-முனைவர்.த.பாலமுருகன்  

முன்னுரை

சித்தாடல் என்பது இயற்கை கடந்த அற்புதச் செயலாகக் கருதப்படுகிறது. இது சித்தர்களின் வாழ்வில் நிகழ்ந்ததாகவும் சித்தர்கள் நிகழ்த்தியதாகவும் அறியப்படுகிறது. அற்புத நிகழ்வுகள் யாவும் செய்திகளாகவும் அவற்றின் குறிப்புகளாகவும் கிடைக்கின்றன. இவ்வற்புதச் செயல்களைச் சித்தர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.

‘கட்டுக்கடங்காத பாம்பைக் கட்டுவோம், இந்திரனுலகை இங்கே காட்டுவோம், தூணைத் துரும்பாக்குவோம், துரும்பைத் தூணாக்குவோம், கடலைக் குடிப்போம், மண்டலங்களைக் கையால் மறைப்போம், வானத்தை வில்லாய் வளைப்போம், நெருப்புக்குள் மூழ்குவோம், நீரினுள் மூச்சை அடக்குவோம், வன்புலியைத் தாக்குவோம், இப்பெரும் உலகை இல்லாமல் செய்வோம், செங்கதிரைத் தண்கதிராய் மாற்றுவோம், தேவர்களை ஏவல் செய்வோம், படைக்கும் தொழில் செய்வோம், கலைகள் யாவும் அறிவோம், நாதனுடன் சமமாக வாழ்வோம்’1 எனச் சித்தர்களின் சித்தாடல் பற்றிய செயல்களைப் பாம்பாட்டிச் சித்தர் குறிப்பிடுகின்றார்.

எண்வகைச் சித்திகள்

சித்தி என்பதற்குச் சித்தியாதல் அல்லது நிறைவு பெறுதல் என்று பொருள். சித்தர்கள் பல்வேறு சித்திகளைப் பெற்றிருந்தனர். இச்சித்திகளைச் சித்தர் இலக்கியங்களும், யோக இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன. சித்திகள் எட்டு என்றும் அறுபத்து நான்கு என்றும் கோடி என்றும் கூறுவர். ஆனால் அவற்றுள் எட்டுச் சித்திகளை மட்டும் சிறப்பாகத் திருமூலர் குறிப்பிடுகின்றார். இராமலிங்க அடிகளார், சித்திகளைப் பற்றிக் குறிப்பிடும் போது, சித்திகள், கரும சித்தி, யோக சித்தி, ஞானச் சித்தி என மூவகைப்படும் எனக் கூறுகின்றார். இதனை,

மூவகை சித்தியின் முடிபுகள் முழுவதும்
ஆவகை எனக்கருள் அருட்பெருஞ்சோதி”
2 எனக் கூறுவதால் அறியலாம்.

சித்திகள் அறுபத்து நான்கு என்ற நிலையில் அவற்றுள் எட்டினை மட்டும் சிறப்பானதாகக் கருதும் மரபு இருந்து வருவதை அறியலாம். அட்டமா சித்திகளின்  மரபு குறித்தப் பாடல்கள் பின்வருமாறு.

“அணிமா மகிமா லகிமா அரிய கரிமா பிராத்தி மலப்
பிணிமா கடையோர்க்கு அடைவரிய பிரகாமீய மீசத்துவ
துணிமா யோகர்க்கு எளியவசித் துவமென்றெட்டாமிவை யுளக்கண்
மணிமா சறுத்தோர் விளையாட்டின் வகையாம்”3

எனப் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்திலும் அட்டமா சித்திகளைப் பற்றிக் குறிப்பிடும் செய்திகளைக் காணமுடிகிறது.

சித்திகள் பொதுவாக எட்டு வகைப்படும். அவற்றை அணிமா (அணுவைப் போல் நுண்மையாதல்), மகிமா (மிகப்பெரியதாதல்), லகிமா (மிக நுண்மையாதல்), கரிமா (மிகு எடையாதல்), பிராத்தி (எங்கும் செல்லும் ஆற்றல்), பிரகாமியம் (எண்ணியது எய்தும் ஆற்றல்), ஈசத்துவம் (எதையும் ஆக்கும் ஆற்றல்), வசித்துவம் (எவரையும் தன்வயப்படுத்தும் ஆற்றல்) என்று வடமொழியில் கூறுவர். இவற்றினைத் திருமூலர் அணுசகம், சகத்தும், நோன்மை, ககனம், பரகாயத்தேகம், தானாவது, ஆனாத உண்மை, வியாப்பியம் என்னும் பெயர்களில் குறிப்பிடுகின்றார்.4

அணிமா

‘அணிமா’ என்பது நுண்மை என்றும் அணு என்றும் பொருள்படும். அணுவைப் போல நுட்பமான ஆற்றலைப் பெற்றிருக்கும் தன்மைக்கு அணிமா என்று பெயர். பிருங்கி முனிவர் சிவனை மட்டும் சுற்றி வர வேண்டும் என்பதற்காகச் சிறு வண்டாக உருமாறினார் என்பதைப் புராணங்களின் மூலம் அறிய முடிகிறது. இவ்வாறு சிறு வண்டாக உருமாறிய தோற்றத்தை அணிமா என்று கூறலாம்.

மகிமா

தோற்றத்தில் மிகச் சிறிய பொருளை மிகப் பெரிய பொருளாக ஆக்குவது மகிமா. திருமால் மூன்று அடி மண் வேண்டி உலகை அளக்க எடுத்த உருவம் மகிமா ஆகும்.

லகிமா

கனம் இல்லாத ஆற்றலைப் பெற்றிருப்பது லகிமா என்னும் சித்தியாகும். மகேந்திர பல்லவன், சமயப்பகை காரணமாக திருநாவுக்கரசரைக் கல்லில் கட்டிக் கடலில் இட்டபோது தன் உடம்பை மிதவையாக்கி அதனால் கல்லை மேலே இழுத்து வந்தது லகிமா ஆகும்.

கரிமா

கனம் மிகும் ஆற்றலைப் பெற்றிருக்கும் தன்மைக்குக் கரிமா என்று பெயர். அனுமன் தன் வாலின் எடையை அதிகரிக்கச் செய்து பீமனின் வலிமையைச் சோதித்தது கரிமாவாகும்.

பிராத்தி

எண்ணியதனை அடையும் ஆற்றலைப் பெற்றிருக்கும் தன்மைக்குப் பிராத்தி என்று பெயர். சூரன், இராவணன் முதலியோர் நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடம் செல்லும் வல்லமை பெற்றிருந்தனர் என்பது பிராத்தியாகும்.

பிரகாமியம்

நினைத்த அக்கணமே பிறர் உடலில் நுழைந்து தோன்றுவது பிரகாமியம். மூலன் என்னும் இடையன் உடலில் சுந்தரன் புகுந்து திருமூலராய் எழுந்தது பிரகாமியம் ஆகும்.

ஈசத்துவம்

எதனையும் ஆக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஈசத்துவம் என்று பெயர். திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததும் சுந்தரர் முதலை உண்ட பாலகனை மீட்டதும் ஈசத்துவம் ஆகும்.

வசித்துவம்

உலகில் உள்ள அனைத்தையும் தன்வயப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கும் தன்மைக்கு வசித்துவம் என்று பெயர். அப்பர் தன்னைக் கொல்ல வந்த யானையை நிறுத்தினார் என்பது வசித்துவம் ஆகும்.

இவ்வாறு சித்தர்களின் சித்தாடும் வல்லமை பற்றியும் அற்புதச் செயல்கள் பற்றியும் செவிவழிச் செய்திகளும் இலக்கியக் குறிப்புகளும் கிடைக்கின்றன. சித்தர்கள் அனைவரும் சித்தாடினர் என்று ஏற்றுக்கொள்ள வழியில்லை என்றும், சித்தர்களில் சிலர் சித்தாடாமல் இருப்பதனால் அவர்களைச் சித்தர்கள் பட்டியலிலிருந்து நீக்கி விடுவதும் பொருத்தமாகத் தோன்றவில்லை.5 என்றும் க. நாராயணன் குறிப்பிடுகின்றார். இடைவிடாத முறையான யோகப் பயிற்சியாலும் திறத்தாலும் சித்திகள் கைவரப் பெறலாம் என யோக இலக்கியங்கள் கூறுகின்றன. இவ்வகைச் சித்திகள் கைவரப் பெறுவதே சித்தர்களின் குறிக்கோள் என்றோ சித்தர் நிலை என்றோ கூறுவது பொருந்துமாறு இல்லை.

“அட்டமாசித்தி எனப்படும் எண்வகைச் சித்திகளும் இலட்சியமாகவன்றித் துணைப்பேறாகவே கொள்ளப்பட்டன”6 என்று ப.அருணாசலம் அவர்கள்  குறிப்பிடுகின்றார். ‘‘சித்தர்கள் ஆயிரமாயிரம் சித்திகளை அறிந்திருந்தாலும், யோக நெறியெல்லாம் பயின்றிருந்தாலும் புருவ நடுவேயுள்ள சிற்றம்பலத்தில் கூடி மகிழும் பேறு பெற்றாலும் உலகில் சித்து விளையாடக் கூடாதென்றே கருதுவர்”7 என்று சுப்ரமணியர் ஞானம் என்னும் நூல் குறிப்பிடுகிறது.

“நடுவாய் சரமாறி இருந்திட்டாலும்
நயமான யோகமெலாம் அறிந்திட்டாலும்
கூடுவாய் தில்லையிலே கூடினாலும்
குவலயத்தில் சித்துவிளை யாடா தென்றே”8 எனப் பட்டினத்தாரும், சித்தர்கள் இந்திரச் செல்வம் எட்டெட்டுச் சித்தியும் கைவரப் பெறும் போதெல்லாம் அதனை மறுத்து ஒதுங்குவார்கள் என்று கூறுகின்றார்.

நிறைவாக, சித்தர்களின் இத்தகைய இயற்கை மீறிய ஆற்றல்களால் இவ்வுலகையும், அதிலுள்ள பொருள்களையும் நடக்கும் நிகழ்ச்சிகளையும் அறிவதும் கட்டுப்படுத்துவதும் அதனால் மகிழ்வதும் சித்தர்களின் இறுதிக் குறிக்கோள் அல்ல. ஆனால் இவற்றையெல்லாம் கடந்து இறைவனின் இயல்போடு இரண்டறக் கலப்பதையே சித்தர்கள் விரும்பினர். அவ்வாறு கலப்பதற்கான படிகளாகவே இச்சித்திகளைப் பெற்று இருப்பர் எனக் கருதலாம்.

திருவள்ளுவர் இறைவனை ‘எண் குணத்தான்’9 என்று கூறுகிறார். இதற்கு விளக்கவுரை எழுதும் பரிமேலழகர் “அணிமாவை முதலாகவுடையன எனவும், கடையிலா அறிவை முதலாகவுடையன எனவும் உரைப்பாரும் உளர்”10 என்று குறிப்பதன் மூலம் இறைவன் கூட, சித்துக்கள் செய்பவன் என்று கருதும் மனநிலை பரிமேலழகர் காலத்தில் இருந்தமையினை அறியமுடிகிறது.

அடிக்குறிப்பு

  1. சித்தர் பாடல்கள், பாம்பாட்டி சித்தர், சித்தர் வல்லபம், பா. 25, 34
  2. திருவருட்பாத் திரட்டு, பா. 239, 240.
  3. திருவிளையாற் புராணம், அட்டமாசித்தி உபதேசித்தப் படலம், பா. 22.
  4. திருமந்திரம், பா. 642.
  5. க. நாராயணன், சித்தர் சிவவாக்கியர், ப. 21.
  6. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 14 ஆம் நூற்றாண்டு, ப. 339.
  7. சுப்ரமணியர் ஞானம் 500, பா. 427.
  8. சித்தர் ஞானக்கோவை, பட்டினத்தார் பாடல்கள், பொது, பா. 37.
  9. திருக்குறள், 9.
  10. மேலது. பரிமேலழகர் உரை ப. 5.

*****

கட்டுரையாளர் –  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலயக் கலை அறிவியல் கல்லூரி,கோயம்புத்தூர்- 20

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *