Month: October 2015

  • சிவபிரதோஷம்

    -மீ.விசுவநாதன்

    கங்கைதனைக் காவிரியைக் கவிபாடும் நல்ல
    -கற்கண்டுப் பொருநைநதி நர்மதையும் என்றும்
    பொங்கிவரும் யமுனையுடன் துங்கபத்ரா  பண்பும் siva
    -பூரித்து ஒன்றாகப் பூகோளம் போற்ற
    சங்கமிக்கும் காலத்தைச் சாத்தியமாய் ஈசா
    -சடக்கென்று செய்வாயே! சரித்திரத்தில் நற்பேர்
    தங்கிடவே வேண்டாமா! தரணிக்கே தண்ணீர்
    -தந்தவனாய் நீயிருக்கும் தருணமிது ஐயா!

    திங்களினைச் சுமந்தவனே! தீகண்ணில் வைத்துத்
    -தீயகாம எண்ணத்தை எரிப்பவனே! உன்னை
    எங்களிலே ஒருவனாக எண்ணித்தான் பூமி
    -இனிதாக இளமையுடன் எப்போதும் வாழப்
    பங்குனதைக் கேட்கின்றேன்! பசுமைக்கு வித்தே!
    -பாமரனின் நற்சொத்தே! பரமசிவ வெள்ளம்
    எங்குமின்று ஒளிவீசி ஏகாந்தம் காணும்
    -இன்பத்தை நீயின்றி எவர்தருவார் சொல்லு ?

     (எண்சீர் விருத்தம் – அரையடி வாய்பாடு: காய்,காய்,காய், தேமா)

     

     

     

    Share
  • அறிந்துகொள்வோம் – 19 (மாமன்னர் அசோகர்)

    -மேகலா இராமமூர்த்தி

    யுத்தத்தில் மலர்ந்த புத்தம்!

    நம் இந்தியத் துணைக்கண்டத்தின் வலிமைவாய்ந்த பேரரசாக முதன்முதலில் திகழ்ந்தது மௌரியப் பேரரசே ஆகும். கங்கைச் சமவெளியில், இன்றைய பீகார், வங்காளம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய அன்றைய மகத நாட்டில் முகிழ்த்த இப்பேரரசு தோற்றம்பெறுவதற்குப் பெரிதும் காரணமாயிருந்தவர் அரசியல் தந்திரங்களில் வல்லவரான சாணக்கியர் (கௌடில்யர் என்றும் கூறுவர்) ஆவார். மௌரியர்களுக்கு முன்பு மகதத்தை ஆண்டுவந்த நந்தவம்சத்தின் அரசனான தனநந்தனுக்கும் அவனுடைய அமைச்சராயிருந்த சாணக்கியருக்கும் ஏற்பட்ட முரண்பாட்டினால், நந்த வம்சத்தையே கருவறுக்க முடிவுசெய்தார் சாணக்கியர்.

    ஒருநாள் தட்சசீலத்தை (It was in Rawalpindi District, Punjab) நோக்கிச் சென்றுகொண்டிருந்த சாணக்கியர், தாம் செல்லும்வழியில் காட்டில் வேட்டையாடிக்கொண்டிருந்த ஓர் இளைஞனைக் கண்டார். அவனிடம் காணப்பட்ட வீரம் அவர் உள்ளங் கவர்ந்தது. அவனை வைத்தே நந்த வம்சத்தின் வரலாற்றை முடித்துவிட எண்ணிய அவர், அவ்விளைஞனைத் தன்வயப்படுத்தி, நந்த அரசனுக்கு எதிராகப் போர் தொடுக்கவைத்து அச்சாம்ராஜ்யத்தின் அழிவுக்கு அடிகோலினார். பின்பு, தன் எண்ணப்படியே அந்த இளைஞனை மகத நாட்டரசனாக்கினார். அந்த இளைஞன் வேறுயாருமில்லை! மௌரியப் பேரரசைத் தோற்றுவித்த முதலாம் சந்திரகுப்தனே அவன்! (’மௌரியர்’ என்ற பெயர் சந்திரகுப்தனின் தாய் ’முரா’வின் பெயரடிப்படையில் அமைந்தது என்று கூறப்படுகின்றது.)

    ஓர் அரசனுக்குத் தேவையான சகல கலைகளையும் சந்திரகுப்தனுக்குக் கற்பித்த சாணக்கியர், அவனைப் பெருவீரனாகவும் அறிஞனாகவும் மாற்றினார். அரசின் நிலப்பரப்பை விஸ்தரித்தார். அத்தகைய புகழ்வாய்ந்த மௌரிய வம்சத்தில் சந்திரகுப்தனின் வழித்தோன்றலான பிந்துசாரனின் மகனாகத் தோன்றியவர்தான் மாமன்னர் அசோகர்.

    asoka’அசோகன்’ என்ற சொல்லுக்குச் ’சோகமற்றவன்’ அல்லது ’துயரமற்றவன்’ என்பது பொருள்.   கி.மு. 304-இல் பிறந்தவர் என்று (தோராயமாகக்) கணிக்கப்படும் அசோகர், தம் பெயருக்கேற்பவே தாம் துயரமற்றவராய்த் திகழ்ந்து மற்றவர்க்கே துயரத்தைப் பரிசளித்துவந்தார். தம் தந்தை பிந்துசாரரின் பல (மனைவியரின்) பிள்ளைகளையும் கொன்றுகுவித்து அவர்களின் அரத்த ஆற்றில் நீந்தித்தான் ஆட்சிபீடத்தை அவர் கைப்பற்றினார் என்கின்றனர் வரலாற்றறிஞர்கள். அதுபோல், இளவயதில் சிங்கம் ஒன்றைக் கட்டையால் அடித்துக்கொன்ற அவருடைய சாகசச் செயலும் வியந்துபேசப்படும் ஒன்றாகும். (புலியை முறத்தால் அடித்த மறத்தமிழச்சியின் வீரச்செயல் இத்தருணத்தில் நம் நினைவிற்கு வருகின்றது அல்லவா!).

    கி.பி. 7—ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வருகைபுரிந்த சீன யாத்திரிகர் யுவான்சுவாங் (Xuanzang) அசோகரின் ஆரம்பகால ஆட்சியில் குற்றவாளிகளின் நிலையைப் பின்வருமாறு வருணிக்கிறார்:

    தம் ஆட்சியில் குற்றவாளிகளை அசோகர் தண்டித்தமுறை கற்பனைக்கு எட்டாதவகையில் மிகக் கொடூரமானது; தலைநகரான பாடலிபுத்திரத்தின் (இன்றைய பாட்னா) வடக்கே கைதிகளைச் சித்திரவதை செய்வதற்கென்றே அழகிய மாளிகை ஒன்றை அமைத்திருந்தார் அசோகர்; வெளித்தோற்றத்தில் சொர்க்கலோகம்போல் காட்சியளித்த அம்மாளிகை உண்மையில் கைதிகளுக்கு நரகமாகவே இருந்ததால் அதைச் ’சொர்க்க நரகம்’ (Paradisal Hell) என்றே அழைக்கலாம்” எனக் குறிப்பிடுகின்றார் யுவான்சுவாங்.

    இவ்வாறு கண்டோர் நடுங்கும்படிக் கொடுங்கோலாட்சி செலுத்தி, ’தன்னை ஒப்பாரும் மிக்காரும் இல்’ என்று இறுமாந்திருந்த அசோகரின் பார்வை, மகதத்துக்கு அதுவரை அடிபணியாதிருந்த கலிங்கத்தின்மீது (Present day states of Odisha and North Coastal Andra Pradesh) விழுந்தது. அதன் கொட்டத்தை அடக்கி அடிப்படுத்த விரும்பிப் போர்முரசு கொட்டினார். உக்கிரமாக நடைபெற்ற அப்போரில் கலிங்க வீரர்கள் இலட்சக்கணக்கானோர் மடிந்தனர்; மீதமிருந்தோர் சிறைப்பட்டனர் என்ற விவரங்கள் அசோகரின் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளதாய் அறிகின்றோம்.

    கலிங்கப்போரில் அசோகர் வெற்றித்திருமகளைக் கைப்பற்றியபோதினும், வீரர்களின் பிணக்காடாய்க் காட்சியளித்த போர்க்களத்தைக் கண்ட அவருடைய கொடூர உள்ளமும் கலங்கித்தான் போனது. அக்கோரக்காட்சிகள் அவருக்குள் மிகப்பெரிய மனமாற்றத்தை நிகழ்த்தத் தொடங்கின. “ஐயோ! என்ன காரியம் செய்துவிட்டேன்? இத்துணை உயிர்களைக் கொன்றுவித்தது எனக்குக் கிடைத்த வெற்றியா? இல்லை தோல்வியா? அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் அழித்த இச்செயலுக்குப் பெயர்தான் வீரமா? அந்தோ! தந்தையரையும், கணவரையும், பிள்ளைகளையும் போரில் பறிகொடுத்துக் கதியற்றுக் கலங்கிநிற்கும் இப்பெண்களுக்கு நான் என்ன பதில் சொல்லப்போகிறேன்?” என்றெல்லாம் கேள்விக்கணைகள் அவரைத் துளைக்கத் தொடங்கின.

    கழிவிரக்கமும் தன்மீதே அளவற்ற வெறுப்பும் ஏற்பட்டது அவருக்கு. ”போதும்! மறத்தொழில் செய்து நான் நாடுபிடித்தது போதும்! இனியேனும் அறத்தின்பால் திரும்புகின்றேன்!” என்று தீர்மானித்து, கருணையே வடிவான புத்தர்பிரான் காட்டிச்சென்ற அருள்நெறியே இனியென் வாழ்க்கை நெறி!’ எனத் தெளிந்தார் அசோகர் என்கிறது அவரது வாழ்க்கை வரலாறு.

    இவ்விடத்தில் நமக்கோர் ஐயம் எழுகின்றது. அசோகரின் பாட்டனாராகிய சந்திரகுப்த மௌரியர், தம் வாணாளின் இறுதியில் சமணத்துறவியாகி கர்நாடகத்திலுள்ள சிரவணபெலகுலாவில் தங்கி உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்தார்; அசோகரின் தந்தை பிந்துசாரரோ ஆசீவகத்தின் ஆதரவாளராய் இருந்தார். ஆனால் அசோகர்…தம் தகப்பனாரும் பாட்டானாரும் பின்பற்றிய அறநெறிகளில் ஒன்றையும் தேர்வுசெய்யாது (திடீரென்று) பௌத்தத்தின்பால் ஈர்க்கப்பட்டதேன்? இதனை ஆராயும்போதுதான் ஓர் உண்மை நமக்குப் புலப்படுகின்றது.

    ஆம்! அசோகரைப் பௌத்தத்தின்பால் திருப்பியது கலிங்கப்போரின் கோரக்காட்சிகள் மட்டுமல்ல! ஓர் பௌத்தமதப் பெண்மணியோடு அவருக்கு ஏற்பட்ட ஆழமான நட்பும்தான்!

    அந்தப் பெண்மணி யார் என்று அறிந்துகொள்ளும் ஆவல் எழுகிறதல்லவா?

    அந்தப் பெண்மணியின் பெயர் ‘காருவகி’’ (Karuvaki or Karuwaki) என்பதாகும். மீனவ குலத்தில் தோன்றிய காருவகி, பௌத்தமதக் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு அம்மதத்தில் சேர்ந்து துறவியானவர். இவருக்கும் மன்னர் அசோகருக்கும் ஏற்பட்ட நட்பால், இப்பெண்ணின் தருமோபதேசங்களைக் கேட்கக்கூடிய அரிய வாய்ப்பு அசோகருக்கு ஏற்படுகின்றது. அஃது அவருக்குள் நிகழ்த்திய மிகப்பெரிய மனமாற்றமே, அவரை உயிர்களை இரக்கமின்றி அழித்தொழிக்கும் யுத்தத்தை விட்டுவிட்டு அன்பையும், உயிரிரக்கத்தையும் போதிக்கும் புத்தத்துக்கு மடைமாற்றியது என்று தெரியவருகின்றது. பௌத்த மதத்தில் சேர்ந்த அசோகர், பின்பு காருவகியை மணம்புரிந்துகொள்கின்றார். இப்பெண்ணரசியின் வழிகாட்டுதலின்படியே அசோகர் தம் நாடுமுழுவதும் பௌத்தத்தைப் பரப்பினார்.

    நாம் வரலாற்றுப் பாடத்தில் படிக்கின்ற ’அசோகர் சாலையின் இருமருங்கிலும் கனிதரும் மரங்களை நட்டார்; ஊரெங்கும் குளங்களை வெட்டினார்’ எனும் அறச்செயல்களுக்கெல்லாம் வினையூக்கியாய் (catalyst) விளங்கியவர் இந்தக் காருவகியே. நாடெங்கும் பௌத்தப்பள்ளிகள் நிறுவி, புத்தரின் கொள்கைகளைப் பரப்ப அளவற்ற நிதியுதவி நல்கினார் இப்பெண்மணி. தம் மனைவியின் அறச்செயல்களையும், தொண்டுகளையும் தமக்குரியதாய் அறிவித்துக்கொள்ளாமல் மனைவியின் பெயராலேயே அவற்றைக் கல்வெட்டுக்களில் பொறிக்கச்செய்திருக்கின்றார் அசோகர்; இஃது அவருடைய பெருந்தன்மைக்குச் சான்றாகும்!

    மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்குகளுக்கும் மருத்துவமனைகளைக் கட்டிய அசோகர், ஏழைகளின் பசிப்பிணி போக்குதற்கு அன்னசத்திரங்களையும் அமைத்தார். கட்டடக்கலையில் ஆர்வம் மிகக்கொண்டிருந்த அவர், மலைகளைக் குடைந்து கோயில்களை நிர்மாணித்தார்; ஆயிரக்கணக்கில் ஸ்தூபிகளை எழுப்பினார். ’சாரநாத்’ எனுமிடத்தில் அவர் எழுப்பிய ஸ்தூபியில் காட்சியளிக்கும் நான்கு சிங்க வடிவங்களை நம் இந்திய அரசு தன் இலச்சினையாகப் பயன்படுத்திவருகின்றது; அதுபோல், அச்சிங்கங்களின் கீழிருக்கும் 24 ஆரங்களைக் கொண்ட அசோகச் சக்கரத்தையே இந்திய தேசியக்கொடியின் மையத்தில் கம்பீரமாய்ப் பொறித்திருக்கின்றது. இவையெல்லாம் நாமறிந்த செய்திகளே.

    உலகெங்கும் பௌத்தம் தழைக்கவேண்டும் எனும் பேரவா கொண்ட அசோகர், தமிழகம், இலங்கை போன்ற பகுதிகளுக்குத் தம் மைந்தரான மகேந்திரனையும், (சிலர் இவரை அசோகரின் தம்பி என்பர்) மகள் சங்கமித்திரையையும் அனுப்பினார் என்று இலங்கையின் அரசவரலாறு கூறுகின்ற ’மகாவம்சம்’ எனும் நூல் நவில்கின்றது. ஆகவே, அசோகரின் ஆட்சிக் காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டளவிலேயே பௌத்தம் தமிழகத்திற்கு வந்துவிட்டது என்பது தெரியவருகின்றது. இதே காலகட்டத்தில் அசோகரின் தீவிர முயற்சியால் பௌத்தம் கடல்கடக்கும் வாய்ப்பையும் பெற்றுச் சீனம், பர்மா, தாய்லாந்து போன்ற அயல்நாடுகளிலும் பரவிற்று.

    கொடுங்கோலராய்த் தம் ஆட்சியைத் தொடங்கிய அசோகர், பின்பு மாபெரும் அருளாளராய் மாறி, ’யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று புத்தரின் அறக்கொள்கைகளை உலகெங்கும் பரப்பினார்; அன்புநெறியை அகிலமெங்கும் தழைக்கச் செய்தார்.

    ”உலக வரலாற்றில் எத்தனையோ மன்னர்கள் தங்களைத் தாங்களே மாட்சிமை பொருந்தியவர், மாமன்னர் என்றெல்லாம் அழைத்துக்கொண்டனர். அத்தகைய மாட்சிமை பொருந்திய மாமன்னர்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலம்மட்டுமே மின்னி மறைந்துவிட்டனர்; ஆனால், ஒரேயொருவர் மட்டுந்தான் வரலாறு உள்ளவரை மறையாத நட்சத்திரமாக ஒளிவீசிக் கொண்டிருப்பார்; அவர்தாம் அசோகர்!” என்று ஆங்கில எழுத்தாளர் ஹெச். ஜி. வெல்ஸ் (Herbert George Wells) தன்னுடைய ’The Outline of History’ எனும் நூலில் அசோகருக்குச் சூட்டியுள்ள புகழாரம் இங்கே குறிப்பிடத்தக்கது.

    இன்றளவும் நினைந்து போற்றப்படும் அசோகரின் அகிம்சை நெறியும், பௌத்த சமயத்தொண்டுகளும், திருவாளர் வெல்ஸின் கூற்று முற்றிலும் உண்மையே என்பதை அறுதியிட்டு உறுதிகூறுகின்றன.

     

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: மச்சேற்றி ஏணி களைவு

    எய்ப்புழி வைப்பாம் எனப்போற்றப் பட்டவர்
    உற்றுழி ஒன்றுக் குதவலார், பைத்தொடீஇ!
    அச்சிடை யிட்டுத் திரியின், அதுவன்றோ
    மச்சேற்றி ஏணி களைவு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ‘எய்ப்புஉழி வைப்பாம்’ எனப் போற்றப்பட்டவர்
    உற்றுழி ஒன்றுக்கு உதவலராய்,-பைத்தொடீஇ!-
    அச்சு இடையிட்டுத் திரியின், அது அன்றோ,
    மச்சு ஏற்றி, ஏணி களைவு.

    பொருள் விளக்கம்:
    சோதனைக்காலத்தில் உதவும் வைப்புநிதி போலக் காப்பாற்றுவார் எனக் கருதப்பட்ட உற்றார், நமக்கு இடையூறு நேர்ந்த பொழுது ஒருவகையிலும் உதவாமல் கைவிடும் செயலானது, பசும்பொன்வளையல்களை அணிந்த பெண்ணே! அச்சம் கொண்டு மறுத்துவிடும் அவரதுசெயலானது அல்லவோ, மாடியில் ஏற்றிவிட்ட பின்னர் இறங்க வழியின்றி ஏணியை அகற்றி விடுவதற்கு ஒப்பானது.

    பழமொழி சொல்லும் பாடம்:
    உதவுவேன் என நம்பவைத்து, உதவி கிடைக்கும் என நம்பி வந்த ஒருவரை, அவர் இடருற்ற நேரத்தில் ஏமாற்றாது உதவுவதே நற்பண்பு கொண்ட ஒருவரின் கடமை. இப்பண்பு இல்லாத, இடருற்ற காலத்தில் உதவாத ஒருவரின் உறவு இருப்பதைவிட இல்லாதிருப்பதே நலம் என்பதை வள்ளுவர்,

    அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
    தமரின் தனிமை தலை. (குறள்: 814)

    போர்க்களத்தில் உதவ வேண்டிய முக்கியமான நேரத்தில், உதவாது கீழே தள்ளிவிட்டு ஓடிவிடும் மடத்தனம் கொண்ட குதிரையைப் போன்றவர் உறவை பெற்றிருப்பதைக் காட்டிலும் தனித்திருப்பதே சிறப்பு என்று கூறுகிறார்.

    Share
  • வளவன் கனவு (19)

    சு. கோதண்டராமன்

    19 நியாயசபை

    vallavan-kanavu1

    அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத்

    தெங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதேசெங்கண்

    திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த

    சிரமாலை தோன்றுவதோர் சீர்.

    -அம்மையார்

      வைணவர்களும் தீக்ஷிதர்களும் தங்கள் தங்கள் கொள்கையில் விடாப்பிடியாக நின்றனர். விண்ணகர வளாகத்திலும் தெருவிலும் தோப்புகளிலும் அடிக்கடி கலவரங்கள் நடைபெற்றன. ஒரு கட்டத்தில் இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டபோது இரு திறத்தாரும் அரசரிடம் முறையிட்டனர்.

    அரசர் செங்கணான் ஆலோசித்தார். இப்பொழுதுதான் சமணம் அழிந்து நம் பழம் தமிழ்ச்சமயத்துக்குப் புத்துயிர் வந்துகொண்டிருக்கிறது. இப்பொழுது நம் சமயத்திற்குள்ளேயே பூசல் ஏற்பட்டுவிட்டதே என்று கலங்கினார். அவருடைய முழுப்பெயர் செங்கண் திருமாலைப் பங்குடையான். இது இறைவனுக்கு அம்மையார் சூட்டும் பெயர்களில் ஒன்று. பெயருக்கேற்றபடி திருமாலும் சிவனும் ஒரே உருவின் இரு கூறுகள் என்ற உண்மையை உணர்ந்தவர் அவர். மாலும் அரனும் ஒன்றே என்பதை மக்களுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று யோசித்தார். தன் தம்பி உத்தம சோழனை அழைத்தார். “நீ நமது முதல் அமைச்சரையும் ஆஸ்தான வேத பண்டிதரையும் அழைத்துக் கொண்டு தில்லை சென்று இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வா. அங்கு நிலைமை மிகக் கொந்தளிப்பாக இருப்பதாகத் தெரிகிறது. எனவே உங்கள் பாதுகாப்புக்கு நூறு வீரர்களையும் அழைத்துச் செல். தில்லை ஊர்த்தலைவரையும் பொது மக்கள் பிரதிநிதி ஒருவரையும் சேர்த்துக் கொள். ஐந்து பேர் கொண்ட இந்தப் பஞ்சாயத்து இரு பக்கத்து நியாயத்தையும் நன்றாகப் பரிசீலித்து எல்லோரும் ஒப்புக் கொள்ளக் கூடிய ஒரு தீர்ப்பை வழங்கட்டும்” என்று உத்திரவிட்டார்.

    இளவரசரும் மற்றவர்களும் குதிரைகளில் ஏறித் தில்லையை அடைந்தனர். தில்லையிலும் அக்கம் பக்கத்து ஊர்களிலும் பறையறைந்து நியாயசபை கூடும் விவரம் தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில் சித்திர கூட வளாகத்தில் பெருங்கூட்டமாக மக்கள் கூடியிருந்தனர். ஒரு மேடை போடப்பட்டிருந்தது. அதில் நடுநாயகமாக இளவரசர் அமர்ந்திருந்தார். முதல் அமைச்சர், வேத பண்டிதர், ஊர்த்தலைவர், பொதுமக்கள் பிரதிநிதி ஆகிய மற்றவர்கள் பக்கத்தில் அமர்ந்திருந்தனர்.

    கூட்டம் துவங்கியது. இளவரசர் எழுந்து நின்று “இன்று ஒரு முக்கியமான விஷயத்தில் தீர்ப்பு வழங்குவதற்காக இந்த நியாய சபை கூடி இருக்கிறது. இதில் வாதியாக இருப்பவர் வைணவர்களின் பிரதிநிதியான வாசுதேவ பட்டர். பிரதிவாதி சபாபதி தீக்ஷிதர். இருவரும் நியாய சபையின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் கட்டுப்படுவதாகப் பிரமாணம் செய்கிறீர்களா?” என்று கேட்டார். வாதி, பிரதிவாதி இருவரும் எழுந்து தங்கள் தலை மேல் கை வைத்துப் பிரமாணம் செய்தனர்.

    பட்டரைப் பார்த்து, “உங்கள் தரப்பு வாதத்தைக் கூறலாம்” என்றார் இளவரசர்.

    வாசுதேவ பட்டர் மேடை மீது ஏறினார். பொதுமக்களைப் பார்த்து, “தமிழ்நாட்டில் பரம்பரையான தெய்வங்கள் மாயோன், சேயோன், வருணன், இந்திரன், கொற்றவைதான். மாயோனின் மறு பெயர்தான் இங்கு உள்ள கோவிந்தராசர். இப்பொழுது காழியில் உருவாகிச் சிலை வடிவில் வணங்கப்படுவது நமது பாரம்பரியத்துக்குப் புறம்பானது. அது இந்த வளாகத்திற்குள் வரக்கூடாது என்பது எங்கள் கட்சி” என்றார்.

    ஊர்த்தலைவர் கேட்டார், “பாரம்பரியம் என்று எந்த ஆதாரத்தில் சொல்கிறீர்கள்?”

    “தமிழின் பழமையான நூலான தொல்காப்பியத்தை வைத்துத்தான்.”

    “தெய்வத்தைப் பற்றிக் கூறும் நூல்களில் பழமையானது தொல்காப்பியம் தானா?”

    “இல்லை. வேதம்தான்.”

    “வேதம் நமது தமிழ்ப் பாரம்பரியத்துக்கு ஏற்புடையதா, இல்லையா?”

    “ஏற்புடையதுதான். தொல்காப்பியத்தில் வேதத்தைப் பற்றி உயர்வாகச் சொல்லப்பட்டிருக்கிறது.”

    “அப்பொழுது பாரம்பரியத்தைப் பார்க்க, வேதத்தைத் தானே பிரமாணமாகக் கொள்ள வேண்டும்?”

    “ஆம். வேதத்திலும் விஷ்ணு சொல்லப்பட்டிருக்கிறார், அவர்தான் தமிழில் மாயோன் எனக் கூறப்படுகிறார்.”

    “விஷ்ணுதான் மாயோன் என்பதற்கு என்ன பிரமாணம்?”

    “விஷ்ணு பல அவதாரங்கள் எடுத்தார். அதில் கிருஷ்ணாவதாரம் ஒன்று. அவர் பல அரக்கர்களை மாயங்கள் செய்து அழித்தார். அதனால் அவர் மாயோன் என அழைக்கப்படுகிறார். சிறு வயதில் அவர் ஆயர் பாடியில் வளர்ந்து மாடு மேய்த்தார்.  அதனால் பசுக்களைக் காப்பவர் என்ற பொருளில் கோவிந்தன் என்றும் அழைக்கப்படுகிறார்.  எனவே விஷ்ணுதான் மாயோன், கோவிந்தராசர்.”

    மக்கள் பிரதிநிதி கேட்டார், “விஷ்ணு கிருஷ்ணராக அவதரித்தார் என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா?”

    “இல்லை. புராணங்களில்தான் சொல்லப்பட்டிருக்கிறது.”

    “வேதத்துக்கும் புராணத்துக்கும் உள்ள உறவு என்ன?”

    “வேதம் தெய்வத்தின் வாய்ச்சொல். புராணம் மனிதர் இயற்றியது.”

    இளவரசர் சபாபதி தீக்ஷிதரைப் பார்த்தார். அவர் பேசத் தொடங்கினார். “காலப்போக்கில் பல புதுப் புது தெய்வங்களை உருவாக்கிக் கொள்வதற்கு வேதம் சுதந்திரம் கொடுத்திருக்கிறது.  நாம் எல்லோரும் இது நாள் வரை கோவிந்தராஜரை வணங்கி வருகிறோம். வேதத்தோடு கூடப் புராணங்களையும் பிரமாணமாக ஏற்பதால்தான் அவரை வேத விஷ்ணுவின் ஒரு வடிவமாகக் கொண்டு வேத மந்திரங்களால் பூசை செய்கிறோம். அதே போல, வேதத்தில் கூறப்பட்ட ருத்ரனின் ஒரு வடிவம்தான் ஆடற்பெருமான். வேதத்தில் ஆதிரை நட்சத்திரத்தை ருத்ரனுக்கு உரியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆடற்பெருமானை ஆதிரையான் என்று குறிப்பிடுகிறார் அம்மையார். மேலும், அவரை வேதியன், வேதப் பொருளான், வேதத்திற்கு ஆதியன் என்று கூறுகிறார். எனவே அம்மையார் பாடலின் அடிப்படையில் ஆடற்பெருமானை ருத்ரனாக ஏற்பது தவறல்ல.” என்றார்.

    “புராணமும் ஒரு பேய் மகள் கூறிய வார்த்தையும் ஒன்றாக முடியுமா?”

    “அறியாதவர்கள்தாம் அவரைப் பேய் என இகழ்ந்தார்கள். அவரது பாடலை ஒரு முறையேனும் படித்தவர் அவ்வாறு சொல்ல மாட்டார். திருமால் அடியார்களில் பேயாழ்வார் என்று ஒருவர் சென்ற தலைமுறையில் வாழ்ந்தார். அவர் உண்மையில் பேயா? இறைவனிடம் கொண்ட ஈடுபாட்டின் மிகுதியால் அவர் சராசரி மானிடரிலிருந்து வேறுபட்டதால் பேய் எனப்பட்டார். அது போலத்தான் அம்மையாரும். பேயாழ்வாரின் பாடல்களை நாம் வழிபாட்டுக்குப் பயன்படுத்துகிறோம். திராவிட வேதம் என்று பெயர் கொடுத்து அதை வேதத்துக்குச் சமானமாகக் கருதுகிறோம். அம்மையாரின் பாடல்களும் அந்தப் புகழுக்குத் தகுதியானவை.”

        இளவரசர் திருப்தியுடன் தலையசைத்தார். மறுபடியும் வாசுதேவ பட்டரை நோக்கி, “மேற்கொண்டு சொல்லுங்கள்” என்றார்.

    “இது புனிதமான இடம். இங்கு மயானத்தாடியைக் கொண்டுவரக்கூடாது. வேண்டுமானால் மயானத்தில் வைத்துக் கொள்ளட்டும்” என்றார்.

    சபாபதி தீக்ஷிதர் எழுந்தார். “மயானத்தாடி ஊருக்குள் வரக்கூடாது என்கிறார் பட்டர். புனிதமான காசி நகரத்திற்கே மகா ச்மசானம் என்று பெயர். அவன் ஆடும் இடமெல்லாம் மயானம்தான். இறைவன் இல்லாத இடம் எது?  மயானம் என்பது இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் குறிக்கும்.”

    “ஆடும் நிலையில் ஒரு தெய்வத்தை வணங்கினால் நம் வாழ்க்கையே ஆடிப் போய்விடும்.” என்றார் பட்டர்.

        “உங்கள் நம்பிக்கை அதுவானால் நீங்கள் வணங்க வேண்டாம். மற்றவர்கள் வணங்குவதை நீங்கள் தடுக்க முடியாது” என்றார் தீக்ஷிதர்.

    “ஊரின் நடுவில் அந்த ஆடும் சிலையை வைத்தால் ஊருக்கே கெடுதல், ஊரே ஆடிப் போய்விடும்.” இது வாசுதேவரின் அடுத்த வாதம்.

        “உட்கார்ந்த ஐயனாரைத் தொழுதால் வாழ்க்கை உட்கார்ந்து விடும், இங்கே படுத்த நிலையில் இருக்கும் கோவிந்தராஜரைப் பூசித்தால் தொழில் படுத்து விடும் என்று யாராவது சொல்கிறார்களா? ஆடும் தெய்வத்தை வணங்கினால் வாழ்க்கை ஆடிப் போய்விடும் என்பது போன்ற நொண்டிச் சாக்குகளை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டாம் என்று இந்த நியாய சபையைக் கேட்டுக் கொள்கிறேன்.”

    சபையோர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    வாசுதேவர், “உங்களுக்கு உங்கள் தெய்வத்தில் பற்று இருந்தால் அரசரிடம் கேட்டு வேறு இடம் பெற்று அங்கு வைத்துக்கொள்ளுங்கள். இங்கு ஏன் வரவேண்டும்?”

    “இந்த இடம் தில்லை அந்தணர்கள் முழுமைக்கும் உரிய சொத்து. இதில் எங்கள் விருப்பப்படி ஒரு தெய்வத்தைப் பிரதிஷ்டை செய்ய எங்களுக்கும் உரிமை உண்டு.”

    இளவரசர் மற்றப் பஞ்சாயத்தார்களுடன் கலந்து ஆலோசித்தார். முடிவு என்னவாகுமோ என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் ஆவலுடன் காத்து நின்றனர்.

    இளவரசர் எழுந்து பேசலானார்.

    “நமது பழம் தமிழ்ச் சமயம் இன்று இரண்டாகப் பிளந்து நியாயசபை வரை வந்திருப்பது துரதிருஷ்டமான விஷயம். நமது முன்னோர்கள் முருகனையும் மாயோனையும், இந்திரனையும், வருணனையும், கொற்றவையையும் வேற்றுமை இல்லாமல் வணங்கினர். இன்று வேதத்தைப் பிரமாணமாகக் காட்டும் பிராமணர்கள் அதைப் பொருள் புரிந்து கொள்வதில் வேறுபட்டு அடிதடி வரை இறங்கி இருப்பது நாட்டுக்கு நல்லதல்ல.

    “ஆடற்பெருமான் வேத தெய்வமா என்பது முதல் கேள்வி. நானும் வேதம் பயின்றிருக்கிறேன். வேத வல்லுநர் அருகில் இருக்கிறார். அவரையும் கலந்துகொண்டுதான் பேசுகிறேன். வேதம் பல தெய்வங்களைப் பேசுகிறது. அவற்றில் ஒன்று கூட இன்று வழிபடப்படுவதில்லை. புதிய தெய்வங்கள் எல்லாவற்றையும் நம் சமூகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஏனெனில் சத்தியமானது ஒன்று, அதை அறிஞர்கள் பலவாறாகப் பேசுகிறார்கள் என்று வேதம் சொல்கிறது. நான் சொல்வதுதான் சத்தியம், மாறுபடுபவர்கள் முட்டாள்கள் என்று கூறவில்லை. மாற்றுக் கருத்து உள்ளவர்களையும் அறிஞர் என்றே போற்றுகிறது. எனவே எந்த உருவில் வழிபட்டாலும் சத்தியம் ஒன்றுதான். அதனால்தான் இங்கு சமணர்கள் ஏற்படுத்திய யக்ஷிணியையும் நாம் வணங்குகிறோம். எல்லா வழிபாடுகளும் அந்த ஒரு சத்தியத்திற்கே போய்ச் சேருகின்றன. எனவே ஆடற்பெருமான் உருவத்தை இங்கு கொண்டுவருவதில் உள்ள முதல் தடை நீக்கப்படுகிறது.

    “அம்மையார் ஆடற்பெருமானைத் திருமாலைப் பங்குடையான் என்று குறிப்பிடுகிறார். எனவே திருமால் வேறு, ஆடற்பெருமான் வேறு அல்ல. இருவரும் ஒரே சத்தியத்தின் இரு வேறு தோற்றங்கள்.  பேயாழ்வாரைப் பற்றிக் குறிப்பிட்டார். அவர் சிவனும் திருமாலும் ஒன்றே என்கிறார்.

    தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
    சூழ்அரவும் பொன்னாணும் தோன்றுமால் – சூழும்
    திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
    இரண்டு உருவும்ஒன்றாய் இசைந்து

    என்று கூறுகிறார். “காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் செய்துகொள்வதை வேதம் தடுக்கவில்லை. நானும் மற்றவர்களும் நீறு அணிந்திருக்கிறோம். இங்கு வழிபடப்படும் கோவிந்தராசர் திருநெற்றியையும் நீறு அலங்கரிக்கிறது.* இது எங்கிருந்து வந்தது? என் கொள்ளுப் பாட்டனார் காலத்தில் வடமர்கள் வந்தார்கள். அவர்கள் அக்னிஹோத்ரம் செய்த நீற்றை அணிந்திருந்தனர். அம்மையார் இறைவன் உடல் முழுவதும் நீறு அணிந்திருப்பதாகக் கூறுகிறார். எனவே நாம் அதை ஏற்றுக்கொண்டோம். இதோ வாதி, பிரதிவாதி இருவர் நெற்றியிலும் திருநீறு துலங்குகிறது. காலத்துக்கேற்ப, வழிபடுமுறைகளிலோ, வழிபடும் தெய்வங்களிலோ புதுமைகள் புகுவது தவறில்லை. நம் பழம் தமிழ் இலக்கியங்களும் பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்று ஒப்புக் கொண்டிருக்கின்றன.

    ”மயானத்தாடி என்பதற்கு தீக்ஷிதர் அளித்துள்ள விடை ஏற்புடையது. எனவே இரண்டாவது தடையும் நீக்கப்படுகிறது.

    “மூன்றாவதாக, இந்த இடத்தின் உரிமை பற்றியது. அரசு ஆவணங்களின்படி இந்தச் சித்திரகூட வளாகம் முழுவதும் அரசுக்குச் சொந்தமானது. பல தலைமுறைகளாக தில்லை அந்தணர்களின் பொது அனுபோகத்தில் இருந்து வருகிறது. இறைவழிபாட்டிற்கெனவே ஒதுக்கப்பட்ட இந்த இடம் இறைவழிபாடு செய்யும் அனைத்து அந்தணர்களின் பொதுச் சொத்து. இதில் வைணவர்களுக்கும் சைவர்களுக்கும் சமமான உரிமை உண்டு. இன்று அவர்களிடையே மீண்டும் ஒன்று சேர முடியாத அளவுக்குப் பிளவு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வளாகத்தை இரண்டாகப் பிரித்து தென்பகுதி வைணவர்களுக்கும் வடபகுதி சைவர்களுக்கும் கொடுக்கப்படவேண்டும் என இச்சபை கருதுகிறது. “

    கூடியிருந்த பொதுமக்கள் ஓம் நமச்சிவாய என்றும், ஆடல் வல்லான் போற்றி என்றும், தில்லைக் கூத்தன் வாழ்க என்றும் அம்பலத்தரசன் வெல்க என்றும் கோஷம் எழுப்பித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

    அரசர் செங்கணானுக்குச் செய்தி போயிற்று. பிரச்சினை சுமுகமாக முடிந்தது பற்றி அவர் மகிழ்ந்தார். புதிதாகக் கட்டப்பட்ட தில்லையம்பலத்தில் ஆனந்தக் கூத்தனைத் தரிசிக்க விரும்பிச் சென்றார். தில்லை மக்களும் தீட்சிதர்களும் அவரை மிக மரியாதையுடன் வரவேற்றார்கள். தரிசனம் முடிந்தபின் தீட்சிதர்கள் தங்கள் நன்றியைத் தெரிவிக்கும் வகையில் ஆடற்பெருமானின் பாதம் பதித்த ஒரு மணிமுடியை அவருக்கு அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியின் நினைவாக அவர் மணிமுடிச் சோழர் எனப் போற்றப்பட்டார்.

    ————————- —————————————————— —————————————-

    * திருமாலும் மாலடியார்களும் நெற்றியில் திருநீறு அணியும் வழக்கம் இருந்ததை நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பாடல்கள் 3270, 3280 இரண்டிலிருந்து அறியலாம்.

    தொடரும்

    Share
  • இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-3

    கலைமகள்- அலைமகள்- எம் குமரனைக் காக்க!

    -மீனாட்சி பாலகணேஷ்

    asi


    abal
    முருகப்பெருமான் உறையும் திருப்போரூர் எனும் ஊர் நெய்தல் நிலங்கள் நிறைந்து விளங்குவது. அழகான இயற்கை ஆனந்த நடனம் புரியும் இடம். ஒருபுறம் தாழைக்காடு; மற்றொருபுறம் புன்னைமரங்கள் அடர்ந்த காடு; இவற்றுடன் நெய்தலுக்கே உரித்தான காடும் செறிந்து விளங்குகின்றது. இவற்றில் மலர்ந்த நறுமலர்கள் வாசம் வீசுகின்றன. வாசமலர்கள் மகரந்தப் பொடிகளை வாரி இறைத்துள்ளன. இதனால் அவ்வூர்த்தெருக்கள் அனைத்தும் திருமணம் நிகழும் பெரிய தெருவைப் போன்று விளங்குகின்றன. இது எவ்வாறு எனப்பார்ப்போமா?

    திருமணம் நிகழும் தெருவில், தெருவை அடைத்துப் பெரிய பந்தல் போடப்பட்டு, பந்தலை வாசமும் வண்ணமும் மிகுந்த நறுமலர்களால் அலங்காரம் செய்வித்திருப்பார்கள். இந்த மலர்கள் அனைத்தும் இனிய நறுமணத்தினைத் தெருவெங்கும் கமழச்செய்யும். மேலும், இடைவிடாது விருந்து பரிமாறப்படுவதனால், அத்தெருவில் போவோர் வருவோர் அனைவரும் பசியாறிக் களைப்பை நீக்கிக்கொள்வார்கள்.

    அதுபோலவே, இங்கும் தாழம்பூக்கள் மலர்ந்து கொழிக்கின்ற தாழைக்காடானது தனது இனிய நறுமணத்தினால் கயல்மீன்களால் உண்டான நெய்தல் நிலத்துப் புலால் நாற்றத்தினைப் போக்குகின்றது. நெய்தல் நிலத்தில் ஓடியாடும் நண்டுகள் மகரந்தப்பொடிகளை வயிறுநிறைய உண்டு பசியாறுகின்றன. ஆகவே திருப்போரூரின் நெய்தல் நிலம் திருமணத்தெரு போன்ற இத்தகைய சிறப்புகளைக் கொண்டதாகத் திகழ்கின்றது.

    கண்களின் முன்பு இக்காட்சி அழகாக விரியவில்லையா? எத்துணை அழகிய உவமைகள்? உயர்வுநவிற்சியணியின் துணைகொண்டு இயற்கையின் சிறப்பை, நாட்டுநடப்புடன் கூட்டி விவரித்த நயத்தை ரசிப்பதா? வியப்பதா?

    இத்தகைய அழகிய திருப்போரூரில் முருகன் எனும் இளங்குமரன் எழுந்தருளியுள்ளான். அவன் சிறுவன்; குழந்தை; அவனைக் காக்க வேண்டி எல்லாத் தெய்வங்களையும் அன்னையர் அழைத்து வேண்டிக் கொள்கின்றனர். திருமால், விநாயகர், சிவபிரான், உமையம்மை, அலைமகள், கலைமகள், இந்திரன், சத்தமாதர், முதலியோரை அழைத்து வேண்டிக் கொள்வது பிள்ளைத்தமிழ்க் கவிமரபாகும்.

    குமரன் உறையும் திருப்போரூரை வருணித்த புலவர் பிரானாகிய சிதம்பர அடிகள் (திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழை இயற்றியவர்) அன்னையர் கலைமகளை அழைப்பதைப் பாடலின் அடுத்த வரிகளில் அதே இயற்கை அழகின் துணைகொண்டு இனிமை பொங்க விளக்கியருளுகிறார்.

    நெய்தல் நிலத்தில் பல வண்ணமலர்கள் பூத்துக் ‘கொல்’லெனச் சிரிக்கின்றன. அவற்றைப் பார்க்கும் அன்னைக்கு அது தன் குழந்தை முருகனைக் காக்க, தான் வணங்கி அழைக்கும் கலைமகளைப் போலக் காட்சி அளிக்கின்றனவாம். அது எங்ஙனம்? அவள் காண்பதென்னவோ, வெண்தாமரையின் மேல் அழகுற வீற்றிருக்கும் ஒரு அன்னப்பேடைத்தான்! அன்னவாகினி தானே கலைமகள்?

    asarasகூட்டமாக மலர்ந்த வெள்ளிய நெய்தல் மலர்கள் அன்னத்தின் (கலைமகளின்) திருமேனிபோல விளங்குகின்றன. கருங்குவளை மலர்கள் அவள் கண்களென விளங்க, அக்கண்கள் போர்செய்யும் இருசெவிகளென வள்ளைக்கொடி துலங்குகின்றது. குமிழமலர் கலைமகளின் அழகான நாசியாக விளங்குகின்றது. கொடிகளில் சிரிக்கும் முல்லையரும்புகள் அவளுடைய வெண்ணிற அரும்புப்பற்களைப்போல் காட்சியளிக்கின்றன. தேன்நிறைந்த அல்லிமலர் (குமுதம்) அவளுடைய மறையோதும் வாயினைப் போலுள்ளது. காந்தள்மலர்கள் (தோன்றிமலர்) வளைக்கரம் போலக் காட்சியளிக்கின்றன. கார்முகை எனப்படும் கோங்கமலரின் அரும்புகள் போன்ற கொங்கைகள் அவளுடையவை. எய்துவதற்கரிய சிலம்பணிந்த திருவடிகளாகத் தாமரை மலர்கள் இலங்குகின்றன. இவ்வாறெல்லாம் தெய்வத்தன்மை பொருந்திய ஒரு அன்னப்பறவை வெண்தாமரை மலர் மீது வீற்றிருப்பது, கலைமகளே வெண்தாமரை மீதமர்ந்து மறைநூல்களை ஓதியிருந்தது போலக் காணப்படுகின்றது.

    ‘இத்தகைய கலைமகள் எமது இளங்குமரனைக் காக்க,’ எனத் தாயர் வேண்டுகின்றனர்.

    இயற்கையில் இறைவனைக் காண்பது எத்துணை இன்பமாக இருக்கின்றது?

    நெய்தலங் காடுமிரு காவிபொரு வள்ளையும்

    நிகழ்குமிழும் முகைமுல்லையும்

    நிறைநறைக் குமுதமுந் தொடியுடைத் தோன்றியொடு

    நேர்கன்னி கார்முகையும்

    எய்தரிய நூபுரம் கமலமுஞ் செறிகடவுள்

    எகினம்வெள் ளைக்கமலமீ

    தேர்பெற்ற மறைமுதல கலைசொற் றிருந்தென

    இருந்தவளை அஞ்சலிப்பாம்

    கைதையங் கானமும் புன்னையங் கானமும்

    கானல்நெய் தற்கானமும்

    கடிமணத் தொடுநறவும் மகரமும் தந்திலகு

    கல்யாண மாமறுகென

    மைதவழ் பொழிற்புளினம் மலிகயற் புலவையும்

    வலைஅலவநுறு பசியையும்

    வாரா தகற்றொயொளிர் நெய்தலஞ் சமரபுரி

    வருகுகனை அருள்புரியவே.

    (திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்

    கலைமகள் காப்பு- சிதம்பர அடிகள்)

    இனி அடுத்து என்ன கூறுகின்றார் புலவர் பெருமகனார்?

    பெருமை பொருந்திய திருப்பரங்குன்றம், திருவாவினன்குடி, அழகிய சோலைகள் சூழ்ந்த திருவேரகம் (சுவாமிமலை), திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), சிறந்து விளங்கும் பழமுதிர்சோலை எனக்கூறப்படும் மறைபுகழும் பதிகள்தோறும் எழுந்தருளியுள்ள முருகப்பெருமான், திருப்போரூரையும் தனக்கு ஒரு படைவீடாகக் கொண்டு எழுந்தருளியுள்ளான்.

    திருப்போரூர் இயற்கைவளம் கொழிக்கும் ஊர். திரும்பிய இடமெல்லாம், பூத்துக்குலுங்கும் சோலைகளும், வாவிகளும் அவற்றில் மலர்ந்து மணம்பரப்பும் மலர்களும் பார்ப்பவர் மனத்தே பற்பல கற்பனைகளைப் பெருக்கெடுக்கச் செய்கின்றன. தடாகங்களில் தாமரை மலர்கள் விரிந்து தலையசைக்கின்றன. அவை முருகனின் செவ்விய திருவடிகள்போல அழகுறக் காணப்படுகின்றன. மேலும் சில தாமரைமலர்கள் மொட்டுக்களாக உள்ளதால் விரியாது கூம்பிநிற்கின்றன. இவை தேவர்கள் முருகனின் திருவடிகளைக் கைகூப்பித்தொழுவது போலக் காணப்படுகின்றன. இல்லை இல்லை.. தேவர்கள் ‘எம் கந்தனைக் காக்க,’ என யாரையோ வேண்டிநிற்கின்றனர்.

    யாரை?

    பெரிய மேகக்கூட்டம் ஒன்று தனது ஆயிரம் (பத்துநூறு) முடிகள்தோறும் ஆயிரம் கதிரவர்களை முடிகளாகக்கொண்டு விளங்குகின்றது. சந்திரன் நிலவாகிய வெள்ளத்தைப் பொழிய, அதன்மீது அழகிய தாமரைக்காடு ஒன்று மிதந்து அந்தக் கருமுகிலை உரிமையுடன் தனதாக்கிக் கொள்கின்றது. அந்த முகிலினிடை நால்வகை மலர்களும் அரும்பியுள்ளன (கோட்டுப்பூ- சண்பகம் முதலியன: கொடிப்பூ- முல்லை முதலியன; நிலப்பூ- எட்பூ, திருத்துழாய் முதலியன; நீர்ப்பூ- தாமரை முதலியன). இவற்றின் நடுவே அழகிய மின்னல் ஒன்று இருந்து ஒளிர்கின்றது. இது இயற்கை காட்டும் எழில்.

    கவிதை புனையும் புலவர் கண்களுக்கு இக்காட்சி என்ன தெரிவிக்கிறது?

    asri

    ஆதிசேடனின் ஒளிவீசும் ஆயிரம் தலைகள் கொண்ட பாம்பணையின் மீது , வெள்ளிய பாற்கடலில் ‘அறிதுயில்’ கிடக்கும் கருமுகில் வண்ணனை உரிமை கொண்டவள் அலைமகளான திருமகள். நால்வகை மலர்களாலும் புனையப் பெற்ற மாலைகள் அணிந்த அவனுடைய மார்பில் அவள் ‘மின்னலெ’ன இருந்து ஒளிர்கின்றாள். அந்தத் திருமகளை நோக்கி, ‘எம் குமரனைக் காக்க,’ என வேண்டித் தேவர்கள் கைகளாகிய தாமரை மொட்டுக்களைக் குவித்து வணங்கி வேண்டி நிற்பதாகப் புலவர் கற்பனை செய்துள்ளார்.

    பொற்குவடு பத்துநூறு இலகுமுடி தொறும்இரவி

    பூணெனக் கொண்டுமதியம்

    பொழிநிலவு வெள்ளத்தின் மிசைமிதந்து அழகுசெறி

    புண்டரிகம் மண்டுபுயலை

    அற்புதத் தொடுகொண்டு மிளிரஅப் புயல்நடு

    அரும்புநால் வகைமலரொடும்

    அஞ்சொதி மினலொன்று இருந்தென இருந்தொளிர்

    அணங்கினை நினைந்துதொழுவாம்

    எற்செறி திருப்பரங்குன்றாவி னன்குடி

    இரும்பொழில் திருவேரகம்

    ஈறில்சீ ரலைவாய் விளங்குபழ முதிர்சோலை

    என்னுமறை புகழ்பதிதொறும்

    கற்குவடு தொறுமினிய நற்சமர புரியும்உறை

    கடவுளைக் கடவுளரெலாம்

    கைம்மலர் குவிக்கஇரு கால்மலர் படைத்தவொரு

    கந்தனை அளிக்கவென்றே.

    (புயல்- மேகம்; மினல்- மின்னல்; அளிக்க- காக்க)

    (திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்

    திருமகள் காப்பு- சிதம்பர அடிகள்)

    இயற்கையோடிணைந்து, காணும் அழகிய காட்சிகளெல்லாம், அவ்விறைவனின் தொடர்பான காட்சிகளே எனக் கற்பனை செய்யும் உள்ளம் இறையருள் பெற்ற நல்லிசைப் புலவோருக்கே வாய்க்கும்.

    ‘வானாகி மண்ணாகி,’ என்னும் மாணிக்கவாசகரின் பாடல் இதன் தொடர்பாகச் சிந்தித்துப் பார்க்கத் தக்கது.

    ********************************

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 18

    – புலவர் இரா. இராமமூர்த்தி.

    காதல் கண்களில் அரும்பிக் கருத்தில் மலர்ந்து கல்யாணத்தில் கனிகிறது! அக்கனியின் சுவை இல்லறத்தில் எல்லாருக்கும் இனிக்கிறது! திருக்குறள் காமத்துப் பால் அன்பின் ஐந்திணைக்கு உரிய களவு, கற்பு ஆகியவற்றைத் தொல்காப்பியம் காட்டும் தமிழ் மரபிற்கேற்ப அகத்திணை ஒழுக்கத்தை அழகாகக் கூறுகிறது. காட்சி, ஐயம், தெளிதல், குறிப்பறிதல் முதலான களவியல் நிகழ்ச்சிகளைத் திரு வள்ளுவர் மிகவும் சிறப்பாக அமைத்துள்ளார்!

    ”அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
    மாதர்கொல் மாலுமென் நெஞ்சு!”(1081)

    என்று தலைமகன் தலைவியைக் கண்டு அவள் தெய்வமகளோ என்று அஞ்சினான்; பின்னர் அவளுடைய சாயலை நோக்கி மயிலோ என ஐயமுற்றான்; பின்னர் தன்னை நோக்கும் கண்களையும் அவள் செவிக்கு அழகுதரும் குழையையும் கண்டு ஒ! இவள் பெண்ணோ? என்று மயங்குகிறான்! இது காட்சி, ஐயம் இரண்டையும் குறித்தது!இதற்குப் புதிய பொருளாக, அவள் சற்றுத் தொலைவில் நின்றபோது, தெய்வ மகளாகவும், அடுத்து சற்றே நெருங்கி வந்தபோது, அவளுடைய சாயல் மயில்போல் இருந்ததாகவும், அடுத்து மேலும் நெருங்கிய போது, அவளது காதணியும், பார்வையும் புலப்பட்டன என்றும் கூறுவர்!

    அடுத்த பாடல் அவள் மானிடப் பெண்ணே என்று தெளிவடைந்ததைக் குறிக்கிறது. அடுத்து அமைந்த நான்கு குறட்பாக்களும், அவளது அன்புப் பார்வை தன்னை நிலை குலைய வைத்தமையைத் தலைவன் கூறுவதாக அமைந்தன! அடுத்து அவள் மார்பு, நெற்றி ஆகியவை அவனை மயங்க வைத்த திறத்தைக் கூறுகிறார்! அடுத்த பாடலில் அவளது அணிகலன்களைக் கண்டு தலைவன் மயங்கியதாகக் கூறுகிறார்! அடுத்த பாடலில் அவள் பார்வை காட்டிய காதற் குறிப்பினை வள்ளுவர் கூறுகிறார்! தகையணங்குறுத்தல் என்ற இந்த அதிகாரத்தில் காட்சி, ஐயம், தெளிவு ஆகிய வற்றைக் கூறிய வள்ளுவர் அடுத்த அதிகாரத்தின் முதல் ஐந்து பாடல்களால் தலைவியின் பார்வை யாலும், நாணத்தாலும் அவள் கொண்ட காதலைத் தலைவன் உணர்ந்துகொண்டான் என்பதைத் திரு வள்ளுவர் கூறுகிறார்! அடுத்து தோழி அறிந்து கொண்டதையும், தலைவனே மகிழ்ச்சியடைந்ததையும் கூறுகிறார்! இவற்றிடையே காதலர்களின் கள்ளத்தனத்தை விளக்கும் குறட்பா நம்மை மிகவும் வியப்பில் ஆழ்த்துகிறது! அது,

    ”யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
    தான்நோக்கி மெல்ல நகும்!” (1094)

    என்பதாகும்! தலைவன் ஒரு குறிப்புடன் தலைவியைப் பார்க்கும் போது, தலைவி நாணத்துடன் தலை குனிந்து நிலத்தை நோக்குகிறாள் என்கிறான்! அதன்பின் அவளை நோக்காதபோது, அத்தலைவனைத் தலைவி நோக்கி மெல்லப் புன்முறுவல் செய்தாளாம்! இதனைத் தலைவன் எவ்வாறு அறிந்து கொண்டான்? தலைவன் நோக்காதபோது தலைவி நோக்கினாள் என்பதை அவள், நாணித் தலை குனிந்து புன்முறுவல் பூத்ததால் தெரிந்து கொண்டான் என்ற பொருளில் ‘தான் நோக்கி மெல்ல நகும்’ என்ற தொடரால் விளக்குகிறார்! இது மிகவும் நுட்பமான காதல் காட்சி! இதுதான் காதலர்களின் கள்ளத்தனம்! இதனை ஒரு திரைப்படப் பாடல் சிறப்பாக விளக்குகிறது!

    உன்னைநான் பார்க்கும்போது மண்ணைநீ பார்க்கின்றாயே
    விண்ணைநான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே!

    என்ற பாடல் அது! அடுத்து அதே ”குறிப்பறிதல்” அதிகாரத்தின் கடைசிப் பாடல்,

    ”கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
    என்ன பயனும் இல!” (1100)

    இந்தப் பாடலுக்கு அந்தக் காலப் பரிமேலழகர் முதல் இந்தக் கால மு.வரதராசனார் வரை, ”காதலர் இருவரின் கண்ணிணைகள் ஒன்றை யொன்று காதலுடன் நோக்கி இதயம் இணைந்தபின், அவர்கள் தமக்குள்ளே பேசிக்கொள்ளும் தம்மைப் பற்றிய உண்மைகளாகிய மனத் தோடு பொருந்தாத வாய்ச் சொற்களால் பயனேதும் இல்லை” என்றும் ”அவர்கள் கண்களின் வழியே மனமொத்து விட்டபின், காதலைத் தெரிவிக்கும் வாய்ச்சொற்கள் தேவையில்லை” என்றும் பொருள் கூறினர்! ஆனால் இக்காலத்திற்கு ஏற்றவாறு அக்குறட்பாவுக்குப் புதிய பொருள் ஒன்று புலனாகின்றது! அதாவது, காதலர்களின் கண்ணிணையுடன் இதயமும் ஒத்துப் போனபின், அதைக் காணும் உற்றார், உறவினர்கள் இவர்களைப்பற்றி, இவள் என்னகுலம்? இவன் எந்த மதம்? இவள் படிப்பு என்ன? அவன் படிப்பு என்ன? இவர்கள் செல்வ நிலை, குடும்பநிலை என்ன? என்றெல்லாம் பேசும் வேண்டாத வாய்ச்சொற்களால் எந்தப் பயனும் விளையாது! இவர்களிடையே உள்ள நெருங்கிய காதலை அவை மாற்ற மாட்டா! ” என்பது புதுமையான பொருளல்லவா?

    இந்தப் பொருளுக்கு மேலும் வலிமையூட்டும் வகையில் கம்பராமாயணப் பாடல்கள் விளக்கம் தருகின்றன! அவை,

    ”எண்ணரும் நலத்தினாள் இணையள் நின்றுழி,
    கண்ணொடு கண்ணினை கவ்வி ஒன்றையொன்று
    உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
    அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்!”

    “மருங்கிலா நங்கையும் வசையில் ஐயனும்
    ஒருங்கிய இரண்டுடற்கு உயிரொன்று ஆயினார்
    கருங்கடற் பள்ளியின் கலவி நீங்கிப்போய்
    பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?”

    என்பனவாகும்! இவற்றில் ”பிரிந்தவர் கூடினால் (மற்றையோர்) பேசவும் வேண்டுமோ? வேண்டா. என்பது போன்ற பொருளுணர்ச்சி உருவாகும்படி கம்பரும் பாடியமை இங்கே கருதத் தக்கது!

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 20

    சி. ஜெயபாரதன்.

     

    கலில் கிப்ரான்

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    நமது பூமி

    நமது பூமி
    ____________________________

    “நான் நாட்டியம் ஆடவோ, ஊது கொம்பை ஊதவோ, முரசை அடிக்கவோ நீ விரும்பினால், என்னை ஒரு திருமண விருந்துக்கு அழைத்திடு ! இடுகாட்டிலிருந்து என்னை வெளியே இழுத்துக் கொண்டு வந்திடு !”
    கலில் கிப்ரான். (The Narcotics & Dissecting Knives)
    ___________________

    பிரபஞ்சத்தின் மகத்துவம்
    ___________________

    எமது குப்பைக் கழிவுகளை
    எல்லாம்
    உனது நெஞ்சில் திணிக்கிறோம் !
    கதிரடிக்கும் நிலத்தில் கோதுமைப்
    பயிர்கள் சேர்ப்பாய் நீ !
    கொத்துக் கொத்தாய்த் திராட்சைக்
    கொடிகள் வளர்ப்பாய் நீ !
    உலோகத் தனிமங்கள்
    எடுத்து நாங்கள் செய்வோம்
    பல பீரங்கிகள்
    வெடி குண்டுகள் ! ஆனால்
    எமது தனிமங்களில் நீ
    முளைக்கச் செய்வாய்
    முல்லையும் ரோஜாவும் !
    எத்துணைப் பொறுமை உனக்கு
    வையமே !
    எத்தகைப் பரிவு உள்ளது
    உனக்கு !
    கிழக்கு மேற்காய்ப் பிரபஞ் சத்தில்
    பயணம் செய்த போது
    இறைவன்
    பாதத்தால் உண்டான
    நீயோர்
    அணுத்தூசிக் கோளம் !
    ___________

    அல்லது தீப்பொறி ஒன்று
    நித்திய
    உலையி லிருந்து
    எறியப் பட்டதா ?
    விண்ணைத் தொட்டு விடும்
    அண்டக் கிளைகள்
    பரப்பிடும் இறைவனின்
    மரமாய் வளர
    நிலத்தில் போட்ட
    நீ ஒரு விதையா ?
    அல்லது
    பூதங்களின் பூதக் குழல்களில்
    ஓடும் இரத்தத்தின்
    ஒரு துளியா ?
    அல்லது
    அவனது நெற்றியில் துளிர்த்த
    வேர்வையில் உதித்த
    ஓர் முத்தா ?
    ______________

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (169)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே!
    இனிய வணக்கங்கள்!
    வருட ஆரம்பம் ஏதோ சமீபத்திலே வந்தது போலிருக்கிறது. ஆனால், அதற்கிடையில் அவசரமாக அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதிக்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம்.

    எனது இடது கண்ணில் சிறிய வலி ஏற்பட்டதால் நேற்று வைத்தியசாலையில் கண் மருத்துவ பகுதிக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. அங்கு என் கண்ணைப் பரிசோதித்த கண் டாக்டர், என் கண்ணில் சில துளிகள் மருந்தை விட்டு அரைமணிநேரம் காத்திருக்கும்படி பணித்தார். அந்த டாக்டரின் அறைக்கு வெளியே ஒரு கதிரையில் உட்கார்ந்திருந்தேன். அப்போது என் முன்னால் உள்ள சுவரில் தொங்கிய ஒரு சிறிய அறிவிப்புப் பலகை தென்பட்டது. அதிலே அன்று அங்குப் பணிபுரிந்து கொண்டிருக்கும் டாக்டர்களின் பட்டியல் தொங்கியது. மெதுவாக அப்பட்டியலில் என் பார்வையைப் பதிய விட்டேன். சுமார் 14 டாக்டர்களின் பெயர் போடப்பட்டிருந்தது. அப்பதினான்கு டாக்டர்களில் ஒருவரைத் தவிர மற்றும் அனைவரினது பெயர்களும் அவர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்தவர்கள் அல்லது அவர்களது சந்ததி அதாவது இங்கிலாந்தைச் சேர்ந்த வெள்ளையர்கள் அல்ல என்பது புரிந்தது.

    இன்றைய இங்கிலாந்தின் சமூக கட்டமைப்பு என் மனதில் அலைபாய்ந்தது. இன்று வெளிநாட்டுக்காரர் என்று இங்கிலாந்து மக்களால் வர்ணிக்கப்படுவோர் இல்லையானால் அவர்களது தேசிய சுகாதார சேவையின் நிலை என்ன? எண்ணிப் பார்க்கும் போது கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது. டாக்டர்களை விட அங்குக் குறிப்பிடப்பட்டிருந்த தாதிமாரின் பெயர்கள் கூட வேற்றினப் பெயர்களாகவே இருந்தது.

    bbc2தேசிய சுகாதார சேவை மட்டுமல்ல, ஒரு பேருந்து நிலையத்தில் நின்று அங்கு வந்து போகும் பஸ்களின் சாரதிகளைப் பார்த்தால் 60 வீதமான பஸ்களின் சாரதிகள் வெள்ளையர்கள் அல்லாதவர்களாகவே காணப்படுவார்கள். அதுதவிர, இரயில்வே நிலைய ஊழியர்களில் கூட வெள்ளையர்கள் குறைவாகவே காணப்படுவார்கள்.

    ஆக மொத்தம் இங்கிலாந்தில் இவ்வெளிநாட்டுக்காரின் பங்களிப்பு இல்லையானால், பலதுறைகளில் ஆட்குறைவு எனும் நிலையைத் தவிர்க்க முடியாது எனும் நிலை காணப்படுவது போன்ற ஒரு நிலை தென்படுகிறது. ஆனால், இங்கிலாந்தின் பலபகுதிகளில் இருந்து வெளிநாட்டுக்காரர்கள் இங்கிலாந்தில் வந்து குடியேறுவதை எதிர்க்கும் பல கோஷங்கள் எழுகின்றன. இங்கிலாந்து அரசியல் கட்சிகள் அனைத்தும் “இமிக்கிரேஷன்” (Immigration) எனும் பிரச்சனைக்குத் தீர்வு சொல்லாமல் எந்தவிதமான பிரச்சாரத்தையும் முன்வைக்க முடியாத ஒரு நிலை காணப்படுகிறது. இந்த இரண்டு நிலைகளுக்குமிடையில் நிலவும் இந்த இடைவெளியின் காரணம்தான் என்ன ?

    இங்கிலாந்தின் தொன்மையான மக்களான வெள்ளையர்கள் தான் ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ளவர்களில் அதிக சகிப்புத்தன்மை கொண்டவர்கள் என்பது ஓரளவிற்கு உண்மையான ஒரு கணிப்பே. ஆயினும், இந்தக் காலகட்டத்தில் அவர்களது சகிப்புத்தன்மை அதன் எல்லைக்குத் தள்ளப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்படுவது போல் தென்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. பொதுவான ஒன்றை எடுத்துக் கொள்வோமானால் ஒரு வெளிநாட்டுக்காரர் உதாரணத்திற்கு ஐரோப்பிய நாடொன்றிற்குக் குடியேறி அந்நாட்டு பிரஜாவுரிமையைப் பெற்று ஐரோப்பிய பாஸ்போர்ட்டைப் பெற்றுக்கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். தற்போதைய ஐரோப்பிய யூனியன் சட்டங்களின் படி அவருக்கு ஐரோப்பிய நாட்டில் அங்கத்துவம் வகிக்கும் எந்த நாட்டிற்கும் செல்வதற்கோ அன்றி பணிபுரிவதற்கோ தடையில்லை.

    அவர் இங்கிலாந்துக்குள் நுழைந்து வசிக்கத் தொடங்கினால் அவர் இங்கிலாந்து அரசு வேலையற்றோருக்குக் கொடுக்கும் உதவிப்பணத்தொகையையும் பெற்றுக் கொள்ளும் வழிவகைகள் உண்டு. இவ்வகையான அரசாங்க உதவிகள் இங்கிலாந்து நாட்டில் இலகுவாகக் கிடைப்பதால் பலர் இங்கிலாந்து நாட்டிற்குள் நுழைந்துவிடுகிறார்கள். இத்தகையோரின் வரவுகள் இங்கிலாந்தின் ஊடகங்களில் பிரபலப்படுத்தப் படுவதால் இந்நாட்டின் வெள்ளை இனத்தவர் தமது பொறுமையின் எல்லைக்குத் தள்ளப்படுவது போல எண்ணுகிறார்கள். இதன் காரணமாக இந்த வெளிநாட்டு மக்களின் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் கொள்கையை முன்வைக்காத எந்த அரசியல் கட்சியும் மக்களின் ஆதரவைப் பெறுவது கடினமாகிறது.

    இங்கு முக்கியமாக நாம் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இங்கு வந்து குடியேறி வாழ்ந்து கொண்டிருக்கும் வெளிநாட்டு புலம்பெயர்ந்தவர்களும் அவர்களின் அடுத்த சந்ததியினரின் பெரும்பான்மையோர் கூட தற்போது இங்கு வெளிநாட்டுக்காரரின் குடியேற்றத்தை மட்டுப்படுத்தக் கோருவதுதான்.

    இதற்குக் காரணம் என்ன? இங்கிலாந்தில் வாழும் புலம் பெயர்ந்த ஆசிய, ஆப்பிரிக்க மற்றைய நாட்டுக்காரர்கள் இந்நாட்டின் வெள்ளை இனத்தவரின் மனதில் எழும் வெளிநாட்டுக்காரரின் குடியேற்றத்திற்கு எதிரான அபிப்பிராயத்தில் அவர்களது வெறுப்பு எங்கே தம்மீது திரும்பி விடுமோ என்ற அச்சம் எழுவது தவிர்க்க முடியாதது.

    இங்கிலாந்தின் பொருளாதார நெருக்கடி நிலைமையால் அரசாங்கம் ஏற்படுத்திய பொதுத்துறைகளின் மீதான நிதிக்கட்டுப்பாட்டினால் அல்லலுறும் மக்கள் தமது விரக்தியை யார் மீது திருப்பலாம் என்று எதிர்பார்க்கும் போது வந்து அகப்பட்டது இந்தப் பிரச்சனை எனலாம். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும், அரசாங்கம் அமைத்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் அரசியல் பொது மகாநாட்டில் வெளிநாட்டவரின் குடியேற்ற அனுமதிக்குப் பொறுப்பான அமைச்சர் இந்த வெளிநாட்டுப்பிரச்சனை சம்பந்தமாக பல கடுமையான கொள்கைகளைக் கடைப்பிடிக்கப் போவதாகப் பேசியுள்ளார்.

    இங்கிலாந்து எனும் இந்தக் கப்பலிலே பயணிக்கும் பயணிகளில் நானும் இடையில் வந்து ஏறியவனே! இப்போது அக்கப்பலில் பயணத்தின் ஆரம்பத்தில் இருந்து பயணிப்போர் தமக்கே இடமில்லை என்று முணுமுணுக்கிறார்கள். வருகின்ற காலங்களில் ஆட்கள் அதிகமாகி விட்டார்கள் என்றால் நாம் படகில் இருந்து தள்ளப்பட்டு விடுவோமோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    picture source: IAAI poster campaign | I Am An Immigrant | www.iamanimmigrant.net

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • அரசமரக் கணபதியே ஆறுதல்! (குறும்பா)

    –ரமணி 

    அரசமரம் கீழமர்ந்த கணபதியே
    தரிசுமனம் நின்றருளக் கணமிதுவே
    .தென்காற்றின் அலையோட
    .என்காற்றும் நிலையாகக்
    கரிசனத்தின் காப்பருள்வாய் குணநிதியே!  1  vinayakar

    எத்தனையோ உருவமுன்றன் கதையுமே
    அத்தனையும் அர்த்தமுடன் வதியுமே
    . ஓங்காரம் உள்ளமுற
    . ரீங்காரப் பள்ளமறும்
    சித்தமெலாம் உன்நாமம் பதியுமே!  2

    ஏகதந்த இறைமகனாம் ஏரம்பன்
    ஆகுவாக னத்திலருள் ஆரம்பம்
    .முக்கண்ணன் நாமமெலாம்
    .எக்கணமும் சேமமென
    வேகுமன வேதனைகள் ஓரம்போம்!  3

    சிந்தையிலே உன்னுருவைக் கொள்ளுவனே
    வந்தவினை போனதெனத் தள்ளுவனே
    .தும்பிக்கைக் காப்பினிலே
    .நம்பிக்கை கூப்புவனே
    வந்தனையில் வருவதெலாம் அள்ளுவனே! 4

    என்னாயுள் எதுவென்றே ஆனாலும்
    என்வாழ்வில் எதுவந்தே போனாலும்
    .தந்திமுகன் வந்தனையில்
    .சிந்தனையில் பந்தமறும்
    என்நாவில் உன்பெயரே தேனாமே!  5

     

    Share
  • கடந்தது காலம்

    -கவிஜி 

    இல்லாதவனைத் தேடும்
    இருப்பவன் இருப்பு
    நெருப்பு…

    கடந்த பாதை முள்
    என்றால்
    கடக்கப் போவதும்
    பாதங்களே…

    சுட்டும் விழிச்சுடர் ஆன
    சிந்தனையில்
    அடர்மத்தியக் காடு
    தொலைந்திருந்தது…

    தேடல் ஒன்றாய்
    இரண்டாய், ஒன்றும்
    இல்லாமலும்
    கூடில்லாப் பறவையின்
    தாகம்…

    இறந்தவளின் புடவை
    நுனியில் சமையலறை
    சிணுங்கிக் கொண்டிருக்கிறது
    குழந்தையாக…

    சாமர்த்தியம் எதுவெனப்
    புரிந்த கணம்
    சாமர்த்தியமாய்க் கடந்தது
    காலத்தை…!

     

    Share
  • மதுவிலக்கு அவசியமா! மதுவிலக்கு சாத்தியமா?

    — கவிஜி.

    திடும்மென விழித்துக் கொண்டு, “நான் எங்க இருக்கேன்? நான் எங்க இருக்கேன்?” என்று கேட்பது போலத்தான் இருக்கிறது, மதுவிலக்குக்கு ஆதரவாக ஆங்காங்கே இருந்து வரும் குரல்களின் கூக்குரல். மது இன்று நேற்றா வந்தது? அது மனிதன் தோன்றிய காலம் முதல் வேறு வேறு வடிவங்களில், வேறு வேறு நிலைகளில் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. வேட்டை மனிதன் இரவுகளைக் கொண்டாடித் தீர்க்க மதுவைக் கையாண்டான். கொண்டாட்டங்களின் நீட்சிக்காகத்தானே இந்த வாழ்வு. பகல் முழுக்க மிருகங்களோடு மல்லுக் கட்டியவனுக்கு மது தேவையுமாக இருந்தது. அவனின் உடல்வாகும் மனநிலையும் அதற்கு பொருந்திப் போனது. வாழும் வரை வாழ்ந்தான். ஓங்கு தாங்கி செழித்தான்.

    ஆனால், இன்று நடப்பது வேறு. இங்கு விற்பது மதுவுமல்ல, குடிக்கும் மனிதனும் ஆதி மனிதன் அல்ல. அவன் பறந்து விரிந்து கிடந்த உடலோடு ஆரோக்கியத்தைப் பசுமையாக கொண்டவன். இன்று இருப்பவனோ சர்க்கரையும், ரத்தக் கொதிப்பும் கொண்டு கூனிக் குறுகி இதயம் அடைத்துக் கிடப்பவன். தரமற்ற தயாரிப்பாகவே மது இருக்கும் பட்சத்தில் பலவீனமான இன்றைய மனிதன் மனதாலும் உடலாலும் அடிமை ஆகிறான். மடிந்தும் போகிறான். எல்லாவற்றிலும் கலப்படம் உப்பில் தொடங்கி, கடுகு வரை. காகிதத்தில் தொடங்கி ஆணுறை வரை. அரிசி, மாவு, காய்கறி என்று கலப்படம் இல்லாத பொருள்கள் ஒன்றுமே இல்லை. அதில் மது மட்டும் என்ன விதி விலக்கா? அதிலும் கலப்படம். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், மதுவில் கலப்படம் அல்ல மதுவே கலப்படம்.

    மதுப் போத்தலுக்குள் ஊசி, ஆணி, ஆணுறை, பல்லி, தேள் என்று சமீபத்திய செய்திகள் நிறைய. அதையெல்லாம் தாண்டி, மதுவுக்குள் மிகப் பெரிய அரசியல் பூதம் ஒளிந்து கொண்டு அச்சுறுத்துவதுதான் ஆதாரத்தையே ஆட்டிப் பார்க்கிறது. இன்று நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு மது விலக்கு வேண்டும் என்று கோசம் இடும் எதிர்க் கட்சி மற்றும் இதர கட்சி தோழர்களிடம் ஒரு கேள்வி. தமிழ் நாட்டில் மதுக் கடைகளை திறந்தது யார்? தொடர்ந்து குடித்த மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட போது எங்கு போனீர்கள்?

    No-alcoholமக்களிடம் திரும்பி ஒரு கேள்வி, ஏன் இத்தனை நாட்கள் மது போதை என்பது உயிர்க் கொல்லி என்று உங்களுக்குத் தெரியவில்லை? ஆளும் கட்சியிடம் ஒரு கேள்வி. இத்தனை பேர் கத்தியும் இப்படி காதிருந்தும் கேளாமல் இருப்பது நியாயமா? இது நீங்கள் இருக்கும் இடத்துக்கு அழகா?

    சரி, சொல்லிப் பார்த்தோம், கேட்கவில்லை என்று மாணவர்கள் கையில் எடுத்த ஆயுதம் சரியானதா? மாணவர்களே சிந்தியுங்கள். “என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்”- என்று காவல் துறை சொல்லும் அளவுக்குப் போனது உங்களின் அராஜக போக்கு. நல்ல தலைவன் இருந்திருந்தால், கல்லைக் கையில் எடுத்திருக்க மாட்டீர்கள். இது என்ன ஷங்கர் படமா புரட்சி என்பதைச் சாலையில் கத்திக் கொண்டு கூட்டம் சேர்த்து பிரமாண்டப் படுத்துவதற்கு.

    என்ன செய்திருக்க வேண்டும்? மதுக்கடை வேண்டாம் நல்ல முடிவுதான். மாணவர்கள் திரண்டார்கள் சரிதான். நாளைய எதிர்காலம் இன்றைய மாணவர்களின் கையில் ஒப்புக் கொள்கிறோம். சாத்வீக முறைப்படிதானே போராட்டம் நடந்திருக்க வேண்டும்? ஆயுதம் ஒரு போதும் நிரந்தரத் தீர்வை அளிக்காது என்று யாருமே கூறி கேட்டது இல்லையா? எடுத்ததும் அத்தனை பெரிய கல்முறையா? கலாம் காண சொன்ன கனவை இப்படிதான் நிறைவேற்றுவதா மாணவர்களே? இத்தனை கலவரம் நடந்து கொண்டிருக்கையிலும் தங்களின் வேலைக்கு நேரமாச்சு என்று கூட்டத்தை விலக்கிக் கொண்டு போன சில மனிதர்களைப் பார்த்து என்ன சொல்வது? அட, முட்டாள் மக்களே உங்களுக்காகத்தானே அந்தப் பிஞ்சு மனிதர்கள் தாங்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்து, அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒலி எழுப்பி ஒதுங்கிப் போகிறீர்களே, நீங்கள் என்ன மாதிரி மனிதர்கள்? புரியவில்லை, மீண்டும், மீண்டும் மேலும், மேலும் போதை ஏறிய பொழுதாகவே இருந்தது. புரட்சி வெடித்த அன்று.

    இந்தக் கட்சிக்காரர்களின் கையில் 60 சதவீதம் மது உற்பத்தி உரிமம். அந்தக் கட்சிக்காரர்களின் கையில் 40 சதவீதம் மது உற்பத்தி உரிமை. விளங்குமா? மது வேண்டாம் என்று அவர்களின் பங்குக்கு அவர்களும் வந்து பேட்டி கொடுத்துக் கொள்கிறார்கள் (முதல்ல உங்க கடையை சாத்திட்டு வாங்க). இதுல உண்ணாவிரதம், தற்கொலை வேற. ஏன் சாப்பிடாமல் வெயிலில் உட்கார வேண்டும்? ஏன் சாக வேண்டும்? நன்றாகச் சாப்பிடுங்கள். போராட வலிமை வேண்டும். உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்ந்தேன் என்பது திருமூலர் வாக்கு. சத்தம் போட்டுக் கத்திக் கூப்பாடு போட்டுப் போராடுங்கள். இது மக்களுக்காக மக்களால் மக்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயக நாடு. மன்னர் ஆட்சி ஒன்றும் நடை பெறவில்லை. அப்படி நடப்பதாக அதிகார வர்க்கம் பகல் கனவு கண்டால், தெளிய வைக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. இது வேண்டும், இது வேண்டாம் என்று சொல்ல, கேட்க உரிமை ஓட்டுப் போட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு (ஓட்டுப் போடாத வெட்டி ஆபிசர்ஸ் எல்லாம் போய் கிரிக்கெட் பாருங்க).

    சரி நாளையே அனைத்து மதுக்கடைகளையும் மூடி விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம், தினக் குடிகாரர்களின் நிலை என்ன? அத்தனை சுலபத்தில் ஒரே நாளில் விட்டு விடும் பழக்கமா அது? செத்தே போக மாட்டான்? தற்கொலைகள் நிரம்பாதா? கொலைவரை கூட நீடிக்கும். அடுத்தடுத்த எதிர்பாராத அத்தனை பிரச்சினைகளும் வீதிகளில் நிறையும். வருடக் கணக்கில் வாழ்க்கையில் பாதி நாட்கள் குடித்த பழக்கத்தை ஒரே நாளில் எப்படி விட்டு விட முடியும்? அதன் நீட்சியாக கள்ளச் சாராயம் முளைக்குமே! மற்ற இதர போதை வஸ்துக்கள் துளிர் விடத் தொடங்குமே, என்ன செய்வது?

    சரி, இன்று அனைவருமே போராடுகிறோம். அப்போ இதுவரை குடித்தவர்கள் எல்லாம் யார்? (கண்ண கட்டுது). இது என்ன சுய விளம்பர மேடையா? ஆளாளுக்கு நானும் இருக்கிறேன் என்று காட்டிக்க கருத்துச் சொல்வதற்கு? எங்கே ஒரு கேள்வி கேட்கிறேன், இன்று போராடுகிற கூட்டத்தில் பெரும்பாலானவர்களில் ஒருவர் கூட ஒரு முறை கூட குடித்தது இல்லை என்று கூறுங்கள் பார்ப்போம். ம்ஹும்… அப்படிச் சொன்னால் அது குடிகாரன் விடிந்ததும் கேட்கிற, நேற்று சொன்ன பொய். சரி, இப்போதாவது நல்ல புத்தி வந்ததே என்று பாராட்டத்தான் வேண்டும், பாராட்டுவோம். ஆனால், அதே சமயம் இத்தனை போராட்டத்தையும் கண் கொத்திப் பாம்பாக பெருமூச்சு விட்டபடி ஒரு குடிகார கூட்டம் சத்தமே இல்லாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறதே, அவர்களுக்கு என்ன செய்ய போகிறோம்? ம்ம்ம்ம்…

    மெல்ல மெல்லத்தான் குறைக்க வேண்டும். உடலுக்குள் வந்த வைரசை ஒரேடியாக அழிக்க முடியுமா? மெல்ல மெல்லத்தான் அழிக்க முடியும். முள் மீது விழுந்த சேலையை உடனே எடுக்க நினைத்தால் கிழிந்து விட்ட சேலைதான் மிஞ்சும். மெல்ல மெல்லத்தான் எடுக்க வேண்டும். குடிக்க வைத்துக் கெடுத்து, சாவு வரை கொண்டு போய் விட்டு விட்டோம். இப்போது, திரும்ப அழைத்து வருவது அத்தனை சுலபம் அல்ல. மெல்ல மெல்லத்தான் அழைத்து வர முடியும். 10 டு 10 என்பதை மதியம் 2 டு 8 என்று மதுக் கடைகளின் நேரத்தைக் குறைக்க சொல்வோம். மதுக் கடைகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கச் சொல்லுவோம். மதியம் மட்டும் தான் மதுக் கடைகள் திறந்திருக்கும் என்று குடிமகன்களை மனதளவில் தயார் படுத்துவோம். அதே சமயம், மதுவின் தீங்கை செயல் முறையாக ஒவ்வொரு குடிகாரனுக்கும் அவனவன் குடும்பமே தீவிரமாக வகுப்பு எடுக்க கற்றுக் கொடுப்போம்(ரொம்ப முடியலனா சோத்துல விஷத்தை வைச்சிருங்க தாய்மார்களே, 4 பேர் செத்தா 40 பேர் யோசிப்பான்).

    அதே சமயம் அரசு கொடுக்கும் மதுவைக் கூட தரமாகக் கொடுக்க சொல்வோம்(குறைந்த பட்சம் தேளும், பல்லிகளும் இல்லாமலாவது இருக்க வேண்டும்)
    மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்யும் மது கூடங்களுக்கு ஆர்டர்கள் தருவதை அரசு நிறுத்த வேண்டும் என்போம் (மெல்ல மெல்ல அவர்களை வேற தொழில் செய்ய அவர்களை மனதளவில் தயார் படுத்துவோம், பாவம் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள் ?)
    மது பார்களை இல்லாமல் செய்ய அரசு முடிவெடுக்க வேண்டும் (ஒரு பிளாஸ்டிக் டம்ளர் 6 ரூபாய்க்கு விற்ற பிசினெஸ் புத்தி மந்தமானால் ஆகட்டும்)
    கொடுத்த லைசன்சுகளை ரத்து செய்யக் கோரிக்கை வைப்போம் (குடித்தே தீர்வேன் என்று கடவுள் மீது ஆணை இட்டவன் சரக்கை வாங்கிக் கொண்டு சென்று தன் மனைவி மக்கள் முன் அமர்ந்து வீட்டுக்குள் குடிக்கட்டும்)
    வீதிகளில், சாலைகளில் எவனாவது குடித்தால் வெளுத்து விடக் காவல் துறை ஆங்காங்கே உலாவட்டும் (இன்று காவல் காப்பதை விட அது ஒன்றும் கேவலம் இல்லை)
    பெற்றவர்களும் பிள்ளைகளைக் கவனியுங்கள் (பெரிய பள்ளியில் படிக்க வைத்து விட்டால் போதுமா?)
    ஆசியர்களும் மாணவர்களைக் கவனியுங்கள்(எப்போ எவன் மாட்டி விடுவானென்னு பயமா?)
    மாணவர்களும் உலகத்தை கவனியுங்கள் (போதைக்காகவா இந்த பிறப்பு? போதி சொன்ன இந்த மண்ணில் போதை சரியா? கேள்வியை உணருங்கள். பதில் கிடைத்து விடும்)
    அரசும் சிறுவர்களுக்கு மது விற்கக் கூடாது(!)

    இத்தனைக்குமான போராட்டமாக நம் செயல்பாடுகள் அகிம்சை முறையில் நடக்கட்டும். கல் கொண்டு எறிந்தால் காவல் துறை லத்தி கொண்டு அடிக்கத்தான் செய்யும். இரண்டையும் தவிர்ப்போம் இது நீண்ட நெடிய வாழ்வின் மைல்கல். சற்று போராடித்தான் நட முடியும். நட்டு விட்டால், பின் அசைக்க முடியாது.

    குடிக்கும் மனதை மாற்றுவதே பாதி சிக்கலைத் தவிர்த்து விடும். ஒரு குடும்பத்தில் குடிக்கும் ஒருவரை மாற்ற முடியாத குடும்பங்கள்தான் தமிழ் பாரம்பரியத்தின் பதிவுகளா?!!!!

    இன்றைய ஒரு துளிதான் நாளைய பெரு மழை. அது போல இன்று இருக்கும் நூறு மதுக் கடைகள் 50 ஆகும் பின் அது 25 ஆகும். பின் அது 5 ஆகும். பின் ஒரு நாளில் இல்லாமலே போகும்.

    மது இல்லாத உலகம் படைக்கும் கனவை விதைக்கும் முன் “காசு வாங்கிட்டு ஓட்டுப் போடுவதை நிறுத்தி விட்டு மதுக்கடையைத் தூக்கு… ஓட்டு போடுகிறேன்,”என்று சொல்லுங்கள். நாளை நமதே.

    கலவரமோ உயிர்ப் பலியோ இனியும் வேண்டாம் போராட்டம். வலுப்பெற வலுப்பெற, ஆயுதங்கள் கை நழுவி விடும் அவர்களுக்குமே என்பதுதான் நியதி. அது வரை வேண்டும் … நமக்குத் திடமான மன நிலையும், விட்டு விடாத கொள்கையும்.

    Share
  • அவன்,அது,ஆத்மா (33)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 33

    சுந்தரமான நண்பன்

    அவனுக்கு உயர்நிலைப் பள்ளியில் இறைவனால் அருளப்பட்ட நண்பன் சுந்தரம். பெயருக்கு ஏற்றாற் போல நல்ல அழகும், அறிவும் உள்ளவன். கொழுகொழு என்று இருப்பான். பரமசாது. மாகா புத்திசாலி. எட்டாம் வகுப்பில் இருந்து பதினொன்றாம் வகுப்புவரை அவனுக்கு வகுப்புத் தோழனாக சுந்தரம் இருந்தான். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் பொழுது பெஞ்சில் உட்காராமல் முன்பக்கத்தில் தரையில் அமர்ந்து பாடத்தை நன்கு கவனிப்பவர்களில் சுந்தரமும் ஒருவன். சுந்தரத்தின் அருகின் அவனும், சுப்பாமணி என்கிற பாலசுப்ரமணியனும் அமர்திருப்பார்கள். அவனுக்கு சுந்தரம்தான் கணக்குப் பாடத்தின் சந்தேகங்களைத் தீர்த்து வைத்து, அந்தப் பாடத்தின் மீது பற்று ஏற்படும் படிச்செய்தவன். சுந்தரம் அனைத்துப் பாடங்களிலும் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்குபவன். அதனால் எல்லா ஆசிரியர்களுக்கும் சுந்தரத்தின் மீது ஒரு தனிப் பாசம் உண்டு. பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பும் பொழுது அவன் வீட்டு வாசல் திண்ணையில் அமர்ந்திருக்கும் அவனுக்கு அம்மாவிடம் சுந்தரம் பேசுவான். இன்னிக்கு என்னென்ன வீட்டுப் பாடங்கள் செய்துவர வேண்டும் என்று ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள் என்று அவனுக்கு அம்மாவிடம் கூறுவதை வைத்துத்தான் அவனுக்கு அம்மா அவனைக் கேட்பாள். “என்னடா கண்ணா..இன்னிக்குள்ள வீட்டுப் பாடத்தை எழுதி விட்டு விளையாடப் போ…” என்று அவனுக்கு அம்மா சொன்னால், ” இன்னிக்கு ஒண்ணும் கிடையாதம்மா” என்று விளையாடப் போகும் குஷியில் அவன் சொல்லுவான். “சுந்தரம் சொன்னானே..இன்னிக்கு வீட்டுப் பாடம் இருக்குன்னு” என்று கேட்டு அதை முடிக்கவைத்து பிறகுதான் அவனை விளையாடச் செல்ல அனுமதிப்பாள். அவனுக்கு பாடத்தில் ஏதேனும் சந்தேகம் வந்தால் சுந்தரத்திடம் கேட்டுக்கோ என்று சொல்லும் அளவுக்கு சுந்தரமும் அவனும் நெருக்கமாக இருந்தனர்.

    சுந்தரத்திற்கு ரமணி என்ற மூத்த சகோதரனும், ராம்ஜி என்ற ஒரு இளைய சகோதரனும், ஒரு சகோதரியும் உண்டு. சுந்தரம் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது அவனது சகோதரி “கைக்குழந்தை”. சுந்தரம் அம்மாவுக்கும், வீட்டிற்கும் உபகாரமாக இருப்பான். தன் சகோதர, சகோதரிகளைக் கவனித்துக் கொண்டும், தன் பெற்றோர்களுக்கு உதவியாகவும் இருந்து கொண்டு, நன்றாகப் படிக்கவும் செய்கிறவனாக இருந்த சுந்தரத்தை யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்க முடியும்.

    அப்பொழுது சுந்தரம், இராமச்சந்திரபுரம் தெருவில், இப்பொழுது இருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் கோவிலுக்கு நேர் எதிர் வீட்டில்தான் வசித்து வந்தான். அதே தெருவில் இருக்கும் “அம்மாமி அப்பள டெப்போவின்” அப்பளங்களை ஏற்றிச் செல்வதற்காக, சுந்தரத்தின் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் “லிங்கம் பிரதர்ஸ்” லாரி டிரைவர் (அவர் வயதானவர்) சொல்லும் கணக்குகளை எழுதி சரிபார்க்க சுந்தரத்தின் உதவியை அவர் நாடுவார். சுந்தரமும் அவருக்கு உதவுவான். அந்த லாரி “டிரைவருக்கு” சுந்தரத்தின் மீது மிகுந்த அன்பு உண்டு. பள்ளியை விட்டு வந்ததும் கைக்குழந்தையாக இருந்த தன் சகோதரியைக் கொஞ்சி விளையாடுவான். அந்த குழந்தைத் துணிகளை ஒரு வாளியில் போட்டு எடுத்துக் கொண்டு சென்று வாய்க்காலில் தோய்த்து எடுத்து வருவான். அதைப் பார்க்கும், அவனுக்கு அம்மா சுந்தரத்தின் கடமையைப் பெருமையாக,” நல்ல பொறுப்பான கொழந்தை சுந்தரம்” என்று மெச்சுவாள்.

    பதினோராவது வகுப்புப் பொதுத் தேர்வுக்கு முன்பாக “ஸ்ரீநிகேதன்” என்ற அமைப்பினர் நடத்தும் ஒரு தேர்வை அந்தப் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. அதை எழுதினால் பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் நன்கு தயாராகி விடுவார்கள். தேர்வு பயமே இருக்காது. அத்தனை பயிற்சிகளை ஆசிரியர்கள் அந்தத் தேர்வுக்கே தந்து விடுவார்கள். அப்படி ஒரு தேர்வு நாள் 08.02.1971 சனிக்கிழமை அவனுக்கு அமைந்தது. அன்று காலையில் ஆங்கிலப் பாடத்தின் முதல்தாள் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்து மதிய உணவுக்காக அவனும், அவனுக்கு நண்பர்களும் பள்ளிக் கூடத்தின் வேப்பமர நிழலின் புல்தரையில் அமர்ந்திருந்தனர். சுந்தரம் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டு வருவதாகச் சொல்லித் தன் சைக்கிளில் ஏறினான். இன்னொரு நண்பன் கே.எஸ்.நாராயணன் தானும் வருவதாகச் சொல்லி அவனது சைக்கிளின் பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டான். “ஏலே எறங்குலே..ஏலே எறங்குலே” என்று சுந்தரம் கத்திக் கொண்டே சைக்கிளை ஒட்டிக் கொண்டு பள்ளியின் வாசலின் இடது பக்கமாகத் திரும்பிச் செல்வதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

    அவனும் , மற்ற நண்பர்களும் மரத்தடியில் அமர்ந்து சாப்பிடத்துவங்கினார்கள். அடுத்த ஐந்தாவது மணித்துளியில் பள்ளியின் வாசலில் ஒரே பரபரப்பு. ஆசிரியர்களும் மாணவர்களும் சாலையில் ஓடிச் செல்வதை அவனும், நண்பர்களும்,” என்னாச்சு…” என்று கேட்ட பொழுது,” சுந்தரம்” லாரில” அடிபட்டுச் செத்துப் போய்ட்டான்” என்று பள்ளியின் மாணவர் தலைவன் “லக்ஷம்” சொன்னான். அதோடு இன்று மதியத் தேர்வும் கிடையாது என்று சொல்லி ஓடினான். அனைவரும் அப்படியே எழுந்து சாலையை நோக்கி ஓடினர் . சர்மாஜி சாலையில் ரங்கசாமி கடைக்கு நேர் எதிரில், போடப் பட்டிருந்த ஒரு “ஆர்ச் பந்தலை”த் தாண்டி அந்த “”லிங்கம் பிரதர்ஸ்” லாரி ஒரு கோணலாக நின்று கொண்டிருந்தது. அதன் பின்பக்கதின் இடது பக்கச் சக்கரத்தின் அடியில் சுந்தரம் ரத்தவெள்ளத்தில் கிடந்தான். மாணவ, மாணவியர்கள் கண்ணீர் விட்டுக் கதறிய காட்சி இன்றும் அவனுக்குத் தெரிகிறது. அந்த லாரி டிரைவர் .”நானே இந்தப் புள்ளயக் கொன்னுட்டேனே…கொன்னுட்டேனே” என்று குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் ரங்கநாத ராவ், மற்றும் ஆசிரியர்கள் கண்ணீர் விட்டனர். சுந்தரத்தின் உடலை அம்பாசமுத்திரம் அரசாங்க மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கிருந்து நேராக இடுகாட்டிற்கு சுந்தரத்தின் உடல் கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப் பட்டதாக அவனுக்கு அப்பா சொன்னார். அவனை இடுகாட்டிற்குச் செல்ல வீட்டில் அனுமதிக்கவில்லை. எதற்கும் அழவே செய்யாத அவன் அன்று அவனுக்கு அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுதான். அவனால் சுந்தரத்தை மறக்கவே முடியாது. சுந்தரம் கற்றுத்தந்த கணக்கும், பண்பும் இன்றும் அவனுக்கு உதவுகிறது. அவன் பதினோராவது வகுப்புப் பொதுத் தேர்வில் கணக்குப் பாடத்தில் “நூற்றுக்குத் தொண்ணூறு” மதிப்பெண்கள் வாங்கியிருந்தான். அது “சுந்தரம்” என்ற நண்பன் கற்றுத் தந்த வித்தையால் பெற்றது.

    இப்பொழுதும் வெள்ளை அரைக்கை சட்டையும், பச்சை அரைக்கால் டிராயரும், காலில் ஹவாய்ச் செருப்பும், கண்களில் அறிவுச் சுடரும், நெற்றியில் அழகாகத் திருநீர்க் கீற்றும், ஆப்பிள் கன்னங்கள் குழியச் சிரிக்கும் அந்த சுந்தரம்தான் அவன் நினைவில் இருக்கிறான்.

    மீ. பாலசுப்ரமணியன் என்ற சுப்பாமணி

    amvமுதல் வகுப்பில் இருந்து பதினொன்றாம் வகுப்பு வரை அவனுக்குப் பள்ளித் தோழன் மீ.பாலசுப்ரமணியன் என்ற சுப்பாமணி. தொந்திவிளாகம் தெருவில் இருக்கும் அவனுக்கு அம்மாவழிப் பாட்டியின் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில்தான் சுப்பமணி வசிக்கிறான். இப்பொழுதும் அங்குதான் இருக்கிறான். லக்ஷ்மீபதி பள்ளிக் கூடத்தில் அவனும் சுப்பாமணியும், ரங்கா வாத்தியாரின் மூத்த மகன் கண்ணனும், பட்டாம்பிச் சங்கரையர் மகன் வீரமணியும் வகுப்புத் தோழர்கள். அவன் அனேகமாக தொந்திவிளாகம் தெருவில் உள்ள நண்பர்களுடன்தான் விளையாடிக் கொண்டிருப்பான். மதியம் பள்ளியில் இடைவேளை விடும் சமயம், அவனும், சுப்பாமணியும் வீட்டிற்கு ஓடியே வருவார்கள். மதியம் இடைவேளையில் அவன் தொந்திவிளாகம் தெருவில் இருக்கும் அவனுக்கு பாட்டியின் வீட்டிற்குத்தான் வருவான். பாட்டி அவனுக்கு சூடாக தோசையோ, குமுட்டி அடுப்பில் தணலில் மூடிவைத்து வேகவைத்த சக்கரவள்ளிக் கிழங்கையோ (அதை திருநெல்வேலி மாவட்டத்தில் “சீனிக் கிழங்கு” என்பார்கள்) தருவாள். அதை அவன் அவசர அவசரமாகத் தன் டிராயர் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு, சுப்பாமணியுடன் பள்ளிக் கூடத்திற்கு ஓட்டிவிடுவான். ஒருநாள் அப்படித்தான் நாலாவது வகுப்பு படிக்கும் சமயம், பள்ளி இடைவேளை நேரம் பாட்டி சாப்பிடத் தட்டில் போட்ட தோசைகளை எடுத்து வலது ட்ராயர் பையில் போட்டுக் கொண்டு ஓடும் சமயம் , “எச்சில் பத்து ஒண்ணும் கெடையாதா” என்று பாட்டி கத்துவதைக் கேட்டுக் கொண்டே பறந்து விட்டான் . சூடான தோசைகள் அவனது வலது தொடையைச் சுட்டுக் கொண்டிருந்தது. சுப்பாமணி முறுக்கும், சீடையும் கொண்டு வந்திருந்தான். இருவரும் கடேசி பெஞ்சுக்கு முந்தின பெஞ்சில் அமர்ந்து கொண்டிருந்தனர். அது செட்டியார் சார் வகுப்பு. மெதுவாக அவன் தோசையை எடுத்து சுப்பாமணிக்குக் கொடுத்தான். சுப்பாமணி அவனுக்கு முறுக்கும் சீடையும் தந்தான். இவர்கள் இருவரும் குனிந்து குனித்து ஏதோ செய்கிறார்கள் என்ற சந்தேகத்தில் செட்டியார் சார் அவர்கள் பக்கம் வந்த பொழுது மீதி இருந்த தோசையை அவன் வாயில் அடைத்துக் கொண்டு விட்டான். செட்டியார் சாருக்குக் கோபம் அதிகமாகி, கையில் உள்ள பிரம்பால் அவனை விளாசி விட்டார். அவனும், சுப்பாமணியும் சிரித்தனர். சாருக்கு இன்னும் கோபம் வந்து இருவரையும் பின்னி எடுத்து விட்டார்.

    சுப்பாமணிக்கு “எலெக்ட்டிரிகல்” விஷயங்களில் நாடாம் அதிகம் இருந்தது. சுப்பாமணியின் அப்பா “பெர்பெக்ட் எலெக்ட்டிரிகல்” (Perfect Electrical) என்ற பெயரில் ஒரு கடையை திருநெல்வேலியில் நடத்தி வந்தார். “L & T கம்பெனியின் நெல்லை மாவட்ட வியாபாரப் பிரிவின் அதிகார பூர்வ நிறுவனம் இவர்களுடையது. அதன் வேலைகளை ஊரில் உள்ள வீட்டின் பின்புற இடத்தில் வைத்து “சுப்பையா, கோபால்” என்ற வேலையாட்கள் செய்து வந்தனர் . பெரிய பெரிய “மோட்டார்கள்” அங்கிருக்கும். வேலையாட்கள் அவைகளைச் சரிசெய்யும் பொழுது சுப்பாமணி பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொண்டிருப்பான். அந்தப் பழக்கம் சுப்பாமணியை அந்தத் துறையில் ஒரு நிபுணனாகச் செய்து விட்டது. சுப்பாமணி பதினோராவது வகுப்பில் தேறவில்லை. ஆனால் ஒரு “சிறந்த என்ஜினீயருக்கு” இருக்கக்கூடிய திறமை அவனுக்கு இருந்தது. சுப்பாமணியின் சகோதரர்கள், சகோதரிகள் அனைவருமே கல்லூரிப் பட்டப்படிப்பு முடித்தவர்கள். சகோதரர்கள் அநேகமாக என்ஜினீயர்கள். சுப்பாமணி அவர்களது குடும்பத்து நிறுவனமான “பெர்பெக்ட் எலெக்ட்டிரிகல்” அலுவலகத்தை நிர்வகித்தான். சுப்பாமணிக்கு தர்மசிந்தனை அதிகம். வலதுகை தருவது இடது கை அறியாது.

    1988ம் வருடம் அவனும், அவனுக்கு மனைவி சீதாலக்ஷ்மியும் கல்லிடைகுறிச்சிக்குச் சென்றிருந்தனர். அதுசமயம், அவனும், அவனுக்கு மனைவியும் சுப்பாமணியின் அப்பாவையும், அம்மாவையும் பார்த்துவரச் சென்றனர். சுப்பாமணியின் அப்பா எல்.எம்.சுந்தரம் ஐயர் ஒரு நல்ல உழைப்பாளி. எதுவும் சரியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர். அவரது மனைவி கோமு மாமி. மகாலட்சுமி போல இருப்பாள். “விஸ்வநாதா…” என்று வாய் நிறைய அன்பொழுக, கோமுமாமி அழைப்பதே மகிழ்ச்சியாக இருக்கும்.

    அவனை அருகில் அமர்த்திக் கொண்டு,” விஸ்வநாதா…நீயும், சுப்பாமணியும் சின்ன வயசுல இந்தத் தெருவுல கழுதையையும், பன்னிகளையும் மேச்சுண்டு..ஊர்சுத்தின்டிருந்தேள்…நான் உங்களச் சத்தம் போடுவேன்…ஆனா இன்னிக்கு இந்தச் சுப்பாமணிக்குத் தெரிந்த விஷயம் ஒரு என்ஜினீயருக்குத் தெரியாது…இங்க ஒரு மிஷின் சரியா இல்லைனா, எங்க சுப்பாமணி அந்த “சவுண்ட்” வச்சே அதோட ஜாதகத்தச் சொல்லிடுவன். “L & T கம்பெனி”லேந்து எந்த என்ஜினீயர் வந்தாலும், சுப்பாமணி சார் இருக்காரான்னுதான் கேப்பா…அப்படி ஒரு திறமை அவனுக்கு இருக்கு. அதுக்கு மேல அப்பா, அம்மா கிட்ட ரொம்பப் பணிவாவும், அன்பாவும் இருக்கான். அதமாதிரியே நீயும் இன்னிக்கு நல்ல கவிஞனா இருக்கே…ஒன்னோடு கவிதைகள, ஆசார்யாளப் பத்தி எழுதினதெல்லாம் படிச்சேன்…எனக்கு ரொம்பப் பெருமையா இருந்தது. எல்லாத்துக்கும் மேல ஒனக்கு சிருங்கேரி ஆசார்யாளோட கிருபையும் இருக்கு…இதுக்கு மேல என்னப்பா வேணும்..நீங்க ரெண்டு பெரும் என்னிக்கும் நல்ல நண்பர்களா நன்னா இருங்கோ…” என்று மனதாரப் பாராட்டினார். சுப்பாமணியின் அப்பாவையும், அம்மாவையும் அவனும், அவனுக்கு மனைவியும் நமஸ்காரம் செய்தனர். அந்தப் பெரியோர்கள் அவர்களை ஆசீர்வதித்தனர்..

    நண்பன் சுப்பாமணியின் பெண் வித்யாவும், மாப்பிளையும், மகன் விக்னேஷ் பாலசுப்ரமணியனும் இறைவன் அருளால் நன்றாக இருக்கின்றனர். இது போன்ற நண்பர்களின் குடும்ப மகிழ்ச்சியே அவனுக்கு ஒரு பிரார்த்தனைதான்.

    08.10.2015

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

     படம்  உதவி  க.வி.அன்னபூர்ணா

    Share
  • பூவண்ணம் போல நெஞ்சம் …

    கவிஞர் காவிரிமைந்தன்.

    Salil Chowdary_stampபூவண்ணம் போல நெஞ்சம் …

    அழியாத கோலங்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற பாட்டு! இந்திப்பட இசை அமைப்பாளர் சலீல் செளத்ரி இசையில் பிரதாப்போத்தன் – ஷோபா நடிப்பில், ஜெயச்சந்திரன் பி.சுசீலா பாடிய பாடலாய், பூவண்ணம் போல நெஞ்சம்… இளம்காதலர்களின் இனிய உரையாடல்கள் தொடர்ந்தவண்ணமிருக்க, சின்னஞ்சிறு சிரிப்பும் சந்தோஷப்பூக்களும் சிதற, உதடுகளின் அசைவுகள் இன்றி பின்னணியில் மட்டும் குரல்சேர்ப்பு நடக்கிறது.

    மெளனங்களால் வரையப்பட்ட காதல் கவிதைக்குச் சுகமான மெட்டமைத்து, வார்த்தைப் பூக்களை வார்த்தளித்திருக்கிறார் கவிஞர் கங்கை அமரன். இனிமை தவழும் இளமை ததும்பும் பாடலில் இன்பம் குறைவில்லாமல், இசையால் ஆபரணம் கட்டியிருக்கிறார்கள் சலீல் செளத்ரி.

    காதலின் அடர்த்தி அதிகமாகும்போது சொந்தங்கள் இந்தப் பிறவியும் தாண்டி ஏழேழு பிறவிகளிலும் தொடர வேண்டும் என்கிற ஆவலைப் பதிவு செய்யத் தவறுவதில்லை. மலர்களின் இதழ்விரிப்புகூட மெளனமாய்தான் நடக்கிறதல்லவா? பெண்மையின் நளினங்கள் இன்பம் கூட்டும் காதலிலே எத்தனை ரசங்கள்? ஆண் இதனை அனுபவிக்கவே பிறந்தானோ? பெண் இதனைப் பரிசளிக்கவே பிறந்தாளோ? இருவரின் கூடலில் இன்பத்தின் கொள்ளையிதோ. பாடலிலே வார்த்தைகளால் பரிமாறப்பட்டிருக்கிறது!

    படர்ந்துவிடும் கொடிபோல் பாவை தலைவன் மடியில் சாய, தொடர்ந்து வரும் இன்பங்கள்பற்றி விரிவுரை தேவையில்லை. ஷோபாவின் எதார்த்த நடிப்பில் காதல் கவரிவீசுகிறது!!!

                   பூ வண்ணம் போல நெஞ்சம்1     பூ வண்ணம் போல நெஞ்சம்     பூ வண்ணம் போல நெஞ்சம்2

    ஆண்:
    பூவண்ணம் போல நெஞ்சம்
    பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
    எங்கெங்கும் இன்ப ராகம் என்னுள்ளம் போடும் தாளம்

    பெண்:
    பூவண்ணம் போல நெஞ்சம்
    பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
    எங்கெங்கும் இன்ப ராகம் என்னுள்ளம் போடும் தாளம்

    ஆண் – பெண்: பூவண்ணம் போல நெஞ்சே… ஹே… ஏஹே…

    ஆண்: ஆஹாஹா…

    பெண்: ஆஹாஹா…

    பெண்:
    இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
    எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ

    ஆண்:
    பிறக்கும் ஜென்மங்கள்
    பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ

    பெண்:
    இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
    எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ

    ஆண்:
    பிறக்கும் ஜென்மங்கள்
    பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ

    பெண்:
    இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை
    தனிமையும் இல்லை

    ஆண்:
    பிறந்தால் எந்த நாளும்
    உன்னோடு சேர வேண்டும்

    பெண்:
    பூவண்ணம் போல நெஞ்சம்

    ஆண்:
    பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்

    பெண்:
    எங்கெங்கும் இன்ப ராகம்
    என்னுள்ளம் போடும் தாளம்

    ஆண் – பெண்: பூவண்ணம் போல நெஞ்சே… ஹே… ஏஹே…

    ஆண்:
    படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
    துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்

    பெண்:
    கனிக்குள் வாட்டங்கள்
    அணைக்கும் ஊட்டங்கள் என் இன்பங்கள்

    ஆண்:
    படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
    துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்

    பெண்:
    கனிக்குள் வாட்டங்கள்
    அணைக்கும் ஊட்டங்கள் என் இன்பங்கள்

    ஆண்:
    இணையும்போது இனிய எண்ணம்
    என்றும் நம் சொந்தம்

    பெண்:
    இமைக்குள் ஏழு தாளம்
    என்றென்றும் காண வேண்டும்

    ஆண்:
    பூவண்ணம் போல நெஞ்சம்

    பெண்:
    பூபாளம் பாடும் நேரம்
    பொங்கி நிற்கும் தினம்

    ஆண்: எங்கெங்கும் இன்ப ராகம்
    என்னுள்ளம் போடும் தாளம்

    ஆண் – பெண்: பூவண்ணம் போல நெஞ்சே… ஹே… ஏஹே…
    ஹே… ஏஹே… ஹே… ஏஹே…

    காணொளி: https://www.youtube.com/watch?v=0hNP6lc52tM

    https://www.youtube.com/watch?v=0hNP6lc52tM

    Share
  • ஆன்மீகமும் நானும் (8)

    எம்மதமும் சம்மதமே

    ஒரு காவி உடை தரித்த ஆன்மீகவாதி ஒரு முறை ரயிலில் பயணித்தபோது எதிர் வரிசையில் ஒரு பாதிரியார் உட்கார்ந்திருந்தாராம். பாதிரியார் தன் பக்கத்தில் இருந்தவரிடம் கதை சொல்ல ஆரம்பித்தாராம்.

    “ஒரு சமயம் ஒரு இந்து, ஒரு முசல்மான், ஒரு கிருஸ்துவர் ஆகிய மூவரும் ஒரு விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர். திடீரெனெ விமானம் வெடித்துச் சிதறியது, அதனுள் இருந்த பயணிகள் அனைவரும் தூக்கி எறியப் பட்டனர்.

    இந்து, ‘பிள்ளையாரப்பா, முருகா, ராமா, கிருஷ்ணா, ஈஸ்வரா, பராசக்தி என்னெக் காப்பத்துங்கோ’ ந்னு கத்திண்டே விழுந்தானாம் ஒரு பாரையின் மீது. அவன் உயிர் பிரிந்தது.

    முசல்மான், ‘அல்லா ‘முஜே பச்சாவ்’ என்றபடி கீழே விழுந்தவன் அடர்ந்த ஒரு மரத்தின் மீது விழுந்தான். அவனும் சில்லரை காயங்களுடன் உயிர் பிழைத்தான்,

    கிருஸ்துவன், ‘யேசுவே என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கதறியபடி விழுந்தான். அவன் ஒரு திராக்ஷைப் பந்தலில் விழுந்தான். அந்தப் பந்தல் ஒரு கம்பிச்சுருள் மெத்தையில் விழுந்தது போல அவனை இரண்டு மூன்று முறை சிறிதளவு மேலும் கீழுமாக தூக்கிப் போட்டது. அவ்வளவே. அவன் உடம்பில் ஒரு கீறல் கூட விழவில்லை.

    இறந்த இந்துவின் ஆவி மேலுலகம் சென்றது. அங்கு அவன் கடவுளை சந்தித்துக் கேட்டான், ‘ஆண்டவா உன்னை நான் நம்பினேனே. என்னைக் காப்பாற்ற அழைத்தேனே ஏன் வரவில்ல?’ என்று.

    கடவுள் சொன்னார், அப்படியா ‘நீ பிள்ளையாரைக் கூப்பிட்ட போது அவர் காப்பாற்றுவார் என்று நினைத்தேன்.’ பின் அவன் ஆவி முருகனைக் கேட்டதாம், ‘முருகா நீ ஏன் என் உயிரைக் காக்க வரவில்லை? எத்தனை முறை கந்த சஷ்டிக் கவசம் சொல்லி இருப்பேன் நான்?’ என்று. முருகன் சொன்னாராம், ‘நீதான் ராமா, கிருஷ்ணா, பரமேஸ்வரா, பரா சக்தி’ன்னு பலபேரெக் கூப்பிட்டாயே அவர்களில் யாராவது ஒருவர் உன்னைக் காப்பாற்றச் சென்றிருப்பர்கள் என்றெண்ணி மயிலோடு விளையாடச் சென்று விட்டேன் நான்’ என்று.”

    இப்படிச் சொல்லித் தன் கதையினை முடித்தார் பாதிரியார்.

    புத்தகம் படித்துக் கொண்டிருந்த இந்து ஆன்மீகவாதி சொன்னார், “அப்படியா நான் வேறு மாதிரியல்லவோ கேட்டேன் இதே கதையை?

    ஒரு ஜெர்மானியர், பிரிட்டிஷ் காரர், ஒரு பிரஞ்சுக் காரர், ஒரு அமெரிக்கர் பயணித்த விமானம் ஒன்று நடு வானில் விபத்துக்குள்ளாக நால்வரும் வெளியே தூக்கி எறியப் பட்டனர். நால்வரும் ஒரு கல் மலை மீது விழுந்து இறந்தனர். அவர்கள் ஆவி மேலே சென்றது.

    அங்கு அவர்கள் நால்வரும் சந்தித்த யேசுவைக் கேட்டனர், ‘நாங்கள் உங்களை அழைத்தோமே எங்களைக் காப்பாற்றச் சொல்லி. ஏன் வரவில்லை நீங்கள்?’ என்று.

    யேசு சொன்னாராம், ‘நான் ஜெர்மனியனைக் காப்பாற்றி இருந்தால், பிரிட்டிஷ் காரர் சொல்லுவார் நான் ஒரு நாசியைக் கண்டு பயந்து விட்டேன் என்று, பிரிட்டிஷ் காரரைக் காப்பாற்றி இருந்தால், நான் அவர்களது கடற்படைக்கு அஞ்சி விட்டேன் என்று பிரஞ்சுக் காரர் சொல்லுவார். பிரஞ்சுக் காரரைக் காப்பாற்றி இருந்தால் அவரது நடை உடை பாவனையில் மயங்கிவிட்டேன் நான் என்று மற்ற மூவரும் சொல்லுவீர்கள்.’

    அமெரிக்கர் கேட்டாராம், ‘பின் நீங்கள் என்னைக் காப்பாற்றி இருக்கலாமே?’ என்று. யேசு சொன்னாராம், ‘நான் அதை செய்திருக்கலாம். ஆனால் மக்கள் என்ன பேசுவார்கள் தெரியுமா? அமெரிக்கா உலகத்திலேயே மிகமும் பலம் வாய்ந்த வல்லரசு. அதனால் தான் நான் உன்னைக் காப்பாற்றினேன்’ என்று. இது தேவையா எனக்கு?’ என்றாராம் யேசு.”

    இந்து ஆன்மீக வாதி தொடர்ந்தார், “இப்படிக் கதைகளை எந்த மாதிரி வேண்டுமானாலும் சொல்லி மக்களை எளிதாக ஏமாற்றி விடலாம். இந்த மதம் உயர்ந்தது. அந்த மதம் தாழ்ந்தது என்று கிடையாது. மதங்கள் காட்டும் பாதையோ, போதனைகளோ மாறு பட்டு இருக்கலாம். ஆனால் அவற்றின் குறிக்கோள் ஒன்றே. மதங்கள் எல்லாமே முயல்வது என்ன? மனிதனை இன்னும் நல்லவனாக ஆக்க வேண்டும் என்பதுதான்.”

    பாதிரியார் தன் தவறை உணர்ந்தார். மன்னிப்பும் கோரினார்.

    (தொடரும்…..)

    நடராஜன் கல்பட்டு

    Share
  • ஆன்மீகமும் நானும் (7)

    நடராஜன் கல்பட்டு

    சின்மயா மிஷனில் பங்கு பெற்ற நாட்கள்

    போலிகள் சிலரைப் பார்த்து விட்டோம். இனி சின்மயா மிஷன் மீது எனக்கு ஏற்பட்ட ஈடுபாட்டுக்குத் திரும்புவோம்.

    காலஞ்சென்ற திரு சின்மயானந்தாவை ஒரு மிகச் சிறந்த குரு என்பேன். சீடர்களைத் தயார் செய்வதில் ஆகட்டும், மக்களுக்கு சத் விஷயங்களைப் போதிப்பதில் ஆகட்டும் அவருக்கு ஈடு இணை இல்லை.

    ஆங்கிலத்தில் அவர் மிக எளிமையாக எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் பகவத் கீதை, உபநிஷத்துக்கள், வேத மந்திரங்கள், சனாதன தர்மம் இவை பற்றி ஆற்றிய உரைகளும் சரி. அவர் எழுதியிருந்த புத்தகங்களும் சரி மிகவும் போற்றத் தக்கவை.

    ஸ்வாமி சின்மயானந்தா மற்றும் அவரது பிரதான் சீடர் ஸ்வாமி தயானந்தா அவர்கள் ஆற்றிய உரைகளில் கேட்டு ரசித்த சில துளிகளை சில மடல்களில் தருகிறேன்.

    ஒரு கேள்வி: “எல்லா உயிருள்ள வற்றுள்ளும், உயிரற்ற வற்றுள்ளும் இருப்பது ஒரே இறைவன் என்கிறீர்களே இதை எப்படி நம்ப முடியும்? நிலம் வேறு, நீர் வேறு, மண் வேறு, கல் வேறு, மனிதன் வேறு, விலங்குகள் வேறு, பறவைகள் வேறு என்றுதானே நாம் பார்க்கிறோம்?”

    “உண்மைதான். பார்ப்பதற்கு அவை வேறு வேறாகத்தான் தெரிகின்றன. அவற்றில் ஒவ்வொன்றை எடுத்துக் கொண்டு சிறு துண்டுகளாக்கிக் கொண்டே செல்லுங்கள். அத்துண்டுகளுக்கு நீங்கள் எடுத்துக் கொண்ட மூல பொருளின் குணங்கள் இருப்பதைப் பார்ப்பீர்கள். அவற்றினை மிக மிகச் சிறிய துண்டுகளாகுங்கள். அப்போதும் மூலக்கூறுகள் (molecules) என்று சொல்லப் படும் அந்தத் துகள்களுக்கு மூலப் பொருளின் குணங்கள் இருக்கும். இந்த அளவிலான துண்டுகளை நம் பூத உடலின் கண்களால் காண முடியாது. சக்தி வாய்ந்த பூதக் கண்ணடியான நுண்நோக்கியால் மட்டுமே காண முடியும்.

    மூலக்கூறுகளை எலத்திரன் நுண் நோக்கியால் (electron microscope) மட்டுமே காண முடியும். அப்படிப் பார்க்கும் போது அவை அணுக்களால் (atoms) ஆனவை என்பது புரியும். அந்த அணுக்கள் ஒவ்வொன்றும் தனித் தன்மை வாய்ந்தவை. அணுக்களையும் மிகவும் சக்தி வாய்ந்த எலத்திரன் மின் நோக்கியால் பார்த்தால் அணுக்கள் நேர் மின்னி, எதிர் மின்னி (protons and electrons) என்னும் கண்ணுக்குப் புலப்படாத மிக மிகச் சிறிதானவற்றால் ஆனவை என்பது தெரியும். ஒவ்வொரு அணுவிலும் இருக்கும் மின்னிகளின் எண்ணிக்கை மாறு படும். அதைப் பொருத்துதான் ஒவ்வொரு அணுவுக்கும் தனித் தன்மை வருகிறது. ஆனால் நேர் மின்னிகள் எல்லாமே ஒரே மாதிரியானவை. அதே போல் எல்லா எதிர் மின்னிகளுமே ஒரே குணம் கொண்டவை.

    ஆக ஆரம்பத்தில் வெவேறு குணங்கள் கொண்ட பொருட்களாகக் காணப் பட்டாலும் இவை எல்லாமே ஒரே பொருட்களால், நேர் எதிர் மின்னிகளால் ஆனவைகள்தான். இதையேதான் நம் ஆன்மீகமும் சொல்கிறது. இவ்வுலகில் நாம் காணும் எல்லாமே மாயைதான். அவற்றுள் இருப்பது அந்த ஈசனும் ஈஸ்வரியும் தான் என்று.”

    அடுத்த கேள்வி: “எல்லோர் உள்ளிருந்தும் இயக்குவது ஒரே ஈசன் தான் என்றால் பின் ஏன் ஒருவன் பணக்காரனாக இருக்கிறான்? ஒருவன் ஏன் ஏழையாக இருக்கிறான்? ஒருவன் அறிவாளியாக இருப்பதேன்? மற்றொருவன் முட்டாளாக இருப்பதேன்? ஒருவன் அழகாக, மற்றொருவன குரூபியாகவோ, குருடனாகவோ, செவிடனாகவோ, முடவனாகவோ இருப்பதேன்?”

    சின்மயானந்தாவின் பதில்: “உங்கள் வீட்டிலே மின் விளக்குகள், மின் விசிறிகள், குளிர் சாதனப் பெட்டி, மிசாரத்தால் வென்னீர் போடும் அண்டா, ரேடியோ, டீவீ என்று உள்ளனவே. அவற்றில் ஒன்று வெளிச்சம் தருகிறது. மற்றொன்று உங்களுக்கு சாமரம் வீசி காற்றினை அளிக்கிறது. ஒன்று குளிரூட்டுகிறது. ஒன்று உஷ்ணம் தருகிறது. ஒன்று பேசுகிறது, பாடுகிறது. மற்றொன்று ஒலியுடன் காட்சிகளையும் அளிக்கிறது. இவை எல்லாவற்றையும் இயக்குவது அந்த ஒரே மின்சாரம் தானே.”

    மூன்றாம் கேள்வி: “கண்ணுக்குப் புலப்படாத ஒன்றினை (கடவுளை) இருப்பதாக நம்புவது எப்படி?”

    “மின்சாரம் இருக்கிறதா?”

    “இருக்கிறது.”

    “அதை நீங்கள் பார்க்க முடியுமா?”

    “முடியாது.”

    “பின் எப்படிச் சொல்லுகிறீர்கள் மின்சாரம் இருக்கிறது என்று? லண்டன் நகரம் இருக்கிறதா?”

    “இருக்கிறது.”

    “நீங்கள் அங்கு போயிருக்கீர்களா?”

    “இல்லை.”

    “அப்போது எப்படி நிச்சயமாக லண்டன் நகரம் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்?”

    “படங்களில் பார்த்திருக்கிறேனே.”

    “உங்கள் வீட்டிலே இறைவன் படங்கள் இல்லையா? கோவில்களில் இறைவனின் சிலைகள் இல்லையா? சர்ச்சுகளில் சிலுவைகள் இல்லையா? முகம்மதியர் வழிபாட்டுத் தலங்களிலே ஒரு பிறைச் சந்திரனும் நட்சத்திரமும் கண்டதில்லையா? நீங்கள் இறைவனை உங்கள் ஊனக் கண்களால் பார்க்க முடியாது. எப்படி அணுவைக் காண இலத்திரன் நுண் நோக்கி தேவைப் படுகிறதோ அது போல இறைவனைக் காண ஞானக் கண் தேவைப் படுகின்றது. அதை உங்களுக்கு அளிப்பதே ஆன்மீகம்தான்.

    ஆன்மீகமும் விஞ்ஞானமும் ஒன்றுக் கொன்று எதிர் மறை ஆனவை அல்ல. இரண்டுமே ஒன்றுதான். மனிதனின் அஞ்ஞான இருள் நீக்கி மெய்ஞான ஒளி அளிக்கும் விஞ்ஞானமே ஆன்மீகம்.”

    (தொடரும்……)

    Share