கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் உளவியல் சிக்கல்கள்

1

 

-முனைவா் அரங்க. மணிமாறன்.

————–

மனித மனம் வினோதமானது.பல்வேறு நேரங்களில் வெவ்வேறு விதமாகச் செயல்படக்கூடியது.ஒருவன் மற்றவா் மீது அன்பு, வெறுப்பு, பொறாமை, அதீதப்பற்று ஆகியவை கொள்வதற்கு அவனது மனவியலே அடிப்படையாக அமைகிறது.

மனித மனத்தின் பரிமாணங்களை ஆராயும் உளவியல் இன்றைய ஆராய்ச்சிக் கூறுகளுள் ஒன்றாகத் திகழ்கிறது.

உளவியலாளா்கள் மனித மனம் ஒரு பனிக்குன்றுப் போன்றது.அதன் ஒரு பகுதிதான் வெளிப்படையாகத் தோன்றி  வெளிமனமாக இருக்கிறதென்றும், மற்றொரு பகுதி மறைந்து நின்று மறைமனமாக இருக்கிறதென்றும் அவா்கள் விளக்கம் கூறுகிறார்கள் என்கிறார் பெ.துாரன்.1

உளவியல் எனும் சொல் கிரேக்க மொழி சொற்களான ஸைக்கி என்ற உயிரையும் லோகஸ் எனும் அறிவியலையும் குறிக்கும் சொற்களின் கூட்டிணைவாகும்.ஆன்மா, மனம் பற்றி ஆராயும் இது நடத்தையியல்  தற்காலத்தில் வழங்கப்படுகிறது.

உளவியல் என்பதனைத் தற்காலத்தில் நடத்தை மற்றும் அனுபவத்தை அறிவியல் முறையில் ஆராயும் ஒரு பிரிவாகக் கொள்கின்றனா்.உளவியல் மனித மூளை அதன் சிந்தனை, புறநிலை ஆகியவற்றோடு தொடர்படையதாக உள்ளது.

மனிதனின் புறச்செயல்களை உற்றுநோக்கி முறையாக ஆராய்ந்து அதன்மூலம் அவை எங்ஙனம் அகத்தே நிகழும் சிந்தனை ஓட்டங்களுடன் தொடா்பு கொண்டுள்ளன என்றும் புறநிலைகளால் ஏற்படும்  நிகழ்வுகளால் எவ்வாறு பாதிப்படைகின்றன என்பதையும் விளக்குவதே உளவியலாகும் என்கிறார் கி.நாகராஜன். 2

இத்தகைய உளவியல் சார்ந்த சிக்கல்களை கு.அழகிரிசாமியின் சிறுகதைகளின் வழி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

இரவு நேரத்தின் குணம்:

மனித மனம் தனிமையில் இருளில் எந்த தீமைகளையும் செய்ய துணிகிறது. அதற்குக் காரணம் இரவு இருள் நிறைந்தது.  கொலை, கொள்ளை, களவு, விபச்சாரம் போன்ற தீமைகள் இரவிலேயே தடையின்றி நடக்கின்றன.

இரவு சிறுகதையில் இளம்வயது நண்பா்கள் கூடிபேசிக்கொள்கின்றனா். இரவுக்கென்று தனிப்பட்ட குணம் உள்ளதாகவும் பகலில் ஒரு பொருள் பற்றி தோன்றும் எண்ணத்திற்கும் இரவில் அதே பொருள் பற்றி தோன்றும் எண்ணத்திற்கும் வேறுபாடு உள்ளதாகவும் கூறுகின்றனர்.

இரவு வந்ததும் தனிமையின் துணிவோடு மனம் கெட்ட எண்ணங்களை எண்ணுகிறது. உலகம் இருண்டதும் மனிதன் துணிந்துவிடுகிறான் . எந்த கெட்ட காரியத்திற்கும் இரவு ஆதரவாகத்தான் இருக்கிறது. 3 என்று இரவின் உளவியல் ஆற்றலை வெளிப்படுத்துகிறார் கு.அழகிரிசாமி.

ஆண்பெண் நேசத்தில் வேறுபாடு:

திருமண வயதில் ஓா் ஆண் தான் பார்க்கும் எந்தப் பெண்ணையும் அவள் தனக்கு மனைவியாக வருவாளா என எண்ணிப்பார்க்க முடியும். ஆனால் ஒரு பெண் அப்படி நினைக்க முடியாது. சமுதாயம், கட்டுப்பாடு, கற்பு, ஆகிய காரணிகள் அதற்குக் காரணம்.

ஏமாற்றம் சிறுகதையில் நாயகன் கிருஷ்ணமூர்த்தி  திருமணத்திற்குப் பின் பழைய நினைவுகளை அசைபோடும்போது தான் அவளை  பால்ய வயதிலிருந்தே விரும்பி வருவதாகக் கூறுகிறான். ஆனால் அவன் மனைவி லஷ்மியோ  மூன்றாம் வருடம் சந்தித்தபோதுதான் விரும்பியதாகக் கூறுகிறாள். இது அவனுக்கு  பெருத்த அவமானமாகிவிடுகிறது.

“வீட்டுக்கு அப்பாவையோ அண்ணணையோ தேடிக்கொண்டு வருபவர்களுக்கு நான் பதில் சொல்லநேரிடும்போது வரக்கூடியவர்களெல்லாம்  உங்களைப்போல மனப்பரவசத்துடன்தான் பேசுவார்கள்”. 4

திருமணத்திற்கு முன் எல்லா வாலிபர்களுக்கும் ஏற்படும் பரவசமே கிருஷ்ணமூர்த்திக்கும் ஏற்படுகிறது.ஆனால் பெண்ணுக்கு ஆணின் மீது நம்பிக்கை உருவான பிறகுதான் பெற்றோரின் சம்மதத்திற்கு பிறகுதான் நம்பிக்கையும் காதலும் வரும். அதுவன்றி எல்லா ஆடவரையும் கண்டவுடன் தன் கணவனாக நினைத்து பரவசப்பட  முடியாது என்ற உளவியல் கருத்து இக்கதையில் வெளிப்படுகிறது.

குழந்தை உளவியல்:

பெரியவர்களைவிட குழந்தைகள் வேறுபாடு கருதாதவர்கள் மாசுமறுவற்றவர்கள். தன்மீது அன்புகொண்டவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்பவர்கள். கல்வி, பதவி, வயது, புகழ் ஆகியவற்றாலும் உயர்ந்தவர்களானாலும் குழந்தைகளுக்கு அது பெரிதில்லை.

அன்பளிப்பு கதையில் பல குழந்தைகளோடு  நாயகன் நட்புக் கொள்கிறான். அக்குழந்தைகளுக்கு புத்தகங்களைப் பரிசளிக்கிறான். சாரங்கன் என்ற சிறுவன் மட்டும் வால்ட் விட்மனின் கவிதைத் தொகுப்பை கேட்கிறான். அவனால் இச்சிறு வயதில் புரிந்துகொள்ளமுடியாது எனக்கருதி நாயகன் தரமறுக்கிறான்.  அதனால் சிறுவன் கோபித்துக்கொள்கிறான். தன்தோழி ஒருத்திக்கு உடல்நலமிலாதபோது நாயகன் சென்று பார்த்துவந்ததைப்போல தன் வீட்டிற்கும் வரவேண்டும் என்கிறான்.

நாயகன் தன் நட்பு குழந்தைகளுடன் மட்டுமே. அவர்களின் பெற்றோர்கள் என்ன நினைப்பார்களோ என எண்ணி மறுக்கிறான்.

“எங்கள் வீட்டுக்கும் வாருங்கள் என்று கையைப்பிடித்து இழுத்தான்.

உங்கள் வீட்டிற்கு எதற்கு?

பிருந்தா வீட்டிற்கு மட்டும்?

பிருந்தாவிற்கு ஜீரம் அதனால் போய்ப்பார்த்து வந்தேன்.

ஊஹீம்.. எங்கள் வீட்டுக்கும் வரவேண்டும். ஆமாம்.5

பணக்கார குழந்தையின் வீட்டிற்குச்சென்றவன் ஏன் தன் வீட்டிற்கு வரவில்லை? அனைவருக்கும் புத்தகம் தந்தவன் தனக்கு ஏன் தரவில்லை? என்பது சாரங்கன் வாதம்.

நட்பு குழந்தைகளோடு மட்டுமே.  அவர்களின் குடும்பத்தாரோடு இல்லை என்பது நாயகனின் பார்வை.

குழந்தைகள் அன்பு வைத்துவிட்டால் பேதம் பார்க்கமாட்டார்கள் என்ற உளவியல் சிக்கல் இக்கதையில் விடுவிக்கப்பட்டுள்ளது

மனம் எனும் புதிர்:

மனித மனம் எப்போதும் தன்னுள் ஏதோ ஒரு பாதிப்பையோ நிகழ்வையோ மனதில் வைத்துக்கொண்டு சமயம் வாய்க்கும்போதெல்லாம் அதன் பாதிப்புகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்.

அழகம்மாள் சிறுகதையில் வாழ்ந்து கெட்டவரான கிருஷ்ணகோனாருக்கு உறவுமுறைப்பெண்ணான அழகம்மாளை திருமணம் செய்து வைக்கின்றனர். மகன் வளர்ந்து மதுரையில் கல்லூரியில்  படிக்கிறான். விடுமுறைக்காக அவன் வரும்போதெல்லாம் தாயும் தந்தையும் ஒருவரோடு ஒருவா் சண்டையிடுகின்றனர். மற்ற நேரங்களில் இயல்பாக இருப்பவர்கள் தான் ஊருக்கு வரும்போதுமட்டும் ஏன் சண்டையிடுகின்றனர் என வேதனைக் கொள்கிறான்.

கறிச்சோறு போடும் போது அவனிடம்  கொஞ்சம் கறிவிட்டுச் சாப்பிடேன் எனக்கூற இதைக்கேட்ட அழகம்மாள் நான் செய்ததும் செய்யாததும் அந்த அவிஞ்ச கண்ணுக்குத் தெரியப் போகிறதா? 6 (ப.466) என்றுச் சொல்லி மனதை நோகடிக்கிறாள்.

தற்போது தன் மகனின்  மோகன வடிவையும் அவனது வளர்ச்சியையும் ஊரார் அவனை மதிப்பதையும் கண்டு தன்வாழ்வு இந்த ஊதாரியிடம் பறிபோனதை எண்ணி வேதனைக் கொள்கிறாள். அதன்வெளிப்பாடே எரிந்து விழுவதும் கண்டையிடுவதும் என்று உளவியல் சிக்கலை விடுவிக்கிறார்.

கௌரவ சண்டை:

நல்லவள் சிறுகதையில் வித்வான் வீட்டில் குடியிருக்கிறாள் ஜெயா. வித்வானின் மனைவி ராஜேசுவரி தன் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ஜெயாவிடம் சிறுசிறு கடன் வாங்குகிறாள். சில நேரங்களில் அவர்களோடு  காரணமின்றிச் சண்டையிடுகிறாள். கோபமாக பேசுவதும் தன் மகளை அவர்கள் வீட்டிற்கு போகாதே என்று திட்டி அடிப்பதும் தொடர்கிறது.

“ராஜேசுவரி அப்பறம் எனக்கு ஆராய்ச்சிக்குரிய விஷயமாவே மாறிவிட்டாள்.கடன்கொடுத்த தினத்தில் சண்டைக்கு வருவாள். கையில் பணம் இருக்கும்போது அன்பில் உயிரையே கொடுக்கச் சித்தமாக இருப்பாள்.இவளை நல்லவள் என்று எப்படி சொல்லாமல் இருப்பது?”7

தன்வீட்டில் குடியிருப்பவளிடம் தான் கடன்வாங்குவதால் தன்னை அவள் ஏளனமாக நினைத்துவிடக்கூடாது என மான உணர்ச்சியினால் கோபமும் சண்டையும் போட்டுத் தன் கௌரவத்தை நிலைநாட்ட நினைக்கும் உளவியல் சிந்தனை இக்கதையில் வெளிப்படுகிறது.

அழகின் மீது நாட்டம்:

அழகற்ற தேவகியை யாரும் திருமணம் செய்துகொள்ளாத நிலையில் ஆறாம் வகுப்பு பெயிலாகி ஒரு மளிகைக் கடையில் கணக்குப் பிள்ளை வேலைப்பார்க்கும் பாண்டுரங்கன் திருமணம் செய்துகொண்டு  பெண் பிள்ளைப் பெற்று வாழ்கிறான். தேவகி வந்த நேரம் குடும்பம் தழைக்கிறது. அவள் அழகில்லாதவள் என்பதை மறந்து மனைவிப் பித்தனாகி குடும்பம் நடத்துகிறான். வீட்டின் மேல்மாடியில் சில இளைஞர்களை குடிவைக்கின்றனர்.

தேவகி அலங்கார பிரியையாகி முப்பொழுதும் தன்னை அலங்காரப்படுத்திக் கொண்டே இருக்கிறாள். தாம் அழகற்றவள், வயதானவள் என்பதை மறந்து இளைஞர்களிடம் வளைய வந்து நட்பையும் பாராட்டையும் பெற விழைகிறாள்.

தன்னை அழகி என்று அவர் தொடர்ந்து கருதுகிறாரா என்பதை தெரிந்துகொள்வதற்காக அவள் சிறுநடை பயில்வாள்; கொஞ்சுவாள்; கோபிப்பாள்; கூப்பிட்டால் வரமாட்டாள். 8

இறுதியில் தன்மகளோடு வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர்களில் ஒருவன்  பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு பதறிப்போய் அவனை வசைபாடுகிறாள்.

இதனை அறிந்த பாண்டுரங்கன் தன்  பிள்ளைகளை கவனிக்காமல் அலங்கார மயக்கத்திலேயே காலம் கழித்து இளசுகளிடம்  சிரித்துப்பேசி குதித்து கும்மாளமிட்டதைக் கண்டித்தும் வசைமாரி பொழிகிறான்.

இதனால் அவள்,

“அலங்காரத்தையும் கைவிட்டாள். உலகத்தையே வெறுத்தவளாக வீட்டிற்கும் வாசலுக்கும் நடமாடிக் கொண்டிருந்தாள்” 9

இவ்வாறு அழகின்மை எனும் தாழ்வுணர்ச்சியினால் அலங்காரப் பைத்தியமாகி தவிக்கும் பெண்ணின் உளவியல் நிலையை வெளிப்படுத்துகிறார்.

 முடிவுரை:

மனிதர்களின் ஒவ்வொரு நடத்தையிலும் உளவியல் உட்கூறு வெளிப்படுகிறது. கணவன்- மனைவியிடத்தும், மாமியார் மருமகளிடத்தும், பணக்காரன் ஏழைகளிடத்தும் உளவியல் காரணமாகவே மோதல்களும் சிக்கல்களும் உருவாகின்றன. ஒருவர் மனதை ஒருவர் புரிந்துகொண்டாலே சிக்கல்களுக்கான தீர்வுகள் கிடைக்கும். உளவியல் சிக்கல்கள் அற்ற சமுதாயமே பிரச்சனைகள் நீங்கி மேம்பட்ட சமுதாயமாக மலரும் என்பது கு.அழகிரிசாமியின் சிறுகதைகளின் வழி தெளியமுடிகிறது.

————————–

முதன்மை ஆதாரம்:

கு.அழகிரிசாமியின் சிறுகதைகள் (முழுத் தொகுப்பு)

பதிப்பாசிரியர் பழ.அதியமான்.

காலச்சுவடு பதிப்பகம்

669 கே.பி.சாலை நாகர்கோவில்-1

முதல் பதிப்பு ஏப்ரல் 2011.

———————————

அடிக்குறிப்புகள்:

  1. பெ.தூரன் -மனமும் அதன் விளக்கமும்-ப.165
  2. கி.நாகராஜன்-கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல் ப.1.-ஸ்ரீராம் பதிப்பகம் சென்னை-2009.
  3. இரவு-சிறுகதை பக்.73-74. கு.அழகிரிசாமி சிறுகதைகள் காலச்சுவடு பதிப்பகம் நாகர்கோவில். முதற்பதிப்பு ஏப்ரல் 2011.
  4. மேற்குறித்த நூல் ஏமாற்றம் சிறுகதை ப.186.
  5. மேற்குறித்த நூல் அன்பளிப்பு சிறுகதை ப.375
  6. மேற்குறித்த நூல் அழகம்மாள் சிறுகதை ப.466
  7. மேற்குறித்த நூல் நல்லவள் சிறுகதை ப.703
  8. மேற்குறித்த நூல் முகக்களை சிறுகதை ப.1186
  9. மேற்குறித்த நூல் முகக்களை சிறுகதை ப.1194

—————————-

கட்டுரையாளர்:

முதுகலை தமிழாசிரியர்

அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி

செங்கம்-606701.

திருவண்ணாமலை மாவட்டம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் உளவியல் சிக்கல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *