நூல்மதிப்புரை – செம்மொழிச் சிந்தனைகள்
-மதிப்புரையாளர் – ந.முத்துமணி
நூலாசிரியர் – முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவை
வெளியீடு – பல்லவி பதிப்பகம்
194, கண்ணா வணிக வளாகம்,
2-வது தளம்,
மேட்டூர் சாலை, ஈரோடு – 638011.
தொலைபேசி : 0424 – 2263197, 94422 51549 இணையதளம்: www.pallavinetworks.in
மின்னஞ்சல் : pavaisentamizh17@gmail.com
பக்கம் : 112 விலை : ரூ. 75
நூலாசிரியர் சங்க இலக்கியத்தின் பதினாறு முத்துக்களைக் கோத்து செம்மொழிச் சிந்தனைகள் என்ற மாலையைத் தந்திருக்கிறார். ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதனால் மட்டும் உலகம் பயன்பெறாது; அவர்களுடைய ஆய்வு மற்றவர்களுக்குப் போய்ச் சேர்ந்தால் தான் ஆய்வுச் சிந்தனையானது பரவும் என்னும் நோக்கத்தால் தனது பதினாறு ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்துள்ளார்.
சங்க இலக்கியங்கள் தமிழர் வாழ்வின் உன்னதத்தை உலகிற்கு உணர்த்துவன. ஓரினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகம், பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல், வாழ்க்கைநெறி ஆகிய ஒவ்வொன்றிலும் சிறந்து விளங்கியமைக்குச் சான்றாகத் திகழ்வன. இத்தகைய சிறப்பைச் சங்க இலக்கியங்கள் பெறுவதற்குக் காரணம் சங்கப் புலவர்களின் புலமையாகும். இவர்கள் புலமையால் மட்டும் சிறப்புப் பெற்றவர்கள் இல்லை, மிகச் சிறந்த மனித நேயத்தைத் தம் உயிர் மூச்சாகக் கொண்டு விளங்கியவர்கள் என்பதை ஆசிரியரின் சங்கப் புலவர்களின் மனித நேயம் என்ற முதல் கட்டுரை விளக்குகிறது.
ஆநிரை மேய்க்கும் தன் தந்தையின் பசு ஒன்று பயிரை மேய்ந்ததால், அவரின் கண்ணைப் பிடுங்கித் தண்டனை கொடுத்த கோசரை, அன்னிமிஞிலி என்ற பெண் உணவு உண்ணாமல், தலையை வாரி முடியாமல், தூய உடை உடுத்தாமல் வஞ்சினம் கூறி அரசரை அழித்து வெற்றி பெறுகிறாள். பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்பதையும், பெண்கள் தம் உரிமைக்காக வெகுண்டெழுவார்கள் என்பதையும், சங்க மகளிரின் தன்னுரிமைக் குரல்கள் என்ற கட்டுரை விளக்குகிறது.
தந்தையைக் கூற்றுக்கு உரிமையில்லா மாந்தர்களில் ஒருவராகத் தொல்காப்பியம் சுட்டுகிறது. எனினும் தந்தை என்னும் சொல்லாட்சி தலைவன், தலைவி, தோழி, செவிலி ஆகியோரின் கூற்றுக்களில் (அறுபது இடங்களில்) இடம் பெற்றுள்ளன. தன் மகள் சூடிக் கொள்வதற்காகப் பூத்தொடுத்துக் கொடுத்த தந்தை, தன் மகளைப் பெண் கேட்டுவந்தவன் மன்னனாக இருந்த போதும் நலம் குன்றியிருப்பதால் அவனுக்கு கொடுக்க மறுக்கும் தந்தை என தந்தை மகள் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருந்தமையை, ஒரு கட்டுரை விளக்குகின்றது. செவிலியே தலைவியிடம் மிகவும் அன்பு கொண்டவள் என்ற நிலையை மறுபரிசீலனை செய்வதாக தந்தை மகள் மீது கொண்ட அன்பின் நிலையை நூலாசிரியர் சங்ககாலக் குடும்ப அமைப்பில் தந்தை – மகள் உறவுநிலை என்ற கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.
தொல்காப்பியம் சுட்டாத வீடுபேறு என்னும் கோட்பாடு சுவர்க்கம் என்றும், புத்தேள் நாடு என்றும் சங்க இலக்கியத்தில் தோற்றம் பெற்றுள்ளமை புத்தேள் நாடு என்ற கட்டுரையில் விளக்கப்பெற்றுள்ளது. வடவரால் தமிழகத்தில் புகுத்தப்பட்ட இக்கொள்கை தமிழக அரசர்கள், மக்கள் ஆகியோரிடம் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியமை, பக்தி இயக்கம் காலத்தில் இது சமய நெறியாகக் கைக்கொள்ளப் பெற்றமை போன்றவை விரிவாக எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.
தமிழகத்தை ஆண்ட மன்னர்களுள் பாண்டியர்களும், சோழர்களும் தங்கள் வாழ்நாளைப் போர்களத்திலேயே செலவழிக்க, சேர மன்னர்கள் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், ஆட்டனத்தி ஆகியோர் கலைகளில் சிறந்து கலைஞர்களாக விளங்கியதை சேர மன்னர்களின் பொதுவியல் கூத்து என்ற கட்டுரை விளக்குகிறது.
சங்க அகப்பாடல்களில் காணப்படும் அரிய கூற்றான சேட்படை என்பது, தலைவியை அடைவது எளிது என்று நினைத்து வந்த தலைவனது நினைவை அஃது அத்துணை எளிதன்று என்று தோன்றும்படித் தோழி கூறுவது ஆகும். இது பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை. சங்க இலக்கியத்தில் நற்றிணை, ஐங்குறுநூறு, அகநானூறு ஆகிய நூல்கள் தவிர பிற நூல்களில் இடம் பெறவில்லை என்பதைச் சேட்படை கட்டுரை பதிவு செய்துள்ளது. தொல்காப்பியத்தையும், சங்க இலக்கியத்தையும் நன்கு உள்வாங்கியவர்கள் மட்டுமே இது போன்ற அரிய செய்திகளை வெளிப்படுத்த முடியும். இதனை இந்நூலாசிரியர் செய்துள்ளார்.
பொதுவாக உயிரைவிட மானம் பெரியது என்பதற்கு உதாரணமாக ஒருமயிர் உதிர்ந்து போனாலும் உயிரை விடும் உயிரினம் கவரிமான் என்று கூறுவார்கள். இதனை ஆசிரியர் கவரி என்பது மானா? என்னும் கட்டுரையில் கவரி என்பது இமயமலையில் பனிசூழ்ந்த இடங்களில் வாழும் ஒரு விலங்கு, இது மானின் ஒரு வகை அல்ல. குளிர் பகுதியில் வாழும் அவ்விலங்கு மயிர் நீப்பின் உயிர் வாழ இயலாது என்பது கருதியே திருவள்ளுவர் இவ்வாறு கூறுகிறார் என்று சான்றுடன் விளக்கியுள்ளார். இது தமிழக வரலாற்றிலேயே ஓர் அதிர்ச்சியான செய்தியாகும். ஏனென்றால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளாக கவரி என்பதை மான் என்று கருதி வந்த, வருகின்ற தமிழ்ச் சமூகத்தில் அது மானல்ல என்பதைக் கண்டறிந்து சான்றுகளுடன் நிறுவியுள்ளமை ஆய்வாளரின் ஆராய்ச்சித் திறமைக்குத் தக்க சான்றாகும்.
செம்மொழிச் சிந்தனைகள் என்னும் இந்நூல் சங்க இலக்கியத்தில் உள்ள அரிய தகவல்கள் பலவற்றை வெளிப்படுத்தியுள்ளது. இந்நூல் போன்ற படைப்புகள் இன்னும் வெளிவர வேண்டும். இந்நூலின் சிறப்புக்கருதி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்நூல் பாடநூலாக வைத்துள்ளது சுட்டுதற்குரியது.
*****
மதிப்புரையாளர் – முனைவா்பட்ட ஆய்வாளர்
தமிழ்ப்பண்பாட்டு மையம்
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி-3
கைபேசி – 9843022495