Year: 2015

  • வானத்தைவிடப் பரந்து விரிந்தது

    – தேமொழி.

     

    வானத்தைவிடப் பரந்து விரிந்தது

    கவிதை மூலம் – எமிலி டிக்கின்சன்
    மொழிபெயர்ப்பு – தேமொழி

     

    எல்லையற்ற கற்பனைத் திறனில்
    நீலவானைவிடப் பரந்து விரிந்தது
    அருகருகே வைத்து ஒப்பிட்டால்
    மூளையின் ஆற்றலுக்கு உட்பட்டு
    அதனுள் அடங்கிவிடும் பரந்தவானமும்

    அளவற்ற கற்கும் ஆற்றலில்
    நீலக்கடலை விடவும் ஆழமானது
    ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டால்
    மூளை ஒரு கடற்பஞ்சென உறிஞ்சிட
    வாளிக்குள் ஒடுங்கிவிடும் ஆழ்கடலும்

    நிகரற்ற படைப்பாற்றல் தகுதியில்
    ஒப்பற்ற கடவுளின் சக்திக்குச் சமம்
    எடைக்கு எடை ஒப்பிடுகையில்
    மூளை கடவுளைவிட மாறுபடுமெனில் அது
    இசையின் சந்தங்களென வேறுபடுவதே

    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

    emily-dickinson-everett
    The Brain—is wider than the Sky—

    – Emily Dickinson

     

    The Brain—is wider than the Sky—
    For—put them side by side—
    The one the other will contain
    With ease—and You—beside—

    The Brain is deeper than the sea—
    For—hold them—Blue to Blue—
    The one the other will absorb—
    As Sponges—Buckets—do—

    The Brain is just the weight of God—
    For—Heft them—Pound for Pound—
    And they will differ—if they do—
    As Syllable from Sound—

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (177)

    – சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள் !

    அவசரமான வாழ்க்கை. அல்லோலப்படும் பரபரப்பு. எதையோ தேடிக் கொண்டு கண்முன்னே இயற்கை தந்த இனிய வனப்புகளை அனுபவிக்கக் கூட நேரமின்றி கையிலிருப்பதைத் தொலைத்துக் கொண்டு இந்த 2015ம் ஆண்டில் மனித இனம் எதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது ?

    அன்று காடுகளில் வாழ்ந்த ஆதி மனிதனுக்கும் இன்று நவநாகரீக உடையணிந்து வசதிகளின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய மனிதனுக்கும் ஆகாயமளவிற்கு விரிந்து கிடக்கும் வித்தியாசம். ஆனால் இந்த வித்தியாசம் எமக்கு அளித்திருக்கும் அனுகூலத்தின் மூலம் நாம் எதைச் சாதித்துக் கொண்டிருக்கிறோம், அன்றி எத்தகையதோர் எதிர்காலத்தை எமது அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்கிறோம் ?

    மிகவும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய கேள்விகள்.

    தனிமனிதனாகத் தனது சுயதேவைகளுக்காக மற்றையோரின் உணர்வுகளை மிதித்து வாழ்ந்த ஆதி மனிதன் நாகரீகமடைந்தேன் என்று கூட்டமாக, சமூகமாக, சமுதாயமாக வாழ்ந்து இன்று மீண்டும் தனிமனித தேவைகளுக்காக அடுத்தவரின் உணர்வுகளை மிதித்து வாழும் நிலைக்கு வந்து விட்டானோ என்று எண்ணும் வகை எமைச் சுற்றிப் பல நிகழ்வுகள் நிகழ்கின்றன.

    அதேநேரம் இயற்கையின் அனர்த்தத்தினால் பாதிக்கப்படும் போது சமுதாய உணர்வுகள் மேலோங்கப் பணியாற்றும் நிலைகளையும் பார்க்கின்றோம். நெஞ்சில் சிறிதாக ஓர் ஆறுதல். மனிதாபிமானம் ஆங்காங்கே பச்சையாக இருக்கும் நிலை கண்டு ஒரு தெம்பு உருவாகிறது. பின் எதற்காக உனக்கிந்த கேள்விகளும், தடுமாற்றமும் என உங்கள் கேள்வியில் தொங்கியிருக்கும் நியாயம் எனக்குப் புரிகிறது.

    இயற்கை எம்மீது தொடுக்கும் போர்கள் ஒருபுறமிருக்கட்டும். அதற்கு யாரும் எதுவும் செய்து விட முடியாது. ஆனால் மனிதன், மனிதன் மீது தொடுக்கும் போர்களும், அப்போர்களினால் அல்லலுற்று அவதியுறும் சக மானிடரும், அப்போருக்கான காரணங்களை புரிந்து கொள்ள முடியாத ஒரு விரக்தியுமே எனது கேள்விகளுக்குக் காரணம்.

    நாம் யாருமே யாராக, யாருக்கு குழந்தையாகப் போகிறோம் என்று கேட்டுப் பிறப்பதில்லை. அதே போல தமக்கு யார் குழந்தையாக வர வேண்டும் என்று எம்மைப் பெற்றவர்களும் கேட்டுப் பெறுவதில்லை. நிலத்தைப் பெற்றோர் பதப்படுத்த எமக்கும் மேலே எமக்கும் புரியாத ஒரு சக்தி விதையைத் தூவுகிறது. துளிர்த்துச் செடியாகி மரமாகி “நான்” வளர்ந்து விட்டேன் எனும் இறுமாப்புடன் செயல்படத் துவங்குகிறோம். அங்கேதான் நாம் எமது வித்தியாசங்களுக்குள் எம்மைப் புதைத்துக் கொள்கிறோம். ஒரு குழந்தையாக மண்ணில் விழும் போது எந்த அடையாளமும் இல்லாமல் அவதரித்து விட்டு நம்மை இனம், மதம், மொழி, நிறம் எனும் வேற்றுமைகளுக்குள் சிக்க வைத்து விடுகிறோம்.

    மதம் என்பது மனிதனின் மன ஒட்டங்களைச் சீர்ப்படுத்தி ஓர் தெளிவான கண்ணோட்டத்துடன் மனிதாபிமான அடிப்படையில் செயல்பட வைப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. எந்த ஒரு மதமுமே தம்முடைய மதமே உலகில் சிறந்தது என்றும் மற்றைய மதங்களைச் சிறுமைப்படுத்த வேண்டும் என்றோ போதிப்பதில்லை. அனைத்து மதங்களின் அடிப்படையும் அன்புதான். மதங்களின் வழி நடக்கும் சிலர் தமது மனதின் ஆக்ரோஷங்களை மதத்தின் அடிப்படையில் நியாயப்படுத்த முயல்வதினால் அம்மதங்களைச் சேர்ந்த அனைவரையும் குற்றவாளிகளாகக் கருத முடியாது. எமது மதத்தின் அன்றி மொழியின் பெருமையை நிலைநாட்டிக் கொள்வதற்காக மற்றொரு உயிரைக் காவு கொள்வது எவ்வகையில் மதத்திற்கோ அன்றி மொழிக்கோ பெருமை சேர்க்கும் ?

    இன்றைய உலகில் பயங்கரவாதம் எனும் பெயரால் நாம் எமது மதத்திற்கோ அன்றி மொழிக்கோ பாதுகாப்பளிக்கப் போகிறோம் என்று எண்ணுவது என்றுமே எம்மை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லாது. மாறாக மனிதர்களுக்கிடையில் வேற்றுமையையும், விரோத மனப்பான்மையையும், அமைதியின்மையுமே தோற்றுவிக்கும்.

    சமீபத்தில் பிரான்ஸிலும், அமெரிக்காவிலும் நடைபெற்ற மனிதப் படுகொலைகள் அந்நாட்டு மக்களிடையே தேவையற்ற சந்தேகங்களையே தோற்றுவித்துள்ளது. தவிர நிறவெறி, மொழிவெறி, மதவெறி கொண்ட அந்நாட்டுத் தேசியவாதிகளின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையிலேயே இந்நிகழ்வுகள் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. பிரான்ஸில் வேற்றின மக்களுக்கெதிராகக் குரல் கொடுக்கும் தேசவாதக் கட்சி அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் அதிக வாக்குகளைக் கைப்பற்றியுள்ளது. இது அங்குள்ள மிதவாத அரசியல்வாதிகளை அச்சமடைய வைத்ததுடன் அந்நாட்டுப் பல்லின கலாச்சார வாழ்வுமுறையை குலைக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல அமெரிக்காவில் தீவிர வலதுசாரிக் கொள்கையைக் கொண்ட ஜனாதிபதி வேட்பாளராகிய டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்தைக் காரணம் காட்டி இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த எவரையும் ஐக்கிய அமெரிக்காவிற்குள் அனுமதிப்பதைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

    இத்தகைய மதவாதக் கருத்துக்கள் உலகை எந்த இலக்கை நோக்கி இழுத்துச் செல்லப் போகிறது என்பதே கேள்வி. மனதுக்கு ஆறுதல் தரும் செய்தி இவரது இந்த அர்த்தமற்ற வாதம் அமெரிக்காவில் இவரது கட்சியைச் சேர்ந்த பலராலும் வன்மையாகக் கண்டிக்கப் பட்டுள்ளது. பல உலக முன்னணி அரசியல் தலைவர்கள் இத்தகைய அர்த்தமற்ற கருத்துக்கள் எதுவித பலனுமளிக்காது என்று மிகவும் பலமான கண்டனங்களை இந்நபருக்கெதிராக முன்வைத்துள்ளார்கள். இங்கிலாந்தில் இவர் லண்டனுக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது எனும் மகஜர் ஒன்றை அரசாங்கத்தின் இணையத்தளத்தினூடாக   500,000   கையெழுத்துக்களுடன் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

    மதப்பிரிவினையைத் தூண்டி மக்களுக்கிடையே நிலவி வரும் புரிந்துணர்வுக்கு பங்கம் விளைவிக்கும் இம்மனிதருக்கெதிராக பல பாகங்களில் இருந்து பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்களால் எதிர்ப்புக் கிளர்ந்துள்ளது. அனைத்து மதமும் அன்பின் அடித்தளத்தில் அமைந்தது எனும் கருத்தினை மக்கள் ஆதரித்து ஒன்றிணைவது இத்தகைய ஒரு அறிவிலியின் அர்த்தமில்லாக் கருத்து என்பது ஒருவகை நன்மை எனலாம்.

    மனிதன் மனிதனாக வாழ்வது மற்றைய மனிதனையும் தன்னைப் போல எண்ணுவது ஒன்றின் மூலமே என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

    ஒன்றே குலம் ! ஒருவனே தேவன் !

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Check for Updates >>> https://petition.parliament.uk/petitions/114003

    Block Donald J Trump from England

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.சக்திதாசன்

    Share
  • மழைப்பேச்சு!

     

    ஷைலஜா

    nandi_2623696f

    யாகங்கள் பல செய்தீர் உங்கள்மன
    சோகம் நீங்கிடவேண்டுமென்றே
    தாகம் தணிக்க வந்தேன் தவறா?

    கண்ணுக்கு எட்டாத்தொலைவில்
    காணாபொருள்போலிருந்தேன்
    காட்சிகொடுத்ததும் தவறா?

    கோடிக்குரல் அழைத்தால்
    தேடிவருவது தெய்வகுணம்
    ஓடிவந்ததும் தவறா?

    என்பாதைஅத்தனையும்
    எங்கும் அடைத்துவிட்டீர்
    எப்படியோ வந்ததும் தவறா?

    என்குணம் எதிலும் அடங்கும்
    என்பது தெரிந்திருந்தும்
    ஏரிகுளங்களை அழித்தது தவறு

    இல்லாத பொழுதினில் ஏங்குவதும்
    வருகின்றபொழுதினில் சேமிக்காததும்
    வாழும் மனிதன் செய்யும் தவறு

    இயற்கையின் கொடைதன்னை
    இயன்றவரை அழிப்பதுதான்
    இன்றைய மனிதனின் தவறு

    பொறுத்ததுபோதுமென்றுதான்
    பொங்கி எழுந்து வந்தேன்
    புரிந்ததா உங்கள் தவறு?

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 38

    சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

     

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    “எழுபதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே நான் அருகில் சென்ற போது, குகைக்குள் நுழையும் ஒரு சுதந்திரப் பூச்சியைப் போல் உன்னைக் கண்டேன் ! ஏழு நிமிடங்களுக்கு முன்பு நீ என் பளிங்குக் கண்ணாடி ஜன்னல் வழியே போவது என் கண்களில் பட்டது. அப்போது மரணம் உனக்கு மேல் தொங்கி நிற்க, அடிமைச் சங்கிலிக் கட்டிய குறுகிய சந்துக்கள் வழியே நீ மனிதனாய்ப் போய்க் கொண்டிருந்தாய்.”
    கலில் கிப்ரான் (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
    ___________________

    விடுதலை அழைக்கிறது
    நம்மைத் தனது
    மேடைக்கு !
    அங்கே நின்று
    அவளது செழித்த ஒயினையும்
    அறுசுவை உணவையும்
    சுவைக் கிறோம் !
    ஆனால் நாமந்த பீடத்தில்
    அமரும் போது
    பகற் கொள்ளை அடித்து
    பசியைப் போக்க
    வயிறு புடைக்கத் தின்கிறோம்
    ___________________

    இயற்கை அன்னை தன்
    கரம் நீட்டி நம்மை எல்லாம்
    வரவேற்பாள்
    தனது எழிலை நாம்
    அனுபவிக்க
    வேண்டு மென்று !
    ஆனால் நாமெல்லாம்
    அஞ்சி நடுங்குவோம்
    அவளது மௌனத்தைக் கண்டு !
    நெருக்க மான
    நகருக்கு ஓடுவோம்
    நாமெல்லாம்
    ஓநா யிக்கு அஞ்சி
    ஒதுங்கும்
    ஆட்டு மந்தை போல் !
    ___________________

    சத்தியம் அழைக்கிறது
    நம்மை யெல்லாம்
    குழந்தையின்
    களங்க மிலாப்
    புன்னகை யோடு
    கவர்ச்சிக்
    காதலியின் முத்த மோடு !
    ஆயினும் நாமெல்லாம்
    அதன் அன்பு முகத்தில் அறைவோம்
    கதவைச் சாத்தி !
    பகைவன் போல் எதிர்த்து
    நகைப்போம் !
    ___________________

    Share
  • நிவாரணம்

    –தமிழ்த்தேனீ.

    நிவாரணத் தொகை என்பது இழப்பீட்டுத் தொகை அல்ல.

    குறிப்பாக மேல் நாடுகளில் காப்பீட்டு நிறுவனங்கள் அளிப்பது போல் கண் போனால் இவ்வளவு, கால் போனால் இவ்வளவு, விரல் போனால் இவ்வளவு என்று தரம் பிரித்து அதற்கேற்ற இழப்பீட்டுத் தொகையை அளிப்பது போல் அல்ல (நம் நாட்டில் இல்லை) நிவாரணத் தொகை என்பது.

    தலைவலி வந்தால் அளிக்கும் ஒரு மாத்திரை போன்றது நிவாரணத் தொகை. அதைத் தலைவலிக்கேற்ப அதிகப்படுத்தலாம் குறைக்கலாம். ஆனால் தலைவலியின் மூலகாரணத்தை அறியச் செய்யவேண்டிய மருத்துவ ஆராய்ச்சிகளை முழுவதும் முடித்து அந்த மூலகாரணத்துக்கேற்ப மருந்தோ அல்லது அறுவை சிகிச்சையோ அளிப்பது போன்றது இழப்பீட்டுத் தொகை.

    தற்போதைய நிலையில் முழு வீடு, வீட்டில் உள்ள அத்துணைப் பொருட்கள், நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் போன்றவற்றுக்கு இவ்வளவு ஆண்டு காலமாக காப்பீட்டுத் தொகையாக மக்கள் அளித்தவற்றைக் காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு சதவிகிதம் கூட திருப்பித் தராமல் பொருளீட்டினர்.

    ஆனால் இன்றைய இயற்கைப் பேரிடரினால் ஏற்பட்ட இழப்புகளுக்குக் காப்பீட்டு நிறுவனங்கள் இவ்வளவு வருடங்கள் ஈட்டிய தொகை முழுவதும் செலவழித்தாலும் அது ஈடாகாது. ஆகவே காப்பீட்டு நிறுவனங்கள் என்ன செய்து ஈடுகட்டப் போகிறார்களோ பொறுத்திருந்து பார்ப்போம்.

    denver-flood-restoration-servicesஎன் நண்பரின் சகோதரியார் முடிச்சூர் சாலையில் இருந்த வீட்டில் அவருடைய குளிர்சாதனக் கருவி, விலை உயர்ந்த தொலைக் காட்சிப் பெட்டி, இரண்டு கார்கள், மேலும் பல விலை உயர்ந்த மின்சார சாதனங்கள், மேலும் நகைகள் உட்பட அவர்களுக்கு இழப்பு ஐந்து இலட்சம்‌ ரூபாய்கள்.

    யார் கொடுப்பார்கள் இந்த இழப்பீட்டுத் தொகையை ?
    ஒரு வீட்டுக்கே ஐந்து இலட்சம் ரூபாய்கள் என்றால் நகரம் முழுவதும் பாதிக்கப் பட்டோருக்கு எவ்வளவு கோடிகள் செலவாகும் என்று எண்ணிப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது

    ஆனால் விலை மதிப்பில்லாத உறவுகளை, உறவுகளின் உயிரையே அளித்துவிட்டுக் கதறும் மக்களுக்கு நிவாரணத் தொகையோ இழப்பீட்டுத் தொகையோ எவ்வளவு அளித்தாலும் ஈடாகுமா உயிருக்கு.

    உயிரின் விலை என்ன? உறவின் விலை என்ன இதற்கெல்லாம் எப்படி ஈடுகட்ட முடியும்?
    மனிதன் தான் முக்கியம். எவ்வளவு பொருட்கள் போனாலும் மனம் தளராதீர்கள். மனிதன் உயிரோடு இருந்தால் கடினமே என்றாலும் எப்படியேனும் கஷ்டப்பட்டு மறுபடியும் பொருளீட்டலாம்.

    ஆனால் விலை மதிப்பில்லாத மனிதரின் உயிர் போனால் அதை ஈடுகட்டவே முடியாது. ஆகவே இழந்த பொருட்களை எண்ணி இதயத்தை பலகீனப்படுத்திக் கொள்ளாதீர்கள். ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.

    “உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
    திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
    உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே
    உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே”
    என்று திருமூலர் திருமந்திரத்தில் கூறியதை நினைவில் வைத்துக்கொண்டு மனதைத் தேற்றிக் கொண்டு வாழவேண்டும் வேறு வழியில்லை.

    உலகில் பணம் பொருட்கள் ஆகிய எல்லாவற்றையும் விட உயிர் பிரதானமானது ஆகவே உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லுங்கள்.

    காலுக்குச் செருப்பில்லையே என்று கவலைப் படுவோர் காலை இழந்தோரைப் பார்த்து தேறுதல் கொள்ள வேண்டியதுதான்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

    படம் உதவி: http://www.elitewaterdamage.com/flood-cleanup/

    Share
  • தெய்வ தரிசனம்

    க.பாலசுப்ரமணியன்

    images

    எத்தனை வடிவங்கள் எடுத்தாய் இறைவா!

    பார்க்குமிடமெல்லாம் நீ படர்ந்திருக்க

    பத்து உருவினில் உன்னைச் சிறைப்பிடித்தல்

    பழுக்காத சிந்தனையின் பேதமையன்றோ !

     

    தோளிரண்டில் தன் செல்வங்களைச் சுமந்துநின்ற

    தந்தையின் அன்பினிலே உனைக் கண்டேன்  !

    தூங்காமல் தாயருகில் இரவெல்லாம் துணையிருந்து

    தேறுதல் சொன்ன மகனிடம் உனைக்கண்டேன் !

     

    காலமெல்லாம் துன்புறத்திக் கதறவிட்ட மனைவியினைக்

    கனிவாக அணைத்திட்ட கணவனிடம் உனைக்கண்டேன்!

    நட்டாற்றில் தள்ளாடும் நண்பனின் குடும்பத்தை

    நலமாகத் தன்வீடு அழைத்திட்ட நட்பினில் உனைகண்டேன்!

     

    தன்பசியைத் தன்னுள் அடக்கி ஊர்பசிக்கு உணவுதேடி

    உழைத்திட்ட உள்ளத்தில் உனைக்கண்டேன் !

    கடன்வாங்கி வைத்திருந்தக் கையிருப்பைக்

    கலங்காமல் கொடுத்திட்டகண்ணொளியில் உனைக்கண்டேன்

     

    சுமைதூக்கும் தோள்களில் உனைக்கண்டேன்

    சுவையாகச் சமைக்கின்ற கைகளில் உனைக்கண்டேன்

    சோர்வின்றி உழைக்கின்ற உடலில் உனைக்கண்டேன்

    சோதனையைச் சுமந்திட்டநெஞ்சங்களில் உனைக்கண்டேன்!

     

    கண்ணீரைத் துடைக்கின்ற விரல்களில் உனைக்கண்டேன்

    கைகொடுத்து உயிர்காத்த கருணையில் உனைக்கண்டேன்

    களைப்பின்றி சேவைசெய்யும் இளைஞனில் உனைக்கண்டேன்

    கலையாது  தலைதூக்கி நின்ற மனிதத்தில்  உனைக்கண்டேன் !

    Share
  • வளவன் கனவு (23)

    சு.கோதண்டராமன்

    அப்பரும் ஆளுடைய பிள்ளையும்

    vallavan-kanavu

    வளவன் கனவு – பகுதி 22

    அப்பர்தாம் எங்குற்றார் இப்பொழுதென் றருள்செய்யச்
    செப்பரிய புகழ்த்திருநாவுக்கரசர் செப்புவார்
    ஒப்பரிய தவஞ்செய்தேன் ஆதலினால் உம்மடிகள்
    இப்பொழுது தாங்கிவரப் பெற்றுய்ந்தேன் யான்என்றார்.

                                  -சேக்கிழார்

     

    இவர் பால் மணம் மாறாப் பச்சிளம் பாலகர். அவர் பழுத்து முதிர்ந்தவர்.

    இவர் வேதியர் குலத்தவர். அவர் வேறு குலத்தவர்.

    இவர் தந்தையின் தோள் மீதும் பல்லக்கிலும் அமர்ந்தே பயணம் செய்தவர். அவர் கால்நடையாகவே எல்லாத் தலங்களையும் சென்று தரிசித்தவர்.

    இவர் வேத வேதாங்கங்களை ஓதாது உணர்ந்தவர். அவர் வேறு சமயத்து நூல்களை ஓதி அவற்றின் பயனின்மையை உணர்ந்து துறந்தவர்.

    இவர் பிறக்கும்போதே சமணத்தை ஒழிப்பதே எனது குறிக்கோள் என முழங்கியவர். அவர் குறிக்கோள் இல்லாது வாழ்ந்து கெட்டேனே என்று வருந்தியவர்.

    இவர் இளமைக்கே உரிய துடிப்பும் பதட்டமும் கொண்டவர். அவர் அனுபவத்தால் பெற்ற பணிவும் கனிவும் கொண்டவர்.

    இவர் ஆனந்தமே வடிவானவர். அவர் தன் கடந்த கால வாழ்க்கையை நினைந்து கழிவிரக்கம் கொள்பவர்.

    இவர் குழந்தைக்கே உரிய இயல்புடன் ஓடும் நதி, பாடும் குயில், முரலும் வண்டு, துள்ளும் மீன் என்று எல்லாவற்றிலும் உள்ள இன்பத்தை ரசிப்பவர். அவர் மனிதப் பிறவி துன்ப மயமானது என்ற கொள்கையில் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்துவிட்டுக் கடைசியில் இவ்வுலகம் இன்பமானது, இறைவனின் திருவுருவைக் காணப் பெற்றால் எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று உணர்ந்தவர்.

    இவர் இறைவனின் உருவத்தைப் பலவாறாக வர்ணித்துக் கேட்பவர் மனதில் அந்த வடிவத்தைப் பதியச் செய்தவர். அவர் நீரிலும் நிலத்திலும் விண்ணிலும் தீயிலும் காற்றிலும் இறைவனைக் கண்டு மகிழ்ந்து மற்றவர்க்கும் காட்டியவர்.

    சிவனடியாரை எந்தக் கோளும் நாளும் துன்புறுத்த முடியாது என்னும் அசைக்க முடியாத சிவபக்தி உடையவர் இவர். கோள்கள் மனிதனுக்குத் தீங்கிழைக்க வல்லன என்ற சராசரி மானிடரின் நம்பிக்கைகளை ஏற்றவர் அவர்.

    இருவரையும் இணைத்தது சிவம். மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதால் பரகதி கெடாது என்பதில் இருவரும் ஒன்றுபட்டனர். ஊர் ஊராகச் சென்று வேத நெறியைப் பரப்புவதில் ஒன்றுபட்டனர். சிவனைப் போற்றும் தமிழோடு பாடல் இசைத்து மக்களைக் கவர்வதில்  இருவரும் ஒன்றுபட்டனர்.

    இருவரும் ஒருவரை ஒருவர் காண விரும்பினர்.

    இடம் – பூந்துருத்தி.

    அப்பர் அங்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட ஆளுடைய பிள்ளை, பல்லக்கில் இருந்தபடியே “அப்பர் எங்கு இருக்கிறார்?” என்று வினவ, பல்லக்கின் அடியிலிருந்து குரல் கொடுத்தார் அப்பர், “தங்களைத் தாங்கும் பேறு பெற்று இங்கு உள்ளேன்.”

    “அடடா, என்ன அபசாரம்! இவ்வளவு பெரிய சிவத் தொண்டர் என்னைச் சுமப்பதா?” என்று இளையவர் கீழே குதித்துப் பெரியவர் காலில் விழ, அதற்கு முன், “இறைவனால் ஞானப்பால் ஊட்டப் பெற்றவர் முன் நான் மிக மிகத் தாழ்ந்தவன்” என்று கூறி அவர் இவர் காலில் விழ எங்கும் உணர்ச்சி மயம். கூடியிருந்த அன்பர்கள் கண்ணீர் வழிய அவர்களது அன்பைப் போற்றினர்.

    அங்கு வயது கரைந்தது. சாதி மறைந்தது. செல்வத்திற்கு மதிப்பில்லை. கல்வியைக் கவனிப்பார் இல்லை. எங்கும் சிவம் ஒன்றே நிறைந்தது.

    இருவரும் சேர்ந்தே மறைக்காடு என்னும் தலத்திற்குப் போனார்கள். வேதங்கள் இறைவனைப் பூசித்த பெருமை உடைய பழம்பதி. வேதியராகப் பிறக்காவிடினும் வேத நெறியில் பற்றுக் கொண்ட அப்பர் அவ்வூர்க் கோவிலில் வேதங்களால் அடைக்கப்பட்டிருந்த கதவைத் திறக்குமாறு ஒரு பதிகம் பாடினார். கதவு திறந்தது. ஞான சம்பந்தர் பார்த்தார். வேதங்களை ஓதி அவ்வழியே முத்தி அடைதல் எல்லோர்க்கும் எளிதல்ல. எல்லோர்க்கும் எளிதான வழியான நமச்சிவாய மந்திரம் இருக்க, கடுமையான வழிகளைத் திறந்து விடுவதால் மக்கள் சமயத்தைக் கண்டு அஞ்சி ஓட ஏதுவாகும் என்று கருதி அக்கதவு மூடுமாறு பாடினார்.

    Share
  • மனிதனுக்கு மதம் தேவையா?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    மனிதனுக்கு மதம் தேவையா இல்லையா என்ற வாதம் எப்போதுமே நடந்துகொண்டிருக்கிறது.  இப்போது பல மதங்களைச் சேர்ந்தவர்களும் தாங்கள் செய்யும் அராஜகச் செயல்களுக்குத் தங்கள் மத நூல்களில் கூறப்பட்டிருக்கும் அறவுரைகளைத் தவறாகப் புரிந்துகொண்டு தங்களுடைய செயல்களுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள்.

    1995 நவம்பர் மாதம் நான்காம் தேதி இஸ்ரேல் பிரதம மந்திரியாக இருந்த இட்சக் ரபீன் என்பவரை யூத மத வெறியன் இகால் அமீர் சுட்டுக் கொன்றான்.  இந்தக் கொடிய சம்பவம் நடந்து இருபது வருடங்கள் ஆகின்றன.  அவனுக்கு அந்தக் கொலையில் உடந்தையாக இருந்த அவனுடைய சகோதரன் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலை ஆகியிருக்கிறான்.  அவனோ அவனுடைய சகோதரனோ இன்றளவும் தாங்கள் செய்த தவறுக்கு மனம் வருந்தவில்லை.  தங்கள் யூத மத வேதமான தோராவின் விளக்க உரையான டால்முடில்  (Talmud)  யூதர்களுக்குத் தீங்கு செய்பவர்களின் உயிர்களைப் பறிப்பதற்கு யூதர்களுக்கு உரிமை இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறதாம்.  ஆஸ்லோ ஒப்பந்தத்தில் ரபீன் கையெழுத்திட்டதால் பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான வெஸ்ட் பேங்கில் குடியமர்த்தப்பட்ட இஸ்ரேலிய யூதர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதன் மூலம் கஷ்டத்திற்கு உள்ளாவார்களாம்.  அதனால் அதற்குக் காரணமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரபீன் இந்த மதவாதிகளால் கொல்லப்படுவது தவறில்லையாம்!  இது இந்த இரண்டு சகோதரர்களின் வாதம்.  அதே தோராவில்தான் ‘நீ மற்றவர்கள் உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ அப்படி மற்றவர்களை நீ நடத்த வேண்டும்’ என்று கூறியிருக்கிறது.  இந்த இரண்டு சகோதரர்களும் அதை மறந்துவிட்டார்கள்.  தோராவின் விளக்க உரையான டால்முடில் அப்படிக் கூறியிருக்கிறதா என்று தெரியவில்லை.  விளக்க உரை எழுதுபவர்கள் மூலத்தில் உள்ளதைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம்.  அந்த விளக்க உரைகளை எப்படி அப்படியே எடுத்துக்கொள்ள முடியும்?  யூத மத வெறியர்களின் குருட்டுப்புத்திக்கு இது ஒரு உதாரணம்.

    சிரியாவிலும் ஈராக்கிலும் சுன்னி பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு ஒரு ராஜ்ஜியம் உருவாக வேண்டும் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். பலரைப் பலிவாங்கிக்கொண்டிருக்கிறது.  அல்லாவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லோரும் நிரீஸ்வரவாதிகள் என்று கூறிக்கொண்டு இஸ்லாம்மதத்தைச் சேராதவர்களைக் கொல்லுவதுதான் அந்த மதத்திற்குத் தாங்கள் செய்யும் சேவை என்று நினைக்கிறது.  மதத்தின் பெயரால் இவர்கள் செய்யும் அராஜகச் செயல்களுக்கு மதத்தைக் காரணம் காட்டுகிறார்கள்.  டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி கலிஃபோர்னியாவில் கொலைவெறியில் ஆடிய இருவரில் மனைவி ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்கு சமூக வலைதளம் ஒன்றில் தன் விசுவாசத்தைத் தெரிவித்து எழுதியிருக்கிறார்.  அவர்களுடைய மதத்திற்கு அவர்கள் இப்படிச் சேவை செய்கிறார்களாம்.  இது எவ்வளவு பெரிய மத மடமை!

    சென்ற நவம்பர் மாதக் கடைசியில் அமெரிக்க மாநிலமான கொலராடோவில் உள்ள கொலராடோ ஸ்ப்ரிங்க்ஸ் (Colorado Springs) என்னும் நகரிலுள்ள ‘திட்டமிடும் பெற்றோர்’ (Planned Parenthood) என்ற அமைப்பைச் சேர்ந்த ஒரு கட்டடத்திற்குள் நுழைந்து ஒருவன் சரமாரியாகச் சுட்டதில் மூன்று பேர் உயிர் இழந்திருக்கிறார்கள், ஏழு பேர் காயமடைந்திருக்கிறார்கள்.  காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்தவுடன் அவர்களிடம் சரணடைந்திருக்கிறான்.

    இவனுக்கு ஏன் அந்த அமைப்பின் மீது அத்தனை கோபம்?  இந்த அமைப்பு பெண்களுக்குத் திட்டமிட்டுக் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு ஆலோசனைகள் வழங்குவதோடு பெண்கள் விரும்பினால் அவர்கள் கருச்சிதைவு செய்துகொள்வதற்கும் உதவுகிறது.  இந்த அமைப்பு கிறிஸ்தவர்களின் வேதப் புத்தகமான பைபிளில் கூறப்பட்டிருப்பதற்கு மாறாகப் பெண்களுக்குக் கருச்சிதைவு செய்வதாகவும் அப்படிச் செய்த கருக்களின் பகுதிகளை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துவதற்கு விற்பதாகவும் கூறி ‘இனி சிசுக்களின் உடல் பகுதிகள் விற்பனைக்கு கிடைக்காது’ என்று கூவியிருக்கிறான்.  பைபிளில் தடைசெய்யப்பட்டிருக்கும் விஷயங்களை ஆதரிப்பதாகத் தன்னைக் கூறிக்கொள்ளும் இவன் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் மூன்று பெண்களை மணந்திருக்கிறான்; அவர்களைப் பல வகையாகத் துன்புறுத்தியிருக்கிறான்; அவர்களோடு குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும்போதே மற்றப் பெண்களோடு உறவு வைத்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டிருக்கிறான்.  உலகம் சீக்கிரமே அழியப் போவதாகவும் தான் யேசுவின் மேல் அழியாத பற்றும் நம்பிக்கையும் வைத்திருப்பதால் உலகம் அழிந்த பிறகு தான் எப்போதுமே யேசுவின் அருகில் இருக்கப்போவதாகவும் கூறிக்கொண்டிருந்திருக்கிறான்.  என்னே இவனுடைய அறியாமை!

    இந்தியாவில் இந்து மத சாமியார்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் இந்து மத நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்கள்தான் மோட்சம் பெறுவார்கள் என்பதுபோல் பேசுவதைப் பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. இதில் பசுவைக் கும்பிடுவதும் ஒன்று.  பசுவைக் கொல்லக் கூடாது என்று கூறுபவர்கள் எருமைகளைக் கொல்வது பாவம் இல்லை என்கிறார்கள்.  எருமை என்ன பாவம் செய்தது?  அதைக் கொல்லும்போது அதற்கு மட்டும் வலிக்காதா?  அதுவும்தானே மனிதனுக்குத் தேவையான பாலைக் கொடுக்கிறது?

    எல்லா மதங்களும் எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்றுதான் கூறும்.  மனிதர்களில் ஏற்றத்தாழ்வு இல்லை என்றுதான் எல்லா மதங்களும் போதிக்கும்.  ‘அடித்துப் புசி’ என்று பைபிளில் கூறியிருப்பதாக என்னுடைய கிறிஸ்தவப் பள்ளித்தோழி ஒருத்தி கூறுவாள்.  அன்பே உருவானவராக, இடையனாகச் சித்தரிக்கப்படும் யேசு மிருகங்களை அடித்துப் புசிக்கச் சொல்லியிருப்பாரா?  நிச்சயமாகச் சொல்லியிருக்க மாட்டார்.

    அமைதி தவழும் புத்தர் சிலையைப் பார்த்தாலே அவர் கற்பித்த கொல்லாமைதான் நம் நினைவிற்கு வருகிறது.  அவர் பெயரில் வழங்கும் மதத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொண்டு மியான்மாரில் அங்கு  வாழும் முஸ்லீம்களுக்கு எதிராகச் செய்யும் வன்முறைச் செயல்களும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அங்கு வாழும் புத்த மதத்தைத் தழுவும் சிங்களர்கள் செய்யும் அராஜகச் செயல்களும் புத்தரை உண்மையிலேயே பின்பற்றுகிறார்களா என்று நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.

    மத போதனைகள், மதக் கோட்பாடுகள், மதச் சடங்குகள் இல்லாமலேயே இறைவனை வழிபடலாம்.  மனிதர்களிடையே நல்லிணக்கத்திற்கு உதவாத மதங்களை மனித இனம் தூக்கி எறிந்துவிட்டு இறைவனை வழிபடலாம்.  ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பார்கள்.  அந்த தேவனை வழிபடுவதற்கு மதங்கள் ஏன், மதச் சடங்குகள் ஏன்?,

    Share
  • மழை!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    வற்றிக் கிடக்கும்  வறண்ட பூமியைத்
    தொட்டுத் தழுவும் –
    உனது   தூய  கரங்களுக்குத்தான்  எத்தனை குளிர்ச்சி!

    இரவென்ன  பகலென்ன
    வானம்  கருக்  கொண்டால்…,
    பூமி  மகிழ்கிறது!

    நீ
    இல்லாத நாட்களில்                                        rain-fall
    பொல்லாத புழுக்கம்
    இருக்கின்ற நாட்களில்
    இப் புவியே வழுக்கும்!

    நீ வருகை தருங் காலத்தில்
    வெள்ளம் பாய்ந்தோடும்
    உனது
    விபரீதப் போக்கினால்
    கண்ணீர்  வெள்ளமும்  பாய்ந்தோடும்…!

    நதிக்கரைகளில்  அலையடிக்கும்
    கடற்கரைகளில்
    வெண்நுரைப்  பூக்கள்
    விரிகின்ற  மாரிக்காலம்,
    உன்னைச் சுமந்த மேகங்களின்
    ஊர்கோலம்!

    கண்ணுக்குக் குளிர்ச்சி தரும்
    இந்த –
    மண்ணுக்கே மகிழ்ச்சி  வரும்

    மீனோட…
    நாரைகள் தவமிருக்கும்
    ஏரோடாத கழனிகளில்
    ஏரோட…எங்கும்
    பைங்கூழ் விளைந்திருக்கும்!

    வறுமைத் தளையறுக்கும்
    வல்லமை  உன்னுடையது!
    நீ இல்லையேல்
    எந்த  மண்தான் பொன்னுடையது?

    கொட்டும் …இடிமின்னல் …காற்று…
    ”கூஹ் கூஹ்”வென்று
    குரலை யெழுப்ப
    முட்டும் மரக்கிளைகள்
    மோதிச்  சலசலக்க…
    கார்கால மேகங்கள்
    தாவிச் செல்லும்
    பல்லாக்கிலே –
    நீ வீற்றிருந்து
    விஜயஞ்  செய்கின்றாய்!

    சாகரங்களைச்
    சல்லாப புரியாக மாற்றும்
    சக்தி உன்னுடையது!

    நீ கொடைவள்ளல் –
    அள்ளிக் கொடுக்கும் போதுதான்
    இடையூறு  அதிகம்!

     

     

    Share
  • இறுதிப் பயணம் …

    – தேமொழி.

    இறுதிப் பயணம் …

    கவிதை மூலம் – எமிலி டிக்கின்சன்
    மொழிபெயர்ப்பு – தேமொழி

     

    சாவை நான் எதிர்நோக்காததால்
    காலனே கனிவுடன் எனைத்தேடி வந்தான்
    மறுவுலகம் செல்லும் மரணத்தேரிலே
    காலனுடன் என் இறுதிப்பயணம்

    மெதுவாக ஊர்ந்தே நாங்கள் சென்றோம்
    காலனுக்கு எந்த ஓர் அவசரமுமில்லை
    அவன் கருணையை மதித்தே நானும் எனது
    உழைப்பிற்கும் ஓய்விற்கும் விடைகொடுத்தேன்

    இடைவேளை மணியொலிக்க
    பள்ளித் திடலில் விளையாடும்
    குழந்தைகளைக் கடந்தோம்
    வெறித்து நோக்கும்
    வயல்வெளிக் கதிர்களையும்
    மறையப் போகும்
    மாலைக் கதிரவனையும் கடந்தோம்

    இல்லை, கதிரவன்
    எங்களைக் கடந்தே சென்றான்
    மாலைப்பனியின் நடுக்கும் குளிரை
    தடுக்கும் திறனற்றுப் போனதென்
    மெல்லிய ஆடையும் சால்வையும்

    மணல் திட்டின் மீதிருந்த
    மாளிகையின் முன்னே
    மரணத்தேரைச் சற்றே நிறுத்தினோம்
    மண்ணில் புதைந்து புலப்படவில்லை
    மாளிகையின் கூரையும் அதன் முகடும்

    நூற்றாண்டுகள் பல கடந்தாலும்
    அன்று நடந்தவை யாவுமே
    நேற்று நிகழ்ந்தவையாக நெஞ்சில்
    நிலைத்துப்போன நினைவுகள்
    நான் எண்ணியவாறே அழிவற்ற
    நிரந்தர வாழ்வை நோக்கிப்
    பயணித்தன மரணத்தேரின் குதிரைகள்

    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

    emily-dickinson-everett

    Because I could not stop for Death

    – Emily Dickinson

     

    Because I could not stop for Death –
    He kindly stopped for me –
    The Carriage held but just Ourselves –
    And Immortality.

    We slowly drove – He knew no haste
    And I had put away
    My labor and my leisure too,
    For His Civility –

    We passed the School, where Children strove
    At Recess – in the Ring –
    We passed the Fields of Gazing Grain –
    We passed the Setting Sun –

    Or rather – He passed us –
    The Dews drew quivering and chill –
    For only Gossamer, my Gown –
    My Tippet – only Tulle –

    We paused before a House that seemed
    A Swelling of the Ground –
    The Roof was scarcely visible –
    The Cornice – in the Ground –

    Since then – ’tis Centuries – and yet
    Feels shorter than the Day
    I first surmised the Horses’ Heads
    Were toward Eternity –

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 37

    சி. ஜெயபாரதன்.

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

     

    “சாத்தான் உன் கண்களைத் திறந்த பிறகு நீ சொர்க்க உலகை மேல்நோக்கிப் பார்த்தாயா ? உன் உதடுகளை விரியன் பாம்பு முத்தமிட்ட பிறகு, நன்னெறி நூலிலிருந்து ஒரு வரியாவது எடுத்து நீ உச்சரித்தாயா ? மரணம் உன் செவிகளை அடைத்த பிறகு வாழ்க்கையின் கீதத்தை ஒரு கணமாவது நீ கேட்டாயா ?”
    கலில் கிப்ரான் (The Sons of the Goddess & the Sons of the Monkeys)

    ___________________

    உயரத்தில் நம்மைத் தூக்கும்
    இந்த வாழ்க்கை !
    ஓரிடத்தி லிருந்து
    வேறோர் இடத்துக்கு நம்மை
    ஏற்றிச் செல்லும் !
    ஒரு புள்ளியி லிருந்து
    அடுத்த புள்ளிக்குத்
    நகர்த்தும் ஊழ்விதி நம்மை !
    இந்த இரட்டைக்கும்
    இடையே
    சிக்கியுள்ள நமக்குச்
    செவியில் கேட்கின்றன
    பயங்கரக் குரல்கள் !
    இடையூறு
    தடை யீடுகள் மட்டுமே
    நம் கண்ணில் படும் !
    ___________________

    எழிலரசி தன்னைக் காட்டுவாள்
    நமக்கு அவள்
    புகழ் ஆசனத்தின் மேல்
    வீற்றிருக்கும் போது !
    ஆயினும்
    நாமவளை நெருங்குவது
    காம இச்சை யால் ! அவளது
    தூய்மைக் கிரீடத்தை
    அபகரித்து நமது
    தீய செயலால் அவள்
    ஆடையை
    அசுத்தப் படுத்திவோம் !
    ___________________

    காதல் பணிவாக
    நம்மருகே உலவு கிறது
    ஆயினும்
    நாமதை விலக்கி ஓடுவோம்
    நடுக்க முடன் !
    இருட்டினில் நாம்
    ஒளிந்து கொள்வோம் !
    அல்லது
    அழகினைப் பின் தொடர்வோம்
    அவமானப் படுத்த !
    ___________________

    காதல் பாரம் உள்ளத்தை
    அழுத்தும் போது
    அறிவில் உயர்ந் தவரும்
    சிரம் தாழ்த்துவர்.
    அழகோ
    மென்மை மிகுந்தது
    லெபனானில் விளையாடும்
    தென்றல் போல் !
    ___________________

    Share
  • எல்லோர்க்கும் உதவிடுவோம்!

    -எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    உட்கட்சிப்  பூசல்களை உடனடியாய் நிறுத்திவிட்டு
    எக்கட்சி ஆயிடினும் எல்லோர்க்கும் உதவிடுங்கள்!
    எக்கவுண்டன்ட் என்ஜினியர் ஏழைபணக் காரரென்று
    எல்லோரும் வெள்ளத்தில் இடர்ப்பட்டே நிற்கின்றார்!

    வில்லனொடு கதாநாயகன் வீட்டிலேயும் வெள்ளம்தான்!
    அல்லல் பட்டுநிற்கின்றார் அனைவருமே மனிதர்தாம்!
    நல்லிதயம் கொண்டபலர் நாடிவந்து உதவுகின்றார்
    வெள்ளமது விரைந்தகல வேண்டிடுவோம் யாவருமே!

    உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் ஒன்றானார் வெள்ளத்தால்
    ஓலைக் குடிசையொடு  ஓட்டுவீடும் ஒன்றாச்சு!
    மதமுள்ள மனிதரெல்லாம் மழைவெள்ளம் நீந்துகின்றார்
    மதம்கடந்த சேவைதனை மழைவெள்ளம் உணர்த்தியது!

    ஓடுகின்ற உதிரத்திலே ஒழுகிநிற்கும் கண்ணீரிலே
    தேடிநின்று பார்த்தாலும் தெரிவதில்லை சாதியென்பர்!
    வீதிதோறும் வெள்ளம்வந்து விபரீதம் பெருகியதால்
    சாதியெலாம் வெள்ளமதில் சாய்ந்துவிட்ட நிலைகண்டோம்!

    குறைசொல்லல் தவிர்த்துவிட்டு குறையகற்ற   முனைந்திடுங்கள்!
    துறைதோறும் உள்ளவர்கள் தூய்மையுடன் செயற்படுங்கள்!
    இறைவனது சோதனையே இதுவென்று எண்ணிநின்று
    எங்களால் இயன்றவரை எல்லோர்க்கும் உதவிடுவோம்!

     

     

     

     

     

    Share
  • அள்ளி அணைத்திடவே…!

    -கவிஜி 

    அறையெங்கும்
    பின்தொடரும்
    நிழலென…
    முன் பின் என
    எங்கும் எதிலும்,
    மிகச் சிறிய
    ஓர் அரவமாக
    அத்துமீறும் பெரிய
    அலையாக,
    சொல்ல வரும்
    அத்தனையும் சொல்லிவிட
    முடியாத தர்க்கங்களாக
    முயக்க நிலையின்
    தழுவல்களாக…
    பெருங்கண் கொண்ட
    ரகசியக் கீற்றாக
    அள்ளி அணைத்திடவே
    அடங்கிட முடியாத
    ஆத்மாவின் பேரலை
    போல,
    அணைத்துக் கொண்டே
    பின் தொடர்கிறது
    சற்றுமுன் அவள்
    குளித்த
    குளியலறையின் வாசம்…!

     

     

    Share
  • சிவபிரதோஷம்

    மீ.விசுவநாதன்

    shiva-in-meditation-PG05_l
    ஊரெல்லாம் வெள்ளம் பாய

    உடமைக ளெல்லாம் போக

    நீரெல்லாம் கண்ணீ றென்னும்

    நிலைமையாய்ச் சென்னை மக்கள்

    வேரெல்லாம் இற்று வீழ்ந்த

    விருட்சமாய் ஆன போதும்

    பேரெல்லாம் பலவாய்க் கொண்ட

    பித்தனை மறந்தா ரில்லை !

     

    சாதிகளும் மதமும் இன்று

    சங்கடம் தீர்க்க வேண்டி

    நாதிகளாய்க் கூடி வந்து

    நற்பணி செய்கின் றாரே !

     

    ஆதிமூலம் மழையாய் வந்தாய்

    அன்பிலே இணைய வைத்தாய் !

    மீதிநாட்கள் நலமே சூழ

    பித்தனே சிவனே காப்பாய் !

     

    ( அறுசீர் வாய்பாடு: காய்,மா,மா, விளம், மா,மா )
    (பிரதோஷ தினம் : 08.12.2015)

    Share
  • குப்பைகள் – பேரிடர்க் காலத்தின் சாதக அம்சம்

    அண்ணாகண்ணன்

    kuppai_2646380f_2647163f

    தமிழகத்தில் வெள்ளம் வடிந்த பின்னும் குப்பைகளை அகற்றுவது, ஒரு பிரமாண்டமான பணி. அதிலும் இந்தக் குப்பைகளை எங்கே கொண்டு கொட்டுவது என்பதும் கேள்விக்குறி. ஏற்கெனவே உள்ள குப்பை மலைகள், சாதாரண காலத்திலே சேரும் அன்றாடக் குப்பைகளுக்கே திணறுபவை. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வண்டி வண்டியாக வெளியேறும் குப்பைகளை இங்கேயே கொட்டினால், குப்பை மலையின் சுற்றுவட்டம் தான் விரியும். அல்லது ஆங்காங்கே புதிய புதிய குப்பை மலைகளை உருவாக்குவதும் சரியான தீர்வு இல்லை. இவையெல்லாம் மேன்மேலும் சுற்றுச்சூழல், சுகாதாரம் எனப் பல்வேறு சிக்கல்களை வளர்க்கக் கூடியவை. அடுத்தொரு கனமழை பெய்தால், இந்தக் குப்பைகள் கரைந்தோடி வருவது ஒரு புறம் இருக்க, இவற்றின் துர்நாற்றமும் கொசுப் பெருக்கமும் இதர கேடுகளும் வாழ்வை நரகமாக்குபவை.

    இந்நிலையில் இப்பணியில் ஈடுபடும் பொதுமக்களும் சுகாதாரத் துறை ஊழியர்களும் தன்னார்வலர்களும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    1.இரும்பு, மரம், பிளாஸ்டிக், கண்ணாடி, துணிகள், மின்னணுப் பொருள்கள், சமையல் கழிவுகள், காகிதங்கள்… என வகை வாரியாகக் குப்பைகளைப் பிரிக்க வேண்டும். இவற்றில் எந்தெந்தப் பொருள்களைக் கழுவி, அலசி, துவைத்துப் பயன்படுத்த முடியுமோ அவற்றை எல்லாம் தனியே பிரிக்க வேண்டும்.

    2.நம் வீட்டில் பயன்படுத்த முடியாதவற்றையும் பழைய சாமான் கடையிலோ, உதிரி பாகங்கள் சந்தையிலோ இடலாம். காசுக்காக இல்லாவிட்டாலும் மறுபயன்பாட்டை நோக்கமாக வைத்தாவது இதைச் செய்ய வேண்டும். இதற்குக் கட்டுச் செலவு, வண்டிச் செலவு, ஏற்றி இறக்கும் செலவு ஆகியவை இருப்பினும் இதற்கெனத் தனியே பணிக் குழுக்கள் இயங்க வேண்டிய தேவை உள்ளது.

    3.இந்தக் குப்பைகளிலிருந்து பேரளவு உரம் தயாரிக்கும் வாய்ப்புகளை உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும். அனைத்துக் குப்பைகளையும் சென்னையிலும் கடலூரிலும் வைத்து உரமாக்கி, பிற ஊர்களுக்கு அனுப்ப முடியாது. எனவே, இதற்கென உரிய நெறிமுறைகளை உருவாக்கி, தமிழகம் முழுவதும் இந்தக் குப்பைகளைப் பிரித்து அனுப்பி, ஆங்காங்கே உரமாக்கி, அந்தந்த ஊர்களிலேயே பயன்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இது உரச் செலவைக் குறைப்பதோடு, வேலை வாய்ப்பையும் வழங்கும். குப்பைகளை முறையாகக் கையாண்டால், பேரிடர்க் காலத்தின் சாதகமான அம்சமாக இதை மாற்றிவிட இயலும். ஊரை ஒட்டுமொத்தமாகத் துப்புரவாக்கி, புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கு உரிய நல்வாய்ப்பாகவும் இதைப் பயன்படுத்த இயலும். சுயநலத்துடன் நம் வீட்டுக்கு வெளியில் மட்டும் குப்பையைத் தள்ளினால், அது மீண்டும் இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும். சாதகமாகவா, பாதகமாகவா? குப்பைகளை எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்பது நம் கரங்களில்தான் உள்ளது.

    4.மரம், இரும்பு, பிளாஸ்டிக் ஆகியவற்றை முறையாகக் கையாண்டால், மறுசுழற்சி செய்ய முடியும். துணிகளையும் சோபா, மெத்தை, தலையணைகளிலிருந்து பஞ்சு, ஸ்பாஞ்சு ஆகியவற்றையும் காயவைத்து மறுசுழற்சி செய்யலாம். வெயில் பலமாக அடிக்கும் வரை இவற்றை உலர வைக்க, தக்க தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். இதற்கெனப் புத்தாக்கப் போட்டிகளை நடத்துவதும் பயன் அளிக்கும்.

    5.சமையல் கழிவுகளைத் திடக் கழிவு, திரவக் கழிவு என்ற வரிசையில் பிரிக்கலாம். இவற்றைச் சாக்கடையில் தள்ளினால், மேலும் அவை அடைத்துக்கொள்ளும். எனவே, பாலிதீன் பைகள் போன்றவற்றில் இவற்றை அடைத்து, உரிய இடங்களுக்குக் கொண்டு சென்று, உரமாக்க முயல வேண்டும். இதில் நாற்றம், சுகாதாரம், உடல்நலன் உள்ளிட்ட சிக்கல்களுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.

    6.மின்னணுக் கழிவுகளை மிகுந்த எச்சரிக்கையுடன் அப்புறப்படுத்த வேண்டும். இவற்றுள் எவ்வெவற்றை மறுசுழற்சி செய்ய முடியும் எனக் கவனிக்க, அனுபவம் வாய்ந்த குழுவினரை ஈடுபடுத்த வேண்டும். சிடி, பிளாப்பி, கேசட், கணினி, செல்பேசி, பென்டிரைவ், ஹார்ட் டிரைவ் ஆகியவற்றிலிருந்து தரவுகளைப் பிரித்தெடுக்க இயலுமா என்றும் ஆராய வேண்டும்.

    7.நீரில் மூழ்கிய புத்தகங்களை, காகிதங்களை உலர வைத்துப் பயன்படுத்துவது பெருமளவு சாத்தியமில்லை. ஆனால், இவற்றைக் கோணிகளில் கட்டி, ஓரிடத்தில் சேர்த்து, மீண்டும் கூழாக்கி, மீண்டும் காகிதமாகவோ, அல்லது காகிதத் தட்டு, கோப்பை உள்ளிட்ட பொருள்களாகவோ உருவாக்க முடியும். எனவே இவற்றையும் பிரிக்க வேண்டும்.

    8.எண்ணெய், கிரீஸ், அமிலம், வேதியியல் பொருள்கள் கொண்ட குப்பைகளை அந்தத் துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டே கையாளப் பணிக்கலாம்.

    9. வகை வாரியான குப்பைகளை மண்டலம் வாரியாகச் சேகரித்து, தமிழகம் முழுவதும், அதற்கு வெளியிலும் அனுப்புவதற்கும் மறுசுழற்சி செய்வதற்கும் மிகப் பெரிய வலைப்பின்னல் தேவை. தனி நபர்கள் இதில் ஆங்காங்கே பங்கெடுக்கலாம். ஆனால், ஒரு மையமான அமைப்பின் கீழ் இதை ஒருங்கிணைத்து, போர்க்கால நடவடிக்கையாகக் களத்தில் இறங்க வேண்டும். அரசு அமைப்பாகவோ, தனியார் அமைப்பாகவோ இருக்கலாம். ஆனால், மூன்று ஷிப்டில் இதில் ஆட்கள் வேலை செய்ய வேண்டும். அவர்களுக்குத் தேவையான ஊதியமும் கொடுக்கலாம். இதற்கெனத் தனியே நன்கொடைகளும் கோரலாம்.

    10.உடனடியாக உரியவர்களைத் தற்காலிகமாகவேனும் தேர்ந்தெடுத்து, பயிற்சி அளித்து, களமிறங்கச் செய்ய வேண்டும். அவர்களுக்கு அவ்வப்போது எழும் ஐயங்களுக்கு உடனுக்குடன் விடையளிக்கவும் சிக்கல்களை அங்கேயே தீர்க்கவும் இவர்களிடைய தொலைத்தொடர்புக் கருவிகள் வலுவாக இருக்க வேண்டும். இந்த முயற்சிக்குப் பெரும் எண்ணிக்கையில் வாகனங்களும் இதர கருவிகளும் தொழில்நுட்பங்களும் தேவை. இதற்கென உலக நாடுகளின் ஆலோசனைகளையும் பெறலாம்.

    இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தமிழகத்தின் நீர்வழிகள், வடிகால், பாதாளச் சாக்கடை… என அனைத்தையும் சீரமைக்க வேண்டும். சுத்தமாக ஓடும் கூவத்தில் இனியும் கழிவுகள் கலக்காமல் பேண வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி, தொலைநோக்கோடு திட்டங்கள் தீட்ட வேண்டும். குப்பைகளையும் கழிவுகளையும் சிறந்த முறையில் கையாளுவதற்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். இவை அனைத்தையும் பொதுநல நோக்குடன், சிரத்தையுடன் செய்வதற்கு உரிய பொறுப்பும் பொறுமையும் அனைவருக்கும் வேண்டும். இவை இப்போதைய உடனடி, அவசரத் தேவை.

    Share