நிர்மலா ராகவன்

வெற்றிப் படிகளில் ஏற

`நான் ஏன்தான் இப்படி எளிதாக மனம் தளர்ந்துவிடுகிறோனோ!’ என்று அலுத்துக்கொள்கிறவரா நீங்கள்? அப்படியானால் நீங்கள் தனியாக இல்லை. உங்களுடன் 95% பேர் இருக்கிறார்கள்.

நூற்றில் மூன்று பேர்தான் வெற்றிப்பாதையில் நடக்கிறார்களாம். அவர்களுக்கு மட்டும்தான் திறமை, அதிர்ஷ்டம் எல்லாம் வாய்த்திருக்கிறதோ? இல்லை. அவர்களுக்கும் குறைகள் இல்லாமலில்லை. ஆனால், வாழ்வை எப்படி எதிர்கொள்வது என்பது புரிந்தவர்கள் அவர்கள்.

தம்மையுமறியாது மற்றொருவர் விரிக்கும் வலையில் விழுந்துவிடுகிறார்கள் பிறர்.

யாரை எளிதாக வீழ்த்த முடியும்?

1 `என்னால் என்னவெல்லாம் முடியாது?’ என்ற வீண்யோசனைக்குத் தம்மை உட்படுத்திக்கொள்பவர்களை.

“சந்திரனைப் பிடிக்கவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டால், நட்சத்திரமாவது கிடைக்கும்”. (திரு.அனுபவசாலி)

அதாவது, `கணக்குப்பரீட்சையில் நூற்றுக்கு நூறு வாங்குவேன்!’ என்று முனைந்தால், அறுபது மதிப்பெண்களாவது கிடைக்கும். `எப்படியோ தேர்ச்சி பெற்றால் போதும்!’ என்றால்…?

2 `இப்போது எந்தவிதப் பிரச்னையும் கிடையாது. புதிதாக ஒன்றை ஆரம்பித்து மாட்டிக்கொள்வானேன்!’ என்று ஏற்கெனவே குழம்பி, தாம் வகுத்த பாதையில் மாற்றமின்றி, ஆனால் சலிப்புடன், நடப்பவர்களை.

3 `எளிதானது, எல்லாரும் செய்கிறார்களே!’ என்று கூடாத காரியத்தைத் துணிந்து செய்பவர். (`தலைமை அதிகாரிகளே லஞ்சம் வாங்கும்போது, நாம் வாங்கினால் என்ன தப்பு?’)

4 ஒரு காரியத்தை ஆரம்பித்துவிட்டு, அது எதிர்பார்த்தவகையில் நடக்காவிட்டால் மனம் தளர்ந்துவிடுபவர்கள். அதன்பின், `நான் முட்டாள், அதிர்ஷ்டம் இல்லாதவன்,’ என்று தம்மைத்தாமே குறை கூறிக்கொண்டிருப்பார்கள். இது அடக்கமா?

`உனக்குத்தான் அதிர்ஷ்டமே கிடையாதே!’ என்று கூறியே இப்படிப்பட்டவர்களை வீழ்த்துவது எளிது. அவர்களும் தாம் நினைத்தது சரிதான் என்று நம்பிவிடுவார்கள்.

5 மனோதிடமின்றி, எதையும் ஒத்திப்போடுபவர்கள் — `சரியான தருணத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்!’ என்ற சாக்குடன்.

என்னுடன் வேலைபார்த்த ஓர் ஆங்கில ஆசிரியை, “நான் ஐம்பது வயதுக்குப்பின் தினசரிகளுக்கு எழுதப்போகிறேன்!” என்பாள்.

“அது என்ன கணக்கு?” என்று கேட்டபோது, “சரியான காரணத்தைத்தான் வைத்திருக்கிறேன்,” என்று நழுவினாள். காரசாரமாக எழுதினால். நிறைய அல்லல்களைச் சந்திக்க நேரிடும் என்று என்னைப் பார்த்துப் பயந்துபோயிருப்பாள்.

இது நடந்து இருபது ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. அவள் எதையும் எழுதியதாகத் தெரியவில்லை.

செய்ய வேண்டியதை இன்றே ஆரம்பிக்கலாமே! விளைவுகளுக்குப் பயந்துகொண்டே இருந்தால், எதையும் சாதிக்க முடியாது.

கனவிலேயே சுகம்

கனவிலேயே சுகம் காண்பவர்கள் அதை நனவில் செயலாற்ற முனைவதில்லை.

`நான் வெளிநாட்டில் வேலை பார்த்து, ஐந்தே வருடங்களில் லட்சாதிபதி ஆகப்போகிறேன்!’ என்றவர்களைப் பார்த்திருக்கிறேன். கனவு மட்டும் போதுமா? செயலில் காட்டி, கண்ட கனவை நனவாக்கும் துணிவும் வேண்டுமே!

காலையில் ஆறு மணிக்கு சாப்பாட்டுக்கடை ஒன்றில் வேலைபார்க்க வெளிநாட்டிலிருந்து வரும் ஒருவர் இரவு ஒன்பது மணிக்குத்தான் தன் அறைக்குத் திரும்புவார். (மிகவும் களைப்பாகத் தென்பட்ட ஒரு பரிசாரகரை நான் விசாரித்துத் தெரிந்துகொண்ட செய்தி இது).

சம்பளம் தாய்நாட்டில் கிடைப்பதைவிடப் பன்மடங்கு அதிகம் என்றாலும், அயல்நாட்டில் அத்தியாவசியமான எல்லா பொருட்களுக்கும் விலையும் கூடுதல்தானே?

கனவு கனவாகவே போய்விடும் என்று புரியும்போது வாழ்க்கையில் சலிப்புதான் ஏற்படுகிறது. குறுகிய காலத்தில் வெற்றி காண நினைப்பது அசட்டுத்தனம். அதற்கு குறுக்கு வழியில் போனால்தான் உண்டு.

உழைப்பு மட்டும் போதுமா? நம்பிக்கை, துணிச்சல், பொறுமை ஆகியவைகளும் வெற்றிகாண அவசியமான தன்மைகள்.

தன்முனைப்பு

நாம் ஒரு காரியத்தைத் துவங்குமுன், `உன்னால் முடியும்,’ என்று ஊக்குவிப்பவர்கள் அரிது. `நான் செய்து காட்டுகிறேன்!’ என்று மனதுக்குள்ளேயே சவால் விட்டு, துணிந்து நமக்குப் பிடித்த ஒரு காரியத்தில் ஈடுபட்டால் சிறிதளவாவது வெற்றி கிட்டும். அப்போது, நம் நம்பிக்கையைக் குலைக்கப்பார்த்தவர்கள், `எனக்கு முதலிலேயே தெரியும், நீ வெற்றி பெறுவாய் என்று!’ என்பதுபோல் மாறுவார்கள்! உலகின் நோக்கைப் புரிந்துகொண்டால், எளிதில் மனம் தளரமாட்டோம்.

சிறு வெற்றி, பெரு மகிழ்ச்சி

சிறு, சிறு வெற்றிகள் வரும்போது அவைகளுக்காக மகிழக் கற்கவேண்டும்.

எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு உடையவர் எடுத்த எடுப்பிலேயே புதினம் எழுத முயற்சிக்கலாமா? அவர் பெயரில் ஒரு துணுக்கு வெளியானாலும் மகிழ்வதே முதல் படி. அப்போது எழும் மகிழ்வில், உற்சாகத்தில், இன்னும் முயற்சிகள் எடுக்க முனைவார்.

ஆனால், ஒரு சிறு வெற்றி கிடைத்தவுடன், `நான் சாதித்துவிட்டேன்!’ என்ற பூரிப்புடன் ஒரே நிலையில் இருந்தால் தோல்விதான் எழும்.

தோல்வியிலிருந்து கற்க

`ஏதாவது செய்யலாமா?’ என்று ஓய்ந்த நேரத்தில் குருட்டு யோசனை செய்வது எந்த பலனையும் அளிக்காது. மாறாக, `இதுதான் செய்யப்போகிறேன்!’ என்ற முடிவெடுத்துக்கொள்வது அவசியம். நம்மையும் அறியாமல் தகுந்த வழிமுறைகள் புலப்படும்.

தவறாகிவிட்டது. அதனால் என்ன?

தடைகளும், தவறுகளும் தவிர்க்க முடியாதவை. இயன்றவரை முயற்சித்தால், தானே சரியான பாதை தெளிவாகும்.

`ஒரே முயற்சியில் நீங்கள் எதையாவது கண்டுபிடித்திருக்கிறீர்களா?’ என்று ஒரு விஞ்ஞானியைக் கேட்டபோது, `பல முறை முயன்றபின், ஒரு காரியத்தை எப்படிச் செய்யக்கூடாது என்று கற்றேன்!’ என்று பதில் வந்ததாம்.

பிரபல எழுத்தாளர்களைக் கேளுங்கள், `அடித்துத் திருத்தாமல், என்றாவது உங்கள் படைப்புகளைப் பிரசுரத்திற்கு அனுப்பி இருக்கிறீர்களா?’ என்று.

தவறுகள் புரியாமல் ஒரு காரியத்தைத் திருப்தியாகச் செய்வது என்பது இயலாத காரியம். அதனால் மனமுடைந்து போகாது, இனியும் அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வதே வெற்றிக்கு அறிகுறி.

எதிர்பார்த்த வெற்றி கிடைத்தபின்னரும், அதிலேயே தேங்கிவிடாது, இலக்கை உயர்த்திக்கொண்டே இருக்க வேண்டும்.

தன்னையே உணர்ந்துகொண்டு, விடாமுயற்சி செய்பவரை வீழ்த்துவது கடினம்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *