இந்த வார வல்லமையாளர் (285)
இந்த வார வல்லமையாளர் விருது!
இந்த வார வல்லமையாளராக உலகின் மிக நீண்ட பாலத்தைக் கடலில் கட்டிய பொறியாளர் ’மெங் ஃபான்சாவ்’ (Meng Fanchao) என்னும் சீன சிவில் எஞ்சினீயரை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.
14,000 கோடி ரூபாய் செலவில் சீன நகரம் ஃசுலாய், மக்காவ் தீவு, ஹாங் காங்கையும் இணைக்கும் பாலம் இது. 54 கிலோமீட்டர் நீளம் கொண்டது. கடலின் மீது வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய பொறியியற் சாதனை. இதன் தலைமைப் பொறியாளர் மெங் ஃபான்சாவ் அவர்களை வாழ்த்துகிறோம். ரிச்டர் ஸ்கேலில் 8 எண்ணலகு கொண்ட மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கூடத் தாங்கும் வலிமை கொண்டது. பல நூறு மைல் வேகம் கொண்ட சூறாவளிப்புயலோ, சுனாமிப் பேரலைகளோ வந்தாலும் தாங்கும் அளவிலும், 120 ஆண்டுகள் வரை இருக்கும் வரையிலும் இந்த எஞ்சினீரிங் சாதனை உருவமைக்கப்பட்டுள்ளது.
‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’ என்றார் மகாகவி பாரதியார். ஒருநாள் ஈழத்துக்காரர்கள் ராமேசுவரத்தில் சினிமா, கலை நிகழ்ச்சிகள் பார்க்கவும், தமிழ்நாட்டில் இருந்து பேருந்துகளில், கார்களில் மக்கள் இலங்கைக்கு கடலின் மீது எழுப்பப்பட்ட பாலத்தின் வழியாகப் போய் சுற்றுலா, வணிகம் செய்யும் நாள் வரட்டும். சிங்கப்பூர், மலேசியாவுக்கு இடையில் கடல்வழியாக செல்ல வசதிகள் உள்ளதுதானே.
தமிழ்நாட்டு, இலங்கை (தமிழ், சிங்களம்) அரசியல் தலைவர்கள் முயன்றால் கடல்பாலம் வரும். தொழில்நுட்பம் இருக்கிறது, பாலம் கட்ட தமிழ்நாடு, இலங்கையில் பணமும் நிறைய உள்ளது. அரசியல் முயற்சிகளால் இது சாத்தியம் ஆகலாம். கப்பல் போக்குவரத்தும், கடற் பாலமும் ஆகி தமிழக, இலங்கை உறவுகள் அதிகமாகவேண்டும். இப்பொழுது இலங்கைத் தீவுக்கு தமிழ்நாட்டில் இருந்து பலர் சுற்றுலாச் சென்றுவருகின்றனர். அது நீர்வழி, பாலவழி, விண்வழி என்று மிகவேண்டும். இந்தியா, இலங்கை பாலத்திற்கு பூகம்பப் பிரச்சினை இருக்காது. புயல் காற்றும், ஆழிப்பேரலை என்னும் சுனாமியும் எப்போதாவது வரலாம். அதற்கான கட்டுமானப் பொறியியல் எளிது. வலிமையாக பாலம் எழுப்ப இயலும்.
”ராமேஸ்வரம் கொட்டகை தியேட்டரில் படம் பார்க்க யாழ்ப்பாணத்தில் இருந்தும் வருவார்கள்” ‘கதம்பம்’ ஆசிரியர் கே.வி.எஸ் மோகன் http://123tamizhamutham.blogspot.com/2009/12/re_7707.html
டென்மார்க்கையும் சுவீடனையும் இணைக்கும் ஒர்சன் பாலம் (Øresundsbron) http://vinaiooki.blogspot.com/2010/05/resundsbron.html
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )