படக்கவிதைப் போட்டி – 185
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (03.11.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
படக்கவிதைப்போட்டி – 185
சாதாரணனல்ல சாதனையாளன்!
முனைவர் மு.புஷ்பரெஜினா
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
தஞ்சாவூர்.
கலாமின் கனவுகளை
கலசமிட்டு கனிச்சோறு கடைந்திட,
திண்ணைப்பள்ளியும் அண்டிடா
வண்ணக் கனவுகளுடன்
எண்ணக் குவியலை
கன்னத்தில் தேக்கியபடி
மரத்தடி கொட்டகையில்
மண்டியிட்ட மாணவனே!
புகைமூட்டத்தின் நடுவே
மேகமூட்டத்தில் மிதந்து
பகைக் கூட்டம் கலைந்து
பன்மணிக்கூட்டம் பார்த்தொழுகி
போதிமர புத்தனானாயோ?
நின் அழகு முகத்தின்
சாந்தமும்
செம்பவளவாயின் புன்சிரிப்பும்
சான்று பகராதோ – நீ
சாதாரணனல்ல
சாதனையாளனென்று…!!!
தாயிக்கு உதவடா !
சி. ஜெயபாரதன்.
நேற்று முதல்
தாயிக்கு நோய் !
வாய்ச் சண்டை நடக்கும்
வாடிக்கை யாய் !
தந்தை மதுக் கடையில்,
தவம் கிடப்பார் !
கும்பி கொதிக்கிறது !
தம்பி அழுகிறான் !
பசி மிகுந்து
தரையில் புரள்கிறான் !
பள்ளிக்கு நான்
போக வேண்டும் !
தேர்வு இன்றெனக்கு !
பாடம் கணக்கு !
புரியாத மனப் பிணக்கு !
யாருமில்லை
சொல்லித் தர எனக்கு !
தாய் வயிறு
நிரம்பட்டும் இன்றாவது !
தம்பி அழுகை
நிற்கட்டும் !
பள்ளிக்குச் செல்ல
தாமத
மாகட்டும் !
++++++++++++++
நானிருக்கேன் நாட்டை ஆள
நானிருக்கேன்
நாட்டை ஆள
கவலை வேண்டாம்
காற்று புகா அறையினிலே
கண்ணுறக்கம் கொண்டெழுந்து
காரில் சென்று
கல்வி பயின்று
கையகலக் கணினியிலே
கண்டதே வாழ்க்கையென
கதை பேசி வாழ்வோருக்கு
விவசாயம் செய்து
விளைந்ததைக் கூடி உண்டு
வாழும் வாழ்வைக் காட்ட
என் வீட்டுச் சமையலறையில்
எடுப்பாக நானமர்ந்தேன்
சமையலும் செய்வேன்
சாதனையும் படைப்பேன்.
பற்பொடி தயார்
படத்தைப் பார்த்து பதைக்காதீர்
பள்ளி மாணவன் நான்
பல் மருத்துவர் நினைப்பால் தூங்காமல்
பரிதவித்த எனக்கு
பாட்டி சொன்ன யோசனை
பல்லுக்குப் பலம் கொடுக்க
பழைமைப் பற்பொடி தயாரிப்பு
பண்ணை வீட்டுத் தொழுவத்தில்
பாட்டனின் வெந்நீர் அடுப்புப்
பசுஞ் சாணத்துச் சாம்பலுடன்
பாத்திரத்திலுள்ள உப்பும் வறுத்துப்
பொடித்த உமியையும் கற்பூரப்
பொடியையும் கலந்து எனது
பற்பொடி தயார்- இதைப்
படித்தவர்கள் வரலாம் எங்கள்
பண்ணை வீட்டுக்கு
பற்பொடி இலவசம்.
-அன்புடன் நாங்குநேரி வாசஸ்ரீ
உத்தமன்…
பிள்ளையைப் பள்ளிக் கனுப்பிடவே
பெற்றோர் சென்றனர் வயல்வேலை,
பள்ளி சென்ற பிள்ளையவன்
பாடம் படித்து முடிந்ததுமே,
எள்ளிப் பிறரெலாம் நகைத்தாலும்
ஏழைப் பெற்றோர் பசியாற
சுள்ளி பொறுக்கித் தீமூட்டி
சமையல் செய்வது சிறப்பன்றோ…!
செண்பக ஜெகதீசன்…
கவிதைப்போட்டிமுடிவுகள் எப்போதுவெளியாகும்