Year: 2016

  • தமிழ்நாட்டு வாழ்த்து

     

    சி. ஜெயபாரதன், மேகலா

    aj

    தங்கத் தமிழ்நாடே! எங்கள் தாய்நாடே!
    சங்கத் தமிழ்வளர்த்த பண்டைத் திருநாடே!
    சிங்கத் தமிழர் உதித்த செந்நாடே!
    மங்காப் புகழ் ​மங்கையர் திகழ்நாடே!
    எந்தையும் தாயும் சிந்தை மகிழ்ந்திட
    முந்தை குலாவியச் செந்தமிழ் நாடே!
    வங்கக் கடலெழு செங்கதிர் ஒளியூட்ட
    தென்குமரி முனைதிகழ் வள்ளுவர் வழிகாட்ட
    ஆத்திசூடி ஓளவை, சூடிக்கொடுத்த ஆண்டாள்,
    வான்புகழ் வள்ளுவர், தேன்கவி இளங்கோ,
    கவிச்செல்வர் கம்பர், கவிக்கோ சேக்கிழார்
    புதுமைக்கவி பாரதி, புரட்சிக்கவி பாரதிதாசன்,
    யாவரும் உனது மாதவ மக்கள்!
    யாதும் நாடே யாவரும் கேளிர்!
    தீதிலா துனையாம் பாதுகாத் திடுவோம்!
    காசினி மீதில் நேசமாய்த் திகழும்
    மாசிலா நாடே! மைந்தர்​கள்​ ஒன்றாய்
    வாழ்த்துவம் உனையே! உயர்த்துவம் உனையே!
    ​பாரதத் தாயின் தவத்திரு நாடே!
    ​பங்கமோ பிரிவோ உனக்கு நேர்ந்தி​டின்
    பொங்கி எழுந்திடு மெங்கள் உதிரம்!
    ++++++++++++++++

    Share
  • பூத வடிவுள்ள புதுக்கோள் -9 மறைவாய்ச் சூரியனுக்கு முறையற்ற சாய்வை உண்டாக்குகிறது

    Batygin Shows Planet 9

    புறக்கோளாய் சூரியனுக்குப் புதிய பூதக்கோள் -9

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++

    https://youtu.be/6poHQ2h00ZA

    https://youtu.be/fAIV_6lcbIQ

    https://youtu.be/TBnItMgSjsE

    http://video.pbs.org/video/1790621534/

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A

    *********************

    planet-9-orbit

    சூரிய குடும்பத்தின் புறக்கோளாய்ச்
    சுற்றும் புதிய கோள் ஒன்று
    ஒளிந்திருப் பதற்கு ஆதாரம்
    தெளிந்துள்ளது !
    பத்தாயிரம் ஆண்டுக் கொருமுறை
    பரிதியைச் சுற்றி வரும்
    சரிந்த நீள்வட்ட பாதை.
    குள்ளக் கோள்களை ஒருபுறம் தள்ளும்.
    நெப்டியூன் கோளின் நிறை.
    பூமியைப் போல்
    பத்து மடங்கு பளு.
    புறக்கோள்கள் போல் வாயுக்கோள்.
    புளுடோவைப் போல்
    ஐயாயிரம் மடங்கு நிறை.
    புதுக்கோள் -9 வடிவத்தை, நெடும் பாதையை
    இதுவரைக் கண்டிலர்.
    சூரியன் சுழலச்சைப்  பூதக்கோள் -9
    கோரமாய்ச் சாய்க்கும்,
    விந்தை என்ன ?
    விதி என்ன ?

    ++++++++++++++

    planet-9

    புதுப் புறக்கோள் -9 தொடர்ந்து எமக்கு வியப்பளித்து வருகிறது.  கூர்ந்து நோக்கும் போது மர்மமாக இருந்த சூரிய மண்டத்தின் சில புதிர்களை விடுவிக்கிறது.

    கான்ஸ்டன்டின் படிஜின் [Professor, Planetary Science Caltech Researcher] 

    மற்ற கோள்கள் போலின்றி மிகச் சரிந்த சுற்றுப் பாதையில் செல்லும் புதுக் கோள் -9 இன் நிறை பேரளவானது !  அதனால் சூரிய மண்டலம் மெதுவாய் நேர்நிலை நழுவிச் சரிவதைத் தவிர வேறு வழியில்லை.

    எலிஸபெத் பெய்லி [கோள் -9 கண்டுபிடித்த கால்டெக் ஆய்வுக் குழு மாணவி]

    Earth's Planet -9

    பெருநிறை கொண்ட புதுக்கோள் -9 சூரியனைக் குலுக்கிச் சாய்க்கிறது

    2016 ஜனவரியில் ஹப்பிள் போன்ற தொலைநோக்கிக் கருவிகளுக்குத் தெரியாது, கணினி போலி மாடல் மூலம் இருப்பதாய்க் கருதப்பட்டது பூதப் புறக்கோள் -9.  அதன் இருப்பு, சுற்றுப் பாதை, நிறையைக் கணித்தவர் இருவர்.  அமெரிக்கக் கால்டெக் ஆய்வகத்தின் கோள் ஆய்வுப் பேராசிரியர், கான்ஸ்டன்டின்  படிஜின் & மைக்கேல் பிரௌன்.  அவரது 2016 அக்டோபர் 18 ஆம் தேதிப் புதிய வாசிப்பு வெளியீடு [American Astronomical Society Annual Meeting], கோணி நீள்வட்டத்தில் சூரியனைச் சுற்றி வரும் புதுக்கோள் -9 சூரியனின் வழக்கத்துக்கு மாறான  சரிவுக்குப் [Tilt] பொறுப்பாகிறது என்று அறிவிக்கிறது.  வெகுதூரத்தில் பேரளவு நிறை கொண்ட புதுக்கோள் -9 சூரிய மண்டலத்துக்கு ஒரு குலுக்கைச் [Wobble] சேர்க்கிறது என்றும் கூறுகிறார்.  அந்தக் குலுக்கே சூரிய மண்டலம் சிறிது சரிந்துள்ளதாகக் காட்டுகிறது.

    New Planet 9 orbit

    பொதுவாக சூரியனின் அண்டக்கோள்கள் இரண்டு டிகிரிக் கோணத்துக்குள் ஒன்றுக்கொன்று மாறுபடும் மட்டநிலைப் பாதைகளில்தான் சுற்றி வருகின்றன.  அந்த மட்டநிலை சுற்றுப் பாதைகள் சூரியனுக்கு 6 டிகிரிச் சாய்வில் உள்ளன.  அச்சரிவு சூரியனே சற்று கோணிப் போனதாய்க் காட்டுகிறது !  இதுவரை அவ்விளைவு எதனால் நேர்கிறது என்று எவராலும் உறுதியாக விளக்க முடியவில்லை. அதனால் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை.  புதுக்கோள் -9 பூமியைப் போல் 10 மடங்கு வடிவு. சுற்றும் தொலைவு :  புறக்கோள் நெப்டியூன் சூரியனைச் சுற்றும் தூரத்தைப் போல் 20 மடங்கு அளவு.  புதுக்கோள் -9 இன் சுற்றுப் பாதை மற்ற கோள்கள் சுற்றும் மட்டப் பாதைக்கு 30 டிகிரிக் கோணத்தில் இருப்பதாகத் தெரிகிறது. புதுக்கோள் -9 சூரியனைச் சாய்ப்பது போல், கியூப்பர் வளைய [Kuiper Belt] அரங்கில் நகரும் ஏராளமான அண்டங்களையும் பாதிப்பு செய்கிறது.

    New Planet System 2016

    புதுக்கோள் -9 இன் “கோண நெம்பியக்கம்” [Angular Momentum], தனது பூத வடிவத்தாலும், தூர இடத்தாலும் சூரிய மண்டலத்தில் நிறை மீறிய தாக்கத்தை [Outsized Impact] உண்டாக்குகிறது. [Angular Momentum = Mass of the Planet X Its Distance from the Sun].  மேலும் புதுக்கோள் -9 இன் வியப்பான கோணப் பாதை சூரியனுக்குப் பல பில்லிய ஆண்டுக்கு ஒரு குலுக்கு [A Multi-billion-year Wobble] கொடுக்கிறது ! அந்தக் குலுக்கு 6 டிகிரிச் சரிவுக்கு வெகுப் பொருத்தம் என்று சொல்கிறார் மைக்கேல் பிரௌன்.

    புறக்கோளாய்ச் சூரியனைச் சுற்றுவதாகச் சான்று கண்டு, புதுக்கோள் -9 என்று பெயரிடப்படும் புதிய பூதக்கோள் பூமியைப் போல் 10 மடங்கு நிறையுள்ளது.  அது ஒரு வினோத நீள்வட்ட நீட்சிப் பாதையில், பரிதி மண்டலத்தை வெகு, வெகு தூரத்தில் சுற்றி வருகிறது. இப்புதிய கோள் சூரியனை ஒருமுறை சுற்றிவர 10,000 – 20,000 ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் எடுக்கலாம்.   அந்த அனுமானப் புதுக் கோள் புளுடோவைப் போல் 5000 மடங்கு நிறையுள்ளது.

    கான்ஸ்டன்டின் படிஜின் & மைக்கேல் பிரௌன் [Caltech Researchers] 

    New Planet System

    சூரிய மண்டலத்துப் புறக்கோளாய்ச் சுற்றும் ஒன்பதாம் கோள் ஒன்றிருக்கலாம்

    சூரிய மண்டலத்தின் புறக்கோளாய் இருந்த புளுடோ குள்ளக் கோள் என்று புறக்கணிப்பாகிய பிறகு, எட்டுக் கோள்கள் கொண்ட மண்டலம் மீண்டும் ஒன்பது கோள்கள் சுற்றும் பரிதி மண்டலம் ஆனது.  ஆனால் கோள் -9 இதுவரை புலப்படாது நீட்சியான நீள்வட்டப் பாதையில் எங்கோ சுற்றிக் கொண்டு வருகிறது.  அது ஒருமுறைப் பரிதியைச் சுற்றிவர 10,000 – 20,000 ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் எடுத்துக் கொள்ளலாம்.  அதை நேரடியாகக் காணாமல், அதன் இருப்பைப் போலிக் கணினி மாடல்[Computer Simulation Model] மூலம், போட்டுக் காட்டியவர் இருவர்:  காலிஃபோர்னியா பொறிநுணுக்க ஆய்வகத்தில் [California Institute of Technology – (Caltech)] பணிபுரியும் அவரது பெயர்கள் : கான்ஸ்டன்டின் படிஜின் & மைக்கேல் பிரௌன். [Konstantin Batygin & Michael Brown]

    Batygin & Brown

    சூரிய மண்டலத்தின் தற்போதைய இறுதிப் புறக்கோள் நெப்டியூன் இதுபோல் போலிக் கணினி மாடல் மூலம் முதலில் அனுமானிக்கப் பட்டுப் பிறகு தொலைநோக்கிப் பார்வைகளில் கண்டுபிடிக்கப் பட்டது. நெப்டியூன் போல் வடிவமும், வாயுவும் கொண்டது புதிய பூதக்கோள் என்று கருதப் படுகிறது.  நெப்டியூன் சூரியனை 2.8 பில்லியன் மைல் தூரத்தில் சுற்றி வருகிறது.  புதுக்கோள் கோள் -9 அதைவிடச் சராசரி 20 மடங்கு தூரத்தில்  [5.6 பில்லியன் மைல்] சுற்றி வரலாம் என்று கணிக்கப் படுகிறது.

    New planet Nine

    இந்தப் புதிய அனுமானக் கோள் -9 இருப்பு அறிவிப்பு நேரடியாக நிகழ்ந்த ஒரு சம்பவம் இல்லை.  2014 ஆம் ஆண்டில் மைக்கேல் பிரௌனுக்கு முந்தைய ஆய்வாளர் ஸாட் டுருஜில்லோ [Chad Trujillo] & ஸ்காட் செப்பேர்டு [Scott Sheppard] வெளியிட்ட ஆய்விதழில் தாம் குறிப்பிட்ட 13 புறக்கோள்களைப் பற்றி விளக்கம் இருந்தது.  அவை வெகு வெகு தூரத்தில் சுற்றிய புளுடோவைத் தாண்டியுள்ள கியூப்பர் வளைய [Kuiper Belt] விண்வெளியில் உலவுவதாய் அறிவித்திருந்தார். அவற்றில் இம்மாதிரி நூதன நீள்வட்டப் பாதையில் சுற்றும் அபூர்வக் கோள் ஒன்றைப் பற்றி விபரம் இருந்தது.

    Hypergiant Star with disks of dust.

    மைக்கேல் பிரௌன் புளுடோவிற்கு அருகில் சுற்றும் குள்ள புறக்கோள்களின் நீள் வட்ட வீதிகளை ஆராய்ந்ததில் ஓர் அரிய ஒற்றுமையைக் கண்டார்.  அனைத்து நீள்வட்ட வீதிகளும் சூரியனுக்கு ஒரே திக்கில் 30 டிகிரி கீழ் கோணத்தில் சாய்ந்திருப் பதைக் கண்டார்.  அதாவது ஏதோ ஓர் அண்டம் அருகில் இருந்து அவற்றை ஒருபுறம் வீசி எறிவதை அறிய முடிந்தது.  இந்த அனுமானக் கோளை வைத்து பிரௌன் ஒரு போலிக் கணினி மாடல் தயாரித்து, அதன் சுற்றுப் பாதையைக் கணித்தார்.  அப்போதுதான் கோள் -9 நிறையின் இருப்பு பூமிபோல் 10 மடங்கு இருக்க வேண்டும் என்றும், சுற்றுப் பாதையில் ஒருமுறைப் பரிதியை வலம்வர 10,000 – 20,000 ஆண்டுகள் எடுக்கும் என்றும் கணித்தார்.  2003 ஆண்டில் பிரௌந்தான் குள்ளக் கோள் செடேனாவைக் [Dwarf Planet Sedena] புளுடோ அருகில் கண்டு பிடித்தவர்.  இதுவரை கோள் -9 யார் கண்ணிலும் படவில்லை. இப்போது உலகத்தின் பெரிய தொலை நோக்கிகள் புதுக்கோள் கோள் -9 தேடிப் பிடிக்க தீர்மானித்து விட்டன.

    Oigins of Solar System

    எறிகற்கள் [Meteors] தாக்கிக் கோள்கள் உருவாயின என்பது மெய்யான முத்திரை அறிவிப் பில்லை.  அந்த சிறு துணுக்குகள் கோள்களின் வடிவ விளைவால் உண்டான உதிரியே தவிர, அவை கோள்களை உருவாக்கிய செங்கற்கள் [Building Blocks] அல்ல.  தற்போதைய இப்புதிய கோட்பாடு சூரியக் கோள்கள் தோன்றியதாக  முன்னர் கருதப் பட்ட கொள்கையைத் திருத்தி விடும்.   அதாவது பூர்வீக சூரிய தோற்ற ஏற்பாடு நாம் எதிர்பார்த்ததை விடப் பெரும் மோதல் கொந்தளிப்பில் உண்டானதாகத் தெரிய வருகிறது.

    பிரான்டன் ஜான்சன் [Post doctorate, MIT Dept of Earth]

    யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் கருவிகள் இன்னும் சீராகப் பணியாற்றிச் சூரியப் புயல், அகிலக் கதிர்கள், சக்தி வாய்ந்த துகள்கள், சூரிய காந்த அரங்கம் பற்றிய தகவலைத் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. . . . ஏவிய நாளிலிருந்து (அக்டோபர் 1990) எந்தக் கருவியும் இதுவரைப் பழுதாகவில்லை !

    ரிச்சர்டு மார்ஸ்டன், யுலிஸிஸ் சூரிய விண்ணுளவித் திட்ட மேற்பார்வை விஞ்ஞானி (European Space Agency)  [ஏப்ரல் 15, 2008]

    Meteorite impacts on Planets

    பூர்வச் சூரியக் கோள்கள் தோற்றத்தின் மாறுபட்ட கோட்பாடு

    பூர்வீகச் சூரியக் கோள்கள் தோன்றியதால் உண்டான எச்சத் துணுக்குகளே முரண் கோள்கள் [Asteroids]  என்னும் கோட்பாடு இப்போது [2015 ஜனவரி 15] இயற்கை விஞ்ஞான நூல் வெளியீட்டின் அறிவிப்புப்படி உறுதியாகி வருகிறது.  முரண் கோள்கள்  சூரியக் கோள்களின் உருவாக்கத் தோற்றத்துக்கு  மூலப் பொருட்கள் அல்ல. சூரியக் கோள்கள் தோன்றத் தேவை யான மூலச் செங்கற்கள் [Building Blocks] நாமறிந்த முரண் கோள்கள் அல்ல என்பதே புதிய முடிவு;   அமெரிக்காவின் பர்டே [Purdue] பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர், பிரான்டன் ஜான்சன் கூறுவது,  ” நான்கு பில்லியன் ஆண்டுக்கு முன்பே பூர்வச் சூரியக் கோள் பிறப்புக் கருவில் [Planetary Embryos]  ஆரம்பத்திலே வித்துகள் இருந்தன,” என்று.

    Violant beginning

     

    முரண் கோள் முறிவுகள் பூமியில் விழும்போது எறிகற்களாய்ச் [Meteorites] சிதறுகின்றன. கடந்த 100 ஆண்டுகளாய் உறைந்த திரவ உருண்டையான கோலிப் பாறைகள்  [Beads like Chondrules]  எறிகற்களில் காணப்பட்டன.  அவை  இருப்பதற்குக் காரணம் தெரியாமல் இதுவரை மர்மமாகவே இருந்தது.  இப்போது விளைவுகளைத் தாக்கல் மாடலில் [Computer Impact Model] இட்டுப் பார்த்தால் செம்மையாகப் பொருந்துகின்றன.

    முடிவுகள் இவைதான் :

    1.  முரண் கோள்கள் [Asteroids] பரிதிக் கோள்கள் உருவாக்கத்தில் விளந்த கிளைப் பொருட்கள்.   அவை கோள்கள் வடிக்கத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல.

    2.  உண்டையான கோலிகள் [chondrules] மோதலில் தோன்றிய பளிங்குகளே.  சூரியக் கோள் வடிவாக அவை தேவைப்படா.  அவையும்  கோள்கள் உருவாகத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல.

    நமது சூரிய மண்டலம் எப்போது தோன்றியது ?

    வானியல் விஞ்ஞானிகளும், பூதளவாதிகளும் (Astronomers & Geologists) பூமியின் வயதைக் கணித்து அதிலிருந்து பரிதி மண்டலத்தின் தோற்ற வயதை அறியப் பல்வேறு முறைகளைக் கையாள்கிறார்.  நாமறிந்த பூமிப் பாறைகளின் கதிரியக்கத் தேய்வு வீதங்களைப் “பாறைக் கதிரளப்புக் காலக் கணிப்பு” மூலம் (Radiometric Dating of Rocks) கணக்கிட்டுச் சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.  பூமியின் பூர்வீகப் பாறை வயது கதிரியக்கத் தேய்வு வீதக் கணிப்பில் 3.9 பில்லியன் ஆண்டுகள் என்பது தெரிய வருகிறது !  பூதளத் தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) தூண்டி பூமியில் எழும் பூகம்ப எரிமலை நிகழ்ச்சிகளால் பூர்வீகப் பாறைகள் நிலைமாறி அவற்றைக் காண முடியாமல் சிதைத்து விடுகின்றன !

    பூமியின் பூர்வீகப் பாறைகளைத் தவிர விண்வெளிக் கற்கள், எரிகற்கள், நிலவிலிருந்து அல்லது செவ்வாய்க் கோளிலிருந்து வீழும் விண்கற்கள் மிகத் துல்லியமாகப் பரிதி மண்டல வயதுக் காலத்தை நிர்ணயம் செய்ய உதவுகின்றன.  அந்த மாதிரிகளின் கதிரியக்கத் தேய்வு வீதத்தைக் கணித்ததில் அவை 4.6 பில்லியன் ஆண்டு வயதைக் கொண்டவை என்று அறியப்பட்டு, பரிதி மண்டலம் அந்த வயதை ஒட்டி உண்டாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.

    நமது சூரிய மண்டலம் எப்படி உண்டானது ?

    விஞ்ஞான வரலாற்றில் எத்தனையோ கருத்துக்கள் மாறிப் போனாலும், பரிதி மண்டலம் எப்படி உண்டானது என்னும் கருத்து கடந்த 250 ஆண்டு காலமாக மாறவில்லை.  1755 ஆம் ஆண்டில் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவெல் கென்ட் (Immanuel Kant) (1724-1804) முதன்முதலில் தனது நிபுளா கோட்பாடைக் (Nebular Hypothesis) கூறினார்:  அதன்படி பேரளவு வாயு முகில் கொண்ட ஆதிச்சூரிய நிபுளா, பரிதி மண்டலத்தின் சூரியனாகவும், மற்ற அண்டக் கோள்களாகவும் உண்டாக மூலாதாரப் பொருளானது !  1796 இல் பிரெஞ்ச வானியல் நிபுணர் பியர் சைமன் லாப்பிலாஸ் (Pierre Simon Laplace) (1749-1827) அதே மாதிரிக் கோட்பாடை எடுத்துக் கூறினார்.  ஆனால் ஆழ்ந்த விண்வெளியை நோக்கி அவரால் அதற்குச் சான்றுகளை எடுத்துக் காட்ட முடியவில்லை !

    இம்மானுவெல் கென்ட் விளக்கிய நிபுளா கோட்பாடில் இருப்பது இதுதான் : பேரளவுக் கொள்ளளவு வாயு நிறையும் தூசி துணுக்குகளும் திணிவு ஈர்ப்பு (Mass Gravity) விசையால் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தன.  திணிவு நிறை பெருகப் பெருக ஈர்ப்பு சக்தி மிகையாகி வாயுத் திணிவை இறுக்கிச் சுருக்கி (Gravitational Contraction) வாயுக் கோள்களாகவும், திடக்கோள்களாகவும் உருவாயின.

    இப்போது வானியல் விஞ்ஞானிகள் அவற்றை விபரமாகச் சொல்ல முடிகிறது.  அதாவது முதலில் சூரிய மண்டலத்தின் வாயு முகில் மூலக்கூறு (Molecular Gas Cloud) முறிந்த போது அதன் விரிவு 100 AU (Astronomical Unit) [1 AU = Average distance between Sun & Earth (93 மில்லியன் மைல் /150 மில்லியன் கி.மீ.)] ஆகவும், திணிவு நிறை பரிதியைப் போல் 2 அல்லது 3 மடங்கு இருந்ததாகவும் யூகிக்கிறார்கள்.  அத்தகைய வாயு முகில் ஈர்ப்பு முறிவைத் (Cloud’s Gravitational Collapse) தூண்டி விட்டிருப்பது அருகில் இருந்த சூப்பர்நோவாவின் (Supernova) மின்னல் வெடிப்பில் நேர்ந்த அழுத்த அலையாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.  வாயு முகில் குவிந்து விழுந்த பிறகு பலமுறைகளில் திணிவு சேர்ப்பு விரைவானது.  முகில் திணிவின் உஷ்ணம் அதிகரித்து அது சுழலத் தொடங்கியது.  வாயுப் பிண்டம் தங்கி அது வட்டத் தட்டு வடிவாக மட்டமானது.  மிகையான ஈர்ப்பு சேமிப்புச் சக்தி (Gravitational Potential Energy) வெப்பமாக மாறி வாயு முகில் அடர்த்தி (Density) அதிகமானது.  அதுவே கோள்களின் உட்கரு உலோகமாகப் பின்னால் திரட்சி யானது.

    aj

    பரிதியின் அண்டக் கோள்கள் உண்டான தெப்படி ?

    வட்டவியல் திணிவு நெம்பு நிலைப்புப்படி (Conservation of Angular Momentum) வடிவம் சிறுகச் சிறுகச் சுழலும் மட்டமான தட்டின் வேகம் மிகையானது.  மென்மேலும் விழுந்து சேரும் வாயுவும், தூசி துணுக்குகளும் சேர்ந்து கொண்டு முன்னோடிக் கோள் தட்டு (Proto-Planetary Disk) மையம் தடித்து ஓரம் மெலிவாகித் தமிழகத்தின் “ஆப்பம்” போல் (Pancake) உருவாகியது.  நடுவில் மகா ஈர்ப்புச்சக்தி வாய்ந்த உட்கரு எழுவதும் அப்பால் விளிம்பு நோக்கிச் செல்லச்செல்ல வலுகுன்றிய கோள்கள் உருவாவதும் எப்படி என்று விளக்கிச் சொல்லலாம் ?  பேரளவு வாயுப் பிண்டம் செழித்த நிபுளாவைச் சுற்றிலும் அதன் பூத ஈர்ப்பு மண்டலம் காந்த சக்தியால் சூடாக உள்ளது !  அந்த ஈர்ப்பு வாயுத் துணுக்குகளுக்கு சுழற்சியை உண்டாக்கித் தன் பூத ஈர்ப்புக் குழியில் சுற்றத் தூண்டுகிறது.  அவ்விதம் சிறுகச் சிறுக்கச் சேர்ந்துதான் சுழலும் கிருஷ்ணச் சக்கிரம் போல் அசுர வடிவாகி வட அமெரிக்க வேனிற்தள ஹர்ரிக்கேன் (Tropical Hurricanes) சூறாவளிகள் உருவாகின்றன !

    பேரளவு இயக்கம் மையத்தில் உண்டாகி முன்னோடிச் சேய் விண்மீன் (Infant Proto-Star) விரைவாக வாயுத் திணிவைத் திரட்டி சூரியனாகியது.  அதன் பிறகு 50 மில்லியன் ஆண்டுகளாக பரிதி போதுமான வாயு நிறையைச் சுருட்டிப் பூரண எரிநிலை அடைந்து பிணைவு சக்தி தூண்டப் பட்டு சுயவொளி விண்மீனாக மாறியது.  தட்டின் விளிம்புகளில் மேலும் வாயுத் துணுக்குகள் சேமிப்பாகி அங்குமிங்கும் கண்ட இடங்களில் சிறிதும் பெரிதுமாக வாயுவிலும் திடப் பிண்டத்திலும் கோள்கள் உண்டாயின.

    பரிதி வெப்ப அணுக்கரு சக்தியால் தூண்டப் பட்டதும் அது அசுரப் புயலை எழுப்பித் தூசிகளையும் துணுக்குகளையும் தட்டிலிருந்து வெளியேற்றியது.  அப்போது பூத வாயுக் கோள்கள் மென்மேலும் பெருக்க இயலாது போயின.  தட்டில் தங்கிய மீத வாயுக்கள் பேரளவு வெப்பத்தாலும், ஈர்ப்பு விசையாலும் மூலகமாற்றம் நிகழ்ந்து குளிர்ந்து திரண்டு சிலிகேட்களும், உலோகங்களும் (Silicates & Metals) உண்டாயின.  துணுக்குகளும், தூசிப் பனிகளும் மற்ற கோள்களின் முன்னோடிகளைக் கட்டி மென்மேலும் பெருக்க வைத்துப் பேரளவு அண்டங்களாக்கின.

    பரிதி மண்டலத்தின் புறக் கோள்கள் பனி அண்டங்களாய்க் கட்டுமான மாகின.  வாயுக் கோள்களின் உட்கரு அடர்த்தியாகி வாயு முகில்கள் அவற்றை இறுகிப் போர்த்திக் கொண்டன.  புறக்கோள்களைச் சுற்றிலும் பல துணைக்கோள்கள் உண்டாகிச் சுற்றத் தொடங்கின.  வாயு முகில்கள் வீசி எறியப்பட்டு வால்மீன்களாக “ஓர்ட் முகில்” மந்தையில் (Oort Cloud of Comets) சிக்கின.  ஓர் அசுரப் பிண்டம் பூமியை மோதி நிலவு உண்டானது.  செவ்வாய்க் கோளுக்குச் சந்திரன்கள் ஏற்பட்டுச் சுற்ற ஆரம்பித்தன.  இவை அனைத்தும் இம்மானுவெல் கான்ட் 250 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய நிபுளாக் கோட்பாடைத்தான் முற்றிலும் மெய்ப்பிக்கின்றன.

    பரிதி மண்டலப் படைப்பில் காணும் சில புதிர்கள் !

    அண்டக் கோள்கள் ஏன் பரிதியை ஒரே தளமட்டத்தில் நீள்வட்ட வீதிகளில் சுற்றுகின்றன ?  அவற்றின் சீரொழுக்க இயக்க முறைக்கு என்ன காரணம் உள்ளது ?  அகக்கோள்களும், புறக்கோள்களும் சூரியனை ஏன் எதிர்க் கடிகார முறையில் சுற்றி வருகின்றன ? சூரியனையும் மற்ற கோள்கள் போலின்றித் தன்னச்சில் சுக்கிரன் மட்டும் ஏன் நேர்க் கடிகார வக்கிர திசையில் சுற்றி வருகிறது ? பூமியின் நிலவு தன்னச்சில் சுழாது ஏன் ஒரே முகத்தைக் காட்டிக் கொண்டு புது மாதிரிச் சுற்றி வருகிறது ? தன்னச்சில் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுழல்வது ஓர் விந்தைதான்.  கோள்களின் துணைக் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுற்றுவதும் ஒரு விந்தைதான்.  இந்த விந்தைகள் அனைத்தும் நிபுளாக் கோட்பாடு கூறும் “சுழற்தட்டு அமைப்பு” விதியைப் பெரும்பாலும் நிரூபிக்கின்றன.

    யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் பணி தொடர்கிறது !

    ஏப்ரல் 15, 2008 ஆம் தேதி அண்டவெளித் தேடல் விஞ்ஞானிகள் 1990 ஆண்டு முதல் பதினேழு ஆண்டுகளாய்ப் பரிதியைச் சுற்றி ஆராய்ந்து வரும் “யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியைப்” (Ulysses Solar Probe) பூமி ஆட்சி அரங்கிலிருந்து தளர்த்தி ஓய்வாக இருக்கவிட்டு 2013 ஆண்டில் மீண்டும் ஆய்வு செய்ய மாற்றியுள்ளார் !  அப்போதுதான் மறுபடியும் பரிதியின் அடுத்த உச்சநிலைக் கதிராட்டம் தொடங்கும் !  அதுவரை விண்ணுளவியின் ராக்கெட் உந்தல் எரிசக்தியை வீணாக்காமல் சேமித்து வைத்து சில இயக்கங்களையும் முடக்கி உளவி ஓய்வெடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது !  பரிதியி லிருந்து 125 மில்லியன் மைல் தூரத்தில் பரிதியை மையமாகக் கொண்டு சுற்றிவரும் நீள் வட்ட வீதியில் (Helio Centric Orbit) உறங்கி வரும் கருவிகளைச் சூரிய கனல் வெப்பமே எழுப்பிவிடும் தகுதி பெற்றது.  இப்போது ஓய்வெடுக்கும் உளவி பரிதியை விட்டு அப்பால் நகன்று 250 மில்லியன் தொலைவை 2010 ஆண்டில் அடைந்து விடும்.

    ++++++++++++++++++++++

    [தொடரும்]

    தகவல்கள்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206291&format=html[சூரியன்]
    16 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40804101&format=html (What will Happen to the Sun ?)
    17 Solar System Formation By Jeff Scott (October 16, 2005)
    18. Spaceflight Now -Breaking News. Controllers Working to Keep “Ulysses Sun Orbiter Alive” By :Stephen Clark (www.spaceflightnow.com/news/n0804/15ulysses) [April 18, 2008]

    19.  http://www.spacedaily.com/reports/A_twist_on_planetary_origins_999.html  [January 15, 2015]

    20. http://www.spacedaily.com/reports/Meteorite_material_born_in_molten_spray_as_embryo_planets_collided_999.html  [January 15, 2015]

    21.  http://mashable.com/2016/01/20/new-solar-system-planet-nine/#PKq33NOdLPqT [January 20, 2016]

    22. http://iopscience.iop.org/article/10.3847/0004-6256/151/2/22/pdf

    23.  http://iopscience.iop.org/article/10.3847/0004-6256/151/2/22;jsessionid=9DAB98EED9CB30448604A2F4CA0F8752.c5.iopscience.cld.iop.org#aj522495s6

    24.  http://www.dailygalaxy.com/my_weblog/2016/01/caltech-evidence-found-for-a-ninth-planet-in-the-outer-solar-system.html?  [January 20, 2016]

    25. http://www.dailygalaxy.com/my_weblog/2016/01/todays-galaxy-insight-beyond-pluto-discovery-of-an-unseen-9th-planet-in-our-solar-system-video.html?  [January 23, 2016]

    26.  http://www.dailygalaxy.com/my_weblog/2016/10/unusual-tilt-of-our-sun-caused-by-planet-caltech-scientists-explains-something-about-the-solar-syste.html?  [October 19, 2016]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] October 23, 2016 [R-3]

    Attachments area
    Preview YouTube video Evidence of a Ninth Planet

    Evidence of a Ninth Planet

    Preview YouTube video Nibiru Planet X: Astronomers Prove Planet X exists (Must See) Update 2016

    Nibiru Planet X: Astronomers Prove Planet X exists (Must See) Update 2016

    Preview YouTube video We can’t see this possible 9th planet, but we feel its presence

    We can’t see this possible 9th planet, but we feel its presence

    Preview YouTube video Ray Jayawardhana – “Rocks, Ice and Penguins: Searching for Clues to Planetary Origins in Antarctica”

    Ray Jayawardhana – “Rocks, Ice and Penguins: Searching for Clues to Planetary Origins in Antarctica”

    Preview YouTube video The origin of mankind, ufos, planetary travel, venus, mars, where we have been

    The origin of mankind, ufos, planetary travel, venus, mars, where we have been
    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 49

    க. பாலசுப்பிரமணியன்

    மூளையின் வலது பகுதியும் இடது பகுதியும் .. (Right brain and Left brain)

    education

    மூளையைப் பற்றிய ஆராய்ச்சியில் நமக்கு மிகவும் வியப்பை அளிக்கக் கூடிய தகவல்கள் கிடைக்கின்றன. வல்லுநர்கள் பொதுவாக மூளையில் இரண்டு பிளவுகள் இருப்பதாகவும், அதை வலது மடல் (வலது பக்கப் பிளவு- Right lobe ) என்றும் இடது மடல் (இடது பக்கப் பிளவு – Left lobe ) என்றும் அழைக்கின்றனர். இந்த ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு குறிப்பிட்ட செயல்களுக்கு ஆதாரமாகவும் அந்தச் செயல்களுக்கு காரணமாக மட்டுமின்றி ஒரு கிரியா ஊக்கி போலவும் இருப்பதாகக் கருதப்படுகிறது.

    இந்த இரண்டு பகுதிகளும் தனித்தனியாக இருந்தாலும் அவைகளின் செயல்கள் அந்தந்தப் பகுதிகளில் போற்றப்பட்டாலும் இந்த இரண்டு பகுதிகளையும் இணைக்கின்ற ஹைப்போதலாமஸ் என்ற பகுதியின் மேலாண்மையின் காரணமாக இரண்டு பகுதிகளின் செயல்களும் ஒருங்கிணைக்கப்பட்டு  மொத்த மூளையின் வெளிப்பாடாக நமக்கு கிடைக்கின்றது.

    இன்னும் சற்றே உன்னிப்பாக நாம் அறிந்து கொள்ள முயற்சித்தால் வலது மூளையின் கட்டுப்பாட்டில் கீழ்கண்ட செயல்களைச் சொல்லலாம்.

    1. மொழி வளமை (Language fluency)
    2. கலைத் திறன்களில் மேலாண்மை (Art Appreciation)
    3. பேச்சுத் திறன் ( oratory)
    4. நாட்டியம் (ஆடல்கள்) (Dance)
    5. சங்கீதம் (Music)
    6. உணர்வுகள் (emotions)
    7. படைப்பாற்றல் (Creativity)
    8. கருணை, பச்சாதாபம் (Compassion, Empathy)
    9. பக்கவாட்டுச் சிந்தனை (Lateral Thinking)
    10. கற்பனை (Imagination)\

    அதேபோல் மூளையின் இடது புகுத்தி கீழ்க்கண்ட செயல்களை தன்னுடைய கண்காணிப்பில் வைத்திருக்கின்றது.

    1. தருக்க சிந்தனை (Logical thinking )
    2. கணிதம் ( Computation )
    3. தொழில் நுட்பம் (Technology)
    4. திறனாய்வு மேலாண்மை (critical thinking)
    5. பேச்சுத்திறன், வேகம் ( Tonality, Speed )
    6. உடலசைவுகளின் மேலாண்மை (Kinesthetic competencies )
    7. வெளிப்பொருள்களைச்சார்ந்த புத்திகூர்மை (Spatial Intellligence )
    8. விளையாட்டுக்கணிப்புகள் ( Sports and games)
    9. நடிப்பு மற்றும் மேடைக்கலைத் திறன்கள் (Acting, Stage performances)
    10. அறிவியல் ஆராய்ச்சித்திறன் (Scietific thinking & Researching mind)

    இதுபோன்ற மற்றும் சில திறன்கள் வலது மற்றும் இடது மூளை பகுதிகளால் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. ஆனாலும் மேலே சொன்னபடி மூளையின் இரண்டுபகுதிகளும் இணைந்து கைகோர்த்து செயல் படுகின்றன.

    உதாரணமாக நாம் பேசும் பொழுது நமது சொல்லின் வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் அதன் நயங்களை ஒழுங்குபடுத்துவதிலும் வலது மூளை செயல்படும் பொழுது சொல்லின் வேகம், குரலின் ஏற்றத்தாழ்வுகள் பேச்சில் சொற்களிடையே இருக்கும் கருத்தாழ்ந்த இடைவெளிகள் ஆகியவற்றை இடது மூளை  ஒழுங்குபடுத்திக் கொடுக்கின்றது.

    அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மூளை நரம்பியல் மற்றும் கற்றல் சார்ந்த ஆராய்சசிகளைச் செய்துகொண்டிருந்த விஞ்ஞானிகள் இந்தத் திறன்களை சரியாகச் செய்வதிலும் அவற்றை வெளிப்படுத்துவதில் இரண்டு பகுதிகளும் எவ்வாறு செயல்படுகின்றன என்ற ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அவர்கள் கணிப்பின் படி ஒருவர் பாடும் பொழுதோ அல்லது இசைக்கருவிகளை உபயோகித்து இசைக்கும் பொழுதோ அவர்களுடைய வலது மூளை அதிகம் செயல் படும் என்பதே.- ஏனெனில் சங்கீதம் வலது மூளையைச் சார்ந்த ஒரு செயலாகக் கருதப்பட்டது.

    இதை உறுதிப்படுத்தும் வகையில் வாய்ப்பாட்டிலும் பல விதமான இசைக் கருவிகளை பயன்படுத்துவதிலும் வல்லமை படைத்த  சுமார் 200 பேர்கள் இசையில் ஈடுபட்டிருந்தபோது அவர்களுடைய மூளையின் வலது மற்றும் இடது பகுதிகள் விஞ்ஞான மற்றும் மருத்துவ முறையில் பரிசீலிக்கப்பட்டன. இந்தப் பரிசோதனையின் முடிவுகள் அவர்களுக்கு மிக்க வியப்பைக் கொடுப்பதாக மட்டுமின்றி சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைந்தன. இந்த பரிசோதனையில் அவர்களுக்கு கிடைத்த உண்மை என்னவென்றால் இந்த இருநூறு பெரும் இசையில் ஈடுபட்டிருந்தபோது இவர்களது வலது மூளை பகுதி குறைவாகவும் இடது மூளை பகுதி கிட்டத்தட்ட 80 விழுக்காடு வேலைபார்ப்பதாகவும் அமைந்திருந்தது. மீண்டும் மீண்டும் இந்த ஆராய்ச்சியைச் செய்தபொழுதும் அதே பதில்கள் அவர்களுக்கு கிடைத்தன.

    இதன் உட்கருத்து என்னவென்றால் ஒரு இசைஞானி இசைக்கும் பொழுது அந்த இசையின் நுணுக்கங்களையும், ராகம், தாளம் போன்றவற்றையும் அவர்களது மூளை தொடர்ந்து கணக்கிட்டுக் கொண்டும் சரிபார்த்துக்கொண்டும் இருக்கிறது. இந்தச் செயல் அவர்களது மூளையின் இடப்பக்கத்தில் செயல். ஆனால் அவர்களுடைய மற்றும் முன் அமர்ந்து ரசித்துக்கொண்டிருப்பவர்களுடைய மூளையின் வலது பக்கம் ஈடுபட்டு ரசனைக்கான உணர்வுகளைத் தூண்டிக்கொண்டிருக்கிறது.

    ஆகவே, இசை, விளையாட்டு, நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் கணிதத்தில் நன்றாக செயல் படுத்தல் வேண்டும் என்ற ஒரு கருத்தும் நிலவி வருகின்றது. சில நேரங்களில் கணக்குப் போட்டுக்கொண்டிருக்கும் மாணவர்கள் கூடவே இசையை ரசித்துக்கொண்டிருப்பதும் அந்த நேரங்களில் அவர்களுடைய கணிதத்திறன் சிறப்பாக அமைவதாகவும் சில ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.

    தொடரும் ..

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (27)

    நிர்மலா ராகவன்

    அநாவசிய பயம்

    %e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-1-1

    சமீபத்தில் நவராத்திரி விழா ஒன்,றில் என்னிடம், `உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்’ என்ற கோரிக்கை விடுத்துவிட்டு, சிறிது நேரத்திற்குப் பிறகு தயக்கத்துடன், “எனக்கு எப்போதும் பயமாக இருக்கிறது!” என்று கூறிய லேகா நாற்பது வயதுகூட நிரம்பாதவள்.

    “என்ன பயம்?” என்று கேட்டேன். அன்று அவளுடைய பத்து வயது மகள் நாட்டியம் ஆடுவதாக இருந்தது.

    “அவளுக்கு ஒப்பனை செய்வதில் ஏதாவது கோளாறு ஆகிவிடுமோ என்றுதான்!” என்றாள்.

    அவளுடைய முன்கதை தெரிந்திருந்ததால், `இதற்கெல்லாம் ஒரு பயமா!’ என்று சிரிக்கத் தோன்றவில்லை.

    வெளிநாட்டில் இருந்த ஒருவருக்கு மலேசியாவிலிருந்த லேகாவை மணமுடித்திருந்தனர் அவள் பெற்றோர். தட்டிக் கேட்க யாருமில்லாததாலோ, என்னவோ, அவளை வதைத்தார் கணவர். அவர் அகால மரணம் எய்தியதும், மாமியார் பலவாறாக வதைக்க ஆரம்பித்தாள். அவளை உயிருடன் கொளுத்த முயன்றாளாம். எப்படியோ தப்பித்து, மீண்டும் பெற்றோர் வீட்டுக்கு வந்து அடைக்கலம் புகுந்தாள்.

    ஆனால் அங்கேயும் நிம்மதி கிடைக்கவில்லை. `கல்யாணமான பெண், கணவன் இருக்கிறானோ, இல்லையோ, அவன் வீட்டில்தான் நிரந்தரமாக இருக்க வேண்டும்,’ என்ற பத்தாம்பசலிக் கொள்கை கொண்டவர்கள் அவளுடைய பெற்றோர். `சுயநலம் பிடித்தவள்! உன் தங்கையின் நிலையை யோசித்துப் பார்த்தாயா?’ என்று ஓயாது பழித்தாள் தாய்.

    சமீபத்தில் லேகாவின் தங்கைக்குக் கல்யாணம் நடந்தது. அதில் பிறருடன் கலந்துகொள்ள அவளுக்கு அனுமதி இல்லையென்று பலவாறாக இழித்துப் பேசினார்கள். அழுவதைத் தவிர லேகாவால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

    என் சிறுவயதில், விதவையான பாடகிகளை கல்யாணக் கச்சேரிகளுக்கு அழைக்கத் தயங்குவார்கள் என்று விவரம் தெரிந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். விதவைப்பெண்ணைப் பார்த்தால், மணப்பெண்ணின் மனம், `நாமும் அதுபோல் ஆகிவிடுவோமோ!’ என்று கவலைப்படுமாம். ஏன், லேகாவின் தங்கைக்கு தன் அக்காள் விதவை என்ற உண்மை முதல்நாள் தெரியாதா?

    லேகா வருந்துவதைப் பார்த்து, அவள் மகளுக்கு ஆத்திரம். அப்பெண்ணை நாட்டியம் ஆடும்படி கேட்டபோது, `முதலில் எங்கம்மாவை மரியாதையாக நடத்துங்கள்!’ என்று திட்டவட்டமாகக் கூறினாளாம். லேகா பெருமிதத்துடன் தெரிவித்தாள்.

    சொந்தக் குடும்பத்திலேயே மதிப்பும் மரியாதையும் கிடைக்காத ஒருத்தி வீண் குழப்பத்துக்கும் பயத்துக்கும் ஆளாகுவதில் என்ன ஆச்சரியம்? அந்தப் பயத்தை தன்னை நல்லபடியாக நடத்தாத தாயுடன் எப்படிப் பகிர்ந்துகொள்ள முடியும்?

    “பாதி சமயம், நம் பயம் வீண்தான்,” என்று அவளுக்கு ஆறுதல் கூற ஆரம்பித்தேன். “ஒப்பனை சரியாக இல்லாவிட்டால் என்ன குடி முழுகிவிடப் போகிறது! நடன ஆசிரியை சரி செய்து விட்டுப்போகிறாள்!” என்றுவிட்டு, “ஆனால், உன் பயம் அதுவல்ல. நீ அனுபவித்த துயரங்களும் துன்பங்களும் உன்னை இன்னும் ஆட்டுவிக்கின்றன,” என்று நான் சொல்லிக்கொண்டே போனபோது, அவள் வருத்தத்துடன் தலையசைத்தாள்.

    “பரீட்சைக்குப் போகுமுன் ஒரு மாணவி பயப்படுவதுபோல்தான் இது. நன்றாகப் படித்திருப்பாள். இருந்தும், நாம் படித்ததெல்லாம் கேள்வித்தாளில் வருமோ, அல்லது படித்ததை மறந்துவிடுவோமோ என்ற வேண்டாத பயமெல்லாம் வரும். கடைசியில் பார்த்தால், நன்றாகவே எழுதி, நல்லபடியாக தேர்ச்சியும் பெற்றிருப்பாள். அவள் பயந்ததெல்லாம் வீண். அநாவசியமாக பயப்படுவதால், நம் சக்திதான் விரயமாகி, உடல்நிலை கெடுவதுதான் நடக்கும்!”

    ஒருவர் குழப்பத்துடன் இருக்கும்போது, சம்பந்தமில்லாத வேறு ஒருவரின் நிலையைச் சொல்லும்போது சிறிது ஆறுதல் அடைகிறார்கள், நாம் மட்டும் தனியாக இல்லை என்ற நிதரிசனம் புரிந்து.

    லேகாவின் முகத்தில் தெளிவு ஏற்பட்டது. “நீங்கள் பரீட்சையைப்பற்றிச் சொன்னது ரொம்ப சரி, ஆன்ட்டி,” என்று சிரித்தாள்.

    ஏதாவது செய்ய ஆரம்பிக்குமுன்னரே, `நம் முயற்சியில் தோல்வி அடைந்துவிடுவோமோ!’ என்று அஞ்சுபவர்களால் எதையும் சாதிக்க முடியாது.

    புதிதாக எதையாவது செய்ய ஆரம்பிக்கும்போது அச்சம் ஏற்படுவது சகஜம். ஆனால், அதையும் மீறி, அந்தச் செயலைச் செய்தால் நம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

    ஒரு காரியத்தில் வெற்றி பெற்றவர்கள் அடுக்கடுக்காக வெற்றி பெறுவது இந்த மனப்போக்கினால்தான். இவர்களுக்கு தோல்வியும் அடுத்து என்ன செய்யக்கூடாது என்ற பாடத்தைப் புகட்டும். தோல்வியால் மனம் தளர்வது கிடையாது. அதில் அவமானம் இருப்பதாகவும் இவர்கள் கருதுவதில்லை.

    கதை: என்னுடன் வேலை பார்த்த மேரியை அவள் தாய் பொத்திப் பொத்தி வளர்த்தாளாம். கணவரையும், இன்னொரு மகளையும் போர்க்காலத்தில் பறிகொடுத்திருந்த அத்தாய் செய்தது புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால், அதன் எதிர்விளைவாக, மேரிக்கு தன்னம்பிக்கை குன்றிவிட்டது. ஏதாவது தப்பு செய்துவிடுவோமோ என்று பயந்துகொண்டே இருந்ததில், மிக மிக நிதானமாகத்தான் எதையும் செய்வாள்.

    `எப்போது மேரி டீச்சர் பாடம் நடத்தினாலும், எங்களுக்குத் தூக்கம் தூக்கமாக வருகிறதே, என்?’ என்று சில மாணவிகள் என்னிடம் கேட்டபோது, என்னால் அவர்களுக்குப் பதிலளிக்க முடியவில்லை.

    கதை: ஒரு முறை, ஆசிரியர் தினத்திற்காக நான் எழுதித் தயாரித்த நாடகத்தில் நடிக்க மேரியை அழைத்தேன்.

    `சர்ச்சில் நான்தான் பியானோ வாசிப்பேன். ஆனால் ஒவ்வொரு முறையும் பேதிதான்!’ என்றாள்,பரிதாபமாக. `எனக்கு மேடை ஏறுவது என்றால் கொள்ளைப்பயம். வயிற்றுப்போக்கு வந்துவிடும்!’ என்று தாழ்மையுடன் மறுத்தாள்.

    என்னைப் போன்ற சில `துணிந்தகட்டை’களுடன் நாடகத்தை ஒப்பேற்றினேன் – உங்களுக்கு மாணவிகள் செய்யும் எதனால் கோபம் வருகிறதோ, அந்த மாணவியாக மாறி நடியுங்கள். மனம் லேசாகிவிடும்!’ என்று ஆசை காட்டி.

    ஒரு மாணவி வகுப்பில் காலைப் பரத்திக்கொண்டு உட்கார்ந்திருக்க, அவளைக் கண்டித்தபோது, `நான் ஷார்ட்ஸ் போட்டிருக்கிறேன். பாருங்கள்,’ என்று குட்டைப்பாவாடையைத் தூக்கிக் காட்டியதோடு நில்லாமல், ஒரு சுற்று வேறு சுற்றினாளாம். வேறொரு ஆசிரியை அதிர்ச்சியுடன் இச்சம்பவத்தை விவரிக்க, அப்பாத்திரம் நாடகத்துக்கு நல்ல நகைச்சுவையைக் கொடுக்கும் என்று தீர்மானித்தேன்.

    `நீங்களும், உங்கள் யோசனையும்! இந்தமாதிரி பாத்திரத்தில் நடிக்க யார் முன்வருவார்கள்!’ என்று சக ஆசிரியை ஒருத்தி கேலி செய்ய, நான் அவளையே உற்றுப் பார்த்தேன்.

    `நீங்களா!’ என்று பெரிதாகச் சிரிக்க ஆரம்பித்தாள்.

    நாடகம் முடிந்ததும், `நான் ஒரு ஒரு வருடத்தில் இவ்வளவு சிரித்ததில்லை,’ என்று ஓர் ஆசிரியை பாராட்டினாள். (அது பெண்கள் பள்ளிக்கூடம்).

    இதை எதற்கு விவரிக்கிறேன் என்றால், `நாம் செய்வது கேலிக்கூத்தாக ஆகிவிடுமோ?’ என்று பயந்திருந்தால், அப்படி ஒரு பாத்திரத்தை நான் ஏற்றிருக்க முடியாது. பிறர் சிரித்தால், அது என்னைப் பார்த்தல்ல என்று புரிந்திருந்தேன்.

    `நம்மைப்போன்ற ஒரு மாணவி அப்படிச் செய்தபோது, நமக்கு ஏன் அதிர்ச்சி ஏற்படவில்லை?’ என்று அவர்களை யோசிக்க வைத்தது அந்த நாடகம்.

    `மதிப்புக்குரிய ஆசிரியை இப்படியெல்லாம் நடிக்கலாமா?’ என்று யாரும் முகம் சுளிக்கவில்லை. அப்படிச் செய்திருந்தாலும், அந்த ஒருவருக்காக நான் மனம் தளர்ந்திருக்க மாட்டேன்.

    பிறர் நம்மைப் பாராட்டுவார்களா, பழிப்பார்களா என்று சந்தேகப்பட்டபடி ஒரு காரியத்தில் ஈடுபட்டால், அரைமனதாகத்தான் இருக்கும் நமது பங்களிப்பு. ஏனோ வெற்றி கிடைக்கவில்லையே என்று அப்புறம் ஏங்குவது வீண்.

    தொடருவோம்

    Share
  • மனம் எனும் பேய்

     

         ரா.பார்த்தசாரதி

     

    மனம் ஒரு கண்ணாடி ,

    நமது எண்ணங்களை பிரதிபலிக்கும்,

     

    மனம்  ஒரு குரங்கு

    அது எண்ணங்களை தாவ வைக்கும்

     

    மனம் ஒரு  நீர்க்குமிழி

    அது  எண்ணங்களை உருவாக்கி அழிக்கும்

     

    மனம்  ஒரு கடல் அலை

    அது  மாறி, மாறி  எண்ணங்களை மோத விடும்

     

    மனம் ஒரு அணையா நெருப்பு

    அதில் பொறாமை என்பது கொழுந்துவிட்டு எரியும்

     

    மனம் ஒரு குப்பைத்தொட்டி

    அதில் தேவையில்லாத கெட்ட எண்ணங்களை சேர்த்துவைக்கும்

     

    மனம் ஒரு  கடிவாளம் இல்லா குதிரை

    அது தன்  விருப்பப்படியே  பறந்தோடும்

     

    மனம்  ஒரு கனவு உலகம்

    கனவு உலகத்தில் அடிக்கடி சஞ்சரிக்கும்

     

    மனம்   ஒரு அழகின்  அடிமை

    அழகான காட்சிகளுக்கு சரணடையும்

     

    மனம்  எனும் பேய்

    மனிதனை  சுயநலமாய், தீயவற்றிற்கு அடிமையாக்கும்

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(142)

    செண்பக ஜெகதீசன்

    இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின்
    நிலமென்னும் நல்லாள் நகும். 
    (திருக்குறள்: 1040 – உழவு)      

    புதுக் கவிதையில்…

    எதுவுமில்லை என்றுசொல்லி
    எதுவும் செய்யாமல்
    சோம்பியிருப்பவனைப் பார்த்து
    விளைநிலம் என்னும் நல்லவள்,
    சிரிப்பாள்-
    தரிசாய் இருந்து…! 

    குறும்பாவில்…

    இல்லை எதுவுமென்னும் சோம்பேறியைப் பார்த்து,
    நல்லவளாம் விளைநிலம் ஏளனமாய்
    நகைப்பாள் தரிசாய்க் கிடந்து…!
     

    மரபுக் கவிதையில்…

    நிலத்தில் வேலை செய்யாமல்
        –நித்தம் சோம்பலில் இருந்துவிட்டு,
    நலமே வாழ்வில் இல்லையெனும்
         –நல்லது தெரியா சோம்பேறி
    நிலையைப் பார்த்து நகைத்திடுவாள்
         –நிலமெனும் நல்ல பெண்ணவளும்,
    மலடாய் ஒன்றும் விளையாத
         –மண்ணாம் தரிசு முகத்தாலே…! 

    லிமரைக்கூ…

    நிலத்திலிறங்கி செய்வதில்லை வேலை,
    இல்லையெனுமிச் சோம்பேறியைப் பார்த்து நகைத்தே
    காட்டுவாள் நிலமகள் தரிசுமுகமாம் பாலை…!
     

    கிராமிய பாணியில்…

    பாடுபடு பாடுபடு
    நெலத்தில எறங்கிப் பாடுபடு,
    சும்மாயிருந்து ஒறங்காத
    சோம்பப்பட்டு அழியாத…
    சோம்பேறியா இருந்துப்புட்டு
    இல்லயிண்ணு அழுதாலே,
    அவனப்பாத்து நல்லவளாம்
    மண்ணுமாதா சிரிப்பாளே
    மனம்போலச் சிரிப்பாளே…
    அதால,
    பாடுபடு பாடுபடு
    நெலத்தில எறங்கிப் பாடுபடு,
    சும்மாயிருந்து ஒறங்காத
    சோம்பப்பட்டு அழியாத…!

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 83-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. காயத்ரி அகல்யாவின் கைவண்ணத்தில் எடுக்கப்பட்ட இந்த வண்ணப்படத்தைப் போட்டிக்குத் தேர்வுசெய்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்களுக்கு எம் நன்றி!

    dancing-girls

    மனிதர்களை மென்மையானவர்களாகவும் மேன்மையானவர்களாகவும் மாற்றவல்லவை நுண்கலைகள். அதிலும், உலகாளும் இறைவனே உவந்தாடும் இந்த ஆடற்கலையோ கலைகளின் உச்சமாய்க் கருதிக் கொண்டாடப்படுவது!

    இதமாய்ப் பதமெடுத்து, நயமாய்க் கைகளில் அபிநயம்பிடித்து ஆடும் இந்த ஆரணங்குகளைக் கண்டு ஆடாத மனமும் உண்டோ?

    என் வருணனையை இத்தோடு முடித்து, இப்படம் பற்றித் தம்கவிதையில் கருத்துப்பகிர நம் கவிஞர்களை அழைக்கிறேன்!

    *****

    ”கண்ணுக்கு விருந்தாகும் ஆடலும், கருத்துக்கு விருந்தாகும் பாடலும் நம்மிரு விழிகளாகும். ஆட்டத்தில் நாட்டம்வைத்து நாட்டை இழந்தோர்கூட நானிலத்தில் உண்டு!” என்று கவின்கலைகளின் பெருமை பேசுகின்றார் திரு. ரா. பார்த்தசாரதி.

    ….ஆடலும் பாடலும் இரு கண்கள்
    ஒன்றையொன்று சார்ந்த கலைகள்
    பாடல் செவிக்கு விருந்து
    நாட்டியமோ கண்ணுக்கு விருந்து
    நாட்டியம் என்றாலே பரத நாட்டியமே
    தொன்றுதொட்டு வந்த கலை அம்சமே
    நாட்டியத்தில் பல வகை உண்டு
    மாநிலத்திற்கு,மாநிலம் வேறுபடுவதுண்டு
    நாட்டியதிலே கண்கள் பேசும்,கையும்,காலும்,அபிநயம் பிடிக்கும்
    காட்சியின் தன்மைகள் பாவத்துடன் ரசிகர்கள்முன் தோற்றமளிக்கும்
    […]
    சப்த நடன மங்கையர்களின் நாட்டியம் மனதினை பரவசமூட்டும்!
    நாட்டியத்திற்காக தன் நாட்டையே பரிசாக அளித்தவருண்டு
    நாட்டியத்திற்கு அடிமைபட்டு,தவவலிமை, செல்வத்தையும் இழந்தவருண்டு
    நாட்டியக்கலையே அவனியில் தெய்வாம்சம் கொண்டது எனக்கூறுவர்
    பாடலுடன், இசையும் அதற்கேற்ற நாட்டியத்தையும் சிறந்ததாக கருதுவர்!

    *****

    கண்ணனின் லீலைகளைக் கண்ணுக்கு நிறைவாய்க் காட்சிப்படுத்தியிருக்கும் இந்தக் காரிகையரின் நிருத்தியம், பார்ப்போரைப் பரவசப்படுத்துவது நிச்சயம் என்கிறார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

    பாடலின் பொருளை
    ஆடலில் காட்டும்
    அழகு கலையே நாட்டியம்
    கைகள் முத்திரை காட்டும்
    தாளங்களை பாதங்கள் காட்டும்
    பாவத்தை முகத்திலும் கண்களிலும்
    வெளிக்கொணரும் நிருத்தியம்
    கைவழி முத்திரையையும்
    கண்வழி மனமும்
    முகம் வழி பாவமும்
    உடல் அசைவுகளால்
    மங்கையவள் முன்னின்று ஆட
    மற்றவர்கள் பின் பற்றி ஆட
    கண்ணனின் லீலைகளை
    ஓரங்க நாடகமாகவே நடத்தி
    தொன்மைக்கலைகளை
    தொய்வில்லாமல் நிகழ்த்துகிறார்
     

    *****

    தாண்டவக்கோனாகிய ஆண்டவன் ஆடிய ஆட்டத்தை அரிவையரும் எல்லை தாண்டாது ஆடினால் உடலும் உள்ளமும் நலம்பெறும்; வாழ்வும் வளம்பெறும் என்பது திரு. செண்பக ஜெகதீசனின் எண்ணம்.

    ஆண்டவன் ஆடிய ஆட்டமிது
    ஆடுவர் இவரிதைக் கூட்டமாக,
    வேண்டுமிக் கலையெலாம் உளம்சிறக்க
    வாழ்வில் என்றும் வளம்பெருக,
    தூண்டுத லாகும் உடல்நலத்தில்
    துணிவும் வந்திடும் வாழ்வினிலே,
    தாண்டிட வேண்டாம் எல்லையதை
    தருமே கலையிது நலவாழ்வே…!
     

    *****

    ”பதுமையாய் அரங்கில் ஆடிக் காண்போர் இதயங்களை வெல்லும் புதுமைப் பெண்ணே! அகந்தைகொண்டு உன்னை வீழ்த்தவரும் ஆணவக்கரங்களையும் வெல்லும் ஆற்றல் உன் வளைக்கரங்களுக்கு வேண்டும்” என்று நல்லுரை நவில்கின்றார் முனைவர் மா. பத்ம பிரியா.

    புதுமைப் பெண்ணே!
    சூதாட்டுக் களத்தில் பந்தயப் பொருளானாலும்
    சூதாடிகளை வாதாடியவள்
    மாயமான் சதி வலையில் வீழ்ந்து போனாலும்
    நெருப்பைச் சுட்டெரித்த நெருப்புக் கனலி
    இந்திரப் பார்வையில் இல்லற வாழ்வை இழந்து
    கௌதமர் கட்டளையில் கற்சிலையானாலும்
    இராம பாதங்களுக்குப் புனிதமானவள்
    ஒற்றைக் காற்சிலம்பால் கொண்டவனை இழந்தாலும்
    ஒய்யார சபையிலே வாதாடி வாகை சூடியவள்
    ஊா்த்தவத் தாண்டவத்தில் விட்டுக் கொடுத்தாலும்
    அா்த்தநாரீஸ்வரின் பாகமானவள்
    வளையவரும் பெண்ணே!
    வீழ்ந்து விடாதே கண்ணே!
    வாழ்க்கை சுழற்சி வட்டத்தில்
    உயிர்ச்சுழற்சியோ உன்னிடத்தில்
    ஆணவக்கரங்களை
    வளைக்கரங்களால் வீழ்த்தும் வித்தை
    வஞ்சியே உன் சதுராட்டத்தில்!
     

    ***** 

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    அனைத்தும் ஆட்டத்துள்
    அடங்குவது உலகாமோ . . .?
    ஆடுமது ஆட்டமெல்லாம்
    மாதவளின் ஆட்டம்
    கூடுமது கூட்டமது
    உடனாடும் கூட்டம்
    மாதவளின் ஆட்டமதில்
    மாதவனின் தோற்றம்
    கைமொழியோ கனிமொழியோ
    கவிதைநிகர் கலைமொழியோ
    உடனாடும் குழுமாதர்
    உடல்மொழி உரைப்பர்
    தடம் மாறா ஆடலுடன்
    பாடலுமே இசைக்கப்
    பன்னுதமிழ் இன்னிசையால்
    பாரோரே இரசிக்க
    மங்கையவள் முன்னாட
    பின்னாடும் மதிமுகங்கள்
    கையசைவில் கவிபாடும்
    குழலசைவே துதிபாடும்
    ஆட்டமதின் நாயகியாய்
    ஆடுமிவள் தெளிவாக
    ஆடும் பரம்பொருளாம்
    ஆதிசிவன் தன்ஆட்டம்
    ஆதிகேசவனின் ஒயிலாட்டம்
    ஆதிசக்தியவள் நெறியாட்டம்
    அனைத்தையும் படைத்து
    ஆடலுடன் காட்டியதால்
    ஆதிபிரம்மத்தின் வழியாமோ?
    ஆதிமாயை தொழிலாமோ?
    அனைத்தும் ஆட்டத்துள்
    அடங்குவது உலகாமோ?
    அடங்காத மனமதனை
    அடக்குவதும் அறிவாமோ?
    அறியாத நிலையறிந்து
    அதுவாக ஆவதுவே
    அத்வைதம் உரைத்ததுவே
    ஆடலில் உரைத்தாலே
    அனைவர்க்கும் போதுமன்றோ!

    *****

    ஆனந்தக்கூத்தனின் ஆட்டத்தை,
    ”ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்
    ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்
    ஆனந்தம் ஆக அகில சராசரம்
    ஆனந்தம் ஆனந்தக் கூத்துஉகந் தானுக்கே” என்று ஆனந்தமாய் வருணிக்கின்றார் திருமூலர். 

    நாவுக்கரசரோ,
    ”குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயில் குமிண்சிரிப்பும்
    பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீரும்
    இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
    மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே” 
    என்று நெகிழ்ந்து பேசுகின்றார்.
     

    ஆடவல்லானின் ஆட்டம் நின்றால் இவ்வுலகே ஆட்டம் கண்டுவிடும் என்கிறது சைவசித்தாந்தம்!

    மேடையில் இம்மங்கையர் ஆடுவது அந்த ஆடவல்லானின் ஆனந்த நடனத்தையே; அவன் இடப்பாகமிருக்கும் அம்பிகையின் அருள்நடனத்தையே. அவர்களும் இவர்களும் வேறுவேறல்லர் என்று அத்வைதம் பேசும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. நக்கினம் சிவத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!

     

     

    Share
  • தாய்மொழி!

    பவள சங்கரி

    உலகளாவிய ஆய்வு நிறுவனத்தின் முடிவுகளின்படி, குழந்தைகள், வாசிக்கவும், எழுதவும் கற்கவேண்டிய முதல் மொழி தங்கள் தாய்மொழி மட்டுமேதான்! குறைந்தபட்சம், ஒரு நிமிடத்திற்கு 45 முதல் 60 வார்த்தைகள் வரை சரளமாக வாசிக்க முடிந்தால் மட்டுமே அவர்களால் வாசித்த அந்த விசயத்தை முழுமையாக உள்வாங்க முடியுமாம். இத்தன்மை அவரவர்கள் தாய்மொழியால் மட்டுமே சாத்தியமாகுமாம். இந்த அடிப்படை ஞானம் வாய்க்கப்பெற்ற குழந்தைகள் மிக எளிதாக இரண்டாம் மொழியில் வல்லமை பெற்று சாதனையும் படைத்துவிடுகிறார்களாம்… பெற்றோர்கள் அவசியம் சிந்தித்துணரவேண்டிய விசயம்!

    பள்ளியில் சேர்வதற்கு முன்பாகவே மழலைப்பள்ளியில் படித்துவிட்டு வரும் வசதியான குழந்தைகள் 3000 வார்த்தைகள் கற்று வருகிறார்கள். ஆனால் வசதி வாய்ப்பற்ற குழந்தைகள் முதல் வகுப்பில் சேரும்போது 500 வார்த்தைகள் மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறார்கள். இங்கேயே இவர்களின் போராட்டம் ஆரம்பித்து விடுவதால் இரண்டாம் மொழி கற்பதில் இவர்களுக்கு பெரும் போராட்டம்தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை..

    பொதுவாக ஒருவர் ஒரு நொடிக்கு ஒரு வார்த்தை வாசிக்கக்கூடியவர்களாக இருக்கவேண்டும். வெளி வட்டாரம் அல்லது செயல்பாட்டு வாசகர்கள் என்றால் 1.5 நொடியில் ஒரு வார்த்தை வாசிக்க வேண்டும். இதைவிட மெதுவாக வாசிக்கும்போது இறுதியாகப் படித்து முடிக்கும் அந்த பத்தியின் முதல் வரியை மறந்தவர்களாகிவிடுகிறார்கள். குழந்தைகள் புதிய மொழி எழுத்துகளின் குறியீடுகளை அறிவதில் சிரமப்படுகிறார்கள். அவர்களால் போதிய விரைவில் வாசிக்க முடியாவிட்டால் அவர்கள் கவனம் முழுவதும் அந்தக் குறியீடுகளிலேயே நிலைத்துவிடுவதால் அந்தப் பத்தியின் கருத்துகளை உள்வாங்குவதில் கவனம் சிதறிப்போய்விடுகிறது. விரைவாக வாசிக்க முடியாத குழந்தையால், பாடப்புத்தகத்தில் உள்ள பாடத்தையோ அல்லது ஆசிரியர் கற்பிப்பதையோ உள்வாங்க முடியாது. இப்படிப்பட்ட குழந்தைகளை வெகு எளிதாக ஒதுக்கி வைத்துவிடுகின்றன பள்ளிகள். எட்டு ஆண்டுகள் பள்ளியில் படிக்கும் குழந்தையை மக்கு என்று ஒதுக்கிவிடுகிறார்கள். இந்நிலை நம் இந்தியாவில்தான் மிகப்பரவலாக இருக்கிறதாம். உலக ஆய்வறிக்கை சொல்லும் வருத்தமான செய்தி இது…

    மழலைமாறா இளம் சிறார்களுக்கு ஆங்கிலம் போன்ற இரண்டாம் மொழியை முதலில் கற்பிப்பதனால் அக்குழந்தை தம் தாய் மொழியில் தேவையான அளவு வேகமாக வாசிப்பதற்கு தடை ஏற்பட்டுவிடுகிறது. குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி மிகவும் இன்றியமையாதது. இரண்டாம் வகுப்பில் சரளமாக வாசிக்க இயலாத குழந்தைகள் உயர் வகுப்புகளில் சக மாணவர்களுக்கு நிகராக நன்கு வாசிக்கும் திறன் கொண்டிருப்பது சாத்தியமே இல்லாமலும் போகலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

    Share
  • ஜெய் ஸ்ரீராம்

     
    மீ. விசுவநாதன்

    ram

    தருமத்தின் தோற்றமென இராமனையே காணும்
    தரணியிலே பிறந்ததற்குப் புண்ணியங்கள் செய்தோம் !
    கருமத்தை, பக்தியினை, கருணையின் சார
    கல்யாண குணமான நட்பினது ஆழ
    உருவத்தைக் கண்டன்றோ உயிராக எண்ணி
    ஒவ்வொரு நொடியிலுமே உள்ளொளியைப் பெற்றுக்
    கருவத்தை அழிக்கின்றோம் ; கவலையையும் இன்பக்
    கடமையென ஏற்கின்றோம் ஸ்ரீராமன் பேரால் ! (1)

    மனிதனென வந்ததால் மண்ணிலுள்ள மாய
    வகையெல்லாம் அனுபவித்தான்; ஆசையையும், ராஜ
    பனிபோன்ற வேடத்தின் பளுவினையும் நித்தம்
    பட்டுத்தான் தெளிந்தானே பாசமிகு வள்ளல் !
    தனியாக இருக்கின்றான் தவிக்கின்றான்; சீதை
    தவத்தாளை மீட்டுவுடன் பிரிகின்றான்; பின்னே
    இனிதாகப் பல்லாண்டு தர்மநெறி மாறா
    இயல்போடு ஆட்சியினை பொறுப்புடனே செய்தான் ! (2)

    பெற்றோரின் சொல்கேட்போர் எல்லோரும் ராமன் !
    பிரியமுடன் இருப்போர்கள் எல்லோரும் ராமன் !
    கற்றோரை மூத்தோரைப் பணிவோர்கள் ராமன் !
    கடமைக்காய் தர்மநெறி காப்போர்கள் ராமன் !
    மற்றோரின் கவலைகளைக் களைவோர்கள் ராமன் !
    மனிதகுணம் மேலோங்கி வாழ்வோர்கள் ராமன் !
    சுற்றமென அன்புதனைப் பெற்றவர்கள் ராமன் !
    சுதந்திரமாய் நற்கருத்தை மதிப்போர்கள் ராமன் ! (3)

    ( 21.10.2016 08.24 am )

    Share
  • பாவங்களைக் களையும் வழி இதுவா?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    sg-map

    செனெகல் என்னும் ஆப்பிரிக்க நாட்டில் தாங்கள் செய்த பாவங்களைக் களைவதற்கு ஒரு எளிய வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  தலைநகரமான டாக்கரிலும் மற்றும் சில பெரிய ஊர்களிலும் தெரு ஓரங்களில் பல ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் சிவப்பு அலகுகளையுடைய சிறு பறவைகளை விற்றுக்கொண்டிருப்பவர்களைப் பார்க்கலாம்.  இந்தப் பறவைகளில் ஒன்றை அவர்களிடமிருந்து வாங்கி அவற்றின் காதுகளில் மந்திரங்களைச் சொல்லி, அதை வாங்கியவர் தான் செய்த பாவங்களையும் தனக்கு வாழ்வில் ஏற்பட்டிருக்கும் கஷ்டங்களையும் கூறியபின் அந்தப் பறவையைப் பறக்கவிட்டுவிட்டால் தான் செய்த பாவங்களிலிருந்து தனக்கு விடுதலை கிடைக்கும் என்றும், தன்னுடைய கஷ்டங்களுக்கு விடிவு கிடைக்கும் என்றும் நம்புகிறார்.

    africa_waterஇப்போது இந்தக் குறிப்பிட்ட பறவை மட்டுமின்றி இன்னும் சில பறவைகளும் ஊர்வன இனத்தைச் சேர்ந்த விலங்குகளும் மனிதனின் பாவங்களைப் போக்கும் என்று செனெகல் நாட்டு மக்கள் எண்ண ஆரம்பித்திருக்கிறார்கள்.  இந்த நம்பிக்கை மக்களிடையே வேகமாகப் பரவி வருவதால் சமூகத்தின் பெரிய புள்ளிகளான அரசியல்வாதிகள், நடிகர்கள், பெரும் பணக்காரர்கள் இந்த மிருகங்களையும் பறவைகளையும் விற்பவர்களின் வீடுகளுக்கே வந்து வாங்கிச் செல்கிறார்கள்.  தங்களின் துரதிருஷ்டமும் பாவங்களும் மற்றவர்களைச் சென்று அடையட்டும் என்று சிலர் அவற்றை வெளியில் விட்டுவிடுகிறார்களாம்.  அவை மறுபடி அவற்றை விற்றவரிடமே போய்ச் சேர்ந்துவிடுகின்றனவாம். விற்றவர்களுக்குப் பணமும் கிடைத்துவிடுகிறது. மறுபடியும் அவற்றை விற்றுப் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.  ஜனங்களின் அறியாமையால் ஒரு சிலர் எப்படிப் பணம் பண்ணுகிறார்கள் பாருங்கள்.

    நியுயார்க் நகரின் புரூக்ளின் பகுதியில் வசிக்கும் யூதர்களிடமும் இது மாதிரியான அறியாமை இருக்கிறது.  (மற்ற ஊர்களில் வசிக்கும் யூதர்களிடமும் இந்தப் பழக்கம் இருக்கும்போல் தெரிகிறது.) புது வருடத்திற்கும் தங்கள் பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேடும் யூதப் பண்டிகையான யாம் கபூருக்கும் இடையே உள்ள நாட்களில் தாங்கள் செய்த பாவங்களைக் கோழிகளின் மேல் சுமத்தும் பழக்கம் இருக்கிறது.  இந்த இரண்டு பண்டிகைகளுக்கும் இடையேயுள்ள பத்து நாட்களில் உயிரோடு கோழிகளை விற்கும் கடைக்குச் சென்று (அமெரிக்காவில் கோழிகளை உயிரோடு விற்கும் கடைகள் எங்காவதுதான் உண்டு.  நன்றி தெரிவிக்கும் பண்டிகை சமயத்தில் சில விவசாயப் பண்ணைகளில் நாம் வேண்டும்போது வான்கோழிகளைக் கொன்று நமக்கு விற்பார்கள்.  சாதாரணமாக அமெரிக்காவில் எல்லாவகை மாமிசங்களையும் உறைந்த நிலையில் பனிப்பெட்டியில் வைத்துத்தான் விற்பார்கள்.  விசேஷ தினங்களில்தான் உயிரோடு கோழிகளையும் வான்கோழிகளையும் விற்பார்கள்.) அவற்றை வாங்கி யாருடைய பாவங்கள் களையப்பட வேண்டுமோ அவர்களுடைய தலைக்கு மேலே கோழிகளைச் சுற்றி மந்திரம் ஓதிவிட்டால் அந்த மனிதரின் பாவம் கோழிகளுக்குச் சென்றுவிடுமாம்.  பின் அவற்றைக் கொன்று அவற்றை சாப்பிட விரும்பும் ஏழைகளுக்கு விநியோகிப்பார்களாம்.  பாவங்களை நினைத்துத் திருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கோரும் நாளில் எவ்வளவு எளிதாகப் பாவங்களைக் களைந்து மன்னிப்புப் பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள்!

    தான் செய்யும் தவறுகளையும் பாவங்களையும் யாரும் எளிதில் ஒப்புக்கொள்ளுவதில்லை.  அப்படி ஒப்புக்கொள்ளுபவர்களும் தங்களுடைய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் யாரையாவது பொறுப்பாக்குவார்கள்.  இதற்குமேல் இது மாதிரி மிருகங்களைப் பலிகொடுத்து இறைவனிடம் தன்னுடைய பாவங்களுக்குப் பரிகாரம் தேட மனிதன் முயல்கிறான்.

    கோவில்களில் மிருகங்களைப் பலிகொடுத்துத் தன்னுடைய பாவங்களுக்குப் பரிகாரம் தேட மனிதன் எப்போதிலிருந்து முயன்று வருகிறான் என்று தெரியவில்லை.  ஒரு வேளை அல்லது ஒரு நாள் உணவைத் துறந்து விரதம் இருந்து மனிதன் தன் பாவத்திற்குப் பரிகாரம் தேடுவதையோ புண்ணியம் சேர்த்துக்கொள்ள விரும்புவதையோ வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம்.  அதில் ஒரு வகைத் தியாகம் இருப்பதாக ஒப்புக்கொள்ளலாம்.  ஏனெனில் ஒரு வேளை உணவைத் தவிர்ப்பதன் மூலம் தங்கள் பசியைத் தாங்கிக்கொள்கிறார்கள்.  தங்கள் பாவங்களை அப்பாவிக் கோழிகள் மேல் சுமத்துவது எவ்வளவு பெரிய அறியாமை!  நியுயார்க்கில் ஒரு யூதப் பெண்ணிற்கு கோழிகளைத் தொடவே பிடிக்காதாம்.  அதனால் மந்திரம் சொல்வது மட்டும் இவளுடைய வேலை.  கோழியை இவளுடைய தலையைச் சுற்றி சுற்றுவது இவளுடைய கணவனின் வேலையாம்.  கோழிகளின்மேல் தன்னுடைய பாவங்களைச் சுமத்துவதற்குக்கூட இன்னொருவர் உதவி தேவைப்படுகிறது.

    நாம் செய்த பாவங்களை உணர்ந்து வருந்தி அதற்குப் பரிகாரமாக நல்ல செயல்களைச் செய்து இறைவனிடம் இறைஞ்சி மன்னிப்புக் கேட்பதன் மூலம்தான் இறைவனிடம் மன்னிப்புப் பெறமுடியும் என்பதை இவர்களுடைய மதத்தலைவர்கள்கூட இவர்களுக்கு எடுத்துச் சொல்லவில்லையா?  இவர்களுடைய மதத்தலைவர்களே இவர்களுக்குப் புத்தி புகட்டவில்லையென்றால் யார் இவர்களுக்குப் புத்தி புகட்டுவார்கள்?

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (214)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன். மக்களின் தேவைகளையும், அபிலாஷைகளையும் பிரதிபலிப்பதுதான் அவர்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளான அரசியல்வாதிகளின் முக்கிய கடமையென்பது அனைவர்க்கும் பொதுவான கருத்து என்றே எண்ணுகிறேன். அதேசமயம் மக்களின் நாட்டுக்கான அரசியல் அபிலாஷைகள் ஒரு பொதுவான, பரஸ்பர புரிந்துணர்வுடன் அனைத்து மக்களுடனான நல்லிணக்கணத்தை விட்டு விலகி பிரிவு மனப்பான்மையின் அடிப்படையில் செல்ல விழையும்போது உண்மையான அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள் எத்தகைய வடிவை எடுக்கவேண்டும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இன்றைய காலகட்டத்தில் இருக்கின்றது.

    சர்வதேச நாடுகளுக்கான பயணங்கள் மிகவும் இலகுவாக்கப்பட்டதால் உலகின் எல்லைகள் சுருக்கப்பட்டுவிட்டதைப் போன்ற ஒரு நிலையே இன்று காணப்படுகிறது. இதனால் பொருளாதாரத்திலும், வாழ்க்கை தரத்திலும் வசதியுள்ள நாடுகளாகக் கருதப்படும் மேலைத்தேச நாடுகளை நோக்கி படித்துப் பட்டம் பெற்ற பலர் நகர்வது சகஜமான ஒரு நிகழ்வாகி விட்டது. அது மட்டுமின்றி இத்தகைய பட்டம் பெற்றவர்களின் பற்றாக்குறையினால் இவர்களைத் தேடி தமது நாடுகளில் பணிக்கு அமர்த்துவதில் பல முன்னணி மேலைத்தேச நாடுகள் ஈடுபட்டு வந்தன.
    இது ஒருபுறமிக்க,

    அரசியல் நிலையற்ற பல நாடுகள், குறிப்பாக மத்திய கிழக்குநாடுகளில் உள்நாட்டுப் போர்கள் தீவிரமடைந்ததால் அந்நாட்டிலிருந்து அகதிகளாக ஐரோப்பாவை நோக்கி படையெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளது. அதேசமயம் அகதிகள் எனும் போர்வையால் பயங்கரவாதச் செயல்களை முடுக்கிவிட சில பயங்கரவாத அமைப்புகள் தமது உறுப்பினர்களை ஐரோப்பிய நாடுகளுக்குள் ஊடுருவச் செய்தது மட்டுமின்றி பல பயங்கரவாதச் செயல்களை முடுக்கி விட்டுமுள்ளன, விளைவாக பல மேலைத்தேசநாடுகளின் மக்களின் மனதில் பலகாலமாக நிலவிவந்த வெளிநாட்டவரை நோக்கிய பரந்துபட்ட ஆதரவான ஒரு நிலமை மாறி துவேஷ மனப்பான்மை கூடிக்கொண்டு செல்லும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக பல குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட தேசியவாதக் கட்சிகளின் தலைவர்கள் இப்பிரிவினைத் துவேஷத்தை கூட்டும் வகையில் தமது அரசியலை முன்னெடுத்துச் செல்லும் நிலையை நாம் கண்கூடாகக் காணக் கூடியதாக உள்ளது.

    இங்கிலாந்தில் சமீபத்தில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றியத்துக்கெதிரான சர்வஜன வாக்கெடுப்பு முடிவு , பிரான்ஸில் வெளிநாட்டவருக்கெதிரான தேசியவாதக் கட்சியின் செல்வாக்கு அதிகரிப்பு, ஜெர்மனியிலும் அதேபோல வெளிநாட்டவருக்கெதிரான பிரச்சாரத்தில் ஈடுபடும் தேசியவாதக் கட்சியின் வளர்ச்சி, ஆஸ்ட்ரியா, இத்தாலி போன்ற நாடுகளில் தீவிர வலதுசாரிக் கட்சிகளின் இனத்துவேஷ பிரச்சாரத்தின் வேகமான வளர்ச்சி என்பன இதற்கெல்லாம் எடுத்துக்காட்டாக அமைகின்றன.

    as
    இத்தகைய ஒரு நிலையில் தான் அடுத்தமாதம் எட்டாம் திகதி நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறப் போகிறது. அந்தத் தேர்தல் கூட இதுவரை அமெரிக்கத் தேர்தலில் கண்டிருக்க முடியாத மாற்றங்களை உள்ளடக்கி இருக்கிறது என்று கூறினால் மிகையாகாது. 2008ம் ஆண்டு ஒபாமா அவர்கள் அமெரிக்க நாட்டின் முதல் கறுப்பு இன ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டபோது அமெரிக்க ஜனநாயகத்தில் எனக்கு ஏற்பட்ட அபரிதமான நம்பிக்கை எட்டு வருடங்களில் ஆட்டம் கண்டிருக்கிறது. ஒரு கறுப்பு ஜனாதிபதியைத் தெரிவு செய்யுமளவிற்கு மிகவும் பரந்த புரிந்துணர்வையும் தெளிவான அரசியல் அணுகுமுறையையும் எடுத்துக் காட்டிய அதே அமெரிக்க ஜனநாயகம் இன்று குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் அவர்களைத் தெரிவு செய்யுமளவிற்கு பிரிவினை அரசியலுக்குள் தம்மைப் பிணைத்துக் கொண்டதன் காரணம் தான் என்ன ?

    இதற்கு நாம் பல காரணங்களை ஆதாரமாக்கலாம் .

    எட்டு வருடங்களில் ஒபாமா அவர்களால் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவைகள் நிறைவேற்றப்படாமை.

    ஓபாமாவின் மீதான எதிர்பார்ப்புகள் கொடுத்த ஏமாற்றம்.

    பொதுவாக அரசியல்வாதிகள் என்பவர்களுக்கும், வாக்காளர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிப்பு.

    மக்களுக்கு தேர்தல் மீதான நம்பிக்கையிழப்பு.

    தமது அதிருப்தியை வெளிக்காட்ட வேறுவழியில்லை எனும் விரக்தி.

    இன்று அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இருவருக்குமிடையிலான ஒரேயொரு ஒற்றுமை இதுவரையிலான அமெரிக்க தேர்தல் சரித்திரத்தில் போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர்களில் கருத்துக் கணிப்பில் அதிகுறைந்தவர்கள் இவர்கள் இருவருமே என்பதுவே. இனத்துவேஷம் என்று கணிக்கப்படக்கூடிய பல விடயங்களை தனது கொள்கைகளாகப் பிரகடனம் செய்து அதற்கு அவரது கட்சி உறுப்பினர்களிடையே அமோக ஆதரவு பெற்றிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள். அனைத்தையும் விட மிக முக்கியமான அவரது குறைபாடு பெண்களின் மீது அவர் கொண்டிருக்கும் தாழ்வான அபிப்பிராயமே ! ஆணாதிக்கத்தின் உச்சத்தில் பெண்களை மிகவும் கொச்சைப்படுத்தக் கூடிய விதத்தில் அவரது பேச்சுக்கள் அமைந்திருக்கின்றன. சுமார் 11 வருடங்களின் முன்னால் ஒரு பேட்டியின் போது தன்னுடைய செல்வாக்கினால் தாம் விரும்பும் எந்தப் பெண்ணையும் தம் வசமாக்கலாம் எனும் கருத்தில் அவர் கூறியது ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய கருத்தைக் கொண்டுள்ள ஒருவர் உலகின் மிகப்பெரிய செல்வாக்குள்ள ஒரு நாட்டிற்குத் தலைவராகும் தகைமை உடையவரா என்பதுவே அமெரிக்க வாக்காளர்களின் முன் உள்ள கேள்வி. அவரால் தகாத வகையில் தரக்குறைவாக தீண்டப்பட்டதாக பல பெண்களால் பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

    அதேசமயம் திருமதி ஹிலரி கிளிண்டன் அவர்கள் மீது நாட்டின் இறைமையைப் பாதிக்கும் வகையில் மின்னஞ்சல்களை பாதுகாப்பற்ற வழிகளில் அனுப்பியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி முன்னைநாள் அமெரிக்க ஜனாதிபதியான பில் கிளிண்டனின் மனைவி எனும் வகையில் ஜனாதிபதிப் பதவி ஏதோ தமது ஏகபோக குடும்பச் சொத்து எனும் வகையில் அவர் நடந்து கொள்கிறார் என்றும் எதிர்தரப்பு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.. இருப்பினும் திருமதி ஹிலரி கிளிண்டன் தான் இருவரில் தகுதி வாய்ந்தவர் என்பது பெரும்பான்மையோரின் எண்ணம் என்று கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன. கருத்துக் கணிப்புகளின்படி திருமதி ஹிலரி கிளிண்டன் அவர்களே ஜனாதிபதியாகும் வாய்ப்புகள் உண்டு என்று கூறப்படுகிறது.

    அமெரிக்காவின் முதலாவது பெண் ஜனாதிபதி எனும் சரித்திரப் பிரசித்தியை திருமதி ஹிலரி கிளிண்டன் தட்டிக் கொள்ளப் போகிறாரா ? இல்லை அனைத்துக் கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கி இதுவரை அமெரிக்கா கண்டிராத வகையில் இதுவரை அரசியலிலேயே ஈடுபடாத வெளிநபரான திரு டொனால்ட் ட்ரம்ப் சரித்திரப் புத்தகத்தில் இடம் பெறப் போகிறாரா எனபதற்கு காலம்தான் விடை பகரும்.

    எது எப்படி இருப்பினும் இது அமெரிக்க அரசியலில் ஏன் உலக அரசியலிலே ஒரு சுவையான (சுமையான?) காலகட்டம்தான்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • சான்றோர் விருது

    “சான்றோர் விருது” பெறும் திருமிகு எம். ஜெயராமசர்மா அவர்களுக்கு வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள்

    ஆசிரியர்

    ajr

    22- 10 – 2016 சனிக்கிழமை சிட்னி மாநகரில் இடம்பெறுகின்ற கம்பன் விழாவில்
    ” சான்றோர் விருது ” வழங்கப்படுகிறது.வல்லமையுடனும் பகிர்ந்து
    கொள்ளுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

    அன்புடன்
    எம் . ஜெயராமசர்மா.

    Share
  • நிலையாமை!

    ரா.பார்த்தசாரதி

     

     

    சொந்த, பந்தங்கள் யாவும் ,நன்மைக்காக  ஏற்பட்ட உறவுகள்

    அந்தந்த நேரத்தில் முகம் காட்டும் அடையாளங்கள்

    உடன் வருவோரெல்லாம் ஊர் வரைக்கும் வருவதில்லை!

    துன்பப்படும் போது, உறவும், நட்பும்  கண்டுகொள்வதில்லை

     

     

    நேற்று இருந்தவன்  இன்று இல்லை

    என்ற பெருமைதான் மனித வாழ்க்கை

    நிலையாய் வாழ்ந்து அனுபவிக்க பேராசை படுபவன்

    வள்ளுவனின் நிலையாமை நினைக்க தவறலாமா ?

     

    பத்து  தலைமுறைக்கு  கட்டிக்காத்த செல்வங்கள் யாவும்

    சல்லடையில் தேங்கிய நீர்போல  ஆகவும்

    கட்டிக்காதவன் போகும்போது கொண்டு செல்ல முடியுமா

    யார்  அனுபவிக்கிறார்கள்  என பார்க்க முடியுமா?

     

    வளர்பிறை காலமும், தேய்பிறை காலமும் உண்டு,

    உயர்வு,தாழ்வு  பகலிரவு போல் இருப்பதுண்டு

    .தாமரை இலை தண்ணீர் போல் நிலையில்லாமல்  ஆனதே

    தண்ணீர் மட்டத்துக்கு மேல் வந்து மறையும் நீர்குமிழி போல் ஆனதே

     

    பழமையும், சிறப்பும் வாய்ந்த அரண்மனைகள், கோட்டைகள்

    இவை எல்லாம்  காலம் தின்று  அழித்த  இடங்கள்

    மிஞ்சியவைகள்  இன்று சுற்றுலா  தலங்களே

    நமது சிறப்பைக்  காக்கும் அடையாள ஏடுகளே !

     

    இறைவா புகழ்  பெற்று வாழ்பவர்கள்  உண்டு

    செருக்கடைந்தவர்கள்  சேற்றில் புதைந்தவர்களுண்டு

    மாற்றங்கள் நிகழ்வதில்லை  என்றும் மாற்றமேயில்லை

    நிலையானது எதுவெனில், நிலையாமையை என்றறிக

     

    Share
  • பெரிய மனுஷன்

    தமிழ்த்தேனீ

    மாலைகள் மலைகளாக வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. சிவா ஒவ்வொரு மாலையாக வாங்கி  வைத்துவிட்டு அடுத்தவர் மாலை போட அனுமதிக்கிறான். அவர்  பெயர் என்னவோ சின்னசாமி ஆனால் வியாபார  உலகிலே அவர்தான்  பெரியசாமி.  பெரிய  மனிதர்  ,அவர்  நின்றால் வியாபார  உலகமே நிற்கும்   நடந்தால்தான்   உலகமே நடக்கும். சமீபத்தில் அவர் வியாபாரத்தில் இந்தியாவிலேயே முதல்  இடத்தைப் பிடித்து  இந்தியாவின் முதல் பணக்காரராக  அறிவிக்கப்பட்டார் .   அப்படிப்பட்ட   சின்னசாமி  லேசாக தலையைத் திரும்பிப் பார்த்தார்.

    அவர் சற்றே தலையைத் திருப்பினால் என்ன பொருள், வேகமாகத் திரும்பினால் என்ன பொருள்  நிமிர்ந்து பார்த்தால் என்ன செய்யவேண்டும், சற்றே  கண்களை மூடித்திறந்தால் அதன் விளைவு எப்படி இருக்க வேண்டும் அந்த  விளைவுக்கு  என்ன செய்ய வேண்டும்   என்றெல்லாம்  ஒரு அகராதியே  எழுதி அதை  தினமும் படித்து  மனப்பாடம் செய்து வைத்து  அதன்படியே  இம்மியும் பிசகாது நடக்கும் அந்தரங்க காரியதரிசி சிவா  .

    சிவா  சின்னசாமியிடம்  காரியதரிசியாக வந்து சேர்ந்து  20 வருடங்கள்  ஓடிவிட்டன. நல்ல  நாணயமான நம்பிக்கையான அவருடைய அந்தரங்கம் மொத்தம் அறிந்த ஒரே மனுஷன்.   அப்படிப்பட்ட   சிவாவை அழைத்து “டேய் குளிருதுடா அந்த ஏசீயைக் கொஞ்சம் குறை”  என்றார்  சின்ன சாமி .

      அவனும்  இவரையே பார்த்துக் கொண்டிருக்கிறான் .அவன் பார்வையில் ஒரு கனமான அழுத்தம்.. என்ன  ஆச்சு?  ஓ வீடு முழுவதும்  சென்ட்ரலைஸ்ட்  ஏசீ   அதுனாலே  யோசிக்கறானோ!

    “டேய் சிவா  என்னடா ஆச்சு என்ன யோசிக்கறே”  என்றார்  சின்ன சாமி.

    சிவாவின் கண்களிலிருந்து  கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

    “ என்னடா  ஆச்சு  சொல்லிட்டு அழு  என்ன ஆச்சுன்னே சொல்லாமே அழுதா  என்ன  அர்த்தம் “ என்றார்  எரிச்சலாக.

    “ உன்னோட  பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லேன்னு சொன்னியே எப்பிடி இருக்கா” என்றார்.

    சிவா உதட்டைப் பிதுக்கி மீண்டும் அழ ஆரம்பித்தான்.

    “ஏண்டா  அவளுக்கு உடம்பு சரியில்லேன்னா  டாக்டர்கிட்ட கூட்டிகிட்டு போக வேண்டியதுதானே  இங்கே  நின்னு அழுதுகிட்டிருந்தா  சரியாயிடுமா  சரி  போ போயி அவளைக் கவனி  அம்மாகிட்ட  சொல்லி பணம் வேணுன்ம்னா  வாங்கிக்கோ “ என்றார்

    ஆனால் அவன் பதில் ஏதும் சொல்லாமல் அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறான்

    பக்கத்தில் இருந்த  மனைவி  பாருவிடம் “ இவனுக்கு  கொஞ்சம் பணம் குடுத்து  அனுப்பிட்டு  நீயாவது அந்த  ஏசீயைக் கொஞ்சம் குறையேன்  எனக்கு குளிருது  “ என்றார்

    “பாரூ  உன்னைத்தான் சொல்றேன்  என்றார் . அட  நான் சொல்றதையே காதிலே வாங்காம   என்னையே பாத்துகிட்டு இருக்கே  . உன்னோட  பேரு பார்வதி அதைச் சுருக்கி  பாரூன்னு செல்லமா கூப்பிட  ஆரம்பிச்சதிலேருந்து இப்பிடித்தான்  பாருன்னு கூப்பிட்டா  பாத்துகிட்டே இருப்பே”  என்றார்  பெருமையுடன் .

    என்ன இது யாருமே  காதிலே வாங்க மாட்டேங்கறாங்க  அவருக்கு கோவம் கோவமாக வந்தது.  அவரோட   மதிப்பு என்னா  , அவர் போகாத   வெளிநாடு இல்லே    எங்கே போனாலும் ரத்தினக் கம்பள வரவேற்பு, என்னா மரியாதை, அவனவன்  வாயை பொத்திகிட்டு  மரியாதையா  தூர  நிப்பான், அப்படிப்பட்ட  அவர் சொல்லியும் கேக்காம  இருக்காங்களே .

    அவரைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரையும் ஒரு முறை  பார்த்தார் . அட எல்லோருமே  ஏதோ மௌனமா இருக்காங்களே . ஆமாம் என்ன  நடந்து போச்சு.  அது சரி  அவருக்கு மட்டும் சொல்லவே இல்லையே  ஒரு வேளை மரியாதையினாலேயா  அல்லது  பயத்தினாலேயா  ,

    அது என்னான்னே  தெரியலையே , அவருக்கு  எப்போதுமே மறைத்து வைப்பது பிடிக்காது  எல்லாமே வெளிப்படையா பேசணும் என்பார்

    சரி  நாமே எழுந்து போய் ஏசீயைக் குறைச்சிட்டு  அப்புறம் பாக்கலாம் என்ன ஆச்சுன்னு  என்று  எழுந்தார்! எழுந்திருக்க  முடியவில்லை  கை கால்களை அசைக்க  முடியவில்லை

    இதென்ன  மூச்சு திணறுகிறது  என்ன இது அவருடைய  மூக்கிலே  ஏதோ அடைத்துக் கொண்டிருக்கிறது.   தும்மல் வருகிறது. ஆனால் தும்ம முடியவில்லை, இருமல் வருகிறது , ஆனால் இரும முடியவில்லை , உள்ளே இருக்கும் சளி வெளியே போனால்தானே   இருமல் நிற்கும்.

    “ஏசீயைக் குறைங்கடா  எத்தனை முறை சொல்றது  “ என்று கத்தினார் , யாருக்கும் காதிலே விழவில்லை

    அவர்  குளிர்சாதனக் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கிறார்.  அவரைச் சுற்றி  எல்லோரும் நின்று கொண்டிருக்கிறார்கள் .

    “ எப்போ பாடியை  எடுப்பாங்க”  என்று யாரோ கேட்து  அவர் காதில் விழுகிறது

    மாலைகள் மலைகளாக வந்து குவிந்து கொண்டிருக்கின்றன

    சுபம்

    Share
  • தேசிய தமிழ் காவலர்!

    பவள சங்கரி

    சமீபத்தில் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பா.ஜ.க மூத்த தலைவர் தேசிய தமிழ் காவலர், தமிழ்வேள் – இல.கணேசன் அவர்களை வல்லமை வாழ்த்துகிறது.

    14713061_1275054042513722_7565585110330755965_o

    14707869_1274984265854033_9120603766977147093_o

    நேற்று பொற்றாமரை கலை இலக்கிய மன்றத்தின் மாதாந்திர இலக்கியக் கூட்டமும், மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதை முன்னிட்டு பொற்றாமரை குழுவினர் மற்றும் நண்பர்களின் பாராட்டு விழாவும் ஒரு குடும்ப விழா போன்று மிக எளிய முறையில் நடைபெற்றது. இலக்கிய உலகின் ஆகச்சிறந்த ஆளுமைகள் ‘எழுத்துச் சித்தர்’ திருமிகு. பாலகுமாரன், திருமிகு.சிவசங்கரி, திருமிகு. திருப்பூர் கிருஷ்ணன், திருமிகு.கவிக்கோ ஞானச்செல்வன், திருமிகு ஹெச்.ராமகிருஷ்ணன் போன்றோர் கலந்துகொண்டு வாழ்த்தினர். சகோதரிகள் குமாரி அஞ்சனி – அஸ்வினி ஆகியோரின் இனிமையான வீணை இசையுடன் இனிதே ஆரம்பித்தது இந்த விழா. ‘வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள்’ என்று கலைவாணியை காட்சியில் நிறுத்தி, ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ எனத் தொடர்ந்து வாழ்த்தி, ‘குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா’ என மிக அழகானதொரு இசை வேள்வியை நிகழ்த்தி அனைவரையும் இசையில் மெய்யுருகச் செய்தனர். வளர்ந்துவரும் இசைக் கலைஞர்களை உற்சாகப்படுத்தி வரும் பொற்றாமரை அமைப்பு இம்முறை இக்கலைஞர்களை அறிமுகப்படுத்தி கௌரவித்துள்ளார்கள்.

    14712567_1275094235843036_7390068809339411174_o

    14691929_1274986885853771_6378079422552903539_o

    மாதமொரு இலக்கிய அறிமுகம் என்ற வரிசையில், திரு ம.வெ. பசுபதி அவர்கள் அருமையாக ஆசாரக்கோவை பற்றியும், கவிதை உறவு ஆசிரியர் திரு ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்கள் ‘சொந்தமாய் ஒரு சொர்க்கம்’ என்ற தலைப்பில் உறையாடியதைத் தொடர்ந்து தலைவர் தலைமையுரையுடன் விழா சிறப்பாக நிறைவடைந்தது.

    14712997_1274993309186462_1026205734414727114_o

    dsc_09441dsc_09521

    தலைவர் தமது தலைமையுரையில் குறிப்பிட்ட சில சுவையான செய்திகள்:

    தாம் மத்திய பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அந்த மக்களுக்காக பாடுபடப்போகிறாரா அல்லது பிறந்த மண்ணுக்காகப் பாடுபடுவாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, மத்திய பிரதேசம் என் புக்ககம் என்றாலும் நான் பிறந்த மண்ணான என் தாய் வீடாம் தமிழகத்தை எந்நாளும் மறவேன் என்று கூறியதாகக் குறிப்பிட்டார்.

    வாயால் நாம் உண்ணுவது அனைத்தும் வயிறைச் சென்று அடைந்து அங்கிருந்தே உடல் முழுவதிற்கும் சக்தி பெறுகிறது. வாய் நினைத்ததாம், தானின்றி வயிறுக்கு உணவேதும் கிடைக்காது என்ற மிதப்பில் தன்னை இறுக்கி மூடிக்கொண்டதாம். வயிறும் எந்த வேலையுமின்றி அமைதியாய் இருந்ததாம். இறுதியில் உடல் முழுவதும் வலுவிழந்து போனதாம். அந்த வகையில் கால் பகுதியிலிருந்து வயிற்றுப்பகுதிக்கு வந்து சேர்ந்துள்ள எனக்கு வாய் என்றும் துணை நின்றால் நம் பணிகள் சிறக்கும் என்பது உறுதி என்றார்.

    dsc_09371பிராந்திய கட்சித் தலைவர்கள் மட்டுமே தமிழை வளர்க்க முடியும் என்ற எண்ணங்களை உடைத்தெறிந்து தேசியத் தலைவர்களும் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட முடியும் என்பதை உணர்த்தும் வகையில் தாய் மொழியான தமிழ் மீது மட்டற்ற பற்று கொண்டு அதற்காகவே தமது வாழ்க்கையின் பெரும் பகுதியை அர்ப்பணித்துக்கொண்டுள்ள மாபெரும் தேசியத் தலைவர், தமிழ்வேள் இல.கணேசன் அவர்கள் பாராட்டுதலுக்கு உரியவர் என்பதில் ஐயமில்லை. மதுரையில் பூத்த பொற்றாமரையை சென்னையில் மலரச்செய்த மாபெரும் தலைவர் தமிழ்வேள் இல.கணேசன் அவர்கள். அன்று முச்சங்கம் கொண்டு தமிழ் வளர்த்தனர் பாண்டியர். இன்று பொற்றாமரைகொண்டு தமிழ் வளர்க்கும் தமிழ்வேள் இல.கணேசன் ஐயா அவர்களுக்கு தற்போது கிடைத்திருப்பது ஒரு சிறு அங்கீகாரமே. தமிழ்த்தாயின் அருட்பார்வையோடு அவர் மென்மேலும் பல்வேறு சிறப்புகள் அடைய வல்லமை வாழ்த்துகிறது.

    பாரதிய ஜனதா கட்சியின் தேசியக் குழுவின் உறுப்பினரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான உயர்திரு இல. கணேசன் அவர்கள் பசுமைசூழ் தஞ்சை வளநாட்டில் பிப்ரவரி 17, 1945 ஆம் ஆண்டில் பிறந்தவர். ‘ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின்’ பிரச்சாரகராகவும், கட்சியின் தேசிய செயலராகவும், கட்சியின் தேசிய துணைத்தலைவராகவும் பணியாற்றிப்பின் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில செயலராக நியமிக்கப்பட்டவர்.

    தற்போது மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டதால் மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள அந்த பதவிக்கு, தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும் கட்சியின் அகில இந்திய செயற்குழு உறுப்பினருமான திரு இல.கணேசன் அவர்களை கட்சித் தலைமை தேர்வு செய்ததையடுத்து இல.கணேசன் கடந்த மாதம் மத்திய பிரதேச மாநிலத்துக்கு சென்று மாநில சட்டமன்ற செயலாளரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பதால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    பாராளுமன்றத்தில் அவருடைய செயல்பாடு தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பேருதவியாக அமையும் என்பதோடு பா.ஜ.க.வின் நிரந்தரமான வளர்ச்சியையும் உறுதி செய்யும் என்பதில் ஐயமில்லை. “காவிரி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்’ என்று தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் இல.கணேசன் தெரிவித்தது தமிழர்களுக்கு பெரும் நம்பிக்கையளிக்கக்கூடிய செய்தியாகும்.

    14753962_1275061399179653_1519628871610476637_o

    திரு இல.கணேசன் அவர்கள் பதவியேற்றவுடன், ‘ தமிழகத்தில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் நலன், மொழிக்காக குரல் கொடுக்க எனது வாழ்வில் முன்னுரிமை அளித்து வருகிறேன். காவிரிப் பிரச்சனையில் தமிழகக் கட்சிகளுக்கு உள்ள அக்கறை, உணர்வை பாஜகவும் பிரதிபலித்து வருகிறது. காவிரிக்காக தமிழக அரசு முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாஜக துணை நிற்கிறது. மாநிலங்களவையில் பேச வாய்ப்புக் கிடைக்குமானால் காவிரி விவகாரத்தை நிச்சயமாக எழுப்புவேன். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய வனத் துறை அமைச்சராக இருந்த போது பிரகாஷ் ஜாவடேகர் முன்னெடுத்த முயற்சிகளை, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து மேற்கொள்வேன். அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று உறுதியளித்துள்ளது வரவேற்பிற்குரியது. இதைத் தொடர்ந்து, பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களும் இதை உறுதி செய்து, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்க தாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்பதோடு, இந்த விவகாரத்தை அரசியலாக்கும் வகையிலோ, ஆதாயம் தேடும் வகையிலோ பாஜக எக்காலத்திலும் ஈடுபடாது என்றும் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வருவது தொடர்பான சட்ட விவகாரங்களை மத்திய அரசு ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள். இந்த வகையில் தமிழ் நாட்டின் எதிர்காலம் பட்டொளி வீசும் என்ற நம்பிக்கையும் உடன் வருவதும் நிதர்சனம்.

    வாழ்க பாரதம்!

    Share