குப்பைகள் – பேரிடர்க் காலத்தின் சாதக அம்சம்

அண்ணாகண்ணன்

kuppai_2646380f_2647163f

தமிழகத்தில் வெள்ளம் வடிந்த பின்னும் குப்பைகளை அகற்றுவது, ஒரு பிரமாண்டமான பணி. அதிலும் இந்தக் குப்பைகளை எங்கே கொண்டு கொட்டுவது என்பதும் கேள்விக்குறி. ஏற்கெனவே உள்ள குப்பை மலைகள், சாதாரண காலத்திலே சேரும் அன்றாடக் குப்பைகளுக்கே திணறுபவை. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வண்டி வண்டியாக வெளியேறும் குப்பைகளை இங்கேயே கொட்டினால், குப்பை மலையின் சுற்றுவட்டம் தான் விரியும். அல்லது ஆங்காங்கே புதிய புதிய குப்பை மலைகளை உருவாக்குவதும் சரியான தீர்வு இல்லை. இவையெல்லாம் மேன்மேலும் சுற்றுச்சூழல், சுகாதாரம் எனப் பல்வேறு சிக்கல்களை வளர்க்கக் கூடியவை. அடுத்தொரு கனமழை பெய்தால், இந்தக் குப்பைகள் கரைந்தோடி வருவது ஒரு புறம் இருக்க, இவற்றின் துர்நாற்றமும் கொசுப் பெருக்கமும் இதர கேடுகளும் வாழ்வை நரகமாக்குபவை.

இந்நிலையில் இப்பணியில் ஈடுபடும் பொதுமக்களும் சுகாதாரத் துறை ஊழியர்களும் தன்னார்வலர்களும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1.இரும்பு, மரம், பிளாஸ்டிக், கண்ணாடி, துணிகள், மின்னணுப் பொருள்கள், சமையல் கழிவுகள், காகிதங்கள்… என வகை வாரியாகக் குப்பைகளைப் பிரிக்க வேண்டும். இவற்றில் எந்தெந்தப் பொருள்களைக் கழுவி, அலசி, துவைத்துப் பயன்படுத்த முடியுமோ அவற்றை எல்லாம் தனியே பிரிக்க வேண்டும்.

2.நம் வீட்டில் பயன்படுத்த முடியாதவற்றையும் பழைய சாமான் கடையிலோ, உதிரி பாகங்கள் சந்தையிலோ இடலாம். காசுக்காக இல்லாவிட்டாலும் மறுபயன்பாட்டை நோக்கமாக வைத்தாவது இதைச் செய்ய வேண்டும். இதற்குக் கட்டுச் செலவு, வண்டிச் செலவு, ஏற்றி இறக்கும் செலவு ஆகியவை இருப்பினும் இதற்கெனத் தனியே பணிக் குழுக்கள் இயங்க வேண்டிய தேவை உள்ளது.

3.இந்தக் குப்பைகளிலிருந்து பேரளவு உரம் தயாரிக்கும் வாய்ப்புகளை உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும். அனைத்துக் குப்பைகளையும் சென்னையிலும் கடலூரிலும் வைத்து உரமாக்கி, பிற ஊர்களுக்கு அனுப்ப முடியாது. எனவே, இதற்கென உரிய நெறிமுறைகளை உருவாக்கி, தமிழகம் முழுவதும் இந்தக் குப்பைகளைப் பிரித்து அனுப்பி, ஆங்காங்கே உரமாக்கி, அந்தந்த ஊர்களிலேயே பயன்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இது உரச் செலவைக் குறைப்பதோடு, வேலை வாய்ப்பையும் வழங்கும். குப்பைகளை முறையாகக் கையாண்டால், பேரிடர்க் காலத்தின் சாதகமான அம்சமாக இதை மாற்றிவிட இயலும். ஊரை ஒட்டுமொத்தமாகத் துப்புரவாக்கி, புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கு உரிய நல்வாய்ப்பாகவும் இதைப் பயன்படுத்த இயலும். சுயநலத்துடன் நம் வீட்டுக்கு வெளியில் மட்டும் குப்பையைத் தள்ளினால், அது மீண்டும் இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும். சாதகமாகவா, பாதகமாகவா? குப்பைகளை எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்பது நம் கரங்களில்தான் உள்ளது.

4.மரம், இரும்பு, பிளாஸ்டிக் ஆகியவற்றை முறையாகக் கையாண்டால், மறுசுழற்சி செய்ய முடியும். துணிகளையும் சோபா, மெத்தை, தலையணைகளிலிருந்து பஞ்சு, ஸ்பாஞ்சு ஆகியவற்றையும் காயவைத்து மறுசுழற்சி செய்யலாம். வெயில் பலமாக அடிக்கும் வரை இவற்றை உலர வைக்க, தக்க தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். இதற்கெனப் புத்தாக்கப் போட்டிகளை நடத்துவதும் பயன் அளிக்கும்.

5.சமையல் கழிவுகளைத் திடக் கழிவு, திரவக் கழிவு என்ற வரிசையில் பிரிக்கலாம். இவற்றைச் சாக்கடையில் தள்ளினால், மேலும் அவை அடைத்துக்கொள்ளும். எனவே, பாலிதீன் பைகள் போன்றவற்றில் இவற்றை அடைத்து, உரிய இடங்களுக்குக் கொண்டு சென்று, உரமாக்க முயல வேண்டும். இதில் நாற்றம், சுகாதாரம், உடல்நலன் உள்ளிட்ட சிக்கல்களுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.

6.மின்னணுக் கழிவுகளை மிகுந்த எச்சரிக்கையுடன் அப்புறப்படுத்த வேண்டும். இவற்றுள் எவ்வெவற்றை மறுசுழற்சி செய்ய முடியும் எனக் கவனிக்க, அனுபவம் வாய்ந்த குழுவினரை ஈடுபடுத்த வேண்டும். சிடி, பிளாப்பி, கேசட், கணினி, செல்பேசி, பென்டிரைவ், ஹார்ட் டிரைவ் ஆகியவற்றிலிருந்து தரவுகளைப் பிரித்தெடுக்க இயலுமா என்றும் ஆராய வேண்டும்.

7.நீரில் மூழ்கிய புத்தகங்களை, காகிதங்களை உலர வைத்துப் பயன்படுத்துவது பெருமளவு சாத்தியமில்லை. ஆனால், இவற்றைக் கோணிகளில் கட்டி, ஓரிடத்தில் சேர்த்து, மீண்டும் கூழாக்கி, மீண்டும் காகிதமாகவோ, அல்லது காகிதத் தட்டு, கோப்பை உள்ளிட்ட பொருள்களாகவோ உருவாக்க முடியும். எனவே இவற்றையும் பிரிக்க வேண்டும்.

8.எண்ணெய், கிரீஸ், அமிலம், வேதியியல் பொருள்கள் கொண்ட குப்பைகளை அந்தத் துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டே கையாளப் பணிக்கலாம்.

9. வகை வாரியான குப்பைகளை மண்டலம் வாரியாகச் சேகரித்து, தமிழகம் முழுவதும், அதற்கு வெளியிலும் அனுப்புவதற்கும் மறுசுழற்சி செய்வதற்கும் மிகப் பெரிய வலைப்பின்னல் தேவை. தனி நபர்கள் இதில் ஆங்காங்கே பங்கெடுக்கலாம். ஆனால், ஒரு மையமான அமைப்பின் கீழ் இதை ஒருங்கிணைத்து, போர்க்கால நடவடிக்கையாகக் களத்தில் இறங்க வேண்டும். அரசு அமைப்பாகவோ, தனியார் அமைப்பாகவோ இருக்கலாம். ஆனால், மூன்று ஷிப்டில் இதில் ஆட்கள் வேலை செய்ய வேண்டும். அவர்களுக்குத் தேவையான ஊதியமும் கொடுக்கலாம். இதற்கெனத் தனியே நன்கொடைகளும் கோரலாம்.

10.உடனடியாக உரியவர்களைத் தற்காலிகமாகவேனும் தேர்ந்தெடுத்து, பயிற்சி அளித்து, களமிறங்கச் செய்ய வேண்டும். அவர்களுக்கு அவ்வப்போது எழும் ஐயங்களுக்கு உடனுக்குடன் விடையளிக்கவும் சிக்கல்களை அங்கேயே தீர்க்கவும் இவர்களிடைய தொலைத்தொடர்புக் கருவிகள் வலுவாக இருக்க வேண்டும். இந்த முயற்சிக்குப் பெரும் எண்ணிக்கையில் வாகனங்களும் இதர கருவிகளும் தொழில்நுட்பங்களும் தேவை. இதற்கென உலக நாடுகளின் ஆலோசனைகளையும் பெறலாம்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தமிழகத்தின் நீர்வழிகள், வடிகால், பாதாளச் சாக்கடை… என அனைத்தையும் சீரமைக்க வேண்டும். சுத்தமாக ஓடும் கூவத்தில் இனியும் கழிவுகள் கலக்காமல் பேண வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி, தொலைநோக்கோடு திட்டங்கள் தீட்ட வேண்டும். குப்பைகளையும் கழிவுகளையும் சிறந்த முறையில் கையாளுவதற்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். இவை அனைத்தையும் பொதுநல நோக்குடன், சிரத்தையுடன் செய்வதற்கு உரிய பொறுப்பும் பொறுமையும் அனைவருக்கும் வேண்டும். இவை இப்போதைய உடனடி, அவசரத் தேவை.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “குப்பைகள் – பேரிடர்க் காலத்தின் சாதக அம்சம்

 1. மிக நல்ல கட்டுரை. மக்களின், குறிப்பாக மக்கள்நலம் பேணும் பொறுப்பாளர்களின், கருத்தைக் கவர்ந்து செயல்திறமையைத் தூண்டிவிடும் பதிவு. பொறுப்பான பதவிகளில் உள்ளவர்கள் கவனிக்கவேண்டும்.

  இங்கே அமெரிக்காவில் மக்களின் பயன்பாட்டுக் கழிவுகளை அப்புறப்படுத்துவதும் சுழற்சிமுறைகளைப் பயன்படுத்தி அவற்றின் பயனை மீட்சி செய்வதும் மிகவும் சிறப்பாக நடப்பதைப் பார்த்து வியப்பேன்.

  ஒவ்வொரு வீட்டுக்கும், அடுக்குமாடிக்கட்டிடத்துக்கும், அலுவலகத்துக்கும் மூன்றுவகைப் பெட்டிகளை/தொட்டிகளை நகராட்சி வழங்குகிறது. அதோடு, ஒவ்வொரு அலுவலகத்திலும் காகிதங்களைச் சுக்குநூறாகக் கிழிக்கப் பல கருவிகள் உண்டு. தனியார் வீடுகளிலும் இவற்றைப் பார்க்கலாம். சமையலறையிலேயே நீர்த்தொட்டியின் ஒரு பகுதியாக இருக்கும் அரைவைப்பொறி சிறுசிறு கழிவுகளைக் கூழாக்கி வெளியேற்றி, சரியான வடிகால் உள்ள சாய்க்கடையில் கொண்டுசேர்த்துவிடும். இன்ன பிற அமைப்புகளே ஒரு நகரத்தின் துப்புரவுக்கு உதவுகின்றன. எங்கள் ஊரில் “ப்லாஸ்டிக்” பயன்பாட்டைக் குறைத்துவருகிறார்கள்.
   
  பிறநாடுகளைப் பார்த்து எதையெதையோ கற்றுக்கொள்ளும் தமிழகம் … மனிதக்கழிவுகளைச் சரியான முறையில் அப்புறப்படுத்தும் கலையைக் கற்றுக்கொள்ளவில்லையே, பாவம்.  🙁

  http://www.letsgrammar.org
  http://viruntu.blogspot.com
  http://mytamil-rasikai.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *