சேக்கிழார் பா நயம் – 10
=======================
திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி
———————————————————-
வேளாண்தொழிலில் நெற்பயிரோடு வாழை , கரும்பு ஆகியவை நன்செய் நிலப்பயிர்கள் ஆகும். விளைந்த கரும்புகள் கமுக மரங்களுக்கு இணையாக விளங்கின என்று முன்னரே கண்டோம். அந்தக் கரும்புகளை வெட்டி, ஆலைகளில் இட்டுப் பிழிந்து, மிகப் பெரிய அண்டாக்களில் ஊற்றிக் காய்ச்சுவார்கள். அவ்வாறு காய்ச்சும்போது எழும் கரும்புகை வானில் எங்கும் பரவும். அந்தப் புகையில் கரும்பின் இனிய மணம் கமழும்.
அந்நாட்டில் பெண்கள் நன்றாகக் குளித்து உடலையும் உள்ளத்தையும் தூய்மை செய்துகொண்டு, தம் இல்லத்தின் மேல்மாடங்களில் நிற்பர். அப்போது மணம் மிக்க அகில், சாம்பிராணிப் புகையை உருவாக்கித் தம் கூந்தலில் அவற்றின் புகையை வாங்கி உலர்த்துவர். அப்புகையும் வானில் எழுந்து பரவும். அதிலும் அகிலின் நறுமணம் கமழும். அவர்தம் கூந்தலில் புதுமலர்ச் சரங்களைச் சூடிக் கொள்வர். அப்பூக்களின் நறுமணமும் வானெங்கும் பரவும்.
ஊரிலுள்ள அந்தணர்கள் தம் இல்லங்களில் சிறுசிறு வேள்விக் குண்டங்களை அமைத்து அன்றாடம் தீவேள்வி புரிவர். ஆனால் ஊரின் நன்மை கருதி, மிகப்பெரிய யாகங்களையம் செய்வர். அவற்றுக்காக ஊரின் புறத்திலே வெட்ட வெளிக் களங்களில் , பெரிய யாக குண்டங்களை அமைப்பர். அவற்றின் நடுவே யூபம் எனப்படும் பெரிய தூண்களை நடுவர். அவற்றை நம் பழந்தமிழ் இலக்கியமான புறநானூறு,
‘’நற் பனுவல் நால் வேதத்து
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்கப், பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,
யூபம் நட்ட வியன்களம் பலகொல்?’’
என்று பாடுகிறது. அந்த யூபத்தூண்களில் இடப்பெறும் தசைகளைத் தின்பதற்காகப் பருந்துகள் வானில் வட்டமிட்டுப் பறக்கும் . இதனைப் புறநானூறு,
‘’பருதி உருவின் பல்படைப் புரிசை
எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம் ‘’
என்று பாடுகிறது. இவ்வாறு அமைக்கப்பெறும் வேள்விச்சாலைக் களங்கள் பெரிய சுவர்களுடன் கட்டப்பெறும். அந்த வேல்விச் சாலைகளிலிருந்து மேலே கிளம்பும் பெரும் புகை வானில் பரவும். அந்தப் புகையிலும் ஆவுதி மணம் கமழும். இதனை வில்லிபாரதம்,
‘’அரசினை அவிய அரசினை அருளும் அரிபுருடோத்தமன் அமர்வு
நிரைநிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு
கரை புரை வேள்வி புகைகமழ் ‘’
என்று பாடும். இந்த வேள்விச் சாலையை சேக்கிழார் ‘’ பெரும் பெயர்ச் சாலை ‘’ என்று பாடுவார்.
‘’பெரும் பெயர் – மகா வாக்கியம். ஆகு பெயராய் ஈசுவரனை யுணர்த்திற்று. “தத்துவமசி” முதலிய மகா வாக்கியங்களாலே பேசப் பெறுபவன். “பெரும் பெயர்க் கடவுளிற் கண்டு” என்ற சிவஞான போதச் சிறப்புப்பாயிரமும் “பெரும் பெயர் முருக” என்ற திருமுருகாற்றுப்படையும் முதலியனவும் காண்க. பெரும் பெயர்ச்சாலை – ஊருக்கு வெளியிலே யூபத்தம்பங்கள் நாட்டி இறைவனை முன்னிட்டுச் செய்யப்பெறும் பொது வேள்விச் சாலைகள்’’. என்பார் சம்பந்த சரணாலயர்.
“மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும்,
விண்ணிற் புயல் காட்டும் வீழிம் மிழலையே.”
என்பது தேவாரம்.
இவற்றைத் தவிர வானில் இயல்பாகச் சூழும் கருமேகங்களும் விளங்கும். இவ்வகையில் திருவாரூர் வானில் நால்வகைப் புகைகளும், நால்வகை நறுமணங்களுடன் விளங்கும். இவை யனைத்தும் வானில் மருவிக் கலந்து எந்த நறுமணம் எங்கிருந்து வருவது? என்ற குழப்பத்தை விளைவிக்கும்.
இதனைச் சாறு மணக்கும் குன்றத்தூர்த் தலைவராகிய சேக்கிழார் பாடுவதை இங்கே காண்போம்.
‘’கரும்படு களமர் ஆலைக் கமழ்நறும் புகையோ, மாதர்
சுரும்பெழ அகிலால் இட்ட தூபமோ, யூப வேள்விப்
பெரும்பெயர்ச் சாலை தோறும் பிறங்கிய புகையோ வானின்
வருங்கரு முகிலோ சூழ்வ மாடமும் காவும் எங்கும் ‘’
என்பது அவரருளிய பாடல்!
இப்பாடலில் நால்வகைப்பட்ட புகைகள் நெடுநிலை மாடங்களையும், சோலைகளையும் சூழ்கின்றனவாம். இவற்றுள் கரும்பைக் காய்ச்சும் ஆலைப்புகை நாட்டின் விளைச்சல் வளத்தையும், அதன் வழியே பொருளாதார மேம்பாட்டையும் காட்டுகிறது. அடுத்து பெண்கள் நெடுநிலை மாடத்தில் நின்று கூந்தலில் நறுமணப் புகை இடுவது, அந்நாட்டின் இல்லற இன்பநிலையைக் காட்டுகிறது.அடுத்து பொதுவேள்விச் சாலைகளில் அவி சொரிந்து நடத்தும் வேள்வி , வீடுபேற்றைக் குறித்த வழிபாட்டு நெறியைக் காட்டுகிறது. மேலும் வானில் சூழ்ந்து நிற்கும் இயல்பான மேகங்கள், நாட்டு மக்களின் அறஞ்சார்ந்த வாழ்க்கையைக் காட்டுகின்றன. இதனைக் கம்பர் ,
‘’பொற்பின் நின்றன பொலிவு பொய் இலா
நிற்பின் நின்றன நீதி மாதரார்
அற்பின் நின்றன அறங்கள் அன்னவர்
கற்பின் நின்றன கால மாரியே’’
என்று அறத்தின் சிறப்பைக் கருமேகத்தின் வழியே காட்டுகிறார்.
‘’சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோக்கும் ஈண்டு .’’
என்றும்,
‘’தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்’’
.
என்றும் ,
நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு.’’
என்றும் திருக்குறள் பாடுகிறது.அறம்,பொருள் இன்பம், வீடு ஆகிய நால்வகைப் பால்களையும் காட்டும் பாடல் இது. இந்தச் சிந்தனைகள் அனைத்தையும் ஒருங்கே எண்ணிச் சேக்கிழார் பாடும் பாடலின் நுட்பம் வியந்து போற்றுதற்கு உரியது.
=============================================