Category: சிறுகதைகள்

கதைகள்

  • ஒரு பேருந்துப் பயணம்

    நிர்மலா ராகவன்

    “என்னை விட்டுடுங்க! இதுதான் என்னோட கடைசி வெளிநாட்டுப் பயணம்!” முகத்தில் அருவருப்புடன், முணுமுணுப்பான குரலில் கூறிய மனைவியைப் பார்த்தார் அருண். தன்னால்தானே அவளுக்கு இவ்வளவு கஷ்டம் என்ற நினைப்பில் சற்று குற்ற உணர்வு உண்டானது அவருக்கு.

    “கொஞ்ச நேரம்தானே பிரபா? புதுச்சேரியிலிருந்து மூணே மணி நேரம்! கடற்கரைவழியா போய், சென்னையில கொண்டு விட்டுடுவான்!”

    “ஆயிரக்கணக்கா, மலேசிய ரிங்கிட்டில செலவழிச்சுக்கிட்டு பிளேனில வந்திருக்கோம், உல்லாசமா சுத்திப் பாக்க! டாக்ஸிக்கு இரண்டாயிரம், இல்லே மூவாயிரம் ரூபாய் குடுக்க கருமித்தனப்பட்டுக்கிட்டு, யாராவது இப்படி பஸ்ஸில வருவாங்களா!”

    “நம்ப ரெண்டு பேருக்கும் பஸ் டிக்கட் நூறு ரூபாய்கூட ஆகலம்மா. மிச்சம் பிடிக்கிற காசில, நீ இன்னொரு பட்டுப் புடவை வாங்கிட்டுப் போயேன்!”

    அவரது நைச்சியப் பேச்சு பிரபாவின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. முன்னால் அமர்ந்திருந்த பெண்ணிடம் அவள் கவனம் லயித்திருந்தது. எண்ண ஓட்டம் அவளைச் சுற்ற ஆரம்பித்தது.

    ஒல்லியா இருந்தாலும், பொண்ணு நல்ல களை!
    கழுத்தில் முத்து மாலை- – அதில் தோல் உரிந்திருந்தது.
    கல்யாணமாகாத பெண் போலிருக்கு! பாவம், ஏழை!
    நீண்ட ஒற்றைப்பின்னல். அதன் நுனியில் ரிப்பன் வைத்துக் கட்டியிருந்தாள்.

    சரியான பட்டிக்காடு! பெயர் என்னவாக இருக்கும்? சரி, அருக்காணி என்று வைத்துக்கொள்வோம்.
    பொழுதைக் கழிக்க, பிரபாவுக்கு இது ஒரு நல்ல விளையாட்டாகப் போயிற்று.

    பின்னலுக்கு மேலே சாமந்தி, அரளி, `பச்சை’ என்ற வாசனை இலை — எல்லாம் வைத்துக் கட்டிய தலைகொள்ளாத கதம்பம்.

    தலை கனக்காதோ!

    ஏறியதிலிருந்து, தலையைப் பரபரவென்று சொறிந்து கொண்டிருந்தாள் அருக்காணி.

    இப்படியா தலையைப் பிடுங்கிக்கொள்ளும் ஒரு பெண், நாலு பேர் பார்க்கிறார்களே என்ற கூச்சம்கூட இல்லாமல்!
    ஒருவாறாக, இரு விரல்களின் நுனியைச் சேர்த்து, மயிர்க்காலை பாடாய் படுத்திக் கொண்டிருந்த பேனை எடுத்து, இன்னொரு கை கட்டைவிரலால் அவள் சொடுக்கியபோது, பிரபாவுக்குக் குமட்டியது.

    ஒய்யாரக் கொண்டையில தாழம்பூவாம்… நல்லாத்தான் சொல்லி வெச்சிருக்கான், பாட்டிலே!
    `சென்னைக்குப் போனதும், முதல் வேலையா மருந்துக் கடையிலே நல்ல மருந்தாக வாங்கி, தலையில அழுந்தத் தேய்ச்சுக்கணும்! முன் சீட்டிலிருந்து பரவிடாது!’ என்று பிரபாவின் எண்ணம் போயிற்று.

    பஸ் வழியில் எங்கோ நின்றது. கையில் ஒரு குழந்தையுடன் ஒரு மாது ஏறினாள். இன்னொரு தோளில் ஒரு பெரிய பை. வெளிறியிருந்த நீல நிற நைலான் புடவை. பரட்டைத் தலை என்று பிரபா தன் மனதில் குறித்துக் கொண்டாள்.
    “யாரும்மா? கையில பிள்ளையோட எப்படி நிப்பே? அடுத்த பஸ்ஸிலே வா. எறங்கு, எறங்கு!” கண்டக்டரின் அதிகாரக் குரல் சிலரை அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.

    வேறு சிலர், `இதெல்லாம் தினம் தினம் நடக்கிறதுதானே!’ என்று நினைத்தவர்களாக, வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டோ, `இஞ்சி மொரப்பா! அஞ்சே ரூபா! தலை சுத்தலுக்கு வாங்கிக்குங்க!’ என்று கூவியபடி விற்ற பையனை அழைத்துக்கொண்டோ இருந்தனர். இஞ்சியை வேகவைத்து, சீனிப்பாகில் இட்டுக் காய வைத்திருந்த விரல்களை நினைவூட்டும் துண்டங்கள் சிறிய பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டிருந்தன.

    `அநியாயம்! இதுக்கு அஞ்சு ரூபாயா!’ என்று பேரம் பேசிக்கொண்டிருந்தார் ஒருவர்.
    யாரும் அத்தாய்க்குத் தங்கள் இடத்தை விட்டுக் கொடுத்துவிட்டு, நின்றுகொண்டே பயணம் செய்ய ஒப்பவில்லை.
    “ஒனக்கு எத்தனை வாட்டி சொல்றது? எறங்கு!’ கண்டக்டர் ஆக்ரோஷமாகக் கத்தினார். அவள் இறங்க யத்தனித்தாள்.

    “அவங்க எறங்க வேணாம்!” அபயக் குரல் கேட்டது. அருக்காணிதான்.
    “பிள்ளையை இப்படிக் குடுங்க!” என்று தன் கையை நீட்டி, பிடுங்காத குறையாக குழந்தையை வாங்கிக் கொண்டாள்.
    கறுப்புச் சாந்தில் பெரிய பொட்டு, நெற்றியிலும் கன்னத்திலும். அதைவிடப் பெரிய கண்களால் தன்னைத் தோளில் தூக்கிக் கொண்டவளை உற்றுப் பார்த்தது.

    “என்னடா முழிச்சு முழிச்சுப் பாக்கறே?” என்று கொஞ்சியபடி, “அதோ பாத்தியா! எத்தினி பஸ்!” என்று வெளியில் கைகாட்டினாள் அருக்காணி.

    குழந்தைக்கு என்ன, ஆறு மாசமிருக்குமா?
    பிரபா சுவாரசியமாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    பஸ் புறப்பட்டது. வழியில் தெரிந்த காட்சிகளை எல்லாம் அருக்காணி விளக்க, `இதற்குமேல் என் மூளை வேலை செய்யாது!’ என்பதுபோல், குழந்தை கண்களை மூடிக்கொண்டது. அது தூங்க வசதியாக, மடியில் கிடத்திக் கொண்டாள் அப்பெண்.

    பஸ்ஸின் குலுக்கலில் கண்ணயர்ந்த பிரபா இரண்டு மணி பொறுத்துதான் விழித்தாள்.
    “அம்மா எறங்கப் போறாங்கடா!” என்று பிரியாவிடை கொடுத்த அருக்காணி, குழந்தையை அதன் தாயிடம் நீட்டினாள். அவளை விட்டுப் பிரிய மனமில்லாததுபோல், குழந்தை தன் பிஞ்சு விரல்களால் அவளுடைய புடவையை இறுகப் பற்றியிருந்தது.

    “பிள்ளையை நல்லா பாத்துக்கிச்சு!” என்று பொதுவாகச் சொல்லியபடி, அந்த தாய் இறங்கினாள்.
    வாய் உபசாரமாக நன்றி கூறத் தெரியாத பாமரப் பெண்!

    சென்னையும், ஓடும் மாந்தர்களும், மனிதர்கள், வாகனங்களின் இரைச்சலும் சேர்ந்து வந்தன.

    “பஸ்ஸிலே இவ்வளவு பேரை அடைப்பாங்கன்னு தெரியாம போச்சு. என்னென்னமோ எண்ணை நாத்தம்! மூச்சுக்கூட விட முடியல!” கோயம்பேடில் இறங்கி, ஆட்டோவில் இறங்கும்வரை மௌனமாக இருந்த அருண், முதன்முறையாகப் பேசினார். “இனிமே பஸ்ஸே வேண்டாம்பா! டாக்சிதான்!” உடலைக் குலுக்கிக் கொண்டார்.

    “ஒரு புத்தகத்தோட மதிப்பை அதோட அட்டையை வெச்சு எடைபோடக் கூடாதுன்னு சரியாத்தான் சொல்லி வெச்சிருக்காங்க!”
    தான் என்ன சொல்கிறோம், இவள் சம்பந்தா சம்பந்தம் இல்லாது என்ன சொல்கிறாள் என்று, மனைவியைத் திரும்பிப் பார்த்தார் அருண்.

    `பாவம்! ரொம்ப நேரம் பஸ்ஸிலே வந்தது இவளுக்குத் தலை சுத்திப் போயிருக்கு!’ என்று பரிதாபப்பட்டுக் கொண்டவர், `ஹோட்டலிலே ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு குடிச்சா சரியாப் போயிடும்!’ என்று ஒரு முடிவும் எடுத்தார்!

    (மக்கள் ஓசை, 2010, சிறுகதைகள்.காம்)

    Share
  • ரவி வர்மாவின் ஓவியம்

    — கவிஜி.

    “இது ஒரு வகை மன நோயா..?” என்றெல்லாம் யோசிக்க நேரமில்லை.

    ரவி வர்மா வேக வேகமாக கிளம்பிக் கொண்டிருந்தான். தோள் வரை புரண்டு நீண்ட தலை முடியை காற்றின் விரல்களில் தவழ விட்டு, இளைஞர்களுக்கே உண்டான மோட்டார் பைக்கில் அதிவேகமாய் போகத் தொடங்கினான்.

    “பகலில் காணும் இடங்களை இரவில் கண்டால் எப்படி இருக்கும்?” என்பது ரவி வர்மாவின் ஆர்வம்… ஆசை… திரில்…

    வெறும் ஆர்வத்தோடு ஒரு போதும் அவன் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்வதில்லை. இன்பம் பேரின்பமாக ஆகும் வரை, துன்பம் பேரிடர் தந்து புரட்டும் வரை, எதையும் அவன் விடுவதில்லை. விடிய விடிய வானம் நோக்கி விழி விரித்துக் கிடக்கும் தொடுவானத்துக்காரன். வண்ணத்துப் பூச்சியின் வாசலெங்கும் தானே ஒரு ‘வெளி’ யாக கிடக்கும் வகையின் வேற்று உருவம். மழை வரும் நாளில் மனம் திறந்து கிடப்பவன். மழை வராத நாளிலும் மனம் திறந்தே கிடப்பதுதான் ரவி வர்மாவின் வேண்டுதல்.

    பகலில் தேடிக் கண்டுபிடித்த ஒன்றோ? அல்லது பகலே தேடிக் கண்டு பிடித்த ஒன்றோ?

    விட்ட இடத்தில் வந்து நிற்கும் வேகம் கொண்டவன். இரவின் மடியில் ஈரம் சுமப்பவன். ஈரம் சொட்டச் சொட்ட, துளிகளின் வழிகளை உயிர் தீண்டத் தீண்ட, உரக்க கத்தி சாகவே வேண்டும் என தற்கொலைகளின் தொடர்பற்று, மீண்டும் பகலில் தொலைந்த இடத்திற்கே சென்று தன் உயிர் காத்துக் கொள்ள துடிக்கும் இரவின் மௌனம், அவனது பயணம்….

    அந்த வகையில் இன்று பகலில் சென்று வந்த கோவை குற்றாலத்திற்குத்தான், உயிர் தேடி இந்த இரவில் சென்று கொண்டிருக்கிறான். கோடையின் பின்புறம் செல்வது போல, வியர்வையும் வெப்பமும் தன்னை உலர்த்திக் கொண்டேயிருக்க, எதிர்க்காற்றில் ஏகாந்தம் தேடி இலை மறை காயாய் புன்னகைத்தே பயணிக்கிறான்…

    “சாலையின் பயணங்கள் தீர்வதேயில்லை… சாலை முடிந்த பின்னும்”

    திடும்மென உதிர்ந்த வரிகளை ஆல்கஹால் பதியாத மூளை ஒன்றில் பதிந்து கொண்டான். பேரூர் சாலை. எதிரே இருக்கும் மலை குடைந்து போவது போலொரு காட்சி. பாரதியின் பார்வையில் காட்சிப்பிழை. அதற்குள்ளும் துளிர்க்கும் நம்பிக்கை என்று திறந்து கிடந்த பட்டன்களை தாண்டி கழுத்தின் வழியே முதுகு தொட்ட தென்றல் கழுத்தைப் பிடித்து, வயிறு கிள்ளி, கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருந்தது.

    ரவி வர்மாவின் கூர் பார்வையும், பார் கூர்மையும்…. காடும் மழையும், காட்சிப் பொருளல்ல, ஆட்சி பொருள். திமிர்களின் தேவலோகம். பசுமைகளின் பெருத்த உடலில் பேரின்பம் தீண்டத் தீண்ட திகட்டுவதேயில்லை. உலகம் மெல்ல மெல்ல தனது கடைசி பெட்டியை கழற்றி விட்டுக் கொள்வது போல, நாகரீக நகர சாலை, அவனை உதிர்த்துக் கொண்டேயிருக்க, உள்ளுக்குள் உருளும் காட்டாற்றின் நிர்வாணத்தை கறுமையாக்கி, அவன் மட்டும் காணும் கண்கள் பெற்றவனாய், அதிசயக் கூட்டு முயற்சியின் புதிய சிறகோடு, செக் போஸ்ட்க்கு பின்னால் இருந்த ஒற்றையடிப் பாதையில் காட்டின் கற்பில் பாதங்களைப் பதிக்கத் தொடங்கினான்.
    பிடித்தவன் பதித்தால் வளரும் கற்பாய், இலை அசைத்து தலையாட்டியது மரம், ஆம், ரவி வர்மா மரங்களின் காதலன்.

    தூரத்தில் தன்னை குறுக்கி, கற்பு காக்க சுவரோடு ஒட்டி உட்காரும் கதாநாயகி போல, மரத்தடியில் பதுங்கி கிடந்தது ரவி வர்மாவின் மோட்டார் பைக்.

    ஹோ ……வென இரையும் வெள்ளிக் கம்பிகளின் தொடர்ச்சி, அருவியாய் முத்துப் பற்கள் சிரிக்க, வெண்ணிலவின் ஒற்றைக் கால் தவம், காதலின் பெருங்கோபம் அல்லது பெருங்காட்டின் முகப்பு வெளிச்சமென தாறுமாறான சிந்தனைகளை சிக்கி முக்கி இரவின் விரல்களில் சொடுக்கெடுத்துக் கொண்டிருப்பதாக முகம் மலர்ந்தான்.

    “இரவு சும்மா வருமா?”…….

    அவன் கண்கள் சிரித்தது. இதோ மலையேறி, எட்டி குதித்தால் பிடித்து விடலாம் போல இந்த வானம். பகல் என்ற ஆடை துறந்து இரவென்னும் நிர்வாணம் பூட்டிக் கொள்ளும் வானம் வெட்கம் துறந்த விழிகளை தன்னெங்கிலும் வாழ விடுகிறது. வாழ்ந்தும் விடுகிறது. கோடை மழை போல வாடைக் காற்று ஜாடையின் அர்த்தம் உயிர் கரையும் நொடிகளில் ஆடை கனமானது அவனுக்கு.

    அந்த வானமும் இந்த பூமியும் அற்புதங்களின் சாட்சி. சாட்சிகளின் நீள்வட்டப் பாதையிலிருந்து ஒரு பெண்ணின் முணங்கல் சத்தம் வர, முகத்தில் கிடந்த முடிக் கற்றைகளை லாவகமாகக் கோர்த்து பின்னோக்கி சரித்தான். அருவியின் இரைச்சலை ‘ம்யுட்’ செய்தான். அவன் சொன்னால் அது கேட்கும். இரவுக் காதலன் இணுங்கினாலும் இலைகளில் கவிதை உதிரும் என்பது அருவியின் போதனை.

    இப்போது நன்றாகக் கேட்டது. ஆம்… அது ஒரு பெண்ணின் அழும் குரல். முணங்களாக மட்டுமே வெளி வர முடிந்த சிறகுகளின் ரத்தக் கசிவு என்பதை உணர்ந்த நொடியில், யானையின் பதிப்பாக ஓசையின்றி, சருகு தீண்டா சபலம் தாண்டி முன்னோக்கி கடந்தான். நடந்தான் என்பது சரியில்லை என்பதால் கடந்தான்.

    கை கால் கட்டப்பட்டு, உடல் முழுக்க நடுக்கம் சுமந்து, வெள்ளுடையில் ஒருத்தி வியர்க்க விறுவிறுக்க அந்த மரத்தடியில் கிடந்த காட்சி ரவி வர்மாவின் மூளைக்குள் மின்னலை வெட்டச் செய்தது. ஓடியவன் அருகில் அமர்ந்து அவளைத் தட்டி எழுப்பினான்.

    அரை மயக்கத்தில் கிடந்த அவள் இன்னும் வேகமாக உடல் உதறி, தலை ஆட்டி, வாய்க்குள் இருந்த துணியுடன் கட்டப்பட்ட கட்டோடு புரண்டு மயங்கினாள். பக்கத்தில் அமர்ந்தவாறே, சுற்றும் முற்றும் பார்த்தான். ஒன்றுமே புரியவில்லை. மனதுக்குள் பல கேள்விகள் இரவுகளை திறந்து விட்டுக் கொண்டேயிருந்தது. அருவியின் இரைச்சல் மீண்டும் கேட்கத் தொடங்கியது.

    “யாரிவள்? யார் இப்படி கட்டிப் போட்டிருப்பார்கள்? யாருக்காவது தெரிந்தால் தன்னையல்லவா மாட்டி விடுவார்கள். காப்பாற்றலாமா? இப்படி இத்தனைக் கொடூரமாகக் கட்டிப் போட்டிருக்கிறார்களே, யாராக இருக்கும், என்னவாக இருக்கும்?” அவன் மனதுக்குள் போராட்டம்.

    “அடக் கடவுளே, இரவைத் தேடி வந்ததிற்கு இது என்ன புது தண்டனை? என்ன செய்ய? விட்டுப் போகவும் மனம் வரவில்லை….” யோசித்துக் கொண்டே அவளின் கட்டுகளையெல்லாம் கலைந்தான். முகத்தில் முத்து முத்தாய் வியர்த்திருந்த துளிகளை உள்ளங்கையால் துடைத்தான்.

    பளிசென்ற முகம், அங்கு இரு நிலவு இருப்பதாக கற்பனை விதைத்தது.

    “பெண்களே அழகுதான். அதுவும் இந்த பெண் கொள்ளை அழகாக இருக்கிறாள். ஒரு வேளை, பேயாக இருப்பாளோ…..?” கண்கள் மிரண்டது.

    கால்களில் கொலுசு மின்னியது,கண்கள் வரை வந்த கவிதை வெற்றுப் பார்வையானது.

    “இவள் ஒரு யட்சியைப் போல இருக்கிறாளே?” மனம் தடம் புரண்ட இறகுகளால் வானம் பார்த்தது. சட்டென ஒரு வானம் விளக்கிய முகம் தெளிவாக பாதையும் விதைத்தது.

    “இவள் ஒரு மோகினியாகவே இருந்தாலும் இவளைக் காப்பாற்றியே ஆக வேண்டும்….”. முடிவெடுத்த மணித் துளியில் மயங்கி கிடந்த யட்சியை தூக்கி தோளில் போட்டான். யாரோ பின்னாலிருந்து அவன் முதுகில் ஓங்கி உதைத்தார்கள்.

    தோளில் கிடந்தவளின் கனமும் சேர, கண நேர தடுமாற்றத்தில் அவளோடு முன்னோக்கி சென்று செடிகளூடே விழுந்தான். சற்று சுதாரித்துக் கொண்டு எழுந்தவனின் முன்னால் நான்கு பேர் கோபங்களின் உச்சமாய் பற்கள் கடித்து நிற்க, ரத்தம் வரும் வரை காத்திருந்து தொட்டுப் பார்த்துப் பின் அடிக்கும் அளவிற்கு பொறுமை இல்லை.

    சில பேரை பார்த்து, நிதானமாக அடிக்கவெல்லாம் முடியாது. பார்க்க பார்க்க அடிப்பதை விட, பார்த்தவுடன் அடித்து துவைப்பது, மூன்று வரியில் முழுதும் புரிந்துவிடும் ஹைக்கூ….

    மூன்று மூன்று வரியாக நால்வரையும் மாற்றி மாற்றி வெளுத்தெடுத்தான். அடிக்க அடிக்க கோபம் குறையவேயில்லை. எப்படி குறைப்பது? கோபத்தை குறைத்தே ஆக வேண்டும். சட்டென முடிவெடுத்தவனாய் நிலாவின் சாட்சியாய், ஒவ்வொருவனின் காலையும் பற்றி இழுத்து, விழுந்து கொண்டிருக்கும் அருவியில் மலை மேலிருந்து …..தூக்கி… தூக்கி… தூக்கி… தூக்கி வீசினான்.

    இரவு மிரண்டது. உடல் சுருண்டு கிடந்த யட்சியை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு, காட்டை விட்டு வேக வேகமாக வெளியேறியவன், நடந்து கொண்டேயிருந்தான்.

    “அவனுங்கள புடிச்சு, யாரு என்னன்னு கேட்ருக்கலாமோ?

    ச்சே…… ச்சே ….. கோபம் இப்பிடியா உடம்பை மறைக்கும். சரி சரி, சீக்கிரம் காட்டை விட்டு வெளியே போய்டணும்…..”

    ரவி வர்மாவின் மனம் அதுவாகவே பேசிக் கொண்டிருக்க, கால்களே சுமையாக, அவளை தூக்கிக் கொண்டே தூங்கிய மௌனத்தோடு விழித்தவன், பாதை மாறி, மலை உச்சியில் போய் திக்கு முக்காடி நின்றான். என்ன ஏது என்று குழம்பிய பார்வையோடு, மயங்கி கிடந்தவளை மெல்ல இறக்கி மலை உச்சி சமவெளியின் சரித்தான், மனதுக்குள் விழுந்த அருவியை அடக்க முடியாமல் தவித்த படியே.

    காத்திருந்த கண்கள் திறந்து கொண்டது. முகம் திறந்த சாவிகளாய், உச்சி மலைக் காற்றும், பிச்சிப் பூ வாசமும், உள்ளூர கிறங்கி தவித்த உணர்வுகளை கிள்ளி வைக்கத் தொடங்கியது.

    “யாரிவன்?” என்று கூர்ந்து கவனித்து பின் கத்தினாள். காடு முழுக்க எதிரொலித்த யட்சியின் குரலில் சங்கீதம் தேங்கி கிடப்பதாக சட்டென கல் விழுந்த குளமாய், சலனப்பட்ட ரவியின் பார்வையில் வளையம் விரிந்தது. அவள் மீண்டும்… மீண்டும்… மீண்டும்… மீண்டும் கத்தினாள். காற்றின் விரலுக்கு கற்றைக் கூந்தலை தந்தவன், வானம் நுகர்ந்து நின்றான்.

    யட்சி மிரட்சியோடு கத்திக் கொண்டே அங்கும் இங்கும் ஓடி, பின் மீண்டும் கத்திக் கூச்சலிட்டு மனம் நடுங்கி, திகைத்து, பயந்து, கீழே விழுந்து, உருண்டு, பின் நிதானிப்பது போல நிதானம் இழந்தவளாய் பரபரத்து, என்ன செய்கிறோம் என்று எதுவும் தெரியாதது போல, அவனை நோக்கியே ஓடி… அவனை பின் புறத்திலிருந்து இறுக கட்டி அணைத்துக் கொண்டாள். அவளின் மார்புக்குள் மாட்டிக் கொண்ட விழிகளின் சிமிட்டலாய் அவளின் இதயத் துடிப்பு. அது தீரா தாகத்தின் ஓடையை வியர்வையாக்கிக் கொண்டே இருந்தது. நெஞ்சைத் துளைத்து வெளியேறும் வித்தை கற்றவளோ! கைகளின் பிடியை மெல்ல தளர்த்தி, மெல்ல மெல்ல திரும்பியவன், விழி நோக்க, இதழ் நோக்க, விரல் கொண்டு கழுத்தெங்கும் உயிர் காக்க, யட்சி நடுங்கிக் கொண்டே இன்னும் இன்னும் நெருங்கி அவன் நெடி நுகர்ந்தாள்.

    இரவின் வேலைப்பாடு கசகசத்து நிற்க, செய்வதறியாமல் இருவரும் நேருக்கு நேர் நின்று, விழி மாற்றி தின்று, வானம் பூமி இடம் மாறி வித்தை கற்பதாக விரல் கோர்த்து நிற்கையில், அருவியின் அலறல் அவர்களை கலைத்து விடும் ஓவியமாகவே விழுந்து கொண்டிருந்தது.

    எது கனவு… அவளே கனவா…..
    எது நிஜம்… அவளே நிஜமா?

    கண்களுக்குள் நெல்லிக்கனி சாத்தியமா? நிலவொளியின் இரவில் அவள் புது வண்ணம் பூசி நிற்கிறாள். பூங்காற்றில் ஒரு தேகம் விளைந்தது எப்படி? மெல்லிடை மௌனங்களில் மெய்ம் மறக்க செய்யும், இலைகளில் தங்கிவிட்ட மழைத் துளியென சிலிர்ப்பை உதிர்ப்பவளா? விழி நோக்கின் கூர் வாள். இதழ் நோக்கின் மழை தூறும்.

    வேகத் தடைகளில் சிக்கிய வாகனம் ஆடி அசைந்து நின்று நிதானிக்கும் தருணத்தின் நுனி பிடித்து, பட்டமாக பறக்கும் மனதை சற்று நேரம் கடந்தவனோ! அவன் பெருமூச்சில் காடெரிக்கும் மூங்கில் வாசம் கொண்டவனோ…..?

    காதலின் உச்சம் மரணம். மரணத்தின் மிச்சம் இந்தக் காதல். தான் யார், நான் யார், யார் யார், யார் யார்? தெரியவில்லை. தெரிய வேண்டாம். பூலோகம் மறைந்து ஒரு புள்ளியாகி நிற்கையில் அதை பொட்டாக்கி வைத்துக் கொள்ள, நெற்றியில் வாழும் காதல். உடலற்று போகும் உயிர் பற்ற, யுத்த கதறல். யுத்தம் நெஞ்சோடு மார் நிற்கும் வித்தை, வித்தை துளைத்து வெளியேறும் சப்தம்.

    மூங்கில் வாசிக்கும் காற்றில் புல்லாங்குழல், அவள் குழலானது. பட்டு பட்டு, தொட்டு தொட்டு, உயிர் வாசம் கலந்து, உணர்வாகி நெருங்கி, இமை மூடும் கணத்தில் செத்தாலும் சுகமே. அவன் கொன்றாலும் தகுமே. அவள் என்ற அவனும், அவன் என்ற அவளும், எதுவென்ற எதுவாகவோ, எது வென்ற எதுவாகவோ மறதிகளின் பிரபஞ்சம் போல, பால்வெளி தேசத்து கடுங்குளிராகி, பழங்கதை மறந்த பருவங்களின் பதியலை, தேகம் கலந்த போது, தேகமில்லை அங்கே, தேநீர் சூட்டின் கதகதப்பில், காடெங்கும் சிறகடித்த பறவைகளின் நகல்களாய் இறக்கை முளைத்தார்கள்.

    விரல் கோர்த்து விழி கடக்க, விடியல் வந்து இசை வார்த்தது.

    கதவு தட்டப்படும் சத்தம் ஆழ் கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பது போல, மூளையைத் தொட்டு தொட்டு ஒளிந்து கொண்டிருந்தது. கிடைத்து விட்ட இரவென சூடேறிக் கிடக்கும் மணல் குன்றுகளிலிருந்து ஒரு யட்சி மேலெழும்பி வந்து காது கடித்த உணர்வில் திடுக்கிட்டு விழித்தெழுந்தான் ரவி வர்மா.

    அவனின் கண்கள் சிவந்து கிடந்தன. காடுகளின் வாசம், சுவாசமாகிக் கிடப்பதாக நினைத்துக் கொண்டே கண்கள் கசக்கி, தலை முடி சரி செய்து கொண்டே கதவு திறந்தான்.

    காற்றில்லா தேசமோ இது? வெயில் மட்டும் வெள்ளிகளை உதிர்த்துக் கொண்டிருக்க, வியர்த்த முகத்துடன், சிவந்த தேகத்துடன், சிறு புன்னகை இதழில் அடக்கி, குறு நாணம் கண்கள் சுமக்க, கிறுகிறுக்கும் மேடுபள்ள வளைவுகளுடன் வாசல் கொண்ட புது கோலமாய் நின்று கொண்டிருந்தாள் தேவதை போலொரு பெண்ணொருத்தி….

    அறைத் தோழன் வெற்றுக் காகிதமாக வெறித்திருக்க, கொட்ட கொட்ட விழிப்பதற்கே, கொக்கின் கால்களின் தவங்களை கருவாக்கிக் கொண்ட கண்கள் கொண்ட அவள், என்ன வீட்டுக்கு வந்தவங்கள, உள்ள கூப்ட மாட்டீங்களா?” என்றாள். குரலில் குறும்பு மிதந்தது. அரும்பு முடிகளில் மேலுதடு, மெல்லிசை மீட்டியது.

    “ம்……. கூப்டலாம்…….. ஆனா நீங்க……. ” என்று முணங்கிய ரவிவர்மாவின் மனதுக்குள் மலையளவு தடுமாற்றம்.

    சட்டென இனம் கண்டு கொண்ட நினைவுகளில் “இவள் எப்படி இங்கே?” கேள்வி வானம் கொத்திய பறவையின் அழகுகளாகி கீறிட்டது.

    “என்னங்க, ஏதோ பேயப் பார்க்கற மாதிரி, பாக்கறீங்க?” என்றாள் அவள். இன்னும் வெட்கச் சிரிப்பை அடக்கவே முயன்று கொண்டிருந்தாள்.

    ரவி வர்மா, செய்வதறியாத முகம் ஒன்றை மாட்டிக் கொண்டிருந்தான். அவன் உடல் நடுங்கியது. நடுக்கமே வியர்வையை பிடுங்கியது.

    அறைத் தோழன், அருகே வந்தான். “என்னடா? புதுசா பொண்ணு! அதும் வீட்டுக்கே? ம்ம்ம்…… நடத்து நடத்து……..” என்றான் சன்னமான குரலில்.

    “யாரடா… இவன் வேற…….” என்று நண்பனை முறைத்து விட்டு, “ஏங்க, உங்கள எனக்கு தெரியல, ஏதாவது அட்ரஸ் மாறி வந்திட்டீங்களா?” என்றான் ரவி வர்மா அப்பாவியாக.

    அவன் மனதுக்குள் ஒரு கூடை யோசனை…”இவள் எப்படி நேராக?”

    “அடப்பாவி, நைட் முழுக்க காட்டுக்குள்ள கூட இருந்துட்டு இப்போ யார்னா கேக்கற?” அவள் கண்களில் கொப்பளித்த கோபம், நண்பனையும் சேர்த்து எரிக்க முயற்சித்தது.

    தலையை பிடித்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். தலைக்குள் அருவியின் பேயாட்டமும், உச்சி மலைக் காற்றின் பதட்டமும், முற்களை பதிப்பதாக தடுமாறினான்.

    சுவற்றில் சாய்ந்து, நிலை தடுமாறியவனை சட்டென எட்டிப் பிடித்து அமர வைத்தான் நண்பன்.

    “என்னடா நடக்குது? இந்தப் பொண்ணு யார்.? எந்த காட்டுக்குள்ளடா போன? ஒரு நைட் உன்னத் தனியா விட்டுட்டு எங்கயும் போக முடியல. இந்த பகல்ல பாக்கற மேட்டர, நைட்டிலயும் பாக்கற உன் பாழாப் போன பைத்தியகாரத்தனத்த எப்பதான் நிறுத்தப் போறாயோ?

    ………………………………………………………………………………………

    “சொல்லுடா, டென்சன் பண்ணாத, நைட் எங்க போன? இந்தப் பொண்ணு யாரு? சொல்லுடா….”

    சரி சரி என்பது போல் பார்த்த ரவி வர்மா தன் நண்பனை அருகில் வருமாறு ஜாடை செய்தான். ஒரு கண்ணில் அந்த பெண்ணும் இருக்கத்தான் செய்தாள். இருந்தும் ஏதோ ரகசியம் பேசுபவன் போல அவன் காதில் பேசத் தொடங்கினான்.

    “மச்சான், நைட் நான் எங்கயும் போகலடா… ஆனா……” என இழுத்தான்.

    “என்ன ஆனா? அதான் சொல்ல வந்துட்டீல்ல, சொல்லிடு. அப்பத்தான் ஏதாவது முடிவுக்கு வர முடியுண்டா…..” நண்பன் கண்கள் சிவந்தான்.

    “சரி, நான் காட்டுக்குள்ள போகல. ஆனா நைட் முழுக்கக் காட்டுக்குள்ள இருந்த மாதிரியும், இந்த பொண்ணக் காப்பாத்தின மாதிரியும் ஒரு கற்பனை எனக்கு வந்துச்சு…..” என்றான் படு சீரியஸாக.

    “என்னது கற்பனையா…..? லூசாடா நீ? நைட் முழுக்க கூட இருந்துட்டு, இப்ப கதை, கற்பனை, கனவுன்னு உளர்ற…” என்ற அவள் தலை சுற்றி விழாதது தான் பாக்கி. பூமி தன்னை சுற்றாமல் சூரியனை சுற்றுவது போல் உணர்ந்தாள்.

    தலையில் கை வைத்து அமர்ந்தான் தோழன்.

    “இதுல யார் லூசு? அனேகமா நாந்தான்னு நினைக்கறேன்…” என அவனாகவே புலம்பினான். அந்த அறையே ஆகாயத்தில் மிதப்பதாக உணர்ந்தான். உணர்வை கலைத்தது ரவியின் சொற்கள்.

    “கதையோ கனவோ இல்ல. அது முழுக்க முழுக்க என் கற்பனை. தூங்கும் பொது வருவது கனவு. தூங்குவதற்கு முன் வருவது கற்பனை. கதையில் இரண்டும் வரும்”

    “அடிங்……. வாய மூடு வெளக்கெண்ண…. விளக்கம் குடுக்கறாரு” நண்பனை அடக்கிய நண்பன், திரும்பி அந்தப் பெண்ணை சந்தேகத்தோடு பார்த்தான்.

    “சத்தியமா நான் சொல்றது உண்மை. இல்லேன்னா இந்த அட்ரெஸ் எனக்கெப்பிடி தெரியும்? எப்படி காட்டுக்குள்ள போனேனே தெரியாத என்னை இவர் காப்பாத்தினது உண்மை. கண்டதும் காதல் வயப்பட்டது உண்மை. இரவோட கவிதையா நாங்க மனம் மாத்திக்கிட்டது உண்மை. பகல்ல பாக்கற இடத்தை நைட்டிலயும் பாக்கற வினோதமான ரசனை அவருக்கு இருக்குனு என்கிட்டே சொன்னது உண்மை. என்னை ஹாஸ்பிட்டல்ல விட்டுட்டு அவசர வேலை இருக்கு வந்தர்ரேன்னு சொல்லிட்டு, ஒரு வேளை லேட் ஆனா வீட்டுக்கு வந்துடுன்னு சொல்லி இந்த வீட்டு முகவரியை இவர் சொன்னது உண்மை. ஆனா, இப்போ கனவு கற்பனைன்னு இவர் ஏன் மாத்தி பேசறார்னு எனக்கு புரியல….”, கிட்டத்தட்ட அழும் முகம் வாய்க்கத் தொடங்கியிருந்தது அவளுக்கு.

    ரவி வர்மா புன்னகைத்தான். புன்னகை சிரிப்பானது. சிரிப்பு வெடிச் சத்தமானது.

    நண்பன் செய்வதறியாமல் திகைத்தான். இதோ இருக்கிறேன் என்பது போல, வீதி நிறைந்த காற்று வீடெங்கும் விருட்சமானது. உயிர் பிரியும் வழிகளால் இரையத் துவங்கியதாக அவர்களை சுழன்றது.

    இருவரையும் மாறி மாறி பார்த்தான் தோழன் .

    “ஒரே சம்பவம். இவள் நிஜம் என்கிறாள். இவன் கற்பனை என்கிறான். யாரை நம்புவது? இவள் ஏமாற்று வேலையில் தகவல் திரட்டி வீடு வரை வந்து ஏமாற்றுகிறாளா ? இவன் நிஜங்களையும் கற்பனை என்று நம்பும் மன நிலைக்காரனா?

    எது நிஜம்.. எது பொய்…..” தலை சுற்றி விழி பிதுங்கி நின்ற தோழனை, ரவி வர்மாவின் குரல் இன்னும் அதல பாதாளத்திற்கு அருவியாய் அழைத்து செல்லத் தொடங்கியது.

    “டேய்….. சத்தியமா இது கற்பனைதான். ஏன்னா, கற்பனைல நடந்த ஒரு விஷயத்தை இந்த பொண்ணு சொல்லல. அதாவது நிஜமா நடந்திருந்தா அதையும் சொல்லிருக்கனணுமில்ல. என் கற்பனை அவளுக்கு தெரியாதுங்கறது தான் உண்மை. அதான் அந்த ஒரு விஷயத்தை இவ சொல்லல. சொல்லவும் முடியாது….”எப்படியும் தான் ஜெயித்து விடப் போகிறோம் என்பதாக சட்டென ஒரு உற்சாக வெளிப்பாடு ரவி வர்மாவிடம் வெளிப்பட்டது.

    “மறுபடியும் என்ன சொல்லிக் குழப்ப போறானோ….?” என்பது போல நண்பன் பார்க்க, அவள் மூளை செயல் இழந்தவள் போல ரவி வர்மாவை மலங்க மலங்க விழித்தாள்.

    “என்னோட கற்பனையில, நான்தான் இவள கடத்திட்டு போய், காட்டுக்குள்ள கட்டிப் போட்டேன். அப்புறம் நானேதான் இவள காப்பாத்தினேன். காப்பாத்தின பின்னால வழி மாறிப் போறது போல மலை உச்சி போனது உண்மை. அங்க கண நேரத்துல நாங்க காதல்ல விழுந்தது உண்மை. காதலும் இரவும், இவ கடத்தபட்டு கட்டிப் போடப்பட்ட கொடூரத்த கூட மறக்க வைச்சுது. இவ மறந்திட்டா, அது காதலோட சாபக் கேடு. நான் கூட காதல்ல எல்லாம் மறந்தேன். எல்லை கூட மறந்தேன். காதலின் உச்சம் மரணம்னு இவ முனங்கிணப்போதான் என் இலக்கு நியாபகம் வந்துச்சு. இவள மலை உச்சிலிருந்து தூக்கி கீழே வீசி கொன்னேன்.”

    ……………………………………………………………………………………………….

    ஆமா….. கொன்னேன். ஆனா, இவள கொன்னுட்ட மேட்டர இவ இங்க சொல்லவே இல்ல. இதுலேர்ந்தே தெரியல, இது முழுக்க முழுக்க கற்பனைன்னு. ஆனா நிஜம்னு இவ ஏன் குழப்பறாரான்னுதான் தெரியல. யார் என்னனு விசாரிடா. இல்ல போலிஸ்…………….”, புன்னகை மாறாமல் ரவி வர்மா பேசிக் கொண்டே இருக்க…

    விரல் சுட்ட நெருப்பாய், செயல்படத் தொடங்கிய மூளை கொண்டவள், விரிந்த கண்களோடு, விபரீதம் உணரத் தொடங்கினாள். உயிரின் கனம் சுமந்து நின்றவள், இப்போதுதான் புரியத் தொடங்கினாள். உடல் என்ற ஒன்றை தான் சுமக்காமல் நிற்பதை. உடல் தழுவிய கைகளில் ஒன்றும் கிடைக்காமல் தடுமாறியவள், தன்னை தூசுகளின் மொத்தம் கடந்து போவதை மிரட்சியோடு கவனித்தாள்.

    நண்பன் மயங்கிச் சரிந்தான்.

    காதலின் கண்களில் தன் மரணத்தை, தவணை முறையில் நினைவு படுத்தினாள். மரணமே காதில் கிசுகிசுத்தது அவளை. அவள் நேற்றிரவே இல்லாமல் போனதை உணர்ந்த நொடியில், கண்கள் மூடி அமர்ந்திருந்த ரவி வர்மாவின் தலைக்கு மேல், சுவற்றில் காற்றோடு பட படத்துக் கொண்டிருந்த காலண்டர் 2017 என்று வருடத்தை காட்டிக் கொண்டிருந்தது.

    அழுது கொண்டும், அரற்றிக் கொண்டும் எதற்காக இந்த மரணம் என்று புலம்பிக் கொண்டும் தூசுகளிடம் ஊர்ந்து கொண்டு திரிந்தவள், மெல்ல கண்கள் அற்று போனாள்.

    காலண்டர் பின்னோக்கி படபடக்க 2015- ஜூன் மாதத்தில் ஒரு நாள்…….

    அவள், அவனை செருப்பால் அடித்தாள். கல்லூரியே திரண்டு நின்று வேடிக்கை பார்க்க, இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி செருப்பால் அடித்தாள்.

    “உன் மூஞ்சியக் கண்ணாடில பாத்திருக்கியா…..யூ….. பா…………. ஆளும், தலயும், ட்ரசும்…… பட்டிக்காட்டுப் பரதேசி….”

    திட்டிக் கொண்டே கடந்து விட்டிருந்தாள் அந்த அழகிய அல்ட்ரா மாடர்ன் பெண்.

    ஓடி வந்த நண்பன் அவனைத் தூக்கி விட்டு, சமாதானம் செய்து அவள் சுருட்டி வீசிய கடிதத்தில் பதிந்து கிடந்த ஆங்கில வரிகளைப் படித்தான்.

    அத்தனை வரிகளின் ஒட்டு மொத்த நோக்கமும் கலவியாகவே இருந்தது.

    அடிவாங்கி, அவமானத்தில், கூனி குறுகி, நடுங்கிக் கொண்டே அமர்ந்திருந்த ரவிச்சந்திர மூர்த்தி, தன் நண்பனின் அர்த்தமுள்ள கேள்வியின் பார்வைக்கு கண்கள் கலங்க பதிலலித்தான்.

    “நம்ம சீனியர் யட்சிகாதான் லவ் லட்டெர இங்லீஸ்ல எழுதி குடு, அப்பத்தான் சிட்டி புள்ளைங்களுக்கு பிடிக்கும்ணு எழுதி குடுத்தாங்க…..”

    குறிப்பு: தன்னை ஒரு கதாநாயகனாக நினைக்கும் போது, யாரிடமாவது சண்டை போடுவது போல நடிப்பது வெற்றி பெற்றவனாக நினைப்பது அவனின் கற்பனையின் மைல் கல்.

    Share
  • கதையல்ல நிஜம் …

    –மாதவன் ஸ்ரீரங்கம்.

    டாக்டர் அவனை விசித்திரமாகப் பார்த்தார்.

    “என்ன பண்றீங்க?”

    “பேங்க்ல அக்கவுண்டன்ட்டா இருக்கேன் டாக்டர்”

    “எப்பயிருந்து இது மாதிரி தோணுது உங்களுக்கு?”

    “தோணலை டாக்டர். நடக்குது. சின்னச்சின்னதா நெறைய சம்பவங்கள். என்னோட வேலையை வச்சு ஒரு கதை எழுதினேன். அதாவது என் பேங்குல திடீர்னு ஒருநாள் ராத்திரி தீவிபத்து நடந்து எல்லா டாக்குமெண்ட்ஸும் எரிஞ்சுபோயிடற மாதிரி எழுதுனேன். நாலாவதுநாள் அதேமாதிரி தீவிபத்து நடந்தது. அப்பறம் இன்னொரு கதை எழுதினேன் டாக்டர். அதுல ஹீரோ பைக்ல வேலைக்கி போறப்ப பைக் ஆக்ஸிடன்ட் ஆகி வலதுகால்ல பிராக்சர் ஆகுற மாதிரி எழுதிருந்தேன். நாலாவதுநாள் நா கதைல எழுதியிருந்த அதே இடத்துல, அதே முறையில ஆக்ஸிடன்ட் ஆகி என் வலதுகால் பிராக்சர் ஆயிடுச்சி”

    டாக்டர் அமைதியாயிருந்தார். இதுபோல அவர் அதிகம் கேள்விப்பட்டதில்லை. இதை ஹாலூஸினேஷன் வகையிலும் சேர்க்கமுடியாது என்று தோன்றியது அவருக்கு. எங்காவது நாம் கதையாக எழுதுவதெல்லாம் யதார்த்தத்தில் நடக்குமா? நடக்கிறது என்கிறான் அவன்.

    “இல்ல. மொத நீங்க எப்பயிருந்து இதை கவனிக்க ஆரம்பிச்சீங்கன்னு சொல்லுங்க”

    “நாலு வருஷம் முந்தி நா ஒரு சிறுகதை எழுதுனேன் டாக்டர். ஒரு சின்னப்பொண்ணு மூடாத சாக்கடைக்குள்ள விழுந்து செத்துபோறதுதான் கரு. அதை எழுதி நாலாவது நாள் பக்கத்து வீட்டுப்பொண்ணு அதேமாதிரி செத்துடுச்சி”

    “இது நம்ம நாட்டோட சாபக்கேடுங்க. எத்தனை உசிருங்க. ஆனா இன்னும் அதே தப்பைத்தான் தொடர்ந்துட்டிருக்காங்க. இது பொதுவானதுதாங்க”

    “நானும் அப்டித்தான் நெனச்சிருந்தேன் டாக்டர். பட் அந்த புள்ளைய பார்க்க ஆஸ்பத்திரி போயிருந்தப்பதான் கவனிச்சேன். என் கதைல என்னவிதமா அந்த பொண்ணை வர்ணிச்சனோ அதேமாதிரி இருந்தது எப்படி டாக்டர்”?

    டாக்டர் யோசித்தார். “இது ஒன்னும் பெரிசில்ல… சிவ…”

    “சிவான்னே கூப்பிடலாம் சார்”

    “ஆங்.. சிவா. உங்க பக்கத்துவீடுன்னு சொல்றீங்க. அடிக்கடி பார்த்ததுல அந்த பொண்ணு உருவம் உங்களுக்குள்ள ஆழ்மனசுல பதிஞ்சிருக்கும். அதைத்தான் உங்க கதைல வர்ணிச்சிருக்க சான்ஸ் இருக்கு”

    “இதை நானும் யோசிச்சேன் சார். பட் செத்தப்ப அந்த பொண்ணு போட்ருந்த டிரஸ்கூட கதைல வர்ணிச்ச அதே டிரஸ்தான் சார். இதுக்கு என்ன விளக்கம் சொல்வீங்க”?

    டாக்டருக்கும் உண்மையாகவே சற்று குழப்பமாகத்தான் இருந்தது. இது சாத்தியமில்லை. ஆனால் அதை இவனுக்கு புரியவைக்கவேண்டும்.

    “சரி அதை விடுங்க. வேற சொல்லுங்க”

    “அடுத்தகதை ஒரு நாலுமாசம் கழிச்சு எழுதினேங்க. ஒரு பொண்ணும் பையனும் லவ் பண்றாங்க. வீட்ல ஒத்துக்கல. வீட்டைவிட்டு ஓடிப்போயிடறாங்க. ஒரு ஃபிரண்ட்டை தேடி போறாங்க. போன எடத்துல ஃபிரண்ட் ஊர்ல இல்ல. போன்ல தன்னோட ஃபிரண்ட் அட்ரஸ் குடுக்குறான். அவங்களும் அங்க போறாங்க. அவனும் கொஞ்சம் தயக்கத்தோட தங்க வைக்கிறான். மறுநாள் காலைல ரெண்டுபேரும் வீட்ல வெஷம் சாப்பிட்டு செத்துக்கெடக்காங்க”

    “சோ.. சேட்.. அப்பறம்?”

    “அவ்ளோதாங்க கதை”

    “அப்டியா. சோ சிம்பிள். இதுல என்ன பிரச்சனை?”

    “இல்ல டாக்டர். கதைல அந்த ஃபிரண்ட் தர அட்ரஸா நா எழுதிருந்தது என்னோட ஒரிஜினல் அட்ரஸ் சார்”

    டாக்டருக்கு சிரிப்பு வந்துவிட்டது. “சோ வாட்?”

    “சோ வாட்டா? சார் கதை எழுதுன நாலாவது நாள் உண்மையிலியே ஒரு பொண்ணும் பையனும் என் வீட்டுக்கு வந்துட்டாங்க சார். என் ஃபிரண்ட் போன் பண்ணி தங்க வச்சிக்க சொன்னான். நானும் மடத்தனமா ஒத்துகிட்டேன். காலைல அவங்க ரெண்டுபேரும் என்வீட்ல செத்துகெடக்காங்க”

    “ஓ மைகாட் !! அப்பறம் என்னாச்சு?”

    “அப்பறமென்னங்க. போலீசு கோர்ட்டுன்னு அலையா அலைஞ்சதுதான் மிச்சம். அப்பயிருந்துதான் எனக்கு டவுட்டு வர ஆரம்பிச்சுடுச்சி”

    டாக்டர் அவனையே ஆர்வமாக பார்த்துக்கொண்டிருக்க அவன் தொடர்ந்தான்.

    “சரி இதை டெஸ்ட் பண்ணிப்பார்த்துடலாம் அப்டீன்னு யோசிச்சிட்டிருந்தப்பதான் அடுத்த கதை எழுதுனேன். ஆனா வேற யாரையாச்சும் வச்சி எழுதினா உண்மையா பொய்யான்னு எப்டி தெரிஞ்சுக்கிறது? அதான் என்னையே ஹீரோவா வச்சு ஒரு கதை எழுதினேன்”

    “இன்ட்ரஸ்டிங் சிவா. பட் அது பெரிய ரிஸ்க் இல்லையா? இன்கேஸ் அது உண்மையாவே நடக்கும்பட்சத்தில ..?”

    “ஒரு வகைல அது ரிஸ்க்தான் டாக்டர். ஏன்னா நா எழுதுனது காதல் கதை. மர்டர் கதைக்கெல்லாம் நம்ம பாடி தாங்குமா டாக்டர். அதான் உசாரா காதல் கதை. ஆனா மர்டரே பரவாயில்லைன்ற அளவுக்கு டெரர் பண்ணிருச்சிங்க காதல்”

    டாக்டருக்கு இப்போது ஆர்வம் அதிகரித்திருந்தது. நல்லவேளையாக இரவின் இறுதி நோயாளியாக வந்தான். ஆனால் இவன் நோயாளிதானா? எல்லாவற்றையும் தெளிவாகத்தான் பேசுகிறான். என்றெல்லாம் உள்ளுக்குள் யோசித்தபடி காத்திருந்தார்.

    “ஒரு பொண்ணு டாக்டர். உங்களுக்கு புடிச்சமாதிரி யாரையாச்சும் கற்பனை செஞ்சுக்கங்க. அப்டி ஒரு பொண்ணு. ஒரு கல்யாண மண்டபத்துல சந்திக்கிறான் ஹீரோ. லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்னு சொல்வாங்களே. அதுதான் சார். ஒடம்பு மனசெல்லாம் தீயா எரியுது காதலால. அந்த பொண்ணுக்கும் அவனை புடிச்சிருக்குன்னு அப்பப்ப ஓரக்கண் பார்வை வச்சு புரிஞ்சுக்கிறான். ஆனா எப்டி பட்டுன்னு கேக்குறதுன்னு தயக்கம்.”

    வேற வழியில்லாம பல்லாயிரம் தாத்தாக்கள் காலத்துக்கு முந்தின டெக்னிக் ஒன்னை கையாளலாம்னு நெனச்சி அந்த பொண்ணுக்கு சின்ன பேப்பர்ல புடிச்சிருக்கா? அப்டின்னு எழுதி சின்னப்புள்ளை ஒன்னுகிட்ட குடுக்கலாம்னு யோசிச்சு ஒரு சின்னப்புள்ளைய கூப்பிடுறான். ஓடிவந்த அந்த புள்ள இவனுக்கு முன்னாடி ஒரு துண்டுபேப்பர இவன்கிட்ட குடுக்குது. பார்த்தா. இவன் நெனச்சதை அந்த பொண்ணு செஞ்சிட்டா”

    “சூப்பர் சிவா. அப்டியே மூவி பார்க்கிற மாதிரி இருக்கு. கன்டின்யு”

    “அப்பறம் என்னங்க. வழக்கம்போல பார்க் பீச் எல்லாம் சுத்தியடிச்சிட்டு. அப்டியே கழட்டி விட்ருக்கலாம். லூசு மாதிரி அவங்களுக்கு கல்யாணத்தை பண்ணி கதைய முடிச்சிட்டேன்”

    “ஏம்பா நல்ல முடிவுதானே. என்ன பிரச்சனை? அந்த பொண்ண உண்மையிலியே பாத்தியா?”

    “அட …ஏன் டாக்டர் நீங்க ஒண்னு. அது எல்லாமே அப்டியே நடந்துச்சிங்குறேன். கல்யாணத்துல மீட் பண்ணப்ப நா கதைல எழுதிருந்த அவ புடவை டிசைன்ல அப்டியே வந்து நிக்கிறா. எல்லாமே கதைப்படி நடந்து எனக்கு ஒய்ஃபா வீட்ல இருந்துகிட்டு உசிர வாங்குறா”

    “ஹஹ்ஹ்ஹ்ஹா”

    “நா எவ்ளோ சீரியஸா சொல்லிட்ருக்கேன். நீங்க என்ன சார் சிரிக்கிறீங்க?”

    “அதென்னமோ தெரியல சிவா. உங்க கதை கேட்டா அப்டி சிரிப்பு வருது எனக்கு. மேல சொல்லுங்க”

    “அப்பறம் நா யோசிச்சேன். இது வேலைக்காவாது அப்டின்னு கொஞ்சநாள் எழுதாம இருந்தேன். அப்பறம் என் ஒய்ஃப் தான். உங்களுக்கு நல்லா எழுத வருது. தொடர்ந்து எழுதுங்கன்னு என்கரேஜ் பண்ணா. சரின்னு நானும் எழுதுனேன். இந்த வாட்டி ரொம்ப வெவரமா நடிகர் டேஷ் ஸ்டார் என் வீட்டுக்கு வரமாதிரி ஒரு கதை எழுதுனேன் டாக்டர். நீங்க நம்பினாலும் நம்பாட்டியும் சத்தியமா அப்டியே நடந்ததுங்க.”

    “எங்க தெருவுல ஷூட்டிங் வந்துருக்காரு. எங்க ஏரியால ஜாஸ்தி வீடுங்க எல்லாம் இல்லையா ? இருக்குற ஒன்னுரெண்டு வீடுகள்லயும் பூட்டிட்டு வேலைக்கி போயிருவாங்க. அதனால என் வீட்ல கொஞ்சநேரம் வெயிலுக்கு வெயிட் பண்ணியிருந்திருக்காரு. என் ஒய்ப் ஆபீசுக்கு போன் பண்ணப்ப என் நெலமை எப்டி இருந்திருக்கும்னு யோச்சிப்பாருங்க டாக்டர்”

    டாக்டர் இந்தமுறை சற்று பலமாகவே சிரித்தார்.

    “நீங்களே சொல்லுங்க. அந்த ஏரியாவுலயே வீடுகள் ஜாஸ்தியில்லன்னு சொல்றீங்க. அந்த டேஷ் ஸ்டாரும் பெரிய வேல்யு இல்லாத நார்மல் நடிகர்தான். சோ கேரவன் எல்லாம் அவருக்கு சான்ஸ் இல்ல. அதனால பக்கத்துல இருந்த உங்க வீட்ல வந்து கொஞ்சநேரம் ஒக்காந்துருக்காரு. லாஜிக்கலா எல்லாமே பொருந்துதே. இது சாதாரணமா நடக்கக்கூடிய ஒண்ணுதானே சிவா?”

    இப்போது அவன் சிரிக்கத்தொடங்கினான்.

    “ஏன் சிரிக்கிறீங்க?”

    “சரி டாக்டர். நான் உங்க வழிக்கே வரேன். கொஞ்சநாள் முந்தி ஒரு கதை எழுதினேன். அதுல ஒரு பிளைட்டு மர்மமான முறையில் காணாம போறதாவும், கடைசிவரை கண்டுபிடிக்கவே முடியாம போறதாவும் எழுதிருந்தேன். எழுதி நாலாவதுநாள் நியூஸ் பேப்பர்ல படிக்கிறேன். மலேஷியா ஃபிளைட்டு காணாம போயிருச்சின்னு. இன்னிக்கி வரை கண்டுபிடிக்கலை”

    டாக்டர் சில விநாடிகள் தீவிரமாக யோசித்துவிட்டு சொன்னார்.

    “இது ஒன்னும் பெரிய ட்ரபிள் இல்ல சிவா. சும்மா பெரிய பெரிய மெடிக்கல் டேர்ம்லாம் சொல்லி உங்கள பயமுறுத்தவிரும்பல. இது ஒருவிதமான பிரமைதான். அதாவது இயற்கையா தற்செயலா நடக்குற எல்லாத்துக்கும் ஒரு காரணம் கற்பிச்சுக்குறது. ஃபார் எக்ஸாம்பிள். அந்த செவுத்த பாருங்க”

    அவன் திரும்பி டாக்டர் காட்டிய திசையில் பார்த்தான்.

    “அந்த ஜன்னலுக்கு பக்கத்துல நிழல் தெரியுதா?”

    “தெரியுது டாக்டர்”

    “குட். அந்த நெழல்ல எதாவது உருவம் தெரியுதா பாருங்க”

    “அட ஆமா டாக்டர்.. ஒரு மாதிரி.. ஆங் ஆடுமாதிரி இல்லயில்ல.. குதிரை மாதிரி இருக்கு டாக்டர்”

    “ஹஹ்ஹ்ஹா நான் சொல்லலை? இதான் விஷயம். உண்மையில அங்க நெழல் மட்டுந்தான் இருக்கு. இப்ப ஆடு குதிரைன்னு நாம பார்த்ததெல்லாம் நம்ம கற்பனைதான். இப்டித்தான் லைப்ல பல விஷயங்களுக்கு நாமளா எதாவது நெனச்சிக்கிறோம். இது காமன்தான் சிவா. சில மெடிஸின்ஸ் எழுதித்தரேன். எடுத்துக்கங்க. நல்லா டைமுக்கு சாப்டுங்க. தூங்குங்க. இதைப்பத்தியெல்லாம் நெனைக்காம உங்க வேலைய பாருங்க”

    “அப்ப நான் ஃபேஸ் பண்ணதெல்லாம் எதார்த்தமா நடந்த ஒண்ணுதான்னு சொல்றீங்களா டாக்டர்”?

    “நிச்சயமா சிவா. நீங்களே வீட்டுக்குப்போயி பொறுமையா யோசிச்சுப்பாருங்க. இதையெல்லாம் செய்யிறது நம்மளோட கிரியேட்டிவிட்டி மைன்ட். அது உங்களுக்கு கொஞ்சம் ஜாஸ்தி ஒர்க்காவுது அதான். இதையெல்லாம் கரெக்டா பயன்படுத்திக்கிட்டவங்கதான் பிற்காலத்துல பெரிய செலிபிரட்டியா ஆகிருக்காங்க. நீங்களும் ஒருநாள் பெரிய ஆளா வர வாழ்த்துக்கள்”

    அவன் மிகுந்த குழப்பத்துடன் எழுந்துகொண்டான்.

    “என்ன சிவா? ஃபீஸ் ரிசப்ஷன்ல குடுத்துடுங்க” என்றபடி சிரித்தார் டாக்டர்.

    “அதில்ல சார்.. வந்து…”

    “சொல்லுஙக. என்னமோ தயங்குறீங்க”…

    “ஒண்ணுமில்ல டாக்டர்” என்றபடி அவன் நகர ரிசப்ஷன் பெண் உள்ளே வந்து இன்னொரு பேஷன்ட் வந்திருப்பதாகச் சொன்னாள். டாக்டர் வரச்சொல்ல, இவன் வெளியேறும்போது தோளுரசியபடி டாக்டரின் அறைக்குள் நுழைந்தவனை எங்கோ பார்த்ததுபோலிருந்தது.

    ரிசப்ஷனில் பணமெல்லாம் கொடுத்து பக்கத்து ஃபார்மசியில் மருந்துகள் வாங்கும்போதுகூட யோசித்தான். எங்கோ மிக நெருக்கமாக பார்த்த முகமாக நன்கு அறிமுகமான முகமாக தோன்றியது. முக்கியமாக அவன் வலது புருவத்தின் அருகிலிருந்த மரு. நன்றாக நினைவிருக்கிறது. அது இவனது கதையொன்றின் பாத்திரம்தான்.

    தெருமுனை டீக்கடையில் டீ சொல்லிக்காத்திருக்கும்போது நான்கு நாட்கள் முன்பு தான் எழுதிய கதையை நினைவுபடுத்திப்பார்த்தான்.

    சிட்டியில் தொடர்ந்து நிகழும் சீரியல் கில்லர் ஒருவனைப் பற்றிய கதை அது. அதில் ஹீரோ டாக்டர்களக தேடிக்கண்டுபிடித்து கொலைசெய்வதுதான் கதை. சரியாக சற்றுமுன்பு டாக்டரின் அறைக்குள் நுழைந்தவன் இவன் கதையில் வந்தவனைப்போலவே இருந்தான்.

    இவன் டீ ஆறிக்கொண்டிருந்தது.

    Share
  • “ஜெனி…நீ வருவாயா?”

    —  கனவு திறவோன்.

    டூ வீலரை பார்க் செய்துவிட்டு ஸ்டேசனுக்குள் நுழைந்து முதல் பார்வையில் ஜெனிஃபரைத் தேடினேன்.

    அவள் இடம் வெறுமையாக இருந்தது. இன்னும் அவள் வரவில்லை.

    ‘ப்ச்’ எத்தனை நாள் தான் இப்படி டபாய்ப்பாள்?

    ரஜினியின் அடுத்தப் பட அறிவிப்பு போல சஸ்பென்ஸ் எகிறுகிறதே? இன்றாவது வருவாளா வரமாட்டாளா?

    எங்காவது களவு, கொலை நடந்தால் எனக்கும் ஜெனிபருக்கும் தான் முதல் சம்மன் அனுப்புவார் இன்ஸ்பெக்டர். நான்கு நாட்களாய் ஜெனிஃபர் டூட்டிக்கு வரவில்லை. அதனால் வேலையில்லாமல் ஸ்டேசனில் முடங்கிக் கிடந்தால் வெறும் டீ பாய் வேலைதான் மிஞ்சுகிறது.

    இந்த மகளிர் போலீஸ் ஸ்டேசன் வந்த பிறகு எங்கள் ஸ்டேசனில் வேலை பார்த்த அழகிகளை அங்கே மாற்றி விட்டார்கள். கண்ணுக்கு அளர்ச்சியாக இருக்கிறது.

    என்ன செய்யலாம்? எதற்கும் மணியிடம் கேட்டுவிடலாம்…

    ஆண்ட்ராய்ட் போனில் மணியைக் கூப்பிட்டேன்… மணியிடம் நிச்சயம் காரணம் இருக்கும். ஆஃபிசுக்கு வராமல் மட்டம் போடும் அத்தனை பேரின் உண்மை முகத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டி விடுவான்.

    “என்ன மணி? இன்னைக்கும் ஜெனிஃபர் வரல…”

    “திருமல…, ஜெனிக்கு பேதி சரியாகல… அதனால மூடும் சரியில்ல… இன்னிக்கு வர்றது டவுட்டு தான்…” என்று ஸ்னிஃபர் டாக் ஜெனிஃபர் வர இயலாத காரணத்தை விளக்கினார் அதன் டிரைனர் மணி.

    Share
  • செந்தூரப்பூவே …

    –கவிஜி.

     

    சின்னக் கண்ணன் தோட்டத்துப் பூவாக .. ஒரு தேவதை வந்தது நீராட ..
    வெண்ணிற ரோஜா, தன்னிறம் மாறி மாலை சூடுதோ ..
    அந்த வானம் பூக்களை தூவாதோ .. புது வாழ்த்துக் கவிதைகள் பாடாதோ ..

    அதற்கு மேல் ரவியால் அந்த பாடலை கேட்க முடியவில்லை. சில போது பிடித்த பாடலைக் கூட முழுதாகக் கேட்க முடிவதில்லை, காற்றெல்லாம் கனமானது போன்றே அந்த மதிய வேலை அவனுக்குள் பல வித யோசனைகளை அல்லது நினைவுகளை கிளறி விட்டுக் கொண்டிருந்தது. அவனுக்குப் பிடிக்காத தொழில் மோட்டார் தொழில். ஆனால் இன்று அவனின் வாழ்வாதாரம் அவன் செய்யும் இந்த டிரைவர் தொழில்தான்.

    ஏனோ சற்று ஓய்வு தேவை என்று மனதிற்குப் பட்டதால் அந்த ஆற்றோரம் நிறுத்தினான்.

    “எப்டிண்ணே இவ்ளோ பெரிய லாரியை நாய்க்குட்டி மாறி அடக்கற……’

    சற்று சிக்கலான இடங்களில் மொத்த திறமையையும் பயன்படுத்தி லாவகமாக வண்டியை நிறுத்துவதும் இயக்குவதும் என்கின்ற பொழுதுகளில், அந்த லாரியின் கிளீனர் இலக்கி மேற்சொன்னவாறு கேட்பதுண்டு.

    செய்யும் தொழில் ஒரு கட்டத்திற்குப் பின் மிகச் சரியாக பழகி விடும்.

    வண்டியை நிறுத்திய பின் இலக்கி மதிய உணவு தயாரிக்க தொடங்கினான்.

    “அண்ணே வெங்காய சாம்பார் வைச்சிடலாமா என்றான்” அதில் அவன் நிபுணன்.

    தலையாட்டி விட்டு, வண்டியை விட்டு இறங்கி சாலையோரம் தலைவிரி கோலமாய் நின்ற ஆலமரத்தின் கீழ் அமர்ந்தான்.

    மனதுக்குள் முணு முணுககாமல் இருக்க முடியவில்லை.

    சின்னக் கண்ணன் தோட்டத்துப் பூவாக ஒரு தேவதை வந்தது நீராட …….

    தலையெல்லாம் ஆங்காங்கே ஒட்டியிருந்த பருத்தி நூலோடு சசிகலா நடந்து வந்து கொண்டிருக்க, இவன் அமர்ந்திருக்கும் தேநீர் கடையிலிருந்துதான் அந்த பாடல் கசிந்து கொண்டிருந்தது.

    தேவதை வந்தது நீராட… என்ற வரிக்கும், அவள் யதேச்சையாக, கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் ரவியை பார்ப்பதற்கும் சரியாக இருந்தது. காலக் கணக்கு …

    அட, நம்ம சசி!!! இதுவரை பார்த்த பார்வையில் இருந்து சட்டென விலகி வேறு யாரோ மாதிரி இருக்கிறாள். மெல்ல புன்னகைத்துப் போனாள். தெரிந்த பையனுக்கு எவ்ளோ புன்னைகையோ… அவ்ளோ.

    சுள்ளென்று அடித்தது சில்லென்ற பனித்துளி… சுளீரென கடித்தது கையிலேறிய எறும்பு …

    “ஏய் … ரவி … இன்னும் இங்க என்ன பண்ணற? படம் முடியற நேரம்டா……” அலாரம் அடித்துப் போனான் அன்பு.

    அட ஆமா!!! என்று கடைசி மிடரை கபக்கென முழுங்கி விட்டு, தியேட்டருக்குள் ஓடி சைக்கிள் ஸ்டாண்டில் தயாராகி நின்றான்.

    அவ்வப்போது எதிர்படுவாள். பெரிய வீதியில் கண்கள் உரசி, சிறு புன்னகையோடு கடந்து செல்வார்கள். ஆழ்மனதிற்குள் கொஞ்சூண்டு ஆசை அவள் மேல் இல்லாமல் இல்லை. ஆனால் அது விஸ்வரூபம் எடுக்கவில்லை. சின்ன முகம், மாநிறம், கீச் கீச் குரல்.. அவளுக்கு கிளி என்றொரு பெயரும் ஊருக்குள் உலவிக் கொண்டிருக்கிறது.

    “மஞ்சு, இந்த ரவி நல்லா ஆடறான்ல…. நல்லா டிரஸ் பண்ணா, தியேட்டர்ல சைக்கிள் பாஸ் போடறவன் மாதிரியே இல்லல. நல்லா படிப்பாண்டி. ஆனா ஒன்பதாவதுக்கு மேல பள்ளி கூடத்துக்கு போக மாட்டேனுட்டான்”, இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் தோழி மஞ்சுவிடம் இப்படி நிறைய அவனைப் பற்றி பேசியிருக்கிறாள்.

    ஆனால், இந்த விஷயம் ரவிக்கு தெரிந்ததேயில்லை. இவர்கள் இருவருமே சிறுவயதில் ஒன்றாக விளையாடியவர்கள்தான். அவன் ஒன்பதாவதில் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டவன். அவள் பத்தாவதில் முடித்துக் கொண்டவள். ஏனோ, பதின் பருவத்துக்கு மேல் அவர்கள் பேசிக் கொள்வதில்லை. சிறு புன்னகை, சிறு சிரிப்பு, சிறு வாழ்த்து, கோயில் திருவிழாக்களில் ஆடிய பின் வரும் கை குலுக்கல் அவ்வளவே.

    அந்த மதிய வேளை அவர்களால் வாழ்ந்தது என்று இந்த காட்சி முடியும் போது தெரியும். அவள் அன்று காலையில் வேலைக்குப் போகவில்லை போலும், மதியம் நடந்து கொண்டிருந்தாள் பருத்தி கம்பெனி நோக்கி.

    “பங்காளி, சைக்கிள் புதுசா?” என்றபடியே பங்காளி லட்சுமி(காந்த் ) அருகே ரவி வந்தான்.

    “ஆமா, பங்காளி… இப்பதான் ஆப்பகூடல்ல இருந்து ஓட்டிட்டே வரேன். இந்தா… ஒரு ரவுண்டு அடிச்சு பாரு,” என்றான்.

    அடுத்த காட்சிக்கு இன்னும் அரைமணி நேரம் இருக்க, சைக்கிளை வாங்கி கொண்டு வெள்ளையம்பாளையம் நோக்கி ஓட்டத் துவங்கினான் ரவி.

    வர வேண்டும் என்று முடிவெடுத்த பின், இந்த காதல் வந்தே தீரும்.

    மதிய வேளை, சூரியனும் வியர்வையும் மட்டுமே, சாலையெங்கும் கானல் நீர், சுற்றிலும் மேட்டாங்காடு, பாதை மட்டுமே பயணித்துக் கொண்டிருக்கும் நீண்டதொரு ஓவியத்தில் உறைந்து விட்ட வண்ணமென சசிகலா நடந்து போய்க் கொண்டிருக்கிறாள். சிவப்பு தாவணியில் சின்னதாய், புதுக்கவிதையாய், மூக்குத்தி சுமக்கிறது சூரியனை. கன்னங்களில் மூக்குத்திகளாய் வியர்வைதுளிகள்.

    நெருங்கி விட்டான். அவளும் பார்த்து விட்டாள். புன்னகை எப்போதும் போல…..

    “என்ன கம்பனிக்கா?”

    “ஆமா ரவி, இப்பதான் போறேன். காலைல கொஞ்சம் வேல இருந்துச்சு. ஆமா, என்ன இந்த பக்கம்….!”அவள் கேட்டபடியே நடந்து கொண்டிருக்க, இவன் அவள் பேசுவதை கேட்டபடியே மெல்ல சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தான்.

    “இல்ல….. பங்காளி லட்சுமியோட புது சைக்கிள். சும்மா ஒரு ரவுண்டு அடிக்கலாமேன்னுதான்….. ” வார்த்தைகளை இழுத்தவன், கேட்டே விட்டான்.

    “கம்பெனிக்குதான ….. வா… நா எறக்கி விடறேன்,” அவள் முகத்தையே பார்த்தான். மினு மினு என்றிருந்தது முகம்.

    அவள், “நானே கேக்கலான்னுதான் நினைச்சேன், வெயில்லு….. நடக்க முடியலப்பா..”, என்றபடியே சைக்கிளின் பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள். மனமெங்கும் ஒரு வித குளுமையை உணர முடிந்தது. ஏதோ பெரிய சாதனை செய்தவன் போல முகமெங்கும் இனம் புரியாத சந்தோசம்.

    “ஏய்…. எங்க போற? கம்பெனி இந்த பக்கம்’” என்றாள் இடது பக்கம் சென்ற பாதையை காட்டி.

    “வெள்ளையம்பாளையம் போய் ஒரு கலர் குடிச்சுட்டு திரும்ப வந்தர்லாம்,” என்றான்.

    அவனால் அவளுடன் பயணிக்கும் தருணங்களை விட்டுத் தர முடியவில்லை. அவள் மௌனத்தில் சரி என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். வண்டி வெள்ளையும்பாளையம் தாண்டி, பிரம்மதேசம் நோக்கி பயணிக்க….

    “ஏய் ரவி…… விளாடாத, நேரமாச்சு…. வண்டிய திருப்பு,” என்றாள் சசி.

    முடியாது என்றவன், பிரம்மதேசம் வரை போயிட்டு வந்தர்லாம் என்றான். வியர்த்திருந்த முகத்தில், கழுத்தில் சைக்கிள் கிழித்துக் கொண்டு செல்லும் குளிர்ச்சி குளுகுளுவென்றிருந்தது.

    “இப்ப வண்டிய திருப்ப போறீயா இல்லையா?” சற்று கடுமையாகவே இருந்தது வார்த்தைகள்.

    அவனால் இந்த சந்தோசத்தை இழக்க முடியவில்லை. சட்டெனக் கேட்டு விட்டான். “எனக்கு ஒரு முத்தம் தா.. வண்டிய திருப்பிடறேன்”.

    கண்டிப்பா தர மாட்டா.. வண்டில கொஞ்ச தூரம் போலாம் என்பது அவனின் எண்ணம்.

    “வண்டிய நிறுத்து தர்றேன்,” என்றாள்.

    அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. வண்டியை நிறுத்தினான். இறங்கியவள், “என்ன தரமாட்டேன்னு நினைச்சியா?” என்றபடியே அவன் சட்டையை பிடித்து முன்னால் இழுத்து இதழோடு இதழ் பதித்தாள். சற்று முன் அவள் போட்டிருந்த வெற்றிலை இடம் மாறியது.

    கானல் நீரெங்கும் கொக்குகளும் மீன்களும் போல மர அசைவின் நிழல்கள்.

    சைக்கிள் கம்பெனி நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. முன்னால் அவள் அமர்ந்திருந்தாள். அவன் ஆகாயத்தில்.

    கம்பெனி முன்னால் இறக்கி விட்டுவிட்டு கேட்டன், “சசி… லவ் பண்றதான?”

    ஆண்களின் சந்தேகம் சந்தேகம் தான்.

    “லவ் பண்ணமையா முத்தங் குடுத்தேன்?” சிரித்தபடியே உள்ளே ஒடினாள்.

    “அண்ணே சாப்பாடு ஆச்சு.. வாங்க…”

    கிளீனரின் குரலில் கலைந்தான் ரவி. அவனக்கு இப்போது குடிக்க வேண்டும் போல் தோன்றியது.

    “இப்ப எதுக்கு குடிச்சுட்டு இருக்க? வீட்ல விஷயம் தெரிஞ்சா, எதுத்து சண்டை போடணும். இல்ல, என்ன கூட்டிட்டு போய்டு. அத விட்டுட்டு குடிச்சா சரியா போய்டுமா?”
    சைக்கிள் ஸ்டாண்டுக்கே வந்துவிட்டாள் சசிகலா.

    “அது இல்ல சசி, உங்கம்மா என்னை எவ்ளோ கேவலமா பேசிருச்சு தெரியுமா? தேட்டர்ல சைக்கிள் பாஸ் போடறது கேவலமான தொழிலா? வாரம் ஐநூறு ரூபா சம்பாதிக்கறேன், பாத்தாது ?” என்றான் ரவி.

    புலம்பத் தொடங்கியவனை, ” சரி விடுடா… எங்கம்மாவா உன்ன கட்டிக்க போகுது? நான் தான? எப்பவும் நான் உன்ன விட்டுட்டு போக மாட்டேன், சரியா?” என்றபடியே அவன் வைத்திருந்த இரண்டு மிடறுக்கான சரக்கை சட்டென எடுத்து வாய்க்குள் ஊற்றினாள்.

    “ஏய்… என்னடி பண்ற? இது தப்பு,” என்றான், சைக்கிளில் இருந்து எழுந்த படியே.

    “எனக்கு ரெம்ப நாளா இதக் குடிச்சு பாக்கனும்னு ஆசை,”என்று கண் அடித்தாள். சைக்கிள் ஸ்டாண்டில் இருக்கும் அந்த ஒற்றை லைட்டில் பிரகாசமாய் தெரிந்தாள்.

    “வாழ்க்கைல ஆசைப்பட்டதப் பண்ணிப் பார்த்திடனு. இப்ப என்ன? இதக் குடிக்கணும்… அவ்ளோதானே?” என்றவன், இருந்த சரக்கை ஊற்றி தண்ணீர் கலந்து கொடுத்தான். கண்களை இறுக மூடி, முகத்தைக் கோணி என்னென்னவோ பாவனைகளில் அந்த கிளாஸ் முழுக்க உள்ளே போனது.

    கண்கள் சொருக, அவனையே பார்த்தாள், “என்ன உனக்கு எவ்ளோ பிடிக்கும்?” என்றாள் இன்னும் அழுத்தமாக பார்த்துக் கொண்டு.

    உள்ளே செந்தூரப் பூவே படம் ஓடிக் கொண்டிருந்தது…….

    “சின்னக் கண்ணன் தோட்டத்து பூவாக ஒரு தேவதை…..” பாடல் காதில் தேனாய்ப்பாய அவன் அவளையே பார்த்தான்.

    “ஏய் சசி….. இந்த பாட்டு கேக்கும் போதெல்லாம் உன் ஞாபகமாகவே இருக்கு, நீயும் நானும் ஆதார மாறியே ஒரு இது.. இது…”

    “இதுன்னா?”

    “இதுன்னா… ஒரு .. ஒரு ஜாலி…”, அவனுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

    கல்யாணத்துக்கப்புறம் நாம இங்கயே இருக்கலாமா? இல்ல, வெளியூர் போய்டலாமா?” அவள் வாய் குழறியது, காரணமின்றி சிரித்தாள்.

    “ஹேய்….. ச, உங்கம்மா ஒத்துக்குமா? எனக்கு பயமா இருக்குடி….”

    இருவரும் எதிரெதிரே சைக்கிளின் பின் சீட்டில் அமர்ந்திருந்தார்கள்.

    “எங்கம்மா ஒத்துக்கும்… ஒத்துக்க வைப்பேன், பாக்கதான் நான் அமைதி, கோவம் வந்துச்சுனா பத்ரகாளிதான்….”

    “அப்டியா… எங்க கோவப் படு……….. பாக்கலாம்……..” என்று முகத்தை அவள் முன்னால் கொண்டு போய்க் காட்ட…அவள் கபக்கென வாந்தி எடுத்தாள்.

    “ஐயே…….ஏய் .. எ…. யா…. லூசு…. எஐ லூசு….. வோவ்…”

    காதல் வளர்ந்தது, அந்த ஒரு மாதத்தில் தாவணி பரிசளித்தான். கண்ணாடி பரிசளித்தாள், பாசிமணி வாங்கி கொடுத்தான். போன சனிக்கிழமை இரண்டாவது காட்சிக்கு குடும்பத்தோடு செந்தூரப்பூவே பார்க்க போயிருக்க, சந்திரனிடம் சொல்லி ஸ்பெசல் டீ , முறுக்கு, இடைவேளையில் கிடைக்கச் செய்தான். கிளியின் தாத்தாவுக்கு டிக்கெட் எடுத்து அனுப்பினான். இன்னும் என்னென்னமோ செய்தான். பங்காளியின் புது சைக்கிள் ரெம்ப உதவியது.

    செந்தூரப்பூவே படம் பயங்கர பிக் அப். கூட்டம் நான்கு காட்சிகளிலும் பட்டையை கிளப்பியது. இன்னும் சொல்லப் போனால் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. நிரோஷா அழும் காட்சிகளில் தாய்மார்களின் கண்ணீர் பெருக்கெடுத்தது.

    அருவி தியேட்டர் சிங்காரி தியேட்டருடன் போட்ட ஒப்பந்தத்தில் ஒரே ரீல் பெட்டி இரு தியேட்டர்களிலும் ஓடும். அதாவது முதல் ரீல் முடிந்ததும், அதை டேக்ஸியில் வைத்து அடுத்த தியேட்டருக்கு கொண்டு சென்று ஓட்டுவார்கள். அடுத்த அரை மணியில் ரெண்டாவது ரீல், அப்போது அங்கு முதல் ரீல் முடியும் நேரமாய் இருக்கும். சில போது அடுத்த ரீலின் வரவுக்காக ஐந்து, பத்து நிமிடம் படம் பார்ப்பவர்கள் காத்திருக்கவும் நேரிடும். அப்படி ஒரு நாளில் டாக்சி டிரைவர் உடம்பு முடியாமல் படுத்து விட, அடித்தது டிரைவர் யோகம் ரவிக்கு. தனக்கு கார் ஓட்டத் தெரியும் என்பது தியேட்டர் ஓனருக்கு அரசால் புரசலாக காதில் விழுமாறு சில பல அறிவாளி வேலைகளையெல்லாம் ஏற்கனவே ரவி செய்திருந்தான்.

    இரண்டாவது காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் ரவி காரில் பறந்து கொண்டிருக்கிறான்.

    தியேட்டரின் எதிரே இருக்கும் மஞ்சு வீட்டில் அமர்ந்திருக்கிறாள் சசி.

    “எனக்கு தெரியும்.. ஆமா…. எப்டி உங்கம்மாவ சம்மதிக்க வைச்ச?” என்றாள் மஞ்சு.

    அவ்வப் போது வாசலில் எட்டி எட்டி தியேட்டரை பார்த்துக் கொண்டாள் சசி.

    “நான் அவனை கட்டிக்கலன்னா வேசி ஆகிடுவேன்னு மிரட்டினேன். எங்கம்மா பயந்துடுச்சு” என்றாள் கண்களை உருட்டி.

    “ஏய்…. நீ பெரிய கைகாரிடி, உன்கிட்ட ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்,” என்றாள் மஞ்சு.

    மணி இரவு 12……..

    சாலையில் ஒரு ஆள் இல்லை. பனி பெய்யும் காலமிது. குளிர் கொன்று கொண்டிருக்கிறது. ஸ்வெட்டர் போட்டு, தலைக்கு ஸ்கார்ப் கட்டிக் கொண்டு தான் மஞ்சுவுடன் படுத்துக் கொண்டிருந்தாள் சசிகலா. இந்த விஷயத்தை ரவியிடம் அன்றே சொல்லத் தோன்றியது. அவளும் மாலை 7 மணியிலிருந்து அவனை பார்த்து விட முயன்று கொண்டிருக்கிறாள். “இப்பதாம்மா போறான்….” “இப்ப வந்துருவான்.. ” இப்படியே மணி 12 ஆகி விட்டது.

    இரண்டாவது காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது.

    “சின்னக் கண்ணன் தோட்டத்து பூவாக…..” பாடல் நன்றாக கேட்கிறது.

    அவனின் புன்னகை, பூக்களாக, அருவியாக, அலையாக அவளின் மீது விழுவதாக நினைத்துக் கொண்டாள்.

    மெல்ல எழுந்தாள். மஞ்சு தூங்கிக் கொண்டிருந்தா. கதவைத் திறந்து கொண்டு சாலைக்கு வந்தாள். எப்படியும் அவன் இப்போதோ அல்லது கொஞ்ச நேரத்திலோ தியேட்டருக்குள் அல்லது தியேட்டருக்குள்ளிருந்து வந்தே ஆக வேண்டு. எப்படியும் விஷயத்தை சொல்லி விடலாம். சந்தோசப் படுவான்.

    காதலில் சாத்தியமாகிறது எதுவும். நல்ல இருட்டு. .. தியேட்டருக்கு எதிரே இருக்கும் ஸ்ட்ரீட் லைட் கடந்த வாரம் முதல் எரிவதில்லை. அது வசதியாய் இருக்கும் இன்று அவனை சந்திப்பதற்கு என்றெல்லாம் மனம் தவித்தது. கன்னாபின்னாவென யோசிக்கிறது கன்னியின் மனம். அவனைப் பார்க்க வேண்டும். விஷயத்தை சொல்ல வேண்டும். விடிதலுக்கான நேரம் வெகு தூரத்தில் இருப்பதாகவே பட்டது. அதுவரை யுகமாகிப் போகும் தனிமை.

    அதோ… அந்த வண்டியாகத்தான் இருக்கும். அதே தான்… வெள்ளைக் கார் என்பதற்கான வெளிச்சத்துடன் வர… சட்டென சாலையை கடக்க முயற்சிக்கையில், கண நேர கணக்கில் இந்தப் பக்கம் இருந்து படு வேகமாய் வந்த மணல் லாரி அவளை மோத, அட இல்லை.. அதற்குள் சுதாரித்துக் கொண்டு, இன்னும் வேகமாய் மீதம் இருந்த பாதி சாலையை கடந்து…….

    க்ரீச் …………………………………………………

    ப்ரேக் பிடிக்கப்பட்டது. ஆனால் அவள் மீது மோதி டப் டப்… என ஓரிரு சத்தம். லாரி போன வேகத்தில் அந்தச் சத்தமும் கேட்டிருக்காது.

    வண்டியை விட்டு இறங்கிப் பார்த்த சந்திரன், ஓடி வந்து வண்டியில் ஏறினான். “மாப்ள இறங்காத… ஆள் காலின்னு நினைக்கறேன் …மேட்டர் ராணிடா …… நைட்ல அவதான் இப்படி சுத்திட்டுத் திரிவா….”

    சசி குப்புற விழுந்து கிடந்தது, தலையில் மூடிக் கிடந்த ஸ்கார்ப், ஸ்வட்டர் … அவளது அடையாளத்தை மறைத்திருந்தது.

    “மாப்ள, லாரில அடி பட்டு செத்ததாவே இருக்கட்டும். வண்டிய தியேட்டருக்குள்ள விடு என்றான் சந்திரன்”.

    நடுங்கி கொண்டே வண்டியை உள்ளே விட்டான்.

    படம் முடிந்து, மக்கள் கூட்டம் வெளியே வர, கண்ணில் பட்ட சசியை ஒரு மாதிரி அனுமானித்து சில நல்ல உள்ளங்கள் தூக்கி, அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தது.

    விடிந்திருந்தது……..

    சந்திரனிடம் புலம்பிக் கொண்டிருந்தான், “அந்தப் பொண்ணு, அதுவா வந்து உள்ள விழுந்துடுச்சுடா. நான் என்ன பண்றது….?”

    “சரி விடு மாப்ள, யாருக்கும் தெரியாது. நீயா உளறிடாத. மணல் லாரிக்காரனுங்க எப்பவுமே ஸ்பீடுனு எல்லாருக்குமே தெரியும். கேஸ் அப்பிடியே திரும்பிடும்”

    மூச்சிரைக்க ஓடி வந்து நின்றான், கேண்டீனில் வேலை செய்யும் பாபு.

    “அண்ணே, நேத்து நைட் அடிபட்டு செத்தது சசிகலாக்காண்ணே”

    “டயரை ஓங்கி ஓங்கி உதைத்தபடியே கத்தி அழுதான் ரவி”

    அந்த லாரியும் மௌனமாய் நின்று கொண்டிருந்தது. விபத்துகளின் கோர முகத்தை தாங்கி கொண்டு……

    Share
  • “தேடல்“

    — கார்த்தி ராஜூ.

    கரியமேகம் கண்ணீர் விடத் தொடங்கிய போது கார்த்திக் அந்தப் பேருந்தில் ஏறி இருந்தான். கூட்டம் என்றும் சொல்ல முடியாது … அதே சமயம் காலி என்றும் சொல்ல முடியாது. ஒரு மிதமான கூட்டம். ஜன்னலோர இருக்கையாய் தேடி அமர்ந்தான் கார்த்திக். வண்டி கிளம்பத் தொடங்கியதும் மேகம் கண்ணீர் விடத்தொடங்கிய நேரமும் சரியாய் இருந்தது. அந்த சாரல்களிடம் ஒவ்வொன்றாய் நலம் விசாரித்து பேசி கொண்டிருந்தான். அந்த சாரல்களுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட நட்புப்பிணைப்பு வண்டியின் மேல் கூரையில் இருந்து ஒழுகிய துளிகளுக்கு இடம் கொடுத்துத் தள்ளி உட்காரச் செய்தது. இம்முறை அவன் நினைவுகள் ஒவ்வொரு மைல்களாய் அவனோடு பயணிக்கத் தொடங்கின.

    சிறு வயதுக் குறும்புகள்…..வாத்தியாரிடம் செய்த சில்மிஷங்கள்…. நண்பனுக்காக வாங்கிய தண்டைனைகள்…. சொல்லாத காதல்கள்…..மறைக்கப் பட்ட உணர்வுகள்…..காயம் பட்ட இதயம் …என தன் கட்டுபாட்டை இழந்து அது பயணிக்கத் தொடங்கியபோது நடத்துனர் பயணச்சீட்டிற்காக அவனருகே வந்து நின்றார்.

    “சார் … குருவம்பட்டிக்கு ஒரு டிக்கெட் குடுங்க …” சில்லறை வாங்கிவிட்டு மனதிற்குள் எதோ ஒன்றை நினைத்து பெருமூச்சு விட்டு சாய்ந்து படுத்தான். அலுவல் விஷயமாக அந்த கிராமத்திற்கு அவன் சென்றாலும் மனது மட்டும் அவன் விட்டுச் சென்ற சொந்தங்களை எண்ணிக் கொண்டிருந்தது. சிறு வயதில் கோபப்பட்டு வீட்டை விட்டு ஓடி வந்து, சென்னைக்கடற்கரையில் தஞ்சம் புகுந்தவன், பால்ய ஞாபகங்களை தவழ விட்டான்.

    தினமும் காலை டீக்கடையிலும் மாலை சுண்டல் விற்பதற்கும் சென்று விடுவான் கார்த்திக். அவனுக்கு வழக்கமான வாடிக்கையாளர்கள் அந்த கடற்கரைக்கு வரும் முதியவர்களும் பகுதி நேர காதலர்களும் தான்.

    “சுண்டல்………. சுண்டல்……… சுவையான சுண்டல்!“

    “சார் சுண்டல் சார்”….”மேடம் சுண்டல் மேடம் !“

    “பத்து ரூபாய்க்கு குடுப்பா …!”

    “இந்தாங்க சார்…… அம்மா நீங்களும் வாங்கிகங்க…”

    “இந்தா சார்…இன்னொன்னு ….சும்மா ஜமாய்ங்க..!”

    இப்படித்தான் வருடத்தில் 365 நாட்களும் கழியும் கார்த்திக்குக்கு. அந்த கடற்கரைக்கு குழந்தைகளோடு வரும் பெற்றோரையும், அவர்கள் அந்த குழந்தையை கொஞ்சும்போது அவனுக்கு ஏக்கமாய் வருகிற கண்ணீர்த் துளிகள் கடலில் சேர்ந்ததால்தான் என்னவோ கடல்நீரும் உப்பு கரிக்குது போலும்.

    அன்றும் வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு ஒரு படகின் ஓரமாய் உட்கார்ந்தான் கார்த்திக்.

    “வளையல், பொம்மை வாங்கிறிங்களா சார்?” என சென்னைக்கே உரித்தான பாணியில் ஒரு பெண் குரல்.

    திரும்பிப் பார்த்தால் கருமையும் மாநிறமும் சேர்ந்த கலைவையாய் எண்ணெய் வைக்காத தலையோடு, கையில் வளையல்களோடும் கூடையில் பொம்மைகளோடும் பதினாறு பதினைந்து வயது சிறுமி.

    “இல்லைமா…வேணாம் … நானே சுண்டல் விக்கிறவன்…எனக்கு எதுக்கு வளையல் பொம்மை எல்லாம்?”

    இதை கேட்ட அந்தப் பெண் முகம் வாடி அழ தொடங்கி விட்டாள்.

    “ஏ புள்ள …இந்தா புள்ள ….ஏன் அழுவுற?”

    “சாயங்காலம் ஆகிப் போச்சு, இன்னும் நான் எதுவுமே விக்கல….எங்க அம்மா என்னைக் கொன்னுடுவாங்க !”….என்றாள் விக்கலுடன்.

    அவள் அழகில்லை என்றாலும் அந்த வெகுளித்தனம் அவனுக்கு பிடித்திருந்தது,

    “இந்தா இருபது ரூபா …கொண்டு போய் உங்க ஆத்தா கிட்ட குடு”

    சற்று தயங்கி அந்தக் காசை வாங்கியவள் சின்னதாக சிரித்துவிட்டு ஓடினாள்.

    “நாளைக்கு இதே இடத்துக்கு வாங்க…காச கொடுத்துடறேன்.”…..புன்னகையோடு அவள் சந்தோஷப்பட்டதை எண்ணி தானும் சந்தோஷப்பட்டான்.

    மறுநாள் அதே இடத்தில், அதே சந்திப்பு …ஆனால் இந்த முறை சற்று நெருக்கத்துடன். அவள் பெயர் பாத்திம்மா. மற்றபடி அவர்களுக்குள் எல்லா விஷயங்களும் ஒத்துப் போயின. வாழ்கையை புதிதாக பார்க்க ஆரம்பித்தான் கார்த்திக். தனக்கு ஒரு புது சொந்தம் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான். இப்படியே இரண்டு மாதங்கள் ஓடின…ஒரு நாள் வழக்கம் போல் அவர்கள் பேசிகொண்டு இருக்கையில் அவள் அம்மா அவளை அடித்து இழுத்துச் சென்றவள்தான்…பின்பு அந்த கடற்கரையில் கண்ணனுக்கு எட்டிய தூரம் வரை அவள் தென்படவில்லை. இருந்த ஒரு சொந்தமும் விட்டுப் போனதை எண்ணிக் கடலிடம் அழுது முறையிடுவான் கார்த்திக். பின்னாளில் முட்டி மோதி பத்திரிகையில் எதோ எடுபிடி வேலை பார்த்து இப்போது ஒரு ஒரு சின்ன ரிபோர்டர் ஆக இருக்கிறான்.

    அருகம்பட்டிதான் கார்த்திக்கின் சொந்த ஊர். குருவம்பட்டியிலிருந்து ஒரு மூன்று கிலோமீட்டர். இயற்கை வளம் செழிக்கும் இடம். விவசாயத்திற்கு ஏற்ற இடம். பயணிகள் நிழற்குடையாய் நின்ற பனைமரங்களும் வெயிலில் கருகி போன துணை மரங்களும், அங்கே ஓடி விளையாடி திரிந்த தும்பிகளும், கலெக்டரிடம் மனு கொடுத்து ஏற்படுத்திய மின் கம்பிகளும், சில்மிஷமாய் சிரித்து பறக்கும் சிட்டுக்குருவிகளும், சின்னதாய் காக்கைகள் குளியல்கள் போடும் அருவிகளும், புழுதி படிந்து வெறிச்சோடிய சாலைகளும் அமைதியாய் விடியும் காலைகளும் என அங்கே ஒரு ஒட்டு வீட்டில்தான் கார்த்திக் வசித்து வந்தான். இப்போதும் அவனுக்கு தன் பெற்றோரை பார்க்க மனம் வர வில்லை… வண்டி தேநீர் இடைவேளையில் நின்று கிளம்பியது. வருடங்கள் பல கடந்தாலும் நினைவுகள் மட்டும் தூறலாய் கார்த்திக்கின் இதயத்தில் சொட்டிக் கொண்டிருந்தது…..முற்று பெறாமல். ஜன்னலின் ஓரம் தலை சாய்த்து கண்ணாடியிடம் காதோரமாய் அது சொல்லும் ரகசிய நினைவுகளை கொண்டு தன் பயணத்தை மீண்டும் ஓட விட்டான்… பின்னால் யாரோ கத்தும் சத்தம் கேட்டது …திரும்பி பார்த்தான்.

    “அஞ்சலி ….அழுவாதம்மா… அம்மா உனக்கு எல்லாம் வாங்கி தரேன் …” என்று ஒரு தாய் எட்டு வயது பெண் குழந்தையை சமாதானம் செய்து கொண்டிருந்தார். மரத்துப்போன மனம் வலிக்கத் தொடங்கியது. தலையை திருப்பி நன்றாகச் சாய்ந்து பெருமூச்சு விட்டுக் கண்களை இறுக மூடி ஐந்து வருடம் பின்னோக்கிச் சென்றான்.

    “அஞ்சலி “……ஆயுளுக்கும் மறக்க முடியாத பெயர்….. அவன் ஊரை விட்டு செல்லும் சமயம் அவனின் கை பிடித்து “என்னால முடியல கார்த்தி….எனக்கு வாழவே புடிக்கல …. என்ன எங்கயாவது கூட்டிட்டுப் போய்டு …” என்று அவள் கதறிய வார்த்தைகளும் கண்ணீரும் அவன் காதோரம் ஒலித்தும் இதயத்தில் இன்றும் வலித்துக் கொண்டு இருக்கின்றன. காதலிக்க ஜாதி வேண்டாம் என்று அவள் சொன்னாள். அவள் குடும்பமோ கல்யாணத்திற்கு ஜாதி வேண்டும் என்று அவனை பிரித்து அவளை வேறு ஊரில் கட்டிக் கொடுத்தனர். அவளை அவள் கணவன் துன்புறுத்திக் கொன்ற விஷயம் அவனுக்கு மட்டும்தான் தெரியும். ஊருக்கு அதன் பெயர் “காரணமில்லாத் தற்கொலை“.

    கார்த்திக்கின் கண்களோடு சறுக்கி விளையாடும் கண்ணீர் துளிகள் இன்று முட்டாளாய் அவனை பார்த்தது. அவன் உடலோடு ஒட்டிய அவள் உயிர் பிரியப் போகிறேன் எனக் கதறுகிறது. வார்த்தைகள் மௌனமொழி பேசுகின்றன. அவள் தந்த நினைவு பரிசுகளை பொக்கிஷமாய் இதயத்தினுள் பூட்டி வைத்திருந்தான் கார்த்திக். அவன் மனங்கள் அவள் ரணங்களால் அலங்கரிக்க பட்ட போதும், அதன் உயிர் அவளுடன் வாழ்ந்த நொடிகளை கொண்டு தத்தளிக்கிறது! வலிகளில் லயித்துத் துவண்டு போன அவன் இதயம் அவள் சென்ற பாதையை தேடி அலைகிறது. ஒவ்வொரு நிமிடமும் அவன் மூச்சு உள்ளேறும் பொழுதெல்லாம் அவள் கூந்தல் வாசத்தையும் அவள் மூச்சுக் காற்றும் சுவாசித்து உயிர் வாழ்ந்து கொண்டிருந்தான். இப்பொழுது அது இல்லை என அவன் மூளை உணர்ந்தாலும்….. இதயம் மறுக்கின்றது.

    இந்த நொடி உடனே முடிய வேண்டும். சதைகள் பிசைந்து நரம்புகள் முறுக்கி உடல் ஊனமாய் பேச முடியாமல் கண்ணீரை மட்டுமே மொழியாகக் கொண்டு இனிமேலும் கார்த்திக்கால் பேச முடியாது, மரணம் என்ற சொல்லின் அர்த்தம் அவள் பிரிவில் உணர்ந்தான் கார்த்திக். எதிர்பார்ப்பில்லா அன்பு அவள் தந்து அரவணைத்த பொழுது இருந்த மகிழ்ச்சி இப்போது அவள் இல்லை எனத் தெரிந்ததும் சுக்கு நூறாய் ஆனான். அவள் பேசிய வார்த்தைகள் மட்டும் அவன் காதில் ஒலித்து கொண்டிருந்தது. ஒவ்வொரு நொடியும் யுகமாய் ஓடி கொண்டிருந்தது. இமைகள் விலகாமல் ஒரே இடத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் கார்த்திக்.

    மழை நின்று, லேசாக வெட்கம் விட்டு முகில்களுக்குள் முக்காடு போட்டு மறைந்திருந்த சூரியன் எட்டி பார்த்தது. இதமான நேரம். என்ன தோன்றியதோ தெரியவில்லை சட்டென்று வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கியவன், கையிலிருந்த பையை இறக்கி வைத்து பெருமூச்சு விட்டுத் தனக்குத் தானே சிரித்து கொண்டான். குருவம்பட்டி ஐந்து கிலோமீட்டர் என பொறிக்கப்பட்டிருந்த மைல்கல் சிறிதுநேரம் தன்னை சிம்மாசனமாய் கருதி கொள்ளும் படி கேட்டது. அந்த மைல்கல் அவன் காலடி கிடந்தது கெஞ்சியதிற்காக அதன் மேல் உட்கார்ந்து இளைப்பாறினான். கண்ணுக்கெட்டிய தூரம் சேறும் சகதியும் மட்டுமே கம்பளம் விரித்து காத்திருந்தது. நடக்க தொடங்கினான். அப்போது பத்து ஆடுகளை மேய்த்துக்கொண்டு ஒரு பெரியவர் அவ்வழி சென்றார்.

    “ஐயா … குருவம்பட்டிக்கு இந்த வழியா போக முடியுமா???“

    “என்னது …??“

    “ஐயாஆஆ….. குருவம்பட்டிக்கு இந்த வழியா போக முடியுமானு கேட்டேன்…” இந்த முறை சத்தமாக ….

    “ம்ம்ம்ம் போலாம் …போலாம் …”

    “நீங்க எந்த வழியில போறீங்க…??

    “நான் அருகம்பட்டிக்கு போகணும் ….இந்த வழியா தான் போறேன் …”

    “சரி வாங்க ஐயா … நடந்துகிட்டே பேசுவோம் .சரி…. நீங்க ஏன் இந்த வயசுல இப்பிடி கஷ்டப்படறிங்க… வீட்ல உக்காந்து நல்லா சாப்பிடலாம்ல….”

    “எனக்கும் ஆசை தான் … ஒத்த புள்ள … கண்ணே மணியேன்னு வளத்தேன்… …அப்பன் மகன் ஒறவு என்ன தண்ணில எழுதுன மாறியா… ஒடனே சலசலத்து போறத்துக்கு…..அது காத்து மாரி… சில சமயம் உன்னத் தடவி கொடுக்கும் பல சமயம் பொரட்டி எடுக்கும் …. அதே சமயம் காத்து இல்லைனாலும் நாம மூச்சு நின்னு போவும் ….. என்னாத்த சொல்ல … கஷ்டப்பட்டு நெலத்த வித்து அவன படிக்க வச்சா……தீடீர்னு ஒரு நாள் பொண்ண கண்ணாலம் கட்டிகினு வந்தான் .. “

    “இனிமே எனக்கு உங்க கூட வாழப் பிடிக்கல…. என் பொண்டாட்டிக்கும் இந்த எடம் புடிக்கல … நாங்க கெளம்புறோம்னு சொல்லிட்டு எங்கள அனாதயா விட்டுட்டு போய்டான்யா ……” என்று முடிக்கும் போதே அவர் கண்களில் கண்ணீர் லேசாக எட்டி பார்க்கத் தொடங்கியது. கார்த்திக்கிற்கு அவன் குடும்பம் பற்றிய நினைவுகள் அவனை தீண்டத் தொடங்கியது. அவரை சமாதானம் செய்து இருவரும் ஒரு வழியாக குருவம்பட்டியை அடைந்தனர்.

    “தம்பி நீங்க கேட்ட ஊரு வந்துருச்சு ….”

    “ம்ம்ம் ரொம்ப நன்றிங்க அய்யா” இப்போது காற்று மெதுவாக சில்லென வீசத் தொடங்கியது. மீண்டும் பெரியவர் லேசாக அழத் தொடங்கினார்.

    “அய்யா… என்னாச்சு?”

    “இல்ல தம்பி ….என் பையனுக்கு குளிர் காத்துனா ஒத்துக்காது… இப்போ எங்க கஷ்டப்படுதோ என்னவோ …” என்றார் விசும்பலுடன்.

    இதற்கும் மேலும் கார்த்திக்கு மனம் பொறுக்க முடியாமல் மனதிற்குள் அழுதே கொண்டே “கவலைப் படாதிங்க அய்யா … எல்லாம் உங்க பையன் நல்லவே இருப்பார்…. நானும் உங்களோடவே அருகம்பட்டிக்கு வரேன்”

    “தம்பி …உங்களுக்கு எதோ ஒரு முக்கியமான வேலை இருக்குனு சொன்னிங்க …”

    “பெத்தவங்கள சந்தோஷ படுத்துறத விட வேற என்ன பெரிய வேலை இருக்க முடியும்” என மனதில் சொல்லி கொண்டு அந்த பெரியவரோடு தனது சொந்த ஊரை நோக்கி நகர்ந்தான் கார்த்திக். ஆனால் அவன் தேடல் மட்டும் அங்கயே முடிவுற்றது.

    Share
  • சொர்க்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

    — கார்த்தி ராஜூ.

    நள்ளிரவு ஒரு மணி.

    மெலிதான தென்றல் வீசும் பொழுது, விகாஷா வீட்டுக் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கவே, கதவை திறந்து பார்த்தாள். யாரும் இல்லை…… கதவை மூட முற்பட்ட போது வாசலின் கிழ் ஒரு போஸ்ட் கார்டு இருந்தது . அதை குனிந்து எடுத்து கதவை சாத்திவிட்டு சோபாவினில் அமர்ந்து அதை படிக்க ஆரம்பித்தாள்…….

    “சொர்க்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !!“ என அவள் முடிக்கும் முன்பே அவள் தொண்டை பகுதி கத்திக்கு பலியாகி இருந்தது .

    அங்கே அவள் வீட்டில் ரத்தகரை படிந்த “அந்த” கைகள் தன்னை தண்ணீரில் சுத்தப்படுத்தி கொண்டிருந்தன !!!

    ……………………………………………………………………………………………………………………………………………………..

    மறுநாள் மாலை …

    ”அப்பா என்னோட தொப்பிய பாத்திங்களா அப்பா ??“ என்றான் வருண்.

    “ஹாஹாஹா…. ஏன்டா … இன்ஸ்பெக்டர், நீயே உன் தொப்பி காணோம்னு கம்ப்ளைன்ட் பண்ணு … போ …” என சிரித்தார் வைத்யநாதன்.

    “ம்ம்ம்ம்… கிடைச்சிருச்சி…அப்பா …. டிவிய ஆன் பண்ணுங்க ….”

    “பிரபல செய்தி வாசிப்பாளர் விகாஷா தன்னுடைய வீட்டில் மர்மமாக கொலை செய்யப்பட்டார்“

    “ஒ மை காட் !! …..என்னப்பா இது ??…..” என்றான் வருண்.

    “எனக்கும் தெரிலப்பா …. நீ ஏதோ ஈவ்னிங் மீட்டிங்குக்கு அவசரமா போகணும்னு சொன்னியே ….??”

    “ஆமாப்பா…. மறந்துட்டேன் … நான் கிளம்புறேன்.”

    அடுத்த நிமிடம் தனது அப்பாச்சி வண்டியில் பறந்தான் வருண். ஐந்து வருடங்களுக்கு முன்பு தான் வருண் இன்ஸ்பெக்டர் ஆனான். இளமை வயதிற்கேற்ப அந்த மிடுக்கும் துடுக்கும் எப்போதும் அவனிடம் இருக்கும். வண்டி நேராக பெசென்ட் நகரில் உள்ள ஒரு காபி ஷாப்பில் நின்றது. உள்ளே பயத்துடனே தான் வாங்கி வந்த வெள்ளை ரோஜா பூச்செண்டை மறைத்து கொண்டு சென்றான்.

    “ஏன் லேட்..?? னு நான் கேக்க மாட்டேன்” என்றாள் வீணா.

    “சாரிடா செல்லம் … வழக்கம் போல தொப்பிய மறந்துட்டேன் … அண்ட் திஸ் இஸ் பார் யு ….” என வெள்ளை ரோஜா பூக்களை நீட்டினான் ..!

    “ம்ம்ம்ம்… எதாவது பண்ணி என்னை ஈசியா கவுத்துடற…” என அழகாகச் சிரித்தாள். இரண்டு வருட காதல் அது !

    “சரி வீணா … ஸ்டேஷன்ல ஒரே டென்ஷன் …சிட்டில ஃப்ரிகுவன்டா அடுத்தடுத்து சில முக்கியமான ரௌடிகள் கொலை செய்யப்பட்டுருக்காங்க…. இதுல சில முக்கியமான பிரபலங்களும் அடக்கம். அதப் பத்திதான் பேச ஏ.சி இன்னிக்கு மீட்டிங் வச்சிருக்கார்”

    “ஆமா வருண் … இன்னிக்கு காலைல நியூஸ் பார்த்தியா…?? … விகாஷாவையும் கொன்னு இருக்காங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு வருண் … உனக்கு எதாவது ஆகிடுச்சினா..??” என மெல்ல விசும்பினாள்.

    “ஹே…. ரிலாக்ஸ்” …. என அவள் கைகளைப் பற்றி மெதுவாக முத்தமிட்டான்…….. “எனக்கும் எதுவும் ஆகாது .. சரி நான் கெளம்புறேன், நேரம் ஆச்சி …!! அப்புறமா மீட் பண்ணலாம்” என கிளம்பினான் வருண்.

    வீணா வளர்ந்து வரும் ஒரு பத்திரிக்கையாளர். மிகவும் மென்மையானவள். வருணை உண்மையாக நேசிப்பவள். அவள் அப்பா அம்மா இறந்து பல ஆண்டுகள் ஆகின்றது. தனியாக ஒரு வீட்டில் குடிபெயரும் பொழுது தான் வருண் அறிமுகமாகி காதலானது என வீணாவின் வாழ்க்கை சின்னதாக வருணுக்குள் அடங்கி விட்டது.

    மாலை இரவு பொழுதாக உருமாற, ஸ்கூட்டியில் தனியாகச் சென்று கொண்டிருந்த போது ஒரு ஆள் அரவமற்ற தெருவில் ஒரு நாற்பது வயது மிக்க ஒருவன் உடம்பில் காயங்களோடு தள்ளாடி அவள் ஸ்கூட்டி முன் விழுந்தான் .

    “ஒ மை காட்…!!… சார்… யார் நீங்க ?? உங்களுக்கு என்னாச்சி …??”

    “சொல்றதுக்கு நேரமில்ல … சீக்கிரமா என்னை ஒரு பாதுகாப்பான இடத்துக்கு கூட்டிட்டுப் போங்க …” எனக் கெஞ்சினான் அவன்.

    சற்றும் தாமதிக்காமல் வீணா அவனை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அவனுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து முதலுதவியும் செய்து படுக்க வைத்தாள்.

    ……………………………………………………………………………………………………………………………………………………..

    ”டியர் ப்ரெண்ட்ஸ்… நான் உங்கள எதுக்கு இந்த மீட்டிங்குக்கு கூப்பிட்டு இருக்கேன்னு உங்களுக்கே தெரியும் …மொதல்ல சைனா பாஸ்கர், அப்புறம் ரியல் எஸ்டேட் ஓனர் கார்த்திகேயன், ஆட்டோ விமல்,…. நேத்து ….. விகாஷா…”

    அனைவரும் ஏ சியை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தனர்.

    “ரௌடிங்க சாகறது நமக்கும் பப்ளிக்கும் நல்லது தான். பட் அவங்க கூட வேற சிலரும் சாகுறாங்களே… அதுவும் இது எல்லாமே ஒரே மாதிரி சாவு அல்ல. ஒரு மர்டர், ஒரு விபத்து, ஒரு தற்கொலைனு காரணம் வித்தியாசமா இருந்தாலும் பதில் ஓரே மாதிரி தான் இருக்கு“

    “அதுவும் இல்லாம கொலை பண்றவனோட ஆர்டரும் நமக்குத் தெரியல. நாளைக்கு அந்த லிஸ்ட்ல நான் இல்ல…. ஏன் நம்ம வருண் கூட இருக்கலாம்.”

    வருணனுக்கு வியர்க்க ஆரம்பித்ததும் அவனின் மொபைல் போன் சிணுங்க ஆரம்பித்தது”

    “எக்ஸ்க்யுஸ் மீ …..” என மீட்டிங் அறையை விட்டு வெளிய வந்தான்.

    “என்ன வருண் மீட்டிங்ல இருக்க போல .. சீக்கிரமே விகாஷா கூட உன்னை அனுப்பி வைக்கிறேன் …!!” என்று கரகரகுரலில் சிரிப்புடன் ஓசை வந்தது.

    “டேய் .. நீ யாருடா …” …. என கேட்கும் போது போன் கட் ஆகியது.

    மீண்டும் உள்ளே வந்து “சார்… “ இஃப் யு டோன்ட் மைன்ட் … எனக்கு ஒரு அர்ஜன்ட் வொர்க் இருக்கு … அத முடிச்சிட்டு நான் சீக்கிரமா வந்துடறேன் …”

    “ம்ம்ம்….டேக் யுவர் டைம்….பட்… பி சீரியஸ்…!!!” என்றார் ஏ.சி.

    “தேங்க்யு சார் ..” என வேகமாகக் கிளம்பி அந்த நம்பரை ட்ரேஸ் செய்தான். அது ஒரு இறந்து போனவருடைய பெயரில் இருந்தது. திருப்பி அழைத்தாலும் “ச்விட்ச் ஆப்“ என வந்தது. வருணுக்கு ஏதும் புலப்படவில்லை. நேராக விஷாகா வீட்டிற்கு சென்றபோது அங்கே போலிஸ் பாதுகாப்பு இருந்தது. தன்னை அவர்களிடம் அடையாளப்படுத்திக் கொண்டு உள்ளே சென்ற போது, ஒரு முடியும் நிலையில் உள்ள சிகரட் துண்டு இருந்தது. சில்லென்று இருந்தது. சோதனை செய்யும் போது அதை யாரும் கவனிக்க வில்லை போலும். அதே போல் கழுத்தறுக்க பட்ட வெட்டு இடமிருந்து வலமாக இருப்பதை கவனித்த வருண் குற்றாவாளி கண்டிப்பாக இடதுகை பழக்கம் உடையவன் என யூகித்தான். அதற்கு மேல் அவனுக்கு எந்த தடையுமும் கிடைக்கவில்லை. வெளியே கிளம்பி வரும் பொழுது அங்கே ஒரு முப்பது வயது இளைஞன் போலீசிடம் பேசி கொண்டிருந்தான்.

    “அடுத்த மாசம் விகாஷவ கல்யாணம் பண்ணலாம்னு இருந்தேன் சார்…! இப்படி ஆகிடுச்சே சார்…!!” என அந்த இளைஞன் அழுதான். மெதுவாக அவனை கடந்த வருண் அவன் காலடியில் வேண்டுமென்றே தன் கையிலிருந்த முழு சிகரட்டை கீழ போட்டதும் அந்த இளைஞன் தனது இடது கையால் எடுத்து வருணிடம் கொடுத்தான். மெதுவாக அவனைப் பற்றி வெளியில் விசாரித்ததில் அவன் சரியான குடிகாரன் என்றும் விஷாகாவின் மாமா மகன் என்றும் தெரியவந்தது. வெளிநாட்டில் இருக்கும் விஷாகாவின் பெற்றோருக்கு விஷயம் தெரிவிக்க பட்டது.

    ………………………………………………………………………………………………………………………………………………………

    “இப்பவாது சொல்லுங்க… நீங்க யாரு …?? ஏன் இந்த மாதிரி அடிபட்டுச்சி ??“ என்றாள் வீணா.

    “என் பேரு குமார், நான் ஒரு பிரைவேட் டிடக்டிவ் ஏஜண்ட். எனக்கு பிடிக்காதவங்க கிட்ட மாட்டிகிட்டேன் …அதான் … கொஞ்சம் தண்ணி கொடுங்க”

    “இந்தாங்க குமார்”…. க்ளாசை பிடிக்கமுடியாமல் கீழ குமார் விட்ட போது சட்டேன்று அதை பிடித்தாள் வீணா. பாத்து குமார் …நீங்க ரெஸ்ட் எடுங்க……நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.

    வருணுக்கு போன் செய்தாள்.

    “வருண் உன்கிட்ட சீரியசான மேட்டர் ஒன்னு சொல்லணும். சீக்கிரம் கெளம்பி என் வீட்டுக்கு வா…”

    “ம்ம்ம்ம்…” பைவ் மினிட்ஸ். மெதுவாக அறைக் கதவை திறந்து குமார் என்ன செய்கிறான் எனப் பார்த்தாள் வீணா. குமார் படுக்கையில் இல்லை என்றதும் அதிர்ந்தாள். தன் பின்பக்கத்திலிருந்து சிகரட் வாசனை வரவே திரும்பி பார்த்தாள் .

    “சாரி வீணா … ரொம்ப குளிருது … அதான்“

    “ம்ம்ம்… பரவால்ல” என சமாளித்தாள். வெளியே இருந்து உள்ளே வருண் வரும் சத்தம் கேட்டது. உள்ளே வந்ததும் குமாரையும் வீணாவையும் பார்த்து அதிர்ச்சியானான். அதை புரிந்து கொண்ட வீணா நடந்த கதை எல்லாவற்றையும் அவனிடம் தனியாக ஒப்பித்தாள். இருப்பினும் வருணுக்கு குமார் மீது ஏதோ சந்தேகம் இருப்பது போலத் தோன்றியது.

    “சரி வாங்க சாப்பிடலாம்…” என்றான் வருண்.

    “இருங்க குளிச்சிட்டு வரேன் …” என்றான் குமார்.

    மூன்று பெரும் டைனிங் டேபிளில் ஒருவரை ஒருவர் பார்த்த படி அமர்ந்தனர். குமாரின் ஒவ்வொரு அங்க அசைவுகளையும் வருண் கண்காணித்துக் கொண்டிருந்ததில் அந்த இடக்கை பழக்கம் மற்றும் வெள்ளை சிகரட் தப்பாமல் இருந்தது. ஆனால் இவனுக்கும் அந்த கொலை செய்யப்பட்டவர்களுக்கும் என்ன சம்பந்தம் என வருணால் யூகிக்க முடியவில்லை.

    மூவரும் தனித்தனி அறையில் உறங்கினர். நேரம் நள்ளிரவை தண்டிச் செல்லும் வேளையில்… மெதுவாக வருணின் அறைக் கதவு திறக்கப்பட்டது.

    “வா … இக்பால் … உனக்காகத்தான் வைட்டிங்..” என வருண் சிரித்தபோது அங்கே விளக்குகள் ஆன் செய்யபட்டிருந்தது .“இந்தா நீ செட் பண்ணி வச்சிருந்த ஒட்டு கேக்குற மைக்கு”

    இக்பாலுக்கு வியர்த்தது….

    “சரி … விகாஷவ கொன்ன சரி….. ஆனா ஏன்டா உங்க ஆளுங்களையும் கொன்னு இருக்க …. பெரிய புடுங்கி ஆகலாம்னா…??”

    “டேய் நான் குமார் இல்ல இக்பால்னு எப்படிடா கண்டு புடிச்ச ..??”

    “குளிக்கப் போனியே …. உன் முதுகல ஏதோ பச்சை குத்தி வச்சிருந்தியே … அத வச்சி தண்டா என் வெண்ணை… சரி இப்போ சொல்லு … விஷாகவ ஏன் கொன்ன …?? அதுவும் இல்லாம என்னை வேற போட வந்துருக்க…..?!”

    “டேய் உன் ஆளு கூட இருந்து உன்ன வேவு பாக்கலாம் தண்டா நடிச்சி வீடுக்குள்ள வந்தேன்… இப்போ அதை நான் கேக்கணும் …எதுக்குடா எங்க பசங்கள போட்டிங்க?? எங்க அண்ணனுக்கு மட்டும் தெரிஞ்சிது……….”

    “ம்ம்ம்ம் நானும் உங்க அண்ணனத் தாண்டா தேடிட்டு இருக்கேன்“ என்று அந்த அறையில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தாள் வீணா.

    வருணும் இக்பாலும் ஒரு நிமிடம் உறைந்து போயினர்.

    “வீணா ?? என்ன இது ??”

    வருண் ………. இக்பால் உன்னை வேவு பாக்க வந்தான. நீ……. எல்லா கொலையும் பண்ணது அவன்னு நெனச்சிட்டு இருக்க … அவன்….. நீ தான் பண்ணனு நினச்சிட்டு இருக்கான். ஆனா எல்லாத்தையும் பண்ணது நான் தான் !!!!”

    வருணுக்கு வார்த்தைகளே வர வில்லை !!

    ஒரு வருஷம் முன்னாடி ஒரு பதிமூணு வயசுப் பையன் காணோம்னு உன்கிட்ட ஒரு தம்பதி வந்தாங்க தெரியுமா …?? அவங்க என் அம்மா அப்பா…. காணாமப் போனது… என் ரெண்டாவது தம்பி … ஆனா நீ ஒரு போலீசா அலட்சியமா அதை பொருட்படுத்தாம விட்டுட்ட….. என் தம்பிய கடத்துனவங்க என் அப்பா அம்மாவையும் மொத தங்கச்சியையும் லாரி ஏத்தி கொன்னுட்டாங்க … அப்பவும் நீ போலீசா வரல …… ஏன்னா… காசுக்காக அதுல நீயும் உடந்தையாகிட்ட…. உடனே ஒரு முடிவுக்கு வந்தேன் … உன்னையும் இந்த குழந்தைகளை கடத்தி விக்கற கும்பலோட மொத்த நெட்வோர்க்கையும் அழிக்கணும்னு… ஆனா அது என்னால தனியா முடியாதே …. ஏனா உனக்கு தான் எல்லா விஷயமும் தெரியும் …. அதனால தான் உன்னை காதலிக்கிற மாறி நடிச்சேன்.”

    “அண்ட் இன்னொரு விஷயம்… எனக்கு ஆம்பிடேக்ஸ்ட்ரஸ்…. புரில்ல …. என்னால ரெண்டு கையாலும் வேலை செய்ய முடியும்… உங்கள திசை திருப்ப தான் விகாஷாவ லெப்ட் ஹாண்ட்ல கொன்னேன் … அண்ட் சந்தேகம் வரக்கூடாதுன்னு தான் ஒரு சிகரட் துண்டப் போட்டு வச்சேன் … அந்த விகாஷாவும் அந்த நெட்வொர்க்ல முக்கியமானவ. மத்தவங்கள அவங்க அவங்க வீக்னஸ்க்கு ஏத்த மாதிரி கொன்னேன்….. இயற்கையா மாத்தினேன். நீ மீட்டிங்கில இருக்கும் போது போன்ல வாய்ஸ் மாத்திப் பேசுனதும் நான் தான். இப்போதைக்கு இந்த குழந்தை கடத்தல் நெட்வொர்க்ல இருக்கற கடைசி ரெண்டுபேர்… ஒன்னு இக்பால் … இன்னொன்னு அவங்க அண்ணன்…”

    “உன்னையும் சும்மா விட மாட்டேன் வருண் … என வில்லத்தனமாக சிரித்து கொண்டே இருவரையும் நோக்கி துப்பாக்கியால் குறி வைத்தாள்… மூன்று பேர் கைகளிளும் துப்பாக்கி ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தது .

    துப்பாக்கியின் ட்ரிகரை இக்பாலை நோக்கி அழுத்தினாள் வீணா. துப்பாக்கி சுடவில்லை. இக்பால் சிரித்தான்.

    “இது இப்போ நான் சிரிக்க வேண்டிய நேரம் வீணா…. “ என்று தன் உடம்பில் உள்ள ஒரு பட்டனை ஆன் செய்தான். ”இது டைமிங் மனித வெடிகுண்டு… இன்னும் ஒரு நிமிஷத்துல எல்லாரும் சாகப் போறோம்” இப்போது வீணாவுக்கு அதிர்ச்சி …. அதே சமயம் வருண் சுதாரித்துக் கொண்டு வேகமாக அந்த அறைக் கதவைத் திறக்க முயன்றான்.

    “வருண் …செல்லம் … ரொம்ப ஸ்மார்ட்டாக இருக்கலாம்னு பாக்காத …. எல்லா கதவும் பூட்டியாச்சி…. இந்த ரூம விட்டு எங்கயும் போக முடியாது. இன்னும் முப்பது செகண்ட் தான் இருக்கு” என சிரித்தான் இக்பால்.

    வருணும் வீணாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவரும் வேகமாக சென்று இக்பாலை இடித்தபோது அவன் சுவரில் அடிபட்டு மயக்கமடைந்தான் .

    “வீணா நான் சொல்ற மாதிரி கேளு … இந்த பாம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு … இதை பத்தி நான் இண்டர்நெட்டில் படிச்சிருக்கேன். கண்டிப்பா இந்த நீல வயர்தான் டைமிங்க கட்டுப்படுத்தும். ஆனா இத நாம ரெண்டு முனைகளில் இருந்தும் ஒரே நேரத்தில கட் பண்ணனும்“ என்று முடிக்கும் போது அங்கே பத்து நொடிகளே இருந்தது. இப்போது அவள் சம்மதிப்பது போல் இருந்தது வருணுக்கு.

    “ரெடி …. ஒன்… டூ … த்ரீ…. கட்” அங்கே அந்த பாம் செயலிழுந்து போய் இருந்தது.

    “தாங்க்ஸ் வீணா …” என பெருமூச்சு விட்டான் வருண்.

    “அவ்ளோ சீக்கிரம் உன்ன சாக விட்ருவனா.. வருண் ??” என்று இக்பால் கையிலிருந்த துப்பாக்கியை எடுத்து வருண் நெற்றியில் வைத்தாள் வீணா.

    “அரஸ்ட்…. தேம்…”… என்று உள்ளே நுழைந்தார் ஏசி…… யாருக்கும் ஏதும் புலப்பட வில்லை. இக்பாலை அரஸ்ட் செய்து ஜீப்பில் ஏற்றினார் ஏ.சி.

    “கேஸ் ரொம்ப கிரிடிக்கல்னால நான் உன்ன மீட்டிங்ல இருந்து பாலோ பண்ணிட்டு இருக்கேன் வருண். ஒரு பப்ளிக் கூட கோஆபரேட் பண்ணாம அநியாயமா ஒரு குடும்பத்தோட சாவுக்குக் காரணம் ஆகிட்டீங்களே. எனிவேஸ்…..ஐ யாம் சாரி வருண் … யு ஆர் சஸ்பெண்ட்டட் பார் சிக்ஸ் மந்த்ஸ். அண்ட் யு…. என்னதான் நீங்க தப்பு பண்ணி இருந்தாலும் … யு ஹவ் காட் தி ரைட் கைஸ்….”… இக்பாலோட அண்ணனை நாங்க பாத்துறோம். யு டோன்ட் வொர்ரி …”

    ……………………………………………………………………………………………………………………………………………………………………

    சில வாரம் கழித்து இக்பாலும் அந்த குழந்தைகள் கடத்தும் மொத்த நெட்வொர்க்கில் உள்ள எல்லோரும் அழிக்கப்பட்டர்கள் என்ற செய்தி வருணுக்கு சந்தோஷமாய் இருந்தாலும் …. வீணா தன்னை விட்டு பிரிந்தது வருனால் தாங்க முடியவில்லை.

    அன்று இரவு உறங்காமல் புரண்டு படுத்து கொண்டிருந்தான் .

    யாரோ கதவு சத்தம் கேட்டது. வெளிய கதவை திறந்து பார்த்தால் யாரும் இல்லை. கதவை மூடப் போகும் போது கீழ ஒரு போஸ்ட் கார்ட் இருந்தது.

    “சொர்க்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது”

    “பிரபல போலிஸ் இன்ஸ்பெக்டர் வருண் குழந்தை கடத்தும் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததால் மர்மாக முறையில் கொலை செய்யப்பட்டார்“ என தலைப்புச் செய்தி ஓடிக் கொண்டிருந்தது. வீணா அங்கே சந்தோஷமாகத் தன் புது பணிக்காக பெங்களூர் சென்று கொண்டு இருந்தாள்.

    Share
  • அம்மு

    கவிஜி

    அம்மு…………………..

    இந்த பெயரை
    உச்சரிக்க நினைக்கும்
    போதே, குடை தாண்டி
    ஒரு மழை என்னை
    நனைக்கத் தொடங்குகிறது..

    அம்மு……….

    கடற்கரையில் மழையோடு நிற்பதென்பது அலையோடு துளியாவது. பட்டுத் தெறிக்கும் மழையெல்லாம், கண்ணுக்கெட்டும் தூரம் வரை வெள்ளிக் கம்பிகளின் குட்டித் தம்பியென, ஒரு சாயலில் தலை சாய்க்கும், வித்தை விதைக்கிறது. பூத்தூவும் மழையில் நானும், ஆர்ப்பரிக்கும் கடலும், அழகிய அலையும் ஒரு நேர்க்கோட்டு சிந்தனையில், சட சடவென, குளிருக்கு நடுங்கும் குடையுடன், விரியும் கண்களில் வெண்மேகத் துளிகளின் ரீங்காரத்தை கண்களால் நிரப்பிக் கொண்டு காணாமல் போய்க் கொண்டிருந்தோம்….. மேகத்தை பிழிவதை உணர முடியும் தருணம். எங்கு பார்க்கினும், எங்கெங்கு பார்க்கினும் மழையே…… மழைதான் வெளியின் அர்த்தமோ..!

    எனது அர்த்தங்கள் கண் நிரம்பிய குளங்களானது ….மழையோடு, அவளோடு இருந்த நாட்கள், கனவோடு விடிந்த பூக்கள்…. இரும்பு பூக்களை இனம் மாற்றும் வித்தை இந்த மழைக்கு தெரிந்திருக்கிறது.

    சர்ர்ரென …. ஒரு புது வீணை மீட்டலாய், முதல் துளியை விரட்டிக் கொண்டே விழும் துளிகளெல்லாம் புதுத் துளிகள்தான் என்பாள்,கண்கள் விரிந்த மீனலோட்சனி. மழை மீது அவளுக்கு காதல். அவள் மீது எனக்கு காதல். என் மீது மழைக்கு காதல். அது ஒரு தொடர் சிந்தனை. எத்தனை யோசித்தாலும் புத்தனைப் புரியாததைப் போல, மழையின் தொடர்பற்ற தொடர்புகள் நினைவுகளைக் கிளறுவதில் சல்லடை தாண்டிய சில் ஊசிகள்….

    ஒரு பெரு மழை நாளில்தான் இதே இடத்தில் தன் காதலைக் கூறினாள் மீனலோட்சனி… உள்ளங்கையில் பிடித்த மழைத் துளிகளை தீர்த்தம் போல முகத்தில் தெளித்தாள் . நொடிகளில்,முகம் திருப்பி திரும்புவதற்குள், மழையோடு நீ இருந்தால், மனமெல்லாம் சுகமே என்றாள். குடை சாய்த்து, அவளைக் காணுகையில் மழைப் பெண்ணாய் கண்கள் விரிய நின்றாள். ஏதோ, இந்த மழையே அவளுக்காக பெய்வது போல் ஒரு கர்வம் அந்த மொட்டு கண்களில் கண் மை கரையச் செய்து கொண்டிருந்தது…மழைத் துளிகளால் நெய்யப்பட்டவள் போலொரு தோற்றம். முன் நெற்றியில் அரை நெற்றியை கூந்தலால் மறைத்திருந்தாள். மிச்சத்தை மழை போல் துளிகளாக்கி, அரை வட்ட நிலாவாய் நனையச் செய்திருந்தாள்.

    நினைவுகளின் கூடாரமாய், என்னைக் கவிழ்த்துக் கொண்டேயிருந்தது அவளின் மழைத் துளிகள். வானக் கண்ணில் நானொரு இறக்கை விரிந்த காகமாய் தெரியலாம். குடையின் படபடப்பு, நடுங்குவதாய் கூட உணரச் செய்யலாம். நின்று, நிதானமாய் மழைக்குள் மழை பார்ப்பது, சிந்தனைகளை நிறமாற்றிக் கொண்டிருந்தது. வெற்றிடத்தின் வியர்வைத் துளிகள் செவ்வக வடிவில் குறிப்பிட்ட இடைவெளியில் கடல், கரையை, வெளியை, பகலை நிறைத்துக் கொண்டேயிருந்தது… அம்முவின் அரவணைப்புகள் பெரும்பாலும் மழை நாளில் அதிகமாகும். அத்துமீறும் பெண்மையை, உணர்வது, ஆண்மையின் தவம். என் தவங்களை வரமாக்கிய போதனைகளின் துளிகளை, இந்த மழையே, காலம் காலமாய் கொண்டுள்ளதை உணர்ந்திருக்கிறேன், உணர்கிறேன்…. காது முழுக்க ஒரே விதமான பேரிசை, மழையின் சிரிப்பு அல்லது…. சிலிர்ப்பு. அது கத்திச் சொல்லும் காதலை கடல் அறிந்ததோ இல்லையோ நான் அறிவேன். மழையோடு தீர்ந்தவள் என் அம்மு…மழை இல்லாத ஊரில் அவள் இறந்து விடுவாள். அவள் அப்படித்தான்….முன் பின் போய் வந்த எண்ணங்களை மழை என்னும் திரைக்கதையாய் ஓட செய்கிறவள் அம்மு. காதலோடு இருக்க கல்யாணம் எதற்கு என்று அவள் கேட்ட நாளில் ஒரு மிதமான மழை வந்து கொண்டிருந்தது. எனக்கு சிரிப்பு வந்தது. அணைத்துக் கொண்டேன். இன்னொன்றும் கூறினாள். அன்று பெரு மழை நாள். “மனித பிறவியில் குழந்தை பெற்றுக் கொண்டே தீர வேண்டுமா? இந்த பூமியில் சந்ததிகளை விட்டுச் செல்லத்தான் வேண்டுமா?” என்றாள். இன்னும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டேன்….

    பாலம் பாலமாய் வெடித்துக் கிடக்கும் மண்ணைக் கண்டால், கண்களில் பெருமழை சிந்துவாள். அவளைப் புரிந்து கொள்வது சிரமம் என்றெல்லாம் இல்லை…. சுலபமாக புரிந்து கொள்ளலாம், மழையை புரிந்து கொள்வது போல….குழந்தைகளுக்கு பதிலாக, நாங்கள் மரம் வளர்த்தோம்…. மரம் சொன்ன கதைகள் எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டிருக்கும்….எங்களிடம் மரங்கள் பேசின…. அவளிடம் நிறைய ரகசியங்கள் சொல்வதாக கூறுவாள்….வயதாக, வயதாக தலைமுடியில் கருப்பு மை அடித்துக் கொள்ளலாம் என்று தோன்றிய எண்ணத்தில் வெள்ளை அடித்தாள். ஐம்பது வயது தோற்றம், ஐம்பது வயதில் அப்படித்தான் இருக்கிறது…. இருக்கட்டும் என்றாள். . பால் போன்ற தலைமுடியில், ஒரு வித அனுபவம் பரிசுத்தமாகிறது…… அவளை சுலபமாக உணர்ந்து கொள்ளும் தருணங்களை இந்த மழை எனக்கு துளி துளியாய் சொல்லித் தந்திருக்கிறது……

    சொன்னால் நம்புவதற்கு சிரமம் தான். மழை மேல் சத்தியமாய் நாங்கள் ஒரு முறை கூட சண்டை போட்டது கிடையாது. கருத்து முரண்பாடுகளை கூட, இடம் மாற்றி யோசித்து புரிந்து கொள்வோம்…ஒரு நாளைக்கு குறைந்தது பத்து முத்தங்களாவது பரிமாறிக் கொள்வோம். காதலை காமத்தில் உணர்ந்து கொண்டேயிருப்போம். காமத்தை காதலில் புரிந்து கொண்டேயிருப்போம். மழை விடாத நாட்களில் மையிருட்டின் புயலை அவளிடம் உணர்ந்திருக்கிறேன்…. நிலவில் மழை வேண்டும் என்று வேண்டுவாள், மழையில் நடக்கும் நிலவாக. மெல்லிய தீண்டல்களின் பரிணாமமே, மழைத்துளியின் தொடுதல் என்பாள். விரல் கோர்த்துக் கொண்டு வீதி தாண்டும் வேளையில், குழியில் சேர்ந்திருக்கும் மழை நீரில் சடாரென எட்டிக் குதித்து சிரிப்பாள்…

    சிறுவயதில் ஒரு மழைநாளில், வீடே அதிர அதிர சிரித்த கதை ஒன்றைக் கூறுவாள். ‘அ ‘ வை பெரியதாக எழுதிவிட்டு, அது தான் ” ஆ ” என்று சொன்னதாக, அதற்கு பின்னால் பனி மூட்டமாய் ஒளிந்து கிடந்த மழலையின் புரிதல், சிரிப்பாய் வெளிப்பட்டதை நினைவு கூறுவாள். நான் சிரிக்கின்றேன். இப்போதும் சிரிக்கத் தூண்டும் செயல் அது…. அதுவும் அவள் கூறும் போது, அது இன்னும் சுவையாக மாறும், அதிகாலை மழை போல… என்னால், கடலில் கடலாகும் மழையை விட்டு கண்களை எடுக்க முடியவில்லை. இந்த மழை ஒவ்வொரு முறையும் ஏதோ சொல்கிறது… அது கடலுக்கு புரிகிறது. அதையே, வேறு மாதிரி கரை புரிந்து கொள்கிறது….வெளியின் புரிதல் வினோதம். அது பல நேரங்களில் ஜன்னலையும், கதவையும் அடைத்து விடுகிறது….

    என் குடை, காற்றிலும், தட்… தட்… தட்…. என படும் துளிகளிலும் தலையாட்டி கதை கேட்டுக் கொண்டிருக்கிறது. தீரா தனிமைக்குள் சுதந்திரமாய், தன் ஆடைகளை கலைகிறது இந்த மழை. நிர்வாண மழையில் கற்புக்கு வேலையில்லை…. உயிர் கரைதலை உணர்த்தும் இம் மழை கணங்களில் மாறிக் கொண்டேயிருக்கும் புகைப்படம். அம்முவின் பல புகைப்படங்களில் சிறையாகி நிற்கும், மழைக் கம்பிகள், புகைப்படத்தின் காலங்கள்….மழையில் மழை நனைவதாக அவள் எழுதிய கவிதைகள் இன்னும் காயவில்லை என் நினைவு பாலையில். சிலபோது, மழையேறி, வான் வெளியில் மேகமாகிவிடும் மண் துகள்களின் மின்மினி அவள். அவளாக இருப்பது அழகு…. அவளோடு இருப்பது பேரழகு…. நான் பேரழகன் என்பாள்… இந்த முப்பது வருடங்களில் அவளின்றி கடல் கண்டது இதுவே முதல் முறை. இப்போது கடலாகவும் அவள் மாறிவிட்டதாக, அவளாகிய மழை சொல்லும் ரகசியம், என் தனிமையின் ஆழமாய் மணலுக்குள் ஆழப் பதிந்த என் பாதச் சுவடுகளை நனைக்கிறது…..

    எனக்குள் ஒரு வித கரைதல். நான் அழுது விடக் கூடாது. அழுவது அவளுக்கு பிடிக்காது. கண்ணீருக்கும் அழுகைக்கும் சம்பந்தம் இல்லை என்பது அவளின் மழைப்பாட்டு. கண்ணீரைத் துடைத்து, பின்னாலேயே பயணித்தது குடை தாண்டிய மழை…சட்டென நினைவு வருகிறது. அவளுக்கு குடை பிடிக்காது…. என்னால் இனி இந்த குடையைப் பிடிக்க முடியாது…. காய்ச்சல் தந்து விடும் என்பதால் வேறு வழியின்றி, பிடித்துக் கொள் என்பாள். வந்தாலும் பரவாயில்லை என்று குடை மறப்பேன் நான். இதோ இன்றும் குடையை காற்றின் கைகளில் தவழ விட்டு விட்டு, திரும்பி பார்க்காமல் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன்…

    சாலையெங்கும் மழைத் துளிகளின் தலைவிரி கோலம். கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிய மனித கூட்டம், மழையை வெறித்த கண்களோடு , ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கிறது….மரமற்ற சாலை, இனி ஒரு மழைக்காக எத்தனை காலம் காத்திருக்குமோ….? சாலையின் இருபக்கமும் வளைந்து இதழ்கள் தீண்டி நிற்கும் இலைகளோடு, மரங்கள் இருந்த காலத்தில், மீனலோட்சனி பச்சைக் கண்காரியாய் சிறகு விரித்து, மழையாக சிதறிக் கொண்டிருந்தாள் . இன்று சாலை மட்டுமே இருக்கிறது…

    காயாத சாலையில், உஷ்ணம், வெண் புகையாய் வெளியேறிக் கொண்டிருந்தது…திரும்பி பார்த்தேன்…. மழை நிறைந்த பெருவானமாய் கடல், பிரபஞ்சம் நனைத்துக் கொண்டிருந்தது….

    திறந்து கிடந்த வீட்டுக்குள் சாரல் துளிகள் சல்லடை துளைத்த துளி மீன்களாய் சிதறிக் கொண்டிருந்தது…வாசல் தாண்டி வீட்டுக்குள் நுழைந்த என் மீனலோட்சனி, உள்ளங்கையில் ஒளித்து வைத்திருந்த, மழைத்துளிகளை சுவற்றில் மாட்டப்பட்டிருந்த என் புகைப் படத்தில் தெளித்தாள்….அவளுக்கு மரணமும் வாழ்வும் ஒன்று தான்….அவளின் புன்னகை ஒரு பெரு மழையை தேக்கி வைத்திருந்தது….

    வாசலில் நனைந்து கொண்டிருந்தது, நான் கடற்கரையில் மழையோடு விட்ட குடை……

    Share
  • கருக்கல்

    —மாதவன்.

     

    செல்வி பட்டென்று விழித்துக் கொண்டபோது வாசலில் மெல்லியகுரல் கேட்டது.

    “இந்தா புள்ள செலுவி”

    அது சரசுவின் கிசுகிசுப்பான குரல். செல்வி மெல்ல எழுந்துசென்று கதவைத் திறந்து தலைநீட்டினாள்.

    “தோ ஒரும்சம் சரசு. இப்பம் வந்திடறேன்”

    என்று கூறியபடி செல்வி கலைந்திருந்த தனது புடவையை சரிசெய்துகொண்டாள். தலைமுடியைச் சுருட்டிக் கொண்டையிட்டபடி எரவாணத்தில் சொருகியிருந்த டார்ச் லைட்டை உருவி கையிலெடுத்துக்கொண்டாள். படுக்கையில் சின்ராசு வாய்பிளந்து தூங்கிக்கொண்டிருந்தான். இரவு அவன் செய்த சேட்டைகள் நினைவுக்கு வந்து சிரிப்பையும் வெட்கத்தையும் ஒருங்கே கொடுத்தது.

    டவுன் மார்க்கெட்டில் லோடு வண்டி ஓட்டுகிறான். எங்கோ தொலைவிற்கு சென்று இரவு ஒருமணிக்குத்தான் வீடுவந்தான்.

    “ஏம்யா, சொந்தமா வண்டி வாங்கி ஓட்டுனா இன்னுங்கொஞ்சம் கூட காசு வருமில்லை”?

    “ம்… வரும். ஒங்கப்பாரு கரட்டான்டிபட்டியில ஊரு தலைவருதான? வரையில ஒரு வண்டியயும் கூடவே வாங்கியாந்துருக்கலாம்ல”?

    “அது சரி. ஒமக்கு என்னிய கட்டிக்குடுத்ததே பெருசாம்”

    “பார்ரா.. ஏனாம் ? அப்புடி எதுல புள்ள ஒனக்கு கொறவெச்சிருக்குறேன்னு கேக்குறேன்”? என்றபடி முரட்டுத்தனமாக முயங்கினான் பிரியத்தைப்போலவே வாய்ப்பேச்சும் அதிகம் அவனுக்கு.

    எழுப்பி சொல்லாமல் சென்றால் காலையில் கன்னாப்பின்னாவென கத்துவான். ஆனால் செல்விக்கு தூங்குபவர்களை எழுப்புவதே பிடிக்காது.

    மெல்லப் படியிறங்கி, ஓசையின்றி கதவைச்சாத்தினாள். வீட்டையொட்டிய சந்தில் சரசுவும் குஞ்சக்காவும் நின்றுகொண்டிருந்தார்கள்.

    “ஏம்புள்ள வெரசா வரதில்ல. வெடிஞ்சுப்புடுச்சின்னா ஆருக்கு கஷ்டம்” என்று கடிந்துகொண்டாள் குஞ்சக்கா.

    “இல்லக்கா… ராத்திரி அவுரு வர லேட்டாயிருச்சா ? கொஞ்சம் அசத்திப்புடுச்சிக்கா”…

    “ஆமாம்போ”… என்றபடி சலித்துக்கொண்டே அவள் முன்னால் செல்ல சரசுவும் செல்வியும் பின்தொடர்ந்தார்கள்.

    குஞ்சக்காள் கணவன் கத்தாரில் இருக்கிறான். நாலைந்து வருடத்திற்கு ஒருமுறைதான் ஊருக்கு வருவான். அந்த சமயங்களிலெல்லாம் குஞ்சக்காவின் தலையில் கிரீடம் ஏறிக்கொள்ளும். மற்ற நாட்களில் சிடுசிடுவென இருப்பவள் கணவன் லீவில் வந்திருக்கும் நேரத்தில்மட்டும் அத்தனை மகிழ்ச்சியாக பேசிச்சிரிப்பாள். அவள் வீட்டில் கறிக்குழம்பு மணப்பதெல்லாம் அந்த சமயங்களில் மட்டும்தானென்று சரசு சொல்லிக் கேட்டிருக்கிறாள்.

    சரசு கேட்டாள், “என்ன புள்ள ராமுச்சூடும் அண்ணன் தூங்கவிடலியாக்கும்?”

    “ச்சீ நிப்பாட்டுடீ. எல்லாத்துக்கும் உண்டானதுதான. நாளைக்கி நீ கட்டிகிட்டூ போயி மட்டும் வேற என்னத்தை செய்யப்போறியாம்?”

    “அதெல்லாம நடக்குறப்ப பாத்துக்கலாஞ் செலுவி. என் தேங்காப்பல்லுக்குன்னு எவனாச்சும் மாங்காப்பல்லு கெடைக்காமலா போயிருவான்” என்று கூறிய சரசுவின் வார்த்தைகளில் வருத்தமிருந்தது.

    சரசுவிற்கு முன்பற்கள் எந்தி வாய் மூடமுடியாதபடி இருக்கும். நன்றாக இருந்தாலே சொல்லத்தேவையில்லை. எத்தனையோ இடம் வந்துபோயிற்று. ஒன்றும் தகையவில்லை. சரசுவிற்கு என்ன பதில்சொல்வதென்று தெரியாமல் அமைதியாக நடந்தாள் செல்வி.

    “வெரசா வாங்கடீ வாளக்கொமரிங்களா”, என்று முன்னால் சென்ற குஞ்சக்கா நின்று இவர்களை விரட்ட இருவரும் வேகமாக நடக்கத்துவங்கினார்கள்.

    மண்டபத்தில் விடிவிளக்கு எரிந்துகொண்டிருந்த பிள்ளையார் கோவில் கடந்து பாயம்மாவீட்டுச் சந்துநுழைந்தபோது சனியன்பிடித்த நாய் ஒன்று விடாமல் குரைத்தது. ஒன்று தொடங்கியதும் தொடர்ந்து பக்கத்துத்தெரு நாய்களும் சேர்ந்துகொண்டு சகட்டுமேனிக்கு குரைக்கத்தொடங்கின.

    சரசு முன்னால் நகர்ந்து “டேய்.. டேய்.. ச்சும்மாயிரு. ஆளுதெரியாதா ஒனக்கு” என்று குரல்கொடுக்க அது சற்றே அச்சத்துடன்வந்து சரசுவை முகர்ந்துவிட்டு நகர்ந்தது. வீட்டிற்குள்ளிருந்து பாயம்மாள் முனகினாள்.

    “யாருலே அது?”

    “நாந்தான் பாயம்மோவ், சரசு” அதன்பிறகு பாயம்மாவிடமிருந்து பதில் வரவில்லை.

    ஊர்நடுவே பஸ்டாப்பை ஒட்டிய அமைதிவழியும் ஆலமர மேடையில் யாரோ ஒன்றிரண்டு வயசாளிகள் உறக்கம்வராமல் புரண்டுகொண்டிருந்தார்கள். அதுவரை பிரச்சனையில்லை. தெருவிளக்கு வெளிச்சம் இருக்கும். மேடையை தான்டிவிட்டால் கும்மிருட்டுத்தான். இருளை தொட்டதும் குஞ்சக்கா தனது டார்ச் விளக்கை ஒளிரச்செய்தாள். செல்வியும் சரசுவும் கூடவே.

    இருளில் நின்றிருந்த பள்ளிக்கூடத்தை கடக்கும்போது மைதானத்தின் மரங்கள் காற்றில் அசைந்தது உடலில் நடுக்கத்தைக் கொடுத்தது.

    சட்டென்று கருவேலம்புதரிலிருந்து எதுவோ வேகமாக ஓடியது. செல்விக்கு குலைநடுங்கியது. அவளுக்கு இதெல்லாம் புதிது. அவள் புதூருக்கு திருமணமாகி வந்தே ஒருமாதம்தான் ஆகிறது. இந்த ஒருமாதமும் இதே அவஸ்தைதான். அதுவும் வந்த முதல்வாரத்தில் விருந்துச்சோறு தின்று வயிறு காற்றடைந்து கெட்டுக்கிடந்தது. இரவாகி பொழுது விழும்வரை நரகமாகக் கழிந்த நாட்கள் அவை.

    அவள் பிறந்த ஊரான கரட்டான்டிபட்டியில் இத்தனை பிரச்சனைகள் இல்லை. அங்கே சிறிய மலை ஒன்று இருப்பதால் அதன் பின்புறம் மறைவாக ஒதுங்குவது மிகப்பெரிய சவுகரியமாக இருந்தது. விடியும் வரை ஆண்கள் யாரும் மலைப்பக்கம் வரமாட்டார்கள்.

    குஞ்சக்கா ஓரிடத்தில் சற்று நின்றாள். சரசுவும் செல்வியும் அவளருகே சென்று சேர்ந்துகொண்டார்கள்.

    “என்னாச்சுக்கா”

    “ஒன்னுமில்ல புள்ளைங்களா.. சாரை ஒன்னு குறுக்கால போச்சு. அதான் சித்த நின்னேன்”

    “எங்க எங்க”? என்று சரசு துள்ளினாள்.

    “ந்தா.. சார ஒன்னுஞ்செய்யாதுன்னு எத்தன வாட்டி சொல்லிருக்குறேன். குதிக்காம வாடி. அசலூருக்காரிகூட அலுங்காம வாரா. உள்ளூருக்காரிக்கு என்ன நோப்பாளம் வந்துச்சின்னு கேக்குறேன்.”

    வாய்க்கால் பாலம் கடந்து அடைந்த தார்சாலையில் குளிர்ச்சி பூசியிருந்தது. அங்கங்கே தலையில் வெளிச்சப்புள்ளி சுமந்து அலைந்துகொண்டிருந்தன மினுக்கட்டாம் பூச்சிகள். பக்கத்து ஊரான பாலையூர் மசூதியிலிருந்து பாங்கொலி சன்னமாக கேட்டது. இன்று தாமதமாகிவிட்டது. வழக்கமாக திரும்பிச்செல்லும்போதுதான் இந்த பாங்கொலியை கேட்கநேரும். தூரத்தில் பைப்பாஸ் ரோட்டில் லாரிகள் விரையும் சப்தம் கேட்டது. சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்துக்கொண்டு சாலையோரமாக ஆளுக்கொரு பக்கமாக மூவரும் …

    செல்விக்கு அழவேண்டும்போலிருந்தது. சின்ராசிடம் ஜாடைமாடையாக சொல்லியாயிற்று. புரிகிறாமாதிரி தெரியவில்லை. மாமியார் ஒரேவரியில் முடித்துக்கொண்டாள்.

    “இந்த ஊருக்கு நா வாக்கப்பட்டு வந்து எத்தன வருசமாச்சுன்னு ஒனக்குத்தெரியுமா ? இன்னிவரை எனக்கு அதான். நம்மூரு பொம்பளைங்க எல்லாத்துக்கும் அதேதான். இல்ல நீதா சமீந்தாரு ஊட்லயிருந்து வந்தியோ?”

    அவள் கூறியதும் உண்மைதான். ஊரில் ஒன்றிரண்டு மச்சுவீட்டில்தான் கழிவறைகள் இருக்கிறது. மற்றெல்லோருக்கும் இப்படிப் பொதுவெளிதான்.

    குஞ்சக்கா ஒருமுறை சொன்னாள்.

    “கவர்மென்டுல கட்டடம் கட்டியுட்ருக்காங்க புள்ள. கூறில்லாத பயலுவ. ஊர் எல்லையில சுடுகாட்டுல கொண்டுபோயில்ல கட்டிவச்சிருக்கானுங்க. வெடிஞ்சும் வெடியமின்ன பொம்பளையாளுங்க எப்புடிப் போவாங்கன்னு யோசன வேணுமா இல்லியா ? என்னையெல்லாம் இந்த ஊரே வாயாடின்னுதான் பேசும். ஆனா அதுக்காவ பேயிபிசாசுங்ககூடபோயி என்னத்தை வாயாட ? பத்தாததுக்கு எளந்தாரிப்பயலுவ எல்லாரும் அங்க இருந்த தண்ணிக்கொழாயையெல்லாம் ஒடச்சு எடைக்கி போட்டு சாராயம் குடிச்சுப்புடுச்சிங்க.”

    சரசுவிற்கு முடிந்திருக்கவேண்டும். எழுந்து நின்றுகொண்டு சுற்றிலும் பார்த்தபடியிருந்தாள். திடீரென பளாரென்று ஹெட்லைட் வெளிச்சமும் பெரிய ஹாரன் சவுன்டுமாக செவலூர் செல்லும் முதல் பஸ் வந்தது.

    செல்வியும் குஞ்சக்காவும் அவசரமாக எழுந்து சாலையின் விளிம்பில் நின்றுகொண்டார்கள். ஹாரன் அளவிற்கு வேகமில்லாமல் நிதானமாக வந்தது பஸ்.

    டீசல் வாசனையும் வெளிச்சமும் ஜன்னல் தலைகளுமாக அது கடந்தபின் மறுபடி சூழ்ந்த இருள் முன்னைவிடக் கருமையாக இருந்தது. செல்விக்கு ஜன்னல் தலைகளைக் கண்டு அவமானம் பிடுங்கியது. வானத்தில் இப்போது நட்சத்திரங்கள் மறையத்தொடங்கின.

    சரசு அவசரமாக கீச்சுக்குரலில் கத்தினாள்.

    “யக்கா யக்கா ஆளுக வராங்க.”

    பட்டென்று மறுபடி எழுந்துகொண்டார்கள். நல்லவேளை சப்பாணிதான் இரண்டு மாட்டை வயலுக்கு ஓட்டிசென்றான். இவர்களை கடக்கும்போது மாட்டின் கழுத்துமணி ஓசைஅதிகமாக கேட்டது.

    காலை ஒருபக்கமாக இழுந்தபடி இவர்களைப்பார்த்தும் பாராததுபோல ட்ரோய் ட்ரோய் என்று மாடுகளை ஓட்டிச்சென்றான். அவன் தலைமறையும்வரை அடிவயிற்றுச் சங்கடத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். ஆண்களுக்கு பிரச்சனையில்லை. விடிந்தபிறகுகூட கம்மாயி பக்கம் ஒதுங்கிவிட்டு தம்புரான் கேணி பம்புசெட்டிலோ கம்மாயித்தண்ணியிலோ கழுவிக்கொண்டு வீடுசேர்ந்துவிடுவார்கள்.

    பெண்களெல்லாம் கம்மாயிபக்கம் செல்லமுடியாது. அங்கிருக்கும் தீமரம்தான் காரணம். போனவாரம் சுப்பன் அதனடியில்தான் ரத்தம்கக்கி இறந்துகிடந்தான். டாக்டர் மாரடைப்பு என்றார். ஆனால் ஊருக்குள் கருப்பு அடித்துவிட்டதாகத்தான் பேசிக்கொண்டார்கள். சப்பாணி கண்ணைவிட்டு மறைய மறுபடி குத்துக்காலிட்டு உட்கார்ந்துகொண்டார்கள்.

    இது ஒரு இம்சை. சிலநாட்களில் சுலபத்தில் வெளியேறாது. நம் சங்கடங்களெல்லாம் அதற்கெப்படித் தெரியும் ? ஆனால் உந்துதல் இருந்தாலும் இல்லாவிட்டால் உட்கார்ந்துவிட்டுத்தான் போகவேண்டும். இந்த கருக்கலை விட்டால்மறுபடி இரவுதான் சந்தர்ப்பம் வாய்க்கும். நடுவில் வயிறு சங்கடம் செய்தால்தான் நிரம்பச்சிரமம். கொள்ளை படல் மறைவில் மூத்திரம்போகத்தான் சாத்தியம்.

    இதுமாதிரியான நேரங்களில் சின்ராசு செல்வியின் முகம் பார்ப்பதை தவிர்த்துவிடுவான்.

    “கோவிச்சுக்காத புள்ள. இருக்குறதே பொறம்போக்கு குடிசை. கக்கூசு எல்லாம் கட்டமுடியாது. டவுனுல வீடு பார்த்துக்கிட்ருக்குறேன். கொஞ்சநாளிக்கி அட்சசு பண்ணிக்க செலுவி” என்று உறுதியாக சொல்லிவிட்டான்.

    சின்ராசு நல்லவன். இவள்மீது மிகுந்த பிரியமுள்ளவன். தினசரி வரும்போது டவுனிலிருந்து இவளுக்குப் பிடித்த காராச்சேவு எல்லாம் வாங்கிவந்த்து தருவான். ஆரம்பத்தில் செல்விக்கு தன் அப்பாமீதுதான் கோபமாக வந்தது. வெளிவாசல் போகக்கூட சாத்தியமில்லாத ஊரில் கட்டிக்கொடுத்துவிட்டாரே என்று.

    சரசு ஒருமுறை சொன்னது ஞாபகம் வந்தது.

    “வெய்யக்காலத்துல தொல்லயில்ல செலுவி. மழக்காலந்தான் ரெம்பக்கஷ்டம். மேல மழத்தூத்தும். கீழச் சேறு வளுக்கும். பூச்சிங்களா ஊறிட்டுத்திரியும். தேளுக்கும் பூராணுக்கும் தப்பிச்சி ஒக்காந்து எந்திரிச்சி போவுறதுக்குள்ள பாதி உசுரு போயிரும்”

    செவலூர் பஸ் மறுபடி அதே ஹாரன் சத்தமும் லைட் வெளிச்சமுமாக ஊரிலிருந்து திரும்பியபோது மீண்டும் எழுந்துகொண்டார்கள். குஞ்சக்கா கெட்டவார்த்தை ஒன்றைச் சொல்லி காறித்துப்பினாள்.

    பஸ் வேகமாக கடந்துசென்றபின்பு டாட்டா எஸு ஒன்றும் எதிர்ப்புறமாக ஊர்நோக்கிச்சென்றது. வானில் மெல்ல வெளிச்சம் வரத்தொடங்கிவிட்டது. குஞ்சக்கா கேட்டாள்.

    “முடிஞ்சிருச்சா செலுவி. கெளக்கு வெளுத்துட்டு. ஜனம்மெல்லாம் வர ஆரம்பிச்சிரும் வெரசாக் கெளம்பு” என்று எச்சரித்தபடி எழுந்து நின்றுகொண்டாள்.

    சரசுவும் குஞ்சக்காளும் நிற்க தான் மட்டும் உட்கார்ந்திருக்க என்னமோ போலிருந்தது செல்விக்கு. அவளும் மெல்ல எழுந்துகொண்டாள். மறுபடி வந்த வழியில் நடந்தபோது ஊர் விழித்துக்கொண்டுவிட்டது. ஆலமர மேடையில் நாலைந்துபேர் வாயில் ஆலங்குச்சியை மென்றபடி உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். மரத்தின்மேல் கணக்குவழக்கின்றி கிளிகள் கத்தியபடி பறந்துகொண்டிருந்தன. டாட்டா ஏஸில் ஆறுமுகஞ்செட்டியார் தக்காளி கூடைகளை ஏற்றிக்கொண்டிருந்தார்.

    மேலத்தெருவில் ஊர்த்தலைவர் வீட்டு காரின் முன் கண்ணாடியில் பனிபடர்ந்து நீர்க்கோடுகளாக வழிந்திருந்தன. பிள்ளையார்கோவில் சிமெண்ட்டுத்தரை கழுவப்பட்டு ஈரமாக இருந்தது. பாயம்மாள் சந்தில் அந்த நாய் சாதுவாக படுத்துக்கொண்டிருந்தது. கொஞ்சநேரம் முன்பு ஆக்கிரோஷமாக குரைத்தது அதுதான் என்று சொன்னால் யாராலும் நம்பமுடியாது.

    வீட்டிற்கும் முன்பாக சந்தில் சின்ராசு மினிடோரைத் துடைத்தபடி நின்றுகொண்டிருந்தான். செல்வியை பார்த்து சங்கடமாக ஒரு புன்னகை செய்தான். செல்வி கொள்ளைக்குச்சென்று இரண்டு சொம்பு தண்ணீர் விட்டுக்கொண்டு அடுப்பை பற்றவைத்து டீ போட்டு கொண்டுவந்து சின்ராசிடம் கொடுத்தாள். சின்ராசு டீயை வாங்கிக்கொண்டு அவள் கைகளைப் பிடித்துக்கொண்டான்.

    இந்த பிரியத்திற்காக எதைவேண்டுமானாலும் பொறுத்துக்கொள்ளலாமென்று தோன்றியது அவளுக்கு. வீடுகளில் எப் எம் ரேடியோக்கள் அலறத்தொடங்கின. கிராமங்களின் வளர்ச்சி மேம்பாட்டிற்கான புதிய திட்டமொன்றிற்கு பிரதமர் 200 கோடி ஒதுக்கியிருப்பதாக ரேடியோச் செய்திகள் தெரிவித்தன.

    Share
  • எனக்காக மரித்தவன்

    —கனவு திறவோன்.

    ‘அப்பா அப்பா எழுந்திருங்கப்பா என்னப்பா ஆச்சு… ஐயோ அசையவே மாட்டேங்குறாரே’ என்று ஓலமிட்டு அழுகிறாள் என் மனைவி. கல்யாணம் கட்டியது முதல் ‘மாமா’ என்று தான் அவள் என்னைக் கூப்பிடுவாள். ஆனால், அவள் அப்பா போன வருடம் இறந்ததிலிருந்து என்னை ‘அப்பா’ என்று கூப்பிட ஆரம்பித்தாள். நான் ஓரமாக அந்த அறையின் மூலையில் பீரோவுக்கு அருகில் நிழலாய் நின்று கொண்டிருகிறேன். என் பிள்ளைகள் கட்டிலில் மல்லாந்து கிடக்கும் என் உடலையும் என் மனைவியையும் மாறி மாறி அதிர்ச்சியாய்ப் பார்க்கிறார்கள்.

    ‘குமுதன் பக்கத்து வீட்டு அங்கிள கூப்பிடேன்…’

    என் முதல் மகன், குமுதன் வாசலை நோக்கி ஓடுகிறான். நான் அவனைத் தடுக்க நினைக்கிறேன். அஃது இப்போது முடியாதல்லவா. கையாலாகாதவனாய் கடிவாளம் போட்டுக் கொண்டேன்.

    பக்கத்து வீட்டு நண்பர் சாமிநாதன் பதட்டத்துடன் குமுதனுக்கு முன்னால் ஓடி வருகிறார்.

    ஆர்வமாக எட்டிப் பார்க்கிறேன். என்ன நடக்கப் போகிறது?

    ‘கட்… ராஜன் ஸார்… நீங்க பிரேமுக்குள்ள வர்றீங்க… கொஞ்சம் பின்னாலப் போங்க அல்லது இங்க வந்திடுங்க…’

    டைரெக்டர் மைக்கில் கத்தினார்.

    நிகழ்வில் ஒன்றி இரண்டு எட்டு முன்னால் வந்திருந்ததை அப்போது தான் உணர்ந்தேன்.

    ‘இன்னொரு ஷாட் போகணுமா?’

    ‘இல்ல ஸார் சீன் சூப்பரா வந்திருக்கு… நீங்களே நடிச்சிருக்கலாம்… டூப் போட்டதால… ஒர் ஆங்கிள்ல தான் கேமரா வைக்க முடிஞ்சுது அதுவும் லாங் ஷாட்டுல…’ என்று அலுத்துக் கொண்டார் டைரக்டர்.

    இப்படித்தான் பல நேரங்களில் டூப்பாய் மனிதர்கள் மரிக்கிறார்கள்.

    Share
  • ’88’

    — மாதவன்.

    வெளியே மழை சத்தமின்றி பெய்துகொண்டிருந்தது. ஒருமாதிரி ஊதாநிறத்தில் கண்ணாடி ஜன்னல்களில் கோடுகளாக வழிந்துகொண்டிருந்தது.

    அமில மழை இப்படித்தான் பலவிதவண்ணங்களில் பெய்கின்றது. மூன்றுநாள் முன்பு இளம்பச்சை நிறத்தில் பெய்தது. பார்வைக்கு மிக அழகாக ஓவியச்சிதறல்போல தெரிந்தாலும் அதன் ஆபத்தை வார்த்தைகளில் விளக்கிவிட முடியாது.

    இந்த அமில மழையின் ஒரேயொரு துளி கூட இரும்புமாதிரியான கடினமான உலோகங்களையே கரைத்துவிடக்கூடியது. சென்றவாரத்தின் ஒரு மழையில் அப்படித்தான் அந்த முட்டாள் நாய்க்குட்டி வெளியில் சென்று கருகி இறந்துபோனது.

    இத்தனைக்கும் இந்த வீடு, வீடென்று இதை சொல்லிவிட முடியாது. இது ஒரு பெரிய ஹால் என்றுகூட சொல்லுவது பொருத்தமில்லை. வேண்டுமென்றால் ஒரு ஆராய்ச்சிக்கூடம் என்று சொல்வது சரியாக இருக்கும்.

    தனித்தனியான அறைகளெல்லாம் கிடையாது. பரந்துவிரிந்த பெரிய கூடம். இதன் மேற்கூரை மேலே செல்லச்செல்ல கூர்மையாக இருக்கும்படி அமைக்கப்படிருக்கிறது.

    அமில மழையால் அரித்துப்போய்விடாதபடி ஒருவித கலவையான உலோகத்தால் உருவாக்கப்பட்டது. இந்தக்கூரை மட்டும் இல்லையென்றால் இங்கிருக்கும் 88 உயிர்களும்… சாரி… இப்போது 87 தான். எபோதோ அமிலமழையில் கருகிக்கரைந்திருப்போம்.

    எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சென்ற வருடம் கிபி 2065 கிறிஸ்துமஸ் தினத்திற்கு இரண்டுநாள் முன்பு என் கணவர் வீட்டிற்கு வந்தார். என்னால் நம்பவே முடியவில்லை. ஏனென்றால் அவர் இதுவரை எந்த பண்டிகைதினத்திற்கும் வீட்டில் இருந்ததில்லை.

    இஸ்ரோ நாசா என்று அவர் பணிபுரியாத நாடுகளே இல்லை. ஆமாம் அவர் ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர். மனிதர்கள் ஐநூறு வருடங்கள்வரை உயிர்வாழும் மருந்து கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் என்று சொன்னால் ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும்.

    வீட்டிற்கு வந்து சிலநாட்கள் பித்துக்குளிபோலத்தான் சுற்றிக்கொண்டிருந்தார். எப்போதும் எங்கள் வீட்டின் மாடியிலுள்ள லேபில் மணிக்கணக்காய் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்.

    ஏதோ புதிய விண்கலம் ஒன்று தாயாரித்துக்கொண்டிருப்பதாக என்னிடம் கூறினார். திருமணம் ஆனதிலிருந்தே அவரைப்பற்றியும் அவரது ஆராய்ச்சிகள் மீதான பைத்தியம் பற்றியும் எனக்குத்தெரியுமென்பதால் விட்டுவிட்டேன்.

    திடீரென்று ஒருநாள் அவரது இன்னும் சில நண்பர்களும் வந்திறங்கியபோது நான் கொஞ்சம் பயந்துபோனேன். கேட்டதற்கு ஏதேதோ சொல்லி சமாளித்தார். நாட்கள் செல்லச்செல்ல இன்னும் சிலநண்பர்கள் குடும்பசகிதமாக எங்கள் வீட்டிற்கு வந்தபோது நான் நச்சரிக்கத்தொடங்கினேன்.

    அவர் அரசாங்கத்திற்கு எதிராக ஏதோ ஆய்வு செய்கின்றாரோ என்னும் எனது சந்தேகத்தை ஒளிவுமறைவின்றி அவரிடம் சொல்லிவிட்டேன். அப்போதுதான் தயங்கித்தயங்கி அவர் சொன்னார். அவரை நாசாவிலிருந்து பணிநீக்கம் செய்துவிட்டதாக. அவர் என்னிடம் படிக்கச்சொல்லித் தந்த நாசாவின் கடிதத்தின் சாராம்சம் இதுதான்.

    ஒரு ஆய்வின் முடிவில் என் கணவர் சமர்ப்பித்த தியரியின்படி, இயற்கை அழிவின் காரணமாகவும் புவிவெப்பமயமாவதன் தொடர்ச்சியின் விளைவாகவும், 2066 மார்ச் மாத வாக்கில், நம் பால்வீதிமுழுக்க ஒரு வித அமில மழை பொழிந்து பூமி அழியப்போகிறது என்று சொல்லியிருக்கிறார்.

    அந்த தியரியைப்படித்த நாசா குழுவினர் இவருக்கு மனநலம் சரியில்லை என்று சொல்லி இடைக்கால பணிநீக்கம் செய்திருக்கிறது. அதனால் தான் இந்த கிறிஸ்த்மஸிற்கு மனிதர் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

    அப்புறம் ஒருநாள் எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள மைதானத்தில் பெரிய பெரிய உலோகத்தகடுகள் எல்லாம் வைத்து மிகப்பெரிய தட்டைவடிவில் ஏதோ ஒன்றை இணைத்து உருவாக்கினார்கள்.

    வந்திருந்த நண்பர்கள் அனைவருமே பெரியபெரிய அறிவியல் மேதைகள். அவர்கள் எல்லோருமே அதிகம் யோசித்தார்கள், அதிகம் பேசினார்கள். அதிகம் சிகரெட் புகைத்தார்கள்.

    பிறகு ஒருநாள் அந்த பறக்கும் தட்டை, ஆமாம் அப்படித்தான் அதை அழைத்தார்கள். அந்த பறக்கும் தட்டை சோதனை ஓட்டம் பார்த்தார்கள். இரண்டு அடிகள் மேலெழும்பி தொப்பென்று விழுந்துவிட்டது. மறுபடி யோசனைகள் பேச்சுக்கள் சிகரெட்டுகள்.

    இறுதியாக ஒரு நன்னாளில் அது பறக்கத்தொடங்கியபோது ராணுவ அதிகாரிகள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். என் கணவரும் நண்பர்களும் என்ன சொன்னார்களோ அவர்கள் சிரித்துக்கொண்டே திரும்பிச்சென்றுவிட்டார்கள்.

    நாங்கள் மொத்தம் 88 பேர்கள் இருந்தோம். அதில் நான்கு நாய் ஒரு முயல் மூன்று பூனைகளும் அடக்கம். அந்த தட்டு அவ்வளவுதான் தாங்குமென்று சொன்னார்கள்.

    சூரிய ஒளி சக்தியாலும் பேட்டரிகளாலும் பெட்ரோல் எரிபொருளாலும் அது பயணிக்கும் என்றார்கள். செவ்வாய்க்கு அருகில் ஏதோ ஒரு வாயில் நுழையாத பெயருள்ள புதிய கிரகம் என்றார்கள். என்னென்னவோ ஒளியாண்டுகள் என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். பறக்கும் தட்டில் விண்வெளியில் பயணிக்கும்போது காலம் நின்றுபோய்விடும் எனவே பிரச்சனையில்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

    எனக்கு இவை எதிலும் ஆர்வமோ புரிதலோ இல்லை. நான் உண்டு என் மகள் ஜெஸ்ஸி உண்டு என்று இருந்தேன்.

    அந்த ஆண்டின் பிப்ரவரி கடைசியில் அமிலமழை பொழியத்துவங்கியபோதுதான், அதில் நனைந்து சில பனிக்கரடிகள் கருகிச்சாம்பலாய் கிடந்ததை டிவியில் பார்த்தபோதுதான் என் கணவரை எல்லோருமே ஆச்சரியமாகப் பார்த்தோம்.

    ஆனால் அவர் இதெல்லாம் பெரிய விஷயமில்லை என்பதுபோல சாதாரணமாக இருந்தார். தட்டிலிருந்த எங்களில் சில சீனர்களும் அரேபியர்களும் யூதர்களும் இந்தியர்களும் என்று ஓரளவு எல்லா தேசத்தவர்களும் இருந்தார்கள்.

    எனக்கு என் தாய்மொழி தவிர வேறு எதுவும் தெரியாததால் அமைதியாகவே இருந்தேன். செயற்கைக்கோள்மூலம் அவ்வப்போது எடுக்கப்படும் படங்களை வைத்துப்பார்த்ததில் எங்கள் பயணத்தின் இரண்டாம் நாளே பூமி சாம்பல்மேடாக இருந்ததைக்கண்டோம். எல்லோரும் கணத்த மவுனத்தோடு அழுதுகொண்டிருந்தோம். தனியாக தப்பித்து உயிர்வாழ்வது குறித்த குற்றவுணர்வும் பயமும் எல்லோரையும் வாட்டியது.

    பயணத்தின் பத்தாம்நாள் பறக்கும்தட்டில் கோளாறு ஏற்பட்டது. பிரபஞ்ச வெளியில் மெல்ல தக்கத்தக்கி ஆடத்தொடங்கியது. என் கணவர் ஏதேதோ கணக்குப்போட்டுப்பார்த்துவிட்டு உதட்டைச்சுழித்தார். பெருத்த ஆயாசம் தெரிந்தது அவர் முகத்தில். சாட்டிலைட் படங்கள் மேப்புகள் எல்லாவற்றையும் விரித்து நண்பர்களோடு ஆலோசித்தார்.

    என்னென்னவோ வாக்குவாதமெல்லாம் வந்தது. பளீரென்று ஏதோ யோசனை வந்ததுபோல என் கணவர் ஒரு ஐடியாவைக்கூற சந்தோஷமாக எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள்.

    அதிர்ஷ்டவசமாக வழியில் அகப்பட்ட ஒரு பிரம்மாண்டமான விண்கல்லில் தட்டை இறக்கி கோளாறையெல்லாம் சரிசெய்துவிட்டுப்பிறகு புறப்படுவதுதான் திட்டம்.

    தட்டை விண்கல்லில் இறக்கி சோதனைசெய்ய ஒரு ரோபோவை களமிறக்கியதில் ஆக்ஸிஜனுக்கோ தாவரத்திற்கோ நீருக்கோ எந்த ஒரு உயிருக்கோ வழியில்லாத இடம் அது என்று புரிந்தது. வேறுவழியின்றி ஆக்ஸிஜன் மாஸ்க்குகளோடு இங்குவந்து இறங்கினோம்.

    ரெடிமேட் ஆக தயார் செய்து வைத்திருந்த உலோகத்தகடுகள் கொண்டு இணைத்து இந்த ஆய்வுக்கூடத்தையும் உருவாக்கியாயிற்று.

    தினமும் தூங்கி எழுந்ததும் என் கணவர் அவர் நண்பர்கள் கூட இன்னும் சிலர் அனைவரும் சென்று பறக்கும்தட்டை சரிசெய்ய முயற்சிப்பதும். பிறகு களைத்ததும் திரும்பிவருவதுமாக நாட்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இரவுபகல் என்றெல்லாம் எதுவுமின்றி எப்போதும் அரையிருட்டாகவே இருந்தது. ஒரு இருநூறு தப்படி நடந்தால் நாங்கள் இறங்கியிருக்கும் விண்கல்லின் விளிம்பு வந்துவிடும்.

    அமிலமழையற்ற நாட்களில் நான் ஜெஸ்ஸியை அழைத்துக்கொண்டு மிதந்து அங்கு சென்று அங்கிருக்கும் ஒரு கூரான பாறையைப் பிடித்துக்கொள்வேன்.

    தலைக்குமேலே நட்சத்திரங்களை பார்த்துப்பழகிய ஜெஸ்ஸிக்கும் எனக்கும், எங்கள் கால்களுக்குகீழே ஒளிரும் நட்சத்திரக்கூட்டங்கள் பெரிய பரவசம்.

    அவை ஒவ்வொன்றிற்கும் நாங்கள் பெயர்வைத்திருக்கிறோம். ஜெஸ்ஸிக்கு எல்லாப்பெயர்களும் மனப்பாடம். ஏதேனும் நட்சத்திரத்தைக்காட்டி கேட்டால் சரியாக பெயர் சொல்லிவிடுவாள். சுற்றிலும் எடையற்று அங்கங்கு மிதக்கும் சிறுசிறுகற்களை நகர்த்தியபடி விளையாடிக்கொண்டிருப்போம். ஜெஸ்ஸிக்கு அதில் மிகுந்த விருப்பமுண்டு.

    இன்று கொட்டும் மழையைப்பார்த்தால் இன்னும் இரண்டுநாட்களுக்கு விடாதுபோலத்தெரிகிறது. வெளியில் செல்லாவிட்டாலும் நாய்க்குட்டியுடனாவது ஜெஸ்ஸி பொழுதை போக்கிக்கொண்டிருந்தாள். இப்போது அதுவும் இல்லை.

    கையிருப்பில் இருக்கும் உணவும் நீரும் சிக்கனமாக உபயோகித்தால் இன்னும் ஒருமாதம் வரை வரும். அதற்குப்பிறகு? கொஞ்சம் மழை ஓய்ந்தபின்பு வெளியில் சென்றவர்களெல்லாம் வந்தார்கள். அவர்களில் ஒருசிலர் வாய்விட்டு அழுதார்கள்.

    பறக்கும் தட்டின் ஏதோ ஒரு சிறிய பகுதி பர்மனென்ட் ஆக சிதைந்துவிட்டதாம். அனேகமாக சரிசெய்ய முடியாதென்றுதான் புலம்பிக்கொண்டிருந்தார்கள். என் கணவர் வெற்றுமுயற்சியாக எல்லோரையும் சமாதானம் செய்துகொண்டிருந்தார்.

    நான் ஜெஸ்ஸியோடு வெளியேறி அந்த விளிம்பிற்கு மிதந்தேன். ஜெஸ்ஸி என் கழுத்தை இறுகக்கட்டியிருந்தாள். விளிம்பிற்குச்சென்றதும் ஜெஸ்ஸி கேட்டாள் “நாம எப்ப மம்மி நம்ம வீட்டுக்குப்போவோம்”?

    நான் பதில் சொல்லாமல் அவளுக்கு நட்சத்திரங்களை வேடிக்கை காண்பித்தேன்.

    மெல்ல குளிர்காற்று வீசியது …

    Share
  • கூத்துக்காரன்

    மாதவன்

    கூத்து முடிந்து திரைமெல்லக் கீழிறங்கியதும் சண்முகம் தன் அரிதாரத்தை கலைக்கத்தொடங்கினான். முகம் கழுவுகையில் தனது மீசையில்லாத முகம்பார்த்து அப்பாவை நினைத்துக்கொண்டான். சண்முகம் நாயகத்தன்மைகள் ஏதுமற்ற ஒரு சாமான்யன். பஸ் டிரைவர். அவன் அப்பாபோல மெயின் வேஷமெல்லாம் இல்லை. சைடு வேஷம்தான். சண்முகத்தின் அப்பா சின்னையன் பெரிய ஆள். ஸ்தீரிபார்ட் சின்னையன் என்றால்தான் தெரியும் எல்லோருக்கும். திரவுபதி வேஷமிட்டால் அசல் திரவுபதியே வந்துவிட்டதுபோல இருக்கும் எல்லோருக்கும்.

    அந்தக்காலத்திலேயே சிங்கப்பூர் எல்லாம் சென்றுவந்திருக்கிறார். ஸ்தீரிபார்ட் வேஷம் கட்ட அவர்போல வேறு ஆளில்லை அப்போதெல்லாம். ஆனால் சண்முகத்தின் வகுப்புத்தோழர்கள் எல்லோரும் அவரைப்பற்றி பேசுகையில் மீசையற்ற அவர் முகம்பற்றிக் கேலிசெய்வார்கள்.

    ” ப்பா..”

    “என்ன தம்பு”?

    “நா ஒன்னிய ஒன்னு கேக்கவா”?

    “கேளுய்யா”

    “நீ இனிமேட்டு பொம்பள வேசங்கட்டாதப்பா”

    “ஏன்யா”?

    “பள்ளியூடத்துல எல்லாப்பசங்களும் என்னிய கிண்டல்பண்றாங்கப்பா”

    “என்னன்னு”?

    “நீயொரு பொண்டுகஞ்சட்டியாம். அதனாலதான் அம்மாகூட உன்னியவிட்டு ஓடிப்போயிருச்சாம்”

    அப்பா அவனை இழுத்து அணைத்துக்கொண்டார். அப்படி அணைத்துக்கொண்டால் அவர் குடித்திருக்கிறார் என்று அர்த்தம். அவன்மீது பிரியம் வந்துவிட்டதென்று அர்த்தம். ஆனால் என்ன செய்தாலும் அம்மாவைப்பற்றி எதுவும் கூறமாட்டார்.

    மேனேஜர் கொடுத்த ஐநூறு ரூபாயை வாங்கி தன் அன்ட்ராயரில் வைத்துக்கொண்டான் சண்முகம். மரியாதை என்று சொல்வார்கள் அதை முன்பெல்லாம். ஒரு பெரிய தாம்பாளம் நிறைய வெற்றிலை பாக்கு பழங்கள் வேஷ்டிதுண்டு எல்லாம் வைத்துத்தான் கூத்திற்கு அழைப்பார்கள். கூத்து முடிந்தபின்பும் அதேபோல சன்மானம் வைத்து வண்டிகட்டி வழியனுப்பிவைப்பார்கள். அப்படித்தான் ஒரு ஊரில் இரண்டுரூபாய் நோட்டுக்கட்டை திண்ணையில் தூக்கிப்போட, துண்டை உதறியபடி அதை தொடாமல் திரும்பிவந்தாராம் அப்பா.

    பஸ்டான்ட் கூட்டமாக இருந்தது. அவன் தனக்கான பஸ்ஸை தேடி ஏறியமர்ந்துகொண்டான்.

    அப்பாவுடன் கூத்திற்குச் செல்லும்போதெல்லாம் எல்லோரும் கேட்பார்கள்.

    “ஏஞ்சின்னா, ஒம்மவனுக்கு பிரகலாதன் வேசங்கட்டினா நல்லாயிருக்காது”?

    “ச்சீ சவத்த ஒன் வாயக்கழுவு மொதல்ல. அவனுக்கு எதுக்கு இந்த நாறப்பொழப்பு ? அவன் பள்ளியூடத்துல படிக்கிறான். நல்ல வேலைக்கிப்போவான். சாயம்பூசுற பொழப்பெல்லாம் என்னோட போவட்டும்”

    நகரும் பேருந்தின் ஜன்னல்வழி அவசரமாக நகர்ந்தன மரங்கள். முன்னாலிருந்து ஒரு குழந்தை கைநீட்டியது. சண்முகம் ஒற்றைவிரலால் அதன் கைபற்றினான். அது சிரித்தது.

    அப்பா கடைசிவரை கூத்துக்கட்டியவர். அரவான் வேஷங்கட்டிய அன்று தான் பலியாவதற்கு முன்பான உக்கிரமான காட்சியின்போதுதான் அவருக்கு பக்கவாதம் வந்து கைகால் இழுத்துக்கொண்டது. அதன்பிறகு அதிககாலம் சிரமப்படவில்லை. கொஞ்சநாட்களிலேயே இறந்துபோனார். அதற்குப்பிறகுதான் சண்முகம் கல்யாணமே செய்துகொண்டான்.

    சண்முகத்தின் பள்ளி ஆண்டுவிழாவில் மாறுவேடப்போட்டிக்கு அவன் வேஷங்கட்ட முயன்றபோதுதான் முதல்முறை அவனை அடித்தார்.

    “அது ஒரு சாபம் தம்பு. பெரிய போத. ஒருவாட்டி வேசங்கட்டி கைதட்டு வாங்கிட்டீன்னா, பொறவு சாவறவரை அந்த சத்தம் கேட்டுக்குட்டேயிருக்கத்தோனும். அது ஒரு வல சம்முவம். விழுந்தா ஆள அப்புடியே முழுங்கிப்புடும்.

    “நீங்க மட்டு ஏன் வேசங்கட்டுறீங்க”?

    “எங்கய்யா. ஒந்தாத்தன் பெரிய பாகவதர் தம்பு. சின்னப்புள்ளையில இருந்து என்னிய கூத்துக்கு பழக்கிவச்சாரு. என்னால அத விடவே முடியல. என் சாயம் ஒனக்கு ஒட்டிரக்கூடாதுன்னுதான் ஒன்ன படிக்கவைக்கிறேன்.
    அப்பா இவனோடு நிறைய பேசுவார்.

    “ஒருநாளு எங்கய்யாவோட கீரணூருக்கு போனேன். அடுத்தமாசம் கூத்துக்கு பேச்சுநடத்த போறமின்னு சொல்லித்தான் என்னிய கூட்டிப்போனாரு. அங்க போனபொறவுதான் தெரிஞ்சுது போனது பொண்ணுபாக்கயின்னு. ஒங்கம்மா அத்தன அழகு. நம்மூரு மாரியாத்தா செல இருக்குபாரு அதுமாதிரி ஒரு அழகு.

    ஆயிரம்ரூவா பணம். அஞ்சாறுபவுனு நகயோட அவளக்கட்டிக்கிட்டேன். ஆனா அவளுக்கு என்னிய சுத்தமா புடிக்கலன்னு அப்பறமாத்தான் தெரிஞ்சது. எப்பப்பாரு எரிஞ்சு விழுந்தா. எங்கயாச்சும் வெளிய தெருவுக்கு கூப்புட்டா வரமாட்டா.

    நீயொரு பொண்டுகஞ்சட்டி மாதிரி நடக்குற ஒம்மோட எவ வருவா அப்டீன்னா. அதோட நா கூத்து கட்டுறது அவளுக்கு புடிக்கல. சாடைமாடையா சொல்லியும் நா கேக்கல. அப்பறம் ஒருநாள் வெளிச்சமா வெளக்குனா.

    வேசங்கட்டி நீ கொண்டாற காசவச்சு எம்பொறத்தக் கழுவறதா ? கூத்துக்கருமத்தையெல்லாம் உட்ரு. எங்கப்பாருகிட்ட சொல்லி கொஞ்சம் நெலம் வாங்கியாறேன். பாடுபட்டு கெடக்கலாம்னா.

    அன்னிக்கித்தான் அவள மொதவாச்சி அடிச்சேன். அன்னிலயிருந்துதாம் இந்தக்கருமத்தைக் குடிக்க ஆரம்பிச்சேன். அதும்பொறவு நெதம் சண்ட சச்சரவு”

    பஸ் பைப்பாஸில் எங்கோ ஓரிடத்தில் நிற்க சண்முகம் இறங்கி மூத்திரம்பெய்துவிட்டு டீ குடித்தான். மறுபடி பஸ் ஏறியபோது அப்பா வந்து மனதில் உட்கார்ந்துகொண்டார்.

    ஒருமுறை சினிமாவில் வாய்ப்புவந்தது அவருக்கு. அப்பாவுடன் சண்முகமும் சென்றிருந்தான். வியர்த்துப்பூத்த முகத்துடன் ஒரே வசனத்தை திரும்பத்திரும்ப சொல்லவைத்துக்கொண்டிருந்தார்கள். ‘இந்தாளு தேறமாட்டான்’ என்று யாரோ யாரிடமோ அப்பாவைக்காட்டி சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

    ஒருநாள் திடீரென்று சண்முகத்தை அழைத்து பேசத்தொடங்கினார்.

    “நீ பொறந்தப்ப ஆஸ்வத்திரிக்கி பார்க்க வந்தேன். அவ எங்கூட பேசவேயில்ல. அவ ஆத்தாக்காரி என்னமோ சொல்லிப்பார்த்தா. அவ ஒரே முடிவா சொல்லிப்புட்டா.  ஒங்கூத்துப்பொழப்ப உட்டுட்டு வந்தா வா இல்லாட்டி ஒஞ்சோலியப்பாருன்னு. பச்ச ஒடம்புன்னு பாக்காம உட்டம்பாரு கட்டுலோட ஒரு ஒத. அவ அப்பங்காரன் வந்து என்னிய சட்டயக்கோர்த்து வெளிய தள்ளலைன்னா அன்னிக்கே ஒங்கம்மா செத்துருப்பா.

    கொஞ்சநாள் பொறவு ஒருநாள் அவ அப்பனாத்தாளும் கொஞ்சம் ஒறவுக்காரங்களும் வந்து பஞ்சாயத்து பேசுனாங்க. நான் உறுதியா சொல்லிப்புட்டேன். இது எங்கொலத்தொழிலு. இத்தோட இருக்குறதுன்னா வந்து இருக்கட்டும்னு. அவளும் வந்து கொஞ்சநாள் நல்லாத்தான் இருந்தா. அப்பறம் பழயபடிக்கு ஆரம்பிச்சா.

    அப்டித்தான் ஒருநாளு கூத்து முடிஞ்சு ஊட்டுக்கு வரேன் ஆளக்காணோம். பக்கத்தூட்ல இருந்து ஒன்னிய தூக்கிக்கிட்டு ஊரெல்லாம் தேடுறேன் இல்ல. அவ ஊருக்குபோயி பார்த்தா அங்கயும் தாக்கலில்ல. அப்டியே ஒரு மாசம்போச்சு. நம்மூரு மணியக்காரருதான் ஒருநா வந்து சொன்னாரு. பக்கத்தூரு மைனரு வூட்ல வெப்பாட்டியா கெடந்தாளாம் ஒங்கம்மா.

    மணியக்காரரும் என்னென்னவோ எடுத்துச் சொல்லிருக்காப்ள. அவ அசரவே இல்லியாம். வரவே மாட்டமின்னு சொல்லிட்டாளாம். நானும் போவல”

    சண்முகத்திற்கு படிப்பு நன்றாக வந்தது. முடித்தபிறகு அப்பாதான் எங்கெங்கோ அலைந்து சிபாரிசு பிடித்து சர்க்கார் வேலைவாங்கிக்கொடுத்தார். உடல்நிலை நன்றாக இருந்தவரை கூத்துக்குச் சென்றார்.

    “ஒனக்கு எம்மேல எதுவும் கோவமிருக்கா சம்முவம்”?

    “எதுக்குங்கப்பா”?

    “ஒன் கண்ணுலியே வேசங்கட்ற ஆசையப்பார்க்கமுடியுது தம்பு. ஆனா இது ஒரு சாபப்பொழப்புய்யா. ஒருத்தன் சும்மாவாச்சும் இதய செஞ்சிரமுடியாது. உசுரா நெனச்சு எறங்கினாத்தான் இதுல சரிப்படும். என்னமோ ஒனக்கு இது வேனாமுன்னு எம்மனசுல விளுந்துருச்சி. அதான் ஒன்னிய கடசிவரை உள்ள இழுக்கல்லே”

    “இல்லங்கப்பா. எனக்கும் ஆசயிருந்துச்சி. ஆனா ஒம்பவிசு எனக்கு வராதுன்னு தெரிஞ்சபொறவுதான் தெளிஞ்சிகிட்டேன். எங்கப்பாரு எனக்கு நல்லதுதாம் செய்துருக்கீங்க”

    “இல்ல சம்முவம். நா செஞ்சதுலாம் தப்புத்தான். நாலுபேரு பாராட்டுற கெறக்கம் இருக்குபாரு. அது என்னவேனா செய்யும் நம்மள. என்னிய அப்புடித்தான் கவுத்துவிட்டுருச்சி. நாலு பாட்டிலு குடிச்சமாதிரி ஒரு மெதப்பு. ‘ஸ்தீரிபார்ட் சின்னையனா பிரமாதமான கூத்தாடியாச்சே’ அப்டீன்னு நாலுபேரு சொல்லுறப்ப வர வெறி இருக்குபாரு. அது பொம்பள சொகத்தவிட பெருசா இருக்கும்”

    “நா ஒங்கள ஒன்னு கேக்கவாப்பா”?

    “கேளுய்யா”…

    “அம்மாமேல ஒங்களுக்கு கோவமே வர்லியா”?

    அருகிலிருந்த புல்லைப் பிடுங்கி கொஞ்சநேரம் கடித்துக்கொண்டு யோசித்தார்.

    “அவ செஞ்சதுல தப்பு எதுவுமில்ல தம்பு. ஒரு புருசனா எங்கிட்டதாம் தப்பு. அவள சந்தோசமா வச்சுக்கல. எப்பமும் கூத்து வேசமுன்னே சுத்திக்கிட்டிருந்தேன். சோறு செய்யாதப்போதான் அவ நெனப்பும் அவமேல கோவமும் வரும். ஒன்னக்கூட வுட்டுட்டுபோவும்படி அவள வாட்டிருக்குறேன் பாரு. எந்தப்புதான் எல்லாம்”

    “இல்லங்கப்பா. நீங்க என்ன சொன்னாலும் அம்மா செஞ்சது ஏத்துக்க முடியாது. நா அவள என்ன செஞ்சேன்”?

    அப்பா சிரித்தார். கண்னில் நீர்வரச்சிரித்தார்.

    “நீ எங்கூடவே நெழலு மாதிரி இருந்துட்ட சம்முவம். அதுங்கூட நாஞ்செஞ்ச தப்புத்தான்”

    ஒருநாள் அளவிற்கதிகமாக குடித்துவிட்டு வந்தார். சண்முகம் அவர் குடிப்பதைப்பற்றி எதுவுமே சொன்னதில்லை. ஆனால அன்று மிதமிஞ்சிய போதை. இடுப்புத்துணிகூட நிற்காதபடி. என்னென்னவோ புலம்பினார். சிரித்தார். அழுதார். சுவற்றில் தலையை முட்டிக்கொண்டார்.

    மறுநாள் காலை சாதாரணமாக சங்கதி சொன்னார். அம்மா இறந்துபோய்விட்டாளாம். எத்தனை மோசமான உயிரென்றாலும் இறந்தபிறகு வெறுக்கமுடியாதுபோல. சண்முகம் மறுத்துவிட அவர்மட்டும் சென்று காடுவரை வழியனுப்பிவிட்டு வந்தார். அன்றுதாம் அரவான் கூத்தாடி பக்கவாதத்தில் விழுந்தது. அம்மா இறந்தது அவரை ஏதோ ஒரு வகையில் பாதித்துவிட்டது.

    வாழ்வின் போக்குகளைபற்றி எத்தனை யோசித்தும் குழப்பம்தான் மிஞ்சியது சண்முகத்திற்கு. அப்பா கூத்துக்கட்டுவதை விட்டிருந்தால் அம்மா கூட இருந்திருக்கலாம். அம்மாவிற்கும் கூத்திலோ அப்பாமேலோ விருப்பமிருந்திருந்தால் அம்மா கூட இருந்திருக்கலாம். கடைசிகாலத்தில் அப்பா குழறலாக சொன்னதெல்லாம் ஒன்றுதான்.

    ஒலகத்துல எல்லாத்தையும்விட மனுஷங்கதான் முக்கியம் சம்முவம். அதுங்களை கூட வச்சுக்கத்தான் வாழ்க்கை. அதுங்களுக்கு புடிசமாதிரி இருந்து சந்தோசமா வச்சுக்கத்தான் போராட்டம். கூட இருக்குறவன் அழுதா என்ன செத்தா என்னன்னு இருக்குறதுல மனுசனாப்பொறந்து பலனில்ல.

    வீட்டிற்குள் நுழைந்தபோது பிள்ளை தூங்கிக்கொண்டிருந்தான். நைட்டியில் சோம்பல் முறித்த மனைவியிடம் பணத்தை கொடுத்துவிட்டு வந்து படுத்துக்கொண்டேன். காலை எழுந்ததுமே மகன் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆட்டம்போட்டான். அவன் ஸ்கூலுக்குச்சென்றபின்பு மனைவி அந்த போட்டோவைக் கொண்டுவந்து காட்டினாள்.

    மகனின் ஸ்கூல் மாறுவேடப்போட்டியில் எடுக்கப்பட்ட போட்டோ. தெர்மாக்கோல் கதாயுதத்துடன் கர்ணன் வேஷத்தில் மகன் சிரித்தபடி நின்றிருந்தான்.

    Share
  • மீள்

    ஹரீஷ் கண்பத்

    வண்டி சிக்னலில் நிற்கும் போது தான் யதேச்சையாக அந்தக் கட்டிடத்தைப் பார்த்தேன்.சிக்னல் தாண்டியதும் இரண்டாவது பில்டிங்காக வலப்புறம் இருந்தது. ஓரிரு முறைகள் நண்பனுடன் சென்றதுண்டு. தனியாகவெல்லாம் ஒரு நாளும் சென்றதில்லை.

    இன்றைக்கு ஏன் போகக் கூடாது? சட்டென்று தோன்றியது. சிக்னல் பச்சைக்கு மாற இன்னும் பல நொடிகள் இருந்தன.எதற்குப் போக வேண்டும்? இன்னொரு பக்கம் யோசனை. அங்கு போனாலாவது இரவில் கொஞ்சம் எல்லாவற்றையும் மறந்து தூங்க முடிந்தால்? சிக்னல் விழுந்து விட்டது. யோசனைகள் எல்லாவற்றையும் துடைத்துத் தள்ளியபடி ஒரு அட்ரினலின் அவசரம் எங்கிருந்தோ குதிக்க, நொடிப் பொழுதின் உந்துதலில் சட்டென்று வலப்புறம் இண்டிகேட்டரைப் போட்டு திருப்பினேன். வண்டி அந்த வளாகத்துக்குள் என்னை இழுத்துக் கொண்டு போனது.

    —————

    காபியை வாயில் வைத்ததும் தான் தெரிந்தது. சர்க்கரை போட மறந்து விட்டிருக்கிறாள்.இந்த வாரத்தில் இது இரண்டாவது முறை. நானும் எதுவும் கேட்டுக் கொள்வதில்லை.. இப்போதைய சூழ்நிலையில் காபியில் போடும் சர்க்கரையைப் பற்றியெல்லாம் என்னால் யோசிக்க முடிகிறது என்பதே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. சொல்லப் போனால் அசூயையாக இருந்தது.

    இருந்துமென்ன? மனதில் சிரமங்கள் நாவுக்குத் தெரிந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? நாக்கு அது பாட்டுக்குத் தன் வேலையைச் செய்கிறது. எழுந்து சென்று சர்க்கரையைப் போட்டு கலக்கிக் கொண்டு வந்தேன்.

    ஆபீஸ் போக இன்னும் நேரமிருந்தது. தூக்கம் பிடிப்பதில்லை இப்போதெல்லாம். காலையிலேயே ஏதோ ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததும் என் தூக்கம் கலைந்து விடக் கூடாதென்று அப்பா அதை அவசரமாக எடுத்ததும் தெரிந்தே இருந்தது.இப்போதும் தொலைபேசி அழைப்பு. அப்பாவுடையது தான்.

    சட்டென்று ஓடி வந்து தொலைபேசியை எடுத்தவர் என்னை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே அறைக்குள் ஒதுங்கினார். அடுத்த சில நிமிடங்களுக்கு ஒற்றைச் சொற்களில் அவர் பதிலிறுப்பது கேட்டது. “ம்… ஆமா.. என்ன பண்றது? விதி” போன்ற வார்த்தைகள். இந்த வயசில் இதையெல்லாம் தூக்கிச் சுமக்க வேண்டியிருக்கிறது  அவருக்கு.

    எனக்குத் தெரியக் கூடாது என் காதில் விழக் கூடாதென்று எவ்வளவு முன்னெச்சரிக்கைகள். ஆனால் எனக்குத் தெரிந்தே இருக்கிறதென்பது அவருக்கும் தெரிந்தே இருக்கிறது. இருந்தும் அந்தப் பாசாங்கு. பாவம் அவர்.

    உள்ளே நுழைந்ததும் ஏ சி சில்லிட்டது. வெளியே இருந்த கசகசப்புக்கு இதமாக இருந்தது. அமர்ந்தால் அமிழும் சோபாக்களை தவிர்த்து நடந்தேன். உயரமாய் இருக்கும் கூம்பு நாற்காலிகள் போடப்பட்டிருந்த மேடையின் அருகே சென்றேன். காலியாக இருந்த நாற்காலி ஒன்றில் ஏறி அமர்ந்தேன்.

    இசை அதிர்ந்தபடி இருந்தது. இடப் பக்கம் பார்த்தேன். டி வியில் ஏதோ ஒரு கிரிக்கெட் போட்டி சத்தம் மழிக்கப்பட்டு சைலண்ட் மோடில் ஓடிக் கொண்டிருந்தது.அந்தப் பையன் வந்து “ என்ன” என்பது போல் பார்த்தான். அப்படியென்றால் ஆர்டர் கொடுக்க வேண்டும் என்று அர்த்தம்.

    “வோட்கா ஒரு லார்ஜ்”.

    “மிக்ஸிங்கு சார்?”

    “ ஸ்பிரைட்டோ செவன் அப்போ “

    “ஓகே சார்”

    “தம்பி….”

    “சார்?”

    “லெமன் கார்டியலும் கொண்டு வா”

    “சரிங்க சார். சைடிஷ் எதுனா ஆர்டர் பண்றீங்கனா இப்பவே சொல்லிடுங்க சார்”

    “எதுவும் வேணா. இதை மட்டும் கொண்டு வா போதும்.”

    அவன் அகன்றதும் டி வியைப் பார்த்தேன். எவனோ ஒருவன் க்ளீன் போல்டாகிக் கொண்டிருந்தான்.

    ————

    அம்மாவின் கஷ்டம் வேறு மாதிரி. வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பவள் அப்படியே எதிர்மறையாய் மாறி விட்டாள்.

    அன்று நான் கண்கள் கலங்க “ இது பத்தி இனிமே பேச வேண்டாமேம்மா ப்ளீஸ்” என்று சொன்னது காரணமாக இருக்கக் கூடும். அதில் தெரிந்த கெஞ்சல் காரணமாக இருக்கக் கூடும். உள்ளுக்குள் வைத்துப் புழுங்குகிறாள்.

    மழை வரும் போலிருந்தால் வானத்தை நிமிர்ந்து பார்த்து விட்டு மாடித் துணிகளை நனையுமுன் எடுப்பது தான் சமயோசித இயல்பு. மழைக் கோப்பு கூட்டிக் கொண்டு தான் இருந்திருக்கிறது. கடைசி வரை மேலே நிமிர்ந்து பார்க்காமல் விட்டது முழுக்க முழுக்க என் தவறு தான்.

    இன்னமும் கூட எனக்கு சவிதாவின் மேல் கோபம் வர மறுக்கிறது. என் குணம் அப்படி. சவிதா சவிதா என்று நான் பிதற்றிக் கொண்டிருப்பது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரிந்தால் என்ன ஆவார்கள்? அதற்காக இதை யோசி இதை யோசிக்காதே என்று மனசுக்குக் கட்டளை போட நாம் என்ன மகாஞானியா?

    ——–

    பொதுவாக அவ்வளவாய்க் குடிப்பதில்லை. எப்போதாவது நண்பர்களுடன் சேரும் போது மட்டுமே.அதுவும் நண்பன் வீட்டில் நடக்கும் அல்லது இது மாதிரியான ஓரளவு நாகரிகமான பார்களில் நடக்கும். டாஸ்மாக் வாடை எனக்குப் பிடிக்காது. அதனால் குடிப்பது என்று ஆனால் இது மாதிரி ஏதாவது இடங்களில் தான்.

    அதற்கும் கூடத் தனியாய் வந்து ரசித்துக் குடிக்கும் அளவுக்கான அவசியமோ மனநிலையோ ஒரு போதும் இருந்ததில்லை. இன்றென்னவோ சட்டென்று ஒரு உந்துதல்.அந்த சம்பவம் நடந்ததிலிருந்து பெரும்பான்மை இரவுகள் எதற்கோவாய்த் தூக்கம் கெடுவதும் ஒரு காரணம். இதைக் குடித்தாலாவது தூக்கம் கிடைக்காதா என்ற நப்பாசை.

    இப்படியெல்லாம் வெளியே சொல்லிக் கொண்டிருந்தாலும், தனியே சென்று ஒரு நாளாவது குடிக்க வேண்டும் என்று ஆழ் மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் போட்டு வைத்திருந்த ஆசை தான் இன்று என்னை உந்தியிருக்கிறதோ என்கிற யோசனையும் ஓடியது, அதற்கு என் இப்போதைய மன நிலையும் உறுதுணையாக இருந்து தொலைத்திருக்கிறது போல.

    யோசனைகளின் ஊடே ஒவ்வொரு கோப்பையாக மிக்சரும் சுண்டலுமாக என் முன் நிறைந்தது. கடைசியாக வோட்காவைக் கொண்டு வந்து வைத்தான்.மிக்ஸிங்குக்காக வைத்த குளிர்பான பாட்டிலைத் தொட்டேன். அதன் சில்லிப்பு சுரீர் என உறைத்தது.

    —–

    அன்றைக்கு நடந்ததை நினைக்கக் கூடாது என்று சொல்வது கூட அபத்தம் தான்.அவ்வளவு அமளியிலும் ஏன் ஏன் ஏன் என்று தான் கேட்டுக் கொண்டிருந்தது மனசு. எங்கேயாவது கண்களில் தட்டுப்பட்டு விட மாட்டாளா என்று அபத்தமாய்த் தேடித் திரிந்தது. தெளிவாய் எழுதி வைத்து விட்டுப் போனவளை எதிர்பார்த்தது மடத்தனம் என்று இப்போது உரைப்பது அப்போது உரைக்கவில்லை.

    கேள்விகள் கேட்பது எத்தனை சுலபமாய் இருக்கிறது மனிதர்களுக்கு? எத்தனையெத்தனை கேள்விகள்? புரட்டி எடுத்து வேரோடு பிடுங்கி வீசியெறிந்து மேலும் துவைத்துப் புண்ணாக்கும் கேள்விகள். அடர் வனத்தில் நுழைய நுழைய சூரிய வெளிச்சத்தைக் கொஞ்சங்கொஞ்சமாய்க் கிழித்து நம் மேல் படரும் பகலிருளின் கருமை போல் கொஞ்ச நஞ்சம் மனதில் இருக்கும் பிடிப்பையும் அசைத்துப் பார்க்கும் கேள்விகளின் இருள்,

    அதை விட அன்று மனதை அறுத்த விஷயம் அவ்வளவு சாப்பாடு வீண். யாரிடமாவது சொல்லி அதை ஏதேனும் சொல்லி அதை ஏதாவது செய்யச் சொல்ல்லாம் என்று துடித்தாலும் அன்றைய நிலையில் அதை விடப் பெரிய பிரச்னைகளைத் தான் நீ பார்க்க வேண்டும் என்று எல்லாரும் சொல்லாமல் சொல்லி விட்டார்கள். போனவள் போய் விட்டாள். அதற்கென்று சாப்பாட்டை வீணாக்குவானேன். எத்தனை லட்சங்கள். யாருடையதாய் இருந்தால் என்ன? ஆனால் இதை நான் அன்று சொல்லியிருந்தால் மூளை குழம்பி விட்டதென்றோ அல்பம் என்றோ சொல்லி இருப்பார்கள். அத்தனை உணவும் என்ன ஆனதென்று தெரியவில்லை. இன்று வரை மனம் ஆறவில்லை.

    ——–

    மெல்லக் குளிர்பான பாட்டிலைத் திறந்து வோட்காவில் அளவாக ஊற்றினேன். வோட்காவினுள் சிறிது சிறிதாகக் கலந்த குளிர்பானம் சிறு நுரையை உண்டு பண்ணியது. குமிழ்ந்து மேலே வந்தபடி இருந்தது அந்த அழுத்தமில்லாத வெண்ணிற நுரை.அது அடங்கும் வரை ஓரொரு வினாடிகள் ஊற்றுவதை நிறுத்தினேன்.

    “நீங்க ஸ்மோக் பண்ணுவீங்களா?”

    “சேச்சே.. இல்லம்மா”

    “தேங்க் காட். எனக்கு அந்த ஸ்மெல்லே பிடிக்காது”

    “எனக்கும் தான்”

    “அதுசரி.. நீங்க ட்ரிங்க் பண்ணுவீங்களா. பொண்ணு பாக்க வந்த அன்னிக்கு சொன்னதெல்லாம் நான் அழிச்சிடறேன். இன்னிக்கு கரெக்டா சொல்லுங்க பாப்போம்”

    “அது….”

    “ம்ம்… சொல்லுங்க. பூனைக்குட்டி வெளிய வரட்டும்”

    “எப்பயாவதுமா. பிரண்ட்ஸோட சேர்ந்தா மட்டும்”

    “அதானே பார்த்தேன். இருக்கட்டும். உங்கள கல்யாணத்துக்கப்புறம் கவனிச்சுக்கறேன்”

    மெலிதாய்ச் சிரித்துக் கொண்டேன். இதைச் சொன்னவள் தான் அந்த லெட்டரை எழுதினாளா? எப்படி? மீண்டும் ஊற்றி கிளாஸை நிறைத்தேன்.

    ——–

    அலுவலகம் கிளம்ப நேரமாகி விட்டது.  அலுவலகத்தில் எல்லாரிடமும் ஒரு செயற்கைத் தன்மை வந்து ஒட்டிக் கொண்டு விடுகிறது என்னைப் பார்த்தாலே. நன்றாகப் பேசிக் கொண்டிருப்பவர்கள் திடீரென்று நாடகத் தனமாகப் பேச ஆரம்பித்து விடுகிறார்கள் என் தலை கண்டாலே. எதைப் பேச வேண்டும் எதைப் பேசக் கூடாதென்று அளந்து அளந்து பேசுகிறார்கள். செய்யாத தப்புக்குத் தண்டனை.

    ஆனாலும் அந்த அலுவலகத்தில் தான் இரவு வரை சமாளிக்க வேண்டியிருக்கிறது. வேலை என்று பெரிதாக இல்லாத பொழுதுகளிலும் வீட்டிலிருக்கும் வெறுமையிலிருந்து ஓடி ஒளிய அலுவலகம் ஒரு கேடயம். ஏ சி ஓடிக் கொண்டிருக்கும் நாற்காலியும் கணினியும் தந்திருக்கும், வெளியே போ என்று சொல்லாத கேடயம்.

    ——

    சம்பந்தமே இல்லாமல், சம்பந்தமில்லாத இடத்தில் சவிதாவின் நினைவுகள். நினைவுகள் என்றால் அவள் கடிதமெழுதி வைத்து விட்டுப் போனது பற்றீயல்ல. அது தான் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கிறதே. இப்போதைய நினைவுகள் அவளுடனான இனிமையான தருணங்கள் பற்றி. கால நேரம் அறியாமல் மொபைலில் பேசிக் களித்துக் கிடந்தது பற்றி. அப்போதெல்லாம் அவள் மனதில் அவனைப் பற்றி ஓடிக் கொண்டிருந்திருக்குமா என்ற மனசின் கேள்வியை அவசரமாக ஒரு பக்கம் ஒதுக்கி திமிறத் திமிற மூடி வைத்தேன்.

    வோட்காவை இன்னும் குடிக்கவே இல்லை. அதற்கு முன்பே இப்படி. நான் லேசாகச் சிரித்ததை அந்த பையன் பார்த்து விட்டிருக்க வேண்டும். தானாகத் தனியாகச் சிரித்தால் எப்படிப் பார்ப்பார்களோ அப்படிப் பார்த்தான். சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.மீண்டும் சவிதா வந்து அமர்ந்து கொண்டாள்,

    ——

    அம்மாவும் அப்பாவும் நான் கிளம்பிய பிறகு இன்னும் எத்தனை பேர் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்களோ? இது மாதிரி சமயங்களில் அடுத்தவர் மீது வாரி இறைப்பதற்கு மட்டும் எல்லாருக்கும் எங்கிருந்து சுரக்கின்றனவோ டன் டன்னாய் ஆறுதல் வார்த்தைகள். குப்பையைப் போல் எந்தத் தரம்பிரிப்பும் இல்லாமல் கேட்கிறவர்கள் மனநிலை என்ன என்று உணராமல் சொத சொதவென்று கொட்டப்படும் வெற்று வார்த்தைகள்.

    அவற்றையெல்லாம் சமாளிக்க தெரிந்தும் அம்மா அப்பாவை முன்னிறுத்திப் பின் மறைந்து கொண்டிருக்கிறேன். பரிதாபத்துக்குரிய மனிதன் அல்லது பொருள் அல்லது வஸ்து நான் தானென்பது எனக்கு மேலும் வசதியாகிப் போயி விட்டது. வெற்றுப் பேச்சு பேசுபவர்களை அடக்காமல் அம்மாவின் பின் ஒளிந்து கொண்டிருப்பதை நினைத்து என் மேல் எனக்கே அவமானம்.

    அக்கம் பக்கத்திலும் விசாரிக்கிறார்கள் என்று தெரியும். எத்தனை நாட்களுக்கு சலிக்காமல் ஒரே விஷயம் பற்றி விசாரித்தபடியே இருப்பார்கள் என்பது புரியவே இல்லை. இன்றோடு இரண்டு வாரங்கள் ஆகி விட்டது. ஓயாமல் இப்படி விசாரிப்பதன் மூலம் இவர்கள் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்? என்ன மாதிரியான பதிலை எதிர்பார்க்கிறார்கள்? நினைக்க நினைக்க பெருமூச்சு தான் மிச்சம்.

    ஆண்கள் அழக் கூடாது என்னும் கிறுக்குத் தனமான பிம்பத்தைக் கட்டமைத்து வைத்திருக்கும் ஊரில் பிறந்து தொலைத்ததால் அழுவதைக் கூட இரவின் பிடியில் பெட்ஷீட்டின் அடியில் சப்தங்களைய்க் குறைத்துக் கொண்டு செய்ய வேண்டியிருந்தது.

    ———–

    வைப்ரேஷனில் வைத்திருந்த மொபைல் அதிர்ந்தது. எடுத்துப் பார்த்தேன். அம்மா. இந்த சப்தத்தில் பேச முடியாது. மெல்ல எழுந்து வெளியே வந்தேன்.”எங்கப்பா இருக்க?” குரலில் லேசான நடுக்கம்.இப்போதெல்லாம் வழக்கத்தை விடக் கொஞ்சமே கொஞ்சம் தாமதமானாலும் பயப்படுகிறாள். அவளைச் சொல்லிக் குற்றமில்லை. நான் நடந்து கொள்வதும் அப்படித் தானே இருக்கிறது.

    “சொல்லும்மா. ஆபீஸ்ல இருந்து கிளம்பப் போறேன்.”

    “உனக்கு பிடிக்குமேன்னு சப்பாத்தியும் தால் ப்ரையும் பண்ணி வெச்சிருக்கேன். வீட்டுக்கு சாப்பிட வந்துடுவல்ல?” என்று கேட்டதில் லேசான தவிப்பு தெரிந்தது.

    சில நொடிகள் மௌனமாயிருந்தேன். இந்த சில நொடி மௌனம் நிச்சயம் அவள் துடிப்பை எகிறச் செய்திருக்கும் என்று தெரிந்தே மௌனமாயிருந்தேன்.

    பின் பெருமூச்சுடன் சொன்னேன். “ வந்துடறேன்மா. “

    “சரிப்பா வச்சிடறேன்” என்றவள் வைக்கவில்லை. சில நொடி கடந்ததும் “ சீக்கிரம் வந்துடுப்பா” என்றாள் தீனமான குரலில்.

    அதைக் கேட்காதது போல் இணைப்பைத் துண்டித்தேன்.

    ———-

    உள்ளே நுழைந்து மீண்டும் இருக்கையை அடைந்து அமர்ந்தேன். வோட்கா கிளாஸை உற்றுப் பார்த்தேன்.சலனமற்று அடியாழக் கடல் போல் அமைதியாயிருந்தது. சப்பாத்தியும் டால் ப்ரையும். மீண்டும் புன்னகைத்துக் கொண்டேன்.

    நிமிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்து அந்தப் பையனை அழைத்தேன். பில் கொண்டு வா” என்றேன்.

    “சுவைக்கப்படாத வோட்காவையும் என் முகத்தையும் சில நொடிகள் மாறி மாறிப் பார்த்தவன் சட்டென்று நகர்ந்தான்.சில நிமிஷங்கள் கழித்து பில்லை எடுத்து வந்து தந்தான். பில் தொகையுடன் கணிசமாய் ஒரு டிப்ஸ் தொகையும் வைத்தவனை அந்தப் பையன் மீண்டும் புதிராகப் பார்த்தான். உயர நாற்காலியில் இருந்து இறங்கி அவனை நோக்கிப் புன்னகைத்தேன். அவன் தோளைத் தட்டி விட்டு நகர்ந்தேன்.

    வெளியில் வந்து பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். சாலை அடைந்து வண்டி வேகம் எடுத்ததும் காற்றில் குளிர் கலந்திருப்பது தெரிந்தது. மழைக்கு முன்னான மண் வாசனை விரவியிருந்தது. வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு ஹெல்மெட் கண்ணாடியை விலக்கி விட்டு மேலே நிமிர்ந்து பார்த்தேன்.

    எனக்காக காத்திருந்த மழைத் துளியொன்று எங்கிருந்தோ வந்து பொட்டென்று என் நெற்றிப் பொட்டில் விழுந்தது. சிலிர்த்தது. மீண்டும் புன்னகைத்தபடி பைக்கை நகர்த்தத் துவங்கினேன்.

    Share
  • எதிர் வீடு

    உமாஸ்ரீ

    அதிகாலை நேரம். இருள் நீங்கி வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக படர்ந்து கொண்டிருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று பார்த்தால் வேத கோஷங்களின் இனிமையான இசை என்னை எழுப்பி விட்டது. என் கணவர் பக்கத்தில் நன்றாக குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தார். இடியே விழுந்தாலும் அவர் தூக்கம் கலையாது. அப்படி ஒரு வரம் வாங்கிக்கொண்டு பிறந்திருக்கிறார். நான் அதற்கு நேர் எதிர். சிறு ஓசை கேட்டாலும் எழுந்து விடுவேன்.

       வாசல் கதவைத் திறந்து பார்த்தேன். எதிர் வீட்டில் நான்கு சாஸ்திரிகள் வேதபாராயணம் செய்து கொண்டிருந்தார்கள். வாசலில் செம்மண் இட்டு பெரிய கோலம் கண்ணைக் கவர்ந்தது. வீட்டை புதியதாக வாங்கியவர்கள் அதைப் புதுப்பித்து ஹோமம் செய்கிறார்கள். அன்று எதிர் வீடு கோலாகலமாகயிருந்தது.

    நாங்கள் குடியிருக்கும் ”அபிநயா பிளாட்ஸ் “ கோடம்பாக்கத்திலிருக்கிறது. கீழே இரண்டு வீடுகள். முதல் மாடியில் மூன்று, இரண்டாவது மாடியில் மூன்று  ஆக மொத்தம் எட்டு  வீடுகள் கொண்ட அழகான அடுக்கு மாடி குடியிருப்பு. உள்ளே நுழைந்தவுடன் இடது பக்கம் இரண்டு திண்ணைகள் இருக்கும். காலை பத்து மணிக்கு அந்தத் திண்ணைகளில் வீட்டிலுள்ள வேலைக்குப் போகாத பெண்கள் அமர்ந்து அரட்டைக் கச்சேரி நடத்துவார்கள். மாலைநேரத்தில் முதியவர்கள் அந்தத் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.

    நான் கீழேயிருக்கும் வீட்டில் குடியிருக்கிறேன். முதல் மாடியில் பட்டாபி சாஸ்திரிகள் அவர் மனனவி பத்மா, குழந்தை காஞ்சனா இருக்கிறார்கள்.

    என் எதிர் வீடு ரொம்ப நாளாக பூட்டியிருந்தது. போன மாதம் தான் விற்றுப் போனது.

    அபிநயா பிளாட்சில் உள்ளவர்கள் எல்லோரும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அன்பும் பண்பும் நிறைந்தவர்கள.  ஒருவருக்கு ஒருவர் வலிய வந்து உதவி செய்வார்கள். ஓரிருவர் மட்டும் அதற்கு விதிவிலக்கு.

    நான் கதவை மூடி விட்டு வீட்டிற்குள் வந்துவிட்டேன். சிறிது நேரத்தில் என் கணவரும் எழுந்து பல் துலக்கி முகம் கழுவி  தேநீர் பருக வந்தார்.

    ” இன்று காலை எதிர் வீட்டில் பூஜை நடந்தது. வீட்டை விலைக்கு வாங்கியவர்கள் வந்து விட்டார்கள். “ என்றேன்.

    ” நல்ல செய்தி. ஆறு மாத மாதத்திற்கு மேல் பூட்டியிருந்த வீட்டில் இனி ஆள் நடமாட்டம் இருக்கும் என்று சொல். வருகிறவர்கள் நல்ல குடும்பமாகயிருக்க வேண்டும்.”

    “ ஆமாம். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ளலாம். எனக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.”

    “ இன்று என்ன சமையல்?”

    “ ஞாயிற்றுக்கிழமை என்ன சமையல் செய்வேன் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்களுக்குப் பிடித்த வெங்காய சாம்பாரும் உருளைக்கிழங்கு வறுவலும்தான் செய்ய போகிறேன் “ என்று சொல்லி முறுவலித்தேன்.

    அப்போது “  உள்ளே வரலாமா? என்று கேட்டுக் கொண்டே ஒரு நடுத்தர வயது பெண்மணி உள்ளே வந்தார். கண்ணைக் கவரும் சிவப்பு . நல்ல உடல் வாகு. சிவப்பு கலர் பார்டர் வைத்த பச்சைப் புடவையும் அதற்கு மேட்சாக அணிந்திருந்த பச்சைக் கலர் ரவிக்கையும் அவருக்குப் பாந்தமாக பொருந்தி அழகுக்கு அழகு சேர்த்தது. காதிலும், கழுத்திலும் தங்க நகைகள் மின்ன பிரமிக்க வைக்கும் பெண்ணரசியாக தோன்றினார்.

    ” நாங்கள் உங்கள் எதிர் வீட்டை விலைக்கு வாங்கியிருக்கிறோம். இப்போதுதான் பூஜை முடிந்தது. எங்கள் வீட்டில் நீங்கள் எல்லோரும் உணவு உட்கொள்ள வேண்டும். இன்னும் அரை மணியில் இலை போட்டுவிடுவார்கள். வீட்டில் சமையல் செய்யாதீர்கள் “ என்று புன்முறுவலுடன் அன்பு கட்டளையிட்டார். நான் என் கணவரைப் பார்த்தேன். அவர் கண்களில் சம்மதம் தெரிந்தது . அதீத அழகுடன் இருந்த அந்தப் பெண்மணியை எனக்கு முதல் பார்வையிலே பிடித்துப் போய்விட்டது.

    ” கண்டிப்பாக வருகிறோம். நீங்கள் அன்பாக கூப்பிடும்போது மறுக்க முடியுமா?. என் பெயர் ராதா. இவர் பெயர் ராமன். ஒரு தனியார் கம்பெனியில் பணி செய்கிறார். என்னுடைய ஒரே பையன் அமெரிக்காவில் இருக்கிறான். வருடம் ஒரு முறைதான் வருவான். நான் வீட்டிலிருக்கும் இல்லத்தரசி. எப்போதும் கதை புத்தகம் படித்துக்கொண்டிருப்பேன். நீங்கள் இப்போதுதான் புது வீடு வாங்கி குடி வந்திருக்கிறீர்கள். ஏதாவது உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள். என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன். “ என்றேன்.

    ” என் பெயர் சித்ரா. என் கணவர் பெயர் ராஜன். அவர் ஒரு தனியார் வங்கியில் பணி செய்கிறார். எங்களுக்கும் ஒரே பையன். அவன் பெயர் மாதவன். பத்து வயது. கே கே நகரில் ஒரு பள்ளியில் படிக்கிறான். மற்றவற்னற அப்புறம் விரிவாக சொல்கிறேன். என்றார் அந்தப் பெண்மணி.

    “ எதிர் வீட்டில் யாருமில்லை என்று கவலைப்பட்டோம். நீங்கள் வந்து விட்டதில் எங்களுக்கு நிரம்ப மகிழ்ச்சி. ராதா உங்களுக்கு ஏற்ற தோழியாகயிருப்பாள். “ என்றார் என் கணவர் சிரித்துக்கொண்டே.

    “ இலை போட்டாகிவிட்டது. எல்லாரும் சாப்பிட வரலாம் “ என்று எதிர் வீட்டிலிருந்து ஒரு மாமா உரக்க கத்தினார்.

    சித்ரா எங்கள் வீட்டை விட்டு அவசரமாக நகர்ந்தார்.

    அன்று எதிர் வீட்டில்தான் நானும் என் கணவரும் அறுசுவை உணவு உட்கொண்டோம்.

    மாலை நேரத்தில் எதிர் வீட்டில் சாமான்கள் வந்திறங்கின. சித்ராவும் அவள் கணவரும் சாமான்களை எல்லாம் எடுத்து வைக்க வேண்டிய இடத்தில் வைத்து வீட்டை அழகு படுத்தினார்கள்.

    இரண்டு நாட்கள் கழித்து மாடி வீட்டு பத்மா என்னிடம் வலிய வந்து பேசிக் கொண்டிருந்தாள். அவள் சுவாபமே அதுதான். ஏதாவது வேலையிருந்தால், தேவையிருந்தால் தானே வந்து பேசுவாள். இல்லாவிட்டால் கண்டு கொள்ள மாட்டாள். சில சமயம் மற்றவர் புண்படும்படி பேசிவிடுவாள். மற்றபடி அவள் நல்லவள்தான். அப்போது சித்ராவும் அங்கே வந்தாள். நான் பத்மாவை சித்ராவிற்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

    “ இவங்க பெயர் பத்மா . பட்டாபி சாஸ்திரிகள் மனைவி. எம் காம்  படித்திருக்கிறார். திருச்சி சொந்த ஊர்.  முதல் மாடியில் இருக்கிறார்கள். பட்டாபி சாஸ்திரிகள் நன்கு வேதம் படித்தவர், தீட்சிதர். அவர் தங்கக் கம்பி . அந்தச் சமயம்  பட்டாபி சாஸ்திரிகள் வந்தார் . பத்மா தன் கண்வரை சித்ராவிற்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

    கம்பீரமான குரலில் ‘வணக்கம்’ என்று சொன்ன சாஸ்திரிகளைப் பார்த்து சித்ரா இருகரம் கூப்பி வணங்கினாள். சாஸ்திரிகளால் சித்ராவின் குடும்பத்திற்கு பெரும் நன்மை ஏற்படப்போகிறது என்பது அவளுக்கு அப்போது தெரியாது.

    அடுத்த நாள் சித்ராவின் வீட்டிற்குப் போயிருந்தேன். ஜன்னலுக்கு கண்ணைக் கவரும் அழகான திரைச்சீலையெல்லாம் போட்டு வீடு அழகுடன் காட்சியளித்தது.

    அங்கு ஓரு சிறுவன்  கையில் ஒரு புத்தகம் வைத்து புரட்டிக் கொண்டிருந்தான். பால் வடியும் முகம். நான் அவனைப் பார்த்தேன். அவன் முதலில் என்னைப் பார்க்கவில்லை. நான் அவனை உற்றுப் பார்த்தபோது அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான்.

    “உன் பெயர் என்ன? “ என்ன படிக்கிறாய்?”

    அவன் பேசாமல் சிரித்தான். அவன் பெயர் மாதவன். அவன் எதுவும் பேசமாட்டான்.அவனுக்கு காது கேட்கும் . முயற்சி செய்தால் பேசலாம். ஆனால் பேச மாட்டான். அவன் ஆடிசம் என்ற நோயால் சின்ன வயதிலிருந்தே பாதிக்கப் பட்டான். குழந்தையாய் இருந்தபோது தாமாத பேசுவான் என்று பார்த்தோம். டாக்டரிடம் பரிசோதனை செய்தபோதுதான் தெரிந்தது அவனுக்கு  ஆடிசம் நோய் வந்திருக்கிறது என்று. நாம் பேசுவது அவனுக்குக் கேட்கும். என்ன சொல்கிறோம் என்பது புரியும். ஆனால் பதில் பேச மாட்டான். ஏதாவது ஒரு புத்தகத்தை எப்போதும் கையில் வைத்திருப்பான். அவன் உலகமே வேறு. நாங்கள் அவனைப் புரிந்து கொண்டு  அவனுக்கு அன்பை ஊட்டி வளர்க்கிறோம்..” என்றாள் சித்ரா.

    எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.  இந்தச் சிறுவனுக்கா இப்படிப்பட்ட நிலைமை?  என்று வருத்தப்பட்டேன்.

     மாதவன் பேச முடியாமல் இருக்கிறானே என்பது  உங்களுக்கு பெரிய குறையில்லையா?” தழுதழுத்த குரலில் கேட்டேன்.

    என்ன செய்ய முடியும். குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்துதான் எங்களுக்கு  இந்தக் குறை இருக்கிறது என்பது தெரியும். முதலில் வேதனையாகயிருந்தாலும் யோசித்துப்பார்த்ததில்  பிரச்சனையைக் கண்டு வருந்துவதை விட ஏதாவது செய்வதுதான் யதார்த்தம் என்று புரிந்தது. எங்களை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டோம். அவனுடன் வெகுநேரம் செலவழிக்கிறோம். நன்றாக பேசும் குழந்தைகளைப் பார்த்து மனம் சஞ்சலப்படாமல் இருக்க பழகிக் கொண்டோம். எங்களுக்கு கடவுள் கொடுத்ததை ஏற்றுக்  கொண்டுவிட்டோம்.மாதவன் மேல் பிரத்யேகமாக கவனம் செலுத்துகிறோம். கே கே நகரில் இந்த மாதிரி ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு சிறப்பு பள்ளியிருக்கிறது. மாதவன் அங்குதான் படிக்கிறான். காலை எட்டு மணியிலிருந்து பகல் ஒரு மணிவரை பள்ளிக்கூடம் . தினந்தோறும் ஒரு டீச்சர் வந்து மாலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணிவரை அவனுக்குப் பாடம் கற்றுக்கொடுத்துவிட்டு போகிறார். டீச்சர் என்றால் மாதவனுக்கு ரொம்ப பயம். ஒழுங்காக படிப்பான். டாக்டரிடம் மாதம் ஒருமுறை காண்பிக்கிறோம். அவர் சொன்னபடி மருந்து கொடுக்கிறோம். குழந்தையை பெற்றவர்கள்தானே பாரத்தை சுமக்க வேண்டும். ஆனால் அவனை எங்களுக்குப்  பாரமாக ஒருபோதும் நினைப்பதில்லை. ராஜன் அவருக்குத் தெரிந்த தஞ்சாவூர் ஜோதிடரிடம் மாதவன் ஜாதகத்தைக் காண்பித்துக் கேட்டதில் அவன் இன்னும் ஒரு வருடத்தில் பேசிவிடுவான் என்று சொல்லியிருக்கிறார். எங்களுக்கும் மாதவன் கூடிய விரைவில் பேசி விடுவான் என்ற நம்பிக்கையிருக்கிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை” என்றாள் புன்முறுவலுடன்.

    ” காலைக் கடன்களை அவனே கழித்துவிடுவானா? “

    பல் விளக்குவது, காலை கடனை கழிப்பதற்கு உதவி செய்வது , குளிப்பாட்டுவது, உடை அணிவிப்பது, உணவு ஊட்டுவது போன்ற எல்லா வேலைகளையும் நாம்தான் செய்ய வேண்டும். அவன் குழந்தை. அவனுக்கு என்ன தெரியும்? “

    ”உங்களுக்கு வேலை அதிகம். அவனைப் பார்த்து கொள்வதற்கே நேரம் சரியாகயிருக்குமே?

    “என்ன செய்வது? செய்துதானே ஆக வேண்டும்.

    images (3)

    ‘கவலைப் படாதீங்க சித்ரா. மாதவன் சீக்கிரம் பேசி விடுவான். நான் சீரடி பாபாவின் பக்தை. நான் பாபாவிடம் பிரார்த்தனை செய்கிறேன். அவருடைய அருள் அவனுக்குக் கண்டிப்பாகயிருக்கும்’ என்று சொல்லிவிட்டு என் வீட்டுக்கு  வந்து விட்டேன்.

    அபிநயா குடியிருப்பில் தினந்தோறும் நடக்கும் அரட்டைக் குழுவில் நான் வம்பளக்க போக மாட்டேன்.  சித்ராவும் அதில் சேர மாட்டாள்.. சித்ராவிடம் இன்னொரு  நல்ல குணம் உண்டு.  அவள் காலை வேலையில் ஏதாவது ஒரு சுலோகம் சொல்லிக்கொண்டிருப்பாள். ஒரு நாள் அபிராமி அந்தாதி சொல்லிக் கொண்டிருப்பாள். ஒரு நாள் அவள் வாய் கந்த சஷ்டி கவசத்தை முணுமுணுத்துக் கொண்டிருக்கும். இந்த நல்ல குணத்திற்காக அவளை எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. நாளாக ஆக எங்கள் நட்பு வலுபெற்றது. அந்நியர்களாகயிருந்த நாங்கள் மிகவும் அன்யோன்யமாக ஆகிவிட்டோம். அந்தக்  குடியிருப்பில் இருந்தவர்கள் எங்களை உடன் பிறவா சகோதரிகளாக பார்த்தார்கள் . சித்ரா என்னை “ அக்கா” என்று அழைக்க ஆரம்பித்தாள். நானும் எனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் சித்ரா என் தங்கை போல என்று சொன்னேன். நான் எப்போது வேண்டுமானாலும் அவள் வீட்டிற்குள் நுழைவேன். அவள் எப்போது வேண்டுமானாலும் என் வீட்டிற்குள் வருவாள். எதிர் வீடு என்ற பாகுபாடு எங்களுக்குள் முற்றிலும் போய் விட்ட்து.

    ஒரு நாள் எதிர்  வீட்டிற்குள் போனபோது சித்ரா வீட்டில் இல்லை . மாதவன் மட்டும் தனியாகயிருந்தான். என்னைப் பார்த்ததும் உறுமினான்.  வாயிலிருந்து சப்தம் மட்டும் வந்தது. என் கையைப்பிடித்து சமையலறைக்கு அழைத்துச் சென்றான். சாப்பிடும் தட்டை காண்பித்தான். அவனுக்குப் பசி என்று புரிந்த்து. தட்டில் தயிர் சாதம் பிசைந்து வைத்து அவனுக்கு ஊட்டினேன்.மருந்து வாங்க போயிருந்த சித்ரா வீட்டிற்குள் நுழைந்தபோது மாதவன் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த அவள் முகம் மலர்ந்தது.

    ”மாதவனுக்கு உணவு கொடுக்க வேண்டுமே என்று அவசரமாக வந்தேன். நல்ல வேளை, நீங்கள் அவனுக்கு உணவு கொடுத்துவிட்டீர்கள். அவனுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று உங்களுக்கு எப்படி தோன்றியது” என்றாள்.

    “ அவன் என் கையைப் பிடித்துக் கொண்டு சமையல் அறைக்கு அழைத்துச் சென்று சாப்பிடும் தட்டை காண்பித்தான். அதனால் அவனுக்குப் பசி என்று புரிந்தது.

    சித்ராவின் முகத்தில் பெருமிதம் தெரிந்த்து.

    “ மாதவன் ரொம்ப புத்திசாலி என்று கூறியவள் என் கையைப் பிடித்து கொண்டு “ ரொம்ப நன்றி அக்கா. மாதவன் உங்களிடம் வித்தியாசம் பார்க்காமல் நடந்து கொள்கிறான். அவன் வேறு யாரிடமும் இதுபோல் செய்ததில்லை “ என்று கண் கலங்கினாள்.

    இதெற்கெல்லாம் நன்றி எதற்கு ? மாதவன் என் பிள்ளையைப் போல “ என்று அவள் முதுகில் தட்டிக் கொடுத்தேன்.

    அப்போது பத்மா அங்கே வந்தாள். மொட்டை மாடியில் நிலாச் சோறு சாப்பிட வேண்டும் என்று என் பெண் காஞ்சனா பிடிவாதம் பிடிக்கிறாள் “ என்றாள்.

    ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி அன்று மொட்டை மாடியில் குழந்தைகள் விளையடிவிட்டு நிலாச்சோறு சாப்பிடுவார்கள்.

    இன்று பெளர்ணமி. மாதவனை யாரும் விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். எனவே மாதவன் மொட்டை மாடிக்கு விளையாட போக மாட்டான்.

    மாதவன் ஏக்கத்துடன் தன் அம்மாவைப் பார்த்தான். சித்ரா மாதவனின் கன்னத்தை லேசாக தட்டி விட்டு “ மாதவனுக்குப் படிக்க வேண்டும் மாலை டீச்சர் வநது விடுவார், ” என்றார்.

    என்னுடைய கைபேசி ஒலிக்கவே நான் அவசரமாக என் வீட்டிற்குள் வந்து விட்டேன். பத்மா சித்ராவிடன் பேசிக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில் எங்கள் பிளாட்ஸ் வாட்ச்மேன் டேவிட் அங்கே வந்தார். நல்ல மனிதர். வயது அறுபத்தி ஐந்து. பருமனான உருவம். மேலே வானத்தை அன்னாந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிலிருந்து ஓடி வந்த மாதவன் அவருடைய பானையைப் போலிருந்த தொப்பையில் ஓங்கி ஒரு குத்து விட்டான். ” ஐயோ, அம்மா ” என்று டேவிட் வயிற்றைப் பிடித்துக்கொண்டு அலறினார். மாதவன் அப்படி குத்துவான் என்று அவர் எதிர் பார்க்கவேயில்லை. பத்மா விழுந்து விழுந்து சிரித்தாள். சப்தம் கேட்டு நான் வெளியே வந்தேன்.

    ” வாட்ச்மேன் தொப்பையைக் காண்பித்துக்கொண்டு நின்றிருந்திருந்தால் மாதவன் குத்தாமல் என்னப் பன்னுவான் ?” சிரித்தாள் பத்மா  கொஞ்சம் கூட இரக்கமில்லாமல்.

    நான் பத்மாவை பார்த்து முறைத்தேன்.

    சித்ரா “ சாரி வாட்ச்மேன் “ என்றாள்.

    “ பரவாயில்லையம்மா , குழந்தைக்கு என்ன தெரியும் ? ஏதோ தெரியாமல் செய்துவிட்டான் “ என்று பெருந்தன்மையோடு சொன்னார்.

    செய்வதையும் செய்துவிட்டு ஒன்றும் செய்யாதவன் போல் மாதவன், டேவிட் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

    ” மாதவா, வீட்டுக்கு போ “ என்றேன்.

    மன சஞ்சலத்துடன் இருந்த சித்ரா, “ அவன் எப்போதும் அப்படிதான். சில சமயம் என்ன செய்வான் என்பதை அனுமானிக்க முடியாது“என்றாள் வேதனையுடன்.

    இரவு என் கணவரிடம் இந்தச் சம்பவத்தை பற்றிச் சொன்னேன்.

    அவர், ” வாட்ச்மேன் நல்லவர் . அதனால் மாதவன் மேல் கோப்ப்பட வில்லை. அவர் அந்தச் சிறுவனை அடித்தால் என்ன ஆகியிருக்கும் “ என்றார்.

    ” நீங்கள் சொல்வது மிகவும் சரி.”

    இப்பொழுது நானும் மாதவனும் ரொம்ப நட்பாகிவிட்டோம். டீச்சர் வராத நாட்களில் நான் அவனுக்குப் பாடம் கற்றுக் கொடுப்பேன்.

    ஒரு முறை நான் திருச்சிக்குப் போயிருந்தேன். மூன்று நாட்கள் ஊரிலில்லை. நான் ஊரிலிருந்து திரும்பி வந்த்தும் சித்ரா என்னிடம் “ ராதா, நீ ஊருக்குப் போயிருந்தபோது மாதவன் உன்னைத் தேடினான். உங்கள் வீட்டு சமையலைறையின் பின் பக்கம் நின்று நீ இருக்கிறாயா என்று சன்னல் வழியாக பார்த்தான் “ என்றாள்.

    நான் மாதவனுக்காக ஊரிலிருந்து வாங்கி வந்த இனிப்பைக் கொடுத்தேன்.

    அடுத்த நாள் காலை சித்ரா மாதவனுடன் வந்தாள். அவள் புத்துணர்ச்சியுடன் காணப்பட்டாள். காட்டன்  புடவை கட்டியிருந்தாள். கூந்தலை அள்ளி முடித்து கொண்டைப் போட்டிருந்தாள்.  நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து பார்ப்பதற்கு பவித்தரமாக காட்சி அளித்தாள்.

    ” வா சித்ரா, கோவிலுக்கு போய் கொண்டிருக்கிறாயா?

    ” அம்பாளுக்கு அபிராமி அந்தாதி படித்து பூஜை செய்துவிட்டு வருகிறேன். பட்டாபி சாஸ்த்ரிகள் ஒருத்தர் வீட்டில் அமாவாசை தர்ப்பணம் செய்து வைக்கப் போயிருந்தபோது ஒரு டாக்டரை பார்த்தாராம். அவர் இலண்டினில் ஆடிசம் நோயைப் பற்றி சிறப்பு பயிற்சி பெற்றவர். நிபுணர். அண்ணா நகரில் ஆஸ்பிட்டல் வைத்திருக்கிறார் .அவரிடம் காட்டலாமே என்றூ சாஸ்திரிகள் சொன்னார். அவர் சொன்ன யோசனை எனக்கு சரியாக  பட்டது. நிபுணர் டாக்டரிடம் போனில் பேசினேன். இன்று காலை அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்திருக்கிறார். மாதவனை அழைத்த்துக் கொண்டு ஆஸ்பிட்டலுக்குப் போகிறேன்.” என்றாள்.

    சிலர் யார் எக்கேடு கெட்டுப் போனால் என்ன ? தான் உண்டு தன் வீடு என்று சுயநலமாக இருப்பார்கள். ஆனால் பட்டாபி சாஸ்திரிகள் அப்படிப் பட்டவர் இல்லை. பிறருக்கு உதவி செய்வது அவருடைய பிறவி குணம். வள்ளுவர் கூறியதுபோல் காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப்ப்பெரிது. எனவே சாஸ்திரிகள் செய்த உதவி மிகப் பெரிய உதவிதான். அவருடைய உயர்நத குணத்தை பாராட்டத்தான் வேண்டும்.   மாதவன் ஏதாவது சொதப்பிட போகிறான். பத்திரமாக பார்த்துக்கொள் மாதவனுக்கு நல்ல நேரம் பிறந்து விட்டது. உடனே போ. நான் வீட்டைப் பார்த்துக் கொள்கிறேன், என்றேன்.

    அன்று மாலை சித்ரா ஆஸ்பிட்டலிலே தங்கி விட்டாள். டாக்டர் அறுவை சிகிட்சை செய்திருக்கிறார். மாதவன் ட்ஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவதற்கு இரண்டு நாட்கள் ஆகும் “ என்று வாட்சுமேன் சொன்னார்.

    அவனுக்கு பேச வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

    அடுத்த நாள் பொழுது விடிந்து கதிரவன் தகதகவென்று கீழ்த்திசையில் எழுந்தான். சமையலை முடித்துவிட்டு சீரடி சாய் பாபா படத்தின் முன்  உட்கார்ந்தேன்.

    ” நம்பிக்கை , பொறுமையுடன் உன்னை துதிக்கிறேன் பாபா.

      உன் திருபாதங்களில் சரண் அடைகிறேன் பாபா

     என் தாயும் நீயே, உடல் பிணி தீர்க்கும் தன்வந்தரியும் நீயே பாபா

     உன் சேய் மாதவன் துயர் துடைத்து நிம்மதி அளிப்பாய் சாய்நாதா.”

     

    என்று மனமுருகி பிரார்த்தனை செய்தேன். பாபாவிற்கு ஆரத்தி காண்பித்துக் கொண்டிருக்கும்போது கைபேசி அழைத்தது . சித்ராவின் கணவர் ராஜன் என்னை உடனே ஆஸ்பிட்டலுக்கு வர சொன்னார். அவர் குரலில் கவலை தோய்ந்திருந்தது. மாதவனுக்கு ஏதாவது பிரச்சனையா என்ற கேள்விக்கு சரியான பதில் எதுவும் கிடைக்கவில்லை. அந்தக் குழந்தைக்கு என்ன ஆயிற்றோ என்ற கலங்கிய மனத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு ஆட்டோவைப் பிடித்து அண்ணா நகர் வந்தேன். ஆஸ்பிட்டலில் நுழையுமிடத்தில் நான்கு டாக்டர்கள் ஒன்று சேர்ந்து விவாதித்து கொண்டிருந்தார்கள். பட்டாபி சாஸ்திரிகளும் அவர்கள் பக்கத்தில் இருந்தார். நான்  “மாதவன் எங்கிருக்கிறான்? “  என்று  ரிசப்ஷனில் விசாரித்து கொண்டு பரபரப்புடன் மாதவனிருந்த அறைக்கு வந்தேன். எனக்கு மூச்சு வாங்கியது.

    கட்டிலில்  மாதவன் படுத்திருந்தான். பக்கத்தில் சித்ரா தரையில் அமர்ந்திருந்தாள். அவள் கண்களில் கண்ணீர். உதட்டில் கையை வைத்து  மாதவனை நோக்கி கையைக் காண்பித்தாள். நான் திடுக்கிட்டேன்.

    ‘சித்ரா மாதவனுக்கு என்ன ஆச்சு ? ’ என்றேன் கலவரத்துடன்.

    அவள் என்னைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. நான் பேசியது எதுவும் அவள் காதில் விழுந்ததாகவும்  தெரியவில்லை.

    “ அற்புதம் நிகழ்ந்து விட்டது. மாதவன் இன்று அம்மா என்றூ பேசத் துவங்கி விட்டான்’ …………… என்றார் ராஜன்.

    “ மிகவும் மகிழ்ச்சிதரும் விசயம்தானே. சித்ரா ஏன் பேசாமலிருக்கிறாள்?. மாதவா உனக்குப் பேச்சு வந்துவிட்டது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. பாபா என் வேண்டுதலை நிறைவேற்றி விட்டார். உனக்கு என்ன வேண்டும் சொல்? ” என்றேன்.

    ”எனக்குப் பேச்சு வந்துவிட்டது. ஆனால் அம்மா ஊமையாயிட்டா . அம்மா பேச வேண்டும். அதுதான் எனக்கு வேண்டும் ……………………….“ விம்மி விம்மி அழுதான் மாதவன்.

    ” பெருமாளே ! இதென்ன கொடுமை. ஒருத்தருக்கு இன்பத்தை கொடுக்கிறே.. இன்னொருத்தருக்கு துன்பத்தை கொடுக்கிறே. உன் மனசென்ன கல்லா. சித்ரா என்ன தப்பு பன்னாள். ஏன் அவளுக்கு இந்தத் தண்டனை ?……………” என்றேன் கரகரத்த குரலில்.

    அதிகமான சோகம் ஒருவரை பாதிப்பது போல் அதீத மகிழ்ச்சியும் ஒருவரை பாதிக்கும் போலிருக்கு. மாதவன் பேசிவிட்டான் என்பதில் ஏற்பட்ட மிதமிஞ்சிய சந்தோஷத்தால் சித்ரா பேச்சையிழந்துவிட்டாள். சைகாலஜி  டாக்டர் வந்து பார்க்க வேண்டும். போகப்போக சரியாகிவிடும்“ என்றார் ராஜன் வேதனையுடன்.

    நான் வருத்தத்துடன் சித்ராவைப் பார்த்தேன்.

    அவள் எதையும் கண்டு கொள்ளாமல் திரும்பத் திரும்ப தன் உதட்டில் கை வைத்து  மாதவனை நோக்கி கையை காண்பித்துக் கொண்டிருந்தாள்.

                             ****** நிறைவு *****

    Share
  • சகோதரிகள் இருவர் (ஆபிரிக்க தேசத்துச் சிறுகதை)

    – அஹ்மத் ஈஸொப்

    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

     ahmed

                “எனக்கு பந்து விளையாடத் தேவைப்பட்டால், அவங்களுக்கும் தேவைப்படும். எனக்கு கழிப்பறைக்குப் போகத் தேவைப்பட்டால் அவங்களுக்கும் போகத் தேவைப்படும். அவங்க எல்லாவிதத்திலுமே சுயநலவாதிகள். எனது சித்தியும், அப்பாவும் அறைக்குள்ளே புகுந்து கதவை மூடிக் கொண்டிருப்பாங்க. சில நாட்கள்ல நாள் முழுவதுமே அப்படித்தான் இருப்பாங்க. அவங்க என்ன செய்றாங்கன்னு எனக்குத் தெரியாது. வீட்டில சாப்பிடவும் எதுவுமிருக்காது. அப்படி எதுவும் இருந்தாலும் நாங்கதான் சமைக்க வேணும். பிறகு அவங்க ரெண்டு பேரும் அறைக்குள்ளிருந்து வெளியே வந்து நாங்க சமைச்சு வச்ச சாப்பாடு எல்லாத்தையும்  விழுங்கித் தள்ளுவாங்க.”

                “ஏன் நீ அப்பாக்கிட்ட சொல்லக் கூடாது?”

                “அந்தப் பொம்பளையக் கல்யாணம் கட்டினதிலிருந்து அப்பா நாங்க சொல்ற எதையுமே கேட்குறதில்ல. அப்பா நல்ல மனுஷன்தான். ஆனா அந்தப் பொம்பளையைக் கல்யாணம் கட்டினதுக்கப்புறம் அவர்க்கிட்ட இருந்த நல்ல குணங்களெல்லாம் காணாமப் போயிடுச்சு. அவள் அவரை நாசமாக்கிட்டாள். அப்பா எங்களைப் பற்றித் தேடிப் பார்க்கிறதில்ல. அதனாலதான் நான் என்னோட தங்கச்சி  ஹபீபாக்கிட்ட நாம எங்கேயாவது போயிடலாம்னு சொன்னேன். அதுதானே நிஜம் ஹபீபா?”

                “நிஜம்தான்.”

                “இந்தப் பக்கம் வாடகைக்கு அறையொண்ணு இருக்குறதா கூட்டாளிகள் சொன்னாங்க. நாங்க இங்க வந்தது அப்படித்தான். “

                ருகையா என்னிடமும், எனது நண்பன் உமரிடமும் அப்படித்தான் விவரித்தாள். சகோதரிகள் இருவரும் அம் மாடி வீட்டுக்குக் குடிவந்தமை பெரிய பிரச்சினைக்குக் காரணமாக அமைந்தது. அவர்கள் காற்சட்டையும், நீண்ட ஆடையும் அணிந்திருந்தனர். அதிலேதும் வினோதமாக இல்லை. ஆனால் வினோதமாக இருந்தது அவர்களது தலைமயிரின் நிறம்தான். அவர்களது தலைமயிர் செம்பு நிறத்திலிருந்தது. அவர்களது உடல் நிறத்தோடு செம்பு நிறத் தலைமயிர் சிறிதும் பொருந்தவில்லை. அடர்த்தியாக வளர்ந்திருந்த அவர்களது கூந்தல் கீழ்படியாது அடிக்கடி முகத்தில் விழுந்த காரணத்தால் அதனைச் சரிசெய்து கொள்வதற்காக அவர்கள் அடிக்கடி கூந்தலோடு போராட வேண்டியிருந்தது. எனது நண்பன் உமர் அதனை இப்படி விவரித்தான்.

                “அவர்கள் உல்லாசமான யுவதிகள் என்பதைத்தான் அவர்களது கூந்தல்கள் வெளிப்படுத்துகின்றன”

     hajji

                 ருகையா முப்பது வயதைத் தாண்டியவளாக தெரிந்ததோடு ஹபீபா அதை விடவும் வயது குறைந்தவளாகத் தெரிந்தாள். அதிக நாட்கள் செல்லும் முன்பே அவர்களது ஆடைகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒன்று பெண்களின் இயல்பு என்பதால் அல்லது நவீன நாகரிகத்தின் தூண்டுதல் காரணமாக சகோதரிகள் தாம் முன்னர் அணிந்த நீண்ட ஆடைகளைத் தவிர்த்துவிட்டு மேற்கத்தேய ஆடைகளை அணியப் பழகியிருந்தார்கள்.

                உமரும் நானும் அச் சகோதரிகளை நேசிக்கத் தொடங்கியிருந்தோம். நான் இளையவளான ஹபீபாவைத் தேர்ந்தெடுத்திருந்தேன். எமது புறத்தில் அவ்வாறான  விசேட தெரிவொன்றும் இருக்கவில்லை. ஆகவே அவர்கள்பால் ஈர்க்கப்பட்ட நாம் இலேசான மனதோடு காதலிக்க ஆரம்பித்தோம்.

                ஹபீபா எப்பொழுதுமே உதைத்தபடியும், ஆடியபடியுமிருக்கும் ஒரு பெண்ணாக இருந்தாள். அவளது உடலானது, முடுக்கிவிடப்பட்ட இயந்திர விளையாட்டுப் பொருளொன்றைப் போன்றது. அவள் நடக்கும்போது கூட விளையாட்டுப் பொருளொன்றைப் போல உதைத்தபடியும், தடுக்கியபடியுமே நடந்தாள். ஒருமுறை இடது பக்கமும், மறுமுறை வலது பக்கமும் திரும்பியபடியும் அடிக்கடி பின்னால் திரும்பித் திரும்பி பார்த்தபடியும் யாரையோ பார்த்து பயந்தது போல நடந்து செல்வாள். அவளது கை கால்களை தொண்ணூறு பாகைகளுக்கே திருப்ப முடியும். தலைகீழாக ஆணியடிக்கப்பட்ட படுக்கையொன்றில் கிடப்பவளைப் போல அவள் நடந்துகொண்டாள். அவளை முத்தமிட்டபோது ஒரு புதிய உணர்வை நான் அடைந்தேன். சரியாகச் சொன்னால் ஒரு நடமாடும் எலும்புக் கூட்டை முத்தமிட்டது போன்ற உணர்வு அது.

                காலம் செல்லச் செல்ல உமரும், நானும் அச் சகோதரிகள் கூட்டணி மீது சலிப்படைந்திருந்தோம். எங்களிடமிருந்து விலகிய அவர்கள் வேறு காதலர்களைத் தேடிச் சென்றார்கள்.

                நேர்த்தியாக உடுத்துக் கொண்டு, தமது அறையிலிருந்து வெளியேறி அவர்கள் படியிறங்கிச் செல்வதை காலையில் எவரும் காணலாம். ருகையா முன்னாலும், அவளுக்கு பாதுகாப்பளிப்பதுபோல ஹபீபா அவளுக்குப் பின்னாலும் நடந்துசெல்வர். அவர்கள் பிரதான தெருவுக்குள் நுழைந்து தமது அலுவலகத்துக்குப் போவதற்காக ட்ராம் வண்டியில் ஏறுவர். சகோதரிகள் இருவரும் விற்பனைப் பிரதிநிதிகளாக கடையொன்றில் வேலை செய்தனர். மாலையில் திரும்பிவரும் அவர்கள் உணவு தயாரித்து உண்டு, பாத்திரங்களையெல்லாம் கழுவிச் சுத்தம் செய்துவிட்டு அழகாக உடுத்துக் கொண்டு, சில நாட்களில் மிக அழகான சேலைகளை உடுத்துக் கொண்டு காத்திருப்பர். மோட்டார் வாகனங்களில் வரும் மனிதர்கள் அவர்களைக் கூட்டிச் செல்வர்.

                சகோதரிகள் இருவர் குறித்தும் அயலில் வசிக்கும் பெண்களினது நிலைப்பாடானது, அமைதியான வெறுப்பில் தொடங்கி கடும் எதிரிகளாக எண்ணும்வரை வளர்ந்தது. அவர்களது அயல்வீடுகளில் வசித்த  திருமணமான ஆண்கள், தம் மனைவிமாரின்  கண்காணிப்புக்குள்ளானதன் காரணத்தால் அச் சகோதரிகளை நெருங்க முடியவில்லை. ஆனால் திருமணமாகாத இளைஞர்கள் அவர்களை வட்டமிட்டனர். சகோதரிகள் இருவரும் அவர்களது காதலர்களிடையே கை மாறியபடியே சென்று இறுதியில் நரகத்துக்குப் போகப் போவதாக அஸீஸ்கான் எதிர்வு கூறினார்.

                சனிக்கிழமையின் மாலை வேளைகளிலும், ஞாயிற்றுக்கிழமையின் காலை வேளைகளிலும் சகோதரிகள் இருவரும் கட்டைக் களிசானும், குட்டைப் பாவாடையும் அணிந்து தமது மாடிவீட்டின் இரும்பு வேலியில் சாய்ந்து நின்றபடி கீழேயிருந்த இளைஞர்களோடு கதைத்துச் சிரித்தபடி காலத்தைக் கடத்தினர்.

                எவராலும் எதிர்வு கூறக் கூடிய விதத்தில், சகோதரிகள் இருவரும் கர்ப்பமடைந்தனர். ஆரம்பத்தில் இருவரும் கலவரப்பட்டு குற்றம் சாட்டிக் கொண்டனர். தனது கர்ப்பத்திற்கு உமர்தான் காரணம் என ருகையா குற்றம் சாட்டினாள். அவளிடமிருந்து எனக்கொரு அழைப்பு வந்தது.

                “எனக்கு குழந்தை கிடைக்க இருக்குன்னு தயவுசெஞ்சு உமர்கிட்ட சொல்லுங்க. குழந்தையோட அப்பா அவர்தான். நான் எப்ப வேணும்னாலும் அவரைக் கல்யாணம் செஞ்சுக்கத் தயார். அவர் என்னை விட இளையவர். அதுதான் எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு.”

                “எப்படித் தெரியும்?”

                “நாங்க பொண்ணுங்க. குழந்தைக்கு அப்பா யாருன்னு எங்களுக்குத்தான் தெரியும். அப்படித்தானே ஹபீபா?”

                “ஆமா. அப்படித்தான்.”

                “ஹபீபா உன்னோட குழந்தைக்கு தகப்பன் யாரு?”

                “புது நகரத்துல இருக்குற ஹமீத் மஜீத். அவருக்கு கடையொண்ணும் இருக்கு.”

                “இந்த விஷயம் அவருக்குத் தெரியுமா?”

                “நான் குழந்தையப் பற்றி அவர்கிட்ட சொன்னேன். ஆனா அவருக்கு ஏற்கெனவே கல்யாணமாகி ஆறு பிள்ளைகளும் இருக்குதென்று அவர் சொன்னார். ஆனா இந்தக் குழந்தையையும் பார்த்துப்பேன்னு சொன்னார்.”

                “நீ அதிர்ஷ்டசாலி.”

                “நானும் அதிர்ஷ்டசாலிதான்” என ருகையாவும் சிரித்துக் கொண்டே கூறினாள்.

                தந்தை எனும் குற்றச்சாட்டைப் பற்றி நான் உமருக்கு அறியத் தந்தேன்.

                “அவள் கர்ப்பமானது என்னாலதான்னுஅவளுக்கு எப்படித் தெரியும்?”

                “சிலநேரம் பொண்ணுங்களுக்கு இருக்குற ஞானத்தால தெரிஞ்சிருக்கும்.”

                “நான் கீழ்ப்படியாத கோமாளியொருத்தன்னு அவ நினைக்கிறாளோ?”

                உமர், ருகையாவைச் சந்திப்பதைத் தவிர்த்தான். அவளிடம் தவிர்க்க முடியாத சாட்சிகளேதேனும் இருக்கும் என எண்ணிப் பயந்தான். அவனது பெற்றோர் என்ன கூறுவர்? மக்கள் என்ன கதைப்பர்? விபச்சாரியொருத்தியின் குழந்தைக்குத் தந்தை? பாடசாலைப் பிள்ளைகள் அவனைக் கிண்டல் செய்வர். மோசமான இளைஞனொருவன் குறித்து உதாரணம் கூற ஆசிரியர்கள் அவனைப் பற்றிக் குறிப்பிடுவர்.

                சில தினங்களுக்குப் பிறகு ருகையாவைச் சந்தித்து அவளுடனான இக் கொடுக்கல் வாங்கலை முடிவுக்குக் கொண்டுவர அவன் தீர்மானித்தான். அவர்கள் வாக்குவாதம் செய்தனர். உமருக்குள் கண்ணீர், குரோதம், துயரம் பெருக்கெடுத்தது. ஆனாலும் கூட சிக்கலைத் தீர்க்க முடியவில்லை.

                ருகையா திரும்பவும் என்னை அழைத்தாள்.

                “அது என்னோட குழந்தைன்னு உமர்க்கிட்ட சொல்லுங்க. நான்தான் அந்தக் குழந்தையை வளர்ப்பேனே தவிர வேறு யாருமில்ல. உமரை நான் நேசிக்கிறேன்னு உமர்கிட்ட சொல்லுங்க. வருத்தப்பட வேண்டாம்னும் சொல்லுங்க.”

                “ஆனாலும், குழந்தைக்கு கட்டாயமா ஒரு தகப்பன் வேணுமே?”

                “என்னோட குழந்தைக்கு தகப்பனொருத்தன் தேவையில்ல. தகப்பனொருத்தன் இல்லாம இருப்பதே எனக்கு சந்தோஷம். என்னோட மனசுக்குள்ள இருப்பது அப்படித்தான். என்னோட தகப்பனே எங்களைக் கவனிக்கல. அதனால என்னோட குழந்தைக்கும் தகப்பனொருத்தன் தேவையில்ல.”

                “அப்போ ஹபீபா?”

                “ஹபீபாவோட குழந்தையின் தகப்பன் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அப்படித்தானே ஹபீபா?”

                “ஆமா. அது உண்மைதான்.”

                காலம் செல்லச் செல்ல சகோதரிகள் இருவரினதும் வயிறுகள் பெரிதாகத் துவங்கின. அயல்வாசிகளின் பண்பாட்டு உணர்வும் கோபமும் பெருக ஆரம்பித்தன.

                “வளர்ற பெண்களுக்குத் தரக் கூடிய புதுமையான வழிகாட்டல் இது” என எமது மாடி வீட்டுச் சொந்தக்காரியான பெண்ணிடம் திருமதி.மூஸா கூறினார்.

                “வளர்ற பருவத்துல எனக்கு இரண்டு மகள்கள் இருப்பது அவளுங்களுக்குத் தெரியலையோ?”

                “நல்லவேளை எனக்கு பெண்பிள்ளைகள் இல்ல. அதனால எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல.”

                “இதுக்கு ஏதாவது செய்யச் சொல்லி நான் என்னோட புருஷன்கிட்ட கதைக்க வேணும். அடுத்த வீட்டுல கல்யாணமாகாத கர்ப்பிணிப் பொண்ணுங்க இருக்குறதை நாங்க பார்த்திட்டிருக்கிறதெப்படி? அடுத்தது, என்னோட மூத்த மகள் அவங்களோட கூட்டாளி.”

                பாதி சீன வம்சாவளியில் வந்த திருமதி. மூஸா இப்படிக் கூறினார்.

                “கல்யாணமாகாத பொண்ணுங்க ஒருபோதும் கர்ப்பமாக மாட்டாங்கன்னு என்னோட அம்மா அடிக்கடி சொல்வார்.”

                “ஆமா. அது சரிதான்” என மலாய் இனப் பெண்ணான ஹலீமா அதனை ஏற்றுக் கொண்டாள்.

                “கேப்டவுன் நகரத்தில் பொண்ணுங்க ரொம்ப நல்லா நடந்துக்குவாங்க. அவங்க ஆம்பளைங்க கூட சுத்தினாலும் கூட, தங்களைப் பாதுகாக்கவும் தெரிஞ்சவங்க.”

                “ரெண்டு பேருமே ஒண்ணா கர்ப்பமானது எப்படின்னுதான் எனக்குத் தெரியல?” என திருமதி. காஸிம் கேள்வியெழுப்பினார்.

                “சிலவேளை ஒரே ஆம்பளை, ஒரே ராத்திரியில ரெண்டு பேரோடையும் இருந்திருப்பான்” என எனது வீட்டின் சொந்தக்காரி கூறினாள். இவ்வளவு நேரமும் தொடர்ந்து வந்த ஆழமான உரையாடலை மறந்து எல்லோருமே சிரித்தனர்.

                “அவங்க பலதார மணத்தைப் பழக்குறாங்க போல” என சொலமனின் மனைவி டோரதி சிரிப்போசையை அதிகரித்தபடி கூறினாள்.

                “மன்னிக்கணும் திருமதி. சொலமன்”

                திருமதி.மூஸா குறுக்கிட்டார். டோரதி தனது மார்க்கத்தைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளதாகச் சந்தேகித்துக் கோபப்பட்டார்.

                “இது பல தார மணமில்ல. அவங்க ஒருத்தனைக் கூட இன்னும் கல்யாணம் கட்டிக்கல.”

                கடந்த வருடம் மக்காவுக்கு புனித யாத்திரை சென்று வந்த ஹாஜியானி பாத்திமா, அரேபியா போன்ற நாடுகளில் இந்த இருவரையும் கல்லெறிந்து கொல்வர் எனக் கூறினார்.

                “அவங்களோட மர்மஸ்தானங்களை வெட்டிப் போடணும்” என டோரதி கூறினாள். (அவள் கீழ்த்தரமான ரசனையைக் கிளப்பிவிடும் நாவல்களை வாசிப்பதற்கு அடிமையானவள்). அவள் கூறிய வசனங்களை இதற்கு முன்பு எவருமே அறிந்திராத காரணத்தால் ஏனையவர்களுக்கு அதனைப் புரிந்துகொள்வது சிரமமாக இருந்தது. எனவே ஏதோ ஒரு வகையிலாவது அதனைத் தெளிவு படுத்த வேண்டியிருந்தது. ஏனைய பெண்கள் பேச்சோடு நிறுத்திக் கொண்ட போதிலும், அஸீஸ்கானின் மனைவி செயன்முறைப்படுத்தத் தீர்மானித்தாள்.

                ஒரு மாலை நேரம், அவள் தனது வீட்டிலிருந்து வெளியேறி சகோதரிகள் இருவரும் வசித்துவரும் மாடிவீட்டுக்குச் செல்லும் படிக்கட்டுகளின் தொடக்கத்தில் போய் நின்றாள். ஆர்வத்தின் காரணமாக சுற்றியிருந்த மக்களும் அங்கே குழுமினர். சகோதரிகள் இருவரும் வந்தபோது அவள், அவர்களது வயிறுகளைப் பார்த்துக் காறித் துப்பிவிட்டுக் கத்தத் தொடங்கினாள்.

                “ஆஹ்… முஸ்லிம் பொண்ணுங்க….ஹ்ம்..நீங்க ரெண்டு பேரும் என்ன காரியம் பண்ணிக்கிட்டீங்க? என்ன பண்ணிட்டிருக்கீங்க? முஸ்லிம்னு சொல்லிக்குற உங்களை ஆண்டவன் தண்டிப்பான்! ஐயோ முஸ்லிம்களே..நீங்க பண்ணிக்கிட்டது!”

                அவள் நிலத்தில் அமர்ந்து ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள். சகோதரிகள் இருவரும் பயந்துபோய் அவளைப் பார்த்தபடியே படிகளேறிச் சென்று தமது வீட்டுக்குள் நுழைந்து கதவை மூடித் தாழிட்டுக் கொண்டனர்.

                திருமதி.அஸீஸ்கானின் நடவடிக்கையானது சுற்றிவர இருந்த குடியிருப்பினரது கேலிக்குள்ளானது. அவர்கள் சிறுவர்களை அமைதியாக இருக்கும்படி எச்சரித்தனர். எல்லோரும் தாம் வசித்துவரும் வீடுகளிலிருந்து வெளியே வந்து சகோதரிகள் இருவரும் வசித்துவரும் வீட்டைப் பார்த்தனர். சரியாகச் சொன்னால் ஏதோவொரு துயரம் நிகழ்ந்த வீடொன்றைப் போல காட்சியளித்தது அது.

                மெல்லிய நூலிழையைப் போன்ற மெலிந்த சரீரத்தைக் கொண்ட அஸீஸ்கான் வந்து இவ்வாறு கூறினார்.

                “எனக்கு மட்டும் நேரமிருந்தால் இந்தச் சகோதரிகளுடைய மோசமான நடத்தையைப் பற்றி புத்தகமொன்றே எழுதுவேன். இந்தக் காலத்துல முஸ்லிம் ஜனங்கள் எதிர்கொள்ற ஒழுக்கச் சீர்கேடுகளைச் சுட்டிக்காட்ட இவங்கதான் சரியான உதாரணங்கள். இவங்கள சிறையில அடைச்சு சாகும்வரை பட்டினி போடணும்.”

                ‘அவர்களது கர்ப்பத்துக்கு அவர்கள் மட்டுமே காரணமல்ல’ எனும் கூற்றை ஒருவர் முன்வைத்தார். அதற்கு அஸீஸ்கான் இப்படிக் கூறினார்.

                “அவங்களுக்கு தங்களுடைய சரீரத்துல உள்ள மர்மஸ்தானங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியலன்னா நீங்க சொல்ல வர்றீங்க? இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுற பொண்ணுங்க தங்களோட இச்சைக்கு அடிபணிந்து நடத்தை கெட்டுப் போறதுக்கு இஸ்லாம் மார்க்கம் ஒருபோதும் இடமளிக்கிறதில்ல.”

                சில மாதங்களுக்குப் பிறகு சகோதரிகள் இருவரும் பெண்குழந்தைகளிரண்டைப் பிரசவித்தனர். இந்தப் பிரசவம் குறித்தும் பல கதைகள் உலவின. சிலர் குழந்தைகள் மீது அனுதாபம் காட்டியதோடு அவற்றை எடுத்து வளர்க்கவும் தமது விருப்பங்களைத் தெரிவித்தனர். இன்னும் சிலர் ‘அக் குழந்தைகளை மிருகக்காட்சிசாலைக்குக் கொண்டுபோய் மிருகங்களுக்குத் தீனியாக்க வேண்டும்’ என்றனர். இன்னுமொருவருக்கு அவர்களது வீட்டுக்கு தீ வைக்க அவசியமாக இருந்தது.

                சகோதரிகள் இருவரையும் அவர்களது குழந்தைகளோடு மாடி வீட்டிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்பதே அஸீஸ்கானின் தேவையாக இருந்தது. அவர்கள் அங்கே தொடர்ந்தும் இருப்பதானது கலாசாரத்துக்கும், நற்பெயருக்கும், மார்க்கத்துக்கும் கேடு விளைவிக்கும்.

                வெள்ளிக்கிழமை மதியவேளை, ஜும்மாத் தொழுகை முடிந்ததன் பிற்பாடு அஸீஸ்கான் அப் பிரதேசத்தில் பிரபலமாக விளங்கிய கொலைகாரனாகிய குல்லின் வீட்டுக்குத்தான் முதலில் போனார். எனினும் குல் தனது பசியைப் போக்கிக் கொள்வதிலேயே அதிக கவனத்தைச் செலுத்தினான். கலாசாரம் பற்றிய கதையில் அவதானம் செலுத்தத் தவறிய அவன் சமிக்ஞையாகப் புன்னகைத்துக் கதவைச் சாத்தினான்.

                பிறகு அவர் இஸ்லாமிய இயக்கத்தின் தலைவரான, புதுநகரப் பள்ளிவாயிலின் மதகுருவான ஹரூஃப் மௌலவியைத் தேடிச் சென்றார். அஸீஸ்கானைக் கூட்டிச் சென்ற மௌலவியின் ஊழியர்களில் ஒருவரான அப்துல்லாஹ் அங்கு நடந்ததை பின்னர் இவ்வாறு விவரித்தார்.

                “நாங்க முகம்கொடுக்கப் போற ஒழுக்கச் சீர்கேடு பற்றியும், பாரிய சிக்கல்களைப் பற்றியும் அஸீஸ், மௌலவியிடம் விபரித்தான். அதுக்கு அவர் என்ன சொன்னார்னு தெரியுமா? அந்த பொண்ணுங்க ரெண்டுபேருக்கும் தண்டனை தர்றது எல்லாம் வல்ல இறைவனுடைய வேலன்னு அவர் சொன்னார். கோபம் வந்த அஸீஸ் மோசமான வார்த்தைகளால மௌலவியைத் திட்டினான். மௌலவி அவரோட ஊழியர்களோட சேர்ந்து அஸீஸைப் பிடிச்சு நல்லா அடிச்சு வெளியே துரத்திட்டார்.”

                வாடகை வீடுகளின் உரிமையாளர் யூசுப்பை அஸீஸ்கான் அடுத்ததாக நாடினார். குளிர்காலங்களிலும் கூட வெண்ணிற குர்தாவை அணியும் அவர் விசித்திரமான ஒரு நபராவார். அடர்த்தியான நீண்ட தாடியை வளர்த்துள்ள அவரது தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. ஆழமான மார்க்கப்பற்றுள்ள அவர் நடுத்தெருவில் கூட இறைவனை நாடித் தொழக் கூடியவர். ஒரு தடவை ஈத் பெருநாள் தினமொன்றில் குரங்கொன்றையும் எடுத்துக் கொண்டு அவர் அம் மாடிவீடுகளுக்கு வந்திருந்தார். அக் குரங்கின் தலையில் சிவப்பு நிறத்தில் ஒரு துருக்கித் தொப்பி இருந்தது.

                “இந்தக் குரங்கு ஒரு முஸ்லிம். இந்தக் குரங்கு ஒரு முஸ்லிம் ” எனக் கூறியபடி அதனை அவதானிப்பவர்களுக்கு, விஷேடமாக தனது கூலியாட்களுக்குக் கேட்கும்படி

                “ஆனா நீங்க முஸ்லிமில்ல. நீங்க முஸ்லிமில்ல” எனக் கத்தியபடி இரு கை நிறையக் காசுகளையள்ளி வீசினார்.

                அப் பெட்டை நாய்களிரண்டையும் தனக்குச் சொந்தமான வாடகை வீட்டிலிருந்து வெளியேற்ற யூசுப் தனது சம்மதத்தைத் தெரிவித்தார். அவர் அதனைத் தனியாகச் செய்வதற்குப் பொறுப்பேற்றார். தனது குடியிருப்பில் இவ்வாறான பெட்டை நாய்கள் இருப்பதற்கு இடமளிக்க அவர் தயாரில்லை.

                ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் அவர், சாரதி ஓட்டிவந்த மேர்ஸடீஸ் வாகனத்தில் வந்திறங்கினார். சகோதரிகள் இருவரும் வசித்துவரும் மாடிவீட்டுக்குச் செல்லும் படிக்கட்டுகளின் தொடக்கத்தில் நின்றுகொண்ட அவர், அவர்களைத் தான்  தாக்கப் போவதாக பல தடவை அச்சுறுத்தினார். பீதிக்குள்ளான மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவர் படிக்கட்டுகளின் கைப்பிடியைப் பற்றிக் கொண்டு மிகுந்த சிரமத்தோடு படியேறினார். படிக்கட்டுகளின் இடையே சற்றுத் தங்கிச் செல்ல கட்டப்பட்டிருந்த இடத்தில் சில நிமிடங்கள் நின்று இளைப்பாறினார்.

                அச்சத்தில் நடுங்கியபடி சகோதரிகள் இருவரும் தமது வீட்டின் கதவருகே நின்று கொண்டிருந்தனர். அவர் முதலில் ருகையாவை நெருங்கி அவளது கன்னத்தில் அறைந்து நாயே, பேயே என குஜராத் மொழியில் கத்தினார். அவரைத் தாண்டிச் செல்ல முயற்சித்த ஹபீபாவுக்கும் தலையில் அடி விழுந்தது. அவள் கீழே விழுந்து படிக்கட்டு வழியே கீழே விழப் பார்த்தாள்.

                இதற்கிடையே யூசுப் வீட்டுக்குள் நுழைந்திருந்தார். பீதியில் நடுங்கிக் கொண்டிருந்த சகோதரிகள் இருவரும் அடுத்ததாக அவர் என்ன செய்யப் போகிறாரென வாசலருகிலேயே நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தனர். தொடர்ந்து அவர், கையில் ஒரு பாத்திரத்தோடு முன்னே தோன்றினார். அதன் பித்தளை மேற்பரப்பு சூரிய ஒளியில் மின்னியது. அவர் அதனை படிக்கட்டை நோக்கி வீசியடித்தார். அது டாங் எனச் சத்தமெழுப்பியபடி துண்டுதுண்டாக உடைந்து கீழே சிதறியது. அதனைத் தொடர்ந்து ஒரு கதிரை வந்தது. அவற்றைத் தொடர்ந்து அந்த வீட்டின் சட்டி, பானைகளெல்லாம் வர ஆரம்பித்தன. யூசுபுக்குள் எழுந்த அழிப்புணர்வு உக்கிரமடைந்ததோடு வீட்டுப் பாவனைப் பொருட்களுக்கு மேலதிகமாக துணிகளும் பறந்து வரத் தொடங்கின. செய்ய வழியேதுமற்ற சகோதரிகள் இருவரும் தமது வீட்டின் சொந்தக்காரர் தமது உடைமைகளுக்குச் செய்யும் அழிவுகளை அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

                தொடர்ந்து யூசுப் குழந்தைகளிலொன்றைத் தூக்கிக் கொண்டு வந்தார். ருகையாவும், ஹபீபாவும் ஒப்பாரி வைக்கத் தொடங்கினர். யூசுப் ஒரு கையால் அவர்களைப் பின்னால் தள்ளிவிட்டு மறுகையால் கதறியழும் குழந்தையின் கழுத்தை நெரிக்க முயற்சித்தார்.

                இச் சந்தர்ப்பத்தில் கூட்டத்தை ஊடறுத்துக் கொண்டு படிகளிலேறியபடி சொலமன் முன்னால் வந்தார். அவர் சகோதரிகளிருவரையும் மிருதுவாக பின்னால் நகர்த்திவிட்டு யூசுப்பின் கழுத்தைப் பிடித்து அசைத்தார். அத்தோடு அவரது கைகளிலிருந்து குழந்தையைப் பறித்து தாயின் கையில் கொடுத்தார். பின்னர் யூசுபைப் பிடித்து அவரது முகத்தை கதவு நிலைக்கம்பில் சாய்த்து அழுத்தினார். யூசுப்பின் முகம் வேதனையில் துடித்தது. யூசுப்பை மிக வலிமையாக ஆக்கிரமித்துக் கொண்ட சொலமன், அவரையும் இழுத்துக் கொண்டு படியிறங்கினார். அவர்கள் நிலத்தை அண்மித்ததும் கூட்டம் அவர்களுக்கு இடமளித்தது. சிறுவர்கள் கை தட்ட ஆரம்பித்தனர். யூசுப்பை படிக்கட்டு நெடுகவும் இழுத்துக் கொண்டு வந்த சொலமன், அவரது மேர்ஸிடிஸ் வாகனத்தின் கதவைத் திறந்து அவரை உள்ளே தள்ளினார். நிலைமையை உணர்ந்த சாரதி வாகனத்தைக் கொஞ்சம் பின்னாலெடுத்து பின்னர் அங்கிருந்து வாகனத்தைச் செலுத்திச் சென்றான்.

                நெடுங்காலமாக எமக்கு யூசுப்பைக் காணக் கிடைக்கவில்லை. எனினும் மனநோயாளி ஒருவருக்குச் சொந்தமான வீடொன்றில் இதற்குமேலும் வசிக்க முடியாதென சகோதரிகள் இருவரும் தீர்மானித்தனர். அவர்கள் புதுநகரத்திலேயே வேறொரு வீட்டைத் தேடி, அங்கு குடியிருக்கச் சென்றனர்.

    M.Rishan Shareef,

    No – 126,

    Hemmathagama Road,

    Mawanella,

    Srilanka.

     

    mrishanshareef@gmail.com

    Font – Unicode

     

    எழுத்தாளர் பற்றிய குறிப்பு

     

    அஹ்மத் ஈஸொப் (Ahmed Essop) –

    arishi

    1931 ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த இவர், தனது மூன்று வயதில் பெற்றோர் தென்னாபிரிக்காவில் குடியேறியதன் காரணமாக அங்கு வளர்ந்தவராவார். 1956 இல் தென்னாபிரிக்கப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்ததோடு, தொடர்ந்து ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். 1986 ஆம் ஆண்டு தனது ஆசிரியத் தொழிலைக் கைவிட்ட இவர் தொடர்ந்து முழுநேர எழுத்தாளரானார்.

     

    இவரது படைப்புக்களில் அநேகமானவை, தென்னாபிரிக்க சமூகத்தில் இந்தியர்கள் எதிர்கொள்ள நேரும் சவால்களை விபரிப்பவையாகும். 1959 ஆம் ஆண்டு தொடக்கம் பல தொகுப்புக்களை வெளியிட்டுள்ள இவர், தனது முதலாவது சிறுகதைத் தொகுதியான The Hajji and Other Stories எனும் தொகுப்புக்கு 1979 ஆம் ஆண்டு ‘ஒலிவ் ஷ்ரெய்னர் (Olive Schreiner) பரிசினை வென்றுள்ளார்.

    Share