இந்த வார வல்லமையாளர் விருது!

இந்த வார வல்லமையாளராக இன்றைய இந்தியாவின் சிற்பி, ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலையை உலகத்தரத்தில் வடித்த  ராம் சுதார் என்னும் சிற்பியை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.  பாரதத்தை வடிவமைத்தவர்களில் தலைவர் சர்தார் வல்லபபாய் பட்டேல் முக்கியமானவர். பாரதி, தாகூர், கலாயோகி ஆனந்த குமாரசாமி போன்றோர் கண்ட கனவு சிதறுண்டு போகாமல் பல தனி அரசர்களை ஒருங்கிணைத்தவர். கடைசியாக, ஐதராபாத் (இன்றைய தெலுங்கானம்) இந்திய ஒன்றியத்தில் தனி மாகாணம் ஆகியுள்ளது. அவை போன்றவை தனிநாடு ஆகாமல் இருப்பதன் காரணவர் ‘இந்தியாவின் பிஸ்மார்க்’ பட்டேல் தான்.

ஒற்றுமைக்கு இந்தியாவில் பெரிய சிலை அமைந்துவிட்டது. மும்பையில் இதைவிடப் பெரிதாய் சத்ரபதி சிவாஜி மகாராஜாவுக்குச் சிலை அமைய உள்ளதாம். இன்று ஆங்கிலக் கல்வி இந்தியாவில் பெருகிவருகிறது. கபிலபரணர் வந்தனர் என்றால் கபிலரும் பரணரும் வந்தனர் என்னும் உம்மைத்தொகை என்று இலக்கணம் கூறுவர். அதுபோல் ஸ்மார்ட்போனைத் தமிழில் “வலைபேசி” எனலாம். அதாவது, “வலையும் ஃபோனும்” ஒன்றாய் அமைந்த கருவி. 700 மில்லியன் வலைபேசிகளால் இந்தியாவில் இணைய அணுக்கம், ஒளிப்படமி (காமிரா), முகநூல், வாட்ஸப் அழைப்புகள், … எனப் பெருகிவரும் மிகப் பெரிய தகவல் யுகப்புரட்சிக் காலம் இது. எல்லா இந்திய மொழிகளையும் ரோமானிய எழுத்திலும் எழுதும் வழக்கம் மிகவேண்டும். இந்திய மொழிகளுக்கு இடையே பல அடிப்படை ஒற்றுமைகள் உள்ளன. அப்பிணைப்பு உணரவைக்க ரோமன் லிபி ஒற்றுமைக்கு எழுத்து எனலாம். ஒவ்வொரு மாநில எழுத்தும் அவ்வப் பிராந்திய அளவில் இயங்குகின்றன. ஆனால், ஒற்றுமைக்கான ஓரெழுத்து வடிவமாக ஆங்கில எழுத்தும் கூடவே இருப்பது எதிர்காலத்தில் பாரத மக்களிடையே ஒற்றுமை வளர நல்ல வழி அளிக்கும். India as a linguistic area (M. B. Emeneau’s theory).
“முப்பது கோடி முகமுடையாள், உயிர்
மொய்ம்புற ஒன்று உடையாள்
செப்பு மொழி பதினெட்டு உடையாள், எனில்
சிந்தனை ஒன்றுடையாள்” என்றார் சுப்பிரமணிய பாரதியார்.

சர்தார் வல்லபாய் பட்டேலின் நாட்டின் ஒற்றுமை பற்றிய சொற்பொழிவு. மொழிபெயர்க்கத் தக்கது. படித்தருளுக:
 

சர்தார் படேல் வாழ்க!
====================
திருச்சி புலவர் இராமமூர்த்தி 
============================
 

ஒற்றுமை ஓங்கிடவே- தம்
உழைப்பினை ஈந்திட்ட உயர்மனிதர்!
கற்றவர் போற்றிடவே- இங்கு
கலைந்து பிரிந்தமா நிலங்களையே,
உற்ற வலிமையுடன் – ஓன்று
படுத்திபா ரதத்தினுக் குருக்கொடுத்தார்!
நற்றவ வல்லபபாய் – படேல்
நாட்டினைக் காத்து நலமளித்தார்!

நாடியாடு நகரினிலே – மிக
நல்லதாய் தந்தையின் மைந்தரென,
நீடிய திறமையுடன் – கல்வி
நேத்திரம் திறந்துல கினைக்கண்டார்!
வாடிய வறுமையிலே – நம்
வளமிகு பாரதம் அந்நியரின்
கோடிய கோலாட்சி – தனில்
குலைந்தால் எதிர்த்தறப் போர்புரிந்தார்!

ஒத்துழை யாமையெனும் – மிக
ஓங்கிய போர்தனில் வெற்றிகண்டார்!
புத்தொளி பர்தோலி – தனில்
போரிட்டவர்கள் ”சர்தார்” ஆனார்!
வித்தகர் அம்பேத்கார் – தமை
வெற்றிசேர் குழுவின் தலைவரென
அத்தினம் பரிந்துரைத்தே – நம
தரசிய லமைப்பினை நிருணயித்தார்!

அரசர்கள், நிலத்தலைவர் – பெரும்
அதிகாரிகளை ஒன்றிணைத்தே,
ஒருமைப் படுதேசம் – இங்
குருவாக்கிடஉள் துறை அமைச்சர்
பெரும்பணி புரிந்திட்டார் – துணைப்
பிரதமர் பதவியைப் பெற்றவராய்
இரும்பு மனிதரென – நம
திந்திய நாட்டினை ஆண்டிட்டார்!

பாரத ரத்தினமாம் – உயர்
பட்டப் பதக்கம் அவர்க்களித்தே
சீருயர்ந் தோங்கியதாம் – நம்
தேசம் வணங்கியே போற்றியதாம்!
நேருயர் வேதுமின்றி – உலகின்
நெடியதோர் சிலைதனை இன்றமைத்தே
பாரினில் அவர்புகழை – மிகப்
பட்டொளி வீசிடப் பரப்புகின்றோம்!

சர்தார் படேல் வாழ்க! – அவர்
சாதனைக் கருத்துக்கள் உயர்ந்தோங்க,
நிர்வா கத்திறமை – மிகும்
நெறியா ளர்பலர் தோன்றிடுக!
பர்தோ லித்தலைவர் – படேல்
வழியில்வே ளாண்மக்கள் வாழ்ந்திடுக!
சர்வமும் ஒற்றுமையால் – செயும்
சாத்தியம் சத்திய மாகிடுக!

தலைமைச் சிற்பி ராம் சுதார் அவர்களின் சிறந்த படைப்புகளில் சிலவற்றைக் கண்ணால் கண்டு மகிழ்வோம். சொடுக்கினால் படம் பெரிதாகும். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

 

சர்தார் மறைந்தபோது நாமக்கல் கவிஞர் சொன்ன சரமகவிகள்:

வல்லபாய் பட்டேல்

இல்லாத காந்திமகான் இருந்தாற் போல
எப்பொழுதும் காந்திவழி எடுத்துக் காட்டிக்
கொல்லாத விரதமதே குறியாய்க் கொண்டு
குற்றமற்ற சத்தியமே நெறியாய்க் கூடிக்
கல்லான மனமுடையோர் எதிர்த்த போதும்
கலங்காத் தெளிவுடைய கர்ம வீரன்
வல்லாளன் வல்லபாய் பட்டேல் மாண்ட
வருத்தமதை விரித்துரைக்க வார்த்தையுண்டோ? 1

காந்தியென்ற தவநெருப்பில் காய்ச்சிக் காய்ச்சிக்
கசடொழிய மாற்றுயர்ந்த கனக மாகும்.
சாந்தியென்ற குளிர்மதியின் தன்மை யோடும்
சத்தியத்தின் வாளேந்தும் சர்தா ராகும்
மாந்தருக்குள் தீயவரை அடக்கி யாளும்
மந்திரியின் தந்திரத்தின் மார்க்க மெல்லாம்
வாய்ந்திருந்த வல்லபாய் பட்டேல் மாண்ட
வருத்தமதைப் பொறுத்திருக்க வலிமை வேண்டும்.       2

அன்புமுறை தவறாத அமைச்ச னாகும்;
அரசுகுறையாத ஆற்ற லுள்ளோன்;
துன்பநிலை பலகோடி சூழ்ந்திட் டாலும்
துளங்காமல் துணிவுரைக்கும் துணைவனாகும்
இன்பசுகம் தனக்கெதுவும் வேண்டா னாகி
இந்தியத்தாய்த் திருப்பணிக்கே எல்லா மீந்தான்;
நம்பகத்தின் வடிவெடுத்த வல்ல பாயை
நாமிழந்த பெருந்துயரில் நாதன் காக்கும்.       3

காந்தியண்ணல் மறைந்திடித்த கலக்கம் தீர்ந்து
கண்திறந்து புண்மறையக் காணு முன்னால்
சாந்தனவன் நமக்களித்த காவ லாளன்
சர்தார்நம் வல்லபாய் பட்டேல் சாக
நேர்ந்துவிட்ட இத்துயரால் நமது நெஞ்சம்
நெக்குவிடத் தக்கதுதான் என்றிட் டாலும்
சோர்ந்துவிடக் கூடாது பட்டேல் போலச்
சுதந்தரத்தைக் காந்திவழி தொடர்ந்து காப்போம்.       4

பிறந்தவர்கள் எல்லோரும் இறந்தே போவார்
பின்னிருக்கும் தலைமுறையர் பெருமை கொள்ளும்
அறந்தெரிந்து வாழ்ந்தவரே அறிஞராவர்
அன்னவர்க்கே மக்களெல்லாம் அருமை செய்வார்
திறந்தெரிந்து காந்திமகான் ஜோதி யான
திருவிளக்கு மங்காமல் தினமுங் காத்து
மறைந்துவிட்ட வல்லபாய் நமக்குத் தந்த
மணிவிளக்கை நாம்காத்து வாழ வேண்டும்.       5

                                                                                                –  நாமக்கல் கவிஞர்

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *