படக்கவிதைப் போட்டி – 186
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
ராமலஷ்மி எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (10.11.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்.
ஆத்தங்கரைச் சோறு
ஆளுக்கொரு திசையில் பொருளீட்ட
ஆழி கடந்து சென்ற பின்னும்
அலுக்கவில்லை எங்களுக்கு
ஆத்தங்கரைச் சோறு, மீண்டும் சந்தித்து
அன்றைய நாள் போல
அமர்ந்துள்ளோம் அருகருகே
அரிசிச் சோற்றை உருட்டிக் கொடுக்க
ஆச்சி இல்லாத குறை தான்
அருமை நண்பன் பேசி வரவழைப்பான்
அறுசுவை பிரியாணி
அது வரும் நேரம் வரை
அடுத்தமர்ந்த நண்பனுடன் கை
அகலக் கைபேசியில் விளையாடுகிறேன் கைப்பந்து
அரச மரத்தில் ஏறி அமர
ஆல விழுதில் ஊஞ்சலாட
ஆசைதான், செய்வோம் அதையும் இனி
ஆழ்ந்த உறக்கத்தில் வரும் கனவுகளில்.
ஆற்றம் கரையோரம்
ஆத்திமரம் நிழல் கொடுக்க
ஆழ்துயராம் எதுவென்று நாமறியோம்
சூழ் நிலைதான் பாதகமோ?
மூவராய் இருந்தாலும்
முணுமுணுப்பு ஏதுமற்று
முழுவதும் தொலைத்த சோகம்
முகமெல்லாம் பரவி நிற்க
திசைக்கொருவராய் தனித்தே சென்றார் நிஜத்தில்
யாரோ ஒருவர் குரல் கொடுக்க
நிஜம் திரும்பும் நிலைபோல
காலம் கடத்தும் காரணமோ?
வெற்றியோ தோல்வியோ
வேண்டும் விடைதனிலே
பரவி நிற்கும் சந்தேகம்
விடையறியா மானிடனே
காத்து இரு கனிந்து வரும் காலம்.
அவசர உலகில்
நடப்பதற்கு பயிற்சி
இருப்பதற்கு முயற்சி
தேடி அலைந்து கண்ட
மகிழ்ச்சியில் நானும் இல்லை
நாதியும் இல்லை
எல்லாவற்றுடனும் நான்
அந்நியத்துடன்
வெறுமையின் நிழல்
நீக்கமற திசைகள்
எல்லாம் தப்பிக்க வழியில்லை
அா்த்தமற்ற கண்களொடு அவர்கள்.
கடிவாளமாய்…
நண்பர் நால்வர் சேர்ந்தாலே
நன்றாய்ப் பேசி ஒன்றாகப்
பண்புடன் நடந்த செயலெல்லாம்
பழங்கதை யாகிப் போனதுவே,
அண்மையில் வந்தே அமர்ந்தாலும்
அடுத்த வீட்டுக் காரரையும்
கண்ணில் படாமல் வைத்திருந்தே
கட்டிப் போட்டிடும் கைபேசியே…!
செண்பக ஜெகதீசன்…
அருகில் இருந்தாலும் … தொலைவே
அந்த நாள் ஞாபகங்களை
அண்டையில் அல்ல
அலைகளில் அனுப்பி விட்டு
உணர்வால் உறவால் அல்ல
தண்ணீர்க்குழாயில் தஞ்சமடைந்து
இணைந்துள்ளனர்!
இப்போது உறவுகள் எல்லாம்
உல்லாசமாக வாழ்வதற்கே தவிர
உணர்வு பரிமாற்றத்திற்கு அல்ல.
ஊடக அலை மறுத்து
உணர்வலைக்கு இடம் கொடுப்போம்!
உண்மைக்கு வழிவிடுவோம்
உயிருள்ளவர்களாக வாழ்வோம்…
தொல்லை பேசி
ஒருவரையொருவர் பார்த்திடாத
ஒன்பது கிரகச் சிலைகளைப் போல
உறவு, நட்பு, பரிச்சயத்திற்கென
உயர்ந்த மதிப்பெதும் அழித்திடாது
உற்றுப் பார்க்கத் தம்மை மட்டும்
உலகமெங்கும் தொல்லை பேசிகள்
மாந்தர் கைகளில் வலம்வரும் பாங்கு
எங்கு போய் முடியும்? என்னதான் நடக்கும்?
தெருத்தெருவாய் செல்பேசி தன்னைக் காதில்
செருகியவா றுலகத்து மாந்தரெல்லாம்
சிரித்திடவும் விரும்பாது பிறரைப் பார்த்து
திரிகின்றார் தெரியாத தெருவைக் கேட்க
ஒருத்தரைத்தான் தேடிடினும் கிடைப்பதில்லை
ஒவ்வொருவர் காதிலுமோர் தொல்லைபேசி
வருத்தமிந்தத் துயர நிலை வழிகாணாது
வருவோர்கள் புதிதாயோர் ஊரில் நிற்பார்.
காதில்லைத் தீயவற்றையுற்றுக் கேட்கக்
கண்ணில்லைக் கொடுமைகளைய வதானிக்க
கையில்லைத் தீச்செயல்கள் செய்ய யாவும்
கைத்தொலை்லை பேசிகள்மேல் கவனம் வைக்கும்
தீதில்லையதனாலே உலகிற் கிந்த
ரெலிபோன்கள் அமைதிக்கும் வழிவகுக்கும்
ஆதலினால் தொழில் நுட்பம் எமக்கு ஈந்த
அரியதொரு பரிசன்றோ தொல்லை பேசி.