மழைப்பேச்சு!
ஷைலஜா
யாகங்கள் பல செய்தீர் உங்கள்மன
சோகம் நீங்கிடவேண்டுமென்றே
தாகம் தணிக்க வந்தேன் தவறா?
கண்ணுக்கு எட்டாத்தொலைவில்
காணாபொருள்போலிருந்தேன்
காட்சிகொடுத்ததும் தவறா?
கோடிக்குரல் அழைத்தால்
தேடிவருவது தெய்வகுணம்
ஓடிவந்ததும் தவறா?
என்பாதைஅத்தனையும்
எங்கும் அடைத்துவிட்டீர்
எப்படியோ வந்ததும் தவறா?
என்குணம் எதிலும் அடங்கும்
என்பது தெரிந்திருந்தும்
ஏரிகுளங்களை அழித்தது தவறு
இல்லாத பொழுதினில் ஏங்குவதும்
வருகின்றபொழுதினில் சேமிக்காததும்
வாழும் மனிதன் செய்யும் தவறு
இயற்கையின் கொடைதன்னை
இயன்றவரை அழிப்பதுதான்
இன்றைய மனிதனின் தவறு
பொறுத்ததுபோதுமென்றுதான்
பொங்கி எழுந்து வந்தேன்
புரிந்ததா உங்கள் தவறு?
இல்லாத பொழுதினில் ஏங்குவதும்
வருகின்ற பொழுதினில் சேமிக்காததும்
வாழும் மனிதனின் வழக்கம் இது !
இயற்கையின் கொடை தன்னை
இயன்ற வரை அழிப்பது தான்
இன்றைய மனிதனின் பழக்கம் இது !
பொறுத்தது போது மென்றுதான்
பொங்கி எழுந்து வந்தேன்
புரிந்ததா மனிதா பாடம் ?
நல்ல கவிதை, நாட்டுக்குக் கவிதை ஷைலஜா.
சி. ஜெயபாரதன்
மிக்க நன்றி திரு ஜெயபாரதன். தங்களின் பதில் கவிதையும் சிறப்பு.