நாகேஸ்வரி அண்ணாமலை

அமெரிக்காவில் நடக்கும் பல வித்தியாசமான விஷயங்களில் இதுவும் ஒன்று.  ஆணிலும் சேராத, பெண்ணிலும் சேராத திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் (transgender) ஏன் தாங்கள் Mr. என்றோ அல்லது Mrs. என்றோ அல்லது Ms. என்றோ அழைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது.  அதனால் தங்களுடைய பிறப்புச் சான்றிதழ்களில் M என்றோ F என்றோ போட்டுக்கொள்ளாமல் இரண்டிலும் சேராமல் X என்று போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் வைக்கப் போகிறார்கள்.

ஆரோவுட் என்னும் திருநம்பி (‘அவனுடைய’ என்றோ ‘அவளுடைய’ என்றோ தன்னை குறிப்பிடாமல் ‘அவர்களுடைய’  என்றே தங்களைக் குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்; தமிழில் என்றால் இருவருக்கும் பொதுவாக ‘அவருடைய’ என்று குறிப்பிடலாம்; இந்த வசதி ஆங்கிலத்தில் இல்லை.) அவர்களுடைய பாலை (sex) அவர்களுடைய பிறப்புச் சான்றிதழில் மாற்றிக்கொண்டுள்ளார்கள்.  Female என்பதற்குப் பதிலாக male என்று போட்டுக்கொள்வதும் சரியாகத் தோன்றவில்லையாம்.   அதனால்   F (female) என்றும் இல்லாமல் M (male) என்றும் இல்லாமல் நடுநிலையாக X என்று போட்டுக்கொள்ளப் போகிறார்களாம்.

இப்படி ‘X’ என்று பிறப்புச் சான்றிதழில் போட்டுக்கொள்வதிலும் ஒரு கஷ்டம் இருக்கிறது.  நியூயார்க் மாநிலப் போக்குவரத்துத்துறை வழங்கும் வாகன ஒட்டுநர் உரிமத்திலும்  மத்திய அரசு வழங்கும் பாஸ்போர்ட்டிலும் சமூக பாதுகாப்பு அட்டையிலும் (social security card) நடுநிலையான X என்ற நடுநிலை விருப்பத் தேர்வு (option) இல்லை.  ஒரே நபரின் பல சான்றிதழ்களில் ஒன்றில்  M என்றும்  இன்னொன்றில்  X என்றும் குறிப்பிடப்பட்டிருந்தால் அது குழப்பத்தை விளைவிக்கும் என்கிறார் திருநங்கை, திருநம்பிகளுக்காக வாதாடும் லாப நோக்கில்லாத ட்ரான்ஸ்செண்ட் லீகல் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஆரோவுட்.  ஒருவரைக் குறிப்பிடுவதற்குச் சரியான அடையாளம் இல்லாவிட்டால் அவர்களைப் பற்றிய மற்ற விபரங்களும் தப்பாகிவிடலாம் என்கிறார் ஆரோவுட்.

அமெரிக்காவில் பால் (sex) பற்றிய எண்ணங்கள் மாறிவருவதால், தங்களைப் பற்றிய அதிகாரபூர்வமான ஆவணங்களில் தங்கள் பாலை எப்படிக் குறிப்பிட வேண்டும்  என்று தாங்கள் விரும்பியபடி மாற்றிக்கொள்ளலாம் என்று சில மாநிலங்கள் மக்களுக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கின்றன; மாநிலத்தின் உரிய அலுவலங்களுக்கு அப்படி மாற்றிக்கொடுக்க அதிகாரம் கொடுத்திருக்கின்றன.  நியுயார்க் நகர கவுன்சில் சென்ற செப்டம்பர் மாதம் ஒருவருடைய பிறப்புச் சான்றிதழில் ஆணிலும் சேராத, பெண்ணிலும் சேராத பால் – அதாவது  X என்று குறிப்பிடலாம் என்ற சட்டத்தைக் கொண்டுவந்தது.  இதைப் பின்பற்றி கலிஃபோர்னியா, ஆரகன், வாஷிங்டன், (தலைநகர் வாஷிங்டன் அல்ல, வாஷிங்டன் மாநிலம்) நியு ஜெர்ஸி ஆகிய மாநிலங்களும் இந்தச் சட்டத்தைக் கொண்டுவரப் போகின்றன.  வாஷிங்டன் மாநிலத்தில் இருபத்தாறு பேரும் கலிஃபோர்னியாவில் பதினாறு பேரும் இம்மாதிரி மாற்றங்களுக்காக விண்ணப்பித்திருக்கிறார்களாம்.  தலைநகரான வாஷிங்டன்  டி.சி.யும் மெயின் மாநிலமும் வாகன ஓட்டுநர் உரிமங்களில்  X என்று போட்டுக்கொள்ள உரிமை வழங்கினாலும் பிறப்புச் சான்றிதழ்களில் அப்படிப் போட்டுக்கொள்ள அனுமதி கொடுக்கவில்லை.  இதனால் பல குழப்பங்கள் விளைகின்றன.

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த Mx. ஃபுருயா என்பவர்கள்தான் நாட்டிலேயே முதல் முதலாக மூன்றாவது பாலைக் குறிக்கும் X என்பதைப் பெற்றவர்கள்.   இவர்கள் சில மாதங்கள் கழித்து அம்மாநிலத்தின் வாகனத்துறைக்கு தங்களுடைய கார் ஓட்டும் உரிமத்தைப் புதுப்பிக்கச் சென்றபோது M அல்லது F என்ற இரண்டு பிரிவுகள்தான் இருந்தனவாம்.  இதைப் பற்றித் தாங்கள் யோசிக்கவில்லை என்று கூறிய வாகனத்துறை அதிகாரிகள் இந்தக் குழப்பத்தைத் தீர்ப்பதற்கு அடுத்த ஆண்டிலிருந்து இரண்டிலும் சேராத மூன்றாவதான X-ஐயும் சேர்க்கப் போவதாகக் கூறினார்களாம்.

இந்தியா உட்படப் பத்து நாடுகளில் – ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், கனடா, டென்மார்க், ஜெர்மனி, இந்தியா, மால்டா, நேபாளம், நியுஜிலாந்து மற்றும் பாகிஸ்தான் – பாஸ்போர்ட்டுகளிலோ அடையாள அட்டைகளிலோ மூன்றாம் பாலைச் சேர்க்க வசதி இருக்கிறதாம்.  இந்தியாவில் ஹிஜ்ரா சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் குறிக்க eunuch என்னும் ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்தான E-ஐ பாஸ்போர்ட்டில் போடும் வசதி 2005-லிருந்து இருக்கிறதாம்.   இத்தனை நாடுகள் திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் இந்த வசதியைச் செய்து கொடுத்திருக்கும்போது ஏன் அமெரிக்கா மட்டும் செய்யவில்லை என்கிறார் அவர்களுடைய உரிமைகளுக்காகப் போராடும் ஒரு வழக்கறிஞர்.  மாநில அரசு வாகனம் ஓட்டும் உரிமத்திலும் பிறப்புச் சான்றிதழிலும் X என்று ஒருவருடைய பாலைக் குறித்திருந்தால் (இவை இரண்டும் மாநில அரசால் வழங்கப்படுபவை),  வறுமைக் கோட்டுக்குக் கீழே வருபவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் மருத்துவ உதவி அட்டையில் ஒருவரின் பாலைக் குறிக்கும் இடத்தில் M அல்லது F என்று மட்டும் குறித்திருந்தால் அந்தக் கார்டு அந்த நபருக்குரியதல்ல என்று மறுக்கப்பட்டு அவருக்கு மத்திய அரசின் இலவச மருத்துவ உதவி கிடைக்காமலே போய்விடலாம்.  இம்மாதிரிக் குழப்பங்களைத் தவிர்ப்பதற்கு எல்லா அடையாள அட்டைகளிலும் M மற்றும் F என்பவையோடு X என்பதும் இருக்க வேண்டும் என்று வாதாடுகிறார்கள் திருநங்கைகளும் திருநம்பிகளும்.

ஆண், பெண் என்ற பெரும் பிரிவுகளில் தங்களைச் சேர்க்காமல் தங்களுக்கென்று தனி அடையாளம் வேண்டும் என்கிறார்கள் இவர்கள்.  பிறந்தவுடன் அவர்களின் பிறப்புறுக்களைப் பார்த்து அவர்களை ஆண் என்றோ பெண் என்றோ பிறப்புச்சான்றிதழ்களில் குறிப்பிட்டாலும் பின்னால் அவர்கள் வளர்ந்துவரும்போது பல மாற்றத்துக்கு உள்ளாகிறார்களாம்.  அப்படி மாற்றங்கள் ஏற்பட்ட பிறகு அவர்கள் தங்களை திருநங்கைகள் என்றோ திருநம்பிகள் என்றோ அடையாளப்படுத்திக்கொண்டால் அதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.  ஆரோவுட் பிறப்பின்போது பெண் என்று குறிப்பிடப்பட்டு, பின் தங்கள் மனதிலும் உடலிலும் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்கள்: “நான் ஆணாக மாறிக்கொண்டிருந்தேன் என்பதைவிட பெண் என்பதிலிருந்து விலகிப் போய்க்கொண்டிருந்தேன்.  அதனால் பெண் என்பதற்குப் பதில் ஆண் என்று போட்டுக்கொள்வதும் சரியாகப்படவில்லை”.

ஜனாதிபதி ஒபாமா (இப்போது நான் உட்படப் பலர் அவரை மிகவும் ‘மிஸ்’ பண்ணுகிறோம்.)  இவர்களுடைய உரிமைகளுக்காகப் பொதுக் கழிப்பறைகள், குளியலறைகள், பள்ளிகளில் உடைமாற்றும் வசதிகள் என்று இவர்களுடய அந்தரங்கத்தைக் காத்துக்கொள்ள நிறையச் செய்தார்.  எல்லோரின் நலன்களுக்காகவும் அரசாங்கத்தில் பல மாற்றங்கள் செய்ததுபோல் இவர்களின் உணர்ச்சிகளையும் உரிமைகளையும் அவர் நன்கு புரிந்துகொண்டார்.  ஆனால் ஒபாமா கொண்டுவந்த எல்லாச் சீர்திருத்தங்களையும்  மாற்றியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு காரியங்கள் செய்துவரும் இன்றைய ஜனாதிபதி ட்ரம்ப் இவர்கள் விஷயத்திலும் தன் கைவரிசையைக் காட்டப் போகிறார்.  அமெரிக்க மக்கள் ‘அமெரிக்கா’ என்ற பூமாலையை ட்ரம்ப் என்ற இந்தக் குரங்கு கையில் கொடுத்திருக்கிறார்களே.  இதை என்னவென்று சொல்வது!  தன்னைப் பொறுத்தவரை மூன்றாவது பால் என்பது இல்லையென்றும் பிறப்புச்சான்றிதழில் ஒருவருடைய பால் என்னவென்று குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அதுதான் அவர்கள் வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.  அதற்குரிய ஒரு அரசாணையையும் வெளியிடப் போகிறாராம்.  இதனால் தங்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டுத் தங்களுக்குரிய நன்மைகளை இழந்துவிடுவோமே என்று அமெரிக்காவில் இருக்கும் பதினாலு லட்சம் திருநங்கைகளும் திருநம்பிகளும் பயப்படுகிறார்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *