, நாயனார் திருவமுதும் செய்தருளினார். (அப்பூதி. புரா.: 37) நாயனார், அடியாரையும் உடனிருக்கச் செய்து, அமுதுசெய்வித்த அன்பின்திறம், எல்லைகள் கடந்த தொண்டின் எளிமையையும், உயர்வையும் குறிப்பதாகும்.

     முடிவுரை

    ‘உடல்சுமந்து, பிறவியில் புகுகின்ற அவலம் நீங்கவேண்டில், உடலாலும், உள்ளத்தாலும் பணிவைப் புலப்படுத்துகின்ற தொண்டுநெறியே உற்ற துணையாகும்’ என்பதற்குத் திலகவதியார் திருச்சான்றாக விளங்குகின்றார். நாயனார், சூலையால் துன்புற நேர்ந்தது, வினைக்கழிவாய் நிகழ்ந்ததாகும். சீவன்முத்தர்களை, வினைப்பயன் உடலளவில் மட்டுமே துன்புறுத்தும்; அவர்களது உயிருக்கு உற்ற துணையாகப் பெருமான் விளங்கிப் பண்படுத்த வல்லவன்’ என்பதைத் திருநாவுக்கரசு நாயனார் புராணம் தெளிவுற உணர்த்துகிறது.

     நாயனாரின், திருக்கழிப்பாலைத் திருப்பதிகம், ஆருயிர்கள் ஈடேற வேண்டிப் பெருமான்,  ‘ஞானமும் நாவில் வைத்தார்’ என மொழிகிறது. ஞானத்துக்குக் கருவியாகப் பெருமானால், அருளிச்செய்யப்பட்டவையே, வேதமும், ஆகமமும், இதிகாசமும், புராணமும். அவற்றின் எளியநிலை விரிபொருளாகத் திருநாவுக்கரசு நாயனாரின் திருப்பதிகங்கள் விளங்குகின்றன.  அவை சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுங்கால், செல்நெறியாகப் பெருமானின் திருவடியைக் கூட்டுவிக்கவல்லன. அதற்கேற்ற வகையில், உயர் ஞானமற்ற அறிவிலிகளும் ஈடேற அவர்தம் திருப்பெயரே திருமந்திரமாக வல்லது’ என்பதற்கு அப்பூதியடிகள் நாயனார் புராணம் சான்றாகின்றது.

    அடிகள் புரிந்த திருத்தொண்டுநெறியை, அவர்தம் மனைவியாரின் அருளுள்ளமும் தாங்கி நிற்கிறது. இது, பண்பட்ட இல்லற வாழ்வியலுக்குச் சான்றாகிறது. மேலும், ‘நன்மக்கள்பேறு’  என வள்ளுவப்பெருந்தகை குறிப்பிட்டதும், ‘பிறருக்குத் தொண்டுசெய்கின்ற நன்மக்கள்பேற்றையே’ எனலாம். அதற்கு, மூத்ததிருநாவுக்கரசின் தொண்டுள்ளம் சிறந்த சான்றாகிறது. ’தொண்டுநெறியாகிய பக்திநெறியே’ இப்பெருமக்களது வாழ்வியலாகிறது.

    ‘தொண்டுநெறியே, திருவாகிய செம்மைவாழ்க்கை’ என வாழ்ந்த திலகவதியாருக்கும், திருநாவுக்கரசு நாயனாருக்கும், அப்பூதியடிகளுக்கும், அவர்தம் மனைவியாருக்கும், திருமகனாருக்கும் அடிமைபூண்டு, ‘தொண்டர்க்கும் தொண்டராம் புண்ணியமே’ எனப் பணிகின்ற பக்திவாழ்வியலை, திருவதிகைத் திருவீரட்டானம் மற்றும் திங்களூர் முதலான திருமுறைத் திருத்தலங்கள் விளக்குகின்றன. உலகியல் பயன்களுக்காக அவற்றை வலம்வருகின்ற அறியாமை நீங்கி, அவ்வத் திருத்தலங்களையும், அவற்றின் உயிர்நாடியாக உள்ள தொண்டுநெறியின் வழியில் பணிவது, பகுத்தறிவுடன் கூடிய பக்தி மறுமலர்ச்சிக்குத் துணையாகும்.

    ஆய்வுத்துணை நூல்கள்:

    1. பெரியபுராணம்- தொகுதி:3 , பாகம்: 1,2 – சிவக்கவிமணி சி.கே.சுப்ரமணியனார் (உரையாசிரியர்), பன்னிரு திருமுறை ஆய்வுமையம், கற்பகம் உயர்கல்வி கலைக்கழக வெளியீடு, கோயம்புத்தூர்- 21.பதிப்பு ஆண்டு: திசம்பர், 2017.
    2. தேவாரத் திருப்பதிகங்கள் (அடங்கன்முறை), பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனார் (பதிப்பாசிரியர்), கங்கை புத்தக நிலைய வெளியீடு, ஐந்தாம் பதிப்பு: சனவரி, 2005.

    இணையம்:
    thevaaram.org
    maduraitamilproject.org.

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 132

     

     

     

    நிர்மலா ராகவன்

    வெற்றிப் படிகளில் ஏற

    `நான் ஏன்தான் இப்படி எளிதாக மனம் தளர்ந்துவிடுகிறோனோ!’ என்று அலுத்துக்கொள்கிறவரா நீங்கள்? அப்படியானால் நீங்கள் தனியாக இல்லை. உங்களுடன் 95% பேர் இருக்கிறார்கள்.

    நூற்றில் மூன்று பேர்தான் வெற்றிப்பாதையில் நடக்கிறார்களாம். அவர்களுக்கு மட்டும்தான் திறமை, அதிர்ஷ்டம் எல்லாம் வாய்த்திருக்கிறதோ? இல்லை. அவர்களுக்கும் குறைகள் இல்லாமலில்லை. ஆனால், வாழ்வை எப்படி எதிர்கொள்வது என்பது புரிந்தவர்கள் அவர்கள்.

    தம்மையுமறியாது மற்றொருவர் விரிக்கும் வலையில் விழுந்துவிடுகிறார்கள் பிறர்.

    யாரை எளிதாக வீழ்த்த முடியும்?

    1 `என்னால் என்னவெல்லாம் முடியாது?’ என்ற வீண்யோசனைக்குத் தம்மை உட்படுத்திக்கொள்பவர்களை.

    “சந்திரனைப் பிடிக்கவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டால், நட்சத்திரமாவது கிடைக்கும்”. (திரு.அனுபவசாலி)

    அதாவது, `கணக்குப்பரீட்சையில் நூற்றுக்கு நூறு வாங்குவேன்!’ என்று முனைந்தால், அறுபது மதிப்பெண்களாவது கிடைக்கும். `எப்படியோ தேர்ச்சி பெற்றால் போதும்!’ என்றால்…?

    2 `இப்போது எந்தவிதப் பிரச்னையும் கிடையாது. புதிதாக ஒன்றை ஆரம்பித்து மாட்டிக்கொள்வானேன்!’ என்று ஏற்கெனவே குழம்பி, தாம் வகுத்த பாதையில் மாற்றமின்றி, ஆனால் சலிப்புடன், நடப்பவர்களை.

    3 `எளிதானது, எல்லாரும் செய்கிறார்களே!’ என்று கூடாத காரியத்தைத் துணிந்து செய்பவர். (`தலைமை அதிகாரிகளே லஞ்சம் வாங்கும்போது, நாம் வாங்கினால் என்ன தப்பு?’)

    4 ஒரு காரியத்தை ஆரம்பித்துவிட்டு, அது எதிர்பார்த்தவகையில் நடக்காவிட்டால் மனம் தளர்ந்துவிடுபவர்கள். அதன்பின், `நான் முட்டாள், அதிர்ஷ்டம் இல்லாதவன்,’ என்று தம்மைத்தாமே குறை கூறிக்கொண்டிருப்பார்கள். இது அடக்கமா?

    `உனக்குத்தான் அதிர்ஷ்டமே கிடையாதே!’ என்று கூறியே இப்படிப்பட்டவர்களை வீழ்த்துவது எளிது. அவர்களும் தாம் நினைத்தது சரிதான் என்று நம்பிவிடுவார்கள்.

    5 மனோதிடமின்றி, எதையும் ஒத்திப்போடுபவர்கள் — `சரியான தருணத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்!’ என்ற சாக்குடன்.

    என்னுடன் வேலைபார்த்த ஓர் ஆங்கில ஆசிரியை, “நான் ஐம்பது வயதுக்குப்பின் தினசரிகளுக்கு எழுதப்போகிறேன்!” என்பாள்.

    “அது என்ன கணக்கு?” என்று கேட்டபோது, “சரியான காரணத்தைத்தான் வைத்திருக்கிறேன்,” என்று நழுவினாள். காரசாரமாக எழுதினால். நிறைய அல்லல்களைச் சந்திக்க நேரிடும் என்று என்னைப் பார்த்துப் பயந்துபோயிருப்பாள்.

    இது நடந்து இருபது ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. அவள் எதையும் எழுதியதாகத் தெரியவில்லை.

    செய்ய வேண்டியதை இன்றே ஆரம்பிக்கலாமே! விளைவுகளுக்குப் பயந்துகொண்டே இருந்தால், எதையும் சாதிக்க முடியாது.

    கனவிலேயே சுகம்

    கனவிலேயே சுகம் காண்பவர்கள் அதை நனவில் செயலாற்ற முனைவதில்லை.

    `நான் வெளிநாட்டில் வேலை பார்த்து, ஐந்தே வருடங்களில் லட்சாதிபதி ஆகப்போகிறேன்!’ என்றவர்களைப் பார்த்திருக்கிறேன். கனவு மட்டும் போதுமா? செயலில் காட்டி, கண்ட கனவை நனவாக்கும் துணிவும் வேண்டுமே!

    காலையில் ஆறு மணிக்கு சாப்பாட்டுக்கடை ஒன்றில் வேலைபார்க்க வெளிநாட்டிலிருந்து வரும் ஒருவர் இரவு ஒன்பது மணிக்குத்தான் தன் அறைக்குத் திரும்புவார். (மிகவும் களைப்பாகத் தென்பட்ட ஒரு பரிசாரகரை நான் விசாரித்துத் தெரிந்துகொண்ட செய்தி இது).

    சம்பளம் தாய்நாட்டில் கிடைப்பதைவிடப் பன்மடங்கு அதிகம் என்றாலும், அயல்நாட்டில் அத்தியாவசியமான எல்லா பொருட்களுக்கும் விலையும் கூடுதல்தானே?

    கனவு கனவாகவே போய்விடும் என்று புரியும்போது வாழ்க்கையில் சலிப்புதான் ஏற்படுகிறது. குறுகிய காலத்தில் வெற்றி காண நினைப்பது அசட்டுத்தனம். அதற்கு குறுக்கு வழியில் போனால்தான் உண்டு.

    உழைப்பு மட்டும் போதுமா? நம்பிக்கை, துணிச்சல், பொறுமை ஆகியவைகளும் வெற்றிகாண அவசியமான தன்மைகள்.

    தன்முனைப்பு

    நாம் ஒரு காரியத்தைத் துவங்குமுன், `உன்னால் முடியும்,’ என்று ஊக்குவிப்பவர்கள் அரிது. `நான் செய்து காட்டுகிறேன்!’ என்று மனதுக்குள்ளேயே சவால் விட்டு, துணிந்து நமக்குப் பிடித்த ஒரு காரியத்தில் ஈடுபட்டால் சிறிதளவாவது வெற்றி கிட்டும். அப்போது, நம் நம்பிக்கையைக் குலைக்கப்பார்த்தவர்கள், `எனக்கு முதலிலேயே தெரியும், நீ வெற்றி பெறுவாய் என்று!’ என்பதுபோல் மாறுவார்கள்! உலகின் நோக்கைப் புரிந்துகொண்டால், எளிதில் மனம் தளரமாட்டோம்.

    சிறு வெற்றி, பெரு மகிழ்ச்சி

    சிறு, சிறு வெற்றிகள் வரும்போது அவைகளுக்காக மகிழக் கற்கவேண்டும்.

    எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு உடையவர் எடுத்த எடுப்பிலேயே புதினம் எழுத முயற்சிக்கலாமா? அவர் பெயரில் ஒரு துணுக்கு வெளியானாலும் மகிழ்வதே முதல் படி. அப்போது எழும் மகிழ்வில், உற்சாகத்தில், இன்னும் முயற்சிகள் எடுக்க முனைவார்.

    ஆனால், ஒரு சிறு வெற்றி கிடைத்தவுடன், `நான் சாதித்துவிட்டேன்!’ என்ற பூரிப்புடன் ஒரே நிலையில் இருந்தால் தோல்விதான் எழும்.

    தோல்வியிலிருந்து கற்க

    `ஏதாவது செய்யலாமா?’ என்று ஓய்ந்த நேரத்தில் குருட்டு யோசனை செய்வது எந்த பலனையும் அளிக்காது. மாறாக, `இதுதான் செய்யப்போகிறேன்!’ என்ற முடிவெடுத்துக்கொள்வது அவசியம். நம்மையும் அறியாமல் தகுந்த வழிமுறைகள் புலப்படும்.

    தவறாகிவிட்டது. அதனால் என்ன?

    தடைகளும், தவறுகளும் தவிர்க்க முடியாதவை. இயன்றவரை முயற்சித்தால், தானே சரியான பாதை தெளிவாகும்.

    `ஒரே முயற்சியில் நீங்கள் எதையாவது கண்டுபிடித்திருக்கிறீர்களா?’ என்று ஒரு விஞ்ஞானியைக் கேட்டபோது, `பல முறை முயன்றபின், ஒரு காரியத்தை எப்படிச் செய்யக்கூடாது என்று கற்றேன்!’ என்று பதில் வந்ததாம்.

    பிரபல எழுத்தாளர்களைக் கேளுங்கள், `அடித்துத் திருத்தாமல், என்றாவது உங்கள் படைப்புகளைப் பிரசுரத்திற்கு அனுப்பி இருக்கிறீர்களா?’ என்று.

    தவறுகள் புரியாமல் ஒரு காரியத்தைத் திருப்தியாகச் செய்வது என்பது இயலாத காரியம். அதனால் மனமுடைந்து போகாது, இனியும் அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வதே வெற்றிக்கு அறிகுறி.

    எதிர்பார்த்த வெற்றி கிடைத்தபின்னரும், அதிலேயே தேங்கிவிடாது, இலக்கை உயர்த்திக்கொண்டே இருக்க வேண்டும்.

    தன்னையே உணர்ந்துகொண்டு, விடாமுயற்சி செய்பவரை வீழ்த்துவது கடினம்.

    தொடரும்

    Share
  • குறளின் கதிர்களாய்…(231)

     

    செண்பக ஜெகதீசன்

     

    ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை  

    யூக்கா ரறிவுடை யார்.

           -திருக்குறள் -463(தெரிந்து செயல் வகை)

     

    புதுக் கவிதையில்…

     

    வரவிருக்கும் உயர்ந்த

    ஊதியத்தை எதிர்பார்த்து,

    கையிலிருக்கும்

    முதலை இழக்கும் செயலைச்

    செய்யமாட்டார்

    அறிவுடையார் எவரும்…!

     

    குறும்பாவில்…

     

    கையிலிருக்கும் முதலை இழந்து,                   

    வரவிருக்கும் ஆக்கத்தை எதிர்பார்ப்பதை   

    விரும்பிச் செய்யார் அறிவுடையோர்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    ஊதியம் பெரிதாய்க் கிடைக்குமென்றே

         உயர்வா யொன்றை எதிர்பார்த்தே,

    ஏதுமே அறியா நிலையினிலே

         இருக்கும் கைப்பொருள் இழந்திடாதே,

    தீதே தந்திடு மிச்செயலைத்

         தெரிந்து செய்திட உடன்படாரே

    ஆதியோ டந்தம் நன்றுதீது

         அறிந்து தெளிந்த அறிவுடையரே…!

     

    லிமரைக்கூ..

     

    உயராக்கம் கிடைக்கும் என்று        

    எதிர்பார்த்தே யிழக்கமாட்டார் கைமுதலை,                       

    அறிவுடையோர் தாமே சென்று…!

     

    கிராமிய பாணியில்…

     

    தெரிஞ்சி செய்யணும்- எதயும்

    தெரிஞ்சி செய்யணும்- நல்லாத்

    தெரிஞ்சி செய்யணும்..

     

    ஊதியம் பெருசாக் கெடைக்குமுண்ணு

    எதிர்பாத்தே குடுத்து

    கையில இருக்கிற மொதலயெல்லாம்

    எழந்து

    தவுச்சி நிக்கமாட்டான்

    அறிவுள்ள எவனும்..

     

    அதால

    தெரிஞ்சி செய்யணும்- எதயும்

    தெரிஞ்சி செய்யணும்- நல்லாத்

    தெரிஞ்சி செய்யணும்…!

     

    செண்பக ஜெகதீசன்…

    Share
  • நூல்மதிப்புரை – செம்மொழிச் சிந்தனைகள்

    -மதிப்புரையாளர் – ந.முத்துமணி

    நூலாசிரியர் – முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவை
    வெளியீடு –  பல்லவி பதிப்பகம்
    194, கண்ணா வணிக வளாகம்,
    2-வது தளம்,
    மேட்டூர் சாலை, ஈரோடு – 638011.
    தொலைபேசி : 0424 – 2263197, 94422 51549                                                        இணையதளம்: www.pallavinetworks.in
    மின்னஞ்சல் : pavaisentamizh17@gmail.com
    பக்கம் : 112 விலை : ரூ. 75

    நூலாசிரியர் சங்க இலக்கியத்தின் பதினாறு முத்துக்களைக் கோத்து செம்மொழிச் சிந்தனைகள் என்ற மாலையைத் தந்திருக்கிறார். ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதனால் மட்டும் உலகம் பயன்பெறாது; அவர்களுடைய ஆய்வு மற்றவர்களுக்குப் போய்ச் சேர்ந்தால் தான் ஆய்வுச் சிந்தனையானது பரவும் என்னும் நோக்கத்தால் தனது பதினாறு ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்துள்ளார்.

    சங்க இலக்கியங்கள் தமிழர் வாழ்வின் உன்னதத்தை உலகிற்கு உணர்த்துவன. ஓரினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகம், பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல், வாழ்க்கைநெறி ஆகிய ஒவ்வொன்றிலும் சிறந்து விளங்கியமைக்குச் சான்றாகத் திகழ்வன. இத்தகைய சிறப்பைச் சங்க இலக்கியங்கள் பெறுவதற்குக் காரணம் சங்கப் புலவர்களின் புலமையாகும். இவர்கள் புலமையால் மட்டும் சிறப்புப் பெற்றவர்கள் இல்லை, மிகச் சிறந்த மனித நேயத்தைத் தம் உயிர் மூச்சாகக் கொண்டு விளங்கியவர்கள் என்பதை ஆசிரியரின் சங்கப் புலவர்களின் மனித நேயம் என்ற முதல் கட்டுரை விளக்குகிறது.

    ஆநிரை மேய்க்கும் தன் தந்தையின் பசு ஒன்று பயிரை மேய்ந்ததால், அவரின் கண்ணைப் பிடுங்கித் தண்டனை கொடுத்த கோசரை, அன்னிமிஞிலி என்ற பெண் உணவு உண்ணாமல், தலையை வாரி முடியாமல், தூய உடை உடுத்தாமல் வஞ்சினம் கூறி அரசரை அழித்து வெற்றி பெறுகிறாள். பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்பதையும், பெண்கள் தம் உரிமைக்காக வெகுண்டெழுவார்கள் என்பதையும், சங்க மகளிரின் தன்னுரிமைக் குரல்கள் என்ற கட்டுரை விளக்குகிறது.

    தந்தையைக் கூற்றுக்கு உரிமையில்லா மாந்தர்களில் ஒருவராகத் தொல்காப்பியம் சுட்டுகிறது. எனினும் தந்தை என்னும் சொல்லாட்சி தலைவன், தலைவி, தோழி, செவிலி ஆகியோரின் கூற்றுக்களில் (அறுபது இடங்களில்) இடம் பெற்றுள்ளன. தன் மகள் சூடிக் கொள்வதற்காகப் பூத்தொடுத்துக் கொடுத்த தந்தை, தன் மகளைப் பெண் கேட்டுவந்தவன் மன்னனாக இருந்த போதும் நலம் குன்றியிருப்பதால் அவனுக்கு கொடுக்க மறுக்கும் தந்தை என தந்தை மகள் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்தமையை, ஒரு கட்டுரை விளக்குகின்றது. செவிலியே தலைவியிடம் மிகவும் அன்பு கொண்டவள் என்ற நிலையை மறுபரிசீலனை செய்வதாக தந்தை மகள் மீது கொண்ட அன்பின் நிலையை நூலாசிரியர் சங்ககாலக் குடும்ப அமைப்பில் தந்தை – மகள் உறவுநிலை என்ற கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

    தொல்காப்பியம் சுட்டாத வீடுபேறு என்னும் கோட்பாடு சுவர்க்கம் என்றும், புத்தேள் நாடு என்றும் சங்க இலக்கியத்தில் தோற்றம் பெற்றுள்ளமை புத்தேள் நாடு என்ற கட்டுரையில் விளக்கப்பெற்றுள்ளது. வடவரால் தமிழகத்தில் புகுத்தப்பட்ட இக்கொள்கை தமிழக அரசர்கள், மக்கள் ஆகியோரிடம் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியமை, பக்தி இயக்கம் காலத்தில் இது சமய நெறியாகக் கைக்கொள்ளப் பெற்றமை போன்றவை விரிவாக எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.

    தமிழகத்தை ஆண்ட மன்னர்களுள் பாண்டியர்களும், சோழர்களும் தங்கள் வாழ்நாளைப் போர்களத்திலேயே செலவழிக்க, சேர மன்னர்கள் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், ஆட்டனத்தி ஆகியோர் கலைகளில் சிறந்து கலைஞர்களாக விளங்கியதை சேர மன்னர்களின் பொதுவியல் கூத்து என்ற கட்டுரை விளக்குகிறது.

    சங்க அகப்பாடல்களில் காணப்படும் அரிய கூற்றான சேட்படை என்பது, தலைவியை அடைவது எளிது என்று நினைத்து வந்த தலைவனது நினைவை அஃது அத்துணை எளிதன்று என்று தோன்றும்படித் தோழி கூறுவது ஆகும். இது பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை. சங்க இலக்கியத்தில் நற்றிணை, ஐங்குறுநூறு, அகநானூறு ஆகிய நூல்கள் தவிர பிற நூல்களில் இடம் பெறவில்லை என்பதைச் சேட்படை கட்டுரை பதிவு செய்துள்ளது. தொல்காப்பியத்தையும், சங்க இலக்கியத்தையும் நன்கு உள்வாங்கியவர்கள் மட்டுமே இது போன்ற அரிய செய்திகளை வெளிப்படுத்த முடியும். இதனை இந்நூலாசிரியர் செய்துள்ளார்.

    பொதுவாக உயிரைவிட மானம் பெரியது என்பதற்கு உதாரணமாக ஒருமயிர் உதிர்ந்து போனாலும் உயிரை விடும் உயிரினம் கவரிமான் என்று  கூறுவார்கள். இதனை ஆசிரியர் கவரி என்பது மானா? என்னும் கட்டுரையில் கவரி என்பது இமயமலையில் பனிசூழ்ந்த இடங்களில் வாழும் ஒரு விலங்கு, இது மானின் ஒரு வகை அல்ல. குளிர் பகுதியில் வாழும் அவ்விலங்கு மயிர் நீப்பின் உயிர் வாழ இயலாது என்பது கருதியே திருவள்ளுவர் இவ்வாறு கூறுகிறார் என்று சான்றுடன் விளக்கியுள்ளார். இது தமிழக வரலாற்றிலேயே ஓர் அதிர்ச்சியான செய்தியாகும். ஏனென்றால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளாக கவரி என்பதை மான் என்று கருதி வந்த, வருகின்ற தமிழ்ச் சமூகத்தில் அது மானல்ல என்பதைக் கண்டறிந்து சான்றுகளுடன் நிறுவியுள்ளமை ஆய்வாளரின் ஆராய்ச்சித் திறமைக்குத் தக்க சான்றாகும்.

    செம்மொழிச் சிந்தனைகள் என்னும் இந்நூல் சங்க இலக்கியத்தில் உள்ள அரிய தகவல்கள் பலவற்றை வெளிப்படுத்தியுள்ளது. இந்நூல் போன்ற படைப்புகள் இன்னும் வெளிவர வேண்டும். இந்நூலின் சிறப்புக்கருதி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு  இந்நூல் பாடநூலாக வைத்துள்ளது சுட்டுதற்குரியது.       

    *****

    மதிப்புரையாளர் – முனைவா்பட்ட ஆய்வாளர்
    தமிழ்ப்பண்பாட்டு மையம்
    அழகப்பா பல்கலைக்கழகம்
    காரைக்குடி-3
    கைபேசி – 9843022495

     

    Share