-எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

உட்கட்சிப்  பூசல்களை உடனடியாய் நிறுத்திவிட்டு
எக்கட்சி ஆயிடினும் எல்லோர்க்கும் உதவிடுங்கள்!
எக்கவுண்டன்ட் என்ஜினியர் ஏழைபணக் காரரென்று
எல்லோரும் வெள்ளத்தில் இடர்ப்பட்டே நிற்கின்றார்!

வில்லனொடு கதாநாயகன் வீட்டிலேயும் வெள்ளம்தான்!
அல்லல் பட்டுநிற்கின்றார் அனைவருமே மனிதர்தாம்!
நல்லிதயம் கொண்டபலர் நாடிவந்து உதவுகின்றார்
வெள்ளமது விரைந்தகல வேண்டிடுவோம் யாவருமே!

உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் ஒன்றானார் வெள்ளத்தால்
ஓலைக் குடிசையொடு  ஓட்டுவீடும் ஒன்றாச்சு!
மதமுள்ள மனிதரெல்லாம் மழைவெள்ளம் நீந்துகின்றார்
மதம்கடந்த சேவைதனை மழைவெள்ளம் உணர்த்தியது!

ஓடுகின்ற உதிரத்திலே ஒழுகிநிற்கும் கண்ணீரிலே
தேடிநின்று பார்த்தாலும் தெரிவதில்லை சாதியென்பர்!
வீதிதோறும் வெள்ளம்வந்து விபரீதம் பெருகியதால்
சாதியெலாம் வெள்ளமதில் சாய்ந்துவிட்ட நிலைகண்டோம்!

குறைசொல்லல் தவிர்த்துவிட்டு குறையகற்ற   முனைந்திடுங்கள்!
துறைதோறும் உள்ளவர்கள் தூய்மையுடன் செயற்படுங்கள்!
இறைவனது சோதனையே இதுவென்று எண்ணிநின்று
எங்களால் இயன்றவரை எல்லோர்க்கும் உதவிடுவோம்!

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.